நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 22 அக்டோபர், 2021

செம்மொழி நிறுவன நினைவுகள்…

 

முனைவர் இரா. சந்திரசேகரன் அவர்களிடம் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் நூல்களைப் பெற்றுக்கொள்ளும் மு.இளங்கோவன், அருகில் முனைவர் ஆரோக்கியதாசு அவர்கள்

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரனார் அவர்கள் தம் நிறுவனத்தில் தமிழ்ச் செவ்விலக்கியங்களில் இசைக்கலையும் நாட்டியக் கலையும் என்னும் பொருண்மையில் ஒரு கிழமை பயிலரங்கம் நடைபெறுவதாகவும் அதில் தமிழிசை அறிஞர்களைக் குறித்தும் அவர்களின் தமிழிசைப் பணிகள் குறித்தும் உரையாற்ற வேண்டும் எனவும் அன்புக் கட்டளையிட்டார்கள். பயிலரங்கப் பொறுப்பாளர் முனைவர் புவனேசுவரி அவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு யான் உரையாற்ற வேண்டிய தலைப்புகள் குறித்து கேட்டறிந்தார்கள். நான்கு தலைப்புகளில் உரையாற்றுவதற்கு உரிய செய்திகள் உள்ளன எனவும், வாய்ப்புக்கு ஏற்ப என் உரைகளை வழங்குவதற்கு அணியமாக உள்ளேன் எனவும் மறுமொழி பகர்ந்தேன். அத்தலைப்புகள் வருமாறு:

1.சிலப்பதிகார இசையும் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை .சுந்தரேசனாரின் ஆய்வுகளும்

2. சிலப்பதிகார யாழும் விபுலாநந்தரின் ஆய்வுகளும்

3. பழந்தமிழ் இசையும் ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகளும்

4. பழந்தமிழிசையும் வீ. . கா. சுந்தரம் ஆய்வுகளும்

 பயிலரங்கில் கலந்துகொள்ளக்கூடியவர்கள் இசை, நாட்டியம் குறித்த முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எனவும்,  தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்தும் வருகின்றனர் எனவும், அவர்களுக்கு மேற்கண்ட நான்கு தலைப்புகளின் செய்திகளும் சென்றுசேரவேண்டும் எனவும் இயக்குநர் அவர்கள் விரும்பினார்கள். ஒரு கிழமை உழைத்து, கட்டுரைக் குறிப்புகளையும், சுமக்கும் அளவுக்குக் கருவி நூல்களையும் எடுத்துக்கொண்டு சென்னைக்குப் பயணமானேன். 11.10.2021 மற்றும் 12.10.2021 ஆகிய இரண்டு நாளும்  என் பொழிவு நான்கு அமர்வுகளில் செம்மொழி நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் அமைந்தன.

 குடந்தை ப. சுந்தரேசனார், விபுலாநந்த அடிகளார் குறித்து ஆவணப்படத்திற்கு எனத் திரட்டிய அரிய குறிப்புகளைப் பயன்படுத்தி ஆய்வு மாணவர்களுக்கு என் பொழிவை வழங்கினேன். குடந்தை ப.சுந்தரேசனாரின் பண்ணிசை மீட்பு முயற்சி, அவரின் பஞ்சமரபு பதிப்புப்பணி, கட்டுரைப்பணி, நூல் பணி, இதழ்ப்பணி, சொற்பொழிவுப் பணிகளை ஆய்வுமாணவர்களுக்கு அறிமுகம் செய்தேன். வந்திருந்தோர் இளையோர் என்பதால் யாருக்கும் ப.சுந்தரேசனார் பற்றிய அறிமுகம் இல்லை. ஆயின் ஆர்வமுடன் கேட்டுக் குறிப்பெடுத்துக்கொண்டனர். இருபத்தைந்து ஆண்டுகள் உழைத்து, ப.சு. அவர்களின் குரலினை மீட்டெடுத்த வரலாற்றை நினைவுகூர்ந்தேன். அவரின் பெரும்பாணாற்றுப்படையின் பாடல், சிலப்பதிகாரப் பாடல்கள், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரம், பெருந்திருப்பிராட்டி பிள்ளைத்தமிழ் (இலால்குடியில் கோயில்கொண்டிருக்கும் அம்மையின் சிறப்புரைக்கும் பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய அரிய பாடல்), குமரகுருபர சுவாமிகளின் தொடுக்கும் கடவுள் பழம்பாடல், திருமுருகாற்றுப்படையின் உலகம் உவப்ப உள்ளிட்ட பாடலடிகள் ப. சு. வின் குரலில் ஒலிக்க அரங்கம் அமைதிகொண்டது. அவரின் பரிபாடல் இசையை இத்தமிழுலகம் கேட்கும் வகையில்  என் ஆய்வு முயற்சி தொடர்கின்றது என்று அரங்கினர்க்கு நினைவூட்டி முதல் பொழிவை நிறைவு செய்தேன்.

 விபுலாநந்த அடிகளாரின் இளமை வாழ்க்கை, துறவு வாழ்க்கை, இலங்கையிலும் தமிழகத்திலும் செய்த அறிவுப்புரட்சி, யாழ் நூல் ஆராய்ச்சி குறித்தும், யாழ்நூல் பதிப்பு குறித்தும், யாழ்நூலின் உள்ளடக்கம் குறித்தும், அடிகளார் தமிழிசையுலகில் செய்து நிறைவேற்றியுள்ள ஆராய்ச்சிப் பணிகள், சமூகப்பணிகள் குறித்தும் ஆய்வாளர்களுக்கு விளக்கினேன். விபுலாந்த அடிகளாரின் வாழ்வியல் விளக்கும் காணொலிக் காட்சியும் திரையிட்டுக் காட்டினோம்.

 மூன்றாம் பொழிவில் ஆபிரகாம் பண்டிதரின் இளமை வாழ்க்கை, கல்விப்பணி, மருத்துவப்பணி, ஆராய்ச்சிப் பணிகளைக் குறித்தும், சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள அரிய இசை உண்மைகளை முதன்முதல் பண்டிதர் விளக்கியுள்ள பாங்கினைக் குறித்தும் கருணாமிர்த சாகரத்தின் துணையுடன் விளக்கினேன். சிலப்பதிகாரத்தின் இசைப்பகுதிகளை முதன்முதல் சிறப்பாகப் புரிந்துகொண்டவர் பண்டிதர் எனவும் குறிப்பாகப் பதிகப்பகுதியில் விளக்கப்பட்டிருக்கும் இசையுண்மைகளை எடுத்துக்காட்டி விளக்கியவர் பண்டிதர் எனவும் அவரின் பெருமையை நினைவுகூர்ந்தேன். இசைமாநாடுகள் கண்டமையையும், பரோடா மன்னர் அவையில் தம் ஆராய்ய்ச்சி உண்மைகளை எடுத்துரைத்த பாங்கினையும்,  தமிழிசையுலகில் கருணாமிர்த சாகரத்தின் சிறப்பினையும் சான்றுகளுடன் விளக்கினேன்.

 நான்காம் பொழிவில் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களுடன் எனக்கு அமைந்த கலைக்களஞ்சியத் தொடர்பு குறித்தும், தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் அமைப்பு, அதன் பெருமை, சிறப்பு, தமிழிசை, நாட்டியம் குறித்து அதில் பொதிந்துகிடக்கும் அரிய உண்மைகள், களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள தலைமைச்சொற்கள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், அட்டவணைகள், படங்கள், இசையாய்வுக்கு உழைத்த அறிஞர்களின் பணிகள் இடம்பெற்றுள்ளமையை அரங்கிற்கு எடுத்துரைத்தேன். களஞ்சியம் உருவாவதற்கு அந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர்களாக விளங்கிய ச. முத்துக்குமரன் ஐயா, வீர. முத்துக்கருப்பன் ஐயா, ஜெகதீசன் ஐயா, பதிவாளர் சி. தங்கமுத்து ஐயா ஆகியோர் செய்த உதவிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன். என் நான்கு பொழிவுகளும் தமிழிசை, நாட்டியம் குறித்த ஆர்வம் கொண்ட ஆய்வாளர்களுக்கு நல்ல அறிமுகமாக இருந்தமையைப் பின்னூட்டங்களின் வழியாக அறிந்துகொண்டேன். 


      பங்கேற்பாளர்களுடன் மு.இளங்கோவன், முனைவர் புவனேசுவரி

 நிறுவன இயக்குநர் முனைவர் இரா. சந்திரசேகரனார்க்கு என் பொழிவின் சாரச்செய்திகள் உடனுக்குடன் அன்பர்களால் தெரிவிக்கப்பட்டன. முன்பே என் தொல்காப்பிய ஆர்வத்தையும், தொல்காப்பியம் பரப்பும் என் முயற்சியையும், திருக்குறள் ஆர்வத்தையும் அறிந்த இயக்குநர் இரா. சந்திரசேகரனார் அவர்கள் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தொல்காப்பியம், சிலப்பதிகாரம் நூலினையும், பதிப்பித்துள்ள இறையனார் களவியல் என்னும் நூலினையும் வழங்கி என் முயற்சிகளைப் பாராட்டினார்கள். 

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள தொல்காப்பிய நூல் மிகச் சிறந்த தாளில், கண்ணைக்கவரும் அச்சில் பிழையின்றி, நல்ல நூற்கட்டில் அமைந்துள்ளது. மூலம், எழுத்துப்பெயர்ப்பு, வி. முருகன், பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார், சி, இலக்குவனார், கமில் சுவலபில் ஆகியோரின் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. இத் தொல்காப்பிய மொழிபெயர்ப்பைத் தொகுத்துப் பதிப்பித்தவர் பேராசிரியர் வி. முருகன் ஆவார்.  பேராசிரியர் வி. முருகனின் முன்னுரையும், பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களின் தொல்காப்பியச் சிறப்புரைக்கும் கட்டுரைகளும் நூலுக்கு மேலும் தரம் சேர்க்கின்றன. இந்நூலினை உலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் வாங்கிப் பாதுகாக்கும் வகையில் தங்குதடையின்றிக் கிடைப்பதை அறிந்து வியப்புற்றேன். இத்தொல்காப்பிய நூலின் விலை உருவா 1300 ஆகும்.. ஆயின் பாதி விலைக்கு அதாவது 650 உருவாவுக்கு நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள இயலும். அமேசான் நிறுவனத்தின் வழியாகவும் அயல்நாடுகளில் இருப்போர் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 


 சிலப்பதிகாரம் நூலும் பிழையில்லாத அச்சில், கண்ணைக் கவரும் தரத்தில் மூலம், ஆர். பார்த்தசாரதி, ஆர். எஸ். பிள்ளை, ஆலன் டேனியல் ஆகியோரின் ஆங்கிலமொழிபெயர்ப்புடன் வெளிவந்துள்ளது. தொகுத்துப் பதிப்பித்தவர் பேராசிரியர் கா. செல்லப்பன் ஆவார் (பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையின் முன்னைத் தலைவர்). பேராசிரியர் கா. செல்லப்பனின் முன்னுரையும், பேராசிரியர் ப. மருதநாயகத்தின் அறிமுகவுரையும் சிலப்பதிகார மொழிபெயர்ப்பு நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.  இந்த நூலின் விலை 1100 உருவா ஆகும். பாதி விலைக்கு அதாவது 550 உருவாவுக்கு இதனைப் பெற்றுக்கொள்ள இயலும். அமேசான் வழியாகவும் ஆர்வலர்கள் வாங்கிக்கொள்ள இயலும். 


 

 திருமூலத்தானம் முனைவர் அ. தாமோதரன் அவர்கள் பதிப்பித்துள்ள இறையனார் களவியல் நூலும் பதிப்புலகிற்கோர் முன்மாதிரி நூலாகும். அ. தாமோதரனாரின் அரிய உழைப்பு பக்கந்தோறும் பளிச்சிட்டு நிற்கின்றது. சுவடிகளையும் பழம்பதிப்புகளையும் ஒப்பிட்டு ஆராய்ச்சிக்குறிப்புகளும், பாட வேறுபாடுகளும் கொண்ட இறையனார் களவியல் நூலைக் கற்று மகிழ விரும்புவோர் 300 விலையுள்ள நூலினை 150 உருவா விலையில் செம்மொழி நிறுவனத்தில் பெற்றக்கொள்ள இயலும். தமிழாராய்ச்சித் துறைக்கு உழைக்க முன்வருவோர் இத்தகு பதிப்புகளின் உழைப்பையும், தரத்தையும் முதற்கண் மனத்துள் நிறுத்தி, ஆராய்ச்சிப் பணிகளில் நுழைந்தால் தமிழ் வளம்பெறும்.

நிறுவன இயக்குநர் முனைவர் இரா. சந்திரசேகரனார்  செயல்திறனும் வினைவன்மையும் கொண்ட அறிஞர் ஆவார். இவர்தம் அயரா உழைப்பாலும், அறிவார்ந்த வினைப்பாடுகளாலும் செவ்விலக்கிய நூல்கள் அச்சேறுவதும், அடிக்கடி பயிலரங்குகள் வழியாகத் தமிழறிவை ஆய்வு மாணவர்கள் பெறுவதும் அறிஞர் பெருமக்கள் அடிக்கடி நிகழ்வுகளில் கலந்துகொள்ள நிறுவனத்திற்கு வந்துசெல்வதும் காணக் கண்கோடி வேண்டும். தகுதி நிறைந்த இயக்குநரால் தமிழாய்வு வளம்பெறட்டும். தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்று தமிழர்க்குப் பெருமையைச் சேர்க்கட்டும் என்று நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வியாழன், 30 செப்டம்பர், 2021

மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும் (Translating and Interpreting) இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கப் பதிவுகள்

 


கருத்தரங்க மலர் வெளியீடு: முனைவர் மூ. செல்வராஜ், முனைவர் கு. சிவமணி, முனைவர் ஒப்பிலா. மதிவாணன், திரு. கண்ணையன் தட்சணாமூர்த்தி, முனைவர் இரா. நிர்மலா, முனைவர் கி. மணிகண்டன், முனைவர் மு. இளங்கோவன்

புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்  தமிழ்த்துறையும், ஆத்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் தமிழ்ச்சங்கமும், இணைந்து மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும்  (Translating and Interpreting) என்னும் தலைப்பில் 27, 28, 29 - 09 - 2021 ஆகிய மூன்று நாள்களில் இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தின. இதன் தொடக்க விழா 27. 09. 2021 பிற்பகல் 3 மணிக்குக் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.   

நிறுவன இயக்குநர் முனைவர் மூ. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. நிர்மலா வரவேற்புரை வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் ஒப்பிலா. மதிவாணன் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரினை வெளியிட்டார். முதல் படியை மூத்த தமிழறிஞர் கு. சிவமணி பெற்றுக்கொண்டார். புதுச்சேரி வானொலி நிலையத்தின் இயக்குநர் கண்ணையன் தட்சணாமூர்த்தி, சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு செய்தி ஆசிரியர் முனைவர் கி. மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. இளங்கோவன் நன்றியுரை வழங்கினார்.

27.09.2021 மாலை  4 மணிக்கு முதல்நாள் அமர்வு இணையம் வழியாகத் தொடங்கி, சிங்கப்பூர்ப் பேராசிரியர் சுப. திண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. முதல் அமர்வில் மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் ந. சுந்தரேசன் ஒருங்கிணைப்பில் ஆஸ்திரேலிய நாட்டின் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதில் திருமதி சாந்தா ஜெயராஜ்(ஆஸ்திரேலியா), பசில் கெலிஸ்டஸ் பெர்ணாண்டோ (ஆஸ்திரேலியா), திரு. தெ. செல்வக்குமார் (கனடா), ஆய்வறிஞர் கு. சிவமணி(இந்தியா) ஆகியோர் உரையாற்றினர். முதல் அமர்வு இரவு 6. 30 மணிக்கு நிறைவுற்றது. 

28.09.2021 மாலை நான்கு மணிக்கு இரண்டாம் நாள் கருத்தரங்க அமர்வு தொடங்கியது. இலங்கைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்(இலங்கை), திரு. கு.பாலசுப்பிரமணியன்(சென்னை), திருமதி மஞ்சுளா மோகனதாசு(பின்லாந்து), முனைவர் கி.மணிகண்டன்(சீன வானொலி), திரு. பு. யோகநாதன்(செர்மனி), பொறியாளர் அருள்நிதி இராதாகிருட்டினன்(நோர்வே) ஆகியோர் தத்தம் நாடுகளில் நடைபெறும் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்புப் பணிகள் குறித்து உரையாற்றினர். 

29.09.2021 – இல் நடைபெற்ற மூன்றாம் நாள் கருத்தரங்கிற்குப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் (கனடா) அவர்கள் தலைமைநேற்றார். இக் கருத்தரங்கில் பொறியாளர் சதீசு (சப்பான்), ’ஆசான்’ மன்னர் மன்னன் மருதை (மலேசியா), திரு. கண்ணையன் தட்சணாமூர்த்தி (இயக்குநர், புதுச்சேரி வானொலி நிலையம்), சிறீ கதிர்காமநாதன் (கனடா), எழுத்தாளர் ஜீவகுமாரன் (டென்மார்க்கு), கலாநிதி ஜீவகுமாரன்(டென்மார்க்கு), இராணி நடராஜன் (மியான்மர்) ஆகியோர் தத்தம் நாடுகளில் நடைபெறும் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்புப் பணிகளை எடுத்துரைத்தும், தாம் செய்துவரும் மொழிபெயர்ப்புப் பணிகளை நினைவூட்டியும் உரையாற்றினர். 

நிறைவுநாளில் பேராசிரியர் கு. சிவமணி அவர்களுக்குத் தமிழ்நாட்டரசின் உயரிய விருதான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது (2019) அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து அவர்களை நிறுவனம் சார்பில் பாராட்டி, வாழ்த்துரை வழங்குமாறு வேண்டிக்கொண்டோம். கு.சிவமணியாரின் வாழ்த்துரையுடன் மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவுற்றது.

முனைவர் ஒப்பிலா. மதிவாணன் வெளியிட 
ஆய்வறிஞர் கு. சிவமணி முதல்படியைப் பெறுதல்.


முனைவர் மூ. செல்வராஜ் அவர்கள் 
முனைவர் கு. சிவமணி அவர்களைச் சிறப்பித்தல்


முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களைச் சிறப்பிக்கும் 
முனைவர் இரா. நிர்மலா


முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களின் மலர் வெளியீட்டு உரை
 
இணையவழிக் கருத்தரங்க நிகழ்வு





சனி, 28 ஆகஸ்ட், 2021

மு.கலைவாணனின் “கதை சொல்வதே பெரிய கலை” நூலுக்கு வரைந்த அணிந்துரை!

 

 

(குறிப்பு: பன்முகத் திறமையாளர் மு. கலைவாணன் அண்மையில் கதை சொல்வதே பெரிய கலை எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை, அணிந்துரைக்கு விடுத்திருந்தார். நூலைப் படித்து மகிழ்ச்சியுடன் அணிந்துரை எழுதினேன். இந்த நூல் 30.08.2021 மாலை சென்னையில் வெளியீடு காண உள்ளது. உருவா 150 விலையுடைய இந்த நூல் 144 பக்கங்களில் அமைந்துள்ளது. குழந்தை இலக்கிய உலகிற்கு இந்த நூல் நல்வரவாக அமைந்துள்ளது. பள்ளிக் கல்வியில் ஆர்வமுடையவர்கள் இந்த நூலினை வாங்கி, நூலாசிரியரைப் போற்றலாம். தொடர்புக்கு: மு.கலைவாணன், சென்னை.: 0091 94441 47373)

        கதை சொல்பவர்களே பிறர் உள்ளத்தை வெல்ல முடியும்!

    மு. கலைவாணன் அவர்களை 1995 ஆம் ஆண்டளவில்  சென்னை, தியாகராயர் நகர் மாணவர் நகலகத்தின் அலுவலகத்தில் சந்தித்த நாள் முதல் இவரிடம் செழித்துக் கிடந்த கலையுணர்வை ஆர்வமாகச் சுவைத்து வருகின்றேன். மாணவர் நகலகத் தந்தை ஐயா நா. அருணாசலம் அவர்கள் நடத்திய பல்வேறு தமிழ் நிகழ்வுகளின் மேடை வடிவமைப்பு முதல், நிகழ்ச்சி வடிவமைப்பு வரை அனைத்தையும் ஏற்றுத் திறம்படச் செயலாற்றும் செயல் மறவராக இவர் என் உள்ளத்தில் பதிந்திருந்தார்.

    மு. கலைவாணனின் பொம்மலாட்டக் கலைநிகழ்வுகள் சிலவற்றைத் தொலைக்காட்சியிலும் நேரிலும் காணும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. இவர்தம் நினைவாற்றலும், பல குரலில் பேசிக், காட்சியைக் கண்முன் விருந்துவைக்கும் பேராற்றலும் நினைந்து, நினைந்து மகிழ்வேன். இவரின் பெருமையை உலகத் தமிழர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருந்தது. அதற்குரிய வாய்ப்பாகச் சிலவாண்டுகளுக்கு முன் சப்பான் தமிழ்ச்சங்கத்து அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவுக்கு நானும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களும் டோக்கியா மாநகருக்குச் சென்று திரும்பினோம். அங்கு நடைபெற்ற பொங்கல் விழாவில் இவர் ஆற்றிய உரையும், நிகழ்த்திக்காட்டிய பொம்மலாட்ட நிகழ்வும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டன.

சென்னையில் விமானம் ஏறியது முதல் சென்னைக்கு மீண்டும் வந்து சேர்வது வரை மு. கலைவாணன் அவர்கள், தம் வாழ்வின் படிநிலை வளர்ச்சியை எனக்குச் சொன்னதுடன் பல்வேறு கதைகளையும், நிகழ்வுகளையும், கவிதைகளையும் சொல்லி, பயணத்தை இனிமையுடையதாக மாற்றியமை என் நெஞ்சில் இன்றும் நிழலாடுகின்றது. அந்தப் பயணம்தான் மு. கலைவாணனை நான் முழுமையாகப் புரிந்துகொள்ள வழிசெய்தது. நாங்கள் இலங்கை வழியாகச் சப்பான் பயணத்தை அமைத்திருந்தோம். சப்பானிலிருந்து தமிழகம் திரும்பும்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவிற்கு நாங்கள் பயணம் செய்த விமானம் காலம் தாழ்ந்து வந்தது. இதனால் அங்கிருந்து தமிழகம் வருவதற்கு உரிய விமானத்தைத் தவறவிட்டோம். மாற்று விமானம் ஏறித் தமிழகத்துக்கு வருவதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்டது. நள்ளிரவு முழுவதும் கொழும்பு விமான நிலையத்தில் ஓர் ஓரமாக அமர்ந்தோம். பின்னர் அவர் கால்மீது நான் தலைசாய்த்து, அவர் சொன்ன கதைகளை விடியும்வரை கேட்டபடி இருந்தமை இப்பொழுதும் என் நினைவில் உள்ளது. கதை சொல்வதில் அவருக்கு இருந்த அளப்பரிய திறமையும், அவரின் எழுத்தாற்றலும், சிறுவர்களின் மன உணர்வறிந்து அவர்களைக் கதைகள் வழியே - உரைகள் வழியே தம் பக்கம் இழுத்து நன்னெறி புகட்டும் ஆற்றலும் கண்டு மகிழ்கின்றேன்.

                மு. கலைவாணனின் தந்தையார் கலைமாமணி நா. மா. முத்துக்கூத்தன் அவர்கள் மிகச்சிறந்த திரைப்படப் பாடலாசிரியர்; கவிஞர்; வில்லுப்பாட்டுக் கலைஞர்; நடிகர். தந்தையாரிடம் இளமை முதல் ஒரு நண்பரைப் போல் பழகித் தமிழுணர்வையும், கவிதை புனையும் ஆற்றலையும், நடிப்பாற்றலையும், புதியது புனையும் திறனையும் பெற்றுக்கொண்ட மு. கலைவாணன் தந்தையார் வழியில் பகுத்தறிவுப் பாதையில் நடையிடும் முன்மாதிரிக் கலைஞர் ஆவார். வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பந்தி வைக்கும் இயல்பினர். தந்தை பெரியார். அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் கருத்துகளை உள்வாங்கி, தம் படைப்புகளில் வெளிப்படுத்தும் “இரசவாதக்” கலைஞர் இவர். மு. கலைவாணனுடன் பழகுவது இனிமை தருவது. இவர் படைப்புகளைப் படிப்பது புதிய சிந்தனை வீச்சுகளைத் தரும். இதுவரை இவர் எழுதியுள்ள அனைத்து நூல்களையும் கற்று மகிழ்ந்துள்ளேன். அதன் மதிப்புரைகளை ஆய்வுரையாக வரைந்து அறிஞர்கள் அவையில் அரங்கேற்றியுள்ளேன். என் வலைப்பதிவிலும் வரைந்து வைத்துள்ளேன். சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாப்பு, மனிதநேயக் கருத்துகளைக் கொண்ட இவரின் படைப்புகள் யாவும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யப்படவேண்டிய அரிய படைப்புகளாகும்.

    அந்த வகையில் மு. கலைவாணன் அவர்கள் எழுதியுள்ள  கதை சொல்வதே பெரிய கலைஎனும் நூலைக் கற்று மகிழும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. இந்த நூலில் 33 கட்டுரைகள் கதை சொல்வது பெரிய கலை என்ற பொருண்மையில் அமைந்து கற்பவர்க்கு ஏராளமான செய்திகளைத் தருகின்றன. தாம் கற்ற நூல்களிலிருந்தும், தாம் கேட்ட உரைகளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக்காட்டியும், புதியது புனைந்தும் கதைக் கலைக்கு வாதாடியுள்ள கலைவாணன் அவர்களின் துறையீடுபாடு பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும்.

    கதைக்கான இலக்கணம் சொல்லி, கதைக்களங்களை அடையாளம் காட்டி, கதையைக் கண்டறியும் வழிகளையும் சொல்லியுள்ளார். கதை சொல்லி வெற்றிபெற்றவர்கள் இந்த நூலில் வந்துபோகின்றனர். ”முதலில் கதையைக் கேட்க, காதுகளைத் திறந்து வையுங்கள். ஓரிடத்தில் அடைந்து கிடக்காமல் மக்கள் நிறைந்த இடங்களில் பயணம் செய்யுங்கள்” என்று கதைச் சுவையறிவதற்கு வழிவகை சொல்கின்றார். நமக்குக் கதையார்வம் வருவதற்குக் கிருபானந்த வாரியார், என்.எஸ்.கே. (கலைவாணர்) தென்கச்சி கோ. சுவாமிநாதன், திருக்குறள் முனுசாமி, சுகி சிவம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வாழ்வியல் சிறப்புகளை இந்த நூலில் நினைவூட்டுகின்றார். சமகால எழுத்தாளர்களான தமிழ்ச்செல்வன், எஸ். இராமகிருஷ்ணன், சு. வெங்கடேசன் உள்ளிட்ட கதையாசிரியர்களின் சிறப்புகளையும், எழுத்தாற்றலையும், பெருமைகளையும் நன்றியுடன் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கதை சொல்லும் ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு மு. கலைவாணன் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

    குழந்தைகள் விரும்பும் கதைகளைப் பெரியவர்கள்  சொல்லி, குழந்தைகளைக் குழந்தைப் பருவத்தை அனுபவிக்குமாறு சிறப்பான வழிகாட்டல்களை மு. கலைவாணன் இந்த நூலில் வழங்கியுள்ளார். இன்றைய அறிவியல், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பிள்ளைகள் தொலைக்காட்சி, செல்பேசிகள், கணினிகளில் மூழ்கிக் கிடக்கும் கொடுமையான நிலையினை எடுத்துக்காட்டி, அவர்களின் உள்ளங்களில் நஞ்சு விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கொடுமையை நினைவூட்டி, மாந்த சமூகத்தை நல்வழிப்படுத்தும் பணியையும் இந்த நூலில் மு.கலைவாணன் செய்துள்ளார்.

    “அனைத்து மதங்களும் கதைகளை நம்பியே கட்டமைக்கப்படுகின்றது” என்று மு.கலைவாணன் கூறுவதிலிருந்து மதங்களைச் சார்ந்து புனையப்பட்டிருக்கும் பல்லாயிரம் கதைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதப்பெருமையை நிலைப்படுத்த பல்வேறு கதைகளையும், புராணங்களையும் எழுதி வைத்து, அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் சென்றுள்ளமை கதைகளின் செல்வாக்கைக் காட்டும் சிறந்த சான்றாகும்.  “கதைகளைக் கேட்டு, மதம் மாறியவர்களும் உண்டு; கதைகளைக் கேட்டு, குறிப்பிட்ட மதத்தினைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களும் உண்டு. கதைகளைக் கேட்டு, பிற மதத்தினைத் தாக்கி அழித்தவர்களும் உண்டு.  குறிப்பிட்ட மதத்தின் கதைகள் இழிவாக உள்ளனவே என்று தம் மதத்தை வெறுத்தவர்களும் உண்டு” என்று மு.கலைவாணன் எழுதியுள்ள வரிகள் கதைகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அறிவதற்குப் பெரிதும் துணைசெய்கின்றன.

    கதைகள் ஏழைகளைப் பணக்காரனாக்கும் எனவும், கோழைகளை வீரனாக்கும் எனவும் கொள்கையற்றவனைக் கொள்கையுடையவனாக மாற்றும் எனவும் குறிப்பிடும் கலைவாணன் லியோ டால்ஸ்டாய் பற்றியும் வால்ட் டிஸ்னி, ரௌலிங்(ஹாரிபாட்டர்), மா சே.துங் பற்றியும்  குறிப்பிட்டு, கதைகள் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

    படிக்கும் பருவத்தினரை நல்வழிப்படுத்துவதிலும், பழகும் நண்பர்களை மேன்மைப்படுத்துவதிலும் கதைகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதைச் சமூக நடப்புகளிலிருந்தும், படித்த நூல்களிலிருந்தும் உணர்ந்த மு. கலைவாணன் நல்ல சமூகம் உருவாவதற்குக் கதைகள் முக்கியப் பங்காற்றுவதால் அதனை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை எழுதியுள்ளார். தெளிந்த நடையிலும், புதுமையான எடுத்துரைப்பு நிலையிலும் இந்த நூல் உள்ளது.

    எழுதுவது சிலருக்குக் கைவந்த கலையாக இருக்கும். பேசுவது சிலருக்குக் கைவந்த கலையாக இருக்கும். தாம் கண்டதையோ, தாம் கேட்டதையோ, தாம் உணர்ந்ததையோ பிறரின் உள்ளத்தை ஈர்க்குமாறு கதைபோல் எடுத்துரைப்பது சிலருக்கே இயன்ற ஒன்றாகும். கதைகளின் வழியே நீதியை, மனிதநேயத்தை, அன்பை, இயற்கை ஈடுபாட்டை, பகுத்தறிவை, உலகம் உய்வதற்கு உரிய உயர்ந்த கருத்தை எடுத்துரைக்கமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மு. கலைவாணனின் கதை சொல்வது பெரிய கலை என்ற இந்த நூல் உலகத் தமிழர்களின் உள்ளங்களை ஈர்க்கட்டும். அவர்களின் பிள்ளைகள் பயிலும் கல்விக் கூடத்து வகுப்பறைகளை இந்த நூலும், நூல் கருத்துகளும் சென்று சேரட்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். பாராட்டி உவக்கின்றேன்.

மு.இளங்கோவன் 

15.08.2021