நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பேராசிரியர் சா. வளவன் அவர்கள் மறைவு!

பேராசிரியர் சா. வளவன் 


சென்னைப் பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சா. வளவன் அவர்கள் இன்று (29.04.2016) மாலை 6 மணியளவில் இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, உரையாடியுள்ளேன். சென்னை வானொலி நிகழ்வு ஒன்றில் அவருடன் கலந்துகொண்டுள்ளேன். நாட்டுப்புறவியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் தமிழுக்குத் தந்தவர். அனைவரிடத்தும் நிறைந்த அன்புடன் பழகும் பண்பாளர். அன்னாரின் மறைவால் வருந்தும் தமிழுள்ளங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்!

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் நூற்றாண்டுத் தொடக்கம்!...

செம்மல் வ.சுப. மாணிக்கம்

எளிமையின் உருவம்; புலமையின் இயக்கம்; சங்கப் பனுவலில் திளைத்த அறிஞர்; தொல்காப்பியக் கடலில் மூழ்கி முத்தெடுத்த வல்லுநர்; தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து பார்த்தவர்; திருவாசகத் தேனுண்ணும் தும்பி; ஏழிளந்தமிழில் வாழப் பழகியவர்; பல்லாயிரம் மாணவர்களின் நெஞ்சக் கோவிலில் நிலைபெற்ற தெய்வம்; கற்றோர் உள்ளத்தில் கலந்த மேதை; தினைத்துணை உதவி பெற்றாலும் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பாளர்; தமிழ்வழிக் கல்விக்குத் தெருவிலிறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர்; தில்லையம்பலத்தில் திருமுறை முழங்க வேட்கையுற்றவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்குப் பாடாண் திணை பாடிய பாவலர்; வீடும் கொடுத்த விழுச்செல்வரைப் பாட்டு மாளிகையில் படிமமாக்கிக் காட்டியவர். பண்டிதமணியாரின் புலமைப் பிறங்கடை இருவருள் ஒருவர்; தமிழ்ப்பகையை எதிர்த்து நின்ற அரிமா; பார் காத்தவரையும் பயிர் காத்தவரையும் போற்றும் உலகில் பைந்தமிழ் காத்தவரைப் போற்றிய நன்றியாளர்; இவ்வாறு எழுதிக்கொண்டே செல்லலாம் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ் வாழ்க்கையை! ஆம். தமிழ் வாழ்க்கை வாழ்ந்தவர்களின் பெருமையை முழுவதும் எழுதும் ஆற்றல் யாருக்கு உண்டு?

வரம்பிலாப் பெருமைகொண்ட தமிழ்த்தாயின் தலைமகன் மூதறிஞர் வசுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகின்றது! அரசியல் ஆர்ப்பாட்டத்திலும் மட்டைப்பந்து மாயையிலும் திரைப்படக் கூத்தர்களின் வெட்டுருவக் கூத்துகளிலும் மூழ்கிக் கிடக்கும் இற்றைத் தமிழகத்தாருக்கு அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் தமிழ் வாழ்க்கையையும் எடுத்தியம்புவது எம்மனோர் கடமையாகும்.

. சுப. மாணிக்கம் அவர்கள் மேலைச்சிவபுரி என்னும் சிற்றூரில் வாழ்ந்த வ. சுப்பிரமணியன் செட்டியார்தெய்வானை ஆச்சி ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக 17. 04.1917 இல் பிறந்தவர். இளம் அகவையில் தம் பெற்றோரை இழந்தவர். பர்மாவில் தம் முன்னையோரின் தொழிலைப் பழகியவர். பொய்சொல்லா மாணிக்கமாகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால் அடையாளம் காணப்பெற்று, தமிழறிவு தரப்பெற்றவர். அண்ணாமலை அரசரின் கல்விக்கோயிலில் தம் கல்விப்பணியைத் தொடங்கி, மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய அறிவையும், தமிழுணர்வையும் ஊட்டியவர். வள்ளல் அழகப்பர் அவர்களின் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தவர். நேர்மை, எளிமை இவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். தம் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்பவர்கள் குருதியுறவு உடையவர்கள் எனினும் பொறுத்துக்கொள்ளாத மாசில் மனத்தவராக வ. சுப. மாணிக்கம் விளங்கியவர். தம் குறிக்கோள் வாழ்க்கையை விருப்பமுறியாக(உயில்) எழுதிவைத்துப் பின்னாளில் தம் விருப்பம் தொடர வழிவகை செய்தவர். எந்த நிலையிலும் அறத்திற்குப் புறம்பாகச் செயல்படாத மாசில் மனத்தினர்; நெறியினர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக இருந்து, மூத்த அறிஞர் பெருமக்களைத் தமிழாராய்ச்சிக்குப் பணியமர்த்தித் தமிழாராய்ச்சியை நிலைநிறுத்தியவர்.

தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், கம்ப இராமாயணம், பாரதியத்தில் தனித்த ஈடுபாடு கொண்டவர். பழைமைப் பிடிப்பும் புதுமை வேட்கையும் நிறைந்தவர். தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தி இயக்கம் கண்டவர். தமிழ் எழுத்துக்களைத் திருத்தம் என்ற பெயரில் குலைக்க  அறிவியல், தொழில்நுட்பப் போர்வை போர்த்தி ஒரு குழு திரிந்தபொழுது அதனை வன்மையாகக் கண்டித்து எழுதியவர். ஆய்வு நூல்கள், படைப்பு நூல்கள், திறன் நூல்கள், புத்தாக்கச் சொற்கள் தந்து, தமிழ் வாழ்க்கை வாழ்ந்து தம் வாழ்நாளுக்குப் பிறகும் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் ஆக்கங்களைத் தந்த மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்; ஒவ்வொரு தமிழமைப்புகளின் கடமையாகும்.

அரசியல் செல்வாக்கோ, மற்ற பின்புலங்களோ இல்லாத மூதறிஞரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கற்றறிந்தார் கடமையாகும். அவர் படைப்புகளை மதிப்பிட்டுத் திறனாய்வு நூல்களை எழுதி, வெளியிடுவது எழுத்தாளர் கடமையாகும். மாணிக்கனாரின் வெளிவராத படைப்புகளைத் திரட்டித் தொகுத்து மாணிக்கப் புதையலை வெளிக்கொணர்வது உடன்பழகியோரின் பணியாகும்.  அவர் விரும்பிச் செய்த தமிழ்வழிக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசுக்கு வேண்டுகோள் வைப்பது இயக்கம் நடத்துவோரின் தலையாப் பணியாகும். கோயில்களில் நாள்தோறும் திருமுறைகளைத் தமிழில் ஓதி, வழிபாடு நிகழ்த்துவதற்குக் குரல்கொடுப்பது இறையீடுபாட்டளர் கடமையாகும். மூதறிஞருக்குத் திருவுருவச் சிலையமைத்து அவர் நினைவுகளைப் போற்றுவதும், அவர் நினைவு என்றும் நின்று நிலவப் பணிபுரிவதும் அரசினரின் கடமையாகும். பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்கள் வ.சுப. மா. குறித்த ஆய்வரங்குகளையும், அறக்கட்டளைப் பொழிவுகளையும் நடத்தி அவருக்குப் பெருமை சேர்ப்பதைத் தலையாயப் பணியாக்குதல் வேண்டும்.


செம்மல் வ.சுப. மாணிக்கம் பிறந்த நாளில் அவர் கொள்கைளை நெஞ்சில் ஏந்துவோம்!

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

தமிழ்த்தொண்டர் இராம. பெரிகருப்பனார்!


இராம. பெரிகருப்பன், மெய்யம்மை ஆச்சி
நிறுவுநர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி

தொடர்வண்டிகளின் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்கு வாய்ப்பாகப் பயணத்தை இப்பொழுது  அமைத்துக்கொள்கின்றேன். அப்படித்தான் அன்று விழுப்புரம் தொடர்வண்டிச் சந்திப்பில் பல்லவன் தொடர்வண்டிக்குக் காத்திருந்தேன். ஒரு பழைய நூலகத்தில் புகுந்து, அரிய நூல்களைப் படித்துக் கருத்து முத்துகளைப் பெறுவதுபோல் அருகிலிருந்த பேராசிரியர் தெ. முருகசாமியின் உரையாடலில் அரிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இராம. பெரியகருப்பன் செட்டியாருக்கு இந்த அளவுக்குத் தமிழ்ப்பற்று உருவாவதற்குக் காரணம் யாது? என்று பேராசிரியரை வினவினேன்.

பள்ளிப்பருவத்தில் அவருக்கு ஆசான்களாக இருந்த வித்துவான் க. தேசிகன், புலவர் இராமசாமி ஆகியோரின் ஊக்கத்தால் தமிழ்ப்பற்றுடையவராக நம் செட்டியார் அவர்கள் விளங்கினார்கள். கல்லூரிப் பருவத்தில் கணக்குப் பாடத்தைப் பட்டப் பேற்றுக்காகப் படித்தாலும் தனித்தமிழ் இயக்கக் கருத்துக்களில் மறைமலையடிகளார், பாவாணர்பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஈடுபட்டு நல்ல தமிழ்த்தொண்டராக நாளும் விளங்கினார் என்று மேலும் மொழிந்தார்.

தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்மேல் திரு. செட்டியார் அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. எனவே தம் மயிலாடுதுறை இல்லத்துக்கு நீலாம்பிகையம்மையார் இல்லம் என்று மறைமலையடிகளின் மகளார் பெயரை இட்டு வழங்கினார். தாம் வாழ்ந்த காரைக்குடி இல்லத்துக்குத் திரு. வி. . இல்லம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஈரோட்டு இல்லத்துக்குப் பாரதி நிலையம் என்று பெயர் அமைத்தார் என்று அருவிபோல் முருகசாமி ஐயா, பெரியகருப்பன் செட்டியாரின் புகழைக் கொட்டி முழக்கினார்.

இராமசாமி தமிழ்க்கல்லூரி என்னும் பெயரில் தமிழ்க்கல்லூரி நிறுவும் அளவுக்குத் தமிழ்ப்பற்று செட்டியார் அவர்களுக்கு எப்படி அமைந்தது? இது என்னுடைய அடுத்த வினா?

பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் நாளும் ஒரு நூல் படிப்பது வழக்கம். தமிழ் ஆங்கில நூல்களை ஆர்வமுடன் பயின்றார். அவ்வாறு பயின்ற நூல்களுள் உ. வே. சாமிநாத ஐயரின் வாழ்க்கை வரலாறு, கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு பெரியகருப்பனாரின் நெஞ்சைப் பெரிதும் கவர்ந்தனவாகும். எனவே, இவர்களைப் போல் தமிழுக்கு ஏதேனும் தொண்டு செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதற்கு வாய்ப்பாகக் காரைக்குடியில் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் பணியாற்றியபொழுது அவரின் தொடர்பு செட்டியார் அவர்களுக்குக் கிடைத்தது. தமிழ்க்கல்லூரியைத் தொடங்கும்பொழுது கல்லூரிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று திரு. செட்டியார் நினைத்தபொழுது மூன்று இராமசாமிகளை மனத்தில் நினைத்துக் கல்லூரிக்குப் பெயர் வைத்தார். ஒருவர் ஈரோட்டுப் பெரியார் இராமசாமி; இனொருவர் தம் வகுப்பு ஆசிரியர் இராமசாமி; மற்றொருவர் தம் வளர்ப்புத் தந்தை இராமசாமி.

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நெறிகாட்டலில் இந்தியப் பல்தமிழ்க் கழகம் என்ற தமிழ் அமைப்பைப் பெரியகருப்பன் செட்டியார் முதலில் உருவாக்கினார். தமிழ் கற்க விரும்புவோர்க்கு முறைசாராக் கல்வி என்ற வகையில் தமிழ் படிக்க இந்த அமைப்பு உதவியது. ஈராண்டு தமிழ் பயின்றவர்களுக்கு இளமணி என்றும், நான்காண்டுகள் தமிழ் பயின்றவர்களுக்கு முதுமணி என்றும் பட்டங்களை அக்காலத்தில் வழங்கினர். தொடக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த அமைப்பு பின்னாளில் தேக்கம் பெற்றது. எனவே இதனைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரியாக்க நினைத்து 18.06.1967 இல்  இராமசாமி தமிழ்க் கல்லூரியைச் செட்டியார் அவர்கள் உருவாக்கினார் என்று தெ. முருகசாமி மேலும் குறிப்பிட்டார்.

இராமசாமி தமிழ்க்கல்லூரியில் பேராசிரியர் செல்வத்தாண்டவன், பேராசிரியர் ந. இராமநாதன் ஆகியோருடன் தாமும் முதல்வராகப் பணியாற்றிய அக்காலங்களை அசைபோடுவதற்கும் தொடர்வண்டி காரைக்குடி நோக்கி முன்னேறுவதற்கும் சரியாக இருந்தது.

இராம. பெரியகருப்பன் செட்டியார் தமிழ் படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்துடன் இசை, சித்த மருத்துவம், நாடகம், தட்டச்சு உள்ளிட்ட தொழில்நுட்ப அறிவு, அறிவியல் அறிவு, பிறமொழி அறிவு பெற வேண்டும் என்று முற்போக்கு எண்ணம் உடையவாரக விளங்கியதையும் பேராசிரியர் தெ.மு. எடுத்துரைத்தார்.

திரு.செட்டியார் அவர்கள் கல்லூரி நிறுவவும் தமிழுக்குச் செலவிடவும் அவர்களுக்கு வருவாய் எவ்வாறு அமைந்தது? என்று அடுத்து வினவினேன்.

சிங்கப்பூர் நாட்டில் வட்டிக்கடை நடத்திப் பொருள் நிலையில் முன்னேற்றம் கண்டவர் எனவும், தம் பொருளைத் தமிழுக்குச் செலவிடுவதில் பேரார்வம் கொண்டிருந்தவர் எனவும் தெ.முருகசாமி குறிப்பிட்டார். இறைநெறிக் கருத்துகளில் மிகுந்த பற்றுடையவர் என்றாலும் பகுத்தறிவாளர்களை உயர்வாகப் போற்றியவர் நம் செட்டியார் என்று கூறியதும் செட்டியார் அவர்களின் மேல் பற்றும் மதிப்பும் எனக்கு உருவானது. சிங்கப்பூருக்குத் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் பயணம் செய்தபொழுது வரவேற்றது முதல் வழியனுப்பியது வரை உடன் இருந்தவர் என்றார். மேலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் சிங்கப்பூர் சென்றபொழுது நம் செட்டியார் அவர்களின் விருந்தோம்பலில் இருந்துள்ளதையும் நினைவுகூர்ந்தார். காரைக்குடியில் பெரியார் சிலை நிறுவியபொழுது குறிப்பிட்ட தொகையைத் திரு. செட்டியார் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மேலும் பெரியார் நூற்றாண்டு விழாவைக் காரைக்குடியில் நடத்த முனைந்தபொழுது மற்றவர்கள் இடந்தரத் தயங்கியபொழுது, தம் கல்லூரி வளாகத்தை அன்புடன் கொடுத்து விழா நடக்க உதவிய பெருமைக்குரியவர் என்று அறிந்தபொழுது அவர்மேல் அன்பும் மதிப்பும் எனக்குக் கூடிக்கொண்டே இருந்தது.

திருமுறைகளை ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் ஓதுவதற்கு, ஓர் ஓதுவாரை வரச்செய்து பாடச் செய்து, பொருட்கொடை வழங்குவது செட்டியார் அவர்களின் வழக்கமாம். ஒருமுறை பேராசிரியர் நடேச முதலியார் அவர்களைத் திருவாசகம் பொழிவாற்ற அழைத்து, மூன்றுநாள் பொழிவு முடிந்த பிறகு அவருக்கு வெள்ளித்தட்டில் ஐந்தாயிரம் மதிப்புத்தொகை வைத்து, திரு.செட்டியார் அவர்களும், ஆச்சியார் அவர்களும் பேராசிரியர் அவர்களின் திருவடிகளை வணங்கினார்கள் என்று கூறியதும், செட்டியார் அவர்களின் திருவாசகப் பற்றை ஒருவாறு உணர்ந்தேன்.

 இராம. பெரியகருப்பன் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ் இலக்கிய உலக நிகழ்வுகளையும் உரையாடியபடி நள்ளிரவு நாங்கள் காரைக்குடியை அடைந்தோம். தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியதும் எங்களை எதிர்கொண்டு அழைப்பதற்குப் பேராசிரியர் நாகநாதன் காத்திருந்தார். அவரின் மகிழ்வுந்தில் விடுதிக்குச் சென்று, கண்ணயர்ந்தோம். காலையில் எழுந்து கடமைகளை முடித்துக்கொண்டு முதலில் பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் வாழ்ந்த திரு.வி. . இல்லம் சென்றோம். இத்தாலிநாட்டுக் கல்லால் அமைந்த பளிங்குத் தூண்களும், பாரிய கதவுகளும், அதற்குரிய பூட்டும், திறவியும், வேலைப்பாடு அமைந்த நிலைகளும் கண்டு வியப்புற்றேன். இவை யாவும் செட்டியார் அவர்களின் செல்வம், செல்வாக்கு காட்டும் சான்றுகளாகக் கண்முன் தெரிந்தன. பலகட்டுகளாகஇருந்த இல்லத்தின் கல்யாணக்கட்டு என்ற பகுதிக்குச் சென்றோம். அங்குதான் பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் இறைவழிபாடு செய்யும் பகுதியும், அலுவல்களை அமர்ந்து பார்க்கும் பகுதியும் இருந்தன.

பரந்து விரிந்த இல்லத்தின் சுவர்களையும் அதில் மாட்டப்பெற்றிருந்த புகைப்படங்களையும் பார்த்தேன். பூண்டி அரங்கநாத முதலியார், கால்டுவெல், போப் அடிகளார், விபுலானந்தர், உமாமகேசுவரம் பிள்ளை, .மு. வேங்கடசாமி நாட்டார், வீரமாமுனிவர், தனிநாயகம் அடிகளார் உள்ளிட்டோர் படங்கள் அழகுற மாட்டப்பெற்றிருந்தன.

மாளிகையின் ஒருபகுதியில் பெரியகருப்பன் செட்டியார் நாளும் வழிபடும் இறையுருவப் படங்கள் இருந்தன. அவற்றுக்கும் மேல் தவத்திரு. மறைமலையடிகளார் படம் இருந்தமை எனக்குச் செட்டியார் மேல் மிகுந்த மதிப்பை உண்டாக்கியது. தாம் வழிபடும் கடவுளுக்கு இணையாக, இன்னும் உண்மையுரைப்பின் கடவுளருக்கு மேலாக நம் மறைமலையடிகளார் படத்தைப் பொருத்தியிருந்ததைப் பார்த்து, பெரியகருப்பன் செட்டியாரின் தமிழ்ப்பற்றை எண்ணி எண்ணி உவந்தேன்.

பெரியகருப்பன் செட்டியாரின் இறுதி வாழ்க்கை எவ்வாறு அமைந்து? என்று வினவினேன்.

செட்டியார் அவர்கள் மலேசியா சென்றிருந்தபொழுது நடைபெற்ற ஒரு மகிழ்வுந்து நேர்ச்சியில் இறந்தார் என்ற செய்தியை அறிந்து வருந்தினேன். நல்ல தமிழ்த்தொண்டர் ஒருவருக்கு இறப்பு இவ்வாறு நேர்ந்ததே என்று கவலையுற்றேன்.

இராம. பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் 07.09.1930 இல் காரைக்குடியில் பிறந்தவர். பெற்றோர் வீ. பெரியகருப்பன் - மீனாட்சி ஆச்சி ஆவர். குடும்ப மரபின்படி இரண்டாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தைக்குப் பெரியகருப்பன் என்று பெயர் வைக்கும் வழக்கப்படி இவருக்குத் தந்தையாரைப் போல் பெரிய கருப்பன் என்று பெயர் வைக்கப்பெற்றது. தம் பெரியப்பா இராம. வீர. இராமசாமி செட்டியாருக்கு ஆண்குழந்தை இல்லாததால் பெரியப்பாவின் வளர்ப்பு மகனாக வந்ததால் இராம. பெரியகருப்பன் என்னும் புகழ்ப்பெயரைக் கொண்டார்.

இராம.பெரியகருப்பன் செட்டியார் பள்ளிப்படிப்பைக் காரைக்குடியிலும் அருகிலுள்ள அமராவதி புதூரிலும் பெற்றார். உயர்கல்விக்குத் திருச்சியில் அமைந்துள்ள தூய வளனார் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அங்குப் புகுமுக வகுப்பில் இணைந்து பயின்றார். பின்னர்க் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இணைந்து இளமறிவியல் கணிதம் பயின்றார். பட்டப்படிப்பு முடிந்ததும் சிங்கப்பூர் சென்று தம் குடும்பத்தின் வட்டிக்கடையில் கைபழகித் தொழிலை வளர்த்தார். சிங்கப்பூரில் தம் கடைப்பெயரைத் தமிழில் அமைத்தவர். தமிழ்க்கல்லூரி கண்டவர். தம் தாயாரின் பெயரில் அறக்கட்டளை அமைத்து, நல்லறிஞரை அழைத்து, உரையாற்றச் செய்து அவர்தம் பொழிவை நூலாக்கித் தமிழ்த்தாயினுக்கு அணிகலனாக அமைத்தவர். மறைமலையடிகள் நூற்றாண்டின் பொழுது அவர் பெயரில் பிள்ளைத் தமிழ்ப் போட்டி வைத்து, பாவலர்களை எழுதச் செய்து, தக்கவரைத் தேர்ந்தெடுத்து ஐயாயிரம் பரிசு வழங்கிப் பாராட்டியவர். அபிராமி அந்தாதி நூலை உரையுடன் வெளியிட்டவர். தம் பூசை அறையில்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (605)

என்னும் திருக்குறளைப் பெரிய எழுத்தில் அச்சிட்டு வைத்து, அதனைக் கற்று ஒழுகினார். காட்சிக்கு எளியராகவும், கடுஞ்சொல் இல்லாதவராகவும் விளங்கிய இராம. பெரியகருப்பனார் திருவனந்தபுரம் கல்லூரிக்கு நூலகம் அமைக்க நிதிக்கொடை வழங்கியவர். பெரியகருப்பனாரின் பெரும்புகழை மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள்,

 பிறப்பறியாத் தமிழன்னை பெற்ற மைந்தன்
பேராற்றல் பெருங்கருப்பன் பிறவி அன்பன்
மறப்பறியாக் கொடையாளன் இராம சாமி
மாண்புசால் குலமுதல்வன் தந்தை பேரால்
சிறப்பறியாத் தெய்வநிகர் மொழிதான் வாழச்
செந்தமிழ்க்குக் கல்லூரி செவ்வன் கண்டான்
நிறப்பறியாக் கடல்போல நெடிது நின்று
நெஞ்சினிய மொழித்தொண்டு பரப்பி வாழி!

என்று போற்றிப் பாடினார்.

காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க்கல்லூரியின் புகழ்வரலாற்றின் முதற்பக்கத்தில் இராம. பெரியகருப்பனாரின் திருப்பெயர் என்றும் எழுதப்பெறும்.


தமிழ்த்தொண்டர் இராம. பெரியகருப்பனாரின் நீடுபுகழ் நிலைபெறட்டும்!


ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

தொல்காப்பியத்தில் இசை - புதுச்சேரியில் சிறப்புச் சொற்பொழிவு
உலகத் தொல்காப்பிய   மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத்தில் இசை என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. 10. 04. 2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8. 15 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி புதுச்சேரி, நீட இராசப்பையர் வீதியில் அமைந்துள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்றது. பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின்   மேனாள் இசைப் பேராசிரியர் முனைவர் இராச. கலைவாணி கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் இசை என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். தமிழில் கிடைத்துள்ள தொல்காப்பியத்தில் இசை குறித்த பல்வேறு குறிப்புகள் உள்ளதை எடுத்துக்காட்டி விளக்கினார். தொல்காப்பியர் இசை பற்றியும், பாவகைகள் பற்றியும் இசைக்கருவிகள் பற்றியும் இசை வடிவங்கள் பற்றியும் கூறிய செய்திகளை எடுத்துரைத்தார். இசைக்கலைஞர்கள் பற்றியும் அக்காலத்தில் நடைபெற்ற கூத்துகள் பற்றியும் தொல்காப்பியம் வழிநின்று விளக்கினார். தொல்காப்பியர் குறிப்பிடும் பெரும்பண் பற்றியும், கிளைப்பண் பற்றியும் இவர் உரையில் செய்திகள் இடம்பெற்றன.  

திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவாளருக்குப் பாராட்டுமடல் வழங்கினார். பிரான்சுநாட்டுப் பேராசிரியர் திரு. மொரே அவர்கள் கலந்துகொண்டு சிறுப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். புதுச்சேரியைச் சேர்ந்த தூ. சடகோபன், பேராசிரியர் இராச. குழந்தைவேலனார் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினர். நிகழ்ச்சியின் நிறைவில் செல்வி த. ஏழிசைப்பாவையின் நாட்டிய நிகழ்வு நடைபெற்றது. முனைவர் அரங்க. மு. முருகையன் நன்றியுரை வழங்கினார். தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளை சிறப்பாகச் செய்திருந்தது.

காணொளியைப் பார்க்க இங்கே அழுத்துக!

                                                                                                                                                                                                              
 பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களுக்குப் பேராசிரியர் மொரே அவர்கள் சிறப்புச் செய்தல்.அருகில் பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா

திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களைப் பேராசிரியர் தங்கப்பா சிறப்பித்தல்

மூத்த தமிழறிஞர்கள்

தமிழார்வலர்கள்

தமிழறிஞர்கள்

திங்கள், 4 ஏப்ரல், 2016

தொல்காப்பியம் – தொடர்பொழிவு 4

·  

அன்புடையீர்! வணக்கம்.
தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் அறிஞர்களின் பங்கேற்பில் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய இசையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 10. 04. 2016, ஞாயிறு, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8. 15 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119, நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

தலைமை: பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்கள்

சிறப்புரை: முனைவர் இராச. கலைவாணி அவர்கள்
(
மேனாள் இசைப் பேராசிரியர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை)

தலைப்பு: தொல்காப்பியத்தில் இசை

நன்றியுரை:  முனைவர் அரங்க. மு. முருகையன் அவர்கள்

அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / 
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053


சனி, 2 ஏப்ரல், 2016

ஓலையில் கண்ட தமிழ்…


தி.மாயாண்டி அவர்கள் கல்லூரியின் தாளாளர் திரு. வீரப்பன் அவர்களிடம் சுவடிகளை ஒப்படைத்தல். அருகில் பேராசிரியர்கள் தெ.முருகசாமி, மு.இளங்கோவன், சு. புவனேசுவரி

              
எனக்கென அமைந்த பல்வேறு பணிச்சுமைகளால் பேராசிரியர் வையை கோ. வீரக்குமரன் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பலவாண்டுகள் ஆயின. ஒருமுறை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது தம் குடும்பத்தினர் பல்வேறு ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வைத்துள்ளதாகவும் அவற்றுள் என்ன இருக்கின்றன? என்று ஆராய்ந்து பார்த்து உரைக்கும்படியும் ஓர் அன்பு வேண்டுகோள் வைத்தார்.

நான் புதுச்சேரியிலும், அவர் கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும், ஓலைச்சுவடிகள் மதுரைக்கு அருகில் உள்ள முத்துசாமிப்பட்டி என்னும் சிற்றூரிலும் இருந்தால் சந்திப்புக்குப் பலமுறை நாள் குறித்தும் அனைத்தும் பொய்த்தன. இந்தமுறை ஓலைச்சுவடிகளை என் கையில் சேர்த்துவிடுவது என்று பேராசிரியர் கோ. வீரக்குமரன் திட்டமொன்றைத் தீட்டினார். நான் காரைக்குடி செல்லும் பயணத்தை அறிந்த பேராசிரியர், அவர் உறவினர் தி.மாயாண்டி வழியாக ஓலைச்சுவடியை எனக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார்.

இணையத் தமிழ்ப் பயிலரங்கில் கலந்துகொள்ள நான் காரைக்குடி செல்வது உறுதியானது. முனைவர் வீரக்குமரன் இதனை உறுதிப்படுத்திக்கொண்டு என் கையில் ஓலைச்சுவடியைச் சேர்க்கும் திட்டத்தில் கவனமாக இருந்தார். குறித்த நாளில் குறித்த நேரத்தில் தி. மாயாண்டி அவர்கள் ஒரு கைப்பெட்டியில் ஓலைச்சுவடிகளைச் சுமந்துகொண்டு நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்துசேர்ந்தார்.

தி. மாயாண்டி அவர்கள் நான் திருச்சியில் பயின்றபொழுது அறிமுகம் ஆனவர். அவர்தம் அச்சகத்தில், “கங்கைகொண்டசோழபுரத்து இறைவன்மேல் கருவூர்த்தேவர் பாடிய பாடல்கள்என்ற சிறு நூலினை அப்பொழுது அச்சடித்துள்ளேன் (1995). பழகுதற்கு இனிய பண்பாளரான தி. மாயாண்டியுடன் சிறிது நேரம் குடும்பம், உறவு, தொழில் குறித்து அளவளாவினேன். ஓலைச்சுவடியை ஒப்படைத்து உடனடியாக ஊர் திரும்பவேண்டிய கட்டாயத்தில் தி. மாயாண்டி அவர்கள் இருந்தார். இந்த அரிய ஓலைச்சுவடிகளை விடுதியில் வைத்துப் பெற்றுக்கொள்வதிலும் அருமையும் பெருமையும் வாய்ந்த காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மாணவர்கள் பேராசிரியர்கள் முன்னிலையில் பெற்றுக்கொள்வது சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். அருகிலிருந்த பேராசிரியர் தெ.முருகசாமி அவர்களும் இதனை ஒப்பினார்கள்.

விடுதியிலிருந்து மகிழ்வுந்தில் கல்லூரிக்குப் புறப்பட்டோம். இராமசாமி தமிழ்க்கல்லூரியின் அரங்கில் மாணவர்கள் இணையத்தமிழ் அறிய குழுமியிருந்தனர். கல்லூரியின் தாளாளர் பெ. வீரப்பன், கல்லூரியின் முதல்வர் சு. புவனேசுவரி, பேராசிரியர் தெ. முருகசாமி அருகிருக்க மாணவர்கள் முன்னிலையில் அந்தச் சுவடிகளைப் பெற்றுக்கொண்டோம். தி.மாயாண்டிக்கு நன்றியுடன் ஆடைபோர்த்தி அழகுபார்த்தோம். தி. மாயாண்டி அவர்களும் சிறிது நேரத்தில் எங்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

பயிலரங்கப் பணிகளை முடித்துக்கொண்டு இரவு தொடர்வண்டியில் கண்விழித்து அந்தப் பெட்டியைப் பாதுகாப்பாகக் கொண்டுவர வேண்டியிருந்தது. பெட்டி வனப்பாக இருந்ததால் யாரேனும் கள்வர்கள் கைப்பொருள் நினைந்து கவர்ந்து, சென்றுவிட்டால் அண்ணனுக்கு யார் விடை சொல்வது? அல்லது தேர்தல் நேரமாக இருப்பதால் தேர்தல் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் இதனைக் குடைந்து பார்த்தால் அவர்களுக்கு எவ்வாறு மறுமொழி தருவது? என்று கவலையுற்றபடி, அந்தச் சுவடிகள் தாங்கிய பெட்டியைப் பெருமிதத்துடன் புதுச்சேரிக்குக் கொண்டுவந்தேன்.

ஓலைச்சுவடிகள் அடங்கிய அந்தப் பேழையைத் திறந்து பார்த்தபொழுது சுவடிகள் சிறு சிறு கட்டாக இருந்தன. சில சுவடிகள் படிக்கும் நிலையில் இருந்தன. சில சுவடிகள் படிக்க இயலாத வகையில் எழுத்துகள் சிதைந்தும், சுவடிகள் சிதைந்தும் காணப்பட்டன. கையுறைப் பொருத்திக்கொண்டு, நுண்ணாடியின் துணையுடன் பருந்துப்பார்வையாகச் சுவடிகளின் உள்ளடக்கத்தைப் பார்வையிட்டேன். நீதி நூல்களும், மருந்து நூல்களுமாக இருந்த சிலவற்றை இனங்கண்டேன். மாட்டு மருத்துவம் பற்றி ஒரு சுவடிக்கட்டு இருந்தது. பாம்புக்கடி மற்ற நச்சுக்கடிக்கு உரிய மருந்துகளைப் பற்றி சில சுவடிகளில் செய்திகள் இருந்தன. கணக்கு வழக்கினைக் குறித்த செய்திகள் ஒரு சுவடியில் இருந்தன. மின்னொளியாள் குறம் என்ற ஒரு சுவடிக்கட்டு இருந்தது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உள்ளிட்ட நீதிநூல்கள் அடங்கிய ஒரு சுவடியும் இருந்தது. நீதி நூல் சுவடி மூலமும் உரையுமாக இருந்தது. இவற்றைத் தூய்மை செய்து, படி எடுத்தும், மின்படிமம் செய்தும் ஓய்வில் பாதுகாப்பேன்.

கடந்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் என்னை இனங்கண்டு, தமிழ்நெறியில் ஆற்றுப்படுத்தி, என் வளர்ச்சியின் ஒவ்வொரு முனையிலும் ஊக்கப்படுத்திவரும் அண்ணன் வையை கோ. வீரக்குமரன் அவர்கள் ஓலைச்சுவடியை மனம் உவந்து வழங்க முன்வந்தமைக்கும், ஊரிலிருந்து ஓலைச்சுவடிகளைக் கொண்டுவந்து கைவயம் தந்து உதவிய இனிய நண்பர் திரு. தி. மாயாண்டி அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

தி. மாயாண்டி அவர்களுக்கு பெ. வீரப்பன் அவர்கள் ஆடை அணிவித்தல்

விரியன் கடிக்கு உரிய மருந்து

கொன்றைவேந்தன்

சாராயம், முறிவுக்கு மருந்து

கொன்றைவேந்தன் 

உலகநீதிவெள்ளி, 1 ஏப்ரல், 2016

காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் இணையத் தமிழ்ப்பயிலரங்கம் இனிதே தொடங்கியது!

முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றல்


பதிவாளர் வி. பாலச்சந்திரன் உரைகாரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் இணையத் தமிழ்ப் பயிலரங்கினை 01.04.2016 காலை 10.30 மணிக்குக்  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்...