நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 ஜூன், 2014

முனைவர் பா. வளன் அரசு எங்களுக்கு முன்மாதிரியாக அமைந்த பேராசான்!


முனைவர் பா. வளன்அரசு பவளவிழா வாழ்த்துப்பேழை


   இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பேராசிரியர்கள் என்று மூவரை நான் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. அவர்களுள் ஒருவர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன், மற்றையோர் பேராசிரியர் இரா. இளவரசு அவர்களும் பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களும் ஆவர். இவர்களைக் குறிப்பிடுவதற்குக் காரணம் வகுப்பறைகளைத் தாண்டியும் இவர்களுக்கு மாணவர்கள் உண்டு என்பதேயாகும். ஆம். தனித்தமிழ் உரைகளால் கேட்போர் உள்ளத்தில் தமிழ்ப்பற்றைப் பதியமிடும் இவ்விணையில்லாப் பேராசிரியர்கள் செய்துள்ள தமிழ்ப்பணிகள் மலைப்பை ஏற்படுத்துவன. தமிழில் பேசினால் தாழ்வாகப் பார்த்த இக்குமுகாயத்தில் தனித்தமிழில் பேசினால் பெருமை என்று அனைவரின் உள்ளத்திலும் பதியவைத்தவர்கள் இவர்கள். ஆங்கிலம் கலவாமல் பேமுடியாது என்று மேம்போக்காகச் சொன்னவர்கள் நடுவே தூயதமிழில் உரையாற்ற இயலும் என்று மெய்ப்பித்தவர்கள் இவர்கள். இவர்கள் மூவரும் மணிக்கணக்கில் தூய தமிழில் சொற்பெருக்காற்றும் திறன்பெற்றவர்கள்.

   இவர்களுள் பேராசிரியர் வளன் அரசு ஐயா அவர்களைக் கடந்த கால் நூற்றாண்டாக அறிவேன். தனித்தமிழ் இலக்கியக் கழகப் போட்டியில் தங்கப்பதக்கம்பெறப் பாளையங்கோட்டை சென்ற நாளிலிருந்து(1990) அவர்களின் குடும்ப உறுப்பினன் என்றே நான் என்னைக் கருதிக்கொள்வது உண்டு. அவர்களின் துணைவியார் காட்டிய பரிவும், அன்பும் அவர்களின் குடும்பத்தார் காட்டிய பாசமும் கண்டு முதல் சந்திப்பில் நெகிழ்ந்துபோனேன். அதன்பிறகு நெல்லை செல்லும்பொழுதெல்லாம் பேராசிரியர் அவர்களை இல்லம் சென்று பார்க்காமல் திரும்பியதில்லை. தொடர்ந்து மடல் வழியாகவும் தொடர்பில் இருப்பவன் யான்

   கல்லூரி மாணவனாக இருந்த என்னை ஊக்கப்படுத்தி இளம் முனைவர் பட்ட வகுப்பிற்குச் செல்லத் தூண்டியும் அதன் பிறகு முனைவர் பட்ட ஆய்வில் முந்தும்படியும் அதனை அடுத்துப் பல கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்தபொழுதெல்லாம் ஒரு தந்தையின் கவனிப்போடு என் தமிழ்ப்பற்றுக்கு ஒரு கரைகட்டிப் பயனுறச் செய்தவர். மேடைகளில் தனித்தமிழில் அருவிபொழிவதுபோல் பேராசிரியர் வளன் அவர்கள் உரையாற்றும்பொழுது இவர்போல் நம்மால் பேசமுடியவில்லையே என்று நான் ஏங்கியதுண்டு. தேம்பாவணியைப் பேராசிரியர் அவர்கள் பாடமாக நடத்தியபொழுது அவர்களின் புலமைநலம் கண்டு போற்றிப் புகழ்ந்தது உண்டு. தமிழ்நாட்டு மேடைகளில் மட்டும் என்று இல்லாமல் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பேராசிரியர் அவர்களுடன் இணைந்து உரையாற்றியமை என் நெஞ்சில் நிழலாடுகின்றன.

   எந்தப் பொருளில் பேசவேண்டும் என்றாலும் எந்தக்குறிப்பும் இல்லாமல் சொற்பெருக்காற்றும் பேராற்றல் பேராசிரியர் அவர்களிடம் உண்டு. பேராசிரியர் வளன் அரசு அவர்கள் எடுத்த செயலைச் செய்துமுடிக்கும் வினையாண்மை உடையவர். தொடர்ந்து தமிழ்ச்சங்கத்தில் மாணவர்களுக்குச் சொற்பெருக்காற்றும் சூழலை உருவாக்கிப் பலரை நாவன்மை மிக்கவர்களாக மாற்றியதை இங்குச் சுட்டிச் சொல்லியாக வேண்டும். தனித்தமிழ்க் கட்டுரைப் போட்டி நடத்தித் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர்களாக வளர்த்த பெருமை பேராசிரியர் பா, வளன்அரசு அவர்களுக்கு உண்டு. இந்தப் போட்டியில் வென்றவர்கள் அனைவரும் தமிழகத்தின் முன்னணித் தமிழ்த்தகுதியுடையவர்களாக மிளிர்ந்துள்ளமை இங்குக் கவனத்தில் கொள்ளத் தக்கது.

                தனித்தமிழில் எழுதியும் பேசியும் வந்த நான் சிலவாண்டுகளின் இடைவெளிக்குப் பிறகு கணினியும், இணையமும்தான் தமிழை வாழ்விக்க உள்ளது என்று கண்டு அத்துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தேன். தமிழறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் பதியும் முயற்சியை மேற்கொண்டேன். நான் மட்டும் தமிழக வரலாற்றை எழுதிச் சேர்த்துவிட முடியாது என்று கருதி என்னைப் போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இளைஞர்களை எழுதுவிக்க, கணினிப் பயிற்சி, இணையப் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டேன். அப்பொழுது பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கில் ஐயா அவர்கள் ஒரு மாணவரைப் போல் கலந்துகொண்டு தமிழ் இணையப் பயிற்சி பெற்றதை என் வாழ்வில் குறிக்கத்தகுந்த நாளாகக் கருதுகின்றேன். ஏனெனில் அவர்கள் காத்து வளர்த்த தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் என் முயற்சியையும் பயிற்சியையும் ஐயா அவர்கள் அறிவதற்கு அந்தநாள் ஒரு வாய்ப்பாக அமைந்ததை எண்ணி மகிழ்ந்தேன். ஐயாவின் முன்னால் அரங்கேறிய அந்த இணையப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பலர் இணையத்தில் இன்று எழுதி வருகின்றமை மகிழ்ச்சி தரும் ஒன்றாகும்.

  பழைமைக்குப் பழைமையைப் போற்றும் ஐயா வளன்அரசு அவர்கள் புதுமைகளை ஏற்கும் விரிந்த உள்ளம்கொண்டவர்கள் என்பதற்கு இது சான்றாகும். ஐயா வளன்அரசு அவர்கள் தமக்கு முதன்மையானது மொழியா? மதமா? என்று வரும்பொழுது மொழிக்கு முதன்மை தரும் பேருள்ளம் படைத்தவர். திருக்குறளில் அவர்களுக்கு இருந்த புலமைநலம் கண்டு அவர்களின் திருக்குறள் உரையை மக்கள் பதிப்பாக வெளிக்கொண்டுவந்தேன். அதன் பிறகு ஐயா அவர்களுக்குத் திருவள்ளுவர் விருது தமிழக அரசால் கிடைக்கப்பெற்றமை அறிந்து அவர்களின் திருக்குறள் பணிக்குச் சமூக மதிப்பு கிடைத்ததை எண்ணிப் பூரிப்படைந்தேன். திருக்குறள் வாழ்க்கை வாழ்ந்து மாணவர்களுக்கு நல்லாசிரியராக விளங்கும் பா. வளன் அரசு அவர்கள் எங்களுக்கு முன்மாதிரியாக அமைந்த பேராசான் என்று சொன்னால் அது மிகையில்லை.


 பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள் உடல்நலம் சிறந்து, தமிழ்நலம் தழைக்கப்  பாடுபட வேண்டி நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றேன்.

குறிப்பு: முனைவர் பா.வளன் அரசு பவள விழா வாழ்த்துப்பேழை நூல்15.06.2014 நெல்லையில் வெளியிடப்பெற்றது. அதற்காக எழுதப்பெற்ற கட்டுரை இது.மலரில் பக்கம்157 முதல்159 இல் இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் பா.வளன் அரசு பற்றிய என் பழைய இடுகை

தொடர்புக்கு: 

கதிரவன் பதிப்பகம்,
3, நெல்லை நயினார் பதிப்பகம், 
பாளையகோட்டை- 627 002

செல்பேசி: 75983 99967