நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 17 செப்டம்பர், 2022

புலவர் செம்மங்குடி துரையரசன்…

 

புலவர் செம்மங்குடி துரையரசன் 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்த நேரம்திருப்பனந்தாள் மாரியம்மன்கோவில் தெருவில் வாழ்ந்த புலவர் கனக. ஞானசம்பந்தம் அவர்கள் அடிக்கடி ஒலித்து மகிழும் பெயர் இந்த செம்மங்குடி துரையரசன். 

செம்மங்குடி என்பது குடந்தைக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். இந்த ஊரில்தான் “பழந்தமிழ் இசை” உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களை எழுதிய பேரறிஞர் கு. கோதண்டபாணி பிள்ளை பிறந்தவர். முடிகொண்டான் ஆற்றால் வளங்கொழிக்கும் கவின்மிகு ஊராக இந்தச் செம்மங்குடி உள்ளது. இந்த ஊரில் பிறந்து, பணியின் பொருட்டுத் திருவள்ளூரில் வாழ்ந்துவரும் செம்மங்குடி துரையரசனாரைச் சிலவாண்டுகளுக்கு முன் திருவள்ளூர் பள்ளியொன்றில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாராமல் அமைந்தது. நீண்ட நாழிகை உரையாடி உள்ளம் பரிமாறினோம். அவர்தம் தமிழ்ப்பணிகளை அறிந்து வியப்புற்றேன். செம்மங்குடியாரின் தமிழ்ப்பணிகளை எழுதி மகிழ்வதற்குரிய ஓய்வும் நேரமும் கிடைக்காமல் இருந்தன. அண்மையில் செம்மங்குடியார் விடுத்த அரிய இசைத்தமிழ்ப் பனுவலான  இரண்டாம் தமிழ் என்னும் நூலைக் கண்ணுற்றதும் புலவர் பெருமானின் புகழ் மிக்க வாழ்க்கையை அன்பர்களின் பார்வைக்கு முன்வைப்பதை நோக்காகக் கொண்டு சில குறிப்புகளை எழுதுவதில் மகிழ்கின்றேன். 

புலவர் செம்மங்குடி துரையரசனார் அவர்கள் 20.10.1947 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர்: சா. சிதம்பரம், வேம்பம்மாள் ஆவர். பிறந்த ஊரான செம்மங்குடியில் தொடக்கக் கல்வியையும் நாச்சியார்கோவிலில் உயர்நிலைக் கல்வியையும் கற்ற செம்மங்குடியார் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் 1968 முதல் 1972 வரை புலவர் படிப்பினைப் படித்துமுடித்தவர். 1972-73 ஆம் ஆண்டுகளில் குமாரபாளையம் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். 1973 ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 2005 இல் ஓய்வுபெற்றவர். 

புலவர் செம்மங்குடி துரையரசனார் 1975 இல் அறிஞர் கோதண்டபாணி பிள்ளை அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர். இவர்தம் துணைவியார் பெயர் மங்கலம் என்பதாகும். இவரும் புலவர் படிப்பினைப் படித்து, திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களின் இல்லறப் பயனாக ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் கிடைத்தனர். அனைவரும் படித்து நன்னிலையில் உள்ளனர். 

திருவள்ளூரில் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ்ப்பணியாற்றி வரும் செம்மங்குடி துரையரசன் அவர்கள் மிகச் சிறந்த கவிதையாற்றல் உடையவர். கருணாகரத் தொண்டைமானின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து காப்பியமாகப் பாடிய பெருமை புலவர் துரையரசனார்க்கு உண்டு. இவர்தம் ஊர்ப்பகுதியே கலிங்கத்துப் பரணியில் போற்றப்படும் கருணாகரத் தொண்டாமான் பிறந்து வாழ்ந்த ஊர்ப்பகுதி என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பித்ததுடன் தம் பெயருக்குப் பின் தொண்டைமான் என்பதை அமைத்து, செம்மங்குடி துரையரசத் தொண்டைமான் என்று அழைக்கப்படுபவர். கருணாகரத் தொண்டைமான் குறித்த ஆய்வில் முன்னிற்பவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தன்முன்னேற்ற நூல்களை எழுதி, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எழுச்சியூட்டி வருபவர். அறிஞர் கோதண்டபாணியாரின் "தமிழிசை தந்த தனிப்பெரும் வளம்" உள்ளிட்ட நூல்கள் சிலவற்றைப் பின்னாளில் பதிப்பித்துத் தமிழுலகுக்கு வழங்கிய பெருமைக்குரியவர். 

செம்மங்குடியாரின் இரண்டாம் தமிழ் என்பது தமிழிசைப் பாடல்கள் 144 - ஐக் கொண்டதாக வெளிவந்துள்ளது. இன்னும் நூறு இசைப்பாடல்களை எழுதித் தொகுத்து, எதிர்வரும் பொழுதுகளில் வெளியிட அணியமாக உள்ளார். பழந்தமிழ் இசை தந்த கோதண்டபாணியார் மரபில் வந்தவர் என்பதை இம்முயற்சி நமக்குக் காட்டுகின்றது.

பணிபுரியும் காலத்திலேயே பயனில்லாமல் ஊதியம்பெறும் பல ஊழியர்களைப் பார்த்துச் சலித்த எனக்கு ஓய்வுபெற்ற பிறகும் ஆராய்ச்சியிலும், படைப்புப் பணியிலும் தொய்வின்றி இயங்கும் செம்மங்குடியாரைப் பார்க்கும்பொழுது ஊக்கமும் மகிழ்வும் ஊற்றெடுக்கின்றன. 

வரலாற்று அறிவும் தேடலும் கொண்ட செம்மங்குடியார்க்கு உரிய ஏற்பளிப்போ, மதிப்போ தமிழுலகில் அமையாமல் போனமை தமிழின் போகூழ் என்றே குறிக்க வேண்டும். இவர்களைப் போலும் நல்லாசிரியர்களையும் படைப்பாளிகளையும் ஆய்வாளர்களையும் தமிழுலகம் போற்றும் நாளே தமிழுக்கு ஆக்கமாக அமையும் நாள் என்று உறுதியாகக் குறிப்பிடலாம். 

இவர்தம் பெருமைகளையும் பாப்புனையும் ஆற்றலையும் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவுநர் இரா. இளங்குமரனார், எழுத்தாளர் தகடூரான், முனைவர் அ. ஆறுமுகம் உள்ளிட்ட அறிஞர்கள் சிறப்பாக எழுதி ஊக்கப்படுத்தியுள்ளனர். கவியரங்குகளில் தலைமையேற்று பார்வையாளர்கள் விரும்பும் வகையில் சுவைபடப் பாடுவதில் செம்மங்குடியார் வல்லவர். இத்துறையில் இவர் பணி இன்றும் தொடர்கின்றது. 

செம்மங்குடி துரையரசன் தமிழ்ச்சுவடி என்னும் இருதிங்கள் இதழின் ஆசிரியராக இருந்து இதழினைத் தொடர்ந்து நடத்திவருகின்றார்.  தமிழ்நாடு சிற்றிதழ்க் கூட்டமைப்பு, தமிழ் எழுத்தாளர் சங்கம், சமூக நலப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அருந்தமிழ்ப் பணிகளைச் செய்துவருகின்றார். 

புலவர் செம்மங்குடி துரையரசனின் தமிழ்க்கொடைகள் சில: 

 1. வெற்றிக்கு வழிகள்
 2. நீங்கள் இனி வெற்றியாளர்
 3. கொஞ்சும் கிளியே கொஞ்சம் பேசு
 4. மழலை மொட்டுக்கள்
 5. குழந்தைக் கொண்டாட்டம்
 6. சித்திரப்பூக்கள்
 7. பரிசு கிடைத்தது
 8. செம்மங்குடி துரையரசனின் சிறுகதைகள்
 9. ஞானத்தேர்
 10. இளைய பல்லவன் கருணாகரத் தொண்டைமான்
 11. மேடையில் பேசுவது எப்படி?
 12. பவளச்சூரியன்
 13. தமிழ் ஒளி
 14. சிலை எழுபது
 15. அமுதக் குடம்
 16. மாணவர்களுக்கு மணியான கதைகள் 
 17. இரண்டாம் தமிழ்

உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள புலவர் துரையரசன் பல்வேறு நூல்களைப் பதிப்பித்துள்ளார். 


வியாழன், 15 செப்டம்பர், 2022

துன் ச. சாமிவேலு அவர்களுக்குப் புகழ்வணக்கம்!

  

ப.சுந்தரேசனார் ஆவணப்படத்தை வெளியிடும் துன். ச.சாமிவேலுவும் அதனைப் பெறும் டத்தோ சூ. பிரகதீஷ்குமார் அவர்களும். அருகில் தருண்விஜய் எம்.பி. டத்தோ குமரன் ஐயா அவர்கள்.

மலேசியத் திருநாட்டில் தமிழர்களின் அடையாளமாக விளங்கிய துன் . சாமிவேலு அவர்கள் இன்று (15.09.2022) இல் இயற்கை எய்திய செய்தியை அன்பர்கள் வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் அறிந்து பெருங்கவலையுற்றேன். 2014 திசம்பர் 28 இல் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படத்தை மலேசியாவில் நாங்கள் வெளியிட்டபொழுது தலைமை தாங்கி, அதனை வெளியிட்ட பெருமை துன். ச. சாமிவேலு ஐயா அவர்களுக்கு உண்டு. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்குப் பெரும் உதவிபுரிந்த டத்தோ சூ. பிரகதீஷ்குமார், பேராசிரியர் மன்னர் மன்னன் ஆகியோரின் உதவியை என்றும் நினைவுகூர்வேன். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துன். ச. சாமிவேலு ஐயா அவர்களிடம் ப.சு. ஆவணப்பட ஒளிவட்டுகள் உலகம் முழுவதும் செல்வதற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, துன். சாமிவேலு ஐயா அவர்கள் ஆவன செய்தார்கள்.

உலகத் தொல்காப்பிய மன்றம் மலேசியக் கிளை தொடங்கியபொழுது(2017) தம் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் நிகழ்வுக்கு வருவதற்கு முன்வந்தார்கள். ஐயா அவர்கள் மாடிப்படியில் ஏறி வருவதில் சிக்கல் உள்ளதை எடுத்துச் சொல்லி, அடுத்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்க எண்ணியிருந்தோம். 

தமிழ்ப்பற்றும், கொடையுள்ளமும் வாய்த்த துன். ச. சாமிவேலு ஐயாவின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத் தோழர்கள், மலேசியத் தமிழர்கள் யாவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

துன். ச. சாமிவேலு அவர்களிடம் வாழ்த்து பெறும் மு.இளங்கோவன்

துன். ச. சாமிவேலு அவர்கள் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் பெ. இராசேந்திரன் அவர்களிடம் ப.சு. ஆவணப்பட ஒளிவட்டினை அளித்தல்.