நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 10 மார்ச், 2013

புதுவை ஆசிரியர் வீர.மதுரகவி




ஆசிரியர் வீர.மதுரகவி அவர்கள்

புதுவையில் அரசு பள்ளியில் ஆசிரியப் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்விக்கண் திறந்த பெருமகனார் வீர.மதுரகவி ஆவார். ஆசிரியர் பணியுடன் மட்டும் அமையாமல் சமூகப்பணிகளிலும் தம்மை இணைத்துக்கொண்ட பெருமை இவர்களுக்கு உண்டு.

ஆசிரியர் வீர.மதுரகவி அவர்களின் மனைவியார் வீரப்பெண்மணி பவானி மதுரகவி அவர்களும் புதுவையில் சமூகப்பணிகளில் ஈடுபட்டவர். இவர்கள் புதுச்சேரியில் செய்துள்ள தமிழ்ப்பணிகளும் சமூகப்பணிகளும் கணக்கில் அடங்காது. உலகத் தமிழர்களை வரவேற்றுப் போற்றிய பெருமை இவர்களுக்கு உண்டு. மேலும் ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க பல்வேறு பணிகளை அமைதியாகவும் உறுதியாகவும் செய்தவர்கள். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வீரவாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆசிரியர் மதுரகவி அவர்களின் தமிழ்வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

ஆசிரியர் வீர.மதுரகவி அவர்கள்10.05.1938இல் புதுச்சேரியில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் வீரகேசவனார், கமலா அம்மையார் ஆவர். இளமைக் கல்வியாகப் பிரவே என்ற பிரெஞ்சுக்கல்வி பயின்றவர். 1959 முதல் 1989 வரை அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரயராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். ஆசிரியர் வீர.மதுரகவி அவர்களிடம் பயின்றவர்தான் இன்றையப் பதுச்சேரியின் மக்கள் முதல்வராகப் போற்றப்படும் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள். முதல்வருடன் ஒரே வகுப்பில் பயின்ற பெருமைக்குரியவர் முனைவர் க.தமிழமல்லன் ஆவார்.

(அமர்ந்திருப்பவர்களுள் வட்டமிட்டுக் காட்டப்படுவர் வீர.மதுரகவி. நிற்பவர்களுள் வட்டமிடப்பட்டிருப்பவர் மக்கள் முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள்(மாணவர் பருவத்தில்) 1966 இல் முத்தரையர்பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவர்களின் அரிய படம் இது.)

இவர் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட பெருமைக்குரியவர். ஈழத்துத் தலைவர்களைப் புதுவைக்கு அழைத்து ஈழநிலையை விளக்குவதற்குப் பல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர். அயலகப் பயணமாக இலங்கை, சிங்கப்பூர், மலசியா, தாய்லாந்து, கம்போடியா, பிரான்சு, இத்தாலி, செர்மனி நாடுகளுக்குச் சென்றுவந்த பெருமைக்குரியவர். உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் புதுச்சேரி மாநிலக் கிளையின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்.

புதுச்சேரியின் குரல் இதழினை 1996 முதல் தொடர்ந்து நடத்திவருகின்றார்.


கருத்துகள் இல்லை: