கல்லூரிச் செயலர் மருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்களிடம்
ஐபேடு பயன்பாட்டை விளக்கும் மு.இ
கோயம்புத்தூர் என். ஜி. பி. கலை அறிவியல்
கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வுக்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன எனவும்
நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வேண்டும் எனவும் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்
கி.மணிகண்டன் அவர்கள் அன்பு அழைப்புவிடுத்தார்.
12.03.2013 இல் இணையப் பயிலரங்கிற்கு நடத்த
முதலில் திட்டமிட்டோம். ஆனால் அன்று கடையடைப்பு நடக்க வாய்ப்பு இருந்ததால் முதல் நாளுக்குப்
பயிலரங்க நிகழ்வு நடைபெறத் திட்டமிட்டோம். அதற்குத் தகத் திட்டமிட்டபடி 10. 03. 2013
இரவு 9.30 மணிக்குப் புதுச்சேரியில் புறப்பட்டு 11.03.2013 விடியல் 6.30 மணிக்குக் கோவையை அடைந்தேன். பேராசிரியர் கி.
மணிகண்டனுக்கு என் வருகையைத் தெரியப்படுத்தியதும் அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னை எதிர்கொண்டு
அழைத்துக் கல்லூரியின் விருந்தினர் இல்லத்தில் ஓய்வெடுக்கத் தங்க வைத்தார்.
இணையத்தில் செய்தி பார்த்தல், மின்னஞ்சல்களுக்கு
விடை தருதல், இன்று பேச வேண்டிய குறிப்புகளை இற்றைப் படுத்தல் என்று என் கடமைகளைச்
செய்தேன். அதற்குள் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் உணவுக்கு
அழைத்துச் செல்ல வந்துவிட்டனர். காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத்திற்குச் சென்று
சிற்றுண்டி முடித்தோம்.
சரியாகப் பத்து மணிக்குக் கல்லூரி முதல்வரைச்
சந்தித்தோம். அனைவரும் கல்லூரிச் செயலாளர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்களைச்
சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். கல்லூரியின் தூய்மை, கட்டட அமைப்பு, மாணவர்களின்
ஒழுங்கு, பரந்துபட்ட கல்லூரியின் வளாகத் தூய்மைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தேன்.
விரைவில் கல்லூரியில் தொடங்க உள்ள தமிழ்ப்
பண்பாட்டு மையம் அமைப்பிற்குக் கல்லூரித் தலைவர் அவர்களுக்கு என் பாராட்டுகளையும்
பணிவுடன் தெரிவித்தேன்.
மருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்கள் மிகச்சிறந்த
ஆளுமைப் பண்பு கொண்டவர்கள் என்பதைச் சிறிது நேர உரையாடலில் தெரிந்துகொண்டேன். திறமையானவர்களை
மிகச்சிறப்பாக அடையாளம் காணும் பேரறிவைக் கண்டு மகிழ்ந்தேன்.
மருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்கள் என்
பணிகளையும் உழைப்புகளையும் அமைதியாகக் கேட்டு உள்வாங்கிக்கொண்டார்கள். சற்றுநேரத்தில்
தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்ற அரங்கிற்குச் சென்றோம்.
மாணவர்கள் மிகசிறப்பாக வரவேற்றுக் கோலமிட்டிருந்தனர்.
வண்ணப்பொடிகளில் கணினி வரைந்து அழகுடன் வைத்திருந்தனர். அதில் தமிழ் 99 விசைப்பலகை
அமைப்பில் எழுத்துகள் உள்ளிட்டு வரையப்பட்டிருந்த அந்த அழகுக்கோலம் கண்டு மகிழ்ந்தேன்.
தமிழ் இணையப் பயிலரங்கின் தொடக்கம் தமிழ்த்தாய்
வாழ்த்துடன் அமைந்தது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.மணிகண்டன் அவர்கள் அனைவரையும்
வரவேற்று இணையப் பயிலரங்கம் நடைபெறக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தந்த ஒத்துழைப்பை
அரங்கிற்குச் சொல்லி எங்களை மகிழ்ச்சிப்படுத்தினார். குறிப்பாகக் கல்லூரி முதல்வர்
முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் பேரூக்கம் வழங்கியதை நன்றியுடன் பதிவுசெய்தார்.
அடுத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் முத்துசாமி
ஐயா அவர்கள் இன்றைய மாணவர்களுக்கு இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார். அதுபோல்
கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ. இராமகிருஷ்ணன் அவர்களும் கல்வியியல் பயிலும்
மாணவர்கள் இணையத்தில் இருக்கும் பாடத்திட்டங்களைப் பயன்படுத்திப் படிக்கவேண்டும் என்று
கேட்டுக்கொண்டார். துணைமுதல்வர் முனைவர் கி.துரைராஜ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள்உரையாற்றுதல்
மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் மாணவர்கள்
கல்வி அறிவைப் பெறுவதில் தொடர்ந்து முயன்று உழைக்கவேண்டும் என்றும் அதற்குரிய சூழல்
கல்லூரியில் உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து
தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருவதை நினைவூட்டி வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக நான் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து
அறிமுகவுரையாற்றினேன். காட்சி விளக்கத்துடன் என் உரை அமைந்தது. காலையில் இரண்டுமணி
நேரம் அமைந்த என் உரை, பகல் உணவுக்குப் பிறகு செய்முறையாக இரண்டுமணி நேரம் அமைந்தது.
நான்கு மணிநேரத்தில் தமிழ் இணைய வளர்ச்சி தொடங்கித் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பூக்கள்
உருவாக்கம் வரை அனைத்துச் செய்திகளையும் அரங்கிற்கு அறிமுகம் செய்தேன். அனைவரும் ஆர்வமுடன்
குறிப்பெடுத்துக்கொண்டனர். வினாக்கள் தொடுத்து விளக்கம் பெற்றனர்.
சமூக வலைத்தளங்களையும், தமிழ்க்கல்வி தரும்
இணையதளங்களையும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மழலைக்கல்வித் தளங்களையும் அறிமுகம்
செய்தேன். சற்றொப்ப முந்நூற்று ஐம்பது மாணவர்களும், பேராசிரியர்களுமான பங்கேற்பாளர்கள்
கலந்துகொண்டனர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற கல்லூரிகளைச்
சேர்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள்
கல்வியியல்(B.Ed.) பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரங்கு நிறைந்திருந்ததால் இரண்டு திரைகள்
அமைக்கப்பெற்றிருந்ததன. இணைய இணைப்பு, மின்சாரம், அரங்க அமைப்பு, உதவியாளர்கள் என அனைத்தும்
குறைவற்று இருந்ததால் இந்தப் பயிலரங்கம் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றது.
நிறைவு விழாவில் மாணவர்கள் பயிலரங்கம் குறித்த
கருத்துரை வழங்கினர். பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவிகள் வரைந்த வரவேற்புக்கோலம்
கல்லூரி முதல்வர் முனைவர் பெ.இரா.முத்துசாமி
கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், முதல்வர், மு.இ.
பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கல்
பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கல்
மாலை நிகழ்ச்சிக்குப் பிறகு கல்லூரியின்
முதல்வரைக் கண்டு உரையாடியபொழுது மேலாண்மைத்துறையில் பயின்ற அவரின் பேரறிவு கண்டு வியப்படைந்தேன்.
அவர்தம் தமிழ் ஈடுபாடும் நூல் கற்கும் இயல்பும் அறிந்து மகிழ்ந்தேன். பேராசிரியர்கள்,
நண்பர்கள், மாணவர்களிடம் விடைபெற்று விடுதிக்குத் திரும்பினேன். சற்று நேரம் ஓய்வெடுத்து
இரவு உணவுக்கு நகரத்திற்கு வந்தோம். இரவு உணவு முடித்து இரவு 10 மணியளவில் புறப்பட்டு
காலையில் புதுச்சேரி வந்து சேர்ந்தேன். என். ஜி. பி. கல்லூரியின் பயிலரங்க நிகழ்வுகள்
என்றும் என் நினைவில் பசுமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக