நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 30 மார்ச், 2011

கோவை மரபின்மைந்தன் முத்தையா அலுலகத்தில் தமிழ் இணையம் அறிமுகம்


இணையம் பற்றிய கலந்துரையாடல்

கோவைத் தமிழ்ப்படைப்பாளர்கள் இணைந்து இலக்கியச் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.30.03.2011 மாலை ஆறு முதல் 8.30 வரை நடந்தது.எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன்,செம்பியன் வல்லத்தரசு,மரபின் மைந்தன்முத்தையா,யாழி,இளங்கோவன்,விசயராகவன், இரவீந்திரன்,புதின ஆசிரியர் கனக தூரிகா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.தமிழ் இணையம் சார்ந்த செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கோவை ஜி.ஆர். தாமோதரன் கல்வியியல் கல்லூரியில் மொழிபயிற்றுவித்தல் புத்தொளிப்பயிற்சி தொடங்கியது!


ஜி.ஆர்.தாமோதரன் கல்வியியல் கல்லூரி


கோவை மாவட்டக் கல்வி அதிகாரி ச.கலைவாணி அவர்களின் உரை

மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனமும் கோவை ஜி.ஆர். தாமோதரன் கல்வியியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மொழி பயிற்றுவித்தல் புத்தொளிப்பயிற்சி இரண்டுநாள் நிகழ்வு இன்று (30.03.2011) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை முனைவர் இரா.சானகி அவர்கள் வரவேற்றார். கோவை மாவட்டக் கல்வித்துறை அதிகாரி திருவாட்டி கலைவாணி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மொழி பயிற்றுவித்தலின் முக்கியத்துவத்தை விளக்கினார். மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மேனாள் தேர்வுநெறியாளர் முனைவர் நடராச பிள்ளை அவர்கள் முதன்மையுரையாற்றினார். கல்வியாளர் முனைவர் இரத்தினசபாபதி, முனைவர் தூ.சேதுபாண்டியன், முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செவ்வாய், 29 மார்ச், 2011

தமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு


முனைவர் கு.கல்யாணசுந்தரம் உரை

 தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவசமாகப் பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம் (Project madurai) என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத் திட்டப் பணிகள் குறித்துப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரையாற்றினார்.

 28.03.2011 மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை தாங்கினார்.

 புதுவைப் பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரித் தமிழ்த்துறையின் துணைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் மதுரைத்திட்டத்தின் நிறுவுநர் முனைவர் கு.கல்யாணந்தரம் அவர்களின் தமிழ்ப்பணியினை அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார்.

 சிறப்பு விருந்தினர்களுக்குப் புதுவையைச் சார்ந்த பொ.தி.ப. அறக்கட்டளையின் நிறுவுநர் தி.ப.சாந்தசீலனார் அவர்களின் மகள் செல்வி சா.நர்மதா அவர்கள் பொன்னாடை அணிவித்து, நூல்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.

 நிகழ்ச்சியில் செர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக் நிக்கலசு கலந்துகொண்டு பேராசிரியர் கு.கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணியை வாழ்த்திப் பேசினார்.

 சுவிசர்லாந்திலிருந்து வருகை தந்த மதுரைத்திட்டம் நிறுவுநர் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத் திட்டம் மின்பதிப்புப் பணிகள் பற்றியும் இது தொடங்கப்பட்டதன் நோக்கம், இதனைப் பயன்படுத்துவது எவ்வாறு என்று விளக்கமாக எடுத்துரைத்தார். மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" இது உலகத் தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடித் தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம் ஆகும்.

 மதுரைத் திட்டம் அரசு (அ) தனியார் நிறுவன உதவியின்றி, வணிக நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ஆம் ஆண்டு தமிழர் திருநாளில் (பொங்கல்) தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்து நடந்து வருகின்றது. உலக அளவில் முந்நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் இருந்தபடி, தமிழ் இலக்கியங்களைக் கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாகத் தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் தொடக்கக் காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு உருவாக்கப்பட்டன.

ஆனால் 1999-ஆம் ஆண்டிலிருந்து இணையம் வழித் தமிழ்த் தகவல் தொழில் நுட்பப் பரிமாற்றத்திற்கானது என இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு உருவாக்கி மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (web pages in html format), PDF வடிவத்திலும் தரப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கு குறியீடு (Unicode) முறையில் மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்
.
சங்க கால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகின்றன. இணைய முகவரி: http://www.projectmadurai.org/. மதுரைத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை உலக அளவில் தமிழர்களும் பிற நாட்டு ஆய்வாளர்களும் இலவசமாகத் தரவிறக்கிக் கணினியில் பயன்படுத்தலாம்.

உலங்கெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இதில் பங்களித்துள்ளனர். ஒருவர் தட்டச்சிட்டு வழங்குவார். அதனை வேறொருவர் மெய்ப்புப் பார்ப்பார். வேறொருவர் இணையத்தில் பதிக்கும் பணியில் ஈடுபடுவார். எனவே அவரவர்களுக்கு வாய்ப்பான பணிகளில் பங்கேற்கலாம் என்று மதுரைத் திட்டப்பணிக்கு அனைவரும் பங்காற்றும்படி கல்யாணசுந்தரம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். இன்னும் மரபுரிமைச் சிக்கல் இல்லாத தமிழ் நூல்களை இணையத்தில் வெளியிடுவதற்குத் தாம் ஆயத்தமாக இருப்பதைக் குறிப்பிட்டார். இணையத்தில் உள்ளிடப் பெற்ற நூல்கள் படிமக் கோப்புகளாகவும், ஒருங்குகுறியிலும் இருக்கின்றன. ஒருங்குகுறியில் உள்ள நூல்களை இலக்கண ஆய்வுகளுக்கும், கணினிமொழியியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தலாம் என்று கு.கல்யாணசுந்தரம் பேசினார்.

தாகூர் கல்லூரித் தமிழ்த்துறையின் துணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கோவை கொங்குநாடு கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் முருகேசன், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுவையைச் சேர்ந்த பல்கலைக்கழக, கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவன, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.


முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்களை முனைவர் வி.முத்து அவர்கள் சிறப்பித்தல்


முனைவர் உல்ரிக் அவர்களைச் செல்வி சா.நர்மதா அவர்கள் சிறப்பித்தல்


முனைவர் உல்ரிக் பேச்சு


முனைவர் ஆ.மணி அவர்கள் முனைவர் முத்து அவர்களுக்கு 
ஆடை அணிவித்தல்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள் (ஒருபகுதி)


பார்வையாளர்கள்

ஞாயிறு, 27 மார்ச், 2011

ஆய்வுக்களத்தில் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்


உல்ரிக் அவர்களுக்கு அழைப்பிதழ் அளிக்கும் வி.முத்து

 ஆய்வுலகில் ஈடுபடுபவர்கள் தங்களையொத்த உழைக்கும் ஆய்வாளர்களைப் பார்க்கும்பொழுது ஊக்கம்பெறுவது உண்டு. அதுபோல் துறைசார் முன்னோடிகளைப் பார்க்கும்பொழுது நம்மையறியாமல் நம் ஆய்வு வேகம் எடுக்கும். வறண்டு கிடக்கும் இன்றையத் தமிழக ஆய்வுத்துறையில் அங்கொன்றும் இங்கொன்றும் சில ஆய்வுகள் நடைபெறுகின்றனவே தவிரச் சரியான முன்மாதிரிகள் அருகிவிட்டனர்.

 இந்த நிலையில் நாளை (28.03.2011) புதுச்சேரித் தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் மதுரைத் திட்ட மின்பதிப்புப்பணியின் நிறுவுநர் முனைவர் கு.கல்யாணந்தரம் அவர்களின் சிறப்புப்பொழிவு அழைப்பிதழ் கொடுக்க செர்மன் கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் புதுச்சேரி – கோர்க்காடு இல்லத்திற்கு நானும் கல்விச் செம்மல் முனைவர் வி.முத்து ஐயா அவர்களும் இன்று சென்றோம்.

 பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களைக் கோவைச் செம்மொழி மாநாட்டில் முதன்முதல் கண்டேன். முன்பே அவர்களின் பணியை இணையம் வழியாக அறிவேன். நாமக்கல் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்களுடன் உலகப் பல்கலைக்கழகத் தமிழாய்வுகள் பற்றி உரையாடும் பொழுதும் அம்மாவைப் பற்றி நாங்கள் உரையாடியது உண்டு. மேலும் கோர்க்காட்டிலிருந்து வந்து எங்கள் கல்லூரியில் பயின்ற என் மாணவி இரேவதி அவர்கள் வழியாகவும் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் தமிழ் ஈடுபாட்டை அறிவேன்.

 நாட்டுப்புறவியல்துறை ஆய்வில் பேராசிரியர் அம்மாவுக்கு ஈடுபாடு என்பதால் அவர்கள் மேல் எனக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு. பல ஆண்டுகள் பார்க்க நினைத்தும் உரிய நேரம் வாய்க்காமல் இருந்தேன். இன்றும் அவர்கள் வெளிநாடு புறப்படுவதற்குரிய பயண ஏற்பாட்டில் இருந்தார்கள். சந்திக்க நேரம் ஒதுக்க அவர்களால் இயலாமல் இருந்தார். எனினும் குறைந்த நேரம் மட்டும் சந்திப்பு இருக்கும் என்று உறுதி கூறிச் சந்திப்பு உறுதியானது.

 கல்வி வள்ளல் வி.முத்து ஐயா அவர்களின் மகிழ்வுந்தில் காலை 11.45 மணியளவில் கோர்க்காடு புறப்பட்டோம். அரைமணிநேர ஓட்டத்திற்குப் பிறகு கோர்க்காட்டில் வெள்ளைக்கார அம்மா வீடு என்றால் ‘அழும் குழந்தையும் சொல்லும்’ என்ற நம்பிக்கையில் வினவினோம்.

 அதன்படியே மிக எளிதாகப் பேராசிரியர் அம்மா அவர்களின் வீட்டை அடைந்தோம். பழங்கால வீடு. எங்கள் இடைக்கட்டு காளியம்மன்கோயில் அருகில் இருந்து மண்மேடான பழையவீட்டின் முகப்பு போல் இருந்தது.

 கதவுகள் பழங்காலத்துக் கதவுகள். தூண்கள் பழயைத் தூண்கள். அழகிய வண்ணம் பூசப்பட்டு இருந்தது. வீட்டுப்பணிகளில் இருந்த இளைஞர் ஒருவர் எங்களை எதிர்கொண்டு அழைத்தார். அவருக்கு முன்பாகக் குறிஞ்சிப்பாட்டில் வருவதுபோல் நாய்கள் சில ஓடி வந்தன. அதன் வரவேற்பு எங்களுக்கு அச்சம் தந்தாலும் அவை அதட்டியதும் குரைப்பதை நிறுத்தியது. பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களுக்கு எங்கள் வருகை தெரிவிக்கப்பட்டது. வீட்டின் தொட்டிமுற்றம் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தோம்.

 வீடு என்று சொல்வதைவிட ஒரு கலைக்கூடமாக என் கண்ணுக்குத் தென்பட்டது. “பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல்” ஒவ்வொரு பொருளாக ஆர்வமுடன் பார்த்தேன். சங்கிலிக் கருப்பன் கோயிலில் தொங்கும் சங்கிலிபோல் பல சங்கிலிகள் தொங்கின. பழைய காலத்துக் குறுவாள்கள் மாட்டப்பெற்றிருந்தன. வீடு முழுவதும் பித்தளைக் குவளைகள், தவலைகள், தோண்டிகள், குடங்கள் எனப் பலவகை இருந்தன. நன்கு கழுவித் தூய்மையாகப் பராமரிக்கின்றனர். சில பூச்செடிகளும் வீட்டின் உள்ளே இருக்கின்றன.

 எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். என் நூல்கள் சிலவற்றை அம்மாவுக்கு வழங்கினேன். விழாவுக்கான அழைப்பிதழைக் கல்விச் செம்மல் வி.முத்து ஐயா அவர்கள் வழங்கினார். எங்களின் தமிழார்வம் பற்றி அறிமுகம் செய்துகொண்டோம். அடுத்தமுறை வரும்பொழுது புதுவைத் தமிழ்ச் சங்கத்திலும் கல்விச்செம்மல் முத்து ஐயா அவர்களின் கல்வி நிறுவனங்களிலும் உரையாற்றும்படி பேராசிரியர் அம்மா அவர்களிடம் விண்ணப்பித்துக்கொண்டோம்.

 உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகள் பற்றி எங்கள் பேச்சுத் திரும்பியது. அவர்களின் புதுச்சேரி வருகை, திருமண வாழ்க்கை, சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகப் பணி, இன்றைய கல்விப்பணிகள், ஆய்வுப்பணிகள் பற்றி நீண்டநேரம் உரையாடினோம். செர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் செய்யப்படும் தமிழ்த்துறைப் பணிகள், தமிழ் நூல்கள் அடங்கிய நூலகம், தமிழாய்வு மாணவர்கள் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் கல்விப் பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பல செய்திகளைப் பேசினோம்.

 அதற்குள் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் கணவர் திரு.சரவணன் ஐயா எங்களை வரவேற்றபடி வெளியிலிருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த ஊர் மதுரை. சிலை வடிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட கலைக்குடும்பம் சார்ந்தவர் அவர். அவர்கள் தரப்பு செய்திகளைப் பேசினோம்.

 பின்னர் அம்மாவிடம் வீட்டைச் சுற்றிப்பார்க்கும் என் அடங்காத ஆசையைச் சொன்னேன். அம்மா உல்ரிக் நிக்லாஸ் அவர்கள் ஒவ்வொரு அறையாகத் திறந்து இந்த வீட்டின் வரலாற்றைக் கால்மணி நேரத்திற்குள் சொல்லிமுடித்தார்கள். பழைமை மிக்க செல்வக் குடும்பத்தினரிடமிருந்து இந்த வீட்டை அம்மா அவர்கள் 1995 அளவில் வாங்கியுள்ளனர். பின்புறம் தோட்டத்துடன் கூடியவீடு.

 மாட்டுவண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்தை அம்மா அவர்கள் திருத்தி ஓர் அறையாக்கி தம் அலுவலகமாக மாற்றியுள்ளார்கள். கணிப்பொறி, இணைய இணைப்பு, மின்வசதி, வளிக்கட்டுப்பாட்டு அறை என்று அழகிய அலுவலகமாகச் செயல்படுகின்றது. நெல்லைக் கொட்டிவைக்கும் தானியப் பாதுகாப்பு அறையைத் திருத்தி அதனை ஒரு நீண்ட அலுவலகமாக மாற்றியுள்ளார்கள். இன்னொரு அறையில் காணொளிச் செப்பம் செய்யும் (எடிட்டிங்) பணிக்குரிய கருவிகள் இருக்கின்றன. தமிழகத்தின் நாட்டுப்புறவியல் ஆய்வின்பொருட்டுத் திரட்டப்பெற்ற பாடல்கள் ஆய்வுமூலங்கள் அடங்கிய காணொளி நாடாக்கள், ஒலிவட்டுகள் எனப் பல திறத்து ஆய்வுக் களஞ்சியமாகத் தம் வீட்டை மாற்றியுள்ளார்.

 ஓர் இருள் செறிந்த அறையைத் திறந்துகாட்டினார்கள். அதில் நூலகத்திற்கான பல நிலைப்பேழைகள் இருந்தன. துறைசார் நூல்கள் முறைசார்ந்து அடுக்கப்பட்டிருந்தன. நூல்களை எளிதாக அடுக்க நிலைப்பேழையின் வெளிப்புறத்தில் உரிய பொருத்தமான படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ம.கோ.இரா, கலைஞர் படம் உள்ள நிலைப்பேழையைத் திறந்தால் திராவிட இயக்க நூல்கள், தொல்.திருமாவளவன் படம் உள்ள அறையைத் திறந்தால் தலித்தியம் சார்ந்த நூல்கள், சமயவாணர்கள் படங்கள் உள்ள பேழையைத் திறந்தால் சமய இலக்கியங்கள், பழங்குடி மக்கள் படம் உள்ள அறையைத் திறந்தால் நாட்டுப்புறவியல் ஆய்வு சார்ந்த நூல்கள் உள்ளன.

 அடுப்பங்கறையின் அமைப்பையும் பார்க்கத் தவறவில்லை. சிற்றூப்புற மக்கள் பயன்படுத்தும் விறகு அடுப்பு. அதனை ஒட்டி வளியடுப்பு. அதன் அருகே மேல்நாட்டார் பயன்படுத்தும் மின்அடுப்பு. இவற்றைப் பயன்படுத்த அனைவருக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

 தமிழக முறைப்படி அனைவரும் கீழே அமர்ந்து உண்ணும் முறை என்பதை அறிந்து ஒவ்வொரு முறையும் வியப்பின் உச்சிக்குச் சென்று மீண்டேன்.

 அங்கிருந்த ஒவ்வொரு பேழைகளும் பழைய கலைக்கருவூலங்களாகக் காட்சி தருகின்றன. ஆய்வாளர்கள், வெளிநாட்டு விருந்தினர்கள் வந்தால் தங்கிச் செல்ல பல அறைகள் கொண்ட வீட்டினைப் பாதுகாக்கின்றனர். தம் பணிக்கு உதவும் பணியாளர்களுக்குத் திருமணம் உள்ளிட்ட கடமைகளைச் செய்து தம் வீட்டில் தங்கவைத்துப் பாதுகாக்கின்றார். அவரின் ஆய்வு உள்ளத்துக்கு இடையில் தாய்மையின் தவிப்பை உணர்ந்தேன். அங்குள்ள அனைவரும் புகைப்படம் எடுப்பவர்களாகவும் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவராகவும் மாற்றியுள்ள பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் பணிகளைக் கண்டு வியப்படைந்தேன்.

 அடுத்து அவர்களின் வீட்டுப் பூசையறையில் உள்ளே சென்று பார்த்தோம்,
வகைவகையான வழிபாட்டுப் பொருள்கள் எங்களுக்கு மலைப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தின. அய்யனார் சிலைகள், கோயில் மணிகள், விளக்குகள், கத்திகள், வீச்சரிவாள் என்று நாட்டுப்புறப் பயன்பாட்டில் இருந்த அழகிய கலைக்கருவூலமாகத் தம் இல்லத்தை விளங்கச்செய்துள்ளார்.

பூசைக்குரிய பொருட்கள்


உல்ரிக் அவர்களின் பாதுகாப்பில் கலைப்பொருட்கள்

 புதுச்சேரி வரும் உண்மையான ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழார்வலர்கள் தொலைவுபாராமல் பார்க்க வேண்டிய இடம் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் இல்லம். அவர்களின் இசைவுபெற்று ஒருமுறை சென்றுவந்தால் உங்கள் ஆய்வு சிறக்கும். உங்கள் பார்வை புதுமையடையும். பழைமையைப் போற்றிப் பாதுகாக்கும் உள்ளம் உங்களிடம் உருவாகும்.

 ஒரு பேராசிரியர் எவ்வாறு வாழ வேண்டும், இருக்கவேண்டும், என்பதற்கு உல்ரிக் அவர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டு. ஆய்வுத்தலைப்புடன் பொருந்தி, தம் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்குப் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்கள் எடுத்துக்காட்டு.

 இவர்களின் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை. இவர்களின் பணிதான் தமிழ் ஆய்வுப்பணி.


மு.இளங்கோவன், உல்ரிக்


முனைவர் வி.முத்து,மு.இளங்கோவன்,உல்ரிக்,சரவணன்

சனி, 26 மார்ச், 2011

மோர்சிங் = நாமுழவு
இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் ஐயா அவர்களிடம் அண்மையில் உரையாடிக்கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு இசைக்கருவிகள் பற்றி
திரும்பியது. மோர்சிங் என்ற அழைக்கப்பெறும் கருவிக்குரிய தமிழ்ப்பெயர் என்ன என்று உரையாட்டில் ஒரு வினா எழுந்தது.

மோர்சிங் என்ற இக்கருவிக்குரிய தமிழ்ப்பெயரை அறிஞர்கள் பலவாறு குறிக்கின்றனர். சிலர் முகர்சங்கு என்கின்றனர். சிலர் மோர்சங்கு என்கின்றனர். இந்தச்சொல்லுகுரிய வேர்மூலம் அறிய இயலவில்லை. இசைக்கலைஞன் ஒருவன் இக்கருவியை வாசிப்பதை
கி.மு 3 ஆம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம் என்று இணையவெளியில் தகவல்கள் கிடைக்கின்றன. யூதர்களுடன் இணைத்து இக்கருவியைக் கூறுவதும் உண்டு.

ஆனால் இந்தக் கருவி எந்தப் பகுதி மக்களிடமிருந்து இசை உலகுக்குக் கிடைத்தது என்று துல்லியமாக அறியமுடியவில்லை.

இந்தி மொழி இலக்கியங்களில் "முகர்சங்க்" என்று குறிப்பிட்டுள்ளனர். அகோபிலர் எழுதிய "சங்கீத பாரிசாதம்" என்ற வடமொழி நூலிலும் இது "முகசங்க்" என்றே பெயரிடப்பட்டுள்ளது
என இசையாய்வாளர்கள் குறிப்பது உண்டு.

இக்கருவி இரும்பாலான கருவி. இது பழங்குடி மக்களிடமிருந்து இசையுலகுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

தமிழக மேடைகளில் அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும்
இனிய இசை தரும் மோர்சிங் என்ற கருவிக்குரிய தமிழ்ச்சொல் தேவைப்பட்டது. அரிமளம் ஐயாவிடம் தாங்களே ஒரு சொல்லை உருவாக்குங்கள் என்றேன்.


முனைவர் அரிமளம் பத்மநாபன்

இக்கருவியின் அமைப்பு, இசைமுழக்கும் முறை, பயன்பாட்டுப் பொருட்கள், பயன்படுத்துவோர் பற்றி முழுமையாக எண்ணிப்பார்த்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

மோர்சிங் என்பது வாயினால் கௌவிக்கொண்டு நாவால் முழக்கும்கருவி.இதற்கான தாளச்சொற்கட்டு நாவால் அளிக்கப்படுகின்றது. இசை,நாட்டிய நிகழ்ச்சிகளில் இது பெரும்பாலும் இசைக்கப்படுகின்றது. தனி இசைப்பில்(ஆவர்த்தனங்களில்) அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும். முன்னணிக் கலைஞர்கள் தங்கள் இசைநிகழ்வில் இக்கருவியிசை இடம்பெறும்படி பார்த்துக்கொள்வர்.

தொல்காப்பியர் தாளமுழக்குக் கருவிகளுக்குப் பறை (தெய்வம் உணாவே மாமரம் புள் பறை)என்ற பொதுப்பெயரைப் பயன்படுத்துகின்றார். சங்க இலக்கியத்தில் முழவு என்ற சொல்
பயன்படுத்தப்படுகின்றது. முழக்கப்படுவதால் முழவு என்று வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

மோர்சிங் என்ற கருவியில் முழக்கப்படும் கம்பிக்குப் பெயர் நாக்கு என்பதாகும்.மோர்சிங் என்பது நாவால்(வாசிப்பவரின்), நாவை(கம்பியை) முழக்குவதால் நாமுழவு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றார்.

மோர்சிங் இரும்புக்கருவி; முழவுக்கருவிகள் தோலில் இருக்க வேண்டும் என்று சிலர் கருத்துரைக்கலாம். சங்கு என்பது தாளக்கருவி அன்று. அது காற்றுக்கருவியாம்.
அவ்வாறு என்றால் மோர்சிங் என்பதன் அடிப்படையில் வரும் முகர்சங்கு என்பது அது காற்றுக்கருவியைக் குறிக்கும்.

எனவே மோர்சிங் என்பதை முகர்சங்கு, மோர்சங்கு என்பது பொருத்தமாகத் தெரியவில்லை.

ஆதலால் மோர்சிங் என்பதைத் தமிழில் நாமுழவு என்று குறிப்பிடலாம் என அரிமளம் பத்மநாபன் குறிப்பிட்டார்.

நன்றி: நித்யவாணி

அரியூர் இந்தோச்சா அறக்கட்டளை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்


பள்ளியின் தோற்றம்

புதுச்சேரி மாநிலம் அரியூர் இந்தோச்சா அறக்கட்டளை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் செய்யும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. அருள்மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கினார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் தமிழ் இணையத்தை அறிந்துகொண்டனர். பள்ளியின் முதல்வர் இரஞ்சிதம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில்
முழுமையாக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.முதல்வர் உடன்பிறப்பு(சகோதரி) இரஞ்சிதம், மு.இளங்கோவன்,அருள்மூர்த்தி


பங்கேற்ற மாணவர்கள்


பங்கேற்ற மாணவிகள்

வியாழன், 24 மார்ச், 2011

வியர்வையின் வெளிச்சம் - வெற்றிபெற்றவரின் வாழ்க்கை வரலாறு...


வியர்வையின் வெளிச்சம்- வி.ஜி.செல்வராஜ்

 அண்மைக்காலமாகப் பல்வேறு முயற்சிகளில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களால் மனம் தொய்வடைந்து கிடந்தது. இந்த நேரத்தில் சென்னையிலிருந்து தமிழ்தாசன் ஐயா அவர்கள் அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறும் "வியர்வையின் வெளிச்சம்" என்ற 596 பக்கம் கொண்ட அரிய நூலொன்றை எனக்கு அனுப்பியிருந்தார்கள்.

 அண்ணன் வி.ஜி. செல்வராஜ் அவர்களைச் சென்ற ஆண்டு திருக்குறள் கருத்தரங்கிற்கு அந்தமான் சென்றிருந்தபொழுது நன்கு அறியும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணாச்சி வி.ஜி. சந்தோஷம் அவர்கள்தான் என்னை வி.ஜி. செல்வராஜ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

 நான்கு நாள் வி.ஜி.பி. குடும்பத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன். எவ்வளவு பெரிய செல்வந்தர்கள். ஆனால் அதற்கான சிறு அறிகுறிகூட அவர்களிடம் தெரியவில்லை. வி.ஜி.சந்தோஷம் அண்ணாச்சி அவர்கள் எங்கள் கையைப் பற்றிக்கொண்டு ஒருவேளை தம்முடன் அமர்ந்து உணவு உண்ணவேண்டும் என்று அன்பொழுக கெஞ்சுவார்கள். இதுகண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி அவர்களும் நானும் மலைத்துப்போனோம். துணைவேந்தர் அவ்வை நடராசன் ஐயாவும் அம்மா மருத்துவர் தாரா நடராசன் அவர்களும் எங்கள் உரையாடலில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துவார்கள். வி.ஜி.பி. இராஜாதாஸ் அவர்கள் மிகச்சிறந்த செயல்திறமும் வினையாண்மையும்கொண்ட இளைஞர். எங்களுக்கு விருந்தோம்புவதில் முன்னிற்பவர்.

 யான் முன்பு அறிந்த பல பணக்காரக் குடும்பத்தினர் ஆளுக்கு ஆள் நாட்டாண்மை வேலை பார்ப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் கீழ்ப்படியாமல் இருப்பார்கள். மற்றவர்களை அடக்கி ஆளப்பார்ப்பார்கள். தம் கண்ணசைவுக்கும் கையசைவுக்கும் பணிசெய்ய வேண்டும் என்று ஏங்குவார்கள். குழுவாக இயங்குவார்கள். தலைமைப்பண்புக்கு அடம்பிடிப்பார்கள். இப்படிப் பார்த்திருந்த எனக்கு வி.ஜி.பி. குடும்பம் இந்த அளவு முன்னேறிய பிறகும் மூத்தோர் சொல் கேட்கும் பண்பு அறிந்து வியந்தேன். வி.ஜி.பி. குடும்பத்தினரின் எண்ணிக்கை நூற்றுக்குமேல் இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக ஓரே இடத்தில் வாழ்வதாக அறிந்தபொழுது எனக்கு வியப்பு மேலும் பன்மடங்கானது. இன்னும் பாகப்பிரிவினைகள் நடக்கவில்லை என்று அறிந்ததும் அவர்கள்மேல்கொண்ட மதிப்புக்கு அளவே இல்லை.

 பெயரப் பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது என்றாலும் அண்ணன் தம்பியர் மூவரும் ஒருவர் கிழித்த கோட்டை மற்றவர்கள் தாண்டாமல் இருப்பது தமிழகத்தின் கூட்டுக் குடும்பத்திற்கு இவர்கள் குடும்பம் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டலாம்.

 வி.ஜி.பி. என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் நிறுவுநர் பெரிய அண்ணாச்சி வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் திட்டமிட்டு உழைத்த உழைப்பும், தம்பியர்களின் மேல் வைத்த நம்பிக்கையும் அதுபோல் தம்பியர்கள் இருவரும் அண்ணாச்சி மேல் வைத்த நம்பிக்கையும் பல மடங்காகத் தழைத்து இன்று உலக அளவில் புகழப்படும் வி.ஜி.பி. நிறுவனங்கள் பலகோடி மதிப்பில் செழித்துள்ளதன் வரலாற்றை அண்ணன் வி.ஜி. செல்வராஜ் அவர்களின் எழுத்தில் கற்று வியந்துபோனேன்.

 வி.ஜி. செல்வராஜ் அவர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முகத்தான் தமிழகத்தின் பழைமை வாய்ந்த ஒரு கூட்டுக் குடும்ப வரலாற்றை மிகத்தெளிந்த நடையில் எழுதியுள்ளார்.

 ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அழகிய தமிழில் பொருள் மயக்கமின்றி எழுதியுள்ளார். ஞான திரவியம் நாடார் என்னும் பெருமைக்குரிய ஐயாவுக்கு வாய்த்த இரண்டாம் மனைவி இரத்தினம் அம்மாளின் பிள்ளைதான் நம் அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ். மலேசியாவில் பிறந்த நம் அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் தந்தையாரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்பெற்று முதல் மனைவியின் பிள்ளைகளான வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோஷம் என்னும் இரண்டு அண்ணன்களுடன் வளர்ந்துள்ள பாங்கை அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் எழுதிய பிறகே நமக்கு இவர்கள் ஒரு தந்தைக்கும் இரு தாயருக்கும் பிறந்த குழந்தைகள் என்ற செய்தி தெரிகிறது. ஆனால் ஒற்றுமையில், பாசத்தில், வளர்ச்சியில் ஒருவருக்கொருவர் எந்த வேறுபாடும் காட்டாமல் வாழ்ந்துள்ளதை இந்த வாழ்க்கை வரலாற்று நூல் நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

 வி.ஜி.பி.குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் யாவரும் பாசப்பிணைப்புடன் ஒன்றாக வளர்ந்துள்ளதைப் பார்க்கும்பொழுது இவ்வாறு வாழ இயலுமா என்ற ஏக்கமே மேலிட்டு நிற்கின்றது. அந்த அளவு இவர்களின் ஒற்றுமை உலகக் குடும்பங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

 மிகச்சிறிய கடைகளைத் தொடங்கி நடத்தியும், பின்னர் வீட்டுமனைகள் விற்பனையில் ஏற்பட்ட முன்னேற்றம்கொண்டு பிற தொழில்களைப் பெருக்கியும் இன்று உலக அளவில் பல கிளைகளுடன் பல்கி நிற்பதை அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் வி.ஜி.பி. நிறுவன வளர்ச்சியில் எந்த அளவு பங்காற்றியுள்ளார் என்பதை இந்த நூலைப் படிக்கும்பொழுது தெள்ளத் தெளிவாக உணரலாம். ஒவ்வொரு வெற்றியையும் பன்னீர்தாஸ், சந்தோஷம் ஆகியோர எவ்வாறு கொண்டாடித் தம்பியைப் பாராட்டியுள்ளனர் என்பதை அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் குறிக்கத் தவறவில்லை. ஒவ்வொருவரும் தமக்கான பொறுப்புகளைத் திறம்படச் செய்தாலும் கூட்டுழைப்பின் மூலமே வெற்றி பெற முடிந்தது என்பதை வெளிப்படையாகக் குறித்துள்ளளார். இவர்களின் வளர்ச்சிக்குப் பக்கத்துணையாக இருந்தவர்களை இவர்கள் என்றும் நன்றியுடன் போற்றுவது உயர்பண்பாகத் தெரிகின்றது.

 திரு.இராமச்சந்திர உடையார் அவர்களின் ஈகைக்குணம் படித்தபொழுது திரு.உடையார் அவர்கள்மேல் நமக்கு உயர்ந்த மதிப்பு வருகின்றது.

 மும்பைக்குப் பயணமானபொழுது-ஓர் உயர்ந்த இலக்கு நோக்கிச் சென்றபொழுது- கருநாடாக மாநில எல்லையில் ஏற்பட்ட கலவரத்தால் பயணம் பாதியில் தடைப்படுகின்றது. தோல்வியின் விளிம்புக்குச் சென்று, திசைமாறிக் கோவா சென்றதும் அங்கிருந்து கப்பலில் மும்பை சென்று எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைவதும் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துகாட்டுப் பகுதிகளாகும். அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் உலகம் முழுவதும் தம் அறிவுத்திறமையால் வணிகத்தைப் பெருக்கியதைப் படிக்கும்பொழுது முன்னேறத்துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் இந்த நூலைத் தலைமாட்டில் வைத்துப் படிக்கவேண்டும்.

 எந்த நிகழ்வையும் மறைக்காமல் எழுதியுள்ளது அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்களின் நேர்மையான உள்ளத்திற்குச் சான்றாகும். அனல்மின் திட்டப்பணிகளுக்காகத் தம் வடசென்னை சார்ந்த 2500 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு பெறுவதற்கு எடுத்த முயற்சிகளை ஒளிவுமறைவு இல்லாமல் எழுதியுள்ளார். மலேசியாவில் தம் வாடிக்கையாளர்கள் நடுவில் ஏற்பட்ட ஐயத்தைத் தம் அறிவுத்திறமையால் அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்களும் அவர்களின் துணைவியார் அவர்களும் மிகச்சிறப்பாகத் தீர்த்துள்ளனர்.

 வி.ஜி.பி. குடும்ப வரலாறு, நிறுவன வரலாறு, வெற்றித் தமிழரின் வாழ்க்கை வரலாறாக விரிந்து கிடப்பதைப் படித்தபொழுது தொய்வுற்ற நெஞ்சம் தெளிவு பெற்றது. ஒரு வெற்றி ஒளிக்கீற்று மனத்தில் தோன்றியது.

 முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு கையேடு இந்த நூல். ஒரு தமிழ்க்குடும்ப முன்னேற்ற வரலாற்றை எழுதிய அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்களின் தமிழ்க் கைகளைக் கண்ணில் ஒற்றிக்கொள்கின்றேன்.


நூல் :வியர்வையின் வெளிச்சம்
ஆசிரியர் : வி.ஜி. செல்வராஜ்
முதல்பதிப்பு : சனவரி,2011
விலை :300 உருவா

கிடைக்குமிடம்:

சந்தனம்மாள் பதிப்பகம்
வி.ஜி.பி.தலைமை அலுவலகம்,
எண் 6, தருமராசா கோயில் தெரு,
சைதாப்பேட்டை,
சென்னை-600 015

பேசி: 044 - 6625 9999 / 2435 7333

திங்கள், 21 மார்ச், 2011

மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்
(Project Madurai)
நிறுவுநர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு)
சிறப்புப் பொழிவு

நாள்:28.03.2011, திங்கட்கிழமை

நேரம்:மாலை 6.30 - 8.00 மணி

இடம்:புதுவைத் தமிழ்ச்சங்கம்,
எண்.2, தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுவை - 605 011.

அன்புடையீர் ! வணக்கம்.

தமிழ் இலக்கியங்களையும், இலக்கண நூல்களையும் மின் வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவயமாகப் பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம் என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத்திட்டப் பணிகள் குறித்துப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணையத் தமிழின் பயன் நுகர அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமை: முனைவர் வி. முத்து அவர்கள்
தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்.

வரவேற்புரை:முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்

சிறப்புரை:முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள்
(நிறுவுநர், மதுரைத்திட்டம், சுவிசர்லாந்து)

தலைப்பு: மதுரைத்திட்டம் மின்பதிப்புப் பணிகள்

நன்றியுரை: முனைவர் ஆ. மணி அவர்கள்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!-பாவேந்தர்

அனைவரும் வருக !
விழாக்குழுவினர்