நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 20 ஜூலை, 2019

முனைவர் இரா. பாவேந்தன் மறைவு!


முனைவர் இரா. பாவேந்தன் 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய என் அருமை நண்பரும் பன்னூலாசிரியருமான முனைவர் இரா. பாவேந்தன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவம் பயனளிக்காத நிலையில் இன்று(20.07.2019)  அதிகாலை இயற்கை எய்திய துன்பச் செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். பேராசிரியர் இரா. பாவேந்தன் அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முனைவர் இரா. பாவேந்தனின் உடல் சென்னையிலிருந்து, எடுத்துச்செல்லப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் அவர்தம் சொந்த ஊரான திருச்சிராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

யான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த காலம் முதல்(1993-97) நல்ல நண்பர்களாகப் பழகினோம். ஒத்த கொள்கையும், உழைப்பும் எங்களைப் பிணைத்தன. கோவை செல்லும்பொழுதெல்லாம் சந்தித்து உரையாடும் வழக்கத்தினைக் கொண்டிருந்தேன். தம் இல்லத்தில் தங்கிச் செல்லுமாறு வற்புறுத்துவார். கோவைசென்றிருந்தபொழுது வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைக் கடந்து, வேறு ஒரு பணிக்குச் செல்ல உள்ளதைச் சொன்ன, ஒருநாளில் அங்குள்ள சமுதாய வானொலியில் உரையாற்ற, அன்புக் கட்டளை இட்டார். நான் வந்தமையும், வானொலியில் உரையாற்றியதையும் முனைவர் இரா. பாவேந்தன் வழியாக முன்னைத் துணைவேந்தர் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் அறிந்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழாவுக்குப் பாவேந்தன் வழியாகவே துணைவேந்தர் பின்னாளில் அழைத்து உரையாற்றச் செய்து மகிழ்ந்தார்.திராவிட இயக்கப் பின்புலம்கொண்ட குடும்பத்தில் பிறந்த இரா. பாவேந்தன், தமிழ்ப் பற்றும், அறிவியல் சிந்தனையும் கொண்டவர். கறுப்பு சிகப்பு இதழியல், திராவிட நாட்டுக் கல்வி வரலாறு, திராவிட சினிமா, ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு, தமிழில் அறிவியல் இதழ்கள் உள்ளிட்ட நூல்களைத் தமிழுலகுக்கு வழங்கிய பெருமகனார்.

புதுவையில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நான் முன்னின்று நடத்தியபொழுது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வருகைதந்து, மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்குத் துணைநின்றவர். தம் தந்தையாரின் திராவிட இயக்கச் சிந்தனைகளை என்னுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்பவர். தம் உடன்பிறப்பு மருத்துவர் இரா. அமுதக்கலைஞனின் பெயர்க்காரணம் சொல்லி, சொல்லி வியப்பவர்.

முனைவர் இரா. பாவேந்தன் வாழ்க்கைக்குறிப்பு

முனைவர் இரா. பாவேந்தன் 13.04.1970 இல் கோவையில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பேராசிரியர் அருணா. இராசகோபால், திருமதி செல்லவடிவு. இரா.பாவேந்தனின் தொடக்கக் கல்வி கோவை, மதுரை, சென்னை என்று பல ஊர்களில் இருந்தது. மதுரை யாதவர் கல்லூரியில் இளம் அறிவியல் (இயற்பியல்) பயின்றவர். முதுகலை – தமிழ் இலக்கியப் படிப்பை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர். மயிலாடுதுறை அ.வ. கல்லூரியில் தம் பேராசிரியர் பணியைத் தொடங்கி, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தொடர்ந்தவர். கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் இவருக்குக் கிடைக்கவேண்டிய பணி, தகுதியற்ற ஒருவருக்கு வழங்கப்பட்டது என்று கல்வி உலகில் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் பேராசிரியர் பணியேற்ற முனைவர் இரா. பாவேந்தன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முனைவர் இரா. பாவேந்தனுடன் மருத்துவர் இரா. அமுதக்கலைஞன், மருத்துவர் இரா. இளவஞ்சி ஆகியோர் உடன் பிறந்தவர்கள்.

முனைவர் இரா. பாவேந்தின் மனைவி பெயர் சு. செயலட்சுமி. இவர்களுக்கு இரா. கோதை, இரா. கயல் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் உள்ளனர்.

   ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகத்து மக்கள் முன்னேறுவதற்கு உரிய எண்ணத்துடன் இயங்கிய என் ஆருயிர்த் தோழர் முனைவர் இரா. பாவேந்தனின் இழப்பு, தமிழ் ஆய்வுலகுக்கும் கல்விப்புலத்துக்கும் மிகப்பெரிய இழப்பு!. இரா. பாவேந்தனின் வழியில் இயங்குவது ஒன்றே அவருக்குச் செய்யும் நன்றிக் கைம்மாறாக இருக்கும்!

தமிழிருக்கும் வரை முனைவர் இரா. பாவேந்தனின் சுவடுகள் இருக்கும்!

செவ்வாய், 16 ஜூலை, 2019

செந்தமிழ்க் கல்லூரி முதல் சிக்காகோ வரை!


சிக்காகோவில் செந்தமிழ் பரப்பும் சான்றோர் விருது பெறுதல்

சிக்காகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவில் முனைவர் இரவிசங்கர் கண்ணபிரான், அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்டு, மு.இளங்கோவன், திருவள்ளுவன், மருத்துவர் சோம. இளங்கோவன்

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் 1987 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயில்வதற்குச் சென்றது முதல் இன்றுவரை சற்றொப்ப முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழோடு தொடர்பில் உள்ளேன். மாணவனாகவும் ஆய்வு மாணவனாகவும், பேராசிரியனாகவும் இத்தொடர்பு மலர்ந்துள்ளது.

 முனைவர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் அப்பொழுது செந்தமிழ்க் கல்லூரி முதல்வராக இருந்தார். அவர்தம் வகுப்பிலும் அடுத்து முதல்வர் பொறுப்பேற்ற பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்களின் வகுப்பிலும் தமிழ் பயின்றமை வாழ்வில் கிடைத்த பெரும்பேறு எனலாம். அங்குப் பணியாற்றிய பிற பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் என்மீது அன்புகாட்டி, தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் கற்பித்தமையால் தமிழறிமுகம் அமைந்தது.  உழவுத்தொழிலில் உழன்றுகொண்டிருந்த என்னை என் ஆசிரியர் வாரியங்காவல் புலவர் . சுந்தரேசனார் ஆற்றுப்படுத்தியதால்தான், திருப்பனந்தாள் கல்லூரியில் தமிழறிவு பெறும் வாய்ப்பு அமைந்தது. அதனால்தான் உலகத்தைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிந்தன.

திருப்பனந்தாள் கல்லூரியில் பயின்றபொழுது காசித்திருமடத்தின் அதிபர் கயிலை மாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் அன்புக்கும், அன்றைய பொழுதில் திருமடத்தில் காறுபாறு சுவாமிகளாக இருந்த தவத்திரு முனைவர் குமாரசாமித் தம்பிரான் அவர்களின் நம்பிக்கைக்கும் உரியவனாக இருந்தேன் (தற்பொழுது தருமையாதீனத்தின் இளைய பண்டார சந்நிதியாக எழுந்தருளி அருள் பாலிப்பவர்கள்).

திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் சார்பில் வெளிவந்த குமரகுருபரர் இதழில் அவ்வப்பொழுது இலக்கியக் கட்டுரைகள் எழுதி, என் எழுத்து ஆர்வத்தைத் தணித்துக்கொண்டேன். அப்பொழுது வெளிவந்த கட்டுரைகள் சிறு சிறு கட்டுரைகளாக இருந்தன. பின்னாளில் நூல்கள் எழுதும் ஊக்கத்தை அச்சிற்றிதழ் தந்தது. மாணவப்பருவத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பரிசில்கள் பெற்றமையும், இலக்கிய மன்றப் பொறுப்புகளில் இணைந்து, பணியாற்றியமையும், அயலூர்களில் உள்ள கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டமையும் இப்பொழுதும் என் நினைவில் உள்ளன.

திருப்பனந்தாள் கல்லூரியில் பயின்றபொழுது நடைபெற்ற சில நிகழ்வுகளை இங்கு நினைத்துப் பார்க்கின்றேன். செயங்கொண்டம் தமிழோசை நற்பணி மன்றம் நடத்திய ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் தமிழ்வழிக் கல்வி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, முதல் பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றேன். அதனைத் தமிழ்ப் பேரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் வழங்கியமை இவண் எண்ணிப் பார்க்கத்தக்கது. இளங்கலை மாணவனாக இருக்கும்பொழுது மாணவராற்றுப்படை(1990) பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை உள்ளிட்ட நூல்களை எழுதி வெளியிட்டமை யாவும் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன, விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் தன் வரலாறு (பதிப்புப் பணி) வெளிக்கொண்டு வந்தமை, நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் தமிழக அளவில் நடைபெற்ற போட்டியில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதித் தங்கப் பதக்கம் பெற்றமை யாவும் திருப்பனந்தாள் கல்லூரியில் நான் பயின்றபொழுது நடைபெற்ற, நினைவுகூரத் தக்க பணிகளாகும்.

புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கு வந்தபொழுது(1992-93) பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் தொடர்பு கிடைத்தமையும், அதனால் பிற நாடுகளில் நடைபெறும் தமிழாய்வுகளை அறிந்தமையும், மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் குறித்த ஆய்வு செய்தமையும், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பாவுடன் அமைந்த தொடர்புகளும் யாவும் எண்ணி எண்ணி இன்புறத் தக்கன.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்(1993-97) முனைவர் பட்ட ஆய்வுக்குப் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பினைத் தேர்வு செய்து பேராசிரியர் எழில்முதல்வன் (மா. இராமலிங்கம்) அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு செய்தமை, பொன்னி என்னும் இலக்கிய இதழின் சிறப்புகளைத் தமிழ் ஆய்வுலகுக்கு அறிமுகம் செய்தமை, பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டினை ஆய்வுசெய்து கட்டுரை எழுதி, நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் மீண்டும் ஒரு தங்கப்பதக்கமும் வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றமை யாவும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இக்கால கட்டத்தில்தான் திரைப்பா ஆசிரியர் கவிஞர் அறிவுமதி அவர்களின் தொடர்பு அமைந்து, என் ஆய்வுப்போக்கில் அறிவியலும், மண்மணமும் பிணைந்து, தமிழ் சார்ந்து இயங்கும் நிலை ஏற்பட்டது.

முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உதவியாளர் பணி அமைந்து(1997-98), தமிழியல் ஆவணம் என்ற திட்டப்பணியில் ஓராண்டு இணைந்திருந்தேன். கவிஞர் அறிவுமதி அவர்களின் அரவணைப்பிலும் அன்பிலும் திளைத்த இந்த ஓராண்டு வாழ்க்கை, என் வாழ்வில் மிகப்பெரிய தொடர்புகளையும் அழகியல் உணர்வுகளையும் உருவாக்கியது. இலக்கியம் அன்றும் இன்றும், மணல்மேட்டு மழலைகள் உள்ளிட்ட நூல்கள் இக்காலத்தில் வெளிவந்தன. பன்னாட்டு அறிஞர்களைச் சந்திக்கவும், உரையாடவும், அயலகத் தமிழாய்வு முயற்சிகளைக் கற்கவும் அயலகத் தமிழறிஞர்களின் வாழ்வியலைக் கற்கவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பணி வழி அமைத்தது.

சென்னைப் பணி ஓராண்டில் முடிவுக்கு வந்ததும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கலைக்களஞ்சியப் பணிக்கு இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் உதவியாளனாக - ஆய்வு உதவியாளனாக ஒராண்டு பணிபுரியும் பொழுது (1998-99), தமிழிசை ஆய்வின் அறிமுகம் கிடைத்தது. தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கத்தில் என் துணை இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்குப் பேருதவியாக இருந்தது. இசைமேதை அவர்களுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது நாளும் உரையாடி, அவர் வாழ்நாளில் கற்ற, பெற்ற பட்டறிவினையும், அறிவினையும் அறியும் பெரும்பேறு அமைந்தது. இவரிடம் தமிழிசை குறித்து நான் பெற்ற அறிவுதான் பின்னாளில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம், தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் ஆகியவற்றை உருவாக்குதற்குக் காரணமாக அமைந்தது.

1999 – சூன் மாதம்….

வேலூர் மாவட்டம் கலவையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றேன். பல நூறு மாணவர்களைச் சந்திக்கவும், பல நூல்களை எழுதவும் கலவைக் கல்லூரிப் பணி உதவியது. பொன்னி ஆசிரியவுரை, பொன்னி பாரதிதாசன் பரம்பரை, அரங்கேறும் சிலம்புகள் உள்ளிட்ட நூல்கள் இங்கிருந்தபொழுதே அச்சாயின. மக்கள் தகவல் தொடர்பியல் குறித்த முதுகலைப் பட்டமும் (M.A.J.M.C) அஞ்சல் வழியில் கற்றுப் பெற்றேன்.  

இக்கல்லூரியில் தாளாளராக விளங்கும் மதிப்பிற்குரிய சக்தி ப. அன்பழகன் ஐயா அவர்களின் நம்பிக்கைக்குரியவனாக விளங்கிய அந்த நாள்கள் இனிமை நிறைந்தவையாகும். என் முதல் அயல்நாட்டுப் பயணம் (சிங்கப்பூர், மலேசியா) இங்கு பணியாற்றிய பொழுதுதான் அமைந்தது(2001). பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்தமை, பல கல்லூரிகளில் சிறப்புரையாற்றியமை யாவும் இங்கு அமைந்து, என் உழைப்பு வெளியுலகிற்கு அறிமுகம் ஆகும் சூழல் அமைந்தது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் தம் அஞ்சல்வழிக் கல்விக்குரிய வகுப்புகளை வேலூரில் நடத்தியபொழுது, மாணவர்களுக்கு நாட்டுப்புறவியல், இலக்கணம், இலக்கியம் பயிற்றுவிக்கும் வாய்ப்பினை வழங்கின. இதனால் பல்லாயிரம் மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இயற்கையாகவே எனக்குக் கிடைத்தது. மலைபடுகடாம் நூலில் அமைந்துள்ள நவிரமலையைக் கண்டு, அதுகுறித்து வெளியுலகிற்கு அறிமுகம் செய்தமையும் இங்கு பணியாற்றிய பொழுதுதான் அமைந்தது.

2005 ஆகத்து மாதம்…

புதுதில்லியில் உள்ள நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுச்சேரி அரசின் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில்  தமிழ் விரிவுரையாளர் பணியில் இணைந்தேன். அதுபொழுது தமிழ் இணையத்துறை அறிமுகம் ஆனது. அத்துறையில் ஈடுபட்டு, கடுமையாக உழைத்ததால் பலநூறு அறிஞர்களின் வாழ்வியலும் பணிகளும் இணையப் பெருவெளியில் ஆவணங்களாயின. நூற்றுக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று தமிழ் இணையப் பயிலரங்குகளை நடத்தி, தமிழை அடுத்த நிலைக்கு உயர்த்த, முயன்று உழைத்தேன். இதனால் பல்லாயிரம் மாணவர் பயன்பெற்றனர். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, குவைத்து, என அயல்நாட்டுப் பயணப் பட்டியல் நீண்டது. பல்லாயிரம் தமிழ் ஆர்வலர்கள் நேரிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு, நண்பர்களாயினர். புதிய நண்பர்கள் கிடைத்தவண்ணம் உள்ளனர். பழைய நண்பர்களும் தொடர்பில் இணைந்தவண்ணம் உள்ளனர்.

பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்திற்குத் தமிழக அரசு  பத்து இலட்சம் நிதி உதவி கிடைக்க வழி அமைத்தது, பெருமழைப் புலவரின் நூற்றாண்டினைக் கொண்டாடியது, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு, வ.சுப.மாணிக்கம் நூற்றாண்டு, க.வெள்ளைவாரணனார் நூற்றாண்டு எனப் பல விழாக்களை எடுத்து மூத்தோரைப் போற்றி மதித்தமை என் வாழ்வின் நினைக்கத்தகுந்த பொழுதுகளாகும்.

புதுவைப் பணிக்காலத்தில்தான் இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருது கிடைத்து, என் உழைப்புக்கு உரிய மதிப்பினை உணர்ந்தேன்.

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாட்டினைப் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே நடத்தியமை (2014) இங்கு தனித்துச் சுட்டவேண்டிய செய்தியாகும்.

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கி, அயல்நாடுகளில் கிளைகளை ஏற்படுத்தியமை, புதுச்சேரியில் தொல்காப்பியம் குறித்த தொடர்பொழிவுகள் நடைபெற வழிவகை செய்தமை, தொல்காப்பிய அறிஞர்களின் பேச்சுகளைக் காணொளியாக்கி, உலகத்தவர் காண வழிசெய்தமையும் என் பணிகளுள் குறிப்பிடத் தக்கவையேயாகும்.

1987 முதல் இந்த ஆண்டு வரை (2019), கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக யான் செய்துவரும் பல்வேறு பணிகளையும், முயற்சிகளையும் கவனத்தில்கொண்ட, சிக்காகோ தமிழ்ச் சங்கத்தார் தம் பொன்விழா ஆண்டில்(2019) என்னைச் சிறப்பிக்கவும், என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்யவும் நினைத்து அண்மையில் சிக்காகோ நகரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் முதல்நாள் நிகழ்வில் பொற்கிழி வழங்கி, செந்தமிழ் பரப்பும் சான்றோர் என்ற விருதினையும் வழங்கிச் சிறப்பித்தனர்.

தகுதியுரை வழங்கும் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர்

தகுதியுரையை ஆர்வத்துடன் செவிமடுக்கும்காட்சி

சிக்காகோ தமிழ்ச்சங்க விருது பெறுவதற்குரிய செய்தி, அமெரிக்க விழாவின் முதல்நாள் (04.07.2019) மாலையில்தான் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. செய்தி கிடைத்த சற்று நேரத்தில் என் அருகே உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களை அழைத்து வந்து, பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அமரச் செய்தார்; மேலும் பேராசிரியர் ஹார்ட்டுக்கு என்னை அறிமுகமும் செய்துவைத்தார். முனைவர் ஜார்ஜ் ஹார்ட்டுடன் உரையாடியபடி, பதினொரு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள் நூல் பையில் இருந்ததை எடுத்து, அதனை முனைவர் ஹார்ட்டு அவர்களுக்கு வழங்கி, அவரைப் பற்றிய கட்டுரையை நூலில் இணைத்துள்ளேன் என்று சொன்னேன். முனைவர் ஹார்ட்டு அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார். தம்மைப் பற்றிய கட்டுரையை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, என்னை வாழ்த்தினார். அதுபொழுது இருவரையும் மேடைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர் சோம இளங்கோவன் ஐயாவும், விழாக்குழுவினரும் வந்தனர். பொற்கிழி வழங்கும் நிகழ்வில் முதலில் என்னை விளித்து, என் பணிகளை அறிமுகம் செய்து, அழகிய தட்டொன்றில் செந்தமிழ் பரப்பும் சான்றோர் விருதினையும், பொற்கிழியையும் வைத்து, என்னை ஏற்றருள வேண்டினர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நடுவண், நன்றியுடன் பொற்கிழியையும், விருதினையும் பெற்றுக்கொண்டேன். அடுத்து அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்டும் பொற்கிழி பெற்றுக்கொண்டார். பெருங்கவிக்கோ சார்பில் அவர்தம் திருமகனாரும் பொற்கிழி பெற்றுக்கொண்டார்.

மூத்த அறிஞர்களுக்கு இடையே இளையோனின் - எளியேனின் பணிகளையும் அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்திய சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நான் நன்றியுடையவன் ஆவேன். செந்தமிழ்க் கல்லூரியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றுவரும் என் பல்வேறு பணிகளுக்குச் சிக்காகோ நகரில் ஏற்பளிப்பு செய்யப்பட்டமையை உலகெங்கும் பரவி வாழும் என் நண்பர்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன். தங்கள் ஊக்க மொழிகளால் தொடர்ந்து தமிழ்ப்பணியில் ஈடுபடுவேன்.