நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 நவம்பர், 2014

திருவரங்கத்தில் எனக்குக் கிடைத்த பெருமை…
பண்ணாய்வான் ப.சு. சீர்பரவுவார் விருதுபெறல்
(இடம்: இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு, திருவரங்கம்)

திருவரங்கத்தில் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு என்னும் அமைப்பு தமிழுக்கு ஆக்கப்பணிகள் செய்யும் அறிஞர்களை அழைத்துப் பலவாண்டுகளாகப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றது. இதுவரை 1200 கூட்டங்களை இவ்வமைப்பினர் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு காரிக்கிழமையும் இங்கு மூத்த தமிழறிஞர்கள் கூடி, தமிழ் குறித்துச் சிந்திப்பார்கள். எந்த விளம்பர வெளிச்சமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் இங்குத் தமிழ் குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் அறிஞர்கள் சிந்திக்கின்றனர். இங்கு அறிஞர்கள் பாராட்டப்பட்டால் அவர்கள் தமிழுக்கு ஏதேனும் ஒருவகையில் தொண்டுபுரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

என் பேராசிரியர் எழில்முதல்வன், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர், திரு. எம். எஸ். நாடார் உள்ளிட்ட எத்தனையோ அறிஞர்கள் இந்த அரங்கில் உரை நிகழ்த்தியுள்ளனர். இவமைப்பினர் நல்கிய பட்டங்களையும், விருதுகளையும் மேன்மையாகக் கருதிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று மாலை ஆறு மணிக்குத் திருவரங்கம், செண்பகத் தமிழ் அரங்கில் நடைபெற்றது. தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர்கள், புலவர் பெருமக்கள் அழைக்கப்பட்டு உரையாற்றும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு  செய்திருந்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் த. கனகசபை ஐயா கலந்துகொண்டு விழாப் பேருரையாற்றினார். அன்னாரின் உரை இசைத்தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பதாகவும், ப.சு. அவர்களின் பன்முக ஆற்றலை விளக்குவதாகவும் இருந்தது.  

புலவர் பெருமான், சிற்றிலக்கியவேந்தர் திருமழபாடி மா. திருநாவுக்கரசு அவர்கள் கலந்துகொண்டு ஒரு மணிநேரம் பண்ணாராய்ச்சி வித்தகருடன் தமக்கிருந்த தொடர்பை அவையோர் வியக்க எடுத்துரைத்தார். மணல்மேடு திரு. குருநாதன் ஐயா கலந்துகொண்டு, தாம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சு. அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டமையை நினைவுகூர்ந்தார்.

மணல்பாறையிலிருந்து புலவர் நாவை சிவம் ஐயா கலந்துகொண்டு தம் நினைவுகளை நினைவுகூர்ந்தார். திரு. தமிழழகன் ஐயா தலைமையில் இந்த விழா நடைபெற்றது. ஒவ்வொருவரும் குடந்தை ப. சுந்தரேசனாரை எந்த அளவு நேசித்துள்ளனர் என்பதை அவர்களின் உரையால் அறிந்து உவந்தேன். பண்ணாராய்ச்சியாளர் வாழ்வும் பணியும் குறித்து யான் இயக்கிய ஆவணப்படத்தின் முன்னோட்டத்தைத் திரையிட்டுப் பார்த்தோம். அனைவரின் கண்களிலும் கண்ணீர் பனித்தது. “ஆர்வலர் புன்கணீர் பூசல்தரும்” என்ற திருவள்ளுவப் பெருமானின் வரிகளை நினைந்து  நானும் கலகினேன்.

      குடந்தை ப. சுந்தரேசனாருடன் பழகியவர்கள் முன்னிலையில் அவரை நேரில் பார்த்தறியாத யான் எடுத்த படம் முன்னோட்டமாகக் காட்டப்பட்டமை என் வாழ்வில் நினைக்கத்தகுந்த பொழுதுகளாகும். என்னுடைய முயற்சியை அனைவரும் பாராட்டி உள்ளம் உவகையுற்றனர். என் தொடர்பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பண்ணாய்வான் ப.சு. சீர் பரவுவார் என்ற உயரிய விருதை அண்ணன் திரு. கேசவன் அவர்களின் கையால் வழங்க, அனைவரும் வாழ்த்தொலி முழக்கினர்.

மாலையணிவித்தும், ஆடை அணிவித்தும். அன்பளிப்புகள் வழங்கியும் தம் நன்றிப்பெருக்கை அனைவரும் வெளிப்படுத்தினர். இலால்குடி சிவா ஐயா அவர்களின் குடும்பத்தின் சார்பிலும் எனக்குச் சிறப்புச் செய்யப்பட்டது. அவரின் உடன் பிறந்தார் திரு. சுப்பிரமணியன் ஐயா எனக்குச் சிறப்புச்செய்தார். 

அங்கிருந்த அறிஞர்கள் ஒவ்வொருவரும் தமிழுக்கு முதன்மையான பணிகள் செய்தவர்கள். பன்னூலாசிரியர்கள். பாவலர்கள், கொள்கையாளர்கள். எந்த விளம்பர வெளிச்சத்துக்கும்  அவர்கள் வராதவர்கள். கற்ற தமிழை மற்ற தமிழர்களுக்கு விரித்துரைத்தவர்கள். பல்வேறு தமிழ்க்கல்லூரிகளில் பயின்ற அவர்கள் ஒவ்வொருவரும் பண்ணாராய்ச்சி வித்தகருடன் கொண்டிருந்த தொடர்பை நினைவலைகளாக வழங்கினர். இவர்கள் ப.சுந்தரேசனார் ஐயாவை அழைத்து, பெரியபுராணம் கேட்டுள்ளனர். சிலம்பை ஒலிக்கச் செய்துள்ளனர். பொருட்கொடை வழங்கி அப்பெருமகனாரின் துன்பம் விரட்டியுள்ளனர். பட்டாடை வாங்கியளித்தவர்களும், அணிமணிகள் வாங்கித் தந்து அழகுபார்த்தவர்களும் அங்கு வந்திருந்தனர். பண்ணாராய்ச்சியாளரின் தன்மானம் அறிந்தவர்கள் வந்திருந்தனர்.

அங்கு வந்திருந்த திரு. மணல்மேடு குருநாதன் ஐயா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடத்து மிகுந்த அன்புகொண்டவர். பாவேந்தரைத் தம் இல்லத்துக்கு அழைத்து விருந்தோம்பியவர். குயில் இதழில் தொடர்ந்து எழுதியவர். பன்னூலாசிரியர். பாவலர் சுரதாவிடத்து அன்புகொண்டவர். அவர் தம் கையுறையாகச் சில அன்பளிப்புகளை நினைவுக்காக எனக்கு வழங்கிச் சிறப்பித்தார். தந்தையார் நிலையில் இருந்து அவர் மொழிந்த இன்மொழிகள் என் உயிரைச் சில்லிடச் செய்தது.


இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின் அமைப்பாளராக இருந்து, தந்தையாரின் பணியைத் தொடர்ந்து செய்துவரும் உடன்பிறப்பு இராச. இளங்கோவன் அவர்களின் பெருமுயற்சியில் இந்த விழா அமைந்தது. அவருக்கும் இராசவேலர் செண்பகத் அரங்குக்கும் என்றும் நன்றியன். அங்கிருந்த அறிஞர்களின் அன்பில் மிதந்தபடி நள்ளிரவு புறப்பட்டு, வேலூருக்குச் செலவுநயப்பு மேற்கொண்டேன்.

செம்பியர்குடியிலிருந்து வந்திருந்தவர்கள் ஆடை அணிவித்து மகிழல்.
மணல்மேடு குருநாதன் ஐயா சிறப்பிக்கப்படுதல். அருகில் தனித்தமிழாசிரியர் திருக்குறள், மணல்பாறை சிவம் ஐயா


இசையறிஞர் பேராசிரியர் த.கனகசபை ஐயாவின் விழாப்பேருரை

சான்றோர் பெருமக்கள்

திருமழபாடியில் வாழும்
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் உரை

மு.இளங்கோவன் உரை

வியாழன், 27 நவம்பர், 2014

திருவரங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டுப் பெருவிழா
திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், காந்திசாலையில் அமைந்துள்ள இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டுப் பெருவிழா 29.11.2014 மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.

புரவலர் க. தமிழழகன் அவர்கள் வரவேற்புரை நல்க, திரு. இராம. சுப்பிரமணியன், திரு. குமர. நமசிவாயமூர்த்தி முன்னிலையில் இந்தப் பெருவிழா நடைபெற உள்ளது.

இராச. இளங்கோவன் அவர்கள் அறிமுகவுரையாற்றவும், புலவர் புவியரசு அவர்கள் தலைமை தாங்கவும் இந்த விழா நடைபெறுகின்றது. திருமழபாடி புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தொடக்கவுரையாற்றவும், பெரும்பாண நம்பி முனைவர் த. கனகசபை அவர்கள் (பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்) விழாப் பேருரையாற்றவும் உள்ளனர். 

பண்ணாய்வான் ப. சு அவர்களின் படத்தினைத் திறந்து வைக்க திரு. தங்க. கலியமூர்த்தி அவர்கள் இசைந்துள்ளார்கள். அருள்மனச் சான்றோர் எம். ஆர். எஸ். கேசவன் அவர்களின் திருக்கையினால் முனைவர் மு. இளங்கோவனுக்குப் பண்ணாய்வான் ப.சு. சீர் பரவுவார் என்னும் உயரிய விருதளித்துப் பாராட்ட உள்ளனர். தமிழ்மாமணி முனைவர் ப. சுப்பிரமணியன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுறும். தமிழார்வலர்களை இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கத்தினர்  அன்புடன் வரவேற்கின்றனர்.


புதன், 26 நவம்பர், 2014

புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டம் திரையிடல் நிகழ்ச்சி


பண்ணுருட்டி நகராட்சியில் மேனாள் தலைவர் திரு. இரா.பஞ்சவர்ணம் அவர்கள் ஆவணப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்குச் சிறப்புச்செய்தல்

தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி இன்று 26.11.2014 மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி செயராம் ஓட்டலில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். முனைவர் எழில்வசந்தன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். தமிழறிஞர்கள், இசையறிஞர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. 

இந்த ஆவணப் படத்தில் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிற்றிலக்கியங்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பாடிய வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுத் திரைப்பட வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. வயல்வெளித் திரைக்களம் தயாரித்துள்ள இந்த ஆவணபடத்தைப் புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.இளங்கோவன் திரைக்கதை எழுதித் இயக்கியுள்ளார்.


இந்தப் படத்தில் முனைவர் ஔவை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், முனைவர் அரிமளம் பத்மநாபன், சுந்தர. இலட்சுமி நாராயணன் உள்ளிட்டவர்கள் சுந்தரேசனாரின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஆவணப்படத்தில் கிருத்திகா இரவிச்சந்திரன், வில்லியனூர் முனுசாமி, அறின் இடைக்கழிநாடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்து, தொகுப்புப்பணியை இராஜ்குமார் இராஜமாணிக்கம் செய்துள்ளார். தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் எழுதிய கையறுநிலைப் பாடலை கலைமாமணி கா. இராஜமாணிக்கம் பாடியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் மலேசியாவில் இந்த ஆவணப்படம் வெளியீடு காண உள்ளது. 
முனைவர் க. தமிழமல்லன் அவர்களின் தலைமையுரை

பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை


இசையமைப்பாளர் இராஜ்குமார் சிறப்பிக்கப்படுதல்


ஓவியர் அன்பழகன் சிறப்பிக்கப்படுதல்

கலைமாமணி இராஜமாணிக்கம் சிறப்பிக்கப்படுதல்


பார்வையாளர்கள் - ஒருபகுதி


ஊடகத்துறையைச் சார்ந்த செய்தியாளர்கள்- ஒருபகுதியினர்

செவ்வாய், 25 நவம்பர், 2014

திராவிட இயக்கச் சிந்தனையாளர் சேலம் கோ. வேள்நம்பி ஐயா மறைவுதமிழறிஞர் கோ.வேள்நம்பி ஐயா

  மிகச் சிறந்த திராவிட இயக்கச் சிந்தனையாளரும், தமிழறிஞரும், பன்னூலாசிரியருமாகிய சேலம் வேள்நம்பி ஐயா இன்று 25.11.2014 வைகறை நான்கு மணியளவில் உடல்நலம் பாதிப்புற்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்து ஆழ்ந்த துயருற்றேன். ஐயா அவர்களைப் பலவாண்டுகளுக்கு முன் அவர்தம் சேலம் இல்லம் சென்று கண்டு உரையாடியுள்ளேன். அவர்களின் குடும்பத்தாருடன் நல்ல தொடர்பில் இருந்தேன். குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த ஆய்விற்காக என்னைச் சந்திக்க விரும்பி அழைத்திருந்தார். பல பணி அழுத்தங்களால் நான் சேலம் செல்வதில் காலம் தாழ்ந்தது. ஐயா அவர்களை இனி காணும் வாய்ப்பை இழந்துள்ளேன். ஐயா வேள் நம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் தமிழ்ப்பற்றாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் உரியவாகும்.

  நாளை 26.11.2014 காலை எட்டுமணியளவில் ஐயாவின் உடல் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட உள்ளது. அவர்தம் விருப்பப்படி கருப்புச்சட்டை அணிவிக்கப்பெற்று எந்த வகையான சடங்கும் இல்லாமல் அறிவுமுறைப்படி அவர்தம் இறுதி நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

 ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை 30.09.2012 இல் பதிந்துள்ளேன். மீண்டும் தேவை கருதி பதிகின்றேன்.

புலவர் கோ.வேள்நம்பி அவர்கள்

  சேலம் மாவட்டத்தில் தமிழறிஞர்கள் பலர் பிறந்து தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் பலவகையில் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கோ.வேள்நம்பி அவர்கள் ஆவார். 27.11.1935 இல் சி.கோபால்சாமி, திருவாட்டி கமலம்மாள் ஆகியோர்க்கு மகனாகச் சேலத்தில் பிறந்தவர் கோ.வேள்நம்பி ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் விசயராசன் என்பதாகும். 1983 இல் ஈழத்தமிழர் போராட்டம் உயர்வுநிலைக்கு வந்தபொழுது விசயன் என்ற சிங்கள மன்னன்தான் இலங்கையின் முதல் அரசனாகக் குறிக்கப்படும் வரலாறு அறிந்து சிங்கள மன்னனின் பெயரைத் தாங்குதல் தவறு என்று கருதித், தம்பெயரை மாற்றி வேள்நம்பி என்று அரசிதழில் பதிவு செய்துகொண்டார்.

  பள்ளிப் படிப்பை மேட்டூர் அணையிலும், வித்துவான் படிப்பைக் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பெற்றவர்(1954-59). கரந்தையில் இவருக்கு ஆசிரியராக வாய்த்தவர்களுள் புலவர் ந.இராமநாதனார், ச.பாலசுந்தரம், அடிகளாசிரியர், சி.கோவிந்தராசன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பெருமக்களாவர்.

  தனிப்படிப்பாக இளங்கலைப்ப்பட்டம்(1969), முதுகலை(1971), பி.எட்.(1978 மண்டலக் கல்லூரி, மைசூர்), எம்.எட்(1989, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பட்டங்களைப் பெற்றவர்.

  1958 இல் இரண்டாம் நிலைத் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, முதல்நிலைத் தமிழாசிரியர், முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர்(1989-1993) என்று பல நிலைகளில் தமிழ்ப் பணிபுரிந்துள்ளார். தமிழாசிரியர் கழகப் பொறுப்புகளிலும் இருந்து திறம்படப் பணிபுரிந்தவர்.

  1956இல் குமுதம் இதழ் நடத்திய திராவிட நாடு வேண்டும் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் மூன்றாம் பரிசுபெற்றவர் பல்வேறு விருதுகளையும், சான்றுகளையும் பெற்றவர். பலதுறை நூல்களை எழுதியுள்ளார்.

நாடகம்:

நெருஞ்சிப்பூ
முத்தமிழ்
விடியலைக் காணாத விழிகள்

கவிதை:

தனக்குவமை இல்லாதான்
வண்ணண நிலவின்  வளர்கலை
வெள்ளி உருகி விழுதுகள் ஆகி

உரைநடை:

புரட்சிக்கவிஞரின் தாலாட்டு
செய்யுள் நயம்
தமிழ் தந்த பேறு(அமெரிக்கப் பயண இலக்கியம்)
சிறகுமுளைத்த நாள்முதல்

தொகுப்பு:

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்(அறிஞர் அண்ணா உரைகள்)- 2009

இவர் காலத்தில் செய்த  சில தமிழ்ப்பணிகள்:

 தமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். 1985 இல் ஆசிரியர் போராட்டத்தில் சிறைத்தண்டனை அடைந்தவர். 1999 இல் சென்னையில் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திச் சாகும்வரை போராட்டம் மேற்கொண்ட 102 தமிழறிஞர்களுள் இவரும் ஒருவர்.1979 இல் தொடங்கி 10685 சதுர அடியில் மனை வாங்கி 1991 இல் தமிழகத் தமிழாசிரியர் இல்லம் சேலத்தில் அமைத்தமை குறிப்பிடத்தக்க பணியாகும்.

  ஏர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் வாயில் அமைத்தமை. பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகின்றமை.


கோ.வேள்நம்பி அவர்களின் தமிழ்க்குடும்பம்:

 புலவர் வேள்நம்பி அவர்களின் துணைவியார் பெயர் இரா.சரோசா ஆகும். இவர்களுக்கு அதியமான், கதிரவன், கால்டுவெல் என்று மூன்று ஆண்மக்களும், அன்பரசி என்ற மகளும் மழலைச் செல்வங்களாக விளங்குகின்றனர்.

அமெரிக்கா, கனடாவுக்குச் சென்று தமிழ்மணம் பரப்பிய சிறந்த பேச்சளாராகவும் கவிஞராகவும் கோ.வேள்நம்பி அவர்கள் விளங்குபவர்.

திராவிட இயக்க உணர்வு:

புலவர் வேள்நம்பி அவர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதியாகவும், திராவிட இயக்க உணர்வாளராகவும் விளங்குபவர். 08.02.1948 இல் மேட்டூர் அணையில் தந்தை பெரியாரைக் கண்டு அவர் சொற்பொழிவை முதன்முதல் கேட்டார். 20.09.1949 இல் ஓமலூரில் அறிஞர் அண்ணா அவர்களைக் கண்டு அவரிடமே அறிஞர் அண்ணா யார்? என்று கேட்டவர். அன்று மாலை சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்டவர்.

1950 ஆகத்து மாதம் நடைபெற்ற வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்று நடந்த பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் முழக்கமிட்டுச் சென்றவர்.

11.02.1963 இல் மாமா பெத்தி அவர்களின் மகன் பெயர்சூட்டு விழாவில் அறிஞர் அண்ணா அவர்களை வரவேற்றுப் பேசிய பெருமைக்குரியவர். 25.11.1971 இல் அயோத்தியாபட்டணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் அவர்களை வரவேற்றுப் பேசியவர்.

வேள்நம்பியின் சாதனை

 புலவர் வேள்நம்பி அவர்கள் திராவிட இயக்க வராலற்றைச் சொல்லும் வகையில் பயணம் என்ற நெடுங்கைதை நூலை எழுதியுள்ளார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று பிரிவுகளாக அமைந்த இந்த நூல் 3014 பக்கங்களைக் கொண்டுள்ளது. (வெளியீடு: சீதை பதிப்பகம், 6/6  தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை).

 அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அருவினையாளர் விருது(05.07.2008)

 தினத்தந்தி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது(27.09.2008) பெற்றவர்.

சேலத்தில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்துவரும் வேள்நம்பி ஐயா அவர்கள்  பலவாண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே நம் விருப்பம்.


புலவர் கோ.வேள்நம்பி அவர்களின் இல்ல முகவரி:


தமிழகம்
3/6 சி.எஸ்.ஐ. மாணவர் விடுதி பின்புறம்,
நேதாஜி நகர், அசுத்தம்பட்டி,
சேலம்- 636 007

பேசி: 0427- 2312240

திங்கள், 24 நவம்பர், 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டம் திரையிடல் அழைப்பிதழ்

அன்புடையீர்,
வணக்கம்.

  தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைப்பாடல்களையும் அவற்றின் நுட்பங்களையும் தமிழ்நாடெங்கும் பாடிப் பரப்பியவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். அவர்தம் நூற்றாண்டையொட்டி அவரின் வாழ்க்கையும் அவர் பாடிய பாடல்களும் ஆவணப்படுத்தப்பட்டுத் திரைப்படவடிவில் வெளியீடு காண உள்ளன.

  முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதி, இயக்கியுள்ள இந்தப்படம் ஐம்பது நிமையம் ஓடத்தக்க வகையில் உள்ளது. இந்த ஆவணப் படத்தில் பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் பாடல்கள் ஆகியன குடந்தை . சுந்தரேசனார் பாடிய வடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அப்பாடல்களுக்குப் பொருத்தமான காட்சிகளும் நாட்டியங்களும் இடம்பெற்றுள்ளன. பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்து அறிஞர் பெருமக்கள் வழங்கியுள்ள நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.

  இந்த ஆவணப்படம் 2014 டிசம்பர் மாதம் மலேசியாவில் வெளியீடு காண உள்ளது. அதன்பிறகு உலகம் முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகளால் வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஊடகத்துறையைச் சார்ந்தவர்களின் முன்னிலையில் ஆவணப்படத்தின் முதன்மைக்காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட உள்ளன. தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 26.11.2014, அறிவன் (புதன்) கிழமை
நேரம்: மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram)

அனைவரையும் வரவேற்று மகிழும்

வயல்வெளித் திரைக்களம், புதுச்சேரி- 605 003


வெள்ளி, 14 நவம்பர், 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் - முன்னோட்டம்


தமிழர்களின் மரபுவழியில் அமைந்த பண்ணிசையை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் திசைதோறும் சென்று முழங்கியவர் இசையறிஞர், ஏழிசைத் தலைமகன், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்  ஆவார். ஐயா அவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முகமாகச் சங்க நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும், பக்திப் பனுவல்களிலும் நிறைந்து விளங்கும் இசைப்பாடல்களைப் பண்ணாராய்ச்சி வித்தகர் அவர்களின் குரலுடன் காட்சிப்படுத்தி வழங்க உள்ளோம். 

உலகப் பரப்பில் பரந்து வாழும் தமிழர்கள் தங்கள் தொல்லிசையைக் காட்சிகளின் பின்புலத்தில் விரைவில் கேட்கலாம். இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடித்தொகுத்த இசையாய்வுப்புதையல் இன்னும் சில நாள்களில் வெளியீடு காண உள்ளது. தமிழிசையார்வலர்கள் இருகை நீட்டி வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம். 

படத்தொகுப்புப் பணியிலும், இசைத்துல்லியப் பணியிலும் வளரும் இசையறிஞர் திரு. இராஜ்குமார் இராஜமாணிக்கம் அவர்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். தமிழர்களின் தொல்லிசை, கலை மீட்பு முயற்சி கைகூட உள்ள மகிழ்வில் வயல்வெளித் திரைக்களத்தினர் இப்படைப்பை வழங்க உள்ளனர். தமிழர்தம் தொல்லிசை மீட்பு குறித்த ஒரு செலவு நயப்பு இது.
புதன், 12 நவம்பர், 2014

அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் தமிழ்மொழிக்கு ஏற்பளிப்பு

  அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.) என்கிற இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப் படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர், அமெரிக்க நாட்டில்   மட்டுமல்லாது  இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும்.

  இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணாக்கர் தமிழ்
பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணாக்கருக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க.  இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து மேல்நிலை மாணாக்கர் பழகுத்   தமிழுக்கான இலக்கணமும், அறிமுக நிலை மாணாக்கர் ஊடாட்டு மென்பொருள் வழியே அடிப்படை தமிழ் எழுத்துக்களையும், சொற்களையும்  பயில முடியும்.

  அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் வார இறுதியில், முழுதும் தன்னார்வத் தொண்டர்களால் இலாப நோக்கமற்று நடத்தப்படுபவை. தம் பிள்ளைகள்   அமெரிக்க மண்ணில் வாழ்ந்தாலும், அவர்கள்  தமிழ் படிக்க  வேண்டுமென விழையும் பெற்றோர்கள்  செலுத்தும் கட்டணங்களை மட்டுமே முதலாகக்கொண்டு நடைபெறும் பள்ளிகள் தான் அனைத்துமே.பயிற்றுவிக்கும் ஆசிரியர் யாவரும் ஊதியம் எதுவுமின்றி ஒவ்வொரு வாரமும் தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிட்டுப் பணியாற்றும் தன்னார்வத்  தமிழ் பெற்றோர்கள் தாம்.  எந்த அரசாங்கங்களும் (இந்திய/தமிழக) இவற்றுக்கு நிதியுதவியோ, இடமோ, பொருளோ வழங்குவதில்லை.

  அமெரிக்க நாட்டில் இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகையாக  வகுப்பறை வசதிகள் சற்றுக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைக்கின்றன. தன்னார்வச் சேவைகளால் இயங்கும்  தமிழ்ப்பள்ளிகளின் செலவீனங்களில் பெரும்பகுதி வகுப்பறை வாடகைக்கே செலவாகிறது.

  இந்தச் சூழ்நிலையிலும் தமிழ்க்கல்வியைத் தரத்துடன் வழங்குவதன் மூலமே அமெரிக்கத் தமிழ் மாணாக்கர் மற்ற மொழிகளைப் போலத் தமிழையும் ஒரே தரத்தில் மதிப்பர் எனும் குறிக்கோளுடன் இயங்கி வருபவை இப்பள்ளிகள். 

  பெற்றோரின் விருப்பத்திற்காகத் தொடக்கப் பள்ளியில் (நான்கு / ஐந்தாம் வகுப்பு வரை) படிக்கும் மாணாக்கரே பெரும்பான்மையாக வாரக்கடைசியில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்றனர். நடுநிலை/மேல்நிலை பள்ளி மாணாக்கரின் முதன்மை கல்வி சார்ந்த வகுப்புகளும் அதனை ஒட்டிய வீட்டுப்பாடங்களும்தினசரிச் சுமையாகிப் போவதால் அவர்களுக்கு வாரநாட்களில் மிகக்குறைந்த நேரமே கிடைக்கிறது. வாரக்கடைசி நாட்களில் இவர்கள் விளையாட்டு, மற்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

  இந்த ஆளுமையிலிருந்து மாணாக்கரை மீட்டுத் தமிழ்மொழி கற்பதிலும் அவர்களுக்குப் பயன் உள்ளது என்பதைப், பெற்றோரின் வற்புறுத்தலின்றி அவர்களாகவே உணர, தமிழ்ப்பள்ளிகளுக்கு உயரிய கல்வி நிறுவனம் எனும் அங்கீகாரம் ஒரு மாபெரும் தேவை.

  தமிழ்ப்பள்ளிக்கான  அங்கீகாரம் என்பது அமெரிக்க மண்ணில் நடக்கும் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் நடைபெறும் கல்வி நிறுவனம் என்பதற்கான சான்று.இந்த அங்கீகாரத்தினைப் பெறுவது எளிதல்ல.கல்வித்துறையில் பணியாற்றி அனுபவமில்லாத தன்னார்வலர்களால் நடத்தப்படும் பள்ளிகள், உயர்தரக்கல்வி நிறுவனத்துக்கான அங்கீகாரம் பெற முயல்வது ஒரு மலைப்பான விடயம்.

  அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினை  வடிவமைத்து, உருவாக்கி, அவற்றைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மெருகேற்றும்  பணியினைச் செய்து வருகிறது.  மட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகம், மின்கற்றல் போன்ற கட்டுமானப் பணிகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் பயன்பெறும் வண்ணம் செயல்படுத்துகிறது.இருப்பினும், இதனைக் கடந்து  பரந்து விரிந்த அமெரிக்க நாட்டில், மாநில/மாவட்ட அளவில் நடைபெறும் பள்ளிகளை நிர்வகிப்பது அந்தந்தப் பகுதி தமிழ்க்கல்வி அமைப்புகளும் தமிழ்ச்சங்கங்களும் தான். மாணாக்கரைச் சேர்ப்பது, ஆசிரியர்களை இனம் கண்டு நியமிப்பது, வகுப்பறைகளை வாடகைக்குப் பதிவு செய்வது பின்னர்த் தலையாயக் கடமையான தமிழ் மொழியைச் சீரிய முறையில் அடுத்த தலைமுறைக்குக் கற்பிப்பது போன்ற நடைமுறைப் பணிகள்வட்டாரத் தமிழ்ப்பள்ளி அமைப்புகளையே சாரும்.

  இப்படி  பல்வேறு சூழல்களில், அனைத்தையும் ஒருங்கிணைத்து நடைபெறும் அமெரிக்கத் தமிழ் பள்ளிகளின் அமைப்பு முறை தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேயா, ஈழம் போன்ற நாடுகளில் 12 ஆண்டுகள் தமிழ் கற்கும் முறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது.அமெரிக்காவில் இரண்டாவது மொழியாகவே தமிழ் மொழியைக் கற்கிறார்கள். அமெரிக்க நாட்டுக் கல்வி முறைப்படி குறைந்த பட்சம் மேல் நிலைப் பள்ளியில் (9 முதல் 12 வரை) நான்கு ஆண்டுகள் ஆங்கிலமன்றி வேறொரு மொழியை மாணாக்கர் கட்டாயமாகப் பயில வேண்டும். இதற்காக 4 மொழி மதிப்பீட்டு புள்ளிகளை  (language credits) மாணாக்கர் பெற முடியும். இதனால் கல்லூரியில்/பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் சேருவதற்குத்   தேவையான கூடுதல் புள்ளிகள் கிடைப்பதுடன், கட்டணமும் வெகுவாகக் குறைகிறது.

  பள்ளி ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும்   2 முதல் 4 மணி நேரம் செலவழித்துத் தமிழ்கற்கும் மாணாக்கருக்கு மற்ற மொழிகளைப் போல மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தந்தால்மட்டுமே அவர்கள் உந்துதலுடன் தமிழ் கற்பர்என்ற நிலை உருவானது.இதனை மனதில் கொண்டு தமிழ் மொழி கற்பதற்கான தேவையையும் பூர்த்தி செய்வதுதான் தமிழ்ப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் (Accreditation).

  மொழி மதிப்பீட்டு புள்ளிகளுக்காக ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஏன் ஜப்பானிய, சீன மொழிகளைப் பயிலும் தமிழ் மாணாக்கர் அமெரிக்க நாடு முழுவதும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மற்ற மொழிகளுக்கு மாற்றாக அல்லது கூடுதலாகத் தமிழ் மொழியைப் பயில்வது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 4 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தரும்.

  அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் வாயிலாகத் தமிழ் கற்கும் மாணாக்கரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது ஒரு முதல் படி. தமிழர் அடர்த்தியாக வாழும் ஊர்களில் முழு நேரப் பொதுப் பள்ளிகளிலேயே தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பாக இது அமையக்கூடும்.

தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது என்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டு அ.த.க. கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்ததன் பயனாகத் தற்பொழுது 3 மாநிலங்களில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மினசோட்டா, மிசெளரி &டெக்சஸ் (ஹூஸ்டன் நகரப் பள்ளி) பள்ளிகள் இந்த மாபெரும் அங்கீகார முத்திரையை ஈண்டெடுத்திருக்கிறார்கள்.ஹூஸ்டன் பள்ளி முதலில் ஜூன் 2014ல் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது அதனைத் தொடர்ந்து மினசோட்டா/மிசெளரி மாநிலப் பள்ளிகள் அக்டோபர் 2014ல் இந்த மைல்கல்லைத் எட்டியிருக்கிறார்கள்.

  இந்தப் பள்ளி அங்கீகாரத்தை வழங்கிய நிறுவனத்தைப் பற்றிய சிறு குறிப்பு:
அட்வான்செட் (AdvancEd www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில்ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும்உலகளாவிய நிறுவனம்.

  இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும்,  32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் 50 மாநிலங்களிலும் ஏற்கத்தக்க கல்வி மதிப்பீட்டு நிறுவனம் அட்வான்செட் ஒன்று தான். அட்வான்செட் வரையறுக்கும் பள்ளி மதிப்பீடுகளைத் மீறியதொரு தரம் இன்று வரை எதுவுமில்லை என்று சொல்லலாம்.

  மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன்- டெக்சாஸ் ஆகிய   3 தமிழ்ப் பள்ளிகளும் அரசு நடத்தும் பொதுப்பள்ளிகள் பெற்ற சராசரிப் புள்ளிகளை  விடஅதிகப் புள்ளிகள் பெற்று சீர்மிகு  தரத்துடன் நடப்பதாக, அட்வான்செட் தனது  இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  அரசாங்கம் பல மில்லியன் டாலர்கள் செலவழித்து முழுதுமாக எற்று நடத்தும்  பொதுப் பள்ளிகள் பல அட்வான்செட் வரையறுக்கும் அடிப்படைத் தரத்தைக் கூடத் தாண்டாது என்பதும், தரமான அரசாங்கப் பள்ளிகளின் சராசரி தரக் கட்டுப்பாட்டு புள்ளிகளைக்  காட்டிலும் கூடுதலாகப் பெற்று இம்மூன்று தமிழ்ப் பள்ளிகளும் அங்கீகாரத்தை ஈன்றெடுத்திருக்கின்றது என்பது சாலச்சிறப்பு.

  அட்வான்செட் நிறுவனத்தைச் சார்ந்த வெவ்வேறு தனி நபர்கள் அடங்கிய மூன்று குழக்கள்  மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன் டெக்சாஸ் இம்மூன்று பள்ளிகளையும் ஆய்வு செய்தன.   இருப்பினும் ஆய்வின் முடிவுரையாக அவர்கள் குறிப்பிட்டது ஒரே கருத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

  "எங்களின் 30 ஆண்டு கல்வித்துறை அனுபவத்தில் இத்தமிழ்ப்பள்ளி அமைப்புகள் போன்றதொரு தன்னார்வு கல்வி நிறுவனத்தைக் கண்டதில்லை. பயிற்றுவித்தல் என்பது இத்தன்னார்வலர்களுக்கு முதன்மை பணியாக இல்லாவிடினும் தரமான கல்வி மற்றும் கல்வி நிறுவனத்துக்கான அத்தனைத் தேவைகளையும்/பணிகளையும் இவர்கள் திறம்படச் செய்வது கண்டு வியக்கிறோம்.அத்துடன் தமிழ் மொழியின் மேல் கொண்டிருக்கும் பற்றைப் பள்ளி நிர்வாகக் குழு, ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணாக்கர உட்பட அனைவரின் கண்களிலும்   நாங்கள் காண முடிந்தது" என்றார்கள்.

  இம்மூன்று பள்ளிகளின் அங்கீகாரம் ஒரு தொடக்கம் தான்.  இது காட்டுத்தீ போல மற்ற மாநிலங்களுக்கும் பரவும். சிங்கப்பூர், மலேயா நாடுகளுக்குக் குடி புகுந்த தமிழர் எப்படித் தமிழை அந்நாட்டில் தழைத்தோங்கச் செய்தார்களோ அதைப்போலத் தற்போதைய அமெரிக்கத் தமிழ்த்  தலைமுறையினர்    அமெரிக்க நாட்டில் வாழும் அடுத்த தலைமுறையினருக்கும் அதனைக் கடந்தும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.


  ஆசியாவின் மூத்த செம்மொழியான தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கும் மேலாகமாற்றங்களற்ற இலக்கணத்துடன் பயன்பாட்டில் உள்ள ஒரே மொழி என்பதனை உலக வல்லரசான அமெரிக்காவும் உணர்ந்து போற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பல்வேறு நாட்டு இனங்களையும் மொழிகளையும் பேசும் புலம் பெயர்ந்த மக்களைப் பிரதானமாகக் கொண்டு, அனைத்துப் பண்பாடுகளையும் மொழிகளையும் சமமாக மதிக்கும் அமெரிக்க நாடும் தமிழின் உயர்வையும், பெருமையையும்  உணரத்  தொடங்கியுள்ளது.