முனைவர் மு.இளமுருகன் அவர்கள்
தனித்தமிழ் உணர்வுடனும், பகுத்தறிவுச் சிந்தனையுடனும்
மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களுள் முனைவர் மு.இளமுருகன் அவர்கள்
குறிப்பிடத்தகுந்தவர். தஞ்சாவூர் கரந்தைத் தமிழவேள் உமா மகேசுவரனார் கலைக்கல்லூரியில்
தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழ்ப்பற்றையும் தமிழ்
உணர்வையும் ஊட்டிய பெருமகனார் இவர்.
1987 இல் திருப்பனந்தாள் கல்லூரியில் நான்
இளங்கலை மாணவனாகப் பயின்ற காலம் முதல் பேராசிரியர் மு.இளமுருகனார் அவர்களை நன்கு அறிவேன்.
கடந்த கால் நூற்றாண்டுகளாக அவர்களின் கண்பார்வையில் வளர்ந்தவன் நான். கல்லூரி, பல்கலைக்கழகங்களில்
நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வதுபோலவே இருவரும் சமூகப் பொறுப்புணர்வுடன் பல
இயக்க நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளோம். பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களுக்கு
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியபொழுது அறிவுரை கூறி நெறிப்படுத்தியதுடன் விழாவில் கலந்துகொண்டு
பெருமழைப்புலவர் பற்றிய அரிய உரையாற்றி ஊர்மக்களுக்குப் புலவரின் புலமையை நினைவூட்டியவர்.
அன்னாரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.
முனைவர்
மு.இளமுருகன் அவர்களின் தமிழ்வாழ்க்கை
முனைவர்
மு.இளமுருகன் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வடுவூர் தென்பாதி என்னும்
ஊரில் 14.08.1952 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் முருகையன்- செல்வமணி ஆவர். இளமைக்
கல்வியை வடுவூர் பள்ளியில் பயின்றவர். புலவர் வகுப்பைத் திருவையாறு அரசர் கல்லூரியில்
நிறைவுசெய்தவர்(1972-1975). தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர், திரு. வி.அ..அரங்கசாமி,
திரு.வெங்கட்ராமன் ஆகிய ஆசிரியப் பெருமக்களிடம் பயின்றவர்.
1975 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்
பயிற்சி பெற்றவர். படிக்கும் காலத்தில் பாவாணரின் உலகத் தமிழ்க்கழகம் கட்டியெழுப்பும்
முயற்சியில் முன்னின்றவர். தமிழ் பயின்றவர்கள் அந்நாளில் வேலையில்லாமல் இருந்த சூழலில் "பணியில்லாத தமிழாசிரியர் கழகம்" தொடங்கிப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். மதுரையில்
உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது தமிழ்படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று
உண்ணா நோன்புப் போராட்டம் நடத்தியவர். தமிழகத்தில் அப்பொழுது இருந்த 13 தமிழ்க்கல்லூரிகளில்
பயின்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரட்டிப் போராட்டக்களம் அமைத்தவர்.
முனைவர் மு.இளமுருகன் அவர்கள் தாம் பிறந்த
வடுவூரில் பாவாணர் பைந்தமிழ் மன்றம் நிறுவியவர்.
தமிழறிஞர் சரவணத் தமிழன், “பண்ணாராய்ச்சி வித்தகர்” குடந்தை ப.சுந்தரேசனார்
உள்ளிட்ட பலரை அழைத்துத் தொடர்ப்பொழிவுகள் ஆற்றச் செய்த பெருமைக்குரியவர். தமிழ்ப்பெயர்
சூட்டல், திருவையாற்றில் தமிழிசை விழா நடத்தியமை இவரின் பணிகளுள் குறிப்பிடத்தக்கன.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம்
பயிலச் சென்றார். நான்கு நாளில் அப்படிப்பைத் துறந்து, பூண்டித் திருபுட்பம் கல்லூரியில்
முதுகலை பயின்றார் (1977-79). நிதி நல்கைக்குழுவின் தேர்வெழுதித் தேறி, முழுநேர ஆய்வாளராகப்
பாலக்காடு-சித்தூர் கல்லூரியில்மூன்றாண்டுகள் பயின்றார். 1990 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
இவரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு: தமிழ்ப் பெருங்காப்பியங்களில் சங்க இலக்கியத்தின்
செல்வாக்கு.
முனைவர் மு.இளமுருகன் அவர்கள் 07.12.1983 இல் கரந்தைக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தார்.
31.05.2011 வரை அக்கல்லூரியில் பணியாற்றினார். இவரின் மேற்பார்வையில் இதுவரை 20 பேர்
முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 65 பேர் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 1999 முதல் 2004 ஆம் ஆண்டுவரை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக விளங்கியுள்ளார்.
பேராசிரியர் விருத்தாசலனார் தொடங்கிய நாவலர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் திருவருட்
கல்லூரியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தொடர்ந்து உழைத்துவருகின்றார்.
முனைவர் மு.இளமுருகன் அவர்கள் 1985 இல் பேராசிரியர் கா.அங்கயற்கண்ணி அவர்களை
இல்லறத்துணையாக ஏற்றுத் தஞ்சையில் தமிழ்வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார்.
முல்லை முத்தையாவின் இலக்கிய இதழ்(2005)
கலையும் கல்வெட்டும்(2003) நூல்களின் ஆசிரியர்.
முனைவர் மு.இளமுருகன் அவர்கள் அவர்கள் தமிழாசிரியர்களைப்
போற்றுவது, தமிழ் மொழி, இன, நாட்டு உணர்வுடன் செயல்படுவது என வாழ்ந்து வருபவர். இவரின்
முயற்சியால் தமிழறிஞர்கள் பலர் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நூல்கள் பல வெளிவந்துள்ளன.
தமிழுக்கான பல போராட்டங்கள் நடந்துள்ளன. தனித்தமிழில் இன உணர்வு மிளிரச் சொற்பெருக்காற்றுவதில் வல்லவர். செயல் மறவராகத் தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டுவரும்
முனைவர் மு.இளமுருகன் அவர்கள் உலகத் தமிழர்களால் என்றும் நினைவுகூரத் தக்கவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக