நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 மே, 2015

பேராசிரியர் இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைச் சந்தித்தேன்…

பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள்

சென்னையில் நடைபெற்ற (18,19 - 05 - 2015) திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள நம் நண்பர்கள் அயலகத்திலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வருகின்றார்கள் என்று அறிந்து சென்றிருந்தேன்.

தொடக்கவிழாவில் தமிழ்நாடு அரசு செயலர் திரு. மூ.இராசாராம் இ... உள்ளிட்டவர்களின் உரை கருத்துச்செறிவாக இருந்தது. திரு. மூ. இராசாராம் இ... அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். உலகின் பிறமொழிகளிலும் திருக்குறளின் உயரிய மொழிபெயர்ப்புகள் வெளிவரவேண்டும் என்று செயல்பட்டு, வினையாற்றி வருபவர். செயலர் அவர்களின் பெரும் ஒத்துழைப்பால் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க. பசும்பொன் அவர்கள் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அயலகத்திலிருந்து திரு. . மன்னர் மன்னன் (மலேசியா),முனைவர் மு. பரமசிவம், திரு. செல்வசோதி, முனைவர் ஆர்.  வேல்முருகன் (சிங்கப்பூர்), திரு. பற்றிமாகரன் (இலண்டன்) உள்ளிட்டோர் வந்திருந்தனர். அனைவரிடமும் உரையாடினேன்.

முதல்நாள் நிகழ்ச்சி நிறைவுக்கு வரும்நிலையில் பேராசிரியர் அரங்க. பாரி அவர்களும் நானும் விருகம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைக் காணச் சென்றோம். நீண்ட தேடலுக்குப் பிறகு பேராசிரியர் அவர்களின் இல்லம் சென்றோம். மகிழ்வுந்தில் செலும்பொழுதே இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் குறித்த அனைத்து விவரங்களையும் பேராசிரியர் அரங்க. பாரி அவர்கள் சொல்லியவண்ணம் வந்தார்.

பேராசிரியர் இலெ..கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைப் பற்றி அறிஞர்கள் வழியாகவும் நூல்கள் வழியாகவும் நானும் அறிந்திருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்மிகு பேராசிரியராக இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் விளங்கிப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பல வகையில் உழைத்துள்ளார் என்று பொதுவாக அறிந்து வைத்திருந்தேன். அவர்தம் கண்டிப்பும், உழைப்பும் குறித்து அவரின் மாணவர்கள் வழியாக அறிந்துள்ளேன். அதுபோல் அண்ணாமலை அரசர் ஏற்படுத்திய தமிழிசைச் சங்க வளர்ச்சியிலும் பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்று அறிந்திருந்தேன். அதனால்தான் அண்மையில் மருத்துவர் ச. இராமதாசு ஐயா அவர்கள் திரு. செட்டியார் அவர்களை அழைத்து அவர்களின் தமிழிசைப் பணியைப் போற்றிப் பாராட்டியுள்ளார் என்பதைச் செய்தி ஏடுகளில் படித்துள்ளேன்.

பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் நூறு அகவை கடந்து நூற்றியொன்றாம் அகவையில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். பன்னூலாசிரியராகவும், பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் விளங்கிய திரு. செட்டியார் அவர்களை நீண்ட நாட்களாகக் காணவேண்டும் என்று நினைத்திருந்தும் அந்த வாய்ப்பு பேராசிரியர் அரங்க. பாரி அவர்களால்தான் எனக்குக் கிடைத்தது.

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மீனாட்சியகத்தில் எங்கள் மகிழ்வுந்து நின்றது. அழைப்பு மணியை அடித்து வாயிற்படியடுத்து, உள்ளே நுழைந்ததும் திருவாளர் ஆச்சி அவர்கள் எங்களை அன்பொழுக வரவேற்றார்கள். பேராசிரியர் அவர்களுக்கு எங்கள் வருகையைச் சொல்லி, மெதுவாக எழுப்பி அமரவைத்தார்கள். பேராசிரியர் செட்டியார் அவர்களும் அன்பொழுக எங்களை வரவேற்றார்கள்.

பேராசிரியர் அரங்க.பாரி அவர்கள் தம்மை அறிமுகம் செய்துகொண்டு, என்னையும் அறிமுகம் செய்துவைத்தார். பேராசிரியர் அரங்க. பாரியைப் பார்த்த உடனேயே அவரின் கல்வி பற்றியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் பணியில் இணைந்த வரலாறு பற்றியும், 100 விழுக்காடு துல்லியமாக அறிந்துவைத்திருந்தார். அனைத்தையும் சொன்னபொழுது இருவரும் அதிர்ந்துபோனாம். இந்த அகவையிலும் பேராசிரியர் அவர்களின் நினைவாற்றலை வியந்தபடி அமர்ந்தோம்.
முனைவர் அரங்க.பாரி அவர்கள் பேராசிரியர் அவர்களுக்கு நூல்களை வழங்கி, வாழ்த்துப்பெறுதல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தாம் பணியாற்றியபொழுது நடந்த நிகழ்வுகளை நினைவுமாறாமல் திரு. செட்டியார் அவர்கள் குறிப்பிட்டார்கள். திரு. செட்டியார் அவர்கள் நூற்று ஒரு அகவையிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் தோற்ற வரலாறு முதல் இன்று நடைபெறும் புதிய துணைவேந்தர் பதவி அமர்த்தம்வரை அறிந்துவைத்துள்ளார். தம் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அரசியல்துறையில் புகழ்பெற்ற நாவலர் நெடுஞ்செழியன், திரு. மதியழகன், பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மாவீரன் பழ.நெடுமாறன் உள்ளிட்ட அனைவரையும் திரு. செட்டியார் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம்மைப்பறி பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ள வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.

தம் காலத்தில் பணியாற்றிய பேராசிரியர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பல அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். யாழ்நூல் ஆசிரியர் விபுலாந்தர் பணியமர்த்தம், கா.சு.பிள்ளை பணியமர்த்தம், பண்டிதமணியார் மணியமர்த்தம், பண்டாராத்தார் பணியமர்த்தம் உள்ளிட்ட பழைய நிகழ்வுகளை எங்களுக்கு நினைவூட்டினார்.

தம்மை மிக உயர்வாகப் போற்றும் முனைவர் பொற்கோ போன்றவர்களையும் நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் திரு. செட்டியார் அவர்களுக்கு அரங்க.பாரி அவர்கள் ஆடை அணிவித்து, தம் நூல்களைப் பரிசாக வழங்கினார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபொழுது பேராசிரியரைப் பல கோணங்களில் படமாக எடுத்துக்கொண்டேன். பேராசிரியர் அவர்களிடம் கேட்டுத் தெளிவுபெறவேண்டிய சில வினாக்களைப் பல ஆண்டுகளாக நான் வைத்திருந்தேன்.
மு.இளங்கோவன், பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், திருவாளர் ஆச்சி அவர்கள்.

பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் பற்றி திரு. செட்டியார் அவர்களின் கருத்து என்ன? என்று வினவினேன். ஏனெனில் திரு. செட்டியார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிபொழுது பெருமழைப்புலவர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர். பேராசிரியர் அவர்கள் ஓரளவுதான் பெருமழைப்புலவர் பற்றி சொன்னார். அடுத்துப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றி வினவினேன். ஏனெனில் பேராசிரியர் பணிபுரிந்தபொழுதுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பணியிலிருந்து பண்ணாராய்ச்சி வித்தகர் விலக நேர்ந்தது.  பொருத்தமான காரணங்களைப் பேராசிரியர் சொல்லவில்லை என்றாலும் பண்ணாராய்ச்சி வித்தகரின் இசைப்புலமையை ஒத்துக்கொண்டார். ஓதுவார்களின் பண்மரபு குறித்த முடிவுகளைப் பண்ணாராய்ச்சி வித்தகர் மறுத்துரைத்த வரலாற்றை நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் எல்.பி.கே.ஆர் என்று கல்வியுலகில் அறியப்பட்டவர். நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்பது முறை பொறுப்புத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். அரசர் குடும்பத்திற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவாரக விளங்கியவர். நோக்கு, சோழவேந்தர் மூவர்(1957) உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

பேராசிரியர் அவர்களிடம் உரையாடியபடியே அவர்களின் வீட்டில் மாட்டப்பெறிருந்த படங்களைப் பார்த்தேன். பேராசிரியர் எல்.பி.கே.ஆர் அவர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் பல நினைவுகளையும் வரலாற்றையும் சொல்லும் படங்கள் இருந்தன. அதில் ஒன்று அண்மையில் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் திரு. செட்டியார் அவர்களின் தமிழிசைப் பணியைப் போற்றிப் பாராட்டும் நிகழ்ச்சியை நினைவூட்டும் ஒரு படம் வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உண்மையாகத் தமிழுக்கும், தமிழிசைக்கும் உழைப்போரைப் போற்றுவோர் அருகிக் காணப்படும் நிலையில் மருத்துவர் ச.இராமதாசு ஐயா அவர்கள் நூற்றாண்டு கண்ட பேராசிரியரை அழைத்துவந்து பாராட்டியமையைப் போற்றித்தானே ஆகவேண்டும்.

பேராசிரியர் அவர்களும் ஆச்சி அவர்களும் வழங்கிய தேநீரைப் பருகியபடி அவர்களின் குடும்பநிலை, பிறந்த ஊர், கல்வி குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். முதுமைநோக்கி அவர்களை ஓய்வெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டு, மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டோம். நூற்றாண்டு கண்ட ஒரு தமிழறிஞரைப் பார்த்த மனநிறைவும், அவர்களுடன் உரையாடிய நினைவுகளும் என்றும் என் உள்ளத்தில் பசுமையாக இருக்கும்.



சனி, 28 மார்ச், 2015

உரையாசிரியர் புலவர் சே. சுந்தரராசன் அவர்கள்…


 புலவர் சே. சுந்தரராசன் அவர்கள்

காலத்தில் செய்துமுடிக்க வேண்டிய தமிழ்ப்பணிகள் எவ்வளவோ உள்ளன. ஆனால் அவற்றைச் செய்துமுடிக்க முன்வருவோர் குறைவாகவே உள்ளனர். தமிழர்கள் தங்கள் பெருமையை ஆவணப்படுத்தி வைப்பதில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் இருப்பதையும் இழக்கும் நிலையில் உள்ளோம். கடந்த கால வரலாற்றைத் தேடிச் செல்வது ஒருவகைப் பணி என்றால் நிகழ்காலத்தில் வாழ்பவர்களை நினைவுகூர்வதும், அவர்களைப் போற்றுவதும் நம் தமிழ்க்கடமையாகக் கொள்ள வேண்டும்.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பல்வேறு நெருக்கடிகளுக்கும் இழப்புகளுக்கும் இடையே செல்ல நேர்ந்தது. அந்தச் செலவில் அறிஞர் பெருமக்கள் பலரைக் கண்டு உரையாடவும் அவர்களின் தமிழ்ப்பணிகளை அறியவும் வாய்ப்பு அமைந்தது. அகவை முதிர்ந்த சான்றோர் பெருமகனார் ஒருவரை அவர்தம் மகளார் மாநாட்டுக்கு அழைத்து வந்திருந்தார். அப்பெருமகனாரை அண்மி, அவர்களைப் பற்றி வினவினேன். அவர்களின் தள்ளாத அகவையிலும் செய்துவரும் தமிழ்ப்பணிகள் என்னை வியப்படையச் செய்தன. ஒரு முழுப்பக்கம் எழுதுவதைக்கூட மிகப்பெரும் சுமையாக நினைத்துப் பெருமூச்சுவிடும் கல்வியாளர்கள் நடுவே எனக்கு அறிமுகமான பெருமகனாரின் பணிகள் அவர்மேல் மிகுந்த மதிப்பை அளித்தன.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓர் உரையாசிரியராக அவர் எனக்கு அறிமுகமானார். தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து, தம் திறமையால் படிப்படியாகக் கல்வியும், பணியும் பெற்று, கடமை முடித்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து தமிழ்நூல்களுக்கு உரைவரையும் அந்தச் சான்றோரின் பெயர் புலவர் சே. சுந்தரராசன் என்பதாகும்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்கள் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர்கள் தாசன், வேதமணி ஆகியோரின் அருமை மகனாக 07.05. 1930 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை ஈச்சம்பாடியிலும் நடுநிலைக் கல்வியைப் பள்ளிப்பட்டிலும் நிறைவு செய்தவர். சோளிங்கரில் (சோழலிங்கபுரம்) ஆசிரியர் பயிற்சி பெற்று 1948 இல் அதே ஊரில் குட்லக் மேனிலைப்பள்ளியில் பணியில் இணைந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்   நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் வெற்றிபெற்றவர் (1949). சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வு எழுதி(1957) புலவர் பட்டம் பெற்றவர். அரக்கோணத்தில் தூய ஆண்டுரு பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்கள 26.05.1952 இல் இல்லற வாழ்வில் ஈடுபட்டு இரண்டு மக்கள் செல்வங்களைப் பெற்று, வளர்த்து ஆளாக்கியுள்ளார்.

பணியில் இருந்த காலத்தில் உரைநடை நூல்களை வரைந்த புலவர் சே. சுந்தரராசன் அவர்கள் கிறித்தவ சமய நூல்களுக்கு உரைவரையும் பெரும்பணியில் ஈடுபட்டவர். அரிய நூல்கள் பலவற்றுக்கும் உரைவரைந்து கிறித்தவ சமய நூல்கள் மக்களிடம் பரவக் காரணமாக அமைந்தவர். அந்த வகையில் இவரின் நூல்களைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்களின் தமிழ்க்கொடை:

  • தேம்பாவணி உரைநடை
  • இரட்சண்ய மனோகரம் தெளிவுரை
  • இரட்சண்ய யாத்திரிகம் உரைநடைச்சுருக்கம்
  • குடும்பவிளக்கு உரை
  • சிலுவைப்பாடு - உரையுடன்
  • பெத்லகேம் குறவஞ்சி - உரையுடன்
  •  திருக்காவலூர்க் கலம்பகம் - உரையுடன்
  • தேம்பாவணி (மூன்று காண்டம்- 3615 பாடல்கள்) உரையுடன்
  • இரட்சண்ய யாத்திரிகம் ( 5 பருவம்- 3766 பாடல்கள்) உரை
  • பாண்டியன் பரிசு - உரை
  • புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம்
  • பழைய ஏற்பாடு ஓர் அறிமுகம்
  • மாணவர்களுக்கு
  • குறள்நெறிக் கதைகள்


உள்ளிட்டவை இவரின் குறிப்பிடத்தகுந்த நூல்களுள் சிலவாகும்.

  பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் இந்த்தத் தமிழ்ச்செம்மல் தம் தமிழ்ப்பணியைச் சென்னையிலிருந்து தொடர்ந்து வருகின்றார். நீடு வாழ்க! புலவர் சே. சுந்தரராசனார்!


 கம்பார் கனிமொழி, புலவர் சே. சுந்தரராசன், மு.இ.
(மலேசியாவில் எடுத்த படம்)

குறிப்பு: இக்குறிப்புகளைப் பயன்படுத்துவோர் எடுத்த இடம் சுட்டினால் மகிழ்வேன்!




வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

குறளன்பன் புலவர் ஆ.வே.இராமசாமியார் மறைவு

குறளன்பன் புலவர் ஆ.வே.இராமசாமியார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்த வைரிசெட்டிப்பாளையம் என்னும் ஊரில் தமிழ்த்தொண்டும், திருக்குறள் தொண்டும் செய்துவந்து சான்றோர் குறளன்பன் புலவர் ஆ. வே. இரமசாமியார் அவர்கள் நேற்று (14.08.2014) அதிகாலை 2 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எந்த ஓர் இலக்கிய நிகழ்வு நடைபெற்றாலும் ஐயா அவர்களை அங்குக் காணலாம். 1987 முதல் ஐயா அவர்களின் தமிழ்ப்பணியை நான் நன்கு அறிவேன். அவர் மகன் திருவள்ளுவன் அவர்கள் குடந்தை ஓவியக்கல்லூரியில் பயின்றபொழுது என் மாணவராற்றுப்படை நூலுக்கு ஓவியம் வேண்டி அங்குச் சென்றேன். அப்பொழுது(1989-90 அளவில்) குறளன்பன் ஆ.வே.இராமசாமியார் குறித்து முழுமையாக அறிந்தேன்.

அதுபோல் என் கெழுதகை நண்பரும் தமிழ்ப்பற்றாளரும், புலவரின் தலைமாணாக்கருமாகிய சிவ. முத்துக்குமாரசாமி அவர்கள் ஐயாவின் திருக்குறள் தொண்டையும் பண்பு உள்ளத்தையும் மிக உயர்வாகச் சந்திப்பின் பொழுதுகளில் எல்லாம் எடுத்துரைக்க மகிழ்ந்து கேட்டுள்ளேன். அதன்பிறகு நடந்த தமிழ்வழிக் கல்வி மாநாடு, உண்ணா நோன்பு அறப்போர்கள், திருவள்ளுவர் தவச்சாலை விழாக்கள், தமிழ்ச்சான்றோர் பேரவை விழாக்கள், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க விழாக்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விழாக்கள்,  குளித்தலை தமிழ்க் கா.சு நினைவு இலக்கிப்பேரவை விழாக்களில் எல்லாம் குறளன்பன் அவர்களைப் பன்முறை கண்டு உரையாடும் பேறுபெற்றுள்ளேன்.

அப்பழுக்கற்ற தூய பண்பாளர் அவர். திருக்குறளைக் கற்றதோடு அமையாமல் அதன் வழி நின்று காட்டியவர். இன்பத்தில் பங்குகொள்ளும் இற்றைப் போலி மாந்தர்களிடையே, பழகியோர் துன்பத்தில் இருந்தால் அத்துன்பத்தில் தேடிச் சென்று பங்கேற்ற பெருமகனார் இவர். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், திருக்குறள் பற்றாளர்கள், தமிழறிஞர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன். குறளன்பன் ஆ.வே. இராமசாமியார் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைத்து உலகத் தமிழர்களுக்கு அவர் பெருமைமிகு பணிகளை நினைவூட்டுகின்றேன்.

ஆ.வே.இராமசாமியார் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டி என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர்கள் வேங்கடாசலம் ரெட்டியார், செல்லம்மாள் ஆகியோரின் அன்பு மகனாக 11.04.1928 இல் பிறந்தவர். இவருடன் பிறந்தோர் ஆண்மக்கள் மூவரும், பெண்மக்கள் இருவருமாக அமைந்தனர். திருவாட்டி கி. தனம் அவர்களை இல்லறத் துணையாக ஏற்றுத் திருவள்ளுவன், தொல்காப்பியன் என்னும் மக்கட்செல்வங்களைப் பெற்று  மண்ணுலகில் நீடுபுகழுடன் வாழ்ந்தவர்.

ஆ.வே. இராமசாமியார் அவர்கள் உள்ளூர்த் திண்ணைப்பள்ளியில் தொடக்கக் கல்வியையும், அடுத்து மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பயின்றும் கல்வி அறிவு பெற்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழ்க்கல்லூரியில் இவருக்குப் பேராசிரியர்களாக வாய்த்த சான்றோர்கள் இராம.கோவிந்தசாமி, அ.அரங்கசாமி, சிவப்பிரகாச சேதுராயர், எச்.வி. வேங்கடராமர், என்.இராமசாமி ஆவர்.

வைரிசெட்டிப்பாபளையம் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வைரிசெட்டிப்பாளையம் திருக்குறள் பேரவைச் செயலாளராகப் பணியாற்றியவர். 1985 இல் நடைபெற்ற ஆசிரியர் கூட்டமைப்பின் அறப்போரில் பங்கேற்றுச் சிறை சென்றவர். தமிழ்வழிக் கல்விக்காகத் தமிழ்ச்சான்றோர் போரவை சென்னையில் நடத்திய சாகும் வரையிலான உண்ணா நோன்பில் பங்கேற்றவர். தில்லியில் நடந்த உண்ணாநிலைப்போரிலும் பங்கேற்றவர்.

தம் உழைப்பில் கிடைத்த நிதியில் தாம் பணிபுரிந்த பள்ளியில் தம் பெற்றோர் பெயரிலும், அல்லூர் தவச்சாலையிலும், குளித்தலை கா.சு. பிள்ளை நினைவு இலக்கியக்குழுவிலும், தலைநகர்த் தமிழ்ச்சங்கத்திலும் பல அறக்கட்டளைகளை நிறுவித் தம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியவர்.

மாவட்ட நூலகம், ஒன்றியத் தொடக்கப்பள்ளி, தமிழ்த்தாய்த் திருக்கோயில், தமிழ்க்குடில் உள்ளிட்ட அமைப்புகளின் புரவலராகத் திகழ்ந்தவர்.

திருக்குறள் தொடர்பில் 13 நூல்களும், இலக்கியத் திறனாய்வு அடிப்படையில் 4 நூல்களும் பா நூல்கள் 5, தன்வரலாற்று நூல்கள் 2, பயண நூல்கள் 2, தன்னம்பிக்கைநூல் 1 என்ற அளவில் தமிழுக்கும் மக்களுக்கும் பயன்தரத்தக்க நூல்களை வழங்கிய பெருமகனார்.

வீடுபோற்றவும், நாடுபோற்றவும் வாழ்ந்த, துன்பத்தைக் கண்டு அஞ்சாத தமிழுருவான புலவர் ஆ.வே.இராமசாமி அவர்களின் பெருமை இவ்வுலகு உள்ள அளவும் நின்று நிலவட்டும்.


வீடியோ இணைப்பு
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் வழங்கும் இரங்கலுரை

ஞாயிறு, 15 ஜூன், 2014

பேராசிரியர் மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்)


பேராசிரியர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்)

தமிழகத்தின் கல்வி வரலாறு பல்லாயிரம் பேராசிரியர்களைக் கண்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் அறிவாலும் உழைப்பாலும் பல்துறைப் பங்களிப்பாலும் இந்த வரலாற்றின் பக்கங்களில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். அவ்வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்னும் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்திப் பல நூறு மாணவர்கள் தமிழாராய்ச்சித்துறையில் கால்பதிக்க வழிகண்ட பெருமை அறிஞர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்) அவர்களுக்கு உண்டு.

சங்க இலக்கியம், சமய இலக்கியம், சமகால இலக்கியம் எனப் பல்துறையிலும் சுடர்மிகு அறிவுபெற்ற பேராசிரியர் மா. இரா. அவர்கள் மொழிபெயர்ப்புத்துறையிலும் ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளவர். புதினத்துறையில் ஆய்வுகள் பல நடைபெற இவர் காரணமாக இருந்தவர். தமிழ் மரபுப்பாடல்கள், புதுப்பாக்கள் வரைந்தவர். தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவரின் புதிய உரைநடை என்னும் அரிய நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாதெமி பரிசு இவருக்குக் கிடைத்தது. தமிழ் இலக்கிய உலகில் இந்த நூலுக்கு என்றும் தனிமதிப்புண்டு.

மாணவர்களை விடுதலையாகச் சிந்திக்கச் செய்து, தானே நீச்சலடித்துக் கல்விக்கடலைக் கடக்கச் செய்யும் அதிசய ஆற்றல் மா. இரா. அவர்களுக்கு உண்டு. இவர் உரையாற்றும்பொழுது புதுமைப் பாதைகள் சிலவற்றை அடையாளம் காட்டுவார். செக்குச் சுழற்சிகள் கொண்ட சிந்தனைகளைத் தவிர்த்து, புதிய ஒளிக்கீற்றுகள் இவர் எழுத்தில் மின்னும். அலுவல்சார் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மா.இரா. அவர்கள் இப்பொழுது விருப்பமான பணிகள் செய்வதை வேள்வியாக்கிக்கொண்டுள்ளார். தமிழ்த்தவம் செய்யும் இப்பெருமகனாரை அண்மையில் அவர் இல்லில் கண்டு உரையாடி அவர்தம் வாழ்க்கைக்குறிப்பைப் பெற்றுவந்தேன். தமிழுலகின் பார்வைக்கு அவரின் வரலாற்றையும் பெருமிதப் பணியையும் மாணாக்கனாகிய யான் பணிந்து வைக்கின்றேன்.
அறிஞர் மா. இரா.

பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தகட்டூர் என்னும் ஊரில் 5 – 10 - 1939 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் வ. மாணிக்கம் திருமதி மா. இராமாமிருத அம்மையார். உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், தமிழ் இளங்கலைப் பட்ட வகுப்பினைக் கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்றவர். முதுலைப் பட்ட வகுப்பினைச் சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இதற்காகப் பல பரிசில்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1975 இல் முனைவர் பட்டம் பெற்றவர்.

1964 முதல் 1974 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு மன்னார்குடி, இராமநாதபுரம், கோயமுத்தூர், இராசிபுரம், பொன்னேரி, கும்பகோணம் கல்லூரிகளில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். 1985 முதல் 2000 வரை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பணிஓய்வு பெற்றவர்.

மா. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை:


·         நாவல் இலக்கியம் (1972)
·         இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்(1973)
·         புனைகதை வளம்(1973)
·         அகிலனின் கலையும் கருத்தும்(1974)
·         விடுதலைக்குப்பின் தமிழ்ச்சிறுகதைகள்(1977)
·         புதிய உரைநடை(1978)
·         இலக்கியத் தகவு(1979)
·   திறனாய்வுநெறி(1983)
·       நோக்குநிலை(1984)
·       உரைகல்லும் துலாக்கோலும்(1989)
·         பனிப்பாறையும் சில தீப்பொறிகளும்(1990)
·         கவண்கற்களும் சிறகுகளும்(2000)

கவிதைகள்
           ·          இனிக்கும் நினைவுகள்(1966)
           ·         எங்கெங்கு காணினும்(1982)
           ·         இரண்டாவது வருகை(1985)
           ·         யாதுமாகி நின்றாய்(1986)
           ·         தமிழ்க்கனல்(1987)
           ·         எழில்முதல்வன் கவிதைகள்(2000)

புனைகதை நூல்கள்
·         பொய்யான இரவுகள்(1973)
·         அதற்கு விலையில்லை(1974)
·         நாளைக்கும் இதே கியூவில்(1985)
·         வாழ்க்கை வரலாறு
·         பேராசிரியரியப் போராளி(2013)

மொழிபெயர்ப்புகள்
·         மகாகவி உள்ளூர்(1986)
·         ஜதீந்திரநாத் சென்குப்தா(1992)
·         பாபா பரீத்(1994)
·         நிச்சய தாம்பூலம்( 2008)
·         பொழுது புலர்ந்தது(2009)
·         பாகிஸ்தான் கதைகள்(2010)
·         கபீரின் நூறு பாடல்கள்(2011)
·         கிழக்கு- மேற்கு பாகம்1(அச்சில்)



பதிப்பித்த நூல்கள்

·         Selected Poems of Bharathidasan( in English)
·         Bharathidasan Centenary Souvenir(1991)
·         Velvi (வேள்வி) A Collection of seminar Papers in Tamil(1991)
·         Medieval Indian Literature in English Translation, Tamil Literature(1100-1800).
· உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்(2000)
·         உலகத் திருக்குறள் மாநாட்டு மலர்
·         பகவத் கீதை வெண்பா(2004)

மா.இராமலிங்கம் அவர்கள் பெற்ற விருதுகளும் சிறப்புகளும்:

மா.இரா அவர்களின் புதிய உரைநடை நூலுக்கு 1982 இல் இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் (1988-92), செயற்குழு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியவர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவர் எழுதிய விடுதலைக்குப் பின் தமிழ்ச்சிறுகதைகள் என்ற நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருதினை 1991 இல் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்புக்கான நல்லி குப்புசாமி செட்டி, திசை எட்டும் விருதினைப் பெற்றவர். பாண்டித்துரைத் தேவர் விருதினையும் பெற்றவர். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் இவருக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருதினை வழங்கி 2006 இல் பாராட்டியுள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் திறனாய்வுக்குரிசில், சிலம்பாய்வுச்செல்வர், தமிழ்மாமணி விருது, ஆய்புல அண்ணல் விருது, குறள் ஞாயிறு விருது ஆகியவற்றை வழங்கிப் பாராட்டியுள்ளன.

மா.இரா. அவர்கள் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள மலேசியா, யுகோசுலேவியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், பணிமனைகளில் ஆயுவுரைஞராகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளார்.

  முத்தமிழ்க் காவலர் கி..பெ. விசுவநாதம் அவர்கள் நடத்திய தமிழகப் புலவர் குழு என்னும் அமைப்பில் இருபதாண்டுகள் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். ஓங்குதமிழ் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து பணிபுரிந்தவர். புவனேசுவர் நகரத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் ஆங்கில இதழின் பதிப்பாசிரியர் குழுவில் இரண்டாண்டுகள் இருந்து பணிசெய்தவர். இவர்தம் கவிதைகளை ஆராய்ந்து மலைச்சாரலும் நெருப்பு அருவிகளும் என்னும் தலைப்பில்  திரு. செல்வசேகரன் அவர்கள் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.

  EAST – WEST என்னும் புதினத்தின் இரண்டாம் பகுதியை மொழிபெயர்த்து முடிக்கும் நிலையில் உள்ளார். மேலும் வட இந்திய ஞானியான சுவாமி இராமதீர்த்தர் என்பவரின் வாழ்வும் பணியும் குறித்த பெரிய நூலொன்றை எழுதி வெளியிடும் திட்டத்துடன் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் செயல்பட்டு வருகின்றார். நிறைவாழ்வு ஐயா அவர்களுக்கு அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

மு.இளங்கோவன், பேராசிரியர் மா.இராமலிங்கம்

பேராசிரியர் மா.இரா. அவர்களின் முகவரி:
முனைவர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்)
தமிழ்க்குடில், எண் 4, பவானி நகர், தஞ்சாவூர்- 613 004

குறிப்பு:

கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை வரைவோர், இலக்கிய வரலாறு எழுதுவோர் இக்குறிப்புகளையும், படங்களையும் எடுத்தாளும்பொழுது எடுத்த இடம் சுட்டினால் மகிழ்வேன்.

தொடர்புடைய பதிவுக்கு : இங்குச் செல்க