நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

புதுச்சேரியில் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள்...


ம.இலெனின் தங்கப்பா நூல் அறிமுக விழா

புதுச்சேரியில் நேற்று (27.02.2010) இரண்டு இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடந்தன.
பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்களின் பெங்குவின் நிறுவன் வெளியிட்ட LOVE STANDS ALONE (selections from tamil sangam poetry)(விலை 390 உருவா)என்ற நூல் அறிமுக விழாவும்,ஒரிசா பாலு அவர்களின் தமிழகக் கடலாய்வுகள் குறித்தும் பேச்சும் இந்த இரண்டு நிகழ்வுகளாகும்.இரண்டு நிகழ்வுக்கும் செல்ல வேண்டும்.என்ன செய்வது?.

முதலில் திரு.பாலு அவர்களை அவர்கள் தங்கியிருந்த விடுதியில் கண்டு உரையாடி அவரைப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் அரங்கில் அழைத்து வந்து அமரச் செய்தேன்.நண்பர்களிடம் சிறிது இடைவெளியில் வருவதாகச் சொல்லி அருகில் இருந்த வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தங்கப்பா நூல் அறிமுகக் கூட்டத்துக்குச் சென்றேன்.தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதற்கும் நான் செல்வதற்கும் சரியாக இருந்தது.

தங்கப்பா அவர்களின் மகன் த.செங்கதிர் அனைவரையும் வரவேற்றார்.பேராசிரியர் க.பஞ்சாங்கம் நீண்டதொரு தலைமையுரையாற்றினார்.அடுத்து வானொலி நிலையத்தில் பணியாற்றும் முனைவர் பழ.அதியமான் அவர்கள் தங்கப்பா பற்றியும் அவர் மொழிபெயர்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார்.கவிஞர் இரா.மீனாட்சி,பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் உரையாற்றினர்.தங்கப்பாவும் நிறைவில் உரையாற்றினார்.

100 நூல்கள் விழா அரங்கில் விற்றுத் தீர்ந்தன.மேலும் தேவையானவர்களுக்கு அனுப்பி வைப்பதாகப் பணம் பெற்றுக்கொண்டு பெங்குவின் நிறுவனத்தார் உறுதி சொன்னார்கள் நான் உட்பட யாரும் தங்கப்பாவின் நூல்கள் 100 ஒரே நேரத்தில் விற்கும் என நினைக்கவில்லை. பேராசிரியரின் நூல்கள் விற்பனையாகாமல் பரணில் கட்டிக்கிடப்பதையும் என்னைப் போன்றவர்களுக்கு அவர் அன்பளிப்பாக வழங்குவதையும் இருபதாண்டுகளாக அறிவேன்.அவர் போல் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு பாவலரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.அவர்போன்ற மொழிபெயர்ப்பாளரையும் நான் கண்டதில்லை.என்னே அவரின் ஆங்கிலப்புலமை?சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதை முனைவர் பிரேமா நந்தகுமார் உள்ளிட்டவர்கள் வாயாரப் புகழ்ந்துள்ளைதைக் கேட்டுள்ளேன்.

நான் இடையில் புறப்பட்டு மீண்டும் பாலு அவர்களின் நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தேன்.கடலாய்வு பற்றிய அரிய செய்திகளை அவர் முன்வைத்தாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.குறைந்த எண்ணிக்கை என்றாலும் அனைவரும் சுவைத்துக் கேட்டனர்.


புதுச்சேரித் தமிழ்ச்சங்கத்தில் ஒரிசா பாலு

புதுவைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு அவரை மீண்டும் அழைக்க வேண்டும் என்று புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள் தம் விருப்பத்தைச் சொன்னார்கள். பாலுவிடம் விடைபெற்று வரும்பொழுது நண்பர் பொறியாளர் முருகையன் எதிர்ப்பட்டார்.ஐயா இரா.திருமுருகனின் தெளிதமிழ்,தமிழ்க்காவல் இதழ்களை இணையத்தில் வடிவமைத்து வெளியிட்டவர் முருகையன்.திருமுருகனாரின் மறைவுக்குப் பிறகு இதழ்கள் நின்றன.மீண்டும் விரைவில் தமிழ்க்காவல், தெளிதமிழை இணையத்தில் ஏற்றுவது பற்றி உரையாடினோம்.விரைந்து தெளிதமிழ்,தமிழ்க்காவல் இணையத்தில் வெளிவர ஏற்பாடு செய்துவருகிறோம்.

சனி, 27 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் இனிதே நிறைவு


பதிவாளர் பெ.சரவணன்,ஆண்டோபீட்டர்,ப.அர.நக்கீரன்,ந.தெய்வசுந்தரம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையின் மொழியியல் ஆய்வுப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் மூன்றாம் நாள் நிகழ்வு(26.02.2010) காலை பத்து மணிக்குத் தொடங்கியது. கணினிவழித் தமிழ்க் கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற பொதுத்தலைப்பில் நிகழ்ந்த அரங்கில் பேராசிரியர் நடராசப் பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்.முனைவர் விசயராணி அவர்கள் தமிழ் மின் இதழ்கள் என்ற தலைப்பில் இணையத்தில் உள்ள மின்னிதழ்களை அறிமுகப்படுத்தினார்.நான் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் அதன் ஒரு பயன்பாட்டுக் கூறான தமிழ் விக்சனரி பற்றியும் அரங்கிற்கு அறிமுகம் செய்தேன்.தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை இணைப்பது,தமிழ் விக்சனரியில் சொற்களை இணைப்பது பற்றிக் காட்சி விளக்கத்துடன் சொன்னதுடன் தமிழ் விக்கி வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தேன்.(என் கட்டுரையைப் பின்பு இணைப்பேன்). தமிழ் விக்கிக்குப் பணியாற்ற அனைவரையும் அழைத்தேன்.

அடுத்து முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்(சிங்கப்பூர)அவர்கள் தமிழ்க்கணினி சிங்கப்பூர் கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அடுத்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கும் திரு.அண்ணா கண்ணன் அவர்கள் தமிழக அரசின் இணையத்தளங்கள் மொத்தம் 431 எனவும் இதில் தமிழின் பயன்பாடு எந்த நிலையில் உள்ளது எனவும் எடுத்துக்காட்டினார்.பேராசிரியர் இராமன் அவர்கள் உயர்கல்வியில் ஒருங்கு குறி குறியீட்டுமுறை செயலாக்கத்தின் அவசியம் என்ற தலைப்பில் ஒருங்குகுறியின் தேவையை எடுத்துரைத்தார்.பின்னர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் தமிழ் இணைய நூலகங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசினார். பேராசிரியர் தியாகராசன்(சிங்கப்பூர்) சிங்கப்பூரில் கல்வி வளர்ச்சிக்குக் கணினியின் தேவை குறித்து உரையாற்றினார்.இந்த நிகழ்வு பகல் 1.15 மணி வரை நடந்தது.

பகலுணவுக்குப் பிறகு மீண்டும் நிகழ்வு தொடங்கியது.மூன்று நாளாகப் பேசப்பட்ட செய்திகள் பற்றி கலந்துரையாடினோம்.கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களும் மொழியியல் வல்லுநர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த நிறைவு விழாவில் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அனைவரையும் வரவேற்க,சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் பெ.சரவணன் அவர்கள் தலையுரையாற்றினார். திரு.ஆண்டோ பீட்டர்,முனைவர் ப.அர.நக்கீரன்(இயக்குநர்,தமிழ் இணையப் பல்கலைக்கழகம்),ஆ.க.இராமகிருட்டினன்(பெங்களூரு)சிறப்புரையாற்றினர். முனைவர் இராம.கி,மறவன்புலவு சச்சிதானந்தன் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டின் தீர்மானங்களைப் பேராசிரியர் நடராசப்பிள்ளை அவர்கள் முன்மொழிந்து பேசினார்.பேராசிரியர் மு.பொன்னுசாமி அவர்கள் நன்றியுரைக்கக் கருத்தரங்கம் இனிது நிறைவுற்றது.

கருத்தரங்கத் தீர்மானங்கள் சில:

1.தமிழ்க்கணினி ஆய்வுக்கு உதவும் வகையில் கணினி மொழியாய்வு மையங்களை இரண்டு இடங்களில் அரசு அமைக்க வேண்டும்.

2.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,பேராசிரியர் கணேசன் ஆகியோர் உருவாக்கியுள்ள தமிழ்ச்சொல் திருத்திகள்,இலகணத்திருத்திகள் மென்பொருள்களை அரசு ஏற்க வேண்டும்.

3.ஒருங்குகுறி(யுனிகோடு),TACE 16 ஆகியவற்றை அரசு ஏற்று இசைவளிக்க வேண்டும்.

4.தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள் உருவாக்கியப் பேராசிரியர் க.இராமகிருட்டினன் அவர்களின் ஆய்வு முயற்சிக்கு அரசு உதவ வேண்டும்.

5.நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் யாவும் ஒருங்குகுறியில் வெளியிடப்பெற வேண்டும்.

6.தமிழகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆய்வுகளின் சுருக்கம் ஒருங்குகுறியில் இணையத்தில் இணைக்கப்பட வேண்டும்.

7.தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பெறும் ஆய்வுகட்டுரைகள் படிமக்கோப்புகளாக(பி.டி.எப்) இணையத்தில் இணைக்கப்படவேண்டும்.

8.தமிழ்நாடு,புதுச்சேரி,இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா,மொரிசீயசு நாடுகள் இணைந்து தமிழ்மொழிக்காக ஒருங்கிணைந்த குழுக்களை உருவாக்க வேண்டும்.கூட்டுப்பேச்சுகள் வழியாகத் தமிழ்மொழி வளர்ச்சி பற்றி உரையாடவேண்டும்.

9.மாற்றுத் திறனாளர்களுக்குத் தேவையான மென்பொருள்களை உருவாக்க வேண்டும்.

10.சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொல்தொகுப்பு மையத்தை உருவாக்க வேண்டும்.

11.விக்கிப்பீடியா போலப் பன்னாட்டுச் சொல்தொகுப்பு முயற்சி ஒருங்கிணைக்கப்பட வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


உரை-ஒலிமென்பொருள் உருவாக்கிய முனைவர்.ஆ.க.இராமகிருட்டினன்(பெங்களூரு), நான்


தியாகராசன்,நான்,நடராசப்பிள்ளை,ஆ.இரா.சிவகுமாரன்

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் -படங்கள்


துணைவேந்தர் திருவாசகம்,அமைச்சர் பூங்கோதை,முனைவர் ஆனந்தகிருட்டினன்(மேடையில்)

தமிழ்க்கணினி- பன்னாட்டுக் கருத்தரங்கம்-சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறப்பான திட்டமிடலுடன் நடைபெறுகிறது.தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு உழைத்த தொழில் நுட்ப வல்லுநர்களும், மொழியியல் துறை வல்லுநர்களும் தமிழறிஞர்களும் வருகை புரிந்துள்ளனர்.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் மிகச்சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளார். குறித்த நேரத்தில் பயிலரங்கு தொடங்குவதும்,நிறைவு பெறுவதும் சிறப்பு.அரங்கில் இருப்பவர்கள் கருத்தரங்கில் முழுக்கவனத்துடன் இருந்து பங்களிப்பு வழங்குகின்றனர்.இரண்டு நாள் நிகழ்வுகளும் தொய்வின்றி மிகச்சரியாக நடைபெற்றன.

இன்று(25.02.2010) காலை 10 மணிக்குத் தொடங்கிய அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.வெங்கட்ரங்கன் அவர்கள் தலைமை தாங்கினார்.யுனிகோடும் தமிழும் என்ற பொதுத்தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் நடந்தன.பேராசிரியர் இராமன் அவர்கள் யுனிகோடு என்றால் என்ன என்றும், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்றும் அவைக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.இவ்வாறு முதலில் அரங்கிற்கு இதனை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பேரா.ந. தெய்வசுந்தரம் கேட்டுக்கொண்டதன் பேரில் இம் முன்னுரை வழங்கப்பட்டது.அதனை அடுத்து அ.இளங்கோவன் அவர்கள் யுனிகோடைப் பயன்படுத்தி அச்சிடுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார்.

அவர் உரை UNICODE TAMIL FOR THE PUBLISHING INDUSTRY PROBLEMS AND SOLUTIONSஎன்ற தலைப்பில் இருந்தது.பேஜ்மேக்கர்,போட்டோ ஷாப்,இன்டிசைன்,பி.டி.எப்,எக்சல்,உள்ளிட்டவற்றில் யுனிகோடு எழுத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.TACE16அமைப்பில் உள்ள யுனிகோடு எழுத்தைப் பயன்படுத்தும்பொழுது இத்தகு சிக்கல் உருவாவதில்லை என்று எடுத்துக் காட்டினார்.யுனிகோடு கன்சார்டிய விதிமுறைகளின்படி மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை எனவும்,இடம் யுனிகோடில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.ஆனால் இருப்பில் உள்ள இடைவெளியில் புதிய சில வசதிகளைப் பயன்படுத்தி யுனிகோடைப் பயன்படுத்தித் தமிழைப் பயன்படுத்தமுடியும் என்று எடுத்துக்காட்டினார்.

பொறியாளர் இராம.கி.அவர்கள் ஒருங்குறியேற்றத்தின் போதாமை ( INADQUACY OF TAMIL UNICODE)என்ற தலைப்பில் பழங்கால எழுத்து வடிவ வளர்ச்சிகளை எடுத்துக்காட்டி,யுனிகோடின் குறைகளை எடுத்து விளக்கினார்.

என்.எச்.எம்.எழுதியை உருவாக்கிய நாகராசன் அவர்கள் தமிழ் 99 விசைப்பலகை பற்றியும் யுனிகோடு பற்றியும் மிகச்சிறப்பாகத் தன் கருத்துத்துகளை எடுத்துரைத்தார்.பழைய தவறுகளை விட்டுவிட்டுப் புதியதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.TACE 16 ஐ யுனிகோடு கன்சார்டியத்தினர் ஏற்கமாட்டார்கள் என்று சொன்னார்.யுனிகோடை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.பள்ளி மாணவர்களுக்கு யுனிகோடை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார்.இன்டிசைன் யுனிகோடை ஏற்கவில்லை என்று ஒதுங்கமுடியாது. அடுத்த கட்டத்திற்குப் பிளக்-இன் (Plug-in) செய்ய வேண்டும் என்றார்.யுனிகோடை இனி ஒதுக்க முடியாது என்று தன் ஆழ்ந்த வாதத்தை முன்வைத்தார்.

இடையில் ஒரு கருத்தை இராமன் முன்வைத்தார்.தமிழக அரசு யுனிகோடு கன்சார்டியத்தில் உறுப்பினராக உள்ளது.ஆனால் அந்த அரசே யுனிகோடைப் பயன்படுத்துவதில்லை.ஆந்திரா அரசு கன்சார்டியத்தில் உறுப்பினர் இல்லை.ஆனால் யுனிகோடை நடைமுறைப்படுத்துகிறது என்றார்.

பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் இராமகிருட்டினன் அவர்களின் உரையை அரங்கத்தினர் ஆர்வத்துடன் கேட்டனர்.காரணம் தட்டச்சிட்டால் தமிழை ஒலித்துக்காட்டும் மென்பொருளை அவர் நேரடியாக மேடையில் அறிமுகம் செய்தார்.தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்த ஒரு செய்தியை மாதிரிக்குப் படியெடுத்து அதனைப் படிக்கும்படியாகச் செய்துகாட்டினார்.அவ்வாறு படிக்கும் பொழுது நாள்(10.02.2010),அடையாளக்குறி,பின்ன எண்கள்,எண்கள்(456), உள்ளிட்டவற்றைப் படிப்பதிலும் பிற தொடர்களைப் படிப்பதிலும் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார்.அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சந்தோசுகுமார்(அமிர்தா பல்கலைக்கழகம்), உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

பிற்பகல் அமர்வில் பேராசிரியர் முருகையன்,பேராசிரியர் நடனசபாபதி,பேராசிரியர் இரவிசங்கர்(புதுவை)உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினர்.

நாளை(26.02.2010)காலை பத்து மணிக்குக் கணினிவழித் தமிழ்க்கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.பேராசிரியர் நடராசப்பிள்ளை அவர்கள் தலைமையில் ஆ.இரா.சிவகுமாரன்,பேரா.தியாகராசன், அண்ணாகண்ணன்,மு.இளங்கோவன், மு.பழனியப்பன், துரையரசன் உள்ளிட்டவர்கள் கட்டுரை படைக்க உள்ளனர்.


பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,துணைவேந்தர் திருவாசகம்,அமைச்சர் பூங்கோதை அவர்கள்


இராமன்,நான்,வெங்கட்ரங்கன்,இராம.கி ஐயா


வெங்கட்ரங்கன்,நான்,நாகராசன்,இராமன்


நானும், என்.எச்.எம்.எழுதி உருவாக்கிய நாகராசனும்


நானும் பேராசிரியர் இராமகிருட்டினனும்


பேராசிரியர் கணேசன்,வெங்கட்ரங்கன்,அ.இளங்கோவன்


தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் வசதியைத் தமிழுக்கு வழங்கிய பேராசிரியர் இராமகிருட்டினன்(பெங்களூரு)

புதன், 24 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக்கருத்தரங்கு முதல் அமர்வு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கின் முதல் அமர்வு இன்று(24.02.2010) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடந்தது. எழுத்தாளர் மாலன் அவர்கள் தலைமையில் நடந்த அரங்கில் பயனுடைய வகையில் அமர்வு நடைபெற்றது.வழக்கமான கட்டுரை படிக்கும் முறையில் இல்லாமல் மொழியியல் அறிஞர்கள் கணினி மொழியியல் பற்றி உரையாடினர். முனைவர் நீலாதிரி சேகர்தாசு, பேராசிரியர் ந.கணேசன்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,பேராசிரியர் அருள்மொழி,பேராசிரியர் உமாராசு, பேராசிரியர் டேவிட் பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். திருவாளர்கள் இரா.ம.கி.ஐயா, பேராசிரியர் செ.வை.சண்முகம்,பத்ரி,காந்தளகம் சச்சிதானந்தம், முனைவர் இரவிசங்கர்(புதுவை) உள்ளிட்டவர்கள் உரையாடலில் கலந்துகொண்டனர்.
மாலன் அவர்கள் "இன்று மொழி சுருங்கிவிட்டது; ஆனால் மொழிப் பயன்பாடு அதிகரித்துள்ளது அதாவது மொழி ஒரே நேரத்தில் இரு வேறு திசைகளில் பயணிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.புணர்ச்சியில் ஒற்றுகள் இல்லாமலும் வேற்றுமை உருபுகள் இல்லாமலும் ஊடகங்களில் எழுதப்படுகின்றன என்றார்.கணினி வந்த பிறகு ஆங்கிலத்துடன் தமிழ் ஒப்புமைப்படுத்தப்படுகிறது என்றார்.வேறு தளங்களுக்குத் தமிழ்ப் பயன்பாடு செல்ல வேண்டும்.அதாவது பேச்சு-உரை எனவும்,உரை-பேச்சு எனவும், தானியங்கி மொழிபெயர்ப்பு எனவும் தமிழ்க் கணினி வளர வேண்டியுள்ளது என்றார்.மொழிக்குரிய தரவுத்தளங்கள் தேவை என்றும்,ஆர்வமுடைய அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் கருத்துரை வழங்கினார்.தமிழ் ஆட்சி மொழியானால்தான் தமிழ்க்கணினி முயற்சிகள் முழுமையடையும் என்றார்.

மொழித்தொழில் நுட்பமும் தமிழும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களும் பேரா.ந.கணேசனும் செய்துள்ள,உருவாக்கியுள்ள மென்பொருள்கள் தமிழுக்கு ஆக்கமானவையாகத் தெரிந்த்து.தமிழ் இலக்கணத்திருத்தி,சொல் திருத்தி, சொற்களஞ்சிய முயற்சிகள் தமிழ் ஆர்வலர்களுக்கு ஊக்கத்தைத் தந்த்து. இவர்களின் மென்பொருள்கள் தமிழில் பிழையாக எழுதுவனவற்றைத் திருத்திக்காட்டுவதாகவும்,இலக்கண ஆய்வுகளுக்கு வழி வகுப்பதாகவும் இருந்தது.


பெருஞ் செலவிட்டுச் செய்துள்ள இந்த மென்பொருள்களைத் தக்க விலைக்கு வழங்க ஆர்வமாக இருப்பதைப் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் சொன்னவுடன் காந்தளகம் சச்சிதானந்தம் அவர்கள் இவை மக்களுக்கு இலவசமாக்க் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று கூறினார்.அப்பொழுது இ.கலப்பை முயற்சிக்கு அனைவரும் பங்களித்ததை இராமன் அவர்கள் நினைவூட்டினார்.அரசு அல்லது தனிநபர்கள் உதவி செய்து இந்த மென்பொருள்களை வாங்கி ஆதரிதால் இந்த ஆய்வுகளும் மென்பொருள்களும் தமிழுக்கு ஆக்கமாக இருக்கும் என அனைவரும் கருத்துரைத்தனர்.
பேராசிரியர் கணேசன் அவர்களின் மென்பொருள்கள் கணியன்(தமிழாய்வுக் கருவிகள்)என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன.இவரின் மென்பொருளில் சொலாய்வி, சொற்றொடராய்வி, தொகுப்பாய்வி,பிழை திருத்தி,சொல்லாக்கி,வேர்ச்சொல்லாய்வி,சொல்லடைவி என்னும் பயன்பாட்டு மென்பொருள்கள் உள்ளன.இத்தனை வசதிகளையும் உடைய மென்பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழாய்வுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும்.மேலும் சொற்கள், சொற்றொடர்கள்,பேச்சுச்சொற்கள் பற்றிய ஆய்வுகளைப் பற்றி விவாதித்தனர். தமிழ்ச் சொற்களைக் கணினியில் இட்டு ஆராயும்பொழுது தமிழிலக்கணம் தெளிவாக உள்ளது என்றார்.

இன்றைய தமிழ் வழக்கில் 40,000 சொற்களை நாம் அடிக்கடி பயன்பாட்டில் வைத்துள்ளோம் என்று ஊடகங்களில் வந்த சொற்களைப் பட்டியலிட்டு விளக்கினார் முனைவர் தெய்வசுந்தரம். தெய்வசுந்தரம் அவர்களின் ஒற்றுப்பிழை திருத்தி மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழைப் பிழையின்றி எழுதமுடியும்.நிதியுதவி கிடைத்தால் சொல் திருத்தி,பிழை திருத்தி வெளிவரும் என்றார்.சொற்களஞ்சியத்தின் தேவை இன்றைய அமர்வில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

நாளைய அமர்வு காலை பத்து மணிக்குத் தொடங்கும்.தி.ந.ச.வெங்கடரங்கன் தலைமையில் நடைபெறும் அரங்கில் பேராசிரியர் வி.கிருட்டினமூர்த்தி, திரு.இளங்கோவன், இரா.ம.கி,பத்ரி, ஆண்டோபீட்டர்,பி.செல்லப்பன்,ஆனந்தன் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளனர். யுனிகோடும் தமிழும் என்ற தலைப்பில் அமர்வு நடைபெறும்.

கணினித்தமிழ்-பன்னாட்டுக்கருதரங்கம் இனிதே தொடங்கியது…

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையும் மொழியியல் ஆய்வுப் பிரிவும் இணைந்து கணினித்தமிழ் பன்னாட்டுக் கருதரங்கை பிப்ரவரி24-26 நாள்களில் நடத்துகின்றன. கருத்தரங்கின் தொடக்க விழா இன்று(24.02.2010)காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைப் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் வரவேற்று, தமிழ் மொழித்துறையில் நடைபெற்றுவரும் கணினி,மொழியியல் ஆய்வுகளை எடுத்துரைத்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் அவர்கள் தலைமையுரையாற்றினார்.இந்தக் கருத்தரங்கின் வழியாகப் புதிய மென்பொருள்கள் கிடைத்தால் நல்லது.சென்னைப் பல்கலைக்கழகத்தில்தான் தமிழ்க்கணினி ஆய்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ்ப்பேரகராதி விரைவாக வெளிவர உள்ளது.மேலும் சிதம்பரநாதனார் அவர்கள் உருவாக்கிய ஆங்கிலம்-தமிழ் அகராதி இன்னும் இரண்டு திங்களில் குறைந்த விலையில் மறுபதிப்பாக வெளிவர உள்ளது.

இன்று கணிப்பொறியை அனைவரும் பயன்படுத்த வேண்டியநிலையில் உள்ளோம்.ஆங்கிலம் தெரியவில்லையே என்று கணிப்பொறியைப் பயன்படுத்த யாரும் தயங்கவேண்டாம். படித்தவர்கள் மத்தியில்கூட இன்னும் இணையம் சரியாக அறிமுகம் இல்லை.கணினியைப் பயிற்றுவிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர்.ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.கணினி ஆர்வமுடையவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் நிதியுதவியும் ஆதரவும் வழங்கும் என்றார் துணைவேந்தர்.

பன்னாட்டுக்கருத்தரங்கின் மையவுரையினை முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருட்டினன் அவர்கள் வழங்கினார்.இரண்டு நாள் கருத்தரங்குகளில் ஆலோசிக்கப்படும் கருத்துகளை ஆராய்ந்து எதிர்வரும் தமிழ் இணையமாநாட்டில் எடுத்துரைக்க வேண்டும்.இந்தக் கருத்தரங்க ஆய்வுமுடிவுகளை உத்தமம் மாநாட்டில் எடுத்துரைக்கவேண்டும்.

கணித்தமிழ் வளர்ச்சி தமிழகத்தில் மெதுவாக நடைபெறுகிறது.மெதுவாக நடைபெறுவதற்குக் காரணம் கண்டறியப்படவேண்டும்.பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழறிவு குறைவாக இருப்பதால் கணினித்தமிழ் வளர்ச்சி குறைவாக உள்ளது.பள்ளி,கல்லூரிகளுக்குச் சென்று மு.இளங்கோவன்,இராமன் போன்றோர் தமிழ்க்கணினியைப் பரப்புகின்றனர். பொறியியல் மாணவர்களுக்குத் தமிழ் தட்டச்சு பயிற்றுவிக்க அவர்கள் தமிழில் தட்டச்சிட்டு மடல் எழுதுகின்றனர்.பேச்சு-உரை,உரை-பேச்சு,மொழிபெயர்ப்புகள் சார்ந்து தமிழ்க்கணினி வளரவேண்டும்.பல்கலைக்கழகத்தில் துறைகள் வளரவேண்டும் என்றால் துறைசார் மாணவர்களை உருவாக்க வேண்டும்.ஒருவர் பலரை உருவாக்க வேண்டும்.ஒரு துறை வளர்ந்து வேர்விட வேண்டும் என்றால் பேராசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்.ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் ஆய்வுகள் உலகத் தரத்திற்கு நடந்தது. ஆனால் இன்று அது முகவரி தெரியவில்லை.காரணம் அடுத்த தலைமுறைக்கு அந்த ஆர்வம் இல்லாமல் போனது.

மொழியறிவு சிலருக்கு இருக்கும்.கணிப்பொறி அறிவு இருக்காது.சிலருக்கு கணிப்பொறி அறிவு இருக்கும்.மொழியறிவு இருக்காது.இவை இரண்டும் இருக்க வேண்டும்.கணிப்பொறி மொழியாராய்ச்சிக்கு இயற்பியல் அறிவு,உடல்கூற்று ஆய்வு அறிவு,மூளையாய்வு அறிவு,இருக்க வேண்டும்.தமிழும் அறிவியலும்,தொழில்நுட்பமும் இணைந்தால்தான் தமிழ் வளரும்.கணிப்பொறி அறிவு பெற்றவர்கள் தமிழறிவு,மொழியியல் அறிவு பெற்று விளங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் குறைந்த அளவு இரண்டு மையங்கள் கணினிமொழித்துறை ஆய்வுக்கு உருவாக்கப்பட வேண்டும்.அது சென்னைப் பல்கலைக்கழகத்திலும்,மற்றொரு பல்கலைக் கழகத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.முனைவர் பட்டம் உள்ளிட்ட ஆய்வுகள் இங்கு நடக்க வேண்டும்.சிறப்பு நிலைப்பேராசிரியர்கள்,பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.பெங்களூர்,கான்பூர்,தில்லிப் பல்கலைக்கழகத்தில் உள்ள மிகப்பெரிய ஆய்வறிஞர்கள், மருத்துவத்துறை அறிஞர்கள் ஒன்றுகூடித் தமிழ்க்கணினி வளர்ச்சிக்கு ஆய்வுசெய்ய வேண்டும்.ஆறு அல்லது ஏழுகோடி உருவா இருந்தால் இத்தகு மையங்கள் உருவாக்கமுடியும்.

தமிழர்களுக்கு உரிய மனப்பான்மை அரசியல் கண்கொண்டு பார்ப்பது.அரசியலைப் பயன்படுத்தி,தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.தனிமனித தாக்குதல்களை விட வேண்டும்.கருத்து வேறுபாடுகளை எடுத்துச்சொல்லும்பொழுது மனத்தைப் புண்படாமல் சொல்ல வேண்டும்.உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது.தமிழ்க்கணினி வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்றார் முனைவர் மு.ஆனந்தகிருட்டின்ன்.

தமிழ்நாட்டு அரசின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு பூங்கோதை அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

செம்மொழி மாநாட்டுடன் இணையமாநாடும் நடக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்.தமிழிலும்,கணினி வளர்ச்சியிலும் முதல்வருக்கு உள்ள ஈடுபாடு இதனால் விளங்கும்.1999 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் தமிழ்மாநாடு நடத்தியவர்.தமிழ் விசைப்பலகையை(99) அறிமுகப்படுத்தியவர்.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்குச் சுமார் 1 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.இதில் பல்லாயிரம் பேர் படித்து பயன்பெறுகின்றனர்.தானியங்கி கணினி பயன்பாடுகள் தமிழிலும் வெளிவர வேண்டும். மொழி ஒரு கருவி மட்டுமல்ல.நம் பண்பாட்டை,வரலாற்றைத் தாங்கி நிற்கும் கருவி.என்றும் நிலையானது மொழியாகும்.திராவிட இயக்க வளர்ச்சியும்,இட ஒதுக்கீடும் மக்கள் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது.


உத்தமம் தலைவர் தி.ந.ச.வெங்கட்ரங்கன்,முனைவர் நீலாதிரி சேகர்தாசு(இந்தியப் புள்ளியியல் கழகம்,கொல்கத்தா)சிங்கப்பூர் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

புதுச்சேரி-ஏம்பலம் அரசுப் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்


ஆர்வமுடன் பங்கேற்ற மாணவிகள்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம் இன்று(23.02.2010) காட்சி விளக்கத்துடன் நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணிமுதல் மாலை 5 மணி வரை தமிழ்த் தட்டச்சு(99 விசைப் பலகை), மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் செய்தல், வலைப்பூ உருவாக்கம், தமிழ் விக்கிப்பீடியா, மின்னிதழ்கள் காட்சிக்கு உட்படுத்தப்பட்டு விளக்கப்பட்டன.

ஏம்பலம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.ஏம்பலம் செல்வம் அவர்களின் முயற்சியால் இந்த இணைய அறிமுக நிகழ்வு சிறப்புற நடந்தது. சிற்றூர்ப் புற மாணவர்கள் 200 பேருக்கும் மேல் அமர்ந்து கற்றுக்கொண்டனர். இவர்கள் இதுவரை கணிப்பொறி பற்றிய அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தனர். தமிழ் வழியில் எளிமையாகச் சொல்லி அறிமுகம் செய்ததால் மாணவ-மாணவிகளுக்கு இப் பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. பள்ளியின் தலைமையாசிரியர், பிற ஆசிரியப் பெருமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


ஏம்பலம் திரு.செல்வம் அவர்கள்


மாணவர்களின் பங்கேற்பு


திரு.செல்வம் அவர்களின் வாழ்த்துரை
(தலைமையாசிரியரும் நானும் அமர்ந்துள்ளோம்)

ஏம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்

ஏம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் இன்று 23.02.2010 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஏம்பலம் திரு.செல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.பள்ளி முதல்வர் திரு.நா.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள்,மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.மேலும் செய்திகள்,படங்கள் இரவு இணைப்பேன்.

புதன், 17 பிப்ரவரி, 2010

புதுச்சேரியில் இலங்கைத் தமிழ் ஆசிரியர்களுக்கு வரவேற்பு

புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள இலங்கைத் தமிழாசிரியர்களுக்கு இன்று(17.02.2010)காலை 11.00 மணிக்கு,புதுச்சேரித் தமிழ்ச்சங்க அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் கற்றல்,கற்பித்தல் நிகழ்வுகளைப் பார்வையிட வரும் இவர்கள் புதுச்சேரியில் பள்ளிகளின் செயல்பாடுகளையும் நேரில் கண்டு தெரிந்துகொள்ள உள்ளனர்.

இவ்வாறு கல்விச்செலவாக வரும் தமிழாசிரியர்களைப் புதுச்சேரியில் வரவேற்று வாழ்த்துரைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியுள்ளது.

முனைவர்மு.முத்து(தலைவர்,பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் புதுச்சேரி அரசின் மேனாள் கல்வி அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளார்.கடலூர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.ஈகி திரு.அப்துல் மசீது அவர்கள் நன்றியுரை வழங்க உள்ளார்.இலங்கைத் தமிழாசிரியர்களை நான் வரவேற்று, உரையாற்றுகிறேன்.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

பன்முகத் தமிழ் ஆய்வறிஞர் ஈழத்துப்பூராடனார்(13.12.1928)


ஈழத்துப்பூராடனார்(க.தா.செல்வராசகோபால்)

தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை.சங்க நூல்கள்(இலக்கியம்,இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள்,காப்பியங்கள்,சிற்றிலக்கியங்கள்,உரையாளர்களின் உரைகள்,அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள்,மொழிபெயர்ப்பு நூல்கள்,கலைக்களஞ்சிய நூல்கள்,படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.

சிலர் சொல்லாராய்ச்சித் துறையில் மட்டும் ஈடுபட்டுத் தம் பேரறிவு கொண்டு உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.சிலர் இலக்கண நூல்களை மட்டும் நுண்ணிதின் ஆய்ந்து அறிஞர்களாக விளங்குவார்கள்.சிலர் பக்திப் பனுவல்களில் ஈடுபட்டு மெய்யுணர்ந்து மேன்மை பெறுவது உண்டு.சிலர் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகத் தமிழுக்கு ஆக்கம் தேடியிருப்பார்கள்.சிலர் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை அறிவதில் தம் வாழ்நாள் ஆய்வைச் செலவிட்டிருப்பார்கள்.சுருங்கச்சொன்னால் சிலர் இயலிலும்,சிலர் இசையிலும்,சிலர் நாடகத்திலும்.இன்னும் சிலர் இப்பகுப்பில் அடங்காத பிற துறைகளிலும் தம் கால் பதித்து அறிஞர்களால் பாராட்டப்படுவது உண்டு.

மேற்குறித்த பல துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்து இன்னும் முற்றாகத் தமிழகத்தாரால் அறியப்படாமல் இருக்கும் அறிஞர்களுள் இலங்கையில் பிறந்து இன்று கனடாவில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(பிறப்பு 13.12.1928) அவர்களின் படைப்புகளை யான் பதினேழாண்டுகளாக நன்கு அறிவேன். எண்பத்திரண்டு அகவையிலும் அடக்கமும் அமைதியும் கொண்டு தமிழுக்கு உழைப்பதைத் தம் கடமையாகக் கொண்டு இவர் இயங்குகிறார்.பதிப்புத்துறையில் இவருக்கு மிகப்பெரிய பட்டறிவு உண்டு என்பதாலும்,தாமே அச்சுக்கூடம் வைத்திருப்பதாலும் தமிழுக்கு ஆக்கமான நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்.தம் நூல்களைத் தமிழ் வழங்கும் உலகப் பல்கலைக்கழகம் சிலவற்றிற்கு அன்பளிப்பாக வழங்குவதைக் கடமையாகக்கொண்டவர்.கனடாவில் இவர்களின் அச்சகம் சிறப்புடன் செயல்படுகிறது.நூல்களும்,இதழ்களும் குறிப்பிடத்தகும் தரத்துடன் வெளிவருகின்றன்றன.

ஈழத்துப்பூராடனாரின் படைப்புகள் கண்டு உலகமே வியக்கும்படியாக இவர் தம் தமிழ்ப்படைப்புகள் உள்ளன.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாவுக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப்பூராடனாரின் இயற்பெயர் க.தா.செல்வராசகோபால் என்பதாகும். தமிழ், ஆங்கிலம்,சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர்.இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு(1983 அளவில்) இவர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர்.

ஈழத்துப்பூராடனாரின் நூல்கள் பலவும் பலவகையில் தொகுத்தும் வகுத்தும் ஆராயத்தக்க பெருமைக்கு உரியன.ஒவ்வொரு படைப்புகளும் துறைவாரியாகவும் ஒட்டுமொத்தமாகவும் ஆய்வு செய்வதற்குரியன. இவரின் சிறப்பு காட்ட ஓரிரு நூல்களை இங்கு அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.முன்பே இவர் பற்றி எழுதியுள்ளேன்.

அண்மையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியரும் உலகின் மிகச்சிறந்த அகராதியியல் அறிஞருமாகிய வ.செயதேவன் அவர்கள் அறிஞர் ஈழத்துப்பூராடனாரின் நீரரர் நிகண்டு என்னும் அரிய நூல் பற்றிய வியந்து விரிவாக உரையாற்றினார்.இருபதாம் நூற்றாண்டு நிகண்டு நூல்களுள் நீரரர் நிகண்டுக்கு ஒரு சிறந்த இடம் உண்டு என்பது வ.செயதேவனாரின் புகழ்மொழியாகும்.அத்தகு நிகண்டு நூல் இருபதாம் நூற்றாண்டில் படைத்த பெருமைக்கு உரியவர் நம் ஈழத்துப்பூராடனார்.நிகண்டு நூல் படித்தவரிடம் வெகுண்டு பேசக்கூடாது என்பார்கள்.படைத்தவரைப் பற்றி என்னென்பது?


ஈழத்துப்பூராடனார் செய்யுள் நடையில் இந்த நிகண்டு நூலைப் படைக்க அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார்.மட்டக்களப்பில் பயிலப்பட்டுவரும் சொற்கள் மற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குப் புதியதாக இருப்பதுடன் மட்டக்களப்பில் இருப்பவர்களுக்கே பல தடுமாற்றங்களை உண்டு பண்ணுவதை உணர்ந்து ஆசிரியர் இந்த நூலை இயற்றியுள்ளார்.ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,

1.உயர்திணைப் பெயர் மஞ்சரி(11 செய்யுள்)
2.அஃறிணைப் பெயர் மஞ்சரி(12 செய்யுள்கள்)
3.தொழிற்பெயர் மஞ்சரி(26 செய்யுள்கள்)
4.இடப்பெயர் மஞ்சரி(9 செய்யுள்கள்)
5.கலாசாரச் சொல் மஞ்சரி(23 செய்யுள்)

என ஐந்து வகையாகப் பகுத்துத் தமிழுக்கு அணிசெய்யும் அழகிய நூலைத் தந்துள்ள இவர் பணியை எவ்வளவு போற்றினாலும் தகும்.வழக்கில் பொருள் விளங்காத சொற்களை நிலைப்படுத்தி விளக்கம் தந்துள்ளமை போற்றுதலுக்கு உரிய ஒரு செயலாகும். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன.1984 இல் முதல்பதிப்பும்(48 பக்கம்),இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தது.மட்டக்களப்பிற்கு மாட்சி தரும் பாடும் மீன் என்னும் நீரரர் மகளிரின் பெயரில் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புச் சொல்வெட்டு என்னும் நூலில் அறிஞர் ஈழத்துப்பூராடனார் மட்டக்களப்பில் வழங்கும் சொற்கள் சில சங்க நூல்களில் வழங்குவதைச் சிறப்பாக ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.அவ்வகையில் கிளை,கல்லை வைத்தல்,தூளியில் வைத்தல், முல்லைக்காரன், குடிதை,கடுக்கன், வண்ணக்கர், கட்டாடி,கட்டாடியார்,பரிகாரி-பரிகாரியாள்,கலத்திற் போடல்,கால் மாறுதல்,பரத்தை என்னும் பன்னிரு சொற்களும் மட்டக்களப்புப் பகுதியில் எவ்வாறு வழக்கில் இருக்கின்றன என்று ஆராய்ந்துள்ளார்.

"இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி" என்னும் ஈழத்துப்பூராடனாரின் மற்றொரு சொல்லாய்வுக்கு உரிய நூலும் குறிப்பிடத் தகுந்ததே ஆகும்.மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்த அரிய சொற்களைத் தொகுத்து வழங்கியுள்ள பணியை இன்றைய இலங்கை மக்களின் இடப்பெயர்வுச்சூழலில் எண்ணிப்பார்க்கும்பொழுது ஒரு மிகப்பெரிய வரலாற்று அழிவிலிருந்து தமிழ்ச்சொற்களை மீட்ட பெருமைக்கு உரியவராக அறிஞர் ஈழத்துப்பூராடனார் நமக்கு விளங்குகிறார்.1984 இல் வெளிவந்த 60 பக்க நூலாக இது விளங்குகிறது.பாழடைந்த மண்டபங்கள் போலும் பெருநோயினுக்கு ஆட்பட்ட ஊர்போலும் ஆள்அரவமற்றுக் காட்சி தரும் இன்றைய இலங்கையில் தமிழர் வரலாறு துடைத்தழிக்கப்படுவதற்கு முன் இத்தகு நூல் வெளிவந்துள்ளமை வரலாற்றில் நினைக்கத் தகுந்த ஒன்றாகும்.

இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள்,பழக்க வழக்கம் பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார்.மட்டக்களப்பின் மகிழ்வுப்புதையல்கள், கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள்,வயல் இலக்கியம்,ஊஞ்சல் இலக்கியம்,வசந்தன்கூத்து ஒரு நோக்கு,மட்டக்களப்பு மாநில உபகதைகள் போன்ற நூல்கள் இவரின் நாட்டுப்புறவியல் துறைக்குரிய பங்களிப்பாக விளங்குகின்றன.

நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். அவற்றுள் கூத்தர் வெண்பா,கூத்தர் விருத்தம்,கூத்தர் குறள்,கூத்தர் அகவல்,மட்டக்களப்பு மாநில இருபாங்குக் கூத்துகளை விளக்கும் வகையில் இவர் தந்துள்ள கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு,கூத்துக்கலைத் திரவியம்,வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும்,கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன், தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும்,கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை,இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும், மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை என்னும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பனவாகும்.

மொழி பெயர்ப்பு வகையில் நம் ஈழத்துப் பூராடானார் அவர்கள் தம் பன்மொழி அறிவுகொண்டு பல நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார். கிரேக்க நாட்டின் ஆதி கவிஞரான ஓமரின் இலியட்,ஒடிசி காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார்.மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.இதுவரை கிரேக்க நூல்கள் தமிழுக்கு அறிமுகம் இல்லாத சூழலில் நம் ஈழத்துப்பூராடனாரின் பணிகள் போற்றத் தகுந்தன.

இலங்கையில் பிறந்து கல்விப் பணியாற்றி ஓய்வாக வாழ்க்கை வாழ வேண்டிய சூழலில் இனப்போராட்டம் காரணமாக இடம்பெயர்ந்தாலும் தம் தமிழாய்வுக்கு விடை தராத ஈழத்துப்பூராடனாரின் கிரேக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் இங்குத் தனித்துச் சுட்டத்தக்கன.

ஈழத்துப்பூராடனாரின் கிரேக்க காவிய மொழிபெயர்ப்பு

அறிஞர் ஈழத்துப்பூராடனார் கிரேக்கமொழியில் ஓமர் எழுதிய ஒடிசி,இலியட்டு காவியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை போற்றத்தகுந்த பணியாகும்.கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதை மூலமாகக் கொண்டு நம் ஈழத்துப்பூராடனார் தமிழில் செய்யுளில் தந்துள்ளார்.தமிழ்போல் உயரிய மொழியான கிரேக்க மொழி பாவியங்கள் அந்தமொழியின் இலக்கியச் செழுமையை உணர்த்துவதுடன் கிரேக்க மக்களின் கடல் பயண அறிவு,இசையறிவு,நாடக அறிவு என யாவற்றையும் காட்டும் ஆவணமாக உள்ளது.

2089(8355 பாடலடிகள்) செய்யுள் விருத்தங்களால் அமைந்தது ஈழத்துப்பூராடனாரின் ஒடிசி மொழிபயர்ப்பு நூலாகும்.ஈழத்துப் பூராடனார் தம் ஒடிசி மொழிபெயர்ப்பு பற்றி பின்வரும் சில குறிப்புகளைத் தம் நூலுள் வழங்கியுள்ளார்.

"1.இதனை நான் செய்யுள் விருத்தங்களாலேயே செய்துள்ளேன்.ஆனால் சொல்லப்படும் பொருட்களுக்கு ஏற்பப் பகுத்தபோது செய்யுள்களின் வரிகளின் தொடர்புக்காக இடைக்கிடையே விருத்தங்களின் அடிகள் பிரிந்துள்ளன....

2.ஹோமர் இதனை நாடக வடிவில் அமைத்தார்.நாடகத் தமிழிற்கு இம்முறை ஒத்துவரவில்லை.ஆதலால் இந்த விதிக்குச் சற்று விலகியுள்ளேன்.

3.கருத்துகளையுங் கற்பனைகளையும் அப்படியே எடுத்துக் கையாண்டுள்ளேன்.அதைவிட ஆங்காங்கு எனது சொந்தக் கற்பனைகளைத் தமிழ் மரபுக்கு ஏற்பப் புகுத்தியுள்ளேன்.

4.அநேகமான கிரேக்கப் பெயர்களைத் தவிர்த்து முக்கியமான பாத்திரங்களின் பெயரை மாத்திரம் எடுத்தாண்டுள்ளேன்...

11.இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல.ஒரு தமிழாக்கம்.எனவே இவ்வாக்கத்தில் வரிக்கு வரி சமதையான சொல்லாட்சி இல்லாவிட்டாலும் கருத்தாட்சிக்கரைவு இல்லாத கட்டுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளது.

12.கிரேக்கப் பெயர்களைக் கதைத் தொடர்புக்காக ஆங்காங்கு கையாண்டுள்ளோம்.ஏனைய இடங்களில் மன்னன்,இளவரசன்,இராணி என்ற பொதுப் பெயரிட்டே வழங்கப்பட்டுள்ளது.மாறுவேடத்தில் ஞானத் தேவதையோ அல்லது பிறரோ வருமிடங்களில் அவர்களின் பாற்பெயர் கொண்டே குறிப்பிடப்பட்டுள்ளது." பக்கம்13,14)

ஓடிசு என்னும் வீரனைப் புகழ்ந்து பாட தெமட்டகொல் என்ற பாடகன் அழைக்கப்படான்.அவன் ஆமையோட்டுடன் எருமைக் கொம்பை இணைத்து அமைத்த பனிரெண்டு நரம்புள்ள வாத்தியக் கருவியை மீட்டி கவிபுனைந்து பாடினான் என்னும் குறிப்பைப் படிக்கும்பொழுது நமக்குப் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் இயல்பாக நினைவுக்கு வருகின்றன.சிலம்பின் கானல்வரியும் கண்முன் நிற்கின்றது.

"போரிடு எருதின் கொம்பிற் பொன்னிற ஆமையோட்டு
தாரிய குடமுந் தண்டும் தகைபெறு நரம்புஞ் சேர்ந்த
சீரிய யாழின் ஓசை செகமெலாம் பரவுமாறு
பாரினில் ஓடி சென்னும் பலவான் திறாயின் போரில்
ஆற்றிய தீரமெல்லாம் அசைமிகு சொல்லென் வண்ணந்
தீற்றிய சித்திர மாகத் தெளிவுற வரைந்து காட்ட
காற்றெனும் பெண்ணா ளஃதை க் காதெனும் கிண்ணத் தூற்ற
மாற்றெதுஞ் செய்யா ராகி மக்கள் மகிழுவுற் றாரே"(ஒடிசி,பக்கம் 132)

என்று தமிழாக்கம் என்று கூற முடியாதபடி இயல்பான தமிழ் நடையில் வரைந்துள்ள பாங்கு எண்ணி மகிழ வேண்டியுள்ளது.

ஒடிசி காப்பியம் கிரேக்க மக்களின் வாய்மொழிக்கதைகளைக் கேட்டு ஓமரால் கி.மு.4ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கின்றன.சாவாத பாடல்களைத் தந்த தமிழ்ப்புலவர்களின் தெளிவான வரலாறுகள் கிடைக்காமல் போனதுபோல் ஓமரின் வரலாறும் நமக்குத் தெளிவாகக் கிடைக்க வில்லை.இதனையெல்லாம் அறிஞர் ஈழத்துப் பூராடனார் தம் படைப்பில் குறித்துக்காட்டியுள்ளார்.
கிரேக்க நாட்டுக் காப்பியமாதலின் அதனை விளங்கிக்கொள்ள நமக்கு உதவியாக ஈழத்துப்பூராடனார் பலவகையான படங்கள்,ஓவியங்கள்,முன்னுரைகள்,குறிப்புகள்,விளக்கங்கள்,கப்பல் அமைப்பு,கப்பல் பயணத்தைக் குறிக்கும் வரைபடம்,கதைச்சுருக்கம் யாவற்றையும் வழங்கிப் படிக்க விரும்புபவர்களைப் படைப்புடன் நெருங்கி உறவாட வைக்கின்றார்.

ஈழத்துப்பூரடானார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.11100 பாடல்வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுளது.கிரேக்கமொழி,ஓமரின் காப்பியங்கள் பற்றி ஈழத்துப் பூராடனார் பின்வரும் குறிப்புகளைத் தந்துள்ளார்.

"கிரேக்க மொழி தமிழைப் போன்று செம்மொழி இலக்கியம் படைத்த ஒரு பண்டைய மொழி.இதில் உள்ள மகாகாவியங்களில் ஹோமர் மகாகவியின் ஒடிஸ்சியும் இலியட்டும் மிகவும் பழமையுஞ் சிறப்பும் வாய்ந்தவை. இதன் கிளைக் கதைகளாகவே ஆதிக் கிரேக்கத்தின் பிந்திய இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவை அநேகமாக நாடக வடிவிலேயே அமைந்துள்ளன.கப்பற் பயணங்களிற் தேர்ந்தவராய் கிரேக்கர் முதலிடம் வகுத்ததுபோல் நாடக அரங்குகளை அமைப்பதிலும் நடத்துவதிலும் அவர்கள் தலையா சிறப்புற்றிருந்தனர்.எனவே நாடக இலக்கியங்கள் அங்கு நிலைபெற்று வளரலாயிற்று"(இலியட் பக்கம் 8)

இலியட் காப்பியம் பற்றி ஈழத்துப் பூராடனார் முன்னுரையில்

"இலியட் ஒரு முழுப் போர்க்காவியம்.அகியர்கள் அல்லது ஆர்க்கோசர் என அழைக்கப்படும் கிரேக்க நாட்டவர்களுக்கும் இலியர்கள் அல்லது திறஜானர் எனப்படும் திறாயர்களுக்கும் இடையில் தொடர்ந்து பத்து வருட காலமாக நிகழ்ந்து ஒரு போரின் வரலாற்றை இலியட் காவியம் எடுத்துக் கூறுகின்றது.இலியட் நாட்டில் நடந்த போராதலால் இலியட் எனும் பெயரை இக்காவியம் பெற்றது"என்று நூலின் பெயர்க்காரணத்தை ஆசிரியர் விளக்குகிறார்(இலியட்,பக்கம் lviii)

இலியட் காப்பியத்தின் கதையில் இடம்பெறும் பல கிளைக்கதைகள்தான் பினபு எழுந்த கிரைக்க நாடகங்களுக்கு உதவியாக இருந்தன.

ஒவ்வொரு காவியத்திற்கும் அடிப்படையாக ஒரு பெண் இருப்பதுபோல்(இராமயணத்தில் சீதை இருப்பது போல்) இலியட் காவியத்தில் ஹெலன் என்னும் பெண் காரணமாக இருக்கின்றாள்.இவள் கிரேக்க நாட்டை அண்டுவந்த வீரன் அகாமெமேனோன் தம்பியின் மனைவி.அங்கு விருந்தாளியாக வந்திருந்த இலிய நாட்டு இளவரசன் அவளை மயக்கிக் கவர்ந்து செல்கிறான்.இது ஒரு கௌரவப் பிரச்சினையாகி விடுகின்றது. இதனால் அவளை மீட்டு வருவதற்காகக் கிரேக்கர்கள் படை எடுத்துச் சென்று போர் செய்கின்றார்கள்.

"இருபத்தினாலு அங்கங்கள் உள்ளதாகப் பத்து வருடங்கள் நடைபெற்ற இப்போர் நிகழ்வுகளைக் ஹோமர் செய்யுள் நடையில் எடுத்துக்கூறியுள்ளார்."பண்டைகாலத்தில் எழுதப்பட்ட நம் புறநானூறு தனித்தனியான போர்க்களக்காட்சிகளை விளக்குவதுபோல் பத்தாண்டுகள் நடைபெற்ற கிரேக்க போர் குறித்து எழுந்த கிரேக்க இலக்கியமும்,சங்கச்செவ்வியல் இலக்கியங்களும் காலத்தால் ஒரே பொருண்மையில் படைக்கப்பட்டுள்ளதை இங்கு இணைத்து எண்ணிப்பார்க்கவேண்டும்.

பண்டைக்காலத்தில் கூத்தும் நாடகமும் செழித்திருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.99 வகையான கூத்துகளை எடுத்துக்காட்டும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியாக்குநல்லார் தமிழகத்தின் செழித்த கூத்து மரபுகளை நமக்கு நினைவூட்டியுள்ளது போல் கிரேக்கர்களின் நாடக,இசையறிவு யாவும் கிரேக்கமொழியில் இருந்துள்ளதை ஈழத்துப் பூராடனார் தமிழுக்கு வழங்கியுள்ள தமிழாக்கத்தின் வழியாக அறியமுடிகிறது.

அண்மைக்காலமாக ஈழத்துப்பூராடனார் ஐங்குறுநூற்று அரங்கம்,சூளாமணித் தெளிவு,கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம்,நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம்,சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்,பெருங்கதை ஆய்வுநோக்கு, உள்ளிட்ட நூல்கள் பற்றிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ்நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக(2070 பக்கங்களில்) உருவாக்கியுள்ளார்.தமிழ்மொழியின் தோற்றம்,அதன் சிறப்பு உணர்த்தும் நூலாக இது உள்ளது.

இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும்,உலகளவில் தமிழ்ப்பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார்.

தமிழ் கணிப்பொறித்துறையில் இவர் குடும்பத்தார் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர்.இவர்கள் வெளியிட்ட பெத்லகேம் கலம்பகம் என்ற நூலே தமிழில் கணிப்பொறியில் அச்சான முதல்நூலாக விளங்குகிறது.

ஈழத்துப்ப்பூராடனார் தமிழ்த் திரைப்படக்களஞ்சியம் அறுபது தொகுதிகளாக உருவாக்கியுள்ளார்.

ஈழத்து தமிழறிஞர்கள் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் மிகச்சிறந்த நூல்களைத் தந்துள்ள மூத்த தமிழறிஞரான ஈழத்துப்பூராடனார் போன்ற அயல்நாட்டில் வாழும் தமிழறிஞர்களை வரும் செம்மொழி மாநாட்டில் சிறப்பிப்பதன் வழியாக அவர்களின் வாழ்நாள் பணியைப் போற்றிய சிறப்பை நாம் பெறுவோம்.

இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்ப்பணியாற்றிவரும் ஈழத்துப்பூராடனாரைப் போற்றுவோம்!அவர் நெஞ்சம் நிறைந்த வாழ்த்தினைப் பெறுவோம்!!


ஈழத்துப்பூராடனார்


ஈழத்துப்பூராடனார் தம் நூலகத்தில்


ஈழத்துப்பூராடனாரின் இன்னொரு தோற்றம்


ஈழத்துப்பூராடனார் தம் நூலகத்தில்

புதன், 10 பிப்ரவரி, 2010

புதுச்சேரி அகழாய்வில் இரண்டு தாழிகள், ஓர் ஈமப்பேழை


தாழியின் தோற்றம்

புதுச்சேரி அரியங்குப்பம் அடுத்த மணவெளிப் பகுதியில் கடந்த ஞாயிறு(31.01.2010) வீட்டுக்குக் கடைக்கால் தோண்டியபொழுது முதுமக்கள் தாழி கிடைத்தது.இதனால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர்களின் அகழாய்வுப் பணிக்குக் காத்திருந்தனர். தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர்களும் புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் மணவெளிப் பகுதியில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு புதைபொருளாகக் கிடைத்துள்ள தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று அறிவித்தனர்.இக்கால கட்டத்தில் அருகில் உள்ள அரிக்கமேடு மிகச்சிறந்த வணிகத் தளமாகவும்,நாகரிக மாந்தர்களின் வசிப்பிடமாகவும் விளங்கியதை முன்பே ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இப்பொழுது மணவெளி சுடலை வீதியில் கிடைத்துள்ள அகழாய்வுப்பொருள்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் பரந்துபட்ட மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கும்,புதைக்கும் பழக்கம்,எரிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கும் இத்தாழிகளும் ஈமப்பேழைகளும் சான்றாக விளங்குகின்றன.

வீட்டுக்குக் கடைக்கால் தோண்டும்பொழுது ஒரு முதுமக்கள் தாழியும் சில சிறிய வடிவக்குவளைகளும், சிறு குடங்களும் கிடைத்தன.முன்பே இவை பற்றிப் படத்துடன் எழுதியுள்ளேன்.அருகில் பெரிய தாழி இருந்ததால் அதனை அப்படியே வைத்துவிட்டனர்.

நேற்று அகழாய்வுக்குத் தொல்பொருள்துறை சார்ந்த ஆய்வாளர்களும் புதுவைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் வந்து 4 மீட்டர் X 4 மீட்டர் அகழாய்வுக்குழி தோண்டிப் பெரிய அளவில் இருந்த தாழியை வெளிப்படுத்தினர்.அந்தத் தாழி அருகில் ஈமப் பேழை ஒன்றும் இருந்து கண்டெடுத்துள்ளனர்.இந்த ஈமப்பேழையின் அடிப்பகுதியில் எட்டுக்கால்கள் உள்ளன.இந்தக் கால்கல்தான் பேழையைத் தாங்கிக்கொண்டு இருந்தன.இப்பேழையின் உள்ளே சிதைந்த எலும்புத் துண்டுகள் இருந்துள்ளன.இந்தப் பகுதியில் உள்ள மண் மணலாக இருந்ததால் எந்த நாளும் ஈரப்பதமாக இருந்து எலும்புகளும் மற்ற பொருள்களும் சிதைந்துவிட்டன.

பெரிய தாழியின் உள்ளே இரண்டு சிறிய மண்குடம்,ஒரு குவளை(டம்பளர் போன்றது)இருந்தன. ஈமப்பேழையின் அருகில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு குடம் இருந்தது.எலும்புத்துண்டுகள் பெரிய தாழியிலும் சிறிய அளவில் இருந்தன.

இறந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சடங்குகளை நினைவூட்டும் வண்ணம் இத்தாழிகளும்,ஈமப்பேழைகளும், குடங்களும்,குவளைகளும் உள்ளன.புதுச்சேரியின் அருகில் உள்ள அரிக்கமேடு பழங்காலத்தில் பரந்துபட்ட நகரகாக இருந்துள்ளது.அதன் ஒரு பகுதியாக இந்த இடுகாட்டுப் பகுதிகள் இருந்திருக்கலாம். பேராசிரியர் இராசன் அவர்களிடம் பேசியபொழுது புதுச்சேரியின் பழைமையை மெய்ப்பிக்க இது அரிய சான்றாகும் என்றார்.

தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த துணைக்கண்காணிப்பாளர் மோகன்தாசுஅவர்களும், பிரசன்னா, இரமேசு,பெருமாள் உள்ளிட்ட ஆய்வாளர்களும் இந்த அகழாய்வுப்பணியில் ஈடுப்பட்டனர்.ஆய்வு மாணவர் பெருமாள் அவர்கள் பொருள்களின் இருப்பிடம் குறித்து வரைந்து வைத்திருந்த சிறு குறிப்பையும் அவர் இசைவுடனும் நன்றியுடனும் இங்கு அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில் பதிகிறேன்.

அகழாய்வுப் பொருட்கள் புதுச்சேரி காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நானும் புலவர் விசயரங்கன் திருவேங்கடம் அவர்களும் சென்று அகழாய்வுக்குழிகளைப் பார்வையிட்டுச், செய்திகளைத் திரட்டிப்,படம்பிடித்து வந்தோம்.


பெரிய தாழியும்,ஈமப்பேழையும் கிடைத்த பகுதி


தாழியின் மற்றொரு தோற்றம்


ஈமப்பேழையின் ஒடிந்த கால் பகுதிகள்


கூம்பு வடிவமாக ஈமப்பேழையின் கால்


ஈமப்பேழையின் சிதைவு


ஆய்வாளர் பெருமாள் அவர்களின் குறிப்பு


சிதைந்த நிலையில் அகழாய்வுப்பொருட்கள்


தாழியின் தோற்றம்


உடைந்த நிலையில் ஒரு குடம்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள்...


மொழிஞாயிறு பாவாணர் அவர்கள்

மொழிஞாயிறு எனவும் மொழிநூற் கதிரவன் எனவும் போற்றப்படும் தேவநேயப்பாவாணர் அவர்கள் 07.02.1902 இல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலில் பிறந்தவர்.இவர்தம் பெற்றோர் ஞானமுத்து,பரிபூரணம் அம்மையார்.தொடக்கக் கல்வியைக் கிறித்தவப் பள்ளிகளில் பயின்ற பாவாணர் அவர்கள் இளம் அகவையில் முகவை மாவட்டம் திருவில்லிப்புத்தூர் வட்டம் சீயோன் மலையிலுள்ள சீயோன்நடுநிலைப்பள்ளியில் முதற்படிவ ஆசிரியப்பணியில் சேர்ந்தார்(1919-21).அதன் பிறகு பல பள்ளிகளில் பணிபுரிந்தும், மதுரைத்தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றும்(1924) பல அரிய தமிழாய்வு நூல்களை வெளியிட்டும் அனைவராலும் மதிக்கப்பட்டும் சிறப்பெய்தினார்.

1940 இல் இவர் எழுதிய ஒப்பியன்மொழிநூல் இவரின் மிகப்பெரும் ஆய்வுகளுக்கு அடிப்படை நூலானது.தமிழ் உலகில் தோன்றிய முதல்மொழி எனவும்,தமிழர்களே முதலில் தோன்றிய நாகரிக மாந்தர்கள் எனவும் மாந்தன் முதலில் தோன்றியது கடலுள் மூழ்கிய குமரிக்கண்டத்தில் எனவும் குறிப்பிட்டார்.இந்த முடிவை நிலைநாட்டுவதில் தம் வாழ்நாளின் பெரும் பங்கைச் செலவிட்டார்.இவர்தம் ஆய்வுமுடிவுகள் உண்மை என்பதை அண்மையில் கிடைத்துவரும் பல்வேறு அகழாய்வு,புதைபொருள், கடலாய்வுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.இவர் வழியில் வேர்ச்சொல்லாய்வு தமிழில் ஒரு தனித்துறையாக வளர்ந்துவருகிறது.

ஆரியச் சார்பான ஆய்வாளர்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் செல்வாக்குடன் விளங்கிய காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பாவாணர் தம் ஆய்வுகளைச் செய்தார்.வறுமையில் வாடினாலும் மான உணர்வுடன் செயல்பட்டவர்.செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலிகளாகப் பல தொகுதிகளை வெளியிட நினைத்து உழைத்தவர்.இசையிலும்,இயலிலும் நல்ல புலமையுடையவர்.பன்மொழி அறிவு நிரம்பப்பெற்றவர்.வடமொழி வரலாறு எழுதிய பெருமைக்குரியவர்.வடமொழி கலந்து கிடந்த மணிப்பவளத் தமிழைத் தனித்தமிழாக்கிய பெருமை பாவாணருக்கு உண்டு.அதனால்தான் மறைமலையடிகள்,பெரியார் உள்ளிட்ட அனைவராலும் போற்றப்பட்டவர்.

மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்பொழுது இவர் மாரடைப்பால் இயற்கை எய்தினார்
(15.01.1981). இவரின் தனித்தமிழ்க்கொள்கை தமிழகம் கடந்து உலக நாடுகளில் எல்லாம் இன்று பரவி நிற்கிறது.

வாழ்க பாவாணர் புகழ்!வளர்க அவர்தம் தனித்தமிழ் நெறி!

தமிழ் விக்கியில் பாவாணர் பற்றி...

சனி, 6 பிப்ரவரி, 2010

தங்கப்பா மொழிபெயர்ப்பில் சங்கப்பாடல்கள் LOVE STANDS ALONE என்ற பெயரில்...

பேராசிரியர் தங்கப்பா அவர்கள் சங்கப்பாடல்களை அதன் தரம் குறையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் என்பதை அறிஞர் உலகம் குறிப்பிடுவது உண்டு.அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின்(168 பாடல்கள்) ஆங்கில மொழிபெயர்ப்புப் புகழ்பெற்ற புது தில்லி - பெங்குவின் நிறுவனத்தின்(Penguin Books India) வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

அட்டைக்கட்டு(Hrd Cover) நூல், (பக்கங்கள் 250) விலை உருவா 399.00
நூல் மிகவும் அழகாக வெளிவந்துள்ளது.

இந்த நூலின் அறிமுகக்கூட்டம் புதுச்சேரியில் 27.02.2010 வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்

நூல் அறிமுகக்கூட்டம்

நாள் 27.02.2010 காரிக்(சனி)கிழமை
நேரம் மாலை 6 மணி
இடம்: வேல்.சொக்கநாதன் திருமண நிலையம்,புதுச்சேரி.

வரவேற்புரை: த.செங்கதிர்

தலைமை: பேராசிரியர் க.பஞ்சாங்கம்

கருத்துரை:
பேராசிரியர் ப.மருதநாயகம்
முனைவர் பு.இராசா(Dr.P.Raja)

மகிழ்வுரை: பாவலர் இரா.மீனாட்சி

பதிப்பாசிரியர் உரை முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி

நன்றியுரை ம.இலெ.தங்கப்பா

அழைத்து மகிழ்வோர்
வானகப் பதிப்பகம்

தொடர்புக்கு:
வானகப் பதிப்பகம்
7,11 ஆம் குறுக்கு,ஔவை நகர்,புதுச்சேரி -605 008,இந்தியா
பேசி + 91 413 2252843

இந்த நூல்Higginbothams,Odyssey,Landmark,Vak,Focus போன்ற பெருங்கடைகளில் கிடைக்கும்

புதன், 3 பிப்ரவரி, 2010

புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு சார்ந்தவை...


எலும்புத்துண்டுகள் உள்ள தாழி

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.

சென்னைத் தொல்பொருள் துறையின் துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ் முளிமணி தலைமையில் ஒரு குழுவினர் இப் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். அவர் கூறுகையில், இப்போது கிடைத்துள்ள ஒரு முதுமக்கள் தாழி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தாழி தோண்டிய இடத்தில் இருக்கிறது. விரைவில் அப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய உள்ளோம். அதன் பிறகு இந்தத் தாழிகள் புதுச்சேரி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கே.ராஜன் கூறுகையில், தொடக்க வரலாற்று காலமான கி.மு. 3, 4-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களின் ஈமச்சின்னங்களாக இந்த முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் முதுமக்கள் தாழி பெரிதும் பேசப்படுகின்றன. இப்போது இங்கு வெளியில் எடுத்துள்ள ஒரு தாழியில் ஈம எச்சங்கள் அதாவது எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. கருப்பு-சிவப்பு மண் பானையாக இது இருக்கிறது. அப் பகுதியில் அகழ்வாராய்ச்சி விரைவில் செய்ய உள்ளோம். தென்னிந்தியாவில் இது போன்ற சின்னங்கள் கிடைப்பது மக்களின் பழங்காலப் பண்பாட்டைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன. நீத்தோருக்கு அமைக்கப்படும் ஈமச் சின்னம் இது என்றார்.

தமிழர்களின் பண்பாட்டை அறிவதற்கு இந்த முதுமக்கள் தாழிகள் உதவும்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

புதுச்சேரியில் முதுமக்கள் தாழி...


நிலத்தில் வெளிப்பட்டு நிற்கும் முதுமக்கள் தாழி
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அகழாய்வுப் பொருட்கள்

  புதுச்சேரியின் அரிக்கமேடு என்னும் பகுதி வரலாற்று முதன்மை வாய்ந்த பகுதியாகும். புதுவையின் எழிலார்ந்த கடற்கரை ஒட்டி அமைந்துள்ள அரிக்கமேடு பற்றி முன்பே எழுதியுள்ளேன். என் பிறந்த ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் - அரியாங்குப்பம் ஆற்றைக் கடக்கும் பொழுதெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பார்ப்பது என் வழக்கம்.

 நேற்று (31.01.2010) என் பிறந்த ஊர் சென்று பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது இரவு 9மணியளவில் அரியாங்குப்பம் பகுதியில் கடையில் தொங்கிய ஒரு செய்தித்தாளில் அரியாங்குப்பத்தில் தங்கப் புதையலா? என்று ஒரு செய்தி கண்டு மகிழ்ச்சியடைந்தேன். புதுவை வீடு திரும்பியதும் உடனடியாகச் செய்தியை இணையத்தின் வழியாக உறுதிப்படுத்திக்கொண்டேன்.

 பழைய வரலாற்றுச் செய்திகளை அறிவதில் ஆர்வம்கொண்ட நான் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருள்களையும் இடத்தையும் பார்வையிட நினைத்தேன். பேராசிரியர் நண்பர் ஒருவருடன் புதைபொருள் அகழ்ந்த இடத்தைப் பார்வையிடச் சென்றேன் (01.02.2010). புதுச்சேரியின் தென்பகுதியில் உள்ள அரியாங்குப்பத்திலிருந்து இரண்டு கல் தொலைவு அடுத்து மணவெளி ஊர். அங்குச் சுடுகாட்டு வீதியில் ஐந்தாம் குறுக்குப் பகுதியில் திரு.சீனிவாசன் என்பவரின் வீட்டுமனை உள்ளது.

  வீடு கட்டுவதற்காகக் கடைக்கால் இடுவதற்குக் குழிதோண்டியுள்ளனர். ஆறு பணியாளர்கள் பணிபுரிந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டுவதற்கு அடையளம் செய்தனர். அதில் ஒரு குழியை அகழும்பொழுது பானை ஒன்று கிடைத்துள்ளது. சாதாரண ஓடு என நினைத்தவர்களுக்குப் பானையின் முழுவடிவம் கண்டு வியப்பு மேலிட்டது. அந்தப் பானையின் உள்ளே சில எலும்புத் துண்டுகளும் இருந்துள்ளன. இரண்டு சிறு டம்பளர் வடிவில் மண்ணால் வனையப்பட்ட பொருளும், இரண்டு சிறு குடங்களும், சட்டியும் வேறு சிறு பொருள்களும் கிடைத்துள்ளன. உடனே அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இடம் பாதுகாப்புக்கு உள்ளாகியுள்ளது.

  முதுமக்கள் தாழி ஒன்று பெரிய அளவில் வெளியே எடுக்கப்படாமல் நிலத்தில் புதைந்த நிலையில் உள்ளது.எஞ்சிய பகுதிகளையும் முழுமையான அகழாய்வுக்கு உட்படுத்தினால் அரிக்கமேட்டின் ஆய்வில் புதிய ஒளி பிறக்கலாம். இன்று சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை பண்டைக் காலத்திலும் சுடுகாடாக விளங்கியிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. முன்பு இந்தப் பகுதிகள் மரங்கள் அடர்ந்த காடுகளாக இருந்துள்ளது என்று மக்கள் சொல்கின்றனர்.

 எழுத்துக்குறியீடுகள் ஏதேனும் இருக்குமோ என்று பார்த்தேன்.ஒன்றும் தென்படவில்லை. அழகிய வேலைப்பாடுகளுடன் பாண்டங்கள் உள்ளன. மீண்டும் இது பற்றி எழுதுவேன்...

(ஆய்வாளர்களுக்குப் பயன்படும் எனக் கூடுதல் படங்கள் இணைத்துள்ளேன்.உரியவர்கள் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளலாம்)


அகழாய்வுக்குழிகள் வேறொரு தோற்றம்


அகழாய்வுப்பொருட்கள்


அகழாய்வுக்குழிகள் அருகில் பொருட்கள்


அகழாய்வுக்குழிகளடங்கிய பகுதி


வீடு கட்ட அடிமனை பறிக்க குழிதோண்டிய பகுதிகள்


தாழியின் இன்னொரு தோற்றம்


பிறந்த குழந்தைபோல் தூய்முயுறாமல் இருக்கும் தாழி


புதைபொருள்கள் எடுக்கப்பெற்ற குழி


காவல்துறையினரின் பாதுகாப்பில் அகழாய்வுக்குழிகள்


எலும்புத்துண்டுகள் அடங்கிய பானை