நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 8 மார்ச், 2013

நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துலகம்


                            நாகரத்தினம் கிருஷ்ணா

தமிழ் இலக்கியங்களை உலகத் தரத்திற்கு எழுதவேண்டும் என்ற முயற்சியில் எழுத்தாளர்கள் பலர் பலவகையில் முயற்சி செய்கின்றனர். தமிழக எழுத்தாளர்களின் முயற்சியைப் போலவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் முயற்சிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவ்வகையில் புதுச்சேரியில் வாழ்ந்து, தற்பொழுது பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தமிழ் இலக்கியப்படைப்புகளை இக்கட்டுரை அறிமுகப்படுத்துவதுடன் அவரின் படைப்புகள் சிலவற்றை மதிப்பிடவும் முனைந்துள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டுக்கு அருகில் உள்ள கொழுவாரி என்ற ஊரில் 07.01.201952 இல் பிறந்தவர். பெற்றோர் இராதாகிருஷ்ணன் பிள்ளை, இந்திராணி அம்மாள்.  புதுவை காலாப்பட்டு பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். சென்னையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் இளங்கலைப் பொருளியல் படித்தவர்(1972). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் படித்தவர். தொடக்கத்தில் விக்சு நிறுவனத்தின் முகவராக  மூன்றாண்டுகள் பணியாற்றியவர். பின்னர் வருவாய்த்துறையில் புதுச்சேரியில் எழுத்தர் பணியாற்றினார். பின்னர்த் துணை வட்டாட்சியர் பணியில் இணைந்தார். கென்னடி டுட்டோரியல் கல்லூரியில் படிப்பு, பணி, பின்னர் புதுவையின் அல்லயன்சு பிரான்சுவேயில் பிரெஞ்சு பயின்றார். துணிவணிகத்தில் சில காலம் ஈடுபட்டிருந்தார்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்ககளுக்குத் தமிழாசிரியர் புலவர் நாகி அவர்களால் தமிழ் ஈடுபாடு உருவானது.பள்ளியில் எண்ணம் என்ற கையெழுத்து ஏட்டை நடத்தினார்.1973 முதல் கிருஷ்ணா என்ற பெயரில் எழுதினார். குமுதம், இராணி, குங்குமம் போன்ற ஏடுகளில் இவரின் படைப்புகள் வெளிவரத் தொடங்கின.1977 இல் இவருக்குத் திருமணம். மனைவி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்.1985 இல் பிரான்சுக்குச் சென்றார். அங்குச் சென்று கணக்கியல் பட்டயப் படிப்பு முடித்தார்.  மூன்று ஆண்டுகள் நகர் மன்றத்தில் உதவிக் கணக்காளராகப் பணிபுரிந்தார். 1991 இல் மளிகைக்கடை வைத்து வணிகம் நடத்தினார். 1999 வரை இவர் எழுத்தில் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து வாசிப்புகளில் ஈடுபட்டிருந்தார்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் நிலா என்ற இதழினைத் தொடங்கி நடத்தினார். 1999 முதல் 2002 வரை இந்த இந்த இதழ் வெளிவந்தது. ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா. துணை ஆசிரியர் பாலகிருஷ்ணன். தமிழில் இணைய இதழ்கள் தோற்றம்பெற்ற சூழலில் தொடர்ந்து இணைய இதழ்களில் எழுதத்தொடங்கினார். மின்னம்பலம், ஆறாம்திணை, திண்ணை போன்ற புகழ்பெற்ற இணைய இதழ்களில் எழுதத் தொடங்கினார்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள்

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று பல வடிவங்களில் படைப்புகளை வழங்கியுள்ளார். இவர்தம் படைப்புகளில் நாவல்கள் பலவும் பல்வேறு சோதனை முயற்சிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே நேர்கோட்டில் கதை சொல்வதிலிருந்து விலகி, நூற்றாண்டுகளைக் கடந்தும், நாடு கடந்தும், கண்டம் கடந்தும், பண்பாடு நாகரிகம் கடந்தும் இவர்தம் கதைகள் அமைந்துள்ளன. காலத்திற்கு அமைந்த மொழிநடையைக் கையாண்டு படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

கதைக்கருக்களைத் தேர்வு செய்தல், செய்தி சேகரிப்பு, விவரிப்பு என்று ஒவ்வொன்றிலும் இவர் கவனம் செலுத்தியுள்ளார். கற்பனைகள் நிறைந்த மொழிநடையும், உவமை உருவக உத்திகளும் இயல்பாக இவர் புதினங்களில் மின்னி மிளிர்கின்றன. பன்மொழியறிவும், பன்னூல் பயிற்சியும் வாழ்க்கை குறித்த தெளிவும், மானுடத்தை நேசிக்கும் இயல்பும், பழைமையிலிருந்து புதுமையை உருவாக்க வேண்டும் என்ற உந்துதலும் இவர் படைப்புகளைச் செழுமையடையச் செய்துள்ளன. பழைய வரலாறுகளையும் சம்பவங்களையும் பொருத்தமான இடங்களில் பொருத்திக்காடியுள்ள இவரின் செய்நேர்த்தி வியக்க வைக்கின்றது. கற்பனை, வெளியீட்டில் மிகைப்படுத்தல் சிலவிடங்களில் தலைகாட்டினாலும் அவை படைப்பின் வேகத்தைத் தடுக்கவில்லை.

கப்பல்களின் போக்கு, காற்றடிக்கும் திசை, கடந்த நூற்றாண்டுகளில் அமைந்த கடற்பயண அனுபவங்களை உள்வாங்கி இவர் வரைந்துள்ள போக்கினைப் படிப்பவர்கள் வியக்காமல் இருக்கமுடியாது. இந்திய வரலாறு, பிரெஞ்சுநாட்டு வரலாறு, மொரீசியசு நாட்டு வரலாறு இவர் நாவல்களில் பொதிந்து கிடப்பதுபோல் உலக வரலாறுகளும் அங்கங்கு புலப்படுகின்றன.

வரலாற்றுப் புதினங்களில் கதையை மட்டும் நகர்த்தாமல் உரிய இடங்களில் வரலாற்றை எழுதிச் செல்வதும் இவரின் பாணியாக உள்ளது. கடல்கடந்த தமிழர்கள் ஒவ்வொரு நாடுகளில் எவ்வாறு கடும் உழைப்பில் அந்தந்த நாட்டை வளப்படுத்தினர் என்பதை நாவலில் மிகச்சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் இன்று தொழில் நிமித்தமும், பணி நிமித்தமும் செல்வதுபோல் இல்லாமல் பல சூழ்நிலைகளால் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதை இவர் நாவல்களால் அறியலாம்.

பசி, பஞ்சத்திலிருந்து தப்பிக்கவும், வெளிநாட்டார் அல்லது கண்காணிகளின் பசப்பு வார்த்தைகளாலும் பலர் வெளிநாடு சென்றுள்ளனர். சிலர் இங்குத் தவறு செய்துவிட்டுத் தண்டனைகள் அல்லது சமூக அடக்குமுறைகளுக்கு அஞ்சிச் சென்று நாடு திரும்பாமல் இறந்த செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுபோல் அயல்நாட்டுக்காரர்களைத் திருமணம் செய்துகொண்ட தமிழ்ப்பெண்கள், வெளிநாட்டுப் பெண்களை மணந்துகொண்ட தமிழக ஆண்கள் பற்றிய பல குறிப்புகளை இவர் புதினத்தில் காணமுடிகின்றது. தமிழர்களிடம் காலம் காலமாக இருந்துவரும் அடிமை உணர்வு, காட்டிக்கொடுக்கும் இயல்பு, நன்றி மறவாமை யாவும் இவர் புதினத்தில் இடம்பெற்றுள்ளன.

மொழிவது சுகம் என்ற தொடரை வாரந்தோறும் எழுதினார். இதில் வாரந்தோறும் தம் எண்ணங்களைப் பதிவுசெய்தார். சிந்தனை மின்னல்கள் என்ற குறிப்புடன் இந்தத் தொடர் நூலாக வெளிவந்துள்ளது. 24 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் பயனுடைய பல செய்திகள் உள்ளன.

 வெளிநாடுகளில் நூல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் மதிப்பீடுகளைப் படிக்கும்பொழுது எந்த அளவுக்குப் பரிசுக்குரிய நூல்கள் வாசிக்கப்படுகின்றன என்ற வியப்பு ஏற்படும். சமகால நடப்புகளைத் தீவிரமாக எண்ணி எழுதியுள்ள மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பிரான்சு நாட்டின் அரசியல், சமூகம், கலை, இலக்கிய முயற்சிகள் ஆசிரியரால் இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன. வாரந்தோறும் எழுதிய சிந்தனைகள் என்று அடக்கிவிடமுடியாதபடி தகவல்களின் களஞ்சியமாகவும், விவாதங்களின் தொகுப்பாகவும் பல கட்டுரைகள் உள்ளன.

வணக்கம் துயரமே என்ற நூல் பிரெஞ்சுமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். 16 வயது பெண் தன்னுடைய அனுபவங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொள்வதாக உள்ள நூலாகும். பிரான்சில் அதிகம் விற்பனையான நூல் இதுவாகும். 160 பக்கம் கொண்ட நூல் நாகரத்தினம் கிருஷ்ணாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

காதலன் என்ற நாவல் பிரெஞ்சுப்புரட்சியை ஏற்படுத்திய நாவலின் மொழிபெயர்ப்பு வடிவமாகும். இளம் பெண்ணொருத்தித் தன் அனுபவங்களைக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.

மார்க்சின் கொடுங்கனவு என்னும் நூல் மூலதனம் நூல் பற்றிய விமர்சனமாகும்.

உலகங்கள் விற்பனைக்கு என்ற நூல் (அதிர்வுக்கதைகளின் தொகுப்பு) பிரெஞ்சிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட நூலாகும். இந்த நூலின் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும்.

கிருஷ்ணப்ப நாயக்கன் கௌமுதி  என்னும் நாவல் செஞ்சியை ஆண்டு கிருஷ்ணப்ப நாயக்கன் என்பவனின் வரலாற்றைச் சொல்லும் புதினமாக வெளிவந்துள்ளது. செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்லும் வகையில் அக்காலத் தமிழக நிலையைச் சிறப்பாக இந்தப் புதினத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புதினத்தின் கதை இருபதாம் நூற்றாண்டுக்கும் பதினாறும் நூற்றாண்டுக்குமாகத் தாவித் தாவி நடக்கின்றது. செஞ்சி பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் பல அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாகச் செஞ்சியின் வரலாற்றை நினைவுகூர்ந்தாலும் அக்காலப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளை நூலாசிரியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கொமுதியில் சிதம்பரம் தீட்சிதர்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் கோவிந்தராசனுக்குச் சிலைவைக்கக் கூடாது என்று எதிர்ப்பைத் தெரிவித்து கோயில் கோபுரத்திலிருந்து வீழ்ந்து இறந்த செய்தியை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூலில் பழைமையும், புதுமையும் கலந்தபடி செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. படைப்பாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா அக் காலத்துக்குத் தகுந்த மொழிநடையைப் படைக்கும் நோக்கில் மிகுதியான சமற்கிருதச் சொல்லாட்சிகளை ஆண்டுள்ளார். சமகாலப் புதுச்சேரி வாழ்க்கையும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலக்கடல்

நீலக்கடல் என்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புதுச்சேரியைக் கைப்பற்றி ஆட்சி செய்த பிரெஞ்சியர்களைப் பற்றியும், பிரெஞ்சு தேசமாக விளங்கிய புதுச்சேரியிலிருந்து மொரீசியசு தீவுக்குச்(பிரெஞ்சு தீவு) சென்ற மக்களைப் பற்றியும் சிறப்பாக விவரிக்கின்றது. கடந்த காலங்களை விவரிப்பதுடன் அமையாமல் தற்கால புதுவை அரசியல் வரை இந்த நாவலில் செய்திகள் பதிவாகியுள்ளன. மொரீசியசு வரலாற்றை விவரிக்கும் முதல் தமிழ் நாவலாக இதனைக் குறிக்கலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் நீலக்கடல் நாவலில் பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளார். மக்களுக்கு வரலாற்று அறிவைக் கதைப்போக்கில் தந்துள்ளார். தாம் பயின்ற இந்திய வரலாறு, உலகவரலாறு, ஆன்மீக, வேதாந்த, சித்தாந்த சாத்திரங்களை இந்த நாவலில் தேன்தடவிய கனிபோல் தந்துள்ளார்.

முன்பு வெளிவந்த வரலாற்று நாவல்கள் என்பவை அரசன், குறுநில மன்னன் வீரதீரங்களை மட்டும் பேசும். சராசரி மக்களின் வாழ்க்கையை எதிரொலிக்காது. அரசியர்களின் அந்தப்புர வாழ்க்கை, பற்றிய செய்திகளையும் மிகைக் கற்பனைகளையும் கொண்டிருக்கும். உழைக்கும் மக்களின் துன்பம் மருந்துக்கும் இருக்காது. ஆனால் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் நாவலில் சாதாரண மக்களும் கதைப்பாத்திரங்களாக உலா வருகின்றனர். கொல்லாசாரியார்களும், தச்சாசாரியார்களும் உலவுகின்றனர். கிராமத்து மருத்துவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக உலவிக் கதையை நகர்த்துகின்றனர். திருப்புமுனைகள், அதிர்ச்சிகள் நாவலில் இடம்பெற்றுப் படிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. பழமொழிகளும், சமயச்செய்திகளும், புராண இதிகாசச் செய்திகளும், ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்புச் செய்திகளும், இலக்கிய மேற்கோள்களும், வரலாற்றுக் குறிப்புகளும்  உரிய இடங்களில் பக்குவமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடம் காலம் காலமாகப் படிந்துகிடக்கும் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை மிக நுட்பமாகத் தம் புதினத்தில் பதிவுசெய்துள்ளார்.

மக்களிடம் இருந்த பசி, பஞ்சம், கோப, தாபங்கள் பதிவாகியுள்ளன, மொரீசியசு தீவினை வளப்படுத்தத் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நேரில் கண்டுரைத்தவர்போல் இந்த நாவலில் கிருஷ்ணா பதிவு செய்துள்ளார். 520 பக்கத்தில் விரியும் நீலக்கடல் நாவல் தமிழில் வரவேற்கத் தகுந்த முயற்சியாகும். இந்த நாவலில் பிரெஞ்சு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் இடம்பெறுவதுபோல் அவர்களின் சொற்களும் மிகுதியாக ஆளப்பட்டுள்ளன. லஸ்கர், கும்பெனி, சொல்தா, போத்தல், குவர்னர், கப்பித்தேன், லெ பொந்திஷேரி, மிஸியே என்ற பல சொற்களின் ஆட்சியைக் குறிப்பிடலாம்.

நாவலில் கதை விவரிப்பு மட்டும் என்று அமையாமல் அக்காலத்தில் நிகழ்ந்த கப்பல் கட்டுமானம், கப்பல் செலுத்ததுதல், கப்பல் வாழ்க்கை, மாலுமிகளின் செயல்பாடுகள், கடல்பயணம், வணிகப்பொருள்கள், பிரெஞ்சுக்காரர்களின் மதுவிருந்து, காற்றின் வேகம், கரும்புவெட்டு, ஆப்பிரிக்கர் வாழ்க்கை, மொரீசியசு பழங்குடிமக்களின் வாழ்க்கை, மொரீசியசைப் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு உட்படுத்தியமை, பிரெஞ்சியர்கள் மக்களுக்கு வழங்கிய தண்டனைகள் யாவும் பதிவாகியுள்ளன.

புராணம், இதிகாசம், கூத்து, நாட்டுப்புறவியல் குறித்த பல செய்திகளைத் தாங்கியக் கருவூலமாக இந்த நீலக்கடல் நாவல் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வருணனைகள், அணி அமைப்புகள், பழமொழிகள் தனித்துக் கண்டு ஆராயத்தக்கன. “மூன்றாம் வகை நரகமான அந்ததாமிங்ரம் நரகம்” என்று மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.

”மெல்ல நிமிர்ந்ததும் வெட்கமுற்றவளாய், முகம் கவிழ்ந்து மெள்ளக் கதவடைத்துவிட்டு விடுவிடுவென்று உள்ளே போகத்தான் செய்தாள். ஆனால் இவன் மன வாசலைத் திறந்துகொண்டு கால்பதித்தவள் உள்ளத்துக்குள்ளே அல்லவா உட்கார்ந்துகொண்டாள்” (பக்கம்.465) என்று கற்பனையில் வரையும் நாகரத்தினம் அவர்களின் எழுத்துகளைத் தேர்ந்த வாசகர்கள் சுவைக்காமல் இருக்கமுடியாது. “துருவ நட்சத்திரத்தைக் குறிவைத்துப் பயணிக்கும் மரக்கலத்தினைப்போல, நெஞ்சம் அப்பெண்ணைக் குறிவைத்துப் பயணிக்கிறது”(பக்கம்.465). “சாவியைச் செருகித் திருப்ப எஞ்சின், அந்நிய மனிதனைக் கண்ட நாய்போல உர்ரென்றது” (பக்கம்.445) என்று உவமைகள் உரிய இடத்தில் சிறப்பாக ஆளப்பட்டுள்ளன.

காமாட்சி அம்மாள், தெய்வானை, கைலாசம், சில்வி, காமாட்சியம்மாள், பொன்னப்ப ஆசாரி, தேவராசன், காத்தமுத்து, வீரம்மா, பாகூர் உடையார், மனோரஞ்சிதம் அம்மாள், நீலவேணி, தானப்பமுதலியார், கனகராய முதலியார், வைத்தியர் சபாபதி படையாட்சி, பலராம் பிள்ளை, வேலாயுத முதலியார், ஆனந்தரங்க பிள்ளை, ஆதிகேசவலு ரெட்டியார், கம்மாளன் முருகேசன், மாறன், பரங்கிணி நடேசன், கேணிப்பட்டு கோவிந்தன், வேம்புலி நாயக்கர், சீனுவாச நாயக்கர், விசாலாட்சி, உள்ளிட்ட பல பாத்திங்கள் இடம்பெற்றுள்ளன.

அதுபோல்  லாபூர்தொனே(பிரெஞ்சு தீவின் குவர்னர்), பெர்னார் குளோதான், துய்மா, துய்ப்ளே போன்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியை ஒட்டிய ஊர்களான முத்தியால்பேட்டை, வழுதாவூர், திருவக்கரை, பறங்கிப்பேட்டை, காரைக்கால்(அல்வா), கும்பகோணம், கடலூர், தொண்டைமாநத்தம், ஊசுடு ஏரி, வில்லியனூர், முத்தரையர்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களும் அதில் வாழும் மக்களும் இந்த நாவலில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஒரு வரலாற்றை மிக எளிமையாகக் கதைப்போக்கில் வெளியிட்டுள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்பு முயற்சி புதுமையாகவும், நேர்த்தியாகவும் அமைந்துள்ளது. புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர்கள் அடைந்த வரலாறு, ஆண்ட வரலாறு, மிகத்தெளிவாக எளிய நடையில் விளக்கப்புட்டள்ளன. வரலாறு, நாட்குறிப்பு, களப்பணி, வாய்மொழி மரப்புகளை உள்வாங்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். மொரீசியசு தீவில் தங்கியும் களப்பணியாற்றியும் செய்திகளைச் சேகரித்துள்ளார்.

தமிழகத்தின் ஏற்றப்பாட்டு, பழமொழிகள், உவமைகள் இந்த நாவலில் பொருத்தமாக ஆளப்பட்டுள்ளன.

மாத்தா ஹரி

நாகரத்தினம் கிருஷணாவின் மற்றொரு அரிய படைப்பு மாத்தாஹரி புதினம் ஆகும். புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை என்ற குறிப்புடன் வெளிவந்துள்ள இந்தப் புதினம். பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்தப் புதினத்தை ஆசிரியர் படைத்துள்ளார். மாத்தாஹரி  வேவுக்காரியாக அறியப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு 1917 இல் பிரான்சில் சுட்டுக்கொள்ளப்பட்டவள். மாத்தா ஹரி இராணுவவீரர்கள், இலக்கியவாதிகள், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள் எனப்பலரின் கனவுக்கன்னியாக இருந்தவள். அவள் வாழ்க்கையை மையமிட்டு பல படைப்புகள் பல வடிவங்களில் வெளிவந்துள்ளன.  மாத்தா ஹரிக்குப் பிறகு பிரான்சுக்குப் போன பவானி, பவானியின் மகள் ஹரினியைப் பற்றிய கதையாக இந்த நாவல் உள்ளது.

மாத்தாஹரி, பவானி, ஹரினியின் வாழ்க்கை ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருப்பதை நாவலில் உணரமுடிகின்றது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள்

கட்டுரை
பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் - (2005)
சிமொன் தெ பொவ்வார் - ஒரு திமிர்ந்த ஞானசெருக்கு  (2008)
எழுத்தின் தேடுதல் வேட்டை- (2010)
கதையல்ல வரலாறு- 2013
மொழிவது சுகம் 2013
ஊர்ப்பேச்சு 2013

நாவல்
நீலக்கடல் (தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற நாவல்) 2005)
மாத்தா ஹரி (2008)
கிருஷ்ணப்ப நாயக்கர்கௌமுதி (செஞ்சி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல்) 2013

சிறுகதை
கனவு மெய்ப்படவேண்டும் -(2002)
நந்தகுமாரா நந்தகுமாரா -(2005)
சன்னலொட்டி அமரும் குருவிகள்-(2010)
சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது (அறிவியல் புனைகதைகள்))(2010)


மொழிபெயர்ப்பு

போர் அறிவித்தாகிவிட்டது- நவீன பிரெஞ்சு சிறுகதைகள் -(2005)
காதலன் - மார்கெரித் துராஸ் -பிரெஞ்சு நாவல் (2008)
வணக்கம் துயரமே - பிரான்சுவாஸ் சகாங் பிரெஞ்சு நாவல் -2009)
உயிர்க்கொல்லி (உலகச் சிறுகதைகள்- 2012

மார்க்சின் கொடுங்கனவு -டெனிஸ்கோலன் - 2012

உலகங்கள் விற்பனைக்கு (அதிர்வுக்கதைகள்) -2012

கவிதை
அழுவதும் சுகமே (2002)

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா, பிரெஞ்சுப் பேராசிரியர் நாயகர் 

 மு.இளங்கோவன், எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா

நன்றி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.
*கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் இசைவுபெறுக

1 கருத்து:

துளசி கோபால் சொன்னது…

விரிவான தகவல்களுக்கு நன்றி.

என்னுடைய ஃபிஜித்தீவு புத்தகத்திற்கு மதிப்புரை எழுதித்தந்தார்.

இனிய குணமுள்ள மனிதர் & நண்பர் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!