நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 26 ஜூலை, 2010

தமிழ் இணைய ஆர்வலர் ஆலவாய் அ.சொக்கலிங்கம்...


ஆலவாய் அ. சொக்கலிங்கம் 

  அண்மைக்காலமாக என் வலைப்பதிவைப் பார்வையிட்டு, உலக அளவில் பல நாடுகளிலிருந்தும் தமிழ் அன்பர்கள் பலவகையில் தொடர்புகொண்டு ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதுபோல் தமிழகத்திலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் என் தமிழ் இணையப் பணியைப் பாராட்டித் தொடர்ந்து இயங்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். அவ்வகையில் ஒரு கிழைமைக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

  தம் பெயர் ஆலவாய் சொக்கலிங்கம் என்றும், தமக்கு அகவை எழுபத்தைந்து என்றும், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் என்றும், தா.பழூர் அடுத்த திருபுரந்தான் என்ற ஊரில் வாழ்வதாகவும் கூறினார். என் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதாகவும், நான் எழுதிய என் ஆறாம் வகுப்பு நினைவுகள் என்ற பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல ஆசிரியர்களைத் தமக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டார்கள். மேலும் தம் மகளை எங்கள் ஊருக்கு அடுத்துள்ள கடாரங்கொண்டான் என்ற ஊரில் பிறந்த திருவாளர் கிருட்டினமூர்த்தி அவர்களுக்கு மணம்செய்து கொடுத்துள்ளதாகவும் கூறினார்கள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மகிழ்ச்சிக்கு அடிப்படைக்காரணம் எங்கள் பகுதியின் புகழ் பெற்ற ஊர்களுள் ஒன்றான திருபுரந்தான் என்ற ஊரிலிருந்து ஒருவர் பேசுகின்றாரே என்பதுவும், திருபுரந்தானில் இணைய இணைப்பு சென்றுள்ளதே என்பதும்தான்.

  திருபுரந்தான் என்று நாங்கள் தமிழ்ப்படுத்தி வழங்கும் ஊர் ஸ்ரீபுரந்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரின் உண்மை வடிவம் அறியாமல் மக்கள் வழக்கில் இவ்வாறு வழங்கப்படுகிறது. ஸ்ரீ பராந்தக சோழன் சதுர்வேதி மங்கலம் என்பது அந்த ஊரின் வரலாற்றுப் பெயர். அது மருவி ஸ்ரீ பராந்தகன் என்றாகி, இன்று ஸ்ரீ புரந்தான் என்று மக்கள் வழக்கில் வழங்குகிறது.

  கொள்ளிடக்கரையில் வளம் கொழிக்கும் ஊராக இருந்த இந்த ஊர் சோழ அரசர்களின் காலத்தில் (சற்றொப்ப ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) வேதம் வல்ல பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது. அந்த ஊரில் அண்மைக்காலம் வரை பார்ப்பனர்கள் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்துள்ளனர். மற்ற இனத்தார் குறைவாக வாழ்ந்தனர். நில உச்சவரம்பு உள்ளிட்ட சட்டங்களுக்குப் பிறகு நிலபுலங்களை விற்ற பார்ப்பனர்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். அந்த நிலங்களை மற்ற இன மக்கள் விலைக்கு வாங்கி வாழ்ந்து வருவதாக அறிந்தேன். இரண்டு சிவன்கோயில்களும், இரண்டு பெருமாள்கோயில்களும் உள்ளன. இடிபாடுகளுக்கு உள்ளாகி உள்ள ஒரு சிவன்கோயிலில் நுழைந்து பார்த்தேன். வௌவால் வாழ்க்கை நடத்துகிறது. ஒரே முடைநாற்றம். உள்ளே பாழும் மண்டபம்போல் உள்ளது. மக்களோ, அரசோ எந்த வகையிலும் அந்தக் கோயிலைப் போற்றவில்லை. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த சிவன்கோயில் தூண்களைக் கண்டு, போற்றுவார் இல்லாமல் போனதே என்று வருந்தினேன்.

 ஸ்ரீ புரந்தான் ஊருக்கு அருகில்தான் கொள்ளிடம் என்ற காவிரியின் கிளையாறு ஓடி அந்தப் பகுதியை வளமுடையதாக்குகிறது. மேலும் குருவாடி அருகில் கொள்ளிடத்திலிருந்து ஒரு கிளையாறு பிரிகிறது. அது பொன்னாறு எனப்படுகின்றது. இந்தப் பொன்னாறுதான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராசேந்திரசோழன் உருவாக்கிய சோழகங்கம் என்ற பொன்னேரியினுக்கு வற்றாமல் நீர்வழங்கியிருக்கவேண்டும். (பொன்னேரியின் பெரும்பகுதி எங்கள் முன்னோர்களின் நிலமாக இருந்தது. அதனை ஆங்கிலேயர் வாங்கிப் பின்னாளில் ஏரியாக்கினர்). புவியியல் அமைப்பை நோக்கும் பொழுது இது உண்மையாகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. பொன்னாற்றின் தொடர்ச்சிதான் பொன்னேரியாகியிருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. பொன்னாறு வடக்கே ஓடி வெள்ளாற்றில் கலந்ததாக முன்னோர்கள் சொல்வர்.

  இன்று கொள்ளிடத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துத் தண்ணீர் எடுக்கப்பெற்று உடையார்பாளையம் வட்டத்தின் தென், கீழ்ப்பகுதிகளில் உள்ள ஊர்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகின்றது. ஸ்ரீபுரந்தான் ஊரில்தான் சில ஆண்டுகளுக்கு முன் திருவாளர் செல்வராசு என்னும் அரசியல் இயக்கத்தலைவர் வாழ்ந்துவந்தார். அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபொழுது என் தந்தையார் உள்ளிட்டவர்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டமை நினைவுக்கு வருகின்றது. ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அவர் மகன் திரு.செ.அண்ணாதுரை அவர்கள் பின்பு செயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது தனிச்சிறப்புக்குரிய ஒன்றாகும். திரு.அண்ணாதுரை அவர்களும் என் சிறிய தந்தையார் திரு. காசி. அன்பழகன் (முன்னாள் செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக விளங்கியவர்) அவர்களும் நெருங்கிய நண்பர்கள். இந்த அடிப்படையில் என் சிறிய தந்தையார் இல்லத்தில் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.அண்ணாதுரை அவர்களைக் கண்டு உரையாடியுள்ளேன். இதனால் இந்தப் பகுதி அண்மைக்காலமாகக் கவனிப்புக்கு உள்ளானது.

  ஸ்ரீபுரந்தானை அடுத்துள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் அரிய வரலாற்றுப் பெயர்களைத் தாங்கியுள்ளன. குருவாடி, விக்கிரமங்கலம் (விக்கிரம சோழன் சதுர்வேதிமங்கலம்), காரைக்குறிச்சி, அருள்மொழி (சோழனின் பட்டப் பெயர்களுள் ஒன்று), சிந்தாமணி, மதனத்தூர், வாணதிரையன்பட்டினம், நாயகனைப் பிரியாள், கோடங்குடி (சோழன்குடி என்று இருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் சோழமண்டலத்தை உச்சரிக்கத்தெரியாத ஆங்கிலேயர்கள் கூழமந்தல் (cholamandal) என்றதுபோல் சோழன்குடியைக் கோடங்குடி என்றார்கள்? ஆராய வேண்டும்). அணைக்குடம், கோட்டியால், தென்கச்சிப்பெருமாள் நத்தம் (தென்கச்சி சுவாமிநாதன் பிறந்த ஊர்), வாழைக்குறிச்சி, காடுவெட்டான்குறிச்சி, முட்டுவாஞ்சேரி, நல்லணம், கடம்பூர், குணமங்கலம், (குணவல்லி,சுத்தவல்லி,காமரசவல்லி என்று மூன்று ஊர்ப்பெயர்களுள் முதலிரண்டும் குணமங்கலம் எனவும் சுத்தமல்லி எனவும் மருவின. காமரசவல்லி மட்டும் பெயர்மாற்றம் இன்றி வழங்கப்படுதவதாகவும் ஒரு செய்தி உண்டு.) என்ற எந்த ஊர்ப்பெயரும் ஒரு வரலாறு சொல்லும். கொள்ளிடத்துக்கும் திருபுரந்தானுக்கும் இடைவெளி ஒரு கல் தொலைவு இருக்கும். கொள்ளிடத்தைப் பல முனைகளிலிருந்து பார்த்து மகிழ்ந்திருந்தாலும் ஸ்ரீ புரந்தான் அருகிலிருந்து பார்ப்பது தனி அழகுதான்.

  கொள்ளிடத்தின் அக்கரையில்தான் திருப்புறம்பியம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது. போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். "உதிரம் வடிந்த தோப்பு" என்பது இன்று குதிரைத்தோப்பாக நிற்கின்றது. வரலாற்று அறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் பிறந்த ஊர் திரும்புறம்பியம்.

  நீலத்தநல்லூர் அக்கரையில் உள்ள ஊர்களுள் ஒன்று. இங்கு நடைபெற்ற மாட்டுச்சந்தை புகழ்பெற்றது. அந்தச் சந்தையில் புகழ்பெற்ற மாடுகள் விற்பனைக்கு வரும். மாட்டுச் சந்தை (சாணிக் குத்தகை) ஏலம் எடுப்பதில் இணைபிரியாள்வட்டம் என்ற ஊரில் வாழ்ந்த பெரும் நிலக்கிழார் வரதபடையாட்சி அவர்கள்தான் முன்னிற்பார்கள். இவர்கள் மகன் திரு. இராமகிருட்டினன் எங்கள் அண்ணன் பொறியாளர் கோமகன் அவர்களின் தாய்மாமன் ஆவார். இவர்கள் குடும்பத்துப் பெண்ணைதான் அண்ணன் கோமகன் அவர்கள் உறவு பிரியாமல் இருக்க மணந்துகொண்டார். கோமகன் அண்ணன் திருமணம் குடந்தைக் கதிர். தமிழ்வாணன் தலைமையில் குடந்தையில் நடந்தது.

 மதனத்தூர், நீலத்தநல்லூர் என்ற இரண்டு ஊர்களும் கொள்ளிடத்தின் இக்கரையிலும் அக்கரையிலும் உள்ள ஊர்கள். இரண்டு ஊர்களையும் இணைத்தால் கும்பகோணத்துக்கு மிக விரைந்து சென்றுவிடமுடியும். இப்பொழுது பாலம் வேலை நடக்கிறது.

 கும்பகோணம்-செயங்கொண்டம்-உளுந்தூர்ப்பேட்டை-விழுப்புரம்-சென்னையை இணைக்கும் பாலம் இது. குடந்தையிலிருந்து சென்னை செல்பவர்கள் இந்தப் பாலத்தின் வழியாகச் சென்றால் 40 கி.மீ பயண தூரம் குறையும். சற்றொப்ப ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும்.

  கோடைக்காலத்தில் நடந்தும், மழைக்காலத்தில் பரிசல்களிலும் மக்கள் கரை கடப்பர். எனவே பல ஆண்டு மக்களின் போராட்டத்துக்குப் பிறகு அண்மையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்களின் பல நூற்றாண்டுக் கனவான இப்பாலப்பணி சிறப்பாக நிறைவேறினால் இரண்டு மாவட்டங்களை இணைத்த பெருமை இந்த அரசுக்கு உண்டு. இவ்வளவு தகவல்களையும் முன்பே நான் தெரிந்து இருந்ததால் இணைய ஆர்வலர் திரு. சொக்கலிங்கம் ஐயா அவர்களின் தொலைபேசி உரையாடலில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

 அறிமுகப் பேச்சாக இருந்த ஆலவாய் சொக்கலிங்கம் ஐயாவின் பேச்சு அடுத்த ஓரிரு நாளில் மிகப்பெரிய நெருக்கத்தைக் கொண்டுவந்தது. ஆம். அதற்குள் நம் சொக்கலிங்கம் ஐயா அவர்கள் என் ஆறாம் வகுப்பு நினைவுகள் பகுதியைத் தம் மருமகனார் திருவாளர் கிருட்டினமூர்த்தி அவர்களுக்குப் படியெடுத்து வழங்கிடத் தனிச்சுற்றாகப் பலர் பார்வைக்கு வந்தது. இதன் இடையே என் பணிகளை வரும், போகும் உறவினர்கள், நண்பர்களுக்குப் பரிமாறுவதை ஐயா அவர்கள் கடமையாகக் கொண்டார்கள். என் அனைத்து இடுகைகளையும் படிக்கத் தொடங்கியதுடன் தம் கணிப்பொறி,இணைய ஈடுபாட்டை விரிவாகச் சொன்னார்கள். எனக்கு மிகப்பெரிய வியப்பு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கணினி வாங்கிவிட்டதாகவும், இணைய இணைப்பு எட்டாண்டுகளுக்கு முன்பே வாங்கிவிட்டதாகவும் சிற்றூரில் தாம் வாழ்ந்தாலும் அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் தாம் முற்றாகப் பயன்படுத்தி வருவதாகவும் உரைத்தமை எனக்குப் பெருமகிழ்ச்சி தந்தது. ஓய்வுபெற்ற தமிழாசிரியரின் இணைய ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

  எங்கள் பகுதி மிகவும் வளம் நிறைந்த பகுதியாகவும் உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தாலும் இங்குக் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்கள் இல்லை.அரசு சார்பில், தன்னுரிமைபெற்ற அறுபதாண்டுகள் ஆன பிறகும் எங்களுக்குக் கல்வி நிறுவனங்கள் கிடைக்காமல் போனது பேரிழப்பாகும். செயங்கொண்டத்தில் கல்லூரிகளோ, தொழில்நுட்பக் கல்லூரிகளோ, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளோ இல்லை. கல்வியார்வம் உடையவர்கள் அரசியலில் இல்லாது போனமை ஒரு காரணமாக இருக்கலாம்.

 அரியலூர், கும்பகோணம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருச்சி என்று அயல் ஊர் சென்றுதான் படிக்க வேண்டும். இத்தகு வாய்ப்பு இல்லாத நிலையிலும் எங்கள் பகுதியில் சான்றோர் பலர் தோன்றியதுதான் சிறப்பு. முனைவர் பொற்கோ (சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்), திரு.சங்கரசுப்பையன் இ.ஆ.ப, மொழியறிஞர் செ.வை.சண்முகம், முனைவர் சோ.ந.கந்தசாமி, தென்கச்சி. கோ.சாமிநாதன், பேராசிரியர்கள் மருதூர் இளங்கண்ணன், மருதூர் பே.க.வேலாயுதம் உள்ளிட்டவர்கள் பிறந்த பகுதி இது. இங்கு இன்றுவரை அரசு கல்லூரிகள் ஏற்படுத்தப்படவில்லை. அரசு கல்லூரிகள் என்றால் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் படிக்கமுடியும். படிப்பை இடையில் நிறுத்தாமல் உயர்கல்விக்கு வழிகோலும். எங்கள் காலத்திலாவது நாங்கள் ஒரு அரசு கல்லூரி கொண்டுவர பாடுபட்டாக வேண்டும்.

  இந்தப் பின்புலத்தில் ஐயா சொக்கலிங்கம் எங்களுக்கு முன்னோடியாக இருந்தமை அறிந்து மகிழ்ந்தேன். ஓரிரு மின்னஞ்சல்களும் விடுத்தார். அவர்களுக்குத் தமிழில் தட்டச்சிடும் வசதியைத் தொலைபேசி வழியாகப் பயிற்றுவித்தேன். அதன் பிறகு தமிழில் மின்னஞ்சல் பறந்தன. என் நூல்கள் சில வேண்டினார். தனித்தூதில் விடுத்தேன். கற்று மகிழ்ந்தார். இணையம் கற்போம் நூல் அவருக்குப் பேருதவியாக இருந்தது. அடிக்கடி தொலைபேசியை நன்கு வேலை வாங்கினார். ஆம். நாளும் பல பேச்சுகள் தொடர்ந்தன. அவரின் பேச்சு அவருக்கு நெருக்கமாக என்னைச் சேர்த்தது. பேசு புக்கிலும் அவர் முயற்சியால் இணைந்தார்.

  தம் மகள்களுக்குச் சீர்வரிசையாகவும், அன்பளிப்பாகவும் கணிப்பொறியை வழங்குவதையும், தம் பெயரர்களுக்குக் கணிப்பொறியை விரும்பி வாங்கி வழங்குவதையும் உரைத்தார். இவர்தம் தமிழ் ஆர்வம் எனக்குக் கூடுதல் பாசத்தை வழங்கினாலும் இவரின் கணினி,இணைய ஆர்வம் எனக்கு மிகப்பெரிய உந்துதலைத் தந்தது. விரைவில் இவர்களைக் காணவேண்டும் என்று விரும்பினேன்.

  வெள்ளிக்கிழமை இரவு ஐயா சொக்கலிங்கம் அவர்களுக்குப் பேசினேன். இந்தக் கிழமை என் பிறந்த ஊர் வருவதாகவும் அங்கிருந்து இருபத்தைந்து கல் தொலைவுள்ள அவர் ஊருக்கு வர விரும்புவதாகவும் சொன்னேன்.

  என் பிறந்த ஊரில் எங்கள் வீட்டுக்குக் கதவு அமைக்கத் தச்சர்,வண்ணம் பூச வண்ணக்காரர், சுதைமா வேலைகளுக்குக் கொத்தனார் எனப் பல முனைகளில் வேலை செய்ய ஆட்கள் வர இருந்தனர். எனவே ஊரில் நான் இருந்தால் வேலை சிறக்கும் என நினைத்தேன். புதுச்சேரியிலிருந்து 100 கல் தொலைவில் எங்கள் ஊர். காரிக்கிழமை வைகறை புறப்பட்டு, காலை 10 மணிக்கு என் இல்லம் அடைந்தேன்.உணவு உண்டு,அங்கு நடக்கவேண்டிய வேலைகளுக்கு உரிய குறிப்புகளை வழங்கிவிட்டு அரைமணிநேரத்தில் என் பணிமுடித்து உடன் சிற்றுந்து பிடித்து செயங்கொண்டம் சென்றேன்.

 பிறகு.தா.பழூருக்கு நகர் வண்டி. அங்கு அரைமணி நேரம் பேருந்துக்குக் காத்திருப்பு. கிடைத்த மூடுந்து ஒன்றில் ஸ்ரீபுரந்தான் பயணம். அங்கிருந்து புலவரின் பெயரன் உதவியால் உந்து வண்டியில் ஐயாவின் இருப்பிடமான அரண்கோட்டை சென்றேன். பகல் ஒன்றேகால் மணிக்குப் புலவரின் இல்லத்தில் இருந்தேன். இதற்கிடையே ஐயாவுக்கும் எனக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட செல்பேசி உரையாடல்கள் நடந்திருக்கும். ஐயாவைக் கண்டு வணங்கினேன். அவரின் தூய அன்பில் நனைந்தேன்.


ஆலவாய் அ.  சொக்கலிங்கம்

 ஸ்ரீபுரந்தான் ஊர் பற்றியும், தாம் இந்த ஊரில் வாழும் வாழ்க்கை பற்றியும், இங்கு உருவாக்கப்பட்டுள்ள வீடு, மனை, வயல்வெளிகள் பற்றியும் விரிவாகப் பேசினார்கள். பகலுணவு உண்டபடி பேசினோம். வாழை, மா, பலா, சப்போட்டா எனப் பல மரங்கள் அழகுடன் விளங்குகின்றன. முருங்கை மரம் காய் தருகின்றது. அவரின் இணைய ஈடுபாடு நேரில் கண்டேன். பலவகையான கணிப்பொறிகள், அச்சுப்பொறிகள், மின்சேமிப்புக்கலங்கள் என்று அனைத்தும் அந்தச் சிற்றூரில் இருப்பது கண்டு வியந்தேன். ஒரு பழுதுபார்ப்பு கடைபோலப் பலவகையான பொருட்கள் இருந்தன. முனைவர் நா.கணேசன் அவர்கள் பதிப்பித்த காரானை விழுப்பரையன் மடலைப் படியெடுத்து ஐயா வைத்திருந்தார்.


வழிபடுபொருள் சிதைந்த நிலையில்



திருபுரந்தான் சிவன்கோயில் பராமரிப்பின்றி...



எல்லைக் கல்லாகச் சிவலிங்கம்


 தம் ஊரில் மிகுதியான கற்சிலைகள் வயல்வெளியெங்கும் இருப்பதாகவும் ஆனால் அரசு இந்தத் தகவல் தெரிந்தால் நிலத்தை எடுத்துக்கொள்வார்கள் என்று மக்கள் அந்த விவரத்தைத் தெரிவிப்பது இல்லை என்றும் குறிப்பிட்டார். தம் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு லிங்கம் வேலிக்கு எல்லைக்கல்லாக இருப்பதைக் காட்டினார்கள்.


கொள்ளிடக்கரையில் சொக்கலிங்கம், மு.இளங்கோவன்


பொன்னாற்றங்கரையில் பீறிட்டெழும் குழாய்நீர்


 அடுத்து என் ஆசையை நிறைவேற்ற அருகில் இருந்த கொள்ளிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இடையில் பொன்னாற்றைக் காட்டினார்கள். கொள்ளிடம் கம்பன் சொன்ன "ஆறு கிடந்தன்ன அகன்ற" தோற்றம் கொண்டு விளங்கியது. சிறிய நீரோட்டம் இருந்தது. சிறு குழந்தைபோல் கால் நனைத்து மகிழ்ந்தேன். நினைவுக்குச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.

 மீண்டும் ஐயாவில் இல்லம் வந்து அவர் வீட்டின் அமைப்பைக் கண்டு மகிழ்ந்தோம். தூய காற்று. நல்ல நீர். அமைதி வாழ்க்கை விரும்புபவர்களுக்கு உகந்த இடம். பேராசிரியர் தங்கப்பா இந்த வீட்டைப் பார்த்தால் மிக மகிழ்ந்திருப்பார். அண்ணன் கோமகன் வடிவமைத்த வீடு என்று அறிந்தேன்.


பாலம் வேலை


பாலம் இல்லாததால் உந்துவண்டிகளைத் தலையில் சுமந்து 
ஆற்றைக் கடக்கும் நிலை


திட்ட மதிப்பீடு


கொள்ளிடம் பாலம் வேலை நடைபெறுகிறது

  பின்னர் ஐயா, அவரின் மனைவி, நான் உட்பட மதனத்தூர் பாலம் கட்டும் பணியையும் கொள்ளிடத்தின் அந்த இட அழகையும் கண்டு மகிழ்ச்சென்றோம். குறுக்குவழியில் புகுந்து பொன்னாற்றங்கரையில் எங்கள் மகிழ்வுந்து சென்றது. நல்ல இயற்கைக்காட்சி. இன்னும் ஓரிரு மாதங்களில் பசுமைகொஞ்சும் என்று சொன்னபடி வந்தார்கள்.

 மதனத்தூர் - நீலத்தநல்லூர் இணைப்புப் பாலம் மிகச்சிறப்பாக வேலை நடந்தது. இன்னும் ஓரிரு நாளில் கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்துவிடுவார்கள் என்பதால் ஆற்றில் கிடந்த பொருள்களைப் பாதுகாப்பான இடத்துக்குக் கரையேற்றினார்கள்.

  தொழில்நுட்பப் பொறிகளின் துணையுடன் வேலை சுறுசுறுப்பாக நடந்தது. மாலை ஐந்து மணியளவில் அதனைப் பார்வையிட்டு ஐயாவின் மகள்வீடு தா.பழூரில் இருக்கிறது என்றார். அந்த வீட்டுக்குச் சென்று திரு.கிருட்டினமூர்த்தி உள்ளிட்ட அவர்களின் உறவினர்களைக் கண்டு மகிழ்ந்தேன். திரு.கிருட்டினமூர்த்தி நான் பயின்ற உள்கோட்டைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புப் பயின்றவர். எங்களுக்கு மூத்த அணி. அவரிடம் கடந்த கால நினைவுகளை எடுத்துரைத்து உரையாடி மாலை 6 மணியளவில் ஐயாவிடமிருந்து விடைபெற்றேன்.

  தமிழாசிரியர் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற பிறகும் தமிழுணர்வு குன்றாமல், புதிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றி வளமான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆலவாய் சொக்கலிங்கம் அவர்களின் வாழ்க்கையை நினைக்கும்பொழுது "எண்ணத்தைப் போல் வாழுங்க மக்களா" என்ற நாட்டுக்கோட்டை செட்டியாரின் வரி நினைவுக்கு வந்தது.

ஆலவாய் அ.சொக்கலிங்கம் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு.

 சொக்கலிங்கம் அவர்கள் க.மு;கல்.மு; பட்டம் பெற்றவர். பிறந்த ஊரான ஆலவாய் ஊரில் எழுந்தருளியுள்ள இறைவன் சொக்கநாதர் பெயரைப் பெற்றோர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். பெற்றொர் அப்பாதுரை, தருமாம்பாள்.

 1936 ஆம் ஆண்டு மேத்திங்கள் இருபதாம் நாள் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தாய்மாமா வீட்டில் பெற்றோருக்கு முதல் குழந்தை என்ற நிலையில் பிறந்தவர்.

  பிறந்து ஏழாண்டுகள் வரையில் பெற்றோர் பள்ளியில் சேர்க்கவில்லை. பிறகு ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தாய்மாமா வீட்டிற்கு அடுத்த வீட்டில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். முதல் மூன்று வகுப்புகள் வரை அங்குப் படித்தவர்.

 நான்கு ஐந்தாம் வகுப்புகள் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள கீழநத்தம் என்ற ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்தவர். மீண்டும் ஓராண்டுப் பள்ளிக்கு அனுப்பவில்லை.

  பிறகு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கூற்றம் உமையாள் புரம் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளியில் மீண்டும் ஐந்தாம் வகுப்பிலிருந்தே படித்தவர். அந்தப் பள்ளியில் இந்தி படித்துப் பிராதமிக் தேர்வில் முதல்வகுப்பில் வெற்றிபெற்றவர். பிறகு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தவர்.

 மீண்டும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிறிய மலர் உயர்நிலைப்பள்ளியில் பத்து, மற்றும் பதினொன்றாம் வகுப்பில் படித்து 1955 மார்ச்சுத் திங்களில் 11 ஆம் வகுப்புத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்.

  பிறகு 1957- 59 முதல் ஒராசிரியர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1959-1961 இல் இடைநிலை ஆசிரியப்பயிற்சி பெற்று அடுத்தநாளே ஆசிரியப்பணி ஏற்றார்.

 அரியலூர் மாவட்டம் குணமங்கலத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றத் தொடங்கி, 1962 ஆம் ஆண்டு முதல் அப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகிய பொழுது அங்குப் பணியாற்றத் தொடங்கியவர். 1966-68 இல் வித்துவான் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். 1970இல் தனித்தேர்வராகப் புகுமுக வகுப்பில் வெற்றி பெற்றவர்.

  1973 இல் தனித்தேர்வராக பி.ஏ. வெற்றி பெற்றும், 1976-78 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடர்ந்து, அஞ்சல்வழியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

 பல பள்ளிகளில் பணிபுரிந்து 1994 சூன் முதல் நாளில் ஓய்வு பெற்றவர்.

 இவருக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் உமையாள்புரத்தில் தமிழாசிரியர் திரு சுந்தரராமன் (வடசருக்கை), உடையார்பாளயத்தில் தமிழாசிரியர் திரு. கண்ணையன் (பேராசிரியர் க.இளமதி சானகிராமன் தந்தையார்), சிறியமலர் உயர்நிலைப்பள்ளி-புலவர் திரு ப.திருநாவுக்கரசு, திரு கு.கணேசன் ஆவார்கள்

 ஆலவாயிலிருந்து ஸ்ரீபுரந்தானுக்கு 1998 இல் வந்து 2000 இல் அரண்கோட்டையில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றார்.

 இவருக்குக் குழந்தைகள் ஆண் 2, பெண் 3: அனைவருக்கும் திருமணம் நடத்தியுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் பங்கு பிரிக்காமல் ஒற்றுமையுடன் இருந்துவருவது பாராட்டுக்கு உரியது.

வெள்ளி, 23 ஜூலை, 2010

திராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்


வழக்கறிஞர் தெ.சமரசம்

நான் வேலூர் மாவட்டம் கலவை, ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது (1999-2005) ஆர்க்காட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அடிக்கடி வேலூரில் நடக்கும் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம். வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் அடிக்கடி மிகச்சிறந்த தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். அந்தக் காலச்சூழலில் அடிக்கடி தெ.சமரசம் அவர்களின் இலக்கிய ஈடுபாட்டை அறிவேன். அவர்களின் துணைவியார் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் புகழ்பெற்ற மருத்துவச் சேவைகளையும் அறிவேன்.அவர்களுக்கு அழகிய வளமனை போன்ற வீடும், மருத்துவமனையும் வேலூர் நகரில் இருந்து இலக்கிய அறிஞர்களுக்கு வேடந்தாங்கலாக உதவும்.

நான் வேலூர் முத்துரங்கம் கல்லூரிக்கு அஞ்சல் வழி வகுப்பெடுக்கச் செல்லும்பொழுது ஐயாவையும் அம்மாவையும் அவர்கள் இல்லம் சென்று கண்டு மகிழ்வதுண்டு. வழக்கறிஞர், மருத்துவர் இணைந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருகின்றரே என்று நான் வியப்படைவேன்.அவர்களை இரண்டாண்டுக்கு முன்பு சென்று தனிப்பட்ட முறையில் கண்டு உரையாடி அவர்களின் வாழ்வியலை அறிந்து வந்திருந்தேன்.

அதுபொழுது மருத்துவர் அம்மா அவர்களுக்குத் தமிழ் இணையத்தையும் தமிழ்த்தட்டச்சையும் அறிமுகப்படுத்தியமையும் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் அம்மா அவர்கள் ஆர்வத்துடன் தமிழ் இணையத்தை ஒரு மாணவி போல் அமர்ந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்பொழுது உள்ளபடியே பூரிப்படைகின்றேன்.இவர்களைப் போலும் தமிழார்வம், சமூக விடுதலை உணர்வுடையவர்கள் உலகெங்கும் பரவியிருக்கின்றார்கள். அவர்கள் அறியும்பொருட்டுத் தெ.சமரசம், மருத்துவர் ச.பத்மா அம்மா ஆகியோரின் இணைந்த தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் 02.12.1934 இல் சுயமரியாதை உணர்வுடைய குடும்பம் சார்ந்த தெய்வசிகாமணி,அபரஞ்சிதம் என்னும் பெரியோர்க்கு மகனாகப் பிறந்து தந்தை பெரியார் அவர்களின் மடியில் அமர்த்தி அனைவருக்கும் இசைவாக விளங்கவேண்டும் என்ற விருப்பில் ஐயாவின் வாயால் சமரசம் என்று பெயர் சூட்டப்பெற்ற பெருமைக்குரியவர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்கள்.

தெ.சமரசம் அவர்களின் தாயார் 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றவர். தந்தையாரும் பலமுறை சிறை சென்று வந்த சிறப்பிற்கு உரியவர்.

தொடக்கக்கல்வியை ஆம்பலூரிலும் பின்னர் பட்டப்படிப்பை வாணியம்பாடியிலும் முடித்தவர்.சட்டப்படிப்பைச் சென்னையில் முடித்தவர். கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் கழகப்பணிகளில் தீவிரமாக இருந்தவர். சட்டக் கல்லூரித் தி.மு.க.கிளைச்செயலாளராக ஆலடி அருணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பின்னர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

சட்டப்படிப்பு முடிந்ததும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களிடத்தில் சென்னையிலும், வேலூரில் குற்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு புகழ்பெற்ற ஏ.கே.தண்டபாணி அவர்களிடத்து வேலூரிலும் இவர் மிகச்சிறந்த பயிற்சி பெற்றார்.

தெ.சமரசம் அவர்களின் திருமணத்துக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1966 இல் பண்ணுருட்டியில் திருமணம் நடைபெற்றது. மருத்துவர் அம்மா அவர்கள் பிறந்த ஊர் பண்ணுருட்டி என்பதே காரணம் ஆகும். அம்மா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைந்தது ஐயாவின் வாழ்வில் அரும்பணிகளுக்குப் பேருதவியாக இருந்தது.

மகன் இனியன், மகள் கனிமொழி இருவரும் அம்மாவைப் போல் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர்.இவருடைய உடன் பிறப்பு கவிஞர் தாமரைச்செல்வி-கவிஞர் சேரன் தமிழோடு இணைந்து வாழ்கின்றார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணிபுரியும் தெ.சமரசம் அவர்கள் மாவட்ட அரசு வழக்குரைஞராக, மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, வேலூர் நகராட்சி வழக்குரைஞராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் அறிவுரைஞராகப் பல பொறுப்புகளை வகித்தவர்.சிற்றிதழ்கள் பலவற்றின் வளர்ச்சிக்கு அவ்வப்பொழுது உதவுவதும்,எழுதுவதும் இவர் இயல்பு.

எழுத்துச்செம்மல்,பயணநூல் பகலவன், சிந்தனைச் சுடர், ரோட்டரிச் சுடர், செந்தமிழ்ச்செம்மல் எனப் பல்வேறு விருதுகள் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. எழில்கொஞ்சும் இலங்கை, வரலாறு படைக்கும் ரோட்டரி,மனம் கவரும் மலேசியா, நெஞ்சம் கவரும் நியூசிலாந்து, இந்தியாவைக் காப்போம், நீதியின் கண்கள் உள்ளிட்ட நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.

மனம் கவரும் மலேசியா நூலுக்குத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.வேலூர்த் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களுடன் இணைந்து பல தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.

தமிழ் உணர்வு சார்ந்த தெ.சமரசம் ஐயா அவர்களும்,மருத்துவர் பத்மா அம்மா அவர்களும் வேலூரின் இரு புகழ்மணிகள் என்றால் அது பொருத்தமாக அமையும்.

வியாழன், 22 ஜூலை, 2010

கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா


கவிஞர் சிற்பி


கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் 08.08.2010 ஞாயிறு காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

பி.கே.கிருட்டினராச் வாணவராயர் அவர்கள் தலைமை தாங்கி விருது வழங்கிக் கவிஞர்களைப் பாராட்டுகின்றார்.

அருட்செல்வர் நா.மகாலிங்கம்,பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்,பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

இயகோகா சுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் இலக்கிய விருது பெறுவோர் கவிஞர்கள் கலாப்பிரியா, இளம்பிறை ஆவர். இலக்கியப்பரிசில் பெறுவோர் கவிஞர்கள் அழகியபெரியவன், மரபின் மைந்தன்,தங்கம்மூர்த்தி,சக்திசோதி ஆவர்.சொற்கலை விருது பெறுபவர் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் அவர்கள் ஆவார்.கவிஞர் சிற்பி அறக்கட்டளையினர் அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.

செவ்வாய், 20 ஜூலை, 2010

தமிழ் மின் அகரமுதலிகள்


பேராசிரியர் கிரிகோரி சோம்சு அவர்களுடன் 
கட்டுரையாளர் முனைவர் மு.இளங்கோவன்

தமிழில் அச்சுவடிவில் அகரமுதலிகள் இருப்பனபோன்றே வளர்ந்துநிற்கும் கணிப்பொறி, இணையத்துணையுடன் மின்வடிவிலும் உள்ளன.ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி அகரமுதலிகளைப்போல் நம் மின்அகரமுதலிகள் வளர்ந்தவடிவில் இல்லை. வளர்முக நிலையிலேயே உள்ளன.தமிழ் மின் அகரமுதலிகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலி மின்னகரமுதலியாக உள்ளது.அதுபோல் தமிழ்விக்கிப்பீடியாவின் அகரமுதலியும் மின்வடிவில் உள்ளது.

பால்சு அகரமுதலியும்(தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில்), தமிழ் -செர்மனி -ஆங்கில அகரமுதலியும்,ஆங்கிலம்-தமிழ்-சிங்கள அகரமுதலியும்; வின்சுலோவின் ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியும்,கிரியாவின் தற்கால அகரமுதலியும் இன்ன பிற அகரமுதலிகளும் மின்வடிவில் எந்த அளவில் வளப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இன்னும் மேம்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.

தமிழ் விக்கிப்பீடியா அகரமுதலி ஒரு பன்மொழி அகராதியாக, மிகச்சிறப்பாக இலவசமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாக இருந்தாலும் அதில் தமிழ் அறிஞர்கள் இலக்கணப்புலவர்கள் பங்கெடுக்காமல் உள்ளதைச் சுட்டிக்காட்டி,அதனை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்துவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகிறது.

தமிழ் அகரமுதலிகளில் ஒலிப்புமுறைகள் இடம்பெற வேண்டியதன் தேவை,படங்கள், வரைபடங்கள், ஓவியங்கள்,ஒலிக்கோப்புகள் இணைப்பு பற்றியெல்லாம் இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது,இதுவரை மின்அகரமுதலிகளில் இடம்பெற்றுள்ள சொற்களின் வகைப்பாடு, தேவை,நோக்கம், அகரமுதலிகளை வெளியிட்ட நிறுவனங்களின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து எதிர்காலம் மின்னகரமுதலிகளை எதிர்நோக்கியுள்ளதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

தென்னாசிய மின் நூலகம் ( Digital South Asia Library ) 
(http://dsal.uchicago.edu/about.html )

தென்னாசிய மின் நூலகத் தளத்தில் தென்னாசியாவில் வழங்கும் பலமொழிகளுக்கும் உரிய மின் அகரமுதலிகள் ஆய்வாளர்கள்,ஆர்வலர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன.இவை யாவும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளன.அவ்வகையில் அசாமி,பலுசி, பெங்காளி,ஆங்கிலம்,குசராத்தி,இந்தி,காசுமீரி,மலையாளம்,மராத்தி,நேபாளி,ஒரியா,பாலி,பஞ்சாபி,பெர்சியன்,இராசத்தானி,சமற்கிருதம்,சிந்தி,தமிழ் தெலுங்கு,உருது மொழி அகரமுதலிகளும்,பர்ரோ,எமனோவின் திராவிட வேர்ச்சொல்லகரமுதலியும்( Dravidian etymological dictionary ) குறிப்பிடத்தக்கன.

தமிழ்மொழி அகரமுதலிகள்

தென்னாசிய மின் நூலகத் தளத்தில் தமிழ்மொழிப் பகுதியில் பெப்ரியசு அகரமுதலி(Fabricius's Tamil and English dictionary),கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, ஆல்பின் அகரமுதலி,சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி,வின்சுலோ அகரமுதலிகள் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு அகரமுதலிகளையும் வாங்கிப் பாதுகாத்தல், பயன்படுத்தலில் அச்சுவடிவு எனில் கையாளத்தொல்லையாக இருக்கும்.ஆனால் மின்னகரமுதலியாக இருப்பதால் சொற்பொருள் வேறுபாடு அறியவும்,ஆய்வுக்குக் கூடுதல் தகவல் பெறவும் வாய்ப்பாக உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலி
(Tamil lexicon.University of Madras, 1924-1936) http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

தமிழ் அகரமுதலிகளில் சென்னைப் பலைகலைக்கழகப் பேரகரமுதலிக்குத் தனியிடம் உண்டு.தமிழில் அறிவியல் அடிப்படையில் பல அறிஞர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட இவ்வகரமுதலியில் தமிழல்லாத பிறமொழிச்சொற்களைத் தமிழாகக் காட்டப்பட்டுள்ளமையை அறிஞர்கள் சிலர் எடுத்துக்காட்டி விளக்குவது உண்டு.திருத்தப்பட்ட பதிப்பு வெளிவர உள்ள, இந்த அகரமுதலியின் முன்னைப் பதிப்பாசிரியராக விளங்கிய பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் தலைமையில் இயங்கிய குழுவினர் இந்த அகரமுதலியை மிக நுட்பமுடன் உருவாக்கியுள்ளனர்.தமிழ் மின் அகரமுதலிகளுள் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.தமிழ்ச்சொல் அதனை அடுத்து,அதற்குரிய ஆங்கிலச்சொல்,ஆங்கில விளக்கம்,இலக்கணக்குறிப்பு, மேற்கோள், மேற்கோள் நூல் குறிப்பு, தொடர்புடையச்சொற்கள் என அச்சு வடிவில் உள்ள விளக்கங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும் வசதிகள் பயன்படுத்துவோருக்குப் பல வகையாகத் துணைபுரிகின்றன.முன் பக்கம் பின் பக்கம் பார்ப்பதுபோலவே முன் சொல்,பின் சொல் பார்க்கும் வசதியும் உள்ளது.

பெப்ரியசு உருவாக்கிய பெப்ரியசு அகரமுதலி 
(Fabricius, Johann Philipp. J. P. Fabricius's Tamil and English dictionary) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/

பெப்ரியசு அகரமுதலி நான்காம் பதிப்பு(1972) மின்னகரமுதலியாக உள்ளது.இது தமிழ்,ஆங்கில அகரமுதலியாகும்.

ஒருங்குகுறி வடிவில் தமிழ் எழுத்துகள் உள்ளதால் எழுத்துரு சிக்கல் இல்லை.அகரவரிசைப்படி சொற்கள் உள்ளன.

தமிழில் தட்டச்சிட்டும்,ஆங்கிலத்தில் தட்டச்சிட்டும் தேடலாம்.சான்றாக mother என்ற ஆங்கிலச்சொல்லைத் தட்டச்சிட்டால் அதனுடன் தொடர்புடைய பல தமிழ்ச்சொற்களை அதன் பொருள்களை நாம் அறியலாம்.தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் இருந்து நமக்குப் பேருதவிபுரிகிறது.

பெப்ரியசு அகரமுதலியில் தேடு சொல்லாக யாப்பு என்பதைத் தட்டச்சிட்டால் யாப்பு தொடர்பான பக்கம் நமக்கு விரியும்.இதில் முழு விளக்கமும் வேண்டாம்.குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள் மட்டும் போதும் என்றால் அதற்குரிய பெட்டியில் சரி குறியைத் தேர்ந்து உரிய யாப்பு என்ற சொல்லுக்குரிய பொருளை மட்டும் அறியலாம்.இதுபோல் குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள் மட்டும் அறிந்தால் போதும் என்றால் அந்தப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்குரிய தேர்வுச்சொற்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பாக யாப்பு என்று சொல்லுக்குரிய முடிவாக ஒரு முடிவு இருக்கும்.அதன் அருகில் உள்ள p.832 என்ற பகுதியை அழுத்தினால் பெப்ரிசியசு அகரமுதலியின் 832 ஆம் பக்கத்துக்குரிய பகுதியை முழுமையாகப் பார்வையிடலாம்.யாப்பு என்ற தனிச்சொல்லுக்கு மட்டும் விளக்கம் வேண்டினால்,

"யாப்பு (p. 832) [ yāppu ] , s. (யா v.) a bandage, a tie, கட்டு; 2. poetry, செய்யுள்; 3. prosody, செய்யு ளிலக்கணம்.
யாப்பதிகாரம், யாப்பிலக்கணம், prosody.
யாப்பருங்கலம், a treatise on prosody." என்று விளக்கம் காணப்படும்.

ஒரு பக்கத்தைப் பார்வையிடும்பொழுது முன் பக்கம் பின் பக்கம் பார்க்கும் வசதியும் உண்டு. ஒருங்குகுறியில் இருக்கும் விளக்கத்தை asci i குறியீட்டு எழுத்திலும் படிக்க இயலும்.

கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி 
(N. Kathiraiver Pillai's Tamil Moli Akarathi: Tamil-Tamil dictionary) http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/

கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி அனைவராலும் விரும்பபப்படும் அகரமுதலியாகும். ஆறாம் பதிப்பாக வெளிவந்த(1922) அகரமுதலி மின்னகரமுதலியாக உருவாகியுள்ளது. இது தமிழ்-தமிழ் அகரமுதலியாகும்.இதில் "அ" என்ற ஒற்றை எழுத்தை அழுத்தித் தேடும்பொழுது 5479 தேடல்முடிவுகள் கிடைக்கின்றன.

" சிற்சில அகராதிகள் காலந்தோறும் அவவரால் வெளியிடப்பட்டன. அவைகளெல்லாம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களினும், வேதாந்த சித்தாந்த நூல்களினுமுள்ள அகப்பொருள் புறப்பொருட் பாகுபாடுகள், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகள், வெண்பா முதலிய பாவகை, பாவினம், அலங்காரவகை, பரதராக தாளப்பகுதி, அங்கக்கிரியை, உடலவருத்தனை,அவிநயம், நிலை, கூத்துவகற்பம், வங்கியமுதலிய கருவியிலக்கணம், பண், வண்ணப்பகுதி, வரிப்பகுதி, தத்துவம், முப்பொருளிலக்கணம் என்றின்னோரன்ன முக்கிய விடங்களாகிய சொற்பொருட்டொகைகளைக் கொள்ளாதனவாயிருந்தலை யுணர்ந்த சில நண்பர்கள் அவைகளெல்லாமமைய ஒரு அகராதியொன்று தருகவென்று பன்னாளும் பன்முறையுந் தூண்ட அதற்கிசைந்து யாழ்ப்பாணம் மேலைப்புலோலி வித்வான் நா ...கதிரைவேற்பிள்ளை அவர்களைக்கொண்டு பரதசேனாபதீயம், இசை நுணுக்கம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,குண்டலகேசி, அன்பினைந்திணை, கல்லாடம், தொல்காப்பியம், அகநானூறு,புறநானூறு, கலித்தொகை பத்துப்பாட்டு, இலக்கண விளக்கம், வீரசோழியம்,புராணங்கள், இதிகாசங்கள், சூளாமணி, புறப்பொருள் வெண்பாமாலை, சித்தாந்த சாத்திரம், பிங்கலந்தை, திவாகரம் முதலிய அரியபெரிய நூல்களினின்றுஞ் சொற்களையும் தொகைப்பொருள்களையும் செந்தமிழ்நாட்டு வழக்கமொழிகள் பலவற்றையுஞ் சேர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தினேன்." என்னும் நூலின் முகவுரைப் பகுதிகளைக் கற்கும்பொழுது கதிரைவேல் பிள்ளை அவர்களின் அகராதிச் சிறப்பு நமக்குப் புலப்படும்.


டேவிட் எம்.சி.ஆல்பின் அடிப்படைத் தமிழ்ச்சொற்களின் அகரமுதலி
 (A core vocabulary for Tamil) http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/

டேவிட் எம்.சி.ஆல்பின் அகரமுதலி பென்சில்வேனியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது(1981) இந்த அகரமுதலியில் அ என்ற எழுத்தைத் தட்டச்சிடும்பொழுது 99 தேர்வுமுடிவுகளைக் காட்டுகின்றது.சந்தி என்ற ஒரு சொல்லைத் தட்டச்சிடும்பொழுது மூன்று தேர்வு முடிவுகள் கிடைக்கின்றன.அதில் சந்தி,சந்தி,சந்திரன் என்னும் சொற் தலைப்புகள் காட்டப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளன.

சந்திரன் (p. 30) [ cantiraṉ ] cantiran, nelaa சந்திரன், நெலா moon
என்று பேச்சு வழக்கில் விளக்கம் தரப்பட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது.தமிழில் வழங்கும் அடிப்படையான சொற்களுக்கு விளக்கம் தரும் இந்த அகரமுதலியில் பேச்சு வழக்கில் அமைந்த விளக்கம் தனித்துச் சுட்டத்தக்கது.
பஸ் [ pas ] bassu, kaaru பஸ்ஸு, காரு bus

என்று வரும் விளக்கம் தமிழில் இன்று கலந்து பேசப்படும் பிறமொழிச் சொற்களையும் தமிழாகக் காட்டும் போக்குக்குச் சான்றாகும்.

அகராதி [ akarāti ] DikSanari டிக்ஷனரி dictionary

என்று வரும் விளக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது.
கணவன் [ kanavan ] viiTTukkaararu வீட்டுக்காரரு husband; (householder) landlord

என்னும் விளக்கம் பேச்சு வழக்கில் உள்ள சொற்களுக்குப் பேச்சு வழக்கில் விளக்கம் தரும் ஒன்றாக உள்ளது.பேச்சு வழக்கில் உள்ள டம்பளர்,லோட்டா,சார் என்ற பிறமொழிச்சொற்களையெல்லாம் தமிழ்ச்சொல்லாகக் காட்டும் வழக்கம் இந்த அகரமுதலியில் உள்ளது.தமிழில் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கு வழக்குச்சொல்லால் விளக்கம் வரையப்பட்டுள்ளது.

பேராசிரியர் என்ற சொல்லை நோக்கும் பொழுது "பேராசிரியர் [ pērāciriyar ] prafasaru பரபசரு professor " என்று உள்ளது.பேச்சுத் தமிழுக்கு இந்த அகரமுதலியில் முதன்மையளிக்கப்பட்டுள்ளது. அறுபத்தெட்டுப் பக்கங்களில் அமைந்துள்ள இந்த அகரமுதலி தமிழாய்வில் ஈடுபடும் அயல்நாட்டாருக்கு மிகுதியும் பயன்படும்.


வின்சுலோ தமிழ் அகரமுதலி 
(A comprehensive Tamil and English dictionary of high and low Tamil) http://dsal.uchicago.edu/dictionaries/winslow/

மிரோன் வின்சுலோ அவர்கள் அமெரிக்காவில் உள்ள வெர்மான் மாநிலத்தில் வில்லிசுடன் என்ற ஊரில் 1789 ஆம் ஆண்டு திசம்பர் 1 இல் , பிறந்தார். இவர் ஒரு கிறித்தவச் சமயபோதகர்; இவர் தொகுத்த தமிழ் ஆங்கில விரிவு அகராதி (A Comprehensive Tamil and English Dictionary) 68,000 சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.சோசப் நைட் பிரபு அவர்களின் மூலப்படியைத் துணையாகக்கொண்டு நாளும் மூன்று மணிநேரம் என்ற அளவில் இருபதாண்டுகள் உழைத்து வின்சுலோ இந்த அகரமுதலியை 1862 இல் உருவாக்கினார். தமிழ் ஆங்கிலம் என்ற அமைப்பில் இந்த அகரமுதலி உள்ளது.

அ தொடங்கி வௌவு என்று முடியும் சொல் ஈறாக 969 பக்கத்தில் தமிழ்ச்சொற்களும் சொற்களுக்கு உரிய விளக்கமும் உள்ளன.விடுபட்ட சொற்களையும் இணைத்து 976 பக்கத்தில் வின்சுலோ அகராதித் தமிழ்ச்சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் கொண்டு விளங்குகிறது.சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலிக்கு முன்மாதிரியான அகரமுதலியாக இதனைக் கொள்ளலாம்.இதில் இலக்கிய மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.

தமிழ் விக்சனரி http://ta.wiktionary.org/wiki

விக்கிப்பீடியா என்ற தளம் பன்மொழியில் தகவல்களைத் தரும் தளமாகும்.இத்தளம் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழியில் உருவாக்கப்பட்டது.உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.இதன் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரநிரலில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது.ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது.172 மொழிகளுக்கான விக்சனரிகள் உள்ளன.

தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004 இல் தொடங்கப்பட்டது. இன்று 1,12,587 சொற்களைக் கொண்டு(15.04.2010) உலக அகரமுதலிகளில் 24 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன், இந்தி, மலையாளம், கன்னடம்) உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.

அம்மா என்ற சொல் பற்றிய பகுதியாக இருக்கும் இப்பக்கத்தில் அம்மா என்ற சொல்லுக்கு உரிய சொற்பிறப்பு,பெயர்ச்சொற்கள் என்ற இரண்டு பெரும் பிரிவில் செய்திகள் அடக்கப்பட்டிருக்கும். சொற்பிறப்பு விவரிப்பதற்குத் தலைப்பு உள்ளது(இனிதான் சொல்லாய்வாளர்கள் அந்தப் பகுதியை முழுமைப்படுத்த வேண்டும்).அம்மா என்பதற்கு 1.தாயை விளிப்பதற்குப் பயன்படும் சொல். 2.மரியாதைக்குரிய பெண்களை விளிப்பதற்குப் பயன்படும் சொல் என்று குறிப்புகள் இருக்கும்.அதனை அடுத்து மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் மலையாளம், இந்தி, தெலுங்கு,ஆங்கிலம்,பிரஞ்சு,செர்மன் உள்ளிட்ட மொழிகளில் mother என்ற சொல்லை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதற்கு உரிய சொல் பார்வையிடும் வசதியும் உள்ளது(சில மொழிகளில் விடுபாடு உள்ளது).

தொடர்புள்ள சொற்கள் என்ற தலைப்பில் அன்னை,தாய், அம்மம்மா, அம்மாச்சி, அம்மான், அம்மன்,அம்மாயி என்ற சொற்கள் உள்ளன. இவற்றையும் பார்க்க என்ற தலைப்பில் "அப்பா" என்ற சொல் உள்ளது.அதனைச் சொடுக்கிப் பார்த்தால் அப்பா என்பதற்குத் தந்தை என்ற விளக்கமும் ஆங்கிலம், இந்தியில் இச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்ற குறிப்பும் உள்ளது.

விக்சனரியில் சொற்களை உள்ளிடுவது எப்படி?

தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று.புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச் செய்யலாம்.

விக்கிப்பீடியாவின் விக்சனரியில் முன்பே சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாம் பதிவு செய்ய நினைக்கும்சொல் முன்பே பதிவேறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். புதிய பக்கத்தை உருவாக்கவும் என்ற பகுதியில் உள்ள கட்டங்களில் ஆங்கிலம்,தமிழ் இந்தப் பகுப்பில் பெயர்,வினை,உரிச்சொற்களுள் உரியனவற்றை ஆராய்ந்து அந்தப்பெட்டியில் நாம் உள்ளிட நினைத்த சொற்களை இட்டு அதற்குரிய விளக்கங்களை விக்சனரியில் கொடுத்துள்ள விளக்கக் குறிப்புகளைக் கொண்டு உள்ளிடமுடியும்.

தமிழ் விக்சனரியின் முதற் பக்கத்தில் தமிழ் விக்சனரி பற்றிய விவரங்கள் உள்ளன.இதில் சொற்களைத் தேடுவதற்கு வாய்ப்பாகத் தமிழ்எழுத்துகள்,ஆங்கில எழுத்துகளின் முதல் எழுத்துகள் இருக்கும். இவற்றின் துணைகொண்டும் தேடலாம்.மேலும் சொற்பகுப்புகள், பின்னிணைப்புகள்,அண்மைப் பங்களிப்புகள் என்ற தலைப்புகளைச் சொடுக்கியும் ஒவ்வொரு பயன்பாட்டையும் பெறலாம்.

அதுபோல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆங்கிலம்,ஆங்கிலம் தமிழ் என்ற இரு வகையில் சொற்கள் பகுக்கப்பட்டுள்ளன.தமிழ் - ஆங்கிலம் என்ற வகையில் முதலில் தமிழ்ச்சொற்களும் அடுத்து அதற்குரிய ஆங்கிலச்சொற்களும் எந்தத்துறையில் இந்தச்சொல் பயன்படுகிறது என்ற குறிப்பும் உள்ளன.அதுபோல் ஆங்கிலம் - தமிழ் என்ற வகையில் ஆங்கிலச்சொல்லும் அதற்குரிய தமிழ்ச்சொல்லும் எந்தத்துறையில் பயன்படுகிறது என்ற விவரமும் உள்ளன.

தமிழ் அகராதி என்ற பகுப்பில் பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் குறித்த அகராதியாக இது உள்ளது.இப்பகுதி இன்னும் வளப்படுத்த வேண்டிய பகுதியாக உள்ளது.பின்னிணைப்புகள் என்ற பகுதியில் நாடுகள்,பறவைகள்,விலங்குகள் முதாலானவற்றின் பெயர்களைக் குறிக்கும் சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழ்நூல் பட்டியல் என்ற குறுந்தலைப்பில் உள்ள நூல் பட்டியல் நீண்டு, வளர்க்கப்பட வேண்டிய பகுதியாகும்.கல்வித்துறைகள் என்ற பகுப்பில் உள்ள தலைப்புகள் தொடர்பான பல சொற்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது அப்பட்டியலைப் பார்வையிடும்பொழுது நமக்குத் தெரிகிறது.

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி http://www.crea.in/dictionary.html

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல்பதிப்பு(1992)இணையத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.இது தமிழ்-தமிழ் -ஆங்கிலம் என்ற அமைப்பில் பொருள் தருகின்றது.ஒரு சொல்லின் இலக்கண வகை,வழக்குக் குறிப்பு,துறைக்குறிப்பு உள்ளிட்டவற்றின் துணைகொண்டு தேடலாம்.எழுத்துகள் ஒருங்குகுறியில் இருப்பின் மிகுந்த பயன் தந்திருக்கும்.

ஆங்கிலம்-சிங்களம்-தமிழ் அகரமுதலி http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சிட்டால் அதற்குரிய சிங்களச் சொல்லையும், தமிழ்ச் சொல்லையும் தரும் ஆங்கிலம்-சிங்களம்-தமிழ் அகரமுதலியும் பயன்பாட்டில் உள்ளது. பயன்பாட்டில் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய சிங்களச் சொற்கள்,தமிழ்ச்சொற்களின் விளக்கம் உள்ளது.ஆங்கிலமொழியில் ஆங்கிலச்சொற்கள் உள்ளன. அதற்குரிய பொருள் சிங்களமொழிச் சொல்லிலும் தமிழ்ச்சொல்லிலுமாகத் தரப்பட்டுள்ளன.28 335 சொற்களுக்குரிய விளக்கம் இதில் உள்ளது.

ஆங்கிலம் - தமிழ் - செர்மன் அகரமுதலி http://www.tamildict.com/english.php

ஆங்கிலத்தில் சொற்களைத் தட்டச்சிட்டால் அதற்குரிய தமிழ்ச்சொற்பொருளும் செர்மன்மொழிப் பொருளும் தரும் வண்ணம் ஒரு அகரமுதலி உள்ளது.ஆங்கிலச்சொற்களுக்கு இணையான சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாக இந்த அகரமுதலியில் தரப்பட்டுள்ளன.இந்த அகரமுதலியில் பல்வேறு தேடல் வசதிகள் உள்ளன.பாமினி,ஒலி அடிப்படை எனப் பலவகை விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.ஆங்கிலம்-தமிழ், தமிழ் -ஆங்கிலம், ஆங்கிலம் -செர்மன்,செர்மன்-தமிழ் என்று பலவகையில் சொல் தேர்வு செய்யலாம்.47 துறைசார்ந்த சொற்கள் இதில் உண்டு.

கலைச்சொல் அகரமுதலி http://www.thozhilnutpam.com/

மின்னியல்,மின்னணுவியல்,கணினியியல்,பொறியியல்,அறிவியல்,தொழில்நுட்பவியல் சார்ந்த செய்திகளை விளக்கும் சொற்களுக்கு உரிய விளக்கம் பெறும் தளமாக இது உள்ளது. இத்தளத்தில் உள்ள அருஞ்சொற்பட்டியல் என்ற தலைப்பில் உள்ள பகுதிக்குச் சென்றால் பல துறை சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்குரிய கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் பொது அருஞ்சொற்பொருள், தானியங்கி அருஞ்சொற்பொருள், பறவையியல், தாவரவியல், வேதியியல், மூலிகை, மலர், பழம், குடி நுழைவு, கணிதம், உடலியல், இயற்பியல், உளவியல், கப்பலியல், குறிகையியல், காய்கறிப்பெயர்கள், விலங்கியல், ஒருங்கிணைப்பியல் சார்ந்த பல துறைச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைத் தாங்கி இத்தளம் உள்ளது.

பால்சு அகரமுதலி http://www.tamilvu.org/library/dicIndex.htm

பழனியப்பா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியும், தமிழ் -தமிழ் -ஆங்கில அகரமுதலியும் குறிப்பிடத்தக்க அகரமுதலிகளாகும்.

ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி சுமார் 22,000 முக்கியச் சொற்களையும் மற்றும் 35,000 வழிச் சொற்களையும் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு சொற்களின் பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களும் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் அதற்கான சொற்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அகராதியில் சில பயனுள்ள தகவல்களான சுருக்கங்கள், இயல்பில்லா வினைச்சொற்கள், கோணங்களின் ஒப்பீடு மற்றும் கிரேக்க எழுத்துக்கள் போன்றவை உள்ளன.தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளம் சென்று இதனை எளிமையாகப் பயன்படுத்தலாம்.

தமிழ் -தமிழ் -ஆங்கில அகரமுதலியில் 49000க்கும் அதிகமான சொற்கள் உள்ளன. இதில் உலாவும் முறையும், தேடும் முறைமையையும் கொண்டுள்ளது.

உலாவும் முறைமை ஒருவரை அகராதியின் பக்கங்களைப் புத்தக வடிவினைப் போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் தமிழ் அகரமுதலி http://www.tamilvu.org/library/dicIndex.htm

தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் பல அகரமுதலிகள் உள்ளன.அவற்றுள் ஒன்று பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளையின் தமிழ் தமிழ் அகரமுதலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.பக்கம் பார்த்தல், சொல்தேடல்,அகரவரிசைப் பார்த்தல் என்ற அமைப்பில் சொற்களைத் தேடலாம்.பக்கம் பார்த்தல் பகுதியில் பக்க எண் குறிப்பிட்டுச் சொல் தேடலாம்.சொல்தேடல் பகுதியில் சொல்லைத் தட்டச்சிட்டுத் தேடலாம்.அகர வரிசைப் பார்த்தல் பகுதியில் அகரவரிசையைக் கொண்டு சொற்களைத் தேடலாம். தமிழ் இணையப் பல்கலக்கழகத் தளத்தில் நான்கு அகரமுதலிகள் உள்ளன(செ.ப.பேரகராதி,பால்சு அகராதி,சண்முகம் பிள்ளை,சென்னைப் பல்கலைக்கழ ஆங்கிலம்-தமிழ் அகராதி)

விசைத்தமிழின் தமிழ்-ஆங்கிலம் அகராதி http://dictionary.sarma.co.in/Default.aspx

புதுக்கோட்டை சர்மா சானடோரியத் தயாரிப்பான விசைத்தமிழ் மென்பொருளின் தமிழ்- ஆங்கிலம் அகராதியில் ஏறத்தாழ 60,000 ஆங்கிலச் சொற்களுக்கு 2,30,000 தமிழ்ப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலிருந்தும் எந்த எழுத்துருவிற்கும் மாற்றிக் கொள்ள முடியும். ஒருங்குகுறியிலும் மாற்றிக் கொள்ள முடியும்.

அகராதி.காம் http://www.agaraadhi.com/d/DH.jsp

அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிப்பொறித்துறையும்,மொழியியல் ஆய்வுக்கூடமும் இணைந்து உருவாக்கியுள்ள மின் அகரமுதலித் தளம் அகராதி.காம் என்பதாகும்.இணையம் வழியாகத் தமிழ்,ஆங்கிலத் தட்டச்சுகளின் துணைகொண்டு தமிழ்ச்சொற்களுக்குரிய பொருளும் ஆங்கிலச்சொற்களுக்கு உரிய தமிழ்ப்பொருளும் அறியலாம்.இரண்டு இலட்சம் தமிழ்ச் சொற்களுக்கு உரிய பொருளும் விளக்கமும் இந்த அகரமுதலியில் உள்ளன. செல்பேசிகளிலும் அகராதி.காம் பயன்கொள்ள முடியும்.பலவகையான புதிய பயன்பாட்டுக்குத் தக இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்மா என்ற சொல்லைத் தமிழில் தட்டச்சிட்டுத் தேடும்பொழுது அந்தச் சொல் உணர்த்தும் பல பொருள்கள் உள்ளன.மேலும் அம்மா என்பதை விளக்கும்பொழுது அம்ம என்று வருவதும் அம்மா என்று திருக்குறளில் வரும் இடம் சார்ந்த மேற்கோளும்,அம்மா என்பதிலிருந்து உருவாகும் பிற சொல்வடிவங்களுக்கும்(அம்மாவிலிருந்து,அம்மாவுக்கு என்பது போல்...) அம்மா என்று இடம்பெறும் திரைப்படப்பபாடல் வரிகளும் உள்ளன.இந்த வகையில் பிற அகரமுதலிகளிலிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிப்பொறித்துறை அகரமுதலி குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

அப்பா என்ற சொல்லைத் தமிழில் தட்டச்சிட்டுத் தேடினால் அப்பா என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள சொற்கள்,தமிழில் சொற்பொருள் விளக்கம் காட்டப்பட்டுள்ளன. திருக்குறளிலிருந்து தவறுதலாக "மருந்தாகித் தப்பா" என்ற குறள் அப்பா என்பதற்குச் சான்றாக இடம்பெற்றுள்ளது. அகராதியில் இடம்பெறும் சொற்கள் தொடர்பான விளக்கங்களை நண்பர்களுக்கு மின்னஞ்சலாகவோ,பேசு புத்தகத்திலோ,டுவிட்டரிலோ,அச்சிடவோ தக்க வசதிகள் இந்த அகரமுதலியில் உள்ளன.திரைப்படம் தொடர்பான குறிப்பு இடம்பெறும் போது,படம், பாடலாசியர்,இசையமைப்பாளர்,பாடல் உள்ளிட்ட குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உலகப் போக்குக்கு ஏற்ப மின்னகரமுதலிகளைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது.இம் மின்னகரமுதலிகள் இன்னும் பல நிலைகளில் மேம்படுத்த வேண்டுவனவாக உள்ளன.முன்பு அச்சில் வெளிவந்துள்ள அகரமுதலிகள்தான் மின் அகரமுதலிகளாக வெளிவந்துள்ளன. இவை பழைமை போற்றும் முயற்சியாக உள்ளது.தமிழக அரசு அல்லது பல்கலைக்கழகங்கள் பலவகையான அகரமுதலிகளைப் புதியதாக உருவாக்கி மின் அகரமுதலிகளாக வைக்க வேண்டும்.படிமக் கோப்புகளாக உள்ள மின் அகரமுதலிகள் ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றப்பட வேண்டும்.அதுபோல் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் புதிய பதிப்பு மின் அகராதியாக மாறும்பொழுது உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் தளமாக விளங்கும்.இதுவும் ஒருங்குகுறியில் இருந்தால் சிறப்புநல்கும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி செம்பதிப்பு அச்சில் வருவதுடன் இணையத்தில் இருக்கும்பொழுது உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கும்,ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்கும் பேருதவிபுரியும்.மற்ற நிறுவனங்களின் அகரமுதலிகளை நாம் திருத்தவோ,விளக்கம் சேர்க்கவோ இயலாது. ஆனால் தமிழ் விக்சனரியை நாம் மேம்படுத்தி வளர்த்தெடுக்கமுடியும். தமிழில் வழக்குச்சொல்லகராதி,இணைச்சொல் அகராதி போன்று பல அகராதிகளை இணையத்தில் உள்ளிடுவதன் வழியாகத் தமிழ்ச்சொல்வளத்தை உலகுக்கு வழங்குமுடியும்.

(கோவை செம்மொழி மாநாட்டில் உலகப்புகழ்பெற்ற அகராதியியல் அறிஞர் கிரிகோரி சோம்சு(ஆங்காங்கு நாட்டு அறிஞர்) அவர்களின் தலைமையில் படிக்கப்பெற்ற ஆய்வுக்கட்டுரை. இதனைப் பயன்படுத்துவோர் உரிய இணைப்பு வழங்கவேண்டும்.கட்டுரையாசிரியன் பெயரையும் குறிப்பிடவேண்டும்.)

திங்கள், 19 ஜூலை, 2010

தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்


தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்

பாவாணர் பைந்தமிழ்த்தொண்டரும் குடந்தைப் பகுதியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தனித்தமிழ்ப்பணிகளை முன்னெடுத்தவருமான குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது.ஐயாவின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முயற்சியில் அவரின் குடும்பத்தினரும் தமிழன்பர்களும் ஈடுபட்டுத் தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதற்காகக் கடுமையாக உழைத்துப் பணிபுரிந்துள்ள இயக்குநர் சி.எம்.மணி அவர்கள் நம் அனைவரின் பாராட்டிற்கும், நன்றிக்கும் உரியவர். ஒரு மணி நேரம் ஓடும் இந்தக் குறுவட்டில் கதிர். தமிழ்வாணன் அவர்களின் ஆளுமை மிகச்சரியாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

தமிழுக்கு உழைத்த கால்டுவெல், போப் அடிகளார், சீகன் பால்கு, வீரமாமுனிவர், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்து தொடங்கப்பெறும் இக்குறும்படம் கதிர். தமிழ்வாணன் அவர்கள் பிறந்த தஞ்சை மாவட்டக் கதிராமங்கலம் பகுதியையும் அதன் அடையாளமாகக் காவிரி வளத்தையும் காட்டும் காட்சிகள் சிறப்பு. கதிர். தமிழ்வாணன் அவர்களின் இளமைக்காலத்தை நினைவுகூர சில காட்சிகளைப் படைத்துக்காட்டியுள்ளமை இயக்குநரின் ஆளுமைத்திறனுக்கு நல்ல சான்று. மாணவப்பருவத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரைகேட்டுத் தமிழ்வாணன் அவர்களுக்குத் தமிழ்ப்பற்று உண்டான வரலாறு மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளது.

கதிர். சுப்பையன் என்ற பெயர்கொண்ட ஐயா தமிழ்வாணனாக மலர்ந்துள்ளமையும் அவர்களின் முதல்மனைவியாரின் இல்லறச் சிறப்பும், இரண்டாம் மனைவியார் ஐயாவின் மறைவுக்குப் பிறகு ஆற்றிவரும் பணிகளும் மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளன. கதிர். தமிழ்வாணன் அவர்களின் இல்லத்தில் உள்ள நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், திருக்குறள் சுழற்சிமுறையில் எழுதிய பாங்கு திருக்குறள் தம் வீட்டிலிருந்து ஒலிபரப்பிய செயல் யாவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் எசு.எம்.உபயதுல்லா அவர்கள் கதிர். தமிழ்வாணன் அவர்களின் சிறப்பைப் பலபடப் புகழ்ந்துரைத்துள்ளமை போற்றுதலுக்கு உரியது. கதிர். தமிழாவணன் கல்வி பெற்றதும், அவருக்குப் பயிற்றுவித்த ஆசிரியப்பெருமக்களும் பள்ளிகளும் நன்கு அறிமுகம் செய்யப்பெற்றுள்ளன.

கதிர்.தமிழ்வாணனை அறிந்தோர் உரிய இடங்களில் பேசி ஐயாவின் பெருமைகளை நினைவுகூர்ந்துள்ளதும் சிறப்பு. கதிர். தமிழ்வாணன் அவர்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபொழுது ஆற்றிய மிகச்சிறந்த தமிழ்ப்பணிகள் சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளன. பிற ஊர்களுக்குச் சென்று தனித்தமிழ் வகுப்புகள் நடத்தியமை, திருமணம், புதுமனைப் புகுவிழா, கோயில் குடமுழுக்கு நடத்தியுள்ள பாங்குகளும் தக்கபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உடல் நலம் குன்றிப் புதுச்சேரி மகாத்துமாகாந்தி மருத்துவமனையில் ஐயா பண்டுவம் பெற்றுவந்த பொழுது நான் எடுத்து வைத்திருந்த சில அரிய படங்களையும் இயக்குநர் நன்கு பயன்படுத்தியுள்ளார்.அவர்க்கு என் நன்றி.

பின்னணி இசையும்,காட்சிப்பொருத்தங்களும் சிறப்பு. 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என ஒலிக்கும் இசையமைப்பாளர் செல்வநம்பியின் பாடலும் இசையும் நெஞ்சில் நிலைக்கும். அதுபோல் ஒளியோவியம் வரைந்து காட்சிப்படுத்திய பிரேம்குமார், படத்தொகுப்பில் ஈடுபட்ட வீரா உள்ளிட்ட கலைஞர்களுக்கு நம் பாராட்டுகள்.தமிழார்வமுடையவர்கள் கண்டு மகிழ வேண்டிய அரிய ஆவணப்படத்தின் குறுந்தகடு தொடர்பாக விவரம் வேண்டுவோர் இயக்குநர் திரு.சி.எம்.மணி அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.

அவர் செல்பேசி எண் + 91 9843990686
மின்னஞ்சல் cm.mani@gmail.com
குறுவட்டின் விலை 180 உருவா

ஞாயிறு, 18 ஜூலை, 2010

நாட்டுப்புறவியல் என்னும் என் நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது ...


நூல் அட்டை முகப்பு

நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் 2006 ஆம் ஆண்டு நான் எழுதிய நூலின் முதற்பதிப்பு மாணவர்களிடமும் பொது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக அச்சிட்டபடிகள் இரண்டாண்டுக்கு முன்பே விற்றுத்தீர்ந்தன. அன்பர்கள் பலர் வேண்டியும் மீண்டும் அச்சிடமுடியாமல் இருந்தது.

அண்மையில் சிங்கப்பூர்,மலேசியா சென்றபொழுது என் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்ட பலரும் இந்த நூலின் தேவையை வலியுறுத்தினர்.பல கல்லூரிகளில் இலக்கியமன்ற விழாக்களில் நாட்டுப்புறப்பாடல்களை நான் பாடி விளக்கியபொழுது பலரும் நூல் வேண்டினர். இணையத்தை இன்று பரப்ப நான் முனைவதுபோல் நாட்டுப்புறப்பாடல் பரப்பும் முயற்சியிலும் தொகுக்கும் முயற்சியிலும் பல்லாண்டுகளாக நான் ஈடுபட்டுவருவது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

நாட்டுப்புறவியல் என்ற பாடம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளது. மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் புரியும்படி இந்த நூலை எளிய நடையில் எழுதியிருந்தேன். நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர் தே.லூர்து உள்ளிட்டவர்கள் இந்த நூலைக் கற்றுப் பாராட்டி எழுதினர்.

இணையத்தில் உள்ள அரிய செய்திகளையும் நாட்டுப்புறவியல் சார்ந்த இணைய தளங்களையும் இந்த நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளமை குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். நூலின் பிற்பகுதியில் அரிய நாட்டுப்புறப்பாடல்கள் பல இணைக்கப்பட்டுள்ளன. என் நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது ...

தேவைப்படுவோர் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்
muelangovan@gmail.com
செல்பேசி +91 7708273728
அஞ்சல் முகவரி
வயல்வெளிப் பதிப்பகம்,இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி)
அரியலூர் மாவட்டம்-612901
தமிழ்நாடு,இந்தியா

விலை 80 உருவா
பக்கம் 160

வியாழன், 15 ஜூலை, 2010

நேர்மையின் மறுபெயர் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.


திரு.சுவரன்சிங்.இ.ஆ.ப.அவர்களுடன் நான்

நான் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில்(1993-97) திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளிவரும் நாளிதழ்களில் நாளும் திரு.சுவரன்சிங்.இ.ஆ.ப பற்றி செய்திகள் இருக்கும். திரு. சுவரன்சிங் அவர்கள் திருச்சிராப்பள்ளியின் மாநகராட்சி ஆணையராகப் பணியிலிருந்தபொழுது திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தன்னைப் புதியதாக மாற்றிக்கொண்டு மாநகரமே அழகாகக் காட்சியளித்தது. வடநாட்டிலிருந்து வந்தாலும் நன்கு தமிழ் பேசுகிறார் என்று மக்களும் ஏடுகளும் புகழ்ந்தனர்.

இரண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுவரன்சிங் அவர்களைக் காணச் சென்றதாகவும் தப்பும் தவறுமாக அவர்கள் ஆங்கிலத்தில் உரையாட முயன்றபொழுது "தம்பி நீங்கள் தமிழில் பேசுங்கள்" என்று அழகுதமிழல் ஆணையர் சொன்னதும் அவர்கள் மருண்டு தமிழில் பேசித் தங்கள் கோரிக்கைகளைச் சொன்னதாகவும் உடன் அவர் ஆவன செய்ததாகவும் கல்வித் துறையினர் ஆர்வமுடன் பேசினர்.

மலைக்கோட்டையைச் சுற்றி விதிமுறைகளை மீறிப் பெரும் பணக்காரர்கள், அரசியல் வாணர்கள் கட்டடங்கள், அடுக்குமாடிகளைக் கட்டி விதிமுறை மீறல்களில் ஈடுபட்டபொழுது அவற்றை உரிய விதிகளைக் காட்டி இடித்து, மலைக்கோட்டையின் மாண்பு கெடாமல் காத்த பெருமை நம் சுவரன்சிங் அவர்களுக்கே உண்டு.அதுபோல் திருச்சிராப்பள்ளியின் சாலைகள் அழகுபெற்றதும் தெப்பக்குளம் உள்ளிட்டவை தூய்மையானதும் சுவரன்சிங் அவர்களின் முயற்சியால் என்றால் அது மிகையில்லை.

ஒவ்வொரு பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும் திரு. சுவரன்சிங் இ.ஆ.ப.அவர்கள் முன்மாதிரியாக உள்ளத்தில் பதிந்தார்கள்.ஆ.ப.செ.அப்துல்கலாம் அவர்கள் குறிப்பிடுவதுபோல் எங்களுக்குக் கனவு நாயகனாக அப்பொழுது சுவரன்சிங் தெரிந்தார்கள். பள்ளி,கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு மாணவர்களைச் சந்தித்து நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும்,சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் மாணவ உள்ளங்களில் விதைத்தவர்.அவரை ஒரு முறை பார்ப்போமா?அவர் நற்பணிகளைப் பாராட்டிக் கைகுலுக்குவோமா? என்று நாங்கள் காத்துக்கொண்டிருந்த காலம் அது.

இந்தச் சூழலில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் என் பேச்சு ஒலிப்பதிவுக்காக நான் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். வானொலி நிலையம் அருகில் சாலைகளில் கைகாட்டிப் பலகைகளில் மஞ்சள்,கறுப்பு நிறங்களில் சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் அழகாக எழுதப்பட்டிருந்தன. தமிழ் இல்லை. எனக்கு இச்செயல் உறுத்தலாக இருந்தது.என் வானொலிப் பேச்சைப் பதிவு செய்துவிட்டு வந்து முதல் வேலையாக ஆணையர் சுவரன்சிங் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகை மடல் பின்வருமாறு விடுத்தேன். பெரும் மதிப்பிற்குரிய ஐயா, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சாலைகளில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக BHARATHIDASAN ROAD என்று எழுதப்பட்டுள்ளது.ஆங்கிலக் கல்வியறிவில்லாத மக்கள் பலரும் பயன்படுத்தும் சாலைகளில் தமிழில் பெயர் எழுதப்பட்டால் மகிழ்வேன் எனவும் தேவையெனில் ஆங்கிலப்பெயரைச் சிறிய எழுத்தில் தமிழுக்குக் கீழ் வரையலாம் எனவும் ஆவன செய்யும்படியும் வேண்டியிருந்தேன்.

அவர்கள் மடல் கண்ட மறுநாள் திருச்சிராப்பள்ளி நகருக்கு இயல்பாகச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. குறிப்பிட்ட அந்தச் சாலை வழியாகச் சென்றேன். அந்தச் சாலை உள்ளிட்ட பெயர்ப்பலகைகள் யாவும் தமிழில் பெரிய எழுத்திலும் ஆங்கிலத்தில் சிறிய எழுத்திலும் மாற்றப்பட்டு எழுதப்பட்டிருந்தன. திரு.சுவரன்சிங் ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்து ஒரு மடல் விடுத்தேன். அதன் பிறகும் ஐயா அவர்களின் பணிகளை நாளேடுகளில் கண்டு களித்தேன்.

அவருக்குச் சில மாதங்களின் பின்னர்ப் பணி மாறுதல் அமைந்தது. திருச்சிராப்பள்ளி மக்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டு அரசு அவரைப் பணிமாறுதல் செய்யக்கூடாது என்று தம் எதிர்ப்பைப் பல வழிகளில் தெரிவித்தனர். அதன் பிறகு பணி மாறுதலால் நானும் பல ஊர்களுக்குச் சென்றேன். அவ்வப்பொழுது வேறு துறைகளில் சுவரன்சிங் அவர்கள் பணிபுரிவதை நாளேடுகளின் வழியாக அறிந்தேன்.

அண்மையில் கோவை செம்மொழி மாநாட்டுக்குச் சென்றபொழுது உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அ.வ.வேலு அவர்கள் விருந்தோம்பும் அன்பர்களை ஆய்வுசெய்தபடி அங்கும் இங்கும் ஆர்வமுடன் செயல்பட்டார்கள். அவர் அருகில் தலைப்பாகை அணிந்த சீக்கியப் பெருமக்களின் தோற்றத்தில் ஓர் அதிகாரி நின்றிருந்தார். இவர் முகம் எங்கோ பார்த்ததுபோல் உள்ளதே என்று நினைத்துப்பார்த்தபடி உணவு உண்டேன். நினைவுகள் நிழலாடின.

ஆம்.17 ஆண்டுகளுக்கு முன் எங்கள் உள்ளத்தில் குடிபுகுந்த, நேர்மைக்குப் பெயர் பெற்ற அதே திரு.சுவரன்சிங்.இ.ஆ.ப.அவர்கள் இவர்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.ஓய்வு நேரமாகப் பார்த்து அருகில் சென்று என்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டினேன். அவர்கள் மகிழ்ந்தார்கள். அன்பொழுக நன்மொழிகள் பகர்ந்தார்கள்.கையிலிருந்த என் நூல்கள் இரண்டை அன்பளிப்பாக வழங்கினேன்.

பதினேழு ஆண்டுகளாக நான் சந்திக்கக் காத்திருந்த அந்தக் காத்திருப்பைப் பாராட்டினார்கள். அவருடன் அருகில் இருந்து படம் எடுத்துக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்தினேன்.இசைவு தந்தார்கள்.நேர்மையுடன் பணியாற்றி மக்கள்தொண்டு செய்து நாட்டை முன்னேற்றும் அதிகாரிகளுள் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.அவர்கள் முதன்மையானவர் என்றால் அது புகழ்மொழி மட்டும் இல்லை.நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி இயற்கை எய்தினார் ...


தெய்வத்திரு.ஏகம்மை ஆச்சி அவர்கள்

மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி அவர்கள் இன்று(13.07.2010) காரைக்குடியில் உள்ள தம் கதிரகம் இல்லத்தில் காலை 10.30 மணிக்கு இயற்கை எய்தினார். 90 அகவை கொண்டு நிறைவாழ்வு வாழ்ந்த ஆச்சி அவர்கள் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஐயா அவர்களின் தமிழ்ப்பணிகளுக்குப் பேருதவியாக விளங்கியவர்கள்.வ.சுப.மாணிக்கனார் அவர்கள் தம் இறுதிக்காலத்தில் விருப்பமுறி எழுதி வைத்தார்கள்.அதன்படி தம் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அவற்றை முற்றாக நடைமுறைப் படுத்தியதில் ஆச்சி அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. வ.சுப.மாணிக்கனாரிடம் பயின்ற மாணவர்கள் யாவரும் ஆச்சி அவர்களை அம்மா என்று அன்பொழுக அழைத்து மதிக்கும் சிறப்பிற்கு உரியவர்கள்.

ஏகம்மை ஆச்சி அவர்கள் நெற்குப்பை என்ற ஊரில் இலட்சுமணன் செட்டியார்,கல்யாணி ஆச்சி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர்கள். ஆச்சி அவர்களுக்கும் அறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்களுக்கும் 14.11.1945 திருமணம் நடந்தது. மணப்பயனாக இவர்களுக்குத் தொல்காப்பியன்,பூங்குன்றன்,பாரி,தென்றல்,மாதரி,பொற்றொடி என ஆறு மக்கட் செல்வங்கள்.

வ.சுப.மாணிக்கனார் தம் மனைவியாகிய ஏகம்மை ஆச்சி பற்றி பின்வருமாறு பதிவு செய்துள்ளர்.

" நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழுநேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி.திட்டமிட்டுக் கணக்கிட்டுக் குடும்பம் நடத்தும் கலை வல்லவள்.உலகியலறிவு மிக்கவள்.நான் மேற்கொண்ட பல துணிவுகட்கு எளிதாக உடன்பட்டவள்.பதவிகளை இடையே துறந்த காலையும்,எதிர்காலம் என்னாகுமோ என்று கலங்காமல், உங்கட்கு இது நல்லது என்று பட்டால் சரிதான் என்று சுருங்கச் சொல்லி அமைபவள். குடும்பவுழைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. ( தற் சிந்தனைகள், கையெழுத்துப்படி பக்.68-69) - மேற்கோள் முனைவர் இரா.மோகன்)

காரைக்குடியில் 15.07.2010 இல் ஆச்சி அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பெற உள்ளது.

தெய்வத்திரு.ஏகம்மை ஆச்சி அவர்கள்

வ.சுப.மாணிக்கனார் இல்ல முகவரி:

"கதிரகம்"
சுப்ரமணியபுரம் 6 வது வீதி,
காரைக்குடி,தமிழ்நாடு

ஞாயிறு, 11 ஜூலை, 2010

தமிழ்த்தொண்டர் தி.ப.சாந்தசீலனார் மறைவு


தி.ப.சாந்தசீலனார்(19.05.1959-11.07.2010)


புதுச்சேரியில் பொ.தி.ப.அறக்கட்டளை என்னும் அறநிலை வழியாகப் பல்லாயிரம் ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு உதவிகள் புரிந்தவரும்,தமிழ்க்காவல்,தெளிதமிழ் உள்ளிட்ட தூயதமிழ் ஏடுகள் சிறப்பாக வெளிவரப் பொருட்கொடை புரிந்தவரும் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளருமாகிய பொ.தி.ப.சாந்தசீலனார்(அகவை 51) இன்று(11.07.2010) மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரியில் அவர் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தமிழ்ப்பற்றாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புதுச்சேரியில் நான் பணிக்கு வந்த நாள் முதலாக அவர் செய்த தமிழ்ப்பணிகளை அவர் நாளிதழ்களில் தரும் விளம்பரம் வழியாக அறிந்து அவர் இல்லம் சென்று கண்டு வணங்கினேன். அவர் தமிழக நாட்டுப்புறக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.என் விருப்பமும் அதுவாகும்.அதனை உணர்ந்து அவர் முதல்நாள் சந்திப்பிலேயே என்னைக் கூடப்பாக்கம் என்ற ஊருக்கு ஓர் இரவில் அழைத்துச்சென்று நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவோரைப் பாடச்செய்து என் உள்ளத்தில் இடம்பெற்றார்.அவர் உள்ளத்தில் நான் குடிபுகுந்தேன்.அன்று தொடங்கி அவர் காட்டிய அன்பும் பரிவும் நினைத்து நினைத்துக் கலங்குகிறேன்.

காந்தியக் கொள்கைகளில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த சாந்தசீலனார் தூய காந்திய வாழ்க்கை நடத்தினார். அரச வாழ்வு நடத்தும் அளவு பொருள்வளம் பெற்றிருப்பினும் அதே வேளையில் மிக எளியவராக இருப்பார். நல்ல உடற்பயிற்சி செய்து நல்லுடல் வளம் பெற்றவர். அரியபுத்திரனார் உள்ளிட்ட தமிழாசிரியர்களிடம் தமிழக் கல்வி கற்ற அவருக்குத் திருப்புகழ் உள்ளிட்ட நூல்கள் மனப்பாடம். வேறு பல அரிய தமிழ்ப்பாடல்கள் மனப்பாடம் அடிக்கடி தம் பேச்சில் எடுத்துரைத்து மகிழ்வார். மூலிகைகளில் நல்ல ஈடுபாடு உடையவர். வேட்டையாடுவதில் வல்லவர். சுற்றுச்சூழல் ஆர்வலர்.மரபு மரங்கள் நடுவதைக் கடமையாகக் கொண்டவர்.

தமிழாசிரியர் ஒருவரை எளிய மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்க அமர்த்தி நாளும் திருக்குறள் தொண்டு செய்துவந்தவர். யோகம் பயிற்றுவிக்கப் பல ஊர்களில் ஆசிரியர்களை அமர்த்திப் பல மாணவர்களுக்கு இலவசமாக யோகக்கலை பயிற்றுவித்தவர். பள்ளி,கல்லூரித் திறப்புக் காலங்களில் எளிய குடும்பம் சார்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் அவர் இல்லத்தில் குழுமி நின்று அவர் வழங்கும் உதவி பெற்றுச்சென்றனர். உடைகள்,மிதியடிகள், பை,சுவடிகள்,உடை தைக்க பணம் என்று பல நூறு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற உதவியதைக் கண்ணால் கண்டு களித்தவன்.

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்கான கட்டணத்தை உறுதி செய்து கொண்டு பண உதவி செய்தவர்.தமிழ் விழாக்களுக்குப் பொருட்கொடை வழங்குவார்.மறைந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகன் அவர்களிடத்து நல்ல மதிப்பு கொண்ட சாந்தசீலனார் தம் குடும்ப நிகழ்வுகளுக்கு ஐயாவை அழைத்துப் பெரும் பொருள் வழங்குவதை மகிழ்வுச் செயலாகக் கொண்டவர்.

சாந்தசீலனார் கவிதைப்போட்டி,திருக்குறள் கட்டுரைப் போட்டி நடத்திப் பல இலட்சம் பரிசு வழங்கியவர். திருமுறை மாநாடு கண்டவர்.கோயில் குளங்களுக்கு வாரி வழங்கியவர் அத்தகு கொடையுள்ளம் கொண்ட தி.ப.சாந்தசீலனாரை இழந்து புதுச்சேரி மக்கள் கலங்கிக் கையற்று நிற்கின்றனர்.அவர் உதவியால் மணம் முடித்தோர்,அவர் வழியாகக் கல்வித்தொகை பெற்றோர்.அவர் வயலில் உழுது பயன்கொண்டோர் அவரை நம்பியிருந்த அனைவரும் கலங்கும்படியாகத் திடுமென இயற்கை எய்திய அன்னாரை இழந்து வருந்தும் உள்ளங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலும் உரியதாகும்.

தி.ப.சாந்தசீலனார் மறைந்த செய்தி மாணவர்களுக்குப் பரிசளிக்கும் ஒரு நிகழ்வில் இருந்த எனக்குத் தொலைபேசியில் அவர் உதவியாளர் வழியாகக் கிடைத்து நிகழ்ச்சியைப் பாதியில் முடித்துக்கொண்டு அவர் இல்லம் சென்று அக வணக்கம் செலுத்தினேன். புதுச்சேரியிலும் அயலூரிலும் உள்ள தமிழன்பர்களுக்குச் செல்பேசியில் தகவல் தெரிவித்தேன்.

நாளை(12.07.2010) மாலை 4 மணிக்குப் புதுச்சேரி கருவடிக்குப்பம் நன்காட்டில் தி.ப.சாந்தசீலனாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் நினைவுகள் ...

வீ.ப.கா.சுந்தரம் வாழ்ந்த பசுமலை இல்லம் 

     மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை படிக்க 2006, மே 19,20 ஆகிய நாள்களில் சென்றிருந்தேன். மதுரையை அடுத்த சக்குடி என்னும் ஊரில் பிறந்த என் நண்பர் ச.கு.சீனிவாசன் அவர்கள் என் வருகைக்கு மதுரைத் தொடர் வண்டிநிலையத்தில் காத்திருந்தார். அவர் விருந்தினனாகவும் அன்று இருந்தேன். அவர்களின் ஊர் வைகையாற்றில் இருந்தது. சமணர்களைக் கழுவேற்றியப் பகுதி அருகில்தான் உள்ளது என்றார். இரவுப்பொழுதில் அவரும் நானும் அவர் இல்லத்துக்குச் சென்று நெடு நாழிகை உரையாடி வைகறையில் கண்ணயர்ந்தோம். 

    காலையில் எழுந்து நான் மாநாட்டுக் கருத்தரங்கிற்குப் புறப்பட்டதாக நினைவு.அவர் ஊருக்கு அருகில்தான் திருப்பாச்சி என்ற ஊர் இருப்பதாகவும் சொன்னார். அங்கு உருவாகும் கத்தி, அருவா புகழ்பெற்றது (திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா-வைரமுத்து). இந்தமுறை ஐயா வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இல்லம் செல்வது என்றும், அவர் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களைக் கண்டு ஐயாவின் இறப்பு, மற்ற விவரங்களைக் கேட்பது என்றும் நினைத்திருந்தோம். நான் திட்டமிட்டபடி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கட்டுரை படித்து 20 ஆம் நாள் பிற்பகல் மதுரை-பசுமலைக்கு வருவது என்றும் அங்கு என்னை நண்பர் சீனிவாசன் எதிர்கொண்டு மீண்டும் அழைத்துக் கொள்வது என்றும் திட்டம். அதன்படி மே, 20 பிற்பகல் நான் மதுரை நகருக்கு வந்தேன். 

     நண்பர் சீனிவாசன் அவர்கள் எனக்காக ஒரு உந்துவண்டியில் காத்திருந்தார். இருவரும் நேரே பசுமலை சென்றோம். (ஐயாவின் இல்லத்துக்கு நான் முன்பே ஒருமுறை சென்றுள்ளேன் (19.05.2000). நான் திருநெல்வேலியில் ஒரு கருத்தரங்கிற்குச் சென்றபொழுது வழியில் உள்ள மதுரை-பசுமலையில் ஐயா அவர்கள் இருப்பது அறிந்து பசுமலை சென்றிருந்தேன். நன்கு விருந்தோம்பினார். இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து பிரிந்த(1998) பிறகு மீண்டும் சந்திப்பது இப்பொழுதுதான் முதல் முறை. எனவே இருவரும் மனம் திறந்து பேசினோம். 

    எனக்கு நிலைத்த வேலை இல்லாமல் இருப்பதும், திருமணம் ஆகாமல் இருப்பதும் ஐயாவுக்குப் பெருங்கவலையாக இருந்தது. அவர் பங்குக்கு அவரும் பல இடங்களில் எனக்கு மணப்பெண் வேண்டியதையும் மறைமுகமாக அறிவேன். நம் தகுதிக்கும் மேம்பட்ட பல இடங்களில் ஐயா பெண்பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அத்தகு பேச்செல்லாம் நேரில் பார்த்தபொழுது மகிழ்ச்சியாகப் பெருக்கெடுத்தது. மாலைவரை ஐயாவுடன் இருந்துவிட்டுப் புறப்பட்டேன். 

    அப்பொழுது மதுரையில் நடந்த ஒரு இசை குறித்த நிகழ்வில் பங்கேற்க அரிமளம் அவர்கள் வந்தார். அவருக்கு இடையூறு இல்லாமல் நான் ஐயாவிடம் விடைபெற்றேன் என்பதும் நினைவுக்கு வருகின்றது) பசுமலையில் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் குடியிருந்து மறைந்த வீட்டுக்கு நானும் நண்பரும் சென்றோம். ஐயா அவர்கள் நடமாடிய அந்த வீதி இப்பொழுது ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. மெதுவாக அருகில் வேலைசெய்துகொண்டிருந்த அகவை முதிர்ந்த ஆயா ஒருவரிடம் நான் ஐயாவின் மாணவர் என்றும், அவருடன் ஒன்றாகப் பணிபுரிந்தவன் என்றும் அவர் மறைவு பற்றி எனக்குக் காலம் கடந்தே தெரியும் என்றும் கூறி அவர் நினைவாக அவர் வாழ்ந்த வீட்டையாவது பார்த்துச் செல்வோமே என நான் புதுச்சேரியிலிருந்து வருவதாக உரைத்தேன். 

     உடனே அந்த ஆயா ஐயாவின் மறைவு பற்றியும் அதன் பிறகு அவர்களின் வீடு விற்பனை செய்யப்பட்டது பற்றியும் எடுத்துரைத்தார்கள். அவர்களின் உறவினர்கள் இந்தப் பகுதியில் இருப்பதாகவும் சொன்னார்கள். ஞானசம்பந்தர் மனை எனப் பெயரிட்டு அழைக்கப்பெற்ற அந்த இல்லத்தை வெளிப்பகுதியிலிருந்து ஏக்கத்துடன் பன்முறையும் பார்த்தேன். ஐயா இருந்தபொழுது நான் வந்த அந்த வீட்டில் எனக்கு இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை. ஐயா இல்லாத தனிமைத்துயரமே எனக்கு இருந்தது. இந்த வீடு வாங்கியவர் மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற அன்பர் என்பது அறிந்தேன். எவ்வளவோ தமிழார்வலர்கள் இருந்தும் ஐயாவின் வீட்டை வாங்கி நினைவில்லமாக மாற்ற இயலாமல் அவரவர் வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்துள்ளோமே என்று வருந்தினேன். 

    தக்க கொடையுள்ளம் கொண்டவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருந்தால் பத்து இலட்சம் உருவா செலவு செய்து ஐயாவின் நினைவுக்கு அந்த இல்லத்தை வாங்கி அவர் பெயரில் காலத்துக்கும் பாதுகாத்திருக்கலாம். அந்த வீட்டை வாங்கியவர்கள் அதன் சிறப்பு உணராமல் இடித்து அவ்விடத்தில் புதிய வீடு கட்டினால் என்ன செய்வது என்று நினைத்து நினைவுக்குப் பல படங்களை எடுத்துக் கொண்டேன். ஐயா உயிருடன் இருக்கும்பொழுது தாள முழக்கமும்,இசையாய்வுச் செய்திகளும் காற்றில் பரவிய அந்த இல்லத்தின் முகப்பில் ஒரு மாட்டைக்கட்டி வைத்திருந்தனர். அதனை மெல்ல அவிழ்த்து ஓரமாகக் கட்டிவிட்டுப் பல கோணங்களில் அந்த வீட்டைப் படம் பிடித்தேன். அதன் பிறகு அந்த ஆயாவிடம் விடைபெற்று இசைமேதையின் உறவினர்களைத் தேடும் பணியில் நானும் நண்பரும் ஈடுபட்டோம். 

    பல தெருக்களைக் கடந்தும் எங்களால் உரியவர்களை உடனடியாகக் காணமுடியவில்லை. ஒருவழியாக அவரின் மருமகள் என்று நினைக்கிறேன். ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஒரு அம்மாவைக் கண்டு உரையாடிக் குடும்ப நிலை அறிந்தேன். வீடு விற்கப்பட்டதன் பின்னணியும் அறிந்தேன். எப்படியோ மீட்க முடியாதபடி வீடு கை நழுவிப் போனதாக உணர்ந்தேன். அதன் பிறகு ஐயாவை அடக்கம் செய்த கல்லறை எங்கு உள்ளது என்று கேட்டு அங்குச் சென்றோம். அந்தப் பகுதியில் இருந்த பல கல்லறைகளை நோட்டமிட்டுக் கடைசியில் ஐயா மீளாத்துயில்கொண்டுள்ள கல்லறைக்கு வந்தோம். ஐயா கல்லறை மிகத் தூய்மையாக இருந்தது. அதன் அருகில் வேறொரு கல்லறைமேல் ஒரு குடிமகன் மீளும் துயிலில் இருந்தான். அவனுக்கு இடையூறு இல்லாமல் ஐயாவின் கல்லறையைப் பலமுறை சுற்றி வந்து அவர் நினைவாகச் சில மணிப்பொழுது அங்கு இருந்தோம். அதன் பிறகு சில படங்களையும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன். 

  ஐயாவைப் பிரிந்த மனத்துயருடன் கல்லறையை நாங்கள் கடக்கும்பொழுது அருகில் கடந்து சென்ற தொடர்வண்டியின் ஓசையால் அப்பகுதி அதிர்ந்தபடி இருந்தது. அதுபோல் ஐயாவின் நினைவும் என் உள்ளத்தில் அதிர்ந்தபடியே உள்ளது.

வீ.ப.கா.சுந்தரம் வாழ்ந்த பசுமலை இல்லம்

ஐயாவின் வீட்டு வாசலில் நான்

 
ஐயாவின் இல்லத்தின் முகப்பில் மாடு கட்டப்பட்டிருந்த காட்சி

இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் மீளாத் துயில்கொள்ளும் கல்லறை

 
இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் மீளாத் துயில்கொள்ளும் கல்லறை

செவ்வாய், 6 ஜூலை, 2010

என் ஆறாம் வகுப்பு நினைவுகள்...


நான் ஆறாம் வகுப்பில் படித்தபொழுது எடுக்கப்பெற்ற படம்

 எங்கள் ஊருக்கு முகவரி கங்கைகொண்டசோழபுரம். இதனை அடுத்துள்ள சிற்றூர் இடைக்கட்டு.

 எங்கள் ஊரான இடைக்கட்டிற்கு அடுத்துள்ள ஊர்தான் உள்கோட்டை. இரு ஊர்களும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போன்று நெருக்கமானவை. உள்கோட்டைக்குத் தந்தை பெரியார் அவர்கள் வந்து அவர் கையால்தான் ஊருக்கு மின்சாரம் வழங்கப்பட்டது (1967). கலைஞர் எங்கள் ஊருக்கு வந்துள்ளார். நான் மாணவனாக இருந்தேன். இடைக்கட்டினை ஒட்டிய உள்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.

 திரு.சோமசுந்தரம் என்ற ஆசிரியர்தான் எனக்கு அகரம் பயிற்றுவித்த ஆசான். அவர் ஒரு நல்ல நாளில் நெல்லில் அகரம் எழுதித் தமிழ் நெடுங்கணக்கை அறிமுகம் செய்துவைத்தார். திரு.சம்பந்தம், திருமதி எமிலி டீச்சர், கிருட்டினன் ஆசிரியர், சுப்பிரமணியம் ஆசிரியர், இராமலிங்கம் ஆசிரியர், பழனியாண்டி ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் எனக்குத் தொடக்கப்பள்ளியில் பயிற்றுவித்தவர்கள். திரு.தனபால் ஆசிரியர் அவர்களும் வேறொரு இராமலிங்கம் ஆசிரியரும் எனக்கு ஆசிரியர்களாவர்.

 ஐந்தாம் வகுப்பு படித்து முடித்ததும் ஆறாம் வகுப்பில் நான் உள்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். திரு.நமச்சிவாயம் என்பவர் தலைமையாசிரியராக இருந்து என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டார் என்று எனக்கு நினைவு. அப்பொழுது திரு.நீதியப்பன் ஐயாவும் அங்குப் பணியில் இருந்தார்கள். இவர் கன்னியாகுமரி ஊரினர். எங்கள் பகுதி மக்களுக்கு இவர் தெய்வம் போன்றவர். இன்றுவரை அவரை நினைவுகூரும் மக்களும், அவர்களின் குடும்ப நிகழ்வுகளுக்குச் சென்றுவரும் அன்பர்களும் உண்டு. அவர் பெயரை உச்சரித்தால் என் மாமா பேராசிரியர் கு.அரசேந்திரன் கண்ணீர்விட்டுக் கலங்கிவிடுவார். அந்த அளவு எங்கள் பகுதி மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்தவர். அவரையடுத்துத் திருவாளர் சுந்தரராசன் என்பவர் தலைமையாசிரியர். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர்.

 நான் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் நான் பள்ளிக்குச் சென்று வந்தமை நன்கு நினைவில் உள்ளது. நான் விளையாட்டில் ஆர்வம் உடையவன். சிறு பொடியனாக இருந்தபொழுது அரக்கு நிறத்தில் கால் சட்டையும் அதே நிறத்தில் வைக்கிங் பனியனும் அணிந்து விளையாடுவது எனக்கு விருப்பம். ஒரு விளையாட்டுப் போட்டியின் பொழுது கபடி விளையாடியபொழுது, கீழே விழுந்து என் நாக்கில் என் பல்வெட்டி ஒரு கிழமை உண்ணமுடியாமல் போனதும் நினைவுக்கு வருகின்றது. திரு.சுந்தரராசன் தலைமையாசிரியர் வருவது தெரியாமல் பள்ளிக்கு எதிரில் இருந்த நீர்த்தேக்கத் தொட்டியின் இரும்புப் படிகளில் கடைசி படி வரை ஏறி அவரிடம் மாட்டி அடி வாங்கியதும் உண்டு. கைப்பந்து விளையாடும்பொழுது பந்து தூக்குவதற்கு ஓடித் தவறிப் பந்தில் விழுந்து மிக்கபெரிய விபத்தில் சிக்கி மீண்டதும் இன்று நினைத்தாலும் அச்சம் கொள்ளச் செய்கின்றது.

 ஆறாம் வகுப்பில் எங்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தவர்கள் திரு. குஞ்சிதபாதம் ஐயாவும் திரு.சிவகுருநாதன் ஐயாவும் ஆவார்கள்.இருவரும் பொறுப்புடன் தமிழ் பயிற்றுவிப்பார்கள். குஞ்சிதபாதம் அவர்கள் கட்டுரை எழுதப் பழக்குவார். திருத்துவார். நன்கு பாடுவார். ஆண்டு விழாக்களில் அவர்தான் பெண்களுக்கு இசைப்பாடல்களைப் பயிற்றுவித்து மேடையில் தோன்றச் செய்வார். புலவர் சிவகுருநாதன் அவர்கள் பாடம் நடத்துவார்கள். தமிழில் நான் நன்கு படிப்பேன். என்னைத்தான் வகுப்புத் தலைவனாக அமர்த்தினார்கள். நான்தான் மாணவர்களின் மனப்பாடத்திறனைச் சோதிப்பவன். எனவே எனக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு இருப்பர். ஆறாம் வகுப்பு முதல் தனிப்பயிற்சிக்கு அம்மா அனுப்பிவிட்டார்கள்.

 பள்ளி முடிந்து மாலை நாலரை மணிக்கு வீடு வருவேன். மீண்டும் ஆறு மணிக்கு ஆசிரியர் இல்லம் சென்றுவிடுவேன். ஆசிரியர் வீட்டில் படித்துவிட்டு, அங்கேயே கொண்டு போகும் உணவை உண்டு இரவு உறங்குவேன். காலையில் எழுந்து படித்துவிட்டு அதன் பிறகு வீட்டுக்கு வந்து, மீண்டும் பள்ளிக்கு ஆயத்தம் ஆவோம்.

 அவ்வாறு எங்களுக்கு இரவு வகுப்பில் பயிற்றுவித்தவர் திரு.இராமன் ஆசிரியர் அவர்கள் ஆவார். அவர் கறுப்புத் துண்டு அணிந்து பள்ளிக்கு வருவார். இன்றும் அதுதான் வழக்கம். அதன் பொருள் எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது. ஆம் அவர் தந்தை பெரியார் கொள்கைகளில் ஆழமான ஈடுபாடு உடையவர். அவர் மகன் ஒருவன் பாரதிதாசன். இன்னொருவன் எழில் என்று நினைக்கிறேன். மகள் தேன்மொழி. என்னுடன் பயின்ற வகுப்புத்தோழி. ஆசிரியர் திரு.இராமன் ஐயாவின் துணைவியார் எங்களை அவர்களின் குழந்தைகள் போல் நடத்துவார்கள். நாங்கள் அம்மா என்றுதான் அழைப்போம். பல ஆண்டுகள் அவர்களின் தனிப்பயிற்சியில் வளர்ந்தவன். இன்று ஊருக்குச் சென்றாலும் நலம் வினவுவதில் முன்னிற்பவர். சென்னையில் மகனுடன் ஐயா வாழ்ந்து வந்தாலும் செல்பேசியில் அழைத்து இன்றும் பேசும் இயல்புடையவர். அண்மையில் நடந்த செம்மொழி மாநாட்டில் நான் கலந்துகொள்வேன் என்று அறிந்து வாழ்த்தி வழியனுப்பிய தூய நெஞ்சத்தார்.

 எங்களுக்கு வரலாறு & புவியில் நடத்தியவர் திரு.நாகரத்தினம் ஐயா அவர்கள் ஆவார். அவர் நடத்திய செங்கீசுகான் வரலாறு,அசோகர் வரலாறு இன்றும் எனக்கு மனப்பாடம்.இன்றும் காணும்தோறும் வினவுவார்.நெசவு ஆசிரியராக திரு.செகநாதன் என்பவர் பயிற்றுவித்தார். கதை சொல்வதில் மன்னன்.அவர் மாணவர்களை அமைதிப் படுத்திக் கதை சொல்வதை நினைத்தால் எங்களுக்கு இன்றும் பேய்க்கதைகள் நினைத்து அச்சம் வரும். அந்த அளவு எங்களுக்குக் காட்சிகளை விளக்கிப் புரியவைப்பார்.

 நெல்லித்தோப்பு என்ற ஊரிலிருந்து வந்த திரு.ஆறுமுகம் ஐயா அவர்கள் கணக்கு நடத்துவார். அடி உதைக்கு அஞ்சாதவர். அப்படி அடித்தும் அவர் கணக்கு எங்களைப் பொறுத்தவரை பிழையாகப் போகும். அவர் பெயர் ஒலித்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைகூட அஞ்சி ஒடுங்கும். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். பின்னாளில் மீன்சுருட்டிக்குப் படிக்கச் செல்லும்பொழுது அவரை வழியில் பார்த்தால் மிதிவண்டியிலிருந்து இறங்கி வணங்குவோம். அவர்தான் இன்றைக்கும் எங்களுக்குப் பெரும் மதிப்பிற்கு உரியவராக விளங்குகின்றார். சண்முகம் ஆசிரியர் அவர்கள் மீன்சுருட்டியிலிருந்து வருவார்கள். கணக்குப் பாடம் சில காலம் அவர் நடத்தினார். சாரணர் இயகத்தின் பொறுப்பாளர். நான் சாரண இயக்க மாணவனாக இருந்து பயிற்சி பெற்றேன். அவர் பயிற்றுவித்த படிமுடிச்சு உள்ளிட்ட முடிச்சுகள் குழந்தைகளுக்கு ஏனை கட்டும்பொழுது இன்றும் பயன்படுகிறது.

 எனக்கு திருவாளர்கள் இராமலிங்கம், திருவாளர் கணேசமூர்த்தி, திருவாளர்கள் காசிநாதன் உள்ளிட்டவர்கள் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் தமிழாசிரியர்களாக இருந்து தமிழ் பயிற்றுவித்தவர்கள். புலவர் இராமலிங்கம் ஐயா அவர்கள் தந்தை பெரியார் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். கறுப்புச்சட்டை அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள்.எங்களைக் கண்டிப்புடன் நடத்திப் பயிற்றுவிப்பார். இளங்கோவன் என்று ஒரு ஆசிரியர் பின்னாளில் வரலாறு நடத்தினார். அதுபோல் இரத்தினம் என்று ஒரு ஆசிரியர். குளத்தூர் என்னும் ஊரிலிருந்து வருவார். ஆங்கில இலக்கணம் நடத்துவதில் வல்லவர். அவர் நடத்தியும் எங்களால் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போனது. பின்னாளில அவர் தூரத்து உறவினர் ஆனார்.

 சார்ச்சு என்று ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் வெற்றிலைப் பாக்குடன் தோழமை கொண்டவர். நான் எழுதிய சிறுகதையைப் படித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தியவர். சிதம்பரநாதன் என்று ஒரு ஆசிரியர் அறிவியல் ஆசிரியராகப் புதியதாகப் பணிக்கு வந்தார். அவர் வந்த பிறகு மாணவர்களாகிய நாங்கள் அவர் வகுப்புக்குக் காத்திருப்போம். அந்த அளவு மாணவர்கள் உளம்கொள்ளப் பாடம் நடத்துவார். அமீபா பற்றி படம் வரைந்து பகுதிகளைக் குறித்த அந்தக் காட்சி இன்றும் நினைவில் உள்ளது.

 உலோ. வரதராசன் என்று ஓர் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்துவதில் வல்லவர். உள்ளூர்க்காரர். எங்கள் பெற்றோர் அவர் வழியாகத்தான் எங்கள் கல்விநிலை அறிந்து கொள்வர். அதனால் அவர் விடுதலையாக எங்களுக்குத் தண்டனை வழங்க ஊர் அனுமதி பெற்றிருந்தார். சி.சுந்தரேசன் ஐயா எங்களுக்குப் பத்தாம் வகுப்பில் கணக்கு எடுத்தவர். அடி உதைக்கு அஞ்சாதவர். எங்கள் குடும்ப நண்பர்.என்பதால் அவர் அடித்துத் திருத்துவதில் உரிமை அதிகம் இருந்தது.

 திரு.நிர்மல்குமார் சாலமன் என்ற ஆசிரியர் எங்களுக்கு ஆங்கிலம் நடத்தினார். அவர் நடத்திய ஆங்கிலப் பாடல் ஒன்றை ஓர் எழுத்தும் மாறாமல், ஒரு குறியீடும் மாறாமல் எழுதினால் ஒரு கரிக்கோல் (apsara pencil) தருவதாக உரைத்தார். மறுநாள் அவர் கையால் கரிக்கோல் வாங்கும் ஆவலில் மாணவர்கள் அனைவரும் அந்தப் போட்டியில் கலந்துகொண்டோம்.பலரும் பலவகையில் முயற்சி செய்தனர். நான்தான் அந்தப் பாடலைப் பிழையின்றி எழுதி ஆசிரியர் கையால் முதன்முதல் கரிக்கோல் வாங்கினேன். கரிக்கோல் விலை குறைவாக இருந்தாலும் அந்த ஆசிரியர் கையால் பரிசில் வாங்க வேண்டும் என்பது அன்றைய மாணவர்களின் பெரு விருப்பாக இருந்தது.அவர் நன்கு புல்புல்தாரா, மவுத் ஆர்கன் இசைப்பார். அதனால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு மாணவர்களிடத்தில் உண்டு. பத்தாம் வகுப்புத் தேர்வெழுதப் பாத்திமா பள்ளிக்குச் (செயங்கொண்டம்) சென்றபொழுது மறவாமல் அவர் வீட்டுக்குச் சென்று அவர் இசைக்கருவியால் சில பாடல்களைப் பாடச்செய்து கேட்டுத் திரும்புனோம்.

 பள்ளி ஆண்டுவிழாக்களில் பாடல், கட்டுரை,விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு நான் பரிசு பெற்றுள்ளேன். ஆறாம் வகுப்பில் நான் வாங்கியப் பரிசில் "சருமரோக நிவாரண மருந்துகள்" என்ற புத்தகம் இன்றும் என்னிடம் உள்ளது. திரு.தியாகராசன் என்னும் பள்ளித்தூய்மை செய்யும் அண்ணன் ஆண்டு விழாக்களில் பெண் வேடம் அணிந்து அனைவரையும் மயக்கும் அழகுடன் விளங்குவார். அவரின் பதிவுத்தட்டு நடனத்துக்கு அக்கம் பக்கத்து ஊர்க்காரர்களும் வந்துவிடுவர். கப்பலோட்டியத் தமிழனாகவும், சாக்ரடிசாகவும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் வீரமுழக்கம் செய்த பல மூத்த மாணவர்கள் இன்று வயல்வெளிகளில் உழுதொழிலில் ஈடுபட்டும், தறி நெய்தும் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

 என் நண்பன் ஒருவனை அண்மையில் கண்டேன். தலை வெளுத்து அணில் கூடுபோல் இருந்தது. பூண்டு வணிகம் செய்வதாகச் சொன்னான். அவன் அழகிய இளமையை வறுமை தின்று தீர்த்துள்ளது. அவன் பிள்ளைகள் கல்லூரிகளில் படிப்பதாகச் சொன்னான். ஒரு நண்பன் எயிட்சு நோய்க்கு இலக்காகி இறந்துபோனார். இன்னொரு நண்பர் தலையாரியாக ஊரில் இருந்தார். ஒரு நேர்ச்சியில் இறந்துபோனார். என்னுடன் பயின்றவர்கள் பலர் தனியாகத் தொழில் நடத்தி நல்ல நிலையில் உள்ளனர். பலர் அரசு வேலைக்குச்சென்று நல்ல நிலையில் இருகின்றனர். பன்னீர்ச்செல்வம் என்ற நண்பர் ஊருக்குப் போகும்பொது கண்ணில் தென்பட்டால் இயன்றதை அவருக்குக் கொடுத்து உதவுவேன். உடல்நிலை ஒத்து வராததால் அவரால் வெளியூர் செல்லமுடியிவல்லை. பிள்ளைகள் படிப்பதாகச் சொல்வார். இப்பொழுது நாங்கள் படித்த பள்ளியில் எழுத்தராகப் பகுதி நேரப் பணியில் இருக்கின்றார். இப்படி என் பள்ளிப்படிப்பு வரவும் செலவுமாக நினைவில் உள்ளது.

 என்னுடன் பயின்ற எல்லா மாணவர்களையும் இன்னும் நன்கு நினைவில் கொண்டுள்ளேன். காலச்சூழலால் அவர்களைக் காண முடியாமல் போனாலும் என் நினைவில் இருகின்றார்கள். அதுபோல் அகரம் பயிற்றுவித்துத் தமிழ்ச் சிகரத்தில் ஏற்றிப் பார்த்த அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் இந்தக் கட்டுரை வழியாக மீண்டும் வணங்கி மகிழ்கின்றேன்.


 பள்ளியிறுதி வகுப்புப் படிக்கும்பொழுது மாணவத் தலைவனாகவும் இருந்துள்ளேன். காலையில் இறைவணக்கத்துக்கு ஒன்றுகூடும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டளையிட்டு நடத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது. திரு. பாலகிருட்டினன் ( C. B. K ) அவர்கள் தலைமையாசிரியராக இருந்தகாலத்தில் நாங்கள் பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி அவர் கையால் சான்றிதழ் பெற்றோம். கொல்லாபுரம் ஊரினர்.அவர் கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். பெரும் பொருள்வளம் உடையவர். ஆங்கிலத்தில் நல்ல பயிற்சியுடையவர். இவர் முன்பும் இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து பணியாற்றியவர்.

 இவருக்கு முன்பு பணி செய்த தலைமையாசிரியர் பொறுப்பற்று இருந்ததால் பெரும் போராட்டம் நடத்தி மக்களும் மாணவர்களும் விரும்பி திரு.பாலகிருட்டினன் அவர்களை வேண்டி அழைத்து வந்தனர். அவர் பணிச்சிறப்பு அறிந்த ஊர் மக்கள் பல ஆண்டுகள் கழித்தும் பள்ளியின் முன்னேற்றம் நோக்கிக் கொண்டு வந்தனர். இன்று உள்கோட்டைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்து நிற்கின்றது. நாங்கள் ஓடி விளையாடிய ஆடரங்குகள் இல்லாமல் கட்டடங்களாகக் காட்சி தரும் இந்தப் பள்ளியில் இப்பொழுது நுழையும்பொழுது கோடை விடுமுறையில் உறவினர் வீட்டுக்குச் செல்லும்பொழுது ஏற்படும் கூச்சம் இருந்துகொண்டுதான் உள்ளது.