நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 மார்ச், 2015

திருவண்ணாமலைத் தமிழிசை மன்றத்தில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் அறிமுகம்!


ஆவணப்படத்தைப் பெற்றுக்கொண்ட விழாக்குழுவினர்

திருவண்ணாமலையில் திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களை நிறுவுநராகவும் திரு சிங்கார. துரை அவர்களைத் தலைவராகவும் திரு. மா. சின்னராசு அவர்களைப் பொருளாளராகவும் திரு. சீனி கார்த்திகேயன் அவர்களைச் செயலாளராகவும் கொண்டு தமிழிசை மன்றம் சிறப்பாகச் செயல்படுகின்றது. திருவண்ணாமலைத் தமிழிசை மன்றத்தின் சார்பில்  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் தமிழ்ப்பெருமக்கள் முன்னிலையில் 29. 03. 2015 ஞாயிறு மாலை 6 மணி முதல், ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சிறப்பாகத் திரையிடப்பட்டது. திருவண்ணாமலை, கடலூர், வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் திரளாக இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர்.

                            
எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் உரை

சென்னையிலிருந்து எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் அவர்கள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தார். ஆவணப்படத்தை வெளியிட்டு ஆவணப்படத்தின் சிறப்புகளையும் ஆவணப்படத்தை இயக்கிய இயக்குநரின் உழைப்பையும் இவர் மனம் திறந்து பாராட்டினார். இந்த ஆவணப்படம் காலம் கடந்தும் பேசப்படும் என்ற வகையில் உள்ளது எனவும் எந்தச் செய்தியும் மிகைபடாமலும், குறைவில்லாமலும் நடுவுநிலையில் நின்று  உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். தமிழிசைக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேல் உழைத்த அறிஞரின் வாழ்வை அரிதின் முயன்று வெளியுலகுக்கு இயக்குநர் தந்துள்ளார் என்று பாராட்டிப் பேசினார்.


காவிரியாற்றின் அழகைக் காலம் கடந்தும் தமிழர்கள் அறிவதற்கு இந்த ஆவணப்படம் பெரிதும் துணை செய்யும். சங்க இலக்கியப் பின்புலம் உணர்ந்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழிசையை மீட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழகத்திலும் தமிழர்கள் பரவி வாழும் அயல்நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தை எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் வெளியிட்டார்.


பேராசிரியர் வே. நெடுஞ்செழியன், பேராசிரியர் வெ. இராமு, முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழிசை மன்றத்தார் சிறப்பாகச் செய்திருந்தனர்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்
திரு. சிவக்குமார் வரவேற்புரை

பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் உரை


மு.இளங்கோவன் உரை

சனி, 28 மார்ச், 2015

உரையாசிரியர் புலவர் சே. சுந்தரராசன் அவர்கள்…


 புலவர் சே. சுந்தரராசன் அவர்கள்

காலத்தில் செய்துமுடிக்க வேண்டிய தமிழ்ப்பணிகள் எவ்வளவோ உள்ளன. ஆனால் அவற்றைச் செய்துமுடிக்க முன்வருவோர் குறைவாகவே உள்ளனர். தமிழர்கள் தங்கள் பெருமையை ஆவணப்படுத்தி வைப்பதில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் இருப்பதையும் இழக்கும் நிலையில் உள்ளோம். கடந்த கால வரலாற்றைத் தேடிச் செல்வது ஒருவகைப் பணி என்றால் நிகழ்காலத்தில் வாழ்பவர்களை நினைவுகூர்வதும், அவர்களைப் போற்றுவதும் நம் தமிழ்க்கடமையாகக் கொள்ள வேண்டும்.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பல்வேறு நெருக்கடிகளுக்கும் இழப்புகளுக்கும் இடையே செல்ல நேர்ந்தது. அந்தச் செலவில் அறிஞர் பெருமக்கள் பலரைக் கண்டு உரையாடவும் அவர்களின் தமிழ்ப்பணிகளை அறியவும் வாய்ப்பு அமைந்தது. அகவை முதிர்ந்த சான்றோர் பெருமகனார் ஒருவரை அவர்தம் மகளார் மாநாட்டுக்கு அழைத்து வந்திருந்தார். அப்பெருமகனாரை அண்மி, அவர்களைப் பற்றி வினவினேன். அவர்களின் தள்ளாத அகவையிலும் செய்துவரும் தமிழ்ப்பணிகள் என்னை வியப்படையச் செய்தன. ஒரு முழுப்பக்கம் எழுதுவதைக்கூட மிகப்பெரும் சுமையாக நினைத்துப் பெருமூச்சுவிடும் கல்வியாளர்கள் நடுவே எனக்கு அறிமுகமான பெருமகனாரின் பணிகள் அவர்மேல் மிகுந்த மதிப்பை அளித்தன.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓர் உரையாசிரியராக அவர் எனக்கு அறிமுகமானார். தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து, தம் திறமையால் படிப்படியாகக் கல்வியும், பணியும் பெற்று, கடமை முடித்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து தமிழ்நூல்களுக்கு உரைவரையும் அந்தச் சான்றோரின் பெயர் புலவர் சே. சுந்தரராசன் என்பதாகும்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்கள் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர்கள் தாசன், வேதமணி ஆகியோரின் அருமை மகனாக 07.05. 1930 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை ஈச்சம்பாடியிலும் நடுநிலைக் கல்வியைப் பள்ளிப்பட்டிலும் நிறைவு செய்தவர். சோளிங்கரில் (சோழலிங்கபுரம்) ஆசிரியர் பயிற்சி பெற்று 1948 இல் அதே ஊரில் குட்லக் மேனிலைப்பள்ளியில் பணியில் இணைந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்   நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் வெற்றிபெற்றவர் (1949). சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வு எழுதி(1957) புலவர் பட்டம் பெற்றவர். அரக்கோணத்தில் தூய ஆண்டுரு பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்கள 26.05.1952 இல் இல்லற வாழ்வில் ஈடுபட்டு இரண்டு மக்கள் செல்வங்களைப் பெற்று, வளர்த்து ஆளாக்கியுள்ளார்.

பணியில் இருந்த காலத்தில் உரைநடை நூல்களை வரைந்த புலவர் சே. சுந்தரராசன் அவர்கள் கிறித்தவ சமய நூல்களுக்கு உரைவரையும் பெரும்பணியில் ஈடுபட்டவர். அரிய நூல்கள் பலவற்றுக்கும் உரைவரைந்து கிறித்தவ சமய நூல்கள் மக்களிடம் பரவக் காரணமாக அமைந்தவர். அந்த வகையில் இவரின் நூல்களைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்களின் தமிழ்க்கொடை:

 • தேம்பாவணி உரைநடை
 • இரட்சண்ய மனோகரம் தெளிவுரை
 • இரட்சண்ய யாத்திரிகம் உரைநடைச்சுருக்கம்
 • குடும்பவிளக்கு உரை
 • சிலுவைப்பாடு - உரையுடன்
 • பெத்லகேம் குறவஞ்சி - உரையுடன்
 •  திருக்காவலூர்க் கலம்பகம் - உரையுடன்
 • தேம்பாவணி (மூன்று காண்டம்- 3615 பாடல்கள்) உரையுடன்
 • இரட்சண்ய யாத்திரிகம் ( 5 பருவம்- 3766 பாடல்கள்) உரை
 • பாண்டியன் பரிசு - உரை
 • புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம்
 • பழைய ஏற்பாடு ஓர் அறிமுகம்
 • மாணவர்களுக்கு
 • குறள்நெறிக் கதைகள்


உள்ளிட்டவை இவரின் குறிப்பிடத்தகுந்த நூல்களுள் சிலவாகும்.

  பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் இந்த்தத் தமிழ்ச்செம்மல் தம் தமிழ்ப்பணியைச் சென்னையிலிருந்து தொடர்ந்து வருகின்றார். நீடு வாழ்க! புலவர் சே. சுந்தரராசனார்!


 கம்பார் கனிமொழி, புலவர் சே. சுந்தரராசன், மு.இ.
(மலேசியாவில் எடுத்த படம்)

குறிப்பு: இக்குறிப்புகளைப் பயன்படுத்துவோர் எடுத்த இடம் சுட்டினால் மகிழ்வேன்!
வெள்ளி, 27 மார்ச், 2015

திருவண்ணாமலையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்!பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சிக்குத் திருவண்ணாமலைத் தமிழிசை மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

திருவண்ணாமலைத் தமிழிசை மன்றத்தின் செயலாளர் திரு. சீனி. கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.  பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் பேராசிரியர் வெ. இராமு, மு.இளங்கோவன் உரையாற்ற உள்ளனர்.

ஆவணப்படத்தைக் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் வெளியிட, திருவண்ணாமலைத் தமிழிசை மன்றத்தின் நிறுவுநர் திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் பெற்றுக்கொள்கின்றார். 

சோ.ஏ. நாகராசன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

நாள்: 29.03.2015, ஞாயிறு மாலை 5 மணியளவில்

இடம்: ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு: திருவண்ணாமலைத் தமிழிசை மன்றம்


தொடர்புக்கு: 94424 14069

வெள்ளி, 20 மார்ச், 2015

“பண்ணாராய்ச்சி வித்தகர்” குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் - பாவலர் வையவன் மதிப்புரை

   பாவலர் வையவன்


      சங்க இலக்கியப் பாடல்களில் புதைந்துகிடந்த இசை உண்மைகளை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆராய்ந்து வெளிப்படுத்தியவர் தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர்’, ‘ஏழிசைத் தலைமகன்குடந்தை ப.சுந்தரேசனார் ஆவார். இவர் ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழிசையை நுட்பமாக அடையாளம் கண்டு, தமிழர்களிடையே இசையார்வம் தழைக்க உழைத்தவர். கடந்த நூற்றாண்டில் தமிழ்இசைக்குத் தொண்டாற்றிய அறிஞர்களை நினைவு கூர்கையில் சுந்தரேசனாரின் பங்கு மகத்தானது; போற்றுதற்குரியது.


தமிழர், நிலத்தை ஐவகையாகப் பிரித்ததைப் போலவே தமிழ் இசையையும் ஐவகைப் பண்களாகப் பிரித்தனர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலையென நிலத்துக்கான பிரிவுகளின் பெயர்களையே பண்ணுக்கும் வைத்துள்ளனர். இது மண்ணுக்கும் பண்ணுக்குமான ஒருவகை ஒத்திசைவைக் காட்டுவதாகும். தமிழர்வாழ்வு இசையோடு இயைந்த வாழ்வாகும். முதற்பொருளாக நிலமும் பொழுதும் வைத்ததிலும், அதிலும் நிலத்தைமுதலாக வைத்து அந்நிலத்து மக்களுக்கான வாழ்முறைக்கேற்ற பண்களையும் பகுத்துக் காட்டியதில்  அவர்களது இசைவாழ்வின் நுண்மாண் நுழைபுலத்தை நாம் நன்கு உணரமுடிகிறது.

               பண்டையத் தமிழ்ப்பண் மரபு இன்று முற்றிலுமாக முறிந்து, திரிந்து, சிதைவுற்றுக் கிடக்கிறது. தமிழிசைஎன்பதைப் பெரும்பாலோர், தமிழைப் பாடுவது, தமிழில் பாடுவது அல்லது தமிழால் பாடுவது என்றுமட்டுமே கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்நாளில் இசை பயில்வோர் கூட எழுபத்தியிரண்டு தாய்இராகங்களையும், அதிலிருந்து பிறக்கும் ஜன்யஇராகங்களையும் பற்றிப் படிக்கிறார்களே ஒழிய, ஐவகைப் பண்களின் வழியாக இசையைப் பயில்வதில்லை. அப்படி பயிற்றுவிக்கவும் ஆள் இல்லை.

மேடை போட்டுக் கச்சேரி நடத்துவோர் கருநாடக இசைஎன்னும் பெயரில் பண்டைய தமிழ்ப் பண்களைத்தான் பெயர்களை மாற்றிப் பாடிக்கொண்டிருப்பதாக இசையறிந்தோர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால், ‘இப்பாட்டு’ ‘இப்பண்ணினதுஎன்று விளக்கியுரைத்து எவரும் வேலைசெய்யவில்லை. தமிழிசை அறிஞர்கள் சிலர் அறிந்திருக்கக்கூடும். ஆனால், அது பொதுவெளிக்கோ, ஊடகங்களுக்கோ, பரவலாகப் பாட்த்திட்டங்களுக்கோ வரவில்லை. சங்க இலக்கியங்களில் தோய்ந்து எழுந்து ஆழ்ந்து சொற்பொழிவாற்றுவோர் கூட அப் பாக்களில் பொதிந்துள்ள இசைமரபை, இசைவடிவங்களை, நுணுக்கங்களை எடுத்துக் கூறினாரில்லை. எடுத்துக் கூற மறந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அவருக்கும் கூட, இன்னின்ன பாக்களை, இன்னின்ன பண்ணோடும் தாளத்தோடுந்தான் பாடவேண்டும் என்று அறிந்திருக்க வாய்க்கவில்லை.

இன்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கூடத் தமிழ்ப்பாடம் பயில்வோருக்கு இசைத்தமிழை கற்பிக்காமலேயே குறைத்தமிழுக்கான சான்றிதழ்களையே கொடுத்து அனுப்புகிறது. தமிழ் படித்தோர் முத்தமிழ் அறிந்தவராக இல்லமல் இயற்றமிழ் மட்டுமே அறிந்தவராக உள்ளனர். கருநாடக இசை, திரைப்பட இசை என்னும் இரண்டோடு நிற்கிறது இன்றைய தமிழரின் இசை நிலை. அதை உடைத்துத் தமிழ் இலக்கியங்களில்- பாடல்களில் எத்தகு பண்ணமைப்புகள் உள்ளன என்பதை ஆராய்ந்து கண்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படுத்தியவர்தான் இசைமேதை குடந்தை ப. சுந்தரேசனார்.

               இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மூவர்எனப்படும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் வாழ்ந்த சீர்காழி மண்ணில் தோன்றித், தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணியைத் தேவையுணர்ந்து ஆற்றியவர்தான் குடந்தை . சுந்தரேசனார் அவர்கள்.

28.05.1914ல் சீர்காழியில் நாகமங்கலம் உடையான் கோத்திரத்தில் பஞ்சநதம்பிள்ளை- குப்பம்மாள் இணையருக்குப் பிறந்த இவர் நான்காம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தாலும் தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது துணைவியார் சாரதா அம்மையர். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனால் மூவரும் இறந்துவிட்டனர். இசையின் மீதுள்ள விருப்பத்தின் காரணமாக இவரது மூன்றாவது பிள்ளைக்கு விபுலானந்தன்என்றே பெயர்சூட்டியிருந்தார். வாழ்நாள் முழுவதும் கும்பகோணம், பேட்டை நாணயக்காரத் தெருவில் வசித்ததால் குடந்தை சுந்தரேசனாராகவேஅடையாளப்படுத்தப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே பாரதம் போன்ற தொடர்ச் சொற்பொழிவுகளைக் கேட்டும், ஒலிவட்டுகளைக் கேட்டும் இசையோடு சொற்பொழிவாற்றும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார். தமிழ் வித்வானுக்குப் படிக்கவிரும்பி சிலகாலம் திருவாவடுதுறை ஆதீன வித்வான் த.ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டார். பிடில் கந்தசாமி தேசிகர், வேப்பத்தூர் பாலசுப்பிரமணி, குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் ஆகியோர் இவரது இசை ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

               குடவாசலுக்கு அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் 1947-ல் விபுலானந்த அடிகள் இயற்றிய யாழ்நூல்அரங்கேற்றத்தின்போது, அம் மேடையில் தமிழ்ப்பண் மரபுகளை உரிய நுணுக்கங்களோடு பாடி விபுலானந்தரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் சுந்தரேசனார். தமிழ்ப் பண்கள் குறித்துத் தான் எழுதிய இசைக் கட்டுரைகளைத் தமிழ்ப் பொழில்திங்களிதழில் வெளியிட்டுவந்தார். பண் ஆராய்ச்சியும், அதன் முடிவுகளின் தொகுப்பும்”, முதல் ஐந்திசைப் பண்கள், தமிழிசை, இசைத்தமிழ் பயிற்சிநூல் வினா-விடை போன்ற சிறந்த இசை நூல்களையும் எழுதியுள்ளார். அறிவனார்இயற்றிய பஞ்ச மரபுநூலின் மூலத்தை உரையோடு, ஈரோடு வட்டம் வேலம்பாளையம் வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணி கவுண்டரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1975-ல் வெளியிட்டார். நித்திலம்மாத இதழின் ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். 

பிரெஞ்சு நாட்டு அறிஞர் பிரான்ஸ்வா குரோ, பரிபாடலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க முனைந்தபோது, சுந்தரேசனாரை அழைத்துப் பாடச்செய்து பரிபாடலின் உண்மைப் பொருளை உணர்ந்து மொழி பெயர்த்தார். முல்லை நிலத்து ஆயர் மக்கள்தான் முதன்முதலில் குழற்கருவியையும் யாழ் கருவியையும் கண்டு தங்களது பேரறிவினாலே இசைக்கலையை வளர்த்தனர் என்று மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டில் இசைப்பேருரையாற்றினார். 

தனது அரிய உழைப்பின் பயனாக சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, தேவாரம், நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம், பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களில் பொதிந்துள்ள இசைக்குறிப்புகளை வெளிக்கொணர்ந்து தமிழ்ப் பண்ணிசைக்குப் பெருமை சேர்த்துள்ளார். உலகில் தோன்றிய இசை முறைமைகளுள் முதலில் தோன்றியது தமிழிசை முறைமையே என்பது சுந்தரேசனாரின் கருத்து. திருவையாறு அரசர் கல்லூரியில் பணியாற்றிய இவர் ஆடுதுறையில் அப்பர் அருள்நெறிக் கழகத்தையும்”, லால்குடி எனப்படும் திருத்தவத்துறையில் ப.சு. நாடுகாண் குழுஎன்ற அமைப்பயும் தொடங்கி நடத்திவந்தார். அப்பர் அருள்நெறிக்கழகம் இன்றளவும் நடைபெற்று வருகிறது. தமிழோடு இசைந்த இவரது இசைவாழ்வு 09.06.1981 அன்று நிறைவுற்றது.


பெரிய அளவில் அரசாங்கப் பெருமையோ, பல்வேறு ஊடகப் பதிவுகளோ இல்லாத, தேடக் கிடைக்காத இவ்வறிஞரின் வாழ்க்கை வரலாற்றைத் தேடியெடுத்து, கிடைத்தத் தரவுகளைக் கொண்டு ஆவணப்படமாக்கித் தமிழிசை உலகிற்கு ஒரு பெருங்கொடையாகக் கொடுத்துள்ளார் புதுச்சேரி அரசின் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்.

ந்த ஆவணப்படத்தை உருவாக்கியதன் வாயிலாகக் குடந்தை ப. சுந்தரேசனாரின் தொண்டினைவிட ஒருபடி மேலாகவே உள்ளது முனைவர் மு. இளங்கோவனின் பேருழைப்பு.

. சுந்தரேசனாரின் உருவத்தைக் களிமண் சிற்பமாகச் செய்வதில் தொடங்கி, ஒளிவட்டு முடியும்போது சிற்ப வேலையையும் முடித்து முழுமைப்படுத்துவதாகக் காட்சியமைத்து இயக்கியுள்ளவிதம் ஒரு நல்ல இயக்குருக்கான கூறுகளை இவரிடம் அடையாளம் காட்டுகிறது. தற்பெருமைக்காகவே படமெடுத்தாடும் பாம்புகளுக்கு நடுவே, தமிழ்ப்பெருமைக்காகப் படமெடுத்திருக்கிற மு. இளங்கோவனின் பணி பாராட்டுதற்குரியது.

 பத்துப்பாட்டின் பெரும்பாணாற்றுபடையில், முல்லைநிலக் கோவலரின் குழலிசையை விளக்கும்,

       “தொடுதோல் மரீஇய வடுஆழ் நோன்அடி

    விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை

என்னும் பாடலைச் சுந்தரேசனார் உரிய பண்ணோடு பாடும் இசைப்பொழிவோடு தொடங்குகிறது ஒளிவட்டு. மிகச் சிறந்த காட்சி நுட்பம், கருத்து நுட்பம், இசை நுட்பங்களோடு இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் மு. இளங்கோவன். ஆவணப்பட வேலைகளில் தொடக்க நிலையினராயினும், ஒரு தேர்ந்த இயக்குருக்கான கூறுகளை இப்பதிவில் காணமுடிகிறது. கானல்வரிப் பாட்டிற்காகக் காவிரி ஆற்றையும் கரையையும் நடனத்தோடு காட்சிப்படுத்தியவிதம் மிக அருமை.

இசைப்பாடல்கள், நிழற்படங்கள், சுந்தரேசனாரைப் பற்றி அறிந்த, அவர்காலத்தில் வாழ்ந்து இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற அறிஞர்களின் கருத்துகள் என இவருக்குக் கிடைத்த பதிவுகளை மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இவரது படைப்பிற்கு மிகுந்த ஒத்துழைப்பாக அமைந்திருப்பது இராஜ்குமார் இராஜமாணிக்கத்தின் இசையமைப்பும் படத்தொகுப்பும் ஆகும். நா.ஆ.சிவக்குமாரின் ஒளிப்பதிவு மிக அருமை.


ந்த ஆவணப்படத்தின் ஒளிவட்டு(டிவிடி) வெளியீட்டுவிழா மலேசியாவில் 28.12.2012 அன்று நடைபெற்றது. டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் ச.சாமிவேலு வெளியிட, டத்தோ சூ.பிரகதீஷ்குமார் பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தருண்விஜய், பேராசிரியர் மன்னர்மன்னன், டான்ஸ்ரீ சு.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். புதுச்சேரி வயல்வெளித் திரைக்களம்சார்பாக எழுதி, இயக்கி, தயாரித்திருப்பவர் முனைவர் மு. இளங்கோவன். புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள் இந்த ஆவணப்படப் பணியைத் தொடங்கிவைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளார். குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ்இசைக்கான தொண்டினைத் தமிழ்மக்கள் வாழும் இடங்கள்தோறும் பரப்பவேண்டியது இன்றைய தமிழர்களின் கடமைகளுள் ஒன்றாகக் கருதவேண்டும்.

தொடர்புக்கு:
முனைவர் மு. இளங்கோவன், புதுச்சேரி, இந்தியா
செல்பேசி: 0091 94420 29053  /  0091  95009 40482
மின்னஞ்சல்: muelangovan@gmail.com

நன்றி: பாவலர் வையவன், திருவண்ணாமலை