நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 ஜூன், 2015

தமிழ்மறவர் வை.பொன்னம்பலனார் அவர்களின் மகள் பேராசிரியர் பகுத்தறிவு அவர்கள் மறைவு!


பேராசிரியர் பகுத்தறிவு அவர்கள்

தந்தை பெரியார் அவர்களால் தமிழ்மறவர் என்று போற்றப்பட்ட புலவர் வை. பொன்னம்பலனார் அவர்களின் இரண்டாவது மகள் பேராசிரியர் பகுத்தறிவு அவர்கள் இன்று (28.06.2015) பிற்பகல் சென்னையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பேராசிரியர் பகுத்தறிவு அவர்கள் 1944 இல் பிறந்தவர். தாவரவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். அதன் பிறகு நாமக்கல், அரியலூர் அரசு கல்லூரிகளில் பணியாற்றியவர். அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 33 ஆண்டுகள் தாவரவியல் துறையில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும், பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ‘செனட்’ உறுப்பினராகவும் இருந்தவர்.

பேராசிரியர் பகுத்தறிவு அவர்களின் கணவர் பேராசிரியர் சாமி. பிச்சைப்பிள்ளை (அறவணன்) அவர்கள் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர்களுக்கு அன்புநெடுமாறன் என்ற ஒரு மகன் உண்டு. இவர் இலண்டனினில் மருத்துவராகப் பணிபுரிகின்றார்.

பேராசிரியர் பகுத்தறிவு அவர்களின் உடல், சென்னை போரூரில் உள்ள எண் 2.பி, முதன்மை நிழற்சாலை, ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் இல்லத்தில் 01. 07. 2015 (புதன்கிழமை) காலை 7 மணிமுதல் உறவினர்கள், நண்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் பகல் 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

தொடர்புக்கு: 0091 - 9943249936சனி, 27 ஜூன், 2015

இலக்கண அறிஞர் பேராசிரியர் சு.அழகேசன்

பேராசிரியர் சு.அழகேசன்

  தொல்காப்பிய மன்றம் அமைப்பது தொடர்பில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். தூத்துக்குடியில் வாழும் பேராசிரியர் சு. அழகேசன் அவர்களைத் தெரியுமா? என்று முனைவர் கட்டளை கைலாசம் அவர்கள் வினவினார். மனோன்மணியப் பல்கலைக்கழகப் பேராசிரியரா? என்று ஒரு வரியில் நிறுத்திக்கொண்டேன். ஆம். அவரேதான்! அவரையும் அவர் பணிகளையும் அறிவீர்களா? என்றதும், ஓரிரு கருத்தரங்குகளில் நொதுமலர் போல் பார்த்துள்ளேன் என்று முடித்துக்கொண்டேன்.

      பேராசிரியர் கட்டளை அவர்கள்தான் நம் ஐயா அழகேசன் அவர்களின் இலக்கண ஈடுபாட்டையும், அவரின் தொல்காப்பியப் பணிகளையும் அறிமுகம் செய்து வைத்தார்கள். இன்றைக்கு வாழும் பேராசிரியர்களில் தொல்காப்பியம் குறித்து உரையாடவும், இலக்கணம் குறித்து ஈடுபாட்டுடன் பேசவும் மிகச் சிலரே உள்ளனர். அந்தத் தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்துவருகின்றது. இந்த நிலையில் பேராசிரியர் சு. அழகேசன் அவர்களின் இலக்கண ஈடுபாடு அறிந்து அவரைச் சந்திக்க அவரின் தூத்துக்குடி இல்லத்திற்குச் சென்றேன். இன்முகத்துடன் வரவேற்ற பேராசிரியர் அவர்களுடன் மூன்றரை மணிநேரம் உரையாடும் இனிய வாய்ப்பு அமைந்தது.

     பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் சங்க இலக்கிய உரையாசிரியர்கள் உணர்த்தும்  இலக்கணக் குறிப்புகள் தொகுப்பும் ஆய்வும் என்ற தலைப்பில் செம்மொழி நிறுவனத்திற்காக உருவாக்கியிருந்த அரிய ஆய்வுத்தொகுதியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த ஆய்வுத்தொகுப்பின் ஒவ்வொரு இயலும் ஒரு முனைவர் பட்ட ஆய்வுக்குரிய தலைப்பாகத் தெரிந்தது. பழம்பெரும் உரையாசிரியர்களின் கடலன்ன உரைகளில் மூழ்கி ஆய்வுமுத்துக்களை எடுத்துள்ள இந்த முத்துநகர் ஊராரின் புலமையைப் "பாம்பின்கால் பாம்பறியும்" என்ற அடிப்படையில் நுழைந்து பார்த்தேன். அவர்தம் கடும் உழைப்பைப் போற்றி, வாழ்த்தினேன். “மகன் எனல் மக்கள் பதடி எனல்என்பதில்எனல்என்ற ஒரே சொல் ஈரிடங்களில் இருபொருளில் வரும் புதிரைப் பரிமேலழகர் வழியில் விடுவித்தபொழுது இலக்கணப் புலி ஒருவர் பதுங்கி வழிவிட்டதை நம் பேராசிரியர் சு. அழகேசனார் சொன்னபொழுது உள்ளம் மகிழ்ந்தேன்.

  நம் பேராசிரியர் சு. அழகேசனார் அவர்கள் குறிப்பு வினைகள்அமைப்பும் வருகை முறையும் என்ற தலைப்பில் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றவர்(1983). ஆய்வுக்காலத்தில் இவர்தம் நெறியாளர் பேராசிரியர் மா. இளையபெருமாள் ஆவார். தம் ஆசிரியர்மேல் மிகுந்த மதிப்பும், அன்பும்கொண்டு அழகேசனார் விளங்குவது பின்பற்றத்தகுந்த பண்பாகும். ஆய்வு மாணவராகப் பயின்றபொழுது இலக்கணப் பாடங்களை மாணவர்கள் உள்ளம்கொள்ளும் வகையில் இவர் நடத்திப் புகழ்பெற்றவர். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் அதில் பணிபுரிந்த பேராசிரியர்களும் நன்மாணாக்கர்களை உருவாக்குவதில் தலைசிறந்தவர்கள்.

  பேராசிரியர் சு. அழகேசனார் சிவகாசி அய்யநாடார் சானகி அம்மாள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பலவாண்டுகள் பணியாற்றியவர். அதன்பிறகு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி இம்மாத நிறைவில்(2015, சூன் 30) ஓய்வுபெற உள்ளார்.

  பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம் பழவூர் என்ற ஊரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர்(20.03.1955). இவர்தம் பெற்றோர் அ.சுப்பையா பிள்ளை, திருவாட்டி காந்திமதி அம்மாள் ஆவர். கடும் உழைப்பும், நல்லோரின் தொடர்பும் இவருக்குக் கல்விக்கரையில் துணைநின்றன.  பள்ளி இறுதி வகுப்பு வரை வடக்கன்குளம் தூய தெரேசாள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் புகுமுக வகுப்பையும்(1972), இளம் அறிவியல் வகுப்பையும்( 1975) நிறைவுசெய்தவர். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை நெல்லை ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர். மொழியியலில் முதுகலைப்பட்டமும், சான்றிதழும், சைவசித்தாந்தத்தில் பட்டயமும் பெற்றவர். முப்பது ஆண்டுகளாப் பேராசிரியர் பணியாற்றிய இவர் 32 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற நெறியாளராக விளங்கியுள்ளார். 80 ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார். 21 நூல்களையும் 150 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வரைந்துள்ளார். "அழகு" என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பல்வேறு இலக்கிய அமைப்புகள், கல்விக்குழுக்கள், சமூக மேம்பாட்டு அமைப்புகளில் பொறுப்புகள் ஏற்றுத் திறம்படச் செயல்பட்டுள்ளார்.

  பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் கல்லூரிப் பணியை ஒரு முகவரிக்கு உரிய இடம்  என்று நினைக்காமல் சேவை செய்வதற்குக் கிடைத்த ஓர் இடமாக நினைத்தவர். இதனால் எளிய நிலை மாணவர்கள் படித்து முன்னேறப் பெரும் உதவியாக இருந்தவர். இவரின் ஆதரவில் படித்துப் பலர் முன்னேறியுள்ளனர். இலக்கணத்தை வெறுத்து ஒதுக்கிய மாணவர்களையும் தம் வெல்லப் பேச்சால் இலக்கணம் பக்கம் இழுத்து ஆய்வுசெய்ய வைத்தவர். பேராசிரியர் ச.வே.சு. அவர்களின் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஆண்டுதோறும் பொழிவுகள் நடக்க வழிவகை செய்துள்ளார். தூத்துக்குடிப் பகுதியில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளுக்கு உயிர்கொடுக்கும் ஒரு கொடையாளராக இருந்து உதவிசெய்பவர்.

  தொல்காப்பியர் மன்றம் என்ற அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் தொல்காப்பியக் கருத்தரங்குகளும் இலக்கணக் கருத்தரங்குகளும் தம் சொந்த செலவில் நடத்துவதற்குத் திறம்படப் பணியாற்றியுள்ளார். இக்கருத்தரங்கச் செய்திகள் காற்றில் கரைந்துவிடாமல் நூல்வடிவில் ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாம்.

  பேராசிரியர் சு. அழகேசன் அவர்களின் தமிழ்ப்பணிக்கு உறுதுணையாக இருப்பவர் இவர்தம் துணைவியார் மருத்துவர் இராஜேஸ்வரி அவர்களாவார். தூத்துக்குடியின் புகழ்பெற்ற மருத்துவர் இவர். இவர்களின் ஒரே மகன் ருத்துவர் அ. சுதன்குமார் மருத்துவத் துறையில் மேல்படிப்பு படித்துவருகின்றார்.

 முனைவர் சு. அழகேசன், மருத்துவர் இராஜேஸ்வரி

  பணி ஓய்வுக்குப் பிறகும் தமிழ்ப்பணியில் - சிறப்பாகத் தொல்காப்பியம் பரப்பும் பணியில் ஈடுபட உள்ள பேராசிரியர் சு.அழகேசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

பேராசிரியர் சு. அழகேசன் அவர்களின் தமிழ்க்கொடை

 1. இலக்கணப் பாதைகள் (1991)
 2. டாக்டர் மா.இளையபெருமாள் அவர்களின் வாழ்வும் பணியும் (1994)
 3. திருவண்ணாமலை அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில்      வழிபாடுகளும் திருவிழாக்களும் (1996)
 4. இலக்கணச் சுவை (1996)
 5. இலக்கண ஆய்வு- தொல்காப்பியம் (2001)
 6. நன்னூல் எழுத்ததிகாரம் (2002)
 7. இலக்கண ஆய்வு - தொல்காப்பிய உரைகள் (2002)
 8. நன்னூல் சொல்லதிகாரம் எளிய உரை (2003)
 9. இலக்கண ஆய்வு: நன்னூல் (2003)
 10. இலக்கண ஆய்வு: நன்னூல் உரைகள் (2006)
 11. தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் ஒரு பல்கலைக்கழகம் (2006)
 12. இலக்கணப் பார்வைகளும் பதிவுகளும் (2007)
 13. தொல்காப்பியம் மூலம் மட்டும் (2008)
 14. இலக்கண ஆய்வுகள்: சிற்றிலக்கணங்கள் (2008)
 15. இலக்கணத் தேடல்கள் (2009)
 16. திருநெல்வேலி வட்டார ஆண்தெய்வங்கள் (2009)
 17. இலக்கண ஆய்வுக்கோவை (2011)
 18. ..சியின் தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணம் (2011)
 19. தொல்காப்பியக் கொள்கைகளும், தமிழ் இலக்கண வளர்ச்சியும் (2012)
 20. பேரா.சுந்தரம் பிள்ளையின் பன்முகப் பரிமாணங்கள் (2012)
 21. இலக்கண ஆய்வுக்கோவை (2015)
பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் பெற்ற விருதுகள்

 1. சிறந்த பேராசிரியர் விருதுமனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகம்
 2. ஜாம்பவான் விருது- தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், சென்னை
 3. சங்கரதாஸ் சுவாமிகள் விருது- இயல் இசை நாடக மன்றம், புதுவை
 4. தொல்காப்பிய விருது, ..சி அரிமா சங்கம், தூத்துக்குடி
 5. இலக்கணச் செம்மல் விருது, கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றம்,  சேலம்
 6. இலக்கியச் செம்மல் விருது, அரிமா சங்கம், தூத்துக்குடி
 7. சிறந்த சைவப் புரவலர் விருதுவெள்ளார் சங்கம், தூத்துக்குடி  

தமிழிசை மீட்சி குறித்த ஆவணம்…

  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் தமிழிசை வளர்ச்சிக்கு ஓர் இலக்கிய நிகழ்வு 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் மாலை ஆறுமணிக்கு நடைபெற்றுள்ளது. அக்காலத்தில் தமிழ் உணர்வு தழைத்த உணர்வாளர்கள் முன்னின்று இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.  தஞ்சை மாவட்ட உலகத் தமிழ்க் கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. சு.அறிவுறுவோன் அவர்களும், பெரம்பூர் ப. கண்ணையன் அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டமையை அறியமுடிகின்றது. பாவலர் தரங்கை. பன்னீர்ச்செல்வனார். பேராசிரியர் இரா. இளவரசு, புலவர் எண்கண் மணி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். எம் ஆவணப்படத்தில் இணைக்கத் தகுந்த இந்த அழைப்பிதழ் ஆவணம் நேற்றுதான் கிடைத்தது (26.06.2015). திருவாரூரில் புலவர் எண்கண் மணி ஐயா இல்லிலிருந்து நன்றியுடன் பெற்றுவந்தேன். 

வியாழன், 25 ஜூன், 2015

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் ஒரு நாட்டுப்புறவியல் செய்திக் களஞ்சியம்!
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்


தமிழ் நாட்டுப்புறக் கலைகள்குறித்த ஓர் ஆய்வுரை எழுத அண்மையில் நூல்களைப் படித்தபொழுது, தொடர்புடைய அறிஞர்களிடம் பேசியும் விவரம் பெறலாம் என நினைத்தேன். முதலில் தொடர்புகொள்ள நினைத்ததும் தூத்துக்குடிப் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் பெயர் நினைவுக்கு வந்தது. தொலைபேசியில் முதற்கட்டப் பேச்சு முடிந்தது. அடுத்து சிலநாள் இடைவெளியில் மீண்டும் பேசினோம். உரையாடல் அரைமணி நேரத்திற்கும் மேலாக நீண்டது.

உரையாடல் நிறைவில், “ஐயா! தாங்கள் புதுச்சேரி வரும்பொழுது செய்தி சொல்லுங்கள். இல்லம் வாருங்கள்என்று வேண்டுகோள் ஒன்றை வைத்தேன். அப்பொழுதுதான் பேராசிரியர் அவர்கள் தம்மால் நெடுந்தூரம் பயணிக்கமுடியாது என்றும் சிலவாண்டுகளுக்கு முன் நடைபெற்ற நேர்ச்சியொன்றில் கால் எலும்புகள் முறிந்து இல்லில் ஓய்வெடுப்பதாகவும் கூறினார்கள். இச்சொற்கள் என் உள்ளம் கரைத்தது. நாட்டுப்புறவியல் ஆய்வுக்கெனப் பலநூறு கல்தொலைவு அலைந்து திரிந்து செய்தி திரட்டி, அறிவுத்தீ கொளுத்திய ஒரு பேராசான் இல்லில் சிறைப்பட்டமைபோல் வாழ்வது வருத்தம் தந்தது.

அப்பொழுது, நான் வந்து பார்க்க இசைவு தரும்படி கேட்டுக்கொண்டேன். நாள் குறித்தோம். தொடர்வண்டியில் சீட்டுப் பதிந்து உரிய நாளுக்குக் காத்திருந்தேன்.

22. 06. 2015 முத்துநகர் தொடர்வண்டியில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டேன். இவ்வூருக்கு என் முதல்செலவு இதுவாதலின் நண்பர்களிடம் உரையாடி ஊர்குறித்த உரிய விவரங்களைப் பெற்றுக்கொண்டேன். 23. 06. 2015 காலை எட்டு மணியளவில் பேராசிரியர் இல்லம் சென்றடைந்தேன். இதுதான் பேராசிரியருடன் அமையவுள்ள நெருக்கமான முதல் சந்திப்பு. இதற்கு முன்பு கருத்தரங்குகள் சிலவற்றில் பேராசிரியரின் உரை கேட்டிருந்தாலும் என் உருவம் நினைவில் நிற்கும்படியாக எந்தச் சந்திப்பும் இதுவரை நடந்ததில்லை.

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் இல்லத்தில் ஒரு குளியல் போட்டேன். பேராசிரியர் அவர்களின் துணைவியார் திருவாட்டி அருணா அம்மா அவர்கள் சிற்றுண்டியும் பகலுணவும் குறிப்பறிந்துகொடுத்தார்கள். மெதுவாக நலம் வினவியபடி தமிழ் ஆய்வுச்சூழலில் இருவரும் புகுந்தோம். பேராசிரியர் அவர்களின் இளமைக்காலம், கல்வி, ஆசிரியர்பணி, ஆய்வு, களப்பணி, நூல் முயற்சிகள், ஆய்வறிஞர் நா.வா. அவர்களின் தொடர்பு, திராவிட இயக்க ஈடுபாடு, பொதுவுடைமை இயக்க ஈடுபாடு, .உசி குறித்த விவரங்கள், ஆஷ்கொலை, ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட வரலாறு, நெல்லையில் கிறித்தவம் பரவிய வரலாறு, தாமிரபரணி சார்ந்த எழுத்தாளர்கள், கரிசல் எழுத்தாளர்கள், நெல்லை மாவட்டத்துப் படைப்பாளர்கள், இன்றைய விருதளிப்பு, இலக்கியப்போக்குகள்  என்று மாலை 4 மணிவரை எங்கள் உரையாடல் தொடர்ந்தது. உரிய செய்திகள் சிலவற்றை ஒலிப்பதிவில் பதிந்துகொண்டேன். சில படங்களையும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்.

பேராசிரியர் அவர்கள் சற்றும் சலிப்படையாமலும் சோர்வடையாமலும் ஒரு வகுப்புத்தோழனிடம் உரையாடுவதுபோல் உரையாடினார்கள். அவர்களின் பணிகளைப் பிறகு விரித்து எழுத நினைத்தாலும் இப்பொழுது சில குறிப்புகளைப் பதிந்துவைக்கின்றேன்.

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் 09.04.1943 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் ஆழ்வாரப்பன், சுப்பம்மாள் ஆவர். தந்தையார் தொழிலின் நிமித்தம் பல ஊர்களில் வாழ்ந்ததால் இவரின் படிப்பும் பல ஊர்களில் அமைந்தது. அவ்வகையில் ஓட்டப்பிடாரம், சென்னையில் சூளைமேட்டில் இருந்த மாநகராட்சிப் பள்ளி, ம.தி.தா.இந்துக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி என இவரின் பள்ளிப்படிப்பு அமைந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தம் இருபதாம் அகவையில் புலவர் வகுப்பில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் கல்வி பயின்றவர் (1963 - 67). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆ.சிவசுப்பிரமணியன் பயின்றபொழுது உலக ஊழியர்உளுந்தூர்பேட்டை சண்முகம், .நடேசமுதலியார், மெய்யப்பன், மு.அண்ணாமலை, ஆறு. அழகப்பன், சோம.இளவரசு போன்ற பேராசிரியர்கள் பணிபுரிந்தனர்.

1967 இல் தூத்துக்குடியில் உள்ள வ..சி.  கல்லூரியில் பணியேற்றார். 2001 ஏப்ரல் மாதம் வரை இவரின் தமிழ்ப்பணி இக்கல்லூரியில் அமைந்தது. பேராசிரியர் அவர்கள் தூத்துக்குடி கல்லூரியில் பணியாற்றியபொழுது பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு, பல்வேறு ஊர்களில் மாணவர்கள், பொதுமக்கள், இயக்கத்தவர்களுக்கு மார்க்சிய வகுப்புகளை நடத்தியுள்ளார்.பேராசிரியர் நா.வானமாமலை, தோழர் நல்லகண்ணு, தோழர் ப.மாணிக்கம் உள்ளிட்ட பொதுவுடைமை இயக்கத்தவர்களுடன் அமைந்த நட்பால் இவர்தம் படிப்பு சமூகவியல் சார்ந்தும், நாட்டுப்புறவியல் சார்ந்தும் விரிவடைந்தது.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கட்டுரைகளும் நூல்களும் தமிழகத்தில் அறியப்படாமல் இருந்த பலசெய்திகளை வெளிச்சமிட்டுக் காட்டுவன. ஆஷ் கொலை குறித்தும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. குறித்தும் இவர் வரைந்துள்ள ஆய்வுரைகள் தமிழ்நாட்டு அறிஞர்களால் பெரும் வரவேற்பைப்பெற்றவை. நெல்லை மாவட்டத்தின் சிற்றூர்ப் புறங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் மக்களிடையே இருந்த வாய்மொழி வழக்காறுகளைத் தொகுத்து, தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர். எழுதுவதும் பேசுவதும் இவரின் இயல்பாக உள்ளது. அறிவார்வம்கொண்டவர்கள் பேராசிரியர் அவர்களின் உரையில் நனைந்தால் புத்துணர்ச்சியும் புத்தறிவும் பெறலாம்.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்-அருணா இணையருக்கு மூன்று மக்கட்செல்வங்கள். ஆழ்வார், இராமலிங்கம், சுப்பு(மகள்) ஆவர். அனைவரும் படித்து நல்ல நிலையில் உள்ளனர்.

பேராசிரியர் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் எழுதுவதிலும், பேசுவதிலும் தம் வாழ்நாளை உவப்புடன் ஈடுபடுத்திவருகின்றார்.

பேராசிரியர் .சிவசுப்பிரமணியன் நூல்கள்

1.      பொற்காலங்கள்ஒரு மார்க்சிய ஆய்வு(1981)
2.      அடிமை முறையும் தமிழகமும்(1984)
3.      ..சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும்(1986,2012)
4.      ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்(1986, 2009)
5.      மந்திரமும் சடங்குகளும்(1988,1999,2010,2013)
6.பின்னி ஆலை வேலைநிறுத்தம்(1921,1990)(இணையாசிரியர் .இரா. வேங்கடாசலபதி)
7.      எந்தப் பாதை(2000)
8.      ..சி. ஓர் அறிமுகம்(2001)
9.      கிறித்தவமும் சாதியும்(2001,2001,2003,2006,2011)
10.   தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார்(2003)
11.   தமிழகத்தில் அடிமை முறை(2005,2007 மார்ச்சு,2007வம்பர், 2010,2012
12.   நாட்டார் வழக்காற்றியல் அரசியல்(2006)
13.   பஞ்சமனா பஞ்சயனா(2006)
14.   தோணி(2007)
15.   கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும்(2007,2012)
16.   கோபுரத் தற்கொலைகள்(2007)
17.   வரலாறும் வழக்காறும்(2008,2010)
18.   ஆகஸ்ட் போராட்டம்(2008)
19.   வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி(2008)
20.   உப்பிட்டவரை…(2009)
21.   இனவரைவியலும் தமிழ் நாவல்களும்(2009)
22.   பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை(2010)
23.   படித்துப் பாருங்களேன்….(2014)


பதிப்பு

1.      பூச்சியம்மன் வில்லுப்பாட்டு(1989, 2013)
2.      தமிழக நாட்டுப்புறப் பாடல்களஞ்சியம்(தொகுதி 10)(2003)
3.      தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம்(தொகுதி10)(2004)
4.      உபதேசியார் சவரிராய பிள்ளை 1801 -1874(2006)
5.      கல்லறை வாசகப்பாகூத்து நாடகம்(2007)
6.      பெரியநாயகம் பிள்ளை தன்வரலாறு(2008)

குறுநூல்கள்

1.      எந்தப் பாதை(1992)
2.      தர்காக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும்(1997)
3.      பிள்ளையார் அரசியல்(2000)
4.      பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள்(2014)
5.      மதமாற்றத்தின் மறுபக்கம்(2002)
6.      விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல்(2003)
7.      புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள்(2006)
8.      இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்(2012)
9.      தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்த சிந்தனைகள்(2012)
10.   தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமைகளும்(2014)
11.   இந்தியாவில் சாதிமுறை: அம்பேத்கரும் காந்தியும்(2014)
12.   அம்பேத்கரும் மனுஸ்மிருதியும்(2014)
** இக்குறிப்புகளை, படங்களை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுக.

புதன், 17 ஜூன், 2015

தொல்காப்பியப் பரவலில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் பங்களிப்புதமிழில் முதல் நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தின் நிழலைக் கடந்த ஈராயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பின் நெடுகிலும் காணலாம். ஓலையில் இருந்த இச்சுவடியை முதன்முதல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் அச்சில் பதித்து உலகுக்கு வழங்கினார்(1847). அவரைத் தொடர்ந்து சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் முழுமையையும் பதிப்பித்து வழங்கினார். அதன்பிறகு அறிஞர் பெருமக்கள் பலரும் தொடர்ந்து பதிப்பித்தும், உரைவரைந்தும்,மொழிபெயர்த்தும் தமிழ் உலகிற்கு வழங்கிவருகின்றனர்.

மூதறிஞர் செம்மல் .சுப.மாணிக்கனார் அவர்கள் தொல்காப்பியம் குறித்துச் சிந்தித்தும் எழுதியும் பேசியும் தம் கடமையையாற்றியுள்ளார். எங்கள் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் தொல்காப்பியப் பதிப்பில் புதிய அத்தியாயம் படைத்தவர். இவர்கள் வரைந்த ஆராய்ச்சி முன்னுரைகள் பெருஞ்சிறப்பிற்கு உரியன. அறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியம், தமிழண்ணல் உள்ளிட்டோர் இன்றும் தொடர்ந்து தொல்காப்பியம் குறித்து எழுதியும் பேசியும் வருகின்றனர். இந்தத் திசை நோக்கி நகரும்பொழுது சில எண்ணங்கள் தோன்றின. முதலில் தமிழின் முதல்நூலாக அமையும் தொல்காப்பியத்தை மக்கள் அனைவருக்கும் உரிய நூலாக எளிய வடிவங்களில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தொல்காப்பிய மன்றம் தோற்றம் கண்டுள்ளது. மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தொல்காப்பிய ஈடுபாட்டை, அவர்தம் நூல்களில் கற்று, உணர்வுபெற்றுத் தொல்காப்பியம் பரப்பும் முயற்சியில் நண்பர்களின் நெறிகாட்டலில் இயங்க உள்ளோம்.

மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம் அவர்கள் தொல்காப்பியக் கடல், தொல்காப்பியப் புதுமை, தொல்காப்பியத் திறன் என்ற மூன்று தலைப்பில் நூல்களை வழங்கியுள்ளார். இந்த நூல்கள் பல்வேறு அமையங்களில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒருகட்டுரை இருவேறு நூல்களில் பதிவாகியுள்ளமையையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொல்காப்பியம் மாணிக்க உரையும் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு), தமிழ்க்காதல் நூலும் (மணிவாசகர் பதிப்பகம்) மூதறிஞர் அவர்களின் தொல்காப்பியப் புலமை காட்டும் நூல்களாகும்.

மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் 1600 நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியத்தின் பெருமை உணராத நம்மவரை, “பதின்மூன்று அடுக்கு நிலைகொண்ட திருவரங்கக் கோபுரத்தை நிமிர்ந்து அண்ணாந்து பார்க்கமாட்டாத நெஞ்சக்கூனர்க்கு என்ன சொல்வது? (பக்கம் 365, தொல்காப்பியக் கடல்) என்று வினா எழுப்புவது நம் உறக்கம் கலைக்கும் வரிகளாகும்.

தொல்காப்பியம் ஓர் இலக்கணம் என்ற அவப்பார்வையால் அறிஞருலகம் திருக்குறளுக்குக் கொடுத்துவரும் நன்மதிப்பை இம்முதனூலுக்குக் கொடுக்கத் தவறிவிட்டது” என்று உள்ளம் வருந்துகின்றார் (பக்கம் 5).

தமிழ்மொழிக்கும், தமிழினத்துக்கும், தமிழ் நிலத்துக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் முதல்நூல் தொல்காப்பியம்” என்பது மூதறிஞர் அவர்களின் துணிபு( தொல்காப்பியக் கடல், பக்கம். 56 ).

தொல்காப்பியக் கடல் என்னும் நூலில் ‘தமிழ் முதல் நூல்’ என்ற தலைப்பில் உள்ள கட்டுரை 1957 இல் புதுக்கோட்டைத் திருக்குறள் கழகப் பொழிவாகும். தொல்காப்பியச் சிறப்பைப் பலபடப் பேசும் கருத்துகள் இக்கட்டுரையில் உள்ளன.

“பேரரசர்கள் நிறுவிய வரலாற்றுக் கற்றூண்களும் கற்கோட்டைகளும் சின்னமும் பின்னமும்பட்டு அழிந்தொழியும் இவ்வுலகில், ஒரு தமிழ்ப்புலவன் மூவாயிரம் ஆண்டுகட்குமுன் பனையேட்டில் எழுதிய தொல்காப்பியப் பெருநூல் சிதைவின்றி வழிவழிக் காக்கப்பட்டு, இன்றும் நம் உடைமையாக வாழ்கின்றது. காலக்கோட்படாதும், கடும்பகைக் கோட்படாதும் இத் தனிப்பெரும் பனுவலைக் குடும்பச்சொத்துப் போற் காத்தளித்த நம் முன்னோர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு தவப்பெரிது. நம் மூதாதையர் அடித்தொண்டினைப் பின்பற்றித் தமிழினத்தின் பொதுவுடைமையான தொல்காப்பியத்தினை நம் பிந்தியோர்க்கு நாமும் காத்து வழங்கவேண்டாமா? (பக்கம் 68, 69, தொல்காப்பியக் கடல்) என்று உறுதியேற்க செம்மல் வ.சுப.மாணிக்கம் அவர்கள் நமக்கு வழிகாட்டுகின்றார்.

தொல்காப்பியத்தில் இல்லறநெறி, பாலியல்நெறி, போர்நெறி, அரசியல்நெறி, மெய்ந்நெறி, பொதுநெறி, மொழிநெறி, இலக்கிய நெறிகள் உள்ளன என்று நுண்ணிதின் உணர்ந்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் எடுத்துக்காட்டியுள்ளார்

 வ.சுப.மாணிக்கம் அவர்களின் நூல்களில் கீழ்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.தொல்காப்பியக் கடல்- மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்

31 கட்டுரைகள் அடங்கிய நூல்.12+372=384 பக்கம் கொண்டது. 1987 இல் முதல் பதிப்பு. மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு.
இந்த நூலில் உள்ள கட்டுரைகள்:

 1. தொல்காப்பிய நயம்
 2. தொல்காப்பியம் நிலைபெற்றது எப்படி?
 3. எழுத்துமுறை
 4. தொல்காப்பியப் புதுமை
 5. மொழியறிஞன் தொல்காப்பியன்
 6. தமிழ் முதல்நூல்
 7. தொல்காப்பியர் நெறிகள்
 8. தொல்காப்பியப் புதிய உத்திகள்
 9. புதிய ஃ
 10. மாற்றொலியன்
 11. பாவம்
 12. ஆத்திசூடியும் எழுத்தியலும்
 13. மொழி முதலெழுத்துக்களின் வரம்பு
 14. அவன் என்பது யார்?
 15. வழுவமைதியா? மயக்கமா?
 16. சொல்லிய முறை
 17. புறத்தும் புறத்தோரும்
 18. பாடாண் எட்டு
 19. சிறந்தது பயிற்றல்
 20. பாடம் முரணா? வடிவா?
 21. பொருளே உவமம்
 22. பாவின் இனங்களா?
 23. செய்யுளியல்காரிகை
 24. தொல்காப்பிய உரைநயம்
 25. தொல்காப்பிய உரை நெறிகள்
 26. தொல்காப்பிய உரைத் திறன்கள்
 27. இலக்கண ஒருமைப்பாடு
 28. இலக்கணப் படைப்புக்கள்
 29. தமிழ்நாடு? தமிழ்நாட்டு?
 30. புதிய ஐந்திறப் போக்கு
 31. தொல்காப்பியம் இன்றும் நாளையும்தொல்காப்பியப் புதுமை.சுப. மாணிக்கம்

மு.. 1988, 156 பக்கம். மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு.

இந்த நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. அவையாவன:

 1. தொல்காப்பியப் புதுமை
 2. தொல்காப்பியன் ஒரு மொழியறிஞன்
 3. தமிழ் முதல் நூல்
 4. காவியப் பேச்சு
 5. சாத்தனார்
 6. தியாகம்
 7. அழகியல்
 8. மணிநாவொலி
 9. பாவம்
 10. அருஞ்சொற்கள்
 11. வாழ்க்கைத்துணை
 12. பாரதியின் புலமை
 13. பாரதியின் பழமை
 14. பாரதி கண்ட தேசிய ஒருமை
 15. சங்க நெறிகள்
 16. தொல்காப்பிய நெறிகள் என்பன அவை.தொல்காப்பியம் எழுத்திகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, 1989 அக்டோபர், பக்கம் 10+202=212

தொல்காப்பியம் நூல் மரபு, மொழிமரபு என்னும் ஈரியல்களுக்கு அமைந்த விரிவான உரை நூல் இஃது.

தொல்காப்பியம் நூலுக்குப் பனம்பாரனார் பாடிய 15 அடிகள் சிறப்புப் பாயிரத்திற்கு மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்கள் 16 பக்கம் அகலவுரை கண்டுள்ளமை இவர்தம் தமிழ் நூல்பயிற்சிக்கு எடுத்துக்காட்டாகும்.

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் அவர்களின் வழியில் தொல்காப்பியம் பரப்புவோம்!


சனி, 13 ஜூன், 2015

பண்ணாய்வாளர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா, குடந்தை கதிர். தமிழ்வாணன் நினைவு விருது வழங்கும் விழா


குடந்தை (கும்பகோணம்) காந்திப் பூங்கா எதிரில் அமைந்துள்ள சுழற்கழகப் பண்பாட்டு நடுவத்தில் (ரோட்டரி அரங்கம்) 20.06.2015 காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை பண்ணாய்வாளர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவும் குடந்தை கதிர். தமிழ்வாணன் நினைவு விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன.

இறைநெறி இமயவன் தலைமையில் நடைபெறும் நிகழ்வின் தொடக்கத்தில் கூகூர் இரா. கத்தூரிரங்கன், க. பூவராகவன், குடந்தை ச.சரவணன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெறும். பேராசிரியர் இரா. சிவக்குமரன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரின் நினைவுப்பதிவு என்னும் தலைப்பில் மு.இளங்கோவன் கருத்துரையாற்ற உள்ளார். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் இராச.கலைவாணி அவர்கள் தொன்மைத் தமிழிசை எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.

இரண்டாம் அமர்வு பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி 4.30 மணிக்கு நிறைவுறும்.

புலவர் கதிர் முத்தையன் அவர்கள் தலைமையில் விருது வழங்கல் நிகழ்வு நடைபெற உள்ளது. சி. பா. தமிழ்ச்சோலை அவர்கள் முன்னிலையில் நடைபெறும் நிகழ்வில் மு.இளங்கோவன், தி. சீ. வேங்கடசுப்பன், கி. வேங்கடரமணி, சு. இளஞ்சேட்சென்னி, பாவலர் பூவையார், புலவர் சு.காமராசு, வை. மு. கும்பலிங்கன், நெல்லை வே.கணபதி புலவர்  கூத்தங்குடி அரங்கராசன், மு. பராங்குசன் உள்ளிட்டவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தனித்தமிழறிஞர் குடந்தை கதிர். தமிழ்வாணன் அவர்களின் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. நிறைவில் இரா. திருமாலன்பன் நன்றியுரை வழங்குவார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் குடந்தை உலகத் தமிழ்க்கழகத்தினர் செய்துள்ளனர்.


தொடர்புக்கு:

பேராசிரியர் இரா. சிவக்குமரன் 9443332332

புலவர் கதிர். முத்தையன் 9944478763