நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 22 அக்டோபர், 2018

மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்களை நடுவணாகக் கொண்டு வழங்கிய வாழ்த்துரை




     கனடாவுக்கு முதல்முறையாகச் சென்றபோது(2016) மருத்துவர் பால் ஜோசப் அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பினைத் திருக்குறள் அறக்கட்டளையின் நிறுவுநர் அண்ணன் சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் உருவாக்கித் தந்தார்கள். அதன் பிறகு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மருத்துவருடன் தொடர்பு தொடர்ந்தது; வலுப்பெற்றது. தங்கள் குடும்பத்துள் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, அவர்கள் காட்டிய அன்பையும், பாசத்தையும் என்றும் நன்றியுடன் போற்றுவேன். மருத்துவர் எழுதிய கவிதைகளை அவ்வப்பொழுது மின்னஞ்சலில் அனுப்புவார். படித்துச் சுவைப்பதுடன் நிறுத்திக்கொள்வேன். ஒட்டுமொத்த கவிதைத்தொகுப்புக்கும் விரிவான ஒரு மதிப்புரை எழுதும்படி ஒரு வேண்டுகோள் விடுத்தார். நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் மதிப்புரை மட்டும் இதுநாள்வரை எழுதி அனுப்பவில்லை. எனக்கு அமையும் தொடர்ப்பணிகளும், ஆய்வுப்பணிகளும் இவ்வாறு செய்ய இயலாமல் போனமைக்குக் காரணங்களாகும்.

     நான் உருவாக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் கனடாவில் வெளியிடுவதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்ட சூழலில் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் அதன் வெளியீட்டு விழாவை நடத்துவதற்குத் தாமே முன்வந்தமையை நன்றியுடன் இங்கு நினைத்துப்பார்க்கின்றேன் (கனடா விபுலாநந்தர் கலை மன்றம் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக நடத்தியமை பின்பு நடந்தது). இது நிற்க.

     மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் மனிதநேயம் மிக்க மருத்துவர். பிறர் துயரங்களைக் களையும் தூய உள்ளத்தினர். மேடைகளில் நகைச்சுவை பொங்குமாறு பேசும் ஆற்றலாளர். மருத்துவத்துறை சார்ந்த செய்திகளை வானொலிகள், தொலைக்காட்சிகள், மக்கள் மன்றங்களில் எடுத்துரைத்து நோயற்ற சமுதாயம் அமைவதற்குத் தொண்டாற்றும் நன்னெறியினர். நோயாளிகளாக வருபவர்களை நோய்நீக்கி, தம் குடும்பத்துள் ஒருவராக மாற்றிக்கொள்ளும் வகையில் "அன்பெனும் பிடியுள் அனைத்து மலைகளையும்" அரவணைத்துக்கொள்ளும் நவீன வள்ளலார்.

     மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் எழுதிய அகவிதைகள், நலம் நலமறிய ஆவல் என்னும் இரண்டு நூல்களையும் அண்மைய கனடாப் பயணத்தின்பொழுது வழங்கிப் படித்துப்பார்க்குமாறு சொன்னார். ’வேதாளம் மீண்டும்  முருங்கை மரம் ஏறிய’ கதைதான். அந்த நூல்களும் புரட்டப்படாமல் நான் படிக்கவேண்டிய பகுதியில் கண்முன்னே காட்சி தந்தன. அண்மையில் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை மருத்துவரின் துணைவியாரும் எங்களின் அன்னையாருமான கேமாவதி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். எனக்கே உள்ள நோயான ’ஒத்திவைக்கும்’ பழக்கத்தால் இந்தச் சூழலிலும் நூலைப் படிப்பதற்குக் காலம் ஒதுக்கமுடியவில்லை. எனவே நூல்கள் படிக்கப்படாமல் இருந்தன. இரண்டு மூன்று நாள்களுக்கு முன் நூல்வெளியீட்டு விழா நினைவு வந்தது. நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். உள்ளத்தைத் தொடும் உணர்வுகளைத் தாங்கிய ’அகவிதை’ நூலும், அனைவருக்கும் பயன்படும் அரிய மருத்துவக் குறிப்புகளைத் தாங்கிய ’நலம் நலமறிய ஆவல்’ நூலும் தொடர்ந்து என்னைப் படிக்கச் செய்தன. என் உள்ளத்தில் ஊற்றெடுத்த நூல் குறித்த உணர்வுகளை எழுத்தாக்கி விழா நாளன்று அனுப்பினேன். அந்த மடல் இதுதான்.

     உலகிற்கே மனிதநேயத்தைக் கற்றுத்தரும் கனடா மண்ணில் மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்வெளியீட்டு விழா நடைபெறுவதை அறிந்து மகிழ்கின்றேன். தொலைவுகள் எம்மைப் பிரித்தாலும், இந்த அரங்கின் முதல்வரிசையில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளனாக இந்த அரங்கில் என் உள்ளம் இருப்பதை அரங்கில் இருபோர் அறிய வாய்ப்பில்லை.

     தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்கும், இழந்த இழப்புகளைச் சரிசெய்துகொள்வதற்கும் அல்லும் பகலும் அயராது உழைத்து, முன்னேறிக் கொண்டிருக்கும் எம் தமிழ் உறவுகளுக்கு நடுவே, கடும் உழைப்பால் இச்சமூகத்தின் நோய் நீக்கும் பணியில் ஈடுபாட்டுடன் உழைக்கும் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் இரண்டு நூல்களை எழுதி வழங்கியுள்ளமைக்கு முதலில் என் பாராட்டுகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.



     அகவிதைகள் என்ற புதுப்பா நூல் தலைப்பிலயே பல நுட்பங்களைத் தாங்கியுள்ளது. விதைகள் எனவும் கவிதைகள் எனவும் அகத்தில் விளைந்த விதைகள் எனவும் அ+கவிதைகள் = அகவிதைகள் அதாவது கவிதை அல்ல என்றும் பல பொருள்தரும் வகையில் இந்த நூலின் தலைப்பு உள்ளது. 49 தலைப்புகளில் இந்தக் கவிதை நூல் 166 பக்கங்களில் அமைந்துள்ளது. கவிநாயகர் வி. கந்தவனம், பொன்னையா விவேகானந்தன் ஆகியோரின் அணிந்துரை, ஆய்வுரைகளைக் கொண்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. அனுபவங்கள், நிகழ்வுகள், மருத்துவம், அறிவியல், உளவியல், விழிப்புணர்வு, ஈழவிடுதலை, மாந்தநேயம் குறித்த பொருண்மைகளில் அமைந்த கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

     மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை அடுக்கிக்காட்டும் மருத்துவர், வரம்பின்றி இருப்பதை எடுத்துரைத்து, சின்னத்திரை தொடர்கள் போன்று நோயின் பட்டியல் நீளும் என்கின்றார்(பக்கம் 7,8).

ஆழிப்பேரலை குறித்து மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் வரைந்துள்ள கவிதை என் உள்ளம் தொட்ட கவிதை என்று உரக்கச்சொல்வேன்.

" ஏய் கடலே
ஏன் எங்கள் மீது
இவ்வளவு கோபம்.
நீலம் உனக்கு சொந்தமில்லை
அது வானத்திடம் நீ உள்வாங்கியது.
அலைகள் உனது உடைமையில்லை
அதுவும் காற்றிடம் கடன் வாங்கியது.
மீன்களும் உனக்கு உரியதல்ல
இயற்கை இன்பத்தின் இனவிருத்தி
சிப்பிகளும் வேண்டாமென்று
கரையில் துப்பிவிட்டாய்.
உப்பும் துவர்ப்பும்
இப்போது  உன்னிடம்
நிறையவே இருக்கிறது.
அது எங்களிடம் அள்ளிச்சென்ற
கண்ணீரால் வந்ததோ!:

என்று வினவும் கவிஞரின் உள்ளத்தில் சுனாமியின் சீற்றத்தால் மாந்தகுலம் சந்தித்த இழப்புகளின் பதிவுகள் தென்படுவதை உணரலாம். நீலவண்ணம், அலைகள், மீன்கள், முத்துகள் யாவும் உன்னுடையதில்லை என்று அடுக்கிக்காட்டும் கவிஞரின் கவியுள்ளத்தை இக்கவிதையில் இரசிக்க இயலும்.


" தெரிந்தோ தெரியாமலோ
எப்போதும் நாம்
அழுதுகொண்டுதானிருக்கிறோம்.
ஆனால் கண்ணீர் மட்டும்
வெளியே வழிந்தோடுவதில்லை
இன்னும் புரியவில்லையா?

கண்களில் மட்டும் கண்ணீர்
என்ற தண்ணீர் இல்லையென்றால்
காய்ந்து வறண்டுபோன
விழிகளில் ஒளியேது? (பக்கம் 18)

என்று மருத்துவர் பால் ஜோசப் கவிதைச் சொற்களால் வினவுவது அவர் ஒரு தேர்ந்த மருத்துவர் என்பதைக் காட்டுகின்றது.

     யாழ்நூலகம் அழிந்த வரலாறு என்பது மீண்டும் ஒரு குமரிக்கண்டம் அழிந்தமைக்கு நிகரானது. அதனைக் கண்ணால் கண்ட நேர்ச்சான்று நம் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள். தாம் கல்வி பயின்ற காலத்தில் அந்தக் கொடிய நிகழ்வு நடைபெற்றதை நம் மனத்தில் காட்சி ஓவியமாகத் தீட்டிக்காட்டுகின்றார் இவர். நூலகம் எரிந்த சோகம் தாங்காமல் பன்மொழி வித்தகர் டேவிட் அடிகளார் மயங்கி விழுந்து இறந்த செய்தியை நம் மருத்துவர் பதிவு செய்துள்ளமையைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்

" அன்று நள்ளிரவு வைகாசி 31 ஆண்டு 81
பத்திரிசியார் கல்லூரி விடுதியில்
அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்
அருகிலுள்ள வீதியெங்கும் பரபரப்பு
எழுந்துபார்த்தோம் ஜன்னல் வழியே
சற்றுத் தொலைவில் பாரிய தீப்பிழம்பு
நள்ளிரவில் செந்நிற வானம்...

மறுநாள் விடிவதற்குள்
சாம்பல்மேடாய் கருகிய தூண்களோடு
காமினி திசநாயக்காவும்
காட்டுமிராண்டி காடையரும்
கச்சிதமாய் திட்டமிட்டு
கல்வித்தாயின் கோவிலை
கரியாக்கி இடுகாடாய் மாற்றினர் (பக்கம் 104,105)

என்று எழுதியுள்ள பக்கங்களைப் படிக்கும்பொழுது கண்ணீர் நம்மையறியாமல் கன்னங்களில் கரைபுரண்டோடுவதை உணரமுகின்றது. அகவிதைகள் முளைத்து, முழுமரமாகி, சமூகம் பயன்பெற நல்ல கனிகளைத் தரட்டும்.

நூல் 2:

     மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நலம் நலமறிய ஆவல் என்ற நூல் தமிழ்மொழிக்குக் கிடைத்துள்ள அரிய மருத்துவத்துறை சார்ந்த நூல் என்று கொண்டாடலாம். இந்த நூலில் இன்று மனிதகுலம் சந்தித்துவரும் பல நோய்களை நினைவூட்டி, அவை ஏற்படாமல் இருப்பதற்குரிய வழிகளையும் காட்டியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. சினம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், மன அழுத்தம், செல்பேசிகளால் ஏற்படும் நோய், வீடியோகேம் போன்றவற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் என்று பல்வேறு நோய்களை எளிமையாக எடுத்துரைத்து, அதற்குரிய தீர்வுகளையும் இந்த நூலில் சுட்டியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. எளிய நடையும், எடுத்துரைக்கும் பாங்கும், சான்றுகாட்டும் அனுபவமும் இந்த நூலை இனிமையாக்குகின்றது. பெரும்பான்மையான நோய்களிலிருந்து விடுபட அண்டை அயலில் இருப்பவர்களுடன் அன்புகாட்டுதல், பாராட்டுதல், மன்னித்தல் முதலிய பண்புகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர் மிகச் சிறப்பாகச் சொல்லியுள்ளார்.

     இதயம் பேசுவதுபோல் அமைத்துள்ள முதல் கட்டுரையின் பாங்கு சிறப்பாக உள்ளது. இதயம் சார்ந்த நோயுடையவர்கள் இந்தக் கட்டுரைப் பகுதியைப் படித்தால் நோயிலிருந்து விடுபட வழியுண்டு. இந்த நோய் இல்லாதவர்கள் இக்கட்டுரையைப் படித்தால் இந்த நோய் தம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும். மன அழுத்தம் மிகப்பெரிய நோயாக இன்று உலகம் முழவதும் பரவலாகக் காணமுடிகின்றது. இதனைப் போக்கவும் மருத்துவர் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சினம் குறித்து, திருவள்ளுவர் பலபடப் பேசியிருந்தாலும் நம் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் மிக எளிமையாகச் சினம் குறித்து எடுத்துரைத்து, அதனால் உடலும் உள்ளமும் பாதிக்கப்படுவதை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். சிக்மண்டு பிராய்டு உள்ளிட்ட மருத்துவமேதைகளைக் கொண்டாடும் இந்த உலகம் ஆயிரக்கணக்கான மனித இதயங்களாக நின்று, உளவியல் பேசிய திருவள்ளுவனைக் கொண்டாடவில்லையே என்ற கவலை நம் மருத்துவர் பால் அவர்களிடம் இருப்பதை நினைத்து அவரின் மொழியுணர்வை மெச்சுகின்றேன்.

     இன்று மனிதகுலத்தை வாட்டி வதைக்கும் முதன்மை நோய்களை அறிமுகம் செய்து அவை ஏற்படாமல் இருக்க அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ள நூலாக நலம் நலமறிய ஆவல் நூல் உள்ளது.

     தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் இரண்டு நூல்களை வழங்கியுள்ள மருத்துவர் பால் ஜோசப் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி, இந்தியா
14.10.2018

நூல் வெளியீடு: மணிமேகலை பிரசுரம், சென்னை -17