நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

பத்துப்பாட்டு பாடியவர்கள் பட்டியல்

பத்துப்பாட்டு

தமிழர்களின் பண்டைய வரலாற்றையும்,வாழ்க்கை முறைகளையும், கலைகள், விருந்தோம்பல், ஆட்சிச் சிறப்பினையும் அறிவிக்கும் ஆவணமாக இருப்பன பத்துப்பாட்டு நூல்களாகும். பண்டைத் தமிழகத்தின் பல பகுதிகளைப் பற்றி அறிவதற்கு இந்நூல்கள் பேருதவி புரிகின்றன.இசை,கூத்து பற்றிய அரிய வரலாறு இந்நூல்களில் இடம்பெற்றுள்ளன.தமிழர்களின் அறிவுக்கருவூலமான இந்நூல்களை வழங்கிய புலவர் பெருமக்களைப் பற்றிய பட்டியலை வழங்குகிறேன்.இவர்களின் விரிந்த வரலாறு பின்னர் வெளியிட உள்ளேன்.

பாடியவர்கள் பட்டியல்

1.திருமுருகாற்றுப்படை - நக்கீரனார்
2.பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்
3.சிறுபாணாற்றுப்படை - இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்ததனார்
4.பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5.முல்லைப்பாட்டு - காவிரிப்பூம்பட்டினத்துப்
பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
6.மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
7.நெடுநல்வாடை - மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்
8.குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
9.பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
10.மலைபடுகடாம் - இரணியமுட்டத்துப்
பெருங்குன்றூர்பெருங்கௌசிகனார்

வியாழன், 28 பிப்ரவரி, 2008

கணினியும் இணையப் பயன்பாடும் ஒருநாள் கருத்தரங்கு

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர்கல்லூரியும், சென்னைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் இணைந்து 28.02.2008 காலை 10.30 மணியளவில் கணினியும் இணையப்பயன்பாடும் என்னும் பொருளில் ஒருநாள் பயிலரங்கை மாணவிகள் பயன்பெறும் வண்ணம் நடத்தின.

பயிலரங்கிற்கு வந்திருந்தவர்களைத் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் இராமேசுவரி அவர்கள் வரவேற்றார். தமிழ் இணையப்பல்கலைக்கழக இயக்குநர் திரு.ப.அர.நக்கீரன், பேராசிரியர் சுதந்திரமுத்து, திரு.சானகிராமன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகளை விவரித்தனர். மாணவர்களுக்குக் காட்சி விளக்கமும் தரப்பெற்றன.

பிற்பகல் நடைபெற்ற அமர்வில் முனைவர் மு.இளங்கோவன், திருவாட்டி.மிக்சிமோள் திரு.கண்ணதாசன், திரு.சாகுல் அமீது ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், பிற துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நற்றிணை பாடிய புலவர்கள்

எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிறப்புடையது.இந்நூல் 400 பாடல்களைக்கொண்டது.எனவே நற்றிணை நானூறு எனவும் அழைக்கப்பெறும். ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளைக்கொண்ட பாடலடிகளைக் கொண்டது.அகப்பொருள் செய்திகளை இந்நூல் கொண்டிருந்தாலும் கிள்ளி,குட்டுவன், செழியன்,சென்னி முதலான பெருவேந்தர்களையும் ஆஅய்,ஓரி,காரி போன்ற கொடை வள்ளல்களையும் பற்றிய பல செய்திகளைத் தாங்கியுள்ளது.

அன்னி,மிஞிலி,குழிசி,புல்லி,பழையன்,தித்தன்,நன்னன் போன்ற குறுநிலமன்னர்களையும் தழும்பன்,திருமாவுண்ணி,விராஅன்,வீரை போன்ற மறவர்களைப் பற்றியும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது.நற்றிணையின் 234 ஆம் பாடல் முழுவதும் கிடைக்கவில்லை(?).385 ஆம் பாடலின் பிற்பகுதி கிடைக்கப்பெறவில்லை.இந்நூலின் 56 பாடல்களின் ஆசிரியர்பெயர் காணப்பெறவில்லை.ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 192 என்பர்.நற்றிணைக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வரைந்த உரை அறிஞர்களால் போற்றப்படுகிறது.பெருமழைப்புலவரின் உரைக்குறிப்பு பல விளக்கம் தருவன.இந் நூலில் இடம்பெற்றுள்ள புலவர்கள் பற்றிப் பட்டியலிட்டு விரிவாக எழுதி வைத்துள்ளேன்.பின்னர் வழங்குவேன்.

புதன், 27 பிப்ரவரி, 2008

குறுந்தொகை பாடிய புலவர்கள்

சங்க இலக்கிய நூல்களில் குறுந்தொகைக்கு உயரிய இடம் உண்டு. ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல் நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையும் கொண்டது.இந்நூலில் 401 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கடவுள் வாழ்த்தாக ஒரு பாடலும் உள்ளது.இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவன் பெயர் தெரியவில்லை. இந்நூலின் 307,391 ஆம் பாடல்கள் ஒன்பதடி உள்ளதாகக் குறிக்கும் உ.வே.சா அவர்கள் 391 ஆம் பாடல் சில படிகளில் எட்டடியாக உள்ளது என்கிறார் (ப.5) .ஆனால் 307 ஆம் பாடல் ஒன்பது அடியாகவே எல்லாப்படிகளிலும் உள்ளது. இந்த ஒரு பாடலை நீக்கிவிட்டால் மற்ற நூல்களைப் போலவே 400 பாடலாகக் குறுந்தொகை அமையும் என்கிறார் உ.வே.சா.

இந்நூல் பாடல்களைப் பாடிய புலவர்கள் 205 புலவர்கள் ஆவர். பத்துச் செய்யுட்களைப் பாடிய புலவர்களின் பெயர் தெரியவில்லை. கடவுள் வாழ்த்து பாடிய பெருந்தேவனாரையும் சேர்த்தால் 206 புலவர்கள் குறுந்தொகையைப் பாடியுள்ளமை புலனாகும். இவ்வெண்ணிக்கயில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. (இவை பற்றி விரிவாகப் பின்பு எழுதுவேன்)

திங்கள், 18 பிப்ரவரி, 2008

புதுச்சேரியிலிருந்து தமிழ்க்காவல் இணைய இதழ்...

புதுச்சேரியிலிருந்து அச்சு வடிவிலும் இணையவடிவிலும் பல இதழ்கள் வெளிவருகின்றன.அவ்விதழ்கள் இலக்கியம்,அரசியல்,சமூகம் எனப் பல போக்குடையன.

தெளிதமிழ் என்னும் பெயரில் முனைவர் இரா.திருமுருகனாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் தமிழ்,மொழி,இன,நாட்டு உணர்வுடன் அனைவராலும் விரும்பும் வண்ணம் வெளிவருகிறது.இவ்விதழ் இணைய வடிவிலும் கிடைக்கின்றது. இத்தெளிதமிழ் மாத இதழ் நடத்தியவர்கள் தமிழ்வளர்ச்சிக்கு நாளிதழ் ஒன்று வெளியிட நினைத்தனர்.அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்துவரும் வேளையில் உலகத்தமிழர்களுக்குப் பயன்படும் வண்ணம் தமிழ்க்காவல் என்னும்பெயரில் புதிய இணைய இதழ் ஒன்று தொடங்க உள்ளனர்.

தெளிதமிழின் நாளிதழ் முயற்சிக்கு இணையாகத் தமிழ்க்காவல் இணையவிதழ் வெளிவருகின்றது.வரும் மார்ச்சுத்திங்களில் இதழ் வெளிவர உள்ளது.பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஆசிரியராக இருப்பார்.ஆசிரியர் குழுவில் பேராசிரியர் தேவமைந்தன், திரு.நந்திவர்மன்,முனைவர் மு.இளங்கோவன் உள்ளனர்.

புதுச்சேரியிலும்,தமிழகத்திலும்,உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் தமிழ் மொழி, இலக்கியம்,இனம்,பண்பாடு,வரலாறு சார்ந்த செய்திகளும் கட்டுரைகளும் இடம்பெற உள்ளன.தமிழுக்கு ஆக்கம் தரும் படைப்புகள்,செய்திகள் இடம்பெறும்.ஒலி-ஒளிக் காட்சிகள், ஒளிப்படங்கள் இடம்பெறும்.உலகத்தமிழர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பிவைக்கலாம். விரிவான விளக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பிற்கு :

முனைவர் இரா.திருமுருகனார்,
62,மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி -605001,இந்தியா
கைப்பேசி : + 9362664390
மின்னஞ்சல் :irathirumurugan@yahoo.co.in

வெள்ளி, 15 பிப்ரவரி, 2008

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகபுகு வஞ்சி

தனித்தமிழில் படைப்புநூல்கள் பலவற்றை வழங்கியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். பாடலாகவும், உரைநடையாகவும், உரையாகவும், பாட்டும் உரையாகவும், பாவியமாகவும் விரிந்துநிற்கும் இவர்தம் தமிழ் இலக்கியப் பணியில் 'மகபுகு வஞ்சி' குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.பெண்களுக்கு அறவுரை கூறுவதாக அமைவதோடு தமிழ் யாப்பில் மிகுதியாகப் பயன்படுத்தப்படாத வஞ்சிப்பாவால் இந்நூல் அமைந்துள்ளதால் இந்நூலின் சிறப்பு மேம்பட்டு நிற்கின்றது.எனவே பலராலும் அறியப்படாமல் உள்ள வாழ்வியல் பயன்நல்கும் இருபதாம் நூற்றாண்டின் இவ் வஞ்சிப்பாட்டு நூலை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

மகபுகுவஞ்சி அறிமுகம்

பெருஞ்சித்திரனாரால் இயற்றப்பட்டு,அவரால் உரையும் வரையப்பெற்ற நூல் மகபுகு வஞ்சியாகும்.இந்நூல் 1960 இல் எழுதப்பெற்று,முதற் பத்துப்பாடல்கள் மட்டும் மு.சாத்தையா (மு.தமிழ்க்குடிமகன்) அவர்களின் திருமண நினைவு வெளியீடாக வெளியிடப் பெற்றது.முழுநூலும் தென்மொழி மறை. நித்தலின்பனார் அவர்களின் திருமண நிகழ்வுநாளில் 12.12.1973 இல் வெளியிடப்பெற்றது. இந்நூல் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் அவ்வாங்கிலப் பாடல்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கமும் தரப்பெற்றுள்ளது.

மகபுகுவஞ்சி நூலமைப்பு

மகபுகுவஞ்சி நூல் இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் பெண்ணொருத்திக்கு இல்லறச் சிறப்பின் மேன்மையைப் பல நிலைகளில் விளக்கிக்காட்டும் வகையில் எழுதப் பெற்றுள்ளது. இந்நூல் முப்பது பாடல்களைக் கொண்டுள்ளதுடன் அப்பாடல்களுக்கு நூலாசிரியரே தெளிந்த, விரிந்த உரையும் வரைந்துள்ளதால் நூல் நுவல்பொருளை மயக்கமின்றி உணரமுடிகின்றது. மகபுகு வஞ்சி அகவியல், புறவியல், பொதுவியல் என்னும் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இயலுக்குப் பத்துப்பாடல்கள் என்ற முறையில் முப்பதுபாடல்கள் உள்ளன. நூலின் முதலில் தாய்மை வணக்கம் உள்ளது. அடுத்து அகவியல் என்னும் தலைப்பில் நூல் தொடங்குகிறது.

மகபுகுவஞ்சி நூல் குறளடி வஞ்சிப்பாவால் அமைந்துள்ளது. நூலின் பாடுபொருளும், பயன்படுத்தப்பட்ட யாப்பும் பாவலரை நுண்ணோக்கு உணர்வுடையவராகவும், யாப்பில் மேம்பட்ட புலமையுடையவராகவும் காட்டுகின்றன. ஒவ்வொரு பாட்டும் ஆறு அடிகளைக் கொண்டது. அவ்வாறு அமையும் ஆறு அடிகளும் ஓர் ஒழுங்கமைப்பில் உள்ளன. முதல் நான்கடிகளும் குறளடியால் அமைந்த வஞ்சியுரிச்சீராக நின்று, கொளினே என்னும் தனிச்சொல் பெற்று ஈற்றடி இரண்டும் ஆசிரியச் சுரிதகத்தால் அமைந்துள்ளன. (வஞ்சிப்பா இருவகைப்படும்.குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா; இரு சீர் கொண்ட அடிகளால் வந்து தனிச்சொல்லும், ஆசிரியச் சுரிதகமும் பெற்று வருவது குறளடி வஞ்சி;முச்சீர் கொண்ட அடிகளால் நிரம்பித் தனிச்சொல்லும், ஆசிரியச் சுரிதகமும் பெற்று வருவது சிந்தடி வஞ்சி; வஞ்சிப்பாவில் ஆசிரியச் சுரிதகம் மட்டும் இடம்பெறும். வெண்பாச் சுரிதகமாக வாரா.என்னை: 'தனிச்சொல் வந்து மறைதலில் வாரத்தினாலிறும் வஞ்சி வஞ்சிக்கொடியே' என்பது காரிகை(46)).

மகபுகு வஞ்சி பாடலின் முதலடி விளியாகவும் (மகடூஉ முன்னிலை), இறுதி இரண்டடிகள் மூன்று இயலுக்கும் முப்பயன்கூறும் முடிவாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாட்டிலும் இடையில் அமைந்துள்ள மூன்றடிகளே மகளிருக்குக் கூறப்பட்டுள்ள அறவுரைகளைத் தாங்கி நிற்கின்றன. மிகக்குறைந்த சீர்களில் மிகப்பெரிய வாழ்வியல் உண்மைகளை அடுக்கிக்காட்டும் பெருஞ்சித்திரனாரின் பாவாற்றல் இந்நூலால் விளங்குகின்றது. செழுமையான சொல்லாட்சிகளும், பொருத்தமான யாப்பமைப்புகளும், வாழ்வியல் பற்றிய தெளிவுகளும், ஆளுமை வளர்ச்சிக்கும் ஆளுமை மேம்பாட்டிற்கும் அறிஞர்கள் குறிப்பிடும் கருத்துகளும் இந்நூலில் பரக்கக் கிடைக்கின்றன.

பெண்களை விளித்தல்

மகபுகு வஞ்சி நூலில் இடம்பெறும் 30 பாடல்களிலும் முப்பது வகையில் புதுமணம்புகும் பெண்ணை விளிக்கும் பெருஞ்சித்திரனார் அவர்களின் உடலழகு,உள்ள அழகு, பண்புநலன், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், கற்கவேண்டிய பாடங்கள் யாவற்றையும் பதிவு செய்துள்ளார். இவர் குறிப்பிடும் பண்புநலன் மகளிர்க்கு அமைந்தால் இவ்வுலகில் இல்லறச் செழுமை மேம்படும். உலகில், இன்பமும், அமைதியும் ஓங்கும் என்பது ஒருதலை. பெண்ணின் அடி, விழி, பல்(நகை), குழல், நுதல், கை, உடல், தோள், உள்ளம், இடை, சொல், காது, கண், நெற்றி, அறிவு, இன்ன பிறவற்றை வருணனை செய்யும் முகமாக அவர்களின் பண்புமேம்பட்ட வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார்.வெறும் உறுப்பு வருணனையாக அமையாமல் அவ்வுறுப்புகளின் வருணனை வழியாக நல்ல பண்புகளை ஊட்டுகின்றார்.

'பிறர் நலம் நாடும் உள்ளம் உடையவளே' (12)

'இழிசெயல்களால் வரும் பொருள்களை ஏற்காத கைகளை உடையவளே' (13)

'அறிவுடையவர் சொல் கேட்கும் குழையணிந்த காதுகளை உடையவளே '(15)

'நல்ல நூல்களை அறிந்த நீண்ட நெற்றியை உடையவளே' (19)

'அறவழியால் வந்த பொருள்களை இல்லாதவருக்குக்கொடுத்துதவும் நல்ல உள்ளம் கொண்டவளே(23)

'கணவனைத்தொழும் மஞ்சள் நிறைந்த கைகளையும்,முகத்தையும் உடையவளே' (26)

'தான் பிறந்த,புகுந்த குடிகளைப்பேணும் குங்கும ம் திகழும் நெற்றியை உடையவளே' (27)

'தன் கணவனிடத்துக்குமிழ்க்கும் சிரிப்பை விளைவிக்கும் இதழ்களை உடையவளே' (28)

'மனைக்குரிய நலன்களை மேற்கொள்வதில் மனத்தளர்வு இல்லாதவளே' (29)

என்றவாறு பெண்ணை வருணனை செய்யும் முகத்தான் அவளிடம் இருக்க வேண்டிய உயரிய பண்புகளைப் பெருஞ்சித்திரனார் வெளிப்படுத்தியுள்ளார்.

அகவியற் பத்து அறிவிப்பன

கணவனின் இல்லம் புகுந்த பெண் தம் கடமையாகக் கொள்ளத்தக்கதும், தவிர்க்கத்தக்கதுமான வாழ்வியல் கூறுகளைப் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார். தம் கணவன் குடியும் தாம்பிறந்த குடியும் பெருமையுறத் தக்க வினைப்பாடுகளைச் செய்தால் தம் கணவனிடம் தலைநாள் கண்ட இன்பத் திருநாள் போல ஏனைய நாள்களும் அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இல்லற இன்பம் பல்கிப் பெருகப் பெண்களுக்குத் தேவையான பண்புகளைச் சிறு பாடலடிகளில் மிகப் பலவாகப் பொதிந்து வைத்துள்ளார். இது பெருஞ்சித்திரனாரின் யாப்பாளுமையையும் உலகியல் அறிவையும் காட்டுவன. அவ்வகையில் அகவியலில் பின்வரும் பண்பு நலன்கள் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளன. இப்பண்பு நலன்கள் பெண்களுக்கு என மொழியப்பட்டிருப்பினும் ஆடவருக்கும் உரித்தானதாகக் கொள்ளவேண்டும்.

பயன்தரும் இனிய மொழியும்,பண்பும், துயர்தாங்கும் பொறுமையும், கொடை உள்ளமும், பிறர்பால் காணும் பிழைகளை மறக்கும் இயல்பும், தன்னையும், தற்காத்தல் செய்பவனையும் பாதுகாக்கும் இயல்பும் பெண்களுக்குத் தேவை. அதுபோல் கணவனிடத்துச் சிறு நன்மைகள் பெற்றாலும்,அதனை உயர்வாக எண்ணி மகிழவேண்டும். உடல் வனப்பு காத்தும்,சோம்பல் போக்கியும் வாழவேண்ணடும். கணவனிடத்துக் குறைகள் கண்டால் பிறர் அறியாதவாறு மறைத்து வாழவேண்டும் என்கிறார். கணவனொடு மனம் ஒத்து வாழ வேண்டும் என்கிறார். பிறரைத் தூற்றும் சொற்களைப் பயன்படுத்தாமலும், உண்மையல்லாதவர்கள் பலரிடம் நட்பாடாமலும் இருக்கவேண்டும். பிறர் சொல்லும் சிறுமை சொற்களுக்குச் செவி சாய்க்காமல் இருக்கவேண்டும். கணவனின் தாயைத் தன் தாயாகவும், அவன் உறவினரைத் தம் உறவினராகவும் கருதுதல் வேண்டும். கணவனுடன் பிறர் அறியாதவாறு தனித்து உரையாடி மகிழவேண்டும். அவன் தூங்கியபின் விழிமூடி,அவன் எழும்முன் எழுந்திட வேண்டும்.

இசை,நாட்டியம் ஒத்த கலைகளைப் பயிலுதலும், கணவனின் குறிப்புணர்ந்து செயல்புரிதலும் வேண்டற்பாலன. குற்றமில்லாத உடல் புணர்ச்சியும் கொண்டு ஒரு பெண் விளங்கினால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது புதுமனைப் புகும் பெண்ணுக்குப் பெருஞ்சித்திரனார் கூறும் அறிவுரையாகும். கணவன் விரும்பும் உணவு இடுதலையும், இருவர் உடலையும் பேணலையும், தலைவனின் குறைகளை நீக்கும் முறைகளையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார். குறைகளைத் தாழ உரைத்துத் திருத்த வேண்டும் என்கிறார். கண்ணீர் விடுதலைத் தவிர்த்து முகமலர்ச்சியுடன் இருத்தல் வேண்டும் என்பதைக்,

கணவற்றழூஉம் கழைமென்றோளீ!
உணவாய்ந்திடு; உடலோம்பிடு;
குடிகாப்பிடு; குறைதாழ்ந்திரி;
வடிநீர்தவிர்; வளர்புன்னகை
வரினே,
ஒருநாள் ஒருநாள் உறுகொண் கனொடு
திருநாள் காண்குவை தலைநாட் டகவே! (8)

என்னும் பாடலில் குறிப்பிடுகின்றார்.

புதுமனைப் புகும் பெண் தம் குழந்தைகளுக்குக் கல்வியறிவு புகட்டுதலையும் கடமையாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.அகவியற் பகுதியில் காணப்படும் செய்திகளை நோக்கும் பொழுது இச்செய்திகள் மகளிருக்கு மட்டும் அமையாமல் ஆடவருக்கும் பொருந்துவனவாகவும் உள்ளன. மேலும் ஆளுமை வளர்ச்சிக்கு இன்றைய அறிஞர்கள் குறிப்பிடும் மனவியல் சார்ந்த பல கருத்துகளை இப்பகுதியில் கண்டு வியப்பு ஏற்படுகின்றது. பழந்திழ் நூல்களான திருக்குறள், நாலடியார், நீதிநெறி விளக்கம் முதலிய நூல்களில் குறிப்பிடப்படும் அற மாண்புடைய கருத்துகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. பொதுவாக நட்பாட விரும்புவாருக்கும், பெரியாரைத் துணைக்கொள்ளும் ஆர்வலருக்கும் பயன்படும் பல கருத்துகள் உள்ளன.

புறவியற் பத்து புகல்வன

அகவியற் பத்தில் மனைவிளக்கம் பெற பெண்டிர் மேற்கொள்ளவேண்டிய பண்பு நலன்களைச் சுட்டிக்காட்டிய பெருஞ்சித்திரனார் புறவியற்பத்தில் அப்பெண் புற உலகில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பொறுப்புணர்ச்சியுடன், தம் பட்டறிவாலும் பாட்டறிவாலும் விளக்குகின்றார். குடும்பப் பொறுப்புகளில் மட்டும் கவனம் செலுத்துவதோடு அமையாமல் சமூக நடப்புகளிலும் பங்கெடுக்கவேண்டும் என்று விரும்புகிறார். சமூகத்தில் அவர்களின் பங்கெடுப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடம் அறியாமையால் நிலவும் குலப்பகுப்பு முறைகளை ஒழித்தும், மனு முதலிய நூல்களையும் நூல் உரைக்கும் கருத்துகளையும் சமூகத்திலிருந்து ஒழிக்கவேண்டும் என்கிறார். தாய்மொழியை உயிராகக் கொள்ள வேண்டும் என்கின்றார். பிற உயரிய மொழிகளைப் பயில வேண்டும் என்கிறார்.மக்கள் தம் வினைகளும் அவற்றின் பயன்களும் எல்லாருக்கும் பொதுவாக அமையும் படி எண்ணவேண்டும். இவற்றில் உயர்வு, தாழ்வு இல்லை எனவும் கருதினால் குடும்பத்தவருக்கு மட்டுமன்றி நாடு,இனம் சார்ந்த யாவருக்கும் இனியவர்களாக விளங்கமுடியும் என்கிறார்.

பிறர் துன்பம் போக்குபவராகவும்,அறிவுடையவரைப் பேணுபவராகவும் விளங்க வேண்டும். வறுமையுற்ற பொழுதும் உள்ளத்திலும் செயலிலும் உயர்ந்து நிற்கவேண்டும் எனவும் நமக்கு நலம் வந்தபொழுது பிறர் மகிழும்படி உரை, செயல்களால் உள்ளம் தணிந்துபோதல் வேண்டும் என்கிறார். வெற்று ஆரவாரச் செயல்களைத் தவிர்க்கவேண்டும் என்கிறார். இவ்வாறு செய்வதன் வழி மகளிர் உலகம் போற்ற வாழமுடியும் என்கிறார்.

இவ்வுலகில் அனைவரலும் மதிக்கத்தகுந்தது ஒழுக்கமேயாகும். அது தவிர்ந்த அணி, மணி, ஆடைகள் அல்ல.நம் இல்லம் வரும் விருந்தினரைப் போற்ற வேண்டும்.அதுபோல் அவர் வருந்தி அழைக்கும் போது அவர் அழைப்பை ஏற்று அவர்தம் மனைக்கு விருந்தினராகச் செல்ல வேண்டும்.மனத்தாலும் செயலாலும் முறிவு செய்யாதவர்பால் நட்புக்கொள்ள வேண்டும்.அவ்வாறு இல்லாமல் மேம்போக்காக நட்பாடுபவரைக் கைவிடுதல் வேண்டும். எரித்தல், புகைத்தல், படையல் செய்தல் போன்ற வழிபாட்டை விலக்கி,மனவழிபாடு செய்யவேண்டும் என்கிறார் பெருஞ்சித்திரனார்.இதனை,

அறிவினார்மொழி அணிகுழைகாதீ!
முறிவிலார்தொடர்; முறையிலார்விடல்;
எரிபுகையிடல்; இறைமுறையிகழ்!
நெறியுளமொழி நெடுஞ்செயல்புகழ்!
கொளினே,
நினக்கும் தனக்கும் நினர்க்கு மல்லதை
இனர்க்கும் பிறர்க்கும் இனியளா குவையே!(15)

நமது துன்பம் உணரும் விருப்பம்ப் இல்லாதவர்பால் நம் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதனை நம் புண்ணை அறியாதவரிடம் நம் புண்ணில் புரையோடியதால் ஏற்பட்ட துன்பத்தைப் பகர்தல் கூடாது என மொழிகின்றார். அதுபோல் வறுமையால் வாடுபவரிடத்து நமக்குறும் பசியின் நிலையினைச் சொல்லக்கூடாது என்கின்றார்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பண்புகள் தேவை என்பதை வலியுறுத்தும் இடத்து, நல்லன அல்லவற்றைச் செய்ய அஞ்சும் அச்சமும், கற்றுணர்ந்தவர்பால் அறிந்தும் அறியாதும் நிற்கும் மடத்தையும், முன்னும் பின்னும் அடைந்த அடையும் பழிகளுக்கு நாணும், பண்பும் குணம் செயலால் இழிந்தவர்களைக் காணும்பொழுது அருவருத்தலாகிய பயிர்ப்பையும் பெண்கள் கொள்ளவேண்டும் என்கிறார்.

நற்பண்புகளை நெறிப்படக் கூறிவந்த பெருஞ்சித்திரனார் சில உவமைகள் காட்டி, நற்பண்புகளை நம் நெஞ்சில் பதிக்கின்றார். துளிப் பயனுக்குத் தொலைதூரம் செல்லும் தேனி போல முயற்சியும், எதிர்காலப் பயன்பாட்டுக்கு எறும்புபோல் சேர்த்து வைக்கும் முன்னறிவும், பிறர் செய்த உதவியை யானைபோல மறவாமல் இருக்கவேண்டும் என நினைவாற்றலையும், தம் சுற்றத்தைப் பேணும் காக்கைபோல அழைத்து மகிழும் பெரும் பண்பையும், ஒழுக்கமிலாத கயவரைக் காண்டல் நேர்ந்துழி ஒறுத்தலில் புலிபோல் செயல்பட வேண்டும் என்பதைத்,

தாயெனக்கொளுந் தகையரும்பண்பீ!
ஈயெனமுயல்; எறும்பியற்படு;
கரிநினைவிரு; காகமென்னணை;
வரியெனவொறு; திரிகயவரை!
வரினே,
நினக்கும் தனக்கும் நினர்க்கு மல்லதை
இனர்க்கும் பிறர்க்கும் இனியளா குவையே! (18)

என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் நூல்களை அறியும்படியும்,அயலதாகிய நாடுகளையும் அங்குள்ள மலைகளையும்,அவர்தம் பழக்க வழக்கங்களையும் அறிவதை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றார்.

குற்றமில்லாத உள்ளமும் செயலும் உடையவர்பால் அவருக்கு வேண்டிய பொருளைக்கொடுத்து உறவாக்கிக்கொள்ள வேண்டும்.நம் பணிகளை நாமே செய்துகொள்ள வேண்டும் இவ்வாறு புற உலகில் பெண்கள் ஆற்ற வேண்டிய பணிகளைப் பெருஞ்சித்திரனார் புறவியற்பத்துப் பகுதியில் குறிப்பிடுகின்றார்.

பொதுவியற்பத்து

உலகில் உள்ள மெய்ம்மங்களை விளக்கும் பகுதியாகப் பொதுவியற்பத்துப் பகுதியைக் குறிப்பிடலாம்.உலக நிலைகளை விளக்குவன மெய்யறிவு நூல்கள். இந்நூல்களைக் கற்றால் மேலான அறிவு அமையும். உள்ளம் தூய்மையடையும். உள்ளத்தூய்மை செயல் தூய்மைக்கு அடிப்படையாகும். எனவேதான் மனத்துக்கண் மாசிலாதத் தன்மையை வள்ளுவர் வேண்டுவர்.

பெருஞ்சித்திரனார் உள்ளத்தைத் தாழ்வு செய்வன பொய்ம்மையும் பிறருக்குத் தீமை செய்வும் கவடும் என்கிறார். இவையிரண்டும் உள்ளத்தில் குடிபுகுந்தால் பேய்த்தன்மை உள்ளத்தில் ஏற்படும் என்கிறார். தெளிந்த அறிவும்,கனிந்த அருள்நெஞ்சும் மிகுந்து நிற்குமாயின் தெய்வநிலையாக அது கருதப்படும் என்கிறார்.மக்களின் தேவையறிந்து அருள்காட்டிப் புரக்கும் அரசைத்தவிர அடைக்கலம் என்று அடையத்தக்க இனிய புகலிடம் இல்லை என்று பாடியுள்ளார்.

ஒருவனுக்கு அழிவிலாத பொருள் கல்வி எனவும்,தனக்குத் தாழ்வு தராத தன்மை என்பது பிறர் கூறும் இன்னாச்சொல் பொறுத்தலே என்கிறார்.இழிந்த வழியில்வரும் சிறுபொருளைத் துய்த்தல் வாழ்க்கையாகாது என்கிறார்.

பிறர் நமக்குச்செய்யும் நலத்தை அறிவதும்,பிறருக்கு நாம் செய்யும் வினைகளில் உள்ள பிழையை உணர்தலையும் மேற்கொள்ள வேண்டும். பிறதுக்குச் செய்யும் உதவிகளை நாம் மறத்தலும், பிறர் செய்வதை நினைத்தலும் வேண்டும் என்கிறார்.

கற்பு என உலகம் வலியுறுத்துவது மருவில்லாத உள்ளத்தின் ஒழுகலாறே யாகும்.அதுபோல் வலிமை என்பது பிறரின் இன்னாச்சொல், செயல் பொறுத்தல் ஆகும். அதுபோல் அன்பு என்பது பிற உயிர்களின் துன்பம் கண்டு மனமுருகுதல், இன்பம் என்பது இனி வந்துறும் நல்லவை நினைந்து மகிழ்தல், புன்செயல் என்பது நலந்தரும் சொல்லையும் செயலையும் நீக்கி இழிவுதரும் சொல்லையும் செயலையும் மேற்கொள்வது என்கிறார். மேற்கண்ட கருத்துகள் திருக்குறளின் தெளிசாறாக இருப்பதை அறியும்பொழுது பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் புலமை புலனாகும்.

உரைச்சிறப்பு

பெருஞ்சித்திரனார் 'பா' வல்லார் என்பதை உலகு அறியும் அதுபோல் உரைவரைவதில் பேராற்றல் பெற்றவர் என்பதை அவரின் நூறாசிரியம், திருக்குறள் மெய்ப்பொருள் உரை, மகபுகுவஞ்சி முதலியன உணர்த்தும். மகபுகு வஞ்சியில் பல பாடல்களில் அவரின் உரை வரையும் ஆற்றல் வெளிப்பட்டு நிற்கின்றது. அவற்றுள்ளும் 26 ஆம் பாடலுக்கு அவர வரைந்துள்ள உரைவிளக்கம் பாவாணரை நமக்கு நினைவூட்டும். பாவாணரின் தலைமாணாக்கர் பெருஞ்சித்திரனார் என்பதை இப்பகுதி மெய்ப்பிக்கின்றது. மூன்றடிகளுக்குப் பெருஞ்சித்திரனார் விரிந்த விளக்கம் தருவது அவரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையையும், உலகியல் அறிவையும் பறைசாற்றி நிற்கிறது.

'உணவறிந்துணின் ஒருமருந்திலை;
மனமறிந்துறின் மறைபகையிலை;
சினமறிந்துயின் சிறுமொழியிலை'(26)

உணவு உண்ணும் முறையை.நட்பாடலின் திறமையை,வெகுளாமையின் மேன்மையை மூவடிகளில் எழுதி மூவடிக்கும் இவர் தரும் விளக்கம் வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகின்றன.திருவள்ளுவப் பேராசான் மூன்று அதிகாரங்களில் மொழிந்த செய்திகளையும் அதற்குப் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசான்கள் வரைந்த கட்டுக்கடங்காத உரைவிளக்கங்களைப் பெருஞ்சித்திரனார் மூன்று அடிகளுள்ளும் அதன் உரைகளுள்ளும் எடுத்துரைக்கின்றார். சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஆற்றலும் ஆழமுடைத்தாக்கும் பொருள்விளக்கமும் இவரைக் கழகப்புலவர் வரிசையில் எண்ண வைக்கின்றது'. சினமறிந்துயின் சிறுமொழியிலை' என்னும் ஒரு தொடருக்குத் தனக்கும் பிறருக்கும் எழுவதாகிய சினத்தை முன்னரே அறிந்து, அதனின்று, தப்புவதன் பொருட்டுப் பேச்சு முறித்தல், இடம்விட்டகறல், முன்நலம் நினைதல், பின்துயரறிதல் முதலியவற்றைக் கடைப்பிடித்து உய்தல் செயின்,பின் விளைவாகிய, தம்மாற் பிறரும் பிறராற்றாமும் நோகத்தக்க சிறுமை மொழி ஒன்று நேர்வதில்லை' என்று விளக்கும் உரையாசிரியர் சிறப்பிற்கு உரியவராக விளங்குகிறார்.

ஒருவர் வாழ்வில் ஒதுக்கத் தக்கன சோம்பலும், களவும், குடிப்பழக்கமும், பிறன்மனை நயத்தலும் ஆகும். அதுபோல் கொள்ளத்தக்கன புலனறிவு மிக்கவர் வாய்ச்சொற்கள் என்கிறார். பொதுவியல் என்பன வாழ்வியல் உண்மைகளை விளக்குவன என்பதுபோல் பல செய்திகள் உள்ளன. ஊழ்வினை என்பது நம் முயற்சிகளில் சோர்வடையச் செய்யும் எனவும், நிலைகள் ஒன்றுபோல் இல்லாமல் சுழன்று மாறக்கூடியது எனவும் மொழிகின்றார்.

இவ்வுலகில் இல்வாழ்வில் வாழ்வதே வாழ்க்கையாகும் என்கிறார். துறவியர்போல் வாழ்தல் இகழ்ந்து கடியப்படவேண்டும் என்கிறார்.தமக்கு உரித்தான அறிவுக் கலைகளை ஒவ்வொருவரும் பயிலவேண்டும் என்கிறார். அதன்வழி புகழ்வாழ்க்கை வாழவேண்டும் என்கின்றார். இகழுக்குரிய வாழ்க்கை புவிக்குச் சுமை என்கிறார்.

பெருஞ்சித்திரனார் மகபுகு வஞ்சி என்னும் பெயரிட்டுப் புதுமனையில் திருமணத்தின் பொருட்டு நுழையும் பெண்ணுக்கு அறிவுரையாக இப்பாடல் நூலை இயற்றியிருப்பினும் இதில் உலக வாழ்வில் ஈடுபட்டுள்ள ஆண்,பெண் இருபாலரும் மேற்கொள்ளத் தக்க பண்பு நலனே குறிப்பிடப்பட்டுள்ளன. யாப்பருங்கலக் காரிகையில் மகடூஉவை விளித்து யாப்புச் செய்திகள் அனைவருக்கும் சொல்லப்பட்டது போல் புதுமணப்பெண்ணை விளித்துச் சொல்லப்பட்டடாலும் உலக மாந்தர் அனைவருக்குமான செய்திகளே இடம்பெற்றுள்ளன. அகவியற்பத்தில் மனைநல வாழ்க்கையும், புறவியற்பத்தில் உலகவாழ்வையும் அறிமுகம்செய்து பொதுவியற்பத்தில் அகவாழ்வு, புறவாழ்வு மேன்மையடையத்தக்க பொதுப்பண்புகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுத்த யாப்பும், சொல்லாட்சிகளும் கொண்ட இந்நூல் தமிழ் வல்லார்க்கே விளங்கும் என்பதறிந்து அதன் சிறப்பை யாவரும் உணரும் வண்ணம் அழகிய உரையைப் பெருஞ்சித்திரனார் விளக்கமாக வரைந்துள்ளார். தமிழாழம் காண நினைப்பார்க்கு இந்நூல் ஆழ்கடல். முயற்சியும் பயிற்சியும் உடையார் மூழ்கி மூழ்கி முத்தெடுக்கத் தகுந்த கொற்கைக்கடல் இஃது.

குறிப்பு: 16.02.2008 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற ஆய்வுரை.

அரங்கத் தலைமை : முனைவர் அ.அறிவுநம்பி (புதுவைப் பல்கலைக்கழகம்)
முன்னிலை : முனைவர் துரை. பட்டாபிராமன், முனைவர் அரங்க.பாரி, முனைவர் தங்கையன், முனைவர் ப.சு.மூவேந்தன் உள்ளிட்டோர்.

பன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இக்காலத் தமிழ்க்கவிதைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2008 பிப்ரவரி 15,16 நாள்களில்(வெள்ளி,சனி)நடைபெறுகிறது. சென்னைக்கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

15.02.2008 முற்பகல் 10.15 மணிக்கு நடைபெறும் தொடக்கவிழாவில் முனைவர் துரை.பட்டாபிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் மா. இராமநாதன் அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிடுகின்றார். கலைஞன் பதிப்பக உரிமையாளர் மாசிலாமணி அவர்கள் முதற்படிகளைப் பெற்றுக் கொள்கின்றார். சிறப்பு விருந்தினராகப் பாவலர் அப்துல் இரகுமான் அவர்கள் கலந்துகொண்டு முதன்மையுரை ஆற்றுகின்றார்.அதனைத் தொடர்ந்து கருத்தரங்க அமர்வுகள் இரண்டுநாளும் நடைபெறும்.

16.02.2008 சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் அரங்க பாரி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். தமிழியல் துறைத்தலைவர் முனைவர் துரை.பட்டாபிராமன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார். ஆய்வுரையாகத் திரைப்பா ஆசிரியர் பாவலர் அறிவுமதி அவர்கள் உரையாற்றுகிறார்.

கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் மா.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி வாழ்த்துரைப்பார். பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

தொடர்பிற்கு :

முனைவர் அரங்க.பாரி அவர்கள்
இணைப்பேராசிரியர்
தமிழியல்துறை,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர் - 608 002
செல்பேசி : 9842281957

செவ்வாய், 12 பிப்ரவரி, 2008

தமிழ்ப்பணியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம்...

பாரதிதாசன் பல்கலைக்கழத்தின் மாண்பமை துணைவேந்தராக முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் பணியேற்றது முதல் பல்வேறு தமிழ்ப் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். தமிழ்வழிப் பொறியியல் படிப்பு, தமிழ்வழித் தொடக்கக்கல்வி, தமிழ் இணைய வளர்ச்சிப் பணிகள் (யுனிகோடில் தமிழ் எழுத்துக்குரிய இடம்) என்று இவரின் பணிகள் நீண்டவண்ணம் உள்ளன. முன்பே தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் வழி இவர் செய்த தமிழ்ப்பணியைத் தமிழுலகம் நன்கறியும்.

தமிழகத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெறுபவர்கள் தமிழ் தெரியாமலே பட்டம் பெற்றுச் சென்றுவிடுகின்றனர். இக்குறையைப் போக்க இதுவரை சரியான திட்டம் முன்வைக்கப்படாமல் இருந்தது. முனைவர் பொன்னவைக்கோ உள்ளிட்ட அறிஞர் குழுவினர் அண்மையில் இதுபற்றி ஆராய்ந்து அரசுக்கு ஒரு திட்டம் வைத்துள்ளனர். இனித் தமிழகப் பல்கலைக் கழகத்தில் பகுதி 1 தமிழ் என்றும் பகுதி 2 ஆங்கிலம் என்றும் கற்றுத்தரப்படும். பிற மொழியினர் தங்கள் தாய்மொழி கற்கவும் வழி உண்டு.

பகுதி 1 தமிழ் என்பதில் தமிழ் முன்பு (தொடக்க, உயர், மேல்நிலைகளில்) கற்றவர்கள் உயர்தரப் பாடங்களையும், தமிழ் இதுவரை அறியாத பிற மொழியினர் தமிழ் நெடுங்கணக்கு உள்ளிட்ட அறிமுகப் பகுதிகளைக் கற்பர். இனித் தமிழ் நாட்டில் தமிழ் அறியாமல் யாரும் பட்டம் பெறமுடியாது. உருசியாவில், சப்பானில் அந்நாட்டினரின் மொழியை அறியாமல் யாரும் பட்டம் பெற முடியாது. அந்த நிலையை உருவாக்கித் தமிழகத்தில் மிகப்பெரிய தமிழ்ப்பணி செய்யும் முனைவர் பொன்னவைக்கோ அவர்களைத் தமிழர்கள் அனைவரும் போற்றவும், வணங்கவும் வேண்டும். இதுதானே பாவாணர் கண்ட கனவு. இதற்குத்தானே பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்கள் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தனர்.

இது தொடர்பிலான தினமணியின் இன்றைய(12.02.2008) செய்தி கீழே வழங்கியுள்ளேன்.

பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயப் பாடம்

விழுப்புரம், பிப். 11: பல்க லைக் கழகங்களில் பட்டப்ப டிப்பு படிக்கும்போது, தமிழைக் கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என்று தமிழக அரசு அமைத்துள்ள கல்விக் குழு அர சுக்கு பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந் தர் பொன்னவைக்கோ வானூர் செங்கமேட்டில் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியது: பல்கலைக் கழகங்களின் கல் விமுறை குறித்து ஆராய தமிழக அரசு குழு (சிபிசிஎஸ்) அமைத் தது. இது குறித்து ஆராய்ந்து நாங்கள் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். அந்த அறிக் கையின்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் பட்டம் பெறுவதற்கு கட்டாயமாகத் தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டும். தமிழ் தெரியாத ஆங் கில வழி படித்தவர்கள், மற்ற மாநில மொழி பேசுபவர்கள், அடிப்படைத் தமிழைப் பட்டப் படிப்பில் பகுதி-1ல் பயில வேண் டும். மற்ற மாநில மாணவர்கள் பகுதி 4-ல் தேர்வு செய்து அவர் கள் தாய்மொழியை சேர்த்து கற் கவும் பரிந்துரையில் கூறியுள் ளோம். இதனை அரசாணை யாக வெளியிட்டு அனைத்து பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பும்படி நாங்கள் பரிந் துரை செய்துள்ளோம்.

மென்பொருளில் கூடுதல் இடம்: மென்பொருள்களில் இடம் ஒதுக்குவது குறித்து யூனி கோட் கன்சார்டியம் என்ற அமைப்பானது ஆராய்ந்து வரு கிறது. ஏற்கெனவே 8 பிட் குறி யீட்டு முறையில் 256 இடங்கள் இருந்தன.

அதில் 128 இடங்கள் ஆங்கி லத்துக்கு ஒதுக்கப்பட்டன. மீத முள்ள 128 இடங்கள் மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட் டன. இதில் தமிழில் உள்ள 247 எழுத்துகளுக்கு 30 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.இது போதுமானதாக இல்லை.

இந் நிலையில் கணினியில், உலகில் உள்ள அனைத்து மொழிகளும் பயன்படுத்தப்படு வதற்கு வசதியாக 16 பிட் குறி யீட்டு முறை உருவாக்கப்பட் டது. இதில் மொத்தம் 64,536 இடங்கள் இருந்தன. அப்போது கேட்டிருந்தால் எவ்வளவு இடம் வேண்டுமானாலும் தமி ழுக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் சரியான நடைமுறை யைப் பின்பற்றி கேட்காததால் 128 இடங்கள் மட்டுமே பெறப் பட்டன. தமிழ் எழுத்துகள், தமி ழில் பயன்படுத்தப்படும் வட மொழி எழுத்துகள் அனைத்துக் கும் சேர்த்து தமிழுக்கு 357 இடங்கள் தேவைப்படுகிறது.

இது குறித்து பன்னாட்டு கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள் ளோம். ஏற்கெனவே பல்வேறு மொழிகளுக்கு ஒதுக்கப்பட் டது போக மீதம் 484 இடங்கள் மட்டுமே தற்போது உள்ளன.

இதனால் உடனடியாகப் பெற முடியவில்லை. இது தொடர்பாக பன்னாட்டு குழுவினர் தமி ழகம் வந்து விவாதித்துவிட்டுச் சென்றுள்ளனர். விரைவில் 357 இடங்கள் கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். அப்படி கிடைத்தால் ஒரே பட்டனை பயன்படுத்தி தமிழ் எழுத்துக ளையும், துணை எழுத்துகளை யும் தட்டச்சு செய்ய முடியும் என்றார் பொன்னவைக்கோ.

நன்றி : தினமணி (12.02.2008)

புதன், 6 பிப்ரவரி, 2008

பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளம் தமிழில்...

தமிழகப்பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு? என என் பதிவில் 2007 திசம்பர் 19 இல் ஒரு பதிவு இட்டிருந்தேன்.அதன் பயனைக்கண்டு மகிழ்கிறேன்.
ஆம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணையதளம் உலகத்தமிழர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் தமிழிலும்,பிற மொழியினருக்குப் பயன்படும் வண்ணம் ஆங்கிலத்திலும் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்தித் தமிழகத்தின் பிற பல்கலைக் கழகங்களும் தமிழிற்கு மாற வேண்டும் என்பதே நம் விருப்பம். இணையதளத்தைத்
தமிழில் வெளியிடும் வண்ணம் ஆணையிட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராகவும் தமிழ் இணையத்துறையின் மூல ஊற்றாகவும் பணிபுரியும் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுக்கும் ஆட்சிக்குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியவாகட்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.

தமிழ் ஒருங்குகுறி(unicode)ஆர்வலர்களுக்கு...

தமிழ் ஒருங்குகுறி (unicode) தொடர்பில் தமிழ் மொழிக்கு உரிய இடம் தேவை எனப்பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அண்மையில் இது தொடர்பான சில மகிழ்ச்சி செய்திகளைப் புதுச்சேரியில் நடைபெற்ற வலைப்பதிவர் பயிலரங்கில் உரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் தெரிவித்தார்கள். அப்பேச்சு இப்பொழுது செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளது. உலக அளவிலான ஒருங்கு குறி அமைப்பு நம் மொழியின் முதன்மையை உணரத்தொடங்கியுள்ளது.

அது குறித்த தினமணி (06.02.2008) செய்தியைத் தமிழ் இணைய ஆர்வலர்களுக்குத் தருவதில் மகிழ்கிறேன்.

கணினியில் தமிழ் எழுத்துகளுக்கு கூடுதல் இடம்: பன்னாட்டு அமைப்பு ஆய்வு

சென்னை, பிப். 5: தமிழ் எழுத்துக ளுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் அதிகமான இடம் ஒதுக்குவது குறித்து உலகளாவிய அமைப்பான "யூனிகோட் கன்சார்டியம்' ஆராய்ந்து வருகிறது.

இந்தக் கூட்டமைப்பில் "யாகூ', "கூகுள்', "மைக்ரோசாஃப்ட்' உள் ளிட்ட உலகின் மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

உலகளாவிய சாஃப்ட்வேரில் தமி ழுக்கு தற்போது ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவு. அதாவது "8 பிட்' அளவு இடங்களே உள்ளன. இதன் மூலம் கணினியில் தமிழை இயக்கு வதற்கு போதிய அளவுக்கு திறமோ, தரமோ இருக்காது என்று தமிழக அறிவியல் வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எனவே, தற்போதுள்ளதை விட அதிகமாக அதாவது, ஆங்கிலம் போல் "16 பிட்' அளவு இடங்களை, தமிழுக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழகம் கோரி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகி ருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மு.பொன்ன வைக்கோ உள்ளிட்டோர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப் பட்டுள்ளது.

அக்குழு பல்வேறு ஆய்வுக் கூட் டங்களை நடத்தி, "16 பிட்' இடங் கள் தேவை குறித்த காரணங்களைப் பன்னாட்டுக் கூட்டமைப்பின் முன் வைத்துள்ளது.
இதையடுத்து, சென்னைக்கு வந்த பன்னாட்டுக் கூட்டமைப்பு தமிழக வல்லுநர் குழுவுடன் விவாதித்தது.

முதல் கட்டமாக தமிழ் அறிவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் குறைவான இடங்களால் ஏற்படும் பிரச்னை குறித்து கன்சார்டியம் உணர்ந்துள்ளது.

""தமிழ் எழுத்துருக்களுக்கு தற் போதைய "8 பிட்' இடம் போதாது.
"16 பிட்' இடம் ஏன் தேவை என்ற காரணத்தை விளக்கிய பிறகு தற் போது இதில் உள்ள சிக்கலை பன் னாட்டு கூட்டமைப்பு புரிந்து கொண்டிருக்கிறது. இது மிகப் பெரிய முன்னேற்றம்'' என்று தமிழக அரசு வட்டாரம் தெரிவித்தது.
"16 பிட்' முறை நடைமுறைக்கு வந் துவிட்டால், ஆங்கிலம் போல் ஒவ் வொரு தமிழ் எழுத்துக்கும் ஒவ் வோர் இடம் கிடைக்கும். ஒரே இயக்கத்தில் ஓர் எழுத்து எளிதில் பதிவாகும். 25 சதவீத நேரம் மிச்ச மாகும். தமிழ் இயக்கத்தை விரை வில் செயல்படுத்தலாம். தரமும் மேம்படும். உலக அளவில் வணிகம், அறிவியல், ஊடகம் ஆகிய அனைத் துத் துறைகளிலும் தமிழ் எழுத்து களை விரைவில் பதிவு செய்யலாம்.
எல்லாவற்றையும் விட, தற்போ தைய முறையால் ஏதேனும் எழுத் துப் பிழை நேர்ந்தால், அதனால், சட் டச் சிக்கல் தோன்ற வாய்ப்புண்டு.
16 பிட் இடம் கிடைத்தால், அச்சட்டச் சிக்கல் தோன்றவே வழியில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமணி(06.02.2008)