நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 மார்ச், 2014

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா

 சிறப்பிக்கப்பட்ட மூத்த தமிழறிஞர்கள்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழன்பர்கள் ஒன்றிணைந்து கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் தொடக்க விழாவைக் குருகாவலப்பர் கோயில் மீரா மகாலில் 29.03. 2014 காரி(சனி)க்கிழமை மாலை 5 மணிக்கு நடத்தினர்.

கங்கைகொண்ட சோழபுரம் திரு. இரா. சுகுமார், திரு. சு. அருண்குமார், திரு. மு. சனார்த்தனன்,  திரு. ப. மணிகண்டன் குழுவினரின் நாகசுர இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பொறியாளர் குந்தவை கோமகன், மருத்துவர் பூங்கோதை பொற்கோ உள்ளிட்டோர் குற்று விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், முனைவர் பொற்கோ அவர்கள் தலைமையில் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பழமலை கிருட்டினமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். முனைவர் மு.இளங்கோவன் தமிழ்ச்சங்கத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

மூத்த தமிழறிஞர்கள் புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், முனைவர் அ. ஆறுமுகம், புலவர் கு. கணேசமூர்த்தி, புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, புலவர் மு. செல்வராசு, புலவர் சுவை. மருதவாணன், புலவர் மா. திருநாவுக்கரசு, திரு. பூவை செயராமன், கூத்தங்குடி அரங்கராசனார், கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ. குலோத்துங்கன், திரு. சு. இராசகோபால், திரு. பன்னீர்ச்செல்வன் ஆகியோரின் தமிழ்ப்பணியைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியும் பொன்னாடை அணிவித்தும், நூல்கள் பரிசளித்தும் சிறப்பிக்கப்பட்டனர். மேலும் மேல்நிலைக் கல்வியில் தமிழ்ப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியர்கள் சான்றிதழ் வழங்கி, ஆடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டனர்.

கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் தொடர்ந்து தமிழிசைப் பணியாற்றிவரும் திரு. இரா. சுகுமார், திரு. சு. அருண்குமார், திரு. மு. சனார்த்தனன்,  திரு. ப. மணிகண்டன் குழுவினருக்குப் பணப்பரிசிலும், பட்டாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டனர். குவைத்துப் பொங்கு தமிழ் மன்ற நிறுவுநர் தமிழ்நாடன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிஞர்களைச் சிறப்பித்தார்.

   நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் பணியாற்றும் திரு. பூ. சரவணன் அவர்கள், திரு. பொதிகைத் தென்னவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். செல்வி கல்பனாதேவியின் தமிழிசை நிகழ்ச்சியும், திருவுடையான் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன. திரு. கா. செந்தில் நன்றியுரையாற்றினார்.

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

1. தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட தமிழ் வளர்ச்சி நிறுவனங்களின் வழியாகப் பல்வேறு தமிழ் வளர்ச்சிப்பணிகளைச் செய்துவரும் தமிழக அரசைக் கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் பாராட்டுகின்றது.

2.  மாமன்னன் இராசேந்திர சோழன் முடிசூடிய ஆயிரமாவது ஆண்டு இப்பொழுது நடைபெறுகின்றது. இந்த ஆண்டில் மாமன்னன் இராசேந்திரனின் ஆடித்திருவாதிரை பிறந்தநாளைத் தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடும்படி கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

3. செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் மாமன்னன் இராசேந்திரனுக்குச் சிலை நிறுவியும் தோரணவாயில் நிறுவியும் மக்களுக்கு இவ்வூர்ப் பெருமையை நினைவூட்டும்படிக் கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றது.

4. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்புற்று விளங்கிய செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர், கம்பர் போன்ற புலவர்களின் பெயரில் விருதுகளை வழங்கித் தமிழறிஞர்களைப் பாராட்டும்படித் தமிழக அரசைக் கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

5. மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்து வாழும் இந்தப் பகுதியில் மாமன்னன் இராசேந்திர சோழன் பெயரில் ஒரு அரசு கலைக்கல்லூரியும், பெண்கள் படிப்பதற்குரிய வகையில் ஒரு பல்தொழில் நுட்பக் கல்லூரியும் ( polytechnic college ) தொடங்கி நடத்தும்படித் தமிழக அரசைக் கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

6.   பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரியை நவீனத் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆழமாக்கியும் கரைகளை உயர்த்தியும் நீர்த்தேக்கம் ஒன்றை ஏற்படுத்திக் கங்கைகொண்ட சோழபுரம் சார்ந்த மக்களின் வேளாண்மைத் தேவையை நிறைவு செய்யும்படி கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றது.


தமிழிசையால் வரவேற்பு


புலவர் ஆலவாய் சொக்கலிங்கம் சிறப்பிக்கப்படுதல்

முதுபெரும் பேராசிரியர் அ.ஆறுமுகம் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

புலவர் கு. கணேசமூர்த்தி ஐயா சிறப்பிக்கப்படுதல்

புலவர் குஞ்சிதபாதன் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

புலவர் சுவை.மருதவாணன் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

திருக்குறள் புலவர் மு. செல்வராசனார் சிறப்பிக்கப்படுதல்

 சு.இராசகோபால் ஐயா சிறப்பிக்கப்படுதல்

பூவை. செயராமனார் சிறப்பிக்கப்படுதல்

புலவர் கூத்தங்குடி அரங்கராசனார் சிறப்பிக்கப்படுதல்

கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் சிறப்பிக்கப்படுதல்

புலவர் மா. திருநாவுக்கரசு சிறப்பிக்கப்படுதல்
 பேராசிரியர் த. பழமலை உள்ளிட்டோர்

வெள்ளி, 28 மார்ச், 2014

பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி மறைவு


"தொல்காப்பியச் செல்வர்" முனைவர் கு. சுந்தரமூர்த்தி (14.04.1930 - 24.02.2014)

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வரும், தொல்காப்பிய நூலின் பதிப்பாசிரியரும், சைவ சித்தாந்த நூல்களுக்கு அரிய உரை வரைந்தவர்களும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான எங்கள் அன்பிற்குரிய பேராசிரியர் முனைவர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் 24. 02. 2014 திங்கள் கிழமை உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியைத் தமிழுலகிற்குத் தெரிவிப்பதில் ஆழ்ந்த வருத்தம்கொள்கின்றேன்.

பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 30. 03. 2014 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு, மயிலாடுதுறை மகாதானத் தெரு, வி.ஆர். எசு. மகாலில் நடைபெற உள்ளது.

பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

கு.சுந்தரமூர்த்தி அவர்கள் சிவநெறியில் நின்றொழுகும் குடும்பத்தில் 14.04.1930 இல் தோன்றியவர். இவர்தம் பெற்றோர் குப்புசாமி, நாகரத்தினம் அம்மாள். பிறந்த ஊர் தொட்டியம் அருகில் உள்ள தோளூர்ப்பட்டி. எட்டாம் வகுப்பு வரை பிறந்த ஊரில்  கல்வி பயின்றவர். தந்தையார் ஊர்நலப் பணியில்(கர்ணம்) இருந்ததால் பிற ஊர்களில் வாழ நேர்ந்தது. பின் நுழைவுத்தேர்வு எழுதித் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்றவர்(1945-1950). அங்குப் பயின்று தேர்ச்சி முடிவு வந்த உடன் அக்கல்லூரியிலேயே தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். பேராசிரியராகவும், முதல்வராகவும் அக்கல்லூரியிலேயே தம் பணிக்காலம் வரை( 26.06.1950-31.05.1988)தொடர்ந்து பணிசெய்தார்(மீள் விடுப்பில்ஓராண்டு அண்ணாமலைப் பல்கலையில் பணி). மாற்றச்சான்று வாங்காமலே பணிசெய்த பெருமைக்குரியவர்.

 .பேராசிரியர்கள் கா.ம.வேங்கடராமையா, தி.வே.கோபாலையர், நகராமலை இராமலிங்கம் பிள்ளை, ச. தண்டபாணிதேசிகர் முதலானவர்களிடம் தமிழ்பயின்ற பெருமைக்கு உரியவர். இவர்களுள் இராமலிங்கம் பிள்ளையும், கோபாலையரும் கு.சுந்தரமூர்த்தியின் ஆழ்ந்த படிப்புக்குக் காரணகர்த்தர்களாக விளங்கினர்.

படிக்கும் காலத்தில் படிப்பில் முதல் மாணவராக விளங்கியதால் காசித்திருமடத்தின் தலைவர் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். அங்குப்பணி செய்த காலத்தும் திருமடத்தின் கல்விப்பணிகளில் தாளாளர் முதலான பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச்செய்தார். பணி நிறைவு பெற்றதும் இவர்தம் தமிழறிவும் சமய அறிவும் இவ்வுலகிற்குத் தேவை என்பதை உணர்ந்த தருமையாதீன அடிகளார் அவர்கள் இவர்களை அனைத்துலகச் சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியமர்த்தினார். மலேசியா,இலங்கை,இலண்டன் முதலான அயலகத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றியவர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றுவதன் வாயிலாகத் தமிழ் இலக்கியங்களையும் சமய நூல்களையும் மக்கள் மனத்தில் பதியவைப்பதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்து வந்தவர்.

கு.சுந்தரமூர்த்தி அவர்கள் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார் அவற்றுள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான், முதுகலை.முனைவர் பட்டங்களும், மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் பண்டிதம்(1954), சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் சைவப் புலவர்பட்டங்களும்(1968) குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் பணி

திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் படித்ததும் அங்குப் பேராசிரியராகப் பணி புரிந்ததும் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்குப் பல்வேறு பெருமைகள் உருவாகக் காரணங்களாயின. திருமடத்தின் சார்பான நிறுவனமானதால் முதலில் தமிழ் இலக்கணஇலக்கியங்களில்சமயநூல்களில் நல்ல பயிற்சியும்புலமையும் ஏற்பட்டது. தமிழகத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் அங்குப்பணி செய்ததால் பலரிடம்பயிற்சி பெறமுடிந்தது. சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலானவற்றில் ஆளவை உறுப்பினராகவும்கல்விக்குழு உறுப்பினராகவும் பலமுறை பணிபுரிந்துள்ளார். செந்தமிழ்ச்செல்வி, குமரகுருபரர் முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணிபுரிந்தவர்.

இவர் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம் முதலான காப்பியங்களையும் மாணவர்களின் உள்ளம் கொள்ளும்படி பாடமாக நடத்துபவர். சைவசித்தாந்த சாத்திர நூல்களை எளிமையாக யாவருக்கும் விளங்கும்படி நடத்தியதால் சாத்திரநூல்களைத் தமிழகத்தில் படிப்பதில் ஒரு மறுமலரச்சி தோன்றியது எனலாம்.முனைவர் ம.வெ.செயராமன், பொற்கோ, ம.வே.பசுபதி முதலானவர்கள் இவர்தம் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் பதிப்புப்பணிகள்

பதிப்புப்பணிகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் உ.வே.சா.அவர்கள். அவர்கள் காலத்தில் நூல்களை வெளிப்படுத்துவது போற்றுதலுக்கு உரிய பணியாக இருந்தது.அவர்கள் காலத்திற்குப் பிறகு பழந்தமிழ் நூல்களின் விளங்காத பகுதிக்கும் உரைகளுக்கும் விளக்கம் தரும் பதிப்புகளும்,உரைவிளக்கம் தரும் பதிப்புகளும் தேவையாக இருந்தது. அவ்வகையில் தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப் பியத்தின் அனைத்து உரைகளையும் ஆராய்ச்சி முன்னுரையுடனும் விளக்கவுரையுடனும் பதிப்பிக்கும் முயற்சியில் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் ஈடுபட்டார். சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இப்பணியில் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்குப் பெருந்துணை செய்தன.சொந்தப் பதிப்பாகவும் பல நூல்களை வெளியிட்டார்.

தொல்காப்பியப் பதிப்புகள்

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் வழியாகத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையை விளக்கவுரையுடன் 1962 இல் பதிப்பித்தார்.தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையை விளக்கவுரையுடன்1963 இல் பதிப்பித்தார்.தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரையை விளக்கவுரையுடன்1964 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை விளக்கவுரையுடன் சொந்தப்பதிப்பாக 1965 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் செய்யுளியலை நச்சினார்க்கினியர் உரையுடனும் விளக்கவுரையுடனும் 1965 இல் கழகம் வழிப்பதிப்பித்தார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரையை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழி 1979 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழி 1981 இல் வெளியிட்டார்..தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சர்,பேராசிரியர் உரைகளை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழி 1985 இல் வெளியிட்டார்.

மேலும் தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கண நூலைத் தம் சொந்தப்பதிப்பாக 1967 இல் வெளியிட்டார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைக் கழகம் வழி 1972 இல் வெளியிட்டார். மேற்கண்ட இலக்கண நூல்களைக் கற்கப் புகும் ஆர்வலர்கள் யாரும் எந்த வகை இடையூறும் இல்லாமல் இவ்விலக்கண நூல்களைப் பயிலும்படி இவர் வரைந்துள்ள ஒப்புயர்வற்ற விளக்கவுரைகளும்ஆராய்ச்சி முன்னுரையும் இவரின் ஆழ்ந்த கல்விப் பரப்பையும்நுண்ணிய ஆராய்ச்சித்திறனையும் காட்டும். மூலநூலாசிரியரின் கருத்துகளை எடுத்துரைத்தும்உரையாசிரியர்களின் அறிவுச்செழுமையை விளக்கியும் நூலின் மீதும்உரையாசிரியர்கள் மீதும் மதிப்பு உண்டாகும் படி இவர் எழுதிச் செல்வார்.இவர்தம் உரைகள் வழியாகப் பண்டைக் காலப் பதிப்புகள் பற்றிய பல குறிப்புகளும் வரலாறும் நமக்குப் புலனாகின்றன.

தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணர் உரைபற்றிய முன்னுரையில் பேராசிரியர் பின்வரும் அரிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

'எழுத்ததிகார இளம்பூரணர் உரையை முதன்முதல் பதிப்பித்து உதவியவர்கள் பூவிருந்தவல்லி, திரு.சு. கன்னியப்ப முதலியார் அவர்கள் ஆவர்.அப்பதிப்புத் திரிசிரபுரம் மகாவித்துவான் திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கருள் ஒருவராகிய திரு.சுப்பராயச் செட்டியார் அவர்களால் பரிசோதிக்கப்பெற்று கி.பி.1868 இல் வெளியிடப்பட்டதாகும்.அப்பதிப்பு ஏட்டில் கண்டவாறே பதிப்பிக்கப் பெற்றுள்ளது.உரை பொழிப்புரை யாயுள்ளது. விளக்கவுரை எடுத்துக்காட்டுகள் ஆகிய அனைத்தும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. நூற்பாக்கள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை.இப்பதிப்பை வேறு பல பிரதிகளோடு ஒப்பிட்டுப் பதவுரையாக்கியும், விளக்கம் எடுத்துக்காட்டுக்களைத் தனித்தனியே பிரித்தும் தமது கருத்தையும் ஆங்காங்கு வெளிப்படுத்தியும் இரண்டாவதாகப் பதிப்பித்துதவியவர் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் ஆவர்......' எனத் தம் கலத்திற்கு முன்பு நிகழ்ந்த பதிப்பு முயற்சியை வரலாற்றுப் பதிவாக வழங்குவதில் வல்லவராக விளங்கியவர்.

தொல்காப்பியம் சேனாவரையர் உரையைப் பதிப்பிக்கும் பொழுது அரிய பல வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார் .'...சேனாவரையர் உரை முதன்முதல் திரு.சீனிவாச சடகோபமுதலியார் அவர்களின் வேண்டுகோளின்படி,கோமளபுரம் திரு.இராசகோபால் பிள்ளை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டுத் திரு. பு.கந்தசாமி முதலியார் அவர்களால் 1868 இல் பதிப்பிக்கப்பட்டது.பின்பு யாழ்ப்பாணத்து நல்லூர் திரு.ஆறுமுக நாவலர் அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு திரு.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களால் 1886 இல் பதிப்பிக்கப்பட்டது.பின்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் 1923 இல் பதிப்பிக்கப்படது.அதனையடுத்துப் புன்னாலைக்கட்டுவன் திரு.சி.கணேசையர் அவர்கள் குறிப்புரையுடன் திரு.நா.பொன்னையா அவர்களால் 1938 இல் பதிப்பிக்கப்படது. ...'

இவ்வாறு ஒவ்வொரு நூலையும் பதிப்பிக்கும்பொழுது பல்வேறு பதிப்பு வரலாற்றைப் பதிவு செய்வதுடன் பல நூல்களை ஒப்பிட்டுத் திருத்தமாகத் தம் பதிப்பைப் பதிப்பித்துள்ளார்.பொருள் விளக்கத்துடன் புதிய எடுத்துக்காட்டுகளையும் தந்துள்ளார்.நூற்பாவிலும் உரைகளிலும் கண்டுள்ள பாட வேறுபாடுகளை அடிக்குறிப்பாகத் தருபவர்.ஒவ்வொரு நூற்பாவின் அடியிலும் விளக்கவுரை எழுதிப் படிப்பவருக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் பயன்படும்வண்ணம் செய்துள்ளார்.ஒவ்வொரு இயலின் முகப்பிலும் பொருளமைப்பு என்னும் பெயரில் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள பகுதிகள் தொல்காப்பியம் கற்கப் புகுவார்க்குப் பேருதவியக இருக்கும்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் தமிழ்இலக்கியப்பணிகள்

தமிழின் தலைசிறந்த நூலான திருக்குறளில் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மிகச்சிறந்த ஈடுபாடு உண்டு.அனைத்துத் திருக்குறளையும் பரிமேலழகர் உரையுடன் சொல்லும் ஆற்றல்பெற்றவர். மற்ற உரையாசிரியர்களையும் நன்கு கற்றவர். எனவே திருக்குறளைப் பல்வேறு வகைகளில் பதிப்பித்துள்ளார். அவற்றுள் ம.வெ.செயராமன் அவர்களின் பொருளுதவியால் வெளியிட்ட திருக்குறள் உரைத்திறன் நூல் குறிப்பிடத்தக்கது.1981 இல் வெளிவந்த இந்நூலில் பரிமேலழகரின் உரையை அடியொற்றியும் அவர்தம் விளக்கத்திற்கு விளக்கமாகவும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. பரிமேலழகர் மாறுபடும் இடங்களும் இவ்வுரையில் சிறப்புடன் விளக்கப்பட்டுள்ளன. பிற உரையாசிரியர்களின் உரை வன்மை, மென்மைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி முன்னுரை என்று 44 பக்கங்களில் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் தந்துள்ள விளக்கம் அவரின் நுண்ணிய புலமையையும்,ஆராய்ச்சி வன்மையையும் காட்டும்.இந்நூலின் அமைப்பு குறளும், பரிமேலழகர் உரையும், இவர்தம் விளக்கவுரையுமாக அமைந்துள்ளது.

திருமுருகாற்றுப்படை உரைத்திறன்(ஐவர் உரையுடன்) என்னும் பெயரில் இவர் வரைந்துள்ள உரை திருமுருகாற்றுப்படையைச் சுவைத்துக் கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்குவதாகும்.இரத்தினகிரி அருள்திரு பாலமுருகன் திருக்கோயில் சார்பில் இந்நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோல் நீதிநெறிவிளக்கம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், சீர்காழிக் கோவை,அபிராமி அந்தாதி,கந்தர் கலிவெண்பா,சங்கரமூர்த்திக் கோவை, கந்தர் அனுபூதி, தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, திருமுல்லைவாயில் புராணம், திருவிளையாடற்புராணம் முதலான நூல்களுக்கு உரையும் குறிப்புரையும் எழுதியுள்ளார்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் திருமுறைப் பதிப்புப்பணிகள்

கு.சுந்தரமூர்த்தி அவர்கள் திருமுறைகளில் நல்ல பயிற்சியுடையவர். பலகாலம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்த ஆற்றலுடையவர். திருமுறைகளைப் பல்வேறு நிறுவனங்கள் பல வடிவில் பதிப்பித்தபொழுது திருமுறைகளின் சிறப்பு வெளிப்படும் வண்ணம் ஆற்றல் சான்ற ஆராய்ச்சி முன்னுரைகளையும் விளக்கங்களையும், குறிப்புரைகளையும் எழுதியவர்.சிவகாசி சிவனடியார் அறநெறிக்கழகம் வழியாகச் சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகியோரின் திருமுறைகளை வரலாற்று முறையில் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதுவரை வெளிவந்த பதிப்புகளில் பேராசிரியரின் இப்பதிப்பு அழகிய வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் தத்துவ நூல்களுக்கான உரைப்பங்களிப்பு

தமிழில் சைவ சமயத் தத்துவத்தை விளக்குவன சாத்திர நூல்களாகும். பதினான்கு சாத்திரநூல்கள் உள்ளன. இப் பதினான்கு சாத்திர நூல்களுக்கும் உரை எழுதிய பெருமை கு.சுந்தரமூர்த்தி அவர்களையே சாரும். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்த இவ்வுரை நூல்கள் சமய உலகால் பெரிதும் விரும்பப்படுவன. எளிய முறையில் நடப்பியல் உண்மைகளை எடுத்துக்காட்டித் தமிழ்மரபு மாறாமல் உரைவரையும் பாங்கு இவருக்குக் கை வந்த கலையாக உள்ளது.


பணிவு நிறைந்த மாணவராகவும், பண்பு செறிந்த பேராசிரியராகவும், ஆளுமை நிறைந்த கல்லூரி முதல்வராகவும், மயக்கம் போக்கித் தெளிவு நல்கும் உரையாசிரியராகவும், நூல்களைப் பிழையறப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியராகவும், ,இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள், சாத்திரநூல்கள் இவற்றில் பழுத்த புலமைநலம் சான்ற அறிஞராகவும், கேட்போர் வியக்கும் வகையில் சொற்பொழிவு செய்யும் நாவலராகவும் விளங்கிய கு.சுந்தரமூர்த்தி ஐயா அவர்களை வாழுங்காலத்தில் தமிழுலகு தழுவிக்கொள்ளாமை ஒரு குறையே ஆகும்.

குறிப்பு: வாழ்க்கைக்குறிப்பு என்னால் முன்பு எழுதப்பட்டுத் திண்ணையிலும் வெளியிடப்பட்டது. தேவை கருதி மறுபதிப்பு.

வியாழன், 27 மார்ச், 2014

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளைக் கருத்தரங்கம்


முனைவர் எஸ். பத்மநாபன் உரை


தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் இன்று (27.03.2014) பிற்பகல் 2 மணியளவில் சமூக மாற்றமும் இதழ்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆய்வுக்களஞ்சியம் இதழாசிரியர் முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் வரலாற்று இதழ்கள் என்ற தலைப்பிலும், முனைவர் மு.இளங்கோவன் மின் இதழ்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் ம. திருமலை அவர்களும், பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் முனைவர் க. திலகவதி அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்.

துணைவேந்தர் முனைவர் ம. திருமலை அவர்கள்


பேராசிரியர் க. திலகவதி வரவேற்புரை

செவ்வாய், 25 மார்ச், 2014

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்-தமிழ்த்துறை, இணையம் வளர்த்த தமிழ் - உரையரங்கம்


முனைவர் மு.பாண்டி அவர்கள் வரவேற்புரை

காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் இன்று(24.03.2014) காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை இணையம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் உரையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி அவர்கள் உரையரங்க நோக்கம் குறித்து உரையாற்றினார். மாணவர் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் குருமல்லேசு பிரபு அவர்கள் மாணவர்களுக்குப் பயன்படும் இந்த உரையரங்கு, பயிற்சி குறித்து அறிமுகம் செய்தார். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணையம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உரையும் பயிற்சியும் வழங்கினார்.
பேராசிரியர் குருமல்லேசு பிரபு உரை

உரைகேட்கும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள், முதுகலை மாணவிகள்
உரையரங்கில் பங்கேற்றவர்கள்(குழுப்படம்)

ஞாயிறு, 23 மார்ச், 2014

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா- அழைப்பிதழ்





நாள்: 29.03.2014 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 4 மணி

இடம்: அமரர் கோ. தியாகராசன் அரங்கம், மீரா மகால்,
குருகாவலப்பர் கோயில்,  கங்கைகொண்ட சோழபுரம் (அஞ்சல்).

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் பொற்கோ அவர்கள்
(மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)

வரவேற்புரை: சித்தாந்த ரத்தினம் பழமலை கிருட்டினமூர்த்தி அவர்கள்

நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

குற்று விளக்கேற்றல்: பொறியாளர் குந்தவை கோமகன் அவர்கள்

இசையரங்கு:

திரு. இரா. சுகுமார்
திரு. சு. அருண்குமார்
 திரு. மு. சனார்த்தனன்  
திரு. . மணிகண்டன் குழுவினரின் நாகசுர இன்னிசை

பண்ணிசை:இசைக்கலை சோதிஇரா. கல்பனாதேவி அவர்கள்

தமிழிசைப் பாடல்கள் திரு. . திருவுடையான் அவர்கள்

தமிழ்ச்சங்கப் பெயர்ப்பலகையைத் திறந்துவைத்துத் தமிழறிஞர்களைச் சிறப்பித்தல்

முனைவர் கா. மு. சேகர் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு.

தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களைச் சிறப்பித்தல்
முனைவர் அருள் நடராசன் அவர்கள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு அரசு

வாழ்த்துரை:

முனைவர் வி. முத்து அவர்கள் ( தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)
முனைவர்.கோ.குலோத்துங்கன் அவர்கள்(ஆசிரியர்- கண்ணியம்)
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்
பேராசிரியர் .இராமசாமி அவர்கள்
பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள்
திரைப்பா ஆசிரியர் பா.விஜய் அவர்கள்
பொறியாளர் தமிழ்நாடன் அவர்கள், பொங்குதமிழ் மன்றம், குவைத்து
முனைவர் அரங்க. பாரி அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
திரு. பூ. சரவணன் அவர்கள் ( திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்)
திரு. பொதிகைத் தென்னவன் அவர்கள்

நன்றியுரை: திரு. கா.செந்தில் அவர்கள்

அன்புடன் அழைத்து மகிழும்:

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம்

தமிழ்மாளிகை, கீழைச் சம்போடை, கங்கைகொண்டசோழபுரம் (அஞ்சல்),
உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம், 612 901

தொடர்புக்கு: 94420 29053 / 99439 53653

வெள்ளி, 21 மார்ச், 2014

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும், புதுவைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து புதுச்சேரியில் நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு



       உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.  உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளைப் பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும். தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துள்ளது.

 உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்!  மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் இணையம் குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைய உள்ளனர். இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் மு. அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 

இந்த மாநாடு ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி என்ற மூன்று நிலைகளில் நடைபெறும். உலகின் பல பாகங்களிலிருந்தும் 300 மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாட்கள் குறித்த செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் (http://home.infitt.org/) வெளியிடுவோம்.  மேலதிகச் செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உத்தமத்தின் முன்னாள் செயல் இயக்குநர் மணியம்(சிங்கப்பூர்), புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, முனைவர் மு.இளங்கோவன் இந்தச் செய்திகளைத் தெரிவித்தனர்.

சனி, 8 மார்ச், 2014

தட்டுப்புடைக்கண் வந்தான்…



அண்மையில் எங்கள்  கல்லூரிக்கு உரையாற்ற வந்த முதுபெரும் தமிழ்ப் பேராசிரியர் தெ. முருகசாமி ஐயா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு தொல்காப்பியம் பக்கம் திரும்பியது. அப்பொழுது சேனாவரையரின் உரைச்சிறப்பைப் பேராசிரியர் அவர்கள் நினைவுகூர்ந்தார். சேனாவரையர் குறிப்பிடும்தட்டுப்புடைக்கண் வந்தான்என்னும் தொடர் பற்றி நம் பேராசிரியர் அவர்கள் அரிய விளக்கம் சொன்னார்கள்.

தட்டுப்புடை என்றவுடன் முறத்தைப் பயன்படுத்தித் தட்டிக்கொழிக்கும் செயலே நினைவுக்கு வரும். ஆனால் நம் பேராசிரியர் தட்டுதலுக்கும் புடைத்தலுக்குமான இடம் என்று குறிப்பிட்டார். பழங்காலத்தில் போர்ப் பயிற்சி பெறும் இடம் இது என்றார். இன்று நாம் குறிப்பிடும் GYM போன்ற பயிற்சிக்களம் போன்று இது பண்டைய நாளில் இருந்திருக்கும் என்று பேராசிரியர் நம்பிக்கையுடன் பேசினார்.

தொல்காப்பிய உரையாசிரியரின் சொல்தேர்ச்சிப் புலமையை அறியச் சேனாவரையத்தில் நுழைந்து தேடிப்பார்த்தேன்.

என் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் இந்த இடத்திற்கு என்ன விளக்கம் தருகின்றார் என்று பார்த்தபொழுது தட்டுப்புடை என்பதற்கு நெல்கொழிக்கின்ற இடம்; ஒருவகை விளையாட்டிடமுமாம் என்று எழுதியுள்ளமை தெ. முருகசாமி ஐயாவின் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது.

வினைசெய்யிடம்    -     தட்டுப்புடையுள்  வந்தான், தட்டுப்புடையுள் வலியுண்டு. என்று கல்லாடர் விருத்தியுரை குறிப்பிடும். தட்டுப்புடை என்ற சொல் தமிழகத்தின் பிற பகுதிகளில் அல்லது கேரளத்தில் என்ன பொருளில் வருகின்றது என்பதை அறிந்தோர் அறிவிக்க நன்றியுடன் ஏற்பேன்.

தொல்காப்பிய நூற்பாக்களும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களும் பழந்தமிழகத்தின் பல்வேறு உண்மைகளைத் தாங்கி நிற்கின்றன. தொல்காப்பியர், சொல்லதிகாரம் வேற்றுமையியலில் நூற்பா 71 இல் ஏழாம் வேற்றுமை பற்றி எடுத்துரைக்குமிடத்தில்,

ஏழாகுவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின், நிலத்தின், காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே

என்று குறிப்பிடுவார். (நூற்பாவின் பொருள்: கண் என்பது ஏழாம் வேற்றுமை உருபாகும். அது இடம், நிலம், காலம் ஆகிய பொருள்களை இடமாகக் குறித்து வருகின்றபொழுதே வேற்றுமையாக அமையும். “அனைவகைக் குறிப்புஎன்றமையான் கண் முதலிய உருபுகள் யாண்டு வரினும் அவ்விடமெல்லாம் ஏழாம் வேற்றுமை உருபு என்று கருத வேண்டாம்) இந்த நூற்பா விளக்கத்தில்தான் தட்டுப்புடைக்கண் என்ற தொடர் தட்டுப்படுகின்றது.


வெள்ளி, 7 மார்ச், 2014

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் தொடக்கவிழா



நாள்: 29.03.2014 காரி(சனி)க் கிழமை, நேரம் மாலை 4 மணி


இடம்: மீரா மகால், குருகாவலப்பர்கோயில், 
கங்கைகொண்ட சோழபுரம்(அஞ்சல்), அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு


அனைவரும் வருக! அருந்தமிழைப் பருக!!