நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 31 ஜூலை, 2011

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விழாவின் காட்சிகள்...முனைவர் மு.இளங்கோவனுக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் சான்றிதழ் வழங்கும் காட்சி.அருகில் முத்து.

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த நூல்களுக்குப் பரிசளிப்பு இன்று(31.07.2011) நடைபெற்றது. எழுத்தாளர் அருணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளார் நினைவுத் தமிழ் இலக்கியப் பரிசைப் புதுச்சேரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வழங்கினர்.

எழுத்தாளர்கள் சோலை சுந்தரபெருமாள், டி.செல்வராஜ்,ச.சுப்புராவ், சந்திராமனோகரன், நிழல்வண்ணன், நாணற்காடன் உள்ளிட்ட எழுத்தாளர்களும் பரிசுபெற்றனர்.எழுத்தாளர்கள் கமலாலயன், சைதை ஜெ, மயிலை பாலு, கி.அன்பரசன், ச.விசயலட்சுமி,முத்து, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் நூல்கள் பற்றி கருத்துரையாற்றினர். படைப்பாளிகள் ஏற்புரையாற்றினர்.


பரிசுபெற்ற படைப்பாளிகள், த.மு.எ.க.சங்கத்தின் பொறுப்பாளர்கள்


மு.இளங்கோவனுக்கு எழுத்தாளர் அருணன் பரிசுத்தொகை வழங்குதல்


பரிசுபெறும் மு.இளங்கோவன் அருகில் அருணன், ச.தமிழ்ச்செல்வன்

வெள்ளி, 29 ஜூலை, 2011

பனைநிலத்தாரின் வரவேற்பு…


சுந்தரவடிவேல், பழைமைபேசி, நா.முத்துக்குமார், மு.இளங்கோவன்,ரவி தமிழ்வாணன்

அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பனைநிலத் தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் அமைப்பு நிறுவிப் பல்லாண்டுகளாகத் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர். அவர்களும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்துதான் இந்த ஆண்டு பேரவையின் 24 ஆம் ஆண்டு விழாவைச் சார்ல்சுடன் நகரில் கொண்டாடியது.

முதல்நாள்(01.07.2011) நிகழ்வுக்குச் சார்ல்சுடன் நகரின் கடற்கரை ஓரம் உள்ள மீன்காட்சியக அரங்கில் மாலை ஆறு மணியளவில் கூடினோம். விடுதி அறையிலிருந்து நானும், வானொலி மட்டைப்பந்து அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் ஐயாவும் அரங்கிற்குச் சென்றோம்.

போக்குவரவுக்குப் பொறுப்பேற்ற தோழர்கள் விழாவுக்கு வந்தவர்களை அன்புடன் வரவேற்று அழைத்துச் செல்வதில் ஒருவருக்கு ஒருவர் போற்றும்படி முன்வந்து பணிசெய்தனர், தோழர் சுந்தரவடிவேல், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, உள்ளிட்டவர்களின் குழுவினர் அனைத்து நிலைகளிலும் திறம்படப் பணியாற்றினர்.

சார்ல்சுடன் கடற்கரையில் வனப்புடன் திகழும் மீன்காட்சிய அரங்கில் சிறிய அளவில் மேடை அமைத்திருந்தனர். கடற்காற்று தவழும் திறந்தவெளியில் அனைவரும் ஒன்றுகூடிக் கடலழகைச் சுவைத்தபடியும் உரையாடியும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து மகிழ்ந்தோம்.

திரைக்கலைஞர் அண்ணன் நாசர் அவர்களும் அவர்களின் துணைவியார் கமிலா நாசர் அவர்களும் வந்திருந்தனர். அவர்களைப் போல் நகைச்சுவை நடிகர் அண்ணன் சார்லி அவர்களும் வந்திருந்தார். திரைப்பா ஆசிரியர் நண்பர் நா.முத்துக்குமார் அவர்களும் புதுகை பூபாளம் குழுவினரும் வந்திருந்தனர். மேலும் சில திரைக்கலைஞர்கள் வந்திருந்தனர். நாசர் அண்ணன் அவர்களும் சார்லி அண்ணன் அவர்களும் பலநாள் பழகியவர்கள் போல் ஒருவருக்கொருவர் அன்புகாட்டியமை அமெரிக்கத் தமிழர்களைப் பெரிதும் கவர்ந்தன.

தமிழகத்திலிருந்து வந்த நாங்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். எங்களைப் போல் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து வந்த தமிழன்பர்கள் பலரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம்.

புதுச்சேரியில் பிறந்து பணியின் நிமித்தம் அமெரிக்காவில் வாழும் தமிழன்பர்கள் சிலரை உரையாடல் வழியாக அறிய முடிந்தது. அனைவரையும் ஒளிக்கலைஞர் திரு.கண்ணன் அவர்கள் தன் கருவியால் ஒன்றிணைத்தார். அந்தந்த நிமிடங்களை ஒளிக்கலைஞர் திரு.கண்ணன் அவர்கள் உயிருடையதாக மாற்றினார். அனைவரையும் மேடைக்கு அழைத்து முதலில் அறிமுகம் செய்தார்கள். சுருக்கமாக ஒவ்வொருவரும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

நாளைமுதல் நடைபெறும் விழாக்களில் தொடர்ந்து உரையாடுவோம் என்று கூறி அறிமுகம் ஆனோம். நண்பர் சுந்தரவடிவேல் அவர்கள் என்னுடைய தமிழ் இணைய ஆர்வத்தையும், நாட்டுப்புறப் பாடல்துறையில் எனக்கிருந்த ஈடுபாட்டையும் சொல்லி அறிமுகம் செய்து ஒரு நாட்டுப்புறப்பாடலைப் பாடச்சொன்னார். நானும் ஒரு பாடலைப் பாடி அறிமுகம் ஆனேன். ஒலிவாங்கி இடையில் இயங்க மறுத்ததால் பாடலை இடையில் நிறுத்தி மீண்டும் பாடுவேன் என்று சுருக்கமாக ஓரிரு மொழிகளை மொழிந்து அரங்கினர் உள்ளத்தில் இடம்பிடித்தேன்.

பாட்டும், பேச்சும் தொடர்ந்தபடியே உணவும் பரிமாறப்பட்டது. நம்மூரிலிருந்து வந்த அன்பர்கள் பலரும் அன்றுதான் வானூர்தியில் வந்து சேர்ந்தார்கள். எனவே அவர்கள் உறக்கக் கலக்கத்தில் இருந்தனர். அமெரிக்காவில் மாலைப்பொழுது என்றாலும் அது நம்மூர் விடியற்காலை நேரம் என்பதால் அவர்களால் உணவை விரும்பி உண்ணமுடியாத நிலையில் இருந்தனர். எனக்கு ஓரளவு உடல் ஒத்துழைத்தது.

உணவு முடித்து, மீன்காட்சியகத்தை மேலோட்டமாகப் பார்த்து மகிழ்ந்தேன். நீர்நிலைகளைச் செயற்கையாக அமைத்து அதில் உயிர் வாழும் உயர்வகை மீன்களை உலவவிட்டுள்ளனர். பெரிய வடிவ மீன்கள் அங்கும் இங்கும் செல்வதும் சிறிய மீன்கள் அதனை ஒட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதாக இருந்தமை கண்கொள்ளாக் காட்சியாகும். சற்றொப்பப் பத்து மணியளவில் நாங்கள் மாலை நிகழ்வை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.


கடற்கரையில் தமிழ் ஆர்வலர்கள்

அறையில் என்னுடன் ஒன்றாகத் தங்கியிருந்தவர் வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் ஆவார். இவர் பல செய்திகளை உரையாடலில் பரிமாறினார். இவர் ஒரு செய்திக் களஞ்சியம். அவரைப் பேசச்செய்து ஒளிக்காட்சியாகப் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். வானொலி, உலக வரலாறு, மட்டைப்பந்து பற்றிய பல செய்திகளை அவர் எவ்விதக் குறிப்புமில்லாமல் பலமணிநேரம் பேசும் ஆற்றல் உடையவர். உலக ஒலிபரப்புகள் பற்றி அறிவிப்புச் செய்த அந்தப் பெருமகனார் ஓர் உண்மையை மறைக்காமல் நினைவுகூர்ந்தார்.

வானூர்தி நிலையத்திலிருந்து பிரான்சிசு மரியான் விடுதிக்கு வந்த என்னை அன்புடன் வரவேற்ற முத்து அவர்கள் என் கைப்பைச் சுமையைப் பகிர்ந்தவராய் விடுதி அறைக்கு என்னுடன் வந்தார்கள். எங்களுக்கு ஒரு திறவியை விடுதி மேலாளர்கள் தந்ததனர். நாங்கள் முதலில் அறையில் நுழையும் நினைவில் திறப்பதற்குரிய அட்டையைக் கதவுப் பகுதியில் உள்ளிட்டு உள்ளே நுழைந்தோம். எங்களுக்கு முன்பாக அறைக்கு வந்திருந்த அப்துல் ஜப்பார் ஐயாவுக்கு நாங்கள் அறிவிப்பு செய்யாமல் நுழைந்த செயல் பெரிய அதிர்ச்சியைத் தந்தது என்றார்கள்.

ஆம். அவர் அறைக்கு வரும்பொழுது யாரோ சொல்லியனுப்பினார்களாம். இந்தப் பகுதியில் அடிக்கடி திருட்டு நடப்பது உண்டு. எனவே எக்காரணம் கொண்டும் கதவை அறிமுகம் இல்லாதவர்கள் வந்து தட்டினால் திறக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்கள். அதனால் ஒருவகை அச்சத்தில் இருந்த ஐயாவுக்கு எங்கள் எதிர்பாரா நுழைவு அதிர்ச்சி தந்திருக்கும். நாங்கள் வெளி ஆள் அல்லது கள்வர் என்று நினைத்து ஐயா அவர்கள் அச்சப்பட்டதை மனந்திறந்து சொன்னார்கள். நாம் புதியவராக நுழைந்தாலும் விடுதியில் கதவைத் தட்டிச்செல்வது நன்று என்று ஒரு பாடம் கற்றேன்.

திங்கள், 25 ஜூலை, 2011

த.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசு- 2010 பரிசளிப்பு விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கியப் பரிசு-2010 பரிசளிப்பு விழா எதிர்வரும் ஞாயிறு 31.07.2011 காலை 10 மணிக்குச் சென்னையில் நடைபெற உள்ளது.

பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு இந்த விழாவில் பரிசு வழங்கப்படுகின்றது. அவ்வகையில் எழுத்தாளர்கள் சோலை சுந்தரபெருமாள், டி.செல்வராஜ், ச.சுப்புராவ், சந்திரா மனோகரன், நிழல்வண்ணன் உள்ளிட்டவர்கள் தங்கள் நூல்களுக்குப் பரிசுபெறுகின்றனர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவுத் தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூல்- இலக்கியப் பரிசுக்கு முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையும்,சான்றிதழும் விழாவில் வழங்கப்படுகின்றன.

விழாவிற்கு எழுத்தாளர் அருணன் தலைமை தாங்குகின்றார். சிவ.செந்தில்நாதன் வரவேற்புரையாற்றவும், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றவும், வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

எழுத்தாளர் கமலாலயன், சைதை ஜெ, மயிலை பாலு, கி.அன்பரசன், ச.விசயலெட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்களின் துணைவியார் திருவாட்டி கோகிலா சமுத்திரம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார்.

வெ.இரவீந்திரபாரதி நன்றியுரையாற்ற உள்ளார்.
.

இடம்: கே.பி.பாலச்சந்தர் நினைவரங்கம்,
அசோகா திருமண மண்டபம்,
48, பம்மல் நல்லதம்பி தெரு,
எம்.ஜி.ஆர்.நகர், சென்னை- 600 078

புதன், 20 ஜூலை, 2011

சார்ல்சுடன் நகர்நோக்கி…


சார்ல்சுடன் பாலம்

அமெரிக்கா ஐம்பது மாநிலங்களாகப் பரந்து கிடக்கும் நிலப்பரப்பைக் கொண்டது. அந்தந்த மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தமிழ்ச் சங்கங்கள், பள்ளிகள், பிற அமைப்புகளை நிறுவித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர். பிள்ளைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்தல், தமிழ்நாட்டியம், தமிழிசை பயிற்றுவித்தல், தமிழ்நாட்டு அறிஞர்கள், கலைஞர்கள் வந்தால் அவர்களை அன்புடன் வரவேற்றுப் பேசச் செய்து விருந்தோம்பல் செய்தல் அமெரிக்கா வாழும் தமிழர்களின் பொதுநிலை விருப்பமாக உள்ளது.

அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாகப் “பெட்னா” என்று செயல்படுகின்றது. இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்விழா அமெரிக்காவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறுவது வழக்கம். இதுவரை இருபத்து நான்கு இடங்களில் இவ்வாறு ஆண்டுவிழா நடந்துள்ளது. தமிழகத்திலிருந்து அறிஞர்பெருமக்கள், கலைஞர்கள், திரைக்கலைஞர்கள் பலர் அழைக்கப்பெற்று இந்த விழாவினை மிகச்சிறப்பாக நடத்துவது அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் விருப்பமாகும். அமெரிக்கத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகப் பல்லாயிரக்கணக்கில் இந்த விழாவுக்குத் திரள்கின்றனர்.

கணினித்துறையிலும் கல்வித்துறையிலும் ஆய்வுத் துறைகளிலும் வங்கிப் பணிகளிலும் புகழ்பெற்று விளங்கும் பொறியாளர்கள், அதிகாரிகள், அறிவியலாளர்கள்தான் இந்த விழாவை நடத்துபவர்கள். குடும்பம் குடும்பமாக இணைந்து ஆர்வமுடன் நடத்தும் இந்த விழாவுக்கு இந்த ஆண்டு நான் செல்ல நினைத்தமை, அங்குப் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது காரணமாகும். பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்களுக்கு இருக்கும் ஆர்வம் தமிழாசிரியனாகிய எனக்கு ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை.

இதற்கு வாய்ப்பாகப் பென்சில்வேனியாவில் தமிழ் இணையமாநாடு நடந்ததும் அதில் கலந்துகொண்டும், பல்வேறு பல்கலைக்கழகங்களைப் பார்வையிடவும் திட்டடமிட்டேன். அந்த வகையில் என் அமெரிக்க நண்பர்களின் ஒத்துழைப்புடன் பயணம் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டது.

பெட்னா விழாவுக்கு முறைப்படி அந்த அமைப்பினர் என்னை அழைத்தனர். நானும் அமெரிக்காவின் முற்பகுதிப் பணிகளை (கருத்தரங்கு, பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல், நகர்வலம்) முடித்துக்கொண்டு 01.07.2011 பகல் ஒரு மணியளவில் பால்டிமோரிலிருந்து புறப்படும் வானூர்தியில் சார்ல்சுடன்(தெற்குக் கரோலினா மாநிலம்) நகர்நோக்கிப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன்.

நண்பர் சங்கர் இல்லத்தில் இரவு தங்கியிருந்தேன். காலையில் எழுந்து காலைக்கடமைகளை முடித்து இணையத்தில் அமர்ந்து புதுவையில் உள்ள குடும்பத்தாருடன் பேசியபடி இருந்தேன். பிற கடமைகளையும் முடித்தேன்.

சங்கரின் குடும்பத்தார் இரவு முழுவதும் பயணத்திற்கான ஏற்பாட்டில் இருந்ததால் காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியுடன் எழுந்தனர். காலையில் நாக்குக்கு வாய்ப்பாக இட்லியும் மிளகாய்ப் பொடியும் காலை உணவாகக் கொடுத்தனர். சங்கரின் துணைவியார் கொங்குநாட்டுப்பகுதி சார்ந்தவர். அவர்கள் பகுதியில் செய்யும் ஒருவகையான பொடியைப் பயன்படுத்தும்படி சொன்னார்கள். சற்றுக் காரமாக இருந்தது. நம்மூர்ப் பொடியைப் பயன்படுத்தினேன்.
நண்பர் சங்கர் மிளகாய்த்தோட்டத்தின் உரிமையாளர்போல் எப்பொழுதும் காரப்பிரியர். அதனால்தான் அவர்செயல் காரமாக இருக்கின்றது என்று நம்புகின்றேன். நல்லெண்ணையில் குழைத்த பொடியில் நம் நாட்டு உணவு கிடைத்த மகிழ்ச்சியில் உண்டேன்.

உணவு முடிந்ததும் அனைவரும் அவரவர்களுக்கு உரிய பொருள்களை எடுத்துக்கொண்டு புறப்பட அணியமானோம். சங்கரின் வீட்டுக்கு அருகில் இந்தியக் குடும்பத்தினர் பலர் உள்ளதாகச் சொன்னார்கள். அக்குடும்பம் சார்ந்த நண்பர் ஒருவர் மகிழ்வுந்தில் எங்களை வானூர்தி நிலையத்துக்கு அழைத்துச் செல்ல சங்கர் திட்டமிட்டிருந்தார். வண்டியும் உரிய நேரத்தில் வந்தது.

அனைத்துப் பொருள்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டு புறப்பட்டோம்.
பால்டிமோர் வானூர்தி நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் நினைவாக எனக்குப் பகலுணவாகத் தயிர்ச்சோறும் ஊறுகாயும் எடுத்துக்கொண்டோம். அவர்கள் அடையோ, ரொட்டியோ தின்று பழக்கப்பட்டவர்கள். என்ன சாப்பிட்டாலும் கடைசியல் தயிர் இல்லை என்றால் சாப்பிட்ட நிறைவே எனக்கு இருக்காது என்பதால் தயிர்ச்சோற்றைக் கொண்டு வந்தோம். எங்களை அழைத்து வந்த மகிழ்வுந்து நண்பர்க்கு நன்றிகூறி அவரை அனுப்பிவிட்டோம்.

எங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்த அணியமானோம். எங்கள் பைகளை முதலில் அனுப்பினோம். ஆள் ஆய்வு அடுத்து நடந்தது. அப்பொழுதுதான் தெரிந்தது. சங்கரின் துணைவியார் செயந்தி அம்மா அவர்கள் ஆளறி அட்டை எதுவும் இல்லாமல் வந்தது. புறப்பட்ட விரைவில் அதனை வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளார்கள். பாதுகாப்பு ஆய்வு அமெரிக்காவில் மிகுதி என்பதால் எங்களை உள்ளே அனுப்பிவிட்டு அவரை மட்டும் தடுத்து நிறுத்தினார்கள். சங்கர் உரிய வேறு ஆவணங்களைக் காட்டியும் மனம் நிறைவடையவில்லை.

என்றாலும் சில அடையாளங்களைச் சொன்னால் சிறிது நேரத்தில் அவர்பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துவிடமுடியும். அமெரிக்காவில் உலவும் ஒருவர் பற்றிய அனைத்துப் புள்ளி விவரங்களையும் கணினியில் இணைத்துவைத்துள்ளதை அறிந்து வியந்துபோனேன். காலையிலிருந்து இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி வந்துள்ளதாகவும் இது தம் கடமை என்றும் அதிகாரிகள் அன்புடன் கூறினர். நம்மூர் அதிகாரிகளாக இருந்தால் எப்படியும் “கைநீட்டுவார்கள்”. அல்லது எரிந்து விழுவார்கள். திட்டித்தீர்த்திருப்பார்கள். மிக அன்பாகவும் மதிப்பாகவும் இதுபோன்ற நிலைகளில் நடந்துகொள்ளும் அமெரிக்க அதிகாரிகளை மனதுக்குள் பாராட்டினேன்.

ஒருவழியாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுச் சங்கரின் துணைவியார் எங்கள் குழுவுடன் சிறிது நேரத்தில் வந்து இணைந்தார்கள். அவரின் நிலையைச் சொல்லி எங்கள் குழு சிரித்து மகிழ்ந்தது.

இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவரின் கனடா நாட்டு மருத்துவ நண்பரும் எங்கள் குழுவில் இணைந்தனர். வேறு பல மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்க்குடும்பத்தாரும் எங்களுடன் வானூர்தி நிலையத்தில் இணைந்தனர். பெண்கள் பெண்களுடனும், பெரியவர்கள் பெரியவர்களுடனும் குழைந்தைகள் குழந்தைகளுடனும் அறிமுகம் ஆகி, நலம் வினவி, சென்ற ஆண்டு நிகழ்வுகளை நினைவுகூறி மகிழ்ந்தனர்.

எங்களுக்கு உரிய வானூர்தி அரைமணி நேரக் காலத்தாழ்ச்சியுடன் புறப்படும் என்றனர். கொண்டுவந்த தயிர்ச்சோற்றை ஆர்வத்துடன் உண்டேன். இலங்கை மருத்துவரின் தாயார் அன்பு பாராட்டி என்னுடன் உரையாட நானும் உணவை முடித்தேன். வானூர்தி வந்து நின்றது. அனைவரும் ஒரே குழுவாக அமர்ந்தோம். உரையும் பேச்சுமாக எங்கள் செலவு இருந்தது.

அடுத்த ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை. சார்ல்சுடன் நகரின் வானூர்தி நிலையத்தில் இறங்கினோம். நான் சிறப்பு விருந்தினர் என்ற அடிப்படையில் என்னை அழைக்க வண்டி ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அது தெரியாமல் சங்கருடன் நான் மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்தேன். மகிழ்வுந்தை இயக்க ஓட்டுநர் எங்கே என்று நண்பர் சங்கரைக் கேட்டேன். சங்கர் அமெரிக்க நடைமுறையைச் சொன்னார்.

நமக்கு மகிழ்வுந்து தேவை என்று முன்பே பதிவு செய்துவிட்டால் உரிய இடத்தில் மகிழ்வுந்து நமக்காக நிறுத்தப்பட்டிருக்கும். உரிய அலுவலகத்தில் ஆவணங்களைக் காட்டி வண்டியின் திறவியை வாங்கி நமக்குரிய இடத்திற்கு நாமே ஓட்டிக்கொண்டு செல்லலாம். நம் கடமை முடித்து மீண்டும் வண்டியை உரிய இடத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம் என்றார். சற்றொப்ப நம்மூர் வாடகை மிதிவண்டிபோன்ற நடைமுறை. பல இலட்சம் மதிப்புள்ள வண்டியை நம்மை நம்பித் தருகின்றார்களே என்று வியந்தேன்.

எனக்குத் தமிழகத்தில் மகிழ்வுந்து ஓட்டுநரைக் கட்டிப் போட்டு வண்டியைக் கொள்ளையடிக்கும் நம்மூர் ஆறலை கள்வர்களின் நினைவுதான் வந்தது. மகப்பேற்றுக்கும் விரைவுப் போக்குவரத்துக்கும் என வண்டியைப் பேசி எடுத்து வந்து ஓட்டுநரைக் கட்டி முந்திரித்தோப்பில் போட்டுவிட்டு மறுநாள் நாளிதழ்களில் செய்தியாக அடிபடும் நம்மூர் மகிழ்வுந்து ஓட்டுநர்களின் நினைவுக்கு இடையே நண்பர் சங்கர் எங்களைப் பாதுகாப்பாகப் புகழ்பெற்ற பிரான்சிசு மரியான் விடுதிக்கு அழைத்து வந்தார்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

பேராசிரியர் ப. சிவராஜி நூல்கள் வெளியீட்டுவிழா


முனைவர் ப.சிவராஜி அவர்கள்

நாள்: 31.07.2011 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.30 மணி
இடம்: அல்லாமா இக்பால் அரங்கம், இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி அவர்கள் எழுதிய புலவர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள், செந்நாப்புலவர் ஆ. கார்மேகக்கோனார் இலக்கியப்பணிகள் என்னும் நூல்களின் வெளியீட்டு விழா வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் அல்லாமா இக்பால் அரங்கில் 31.07.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புலவர் இரா.இளங்குமரனாரின் தலைமையில் நடைபெறும் விழாவில் ச.வினோத்குமார் வரவேற்புரையாற்றுகின்றார். சி.கெய்சர் அகமது, கனி முகமது ஜாவித், முனைவர் சையத் சாகாபுதீன், முனைவர் பிரேம்நசீர் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி நீதியரசர் த. கிருபாநிதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கரு.அழ.குணசேகரன் ஆகியோர் நூல்களை வெளியிட திரு.வ.கோ. சுந்தரமூர்த்தி இ.ஆ.ப அவர்களும் அரக்கோணம் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சீத்தாராமன் அவர்களும் முதற்படிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

முனைவர் முகமதலி ஜின்னா, பேராசிரியர் அப்துல்காதர், பேராசிரியர் சுகேல், முனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். வாணியம்பாடி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தமிழ்மன்றங்களின் பொறுப்பாளர்கள், அரசியல் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

திங்கள், 18 ஜூலை, 2011

பால்டிமோர் உள்முகத் துறைமுகம்


பால்டிமோர் துறைமுகத்தின் அழகின் சிரிப்பு

அமெரிக்காவில் பால்டிமோர்(Baltimore) என்பது குறிப்பிடத்தக்க நகரமாகும். இது மேரிலாந்து மாநிலத்தின் தலைநகரமாகும். இங்கிருந்து வாசிங்டன் நகரைக் குறைந்த மணி நேரத்தில் அடையலாம். வாசிங்டன் நகருக்குப் பலர் இங்கிருந்து பணிக்குச் சென்று திரும்புவது வழக்கம். காலையில் நண்பர் சங்கருக்குப் பணி இருந்ததால் என்னைப் பால்டிமோரின் துறைமுகத்தில் விட்டுவிட்டு அவர் பணிக்குச் சென்றார்.

பால்டிமோர் துறைமுகம் என்று சொன்னாலும் உண்மையில் அங்கு இப்போது கப்பல் போக்குவரத்தை விட, சுற்றுலாத் தொழில்தான் சிறப்பாக உள்ளது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூர்ச் சுற்றுலாக்காரர்களும் அதிகமாக வருகின்றனர். பேருந்துகள் நம்மூரில் வரிசைகட்டி நிற்பதுபோல் சிறு சிறு படகுகளும், கப்பல்களும் துறைமுகத்தில் அணிவகுத்து நிற்கின்றன. அமெரிக்க உள்ளூர்க்காரர்கள் படகு ஓட்டம் நிகழ்த்துவதில் ஆர்வலர்கள். பலர் தங்கள் மகிழ்வுந்தில் படகுகளைக் கட்டிக்கொண்டு வருகின்றனர். கடலில் அல்லது ஆற்றில் இறக்கி ஒரு ஓட்டம் நடத்தி மீண்டும் படகைத் தூக்கிக் கட்டிக்கொண்டு ஊருக்குப் போகின்றனர். சிலர் வாடகைக்குக் கடலில் தங்கள் படகை நிறுத்தி வைக்கின்றனர். மாத வாடகையோ, ஆண்டு வாடகையோ செலுத்திப் படகைக் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைப்பது உண்டாம்.

சில கப்பல் அல்லது படகு நிறுவனங்கள் சுற்றுலாப் பயணிகளைக் குறிப்பிட்ட கட்டணத்தில் அழைத்துச்சென்று ஒரு வட்டமடித்துக் கடலைக் காட்டிக் கொண்டு வருகின்றனர். கரையைச்சுற்றி உணவுக்கூடங்கள், காட்சியகங்கள் உள்ளன. மீன்காட்சியகத்தில் நுழைய கட்டணம் 30 டாலர் என்றனர். தனியே சென்றதாலும் நீண்டநேரம் அங்கு ஆகும் என்பதாலும் மீன்காட்சிகம் நான் செல்லவில்லை. மறுநாள் நான் தெற்குக் கரோலினாவில் மீன்காட்சியகம் பார்க்க உள்ளதாலும் அங்குச் செல்லாமல் நேரே நாற்பது மாடிகளாக உயர்ந்து நிற்கும் ஒரு கோபுரக் கட்டடத்திற்குச் செல்ல நினைத்தேன். ஐந்து டாலர் கட்டணம் கட்டி உயரே சென்றேன். அங்கிருந்து பார்த்ததும் பால்டிமோர் நகரம் முழுவதையும் பார்க்க முடிந்தது. அழகிய கட்டடங்கள் இருக்கின்றன. வங்கிகள், வணிக நிறுவனங்கள் யாவும் வானுயரும் கட்டடத்தில் உள்ளன.

சற்றொப்ப 300 ஆண்டுகள் பழைமைகொண்ட பால்டிமோர் துறைமுகத்தில் சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல் போக்குவரத்து 1950-ஆண்டளவில் நலிந்துபோய்விட்டது. எனவே பழைய இடங்களை இடித்துத் தள்ளிவிட்டு, சுற்றுலா மையங்களைக் கட்டியுள்ளனர். மீன் காட்சியகம், கப்பல் காட்சியகம், அறிவியல் மையம், வணிகமையம், உணவு விடுதிகள் என்று பழைய அடையாளம் தெரியாமல் மாற்றப்பட்டுவிட்டது. எங்கும் மக்கள் போவதும் வருவதுமாக இருக்கின்றனர். பால்டிமோர் துறைமுகம் பல போர்கள் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

இரண்டாம் உலகப்போரின்போது சப்பான் கப்பல்களைக் கடைசியாக அழித்த அமெரிக்க நீர்முழ்கிக் கப்பல் டோர்சுக் இப்போது காட்சியகத்தில் இருக்கிறது. வருடந்தோறும் உலகத்தின் உயரமான கப்பல்களின் அணிவகுப்பு விழா பால்டிமோர் துறைமுகத்தில் நடக்குமாம்.

பால்டிமோர் கோபுரக்கட்டடத்தில் ஒவ்வொரு பார்வைப்பகுதியிலும் தென்படும் கட்டடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்துள்ளனர். வளிப்பாடு கட்டடம் முழுவதும் உள்ளது. அங்கு ஒரு மணி நேரம் இருந்து அனைத்துக் கோணத்திலும் பால்டிமோரின் அழகைக் கண்டு மகிழ்ந்தேன். அங்கு ஒரு இந்தியக் குடும்பத்தினர் வந்தனர். என் உருவம் கண்டு இந்தியன் என்று அவர்கள் பேச்சுக்கொடுத்தனர். அவர்கள் பஞ்சாபியர்கள் ஆவர். நாட்டு ஒற்றுமையால் மனம் குளிர்ந்து பேசினோம். சிறிது நேரத்தில் அவர்கள் மீன்காட்சியகம் சென்றனர். நான் கீழிறங்கித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள், போர்க்கப்பல்கள் பலவற்றைப் பார்த்தேன்.

ஒவ்வொரு கப்பலின் உள்ளே சென்று பார்க்கவும் கட்டணம் வைத்திருந்தனர். குழுவாக இருந்திருந்தால் சென்று பார்க்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தனி ஆளாக அங்குமிங்கும் நடந்தேன். கடற்கரைத் துறைமுகத்தின் நீண்ட தூரம் நடந்து அழகுக்காட்சிகளைப் பார்த்துத் திரும்பினேன்.

இப்பொழுது இரண்டுமணி நேரம் கடந்திருந்தது.

மீண்டும் நண்பர் சங்கருக்குத் தொலைபேசி செய்தேன். அந்தக் கருவி புதியது என்பதால் அதனை எனக்கு இயக்கத் தெரியவில்லை. அருகிலிருந்த ஒருபெண்மணியிடம் கொடுத்து தொடர்புகொண்டு சங்கரைப் பிடித்தேன். ஒரு மின்னஞ்சலும் தட்டினேன். அவர் சிறிது நேரத்தில் நான் இருக்கும் இடம் வந்து என்னை அழைத்துக்கொண்டார். அவர் பணிபுரியும் இடத்தில் நின்ற அவர் மகிழ்வுந்தில் அமர்ந்தோம். அரைமணி நேர ஓட்டத்தில் அவர் இல்லம் வந்தோம். பகலுணவு அவர் இல்லத்தில் முடித்தேன். தயிர்ச்சோறும் ஊறுகாயும் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி. கேட்டு வாங்கி விரும்பி உண்டேன். கடை உணவுகளைவிட வீட்டு உணவுக்கு நான் முதன்மை அளித்தேன். சங்கர் இல்லத்தில் இணைய இணைப்பு கிடைத்ததும் என் குடும்பத்தாருடன் உரையாடல், பதிவிடல் நடந்தது. சங்கர் வீட்டிலிருந்தபடியே அலுவலகப்பணியைக் கவனித்தார்.

சற்று ஓய்வுக்குப் பிறகு இரவு ஒரு விடுதிக்கு உணவு உண்ணச் சென்றோம். அமெரிக்கா வந்துள்ளதால் அங்குள்ள சிறப்பு உணவை உண்ணும்படி சங்கரின் துணைவியார் கேட்டுக்கொண்டார். உண்ணமுடியவில்லை என்றால் வீட்டில் உணவு தயாராக இருக்கும் நிலையையும் சொன்னதால் மனம் துணிந்து அமெரிக்க வகையிலான உணவுகளை உண்டோம். மிதிவண்டி ஓட்டப் பயிற்றுவிப்பதுபோல் சங்கர் அந்த உணவை உண்ணும் முறையை எனக்குக் கற்பித்தார். அங்குப் பரிமாறிய இளைஞர் படிக்கக்கூடியவர் என்றும் அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் உழைத்துப் படிக்க வேண்டியதைக் கடமையாகக் கொண்டவர்கள் என்றும் அங்குள்ள கல்விமுறை, மாணவர்களின் நிலை, தமிழ் அமெரிக்காவில் கற்பிக்க எடுக்கப்படும் முயற்சி பற்றி நீண்டநேரம் உரையாடியபடி உணவைமுடித்தோம்.

மறுநாள் அனைவரும் தெற்குக் கரோலினாவில் நடக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டுக்குச் செல்ல உள்ளதால் துணிமணிகளை ஒழுங்கு செய்து பெட்டியில் அடைத்தபடி இருந்தோம். நான் என் துணிகளைத் தேய்த்து அடுக்கினேன். சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தேன். சங்கர் குடும்பத்தார் தீபாவளிக்குப் பண்ணியம் சுடுபவர்கள்போல் இரவு முழுவதும் கண்விழித்திருந்தனர். சங்கர் அலுவலகப்பணி, மாநாட்டுப்பணி, புறப்படுவதற்குரிய ஆயத்தம்,தொலைபேசி அழைப்புகளுக்கு விடைதரல் என ஒரு போராளி போல் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் துணைவியார் பெட்டிகளை நிரப்பி நான்கு நாளுக்கு வேண்டிய ஆடைகள், பொருள்களை அடுக்கிவைத்தார்.

காலையில் கண்விழித்துக் கதவைத் திறந்து பார்த்தேன். வீட்டுப் பொருள்கள் அனைத்தையும் அடக்கியதுபோல் நான்குபெட்டிகள் கண்முன் தெரிந்தன.


பால்டிமோர் துறைமுகம்


பால்டிமோருக்கு அழகு சேர்க்கும் கட்டடம்


நீர்மூழ்கிக்கப்பல் அருகில் மு.இ


போர்க்கப்பல் அருகில் மு.இ


படகுகள்,கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி


துறைமுகம் சூழ்ந்த கட்டடங்கள்

ஞாயிறு, 17 ஜூலை, 2011

மேரிலாந்து பல்கலையில் இரண்டாம் நாள்…


பல நூற்றாண்டுப் பழைமையான அங்காடி

மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் இன்னொரு பகுதியைப் பார்க்கும் முன்பாக அருகிலிருந்த பால்டிமோர் கல்லறைத்தோட்டம் ஒன்றுக்குச் சென்றோம். அது எட்கர் ஆலன்போ என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் கல்லறைத்தோட்டம் ஆகும். அறிஞர்களின் நூல்களில் படித்திருந்த அந்தப் பெருமகனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் அவரின் மனைவி, மாமியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் பார்த்தோம்.

எட்கர் ஆலன் போ 19-01- 1809 இல் அமெரிக்காவின் பாஸ்டனில் பிறந்தவர். நாற்பது வயதில் 07-10.1849 இல் மறைந்தவர். எழுத்தாளர், கவிஞர், தொகுப்பாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர் எனப் பன்முகம் கொண்டவர். எழுத்தின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்த முயன்றவர். இதனால் அவர் வறுமையில் வாட நேர்ந்தது.

பாஸ்டன் நகரில் பிறந்த போ, இளம் வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்தார் பின்னர் ரிச்மண்ட் நகரின் ஆலன் தம்பதியினர் போவை வளர்த்தனர். வர்சீனியா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் படித்தார். 1835இல் வர்சீனியா கிளெம் என்னும் பெண்ணை மணந்தார். 1845இல் ஆலன்போவின் புகழ்பெற்ற படைப்பான தி ரேவன் என்ற கவிதை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. போ வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆலன்போ பற்றிய குறிப்புடன் அவர் கல்லறை உள்ளது. அதுபோல் பால்டிமோர் என்ற புகழ்பெற்ற நகரை அயல்நாட்டுப் படைகளிடமிருந்து பாதுகாத்த பல தளபதிகளின் கல்லறைகளும், பிற எழுத்தாளர்களின் கல்லறைகளும் பால்டிமோரில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றை அமைதியாகப் பார்த்தோம்.


எட்கர் ஆலன்போ கல்லறை அருகில் மு.இளங்கோவன்


ஆலன்போ மனைவி,மாமியார் கல்லறை


எட்கர் ஆலன்போ வாழ்க்கைக்குறிப்பு

பழைமையான கடைத்தெரு ஒன்றைப் பார்த்தோம். 1782 இல் உருவான அந்தக் கடை பலநாட்டு மக்களாலும் வியப்புடன் பார்க்கப்படும் இடமாகும்.


அடுத்து மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவம், பல்மருத்துவம் சார்ந்த கல்லூரிகளைப் பார்வையிடச் சென்றோம்.

மேரிலாந்து பல்கலைக்கழகம் பல நூறு துறைகளாகவும், பள்ளிகளாகவும், ஆய்வு மையங்களாகவும், கல்லூரிகளாகவும் பரந்துபட்டுக் கிடக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மெச்சும்படியாக உள்ளன. எங்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உரிய அனைத்து வசதிகளும் குறைவின்றி உள்ளன. உலகின் முதல் பல்மருத்துவக்கல்லூரி என்னும் பலகையுடன் ஒரு கல்லூரி இருந்தது. புகழ்பெற்ற மருத்துவர்களும் அவர்களிடம் பயின்ற மாணவர்களும் உலவிய வளாகத்தை மதிப்புடன் நடந்துபார்த்தேன்.


உலகின் முதல் பல் மருத்துவக் கல்லூரி(பலகை)

அங்குள்ள மகிழ்வுந்துகள் நிறுத்துமிடத்தில் ஒரு தென்னாப்பிரிக்கப் பெண் எங்களைப் பார்த்து வணக்கம் என்றார். வியந்துபார்த்தேன். பேராசிரியர் செல்லையா அவர்களைப் பார்த்து இந்தியமுறையில் முன்பு நமஸ்காரம் என்பாராம். பேராசிரியர் அவர்கள்தான் தமிழில் வணக்கம் என்று சொல்லும்படி அறிவுறுத்தினாராம். அதுமுதல் தமிழ்ச்சாயல், இந்தியச் சாயல் கொண்டவரைப் பார்த்தால் வணக்கம் என்பாராம். அந்தப் பெண்ணுக்கு நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதைக் குறிப்பிட்டதும் கைகுலுக்கி என்னை வரவேற்றார்.

அங்குள்ள ஆய்வுக்கூடங்கள், வகுப்பறைகளையும் பார்த்து மகிழ்ந்தேன். மாணவர்கள் ஆசிரியர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் நலம் வினவிக்கொள்கின்றனர். பேராசிரியர் செல்லையா அவர்களின் துணைவியார் முனைவர் மீனா அம்மா அவர்கள் பணிபுரியும் துறைக்குச் சென்றோம். எலும்புத் திசுக்கள் அழிவதைத் தடுத்து அதனை வளர்த்து மாந்தரை உயிர் பிழைக்கச் செய்யும் அல்லது வாழ்நாளைக் கூட்டும் ஒரு ஆய்வில் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டார்கள். அவர்களின் ஆய்வுக்கூடம் பல நுண்ணுயிரி சார்ந்த ஆய்வுக்காக வளிக்கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்குமாம். தாழ்ந்த அளவு குளிர் அங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார்களாம். பலகோடி மதிப்புள்ள வேதிப்பொருட்கள் அவர் அறையில் நீக்கமற நிறைந்திருந்தன.


முனைவர் மீனா செல்லையா அவர்கள்

பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்கள் யாவும் உடனுக்குடன் இணையத்தில் ஏற்றப்படுமாம். வகுப்பிற்கு வர இயலாத மாணவர்கள் இணையத்தில் அந்தப் பாடங்களைப் படித்து விடலாம்.ஐயம் என்றால் பேராசிரியருக்கு மின்னஞ்சலில் ஐயத்தைக் குறிப்பிட்டு விளக்கம் பெறலாம்.

பல்கலைக்கழகம் முழுவதையும் கணிகாணிப்புக் கருவி வழியாகக் கண்காணிக்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை உள்ளது. அதன் பொறுப்பாளர் அன்புடன் என்னை வரவேற்றார். பேராசிரியர் செல்லையா அவர்கள் நான் இந்தியாவிலிருந்து வந்ததைக்குறிப்பிட்டதும் மிகவும் மகிழ்ந்தார். அங்கு நடைபெறும் ஒருங்கிணைப்பை எனக்கு விளக்கினார். ஒவ்வொரு அறையிலும் மாணவர்களின் நடமாட்டம் வகுப்பறை நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தபடியே கண்டு மகிழ்ந்தேன். மாணவர்கள் தனியிடத்திலும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டு படிப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தனர். குறிப்பெடுப்பதும் படிப்பதும் எழுதுவதுமாக இருப்பதைக் காணொளி வழியாகக் கண்டு மகிழ்ந்தேன்.அவர்களின் முன்னேற்ற வாழ்க்கை நம் நாட்டிலும் வந்து, நம் மாணவர்கள் நல்லறிவு பெறுவது என்று? என்ற நினைவுடன் அவரிடமிருந்து விடைபெற்றோம்.

பகலுணவுக்காக நாங்கள் புறப்பட்டு ஓர் இந்திய உணவகம் நாடி வந்தோம். இந்தியவகையாகச் சோறு, கோழிக்கறி, மரவள்ளிக்கிழங்குமாவில் செய்த அடை, என்று சுருக்கமாகச் சாப்பிட்டேன். கோழிக்கறியின் காலைக் கொண்டு வந்து வைத்த உடன் உணவுவிரும்பிகள் அள்ளிச்சென்று உண்டனர். இது நிற்க.

மெதுவாக நாங்கள் பொது நூலகம்,பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றோம். பொது நூலகம் மிகச்சிறப்பாக இயங்குகின்றது. இலக்கியக் கூட்டம் நடத்த அரங்குகளை இலவசமாகத் தருவார்களாம். இலக்கியக் கூட்டங்கள், தமிழ்சார்ந்த பல கூட்டங்களை நம் அன்பர்கள் இங்குதான் நடத்துவார்களாம்.வளிக்கட்டுப்பாட்டு அறைகள், அழகிய இருக்கைகள், திரையிடும் வசதிகள் கொண்ட அந்த அரங்கை நம்மூரில் பத்தாயிரத்திற்கும் குறைவாகக் குடிக்கூலிக்குத் தரமாட்டார்கள்.

எதற்குப் பணம், எதற்கு இலவசம் என்பதை அமெரிக்கர்கள் தெரிந்துவைத்துள்ளனர். நாம் நேர்மாறாக இருக்கின்றோம். திருவண்ணாமலையில் உள்ள பேருந்துநிலையக் கழிப்பபறை போல் உலகில் தூய்மையற்ற கழிப்பறையைப் பார்க்க இயலாது. அதற்கும் காசு வாங்கிக்கொண்டு மக்களை உள்ளே விரட்டி அனுப்பி, வெளியே ஓடிவரச்செய்யும் நடைமுறையை நினைத்துக்கொண்டேன். ஒவ்வொரு வெள்ளுவா மலைச்சுற்றுக்கும் பல கோடி வருவாய் ஈட்டும் அந்த ஊரில் மக்களின் நலவழிக்குச் செலவு செய்யாமல் உள்ளனரே என்ற வருத்தம்தான் மேலிட்டது. இதுவம் நிற்க.

அழகிய நீர்நிலையைச் சில செல்வர்கள் தங்கள் விருப்பத்துக்கு உருவாக்கி மக்கள் மனம் மகிழும் வகையில் செய்துள்ளனர். அமெரிக்கச்செல்வந்தர்களின் பொது இயல்பு என்னவெனில் கடுமையாக உழைத்துப் பொருளீட்டுவார்கள். பின்னர் அதனை மக்கள் நலனுக்கே திருப்புவார்கள். நம்மூரில் பிறங்கடை உய்யும்வகையில் அடித்துச் சுருட்டுவார்கள் ஆனால் அதனை மக்களிடத்துச்சேர்ப்பிக்க நினைக்கமாட்டார்கள். அறக்கட்டளை என்றபெயரில் மீண்டும் அந்தப் பொருட்கொடையைப் பன்மடங்காக உயர்த்த நினைப்பார்கள்.

மக்கள் மனம் மகிழும்வகையில் உருவாக்கிய ஒரு குளக்கரையில் இருந்த மரப்பாலம் கடந்து நீர்நிலைகளைப் பார்த்தேன். சிறுவர்களும் பெரியவர்களும் தூண்டில்கொண்டு மீன்பிடித்தனர். யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாமா? என்று பேராசிரியர் அரசு செல்லையா அவர்களைக் கேட்டேன். அதற்கு உரிமம் பெற வேண்டுமாம். சிலவகை மீன்களைப் பிடித்தாலும் திருப்பித் தண்ணீரில் விட்டுவிடவேண்டுமாம். நம்மூர்த் தூண்டில்போல் இல்லாமல் அனைத்தும் ஞெகிழி,நரம்பு கொண்டு இயற்றப்பட்டிருந்தது.சக்கரம் போன்று சுற்றி நரம்புகளை உள்ளடக்குகின்றனர். அதற்குரிய கருவிப்பொருள்களுடன் சிறுவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அந்த நீர்நிலையில் அமைதியாக நீந்தி மகிழ்ந்த வாத்துகளைப் பார்த்ததும் எனக்கு நளவெண்பாவில் வந்துபோகும் அன்னப்பறவைதான் நினைவுக்கு வந்தது. தங்களுக்கான உணவுகளைத் தேடி அமெரிக்கர்களைப் போல ஓர் ஒழுங்குமுறையில் நீர்நிலையை அந்த வாத்துகள் வலம்வந்தன.


பொழுதுபோக்குப் பொழில் உருவாக்கியவர்கள் (சிலைவடிவில்)

சனி, 16 ஜூலை, 2011

புதுச்சேரியில் முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டளைப்பொழிவு


புலவர் கி.த.பச்சையப்பன் அவர்கள்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் தீந்தமிழ்க் காவலர் முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டளையின் இரண்டாம் பொழிவு புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் இன்று(16.07.2011) மாலை ஆறு மணியளவில் தொடங்கியது. தொடக்கத்தில் எழுச்சித் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளைப் பொழிவு நிகழ்ச்சியில் முனைவர் இரா.சம்பத் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். புலவர் வி.திருவேங்கடம் தலைமையுரையாற்றினார். சி.நாகலிங்கம், அரங்க.நடராசன், பேராசிரியர் வே.ச.திருமாவளவன், பாவலர்மணி சித்தன் ஆகியோர் முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தனர்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருதான முனைவர் மு.இராமதாசு அவர்கள் முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்ததுடன் முனைவர் இரா.திருமுருகனார் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பெற்ற பெயரைத் தமிழில் புதுச்சேரி என்று மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை இந்திய அரசு ஆட்சிமொழியாக்க வலியுறுத்தியதையும் நினைவுகூர்ந்தார். புதுவை அரசிடம் அவர் தமிழ் வளர்ச்சிக்கு வலியுறுத்திய கோரிக்கைகளையும் எடுத்துரைத்தார். தமக்கும் அவருக்குமான தமிழ்த்தொடர்புகளைப் பேராசிரியர் மு.இராமதாசு நினைவுகூர்ந்தார்.

அறக்கட்டளைப் பொழிவைத் தமிழோசை நாளிதழின் மொழிநடை ஆசிரியரும், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவருமான புலவர் கி.த.பச்சையப்பன் சிறப்பாகச் செய்தார். முனைவர் இரா. திருமுருகனார் இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகளில் வல்லவர் என்றதுடன் ஊர்தோறும் சென்று தமிழ்ப்பரப்புரை செய்த களப்போராளி என்று எடுத்துரைத்தார்.

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணா நோன்பு மேற்கொண்டவர் என்றும், தெளிதமிழ் இதழை மொழி வளர்ச்சிக்காக நடத்தியவர் என்றும் யாருக்கும் அவர் அஞ்சியது இல்லை எனவும் யாரிடமும் அவர் கெஞ்சியதில்லை எனவும் குறிப்பிட்டுக் "கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க" என்ற பாவேந்தரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர் இரா.திருமுருகனார் என்று குறிப்பிட்டார். இதுவரை 54 நூல்களை எழுதியுள்ள அவர் சிந்துப்பாவியல் என்ற இலக்கண நூல் எழுதித் தமிழ் இலக்கணத்திற்கு அணிசேர்த்தவர் என்றும், குழலிசை வல்லவர் என்றும், தமிழகத்தில் அமைக்கப்பெற்ற புதிய இலக்கண நூல் எழுதும் குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார் எனவும் முனைவர் இரா.திருமுருகனாரின் பணிகளைப் புகழ்ந்துரைத்தார். நிகழ்வுகள்

நிறைவில் முனைவர் த.பரசுராமன் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.


பேராசிரியர் வே.ச.திருமாவளவன்,முனைவர் மு.இராமதாசு,புலவர் கி.த.ப.


அறக்கட்டளை நிகழ்வில் பங்கேற்ற அறிஞர்கள்

அமெரிக்காவின் உள்முகம் தேடல்…


மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் மு.இளங்கோவன்

அமெரிக்காவின் கல்விநிறுவனங்கள், கல்வி முறைகள் பற்றி அறிவதில் நாட்டம் கொண்டிருந்த நான் அந்த நாட்டில் வாழும் மக்களின் இறை நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள், பண்பாட்டுக்கூறுகள் பற்றி அறியவும் நினைத்தேன். எனவே என் விருப்பத்தை நிறைவேற்ற நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் அங்குள்ள சில கோயில்கள், தேவாலயங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நூலகங்கள் இவற்றைப் பார்வையிடும் வாய்ப்பை உருவாக்கினார்கள்.

28.06.2011 காலை பத்துமணியளவில் நண்பருடன் புறப்பட்டேன். வட அமெரிக்காவின் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ள இடத்தை அடைந்தோம். அழகிய கோயிலில் முருகன் காட்சி தருகின்றார். கோயிலில் கோபுரக் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதல் தளத்தில் முருகன் கோயிலும் கீழ்த்தளத்தில் அரங்கமும் உள்ளன. கீழ்த்தள அரங்கில் திருவள்ளுவர் வெண்பளிங்கு சிலை காட்சிக்கு உள்ளது. இதனை வி.ஜி,பி. நிறுவனத்தார் அன்பளிப்பாக வழங்கியுள்ளதையும் அறிந்தேன். கோயிலின் சிலைகளைப் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.

கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரை இக்கோயிலின் சிறப்புப் பற்றி வினவினேன். அகவை முதிர்ந்த இருவரும் மருத்துவப்படிப்பு முடித்தவர்கள். ஓய்வுக்காலத்தில் கோயில்பணிகளில் ஈடுபட்டு வருவதை உரைத்தனர். இக்கோயிலுக்கு ஈழத்தமிழர்கள் அதிகம் வருவதாகவும் அறிந்தேன். கோயில் விவரம் சொன்னவர்கள் இருவரும் புதுச்சேரியில் மருத்துவப்படிப்பு படித்ததாகச் சொன்னார்கள். நான் புதுச்சேரியிலிருந்து வந்துள்ளேன் என்று சொன்னதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் சென்றநாள் பணி நாள் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. விடுமுறை நாள்களில் மக்கள்கூட்டம் அதிகமாக இருக்குமாம். கோயில் பற்றிய விவரங்கள், குறுவட்டுகள், நூல்கள் அங்கு விற்பனைக்கு இருந்தன. கோயில்சார்ந்த நிகழ்வுகள் மட்டுமன்றி அங்குத் திருமணங்கள் மிகுதியாக நடக்கும் என்றும் அறிந்தோம். அங்குள்ள கலையரங்கில் நாட்டிய அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடப்பதாகவும் அறிந்தோம். அனைவரும் ஒன்று சேர்வதற்குரிய நல்ல இடமாக அந்த முருகன்கோயில் உள்ளது.

திருவள்ளுவர் சிலை கீழ்த்தளத்தில் இருப்பது மட்டும் கண்ணுக்கு உறுத்தலாக இருந்தது. அமெரிக்கா வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து வாசிங்டன் நகரின் முதன்மையான இடத்தில் ஒரு தமிழ்க்கூடம் நிறுவி அதில் திருவள்ளுவர் சிலை ஒன்றை வைத்தால் உலகெங்கும் புகழும் திருவள்ளுவருக்கு உரிய மதிப்பை வழங்கியவர்களாவோம். இவ்வாறு செய்யும்படி அமெரிக்கத் தமிழர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். தமிழகத்தை விடத் தமிழ்ப்பற்றும், பொருள்வளமும், மனவளமும் கொண்ட பல புரவலர்கள் அமெரிக்காவில் இருப்பதால் ஓர் இடம் வாங்குவதோ, தமிழுக்கு ஒரு வளமனை கட்டுவதோ, திருவள்ளுவர் சிலை நிறுவுவதோ அவர்களுக்குப் பெரிய செயல் இல்லை. எனவே அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமெரிக்கத் தலைநகரில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் அமெரிக்கா வந்தால் தங்கிச்செல்லும் வகையில் ஒரு தமிழ்மனை உருவாக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இது நிற்க.

அமெரிக்காவின் இன்னொரு இடத்தில் சிவா விட்னுகோயில் உள்ளது. தமிழ் மக்கள் மிகுதியும் கூடும் இடம் இது என்று நண்பர் சொல்லக்கேட்டேன். பலவகையான கோயில் சிலைகள், இறையுருவங்கள் தமிழகம்போலவே உள்ளன.

முருகன் கோயிலைப் பார்த்த நாங்கள் அடுத்து வாசிங்டன் கதீட்ரல் என்ற புகழ்பெற்ற தேவாலயத்தைப் பார்க்கச் சென்றோம். இந்தத் தேவாலயம் அமெரிக்காவில் புகழ்பெற்றது என்பதோடு அமையாமல் உலக அளவிலும் புகழ்பெற்றது. இந்தத் தேவாலயத்தில் அமெரிக்க அதிபர்கள் பலர் வந்து வணங்கியுள்ளதாக அறிந்தேன் அமெரிக்க மாநிலங்களின் அனைத்துக் கொடிகளும் இந்தத் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளன. கைதேர்ந்த சிற்பிகள் பலர் இணைந்து இந்தத் தேவாலயத்தை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு பகுதியையும் யார் உருவாக்கினார்கள் என்ற வராலாற்றுக் குறிப்பு உள்ளது. இந்தத் தேவாலயத்தையும் நெறியாளர்கள் அழைத்துச்சென்று ஒவ்வொரு பகுதியின் சிறப்பையும் விளக்குகின்றனர்.

நாங்கள் பார்வையிடப் பத்து டாலர் நுழைவுக்கட்டணம் செலுத்தினோம். நுழைவுக்கட்டணம் என்று இல்லாமல் அன்பளிப்பு என்று வாங்கினர். காணொளிகள் காட்சிகளாக ஓடிக்கொண்டுள்ளன. இதன் வழியாகத் தேவாலயத்தின் சிறப்புகள், கட்டட முயற்சிகள் பற்றி அறியலாம்.

கண்ணாடி வேலைப்பாடுகளும், பளிங்கு வேலைப்பாடுகளும், மர வேலைப்பாடுகளும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன. 3500 பேர் இந்த தேவாலயத்தில் அமர்ந்து கூட்டங்களைக் கேட்கமுடியும் என்றனர்.

தேவாலயத்தைப் பார்த்த நாங்கள் பகலுணவுக்குப் புகழ்பெற்ற ஓர் உணவகத்திற்குச் சென்றோம். அங்குள்ள தரமான உணவகங்களுள் இது முதலிடம் பெறுவது என்று நண்பர் சொன்னார். உலக அளவில் இதன் கிளைகள் இருப்பதாகவும் கூறினார். ‘பன்னு’ இரண்டன் நடுவே கோழியிறைச்சியை இணைத்துச் சுவையாகச் செய்திருந்தார்கள். தூய்மைக்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற அமெரிக்க உணவகங்களை நம்பி உண்ணலாம் என்ற அடிப்படையில் உண்டேன்.

நண்பர் அவர்கள் குளிர்க்குடிப்பு அருந்தும்படி அன்பால் வேண்டினார்கள். எனக்குக் குறைந்த அளவு உணவே போதும் என்றேன். எனினும் அவர் வாங்கிய குளிர்க்குடிப்பை இருவரும் பகிர்ந்து உண்டோம். வெளியேறும்பொழுது மேலும் குளிர்க்குடிப்பை நிரப்பிக்கொண்டு நண்பர் வந்தார். வழி நெடுக அருந்தலாம் என்பது அவர் எண்ணம். நம் ஊரில் உண்டுமுடித்து இலையை மூடிப்போட்டு,அதன்மேல் ஒரு குவளையை எடுத்து இலை பறக்காதபடி வைத்து வந்துவிடுவோம். ஆனால் உணவை வீணாக்காத அமெரிக்கர்களின் பழக்கம் நம் நாட்டில் என்றைக்கு வருமோ என்று ஏங்கினேன். காரணம் திருமண வீடுகளில், விருந்துகளில் நாம் உணவை வீணாக்குவதை அப்பொழுது நினைத்துகொண்டேன்.

உணவு முடித்து நாங்கள் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைப் பார்வையிடப் பிற்பகல் மூன்று மணியளவில் சென்றோம். மேரிலாந்து பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழைமையான பல்கலைக்கழங்களில் ஒன்றாகும். உலக அளவில் புகழ்பெற்ற பல ஆய்வுகள் இங்கு நடந்துள்ளன. இங்குப் பயின்றவர்கள் உலக அளவில் அறிவியல் அறிஞர்களாகப் புகழ்பெற்று விளங்குகின்றனர். பல்லாயிரம் மாணவர்கள் இங்குப் படிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பல கட்டடங்களாகப் பிரிந்து பல இடங்களில் இருந்தபடி மேரிலாந்து பல்கலைக்கழகம் கல்விப்பணியாற்றுகின்றது.

முதலில் நுண்ணுயிரியல் துறையினைப் பார்வையிட்டோம். அங்குப் பணிபுரிந்த நண்பரின் துணைவியார் அங்கு நடைபெறும் முக்கியமான ஆய்வுகளை எடுத்துரைத்தார். அங்குள்ள ஆய்வுக்கூட வசதிகள் எனக்குப் பெரு வியப்பை உண்டாக்கின. பலகோடி உருவாக்களை ஆய்வுக்கு வாரி இறைப்பதைக் கண்டு அறிவில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை வியந்தேன். வேறு சில துறைகளையும், வகுப்பறைகளையும், கருத்தரங்கக் கூடங்களையும், மாணவர் அமைப்புகளையும், விடுதிகளையும், விருந்தினர் இல்லங்கள்,எழுதுபொருள், சிற்றுண்டிக் கடைகளையும் மாணவர்களின் பொழுதுபோக்கு இடங்களையும் கண்டு வியந்தேன்.

நம்மூர் பாம்பு நடமாட்டப்புகழ் பல்கலைக்கழகங்களின் விருந்தினர் விடுதிகள் பற்றியும் அதில் தங்கிய அறிஞர் பெருமக்கள் பட்ட இடையூறுகள் பற்றியும் நான் அறிந்த செய்திகள் மெதுவாக என் நினைவுக்கு வந்து அலைமோதின.

பாம்புடன் கட்டிப் புரண்ட ஒரு பேராசிரியர் தலையணையால் பாம்பை அழுத்தி உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்ததை இப்பொழுது நினைத்துக்கொண்டேன். கல்விக்கண் திறந்த பெருமகனாரின் பெயரில் உள்ள பல்கலையின் விருந்தினர் விடுதியில் நான் ஒருமுறை தங்கநேர்ந்தபொழுது பலவாண்டுகளாகப் புற்று ஈசல் மண்டிய, ஒட்டடைகள் படிந்து, பலநாள் தூய்மை செய்யாமல் பூட்டிக் கிடந்த பாழும் மண்டபம் ஒத்த அந்த விடுதி அறையை விருந்தினர்களுக்குக் கூச்சம் இல்லாமல் வழங்கிய அந்தப் பல்கலைக்கழக நிர்வாகத்தை நினைத்து நான் கலங்கி நின்றேன்."மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்று விருந்தினரைப் போற்றிய மரபினர் நாம். இன்று யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனது. அமெரிக்காவில் அது சுடர்விடுவது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது.

எத்தனைப் பொறியாளர்கள், காவலர்கள், ஏவலர்கள், நிதி அலுவலர், பதிவாளர், துணைவேந்தர், ஆளவை, கல்விக்குழு என்று பல பெயரில் கல்வியாளர்கள் நம் நாட்டில் கூடிக் கூத்தடிக்கின்றனர். பலகோடி புரளும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லமும் எவ்வளவு வனப்புடனும் பாதுகாப்புடனும் போற்றிக் காக்கப்பட வேண்டும். ஆனால் சாதிச்சண்டைகளாலும், அரசியல் வல்லதிகாரக் கும்பலாலும், பணவேட்டைக் கல்வியாளர்களாலும் நம் நாட்டின் கல்விச்சூழல் பாழ்பட்டுப் போனதை நினைத்து வருந்தினேன். இத்தகு இழிநிலைக்கு யாரும் முடிவுகட்ட முன்வரவில்லையே என்ற ஏக்கமும் பெருமூச்சும் எனக்கு மேரிலாந்து பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டபொழுது ஏற்பட்டது.

நம் நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குப் பணிவாய்ப்பு வேண்டிப் பாரதிதாசன், திருவள்ளுவர், பாரதியார், சுந்தரம்பிள்ளை போன்ற அறிஞர்பெருமக்கள் நேர்காணலுக்கு வந்தாலும் அவர்களிடம் பணப்பை கேட்கும் நிலைதான் உள்ளது. கல்விக்கு முதன்மையளிக்காத எந்த நாடும், எந்தச் சமூகமும் முன்னேறியதாக வரலாறே இல்லை. இவை முற்றாக ஒழியாதவரை நம் நாட்டில் உயர்கல்வியில் முன்னேற்றம் காண இயலாது. இந்த நினைவுகளுடன் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் உள்ளே சென்றேன்.

எத்தனை வகையான நூல்கள், குறுவட்டுகள், ஒளிநாடாக்கள், வரைபடங்கள், செய்தி ஏடுகள், மேசைகள், கணினிகள், இணைய இணைப்புகள். உள்ளே நுழையும் ஒவ்வொருவனையும் அறிவாளிகளாக மாற்றாமல் அந்த நூலகம் விடாது. அந்த அளவு நூலகங்களுக்கு அமெரிக்காவில் முதன்மை உண்டு.மேரிலாந்து பல்கலைக்கழக நூலகமும் அதன் பல மாடிக்கட்டட வனப்பும், அலுவலர்களும் என் கனவுக்காவலர்களாகத் தெரிந்தனர். நுண்படச்சுருளில் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழ்கள்,இதழ்கள்,ஆவணங்கள் அங்குப் பாதுகாக்கப்படுகின்றன.

நம்மிடம் உள்ளதுபோல் சில மூடப்பழக்கங்களும் அங்கு இருப்பதை அறிந்தேன். நூலகத்தின் முகப்பில் ஓர் ஆமையின் படிமம் இருந்தது. இதன் மூக்கைத் தடிவிப் பார்த்தால் நல்ல மதிப்பெண் வரும், தேர்வில் மிகுந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம் என்று அந்த நாட்டு மாணவர்கள் நம்புகின்றனர்.அது அவர்களின் நம்பிக்கை என்று நானும் அந்த ஆமையின் மூக்கைத் தடவிப்பார்த்தேன். எல்லோர் கையும் பட்டுள்ளதால் அந்த ஆமை வழவழப்பாக இருந்தது. "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கிக் கிடக்கும்" அந்தத் திருவள்ளுவர் கண்ட ஆமை என்னை வரவேற்று நலம் வினவியதாக உணர்ந்தேன்.மேரிலாந்து நூலக முகப்பு


கண்டுபிடிப்புகளுக்கு முதன்மையளிக்கும் மேரிலாந்து பல்கலைக்கழகம்


மேரிலாந்து பல்கலைக்கழக நூலக முகப்பில்


மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஒரு கட்டடப்பகுதி


கருத்தரங்க அறைகள்


முருகன் கோயில் வழிகாட்டிப் பலகை


அமெரிக்காவின் முருகன்கோயில்


சிவா-விட்னு கோயில் முகப்பு


தேவாலயத்தின் உள்பக்கம்(கலை நயத்துடன்)


வாசிங்டன் தேவாலயம்


தேவாலயத்தின் கலைநுட்பம் வாய்ந்த பகுதிகள்

செவ்வாய், 12 ஜூலை, 2011

பாலாவிடம் விடை பெறல்...

27.06.2011 இன்று பாலா இல்லத்தில் இருந்தபடி எனக்காக அலுவல் பணிகளை மேற்கொண்டார். நானும் பல நாளாகத் துவைக்க நினைத்த என் உடைகளைத் துவைத்துத் தேய்த்தேன். இணையத்தில் சில பதிவுகளை இட்டேன். பாலா என் பேச்சு இணையத்தில் ஏற வேண்டும் என்று சோதனையாகச் சில காட்சிகளைப் பதிவு செய்து ஏற்றினார். இன்று இரவு பால்டிமோர் பயணம் என்பதால் சற்று ஓய்வெடுத்துக்கொண்டேன். காலை உணவும், பகல் உணவும் பாலா இல்லத்தில் கிடைத்தது. பாலா தாயைப்போல் அன்புடன் உணவு பரிமாறுவார். நண்பர் போல் சிலபொழுது உரிமை காட்டிக் கூடுதலாக உண்ணச்செய்வார்.

நண்பர்கள் சிலருக்குத் தொலைபேசியில் உரையாடிப் பயண நிலவரங்களைப் பகிர்ந்துகொண்டேன். மாலை ஐந்து மணிக்குமேல் பயணம். இடையில் ஆப்பிள் ஐபேடு 2 ஒன்று வாங்கத் திட்டமிட்டோம். இதற்காக நான்கு நாளாகப் பத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்களைப் பிடித்து ஆலோசனை என்ற பெயரில் காய்ச்சி எடுத்துவிட்டோம். இடையில் ஒருவர் சாம்சங் நிறுவனத் தயாரிப்பு நல்லது என்றார். மனம் ஊசலாடியது. இப்பொழுது ஆப்பிளா? சாம்சங்கா?

ஒரு ஆப்பிள் நிறுவனப் பொருளுக்கு உலகம் முழுவதும் வினவிப் பார்த்துத் தகவல்களைத் திரட்டினோம். எந்த ஊரில் வரி இல்லாமல் வாங்கலாம் என்று முயற்சி செய்தோம். நம் பொருளாதார நிலைதான் காரணம். இதற்காகப் பல கடைகளை முதல் நாள் ஏறி இறங்கிப் பார்த்தோம். நண்பர்கள் வேல்முருகன், வாசுதேவன், கணேஷ், இளமுருகு,பாலா என்று பலரின் கலந்துரையடாலுக்குப் பிறகு ஆப்பிள் ஐபேடு வாங்குவது என்று முடிவானது.

ஊருக்குப் போகும் வழியில் ஒரு கடையில் வாங்கலாம் என்று நினைத்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது. வழியில் உள்ள சில மாநிலங்களில் வரி இல்லாமல் வாங்கலாம் என்றனர். அதன்படி ஒரு கடையில் வண்டியை நிறுத்தி வினவினோம்.இருப்பில்லை என்றனர். சிலர் நாளை கிடைக்கும் என்றனர். சில கடையில் நாங்கள் விரும்பிய அளவு கொள்ளளவு இல்லை.

எனவே அடுத்துப் போகும் ஊரில் வாங்கிக்கொள்கின்றேன் என்று பாலாவிடம் சொன்னேன்.

வானூர்தி நிலையம் வந்துசேர்ந்தோம்.

இரவு உணவு முடித்துக்கொண்டு பாலாவிடம் பிரியா விடைபெற்றேன். முன்பின் கண்டறியாமல் இணையம் வழியாக மட்டும் அறிந்திருந்த பாலாவின் அன்பில் கரைந்தேன். இவரை அறிமுகம் செய்த நண்பர் அலெக்சு நினைவுக்கு வந்தார். பல பல்கலைக்கழகங்களைக் கண்டு அமெரிக்காவின் உயர்கல்வி பற்றி அறிவதற்குப் பலவகையில் துணைநின்ற பாலாவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

பால்டிமோருக்கு ஏர் டிரான் வானூர்தியில் இரவு 9.39 மணிக்குப் புறப்பட்டேன். 11 மணியளவில் பால்டிமோர் சென்றுசேர்ந்தேன்.

எனக்காக அறிவியல் அறிஞர் முத்து அவர்கள் பால்டிமோர் வானூர்தி நிலையில் காத்திருந்தார்...

சனி, 9 ஜூலை, 2011

ஏல் பல்கலைக்கழக நினைவுகள்…


முனைவர் பெர்னார்டு, மு.இ,முனைவர் சுதிர்,பாஸ்டன் பாலா

 26.06.2011 காலை ஒன்பது முப்பது மணியளவில் நண்பர் பாலா இல்லத்திலிருந்து எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது. கனெக்டிக் கட் மாநிலத்தில் உள்ள நியுகெவன் பகுதியில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்தை நோக்கி இரண்டு மணி நேரம் பயணம் செய்தோம். பல வளநகர், காடு, மலை கடந்தோம். இயற்கை அழகினை வியந்தவனாய்ச் சென்றேன். அமெரிக்காவின் கல்விமுறை பற்றியும் மக்கள் வாழ்க்கை பற்றியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

 ஏல் பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்ற பல அறிஞர்கள் பணிசெய்த இடம்; புகழ்பெற்ற பலர் பயின்ற இடமாகவும் அது விளங்குகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை அறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கையை நினைக்குந்தொறும் ஏல் பல்கலைக்கழகம் நினைவுக்கு வருவது உண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின் அழைப்பை ஏற்று உரை நிகழ்த்தியதாகவும், அறிஞர்களுடன் கலந்துரையாடியதாகவும், திருக்குறள் நூலை அங்குள்ளவர்களுக்கு அறிமுகம் செய்ததாகவும் பெரியோர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். (இது பற்றிய முழுவிவரம் அறிந்தோர் அறிவிக்க அறிவேன்). அத்தகு புகழ்மிக்க ஏல் பல்கலைக்கழகத்தின் மானுடவியல்துறையில் முனைவர் பெர்னார்டு பேட் அவர்கள் பணிபுரிவதால் அவரைப் பார்க்கவும் எண்ணியிருந்தேன். பெர்னார்டு பேட் தம்மைப் “பழனி” என்று தமிழ்ப்பெயரில் அழைக்க விரும்புவார்.

 பெர்னார்டு பேட் அவர்களை 1995 முதல் அறிவேன். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் பற்றி உரையாற்றச் சொன்றபொழுது முதன்முதல் கண்டுள்ளேன். அதன்பிறகு பலவாண்டுகளுக்குப் பின்னர்ப் புதுச்சேரியில் பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் கண்டு உரையாடியுள்ளேன். அவர்களுக்கு என் வருகை முன்பே தெரிவிக்கப்பட்டது. மேலும் என் அருமை நண்பர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன் அவர்களுக்கு என் அமெரிக்கப் பயணம் தெரிந்தபொழுது அவரின் நெருங்கிய நண்பர் பேராசிரியர் சுதிர் அவர்களைக் கண்டு உரையாடும்படி பயணத்தை அமைக்கச் சொன்னார். வெட்டிக்காடு திரு. இரவி அவர்கள் இந்தியாவில் தொலைத்தொடர்புக்கு வித்திட்ட அறிஞர் முனைவர். சாம் பிட்ரோடா அவர்களுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 பேராசிரியர் சுதிர் அவர்கள் ஏல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் துறையில் பணிபுரிகின்றார். என் வருகை அறிந்து என்னை வரவேற்க ஆயத்தமாக இருந்தார். பெர்னார்டு பேட் அவர்கள் ஏல் பல்கலைக்கழகத்திலிருந்து வேறு ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பணி கிடைத்துச் செல்ல இருந்தார். மேலும் அவர்கள் வீட்டில் ஒரு மங்கல நிகழ்வும் அன்று இருந்தது. இருப்பினும் அதிலிருந்து சிறிது விடுபட்டு எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கி வந்தார். இதனிடையே எங்கள் மகிழ்வுந்து ஏல் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நுழைந்தது.

 ஏல் பல்கலைக்கழக வளாகம் பெரிய பரப்பை உடையது. பல கட்டடங்களாகவும் கோவியன் தெருக்களாகவும், கொடித்தேர்த் தெருக்களாகவும் காட்சியளித்தன. சில வெள்ளைக்காரப் பெருஞ்செல்வர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளை அன்பளிப்பாகப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளனர் எனவும் அந்த வீடுகள் ஒவ்வொன்றில் ஒவ்வொரு உயராய்வு நிறுவனங்கள் உள்ளன என்றும் அறிந்தேன். அத்தகு ஒரு வளமனையில் பேராசிரியர் சுதிர் அவர்களின் அலுவலகம் இருந்தது. எங்கள் வருகை அறிந்து பேராசிரியர் சுதிர் அவர்கள் எதிர்கொண்டு அழைத்தார்.

 ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் அவரும் அவர் மாணவர் ஒருவரும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். பணிநாளில் பின்சென்று முன்வரும் நம் பேராசிரியர்களின் நினைவு எனக்கு வந்தது. ஞாயிற்றுக் கிழமையிலும் ஆய்வில் ஈடுபட்ட அவர்களின் ஆய்வார்வம் அறிந்து வியந்தேன். என் நூல்களைச் சுதிர் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். என் தமிழ் இணைய ஈடுபாடு அறிந்து மகிழ்ந்தார். அவர் அலுவலகத்தில் உள்ள கணினியில் தமிழில் தட்டச்சிடும் விசைப்பலகையை நிறுவினேன். தமிழில் தட்டச்சிடும் முறைகளை எடுத்துரைத்தேன். மகிழ்ந்தார். நண்பர் பாலா, நான், பேராசிரியர் சுதிர் மூவரும் நியுகெவனில் உள்ள சிதார் இந்திய உணவகத்துக்கு வந்தோம்.

 பகல் 12.30 மணியளவில் பேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்களும் எங்களுடன் வந்து இணைந்துகொண்டார். எங்களுக்கான இந்திய உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து எடுத்துவந்து இருக்கையில் அமர்ந்தபடி உண்டோம். பேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்கள் ஒரு குளம்பி மட்டும் போதும் என்றார். எங்கள் அறிமுகம் சிறப்பாக நடந்தது.

 பேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்கள் தமிழ் மேடைப்பேச்சு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத்தில் பாரதியார் எந்த நாளில் எந்த ஊரில் பேசினார் என்பது தொடங்கி ஆறுமுக நாவலர் இலங்கையில் நிகழ்த்திய முதல் உரை, தந்தை பெரியாரின் பேச்சுகள், அறிஞர் அண்ணாவின் உரைகள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பேச்சாளர்களின் பேச்சுகள் பற்றிய மிக விரிவான செய்திகளை மனத்தில் பதிந்து வைத்துள்ளார்.

 பேராசிரியர் சுதிர் அவர்களின் உரையாடல் வழி அமெரிக்காவின் கல்விமுறைகள் பற்றியும் தமிழகத்தின் கல்வி முறை, பற்றியும் அரசியல் சூழல்கள் பற்றியும் உரையாடினோம். தமிழகத்தில் உயர்கல்வித் துறையில் பலபொழுது தகுதியற்றவர்கள் துணைவேந்தர்கள், பேராசிரியர் பணிகளை பெறுவதுபோல் அமெரிக்காவில் உண்டா? என்று வினவினேன். உயர்கல்வியில் தகுதிக்கும் திறமைக்கும் மட்டும் அமெரிக்காவில் மதிப்பு உண்டு என்று அறிய முடிந்தது.

 தகுதியற்றவர்கள் பலர் உயர்கல்வியில் முறையற்று நுழைந்து விடுவதால்தான் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களின் முதல் இருநூறு இடத்தில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்கூட இடம்பெறவில்லை என்று அறிந்தேன். இந்திய அளவில் ஒரு பல்கலைக்கழகமும் தேறவில்லை என்று சொன்னால் தமிழகத்தின் நிலையைக் கேட்க வேண்டாம்.

 ஒரு மணி நேரம் வகுப்பெடுத்து மாணவர்களைச் சந்திக்காதவர்கள்கூடத் தமிழகத்தின் அரசியல் செல்வாக்காலும், பணப்பெருக்கத்தாலும் தமிழகத்தில் துணைவேந்தர்களான நிலை எண்ணி உள்ளங் குமைந்தேன். கல்லூரி முதலாளிகள் பலர் துணைவேந்தர்களாகிக் கல்வியாளர் போர்வையில் கல்வியைச் சீரழிக்கும் நிலை மாறவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

 அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர் இளங்கலை மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில் ஆர்வமாக இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். நோபல் பரிசு பெற்றவர்களும் இதில் அடக்கம் என்று அறிந்தபொழுது வியப்பு பன்மடங்கானது. துணைவேந்தர்கள் கல்வியாளர்களாக இருப்பதை விடுத்துப் பேரரசர்களுக்குக் கப்பம் தண்டும் சிற்றரசர்களாக இருக்கும் நிலை எண்ணிக் கவன்றேன். கல்விக்கும் தகுதிக்கும் மதிப்பளிக்கும் அமெரிக்கமுறை நம் நாட்டிலும் நடைமுறைக்கு வரும்பொழுது இந்தியாவில் உயர்கல்வியின் தரம் உயரும்.

 இரண்டு மணியளவில் அனைவரும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். இரண்டு மணிக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் வளாகச் சுற்றுலா நடைபெறும் இடத்தை அடைந்தோம். வரவேற்பறையில் முதலில் எங்களுக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் சிறப்பு, கல்விச்சூழல் விளக்கும் காணொளி ஒன்றைத் திரையிட்டுக் காட்டினர். என்னைப் போல் ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பல திறத்தவரும் அதனைக் கண்டு மகிழ்ந்தோம். அதனை அடுத்து அங்குப் பயிலும் மாணவி ஒருவர் நெறியாளராக இருந்து எங்களுக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற கட்டடங்கள், நூலகம், வகுப்பறைகள், மாணவர் சேவை நடுவங்கள், அரிய கையெழுத்துக் காட்சியகம், சிற்றுண்டியகம், எழுதுபொருள் கடை உள்ளிட்ட முதன்மை இடங்களைக் காட்டினார்.

 அங்கு ஒரு குடிப்பகம் (Bar) இருந்தது. மாணவர்கள் உள்ள இடத்தில் இதுபோல் உள்ளதே என்று நண்பர் பாலாவை வினவினேன். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. தேவையானவற்றைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே ஏல் பல்கலைக்கழகத்தின் குறிக்கோளாக உள்ளதை எடுத்துரைத்தார்.

 அங்கிருந்த கடையொன்றில் குறிப்புச்சுவடிகள், எழுதுபொருள்கள், கோப்புகள் ஆடைகள் யாவும் ஏல் பெயர் பொறித்து இருந்தன. நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க சில எழுதுபொருள்களை வாங்கிக்கொண்டு மாலை 4 மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டோம்.. ஒரு மணி நேரப் பயணதை அடுத்து அமெரிக்க மக்களின் பொழுது போக்கு இடமான “கழகம்” ஒன்றிற்கும் சென்று பார்த்தோம்.


முனைவர் சுதிர் அவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு பற்றி 
மு.இளங்கோவன் விளக்குதல்


முனைவர் மு.இ, முனைவர் பெர்னார்டு பேட்


பாலா, முனைவர் சுதிர்


ஏல் பல்கலைக்கழகத்தின் சிறப்பறியும் ஆர்வலர்களுடன் மு.இ


ஏல் பல்கலை வளாகத்தின் சிலையருகில் மு.இ


ஏல் பல்கலை வளாகத்தில் மு.இ


ஏல் பல்கலைக்கழகத்தின் நூலகம் முகப்பு

ஞாயிறு, 3 ஜூலை, 2011

அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழா - படங்கள்


அமெரிக்கத் தமிழ் விழாவில் நடிகர் நாசர் குத்துவிளக்கேற்றுதல்

 அமெரிக்காவின் வடக்குக் கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் மாநகரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரமைப்பில் சார்பில் சூலை 1முதல் நான்கு நாள்களுக்குஆண்டு விழா நடைபெறுகிது.

 இதில் தமிழ் நாட்டிலிருந்து நடிகர் நாசர், சார்லி, புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மட்டைப்பந்து வருணனையாளர் அப்துல் சப்பார்,புதுகை பூபாளம் குழுவினர் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

 தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் பழனி சுந்தரம், தண்டபாணி குப்புசாமி, முத்துவேல் செல்லையா, சங்கரபண்டியன், அரசு செல்லையா, உள்ளிட்ட தமிழன்பர்கள் பலர் கலந்துகொண்டனர். பனைநிலத் தமிழ்ச் சங்கத்தார் நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

 கனடாவின் முதல் தமிழ் பாராளுன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இன்னும் இரண்டு நாளுக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது. அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். பெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலர் வெளியீடு, அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல் வெளியீடு, கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.


 கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் இனிமைத் தமிழ்மொழி என்னும் குறுவட்டை வெளியிட, முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்.


அப்துல் சப்பார், நா.முத்துக்குமார் குத்துவிளக்கேற்றுதல்


மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள்பெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலரைத் திரைப்பட நடிகர் நாசர் வெளியிட, முதற்படியை முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்


பெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலரைத் திரைப்பட நடிகர் நாசர் வெளியிட முதற்படியை முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக் கொள்கின்றார்.அருகில் மாநாட்டுப் பொறுப்பாளர்கள்


நாட்டிய நிகழ்வு


நாட்டிய நிகழ்வு