பாவாணர் பயின்ற, பணியாற்றிய முரம்பு என்னும் ஊரில் நடைபெறும்(09.02.2023) பாவாணர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அறிஞர் ஆ. நெடுஞ்சேரலாதன் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். பாவாணர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பாவாணர் பெயரில் அமையும் விருதினைப் பெற உள்ளதை மகிழ்ச்சியாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
நிகழ்ச்சிக்குச் செல்வதை உரையாடல் ஒன்றின்பொழுது அரபுநாட்டில் பணியாற்றும் என் அருமை நண்பர் பொறியாளர் சித்தநாத பூபதி அவர்களிடம் தெரிவித்து, முரம்பு செல்லும் வழிகள் குறித்து கேட்டறிந்தேன். அவ்வூருக்கு அருகில் உள்ள கூமாப்பட்டிக்குச் செல்ல இருப்பது பற்றியும் சென்று திரும்புவதற்கு உரிய நேரத்தையும் பிற தேவையான விவரங்களையும் பெற்றுக்கொண்டேன்.
பொறியாளர் சித்தநாத பூபதி அவர்கள் பொறியாளர் எனினும் குறள்வெண்பாவுக்கு நிரல் உருவாக்கிய கணினித் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். பத்தாண்டுகளுக்கு முன்னர் நானும் பூபதி அவர்களும் அமெரிக்காவில் சந்தித்து உரையாடி, நட்புகொண்டவர்கள். அவரின் சிறப்பினை அப்பொழுதே என் பக்கத்தில் எழுதி மகிழ்ந்திருந்தேன். தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். பழந்தமிழ் இலக்கியங்களிலும் புத்திலக்கியங்களிலும் சித்தநாத பூபதி அவர்களுக்குப் பேரீடுபாடு உண்டு. உரையாடலின்பொழுது துபை நாட்டுக்கு வருமாறு அன்பு அழைப்பு விடுத்தவண்ணம் இருப்பார். அந்த நாளுக்குக் காத்திருந்தோம். இது நிற்க.
முரம்பில் அமைந்துள்ள பாவாணர் பாசறை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கூமாப்பட்டிக்குச் செல்வது என் பயணத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அங்குதான் தொல்காப்பியத்திற்குக் குறிப்புரை வரைந்தவரும், தணிகைப்புராண உரையாசிரியரும், விபுலாநந்த அடிகளாரின் நண்பரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான அறிஞர் இரா. கந்தசாமியார் அவர்கள் பிறந்தது. அவர் பிறந்த கூமாப்பட்டிக்குச் செல்லும் வேட்கையை அறிந்த சித்தநாத பூபதி அவர்கள் அந்த ஊருக்கு எப்படிச் செல்ல உள்ளீர்கள்? என்று கேட்டார்.
பேருந்தில் பயணிக்க உள்ளேன் எனவும் கூமாப்பட்டிப் பணியை முடித்துக்கொண்டு மீண்டும் இராசபாளையம் வந்து அங்கிருந்து பொதிகைத் தொடர்வண்டியில் விழுப்புரம் செல்ல உள்ளேன் என்றும் தெரிவித்தேன்.
முரம்பு – கூமாப்பட்டி - இராசபாளையம் தொலைவுகளைச் சொல்லிப் பேருந்துப் பயணத்தைத் தவிர்க்குமாறும், தம் மகிழுந்து முரம்புக்கு உரிய நேரத்திற்கு வரும் எனவும் அதில் ஏறிக் கொண்டு, கூமாப்பட்டிக்குச் செல்லுமாறும், அங்குள்ள ஆய்வுப்பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் இராசபாளையம் திரும்பலாம் என்றும் நண்பர் சித்தநாதபூபதி குறிப்பிட்டார். “சொல்லியவண்ணம் செயல்” என்பதுபோல் அவ்வாறே திட்டமும் உறுதிப்பட்டது.
09.02.2023 இல் முரம்பு பாவாணர் பாசறையில் பேரணி, பாடல், பொழிவு, நூல் வெளியீடு எனப் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன. பகல் 1.45 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு மகிழுந்து வந்தது. வண்டியில் திரு. சு. முத்துச்சாமி ஐயா அவர்கள் வருகைபுரிந்து என்னை அழைத்துச் செல்லக் காத்திருந்தார். இவர் என் அருமை நண்பர் சித்தநாத பூபதியின் தந்தையார் ஆவார். ஐயாவுக்குப் பொது இடத்து உணவு ஒவ்வாமையால் விழாவில் கிடைத்த உணவைத் தவிர்த்தார். விழா நடைபெறும் இடத்தில் பகலுணவு இரண்டு மணிக்கு எங்களுக்குக் கிடைத்தது. உணவை முடித்துக்கொண்டு திருவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு வழியாகக் கூமாப்பட்டியை நோக்கி எங்கள் மகிழுந்து விரைந்தது.
மகிழுந்தில் செல்லும்பொழுது சு. முத்துச்சாமி ஐயாவின் குடும்பம் கல்வி, பணிநிலைகள் குறித்து வினவினேன். முத்துச்சாமியார் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் வகுப்பில் பயின்றவர்கள் என்பதும் சுப்பையநாயக்கன் பட்டியில் அமைந்துள்ள பாரதி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும் தம் மக்களுக்கு நல்ல கல்வியைக் கிடைக்கச் செய்த விவரங்களையும் சொல்லியவண்ணம் வந்தார்கள். கூமாப்பட்டியை நெருங்கிச் செல்லும் பொழுது அவ்வூரின் இயற்கையழகையும், மேற்குமலைத்தொடரின் வண்ண எழில்கோலத்தையும் சுவைத்தபடியாகச் சென்றேன்.
நாங்கள் கூமாப்பட்டிக்குத் தேடிச் சென்றவர் திரு. ப. க. ஜெயபால் ஐயா அவர்கள் ஆவார். பேராசிரியர் இரா. கந்தசாமியாரின் குடிவழியினர். இவர்கள் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஊரில் செல்வாக்கு நிறைந்தவர். பேருந்து நிலையத்தில் எங்கள் வருகைக்குக் காத்திருந்தார். அருகிலிருந்த வீடொன்றுக்கு உரிய அன்பர் வழியாக எங்களை அனுப்பிவைத்தார்கள். அதுதான் பேராசிரியர் இரா. கந்தசாமியார் வீடு என்று அறிந்தோம். அங்கு கந்தசாமியாரின் புகைப்படம் ஒன்று உள்ளது. இரா. கந்தசாமியாரின் உறவினர்கள் ஊர் முழுவதும் நிரம்பி வாழ்வதை உரையாடல்களில் அறிந்தோம். கந்தசாமியாரின் தந்தையார் இராமசாமித் தேவர் அவர்கள் 1883 பங்குனி உத்திரத்தில் மறைந்ததை நினைவூட்டும் நினைவிடமும் அருகில் இருந்தது. அதனையும் பார்வையிட்டோம்.
பின்னர் ஜெயபால் ஐயா அவர்களின் இல்லம் சென்று, நெடு நாழிகை உரையாடி, கந்தசாமியார் குறித்த விவரம் அறிந்தோம். என்னுடன் வந்த சு. முத்துச்சாமியாரும் ஜெயபால் அவர்களும் உறவினர்கள் என்பதும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதும் பின்னர் வெளிப்பட்டது.
கூமாப்பட்டியில் நூறாண்டுகளுக்கு முன்னர்
பிறந்த இரா. கந்தசாமியார் தம் அண்ணன், அம்மா ஆகியோருடன் முரண்பட்டு, இளம் அகவையில்
வீட்டை விட்டு வெளியேறியவர். பல ஊர்களில் தங்கிக் கல்வி பயின்றும் பணியாற்றியும் நிறைவில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு தமக்கு
இளம் அகவையில் அடைக்கலம் தந்த சோழவந்தான் கிண்ணிமடம் சென்று தங்கியிருந்தபொழுது மாரடைப்பு
நோயால் உயிர் இழந்தவர். சோழவந்தானில் இவருக்கு நினைவிடம் உருவாக்கிப் போற்றப்படுகின்றது (இது
குறித்துப் பின்னர் எழுதுவேன்). பேராசிரியர் கந்தசாமியார் குறித்த விரிவான செய்திகளையும்
குறிப்புகளையும் பெற்றுக்கொண்டு, மாலைநேரத்தில் மீண்டும் இராசபாளையம் நோக்கி மகிழுந்தில்
விரைந்தோம். வரும் வழியில் அரும்பெரும் பாடல்களாலும் பத்திமையாலும் நினைக்கப்பெறும் ஆண்டாள் நாச்சியாரின்
திருவில்லிப்புத்தூர் திருக்கோவிலின் கோபுர வனப்பையும், கோவிலின் வனப்பையும் கண்டு
மகிழ்ந்து இராசபாளையம் தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். எங்களைச் சுமந்து செல்ல
பொதிகை விரைவு வண்டி வந்துகொண்டிருந்தது.