முனைவர் சி.இரா. இளங்கோவன்
கணினி வருகைக்குப் பிறகு தமிழாய்வுகள் பல
திசைகளை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகின்றது. தமிழாய்வுகளைத் தாளில் எழுதிப் பாதுகாக்கும்
அறிஞர்கள் உண்டு. கணினியின் துணைகொண்டு இன்று தமிழாய்வுகளை மிக எளிமைப் படுத்தும் அறிஞர்களும்
உண்டு. அந்த வகையில் தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுத் தமிழ்ச் சொல்லாக்கத்தில்
கடுமையாக உழைத்துவரும் அறிஞர் ஒருவரை நேற்று (19.03.2013) கண்டு உரையாடும் வாய்ப்பு
எனக்கு அமைந்தது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிபவர் முனைவர் சி.இரா. இளங்கோவன். 20.03.1961 இல் பிறந்த
இவரின் பெற்றோர் இராஜாபிள்ளை, அரங்கநாயகி ஆவர்.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் பிறந்த இவரின் முன்னோர் வாழ்விடம் அரியலூர் மாவட்டம்
தென்னூர் (வரதராசன் பேட்டை) ஆகும்.
தந்தையார் அரசு பணியில் இருந்ததால் கள்ளக்குறிச்சி,
சங்கராபுரம், உள்ளிட்ட ஊர்களில் கல்வி கற்க நேர்ந்தது. புகுமுக வகுப்பைப் பொறையாறு
த.பு.மா.லுத்ரன் கல்லூரியில் பயின்றவர். இளம் அறிவியல், முதுநிலை அறிவியல், இளம் முனைவர்ப் பட்டம், முனைவர்ப் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.
இளம் முனைவர்ப் பட்ட ஆய்வில் “சதுப்புநிலக்
காட்டுத் தாவரங்களில் உள்ளமைப்பியல்” என்ற தலைப்பிலும், முனைவர்ப் பட்ட ஆய்வுக்குப் “பிச்சாவரம்
காடுகளில் சுற்றுச்சூழல்” என்ற தலைப்பிலும் ஆய்வுசெய்து பட்டம் பெற்றவர்(1992).
1990 இல் அரசு பள்ளியில் பணியில் இணைந்த
இவர் 1996 முதல் புவனகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து
வருகின்றார். இவர் தாம் பணியாற்றும் பள்ளியில் 200 மூலிகைகள் கொண்ட மூலிகைத்தோட்டம்
ஒன்றை நிறுவிப் பாதுகாத்தார். இவர்தம் உறவினர் திரு. சண்முகசுந்தரம்(IFS) ஐயா அவர்கள்
வனத்துறையில் அதிகாரியாக இருந்தவர். வனத்துறை அறிவுடன் தமிழ்ப்பற்றும் நிறைந்தவர்.
எனவே தமிழில் ஈடுபாடுகொண்டவராக சி.இரா. இளங்கோவனும் இருந்தார். தமிழில் முதுகலைப் பட்டமும்
பெற்றுள்ளார்.
தமிழில் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தமிழ்ச்சொல்லாக்கம்
குறித்த தலைப்பினைத் தேர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்விற்கு இணைந்தவர்.
தமிழில் உள்ள சொற்களை ஆராய்ந்து தமிழ்ச்சொற்கள்
எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் பலவாண்டுகளாகச் சிந்தித்து வருகின்றார். தமிழில்
கூறப்பட்ட இலக்கணங்களைக் கொண்டு, கூறப்படாத இலக்கணங்களை நுண்ணிதின் அறிந்துள்ளார்.
இதனால் கணினியில் நிரல் எழுதித் தமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்று பட்டியலிட்டு
வைத்துள்ளார்.
தமிழ்ச் சொற்களில் இந்த எழுத்தை அடுத்து
இந்த எழுத்தைக் கொண்டுதான் சொற்கள் வரும் என்று கூறி, அதற்கு மீறி வந்தால் அவை தமிழ்ச்சொல்
இல்லை, பிறமொழிச்சொல் என்று அறிவியல் அடிப்படையில் நிறுவ இவர் முயற்சி உதவும்.
மொழி முதலாகும் எழுத்துகள், மொழிக்கு இறுதியாகும்
எழுத்துகளைக் கொண்டும் எந்த எந்த எழுத்துகளை அடுத்து எந்த எழுத்துகள் வரும், எந்த எந்த
எழுத்துகள் வராது என்றும் துல்லியமாகக் கணித்து வைத்துள்ளார்.
பண்டைய இலக்கண நூல் வல்லார் வகுத்த இலக்கண
உண்மைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் கணினி அடிப்படையில் இவர் ஆய்வு உள்ளது. அதுபோல் சங்க
இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை உள்ள நூல்களில் இடம்பெற்றுள்ள சொற்களை அகரவரிசைப்படுத்தவும்,
சொல் பயன்பாடுகள் எத்தனை இடம்பெற்றுள்ளன என்று அறியவும் இவரின் தமிழாய்வுப்பணிகள் உதவும்.
கணினி நிரல் கொண்டு சற்றொப்ப பத்து இலட்சம்
சொற்களை உருவாக்கி அடைவுப்படுத்தி வைத்துள்ளார். இவரின் நிரலில் மரபு இலக்கணத்திற்கு
உட்பட்டுக் கணினி உருவாக்கி வைத்துள்ள புதிய சொற்களைக் கலைச்சொல் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ள
வழி ஏற்பட்டுள்ளது.
கலைச்சொல் உருவாக்கத்தில் இனி சிந்தித்து
மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. கணினி உருவாக்கித் தந்துள்ள மரபுக்கு உட்பட்ட,
பயன்பாட்டில் இல்லாத சொற்களை நாம் பயன்படுத்த தாவரவியல் அறிஞர் சி.இரா. இளங்கோவனின் பணி
பயன்படும். தொடர்ந்து தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களுக்குத் தனித்தனிச் சொல்லடைவுகளை
உருவாக்கித் தர வேண்டும் என்ற ஒரு அன்புவேண்டுகோளை இவரிடம் பணிவுடன் வைக்கின்றேன்.
முழுமைப்படுத்தப்பட்ட சி.இரா.இளங்கோவன் அட்டவணை(தமிழி எழுத்துகள்)
கல்வெட்டுத் துறையில் ஈடுபாடுகொண்ட சி.இரா.
இளங்கோவன் அவர்கள் கி.பி. முதல் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தமிழி எழுத்துகளைக் கொண்டு
நண்பர்களுக்கு மடல் எழுதுவது, நாட்குறிப்பேடு எழுதுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கராத்தே என்று அழைக்கப்படும் கைச்சண்டையில் கறுப்புப் பட்டை வாங்கியவர். இசைக்குக்
குறிப்பு வரைவதுபோல் ஒருவரின் உடலசைவுக்குக் குறிப்பு வரையும் பேராற்றல் பெற்றவர்.
போக்குவரவுப்படிக்கும், மதிப்பூதியத்துக்கும்
“மடிதற்றுத் தான்முந்துறும்” பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள் எதிர்பார்ப்பின்றி உழைக்கும்
இந்தப் பள்ளி ஆசிரியரிடம் சென்று தமிழுக்குப்
பயன்படும் ஆய்வு நெறிமுறைகளைக் கற்க ஆற்றுப்படுத்துகின்றேன்.
2 கருத்துகள்:
இரா.இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி...
இரா.இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி...
கருத்துரையிடுக