நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பேராசிரியர் பெ. மாதையன்


பேராசிரியர் பெ.மாதையன் 

தமிழகத்துப் பல்கலைக்கழகங்களில் தகுதியான கல்வியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அறிஞர்கள் அடிக்கடி நினைவூட்டி வருகின்றனர். கல்வியார்வமும், தொடர் உழைப்பும், பெரும் புலமையும் கொண்டவர்கள் சரிவரப் போற்றப்படாமையால் தமிழகத்தின் ஆராய்ச்சிப் புலமும், கல்விப் புலமும் வனப்பிழந்து நிற்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று தொடர்ந்து ஆராய்ச்சித் துறையில் பங்களிப்பை நல்கிவரும் பேராசிரியர்களுள் புலமையாலும் உழைப்பாலும் அனைவராலும் போற்றக்கூடியவராக விளங்குபவர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் ஆவார். 

சற்றொப்ப அரை நூற்றாண்டுகளாகச் சங்க இலக்கிய ஆய்வுகள், அகராதியியல் ஆய்வுகள், இலக்கண ஆய்வுகள் என்று ஒரே சிந்தனையில் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் பெ. மாதையன் அவர்களின் ஆராய்ச்சி நுட்பத்தை உள்வாங்கிய கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்டவர்களின் பாராட்டைப் பெற்றதுடன் அவர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் இவர் தமிழ் ஆய்வுப்பரப்பில் வலம் வருகின்றார். மொழியியல் அறிஞர் பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழாய்வுலகிற்குக் கிடைத்தவர் பேராசிரியர் பெ.மாதையன் ஆவார். செயல்திறமும் பழகுதற்கு இனிய பண்பும் கொண்ட பேராசிரியர் பெ. மாதையன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

பேராசிரியர் பெ. மாதையன் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் திருவாளர் கு.பெருமாள் கவுண்டர், நல்லதங்காள் ஆகியோருக்கு மகனாக 15. 01. 1952 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை மேட்டூர் பொது சன சேவா சங்கத் தொடக்கப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை அரசு தொடக்கப் பள்ளியிலும் பயின்றவர்.

சேலம் அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பும் (1970), தமிழ் இளங்கலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலையும்,  சென்னைப் பல்கலைக்கழகத்தில் (1977-80) முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணியைத் தொடங்கிய (1982-87) முனைவர் பெ. மாதையன் அவர்கள் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களைத் தமிழுலகிற்குத் தந்துள்ளார்.

பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் பதிப்புத்துறைப் பொறுப்பாளர், பதிவாளர், தேர்வு நெறியாளர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பப் பணியாற்றியவர். இவரின் மேற்பார்வையில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் முனைவர்பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபத்தாறுக்கும் மேற்பட்ட இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு கல்விக்குழுக்களில் அறிவுரைஞராகவும், புறநிலைத் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு அறக்கட்டளைப் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். பல்வேறு கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்து பணிபுரிந்துள்ளார்.

பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாகவும், பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் வழியாகவும் பல்வேறு ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு தமிழாராய்ச்சித்துறைக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மர இனப் பெயர்த்தொகுதி (இருதொகுதிகள்), சங்க இலக்கியச் சொல்லடைவு, சங்க இலக்கிய அகராதி, வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை உருவ உள்ளடக்க ஆய்வுகள், அகராதியியல், தமிழ் அகராதிகளில் பல்பொருள் ஒருசொல் பதிவமைப்பு, தமிழ் அகராதிகளில் சொற்பொருள்,  A Dictionary of Standardized Technical Terms of Computer Science (English-Tamil), அகராதியியல் கலைச்சொல் அகராதி, அகத்திணைக்கோட்பாடு, நற்றிணை - ஆய்வுப்பதிப்பு முதலியன இவர் ஆய்வுத்திட்டங்களின் வழியாக உருவாக்கிய நூல்களாகும். இவை தவிரப் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குப் பாட நூல்களையும் உருவாக்கித் தந்துள்ளார். தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்ட உருவாக்கக் குழுவிலும் இவர் பணியாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட பேரகராதித் திட்டத்தில் இப்பொழுது இணைந்து பணிபுரியும் பேராசிரியர் பெ. மாதையன் அவர்கள் பல்வேறு அகராதி உருவாக்கக் குழுக்களில் வல்லுநராக இருந்து கருத்துரை வழங்கியுள்ளார்.

சங்க கால இனக்குழுச் சமூகமும் அரசு உருவாக்கமும் சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பெண்டிர் காதல் கற்பு, தமிழில் வினையெச்சங்கள் வரலாற்றாய்வு, தமிழ்ச்செவ்வியல் படைப்புகளில் கவிதையியல் சமுதாயவியல் நோக்கு, தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள், அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும், சங்க இலக்கியத்தில் குடும்பம், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் காலமும் கருத்தும், தமிழாய்வு, பெருஞ்சொல்லகராதி, அகராதியில் கலைச்சொல்லகராதி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். 

பாவலரேறு ச. பாலசுந்தரனார் அவர்களின் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை(மூன்றுதொகுதிகள்) ஆகிய நூல்களைப் பதிப்பித்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வழியாக வெளியிட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.


பேராசிரியர் பெ.மாதையன் அவர்களின் ஆராய்ச்சி நூல்கள் பல பரிசில்களைப் பெற்றுள்ளன. இவை ஆய்வுலகிற்குப் பெருங்கொடையாக விளங்குகின்றன. தொடர்ந்து தமிழாய்வுத்துறையில் ஈடுபட்டு நூல்களை வெளியிட்டுவரும் பேராசிரியர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்பது நம் அவா!.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

அதிவீரராமபாண்டியனார் நூல்களை ஆராய்ந்த பேராசிரியர் பெ. இலக்குமிநாராயணன்

முனைவர் பெ.இலக்குமிநாராயணன் அவர்கள்

இன்று (26.01.2014) காலை பேராசிரியர் பெ.இலக்குமிநாராயணன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பேராசிரியர் தங்கியுள்ள புதுச்சேரி இராகவேந்திரா நகர் இல்லத்திற்குச் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டேன். முன்பே ஓரிருமுறை சந்தித்த நினைவுகளைப் பேராசிரியர் அவர்கள் சொல்லி வரவேற்றார். சென்ற பணியை முடித்துகொண்டு, பேராசிரியரின் தமிழ் வாழ்க்கையை அறிய விரும்பினேன். உரையாடலின் ஊடே பேராசிரியர் தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துரைத்த வரிகளும் விளக்கங்களும் எனக்குப் பெருமகிழ்வைத் தந்தன. 

தொல்காப்பியத்தை நுட்பமாகக் கற்றுள்ள பேராசிரியரின் புலமையை எண்ணியெண்ணி மகிழ்ந்தேன். "மக்கள் தேவர் நரகர்" என்ற சொற்களுக்கு அளித்த விளக்கம் மணிக்கணக்கில் நீண்டது. “உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்” என்று குறுந்தொகையிலிருந்து(283) காட்டிய வரிகளும்,  “நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே” என்று புறநானூற்றிலிருந்து(176) காட்டிய வரிகளும் விளக்கங்களும் வாழ்வில் என்றும் நினைவில் நிற்கும் விளக்கங்களாகும்.


பேராசிரியர் பெ.இலக்குமிநாராயணன் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தேரிப்பட்டு என்ற சிற்றூரில் 21.08.1952 இல் பிறந்தவர். பெற்றோர்  இல.பெருமாள், அமிர்தவள்ளி என்ற பார்வதி ஆவர். காரணை பெருச்சானூரில் உயர்நிலைக்கல்வியை முடித்து, விழுப்புரம் அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடித்தவர். இளங்கலை, முதுகலை, முனைவர்பட்டம், கல்வியியல் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்கள். மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், பேராசிரியர் வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். பேராசிரியர் இலக்குமிநாராயணன் அவர்கள் அதிவீரராமபாண்டியனார் நூல்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, சென்னை வைணவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் தமிழ்ப்பணி செய்தவர். வைணவக் கல்லூரியின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட தமிழ்ப்பேரகராதியின் பதிப்புப்பணியிலும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். தமிழ் ஆங்கிலம் இருமொழியிலும் உரையாற்றும் ஆற்றலுடையவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களில் நல்ல பயிற்சியுடைய பெருமகனார் இவர். தொல்காப்பிய நூற்பாக்களுக்குச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் இவர்தம் தமிழ்ப்புலமை அறிந்து வியப்புற்றேன். தமிழ் நினைவில் எழுதுவதிலும், படிப்பதிலும், பேசுவதிலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்.

திங்கள், 6 ஜனவரி, 2014

சென்னையில் மலேசிய எழுத்தாளர் அருள் க. ஆறுமுகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா


மலேசிய எழுத்தாளர் அருள் க. ஆறுமுகம் அவர்களின் மணக்கும் சேவையும் மனிதநேயமும் என்னும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் 07.01.2014 இல் நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் மாண்பமை நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, முனைவர் ஔவை. நடராசன், முனைவர் க. ப. அறவாணன், ஏ. எக்சு. அலெக்சாண்டர், நெல்லை. இராமச்சந்திரன், பேராசிரியர் மு. பி. பாலசுப்பிரமணியம், அரிமா. வைரசேகர், அருள். க. ஆறுமுகம், உழைப்புத்தேனீ இரா.மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

இடம்: பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர்,சென்னை

நாள்: 07.01.2014, மாலை 6 மணிஞாயிறு, 5 ஜனவரி, 2014

சென்னையில் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம்


மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூா், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம் சென்னை,  எத்திராசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. தமிழ்க் கணினி, தமிழ் இணையம் குறித்து    அறிய விரும்பும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

  நாள் : 06.01.2014                            நேரம் : முற்பகல் 10.30 மணி

இடம் : எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை    
 
தொடக்க விழா - நிகழ்ச்சி நிரல்

நேரம் : முற்பகல் 10.30 முதல் 11.55 வரை.

தமிழ்த் தாய் வாழ்த்து.

வரவேற்புரை:    முனைவா் கா.மு.சேகா், தமிழ் வளா்ச்சி இயக்குநா், சென்னை.

கருத்தரங்க விளக்கவுரை:    முனைவா் மூ.இராசாராம்...,அவா்கள், அரசுச் செயலாளா்தமிழ் வளா்ச்சி  மற்றும் செய்தித்துறை.                                                 
கருத்தரங்கினைத் தொடங்கி வைத்துத் தலைமையேற்று விழாப்பேருரை:  
 
மாண்புமிகு கே.சி.வீரமணி அவா்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்.

சிறப்புரை :   திரு.தா.கி.இராமச்சந்திரன் ..., அரசுச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறைசென்னை

கருத்துரை  :   
திரு. அதுல் ஆனந்த் ..., அவா்கள்  மேலாண்மை இயக்குநர்தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), சென்னை

முனைவா் கோ.விசயராகவன், இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முனைவா் .அருள்இயக்குநர், மொழி பெயா்ப்புப் பிரிவு,    தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை,   சென்னை.

நன்றியுரை  : முனைவர் .பசும்பொன்,  தனி அலுவலா்(பொஉலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.

கருத்தரங்க அமா்வுகள் தொடக்கம்
முதல் அமா்வு : முற்பகல் 11.55 முதல் 1.15 வரை

தலைமை     :   .திரு.வே.மா.முரளிதரன், நிருவாகக்குழுத் தலைவர், எத்திராஜ் மகளிர் கல்லூரிமற்றும் முதன்மைச் செயலாக்க அதிகாரி, குளோபல், பகவான்                  சைபா்டெக் குழு, சென்னை.

கட்டுரையாளா்கள் :

1.கணினித் தமிழ் வளா்ச்சி இன்றைய நிலை - பேரா..தெய்வசுந்தரம் சென்னை
2.கணினித் தமிழ் ஆய்வும் இணையப் பயன்பாடும் - பேரா.மா.கணேசன், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.

பிற்பகல் 1.15 முதல் 2.00 வரை உணவு இடைவேளை

இரண்டாம் அமா்வு: பிற்பகல்: 2.00 முதல் 4.00 வரை

தலைமை : பேரா..தெய்வசுந்தரம், சென்னை.

கட்டுரையாளா்கள்
1.தமிழில் பேச்சுத் தொழில்நுட்பம் - பேரா...ராமகிருட்டிணன் , இந்திய அறிவியல் கழகம், பெங்களுரு.
2.இன்றைய பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள்கள் - திரு.இல.சுந்தரம்,   இராமசாமி நினைவுப் பல்கலைக் கழகம், சென்னை.
3.தமிழ் இணையம் இனி அனைவருக்கும்பேரா.கிருட்டிணமூா்த்தி,   அண்ணா பல்கலைக் கழகம் (ஓய்வு), சென்னை
4.பன்மொழி எழுத்துக்களுக்கான மாற்று விசைப் பலகைதிரு.தி.வாசுதேவன்சா்மா சொலியூசன்ஸ் அண்ட் புராடக்ஸ், புதுக்கோட்டை.
5.தமிழ் அறிதியியல் – (Tamil informatics) திரு.நாக.இளங்கோவன், அறிவியல் வல்லுநர், சென்னை.

மூன்றாம் அமா்வு: பிற்பகல் 4.00 முதல் 5.00 வரை

தலைமை     :   திரு.மாஃபா.. பாண்டியராசன், நிறுவனா், மனிதவள மேம்பாட்டு அமைப்புசட்டமன்ற உறுப்பினா், விருதுநகா்.

கட்டுரையாளா்கள் :

1.தமிழ் இணையம் வளா்ச்சியும் வாய்ப்பும்- பேரா.மு.இளங்கோவன், புதுச்சேரி.
2.இணையத் தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும்கவிஞா்.தங்க. காமராசு, சென்னை.
3.தமிழில் திறவூற்று மென்பொருள்கள் -திரு..செந்தில்குமரன், லினரோ, கேம்பிரிட்சு.

கலந்துரையாடல்  :   பங்கேற்பாளர்கள்.

நன்றியுரை    :  பேரா.சோதி குமாரவேல், முதல்வர் எத்திராசு மகளிர் கல்லூரி.


  நாட்டுப்பண்

கலைமாமணி புலவர் அரங்க.நடராசனார் அவர்கள்


புலவர் அரங்க.நடராசனார் அவர்கள்

புதுச்சேரியில் புகழ்வாழ்க்கை வாழ்ந்துவரும் புலவர்களுள் புலவர் அரங்க. நடராசனார் அவர்கள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தமிழை எழுதும்பொழுது ஐயம் ஏற்பட்டால் நீக்கிக்கொள்ள அனைவரும் முதலில் நாடுவது புலவர் அரங்க.நடராசனாரையே ஆகும். சிற்றிலக்கியம் பலவற்றைப் படைத்த படைப்பாளராகவும், உரையாசிரியராகவும் விளங்கும் அரங்க. நடராசனார் அவர்கள் புதுச்சேரியில் அம்பலத்தடையார் மடத்துத்தெரு 144 ஆம் எண்ணுள்ள வீட்டில் 1931 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் நாள் பிறந்தவர், பெற்றோர் அரங்கநாதன்-தையல்நாயகி ஆவர்.

புலவர் அவர்கள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சுமொழிகளைக் கற்ற பெருமைக்குரியவர். 10.11.1950 இல் தம் பதினெட்டாம் அகவையில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். 1974 இல் முதல்நிலைத் தமிழாசிரியராகவும், 1984 இல் தேர்வுநிலை முதல்நிலைத் தமிழாசிரியராகவும் பணி உயர்வுபெற்றவர்.

24.02.19955 இல் திருவாட்டி சகுந்தலை அம்மையார் அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்று இல்லற வாழ்வைத் தொடங்கினார். ஆண்மக்கள் மூவரும் பெண்மக்கள் இருவருமாக ஐந்து மக்கட் செல்வங்கள் இவர்களுக்கு வாய்த்தனர்.

புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருது(1987), கலைமாமணி விருது(2007) அந்தாதிச் செல்வர், சந்தப்பாமணி விருது, மொழிப்போர் மறவர் விருது, கவிமாமணி விருது, குறள்நெறிப் பாவலர் விருது, கண்ணியச் செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன.

அம்பகரத்தூர் அந்தாதி, புதுவைக் காமாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பெத்ரோ கனகராய முதலியார் பாமாலை, மரபும் பாடலும், அகரத்து அபிராமி அந்தாதி, திருக்குறள் அம்மானை, இருளும் ஒளியும், சிற்றிலக்கியங்கள் ஒரு கண்ணோட்டம், இலக்கிய மணிகள், சங்க இலக்கிய மணிகள் இதோ, பஞ்சுவிடுதூது உள்ளிட்ட நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்.

முனைவர் இரா. திருமுருகனாரின் சிந்துப்பாவியல், பேராசிரியர் தங்கப்பாவின் ஆந்தைப்பாட்டு, ஔவையாரின் பந்தன் அந்தாதிக்கு உரை வரைந்த பெருமைக்குரியவர்.


புதுச்சேரியில் நடைபெறும் இலக்கியக்கூட்டங்கள், தமிழ்க்காப்புப் போராட்டங்கள் அனைத்திலும் முன்னின்று தமிழுக்கு உழைப்பவர். அன்பு, எளிமை, அடக்கம், பணிவுடைமை உள்ளிட்ட நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கும் புலவர் அரங்க.நடராசனார் அவர்கள் நூற்றாண்டு விழாவினைக் கண்டு நிறைவாழ்வு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

சனி, 4 ஜனவரி, 2014

புதுச்சேரியில் செவாலியே இரகுநாத் மனே அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி!புதுச்சேரியின் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும், பிரான்சு தலைநகர் பாரிசில் தாள சுருதி நாட்டிய அமைப்பை நிறுவிக் கலைப்பணியாற்றி வருபவருமான செவாலியே இரகுநாத் மனே அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி இன்று புதுவையில் நடைபெறும் யோகாத் திருவிழாவின்பொழுது சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளது. கலை ஆர்வலர்கள் வந்து கண்டு களிக்கலாம்.

இடம்: காந்தித் திடல், புதுவைக் கடற்கரை, புதுச்சேரி


நாள்: 04.01.2014, காரி(சனி)க்கிழமை, நேரம்: இரவு: 8.30 முதல் 9 மணி வரை

வெள்ளி, 3 ஜனவரி, 2014

கருங்காலி /Karuṅkāli/ black·leg


கருங்காலி /Karukāli/ 

கருங்காலி என்ற சொல்லை அறிந்திருந்தாலும் அத்தகு மாந்தர்களைக் கண்டிருந்தாலும் அதற்கான மூலச்சொல்லை இதுநாள் வரை அறியாது இருந்தேன். கருங்காலி என்ற சொல் இரு பொருளில் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இன்று அறிந்தேன்..

கருங்காலி என்பது black·leg என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தொழிலாளி, முதலாளி குறித்த சொற்கள் ஆளப்பட்ட சூழலில் உழைக்கும் தொழிலாளப் பிரிவில் இருந்துகொண்டு முதலாளிக்கு உளவு சொல்பவனைக் கருங்காலி என்று குறிப்பிடும் போக்கு 1889-1890 கால கட்ட அளவில் மேனாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதற்கு முன்பு black-leg என்ற சொல்லுக்குத் திருடன் என்று பொருள் இருந்துள்ளது.

black-leg என்பதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் கருங்காலி(கரிய காலினன்) என்று மொழிபெயர்த்து ஒலித்ததால் அது கருங்காலி என்று இதுவரை தமிழில் அழைக்கப்பட்ட மரத்தை நோக்கி நம்மை நினைக்கவைத்துவிட்டது. தமிழகத்தில் தொழிலாளர் இயக்கம் வலுப்பெற்ற காலத்தில் கருங்காலி என்ற சொல் தமிழகத்தில் தொழிலாளர் துரோகியைக் குறிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.black-leg என்ற சொல் தரும் பொருளும் கருங்காலி என்ற மரத்தின் பொருளும் வேறு வேறு என்று நினைவிற்கொள்ள வேண்டும்.

கருங்காலி என்ற மரத்திற்குத் தாவரவியல் பெயர்  - Diospyros ebenum என்பதாகும்கருங்காலி என்பது உறுதியால் பெருமைபெறுகின்றது. கரிய காழினை உடையது என்பதால் கருங்காழி என்று நிலவிப் பின் கருங்காலியானதா என்று நினைக்க வேண்டியுள்ளது. காழ் என்பது ஈண்டு உறுதியைக் குறிக்கும். புறக்காழ் உடையது புல் எனவும் அகக்காழ் உடையது மரம் எனவும் தொல்காப்பியம் குறிப்பிடும். வைரம் பாய்ந்து பிற மரங்கள் காணப்படும். இக்கருங்காலி வைரமாகவே(உறுதி) இருப்பதால் கருங்காலி என்றுபெயர்பெற்றது போலும். தமிழிலிருந்து இச்சொல் பிறமொழிக்குச் சென்றிருக்க வாய்ப்பு உண்டு. வேர்ச்சொல்லாய்வறிஞர்கள் இதுகுறித்து விளக்கினால் உண்மை புலனாகும்.

கருங்காலி குறித்துத் தமிழில் பல பழமொழிகள் உள்ளன.
1. முட்டாளோடாடிய நட்பு கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.
2. கருங்காலிக் கட்டைக்கு வாய் நாணாக் கோடாலி இளவாழைத் தண்டுக்கு வாய் நாணுமா?
என்பன அவை.

பெருவாகை நொச்சி பெருங்குமிழே புங்கு
கருங்காலி நாயுருவி காயா - மருதுமகிழ்
கையாந்த கரையுடன் காட்டா மணக்காகும்
மெய்யார் துறவி தனக்கு”. என்பது ஒரு பழம்பாடல்.

கருங்காலி என்ற பெயரில் அணைக்கட்டு(வேலூர் மாவட்டம்), பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) அருகில் ஊர்ப்பெயர் உள்ளது. கருங்காலிப்பட்டு, வட கருங்காலிப்பாடி என்ற பெயரிலும் ஊர்ப்பெயர்கள் உள்ளதைத் திரு. பஞ்சவர்ணம் குறிப்பிடுவார். கருங்காலி என்ற ஊர்ப்பெயர் மகாராட்டிர மாநிலத்திலும் உள்ளது.

கருங்காலி மரங்களைக் கருங்காலியால் செய்த காம்புகளைக் கொண்ட கோடரிகளே வெட்டுவதால், கருங்காலி இரண்டகத்தின் (துரோகத்தின்) சின்னமானது போலும். “குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்புஎன்பதும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது

கருங்காலி மரத்தை இதுநாள்வரை நான் பார்க்கவில்லை. நேற்று(02.01.2014) ஐயா இரா. பஞ்சவர்ணம் அவர்களின் ஊரான பண்ணுருட்டியில் கருங்காலி மரத்தைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இது உறுதியான மரம் என்ற பொதுச்செய்தி மட்டும் எனக்குத் தெரியும். கருங்காலியில் உலக்கை செய்வார்கள் என்றும், கருங்காலியில் கோடரிக்காம்பு செய்வார்கள் எனவும் கோயில் கோபுரங்களில் இதனை நட்டுக் கலசத்தை அமைப்பார்கள் என்றும் அறிந்துள்ளேன். இரண்டகம் செய்வோரை (துரோகிகளை)க் கருங்காலி என்று அழைப்பது ஏன்? என்று வினவிப்பார்த்தபொழுது மேற்கண்ட விளக்கங்கள் கிடைத்தன.

உரையாடலில் பங்கேற்ற பேராசிரியர் .இலெ.தங்கப்பா, மொழிபெயர்ப்பு அறிஞர் பாலசுப்பிரமணியம் ஐயா, பொறிஞர் கோமகன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி.