நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 31 மார்ச், 2013

தெருக்கூத்துக் கலைஞர் கோனேரி இராமசாமி




பொறியாளர் கோனேரி இராமசாமி


புதுவையில் இலக்கிய மேடைகளிலும் அரசு விழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் தெருக்கூத்து நடித்துக்காட்டுவதை வழக்கமாகக் கொண்டவர் கோனேரி இராமசாமி. இவர் புதுவையில் தெருக்கூத்துக் கலை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுபவர். தந்தையார் வழியாகத் தெருக்கூத்தைக் கற்றுத் தேர்ந்து ஐந்து வயதுமுதல் கடந்த நாற்பதாண்டுகளாகத் தொடர்ந்து தெருக்கூத்துக் கலையில் தம்மை ஈடுபடுத்தி வருபவர்.

தெருக்கூத்துக் கலைஞர்களின் நலனுக்காக மக்கள் கலைக்கழகத்தை 1990 இல் உருவாக்கி நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து வருபவர். தம் ஊதியத்தின் பெரும்பகுதியைத் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு வழங்குவதுடன் அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்பவர்.

கோனேரி இராமசாமி அவர்கள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடகங்களில் நடித்துள்ளார். இராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரன் கதை, காத்தவராயன்கதை, கந்தபுராணம் உள்ளிட்ட கதைகளின் அடிப்படையில் தெருக்கூத்து நிகழ்த்துவதுடன் காலத்திற்குத் தேவையான சமூக விழிப்புணர்வுச் செய்திகளைத் தெருக்கூத்துகளாக நிகழ்த்தி வருகின்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்குப் பயிற்சியளித்துத் தெருக்கூத்து நடத்த வழிவகை செய்துள்ளார். துரியோதனனாகவும், கர்ணனாகவும் கோனேரியார் மிகச்சிறப்பாக நடித்து மக்களின் மதிப்பைப் பெறுவது உண்டு. பெண் வேடம் கட்டியும் ஆடுவார். எந்த வேடத்தையும் ஏற்று நடிப்பதில் வல்லவர். அதுபோல் உடனுக்குடன் பாடல்புனைந்தும், சூழலுக்கு ஏற்பக் கதைகளைப் புனைந்தும் நடித்துக்காட்டுவார்.

கோனேரி இராமசாமி அவர்கள் இயற்கையாகப் பாட்டு எழுதும் ஆற்றல் பெற்றவர். சிக்கலான சிந்துப்பாடல்கள், வண்ணப்பாடல்களை மிக எளிதாக எழுதிவிடும் ஆற்றல் இவருக்கு உண்டு. சிறிய வயதிலிருந்து இசைப்பாடல்களைக் கேட்டு உள்வாங்கிக்கொண்டதால் எந்தத் தலைப்பிலும் எந்த அமைப்பிலும் உடன் பாடல் எழுதிவிடுவார்.

மூவுணர்வுகள்(காதல்), மூவுணர்வுகள்(பாசம்), மூவுணர்வுகள்(நட்பு), கல்லாடன் அந்தாதி, நரம்பின் நாதம், சிறுவர் சிந்து,  அந்தாதி சிந்தாயிரம், தமிழ்ப்பேரண்டம், கண்ணன் பிறப்பு(தெருக்கூத்து இசைநாடகம்), சக்தி சதகம், விராடபருவம் (தெருக்கூத்து நாடகம்) தமிழ்த்தாய்த் திருப்புகழ் (கூத்திசை வண்ணப்பாடல்கள்) உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கோனேரி இராமசாமியின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

கோனேரி இராமசாமி அவர்கள் 15.11.1966 இல் புதுவை மாநிலம் கோனேரிக்குப்பம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.  பெற்றோர் பாண்டுரங்கக் கவுண்டர் - கண்ணம்மாள் ஆவர். இவருடன் பிறந்தவர்கள் தட்சணாமூர்த்தி (இவரும் கூத்துக் கலைஞர்), இராமு, அமுது, தனலட்சுமி ஆவர்.

கோனேரி இராமசாமி எட்டாம் வகுப்பு வரை கூடப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்றவர். இளமையில் தமிழ் இலக்கியங்களில் நல்ல ஈடுபாடுகொண்டவர். திருக்குறளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறட்பாக்களை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். பத்தாம் வகுப்பில் புதுவை மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர். இவர் பெற்ற மதிப்பெண்422 / 500.

பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு பேச்சுப்போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும், திருக்குறள் மனப்பாடப் போட்டிகளிலும் பல பரிசில்களைப் பெற்றவர். புதுவை அரசின் மோதிலால் நேரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றவர். பின்னர்ப் பொறியியல் பயின்று, புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பொறியாளராகத் தற்பொழுது பணிபுரிகின்றார். கோனேரி இராமசாமி அவர்களின் கலைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு இவருக்குக் கலைமாமணி விருது(2002) வழங்கிச் சிறப்பித்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குத் தம் குழுவினருடன் சென்று தெருக்கூத்து நிகழ்த்திய பெருமைக்குரியவர்

கோனேரி இராமசாமி அவர்களின் துணைவியார் பெயர் மாலதி என்ற சரசுவதி. இவர்களுக்குச் செந்தமிழ்ச் செல்வன், செவ்வந்திமலர், செங்கதிர் வேந்தன் என்ற மழலைச் செல்வங்கள் உள்ளனர்.

நாள்தோறும் தெருக்கூத்துக் கலைஞர்களைச் சந்திப்பது, கூத்துப் பயிற்சியளிப்பது, நடிப்பது என்று தெருக்கூத்தை வளர்தெடுக்க வாழ்ந்து வருகின்றார் புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் இந்தப் பொறியாளர்.
 
கோனேரி பா. இராமசாமி அவர்கள் புதுவை நாட்டுப்புறக் கலைஞர்களை அறிமுகம் செய்யும் காணொலி!.
 

தொடர்பு முகவரி:
பொறியாளர் திரு.கோனேரி இராமசாமி அவர்கள்
எண் 2, முதல் பிரதானசாலை, ஆருத்ரா நகர், கவுண்டர்பாளையம்,
புதுச்சேரி- 605 009
பேசி: 0091- 9367600371 / 0091 - 9344440371







குறிப்பு: கோனேரி இராமசாமி அவர்களின் தெருக்கூத்து நேர்காணல்களை அடுத்த பதிவுகளில் வெளியிடுவேன்

நிலத்திணை (தாவரவியல்) அறிஞர்களுடனான சந்திப்பு…



முனைவர் நரசிம்மன், திரு.பஞ்சவர்ணம், முனைவர் க.இரவிக்குமார்

சென்னைக்கு அலுவல் நிமித்தம் நேற்று (30.03.2013) சென்றிருந்தேன். சென்றவேலை காலை 11.30 மணியளவில் முடிந்தது. புதுவைக்குப் பேருந்தேற அணியமானேன். இந்த நேரத்தில் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூலின் ஆசிரியர் திரு. பஞ்சவர்ணம் ஐயா செல்பேசியில் அழைத்தார்கள். புதுவைக்குப் பேருந்தேறக் குறிப்பிட்ட பேருந்து நிலையில் நிற்பதைச் சொன்னேன். அப்படியே அதே இடத்தில் நில்லுங்கள். இன்னும் அரைமணி நேரத்தில் அங்குத் தாம் வந்து சேர்வதாகச் சொன்னார்கள்.

திரு. பஞ்சவர்ணம் ஐயா சொன்னவண்ணம் வந்துசேர்ந்தார். மகிழ்வுந்தில் ஏறிக்கொண்டேன். அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, வழியே தாம்பரம் சென்ற மகிழ்வுந்து தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் தாவரவியில் துறையில் நின்றது.

மகிழ்வுந்தில் வரும்பொழுதே திரு. பஞ்சவர்ணம் ஐயா தம்முடன் வந்திருந்தவரை அறிமுகம் செய்தார். நண்பரின் பெயர் முனைவர் க.இரவிக்குமார் என்றார். பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் துணை இயக்குநராகவும், அறிவியல் அறிஞராகவும் பணியாற்றுகின்றார். தாவரவியல் துறையில் வல்லுநர். இந்தியத் தாவரங்கள் குறித்த பேரறிவுபெற்றவர். இந்தியாவில் இவர் கால் பதிக்காத காடு, மலை இல்லை. மூலிகைகள் குறித்த நுட்பமான அறிவுகொண்டவர் என்றார்.

முனைவர் க. இரவிக்குமார் அவர்கள் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள வெங்கடாம்பேட்டை என்ற சிற்றூரில் 06.01.1960 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் வீ. கலியமூர்த்தி படையாட்சி - அஞ்சலாட்சி அம்மாள். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரிலும், பள்ளியிறுதி வகுப்பைக் குறிஞ்சிப்பாடியில் உள்ள வேலாயுதம் முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர். பின்னர் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் பட்டம் பயின்றவர். 

முனைவர் க.இரவிக்குமார்

மதுரையிலும் கோவையிலும் பயின்று மதுரை மாவட்டத் தாவரங்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர்(1983-93) என்ற விவரங்களைச் சொன்னதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம் இந்த அறிஞர்தான் பஞ்சவர்ணம் ஐயாவின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூல் வெளிவருவதற்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கிக் கருத்து வேறுபாடுகள் வந்தபொழுது சீர்செய்து தெளிவு வழங்கிப் பேருதவி செய்தவர்கள். இன்று இதுபோல் மற்றவர்களின் ஆய்வுக்கு, வளர்ச்சிக்குத் துணையாக இருப்பவர்களைக் காண்டல் அரிது என்ற வகையில் முனைவர் க. இரவிக்குமார் அவர்கள் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. என்னிடமும் அன்புடன் பழகினார். முனைவர் க. இரவிக்குமார் அவர்கள் தம் குடும்பம் பற்றியும், பஞ்சவர்ணம் ஐயாவுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றியும் பல செய்திகளை நினைவுப்படுத்தியபடி மகிழ்வுந்தில் வந்தார்.

கிறித்துவக் கல்லூரியின் வளாகம் மரங்களடர்ந்த காட்டுக்குள் வனப்புடன் இருந்தது. கிறித்துவக் கல்லூரியின் தாவரவியல்துறை ஒரு காட்டுக்குள் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கும் மரங்களும், பொந்துகளும்,புதர்களுமாக இயற்கை எழிலும் இருந்தது. “வெயில் நுழைபு அறியாக் குயில்நிழல் பொதும்பராக” இருந்தது.

தாவரவியல் துறையில் நுழைந்ததும் அங்குக் கணினியில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்த பேராசிரியர் நரசிம்மன் ஐயா அவர்களை அறிமுகம் செய்தனர். அனைவரும் அறிமுகம் ஆனோம். விடுமுறை நாளிலும் பணிசெய்த அவரின் பொறுப்புணர்ச்சி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.


முனைவர் நரசிம்மன் அவர்கள்

முனைவர் நரசிம்மன் அவர்கள் தாவரவியல் துறையின் மாணவராகக் கிறித்துவக் கல்லூரிக்குள் நுழைந்தவர். கடந்த நாற்பதாண்டுகளாக மாணவராகவும், விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் வளர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தம் அறிவுச்செல்வத்தை வாரி வழங்குவதைத் தடையில்லாமல் செய்துவருகின்றார்.

தாவரவியல் அறிஞர் என்று பேராசிரியர் நரசிம்மன் அவர்களை ஒரு வட்டத்துக்குள் அடக்கிவிடமுடியாது. தெலுங்குச் சூழல் அவருக்கு அமைந்திருந்தாலும் தமிழில் நல்ல பற்றுடையவர்.

பேராசிரியர் நரசிம்மன் அவர்கள் கலைசொற்களைத் தம் துறைசார்ந்து பல்லாயிரம் உருவாக்கிப் பயன்படுத்தி வருபவர். கொல்லிமலை மூலிகைகள், தாவரங்கள் குறித்து பல உயராய்வுகளை இவரும் இவர் மாணவர்களும் செய்துள்ளனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்களுடன் இணைந்து கவியரங்குகள் நடத்துவது, நூல்வெளியிடுவது என்று தம் பணிகளை அகன்று நின்று செய்கின்றார். கிறித்துவக் கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர்களான முனைவர் கு. அரசேந்திரன், முனைவர் பாலுசாமி உள்ளிட்டவர்களுடன் இணைந்து தமிழாக்கப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.

பேராசிரியர் நரசிம்மன் அவர்கள் தாளை விலாசம் என்ற நூல் பற்றி தெரியுமா என்ற வினாவை வீசினார். இயற்றியவர் திருக்குடந்தை அருணாசலம் என்றார். அதில் 801 பனையின் பயன்பாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டார். அந்த நூலைத் தேடிக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார். பனைமரக்கும்மி என்ற நூல் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்குத் தேவையான நூல்களைத் தேடித்தருவதாக உறுதியளித்தேன்.

முனைவர் க. இரவிக்குமார் அவர்களும் முனைவர் நரசிம்மன் அவர்களும் இணைபிரியாத உயிர்த்தோழர்கள் என்பதை அவர்களின் உரையாடல் எனக்குக் காட்டியது. இவர்களையொத்த நட்புடையவர்களைக் கண்டு பலவாண்டுகளானது. இவர்களைப் போன்ற நண்பர்கள் பழகியதுடன் நின்றுவிடாமல் குடும்பத்துடனும், வாழ்க்கை வளர்ச்சியுடனும் இணைந்து நட்பை அமைத்துக்கொள்வது எம்மைப் போன்ற இளையவர்களுக்குப் பாடமாகும்.

கிறித்துவக் கல்லூரியின் தாவரவியல்துறை சார்ந்த சில ஆய்வேடுகளைப் பார்த்தேன். அதில் மலைபடுகடாம் நூல் குறிப்பிடும் சவ்வாது மலைப்பகுதி, செங்கத்தை அடையும் பாதை குறித்த ஒரு ஆய்வேட்டை நரசிம்மன் ஐயா அவர்கள் காட்டி மகிழ்ச்சியூட்டினார். கூத்தன் புறப்பட்டு மலைவழியாகச் சென்று சங்கத்தை அடைந்த வழியை ஆய்வாளர் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்தார். உடன் நான் இணையத்தில் பதிந்திருந்த நவிரமலை குறித்த கட்டுரையை அனைவரின் பார்வைக்கும் வைத்தேன்.

தாவரவியல்துறை சார்ந்தவர்களுடன் உரையாடியதிலிருந்து தமிழாய்வுகள் பலதுறையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதை அறிந்தேன். காரணம் தமிழர்கள் வரைந்த சங்கப்பனுவல்களில் இயற்கை, நிலைத்திணை, விலங்குகள், பறவைகள், மீன்கள் குறித்த பின்புலத்துடன் பாடல்கள் யாக்கப்பட்டுள்ளதால் இத்துறைகளில் உள்ள வல்லுநர்களின் கருத்துகளைத் தமிழில் பொருத்திப் பார்ப்பது தேவையாக உள்ளது.

தாவரவியல் துறையில் வெளிவரும் ஆய்வேடுகளின் சுருக்கத்தையும், பெருக்கத்தையும் தமிழ்ப்படுத்தி இணையதளங்களில் வெளியிடுங்கள் என்று என் விருப்பத்தைக் கூறி அனைவரிடமும் விடைபெற்றேன். திரு.பஞ்சவர்ணம் ஐயா மகிழ்வுந்தில் மீண்டும் அழைத்துவந்து பெருங்களத்தூரில் பேருந்தேற்றி வழியனுப்பினார்.

வியாழன், 28 மார்ச், 2013

பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் நூல் வெளியீடு



பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் அத்தையின் அருள் நூல் வெளியீடு புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற உள்ளது. ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.

நாள்: 03.04.2013 நேரம்: மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம்,புதுச்சேரி

நூல்வெளியீட்டுச் சிறப்புரை: எழுத்தாளர் கி.இரா

செவாலியே முருகேசன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், பேராசிரியர் சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.


செவ்வாய், 26 மார்ச், 2013

பிரான்சில் வளரும் தமிழ் - திருக்குறள் அரங்கம்




பிரான்சில் வாழும் தமிழ் அன்பர்கள் தமிழ் இலக்கியங்கள் குறித்து மாதந்தோறும் சிந்தித்து வருவதையும் ஆண்டுதோறும் தமிழ் விழாக்கள் நடத்தி வருவதையும் அறிந்து நான் மகிழ்வதுண்டு. பிரான்சிலிருந்து புதுசேரிக்கு வரும் நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு அவர்களின் தமிழ்ப்பணிகளுக்கு என் வாழ்த்தினை அவ்வப்பொழுது தெரிவிப்பது உண்டு. 

பிரான்சில் வாழும் திரு. கி. பாரதிதாசன் அவர்கள் திருக்குறளில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் திருக்குறள் அரங்கம் என்ற பெயரில் மாதந்தோறும் திருக்குறள் சார்ந்த நிகழ்வினை நடத்தி வருகின்றார். அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடி எடுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் பிரான்சு நாட்டில் தமிழ் வளர்சிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பயன் நல்கும். இத்தகு முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். திருக்குறள் அரங்கம் தொடர்ந்து தமிழ்மறை பரப்பட்டும்.

குறள் அரங்கம் நடைபெறும் நாள்: 30.03.2013(சனிக்கிழமை)
இடம்: கி.பாரதிதாசன்-குணசுந்தரி இணையர் இல்லம், பிரான்சு

சனி, 23 மார்ச், 2013

திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரி இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது..


 பங்கேற்பாளர்கள்

பங்கேற்பாளர்கள்
 திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் இணையப் பயிலரங்கம் இன்று(23.03.2013) காலை 10 மணிக்கு இனிதே தொடங்கியது. இந்த நிகழ்ச்சிகான ஏற்பாட்டை இலக்கிய வளர்ச்சிகழகம் முன்னெடுத்தது. வேலுடையார் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திரு.தியாகபாரி அவர்கள் தலைமையில் தொடக்கவிழா நடைபெற்றது. திருவாரூர் சார்ந்த தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.  வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இணையதளம் ஆக்கமும் ஆபத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார். புதுவை மு.இளங்கோவன் கலந்துகொண்டு கல்வியியல், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கினார். மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
திரு.தியாகபாரி அவர்கள் தலைமையுரை
பங்கேற்பாளர்கள்
தமிழ் உணர்வாளர்கள்
இணையப் பயிலரங்கத்தின் காட்சி


 பயிலரங்கக் காட்சிகள்

புதன், 20 மார்ச், 2013

தமிழ்ச்சொல்லாக்க அறிஞர் முனைவர் சி. இரா. இளங்கோவன்


முனைவர் சி.இரா. இளங்கோவன்


கணினி வருகைக்குப் பிறகு தமிழாய்வுகள் பல திசைகளை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகின்றது. தமிழாய்வுகளைத் தாளில் எழுதிப் பாதுகாக்கும் அறிஞர்கள் உண்டு. கணினியின் துணைகொண்டு இன்று தமிழாய்வுகளை மிக எளிமைப் படுத்தும் அறிஞர்களும் உண்டு. அந்த வகையில் தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுத் தமிழ்ச் சொல்லாக்கத்தில் கடுமையாக உழைத்துவரும் அறிஞர் ஒருவரை நேற்று (19.03.2013) கண்டு உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிபவர் முனைவர் சி.இரா. இளங்கோவன். 20.03.1961 இல் பிறந்த இவரின் பெற்றோர் இராஜாபிள்ளை, அரங்கநாயகி ஆவர்.  சிதம்பரம் அண்ணாமலை நகரில் பிறந்த இவரின் முன்னோர் வாழ்விடம் அரியலூர் மாவட்டம் தென்னூர் (வரதராசன் பேட்டை) ஆகும்.

தந்தையார் அரசு பணியில் இருந்ததால் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உள்ளிட்ட ஊர்களில் கல்வி கற்க நேர்ந்தது. புகுமுக வகுப்பைப் பொறையாறு த.பு.மா.லுத்ரன் கல்லூரியில் பயின்றவர். இளம் அறிவியல், முதுநிலை அறிவியல், இளம் முனைவர்ப் பட்டம், முனைவர்ப் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

இளம் முனைவர்ப் பட்ட ஆய்வில் “சதுப்புநிலக் காட்டுத் தாவரங்களில் உள்ளமைப்பியல்” என்ற தலைப்பிலும், முனைவர்ப் பட்ட ஆய்வுக்குப் “பிச்சாவரம் காடுகளில் சுற்றுச்சூழல்” என்ற தலைப்பிலும் ஆய்வுசெய்து  பட்டம் பெற்றவர்(1992).

1990 இல் அரசு பள்ளியில் பணியில் இணைந்த இவர் 1996 முதல் புவனகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் தாம் பணியாற்றும் பள்ளியில் 200 மூலிகைகள் கொண்ட மூலிகைத்தோட்டம் ஒன்றை நிறுவிப் பாதுகாத்தார். இவர்தம் உறவினர் திரு. சண்முகசுந்தரம்(IFS) ஐயா அவர்கள் வனத்துறையில் அதிகாரியாக இருந்தவர். வனத்துறை அறிவுடன் தமிழ்ப்பற்றும் நிறைந்தவர். எனவே தமிழில் ஈடுபாடுகொண்டவராக சி.இரா. இளங்கோவனும் இருந்தார். தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

தமிழில் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தமிழ்ச்சொல்லாக்கம் குறித்த தலைப்பினைத் தேர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்விற்கு இணைந்தவர்.

தமிழில் உள்ள சொற்களை ஆராய்ந்து தமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் பலவாண்டுகளாகச் சிந்தித்து வருகின்றார். தமிழில் கூறப்பட்ட இலக்கணங்களைக் கொண்டு, கூறப்படாத இலக்கணங்களை நுண்ணிதின் அறிந்துள்ளார். இதனால் கணினியில் நிரல் எழுதித் தமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்று பட்டியலிட்டு வைத்துள்ளார்.

தமிழ்ச் சொற்களில் இந்த எழுத்தை அடுத்து இந்த எழுத்தைக் கொண்டுதான் சொற்கள் வரும் என்று கூறி, அதற்கு மீறி வந்தால் அவை தமிழ்ச்சொல் இல்லை, பிறமொழிச்சொல் என்று அறிவியல் அடிப்படையில் நிறுவ இவர் முயற்சி உதவும்.

மொழி முதலாகும் எழுத்துகள், மொழிக்கு இறுதியாகும் எழுத்துகளைக் கொண்டும் எந்த எந்த எழுத்துகளை அடுத்து எந்த எழுத்துகள் வரும், எந்த எந்த எழுத்துகள் வராது என்றும் துல்லியமாகக் கணித்து வைத்துள்ளார்.

பண்டைய இலக்கண நூல் வல்லார் வகுத்த இலக்கண உண்மைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் கணினி அடிப்படையில் இவர் ஆய்வு உள்ளது. அதுபோல் சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை உள்ள நூல்களில் இடம்பெற்றுள்ள சொற்களை அகரவரிசைப்படுத்தவும், சொல் பயன்பாடுகள் எத்தனை இடம்பெற்றுள்ளன என்று அறியவும் இவரின் தமிழாய்வுப்பணிகள் உதவும்.

கணினி நிரல் கொண்டு சற்றொப்ப பத்து இலட்சம் சொற்களை உருவாக்கி அடைவுப்படுத்தி வைத்துள்ளார். இவரின் நிரலில் மரபு இலக்கணத்திற்கு உட்பட்டுக் கணினி உருவாக்கி வைத்துள்ள புதிய சொற்களைக் கலைச்சொல் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

கலைச்சொல் உருவாக்கத்தில் இனி சிந்தித்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. கணினி உருவாக்கித் தந்துள்ள மரபுக்கு உட்பட்ட, பயன்பாட்டில் இல்லாத சொற்களை நாம் பயன்படுத்த தாவரவியல் அறிஞர் சி.இரா. இளங்கோவனின் பணி பயன்படும். தொடர்ந்து தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களுக்குத் தனித்தனிச் சொல்லடைவுகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற ஒரு அன்புவேண்டுகோளை இவரிடம் பணிவுடன் வைக்கின்றேன். 



முழுமைப்படுத்தப்பட்ட சி.இரா.இளங்கோவன் அட்டவணை(தமிழி எழுத்துகள்)


கல்வெட்டுத் துறையில் ஈடுபாடுகொண்ட சி.இரா. இளங்கோவன் அவர்கள் கி.பி. முதல் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தமிழி எழுத்துகளைக் கொண்டு நண்பர்களுக்கு மடல் எழுதுவது, நாட்குறிப்பேடு எழுதுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கராத்தே என்று அழைக்கப்படும் கைச்சண்டையில் கறுப்புப் பட்டை வாங்கியவர். இசைக்குக் குறிப்பு வரைவதுபோல் ஒருவரின் உடலசைவுக்குக் குறிப்பு வரையும் பேராற்றல் பெற்றவர்.

போக்குவரவுப்படிக்கும், மதிப்பூதியத்துக்கும் “மடிதற்றுத் தான்முந்துறும்” பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள் எதிர்பார்ப்பின்றி உழைக்கும் இந்தப் பள்ளி ஆசிரியரிடம்  சென்று தமிழுக்குப் பயன்படும் ஆய்வு நெறிமுறைகளைக் கற்க ஆற்றுப்படுத்துகின்றேன்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

தமிழாய்வை மேம்படுத்தும் பஞ்சவர்ணம் ஐயா…


 இரா.பஞ்சவர்ணம்

கடந்த கால் நூற்றாண்டுகளாகத் தமிழுக்குத் தொண்டாற்றுபவர்களை அடையாளம் கண்டு உண்மையாக உழைப்பவர்களுடன் அளவளாவி மகிழ்வது என் விருப்பம். அந்த வகையில் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் என்ற நூல் குறித்த மதிப்புரை அண்மையில் நாளேடுகளில் வெளிவந்தபொழுது அதன் ஆசிரியர் பெயரையும் முகவரியையும் கண்டு உடன் தொடர்புகொள்ள நினைத்தேன். பேராசிரியர் மருதூர் அரங்கராசன் அவர்கள் இந்த நூலாசிரியருடன் தொடர்பில் உள்ளார் என்ற குறிப்பு அறிந்தமை அந்த விருப்பைப் பன்மடங்காக்கியது.

ஒருநாள் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூலாசிரியரின் செல்பேசிக்கு அழைப்பு விடுத்தேன். மறுமுனையில் பஞ்சவர்ணம் பேசினார். என்னை அறிமுகம் செய்துகொண்டு, ஐயா தங்களைச் சந்திக்க விரும்புகின்றேன் என்று என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஐயா அவர்கள் நான் தொடர்புகொண்ட நாளில் ஊரில் இல்லை என்றும் தாமே ஒருநாள் புதுச்சேரி வந்து சந்திப்பதாகவும் கூறினார். தொடர்ந்து என் பல்வேறு பணிகளால் ஒரு கிழமை ஓடியது.

இன்று(17.03.2013) உறுதிப்படுத்திக்கொண்டு புதுச்சேரியில் ஐயாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். காலையில் பத்துமணியளவில் புதுச்சேரிக்கு நம் இல்லத்திற்கு வந்த திரு.பஞ்சவர்ணம் ஐயா அவர்களுடன் பிற்பகல் மூன்றரை மணி வரை உரையாடல் தொடர்ந்தது. சற்றொப்ப ஐந்துமணிநேரம் அவர்களின் தமிழாய்வுகளையும் தாவர ஆய்வுகளையும், மின்னாளுகைப் பணியையும் அவரின் அரசியல் நிலைப்பாடுகளையும் அறிந்து வியப்படைந்தேன்.

திரு. பஞ்சவர்ணம் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் பிறந்தவர் (04.07.1949). பெற்றோர் கொ.இராமசாமி கவுண்டர், தைலம்மாள் ஆவர். பள்ளியிறுதி வகுப்பு வரை பண்ணுருட்டியில் பயின்றவர். பிறகு கடலூர் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றவர். 1968 இல் பேராயக் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் முன்னின்று உழைத்தவர். காமராசர், மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர்தம் தன்னலம் கருதாத பணிகளில் ஈர்க்கப்பட்ட பண்ணுருட்டிப் பகுதி மக்கள் இவரை இருமுறை நகராட்சித்தலைவராக அமர்த்தி அழகுபார்த்தனர்.

பண்ணுருட்டிப் பகுதியிலும், நகராட்சியிலும் இருந்த நிலைமைகளை ஊன்றிக் கவனித்த பஞ்சவர்ணம் அவர்கள் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறத் திட்டமிட்டு உழைத்தார். மந்த கதியில் சுழன்ற நகராட்சி நிர்வாகத்தை விரைவுப்படுத்த மக்களுக்குப் பயன்படும் பிறப்பு இறப்புச்சான்று, குடிநீர் இணைப்பு, வீடுகட்ட ஒப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு அலைந்து திரிவதைத் தடுக்க அனைத்து விவரங்களையும் கணினியில் சேமித்து மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க ஆவன செய்தார். இந்திய அளவிலும் உலக அளவிலும் பண்ணுருட்டியின் நகர நிர்வாகம் பத்தாண்டுகளுக்கு முன்னர்ப் பேசப்பட்டது.

ஊழலிலும், சோம்பலிலும் சிக்கி மக்களை இழுத்தடிப்பதில் விருப்பம்கொண்ட அதிகாரிகளால் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமைப்பணிகளின் கூறுகளை மிக எளிதாக மாற்றி மக்களுக்கு வெளிப்படையான ஆளுகையை அறிமுகப்படுத்தியதால் மக்களால் பாராட்டப்பட்டார்.

பண்ணுருட்டிப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் பஞ்சவர்ணம். இதனால் தாவரங்கள் குறித்த ஈடுபாடு இவருக்கு அதிகமானது. மக்கள் இவரின் மரம் நடும் பணிக்கு ஆதரவாக இருக்க, காலம் காலமாக மக்களிடம் இருக்கும் நம்பிக்கைகளை நினைவூட்டும் வகையில் மரத்தால் விளையும் நன்மைகளைக் கூறி மரம் நடுவதில் ஆர்வத்தை உண்டாக்கினார்.

2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு நகராட்சித்தலைவர் பணியிலிருந்து விடுபட்டு முழுமையாகத் தாவரங்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மரங்களைப் பற்றி ஆராய்ந்தார். இந்தியாவெங்கும் காணப்படும் மரங்களைப் பற்றியும், தமிழகத்தில் காணப்படும் மரங்களைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து தகவல்களைத் திரட்டினார். இவர்தம் தகவல் தொகுப்புக்காகவும், மென்பொருள் வடிவமைப்புக்காகவும் கணினி வல்லுநர்களைப் பணியமர்த்தி ஆறாண்டுகள் தொடர்ந்து உழைத்து தாவரத் தகவல் மையத்தின் பணிகளை நிறைவுப்படுத்தி வருகின்றார்.

பஞ்சவர்ணம் அவர்கள்  பிரபஞ்சமும் தாவரங்களும், குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் என்ற இரண்டுநூலை வெளியிட்டுள்ளார். நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டுப் பரிசில்களையும் பெற்றுள்ளன.

பிரபஞ்சமும் தாவரங்களும் என்ற நூல் மக்களிடம் படிந்து கிடக்கும் நவக்கிரகம், இராசி, நட்சத்திரம், திசைகள் குறித்த நம்பிக்கைகளை நினைவூட்டி இறைவழிபாட்டில் இடம்பெறும் தாவரங்களைக் குறித்த பல செய்திகளைத் தருகின்றது. தாவரங்களைப் பற்றி அறிமுகப்படுத்தும்பொழுது அதன் அறிவியல்பெயர், வழக்குப்பெயர், வளரியல்பு, பயன்படும் பாகம், தாவரங்கள் குறித்த பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள், மருத்துவப் பயன்பாடு, சித்தமருத்துவத் தொகைப்பெயர் என்று பலதரப்பட்ட செய்திகள் தரப்பட்டுள்ளன. அந்த வகையில் 85 தாவரங்களைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் நூலாசிரியர் பஞ்சவர்ணம் அவர்கள் சிறப்பாக விளக்கியுள்ளார். 85 தாவரங்களின் படங்களும் வண்ணத்தில் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளன.

குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்….

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு நூலில் இடம்பெற்றுள்ள தாவரங்களைப் பற்றி எழுதியுள்ள பஞ்சவர்ணத்தின் நூல் சங்க இலக்கிய ஆய்வில் ஒரு குறிப்பிடத் தகுந்த ஆய்வு நூலாக உள்ளது. குறிஞ்சிப்பாட்டு நூலில் 112 தாவரங்கள் குறித்த குறிப்பு உள்ளதை எடுத்துரைக்கின்றார். 99 மலர்கள் கபிலரால் குறிக்கப்படுகின்றன என்று அறியப்பட்ட தகவலை 102 மலர்கள் என்று குறிப்பிட்டு உயர்விளக்கம் தருகின்றார்.  தாவரங்களின் புறத்தோற்றம் மற்றும் அடைகுறிப்பிட்டு 35 மலர்கள் பெயரிடப்பட்டுள்ளன என்கின்றார்(பக்கம் 9). 

குறிஞ்சிப்பாட்டு போலவே கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையில் 50 தாவரங்களின் பெயர்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளதை எடுத்துரைத்துள்ளார்(பக்கம்22). Polynomial என்னும் பலசொல்பெயரீடுமுறை மற்ற நாடுகளில் 16, 17 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வழக்கிற்கு வர, தமிழில் கி.மு. என்று குறிக்கத்தக்க காலகட்டத்தில் இருந்துள்ளமையைப் பெருமையுடன் பதிவுசெய்துள்ளார் (பக்கம் 29). மேலும் தொல்காப்பியத்தில் தாவரங்களுக்குப் பெயர்சூட்டும் முறை எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் பஞ்சவர்ணம் நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார்(பக்கம் 31)

 குறிஞ்சிப்பாட்டு நூலின் பாடலடிகளைச் சிறப்பாகப் பிரித்துப் பதிப்பித்துள்ள பஞ்சவர்ணம் தம் ஆய்வை வலிமையுடையதாக்க அனைத்துக் கூறுகளையும் சிறப்புடன் கையாண்டுள்ளார். குறிஞ்சிப்பாட்டு நூலில் இடம்பெறும் 102 மலர்களின் பட்டியல், கபிலர் குறிப்பிடும் மற்ற தாவரங்களின் பட்டியல் (பக்கம்60,61), குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 112 தாவரஙளின் மொத்தப்பட்டியல், சங்க இலக்கியங்களில் இடம்பெறாமல் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் இடம்பெற்ற 19 தாவரங்களின் பட்டியல் (பக்கம் 67),  குறிஞ்சிப்பாட்டில் மட்டும் இடம்பெறும் தாவரங்களின் (8) பட்டியல் (பக்கம் 67), குறிஞ்சிப்பாட்டு மற்றும் பக்தி இலக்கியங்களில் இடம்பெறும் தாவரங்களின் ((8) பட்டியல், குறிஞ்சிப்பாட்டு மற்றும் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் தாவரங்களின் (சேடல்) பட்டியல் (பக்கம் 68) என்று குறிப்பிடத்தக்கப் பட்டியல்கள் ஏராளமாக இந்த நூலில் உள்ளன.

குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு மலரையும் எடுத்துக்கொண்டு அதனைச் சங்க இலக்கியப் புலவர்கள் எவர் எவர் எவ்வாறு பிற இடங்களில் ஆண்டுள்ளனர் என்றும், அதன் தாவரவியல் பெயர், குடும்பம், வகை, வளரியல்பு என்று பலவகை விளக்கங்களைத் தந்துள்ளார். இதனைக் கடந்து இனியொரு பட்டியல் இடமுடியாதபடி மிகச்சிறப்பாக இந்த ஆய்வு அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளது. பிற சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பொருத்தமான இடங்களையும் கண்டுகாட்டியுள்ளார். குறிஞ்சிப்பாட்டின் 112 தாவரங்களையும் குறிப்பிடும் வண்ணப்படங்கள் இந்த ஆய்வுநூலின் தரத்தை உறுதிப்படுத்துகின்றன.

தாவரவியல் ஆய்வில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட திரு.பஞ்சவர்ணம் அவர்களிடம் உரையாடியதிலிருந்து சங்க இலக்கியங்களில் 252 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும், தொல்காப்பியத்தில் 47 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும் திருமூலர் பாடல்களில் 70 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும், அருட்பாவில் 58 தாவரங்கள்  பற்றிய குறிப்புகள்  உள்ளனவாகவும் குறிப்பிடுகின்றார்.

திரு.பஞ்சவர்ணம் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள தாவரத் தொகுப்புக்குள் நுழைந்து தட்டினால்  சங்க இலக்கியங்களில் இடம்பெறும் 252 தாவரங்களைப் பற்றிய செய்திகளைப் படத்துடன் கண்டு மகிழமுடியும்.

கருங்குவளை 93 இடங்களிலும், நீர்முள்ளி20 இடங்களிலும் சங்க இலக்கியக்கங்களில் ஆளப்பட்டுள்ளதை அவர் தரவுத்தொகுப்பு காட்டுகின்றது. அதுபோல் கோடல் தோன்றி, காந்தள் ஒன்றுபோல் குறிக்கப்பட்டிருப்பினும் அனைத்தும் வேறு வேறானவை என்கின்றார். குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகையில் மட்டும் அனிச்சம் என்ற சொல் உள்ளதைக் குறிப்பிட்டு திருக்குறளில் 4 இடத்தில் அனிச்சம் இடம்பெற்றுள்ளது என்கின்றார். இவ்வாறு  4 இடத்தில் குறிப்பிடப்படும் அனிச்சமும் அனிச்சம் பற்றிய பல உண்மைகளைத் தெரிவிக்கின்றன என்கின்றார்.

தண்டலை என்பது சோலை என்று அறிந்திருந்த நமக்குத் தண்டலை என்பது ஒரு தாவரம் என்கின்றார். அதற்குச் சான்றாகத் தண்டலையின் தாவரப்படத்தையும் பூவையும் காட்டி, பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்படும் காட்சிகளுடன் இயைத்துத் தம் கருத்தை நிலைநாட்டுகின்றார். 

பத்துப்பாட்டு நூலுள் 185 தாவரங்கள் இடம்பெற்றுள்ளதையும், சங்க இலக்கியம் தொடங்கி, சங்கம் மருவிய இலக்கியங்கள், பக்திப்பனுவல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் தாவரம் சார்ந்த செய்திகளையெல்லாம் தம் தரவுத் தொகுப்பகத்தில் சேமித்து வைத்துள்ளார் இந்தத் தமிழ் நகராட்சித் தலைவர்.


 இரா.பஞ்சவர்ணம், மு.இளங்கோவன்

தொடர்பு முகவரி:
திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள்,
காமராசர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
607  106
செல்பேசி: 0091 9488945123

சனி, 16 மார்ச், 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்



 தொடக்க விழா அழைப்பு


நிறைவு விழா அழைப்பு

சென்னைப் பல்கலைக்கழகமும், மலேயாப் பல்கலைக்கழகமும், சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து தமிழியல் பரிமாணங்கள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கை 23.03.2013 - 24.03.2013 ஆகிய இரண்டு நாள் சென்னையில் நடத்துகின்றன.

இந்த நிகழ்வில் பேராசிரியர் எம். இரவிச்சந்திரன், முனைவர் இரா.தாண்டவன், முனைவர் எஸ் குமரன், முனைவர் பொற்கோ, முனைவர் க.இராமசாமி, முனைவர் வ.ஜெயதேவன், முனைவர் அரங்க. பாரி, ஆ.இரா.சிவகுமாரன், திரு.மா.நந்தன், பேராசிரியர் ஜி.விஸ்வநாதன், கு.கோட்டேஸ்வர பிரசாத், முனைவர் அரங்க.இராமலிங்கம், முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் ந.அருள், முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் அபிதா சபாபதி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பன்னாட்டுப் பேராளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படிக்க உள்ளனர்.

இணையம் கற்போம் நூலுக்கு ஜோதிஜியின் மதிப்புரை


முக்கியமானவர் - முனைவர் மு. இளங்கோவன்


நீங்கள் வலைபதிவரா? இல்லை வலையில் வெறுமனே மேய்சசல் மைதானமாக வைத்திருப்பவரா? 

எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பவரா? வலை பதிவுகளின் தொழில் நுடபங்கள் பார்த்து மிரண்டு போய் நிற்பவரா?

எவராயினும் நிச்சயம் தமிழ் இணையத்தை முழுமையாக தெரிந்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்க முடியும். 

இந்த வருடம் மே மாதத்துடன் என்னுடைய வலையுலக பயணம் ஐந்தாவது ஆண்டை எட்டப் போகின்றது. ஆனால் தமிழ் இணையத்தின் நீளம் ஆழம் அகலம் போன்றவற்றை என்னால் முழுமையாக உள் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அந்த குறையை சென்ற மாதத்தில் என் கைக்கு வந்த ஒரு புத்தகம் தீர்த்து வைத்தது.

டாலர் நூல் வெளியீட்டு விழாவை நடத்திய திரு. கே.பி.கே.செல்வராஜ் அவர்கள் திடீரென்று ஒரு மாலை என்னை அழைத்தார். அலுவலக பணியில் மும்முரமாக இருந்த என்னிடம் திரு. இளங்கோவன் அவர்களைத் தெரியுமா? என்று கேட்டார்.  நன்றாகவே தெரியுமே என்றேன். 

அவர் கணிப்பொறிகள் சார்ந்து தமிழிலில் இயங்கிக் கொண்டிருக்கும் முனைவராச்சே என்றேன்.  ஆச்சரியப்பட்டு அவர் உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார். இன்று மாலை என் அலுவலகத்திற்கு வர முடியுமா? என்றார்.  இருந்த வேலைகளை ஒத்திவைத்து விட்டு அன்று மாலை 6 மணிக்கு கேபிகே அலுவலகத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்காக காத்திருந்தேன்.

ஏறக்குறைய சமவயது உள்ள மு. இளங்கோவன் அவர்களுடன் உரையாடிய அந்த ஒரு மணி நேரத்தில் என்னால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அப்போது தான் அவரின் இரண்டு புத்தகங்கள என் கைக்கு கிடைத்தது. 

ஒன்று இணையம் கற்போம் என்ற நூலும், அயலக தமிழறிஞர்கள் என்ற நூலையும் பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டேன்.

குறிப்பாக இணையம் கற்போம் என்ற நூல் ஒவ்வொரு சம கால இளைஞர்கள் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய நூலாகும். 

என்னுடைய இந்த ஐந்தாம் ஆண்டு தமிழ் இணையப் பயணத்தில் உருப்படியான சில விசயங்களை செய்யத் தொடங்க வேண்டும் என்று சில திட்டங்களை மனதில் வைத்திருந்தேன்.  இந்த ஆண்டில் புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா என்ற நூலகத்தை தமிழ் இணையத்தில் பலருக்கும் சென்று சேர்க்கும் வேலையை சிறப்பாக செய்ய முடிந்தது. அதன் தொடர்ச்சியாக திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஈடேறிக் கொண்டிருக்கிறது.  

மூன்றாவது கடமையாக தமிழ் இணையத்தில் மின் நூல் வடிவத்தில் இருக்கும் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும், அநேக பார்வைகளின் படாமல் இருக்கும் பல தரப்பட்ட நூல்களையும் ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம்  என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இவரின் இணையம் கற்போம் என்ற நூலைப் படித்து முடித்த போது என்னுள் இருந்த உத்வேகம் இன்னமும் அதிகரித்தது. 


இந்த சமயத்தில் தான் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் அறிமுகமும், அவரின் இணையம் கற்போம் என்ற அற்புதமான நூல் என் கைக்கு கிடைத்தது.  2007 ஆம் ஆண்டு மே மாதம் எனக்கு அறிமுகமான இந்த தமிழ் இணையம் குறித்து இன்று வரைக்கும் கால் பங்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற என்னுடைய ஆதங்கத்தை போக்கியது இந்த நூலே. 

176 பக்கங்களுடன் தரமான தாளில் அச்சில் வந்துள்ள இந்த இணையம் கற்போம் என்ற நூல் என்பது ஒரு என்சைக்ளோபீடியா என்றால் அது தவறில்லை. அந்த அளவுக்கு தமிழ் இணையம் குறித்து, இதன் வளர்ச்சி குறித்து, வளர்ந்து கொண்டிருக்கும் நிலை குறித்து, வாய்ப்புகள் குறித்து ஒவ்வொரு நிலையையும் அழகான எளிமையான வார்த்தைகளைக் கொண்டு நம்மை வாசிக்க வைப்பதில் முனைவர் மு. இளங்கோவன் வெற்றி கண்டுள்ளார்.  நூறு ரூபாய்க்கு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பேசப்படும் ஒரு நூலை தனது கடுமையான உழைப்பின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார். 

கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரையுடன் தொடங்கும் இந்த நூலில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், தமிழ் இணையத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு எளிய உதாரணங்களுடன் படிப்படியான கோர்வையான சம்பவங்களுடன் புரியவைத்துள்ளார்.  தொடங்க வேண்டிய மின் அஞ்சல் முகவரி முதல் ஒவ்வொருவரும் தொடர ஆசைப்படும் வலைபதிவுகள் வரைக்கும் ஒவ்வொரு நிலைகளையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

தமிழ் விசைப்பலகை உருவாக்க உழைத்தவர்கள், தமிழ் தட்டச்சு குறித்த புரிதல்கள், குழும மின் அஞ்சல் குறித்த அறிமுகம், திரட்டிகளின் பங்கு, தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகத்தின் முழுமையான விபரங்கள் என்று தொடங்கி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு அத்தியாயத்தின் வாயிலாக வாசிப்பதற்கு எளிய நடையில் தெள்ளத் தெளிவாக புரிய வைக்கின்றார். இ கலப்பை உருவான கதை, தமிழ் விக்கிபீடியான, தமிழ் விக்சனரி, தமிழ் மின் அகரமுதலிகள் என்று ஒவ்வொரு கடலையையும் அமுதமாக தந்துள்ளார். 

இந்த புத்தகத்தின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் உண்டான ஒவ்வொரு அத்தியாங்களிலும் தமிழ் இணையம் வளர்ந்த கதையின் நிலையை ஏராளமான உழைப்பின் மூலம் கவனமாக பதிவு செய்துள்ளதோடு தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் கல்லூரி பேராசியர் பணியோடு உலகமெங்கும் இந்த தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு பயிலரங்குகள் மூலம் அறிமுகப்படுத்துவதையும் தனது கடமையாக கொண்டுள்ளார்.   தமிழ் இணையத்தில் இதைப்பற்றி யாரும் சொல்லவில்லையே என்று நீங்கள் மனதில் வைத்திருக்கும் அத்தனை விசயங்களைப் பற்றியும் இந்த நூலின் வாயிலாக தெளிவாக புரியவைத்துள்ளார்.  சம காலத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் வளர்ந்துள்ள நீட்சிகள் அனைத்தையும் பதிவு செய்துள்ள முனைவர் மு. இளங்கோவன் அவர்களை சிறப்பாக பாராட்டலாம்.

தமிழ் இணையம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருப்பது. ஆனால் தனது இணையம் கற்போம் என்ற நூலின் ஒவ்வொரு பதிப்பிலும் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த தமிழ் இணையத்தை அதன் மாற்றத்தை தவறாமல் புதிய பதிப்பில் சேர்த்துக் கொண்டே வருவதால் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஏதோவொரு புதிய விசயங்களை உங்களால் கற்றுக் கொள்ள முடியும். 

தனது வலைபதிவில் நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் அறிஞர்கள் குறித்தும், அவர்களின் சிறப்பையும் குறித்து  ஒவ்வொரு சமயத்திலும் ஆவணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கும் திரு. முனைவர் மு. இளங்கோவன் தமிழ் உலகத்தில் முக்கியமானவர். 


வெறும் எழுத்தோடு நின்று போகாமல் களத்தில் நின்று களப்பணியாற்றும் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் தமிழ் மொழி குறித்த அக்கறை, இதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமை, என்று தன்னளவில் தளராமல் தினந்தோறும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றார். இவரின் உழைப்பின் மூலம் அடுத்து வரும் தமிழ் இணைய இளைஞர்களின் கைக்கு கணினித் தமிழாக கிடைக்கும் என்பதோடு இவரின் உழைப்பு இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படும். 

நூலின் பெயர் 

இணையம் கற்போம்.

விலை  நூறு ரூபாய்

நூல் வெளியீடு 

               வயல்வெளி பதிப்பகம்
               இடைக்கட்டு,
               உள்கோட்டை (அஞ்சல்)
               கங்கைகொண்ட சோழபுரம் (அஞ்சல்)
               அரியலூர் மாவட்டம் 612 901

நூலாசிரியர் அலைபேசி எண் 94420 29 053

நன்றி: தேவியர் இல்லம் வலைப்பூ

திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்



திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியும், திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகமும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளன.  வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.க.சு.சி. தியாகபாரி அவர்களின் தலைமையில் தொடக்கவிழா நடைபெறும். திரு.மு.வடுகநாதன், திரு.அ.மோகன்தாசு ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெறும்.

வேலுடையார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் திலக பார்வதி அவர்கள் அனைவரையும் வரவேற்கவும், பெரியார் பார்வை இதழாசிரியர் திரு. கவி அவர்கள் அறிமுகவுரையாற்றவும், இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் பொதுச்செயலர் திரு.எண்கண் சா.மணி அவர்கள் நன்றியுரையாற்றவும் புலவர் சீனி. கோவிந்தராசு அவர்கள் தொகுப்புரை வழங்கவும் உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரையாளராகக் கலந்துகொண்டு கல்வியியல் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் இணையத்துறையை அறிமுகம் செய்ய உள்ளார். ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.

நாள்:23.03.2013 சனிக்கிழமை
நேரம் காலை 10 மணி
இடம்: வேலுடையார் கல்வியியல் கல்லூரி, திருவாரூர்

தொடர்புக்கு:
புலவர் எண்கண். சா. மணி அவர்கள்
அண்ணாநகர், இலவங்கார்குடி, ,திருவாரூர் – 610 104
செல்பேசி: 9750611471

வெள்ளி, 15 மார்ச், 2013

தமிழ் இணையப் பயிலரங்கக் காட்சிகள்


                                  தமிழ் இணையப் பயிலரங்கம்- பங்கேற்பாளர்கள்

 தமிழ் இணையப் பயிலரங்கம்- பங்கேற்பாளர்கள்
கோவில்பட்டி வெங்கடசுவாமி கல்லூரியின் தமிழ் இணையப்பயிலரங்கம் காலை 10 மணிக்குச் சிறப்பாகத் தொடங்கியது…..

வியாழன், 14 மார்ச், 2013

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ் இலக்கியச் சோலை சிறப்பு நிகழ்ச்சி


கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ் இலக்கியச் சோலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தரையிசைப் பாடல்கள் என்ற தலைப்பில் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த சிறப்புரை இடம்பெற உள்ளது. தமிழமுதம் பருக அனைவரும் வருக.


நாள்15.03.2013, வெள்ளிக்கிழமை
நேரம்: பிற்பகல்3 மணி
இடம்: அறைஎண்57, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி - கோவில்பட்டி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: ஆ.மீனாம்பிகை, மோ.முருகலட்சுமி

வரவேற்புரை: முனைவர் க.மாரியப்பன்
          முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி- கோவில்பட்டி

தலைமையுரை: திருமிகு கே.செல்வராஜ் அவர்கள்            
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி- கோவில்பட்டி
சிறப்பு விருந்தினர் அறிமுகம்: முனைவர் சுகந்தி ஞானம்மாள்    

சிறப்புரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

நன்றியுரை: திருமதி இரா.அருணா, உதவிப் பேராசிரியர்
நிகழ்ச்சித் தொகுப்புரை: இராஜ சுகேஷ்
                       ஆ.மீனாம்பிகை

செவ்வாய், 12 மார்ச், 2013

நெஞ்சம் நிறைந்த கோவை இணையப் பயிலரங்கம்



கல்லூரிச் செயலர் மருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்களிடம் 
 ஐபேடு பயன்பாட்டை விளக்கும் மு.இ

கோயம்புத்தூர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வுக்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன எனவும் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வேண்டும் எனவும் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.மணிகண்டன் அவர்கள் அன்பு அழைப்புவிடுத்தார்.

12.03.2013 இல் இணையப் பயிலரங்கிற்கு நடத்த முதலில் திட்டமிட்டோம். ஆனால் அன்று கடையடைப்பு நடக்க வாய்ப்பு இருந்ததால் முதல் நாளுக்குப் பயிலரங்க நிகழ்வு நடைபெறத் திட்டமிட்டோம். அதற்குத் தகத் திட்டமிட்டபடி 10. 03. 2013 இரவு 9.30 மணிக்குப் புதுச்சேரியில் புறப்பட்டு 11.03.2013 விடியல்  6.30 மணிக்குக் கோவையை அடைந்தேன். பேராசிரியர் கி. மணிகண்டனுக்கு என் வருகையைத் தெரியப்படுத்தியதும் அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னை எதிர்கொண்டு அழைத்துக் கல்லூரியின் விருந்தினர் இல்லத்தில் ஓய்வெடுக்கத் தங்க வைத்தார்.

இணையத்தில் செய்தி பார்த்தல், மின்னஞ்சல்களுக்கு விடை தருதல், இன்று பேச வேண்டிய குறிப்புகளை இற்றைப் படுத்தல் என்று என் கடமைகளைச் செய்தேன். அதற்குள் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் உணவுக்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டனர். காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத்திற்குச் சென்று சிற்றுண்டி முடித்தோம்.

சரியாகப் பத்து மணிக்குக் கல்லூரி முதல்வரைச் சந்தித்தோம். அனைவரும் கல்லூரிச் செயலாளர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். கல்லூரியின் தூய்மை, கட்டட அமைப்பு, மாணவர்களின் ஒழுங்கு, பரந்துபட்ட கல்லூரியின் வளாகத் தூய்மைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தேன். விரைவில் கல்லூரியில் தொடங்க உள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைப்பிற்குக் கல்லூரித் தலைவர் அவர்களுக்கு என் பாராட்டுகளையும் பணிவுடன் தெரிவித்தேன்.

மருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்கள் மிகச்சிறந்த ஆளுமைப் பண்பு கொண்டவர்கள் என்பதைச் சிறிது நேர உரையாடலில் தெரிந்துகொண்டேன். திறமையானவர்களை மிகச்சிறப்பாக அடையாளம் காணும் பேரறிவைக் கண்டு மகிழ்ந்தேன்.

மருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்கள் என் பணிகளையும் உழைப்புகளையும் அமைதியாகக் கேட்டு உள்வாங்கிக்கொண்டார்கள். சற்றுநேரத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்ற அரங்கிற்குச் சென்றோம்.

மாணவர்கள் மிகசிறப்பாக வரவேற்றுக் கோலமிட்டிருந்தனர். வண்ணப்பொடிகளில் கணினி வரைந்து அழகுடன் வைத்திருந்தனர். அதில் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பில் எழுத்துகள் உள்ளிட்டு வரையப்பட்டிருந்த அந்த அழகுக்கோலம் கண்டு மகிழ்ந்தேன்.

தமிழ் இணையப் பயிலரங்கின் தொடக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அமைந்தது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்று இணையப் பயிலரங்கம் நடைபெறக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தந்த ஒத்துழைப்பை அரங்கிற்குச் சொல்லி எங்களை மகிழ்ச்சிப்படுத்தினார். குறிப்பாகக் கல்லூரி முதல்வர் முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் பேரூக்கம் வழங்கியதை நன்றியுடன் பதிவுசெய்தார்.

அடுத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் முத்துசாமி ஐயா அவர்கள் இன்றைய மாணவர்களுக்கு இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார். அதுபோல் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ. இராமகிருஷ்ணன் அவர்களும் கல்வியியல் பயிலும் மாணவர்கள் இணையத்தில் இருக்கும் பாடத்திட்டங்களைப் பயன்படுத்திப் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். துணைமுதல்வர் முனைவர் கி.துரைராஜ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.


மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள்உரையாற்றுதல்

மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் மாணவர்கள் கல்வி அறிவைப் பெறுவதில் தொடர்ந்து முயன்று உழைக்கவேண்டும் என்றும் அதற்குரிய சூழல் கல்லூரியில் உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருவதை நினைவூட்டி வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவாக நான் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து அறிமுகவுரையாற்றினேன். காட்சி விளக்கத்துடன் என் உரை அமைந்தது. காலையில் இரண்டுமணி நேரம் அமைந்த என் உரை, பகல் உணவுக்குப் பிறகு செய்முறையாக இரண்டுமணி நேரம் அமைந்தது. நான்கு மணிநேரத்தில் தமிழ் இணைய வளர்ச்சி தொடங்கித் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பூக்கள் உருவாக்கம் வரை அனைத்துச் செய்திகளையும் அரங்கிற்கு அறிமுகம் செய்தேன். அனைவரும் ஆர்வமுடன் குறிப்பெடுத்துக்கொண்டனர். வினாக்கள் தொடுத்து விளக்கம் பெற்றனர்.
சமூக வலைத்தளங்களையும், தமிழ்க்கல்வி தரும் இணையதளங்களையும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மழலைக்கல்வித் தளங்களையும் அறிமுகம் செய்தேன். சற்றொப்ப முந்நூற்று ஐம்பது மாணவர்களும், பேராசிரியர்களுமான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் கல்வியியல்(B.Ed.) பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரங்கு நிறைந்திருந்ததால் இரண்டு திரைகள் அமைக்கப்பெற்றிருந்ததன. இணைய இணைப்பு, மின்சாரம், அரங்க அமைப்பு, உதவியாளர்கள் என அனைத்தும் குறைவற்று இருந்ததால் இந்தப் பயிலரங்கம் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றது.

நிறைவு விழாவில் மாணவர்கள் பயிலரங்கம் குறித்த கருத்துரை வழங்கினர். பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


மாணவிகள் வரைந்த வரவேற்புக்கோலம்



கல்லூரி முதல்வர் முனைவர் பெ.இரா.முத்துசாமி


கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், முதல்வர், மு.இ.


பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கல்


பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கல்


மாலை நிகழ்ச்சிக்குப் பிறகு கல்லூரியின் முதல்வரைக் கண்டு உரையாடியபொழுது மேலாண்மைத்துறையில் பயின்ற அவரின் பேரறிவு கண்டு வியப்படைந்தேன். அவர்தம் தமிழ் ஈடுபாடும் நூல் கற்கும் இயல்பும் அறிந்து மகிழ்ந்தேன். பேராசிரியர்கள், நண்பர்கள், மாணவர்களிடம் விடைபெற்று விடுதிக்குத் திரும்பினேன். சற்று நேரம் ஓய்வெடுத்து இரவு உணவுக்கு நகரத்திற்கு வந்தோம். இரவு உணவு முடித்து இரவு 10 மணியளவில் புறப்பட்டு காலையில் புதுச்சேரி வந்து சேர்ந்தேன். என். ஜி. பி. கல்லூரியின் பயிலரங்க நிகழ்வுகள் என்றும் என் நினைவில் பசுமையாக இருக்கும்.