கலவை ஆதிபராசக்தி
அறிவியல் கல்லூரியில் யான் தமிழ்த்துறையில் பணியாற்றியபொழுது (1999-2005) ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். எங்கள் நிர்வாகத்தின் இன்னொரு நிறுவனமான ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தும் பணியும் எனக்குத் தரப்பட்டிருந்தது. அங்குப் பயின்ற
அறிவார்வம் நிறைந்த பலநூறு மாணவர்கள் உயர்கல்வி பெற்று இன்று உலகின் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
என்னுடன் நல்ல நட்பிலும் உள்ளனர். அத்தகு மாணவர்களுள் ஒருவர் சி.இளையபாலன் ஆவார்.
ஆதிபராசக்தி
வேளாண்மைக் கல்லூரியில் பயின்ற சி. இளையபாலன் ஆத்தூர்க்காரர். உழவர்குடியில் தோன்றியவர்.
சிற்றூர்ப்புற மாணவராக என் முன் நின்ற அவர் படிப்பில் நல்ல ஆர்வம் கொண்டவர். அன்பு
உருவான அவர், பட்டப்படிப்பை அங்குச் சிறப்பாக நிறைவுசெய்ததுடன், உயர் படிப்புகளையும்
முடித்து, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, பட்டம் பெற்றுள்ளார். தனியார் கல்லூரி ஒன்றில்
பேராசிரியராகப் பணிபுரிந்தவாறு, வேளாண்மை அறிஞராகவும் விளங்கிவருகின்றார். வேளாண்மைப்
புலத்தின் பன்முகத் துறைகளிலும் ஆராய்ச்சி செய்து உலகப் புகழ்பெற்றுள்ளார். வாழை ஆராய்ச்சியில்
இவருக்குத் தனித்துவமான பேரறிவு உண்டு. அண்மையில் உலக அளவில் இவருக்கு “மிகச் சிறந்த
ஆசிரியர்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
சிற்றூரில் வேளாண்மை ஆய்வுகளில் ஆர்வமுடன் செயலாற்றிக்கொண்டிருந்த இவரின் அறிவு தமிழகத்து உழவர்களுக்கும், வேளாண்மை அறிஞர்களுக்கும் தெரிதல் வேண்டி, காட்சி ஊடகங்களில் பங்கேற்குமாறு சில மாதங்களுக்கு முன் கேட்டுக்கொண்டேன். தக்க நேரம் பார்த்து, காத்திருந்த இவர்தம் செவ்வியை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. இதற்காக மக்கள் தொலைக்காட்சியின் படப்பிடிப்புக் குழுவினர் இவர்தம் ஊருக்குச் சென்று, இவர்தம் வேளாண்மைப் பண்ணையையும், ஆய்வு முயற்சிகளையும் படப்பிடிப்பு நடத்தி, நாளை ஒளிபரப்ப உள்ளனர். முனைவர் சி. இளையபாலனின் நேர்காணலை வேளாண்மையிலும் கல்வியிலும் ஆர்வம்கொண்ட அன்பர்கள் மக்கள் தொலைக்காட்சி வழியாகவும், இணையம் வழியாகவும் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க இயலும்.
இளம்
மாணவராக என் கண்முன் தெரிந்த தம்பி முனைவர் சி. இளையபாலன் தம் ஆராய்ச்சியால் தமிழ்
மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று விரும்பி, என் நெஞ்சார்ந்த
வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழ்
மக்களின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வேளாண்மை உள்ளிட்ட மரபுசார்ந்த நிகழ்வுகளை
ஒளிபரப்புவதில் தனக்கு நிகரின்றிப் பாடாற்றும் மக்கள் தொலைக்காட்சி முனைவர் சி. இளையபாலன்
போன்ற ஆய்வறிஞர்களை உலகுக்கு அறிமுகம் செய்யும் உயர்ந்த செயலைப் போற்றி என் நெஞ்சார்ந்த
நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மக்கள் தொலைக்காட்சி
இணைய முகவரி: https://makkal.tv/
நாள்: 30.12.2020 நேரம்: மாலை: 6.30 மணி