நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 7 மார்ச், 2013

முப்பதுவெட்டி கோ.வெங்கடாசலம்



முப்பதுவெட்டி கோ.வெங்கடாசலம் அவர்கள்

ஆர்க்காட்டு வாழ்க்கையில் எங்களுடன் இணைந்த நட்பில் முப்பதுவெட்டி கோ.வெங்கடாசலம் ஐயா அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். வள்ளலார் வழியில் தொடர்ந்து இயங்கிவரும் ஐயா அவர்கள் எப்பொழுதும் தேர்வு எழுதப்போகும் மாணவரைப் போல் படிப்பதும் எழுதுவதுமாக இருப்பார். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் படிப்பு, படிப்பு என்று இருப்பவர். மூத்தோர்களைக் கண்டு உரையாடுவதும் இறைநெறிசார்ந்து சிந்திப்பதும் இவர் இயல்பு. கருத்துவேறுபாடுகள் கொண்ட பல நண்பர்கள்தான் ஐயாவுக்கு மிக நெருக்கமான நண்பர்கள். எங்களுக்கு மூத்தோராக இருந்து நெறிப்படுத்திவரும் பெருமகனார்.

ஆர்க்காட்டில் வாழ்ந்தபொழுது கிழமைக்கு ஒருமுறையாவது சந்தித்துவிடுவோம். அவர்கள் நம் இல்லம் வருவார்கள். அல்லது நான் அவர்களின் முப்பதுவெட்டி இல்லம் செல்வேன். அப்பொழுது ஐயாவின் துணைவியார் மணி அம்மா அவர்கள் இன்பண்டமும், தின்பண்டமுமாக வழங்கி இனிதாக விருந்தோம்புவார்.

முப்பந்தொட்டி என்ற ஊர்ப்பெயர் பின்னாளில் முப்பதுவெட்டி ஆனது. முப்பந்தொட்டி உலா என்று ஓர் உலா நூல் வெளிவந்துள்ளது. பாலாற்றங்கரையின் பண்ணைகளும் வயல்களுமான வளமான ஊர். இன்று பாலாறுபோல் வளமற்று உள்ளது. தொடர்ந்து எழுதுவதாலும் படிப்பதாலும் இன்றும் ஐயா அவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவார். தாமே வண்டியை எடுத்துக்கொண்டு அயலூர்களுக்குச் சென்று நண்பர்களைக் கண்டு வருவார்.

என் திருமணத்திற்குச் செயங்கொண்டத்திற்குச் சலிப்பு இல்லாமல் முதல்நாளே வந்து மகிழ்வூட்டியவர். எம் நூலாக்கப்பணிகளுக்கு மெய்ப்பு நோக்கி உதவுவார். நான் எங்கேனும் ஏமாற்றம் அடைந்து, தோல்வியில் துவண்டுவரும்பொழுது நண்பராக இருந்து ஆறுதல்மொழி பகர்வார். உலகப் போக்கு உரைப்பார். இப்பொழுதெல்லாம் செல்பேசிகளில் எங்கள் உறவு உயிர்வாழ்கின்றது.

கோ.வெங்கடாசலம் அவர்கள் சிறுசிறு நூல்களைத் தமிழில் எழுதி மக்களுக்குக் கிடைக்கச் செய்துவருகின்றார். அண்மையில் தமிழ் இலக்கியக் கைவிளக்கு என்று ஒரு நூலையும், கற்பகச்சோலை என்று ஒரு நூலையும் பெரிய அளவில் தொகுத்து வரைந்து தமிழுக்கு வழங்கியுள்ளார். தமிழ்சார்ந்த பொதுஅறிவு வினாக்களுக்கு விளக்கம் தரும் அரிய நூல்களாகும் இவை. கோ.வெங்கடாசலம் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

கோ.வெங்கடாசலம் அவர்கள் காஞ்சிபுரத்தில் 13.05.1941 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் கோபால்- விசாலாட்சி. வளர்ந்து, வாழ்ந்த ஊர் முப்பதுவெட்டி (ஆர்க்காடு அருகில்). தொடக்கக் கல்வியை முப்பதுவெட்டியிலும், உயர்நிலைக்கல்வியை ஆர்க்காட்டிலும் நிறைவுசெய்தவர். பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிறகு ஆசிரியர் பயிற்சிபெற்று ஆசிரியராகவும், இடைநிலைப் பள்ளித் தலைமையாசிரியராகவும் விளங்கியவர். 02.08.1960 முதல் 30.06.1998 வரை ஆசிரியர் பாணியாற்றியவர். 21.02.1961 இல் திருமதி மணி அம்மாள் அவர்களை இல்லறத் துணைவியாக ஏற்று இல்லறப்பயனாக ஆண்மக்கள் இருவரைப் பெற்றனர். ஆர்க்காட்டில் அமைதிவாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள.

கோ.வெங்கடாசலம்அவர்களின்தமிழ்க்கொடைகள்:

1.   சிவபுராணம் உரையுடன்
2.   ஆவுடையார்கோயில் அற்புதங்கள்
3.   அருட்பா அமுதத்துளிகள்
4.   சுமைதாங்கி சுவாமிகள் ஞானவாழ்க்கை
5.   அருள்மலர்க்கொத்து அறுபது
6.   ண்மைக்கால அற்புதங்கள்
7.   பொய்கையில் ஒரு ஞானமலர்
8.   அருள்நெறித்திறவுகோல்
9.   மனிதநேய மருத்துவர்
10. மகான்கள் மறைவதில்லை
11. தமிழ் இலக்கியக் கைவிளக்கு
12. சன்மார்க்கத் தர்ப்பணம்
13. மாமல்லையில் ஒரு மகான்
14. கற்பகச் சோலை



கருத்துகள் இல்லை: