நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 அக்டோபர், 2012

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்- சமற்கிருத மொழி வளர்ச்சி நிறுவனங்களின் இருவகைப்போக்கு


Facilities for Classical Languages

            The Government of India is promoting Sanskrit through schemes implemented by three Sanskrit Universities (Deemed) viz. Rashtriya Sanskrit Sansthan (RSKS), New Delhi, Sri Lal Bahadur Shastri RashtriyaSanskrit Vidyapeetha  (SLBSRSV), New Delhi and Rashtriya Sanskrit Vidyapeetha (RSV), Tirupati and Maharishi Sandipni Rastriya Ved Vidya Pratishthan, Ujjain (MSRVVP), an autonomous organization under the Ministry of  HRD.  The Central Institute of Classical Tamil (CICT) has been set up at Chennai in January 2008 as an autonomous body fully funded by the Central Government for promoting Classical Tamil

            RSKS imparts education mainly on Sanskrit language from school level to Post Graduate/Doctorate level through its campuses and affiliated institutions.  It implements various schemes through Adarsh SanskritMahavidayalas.  It has other schemes such as vocational training scheme, Sanskrit Dictionary project, production of Sanskrit Literature, purchase of Sanskrit books, Merit scholarship.  MSRVVP, Ujjain is working for preservation of Oral tradition in Vedic studies.

            Tamil, Sanskrit, Telugu and Kannada languages have been declared as Classical Languages by the Government of India. The Central Government is in the process of establishing centre of excellence for the development and promotion of classical Kannada and Telugu.

              The grants released for development and propagation of classical languages during the last three years including current year as given below:
(Rs. in crore)
Language/Year -------    Tamil  -----------       Sanskrit
2008-09  --------              4.47 -----------         72.10
2009-10   --------              8.61   ---------         99.18
2010-11   ---------             10.16  -----------     108.75
2011-12 (till date) ---------3.00 ------------------54.97
This information was given by the Minister of State for Human Resource Development Dr. D.Purandeswari, in a written reply to a question, in the Lok  Sabha today.


MV/SKS/Hb


(Release ID :73794)

இந்திய அரசு சமற்கிருத மொழி வளர்ச்சிக்கும் செவ்வியல் மொழியான தமிழ் வளர்ச்சிக்கும் பலகோடி உருவா பணத்தைச் செலவிட்டு வருகின்றது.  தமிழை விடவும் பல மடங்கு சமற்கிருத மொழிக்கு இந்திய அரசு பணத்தை வழங்குகின்றது என்பதை மேற்கண்ட புள்ளி விவரத்தின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்தியஅரசு கொடுத்த பணத்தைச் செலவிட வழி தெரியாமல் திருப்பி அனுப்புகின்றது. இந்த நேரத்தில் வ.ஐ.சுப்பிரமணியனார் போன்ற ஆளுமையில் வல்ல அறிஞர்கள் இல்லையே என்று ஏங்க வேண்டியுள்ளது.

தமிழக அளவிலும், இந்திய அளவிலும் உலக அளவிலுமாகத் திட்டமிட்டுத் தமிழ் வளர்ச்சிப் பணிக்கும்,இலக்கண இலக்கியப் பரவுலுக்கும் வழிசெய்ய வேண்டும். தமிழர்கள் உடனடியாகத் திட்டமிட்டு செவ்வியல் இலக்கியங்களைப் பரப்பவும், தமிழை உலகப்பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

தமிழாராய்ச்சி நிறுவனங்களை அகவை முதிர்ந்தவர்கள் ஓய்வெடுக்கும் இடமாக மாற்றாமல் அறிவார்வமும் ஆராய்ச்சி ஈடுபாடும் உள்ள இளைஞர்கள் களம் பயிலும் இடமாக்க வேண்டும். பன்னாட்டு அறிஞர்கள் தங்கி ஆய்வு செய்யும் இடமாகச் செம்மொழி நிறுவனம் மாற வேண்டும். உலகெங்கும் நடைபெற்றுள்ள தமிழாராய்ச்சிப்பணிகளைத் தொகுக்கவும், மேலாய்வுகள் நிகழ்த்தவும், தொழில்நுட்பத்தில் தமிழை வலம்வரச்செய்யவும் இந்திய அரசு கொடுக்கும் தொகை போதவில்லை என்ற நிலைக்குத் தமிழ் ஆராய்ச்சி ஆக்கப்பூர்வமாக நடைபெற வேண்டும். அதை விடுத்து ஆர்ப்பாட்ட ஆய்வரங்குகள், வானவேடிக்கைகள், ஊர்வலம் விடுதல்முதலான விளம்பர ஆய்வுகளை நிறுத்தி அறிவு வழியில் சிந்தித்துத் தமிழ் வளர்ப்போம்.


நன்றி: http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=73794

சனி, 27 அக்டோபர், 2012

சென்னையில் தமிழ் இலக்கணம் குறித்த கலந்துரையாடல்

முனைவர் பொற்கோ(வலமிருந்து),மருத்துவர் பொன்முடி, பொன்முடியின் உடன்பிறப்பு
தமிழ்நாட்டு அரசின் பாட நூல்களிலும், தமிழ்நாட்டின் செய்தி ஏடுகள், தொலைக்காட்சிகளிலும் தமிழ் முறையாக எழுதவும் பேசவுமாக இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இது குறித்து காரைக்கால்(திருநள்ளாறு) மருத்துவர் பொன்முடி அவர்கள்(பிறந்த ஊர் ஆயக்காரன்புலம், வேதாரண்யம் அருகில்) ஒரு நூல் எழுதி வருகின்றார். அந்த நூலில் ஏற்கத் தகுந்த, மறுக்கத் தகுந்த பல கருத்துகள் உள்ளன. இதனை மனங்கொண்ட தமிழறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் தமிழில் ஈடுபாடுகொண்ட, இலக்கணத்தில் ஆர்வம்கொண்ட அறிஞர்களை அழைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வினைச் சென்னை அண்ணா நகரில் உள்ள வசந்தபவன் உணவகத்தின் அருகில் (அட்சயா அரங்கு) ஏற்பாடு செய்திருந்தார்கள்(27.10.2012).

மருத்துவர் பொன்முடி அவர்கள் தம் நூலின் செய்திகளையும் உள்ளடக்கத்தையும் அறிஞர்கள் முன் எடுத்துரைத்தார். காலை 10. 30 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு பகல் 2 மணி வரை  நடைபெற்றது. சற்றொப்ப மூன்று மணிநேரம் மருத்துவர் பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல்களில் சீர்மையற்றுச் சொற்களைப் பிரித்து அச்சிட்டுள்ளதைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.

சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் எழுதுவதால் ஏற்படும் பொருள் வேறுபாடுகளை எழுத்து வழக்கிலிருந்தும் பேச்சு வழக்கிலிருந்தும் மிகுதியான மேற்கோள் வழி மருத்துவர் பொன்முடி எடுத்துரைத்தார். மேலும் தமிழ் இலக்கணத்தில் இரண்டாம் வேற்றுமை மிகும் இடம், நான்காம் வேற்றுமை மிகும் இடம் இவற்றில் ஒற்று மிகுக்க வேண்டியதில்லை என்று தம் மாறுபட்ட கருத்தை முன்வைத்தார். இதற்கெல்லாம் தீர்வுகாணும் வகையில் இந்தக் கலந்துரையாடலை முனைவர் பொற்கோ அவர்கள் நெறிப்படுத்தினார்.

 கலந்துரையாடல் அரங்கில் வெளிப்பட்ட கருத்துகளைக் கவனித்த அறிஞர்குழு பொருத்தமான கருத்துகளை ஏற்றுக்கொண்டனர். வேற்றுமைஉருபு குறித்த பொருத்தமற்ற கருத்துகளை மறுத்துரைத்தனர். முனைவர் பொற்கோ அவர்கள் மொழியியல் அடிப்படையிலும், இலக்கண மரபுநெறி நின்றும் ஆழமான மொழியியல் உண்மைகளை எடுத்துரைத்தார். மருத்துவத் துறையில் பணியாற்றிக்கொண்டு தமிழின் தொடரமைப்பு, இலக்கண அமைப்புகளை ஆழமாக உற்றுநோக்கிக் கருத்துரைத்த மருத்துவர் பொன்முடி அவர்களை அனைவரும் பாராட்டினர்.

முனைவர் பொற்கோ கருத்து:

மருத்துவர் பொன்முடி அவர்கள் தமிழில் உள்ள சில சிக்கல்களைக் கவனித்துள்ளார். மொழிச்செய்திகளைக் கவனித்துத் தம் கருத்தை உரைத்துள்ளார். சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையை மருத்துவர் புணர்ச்சி என்கின்றார். இது பொருத்தம் இல்லை. இது தழுவுத்தொடர் என்று இலக்கண நூல்களில் உள்ளது. பாட நூல்களில் பிரித்து எழுதுதலில் சீர்மை இல்லை என்பதை இக்குழுவினர் ஏற்றுக்கொள்கின்றனர். பாடநூல்களில் புணர்ச்சிப்பிழை உள்ளதைத் தவிர்க்க வேண்டும். 

ஒலி அழுத்ததால் தமிழில் பொருள் வேறுபடுவது உண்டு. ஒலி அழுத்தத்தை எழுத்தில் காட்ட வழியில்லை. தொகைகளைச் சேர்த்து எழுத எல்லா இடங்களிலும் இயலாது. பேசுவது போல எழுத முடியாது. பேசும்பொழுதும் நுட்பமான ஒலி இடைவெளி உண்டு.

இரண்டாம் வேற்றுமைத் தொகைக்கு எடுத்துக்காட்டாகப் புறநானூறு, அகநானூறு என்று குறிப்பிடலாம். பேச்சுமொழியில் நீண்ட தொடர்கள் உண்டு. மொழியில் உள்ள தொடர்களைக் கணக்கிட முடியாது.

முனைவர் செம்பியன் கருத்து:

திரு.வி.க., மு.வ போன்றோர் எளிமை கருதிச் சொற்களைப் பிரித்து எழுதினர். மீண்டும் சொற்களைச் சேர்த்து எழுதினால் பழைய நிலைக்குச் சென்றுவிடுவோம். வினைத்தொகையைச் சேர்த்து எழுதவேண்டும். தொகைகளைப் பிரித்து எழுதவேண்டாம்.

பொற்கோ நிறைவுரை:

சொற்களைப் பிரித்து எழுதினால் தெளிவு கிடைக்கும்.
உள் தொகைகளைப் பிரித்து எழுதலாம்.
வினைச்சொல்லில் நீண்ட தொடர் உள்ளது. இடம் விட்டுப் பிரித்து எழுதலாம்.
சிக்கலைச் சிக்கல் என்று உணர வேண்டும்.
தீர்க்க வேண்டிய சிக்கல் தமிழில் நிறைய உள்ளன.

தமிழ்ப்பாட நூல்களில் உள்ள குறைகளைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்கும் எழுதுதல் வேண்டும். தமிழில் பிரித்து எழுதுதல் பற்றிய செய்திகளை இதழ்கள், பதிப்பகங்களுக்கு எழுதலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முனைவர் பொற்கோ, முனைவர் தங்க.மணியன், கவிக்கோ ஞானச்செல்வன், முனைவர் கி.செம்பியன், முனைவர் அர்த்தநாரீசுவரன், முனைவர் அமிர்தலிங்கம், முனைவர் மெய்கண்டான், முனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன், ஆய்வாளர் சாம்சன், மருத்துவர் பொன்முடியின் நண்பர்கள், உறவினர்கள் எனச் சற்றொப்ப ஐம்பதின்மர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மருத்துவர் பொன்முடி
கருத்துரைக்கும் கவிக்கோ ஞானச்செல்வன்
கலந்துரையாடலில் பங்கேற்றோர், கவிக்கோ ஞானச்செல்வன்.
கலந்துரையாடும் அறிஞர் குழு
முனைவர் அர்த்தநாரீசுவரன், முனைவர் தங்க மணியன், முனைவர் அமிர்தலிங்கம்.
மருத்துவர் பொன்முடி, முனைவர் பொற்கோ, முனைவர் செம்பியன், முனைவர் மு.இ.
முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன்

புதன், 24 அக்டோபர், 2012

கனடியத் தமிழர்களின் கைவிளக்கு - செந்தியின் தமிழன் வழிகாட்டி…கனடாவிலிருந்து நண்பர் செந்தி அவர்கள் வெளியிடும் தமிழன் வழிகாட்டி கையேடு ஒவ்வொரு ஆண்டும் எனக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்டு. முன்பெல்லாம் என் அறிவுத் தந்தையாகப் போற்றப்படும் ஈழத்துப்பூராடனார் அவர்கள் தம் சொந்தப் பொறுப்பில் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் இயற்கை எய்திய பிறகு நண்பர் செந்தி அவர்கள் தொடர்ந்து அனுப்பி வைப்பது உண்டு.

தமிழன் வழிகாட்டி கையேடு எங்கள் வீட்டின் வரவேற்பறையில் பார்வையில் இருப்பதால் வீட்டிற்கும் வரும் விருந்தினர்கள் இந்தக் கையேட்டின் சிறப்பைக் கண்டு உடன் படித்துத் தருவதாக எடுத்துச் சென்றுவிடுவார்கள். அவ்வாறு செல்லும் கையேடு பல வீடுகளுக்குச் சென்று மீண்டும் என் கையினுக்கு வருவதற்குப் பல மாதங்கள்கூட ஆவது உண்டு. இந்த ஆண்டுக்கான கையேடும் வழக்கம்போல் முன்பே வந்துவிட்டது. பல நண்பர்களின் கையினுக்கு மாறி மீண்டும் இன்று என் கையினுக்கு வந்தது.

வழக்கம்போல் கையினுக்குக் கிடைக்கும் நூலினை உடன் ஒரு புரட்டு புரட்டிவிடுவேன். ஓய்வு கிடைக்கும்பொழுது மீண்டும் ஆழமாகப் படிப்பது உண்டு. அந்த வகையில் இரண்டாம் முறையாகச் செந்தியின் தமிழன்வழிகாட்டியைப் படித்துப் பார்த்து வியப்புற்றேன்.

தமிழன் வழிகாட்டிக்கு ஒரு வரலாறு உண்டு. கனடாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களுள் செந்தி அவர்களும் அவரின் குடும்பமும் அடங்கும். மிகக் குறைந்த பணத்துடன் கனடாவில் தஞ்சம் புகுந்த செந்தி, தம் கடும் உழைப்பால் புகழ்பெற்ற மாந்தராக இன்று விளங்குகின்றார். அவர் ஆண்டுதோறும் நடத்தும் வணிகக் கண்காட்சி கனடாவில் புகழ்பெற்ற ஒன்றாகும். அதுபோல் அவர் ஆண்டுதோறும் தொய்வில்லாமல் வெளியிடும் தமிழன்வழிகாட்டியும் சிறப்பிற்கு உரிய ஒன்றகாக் கனடாவில் வாழும் தமிழர்களால் போற்றப்படுகின்றது என்பதை இதில் இடம்பெற்றுள்ள பலதுறை விளம்பரங்களைக் கொண்டு மதிப்பிட முடிகின்றது.

கனடா தேசத்திற்குள் நுழையும் தமிழர் கையில் தமிழன் வழிகாட்டி கையேடு இருந்தது என்றால் அவர்கள் எந்த உதவிக்கும் தொல்லைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வீடு வாங்க, விற்கத் தொடங்கி, வாழ்நாள் காப்பீடு, திருமணம், நிதியகச் சேவை, வீட்டுமனை வாங்க விற்க, அவசர காலத் தொலைபேசி எண்கள், நேர்ச்சிகால(விபத்து)உதவித்தொகை பெறுதல், கணக்குத் தணிக்கை, விளம்பர உதவி, உந்துவண்டிப் பழுதுபார்ப்பு, வங்கி, வெதுப்பகம்(பேக்கரி), வழக்கறிஞர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், அழகுநிலையங்கள், கட்டுமானப் பொறியாளர்கள், பேருந்து வசதிகள், நாற்காலி வாடகை, திரைப்படம், கல்லூரி, கணினி, இணைய நிலையங்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், துணி வெளுப்பகங்கள், கலை, கல்வி, கல்விக்குரிய நிதிக்கடன், மரச்சாமான்கள், முடித்திருத்தகங்கள், உள்ளரங்க அழகுநிலையங்கள், நகைக்கடைகள் குறித்த பல விளம்பரங்கள் உள்ளன. 

மேலும்  கராத்தே பழகுமிடம், நூலகம், பணப்பரிமாற்று இடங்கள், இசைக்குழுக்கள், செய்தி ஏடுகள், கண் கண்ணாடிக்கடைகள், வண்ணப்பூச்சுகள், திருவிழாக்களுக்குப் பொருட்களை வாடகைக்குவிடுவோர் குறித்த விவரம்,  அடகுக்கடை நடத்துவோர், மருந்தகம், குழாய்ப்பதிப்புப் பணியாளர்கள், அச்சகத்தினர், வானொலி நிலையம், வீட்டுமனை வணிகர்கள், பத்திரப்பதிவர்கள், தொலைக்காட்சிகள், கோயில்கள், கோயில் குருக்கள், துணிக்கடைகள், மொழிபெயர்ப்பாளர்கள், பயண ஏற்பாட்டக முகவர்கள், காணொளிக் கடையாளர்கள், இணையதள வடிவமைப்பாளர்கள், யோகாப்பயிற்சி, உணவகம், என்று பலநிலைப்பட்ட விவரங்களைத் தாங்கித் தமிழன் வழிகாட்டி வெளிவந்துள்ளது.

கனடாவில் வாழும் புகழ் பெற்ற அறிஞர்கள், அரசியல் ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள் பற்றிய குறிப்புகளைப் படத்துடன் வெளியிட்டுள்ளமை இந்தக் கையேட்டின் தனிச்சிறப்பபாகும்.

சேலைகட்டுதல் தொடங்கி ஆண்கள் கழுத்துபட்டை அணிவது,  வரையிலான அன்றாடத் தேவைகள் காட்சி விளக்கப் படமாகத் தரப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. கனடாவில் வெளியிடப்பெற்ற அஞ்சல் முத்திரைகள் பற்றிய விவரங்கள் இந்தக் கையேட்டில் போற்றும்படி உள்ளது. முதன்மையான தொலைபேசி எண்கள் பெரிய எழுத்தில் படிக்கும் தரத்தில் உள்ளன.

கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் குறித்த பட்டியல் திரைத்துறை ஆய்வாளர்களுக்குப் பயன்படும்.

தமிழர்கள் கனடாவில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில்களில் மேம்பட்டு இருக்கும் இவர்கள் நிகழ்த்திய முதல் செயல்பாடுகள் மிகச்சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன:
அவற்றுள் சில:

முதன்முதல் கனடாவில் தமிழரால் வெளியிடப்பட்ட ஆங்கிலப்பத்திரிகை: Monsoon: D.B.S.ஜெயராஜ்

முதன்முதலில் கனடாவில் தமிழ்ச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்ட பூங்கா: Birunthan Park.

முதன்முதல் கனடாவில் வெளியிடப்பட்ட தமிழ் சஞ்சிகை: குறிஞ்சிமலர்

முதன்முதல் கனடாவில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட சமயச்சடங்கு இல்லாத திருமணம்: இராசேந்திரன்-இந்துமதி திருமணம்.(1994)

முதன்முதல் கனடாவில் தமிழ்த்திரைப்பட வரலாறு 60 தொகுதிகளாக வெளியிட்டவர்கள்: றிப்ளக்சு குடும்பத்தைச் சார்ந்த ஜோர்ஜ் இதயராஜ்-எட்வேட் இதயச்சந்திரா சகோதரர்கள்

முதன்முதலில் ஆதிக் கிரேக்க காப்பியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்: ஈழத்துப்பூராடனார்.

கனடாவின் முதல் தமிழ்த்திரைப்படம்: ஏமாற்றம்,தயாரிப்பாளர் முருகு.

இவ்வாறு பல அரிய செய்திகள் இந்தக் கையேட்டில் உள்ளன. தமிழர்கள் அனைவருகுகமான பொது அறிவுப்போட்டிக்கு உதவும் தரத்தில் பல செய்திகள் உள்ளன.

1996 இல் 174 பக்கத்தில் வெளியான தமிழன் வழிகாட்டி இன்று  1040 பக்கங்களில் மிகச்சிறந்த வண்ண அச்சில் வெளிவந்துள்ளமை தமிழன் வழிகாட்டியின் வளர்ச்சியையும் தமிழர்களின் வளர்ச்சியையும் காட்டுகின்றது.

வருங்கால வரலாறு எழுதுகின்றவர்களுக்குத் தமிழன் வழிகாட்டித் தகவல் களஞ்சியமாக இருந்து தமிழர் வரலாற்றை எழுத உதவும் என்பது என் நம்பிக்கை.

தமிழன் வழிகாட்டி வெறும் ஏடாக மட்டுமல்லாமல் இயக்கமாக மாறித் தாயக மக்களுக்கு உதவியுள்ளமையும் இந்த ஏட்டில் பதிவாகியுள்ளது.

தொடரட்டும் செந்தியின் தமிழ்ப்பணி…

தமிழன் வழிகாட்டி முகவரி
மின்னஞ்சல்: tamilsguide@rogers.com
இணையதளம்: www.tamilsguide.com
பேசி: + 416.615.4646
ஒளிநகல்: + 416.615.2414


சனி, 20 அக்டோபர், 2012

மனோன்மணி-சாம்பசிவனார் இலக்கியப் பரிசு அறிவிப்பு


2010 ஆம் ஆண்டு சனவரி முதல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் அறிவிப்பைத் தமிழ் மாருதம் இதழ் வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், சைவ சமயம் தொடர்பான நூல்கள் வரவேற்கப்படுகின்றன

முதல்பரிசு உருவா.10,000, 
இரண்டாம் பரிசு உருவா 6000, 
மூன்றாம் பரிசு உருவா 4000 

வழங்கப்படும்.

பரிசுக்கு நூலின் மூன்று படிகள் அனுப்ப வேண்டும்.

2012 , 31 திசம்பருக்குள் நூல்கள் வந்து சேர வேண்டும்.

நூல்களுடன் நூலாசிரியரின் தன் விவரக்குறிப்பும், புகைப்படமும் அனுப்ப வேண்டும்.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

முதுமுனைவர் .சா.அறிவுடை நம்பி,
தமிழ்ப்பேராசிரியர்,
27, சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு,
இலாசுப்பேட்டை, புதுச்சேரி- 605 008

செல்பேசி: 9360327019

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தருமபுரியில் முப்பெரும் தமிழ்விழா

தருமபுரியில் மருத்துவர் கி. கூத்தரசன் அவர்களின் முயற்சியில் தகடூரான் தமிழ் அறக்கட்டளை செயல்படுகின்றது. இவ்வறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ் நிகழ்ச்சிகளைத் தருமபுரியில் தொடர்ந்து நடத்தி வருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டு தமிழறிஞர் தகடூரான் கா.சி.கிருட்டிணன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் விழா, தகடூரான் தமிழ் அறக்கட்டளையின் சார்பில் தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார் நூல் வெளியீட்டு விழாமாந்த நேயர்களுக்குப் பாராட்டு விழாவினை நடத்துகின்றது. தமிழார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


நாள் : 20.10.2012 சனிக்கிழமை             
இடம் : வன்னியர் திருமண மண்டபம், தருமபுரி
காலம்: காலை 10.30 மணி

வரவேற்புரை:   திரு.க.நஞ்சப்பன்,
தலைவர், தகடூரான் தமிழ் அறக்கட்டளை.

தலைமை - சிறப்புரை :

இலக்கணச் செம்மல், தவமுனைவர்
புலவர் இரா.இளங்குமரனார்
(நிறுவனர், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர், திருச்சிராப்பள்ளி)

தலைப்பு: முப்பாலில் முத்திரைத் திருக்குறள்

தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியீடு - திரு.ம.பொன்னிறைவன்
(தலைவர், திருமழபாடி தமிழ்ச் சங்கம்)

பாராட்டுரை :  
குறள்நெறிச் செல்வர், ஆய்வுவேந்தர்,  முனைவர் அ.ஆறுமுகம்,
(தலைவர், திருமழபாடி தமிழ்ச் சங்கம்)

முதல் நூலினைப் பெறுபவர் :
திரு. பொறிஞர் அறவாழி, (உலகத் தமிழ்க் கழகம், சேலம்)
                        .


திரு. முனைவர் அ.ஆறுமுகனாரின்
தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியீட்டு விழா வாழ்த்துப்பாடல்:

திரு.அருட்கவி புலவர் செம்மங்குடி துரையரசன்
(செயலர், திருவள்ளூர் தமிழ்ச் சங்கம்)

தகடூரான் தமிழ் அறக்கட்டளை வழங்கும் பாராட்டு விழா

 விருது பெறுவோர்:


 மனிதநேயச் சிந்தனையாளர்
திரு.ம.பொன்னிறைவன்
(துணைத்தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு, திருச்சிராப்பள்ளி)

திரு. த.செந்தில் குமார்
(செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தருமபுரி)

திரு. எ.இராமர்
(தலைவர், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க அறக்கட்ளை)

திரு. மா.இராமமூர்த்தி
(பால் கூட்டுறவு சங்கம், அதிகாரப்பட்டி)

 மனிதநேய மருத்துவர்


மருத்துவர் திரு.அ.செந்தில்
(உலகமதி மருத்துவமனை, நெய்வேலி)

மருத்துவர் திரு.இரா.சரவணன்
(தோலியல் மருத்துவர், கோவை)


விருது பெறுவோர் ஏற்புரை:
                       
நன்றியுரை: மருத்துவர் கி.கூத்தரசன்
(செயலர், தகடூரான் தமிழ் அறக்கட்டளை)

வெள்ளி, 12 அக்டோபர், 2012

புதுச்சேரியில் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுகம்


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா இன்று(12.10.2012) வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. சப்தகிரி அறக்கட்டளையும், புதுச்சேரி வெற்றித் தமிழர் பேரவையும் இணைந்து நடத்திய இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சுற்றுச்சூழலை வலியுறுத்தியும், மக்கள் மரபுகளை வலியுறுத்தியும் எழுதப்பட்ட இந்த நூல் உழவர்களின் வாழ்க்கையை - அவர்களின் துன்பநிலையை எடுத்துரைப்பதாகக் கவிஞர் குறிப்பிட்டார். மொழிப்பற்று, மண்பற்று, பழயை மரபுகளைப் பாதுகாத்தல் குறித்துப் பல செய்திகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றார். காதல், வீரம், இலக்கிய இன்பம், துன்பம் என்று வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இந்த நூல் உள்ளது என்றார். இதில் இடம்பெறும் சுவையான பகுதிகளைக் கவிஞர் நினைவுகூர்ந்ததும் அரங்கம் அதிர்ந்தது. மண்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட இளைஞர்களை உருவாக்கவே இத்தகு நூல்களைப் படைத்து வருவதாகக் கவிஞர் குறிப்பிட்டார்.

மரபின் மைந்தன் முத்தையா கலந்துகொண்டு நூலின் சிறப்புப் பகுதிகளையும் கவிஞரின் படைப்பாற்றலையும் நினைவுகூர்ந்தார். முனைவர் நா.இளங்கோ நூல் குறித்த கருத்துரையை மிகச்சிறப்பாக வழங்கினார். கவிஞர் தி.கோவிந்தராசு அவர்கள் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். சப்தகிரி நிறுவனங்களின் உரிமையாளர் சிவக்கொழுந்து, இராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை வாழ் தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கம்பன் கலையரங்கம் நிரம்பியதும் பார்வையாளர்கள் வெளியில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


வியாழன், 11 அக்டோபர், 2012

சென்னையில் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி
சென்னையில் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி  13.10.2012, 14.10.2012 ஆகிய இரண்டு நாள்(காரி, ஞாயிறு) நடைபெறுகின்றது. 13.10.2012 மாலை 4 மணிக்குத் தொடங்கும் கண்காட்சி மறுநாளும் நடைபெறுகின்றது.

உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலான தமிழக வரலாறு, 64 கலைகள், இசைக்கருவிகள், இலக்கிய நூல்கள், உணவுகள் குறித்த காட்சி விளக்கம் கண்காட்சியில் இடம்பெறும்.

முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றுகின்றார். முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் கலியரத்தினம், பேராசிரியர் இ. வேலம்மாள், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், திரு. த. வெள்ளையன், திரு. நா. அருணாசலம், மருத்துவர் தெ. வேலாயுதம், திரு. எம். ஆர் செந்தில்நாதன், திரு. இரா. மோகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.

இடம்: இராசா திருமண மண்டபம், கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு

நிகழ்ச்சி ஏற்பாடு:
தமிழகப் பெண்கள் செயற்களம், சென்னை
பேசி: 90944 30334

செவ்வாய், 9 அக்டோபர், 2012

நெ.து.சுந்தரவடிவேலு நூற்றாண்டு நிறைவு விழா
தமிழகத்தின் மூத்த கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெறுகின்றது.

நீதியரசர் பூ.ரா.கோகுலகிருட்டினன் அவர்கள் தலைமையில் நடைபெறும் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேராசிரியர் க.அன்பழகன், மானமிகு கி.வீரமணி, நடுவண் அமைச்சர் ஜி.கே.வாசன், பேராசிரியர் மு.நாகநாதன், திரு.ஞானதேசிகன், திரு.பீட்டர் அல்போன்சு, முனைவர் கோ.பெரியண்ணன், பேராசிரியர் பி.இரத்தினசபாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நாள்: 12.10.2012 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 3மணி முதல் 6 மணி,
இடம்: என்.கே.திருமலாச்சாரி தேசியப் பெண்கள் கல்வியியல் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை

திங்கள், 8 அக்டோபர், 2012

கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நூலான மூன்றாம் உலகப்போர் தமிழக மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நூலின் அறிமுக விழா புதுச்சேரியில் நடைபெற உள்ளது. வெற்றித் தமிழர் பேரவையும், புதுச்சேரி சப்தகிரி அறக்கட்டளையும் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

இடம்: கம்பன் கலையரங்கம், புதுச்சேரி.

நாள்: 12.10.2012 வெள்ளி, நேரம்: மாலை 5 மணி

மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழாவிற்குத் தொழிலதிபரும் சப்தகிரி அறக்கட்டளை நிறுவுநருமான வி.பி.சிவக்கொழுந்து அவர்கள் தலைமை தாங்குகின்றார். தொழிலதிபர் முத்து பழனி அடைக்கலாம் அவர்கள் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது. வி.பி.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக உரையை வெற்றித்தமிழர் பேரவையின் அமைப்பாளர் தி.கோவிந்தராசு வழங்குகின்றார்.

கலைமாமணி மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்களும் முனைவர் நா.இளங்கோ அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

 கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்புரையாற்றுகின்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து கையொப்பமிட்ட மூன்றாம் உலகப்போர் நூல் வாசகர்களுக்கு விழா அரங்கில் கிடைக்கும்.

தொடர்புக்கு:
98947 55557
94431 34108சனி, 6 அக்டோபர், 2012

தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் மறைவு
தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் 
மூத்த தமிழறிஞரும், கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழின் அரிய நூல்களைப் பதிப்பித்தவருமான பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தியைத் தமிழுலகிற்கு அறிவிக்க வருந்துகின்றேன். இன்று(06.10.2012) காலை ஒன்பது மணிக்குப் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் கோவையில் தம் இல்லத்தில் இயற்கை எய்தினார். நாளை காலை எட்டு மணிக்குப் கோவை - பேரூரில் உள்ள பேராசிரியர் ப.சு.மணியம் அவர்களின் கல்லறை அருகில் பேராசிரியரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

முனைவர் .ரா.போ. குருசாமி தமிழ்ப் பேராசிரியராகவும், எழுத்தாளராகவும் சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். தமிழறிஞர் மு.வ.அவர்களின் அன்புக்குரிய மாணவராக விளங்கியவர். கோவையில் நடைபெறும் தமிழ் இலக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் முதல்வரிசையில் அமர்ந்து கேட்கும் இயல்பினர். விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அருகில் உள்ள மகமதுசாகிப்புரம் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டில் பிறந்தவர்.

கரந்தைத் தமிழ்க்கல்லூரி, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். இவரின் பெருமைக்குரிய ஆசிரியர்கள் அ.மு.பரமசிவானந்தம், முனைவர் மு.வ, அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சக்தி கோவிந்தனின் சக்தி காரியாலயத்திலும், ம.பொ.சியின் செங்கோல் இதழிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். கோவை.பூ.சா. கோ. கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

கபிலம், கம்பராமாயணப்பதிப்பு, உள்ளிட்ட நூல்கள் இவரின் புலமைகாட்டும் சான்றுகளாகும். சிலப்பதிகாரத்திலும் சிறந்த புலமையுடையவராக விளங்கியவர்.

தமிழ் தெரியுமா? அந்திமழைத் தொடர் 2


இந்தப் பகுதியில் பழந்தமிழில் உள்ள இசை, கலை சார்ந்த சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு ஐந்துச் சொற்களுக்குச் சரியான பொருள் தெரிந்தால் தேர்ச்சிபெற்றவர் என்று கருதுங்கள். பத்துச் சொற்களுக்குப் பொருள்தெரிந்தால் முதல்தர மாணவர் நீங்கள்தான்!. எந்தச் சொற்களுக்கும் பொருள் தெரியவில்லையா? இன்றே ஒரு அகரமுதலிக்கு முன்பதிவு செய்யுங்கள். அப்படியே கீழே உள்ள விடைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுங்கள்.

1.  கன்னம்: துளையிடுதல், காப்புக்கயிறு, மாம்பழப் பகுதி, உடல் உறுப்பு
2. காமரம்: மலையில் வளரும் மரம், மருதநிலப் பண், வண்டு, சோலை
3காவுதல்: சாவச்செய்தல், பலியிடல், காவடி சுமத்தல், கொலை
4. குணில்: மலை விலங்கு, குறுந்தடி, ஊர்வன, கடல்வாழ் உயிரி
5குரவை: மீன், மனிதர், சத்தம், கூத்தில் ஒருவகை
6கூளி: சம்பளம், பேய், வளைவு, மூதாட்டி
7.   கெடவரல்: கெட்டுப்போனது, விளையாட்டு, கருவாடு, ஆடு
8.   கொம்மை: மாரியாத்தா, கும்மி, ஆத்தா, மாமி
9.   கோட்டன்: பறவை, விலங்கு, யாழ்வாசிப்பவன், நடக்க இயாலதவன்
10. சாறு: உணவு, திருவிழா, கொண்டாட்டம், ஆசிரியர்
11. சிதார்: அணிகலன், கடை, கோபுரம், ஆடை
12. செவ்வழி: மலைப்பாதை, மாலை நேரப்பண், பூங்கா, நேர்மையானவழி
13. தூம்பு: கயிறு, கன்று, துளையிசைக்கருவி, துணி
14. பண்ணத்தி: கர்னாடாக இசை, நாட்டுப்புறப்பாடல், தேவாரம், பூச்சிவகை
15. பணிலம்: சங்கு, நத்தை, தண்ணீர், குடை
16. பழிச்சுதல்: இகழ்தல், வாழ்த்துதல், வைதல், திட்டுதல்
17. பாட்டி: வயதானவள், பாடும் மகளிர், மூத்தவள், அறிவாளி
18. வட்டரங்கு: வட்டவடிவமானது, சதுரமான அரங்கு, நீர்நிலை, மேடை,
19. வயிர்: உடல் உறுப்பு, ஒருவகை குழலிசைக்கருவி, உறுதி, பெரிய,
20. விறலி: வெற்றி, போர், ஆர்ப்பாட்டம், ஆடல் மகள்.

விடை: 
1. காப்புக்கயிறு, 2. மருதநிலப் பண், 3. காவடிசுமத்தல் 4. குறுந்தடி 5. கூத்தில் ஒருவகை, 6பேய், 7. விளையாட்டு, 8. கும்மி, 9. யாழ்வாசிப்பவன், 10. திருவிழா, 11. ஆடை 12. மாலைநேரப் பண், 13. துளையிசைக்கருவி 14. நாட்டுப்புறப்பாடல், 15. சங்கு, 16. வாழ்த்துதல், 17.பாடும் மகளிர், 18.சதுரமான அரங்கு 19. ஒருவகை குழலிசைக்கருவி, 20. ஆடல் மகள்.

நன்றி:
அந்திமழை செப்-அக்-2012 இதழ்.

முகவரி: 24 ஏ, கண்பத்ராஜ் நகர்,காளியம்மன்கோயில் தெரு,
விருகம்பாக்கம், சென்னை-92
பேசி: 044- 43514540

வியாழன், 4 அக்டோபர், 2012

உள்கோட்டை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் கங்கை கொண்டசோழபுரத்தை அடுத்துள்ள உள்கோட்டை அரசுத் தொடக்கப் பள்ளி (நூற்றாண்டு விழா), உயர்நிலைப்பள்ளி (பொன்விழா)யில் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து பள்ளியின் நூற்றாண்டு விழாவையும், பொன்விழாவையும் கொண்டாட உள்ளனர்.

நாள்: 06.10.2012(காரிக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.ப.செந்தில்குமார் இ.ஆ.ப., திரைப்பா ஆசிரியர் பா.விஜய், கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர். 

இப்பள்ளியில் நாற்பதாண்டுகளுக்கு முன் பணி செய்த திரு. ஐ.நீதியப்பன் ஆசிரியர்(இராஜாவூர், கன்னியாகுமரி) அவர்கள் அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளார். 

இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பணியாற்றிய ஆசிரியப் பெருமக்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.