நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

தமிழ்க்குடும்பத்தின் நற்சான்று

அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் எழுத்துகளில் யான் மயங்கிக் கிடந்தவன்.கிடப்பவன். அவர் முகம் அறியேன்.அகம் அறிவேன்.மாணிக்கத் தமிழ் பருகிய என் கல்லூரிக் காலங்கள் தேனினும் இனியனவாகும்.பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பனார்தான் எனக்கு மூதறிஞரின் நூல்களை வழங்கிப் படிக்க ஊக்கப்படுத்தியவர்.மெய்யப்பர் போலும் குருபக்தி உடையவரை யான் காண்கிலேன்.மெய்யப்பர் பற்றி அறிஞர் வ.சுப.மா.தந்த சான்று படித்து உள்ளுக்குள் நகுவன்.செம்மல் மெய்யப்பரின் செயல்பாடுகளை நறுக்குத் தெரித்தாற்போல் எழுதியிருந்தார்.

"வரியிளஞ் செங்காற் குழவி"என்பது மாணிக்கத்தமிழின் வேறொரு இடம்.

"போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத்
தேரோட்டம் இல்லை தெளி" என்று எழுதியவர்.அவரின் கொடை விளக்கு பற்றி மூன்று மணிநேரம் பேசமுடியும்.அவர் வெண்பாக்களில் நான் புகழேந்திப்புலவனைப் பார்ப்பேன்.
செம்மலின் தம்பி சொக்கலிங்கனார் அவர்கள் என் கைபற்றிப் பாராட்டுவார்.
அண்ணாச்சி இருந்திருந்தால் உங்களைத் தலையில் வைத்துப்போற்றுவார் என்று.ஓராண்டுக்கு முன் மேலைச்சிவபுரி சென்றபொழுது செம்மலின் இல்லம் நோக்கி அகவணக்கம் செலுத்தி மீண்டேன்.ஒரு நாள் அந்த இல்லம் சென்று தங்கிவர உள்ளேன்.நமக்கு அதுதான் திருப்பதி.

மாணிக்கனாரின் எழுத்துகளை உவப்போடு படித்து உணர்வுபெற்ற யான் இயன்ற வகையில் தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வழியில் மாறேன்.இதனைப் போற்றுவார் போற்றலாம்.தூற்றுவார் தூற்றலாம்.அவரவர் உள்ளம் சார்ந்து இந்த மதிப்பீடு இருக்கும்.நிற்க.

என் இணையத்தமிழ் முயற்சியை ஊக்கி அறிஞர் வ.சுப.மாணிக்கனார்,தமிழண்ணல் குடும்பம் சார்ந்த ஐயா ந.அழகப்பனார் அவர்கள் அமெரிக்காவிலிருந்து எனக்கு எழுதி விடுத்த மின்னஞ்சல் மடல் காயம்பட்டுக்கிடந்த என் உள்ளத்துக்கு ஒத்தடமாக இருந்தது.அந்த மடல் பகுதி கீழே வழங்குகிறேன்.கற்று மகிழலாம்.


அன்புத் தோழர்.முனைவர் இளங்கோவன் அவர்கட்கு,
அழகப்பன் எழுதுவன.நலம்.நலமறிய அவா.
தங்களது வலைப்பூக்கள் மிகுந்த வனப்பும் ,வாசமும் கொண்டு வருவோரை ஈர்க்கும் சக்தி கொண்ட்து.
தமிழ்ப்பற்று,தமிழார்வம்,மூதறிஞர்களின் வாழ்க்கைச் சித்திரங்களையெல்லாம் தேடிஎடுத்து படைப்பது ,போலிகளைச் சாடுவது,தமிழ் மொழிப் பாதுகாப்பு,வளர்ச்சி தங்கள் வாழ்நாள் குறிக்கோள்களாகக் செயல் படுவது இவையெல்லாம் தாங்கள் பின்பற்றுவதாகக் கூறியுள்ள சான்றோர்களின் வாழ்க்கை முறைதான்.
அலுவலகப்பணி போக தங்களுக்கு எவ்வாறு இவையெல்லாம் செய்ய முடிகிறது என்று பார்த்தால்,உங்களது இடைவிடாத உழைப்பு என் கண்களுக்குத்தெரிகிறது.


என்னைப் பற்றி:
வ.சுப.மா.வின் மூத்த மாப்பிள்ளை .முனைவர்.தமிழண்ணல் அவர்களுக்கு ,நான் மாமா மகன்.
ஊர்:மேலைசிவபுரி
சென்னை,யூகோவங்கியில் பணி ஓய்வு.தொழிற்சங்கத் தலைவர்
முனைவர்.குருமூர்த்தி (பாண்டி) எனக்கு அறிமுகமானவர்.
முனைவர்.இரா.சாரங்கபாணியாருக்கு, நன்கு அறிமுகமானவன்.
தற்சமயம் இருப்பது அமெரிக்காவில்Philadelhia நகரில் , மகள் வீட்டில்.


வ.சுப.மா.அவர்கள் எப்பொழுதும்" எனக்கு என் இயக்கத்திற்கு அதிகம்பேர் தேவையில்லை.நூறு பேர் இருந்தால் போதும்.நூறு மறவர்கள் இருந்தால் போதும்.நான் வெற்றி இலக்கை அடைந்து விடுவேன்".
என்று சொல்வார்.
அவர் சொன்ன அந்த நூறு பேர்களில் ஒருவர்தான் நீங்கள்.வ.சுப.மா.வின் குருகுலச் சீடர்களில் ஒருவர்தான் நீங்கள்.
உங்கள் தமிழ்ப்பணி தொடர்ந்து சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்பன்,
ந.அழகப்பன்.

திருவாளர் ந.அழகப்பனாருக்கு என் பணிந்த வணக்கமும் தண்ணிய நன்றியும் உரித்தாகுக.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

எங்கள் உள்ளங் கவர்ந்த கவிஞர் சிற்பி...


கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

கொங்குநாடு எத்தனையோ தமிழ் அறிஞர்களை வழங்கியுள்ளது. அடியார்க்குநல்லார் தொடங்கி தெய்வசிகாமணி கவுண்டர் வரை கொங்குநாட்டுப் புலவர்களின் பணிகளை நாம் கவனத்தில் கொண்டு பார்த்தால் இவர்களின் பாரிய பங்களிப்பு தமிழுக்கு அமைந்துள்ளமை விளங்கும். சிலப்பதிகார உரைவரைந்த அடியார்க்கு நல்லார் பொப்பண்ண காங்கேயன் வழங்கிய சோற்றுச்செருக்குதான் இவ்வாறு உரை வரைய வைத்தது என்று குறிப்பிடுவார்.புலவர்களும் புரவலர்களும் மலிந்த கொங்நாட்டில் இன்று வாழும் அறிஞர்களில் கவிஞர் சிற்பி குறிப்பிடத்தக்கவர்.

கவிஞர் சிற்பி பற்றி கல்லூரிக் காலங்களில் பெயர் மட்டும் அறிந்திருந்தேன். ஆய்வு மாணவனாக வளர்ந்தபொழுது இவர் படைப்புகளில் வகைதொகையில்லாமல் வடசொற்கள் திணிக்கப்பட்டடிருந்தது கண்டு இவர் மேல் ஒரு பற்றற்ற தன்மையே எனக்கு இருந்தது. பின்னாளில் இவர் எழுதிய ஓணான் சாபம் குறித்த கவிதை என்னை இவரை உற்று நோக்க வைத்தது.

பின்னாளில் பல உரைகள், கட்டுரைகள்,கவிதைகள் கேட்டும் கண்டும் இவர்மேல் மிகச்சிறந்த ஈடுபாடு ஏற்பட்டது.அண்ணன் அறிவுமதி அவர்கள் சிற்பியின் பழைமைப் பற்றை எனக்கு அடிக்கடி எடுத்துக்கூறுவார் பழைமையின் வேரிலிருந்து புதுமை படைக்கும் இவர் சென்னையில் பேசிய பேச்சை அண்ணன் அறிவுமதி அவர்கள் தம் கவிதை இதழொன்றில் பதிவு செய்ததை நினைத்து மகிழ்கிறேன்.ஈழத்தமிழர்களின் மேல் இவருக்கு இருந்த ஈடுபாடும், கனிவும் மேலும் இவர் மீதான மதிப்பைக் கூட்டியது.அண்மைக் காலமாக இவர் மாணவர்கள் பலரும் எனக்குத் தொடர்ந்து நண்பர்களாக வாய்த்ததும் சிற்பி அவர்களின் உண்மைத்திறனை அறிய எனக்கு வாய்ப்பை உண்டாக்கியது.

கவிஞர் சிற்பி அவர்கள் இப்பொழுது சாகித்திய அகாதெமியின் தமிழ் அறிவுரைஞர் குழு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகின்றார்.அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்படைப்புகளை வழங்கிய சிற்பி அவர்களின் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை.அவர்தம் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைப்பதில் மகிழ்கிறேன்.

கவிஞர் சிற்பி அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சி என்ற சிற்றூரில் 29.07.1936 இல் பிறந்தவர்.பெற்றோர் திருவாளர்கள் கி.பொன்னுசாமி, கண்டி அம்மாள் ஆவர். இயற்பெயர் பாலசுப்பிரமணியம் என்பதாகும்.கேரளத்தில் பள்ளிக்கல்வி பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக்கழகத்தில் இளங்கலைத் தமிழ்(ஆனர்சு) பயின்றவர்.1987 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார் (1989 வரை). 1989 இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம்,உருசியன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர் சிற்பி.

மொழிபெயர்ப்புக்காகவும்(2001), படைப்பிலக்கியத்துக்காகவும்(2003) இருமுறை சாகித்திய அகாதெமி பரிசில் பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, அரசர் முத்தையாவேள் பரிசில் பெற்றவர். கலைமாமணி விருந்து,கபிலர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர்.

சிறந்த கவிஞராகவும்,நல்ல மொழிபெயர்ப்பாளராகவும், புகழ்பெற்ற கல்வியாளராகவும், இலக்கிய இதழாசிரியராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்கும் சிற்பி அவர்கள் படிப்பும், எழுத்தும், பேச்சும் தம் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர்.

இதுவரை 15 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் 6 இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியுள்ளார்.

வானம்பாடி, அன்னம்விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட ஏடுகளில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.வானம்பாடி கவிதை இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய பங்களிப்பு செய்தபொழுது சிற்பியின் பங்களிப்பும் இருந்தது.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும்(2000-2005) ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு மன்றத்தின் தலைவராகவும், கவிஞர் சிற்பி அறக்கட்டளையின் தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர். இவை தவிர இந்திய அரசு, தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்து திறம்படப் பணியாற்றியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் விடுதலை இயக்கத் தாக்கம்(1989-1991), இடைக்காலக் கொங்குநாட்டின் சமூக-பொருளாதார அமைப்புகள் (1993-1997), கொங்கு களஞ்சியம் (ப.ஆ) ஆகிய திட்டப்பணிகளில் ஈடுபட்டு உழைத்துப் பல செய்திகளை ஆவணப்படுத்தியவர். பல்வேறு கருத்தரங்குள், பயிலரங்குகள் ஏற்பாடு செய்து பலருக்கும் பயன்படும் பணிகளைச் செய்தவர். பல்கேரியா(1983), சோவியத் ஒன்றியம்(1983), அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட அயல்நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1996 இல் சிற்பி அறக்கட்டளையைத் தொடங்கித் தமிழ்க்கவிஞர்கள் பலருக்குப் பரிசில் வழங்கிப் பாராட்டும் கொடையாளராகவும் விளங்கி வருகின்றார்.



சிற்பி அவர்கள்

சிற்பியின் படைப்புகள்

01.நிலவுப்பூ(1963) கவிதைகள்
02.சிரித்த முத்துக்கள்(1968)கவிதைகள்
03.ஒளிப்பறவை(1971)கவிதைகள்
04.சர்ப்பயாகம்(1976)கவிதைகள்
05.புன்னகை பூக்கும் பூனைகள்(1982)கவிதைகள்
06.மௌன மயக்கங்கள்(1982)கவிதைகள்
07.தேனீக்களும் மக்களும்(1982)மொழிபெயர்ப்பு
08.மகாகவி பாரதி-சில மதிப்பீடுகள்(1982)ப.ஆ
09.இலக்கியச் சிந்தனை(1989)
10.சூரியநிழல்(1990)கவிதைகள்
11.மலையாளக் கவிதை(1990)கட்டுரைகள்
12.A Comparative Study of Bharati and Vallathol(1991) ஆய்வுநூல்
13.ஆதிரை(1992)
14.இல்லறமே நல்லறம்(1992)
15.பாரதி-பாரதிதாசன் படைப்புக்கலை(1992) ப.ஆ
16.தமிழ் உலா1+2 (1993)
17.சிற்பி தரும் ஆத்திசூடி(1993)
18.வண்ணப்பூக்கள்(1994)சிறுவர் நூல்
19.அலையும் சுவடும்(1994) கட்டுரைகள்
20.இறகு(1996)கவிதைகள்
21.சிற்பியின் கவிதை வானம்(1996)கவிதைகள்
22.மின்னல் கீற்று(1996) கட்டுரைகள்
23.சிற்பியின் கட்டுரைகள்(1996)
24.அக்கினிசாட்சி(1996) மொழிபெயர்ப்பு நாவல்
25.A Noon in Summer(1996) சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு
26.பாரதி என்றொரு மானுடன்(1997)
27.ஒரு கிராமத்து நதி(1998) கவிதைகள்
28.சச்சிதானந்தன் கவிதைகள்(1998)மொழிபெயர்ப்பு
29.மருத வரை உலா(1998)ப.ஆ.
30.நாவரசு(1998)
31.இராமாநுசர் வரலாறு(1999)வா.வ.
32.பூஜ்யங்களின் சங்கிலி(1999)கவிதைகள்
33.பெரியசாமித் தூரன்(199) வா.வ.
34.பாரத ரத்தினம் சி.சுப்பிரமணியம்(1999)வ.வ
35.திருப்பாவை உரை(1999)
36.ஒரு சங்கீதம் போல(1999)
37.ஆர்.சண்முகசுந்தரம்(2000) வா.வ
38.பெருமூச்சுக்களின் பள்ளத்தாக்கு(2001)
39.உஜ்ஜயினி(2001)மொ.பெ.
40.அருட்பா அமுதம்(2001)
41.திருக்குறள் சிற்பி உரை(2001)
42.படைப்பும் பார்வையும்(2001)
43.கவிதை மீண்டும் வரும்(2001)
44.பாரதியார் கட்டுரைகள்(2002)
45.பாரதி கைதி எண் 253(2002)
46.கம்பனில் மானுடம்(2002)
47.சே.ப.நரசிம்மலு நாயுடு(2003)
48.கவிதை நேரங்கள்(2003)
49.மகாகவி(2003)
50.நேற்றுப் பெய்த மழை(2003)
51.மூடுபனி(2003)
52.காற்று வரைந்த ஓவியம்(2005)
53.வாரணாசி(2005)மொழிபெயர்ப்பு
54.சிற்பி கவிதைப் பயணங்கள்(2005)
55.தேவயானி(2005)கவிதைகள்
56.மகாகவி பாரதியார்(2006)
57.மண்ணில் தெரியுது வானம்(2006)ப.ஆ.
58.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை(2006)
59.கொங்கு களஞ்சியம்(2006)
60.மகாத்மா(2006)கவிதைகள்
61.சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்(2006)மொ.பெ.
62.தொண்டில் கனிந்த தூரன்(2006)

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளிவந்துவிட்டன...


அயலகத் தமிழறிஞர்கள்

நான் தமிழ் ஓசையில் தொடராக எழுதிய அயலகத் தமிழறிஞர்கள் கட்டுரைகள் நண்பர்களின் ஒத்துழைப்புடன் நூலாகியுள்ளது. 30 அயலகத்து அறிஞர்களின் வாழ்க்கை, தமிழ் இலக்கியப் பங்களிப்புகள் பதிவாகியுள்ளன.

கால்டுவெல், போப், கமில்சுவலபில், அலெக்சாண்டர் துபியான்சுகி, அ.கி. இராமானுசன் தனிநாயகம் அடிகளார், க.கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாசு, நா.சுப்பிரமணியன், ஆ.வேலுப்பிள்ளை, குறிஞ்சிக்குமரானர், திருமாலனார், முரசு.நெடுமாறனார், சுப.திண்ணப்பன், ஆ.இரா.சிவகுமாரன், நா.கண்ணன், பிரான்சுவா குரோ, ஈவா வில்டன், தாமசு லேமான், சிவகுருநாதப் பிள்ளை, பர்ரோ, எமனோ உள்ளிட்டவர்கள் வராலறு இந்த நூலில் உள்ளன. இவ்வறிஞர் பெருமக்களின் படங்களும் உள்ளன.200 பக்கம் கொண்டது இந்த நூல். விலை 200.00 உருவா.அழகிய அச்சு.கண்ணைக் கவரும் வண்ணப்படம்.

இந்த நூலைக் கற்று மகிழ்ந்த முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் வ.செயதேவன், இலக்கியத் துறைத்தலைவர் வீ.அரசு, பேராசிரியர் கனல்மைந்தன் (கோவை), பேராசிரியர் முருகேசன்(கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை), பேராசிரியர் தி. பெரியசாமி (பெரியார் பல்கலைக்கழகம், சேலம்),பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (அரசு கலைக்கல்லூரி, ஊட்டி) ஆகியோர் பாராட்டுச் செய்தியும் வாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளனர்.

தமிழ் இணையம் சார்ந்தும் இணையத்துக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்வியல் சார்ந்தும் நான் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாகியுள்ளது. இதில் தமிழ் இணைய அறிமுகம், இணைய இதழ்கள், இணையக் குழுக்கள், தமிழ் விக்கிப்பீடியா குறித்த அரிய செய்திகள் உள்ளன. தமிழ் இணையத்துக்குப் பாடுபட்ட காசி, முகுந்து, கோபி,  திரட்டி வெங்கடேசு ஆகியோரின் நேர்காணல்களும் உள்ளன. இணையத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல தமிழில் இந்த நூல் உருவாகியுள்ளது.

இணையம் கற்போம்

இந்த நூல் 112 பக்கம் அளவுடையது.விலை உருவா 100.00

தேவைப்படுவோர் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். அல்லது 300.00 பணம் பணவிடை(M.O.) அனுப்புவதுடன் தெளிவான முகவரியும் அனுப்புங்கள். தனித்தூதில் எங்கள் செலவில் அனுப்பிவைப்போம்.

தொடர்புக்கு:

செல்பேசி எண் : + 91 9442029053
மின்னஞ்சல் : muetamil@gmail.com

வயல்வெளிப் பதிப்பகம்
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்),
கங்கைகொண்ட சோழபுரம்(வழி),
அரியலூர்(மாவட்டம்), தமிழ்நாடு.
612 901

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

தமிழ் விக்கிப்பீடியா



கலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுளன. இக்கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச்செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது. இம்முயற்சி உலகெங்கும் நடைபெற்று வருகிறது. பிரஞ்சுமொழியில் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள் அந்த நாட்டில் வழங்கிய பழைய கலைகளைப் பதிவு செய்தன. பிரான்சில் மக்கள் புரட்சி ஏற்படவும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்புரட்சி ஏற்படவும் கலைக்களஞ்சியங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஒரு மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும். அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகரவரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன. ஒரு பொருள் சார்ந்தும் துறை சார்ந்தும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கும் முயற்சி அறிவார்வம் நிறைந்த சமூகத்தில் இயல்பாகவே உள்ளது. தமிழ்க் கலைக்களஞ்சியம் பல்லாண்டுகளுக்கு முன் வந்தாலும் அதனை மறுபதிப்பு செய்யும் ஆர்வம் நமக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்று இசைக்கு ஒரு கலைக்களஞ்சியத்தை முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் வழியாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பிரெஞ்சு மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட டெனிஸ் டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்.
கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுவதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந்தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் சேவையாகவும் இது அமையும்.(விக்கிப்பீடியா மேற்கோள்)

அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணையத்தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா (தீடிடுடிணீஞுஞீடிச்) என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.

விக்கி (Wiki) என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு "விரைவு' என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி (wiki)+ என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிப்பீடியா (wikipedia) என்ற சொல் உருவானது.

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு சனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர் பல மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. விக்கிப்பீடியா தொழில் நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68 வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்சு என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் அவர்களும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியை தொடங்கினர். ஜிம்மி வேல்சு முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிப்பீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்கவேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய,விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளி விவரங்களை இணைக்கலாம். இத்தகு வசதியுடைய விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தமிழ் முயற்சி 2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கில இடைமுகத்துடன் வெற்றிடமாகவே முதல் பதிவு ஒரு சோதனை முயற்சியாக இருந்தது.

2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ்விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார்.இவர் இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.

இந்திய மொழிகளில் தெலுங்கு(42,918), இந்தி(32,681), மணிப்புரி(23,414), மராத்தி(23211) என்ற அளவில் கட்டுரைகள் உள்ளன. தமிழில் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் தரமுடையதாகவும், செறிவுடையதாகவும் உள்ளன. ஆனால் இந்தியாவின் பிறமொழிக் கலைக்களஞ்சியங்களில் கட்டுரைகள் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அவை தானியங்கி முறையில் எண்ணிக்கை மிகுத்துக்காட்டப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. அதுபோல் சிறு, சிறு குறிப்புகளும் கட்டுரைகளாகக் கணக்கிடப்பட்டுள்ளனவாம்.
தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.

தமிழ் விக்கியில் பலர் பங்களிப்பு செய்தாலும் குறிப்பிடத்தக்க சில முன்னோடிகளை நன்றியுடன் நினைவுகூர்வது பொருத்தமாகும். திருவாளர்கள் மயூரநாதன், சொ.இல.பாலசுந்தரராமன், நற்கீரன், இரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனகசிறீதரன், பேரா.செல்வக்குமார், பேராசிரியர் வி.கே,குறும்பன், கார்திக் பாலா, டானியல் பாண்டியன்,தேனி எம்.சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி (பட்டியல்நீளும்) ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பல்வேறு துறைகளில் பேரறிவு பெற்றவர்களாக விளங்குகின்றனர். தகவல் தொழில் நுட்ப அறிவு மிகுதியானவர்களாகவும் உள்ளனர். தமிழுக்கு உழைக்க வேண்டும் எனவும் தமிழ் உலகின் பிறமொழிகளுக்குத் தாழ்ந்தது இல்லை என நிறுவும் வேட்கை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். எனவே இவர்களின் முயற்சியில் பல துறை சார்ந்த கட்டுரைகள் தமிழில் மிகுந்துள்ளன. விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்குவதால் யாரும் எழுதலாம். குறிப்பிட்டவர்கள்தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எந்தப் பொருள் பற்றியும் எழுதலாம். எனவே இன்று தமிழ் விக்கியில் தகவல் தொழில்நுட்பம், கணினித்துறை, கணக்கு, மின்னியல், கட்டடக்கலை, உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த பலர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற துறைகளில் இன்னும் மிகுதியான கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறை சார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம்,தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள்,சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். கட்டுரைகளாக இருப்பவை கலைக்களஞ்சியத்திலும் பாடல், பழமொழிகள் இவற்றை மூலம் என்ற விக்கி பகுதியிலும் பதிவு செய்யலாம்.

விக்கிப்பீடியாவில் தமிழ்ச்செய்திகளை எப்படி உள்ளிடுவது?

விக்கிப்பீடியாவில் செய்திகளை உள்ளிடப் பல வழிகள் உள்ளன. முதலில் நமக்கு என விக்கி பக்கத்தில் ஒரு பயனர் கணக்கு தொடங்க வேண்டும். நமக்கு என ஒரு கடவுச்சொல்லும் தருதல் வேண்டும். விக்கியின் முகப்புப் பக்கத்தில் நாம் உள்ளிட நினைக்கும் சொல்லைத் தட்டச்சிட்டால் அந்தச் சொல் பற்றி முன்பு விளக்கம் இருந்தால். அதனை விக்கி காட்டும். அதன் வழியாகச் சென்று புதிய விளக்கம் திருத்தம் செய்யலாம். பயனர் கணக்கு இல்லாமலும் ஒருவர் எழுதிய கட்டுரையைத் திருத்தலாம். அவ்வாறு செய்பவர்களின் கணிப்பொறி ஐ.பி.எண் விக்கியின் வரலாற்றுப்பகுதியில் பதிவாகும். எனவே விக்கிப்பீடியாவில் கட்டுரை உள்ளிட்டாலும், திருத்தங்கள் மேற்கொண்டாலும் அதன் துல்லியமான பதிவுகள் நம்மையறியாமலே பதிவாகிவிடும்.

நாம் தேடும் சொல்லுக்குரிய விளக்கம் அல்லது கட்டுரை இல்லை என்றால் இந்தத் தலைப்பில் கட்டுரை வரைய விருப்பமா என்ற ஒரு குறிப்பு இருக்கும். ஆம் என நாம் நினைத்தால் அங்குத் தோன்றும் அந்தப் பெட்டியில் கட்டுரைக்குரிய செய்தியை ஒருங்குகுறி எழுத்தில் தட்டச்சிட்டுப் பக்கத்தைச் சேமிக்கவும் என்றால் நாம் எழுதிய கட்டுரை விக்கியில் இணைந்துவிடும்.இவ்வாறு வெளியிடும் முன்பாக இணைப்பு வழங்கவும், படங்கள்,அட்டவணைகள் இணைக்கவும் வசதிகள் உள்ளன. மேலும் நாம் தட்டச்சு இட்டதை வெளியிடுவதற்கு முன்பாக வடிவமைப்பு, எழுத்துப் பிழைகளைச் சோதித்துக்கொள்ளவும் முடியும். அங்குத் தோன்றும் பெட்டியில் உள்ள அடையாளக் குறிகளை அழுத்தி உரிய தேவைகளைப் பெறலாம்.

முதலில் பழகுபவர்கள் அங்கு உள்ள மணல்தொட்டியில் பழகிப் பின்னர் நம் பதிவுகளை முறையாக இடலாம். சிறு தவறுகளுடன் வெளியிட்டால் நம்மைப் பார்த்து மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்று யாரும் தாழ்வுமனப்பான்மையடைய வேண்டாம். மூத்த பயனாளர்கள் நாம் செய்துள்ள தவறுகளைத் திருத்தி அந்தக் கட்டுரைகளை மிகச்சிறந்த கட்டுரைகளாக மாற்றவும் வாய்ப்பு உள்ளது.

விக்கியில் கட்டுரைகள் வரைபவர்கள் பல தரத்தினர். திறத்தினர். சிலர் துறை சார்ந்த கட்டுரைகளை எழுதுவார்கள். சிலர் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வரைவார்கள். சிலர் பிறர் வரைந்த கட்டுரைகளை அனுமதி பெற்று அல்லது பிறர் விருப்பத்திற்கு இணங்க விக்கியில் வெளியிடுவர். அவ்வாறு பிறர் கட்டுரை என்பதற்கு இணைப்பு வழங்கியோ அவர் பெயர் குறித்தோ பெருந்தன்மையாக நடந்துகொள்வர். பதிப்புரிமை விக்கியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு இல்லை. யார் வேண்டுமானாலும் மாற்றவும் திருத்தவும் செய்வர். விக்கியின் கட்டுரைகள் தரமுடையனவாக இருந்தாலும் பார்வைக்கு,தகவல் அறிய உதவுமேயல்லால் ஆதாரப்பூர்வ சான்றாகக் காட்ட இயலாது.

விக்கியில் தமிழ்க் கட்டுரைகள் பல துறை சார்ந்து வெளிவருவதால் புதிய கலைச்சொற்கள் நமக்குக் கிடைத்துள்ளன. முன்பு ஒருவர் ஒரு கலைச்சொல்லை உருவாக்கினால் அந்தச் சொல் வெளியில் தெரிவதற்கும் பயன்பாட்டுக்கு வருவதற்கும் பலகாலம் ஆகும்.ஆனால் இன்று புதிய கலைச்சொற்கள் அறிமுகமானால் அதுபற்றிய கலந்துரையாடல்கள் இணையத்தில் உடன் நடந்து திருத்தம் தேவை என்றால் திருத்தத்துடன் அல்லது சரியான சொல் என்றால் உடன் வழக்கிற்கு வந்துவிடுகின்றன. அந்த வகையில் இற்றைப்படுத்தல், ஒருங்குகுறி, சுட்டி, மென்பொருள், வன்பொருள், குறுவட்டு, உலாவி, இணையம், வலைப்பூ, திரட்டி, பயனர், கடவுச்சொல் என்ற சொற்களைச் சான்றாகக் காட்டலாம்.

உயர்கல்வியில் தமிழ் நடைமுறைக்கு வரும்பொழுது மிகச்சிறந்த கட்டுரைகள் தமிழ் விக்கியில் வெளிவர வாய்ப்பு உண்டுஅதுபோல் ஆட்சியிலும் அலுவலிலும் தமிழ் முழுமையாக நடைமுறைக்கு வரும்பொழுது அனைவரின் பயன்பாட்டுக்கு உரியதாக விக்கி மாறும்.

கற்றவர்கள் விக்கியில் எப்படி பங்களிக்கலாம்?

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது மட்டும் நம் கடமை என நினைக்க வேண்டாம். முன்பு எழுதிய கட்டுரைகளை நாம் திருத்தலாம். எழுத்துப்பிழை, தொடர்ப்பிழை,பொருட்பிழைகளைக் களையலாம். படங்கள், புள்ளி விவரங்களை இணைக்கலாம். விக்கியில் கட்டுரை எழுதுவதைக் கல்வி நிறுவனங்களில் ஒரு பாடமாக அல்லது செய்முறைப் பயிற்சியாக மாற்றலாம்.

விக்கிப்பீடியா களஞ்சியமாக மட்டும் இல்லாமல் விக்சினரி என்ற பெயரில் அகரமுதலியாகவும் உள்ளது. விக்கி செய்திகள் என்ற பகுதியில் செய்திகளைக் காணலாம். விக்கி மேற்கோள் என்ற பகுதியில் சிறந்த மேற்கோள்களின் தொகுப்பு காணப்படும். விக்கிமூலம் என்ற பகுப்பில் பல்வேறு மூல ஆவணங்கள் இருக்கும். விக்கி மேப்பியா என்ற வசதியைப் பயன்படுத்திப் புவி அமைவிடம் விளக்கும் படங்களைக் காண முடியும். நாம் இருந்த இடத்திலேயே நாம் பார்க்க நினைக்கும் இடத்தைப் பார்த்துவிட முடியும். விக்கி கட்டற்றக் கலைக்களஞ்சியம் என்னும் தன் பெயருக்கு ஏற்ப கட்டற்ற தகவல்களைத் தாங்கி நிற்கிறது.

விக்கிக்கு எனச் சில நெறிமுறைகள் உள்ளன. கலைக்களஞ்சிய வடிவில் இருத்தல், கட்டுரைகள் நடுநிலையுடன் இருத்தல். கட்டற்ற உள்ளடக்கம், அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், இறுக்கமான சட்டத் திட்டங்கள் இல்லாமை என மயூரநாதன் இதனை நினைவுகூர்வார்.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறியவேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிப்பீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது. தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயிற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர். கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.

(18.08.2009 தினமணி நாளிதழில் வெளிவந்த என் கட்டுரையின் முழுவடிவம்)
நனி நன்றி : தினமணி நாளிதழ்
முனைவர் நா.கணேசன்
திரு.அண்ணாகண்ணன்
தமிழ்விக்கிப்பீடியா ஆர்வலர்கள்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989) அவர்களின் நாடகப் பங்களிப்புகள்

புதுவைச்சிவம் அவர்கள் பாவேந்தரின் மாணவராகவும் நண்பராகவும் விளங்கியவர். இருவரின் கொள்கைகளும் ஒத்த தன்மையில் விளங்கியதால் இயக்கப்பணிகளிலும் இலக்கியப்பணிகளிலும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.புதுவை முத்தியால்பேட்டை இராசகோபால் செட்டியார் இல்லப் புதுமனைவிழாவிற்குப் பெரியார் வருகைபுரிந்தார். புதுவைச்சிவம் நேரடியாகப் பெரியாரிடம் அறிமுகமானார்.

பெரியாரின் புதுச்சேரி வருகை சமய உணர்வாளர்களை எதிராகச் செயல்படத்தூண்டியது. இதனால் புதுவையில் வைதீகமாநாடு(1927) என்னும்பெயரில் பெரியார்கொள்கைக்கு மறுப்புகூறும் மாநாடு ஒன்று புதுச்சேரியில் நடைபெற்றது.திரு.வி.க அவர்களும் கலந்துகொண்டு மேடையில் இருந்தார்.சுப்புரத்தினவாத்தியார்(பாரதிதாசன்) மேடையில் பேசுபவர்களின் பேச்சை மறுத்துப் பேச கால்மணிநேரம் தமக்கு ஒதுக்குமாறு கேட்க, வாய்ப்புமறுக்கப்பட்டது. அப்பொழுது பாவேந்தரைச் சூழ்ந்திருந்த தோழர்களுள் புதுவைச் சிவமும் ஒருவர்.அன்றிலிருந்து பாவேந்தருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றவர் புதுவைச்சிவம்.

பாவேந்தர் அவர்களின் தொடர்பு புதுவைச்சிவம் அவர்களுக்கு 1928 ஆம் ஆண்டளவில் வலிமையாக அமைகிறது.சற்றொப்ப இருபதாம் வயதில் இளைஞர் பருவத்தில் பாவேந்தருடன் இணைந்து பணிபுரியத் தொடங்கியிதிலிருந்து பாவேந்தரின் இலக்கிய ஆளுமை சிவத்திற்குப் புரியத்தொடங்கியது.அவர்போல் சமூகத்திற்குப் பயன்படும் படைப்புகளை உரைநடையாகப் பாட்டாக நாடகமாக அமைத்து எழுதத் தொடங்குகிறார்.அக்கால கட்டத்தில் பாவேந்தர் மிகச்சிறந்த பாவலராக மலர்ந்துவிட்டார்.அவரின் புகழ்பெற்ற பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன.

தமிழகத்தில் தந்தை பெரியாரின் கொள்கை சுடர்விட்டு ஒளிவிடத்தொடங்கியதும் அக்கொள்கை புதுவையில் பாவேந்தர் வழியாக அன்று இளைஞர்களாக இருந்து புதுவைச்சிவம் உள்ளிட்டவர்களைப் பற்றிக்கொண்டது.இளம் அகவையில் பாவேந்தரின் புதுவை முரசு இதழுக்கு புதுவைச்சிவம் ஆசிரியர் பொறுப்பு வகிக்கிறார்.ஆசிரியர் பணியில் இருந்த பாவேந்தர் தம் மாணவர்களின் ஒத்துழைப்புடன் புதுவை முரசு இதழை எதிர்ப்புகளுக்கும் இன்னல்களுக்கும் இடையில் நடத்துகிறார்.மத குருமார்களின் எதிர்ப்புக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆட்படும் இதழாகப் புதுவை முரசு விளங்கியது.புதுவை முரசு இதழில் வெளியிடும் கருத்துகள் யாவும் சீர்திருத்தம்,மதவாதிகளின் அழுக்கு வாழ்க்கை இவற்றைப் படம் பிடிப்பனவாக இருந்தன.1930-32 இல் வெளிவந்த புதுவை முரசில் புதுவைச்சிவம் எழுதிய "பாதிரியாரின் காமவெறி" என்ற கட்டுரை ஆத்திகர்களின் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளானது.இது பற்றிய செய்திகளைக் குடிஅரசு ஏட்டிலும் 15.05.1932 காணலாம்.

புதுவைச் சிவம் 1933 இல் பாவேந்தருடன் இணைந்து தொடங்கிய அறிவியக்கம் என்ற அமைப்பு பிரான்சு நாட்டில் தலைமையகத்தைக் கொண்டிருந்தது. பகுத்தறிவு ஊட்டுதல்,மதங்களைக் கண்டித்தல் முதலியன இதன் செயற்பாடுகளாகும்.இத்தகு அமைப்பு கட்டி சமூகப்போராட்டங்களில் ஈடுபடும் வல்லமை சிவத்திற்கு இளம் அகவையிலேயே அமைந்துள்ளது.

கவிதைகளும்,உரைநடையும் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்தும் வடிவாக இருந்ததுபோல் அந்நாளில் நாடகமும் மிகச்சிறந்த வடிவமாக இருந்தது.திரைப்படம் அதிகம் வெளிவராத சூழலில் நாடக முயற்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்துள்ளது.பக்தி நாடகங்கள் சமூகத்தில் மேம்பட்டு இருந்த காலகட்டத்தில் சமூகச்சீர்திருத்த நாடகங்களும் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன.

கலை இலக்கிய வளர்ச்சியை முன்னிலைப்படுத்திச் சிவம் பாவேந்தருடன் இணைந்து இலக்கியமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.இலக்கியமன்றத்தின் தலையாயப் பணிகளுள் நாடகம் தயாரிப்பதும் ஒன்றாகும்.நாடகப்பயிற்சியினை உறுப்பினர்களுக்கு வழங்கி நாடகங்களை அரங்கேற்றுவது இம்மன்றத்தில் நடந்தது.ஒவ்வொரு நாளும் பாவேந்தர் இல்லத்தில் நாடக ஒத்திகை நடக்கும்.இதனைப் பயன்படுத்தி நாடகம் எழுதுவதில் நல்ல ஆற்றலை புதுவைச்சிவம் பெற்றார்.இவ்வகையில் பல நாடகங்களை இயற்றியுள்ளார். புதுவைச்சிவம் எழுதியுள்ள நாடகங்கள் மேடையில் பலமுறை நடிக்கப்பெற்றுள்ளன.சில நாடகப்படிகள் காலந்தோறும் செம்மை செய்யப்பட்டுள்ளதையும் அறியமுடிகிறது.எழுதி நடிக்கப்பெற்று,சில ஆண்டுகள் கழித்து அச்சான விவரங்களையும் அவரின் முன்னுரை வழி அறியமுடிகின்றது.நம் காலத்தில் வாழ்ந்த அறிஞர் ஒருவரின் படைப்புகளைக்கூட நம்மால் துல்லியாமாக வெளியிட இயலாத நிலையில் நம் வாழ்க்கைமுறை அமைந்துவிட்டது.


நாடக வடிவத்தைப் பயன்படுத்திப் புதுவைச்சிவம் மிகச்சிறந்த சமூக மேம்பாட்டுக் கருத்துகளை முன்வைத்துள்ளார். பகுத்தறிவு, பெண்கல்வி, விதவை மறுமணம், போலிச்சாமியார்களின் இழிசெயல்கள்,சாதி மறுப்பு,குடியரசு ஆட்சியின் மேன்மை, பக்திமான்களின் போலி கௌரவம்,வருணாசிர ஒழிப்பு ,காதல் திருமணங்கள் ஆதரிப்பு,சீர்திருத்த திருமணங்கள் வருகை இவற்றை ஆதரித்து நாடகங்களை எழுதியுள்ளார்.புதுவைச்சிவம் அவர்களின் நாடகங்களில் மிகச்சிறந்த மொழிநடையும் கற்பனையும் காணப்படுகின்றன.பாத்திரப்படைப்புகளும் பாத்திரங்களுக்குப் பெயரிடும் முறையும் நம்மை வியப்படையச் செய்கின்றன.

புதுவைச்சிவம் எழுதிய நாடகங்களை நம் ஆய்வு வசதிக்காக மேடைநாடகங்கள், குறுநாடகங்கள், காப்பிய நாடகங்கள்,செய்யுள் நாடகங்கள் என்று வகைப்படுத்திக்கொள்ளலாம். இவரின் நாடகங்களுக்கு உரிய பாடல்களை இவரே எழுதியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.அக்காலத்தில் வெளிவந்த திரைப்படங்களின் பாடல்கள்,புகழ்பெற்ற பாடல்களின் மெட்டுகள் என்ற அடிப்படையில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.1935 இல் தொடங்கப்பட்ட இவரின் நாடக முயற்சி 1950 வரை உச்சநிலையில் இருந்துள்ளது.அதன் பிறகு நாடகத்தின் இடத்தைத் திரைப்படங்கள் பிடிக்கத் தொடங்கியதால் இவரின் நாடக முயற்சி அருகியிருக்கவேண்டும்.சிதைந்த வாழ்வு என்ற நாடக நூலுக்குச் சிவம் அவர்கள் எழுதிய முன்னுரையை(1951) நோக்கும்பொழுது அவர் நாடகத்துறையில் ஏன் கவனம் செலுத்தினார் என்பது விளங்கும்.

"ஒரு கொள்கையை மக்களிடையே பரவச் செய்வதற்கு எழுத்தும் பேச்சும் எவ்வளவு அவசியமோ,அவ்வளவு அவசிந்தான் நாடகமும் பாட்டும்.வீண் காலப்போக்கிற்காக ஏற்பட்டதல்ல.மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதற்குத் தொன்றுதொட்டுக் கையாண்டு வந்த முறையில்,நாடகமே தலை சிறந்ததாகும்.பேச்சாலும் எழுத்தாலும் கூறப்படும் கருத்துகளை நடித்துக்காட்டுவதன் மூல்ம் ஏற்படும் உணர்ச்சி,அப் பேச்சால்-எழுத்தால் ஏற்படும் உணர்ச்சியைவிட எவ்வகையிலும் குறைந்ததல்ல"என்கிறார்.

புதுவைச்சிவம் நாடகங்கள்

புதுவைச்சிவம் நாடகங்களில் சமூக நிகழ்வுகள் எதிரொலிக்கின்றன.கல்வியறிவில்லா சமூகத்தில் உள்ள மக்களிடம் காணப்படும் பகுத்தறிவின்மை மூடப்பழக்கவழக்கம் இவற்றைக் குறிப்பிடுவதுடன் சமூக முன்னேற்றத்திற்கான கருத்துகளையும் இவர் நாடகங்கள் முன்வைக்கின்றன.

சிவம் அவர்களின் நாடகங்களுள் மூன்று நாடகங்களை முன்வைத்து இக்கட்டுரை அமைகிறது.அவை 1.ரஞ்சித-சுந்தரா அல்லது ரகசியச் சுரங்கம்(1935),2.அமுதவல்லி அல்லது அடிமையின் வீழ்ச்சி(1937),3. கோகிலராணி(1939).

ரஞ்சித சுந்தரா என்ற நாடகத்தில் திராவிட இயக்கக் கருத்துகள் பேசப்பட்டுள்ளன.விதவை மறுமணம்,பெண்கல்வி,காதல் திருமணத்தின் சிறப்பு,சாதி மறுப்பு,சாமியார்களின் போலித்துறவு,குழந்தைமணம்,தமிழகத்தில் துளிர்விட்ட சீர்திருத்த அமைப்புகள் பற்றிய பல செய்திகளை இந்த நாடகம் முன்வைக்கிறது.அக்காலத்தில் புதுவை சார்ந்த பகுதிகளில் தெருக்கூத்தும்,பாரத,இராமாயணக்கதைகளும் பரவிக் கொண்டிருந்தது.புகழ்பெற்ற பல கூத்துகலைஞர்கள் புதுச்சேரிப் பகுதியில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் போக்கில் சென்றிருந்தால் புதுவைச்சிவம் ஒரு புகழ்பெற்ற கலைஞராக விளங்கியிருக்கக்கூடும்.ஆனால் அவர்களின் நாடகம் யாவும் அறியாமையில் மூழ்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மேலும் அறியாமையைத் தந்துகொண்டிருக்க அவரின் நாடகம் பகுத்தறிவு பரப்பும் பணியில் செம்மாந்து நடந்துகொண்டிருந்தது.

ரகசியச்சுரங்கம் என்ற நாடகத்தில் மாணிக்கச் செட்டி என்பவனுக்கு இருமகள்.முதல் மகள் இளமையில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டு விதவையானவள்.அவள் பெயர் சௌந்தரம்.விதவை என்றாலும் ஆண் துணைக்கு ஏங்கும் பருவம் கொண்டவள்.அவள் சிங்காரம் என்ற வேறு சாதி ஆடவனோடு பழகுவதை அறிந்த அவள் தந்தை மாணிக்க செட்டி அவளை ஒரு மடத்தில் உள்ள சாமியாரிடம் அடைக்கலமாக அளிக்கிறான்.அந்தச் சாமியார் போலிச்சாமியார் ஆவான்.பல பெண்களின் வாழ்வைச் சீரழித்த அந்தச் சாமியார் சௌந்தரத்தின் வாழ்வையும் பாழாக்குகிறான்.சாமியாரால் கருவுற்றாள் சௌந்தரம்.சௌந்தரம் உயிருடன் இருந்தால் தமக்கு ஆபத்து என அறிந்த மடச்சாமியார் மாணிக்கச் செட்டியிடம் சொல்லி அவளுக்குப் பாலில் நஞ்சு கலந்துகொடுத்து கொல்லும்படி சொல்கிறான்.இந்தச் சூழ்ச்சியை அறிந்த சௌந்தரம் தன் தங்கையினுக்கு மடல் ஒன்று எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறாள்.

கல்லூரியில் படிக்கும் தங்கையின் பெயர் ரஞ்சிதம்.இவள் சுந்தரம் என்ற தன்னுடன் பயிலும் மாணவனை விரும்புகிறாள்.இருவரும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர்.சுந்தரம் தாழ்ந்த சாதியில் பிறந்தவன் என்பதால் மாணிக்கம் செட்டி அந்தத் திருமணத்திற்கு உடன்படவில்லை.மாணிக்கம் செட்டியின் மைத்துனனுக்கு ரஞ்சிதத்தை இரண்டாம் தாரமாக மணம் முடிக்க நினைக்கின்றனர்.தன் அக்கா மடாதிபதியால் சீரழிக்கப்பட்டுள்ளாள் என்ற விவரம் ஒரு மடல் வழியாகத் தெரிகிறது.மடாதிபதியைப் பழிவாங்க நினைக்கிறாள்.மடாதிபதி ரஞ்சித்ததையும் சிறையெடுத்துச் செல்கிறான்.மாணிக்கம் செட்டியின் வீட்டிலிருந்த நகைகளையும் திருடிச் செல்கின்றான்.திருட்டுப்பழியைச் சுந்தரத்தின் மேல் போட்டு அவனைச் சிறையில் அடைக்கிறான்.மடச்சாமியார் பல பெண்களுடன் வாழ்ந்தவன்.சரோஜா என்ற தாசிக்கு மாணிக்கச்செட்டி வீட்டில் களவாடிய நகைகளைப்பூட்டி அழகு பார்த்தான்.மடாதிபதியால்தான் சுந்தரம் சிறைக்கு செல்ல நேர்ந்தது என்பதை உணர்ந்த சுந்தரத்தின் நண்பன் ஊமைச்சாமியாராக நடித்துப் போலிச்சாமியாரின் ஏமாற்றுகளை அறிந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ரஞ்சிதத்தை மீட்பதுடன் தன் நண்பன் சுந்தரம் சிறையிலிருந்து விடுதலை பெற உதவுகின்றான்.

திரைப்பட முறையில் நடக்கும் நாடகம் பல திருப்பங்களையும் புதிர்களையும் கொண்டுள்ளன.மடத்துச்சாமியார் பேசும்பொழுது சுயமரியாதைக்கார்ரர்களை இகழ்ந்து பேசுவது போலவும் வருணாசிரம நெறிகளுக்கு எதிராக இவர்கள் கலகம் விளைவிப்பதாகவும் சாமியார்கள் பேசிக்கொள்வதாக காட்சியில் அமைத்து அக்கால நிலைகளை நமக்கு எடுத்துரைக்கிறார்.அக்ரகார நடையை பொறுத்தமான இடங்களில் சிவம் படைத்துள்ளார்.பாத்திரத்தை அவர்களின் மொழிநடையில் படைத்துக்காட்டுவதில் வல்லவராகச் சிவம் விளங்கியுள்ளார்.சுயமரியாதைக்காரர்கள் பெருத்துவிட்டதால் திதி,திவசம்,கலியாணம்,கருமாதி,எழவு,அர்ச்சனை எதுவும் கிடைக்காமல் பார்ப்பனர்கள் தொல்லைப்படுவதாக அவர்களின் புலம்பலில் இருந்து அறியலாம்.

சுயமரியாதைக்கார இளைஞர்கள் சோசியம் பார்க்கவென ஐயர்களை அழைத்துச்சென்று இறந்தவர்களின் சோசியத்தைப் பார்க்கச்செய்து அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் எதிர்காலப்பலன்கள் நினைத்துச் சிரிப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது.திராவிட இயக்க உணர்வு தமிழகத்தில் தழைத்திருந்த தன்மையை இக்குறிப்புகள் காட்டுகின்றன.

மடாதிபதி ரஞ்சிதத்திடம பேசும்பொழுது அவன் சாதியுணர்வு மிக்கவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.சுயமரியாதைக்காரர்களின் அகம்பாவத்தை அடக்குவதற்கு யான் ஒருவன் இருக்கின்றேன் என்று செருக்குடன் பேசுவதிலிருந்து அக்கால வருணாசிரமவாதிகள் சுயமரியாதைக்காரர்கள் மேல் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி புலப்படுகிறது.நாத்திக கருத்துகளைப் பரப்புவது அக்காலத்தில் கொடிய குற்றமாக கருதப்பட்டது.இதனை நீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞர் கூற்றால் அறியலாம்." நீதிபதி அவர்களே! ... சுந்தரன் கௌரவமற்றவன்.இந்த ஊரில் நாஸ்திகத்தைப் பரப்ப முயற்சித்துக்கொண்டிருப்பவன். ஆகையால் இச் சுந்தரம் இது போன்ற காரியங்களைச் செய்வான் என்பதற்கு வேறு சாட்சியம் வேண்டுமோ?"(பக்.71-72)

பிறமொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதுவதுதான் சிறந்த நடை எனக்கருத்தப்பட்ட அக்காலத்தில் அழகிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி சிவம் தம் நாடகங்களை உணர்வோட்டமாக எழுதியுள்ளார்.உரையாடல் பாத்திரத்தின் வசனங்கள் யாவும் சிறப்பாக உள்ளன.

அமுதவல்லி அல்லது அடிமையின் வீழ்ச்சி(1937) என்ற நாடகம் முடியரசு வீழ்த்திக் குடியரசு சமைக்கும் ஓர் அறிய முயற்சிதான்.அரச குடும்பம் சார்ந்த கதையாக இது விளங்குகிறது.பாவேந்தரின் புரட்சிக்கவி(1937) போலும் இது ஒரு உரைநடைப் புரட்சிப் படைப்பேயாகும். குறுநில மன்னரின் மகன் குணசேகரன்.இவன் காதலி அமுதவல்லி.அமுதவல்லி தையற்காரனின் மகள்.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.ஆனால் குறுநில மன்னர் தன் மகன் குணசேகரன் மிதுனபுரி குறுநில மன்னரின் மகள் இன்பவல்லியை மணக்க விரும்புகிறார்.குறுநில மன்னருக்கு மணியக்காரர் கணக்குப்பிள்ளை ஆகியோர் மக்களை வருத்தி வரி வாங்குன்றனர்.இவர்களுக்கு ஒத்தாசையாகச் சாத்திரி ஒருவரும் இணைந்துகொள்கிறார்.மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் அவர்களை வருத்தி வரி வாங்குவது குறுநில மன்னன் மகன் குணசேகரனுக்கும் விருப்பம் இல்லைதான்.

சாத்திரி குறுநில மன்னரிடம் இருந்து சூழ்ச்சியாகக் குணசேகரனைப் பிரித்து,மிதுனபுரிக்கு அனுப்பினால் இன்ப வல்லிக்கும் குணசேகரனுக்கும் இடையில் பழக்கம் ஏற்படும் என்று கூற அதன்படி குணசேகரன் மிதுனபுரி செல்கிறான்.இன்பவல்லியின் ஆசைக்கு இணங்காத குணசேகரன் அமுதவல்லி நினைவுடன் இருக்கிறான்.ஆனால் முகமூடி அணிந்து குறுநில மன்னர் அமுதவல்லியை இரவில் அரண்மனைக்குத் தூக்கிவந்து அவளை கொல்ல நினைக்கிறார்.பிறகு அவளை அடைய நினைக்கிறார்.அந்த நேரத்தில் முகமூடி அணிந்த வேறொருவன் வந்து அமுதவல்லியை மீட்டுச் செல்கிறான்.அமுதவல்லி உயிருடன் இருக்கும் வரை குணசேகரன் இன்பவல்லி திருமணம் நடக்காது என உணர்ந்த சமீன்தார் அமுதவல்லியின் தந்தையை மருட்டி உடன் அவளுக்குத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யச் சொல்கிறான்.

இந்தச் சிக்கல் உணர்ந்த குணசேகரனின் நண்பன் வீரசேகரன் உள்ளிட்டவர்களின் முயற்சியால் திடுமென அமுதவல்லிக்கு வேறொருவனுடன் திருமணம் நடக்கிறது.அவ்வாறு திருமணம் செய்து கொள்பவன் வேங்கையூர் வியாபாரி ஆவான்.இந்த நிலையில் குறுநில மன்னரின் கொடிய ஆட்சி பொறுக்காத மக்கள் நாளைக்குப் போருக்கு ஆயத்தமாவதை ஒரு கடிதம் வழி அறிந்த குறுநில மன்னர் தாய் தன் மகன் குணசேகரன் தன்னுடன் இருக்க விரும்புகிறனர்.மக்களைக் கண்டு அவர்களுக்கு உரிமையுடன் கூடிய ஆட்சி கிடைக்கும் எனத் தெரிவத்ததும் மக்கள் மகிழ்ந்து குணசேகரனைக் குறுநில மன்னராக ஏற்றுக்கொண்டனர்.

இந்த நாடகத்தில் சீர்திருத்தச்சங்கம், உள்ளிட்ட அக்காலத்தில் இருந்த பகுத்தறிவு இயக்கப்பரவல் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன.மேலும் சாத்திரி போன்றவர்களின் உரையாடல் வழியாக பார்ப்பன பழைமைவாதிகள் தங்கள் ஆச்சர அனுபோகங்களை நிலைநாட்ட எத்தகு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதைக்காட்டும் ஆவணமாகவும் இந்த நாடகத்தைக் கருதலாம்.

"போச்சு! வைதீகம் போச்சு!மதம் போச்சு! சாஸ்திரம் போச்சு! பழக்க வழக்கம் எல்லாம் போச்சு!" என்று புலம்பும்பொழுது குறுநில மன்னன் "ஆமாம் நீங்களே சாராயம் குடித்தால்"என்று வினவுவது சாத்திரியாரின் போலி வாழ்க்கையை அறியமுடிகிறது.மேலும் சாஸ்திரியார்,
"இவ்வளவு தூரம் உங்கள் மகன் கெட்டுவிட்டதற்கு காரணம் என்ன தெரியுமா? தெற்குவீதியில் சீர்திருத்தச்சங்கம் என ஒன்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.அதுதான்!அப்பப்பா!அந்த சங்கத்தை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தினார்கள்.சாதி இல்லை என்கிறார்கள்.மதம் வேண்டாம் என்கிறார்கள்!பிரம்மா முகத்தில் பிறந்த எங்கள் பிராமணர் குலத்தையும் அல்லவா தூஷிக்கின்றார்கள்.இப்படிப்பட்ட சங்கத்திற்குத்தான் குணசேகரன் ஆதரவளித்து வருகின்றான்.(பக்.101)என்று தன் குலவழகத்திற்கு ஆபத்து விளைவிப்பவனாக குணசேகரனை உணர்ந்து சாத்திரியார் வாய்ப்பு வரும்பொழுதெல்லாம் அவனை நயவஞ்சகமாக அழிக்கப்பார்க்கின்றார்.

கோகிலராணி(1939) நாடகம் புதுவைச்சிவத்தின் படைப்புகளுள் புகழ்பெற்றது ஆகும்.1947 இல் இது அச்சில் வெளிவந்துள்ளது.தமிழகம்,புதுவை மட்டுமன்றி மலேசியா ஈப்போவிலும் இலங்கையிலும் அரங்கேறியுள்ளது.ஆரியச்சூழ்ச்சியை அடித்து நொறுக்கும் படைப்பாக இது உள்ளது.அரசியல் தெளிவும் கல்வி அறிவும் குறைந்த காலச்சசூழலில் இந்த நாடகம் சிவப்பிரகாசத்தால் மிகச்சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளமையை நினைக்கும் பொழுது இவரின் படைப்பாளுமை வெளிப்படுகிது. கொள்கை வழிப்பட்ட படைப்புகளை வழங்கிய இவர்தம் மன உறுதியைப் போற்றாமல் இருக்கமுடியாது.

சோழமண்டல அரசன் இளையராணியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது அவனுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. அமைச்சனின் சூழ்ச்சியாலும் அரசகுருவின் விருப்பின்படியும் அக்குழந்தை நாட்டில் இருந்தால் அரசாட்சி வீழும் அரசனுக்குப் பலவகையிலான துன்பங்கள் வரும் என்று பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.பிறந்த குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து வெள்ளாற்றில் விட்டுவிடுகின்றனர்.அக்குழந்தை தவப்பெண் ஒருத்தியின் பாதுகாப்பில் வளர்கிறான். வில்வித்தைகளில் வல்லவனாகிறான்.அவன்பெயர் வீரவர்மன் என்பதாகும். மலைநாட்டரசன் மகள் பூங்கொடியை அவன் விரும்புகிறான்.

சோழநாட்டுப்படைத்தளபதியாக இருப்பவன் சேனாபதி என்பவன்.அரசனுக்கு மிகச்சிறந்த பாதுகாவலனாக விளங்குபவன்.அவன் அரசனுடன் இருக்கும்வரை இந்த ராச்சியத்தைக் கைப்பற்ற முடியாது என அமைச்சன் சூழ்ச்சி செய்து அவன்மேல் குற்றம் சுமத்தி அவனைச்சிறையில் அடைத்துவிடுகிறான்.அவன் கையைத் துணிக்கவேண்டும் என்று தண்டனை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப்படுகிறது.ஆனால் அவன் அந்த தண்டனையிலிருந்து தப்புகிறான்.ஒருநாள் திடுமென சேத்தூர் சிற்றரசனின் துணையுடன் மந்திரி அரசனை சிறையில் அடைக்கிறான்.அப்பொழுது தவப்பெண் ஆலோசனையின்படி அரண்மனையில் புகுந்த கறுப்புடை அணிந்த படைமறவர்கள் மந்திரி உள்ளிட்டவர்களைச் சிறையில் அடைத்து அரசன் முதலியவர்களைச் சிறையிலிருந்து காப்பாற்றுகின்றனர்.

பின்னர்தான் அரசனுக்கு அமைச்சன்,பிரம்மகுரு இவர்களின் சூழ்ச்சி விளங்குகிறது.தான் ஏமாற்றப்பட்டமையை அரசன் உணர்கின்றான்.அதுபோல் அமைச்சன் முதலியோரின் சூழ்ச்சியால் முதல் மனைவியைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்ததும் தெரியவருகிறது.அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுத் துன்பவாழ்க்கை வாழ்ந்தவள்தான் பின்னாளில் தவப்பெண் வேடம் தரித்து தன் மகன் வீரவர்மனைக் காப்பாற்றியவள் என்று அரசன் உணர்கிறான்.அவள்தான் கோகிலராணி எனவும் அறிகிறான்.

கோகிலராணி அரண்மனையில் இருந்து வெளியேறியதற்கும் அமைச்சர், பிரம்மகுரு உள்ளிட்டவர்களே காரணம் என்பது நாடகத்தின் இறுதிப்பகுதியில் புதிராக விடுவிக்கப்படுகின்றது.கோகிலராணி பூப்பெய்திய காலம் சரியில்லை என்று கதை கட்டி,அதனால்தான் அவளுக்கு நான்காண்டுகளாகக் குழந்தை இல்லை எனக் கூறி அவள் இருந்தால் அரசன் உயிருக்கு ஆபத்து எனக்குறிப்பிட்டு அவள் வெளியேற்றப்பட்டாள் என்பது கதையின் புதிர்ப்பகுதியாக உள்ளது.கதை இயல்பாகவும் புதிர்கள் நிறைந்ததாகவும் புனையப்பட்டுள்ளது.கறுப்புடை மறவர்கள் திராவிடர்கழக இளைஞர்களைக் குறுப்பாக உணர்த்துவது ஆகும்.


ஆரியர்கள் நாள்,கோள்,விண்மீன்,இராகுகாலம்,எமகண்டம் ,தோழஷம் இவற்றைச் சொல்லித் தமிழ் மக்ககளிடம் அறியாமையைப் புகுத்தி உழைக்காமல் நயவஞ்சனையில் வாழ்பவர்கள் என்ற விவரம் இ ந்த நாடகத்தில் காட்டப்பட்டுள்ளது.பிரம்மகுரு என்ற பாத்திரமும்,மந்திரியும் கயமைக்குணம் கொண்ட ஆரியர்கள் என்ற அளவில் மிகச்சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களை அவர்களின் சாதிப்பிரிவு காட்டியும் உழைப்பது அவர்களின் தலையெழுத்து எனவும் மக்களை நம்பச்சொய்து விதி,முன்னோர் வழி எப் பொய்க்காரணம் காட்டுவது நினைத்து சமூக மறுமலர்ச்சிக்கு இந்த நாடகத்தைச் சிவம் படைத்துள்ளார்.துணிச்சலும்.கொள்கை வழிப்பட்ட படைப்புணர்வும் கொண்டவர் புதுவைச்சிவம் என்பது அவர் நாடகத்தால் தெரியவருகின்றது.

17.07.2009 புதுவையில் சாகித்திய அகாதெமி சார்பில் நடைபெற்ற புதுவைச்சிவம் நூற்றாண்டு நிறைவுக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரை.