காவல்துறை ஆய்வாளரைக் கண்டதும் கள்வர் தலைவன் தம் கையிலிருந்த கத்தியால் அவரை ஓங்கி வெட்டத் தொடங்கினான். தன் உயிர் போனாலும் இவனை விடமாட்டேன் என்று கள்வனைத் தன் வலிமையைக் கூட்டி அந்தக் காவல்துறை ஆய்வாளர், அணைத்துப் பிடித்தார். அக் கள்வனால் ஓடமுடியவில்லை. இருவரும் கட்டிப் புரண்டனர். காவல்துறை ஆய்வாளரின் உடலிலிருந்த வெட்டுக்காயங்களின் வழியாகக் குருதி வடிந்தது. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து, கள்வனைப் பிடித்தனர். மயங்கி விழுந்த காவல்துறை ஆய்வாளரை ஊர்மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
செய்தி காவல்துறையின் தலைமையிடத்துக்குப் பறந்தது. மருத்துவனை வளாகம் முழுவதும் காக்கிச் சீருடை அணிந்த காவலர்கள் சுற்றுக் காவலில் இருந்தனர். சிகிச்சைக்காகப் படுக்கையிலிருந்த நம் காவல்துறை ஆய்வாளரைச் சுற்றி, காவல்துறையின் உயர் அதிகாரிகள் நின்றபடி நிகழ்வை விசாரித்தனர். நிகழ்வை நேரில் கண்டவர்களிடம் புலனாய்வுத்துறை சம்பவம் பற்றிக் கேட்டனர். கண்விழித்துப் பார்த்த காவல்துறை ஆய்வாளர் தம் கைப்பை எங்கே? எங்கே? என்று வினவியபடி இருந்தார். எந்தப் பை என்று தெரியாமலும், அந்தப் பையில் உயிரைவிட அப்படி என்ன விலை உயர்ந்த பொருள் இருந்தது என்று தெரியாமலும் காவல்துறை உயர் அதிகாரிகள் விழித்தனர். மயங்கிக் கிடந்த அந்தக் காவல்துறை ஆய்வாளரிடம் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் பையில் இருந்ததா? என்று அக்கறையுடன் கேட்டனர். ஆம். என் உயிரை விட உயர்ந்த ஒரு பொருள் அதில் இருந்தது. அதனைப் பாதுகாப்பாக என்னிடம் கொடுங்கள் என்று கெஞ்சினார். கைப்பற்றப்பட்ட அந்த மஞ்சள் பையில் ஒரு பழைய புத்தகம் இருந்தது. அனைவருக்கும் வியப்பு!. உயிரை விட உயர்ந்த அந்தப் புத்தகம் யாது என அனைவரும் ஆர்வமாகப் பார்த்தனர். அவ்வாறு பார்த்தவர்களுக்குப் பையிலிருந்து வெளிப்பட்ட நூல் விடை சொன்னது. ஆம் அந்த நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தைத் தன் காவல்துறைப் பணிச்சூழலிலும் கையில் வைத்துப் படித்துக்கொண்டும், ஆராய்ந்துகொண்டும், சிந்தித்துக்கொண்டும் இருந்த அந்தப் பெருமகனார் மன்னார்குடி நா. சோமசுந்தரம் பிள்ளை(1869-1939). தொல்காப்பியத்தை எழுத்தெண்ணிக் கற்ற பெருமகனார். இளம் அகவையில் தம் தந்தையார் மன்னார்குடி நாராயணசாமிப் பிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆழமாகக் கற்றவர் சோமசுந்தரம் பிள்ளை. தந்தையார் மன்னார்குடியில் இருந்த கிறித்தவப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தந்தையார் திடுமென இறந்துபோனதால் கருணைகொண்ட பள்ளி நிர்வாகம் இளம் வயதுடைய (19 வயது) நா. சோமசுந்தரம் பிள்ளைக்குத் தந்தையார் பணியாற்றிய அதே பள்ளியில் தமிழாசிரியர் பணியை வழங்கியது. சிறிது காலத்தில் பள்ளி நிர்வாகம் செயலிழந்த சூழலில் சோமசுந்தரம் பிள்ளை பணியின்றித் தவித்தார். வேறு வேலைக்குச் செல்ல ஆர்வமாக இருந்தார். நிறைவாக நா. சோமசுந்தரம் பிள்ளை. காவல்துறைப் பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் (ஐம்பத்தைந்து அகவை வரை) காவல்துறைப் பணியில் கடமையாற்றிய இவரின் தமிழ்ப் புலமையும் தொல்காப்பிய ஆய்வு ஆர்வமும் இக்காலத் தமிழ் மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை…
(மன்னார்குடி நா. சோமசுந்தரம் பிள்ளையின் விரிவான வாழ்க்கையை விரைவில் வெளிவர உள்ள "தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள் வாழ்வும் பணிகளும்" என்ற என் நூலில் காணலாம்)