நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 31 அக்டோபர், 2011

புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக நாயகர் மறைவு


எம்.எசு.ஆறுமுக நாயகர்

புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக நாயகர்(வயது91) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் புதுச்சேரியில் உள்ள அவர் இல்லத்தில் இன்று(31.10.2011) காலை 9 மணிக்கு இயற்கை எய்தினார். எம்.எசு. ஆறுமுகநாயகர் அவர்களின் இறுதி ஊர்வலம் புதுச்சேரி, இலாசுப்பேட்டை முதன்மைச்சாலையில் உள்ள அவர் இல்லத்திலிருந்து 01.11.2011(செவ்வாய்க்கிழமை) காலை ஆறு மணிக்குப் புறப்பட உள்ளது. அவருக்கு முனைவர் ஆ. வெங்கடசுப்பு ராய நாயகர்(பிரஞ்சு பேராசிரியர் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்) என்னும் ஒரு மகன் உள்ளார். தொடர்புக்கு: + 91 9944064656

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

தனித்தமிழ் மறவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்


முனைவர் மு.தமிழ்க்குடிமகன்

 தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழ் இயக்கம் மொழி, இன, நாட்டு உணர்வுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பலவகையில் இவ்வியக்கத்தின் முன்னோடிகளாக இருந்து பலரை இவ்வியக்கத்திற்கு வளர்த்துள்ளனர்.

 கல்வி, அரசியல், குமூகத்தில் பல மாற்றங்களும் ஏற்றங்களும் இந்த இயக்கத்தால் ஏற்பட்டன. தூய தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் இன்றும் பகடி செய்யும் இழிநிலை இருப்பது வருந்துவதற்குரியது. இந்த ஏச்சுகளையும் பேச்சுகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கல்வித் துறையில் செயல்பட்ட பெருமக்களுள் மூவரை இருபதாம் நூற்றாண்டுத் தனித்தமிழ் இயக்கம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

 சாத்தையா என்ற தமிழ்க்குடிமகன், பிச்சை என்ற இளவரசு, சோசப்பு ராசு என்னும் வளன்அரசு என்னும் பெருமக்களே அவர்களாவர். கல்லூரிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பொது மன்றுகளிலும் தூய தமிழில் உரையாற்றிப் பல்லாயிரம் மக்களைத் தூயதமிழில் பேசுவதற்கு ஆயத்தம் செய்தவர்கள் இப்பெருமக்களாவர். இவர்கள் உரையாலும், எழுத்தாலும் உருவாக்கிய தனித்தமிழ் உணர்வு கடல்கடந்த நாடுகளிலும் நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகளில்-நகரங்களில் பரந்து வாழும் தமிழர்களின் தனித்தமிழ் ஆர்வத்தை நினைக்கும்பொழுது தனித்தமிழ் இயக்கம் இன்றும் அதன் பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ளலாம்.

 முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் கல்லூரி மாணவராக இருந்தபொழுதே பாவாணர் நூலில்(ஒப்பியன்மொழிநூல்) ஈடுபாடு கொண்டு விளங்கினார். தம்முடன் பயின்ற பிச்சை என்ற மாணவரும் இளவரசானார்.நாகராசன் அரவரசன் ஆனார். தமிழ்க்குடிமகன் சார்ந்த அவரின் நண்பர்கூட்டம் மெல்ல மெல்லத் தனித்தமிழில் ஈடுபாடுகொண்டு அதற்குரிய பணிகளைத் தமிழகம் எங்கும் செய்தது.

 கல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தபொழுது மேடைப்பேச்சுகளால் மக்களிடம் தனித்தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்திய மு.தமிழ்க்குடிமகன் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தலைவராகப் பணியாற்றிய காரணத்தால் அவரின் கருத்துகள் உடனுக்குடன் உலக அளவில் பரவின. மக்கள் ஆர்வமுடன் அவர் முயற்சியை இனங்கண்டு பாராட்டினர். ஏடுகள் வாழ்த்தியும் தாழ்த்தியும் அவர் கொள்கைகளை மதிப்பிட்டன. யாவற்றுக்கும் அஞ்சாமல் தனி அரிமாவாகத் தனித்தமிழ்க் கொள்கையில் வழுவாமல் கடைசிவரையில் இருந்தார்.

 பின்னாளில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையைத் தமிழக அரசு உருவாக்கியபொழுது அந்த இடத்தில் இருந்தும் ஆக்கமான பணிகளைச் செய்யத் தவறவில்லை. தமிழ்வழிக் கல்வி, திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு, பேருந்துகளில் தமிழில் எண்பலகை வைத்தல், விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம்பெறச்செய்தல் என்று தம் கொள்கையை உரியவகையில் சட்டமியற்றி நடைமுறைப்படுத்த முயன்றார்.

 முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களை 1987 முதல் நூல் வழி அறிவேன். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றபொழுது அவர் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட கல்லூரியில் உரையாற்றுவதை அறிந்து அதனைக் கேட்கச் சென்றேன். அவர் உரை என்னொத்த மாணவர்களின் உள்ளங்களை ஈர்த்தது. அதன் பிறகு பல மாநாடுகள், இயக்க நிகழ்வுகளில் கண்டு உரையாடியுள்ளேன். அவரின் சொல்லும் செயலும் என்னை மிகவும் ஈர்த்தன. அவர்மேல் அளவுகடந்த மதிப்பும் அன்பும் எனக்கு ஏற்பட்டன.

 அரசியல் பரபரப்பு இல்லாமல் இருந்தபொழுது அவரை நன்கு அறியவும் அவருடன் நன்கு பழகவுமான வாய்ப்பு எனக்கு அமைந்தது.

 அப்பொழுது நான் வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் தங்கியிருந்தபொழுது எங்கள் இல்லம் வந்து எங்கள் எளிய விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார். அவர் நினைவாக என் மகனுக்குத் தமிழ்க்குடிமகன் என்று பெயர் வைக்கும் அளவுக்கு அவரின் தமிழ்ப்பற்று என்னை ஆட்கொண்டது. (என் மகன் பிறந்த உடன் ஐயாவுக்குச் செய்தி சொல்லி அவர் பெயரைக் குழைந்தைக்கு வைத்துள்ளதைச் சொன்னதும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த இரண்டு கிழமையில் வேலூர் வரும்பொழுது நேரில் வந்து வாழ்த்துவதாகக் கூறினார். ஐயகோ! என் மகன் பிறந்த இரண்டு நாளில் ஐயா மறைந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது). பல மடல்களும் தொலைபேசி அழைப்பிலுமாக எங்கள் நட்பு கனிந்தது. அன்னாரின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

 முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் இயற்பெயர் மு.சாத்தையா ஆகும். 26.06.1939 இல் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் முத்தையா, குப்பம்மாள் ஆவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைச் சாத்தனூர் அரசு தொடக்கப் பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியைச் செங்குடி உரோமன் கத்தோலிக்க (R.C) நடுநிலைப் பள்ளியிலும், ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான கல்வியைத் தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். இளம் அறிவியல் (கணக்கு) பட்டப்படிப்பைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் முடித்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

 1963-1964 ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் உயர்நிலைப்பள்ளிக் கணக்கு ஆசிரியராகவும், தென்மொழி துணையாசிரியராகவும் பணியாற்றியவர். அடுத்த இரண்டு ஆண்டுகள் பறம்புக்குடி ஆ.வை. உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராகவும் பின் மூன்றாண்டுகள் நேரடி அரசியல் வாழ்க்கையிலும் இருந்தவர்.

 1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றியவர். 1979 முதல் 1988 வரை கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.1989 முதல் நேரடியாக அரசியலில் இயங்கியவர். 1989 முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பணியாற்றியும், 1996 முதல் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர்.

 1967 முதல் 1977 வரை தமிழில் வெளிவந்த மரபுக்கவிதை, புதுக்கவிதை நூல்கள் 614 ஐ ஆய்வுக்கு உட்படுத்திப் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1983 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர்.

எழுதிய நூல்கள்:

1. அந்தமானைப் பாருங்கள்
2. பாவேந்தர் கனவு
3. வாழ்ந்து காட்டுங்கள்
4. காலம் எனும் காட்டாறு
5. பாவேந்தரின் மனிதநேயம்
6. ஐரோப்பியப் பயணம்
7. மனம் கவர்ந்த மலேசியா
8. கலைஞரும் பாவேந்தரும்
9. தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு?
10. சீன நாடும் சின்ன நாடும்
11. மலேசிய முழக்கம்
12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)

இதழ்ப்பணி:

துணை ஆசிரியர்- தென்மொழி(1963-1966)
ஆசிரியர்- அறிவு(1970-1971)
ஆசிரியர்- கைகாட்டி (1971-1974)

சமுதாயப்பணிகள்:

பரிசுச்சீட்டு, திரைப்படக்கீழ்மை, வரதட்சணை முதலியவற்றால் விளையும் சமுதாயத் தீங்குகளைக் களையும் நோக்கில் மதுரை முத்துவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பேரவையின் பொதுச்செயலாளராக இருந்தவர். மதுரை நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.

அரசியல் பணி:

1989 இல் இளையான்குடித் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர். 1989 பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள் முதல் 1991 ஆம் ஆண்டுவரை தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், பின்னர் 1996 முதல் தமிழ் வளர்ச்சிப் பண்ப்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து பணிபுரிந்தவர்.

குடும்பம்

முனைவர் மு. தமிழ்க்குடிமகனின் துணைவியார் பெயர் வெற்றிச்செல்வி ஆவார்.இவர்களின் திருமணத்தில் பெருஞ்சித்திரனாரின் மகபுகுவஞ்சி என்ற அரிய நூல் வெளியிடப்பெற்றது. மூத்த மகன் மெய்ம்மொழி தமிழில் இ.ஆ.ப. தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். அடுத்த மகன் திருவரசன். கனரா வங்கியில் பணி. மகள் கோப்பெருந்தேவி தமிழிலக்கியத் துறையில் பயின்றவர். இளைய மகன் பாரி திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டவர்.

தமிழ் வாழ்வு வாழ்ந்த முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் மாரடைப்பின் காரணமாக மதுரையில் 21.09.2004 இல் இயற்கை எய்தினார்.

அயல்நாட்டுச் செலவுகள்

 மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொள்ளவும், ஆய்வுக்காகவும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இலண்டன், பாரிசு, அமெரிக்கா, துபாய் செர்மன், இத்தாலி, மொரீசியசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

 இனிய குரலில் பாடவும், வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்களில் பேசவுமான ஆற்றல் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை, கல்விப்பேரவை ஆகியவற்றில் சிறப்பான பங்காற்றியவர்.

 நாடகத்துறையில் முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. முதல்பரிசு, வாழவிடு, போராட்டம் உள்ளிட்ட சமூக நாடகங்களை இயற்றி, இயக்கி, நடித்தவர். மனமாற்றம், மணிமுடி போன்ற வரலாற்று நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்தவர்.
தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்தவர்.

 பாவாணரின் உலகத் தமிழ்க்கழகத்தின் முகவை மாவட்ட அமைப்பாளராக இருந்து 1969 இல் பறம்புக்குடியில் உலகத் தமிழ்க்கழக மாநாட்டை நடத்திப் பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐயாயிரம் உருவா செலவில் 63 பேச்சாளர்களை அழைத்து மிகப்பெரும் தமிழ் விழாவை நடத்தியவர். தமிழியக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்து சிறப்பித்தவர்.

 சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாவாணரும் தனித்தமிழும் என்ற தலைப்பில் இவர் ஆற்றிய அறக்கட்டளைப் பொழிவு நூலாக்கப்பெற்றது. பாவாணரின் வாழ்வியலையும் தமிழ்ப்பணிகளையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்தளிக்கும் முதல்நூலாக இது மிளிர்கின்றது. தொலைக்காட்சி, வானொலிகளில் உரையாற்றியவர். தனித்தமிழ் இயக்கத்தின் விண்மீனாகச் சுடர்விட்ட மு.தமிழ்க்குடிமகன் தனித்தமிழ் ஆர்வலர்களின் உள்ளங்களில் எல்லாம் உயிர்வாழ்கின்றார்.


முனைவர் மு.தமிழ்க்குடிமகன்


காலம் எனும் காட்டாற்றின் நூலாசிரியராக மு.தமிழ்க்குடிமகன்


மு.இளங்கோவன், முனைவர் மு.தமிழ்க்குடிமகன்


முனைவர் மு.தமிழ்க்குடிமகன், எங்கள் மகள் கானல்வரியைத் 
தூக்கிக் கொஞ்சிமகிழ்தல்


புலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,மு.இளங்கோவன்


மு.இளங்கோவனுக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எழுதிய மடல்


மு.இளங்கோவனுக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எழுதிய மடல்

சனி, 29 அக்டோபர், 2011

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்- கனிச்சாறு நூல்வெளியீட்டு முன்பதிவுத் திட்டம்


பாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ் மொழி, இன, நாட்டு விடுதலைக்கு உழைத்தவர் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள் இருபதாம் நூற்றாண்டின் மொழியுணர்வு ஊட்டும் ஈடு,இணையற்ற பாடல்களாகும். தமிழ் மரபறிந்து யாத்த இவரின் பாடல்களில் தமிழ்ச் செழுமையைக் காணலாம். கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்களும், சுற்றிவளைக்காத சொல்லாட்சிகளும், பிழையற்ற யாப்புகளும், உணர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத் தெரிந்தெடுக்கப்பட்ட யாப்பும் இவர் பாடல்களில் கண்டு உவக்கலாம்.

பாவலரேறு அவர்களின் பாடல்கள் முன்பே கனிச்சாறு என்னும் பெயரில் முத்தொகுதிகளாக வெளிவந்தன. இப்பொழுது எட்டுத்தொகுதிகளாகக் கனிச்சாறு என்னும் பெயரில் வெளிவர உள்ளன.

1700 பக்கங்கள் கொண்ட இந்த நூல்தொகுதிகளின் விலை 1300 உருவா ஆகும். முன்பதிவு செய்பவர்களுக்கு 900 உருவா விலையில் கிடைக்கும்.

பதிவுசெய்ய இறுதிநாள் 30.11.2011 ஆகும்.

தமிழ்ப்பற்றாளர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய அரிய தமிழ் ஆவணம்.

தென்மொழி, சென்னை என்னுப் பெயரில் காசோலை, வரைவோலை அனுப்பலாம்.

தொடர்புக்கு:

தென்மொழி, மேடவாக்கம் கூட்டுச்சாலை,
சென்னை - 600100

செல்பேசி: + 91 9444440449 / 9444230 460

புதன், 26 அக்டோபர், 2011

முனைவர் ஆறு.அழகப்பனார்…


ஈர நினைவுகள் முனைவர் ஆறு.அழகப்பனார்

  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரலாறு இருப்பதுபோல் அதில் பணிபுரிந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆறு.அழகப்பனாருக்கும் ஒரு வரலாறு உண்டு. பல்கலைக் கழகத்தின் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்து அப்பல்கலைக்கழகத்தின் பெருமைக்குப் பணிபுரிந்த நம் பேராசிரியரின் பணிகள் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கனவாகும்.

  பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் மாத ஊதியத்துடன் நிறைவடையும் பேராசிரியர் அல்லர். செயற்கரும் செயல்களைத் துணிந்து செய்த செயல்மறவர். அண்ணாமலை அரசரின் குடும்பத்திற்கு நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்த பேராசிரியர் அவர்கள் அரசர் குடும்பத்தினரின் குறிப்பறிந்து நடந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பல பணிகள் புரிந்துள்ளார்.

  பாடம் நடத்துதல் மட்டும் தம் கடமை என்று கருதாமல் தமிழகத்தின் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அயல்நாடுகளில் வாழும் தமிழ்ப் பற்றாளர்கள் அனைவராலும் போற்றத் தகுந்தவராக விளங்கியவர். பணி ஓய்வுக்குப் பிறகு தம் இயக்கத்திற்கு ஏற்ற இடம் சென்னை என்று தேர்ந்து, விருகம்பாக்கத்தில் தமிழ்ச்சுரங்கம் கண்டு தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.

  தமிழ்வளர்ச்சி, தமிழாராய்ச்சி சார்ந்த கருத்தரங்குகள், நிகழ்வுகள், மாநாடுகள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் முன்னின்று பணிபுரிபவர் நம் பேராசிரியர் அவர்கள்.

 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்தபொழுது அவர்களின் திருமலைநாயக்கர் நாடகத்தைப் பாடமாகப் பயின்று மகிழ்ந்தவன். அதன்பிறகு குடந்தையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கண்டு அவர் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன். அதன் பிறகு தொடர்ச்சியாக இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாடுகளில் ஐயாவைக் கண்டு உரையாடுவது, புத்தகக் கண்காட்சிகளில், இலக்கிய அரங்குகளில் கண்டு நலம் வினவுவது என் விருப்பமாக இருக்கும்.

  ஆறு.அழகப்பனாரின் தமிழ்ப்பணிகளையும் செயல்திறனையும் அவர்களின் மாணவரான பேராசிரியர் ஒப்பிலா.மதிவாணன் அவர்கள் வழியாக அறிந்து மகிழ்பவன். பேராசிரியரின் மாணவர்கள் பலரும் எனக்கு ஆசிரியர்களாக அமைந்ததால் நானும் பேராசிரியர் அவர்களுக்கு மாணவ வழி மாணவனாவேன். பேராசிரியர் அவர்கள் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்புகளில் அமர்ந்தும் அமராமலும் பணிபுரிபவர். அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடந்தாலும் தாம் சொல்ல வேண்டிய கருத்துகளை அரசுக்குச் சொல்லத் தயங்காதவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இன்றும் இணைந்து பணிபுரிகின்றார்.

  அண்மையில் ஆறு.அழகப்பனார் அவர்கள் வரைந்த ஈர நினைவுகள் என்னும் நூலைக் கற்கும் வாய்ப்பு அமைந்தது. முப்பது தலைப்புகளில் தம் மனத்துள் தங்கிய முதன்மை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது தலைப்புகள் என்றாலும் முந்நூறுக்கும் மேற்பட்ட அரிய செய்திகள் அக்கட்டுரைகளில் உள்ளன. இன்னும் ஈர நினைவுகள் தொடராக வெளிவர வேண்டும் என்பதே எம் போல்வாரின் விருப்பமாகும். ஈர நினைவுகளில் ஆறு.அழகப்பனாரின் தன்வரலாற்றுக்கூறுகள் தெரிகின்றனவே தவிர அவை யாவும் தமிழக வரலாறாக மிளிர்கின்றன.

ஈர நினைவுகள் நூலில் உள்ள செய்திகள்…

 பேராசிரியர் அ.சிதம்பரநாதனார் மேலவை உறுப்பினர் ஆனமை, அ.சிதம்பரநாதனாரிடம் தமிழ் கற்கத் தமிழ்நாட்டு மாணவர்கள் விரும்பியமை, தெ.பொ.மீ.யின் பண்புநலம், புலமைவளம், இந்தி எதிர்ப்புப்போரில் இராசேந்திரன் என்ற மாணவருடன் நெடுமாறன் என்ற மாணவருக்கும் குண்டுக்காயம் ஏற்பட்டமை, தந்தை பெரியாரைத் தமது இல்லத்தில் தங்க வைத்தமை,நாடகக் கலைஞர் நவாபு இராசமாணிக்கத்துக்கு அறக்கட்டளை தொடங்கியமை உள்ளிட்ட செய்திகளை அறியும்பொழுது புதிய செய்திகளை அறிந்தவர்களாகின்றோம்.

  அண்ணாமலை அரசரின் படம் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக அலுவலர் இல்லங்களிலும் இடம்பெறப் பணிபுரிந்தமை, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்தால் அரசர் முத்தையா செட்டியார் அண்ணாமலை நகரில் தங்கமுடியாமல் பூம்புகாரில் தங்கியமை, சமூகப் பணிகளுக்கு மாத ஊதியம் முழுவதையும் வழங்கும் ஆறு.அழகப்பனாரின் இயல்பு, மேனாள் முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களுடனான நட்பு, பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் அமைந்த தொடர்பு, ஆறு.அழகப்பனாரின் தமிழர் உடை தாங்கும் நோக்கு, உயர்துணைவேந்தராக விளங்கியமை, “அழகப்பனைக் கைது செய்” என்று ஊழியர்கள் முழக்கமிடும் அளவுக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சார்பாக நின்றமை, ம.பொ.சி.அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கியமை அறியும்பொழுது ஒரு தமிழ்ப்பேராசிரியரின் செயல் ஆளுமை நமக்குப் புலனாகின்றது.

  ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பக்கிரியா பிள்ளை சென்னையில் இருந்த தம் வீட்டை விற்றுத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக, கல்லூரிகளுக்கு அறக்கொடைக்கு வழங்கிய வரலாறு, நாடகக் கலைக்காகக் காமராசர் ஒரு மாணவர்க்கு வேலை கிடைக்க உதவியமை, திருமலை நாயக்கர் நாடகம் படமாக்கும் முயற்சி தோல்வி, நாடகக் கனவு, பர்மாவுக்குச் சென்றுஉரையாற்றியதால் அங்கு இராணுவ வீரர்களால் வெளியேற்றப்பட்டமை, இலங்கைப் பயணம், சிங்கப்பூர் செலவு, மலேசியாவில் டத்தோ சாமிவேலு அவர்களுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார் அவர்களைக் கொண்டு சிறப்பு செய்தமை, காசியில் திருக்குறள் மாநாடு நடத்தி வடநாட்டாருக்குத் திருக்குறள் சிறப்பு உணர்த்தியமை, நளினி விடுதலைக்குக் குரல்கொடுத்த பாங்கு, தமிழ்த்தாய்க்குச் சிற்பி கொண்டு சிலையும் ஓவியர் கொண்டு படமும் உருவாக்கிய வரலாறு யாவும் ஆறு.அழகப்பனாரின் தமிழ்ப்பற்றை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.

 விருகம்பாக்கத்தில் தம் இல்லத்து முகப்பில் திருவள்ளுவர் சிலை நிறுவியமை, குடியரசுதலைவர் மாளிகைக்குத் தானியில் சென்று குடியரசுத்தலைவரைக் கண்டு உரையாடிப் பாராட்டு தெரிவித்தமை யாவும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் முயற்சியாக இருப்பதை இந்த நூலில் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

 ஈர நினைவுகள் என்னும் பெயரில் வெளிவந்துள்ள இந்த நூல்போல் பேராசிரியர் இன்னும் பல நினைவுகளைத் தொடர்நூல்களாக வெளியிட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாகும்.

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்களின் தமிழ்வாழ்க்கை

 பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் வாழ்ந்த திருவாளர் ஆறுமுகம் செட்டியார், உண்ணாமுலை ஆச்சியார் அவர்களுக்குத் திருமகனாக 10.08.1937 இல் பிறந்தவர். 1953-54 இல் அண்ணாமலை நகருக்குப் படிப்பதற்கு வந்த பேராசிரியர் அவர்கள் 1955-57 இல் இண்டர்மீடியட் வகுப்பிலும், 1957-60 இல் முதுகலை வகுப்பிலும் பயின்றவர். 1960 முதல் 1998 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், துணைப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர், பதிப்புத்துறைப் பொறுப்பாளர் என்று பல நிலைகளில் பணிபுரிந்தவர். சென்னையில் அமைந்துள்ள தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.

 பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் தெ.பொ.மீ, அ.சிதம்பரநாதனார், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், இ்லால்குடி நடேச முதலியார், க.வெள்ளைவாரணனார், மு.அருணாசலம் பிள்ளை, வித்துவான் முத்துசாமி பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, செ.வை.சண்முகம், உலக ஊழியர், கே.என்.சிந்தாமணி, மு.இராமசாமி பிள்ளை, மு.அண்ணாமலை, மெ.சுந்தரம், புலவர் தில்லைக் கோவிந்தன், டாக்டர் ஆறுமுகனார், மு.அருணாசலம், வி.மு.சோமசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்.

இவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கன:

1. திருமலை நாயக்கர்
2. நாடகச் செல்வம்
3. திருவள்ளுவர் நாடகம்
4. எள்ளல் நாடகம்
5. கரிவேப்பிலை
6. நாட்டுப்புறப்பாடல்கள் திறனாய்வு
7. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்(முனைவர் பட்ட ஆய்வேடு)
8. தாலாட்டுகள் 500
9. பெரியார் ஈ.வே.இரா (சாகித்ய அகாதெமிக்காக)
10. உ.வே.சா.சொல்லும் சுவையும் (உ.த.நி.)
11.இராசா சர் முத்தையா செட்டியார் (வானதி பதிப்பகம்)

 தமிழக அரசின் கலைமாமணி விருது(1981), திருவள்ளுவர் விருது(2004-05)
பெற்றவர்.

 10.08.2011 முதல் 10.08.2012 வரை பேராசிரியர் ஆறு.அழகப்பனாரின் பவள விழா தமிழகம் முழுவதும் அவர்தம் மாணவர்களால் கொண்டாடப்படுகின்றது.

தொடர்புக்கு:

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள்,
தமிழ்ச்சுரங்கம்
50. வெங்கடேச நகர் முதன்மைச்சாலை,
விருகம்பாக்கம், சென்னை- 600 092
செல்பேசி: + 91 9444132112

புதுவை மழைக்காட்சிகள்...


இரு சக்கர வாகனத்தை சூழ்ந்து, வீட்டுப்பகுதியில் புகுந்துள்ள மழைநீர்


சூரியகாந்தி நகர் சாலையிர் கார் ஒன்று மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்


சூரியகாந்தி நகர் சாலைகள் நீரில் மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்


சூரியகாந்தி நகர் சாலைகள் நீரில் மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்

புதுவையில் கனமழை

புதுவையில் இரவிலிருந்து மழை தொடர்ந்து பெய்கின்றது. மழை அதிகம் என்பதால் மக்கள் தீபாவளி கொண்டாட வழியில்லாமல் போனது. எங்கும் வெடிச்சத்தம் இல்லை. புதுவையின் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், சூரியகாந்தி நகர், செந்தாமரை நகர்,வசந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாய்க்கடை உடைப்பெடுத்து தெருவெங்கும் சாய்க்கடை நீராக உள்ளது.

இலாஸ்பேட்டை, கோரிமேடு பகுதிகளில் பெய்த மழைநீர் ஓடும் வாய்க்கால் தூர் வாரப்படாததால் வாய்க்கால் நீர் தெருவுக்குள் புகுந்துள்ளது. தரைத்தளத்தில் இருக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருள்கள் நனைந்துள்ளன. சில வீடுகளில் பீரோக்கள், வாஷிங் மெஷின்கள்,பிரிஜ் நீரில் மூழ்கியுள்ளன.

பள்ளமான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மேட்டுப் பகுதிக்குச் செல்கின்றனர். வீட்டில் நிறுத்திவைத்திருந்த கார், மோட்டார் பைக் முதலியவை நீரில் மூழ்கியுள்ளன. சாய்க்கடை நீர் குடிநீரில் கலந்துள்ளதால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்து மூன்றாம் கருத்தரங்கம்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்து மூன்றாம் கருத்தரங்கம் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் 2012 மே மாதம் 19,20 நாள்களில் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழகம் /கல்லூரி/ நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கலாம்.

பதிவுக்கட்டணம் 500 உருவா ஆகும். உடன் வரும் விருந்தினர் கட்டணம் 150 ஆகும்.
கட்டணங்களை ALL INDIA UNIVERSITY TAMIL TEACHER’S ASSOCIATION, MADURAI-625 021 என்ற முகவரியில் மாற்றும் வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

கட்டுரைகள் 5 பக்க அளவில்(டெம்மி அளவில்) அச்சில்வரும்படி இருக்க வேண்டும்.

கருத்தரங்கு நிகழிடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், 59,அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர்- 560 042

நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2043, (2012 மே 19-20)

ஆய்வுக்கட்டுரை,பேராளர் கட்டணம் அனுப்ப இறுதிநாள் 31.12.2011.

தொடர்பு முகவரி:

முனைவர் மு.மணிவேல் அவர்கள்,
செயலர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,
தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை 625 021

தொடர்பு எண்கள்; +98655 34622 / +94886 16100

சனி, 22 அக்டோபர், 2011

பேராசிரியர் முனைவர் ச.சாம்பசிவனார்


முனைவர் ச.சாம்பசிவனார்

 தமிழ்மொழி பலநிலைகளில் பெருமைகளைக் கொண்டிருப்பதுபோல் இம்மொழிக்கு உழைத்த அறிஞர் பெருமக்களும் பல நிலைகளில் பெருமை பெற்றவர்களாகவும் பல திறத்தவர்களாகவும் உள்ளனர். அவ்வறிஞர்கள் வரிசையில் எண்ணத் தகுந்தவர் மதுரையில் வாழும் முனைவர் ச.சாம்பசிவனார் அவர்கள் ஆவார்கள்.

 பலவாண்டுகளுக்கு முன்பே ஐயாவின் தொல்காப்பியம் குறித்த பேச்சைக் கேட்டுள்ளேன். அது குறித்த ஐயாவின் கட்டுரைகளையும் யான் கற்றுள்ளேன். தமிழ் மாருதம் என்ற ஏட்டின் வழியாகத் தொடர்ந்து தொய்வின்றித் தமிழ்ப் பணிபுரிந்துவரும் ஐயாவுக்கு அகவை எண்பதைக் கடந்துள்ளது.

 தமிழும் சைவமும் தமதிரு கண்களாகப் போற்றும் பேராசிரியர் அவர்களுக்கு அண்மையில் முத்துவிழா நடைபெற்றதை அறிந்து மகிழ்ந்தேன். முத்துவிழா நினைவாக வெளிவந்த முத்துவிழா மலர் அளப்பரும் கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அதுபோல் சிந்தனைச் செழுந்தேன் என்ற தலைப்பில் முத்துவிழாவை ஒட்டி வெளிவந்த பேராசிரியரின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலும் தமிழுக்கு ஆக்கமான வரவேயாம். பேராசிரியரின் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

 பேராசிரியர் ச.சாம்பசிவனார் அவர்கள் 29.09.1929 இல்(பள்ளிச்சான்று 10.05.1928) தேனி மாவட்டம் வள்ளல்நதி என்ற கண்டமநாயக்கனூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் க.ச.சங்கரலிங்கம், தில்லை என்ற மீனாட்சி.

 மதுரைக் கல்லூரியில் இடைக்கலை வகுப்பு வரை படித்தவர். தந்தையார் இறந்ததும் படிப்பு இடையில் நின்றது. மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பாலபண்டிதம் (1954) முடித்து, மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதம்(1955) முடித்தவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான்(1961) பட்டம் பெற்றவர். தமிழக அரசின் பண்டிதப் பயிற்சியைக் குமார பாளையத்தில் முடித்தவர். 1966 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு முடித்து, 1974 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்தவர். நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி என்னும் தலைப்பில் பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி, பேராசிரியர் அனந்தகிருட்டிண பிள்ளை ஆகியோர் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வு செய்து, 1983 இல் முனைவர் பட்டம் பெற்றவர்.

 26.11.1950 இல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தலைமையில் மனோன்மணி என்னும் அம்மையாரை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஆண் மக்கள் நால்வர், பெண் மக்கள் நால்வர்.

 மதுரை இராமநாதபுரம் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையில் கணக்குப் பிரிவு எழுத்தராகப் பணியைத் தொடங்கி, பின்னர் தமிழாசிரியராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணிநிலையில் உயர்ந்தவர்.


முனைவர் ச.சாம்பசிவனார்

 சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீசியசு எனப் பல வெளிநாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர். ஆய்வரங்குகளிலும், சமய மாநாடுகளிலும் உரையாற்றிய பெருமைக்குரியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் ச.சாம்பசிவனார் அவர்கள் பல நூறு கட்டுரைகளையும் வரைந்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விக்காகப் பல பாடநூல்களையும் எழுதியுள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியில் இருந்தார்.

 பேராசிரியர் எழுதிய நூல்களுள் மாநகர் மதுரை(1960), நாவலர் நால்வர்(1960), அரசஞ்சண்முகனார்(1961), தமிழவேள் உமாமகேசுவரனார்(1964), தமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை(1964), கவி மன்னர் மூவர்(1965), உடம்பும் உயிரும்(1965), புகழின் காயம்(1967), வள்ளுவர் தெள்ளுரை(1970), கண்ணன் பிள்ளைத் தமிழ் மூலமும் பொழிப்புரையும்(1971), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் குறிப்புரையும்(1978), தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதி 2 மூலமும் குறிப்புரையும்(1978), தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதி 1 மூலமும் குறிப்புரையும்(1980), ஐங்குறுநூறு: குறிஞ்சி மூலமும் விளக்க உரையும்(1980), மேகலை நாடகம்(1982), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் கருத்துக்கோவை(1982), நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி(1985), தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் முதலான 4 இயல் கருத்துக்கோவை(1986), பிழையின்றி எழுத(1996), திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள்(1997), திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் (1998), தமிழா இதோ உன் புதையல்(1998), தொல்காப்பியம் பொருளதிகாரம் முதல் 5 இயல்கள் மூலமும் குறிப்புரையும்(1998), நாவலர் சோமசுந்தர பாரதியார்(1999), சிவஞானபோதச் செம்பொருள்(1999), நற்றமிழ்க்காவலர் நாவலர் சோமசுந்தர பாரதியார்(2000), அறநெறியண்ணல் கி.பழனியப்பனார்(2002), சைவசித்தாந்தக் கலைச்சொல் அகராதி(2003), இராமலிங்கர் பாடல்களில் சமய நல்லிணக்கச் சிந்தனைகள்(2004), இராமலிங்கர்(2004), சைவ சமய இலக்கிய அகராதி 1(2006), சைவ சமய இலக்கிய அகராதி 2(2008), உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை(2007) உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.

 இவை தவிர நன்னூல், தண்டியலங்காரம், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக் காரிகை, மாறனலங்காரம், பிரபுலிங்க லீலை, தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

 திருச்சிராப்பள்ளி, கோவை, மதுரை, சென்னை வானொலிகளில் உரையாற்றிய பெருமைக்குரியவர். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ் மாருதம் என்ற ஏட்டினைத் தொய்வின்றி நடத்தி வருகின்றார்.

 மதுரை மாநகர் புறவழிச்சாலையில் பாரத வங்கிக் குடியிருப்பில் கட்டிய வீட்டின் ஒரு பகுதியை நூலகமாக அமைத்து ஆய்வாளர்கள் பயன்பெறும் வண்ணம் நூலகம் ஒன்றை உருவாக்கித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். நூலக நேரம் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணி வரையாகும். 04.02.2001 ஆம் ஆண்டு முதல் தமிழ்மாருதம் நூலகம் செயல்படுகின்றது.
மதுரைப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு இவரின் பங்களிப்பு அமைந்துள்ளது. நாவலர் சோமசுந்தர பாரதியாரின் வரலாறு தெளிவுபெற்றது பேராசிரியரின் முயற்சியால் எனில் மிகையன்று.

 மதுரைத் திருவள்ளுவர் கழத்தின் பொறுப்பில் இருந்து இலக்கிய நிகழ்வுகள் சிறப்புற நடைபெறவும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பணிகள்-செந்தமிழ்க் கல்லூரியின் பணிகள் சிறப்புற நடைபெறவும் இவரின் பங்களிப்பு மிகுதி.

தமிழகத் தமிழ்க்கல்லூரி ஆசிரியர் மன்றம் என்ற அமைப்பை நிறுவியவர்(1970). கல்லூரித் தமிழாசிரியர்களுக்குப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமே வழங்கப்பட்டது. இதனை மாற்றி மற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போன்று தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்றதில் இம்மன்றத்துக்குப் பங்கு உண்டு. மதுரையில் நாவலர் பாரதியார் சிலை நிறுவும் கோரிக்கையை அன்றைய முதல்வர் ம.கோ.இரா அவர்களிடம் வைத்துச் சிலை நிறுவப்பெறுவதற்குக் காரணராக இருந்தவர்.

 மதுரையில் தமிழ்ப்பணியாற்றிவரும் பேராசிரியர் அவர்கள் உடல்நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்த்தாய்க்கு ஆராய்ச்சி நூல்களை ஆரமாகச் சூட்டி மகிழ வேண்டும் என்பதே நம் விருப்பமாகும்.


முத்துவிழா மலர்


தமிழ்மாருதம்சிந்தனைச் செழுந்தேன்


தொடர்புக்கு:

முனைவர் ச.சாம்பசிவனார்
சிறப்பாசிரியர்-தமிழ் மாருதம்
எண் 67/1 ஸ்டேட் பேங்க் அலுவலர் முதல் காலனி,
புறவழிச்சாலை, மதுரை- 635 016
தொலைபேசி : 0452 -2384246


முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி
27,சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு,
இலாசுப்பேட்டை,புதுச்சேரி- 605008
0413- 6542526

வியாழன், 13 அக்டோபர், 2011

புலவர் சீனு.இராமச்சந்திரன்


புலவர் சீனு. இராமச்சந்திரன்

 புதுவையில் எண்ணற்ற தமிழ்ப்புலவர் பெருமக்கள் தோன்றித் தமிழ்மொழிக்கும், இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அப்புலவர்கள் வரிசையில் போற்றத்தக்கவர் புலவர் சீனு. இராமச்சந்திரன் ஆவார். தமிழாசிரியராகப் பணியாற்றியும், பல்வேறு நூல்கள் படைத்தும் தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்துவரும் புலவர் பெருமகனாரின் வாழ்க்கைக்குறிப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் பதியப்படவேண்டிய ஒன்றாகும்.

 புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சியில் உள்ள வீமக்கவுண்டர்பாளையம் செ.சீனுவாசன் - எல்லம்மாள் இணையர்க்கு இரண்டாம் மகனாகப் பிறந்தவர் சீனு. இராமச்சந்திரன். 1945 இல் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு வட்டம் செட்டிப்பட்டு என்னும் சிற்றூரில் வாழ்ந்த திரு.குப்புசாமி ஆசிரியரிடம் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். 1946-47 இல் புதுச்சேரி நகரில் எக்கோல் பிரைமர் (இன்றைய வ.உசி. பள்ளி) பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றவர்.

 1954-55 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் புகுமுகத் தேர்வும் 1956-60 வரை மயிலம் தமிழ்க்கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் பட்டமும், அதே ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் (புலவர்) பட்டமும் பெற்றவர்.

 16.06.1961 இல் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள இராசா மெட்ரிகுலேசன் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, செங்கற்பட்டு, சென்னை, திருக்கோவலூர், சித்தலம்பட்டு ஆகிய ஊர்களில் பணியாற்றி, வழுதாவூர் அரசு மேனிலைப்பள்ளியில் முதனிலைத் தமிழாசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் கடமையாற்றியவர்.

 1959 இல் தமிழரசுக் கழகம் சார்பில் கண்ணகிக்குத் திருவுருவச் சிலை அமைத்து வீமக்கவுண்டர்பாளையம், திலாசுப்பேட்டையில் வீதியுலா வரச்செய்த பெருமைக்குரியவர்.

 திருநாவுக்கரசர், பாவலன் தந்த பரிசு, பொற்கொடி, கோவூர்கிழார், குறுகுடி, மெய்ப்பொருள் நாயனார், பள்ளியும் ஒருவீடு, சேக்கிழார், யார் இந்தக் கண்ணகி, செந்தமிழ்ப்பாவை, ஊருக்குப் பெரியவர், ஆசையின் விளைவு ஆகிய 13 நாடகங்களை எழுதியும் நடித்தும் அரங்கேற்றிய பெருமைக்குரியவர்.

 1961 இல் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களின் செங்கோல் இதழில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியவர். எழில்நிலவன் என்ற புனைபெயரிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன.

 1963 செப்டம்பர் இரண்டாம் நாள் சரசுவதி என்னும் அம்மையாரை மணந்து, இல்லற வாழ்வின் பயனாய்ச் செங்குட்டுவன், கண்ணகி, இளவரசு, எழிலரசி என்னும் மக்கட் செல்வங்களைப் பெற்று வளர்த்த பெருமைக்குரியவர். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நடந்த பல்வேறு விழாக்களில் தலைமைப் பொறுப்பேற்றும், கவிதைகள் வழங்கியும் உரையாற்றியும் தமிழ்ப்பணியாற்றியவர். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு ஏகிய செம்மலாகவும் விளங்குபவர்.

 புதுவை அரசின் பட்டயம், தமிழ் மாமணி விருது (2004), தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். புதுவைக் கம்பன் கழகம், புதுவைத் தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு, கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் தகுதி வாய்ந்த பொறுப்புகளை ஏற்றவர்.

 புதுவை அரசு தில்லி பாரதிதாசன் சிலை அமைப்புக்குழு, பாரதியார் 125 விழாக்குழு, கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழாக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக்கிச் சிறப்பித்தது. புதுவையில் பாரதி, கவிச்சக்கரவர்த்தி கம்பன் உள்ளிட்ட குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

 புதுவை முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி, நடுவண் அமைச்சர் சா. செகத்ரட்சகன் ஆகியோரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராக விளங்கும் புலவர் சீனு.இராமச்சந்திரனார் அவர்கள் புதுவையில் நடைபெறும் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தம் கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்.

புதன், 12 அக்டோபர், 2011

ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி - தமிழ் இணையம் அறிமுக விழா


பார்வையாளர்கள்

புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூர் ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் 12.10.2011 புதன்கிழமை காலை 11 .30 மணியளவில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் திரு.மு.முகமது ஷா அவர்கள் தலைமை ஏற்றுச், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து இணையத்தின் இன்றையத் தேவையை மாணவர்களுக்கு வலியுறுத்திப் பேசினார். விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பேராசிரியர் மு.செந்தமிழ்க்கோ அவர்கள் வரவேற்றார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் மன்றக் கருத்தரங்க விழாவில் கலந்துகொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கினார். இணையத்தின் தேவையை மாணவர்களுக்கு எடுத்துரைத்துத் தமிழ்த்தட்டச்சு தொடங்கி, இணையத்தில் உள்ள தமிழ் நூல்கள் குறித்த செய்திகள், மின்னஞ்சல் வசதி, உரையாடல் வசதி, விக்கிப்பீடியா உள்ளிட்ட தளங்களை அறிமுகம் செய்து, தமிழ் இணையம் வளர்ந்த வரலாற்றை மாணவர்களின் உள்ளம் உணரும் வகையில் எடுத்துரைத்தார்.

விழாவில் ஆச்சார்யா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திரு.பாரதிதாசன் உள்ளிட்டவர்களும் பிற துறைசார்ந்த பேராசிரியர்கள், மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் இந்த இணைய அறிமுகத்தால் ஏற்பட்ட பயன்களை நிறைவாக எடுத்துரைத்தனர்.

திரு.அ.வேல்முருகன் அவர்கள் நன்றியுரைத்தார்.


பேராசிரியர் மு.முகமது ஷா(முதல்வர்)


மு.இளங்கோவன் உரை


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


கலந்துகொண்டவர்களின் கருத்துரை


கலந்துகொண்டவர்களின் கருத்துரை


கலந்துகொண்டவர்களின் கருத்துரை

செவ்வாய், 11 அக்டோபர், 2011

புதுவை ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா


அழைப்பிதழ்

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற கல்விநிறுவனமான ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றக் கருத்தரங்க விழா 12.10.2011 காலை 11 மணிக்குக் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற உள்ளது.

கல்லூரி முதல்வர் திரு.மு.முகமது ஷா அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் பேராசிரியர் மு.செந்தமிழ்க்கோ அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் மன்றக் கருத்தரங்க விழாவில் கலந்துகொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கி உரையாற்றுகின்றார்.

திரு.அ.வேல்முருகன் அவர்கள் நன்றியுரையாற்றுகின்றார்.

விழாவிற்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

புதன், 5 அக்டோபர், 2011

கணினி கற்கத் துடிக்கும் கி.இரா…


எழுத்தாளர் கி.இரா.

நேற்று பிரஞ்சு பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயகர் இல்லம் சென்றிருந்தேன். தமிழ்க்கல்விச்சூழல், மொழிபெயர்ப்புகள் குறித்த எங்கள் பேச்சு நிறைவு நிலைக்கு வந்ததும் விடைபெற நினைத்தேன். எழுத்தாளர் கி.இரா. அடுத்த தெருவில்தானே உள்ளார்கள் சென்று பார்த்து வருவோமே என்றேன். பேராசிரியரும் உடன்பட்டார். இருவரும் இலாசுப்பேட்டை அரசு அலுவலர் குடியிருப்புக்குச் சென்றோம். அந்தி மயங்கும் மாலை நேரம். கதவைத் தட்டினோம். கி.இரா.எதிர்கொண்டு அழைத்தார். பேராசிரியர் நாயகர் அவர்கள் என்னை அறிமுகம் செய்தார். தெரிந்தவர்போல் குறிப்பைக் காட்டினார். உண்மையில் பலமுறை இதற்குமுன் சந்தித்தித்துள்ளேன். எனினும் நினைவுக்குறைவால் மறந்திருந்தார். பின்னர் உரையாடலில் தமக்கு நினைவுக்குறைவு ஏற்படுவதையும் ஒத்துக்கொண்டார்.

கி.இரா.அவர்களின் துணைவியாரும் எங்கள் உரையாட்டில் கலந்துகொண்டார். இடையில் தேநீர் கலக்க அம்மா பிரிந்து அடுப்படிக்குச் சென்றார். கி.இரா. அவர்களைப் பற்றிய செய்திகளை மெதுவாக அறியத் தொடங்கிச் சில வினாக்களை வீசினேன்.

முதலில் அவர் வளர்த்த ஒரு பொலிகாளை பற்றிப் பேச்சு தொடங்கியது. பொலிகாளை என்றால் கி.இரா. என்ன பேசியிருப்பார் என்று தங்கள் நினைவுக்கே விட்டுவிடுகின்றேன். அவர் வளர்த்த பொலிகாளைக்குத் தமிழ்,தெலுங்கு மொழியில் பசுமாட்டுக்காரன் சொல்லும் குறிப்பும் புரியும் என்றார். இங்குதான் கி.இரா.என்ற கதை சொல்லி எங்களுக்குத் தெரிந்தார். அந்தக் காளையின் செயல்களை நாடகம்போல் எங்களுக்கு நடித்து விளக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சிறிய செய்தியைக் கூட மிகச்சிறப்பாக விளக்கிக்காட்டும் ஆற்றல் அவருக்குப் பிடிபட்டுப் போனதால்தான் அவரால் உயிரோட்டமான புதினங்கள், சிறுகதைகள், மடல்களை எழுதமுடிந்ததுபோலும்.

அவர் இல்லத்தில் இருந்த இசைஞானி இளையராஜா அவர்களின் படத்தைக் காட்டி எப்பொழுது எடுத்தது? என்றேன். இளையராஜாவின் இசைத்திறமையை வாயார மெச்சினார். அடிப்படையில் தாம் ஒரு இசையார்வலன் எனவும் தொடக்கத்தில் இசைத்துறையில்தான் தம் கவனம் இருந்தது என்றும் ஒத்துக்கொண்டார். எழுத்துத்துறையை விடத் தமக்கு இசைத்துறையில்தான் நல்ல ஈடுபாடு தொடக்கத்தில் இருந்தது என்றார். காருகுறிச்சி அருணாசலம், டி.என் இராசரத்தினம் ஆகியோரின் இசையில் தமக்கிருந்த ஈடுபாட்டை அறிந்த தம் நண்பர்கள் இவர்களின் இசைக்குறுந்தகடுகளை அன்பளிப்பாக வழங்கியதை நினைவுகூர்ந்தார்.

கி.இரா. அவர்களுக்கு இசை ஈடுபாடு இருப்பதை இந்தச் சந்திப்பில்தான் அறிந்தேன்.

தாம் எழுதும் எழுத்தில் சிலபொழுது எழுத்துப்பிழைகள் வந்துவிடும் என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். எழுத்துப்பிழைகளை எடுத்துக்காட்டி அமர்க்களப் படுத்தாமல் படைப்புகளை மட்டும் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.சோறு தின்னும்பொழுது கல் கிடாந்தல் எடுத்தெறிந்துவிட்டுத் தின்னுவதுபோல் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

உடலோம்பல் பற்றி கேட்டேன். கட்டுப்பாடான உணவும் நல்ல எண்ணங்களும்தான் உடல்நலத்திற்குக் காரணம் என்றார். நாற்பதாண்டுகளாக இனிப்புநோய் இருந்தாலும் இன்னும் இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்றார். அதுபோல் இரத்தக்கொதிப்பு இருப்பதால் உப்பும் அளவாகத்தான் இட்டுக்கொள்கின்றோம் என்றார்.

தமிழகத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறையினர், கல்வியாளர்கள் எனப் பலரும் கி.இராவுடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கின்றனர். தொண்ணூறு அகவையைத் தொடும் இந்தக் கரிசல்காட்டு எழுத்தாளருக்குக் கணினி குறித்த அறிமுகத்தைச் சொன்னேன். அங்கிலம் தெரியாமல் தமிழ் மட்டும் தெரிந்திருந்தால்கூடக் கணினியை இயக்க முடியும், இணையத்தைப் பயன்படுத்தமுடியும் என்றேன். அப்படியா என்று வியந்தார். விரைந்து மடிக்கணினியுடன் வருகின்றேன் என்று அவரிடமிருந்து விடைபெற்றோம்.


கி.இரா அவர்களும் அவர்களின் துணைவியார் கணவதி அம்மாளும்


கணவதி அம்மாள், கி.இரா, வெங்கட சுப்பராய நாயகர்


கணவதி அம்மாள், கி.இரா,மு.இளங்கோவன்

திங்கள், 3 அக்டோபர், 2011

நாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா


கு.சின்னப்ப பாரதி, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், 
மு.இளங்கோவன், டாக்டர் பொ.செல்வராஜ், சி.ப.கருப்பண்ணன்

உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் புதினமாக எழுதியவர் கு.சின்னப்ப பாரதி. கவிதைகள், சிறுகதைகளையும், தன்வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை உலக அளவில் தமிழ்ப்படைப்பாளர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பரிசளித்துப் பாராட்டிவருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு, பாராட்டு விழா அக்டோபர் இரண்டாம் நாள் நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

காலை 9.30 மணியளவில் தொடங்கிய விழாவிற்குச் செல்வம் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார். இந்த விழாவிற்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்ததுடன் இலங்கை, மலேசியா, இலண்டன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முனைவர் பா. கவீத்ரா நந்தினி, எழுத்தாளர் அந்தோனி ஜீவா, எஸ்.பி.இராமசாமி, எஸ்.கே.சம்பத், ஆர்.செந்தில்முருகன், எஸ்.இராஜ்குமார், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றறது.

கா.பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். அந்தோனி ஜீவா, கலை இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன், பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெ.மாதையன், முனைவர் மு.இளங்கோவன், மலேசியா எழுத்தாளர் பீர்முகமது, இலங்கை கலைச்செல்வன் உள்ளிட்டவர்கள் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றினர்.

பரிசளிப்பின் நோக்கத்தைக் கு.சின்னப்ப பாரதி விளக்கிப் பேசினார். சி.ப.கருப்பண்ணன் அவர்கள் பரிசுபெறுபவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராகத் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்மொழிக்கு எனத் தனி சாகித்ய அகாதெமியை அரசு நிறுவ வேண்டும் எனவும், கு.சின்னப்ப பாரதி போன்ற எழுத்தாளர்கள் போற்றி மதிக்கப்பட வேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.

தனது பிறந்த நாளைச் சக எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிக் கொண்டாடும் சிறந்த பண்பாட்டைத் தமிழகத்துக்கே முன்மாதிரியாக்கிக் காட்டியிருக்கிறார் கு.சி.பா. எனவும் தமிழகத்தில் உள்ள நாவலாசிரியர்கள் பலர் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களைப் போன்று எழுதிக் குவித்து வருகின்றனர். ஆனால் எதைச் சொல்ல வருகிறோம், நமது கதையின் களம் எது, சமுதாயத்துக்கு இதனால் என்ன நன்மை விளையப் போகிறது என்றெல்லாம் யோசித்து எழுதுவதுதான் கு.சி.பா.வின் பாணி.

அவரது கதைகளில் யதார்த்தம் இருக்கும். நிஜ மனிதர்கள், நிஜ உணர்வுகள் போன்றவற்றைப் பதிவு செய்வது கு.சி.பா.வுக்குக் கைவந்த கலை எனவும் குறிப்பிட்டார்.

இவருக்கு என்றோ கிடைத்திருக்க வேண்டிய சாகித்ய அகாதெமி, ஞானபீட விருதுகள் ஏன் தள்ளிப் போகின்றன என்று தெரியவில்லை எனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

பனிநிலவு நூலை எழுதிய இலண்டனில் வாழும் வவுனியா இரா.உதயணன் அவர்களுக்கு முதல்பரிசாக ஐம்பதாயிரம் உரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் பத்தாயிரம் அளவில் நூலாசிரியர்களுக்குப் பணப்பரிசும் பாராட்டுச் சான்றும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வழங்கி அனைவரையும் பாராட்டினார்.

பரிசு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் நூல்களின் விவரம்:

வி.ஜீவகுமாரன் (டென்மார்க்)
- சங்கானைச் சண்டியன்

நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு)
- மாத்தகரி

சை.பீர்முகமது (மலேசியா)
- பெண் குதிரை

நடேசன் (ஆஸ்திரேலியா)
- வண்ணத்திகுளம்

தெணியான் (இலங்கை)
- ஒடுக்கப்பட்டவர்கள்

கே.விஜயன் - (இலங்கை)
- மனநதியின் சிறு அலைகள்

சிவசுப்ரமணியன் (இலங்கை) - சொந்தங்கள்

தனபாலசிங்கம் (இலங்கை)
- ஊருக்கு நல்லது சொல்வேன்

கலைச்செல்வன் (இலங்கை) - மனித தர்மம்

உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.

பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

ஆர்.எஸ்.ஜேக்கப் - பனையண்ணன்,

சுப்ரபாரதி மணியன்
-சுப்ரபாரதி மணியன் கதைகள்

முனைவர் மு.இளங்கோவன் - இணையம் கற்போம்

புவலர். இராச.கண்ணையன் - குறளோசை

ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி

குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்

லேனா தமிழ்வாணன்
- ஒரு பக்கக் கட்டுரை 500

வெண்ணிலா - நீரில் அலையும் முகம்

பூங்குருநல் அசோகன்
- குமரமங்கலம் தியாக தீபங்கள்

கூத்தங்குடி அழகு ராமானுஜன்
- காவிரி மண்ணின்
நேற்றைய மனிதர்கள்

வாழ்நாள் சாதனை, கொடைச்சிறப்பு விருதுகள்:

தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மயிலை பாலுவுக்கும், தமிழ் - ஹிந்தி மொழியாக்கத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது தில்லியைச் சேர்ந்த எச். பாலசுப்ரமணியத்துக்கும் அளிக்கப்பட்டது.

அதேபோல், எழுத்தாளர்களுக்கு நிதியுதவி புரிந்து, அவர்களை ஊக்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த புரவலர் ஹாசிம் உமருக்கு இலக்கியக் கொடைச்சிறப்பு விருது வழங்கப்பட்டது.

விழாவில், எச்.பாலசுப்ரமணியம் இந்தியில் மொழியாக்கம் செய்த பனி நிலவு, உபாலி லீலாரத்னா சிங்களத்தில் மொழியாக்கம் செய்த தாகம், இந்திய இலக்கியத்திற்குக் கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

நாமக்கல் என்.சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சேவைக்கான பரிசு வழங்கப்பட்டது.

சி.அரங்கசாமி நன்றியுரையாற்றினார். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்கியதுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்..


கொழுந்து ஆசிரியர் அந்தோனி ஜீவா(இலங்கை)பரிசுபெறல்


வவுனியா உதயணன் பரிசுபெறல்


தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், மு.இளங்கோவன்


பார்வையாளர்கள்,


பார்வையாளர்கள், பரிசுபெறுவோர்


மு.இளங்கோவன் உரை

பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்களின் வானொலி நேர்காணல் இன்று ஒலிபரப்பு

இன்று (03.10.2011) இரவு 9.30-10.00 மணிக்குச் சாகித்ய அகாதெமியின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுவர் நூல்களுக்கான(சோளக்கொல்லைப் பொம்மை) விருதுபெற்ற பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பாவின் வானொலி நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. புதுச்சேரி வானொலி நிலையம் தயாரித்துள்ள இந்த நிகழ்ச்சியைத் தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களும் ஒலிபரப்புகின்றன. உடன் உரையாடுபவர் முனைவர் மு.இளங்கோவன்.