ஆசான் மன்னர் மன்னன், மு.இளங்கோவன், இராசசேரன், கவிஞர் முனியாண்டிராஜ்
இந்த முறை மலேசியாவுக்குச் சென்று வந்தமை பல்வேறு பட்டறிவினைத் தந்தது. முன்கூட்டியே சிறப்பாகத் திட்டமிடல் இல்லாமையால் நண்பர்கள் சிலரைச் சந்திக்க இயலாமல் போனது. அதுபோல் புதிய நண்பர்களை எதிர்பாராமல் சந்தித்து உரையாடியமை மகிழ்ச்சியையும் தந்தது.
பினாங்கில் வாழும் அருமை நண்பர் எழுத்தாளர் குணாளன் அவர்களையும், சுங்கைப்பட்டானியில் வாழும் மருத்துவர் டத்தோ சுப்பிரமணியம் ஐயா அவர்களையும் சந்திப்பதை என் பயணத்திட்டத்தில் முதன்மையாக வைத்திருந்தேன். இருவரும் உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் இருந்தமையால் சந்திக்க இயலாமல் போனது. எனினும் செல்பேசியில் பேசி, அன்பைப் பரிமாறிக்கொண்டோம். எழுத்தாளர் குணாளன் அவர்களின் நூலொன்று கோலாலம்பூரில் வெளியீடு காண (ஏப்ரல், 8, 2023) உள்ளது. அந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் போகும் ஆதலால் அதற்காக முன்கூட்டியே நேரில் வாழ்த்துரைக்க நினைத்திருந்தேன். அதுபோல் சுங்கைப்பட்டானியில் தாய்மொழி நாள் விழா நடத்த முனைந்த டத்தோ மருத்துவர் சுப்பிரமணியனார்க்கும் நேரில் வாழ்த்துரைக்க நினைத்திருந்தேன். அதுவும் இயலாமல் போனது.
கோலாலம்பூரை அடுத்திருக்கும் பெட்டாலிங் செயாவில் 21.03.2023 இரவு தங்குவதற்குரிய ஒழுங்கினை ஆசான் மன்னர் மன்னன் அவர்கள் இந்தமுறை செய்திருந்தார். தொலைக்காட்சித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள திரு. இராமராவ் ஐயா அவர்கள் என்னை அறைக்கு அழைத்துச் சென்று உதவியதுடன் மறுநாள் காலை புறப்படும் வரை என்னுடன் இருந்து பேருதவிபுரிந்தார். 21.03.2023 மாலை 7 மணியளவில் திருமுருகன் திருவாக்கு திருபீடத்தில் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலினை நண்பர்களிடத்து அறிமுகம் செய்யும் ஒழுங்கினை ஆசான் மன்னர் மன்னன் திட்டமிட்டு, தவத்திரு பாலயோகி சுவாமிகளிடம் இசைவுபெற்றிருந்தார்கள். மன்னர் அவர்களின் அழைப்பினை ஏற்றுத் திருபீடத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட அன்பர்கள் வருகைபுரிந்து, அறிமுக நிகழ்வை மேன்மையுடையதாக்கினர்.
ஒரு மணி நேரம் இச்சந்திப்பு அமைந்திருந்தது. அனைவருக்கும் தேநீர் உள்ளிட்ட சிற்றுண்டியைத் தவத்திரு அடிகளாரே வழங்கி ஆதரித்தார்கள். அதுபோல் நல்லாசியுரை ஒன்றையும் நவின்றார்கள். ஆசான் மன்னர் மன்னன் அவர்கள் நோக்கவுரையாக ஒரு வரவேற்புரையை வழங்கி என் முயற்சியை அரங்கிற்கு அறிமுகம் செய்தார்கள். மருத்துவர் செ. செல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இந்த நூல் தமக்கு நன்றிப் படையலாக வெளிவந்திருப்பதற்கு நன்றி தெரிவித்தார்கள்.
நிறைவாக நான் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் தோன்றிய வரலாறு, இதன் தேவை, ஆய்வுலகிற்கு இதன் எதிர்காலப் பயன்பாடுகள் குறித்து உரையாற்றியதுடன் நிறைவில் சில நாட்டுப்புறப் பாடல்களையும் பாடி அரங்கத்தினரை மகிழ்வுறச் செய்தேன்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முப்பதின்மரும் வெவ்வேறு துறைகளில் புகழ் விளைப்பவர்கள் ஆவர். முனைவர் குமரவேலு இராமசாமி மிகச் சிறந்த கல்வியாளர். கணக்குத்துறை வல்லுநர். மரபுக்கவிதையில் ஆழங்கால் பட்டவர். மலேசியாவில் மரபுக் கவிதை மாநாடு நடத்த முனைந்துள்ளவர். மாநாடு குறித்து, மேலதிக விவரங்களை உரையாடலில் பகிர்ந்துகொண்டார். மகிழ்ந்தேன். அதுபோல் எழுத்தாளர் ந. பச்சைபாலன் மிகச் சிறந்த கதையாசிரியர்; ஆசிரியர். பன்னூலாசிரியர். நெடுநாள் நண்பர். என் மீது மிகுந்த அன்புகொண்டவர். தாம் வெளியிடவிருக்கும் மூன்று நூல்களையும் (நூல்களின் நகரம், மனக்கண், முரண்) கொடையளித்து மகிழ்ந்தார். தமிழ்ச் சங்கத் தலைவர்களும், வழக்கறிஞர்களுமாக அறிவர் அவை சீரோடு கூடிப் பிரிந்தது. இது நிற்க.
22.03.2023
காலை சிற்றுண்டி அருந்துவதற்கு முனைவர் குமரவேலு இராமசாமி அவர்களும் ஆசான் மன்னர் மன்னன்
அவர்களும் அழைத்திருந்தனர். அனைவரும் அருகிலிருந்த உணவகத்தில் கூடி, உணவுண்டோம். இலக்கியப்
பொழிவுகளாகவே சிற்றுண்டிப்போது அமைந்தது. பல்வேறு இலக்கிய முயற்சிகள் குறித்தும். இலக்கியச்
சார்பாளர்களின் செயல்படுகள் குறித்தும் விரிவாக உரையாடினோம். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு,
நானும் ஆசான் மன்னர் மன்னன் அவர்களும் பந்திங் பகுதியில் உள்ள, தெலுக் பங்ளிமா கராங்
என்னும் ஊரில் வாழும் என் உயிர்த்தோழர் ஆசிரியர் மு. முனியாண்டி அவர்களைக் காண்பதற்கு
ஆர்வமுடன் புறப்பட்டோம். அரை மணி நேர மகிழுந்து ஓட்டத்திற்குப் பிறகு திரு. முனியாண்டி
அவர்களின் இல்லத்தை நெருங்கினோம். அந்தோ! நண்பரின் வீடு கண்படும் தூரத்தில்தான் இருந்தது.
ஆயின் நாங்கள் ஊர்ந்த வண்டி இரண்டு வீடுகளுக்கு முன்பாகவே பழுதுற்று நின்றது. நிலைமையை
நண்பர் முனியாண்டி அவர்களுக்குச் சொன்னோம். அவரும் தமக்குத் தெரிந்த உள்ளூர் பழுது
நீக்குநர்களைத் தொடர்புகொண்டார். பயன் இல்லை.
எனவே காப்பீட்டு நிறுவனத்துக்குப் பேசி எங்களின் வண்டியைச் சீர்செய்து உதவுமாறு
வேண்டினோம். அதற்கு வேண்டிய ஒழுங்குகள் ஒரு பக்கம் நடந்தது.
இடைப்பட்ட
நேரத்தில் அருகில் இருந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசான் திரு. இராசசேரன் ஐயாவையும்,
ஓய்வுபெற்ற ஆசிரியர் முனியாண்டிராஜ் அவர்களையும் சந்திக்க நினைத்தோம். கவிஞர் முனியாண்டி
ராஜ் அவர்கள் தம் மகனாரின் திருமணத்துக்காக இல்லத்தைத் தூய்மை செய்யும் பணியிலிருந்தார்.
தமக்கிருக்கும் பல்வேறு அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, என்னையும் மன்னர் அவர்களையும்
சந்திக்கும் ஆர்வத்தில் முனியாண்டி ஐயா இல்லத்துக்கு வந்தார். நேரில் ஒருவருக்கொருவர்
அறிமுகப்படுத்திக்கொண்டோம். அருகில் இருந்த பள்ளிக்கு எங்களை அழைத்துச் சென்றார். அப்பள்ளியின் தலைமையாசிரியர் அண்ணன் இராசசேரன் மீது
எனக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு. அறிஞர் மு. வரதராசனார் மீது மிகுந்த மதிப்புடையவர்.
அவர் நூல்களைப் படித்து வாழ்வை நன்னெறிப்படுத்திக்கொண்டவர். தாம் பணி புரியும் இடத்தில்
அறிஞர் மு. வ. அவர்களின் படத்தை நிறுத்தித் தம் மதிப்பை நிலைநாட்டியவர். அங்கு பணிபுரியும்
ஆசிரியர்கள் பலரும் மன்னரிடம் படித்தவர்கள் என்பதால். மன்னருக்கு மிகப்பெரிய வரவேற்பு
அங்கு இருந்தது. அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது, மன்னர் ஊர்ந்து வந்த
வண்டியைப் பழுது நீக்குவதற்குரிய ஆட்கள் வந்திருப்பதை அறிந்தோம். நாங்கள் திட்டமிட்டபடி
பயணம் முழுமையடையாமல் மன்னர் மன்னன் அவர்கள் தம் பழுதுற்ற வண்டியைச் சுமந்துசெல்ல வந்த
சுமையுந்தில் மகிழுந்துடன் பயணத்தைத் தொடர்ந்தார். நான் நண்பர்களின் விருந்தோம்பலுக்குப்
பிறகு அருமைத் தம்பி வாணன் அவர்களின் வண்டியில் ஏறித் தமிழ் வள்ளல் மாரியப்பன் ஆறுமுகனார்
அவர்களைக் காண்பதற்குக் கிள்ளான் பகுதிக்குச் சென்றேன்.
மாரியப்பனார் அவர்கள் மிகச் சிறந்த திருக்குறள் பற்றாளர். புலவர் இரா. இளங்குமரனார் போலும் உயர்ந்த தமிழறிஞர்களை ஆதரித்த தமிழ் வள்ளல். கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக மாரியப்பனாரை அறிவேன். அன்று முதல் இன்று வரை அவர் காட்டும் அன்புக்கு அளவில்லை. ஒவ்வொரு முறையும் மாரியப்பனாரைச் சந்திக்காமல் தாயகம் திரும்பியதில்லை. இன்றும் அவருடன் பொழுது இனிமையாகக் கழிந்தது. இரவு விருந்தளித்து, இனிது உரையாடி மகிழ்ந்தார். எதிர்காலப் பணிகள் சிலவற்றைப் பற்றித் திட்டமிட்டோம். நள்ளிரவு 12 மணியளவில் வானூர்தி நிலையத்துக்கு விரைந்தோம். நள்ளிரவையும் பொருட்படுத்தாது குடும்பத்துடன் வானூர்தி நிலையம் வரை வந்து வழியனுப்பிய மாரியப்பனார்க்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நன்றியை வெளிப்படுத்த - யாது கைம்மாறு செய்வேன்? “நல்லார் ஒருவர்” என்று இவரைப் போலும் ஓர் அன்பரைக் கண்டுதான் பழந்தமிழ்ப் புலவன் பாடியிருப்பான் போலும்!