நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

முனைவர் வையை கோ.வீரக்குமரன் அவர்களின் தமிழ்ப்பற்றுமுனைவர் கோ.வீரக்குமரன் அவர்கள்

என் வாழ்வில் பல்வேறு தமிழ்ப்பற்றாளர்களைச் சந்தித்துள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பெருமைக்குரியவர்கள். அவர்களை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இனி அறிமுகம் செய்வேன். அந்த வகையில் முனைவர் வையை கோ.வீரக்குமரன் அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் தமிழ் ஆர்வத்தையும் இங்குக் குறிப்பிட விரும்புகின்றேன்.

நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றுகொண்டிருந்தபொழுது அருகில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் ஒரு பிள்ளையார் கோயிலின் பட்டிமன்றத்திற்குச் சென்ற நினைவு வருகின்றது. அந்தக் கோயில் பட்டிமன்றத்தை ஒருங்கிணைத்தவர் எங்கள் பகுதியில் வாழ்ந்த புலவர் கலியபெருமாள் அவர்கள் ஆவார். புலவர் கலியபெருமாள் அவர்கள் சிலவாண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இயற்கை எய்தியதாக அறிந்தேன்.

குத்தாலம் பட்டிமன்றம் தமிழ்வழிக் கல்வி குறித்த பட்டிமன்றம் என்பதாக நினைவு. அங்கு ஒரு காவல்துறை அதிகாரிபோல் மிடுக்கான தோற்றத்துடன் ஒருவர் வந்திருந்தார்.அவர்தான் முனைவர் கோ.வீரக்குமரன். என்னுடைய தமிழார்வம் அறிந்து மகிழ்ந்து உரையாடினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதாக உரைத்ததுடன் தூய தமிழில் உரையாடியமை எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரின் முகவரி பெற்றுக்கொண்டேன். என் முகவரியும் கொடுத்தேன். இது நடந்தது சற்றொப்ப 1990 அளவில் இருக்கும்(சற்றொப்ப இருத்தியிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன). அதன்பிறகு மடல்வழித் தொடர்பு இருந்தது.

வையை கோ. வீரக்குமரன் அவர்களைச் சந்திக்கச் சிலவாண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று அவர் தங்கியிருந்த வீட்டுக்கும் போனேன். முனைவர் கோ.வீரக்குமரன் அவர்களுக்குத் திருமணம் நடந்திருந்த சூழல். அன்புடன் விருந்தோம்பினார். என்னை அவரின் உடன்பிறப்பு போல் நடத்தினார். அதிலிருந்து பேராசிரியர் கோ. வீரக்குமரன் அவர்களுடன் நல்ல மடல்வழித் தொடர்பில் இருந்தேன்.

திருச்சிராப்பள்ளியில் நான் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது அவரின் உறவினர் திரு.மாயாண்டி அவர்கள் நடத்திய அச்சகம் ஒன்றில் அண்ணன் அவர்களைச் சந்தித்தேன். கோ.வீரக்குமரன் அவர்கள் அப்பொழுது கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்தார். பலவாண்டுகளுக்குப் பிறகு எத்தியோப்பியா நாட்டில் பணியில் இருப்பதாகவும் திருச்சிராப்பள்ளிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்து ஒரு மடல் எழுதியிருந்தார். நான் அப்பொழுது கலவையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

முனைவர் கோ.வீரக்குமரனைச் சந்திக்கத் திருச்சிராப்பள்ளிக்குச் சென்றேன். அவரும் அவர் நண்பர்களுமாகக் காவிரியின் கல்லணைக்கு ஓர் உலா சென்றோம். மீண்டும் இரவு அவர் இல்லம் சென்று உண்டு முடித்து வேலூர் போனதாக நினைவு.

நானும் பல ஊர்களில் படிப்பது, பணிபுரிவது என்று சுற்றிச் சுழன்றாலும் அண்ணனுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். காரணம் அவரிடம் இருந்த தமிழ்ப்பற்றும், மொழியாளுமையுமே காரணம். அவரை எப்படியாவது தமிழகப் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்ற வைத்தால் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பெரும் பயன் கிடைக்கும் என்று ஒருமுறை திருச்சிராப்பள்ளியில் வெளிவந்த ஒரு விளம்பரத்தை அண்ணன் அவர்களின் பார்வைக்கு வைத்தேன். அவருக்கு உரிய விண்ணப்பத்தை அவர் சார்பில் நான் அனுப்பிவைத்தேன்.

நம் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பதாரரின் கல்விப் பின்புலம் பார்த்துப் பணிக்குத் தேர்ந்தெடுப்பது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே நின்றுவிட்டதால் அந்தப் பணி வாய்ப்பு முனைவர் கோ. வீரக்குமரன் அவர்களுக்கு அமையாமல் போனது. அண்ணன் அவர்கள் எத்தியோப்பியாவில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள். தமிழகப் பணி அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனதில் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. எத்தியோப்பியாவில் பணியாற்றினாலும் அவர்கள் பணியில் இருந்தது கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்தான். அங்கிருந்து விடுப்பில் சென்றுதான் எத்தியோப்பியாவில் பணியாற்றினார். அண்மைக் காலமாகத் தாய்நாட்டிற்குத் திரும்பிக் கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு மற்றும் வங்கி மேலாண்மைக் கல்லூரியில் இணைப்பேராசிரியராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.

முனைவர் கோ.வீரக்குமரன் அவர்கள் மாணவர்களிடத்தும் உடன் பணியாற்றும் நண்பர்களிடத்தும் அன்புடன் பழகும் இயல்புடையவர். ஆசிரியர்களுக்கு எல்லாம் முன்மாதிரியான பேராசிரியர் ஆவார். வணிகவியல், வங்கியியல் குறித்த பேரறிவு பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமையுடையவர். கேரளாவில் பணி என்பதால் மலையாளமும் அறிந்தவர். எந்தச் சூழலிலும் பிறசொல் கலவாமல் இயன்றவரை தூய தமிழில் உரையாடும் இயல்பினர்.

உலகின் எந்தப் பகுதியில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கு, ஆய்வரங்கு எதுவாக இருந்தாலும் திருக்குறள், சங்க இலக்கியங்களிலிருந்து வங்கி, வணிகம் சார்ந்து மேற்கோள் காட்டிவிட்டுத்தான் தம் ஆய்வுரையைப் பேராசிரியர் அவர்கள் தொடங்குவார்கள். என் ஆய்வுப் பணிகளையும், கல்விப்பணிகளையும் தொடர்ந்து ஆர்வமுடன் கேட்டு வழிகாட்டும் பேராசிரியர் கோ.வீரக்குமரன் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைப்பேன்:

முனைவர் கோ. வீரக்குமரன் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணற்பாறை அருகில் உள்ள வையம்பட்டி என்ற ஊரில் திருவாளர் கோவிந்தராசு, பாஞ்சாலி அம்மாள் ஆகியோரின் மகனாக 15. 05. 1963 இல் பிறந்தவர்.

கோ.வீரக்குமரன் அவர்கள் வையம்பட்டி  அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தவர். காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை வகுப்புகளில் பயின்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.முனைவர் கோ.வீரக்குமரன் அவர்கள்(அலுவலகத்தில்)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர், உடையார்பாளையம், செயங்கொண்டம் பகுதிகளில் இயங்கிய ஆவின் பால் நிறுவனங்களில் பணிபுரிந்தவர். பின்னர் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியின் கணினித்துறையில் பேராசிரியராகச் சிலகாலம் பணியாற்றியவர். அதன்பிறகு கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1994 இல் வங்கி, கூட்டுறவு மேலாண்மைத்துறையில் பேராசிரியர் பணியில் இணைந்தவர். அயல்பணி அடிப்படையில் எத்தியோப்பியா நாட்டில் 2002 முதல் 2008 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். தற்பொழுது கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். நினைக்கும்பொழுதெல்லாம் தமிழ்வடிவாக நினைவுக்கு வரும் பேராசிரியரின் தமிழ்ப்பற்றைப் போற்றி மதிக்கின்றேன்.

வியாழன், 24 ஜனவரி, 2013

நாகரத்தினம் கிருஷ்ணாவின் கிருஷ்ணப்ப நாயகர் கௌமுதி நூல்வெளியீட்டு விழாஎழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கிருஷ்ணப்ப நாயகர் கௌமுதி நூல்வெளியீட்டு விழா புதுச்சேரி செயராம் உணவகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆர்வலர்கள் கலந்துகொள்ளவும்.

இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி
நாள்: 26.01.2013(சனிக்கிழமை) 
நேரம்: மாலை 5.30 மணி

புதன், 23 ஜனவரி, 2013

தமிழ், ஆங்கில நூல்கள் வெளியீட்டு விழா
சென்னை, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள திரு.சு.இராமசாமி நினைவு பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் முனைவர் தா. இரா. பச்சமுத்து அவர்களின் விருப்பத்தின்படி, துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ அவர்களின் பெரும் முயற்சியில் தமிழ்ப்பேராயம் சிறப்பான பணிகளைச் செய்துவருகின்றது. தமிழறிஞர்களை அழைத்துப் போற்றுவதும், நூல் எழுத வாய்ப்பு நல்குவதும், அவ்வாறு எழுதப்பெற்ற நூல்களை பதிப்பித்தலும் எனப் பல்வேறு தமிழ்ப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழறிஞர்களின் அரியநூல்கள் இதனால் தமிழுலகிற்குக் கிடைத்துவருகின்றன. அவ்வகையில் நாளை 24.01.2013 காலை 10.30 மணிக்கு ஆறு நூல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் நான்கு நூல்கள் தமிழ்நூல்கள். இரண்டுநூல்கள் ஆங்கில நூல்களாகும். இந்த நூல்வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி நிரலை என்பக்கத்தில் இணைக்கின்றேன். ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம்.

நாள் : 24.01.2013
நேரம் : முற்பகல் 10.30  மணி
இடம் : முனைவர் தி.பொ. கணேசன் சிற்றரங்கம்

வரவேற்புரை: முனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்கள்
                                 பதிப்பாளர், தமிழ்ப்பேராயம்

தலைமையுரை:முனைவர் மு. பொன்னவைக்கோ அவர்கள்
                                    தலைவர், தமிழ்ப்பேராயம்,
                                    துணைவேந்தர், SRM பல்கலைக்கழகம்

நூல் வெளியிட்டு,பாராட்டுரை 
தமிழ் நூல்கள்:முனைவர் தா.இரா. பச்சமுத்து அவர்கள்
 புரவலர், தமிழ்ப்பேராயம். வேந்தர், SRM பல்கலைக்கழகம்
       
ஆங்கில நூல்கள்:நீதியரசர் பு.இரா. கோகுலகிருட்டிணன் அவர்கள்
                                                                        மேனாள் தலைமை நீதியரசர்,
                                                                        சென்னை, குசராத் உயர்நீதிமன்றங்கள்,
                                                                        தலைவர், சென்னைத் தமிழிசைச் சங்கம்.

முதற் படி பெறுவோர்
தமிழ் நூல்கள்;திரு. இரவி பச்சமுத்து அவர்கள்
                                                                        தலைவர் திரு. SRM கல்விக் குழுமம்
       
ஆங்கில நூல்கள்:பேராசிரியர் ப. சத்தியநாராயணன் அவர்கள்
                                                                        தலைவர், SRM பல்கலைக்கழகம்

சாகித்தியஅகாதெமி விருதினர் திரு. தா.செல்வராசுஅவர்களுக்குப் பாராட்டு 
வேந்தர் முனைவர் தா.இரா. பச்சமுத்து அவர்கள்,சிறப்புச் செய்வார்கள்.

வாழ்த்துரை:திரு. இரவி பச்சமுத்து அவர்கள்
                            தலைவர், SRM  கல்விக் குழுமம்

                          பேராசிரியர் ப. சத்தியநாராயணன் அவர்கள்
                           தலைவர், SRM  பல்கலைக்கழகம்

                        முனைவர் நா. சேதுராமன் அவர்கள்
                         பதிவாளர், SRM  பல்கலைக்கழகம்

ஏற்புரை:நூலாசிரியர்கள்

நன்றியுரை:முனைவர் கோ. பாக்கியவதிரவி அவர்கள்
                                                   ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப்பேராயம்.

நிகழ்ச்சித் தொகுப்பு:திரு. கி. குணத்தொகையன் அவர்கள்
                                                        பதிப்பாசிரியர், தமிழ்ப்பேராயம்.

அனைவரும் வருக !


வெளியிடப்பெறும் தமிழ் நூல்கள்
1.       தொல்காப்பியர் காட்டும் குடும்பம்              
(ஆசிரியர் : முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள்)               

2.       தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம்                                                       
(ஆசிரியர் : மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள்)                                                

3.       தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்                                                            
(ஆசிரியர் : முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள்)                           
4.       ஒன்றே உலகம்                                                                             
(ஆசிரியர் : தமிழறிஞர் தனிநாயக அடிகள்)

வெளியிடப்பெறும் ஆங்கில நூல்கள்
5.    Studies in Classical Tamil Literature                    
( Author : Dr. S.N. Kandaswamy )
                                                       
6.    Pathuppaattu in English                                                   
( Author : Dr. A. Dakshinamurthy )

7.    Ainkurunuru  Vol - 1                     
( Author : Dr. S.N. Kandaswamy )              

விழாவின்போது இந்நூல்கள் 25% கழிவு விலையில் வழங்கப்படும்                                             

தொடர்புக்கு:      

தமிழ்ப்பேராயம்
திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
காட்டாங்குளத்தூர் - 603203, காஞ்சிபுரம் மாவட்டம்,தமிழ்நாடு
தொலைபேசி : +91-44-2741 7375, 2741 7376

செவ்வாய், 22 ஜனவரி, 2013

எம்.எஸ். உதயமூர்த்தி மறைவு எம்.எஸ். உதயமூர்த்தி 
"மக்கள் சக்தி" இயக்கத்தின் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் (வயது 82) சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் இளைஞர்களிடையே எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் நடத்திய இயக்கம் தன்னம்பிக்கையை விதைப்பவையாக இருந்தது. பல்வேறு தன்முன்னேற்ற நூல்களை எழுதிய எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் மருத்துவம் பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.

எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்தவர். தமிழ்நாட்டு இளைஞர்களை நல்வழிப்படுத்தத் தம் பணியை விடுத்துத் தமிழகம் வந்து இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த உரையாலும், எழுத்தாலும் தொடர்ந்து களப்பணியாற்றினார். இவரின் பணியைப் பாராட்டும் வகையில் உன்னால்முடியும் தம்பி என்ற திரைப்படமும், அதில் இடம்பெறும் உதயமூர்த்தி என்ற கதைத்தலைவனும் கிடைத்தனர். இவரின் நூல்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக உள்ளன.

எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் நாகை மாவட்டம் மயிலாடுதுறை விலா நகரில் 1928 இல் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கிண்டிப் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இவருக்குச் சித்தார்த்தா, அசோகன் என்ற இரு மகன்களும், கமலா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.

மக்களுக்கு உழைத்த மாந்தரின் நினைவைப் போற்றுவோம். 

திங்கள், 21 ஜனவரி, 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முப்பெரும் சிறப்புப்பொழிவுகள்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் முனைவர் அரங்க. இராமலிங்கம் அவர்கள் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும்கொண்ட பேராசிரியர் அவர்கள் நாடறிந்த நல்ல சொற்பொழிவாளர். பக்திப் பனுவல்களின் மேன்மையையும், தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ்நாட்டிலும் கடல்கடந்த நாடுகளிலும் தம் நாவன்மையால் வெளிப்படுத்தி வருபவர். அன்னாரின் முயற்சியால் திங்கள்தோறும் சங்கத்தமிழ், திங்கள்தோறும் தெய்வத்தமிழ், திங்கள்தோறும் இலக்கணத் தமிழ் என்ற சிறப்புப்பொழிவுகள் நடைபெற உள்ளன. இந்தத் திங்களுக்கான பொழிவுகளை முனைவர் அ. அ. மணவாளன், முனைவர் தி. இராசகோபாலன், முனைவர் க. ப. அறவாணன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.

இந்த மாதப்பொழிவுகள் 2013 சனவரி 22, 23, 24 ஆகிய மூன்று நாள்களும் மாலை 4 மணிமுதல் 5.30 மணிவரை சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகின்றன.

தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்தப் பொழிவுகள் ஆய்வுமாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். அறிஞர்களின் பேச்சுகள் காற்றில் கரைந்துபோகாமல் ஒலி - ஒளிப்பதிவாக்கி  இணையத்தில் நிலைபெறச்செய்தால் உலகின் பலபகுதிகளில் வாழும் தமிழர்கள் கேட்கமுடியும்.

இத்தகு அரிய வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ள பேராசிரியர் அரங்க. இராமலிங்கனார் அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிகூரக் கடமைப்பட்டுள்ளது.

வியாழன், 17 ஜனவரி, 2013

பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்- சா. நசீமா பானு அவர்கள்
மு.சாயபு மரைக்காயர் - சா. நசீமா பானு

காரைக்கால் என்றவுடன் தமிழ் இலக்கிய உலகுக்கு நினைவுக்கு வரும்பெயர் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் என்பதாகும். காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இலங்கும் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்கள் பல நூல்களை எழுதிய பெருமைக்குரியவர். மாணவர்களிடத்தும் உடன் பணியாற்றும் பேராசிரியர்களிடத்தும் அன்பு பாராட்டும் இயல்பினர். சாதி, மதம், இனம், நாடு கடந்து பழகும் இயல்பினர்.

நான் கல்லூரி மாணவனாக இருக்கும்பொழுதே பேராசிரியர் தங்கப்பா அவர்களின் வழியாகப் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்களைப் பற்றி அறிவேன். அவர்களின் உடன்பிறந்தார் பாவலர் காரை இறையடியான் அவர்களின் பாடல்களைச் சுவைத்திருந்த நான் பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்கள்மேல் அன்புகொண்டவனாக இருந்தேன். பல கருத்தரங்குகளிலும் புத்தகக் கண்காட்சிகளிலுமாகச் சந்தித்திருந்தாலும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இல்லாமல் இருந்தோம். ஆனால் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதன்மைச்செய்திகளைப் பரிமாறும் அளவிற்குத் தொடர்பு இருந்தவண்ணம் இருந்தது.

இன்று (17.01.2013) பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்களிடத்திருந்து ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. தாம் புதுவை வந்துள்ளதாகவும் சந்திக்க விரும்புவதாகவும் அழைத்தார்கள். நான் தேர்வுப்பணியொன்றில் ஈடுபட்டிருந்ததால் மாலையில் சந்திக்க வருவதாகச் சொன்னேன். தங்கியுள்ள இடம் வினவியபொழுது நான் குடியிருக்கும் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி ஐயா இருக்கும் விவரம் அறிந்தேன்.

மாலை 4 மணி. பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்கள் தங்கியிருந்த இல்லம் சென்று அவர்களையும் பேராசிரியர் நசீமா பானு அம்மாவையும் கண்டு உரையாடினேன். நேற்றுக் கல்பாக்கத்தில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விருதுபெற்ற விவரம் சொன்னார்கள். தமிழுக்கு உழைப்பவர்களை அவர்கள் வாழும் காலத்தில் போற்றவேண்டும் என்னும் கோள் உடையவன் நான் என்பதால் இந்தச் செய்தி எனக்கு இனித்தது.

எம் மனைக்கு வரும்படி ஐயாவையும் அம்மாவையும் அன்புடன் அழைத்தேன். அரைமணி நேரம் ஒதுக்கி நம் இல்லம் வந்தார்கள். நம் பணிகளை இருவரும் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினார்கள். பேராசிரியர் அவர்களின் அன்பு ததும்பும் வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எல்லை கடந்து அனைவரிடமும் பழகும் பாங்கினை ஒவ்வொரு மாந்தரும் பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

பேராசிரியரின் தமிழ் வாழ்க்கை:

பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்கள் 28. 08. 1951 இல் காரைக்காலில் பிறந்தவர். பெற்றோர் ஹாஜி முகம்மது அப்துல் காதர், பாத்திமா உம்மாள் ஆவர். இவர்தம் தாய்வழிப்பாட்டனார் அமுதகவி சாயபு மரைக்காயரின் திருப்பெயரே இவருக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. இவரின் உடன் பிறந்தார்  தனித்தமிழ்த் தென்றல் காரை. இறையடியான்(மு.முகம்மது அலி) ஆவார்.

பேராசிரியர் மு சாயபு மரைக்காயர் அவர்களின் மனைவி பேராசிரியர் சா. நசீமா பானு ஆவார். இவர்களின் திருமணம் 23.07.1978 இல் நடைபெற்றது. இவர்களுக்குச் சா. பாத்திமா யாஸ்மின், நினைவில் வாழும் சா.முகம்மது அப்துல் காதர், சா. இக்பால் உசேன் என்னும் மூன்று மக்கட்செல்வங்கள் வாய்த்தனர்.

காரைக்கால் அண்ணா கல்லூரியில் இளம் அறிவியல்(வேதியில்), பயின்று, மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றவர். 36 ஆண்டுகளாகப் புதுவை அரசின் கல்லூரிகள் பலவற்றுள் பணிபுரிந்த பெருமைக்குரியவர். 105 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இவரின் நூல்கள் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. வானொலி, தொலைக்காட்சிகளில் இவர்தம் உரைகள் ஒலி-ஒளிபரப்பாகியுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, துபாய், அபுதாபி உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று சிறப்புரைகள் ஆற்றிய பெருமைக்குரியவர்.

தம் வீட்டில் 900 சதுர அடியில் “சாயபு மரைக்காயர் நூலகத்தை” 17500 நூல்களைக் கொண்டு அமைத்துள்ளார். பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் பட்டங்களும் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. புதுவை அரசின் கலைமாமணி விருது, குன்றக்குடி அடிகளார் சமய நல்லிணக்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர்தம் நூல்கள் குறித்துப் பலர் ஆய்வுப்பட்டங்களுக்கு ஆய்வேடு வழங்கியுள்ளனர். பேராசிரியர் அவர்கள் “பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்- பேராசிரியர் சா.நசீமா பானு அறக்கட்டளை”யை நிறுவியுள்ளார். இ.ப.த.மன்றத்தின் கருத்தரங்கில் இசுலாமிய இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்து எழுதப்பெறும் கட்டுரைகளுக்குச் செல்வன் முகம்மது அப்துல் காதர் நினைவுப்பரிசு வழங்கி வருகின்றார்.

முகவரி:

பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்கள்,
எண் 8, தம்பி சாயபு மரைக்காயர் வீதி,
காரைக்கால்- 609 602
புதுவை மாநிலம்

தொலைபேசி: 04368- 220764
செல்பேசி: 98424 88047  // 98948 88386


சா.நசீமா பானு - மு.சாயபுமரைக்காயர் 


 மு.இளங்கோவன், சா.நசீமா பானு, மு.சாயபுமரைக்காயர்


செவ்வாய், 15 ஜனவரி, 2013

புதுவைப் பேச்சாளர் கலக்கல் காங்கேயன் அவர்கள்கலக்கல் காங்கேயன் அவர்கள்

புதுவையின் புகழ்பெற்ற பேச்சாளர்களுள் கலக்கல் காங்கேயன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இவரின் பிறந்த ஊர் புதுவை மாநிலம் சேதராப்பட்டு ஆகும். பெற்றோர் திருவாளர்கள் கு.லிங்கசாமி, லி.அஞ்சலை அம்மாள். 02.10.1967 இல் பிறந்த காங்கேயன் அவர்கள் புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் முதுகலை பொருளாதாரம் பயின்றவர். புதுவை அரசின் தொழிலாளர்துறையில் புள்ளி விவர ஆய்வாராகப் பணியாற்றி வருகின்றார். பட்டிமன்ற நடுவர், பாட்டுமன்ற நடுவர், இசைச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், செயற்குழு உறுப்பினர் (புதுவை வாசகர் வட்டம்),             பொதுக்குழு உறுப்பினர் (புதுவைத் தமிழ்சங்கம்) என்று பலநிலைகளில் செயல்படுபவர்.

கலைஞர்    தொலைக்காட்சி,          சன் தொலைக்காட்சி, ராஜ் தொலைக் காட்சி, பொதிகை தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மெகா தொலைக் காட்சி, பாலிமர் தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற பேச்சாளர்களின் தலைமையில் பேசிய பெருமைக்குரியவர். பல தொலைக்காட்சிகளில் நடுவராக இருந்தும் நிகழ்ச்சியைத் திறம்பட நடத்தியுள்ளார்.

புதுவை மற்றும் தமிழகமெங்கும் உள்ள அரிமா சங்கங்கள், சுழற்சங்கங்கள்,   புதுவை கலை பண்பாட்டுத்துறை மற்றும் இதரத் துறைகளில்  பட்டிமன்றங்கள் இசைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.


இலக்கிய நிகழ்வுகளில் நடுவராகக்    கடந்த 10 ஆண்டுகளாக 1500 பட்டிமன்றங்களுக்கு மேல் பங்கேற்றதோடு இலக்கியச் சொற்பொழிவுகள் மற்றும் கவியரங்கங்கள், மாணவர் விழிப்புணர்வு நிகழ்வுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். பலகுரல் நிகழ்ச்சி, இசைக்கருவிகளுடன் இணைந்து பட்டிமன்றங்களில் பாடும் திறன் பெற்றவர்        

சிங்கப்பூர், இலங்கை நாடுகளுக்குச் சென்று சிறப்புரைகள் ஆற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.

மாலை மலர், அவள் விகடன், வானம்பாடி போன்ற இதழ்களில் தொடர் கட்டுரைகள்      எழுதிவருகின்றார். எண்ணப்பறவை சிறகடித்து... என்ற நூலினை எழுதி வெளியிட்டுள்ளார்.

1. பல்சுவை நாவலர் விருது, 2. இயல்இசை வேந்தர் விருது 3. செந்தமிழருவி விருது.4. இலக்கியச் செல்வர் விருது 5. பாவேந்தர் புகழ் விருது. 6. கலைவாணர் விருது, 7.இலக்கியச்செம்மல் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
                                                  
முகவரி:

            திரு. லி. காங்கேயன் அவர்கள்,
            எண் 17, இரண்டாவது தெரு,
            காந்தி நகர், புதுச்சேரி-605009.

தொலைபேசி:0413 – 2271441 அலைபேசி: 9443293323

திங்கள், 14 ஜனவரி, 2013

மலேசியாவில் 10 ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் 10 ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013, சூன் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் பேராளர்கள் கலந்துகொண்டு தமிழ்க்கல்வி குறித்த கட்டுரை வழங்கலாம். கட்டுரைச் சுருக்கம் அனுப்ப நிறைவுநாள் 15.01.2013

மேலும் விரங்களுக்கு: இணையதளம் 

திரு.ம.மன்னர்மன்னன் அவர்கள், மலேசியா பேசி:  03-79673142


சனி, 12 ஜனவரி, 2013

தமிழ் இணைய அறிமுகம் நிகழ்ச்சி தொடங்கியது...

இணைய அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட தமிழார்வலர்கள்


திருச்சிராப்பள்ளி, பெரியார் கல்வி வளாகத்தில் இன்று(12.01.2013) காலை 10 மணியளவில் தமிழ் இணையம் அறிமுக நிகழ்ச்சி தொடங்கியது. மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கி நடைபெறுகின்றது. திரு.வா.நேரு அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளியிலிருந்து தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர்.தமிழ் இணைய அறிமுகம் நிகழ்ச்சி தொடங்கியது...


மருத்துவர் சோம.இளங்கோவன் (தலைமையுரை)

தமிழ் இணையம் பற்றி கலந்துரையாடல்

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

குவைத் நகர் உலா... தொடர் 2குவைத்தின் கோபுரம் (Kuwait Towers)


குவைத் நகரத்தின் சிறந்த உணவகத்தில் மொகல் மகால்(Mughal Mahal) முதலிரு இடங்களுக்குள் வரும். அந்த அளவு நகரின் முதன்மைப்பகுதியில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்திற்குப் பொறியாளர் கருணாகரன் அவர்கள் வருவதற்கும் நாங்கள் செல்வதற்கும் நேரம் சரியாக இருந்தது.

மொகல் மகாலில் இந்தியவகை உணவு சிறப்பாக வழங்கப்படுகின்றது. இப்பொழுது ஓட்டுநர் திரு.ரெட்டி அவர்களையும் வற்புறுத்தி எங்களுடன் உணவு உண்ண அழைத்துச்சென்றோம். தம்பி பிலவேந்திரன் அவர்களும் எங்களுடன் இருந்தார். நால்வருக்கும் தேவையான உணவு என்ன? என்று பேசி ஒரு முடிவுக்குள் வருவதற்குள் ஐந்து நிமிடம் ஆனது. நான் வெளிநாட்டுப் பயணங்களில் கோழி இறைச்சியைத் தேர்ந்தெடுப்பேன். தூய்மையாக இருக்கும் என்ற அடிப்படையில் இத்தேர்வு அமையும். இந்த முறையும் அப்படியே கோழிப் புலவுக்கு விருப்பம் தெரிவித்தோம்.

பொறியாளர் கருணாகரன் அவர்கள் இந்தக் கடையில் ஆட்டிறைச்சி சிறப்பு என்றார். அப்படி என்றால் ஆட்டிறைச்சிக்குச் சொல்லுங்கள் என்றேன். இரு தட்டு ஆட்டுக்கறியும் இரு தட்டு கோழிக்கறியுமாக வந்தன. அதற்கு முன் “சூப்” கொண்டுவரும்படி சொன்னார். மெதுவாக அனைத்தையும் சுவைத்து உண்டோம். கோழிக்கறியும், ஆட்டுக்கறியும் சுவையில் ஒன்றையொன்று விஞ்சி நின்றன. எந்த உணவும் வீணாகவில்லை. சிறிது மிகுதியாக இருந்த குழம்பையும், பரோட்டோவையும் கட்டித்தரும்படி சொன்னோம். அவர்களும் சிறப்பாக மீதியைக் கட்டித் தந்தனர். இதனிடையே திரு. தமிழ்நாடனும், திரு. இராமன் அவர்களும் எங்கள் செய்ல்பாடுகளை ஆர்வமுடன் செல்பேசியில் கேட்டபடி இருந்தனர்.

பகலுணவுக்குப் பிறகு குவைத்தின் நினைவுச்சின்னங்கள், வரலாற்று முதன்மை வாய்ந்த இடங்களைப் பார்க்க நினைத்தேன். அந்த வகையில் கடற்கரையை ஒட்டியிருந்த வானுயர் கூண்டு ஒன்றிற்குச் சென்றோம். அடுத்தடுத்து இருந்த இரண்டு கூண்டுகளும் மேலேறிப் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது பழுதுபார்ப்புப் பணிகள் நடப்பதால் உயரே செல்ல இசைவு இல்லை என்றனர்.  

எனவே நாங்கள் குவைத்தின் காட்சியகம் சென்றோம். திறப்பதிற்கு நான்கு மணியாகும் என்றனர். அதன் இடையே அருகிலிருந்த சாது இல்லத்தைப் பார்க்கச்(Sadu House) சென்றோம். சாது இல்லம் என்றதும் ஏதோ துறவிகள் இருக்கும் இடம் என்று போனால் அங்குக் கைத்தறித்துணிகள், நூல்கள், போர்வைகள், பாய்கள் நெய்து காட்சிக்கு இருந்தன. குவைத்தியர்கள் துணி உருவாக்கும் கலையில் வல்லுநர்கள் என்பதை நினைவூட்டும் வகையில் இந்தச் சாது இல்லம் உள்ளது. அழகாகப் பராமரிக்கின்றனர். அங்குக் கூட்டங்கள் நடத்துவதற்கும் வசதிகள் உண்டு. நாங்கள் செல்லும்பொழுது ஒரு சிறப்புக் கூட்டம் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் நடந்தன. கடற்கரையை ஒட்டி இத்தகு கூடம் இருப்பது சிறப்பாக இருந்தது.

அடுத்து நாங்கள் குவைத்தின் தொல்லியல் அருங்காட்சியகம் (Kuwait Archaeology) சென்றோம். அங்குக் குவைத்தியர்களின் பழம்பெருமை பேசும் கோட்டைக்கதவுகள், புதைபொருள் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் புகைப்படக் கருவியை எடுக்கவில்லை. அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் அப்படி எங்களை அச்சமூட்டின. மாறுகால், மாறுகை வாங்கும் அவர்களின் தண்டனை பற்றி முன்பே நண்பர்கள் அச்சமூட்டிதான் அனுப்பியிருந்தனர். அனைத்தையும் நுட்பமாகக் கவனித்தோம். குவைத்தின் பணத்தாள்கள், காசுகள் பல இருந்தன. இந்திய ரூபாய்களும் இருந்தன.

பாலைநிலைத்தில் கிடைத்த பழம்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குவைத் நகரிலிருந்து இருபது கல் தொலைவில் உள்ள பைலகா தீவிலிருந்து(Failaka Island) எடுக்கப்பெற்ற பல தொல்லியல் பொருட்களும் அகழாய்வுப் படங்களும் காட்சிக்கு இருந்தன. குவைத்தை ஒட்டிய ஒரு சிறு தீவுதான் பைலகா தீவு. இங்குக் குவைத்தியர்களின் முன்னோர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் இன்றும் உள்ளதை அகழாய்வுச்சான்றுகள் காட்டுகின்றன. அடுத்து மரபுவழிக் காட்சியகத்தையும்(Heritage Museum) சென்று பார்த்தோம். அங்கும் அரிய செய்திகள் காட்சிக்கு இருந்தன.

பொறியாளர் இராமன் அவர்களும் பொறியாளர் தமிழ்நாடன் அவர்களும்  மாலை 6.30 மணிக்கு அபு அலிபா பகுதியில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினர். அதற்குள் நாங்கள் சில பொருள்களை நினைவுக்கு வாங்கிக்கொண்டு புறப்பட வேண்டும். ஒருமணி நேரத்திற்குள் குவைத்தில் கடைக்குச் சென்று கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒரு பெரிய கடைக்குச் சென்றோம். குவைத்து நகரத்து மக்கள் அத்தனைப்பேருக்கும் தேவையான பொருட்களை அள்ளித் தரும் பேரங்காடி அது. அதில் நாங்கள் நுழைந்து தேவையான பொருள்களை வாங்க ஆயத்தமானோம். தாகமாக இருந்ததால் ஒரு குளிர்க்குடிப்புப் புட்டியை உடைத்துக் குடித்தேன். தம்பி பிலவேந்திரன் நம் பிள்ளைகளுக்குத் தேவையான எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்களை அவர் விருப்பம்போல் வாங்கினார். இரண்டு மூன்று போர்வைகளை வாங்கலாம் என்றார். எடுத்துச்செல்வதில் சிக்கல் இருக்கும் என்று தவிர்த்தேன். பிறகு புதிய பேரீச்சம்பழங்களை நண்பர்களுக்காக வாங்கினோம். தனித்தச்சுவையுடன் தித்தித்தது. நம்மூர் தள்ளுவண்டிப் பழங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். புதுக்கோட்டைத் திருக்குறள் நண்பர் சபூதின் ஐயா பலவாண்டுகளுக்கு முன் ஒரு நோன்புநாளில் காணச் சென்றபொழுது வழங்கிய பேரிச்சையில் தெரிந்த சுவை தெரிந்தது.

பொறியாளர் கருணாகரன் ஐயா தனித்து ஏதோ கமுக்கம் சொல்வதுபோல் என்னை அழைத்துச்சென்று ஒரு நினைவுப்பரிசை எனக்கு வாங்கித் தந்தார். அவர் அன்பை நினைத்து மகிழ்ந்தேன். எங்கள் கொள்முதல் வேலைகளை முடித்துக்கொண்டு, பொறியாளர் கருணாகரன் வண்டியில் அபு அலிபா புறப்பட்டுச் சென்றோம். வழியில் பொறியாளர் கருணாகரன் அவர்களின் வீட்டுக்கு வந்து சில பொருட்களை எடுத்துகொண்டு புறப்பட்டோம். குளிர்க்குடிப்பு எனக்கு இரண்டு கொடுத்தார். அன்புடன் எடுத்துகொண்டு வண்டியில் குடிக்கலாம் என்று வந்தேன்.

முன்பே ஓட்டுநர் திரு. ரெட்டி எங்களிடமிருந்து விடைபெற்றுத் தனித்துச்சென்றார். மாலை 6.30 மணிக்கு நாங்கள் நண்பர்கள் அபு அலிபாவில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்துசேர்ந்தோம். உணவகத்திலிருந்து கொண்டு வந்த உணவுடன் பொறியாளர் இராமன் அவர்களும் பொறியாளர் சேதுமாதவனும் தயாரித்திருந்த தயிர்ச்சோறும் விருந்தில் கலந்துகொண்டன. அனைவரும் உரையாடியபடி உண்டோம்.

நாளை(18.12.2012) தமிழகத்திற்குப் புறப்படுவதால் இன்றே வழியனுப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். திரு. செந்தமிழ் அரசு அவர்களும் வந்துவிட்டார். சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களும் விருந்தில் கலந்துகொண்டார். ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடும்படி நண்பர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர். பாடினேன். அனைவரும் பாராட்டுரை வழங்கி என் தமிழ்ப்பணிகளை ஊக்கப்படுத்தி உரையாற்றினர். ஒவ்வொரு நண்பர்களும் அன்பால் நெஞ்சில் நிறைந்தனர்.

தமிழகத்தின் பல ஊர்களில் பிறந்து பல ஊர்களில் படித்து, பல ஊர்களில் பணிபுரிந்து இன்று குவைத்தில் இணைந்துள்ள இவர்களின் தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்வும் எந்தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லையே என்ற கவலையில் கண்ணீர் துளிர்த்தது. தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழர்கள் மீதும் இவர்களுக்கு உள்ள ஈடுபாடு நினைந்து, தமிழ் கடல்கடந்தும் வாழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் உரையாடலைத் தொடர்ந்தனர். சில புகைப்படங்களை நினைவுக்கு எடுத்துகொண்டோம்.

பொறியாளர் கருணாகரன் அவர்கள் புதுவை வந்தால் சந்திப்பதாகக் கூறி அன்புடன் விடைபெற்றுக்கொண்டார். அவரைப் போல் மற்ற நண்பர்களும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டனர். நண்பர் தமிழ்நாடன் அவர்கள் நாளை வானூர்தி நிலையத்தில் சந்திப்பதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றார்.

பொறியாளர் இராமன் அவர்களும், பொறியாளர் சேதுமாதவன் அவர்களும் தாம் தயாரித்த தயிர்ச்சோற்றின் செய்முறை விளக்கத்தைச் சொன்னார்கள். அதனைக் கேட்ட பிறகு ஊருக்குச் சென்றுசேரும் வரை உணவில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.திரு.பழமலை கிருட்டினமூர்த்தி, பொறியாளர் சேது, பொறியாளர் தமிழ்நாடன்


குவைத் நகரில்மு.இளங்கோவன், பொறியாளர் கருணாகரன்குவைத் தேசியக் காட்சியகத்தின் வாயிலில் மு.இளங்கோவன்குவைத் தேசியக் காட்சியகம்பொறியாளர் கருணாகரன், மு.இளங்கோவன்குவைத்தின் அழகிய சாலைகளும் கட்டடங்களும்
குவைத் கடற்கரையில் மு.இளங்கோவன் குவைத் கடற்கரையில் மு.இளங்கோவன்(வேறொரு காட்சி)குவைத் கடற்காட்சி(சரவணபவன் உணவகத்தின் அடுக்கிலிருந்து எடுத்தது)