நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 27 நவம்பர், 2008

புதுவை மழைக்காட்சி...


எங்கள் வீட்டில் தண்ணீர் தேங்கியுள்ள காட்சி

புதுவையில் கடும் மழை.மூன்று நாளாக மின்சாரம் இல்லை.தொலைபேசி சேவை குறைவு,புயல் காற்று.மரங்கள் பல வீழ்ந்தன.வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
மக்கள் இரவு முழுவதும் தண்ணீரில் நின்றனர்.பாம்பு,பூரான்,தேள் புறப்பட்டன.எங்கள் வீட்டைச்சுற்றித் தண்ணீர் தேங்கியது.இன்னும் அரைமணிநேரம் மழைபெய்திருந்தால்
மிகப்பெரிய அழிவு என் ஆய்வு முயற்சிக்கு நேர்ந்திருக்கும்.ஆம்.பல இலக்கம் மதிப்புள்ள நூல்கள்,ஆய்வுரைகள்,ஒலிநாடாக்கள்,சான்றிதழ்கள்,துணிமணிகள் பாழ்பட்டிருக்கும்.

இதழ்களுக்கு எழுதிய தொடர்கள் அனுப்ப முடியாதபடி கணிப்பொறி,இணையப்பணிகள் பாதிப்பு ஏற்பட்டன.கால்மணி நேரத்திற்கு முன் மின்சாரம் வந்தது.உடன் செய்திகளுடன் வந்துநிற்கிறேன்.

கல்லூரி விடுமுறை இல்லை.சென்று வந்தேன்.தேர்வுநாள்.தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் விடுமுறை.மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.இன்னும் மழைபெய்துகொண்டுதான் உள்ளது.


எங்கள் குடியிருப்புத் தெரு


எங்கள் வீட்டைச் சுற்றி நீர்சூழ்ந்த காட்சி...


எங்கள் பக்கத்து வீட்டுள் தண்ணீர் நுழைந்தகாட்சி


பக்கத்து வீட்டின் உள்ளே தண்ணீர்


வீட்டுப் பொருள்களைக் குவித்துப்போட்ட தண்ணீர்ப்பெருக்கு

செவ்வாய், 25 நவம்பர், 2008

புலவர் நாகி (நா.கிருட்டினசாமி)


புலவர் நாகி அவர்கள்

புதுச்சேரிப் புலவர்களுள் குறிப்பிடத் தகுந்த பெருமைக்கு உரியவர் புலவர் நாகி அவர்கள் ஆவார்.சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் ஐயா அவர்களின் வழியில் அரசியல் சார்பும் தமிழனப் பற்றும் சிலப்பதிகார ஈடுபாடும் கொண்ட இவரைப் பலவாண்டுகளாக யான் நன்கு அறிவேன்.புதுச்சேரியில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் இவருடன் அண்மைக் காலமாக நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.அதுபொழுது இவர்களின் தமிழ்ப்புலமையும் தமிழ்ப்பற்றும் அறிந்து உவந்தேன்.

சிலப்பதிகாரத்தை ஊர்தோறும் கொண்டு சேர்த்தும் தமிழக எல்லைச் சிக்கல்கள் உருவானபொழுது முன்னின்று தமிழகப் பகுதிகளை மீட்டெடுத்தும் வரலாற்றில் இடம்பெற்ற அறிஞர் சிலம்புச்செல்வர் ஐயா அவர்கள் மேல் எனக்கு அளவுக்கு அதிகமான ஈடுபாடு உண்டு.

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்(ம.கோ.இரா.ஆட்சியில்) எங்கள் ஊரான கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற இராசேந்திரசோழன் விழாவில்நம் சிலம்புச்செல்வர் உரையாற்றியமை இன்றும் என் மனக்கண்ணில் நிற்கின்றது.நகைச்சுவை கலந்து, அரசியலும் இலக்கியமும் அப்பெருமகனாரின் பேச்சில் அன்று வெளிப்பட்டதை எண்ணி எண்ணி மகிழும் நிலையில், அவர் வழியொட்டி வாழும் புலவர் நாகி அவர்கள் என்பதையறிந்து அகம் மகிழ்ந்தேன்.

சிலப்பதிகாரச் சுவையில் திளைப்பவர்களை என் அன்பிற்குரியவர்களாகவும் அவற்றைப் பரப்புபவர்களை என் உள்ளங் கவர்ந்தவர்களாகவும் நினைப்பவன் யான்.அவ்வகையில் சிலம்புச் செல்வரிடத்து அரசியல் தெளிவு பெற்றுத் தமிழ்வளர்ச்சிக்குப் பல்வேறு அல்லல்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட புலவர் பெருமகனாரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்து வைக்கிறேன்.

புலவர் நாகி அவர்களின் இயற்பெயர் நா.கிருட்டினசாமி என்பது ஆகும் இவர் 13.08.1934 இல் புதுச்சேரியில் உள்ள திலாசுப்பேட்டை என்னும் பகுதியில் பிறந்தவர்.பெற்றோர் திருவாளர்கள் நாராயணசாமி.அரங்கநாயகி ஆவர்.மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதப் படிப்பையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான், பி.லிட் என்னும் பட்டப் படிப்புகளையும் படித்துப் பட்டம் பெற்றவர்.

1961 முதல் 1994 வரை தமிழாசிரியராகப் புதுவை மாநிலத்தின் பல பள்ளிகளில் பணிபுரிந்தவர்.நன்மாணாக்கர் பலரை உருவாக்கியுள்ள புலவர் நாகி அவர்கள் சொற்பொழிவுகள் வாயிலாகவும் மேடை நாடகங்கள் வாயிலாகவும் நகர,சிற்றூர் மக்களிடம் அறியாமை-கல்லாமை,சாதி,சமயப் பிணக்குகள்,மூடநம்பிக்கைகள் பற்றி எடுத்துரைத்து மக்கள் பணிபுரிந்தவர்.

திலாசுப்பேட்டையில் தமிழ்க்கூடல் என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக இருந்து தனிச்சொற்பொழிவுகள்,வழக்காடு மன்றம்,பட்டிமன்றம், தொடர்ப் பொழிவுகள் நடைபெற வழிவகுத்தார்.வானொலி,தொலைக்காட்சி வழியாகவும் இலக்கியப் பணியாற்றி வருகிறார்.

மும்மணிகள் என்ற கையேட்டுப் படியை ஓராண்டு நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.இவர்தம் நாடக ஆற்றல் உணர்ந்த ஔவை. தி.க.சண்முகனார், ஏபி,நாகராசன், ஏ.கே.வேலன்,ஆகியோர் பாராட்டியுள்ளனர்.தி.க.சண்முகம் அவர்கள் இவர்தம் நாடகத்தைப் பாராட்டியதுடன் ஐவர் உரையைப் பரிசாக நல்கி மகிழ்சிக் கண்ணீர் விட்டார்.

புலவர் நாகி அவர்களின் நாடகங்களுள் 1.மறுமணம் 2.ஏன் இந்த நிலை,3.வீமனின் வெற்றி,4.உலகம் பொல்லாதது,5.சேரன்செங்குட்டுவன்,6.வீரபாண்டிய கட்டபொம்மன்,7.தன்வினை தன்னைச்சுடும்,8.மார்க்கண்டேயன்,9.பல்லவன் நந்திவர்மன்,10.பரஞ்சோதியார்,11.தாயகம் காப்போம் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தன.

பல்வேறு இதழ்களில் எழுதியுள்ள புலவர் நாகி அவர்கள் துலாக்கோல்,மன்னவனும் நீயோ, இருமனம்,ஒரு திருப்பம்,சிந்தனைச் சிதறல்கள்,எழுச்சிப் பத்து,ஊர்க்குருவி உலகைப் பார்க்கிறது,அன்பாரம்,புரவலரே வாழ்க,புதுவை நாகியின் எண்ணப்பூக்கள்,ஒருநாள் கூத்து உள்ளிட்டநூல்களையும் இயற்றியுள்ளார். இந்நூல்கள் நாடகம்,புதினம்,பாடல்கள் எனப் பல திறத்தன.


புலவர் நாகி நூல்


புலவர் நாகி நூல்


புலவர் நாகி நூல்


புலவர் நாகி நூல்


புலவர் நாகி நூல்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராகவும்,புதுவைச் சிவம் இலக்கியப்பேரவையின் செயலாளராகவும்,புதுவை அரசின் கல்விக்குழு உறுப்பினராகவும்,கலைமாமணி விருதளிப்புக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.கலைமாமணி(புதுவை அரசு),மொழிப்போர் மறவர்,சங்கரதாசு சுவாமிகள் விருது,முத்தமிழ்ச் செம்மல் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தனவாகும்.தமிழுக்குப் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்யப் புலவர் பெருமகனாரை வேண்டுகிறோம்.

புலவர் நாகி அவர்களின் தொடர்பு முகவரி :

புலவர் நாகி அவர்கள்
"சிலம்பகம்"
79,அய்யனார்கோயில் தெரு,
திலாசுப்பேட்டை(தமிழூர்),
புதுச்சேரி-605 009.

செல்பேசி : 9442031286
இல்லம் : 0413- 2276221

ஞாயிறு, 23 நவம்பர், 2008

அமெரிக்கப் பேராசிரியர் அ.கி.இராமானுசன் (16.03.1929 - 14.07.1993)


அ.கி.இராமானுசன் அவர்கள்

அமெரிக்கா உள்ளிட்ட மேனாடுகளில் இந்திய இலக்கியம் என்றால் சமற்கிருத இலக்கியம் எனவும்,இந்தியமொழி என்றால் சமற்கிருத மொழி எனவும் கருத்து நிலவிய ஒரு காலம் இருந்தது. அதனால் அவ்விலக்கியம், அம்மொழியை அறிவதில் அயலகத்தார் கவனம் செலுத்தினர். பலர் சமற்கிருத மொழியைக் கற்று முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்தனர். அதுபொழுது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, கன்னடத்தைக் கல்வி மொழியாகக் கொண்டு, ஆங்கில மொழியையும் இலக்கியங்களையும் நன்கு கற்றவர் அத்திப்பட்டு கிருட்டிணசாமி இராமானுசன் அவர்கள் ஆவார்.

அமெரிக்காவிற்குக் கல்வியின் பொருட்டும்,பணியின் பொருட்டும் சென்று தமிழை அமெரிக்கா உள்ளிட்ட பிற மொழியினருக்கு அறிமுகம் செய்து உலக அளவில் தமிழ் இலக்கியம் பரவக் காரணமாக இருந்தவர் இவர். இவரை ஏ.கே.இராமானுசன்(ஏ.கே.ஆர்) என அழைப்பது மரபு. இவர்தம் வாழ்வையும் தமிழ்ப்பணிகளையும் இங்கு நினைவுகூர்வோம்.

இராமானுசம் அவர்கள் மைசூரில் 16.03.1929 இல் பிறந்தவர்.இவர்தம் தாய் சேசம்மா அவர்கள் தமிழகத்தைச் சார்ந்த திருவரங்கத்தில் பிறந்தவர்.தந்தை கிருட்டிணசாமி அவர்கள் செங்கற்பட்டு மாவட்டம் அத்திப்பட்டு என்னும் ஊரினர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அப்பொழுது பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவரின் அழைப்பில் இராமானுசன் அவர்களின் தந்தையார் கிருட்டிணசாமி அவர்கள் மைசூரில் பேராசிரியர் பணியின்பொருட்டு சென்றவர். இதனால் மைசூரில் வாழ நேர்ந்தது. மைசூரில் இராமானுசம் அவர்கள் பிறந்ததால் கன்னட மொழியை நன்கு பேசவும் கற்கவுமான சூழல் இராமானுசத்திற்கு அமைந்தது.

மைசூர் பள்ளியில் இராமானுசம் அவர்கள் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். பிறகு இண்டர்மீடியட் என்னும் வகுப்பை யுவராசா கல்லூரியிலும், இளங்கலை (ஆனர்சு), முதுகலை (ஆங்கில இலக்கியம்) ஆகிய படிப்புகளை மைசூர் மகாராசா கல்லூரியிலும் பயின்றவர்.ஆங்கில விரிவுரையாளராகக் கொல்லம் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பணிபுரிந்தவர்(முனைவர் ஔவை .நடராசன் இவரிடம் பயின்றவர் என அறியமுடிகிறது). பெல்காம் லிங்கராசா கல்லூரியில் சிலகாலம் பேராசிரியர் பணிபுரிந்தார்.பரோடா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.


அ.கி.இராமானுசன் அவர்கள் இளமைத் தோற்றம்

இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கும்பொழுதே இவர் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் கவிதை எழுதியவர். இல்லசுடிரேட் வீக்கிலி உள்ளிட்ட ஏடுகளில் மாணவப்பருவத்தில் எழுதிய கவிதைகள் வெளிவதுள்ளன. River என்னும் தலைப்பில் இராமானுசன் அவர்கள் எழுதிய பாடல் வைகை ஆற்றைப் பற்றிய அழகியப் படப்பிடிப்பு.

இராமானுசன் அவர்களுடன் பிறந்தவர்கள் ஐவர். பேராசிரியர் சீனிவாசன், இராமானுசன், வேதா, சரோசா, இராசகோபால், வாசுதேவன் ஆகியோர் இவர்களின் குடும்ப உடன் பிறப்புகள். இராமானுசன் அவர்களின் துனைவியார் பெயர் முனைவர் மாலி டேனியல்சு என்பது ஆகும்.இவரும் அமெரிக்காவில் பேராசிரியராக உள்ளார். இராமானுசம் அவர்களுக்கு இரு மக்கட் செல்வங்கள். 1.கிருட்டிணா(கர்னல் பல்கலைக்கழகத்தின் இதழ் ஆசிரியர் பணி)
2.மகள் கிருத்திகா.ஓவியத்துறையில் ஈடுபாடுடையவர்.


அ.கி.இராமானுசன் அவர்கள் (கறுப்பு உடை)உடன்பிறப்புகளுடன்

1958 இல் பூனாவில் உள்ள தக்காணப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டயம் பெற்றவர். அதன் பிறகு 1959 இல் அமெரிக்கா சென்றார். புல்பிரைட் நிதிநல்கை வழியாக நிதியுதவி பெற்று அமெரிக்கா சென்றவர்.1963 இல் மொழியியலில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்(முனைவர் ச.அகத்தியலிங்கனார் முனைவர் பட்டம் பெற்றதும் இப்பல்கலைகழகத்தில்தான்).

1962 முதல் துணைப் பேராசிரியராகச் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவ்வகையில் கார்வார்டு, விசுகான்சின், மெக்சிகன், பெர்கிலி(கலிபோர்னியா) பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தமை குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.இவர் சிக்காகோவில் பணிபுரிந்த பொழுது மிகப் பெரிய பணிகளை அமைதியாகச் செய்துள்ளார். தென்னாசியவியல்துறையை வளர்த்தெடுத்துத் தமிழ் உள்ளிட்ட படிப்பு, ஆய்வுகள் வளரக் காரணமாக அமைந்தார். முனைவர் ச.அகத்தியலிங்கனார் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்கள் அ.கி. இராமானுசன் காலத்தில் வருகைதரு பேராசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டு தமிழுக்குச்சிறப்பு சேர்க்கப்பட்டது.

இராமானுசன் அவர்களின் இலக்கியப் பணியையும், இந்தியநாட்டிற்கு ஆற்றிவரும் பெருமை மிக்க செயல்களையும் அறிந்த இந்திய அரசு இவருக்கு 1983 இல் தாமரைத் திரு (பத்மாசிறீ) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. பல்வேறு இலக்கிய அமைப்புகள், நிறுவனங்கள் இவரின் இலக்கியப் பணியை மதித்துப் போற்றியுள்ளன.மெக் ஆர்தர் பரிசுபெற்றவர்(1983). 1988 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கான இராதாகிருட்டிணன் நினைவு விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1990 −இல் இராமானுசம் அவர்கள் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்விக்குழுவுக்குச் தேர்வு செய்யப்பட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'மாமன்னன் −இராசராசன் விருது' சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு வழங்கப்பட்ட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கான 'சாகித்ய அகாதமி விருது' 'தி கலெக்ஷன் ஆப் போயம்ஸ்' புத்தகத்திற்காக வழங்கப்பட்டது. (இந்த விருதைப் பெற்றுக் கொண்ட இராமானுசத்தின் மனைவி முனைவர் மாலி டேனியல்சு அவர்கள் பரிசுத்தொகை உரூவா இருபத்தைந்தாயிரத்தைச் சென்னையில் இயங்கிவரும் 'உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு', நூலக வளர்ச்சி நிதியாகக் கொடுத்துள்ளார். மேலும் சுமார் 2000 புத்தகங்களடங்கிய இராமானுசத்தின் வாழ்நாள் புத்தகத் தொகுப்புகளையும் இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். உரோசா முத்தையா நூலகம் பாதுகாக்கப்படவும் தமிழகத்தில் இயங்கவும் இராமானுசம் பாடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இராமானுசன் ஆங்கிலமொழியில் நல்ல பயிற்சியுடையவர். இயல்பிலேயே கவிதையுள்ளம் கொண்டவர். மேலும் மொழிபெயர்ப்பு, மொழியியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட துறைகளிலும் கவனம் செலுத்தியவர்.இந்திய இலக்கியங்கள், மொழியியல்,நாட்டுப்புறவியலை மேல் நாட்டவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை இவருக்கே உண்டு. இவர் கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் பல கவிதைகள் எழுதியுள்ளார்.

கவிதை எழுதும்பொழுது கவிதை உயிர்பெறும்வரை தொடர்ந்து முயற்சி செய்து எழுதுவார். கவிதைகளை மெருகேற்றி வழங்குவதைக் கடமையாகக் கொண்டவர். கணிப்பொறியில் அமர்ந்து தம் கவிதைப்படைப்புகளை உருவாக்குவதும் அவற்றைப் பொலிவுப்படுத்தவுமாக இருந்தவர். அவர் இறப்பிற்குப் பிறகு அவர் மூன்று குறுவட்டில் வைத்திருந்த 148 கவிதைகள் எட்டுப் பதிப்பாசிரியர்கள் வழியாக The collected poems of A.K.Ramanujan என்னும் பெயரில் வந்துள்ளது.

இவரின் ஆங்கிலக் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதைகளை ஆங்கிலத் தரத்தில் எழுதுவதில் இவர் வல்லவர்.இருபது இந்திய மொழிகளிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் பெயர்த்து வழங்கியுள்ளார். இவ்வகையில் இடம்பெற்ற 99 இந்தியக் கதைகளில் 10 கதைகள் தமிழ் நாட்டுப்புறக்கதைகள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.


இந்திய நாட்டுப்புறக்கதைகள் அடங்கிய நூல்

குறுந்தொகை என்ற சங்க இலக்கியப் பனுவலில் பதினைந்து பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கல்கத்தாவில் நடைபெற்ற எழுத்தாளர்கள் பயிலரங்கில் தொடக்கத்தில் வெளியிட்டார் (1965). பின்னர் 76 குறுந்தொகைப் பாடல்களை மொழிபெயர்த்து The Interior Landscape(அக உணர்வுக்காட்சிகள்) என்னும்பெயரில் 1967 இல் வெளியிட்டார். இதன் வழியாகத் தமிழ் இலக்கியச் செழுமை மேற்குலகத்தினருக்கு அறிமுகமாயின. சிக்காகோ பல்கலைக்கழக வளாகத்தில் தமிழில் உரையாடியபடி மேனாட்டார் உலா வருவதற்குக் காரணமாக ஏ.கே.இராமானுசன் விளங்கியவர்.


புகழ்பெற்ற அக உணர்வுக்காட்சிகள் நூல்

தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழ்நூல் செய்திகளை ஆங்கிலத்தில் பொருள் மட்டும் விளங்கும்படி மொழிபெயர்ப்பார்கள் ஆனால் தமிழ்க்கவிதை மரபு, ஆங்கிலக் கவிதை மரபு அறிந்து பெயர்ப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தமிழ்மரபை உள்வாங்கிக்கொண்டு ஆங்கில மரபைச் சரியாக உணர்த்தி, கற்பவர்கள் உள்ளத்தில் காட்சிகளைப் பதிய வைப்பதில் இராமானுசன் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவராகத் தெரிகின்றார். குறுந்தொகையில் இடம்பெறும் பல்வேறு உணர்வுகள் அப்படியே ஆங்கிலம் வழியாக காட்டப்பட்டுள்ளது."நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று" என்னும் பாடலை

Bigger than earth,certainly,
higher than the sky,
more unfathomable than the waters
is this love for this man

of the mountain slopes
where bees make rich honey
from the flowers of the kurinci
that has such black stalks

என்று மிகச்சிறப்பாகப் பெயர்த்துள்ளார்.இராமானுசன் அவர்கள் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்காமல் தமிழ்ப் புலவர் உணர்த்த நினைத்த செய்தி வெளிப்படும்படியாக மொழிபெயர்த்த இடங்கள் பலவாக உள்ளன.

தமிழின் முல்லை,குறிஞ்சி,மருத,நெய்தல்,பாலை நிலத்தின் தன்மைகள் அறிந்து திணை, துறை பாகுபாடு உணர்ந்து மொழிபெயர்ப்பை அமைத்துள்ளார்.தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று உணர்ந்து எழுதியுள்ளார்.தமிழ் இலக்கணத்தில் இடம்பெறும் உள்ளுறை, இறைச்சி பற்றிய புரிதல் இராமானுசத்திற்கு நன்கு இருந்துள்ளதால் அதன் நுட்பங்கள் உணர்ந்து பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஆற்றல் இராமானுசத்திற்கு இயல்பிலேயே இருந்துள்ளதால் அவரின் மொழிபெயர்ப்பில் ஆங்கில பா மரபுச் செழுமையைப் பார்க்கமுடிகிறது.

புறநானூற்றில் இடம்பெறும் "வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே" என்னும் பகுதியைப் பெயர்க்கும்பொழுது a carpenter who tosses off eight chariots in a day என்னும் இடத்தில் சொல்லைப் பொருத்தமாக ஆண்டுள்ளதை அறிஞர்கள் பாராட்டுவர் அதுபோல் 'சிற்றில் நற்றூண் பற்றி'என்னும் பாடலையும் மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் இராமானுசன் பெயர்த்துள்ளார்.Poems of Love and War என்னும் மொழிபெயர்ப்புத் தொகுதியும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களை நன்கு விளக்குவன.

அகமும் புறமும் என்ற நூல்

சங்க இலக்கியங்களை அதன் நடைச்செப்பம் குறையாமல் இவர் பெயர்த்தவர்.

ஆழ்வார்களின் பாடல்களையும் ஆங்கிலத்தில் Hymns for the Drowning என்னும் பெயரில் மிகச்சிறப்பாகப் பெயர்த்துள்ளார்.


ஆழ்வார் பாடல்கள் குறித்த நூல்

இராமானுசன் அவர்கள் தமிழ்மரபு அறியாமல் சில இடங்களில் பொருள்கொண்டு தவறான மொழிபெயர்ப்பு வழங்கியுள்ளதையும் அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. "முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்' என்னும் குறுந்தொகைப் பாடலை மொழிபெயர்த்தபொழுது (Shall I charge like a bull,against this sleepy town... kur.28) என்ற இடத்தில் முட்டுதல் மாடுமுட்டுதல் எனும் பொருளில் ஆண்டுள்ளார். இவ்வாறு இல்லாமல் தலையால் முட்டிக்கொள்வது என்று வருதல் வேண்டும்.

கன்னடமொழியின் புகழ்பெற்ற நூலான அனந்தமூர்த்தியின் சமசுகாரா புதினத்தை ஆங்கிலத் தரத்தில் இராமானுசன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இந்திய நாட்டுபுறவியல், செவ்விலக்கியம் பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.300 இராமாயணம் என்னும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.எழுத்து,வாய்மொழி இலக்கியங்கள் வழியாகக் கதை வேறுபாடுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்திய வாய்மொழி மரபு,எழுத்து மரபுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் வெளிநாட்டினருக்கு எடுத்துரைத்தவர்.

புறநானூற்றில் உள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தொடர் ஆங்கிலம் வழியாக அயல்நாட்டில் பரவ இவர்தம் மொழிபெயர்ப்பு உதவியது.அதுபோல் பக்தி இலக்கியங்கள் குறிப்பாக முருகன் பற்றிய செய்திகள் இவரால் நன்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிவனைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.

இராமானுசன் அவர்கள் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள நூல்களில் பின்னுரையாக எழுதியுள்ள கட்டுரைகள் மிகச்சிறந்த ஆய்வுரையாக இருந்து தமிழ் இலக்கியம் பற்றிய புரிதலை ஆங்கிலேயர்களுக்கு மிகச்சிறப்பாக வழங்கியுள்ளது. அவ்வகையில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் சார்ந்து இவர் எழுதியுள்ள ஆய்வுரை போற்றிப்பாதுகாக்கத்தக்கன.

பணி ஓய்விற்குப் பிறகு தமிழ்ப் பணிகளில் ஈடுபட நினைத்திருந்த இராமானுசன் அவர்களுக்குக் கால் வலி ஏற்பட்டது. முதுகு எலும்பில் சிறுகட்டி உருவாகியிருந்தது, பின்னர் அறியப்பட்டது. அறுவைப் பண்டுவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். மயக்க மருந்து கொடுத்த சிறிதுநேரத்தில் மருத்துவப் பயனில்லாமல் 64 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

இந்திய இலக்கியப் போக்குகள், மக்கள் சிந்தனை, வாய்மொழி மரபுகள், சமூக மொழியியல், மானுடவியல் செய்திகள், செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் யாவும் இராமானுசம் அவர்களால் ஆங்கிலமொழி வழி உலகின் பார்வைக்குச் சென்றுள்ளன. அதுபோல் தமிழ் மொழி, இலக்ககியம் பற்றிய உயர்வான பார்வை மேல்நாட்டாருக்கு ஏற்பட இராமானுசன் அவர்களின் படைப்புகள், பணிகள் வழிகோலின. தமிழ் இலக்கியங்கள் உலகில் பரவக் காரணமான அ.கி.இராமானுசன் அவர்களைத் தமிழர்கள் என்றும் நன்றியுடன் போற்றுவர்.

அ.கி.இராமானுசன் அவர்களின் படைப்புகளில் சில :


சிவன் குறித்த நூல்

1.The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology, 1967
2.Speaking of Siva, 1973
3.The Literatures of India. Edited with Edwin Gerow. Chicago: University of Chicago Press, 1974
4.Hymns for the Drowning, 1981
5.A Flowering Tree and Other Oral Tales from India
6.Poems of Love and War. New York: Columbia University Press, 1985
7.Folktales from India, Oral Tales from Twenty Indian Languages, 1991
8."Is There an Indian Way of Thinking?" in India Through Hindu Categories, edited by McKim Marriot, 1990
9. Hokkulalli Huvilla, No Lotus in the Navel. Dharwar, 1969
10.Relations. London, New York: Oxford University Press, 1971
11.Selected Poems. Delhi: Oxford University Press, 1976
12.Samskara. (translation of U R Ananthamurthy's novel) Delhi: Oxford University Press, 1976
13.Mattu Itara Padyagalu and Other Poems. Dharwar, 1977
14.Second Sight. New York: Oxford University Press, 1986

நனி நன்றி

தமிழ் ஓசை களஞ்சியம்,சென்னை,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 9, 23.11.08

முனைவர் பொற்கோ
முனைவர் நா.கண்ணன்(கொரியா)
நா.கணேசன்,நாசா,அமெரிக்கா
பேராசிரியர் அ.கி.சீனிவாசன்(பேராசிரியரின் தமயனார்)
பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி
எம்.கண்ணன்
பிரஞ்சு நிறுவன நூலகம்(FIP)
ஆண்டோ பீட்டர்(கணித்தமிழ்ச்சங்கம்)
விக்கிபீடியா

சனி, 22 நவம்பர், 2008

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்

சேர மன்னர்களை இரு பிரிவினராகக் கொள்ள இடம் உள்ளதை அறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்(பக்.8). அவை ஒரு சாரார் உதியன் மரபினர் எனவும் மற்றொரு சாரார் இரும்பொறை மரபினர் எனவும் அழைக்கப்படுவதைக் குறிப்பிடுவார். உதியன் மரபினர் தம்பெயரில் குட்டுவன் என்ற பெயரை இணைத்து வழங்குவதையும் இரும்பொறை மரபில் அம் மரபைக் காணமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரநாட்டின் அரசனாக "மாந்தை" என்னும் ஊரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவன்.இவனுக்கு இரு மனைவியர் இருந்துள்ளனர். பட்டத்து அரசியாக விளங்கியவள் வேளாவிக் கோமான் பதுமன்தேவி.இவர்களுக்குக் களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் என்ற மகனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற மகனும் இருந்தனர்.

பிறிதொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும் (பெயர் அறியமுடியவில்லை) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் மகனாகக் கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழு குட்டுவன் என்னும் மகனும் இருந்தான்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன்மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழுகுட்டுவன் என்பவனைச் செங்குட்டுவனாகச் (கண்ணகிக்குக் கல் எடுத்தவன்) சிலர் கருதுவர்.ஆனால் சிலப்பதிகாரச் செங்குட்டுவனின் தந்தை சேரலாதன் ஆவான். தாய் ஞாயிற்றுச் சோழன் எனப்படும் சோழன் நல்லுருத்திரனின் மகள் நற்சோணை ஆவாள். செங்குட்டுவனின் தாய் நற்சோணை பட்டத்தரசியாவாள்.

வெல்கெழு குட்டுவன் சேரநாட்டை ஆளும்பொழுது (கி.மு.250- கி.மு.175) பிற பகுதிகளைக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் சேரன் செங்குட்டுவன் சேரநாட்டை ஆட்சி செய்தபொழுது (கி.பி.50- கி,பி.125) பிறர் யாரும் சேரநாட்டை ஆண்டதற்கான குறிப்புகள் இல்லை.

எனவே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுக்கும் காலத்தால் பிந்தியவன் சேரலாதன் மகன் செங்குட்டுவன் (சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அரசன்) என்பதை அறிதல் வேண்டும்.

கடல் பிறக்கோட்டிய வெல்கெழுக்குட்டுவன் காலத்திலும் கடற்கொள்ளையர்கள் தொல்லை தந்துள்ளனர்.

கடற்கொள்ளைத் தொழில் செய்த கடம்பர்களின் மூலத் தாயகம் கொண்கானக்கரை எனப் பிற்கால வரலாற்று நூல்கள் சுட்டுகின்றன.ஆனால் கடம்பர்களின் பண்டையத்தளம் கடற்கரையில் இல்லாது கடலின் உள்ளே தீவில் இருந்திருக்க வேண்டும் என அறிஞர் கா.அப்பாத்துரையார் கருதுகிறார்(தென்னாட்டுப் போர்க்களங்கள்,ப.100).இத் தீவைக் கிரேக்கர்கள் "லெயூகே" அதாவது வெள்ளைத்தீவு என அழைத்தனர்.அது மங்களூரை அடுத்த தூவக்கல் என்ற தீவு என ஆய்வாளர்கள் கருதுவதையும் கா.அப்பாத்துரையார் தம் நூலில் குறிக்கின்றார்.

"லெயூகே" என்ற கிரேக்கச் சொல்லும் "தூவக்கல்" என்னும் பழந்தமிழ்ச் சொல்லும் இரண்டும்
வெள்ளைத் தீவைக் குறிப்பதாகும்.வெள்ளைத்தீவு எது?. தேடிப் பார்ப்போம்.

(ஒன்று மட்டும் விளங்குகிறது.தமிழக வரலாற்றுச் சான்றுகள் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் கேரள,கருநாடக,ஆந்திரப் பகுதிகளில் மிகுந்து கிடக்கின்றன.அவை கல்வெட்டுகள் ஊர்ப்பெயர்கள்,நம்பிக்கைகள்,இறைவழிபாடு எனப் பெருகிக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ள மலையாள, கன்னட, துளுத்தேசங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.)

வெள்ளி, 21 நவம்பர், 2008

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?

வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன.தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா,கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும்.இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.

இவற்றுள் இரண்டாம் பத்து என்னும் பகுதியைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.இப்புலவரைச் சிறப்பிக்க நினைத்த மன்னன் இமயவரம்பன் உம்பற்காட்டுப் பகுதியில்(மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்குப் பகுதி) ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டு வருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுவரை பகுதியும் வழங்கினான் என அறிய முடிகிறது.

கடம்பர் என்ற கடற்கொள்ளையரை அழித்து வெற்றியுடன் மீண்ட இமயவரம்பன் செடுஞ்சேர லாதனை அவன் நாட்டு மக்கள் பாராட்டி வரவேற்றனர்.அக்காட்சியைக் கண்ட புலவர் பெருமா னுக்குக், கடலுள் மாமர வடிவில் இருந்த சூரபத்மனை அழித்து மீண்ட முருகன் நினைவுக்கு வருகின்றான்.அம் முருகனாகவே புலவர் இமயவரம்பனை எண்ணிப் பாடியுள்ளார்.

கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக்(கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

சேரநாட்டுப் படை மறவர்கள் கடம்பர்களின் கலத்தையும் நாட்டையும் பாழ்படுத்தினர்.சேரர் படையுடன் போரில் வெற்றிபெற முடியாது என உணர்ந்த கடம்பர்கள் தங்கள் காவல் மரத்தை மட்டுமாவது காத்துக்கொள்ள நினைத்தனர்.அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை அழிக்கும் முன் கடம்பர்களையும் சேரர் படை அழித்தது.கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி,வீழ்ந்த கடம்பமரதைக் குடைந்து முரசாக்கி மறவர்கள் முழக்கம் செய்தனர்.அம் முழக்கொலி கேட்ட சேரநாட்டுப் படை மறவர்களும் மக்களும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். இதனைக் கண்ட குமட்டூர்க் கண்ணனார்,

"வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,
வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல்
ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு...

"பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்,
போர்அடு தானைச் சேர லாத!" (பதிற்றுப்பத்து 2: 1-16)

எனவும்,

"துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை" (பதிற்றுப்பத்து 17: 4-5)

எனவும்

"இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் " (பதிற்றுப்பத்து 20 :2-5)

எனவும் பாடியுள்ளார்.

அகநானூற்றுப் புலவர் மாமூலனார் அவர்கள்(கி.மு.மூன்றாம் நூற்றாண்டு.பார்க்க: பே.க.வேலாயுதனாரின் சங்ககால மன்னர் வரிசை,1997)

"சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன"(அகம். 347)

(பொருள் :பெரும் படையுடையவன் சேரலாதன்.அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான்.அம் முரசு முழங்கியது போல)

எனவும்

"வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து" (அகம். 127 )

(பொருள்: வெற்றி தரும் முரசத்தையுடையவன் சேரலாதன்.அவன் கடலில் பகைவரை வென்று அவரது காவல் மரத்தை வெட்டினான்)எனவும் பாராட்டியுள்ளனர்.

பண்டு கிரேக்க,உரோமை நாடுகளுக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்கள்,மிளகு முதலிய பொருள்களும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் மேலைக்கடற்கரை வழிச் சென்றமையும் அந்நாட்டின் செல்வம்,பொருள்கள் தமிழகம் வந்ததையும் வரலாற்றால் அறிகிறோம்.அவற்றைக் கடம்பர்கள் கொள்ளையடித்ததையும் ஒருவாறு உய்த்துணர முடிகிறது.

இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும்.இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை.கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது.தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் (17-11-1927 -17.01.2009)


கமில் சுவலபில்

இருபதாம் நூற்றாண்டு தமிழ் மொழிக்கு ஆக்கமான நூற்றாண்டாக அமைந்தது. தமிழ்க் கவிதைத்துறையும் உரைநடைத் துறையும் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது. தகவல் தொழில் நுட்பங்கள் தமிழ் மொழிக்கு மிகப்பெரிய ஆக்கம் நல்கின. அயல்நாட்டு அறிஞர்கள் பலர் தமிழ்மொழி, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டுத் தமிழை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றனர். எமனோ, பர்ரோ, மார், கமில் சுவலபில், சுசுமு ஓனோ, குரோ, அலெக்சாண்டர் துபியான்சுகி, உருதின், சாங்க்சிலின், தக்காசி உள்ளிட்டவர்கள் தமிழ்மொழியை, தமிழ் இலக்கியங்களைப் பிற மொழியினர்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஈழத்து மக்களின் புலம்பெயர் வாழ்க்கை வழியாகவும் தமிழர், தமிழ் பற்றிய செய்திகள் உலகம் முழுவதும் பரவின.

தமிழ் தமிழர் பற்றிப் பிறமொழியினருக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தவர்களில் செக்கோசுலேவியா நாட்டைச் சார்ந்த கமில் சுவலபில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கமில் சுவலபில் அவர்கள் பல மொழிகளை அறிந்த அறிஞர். தமிழ்மொழியை நன்கு படிக்கவும் எழுதவுமான ஆற்றல் பெற்றவர். தமிழ் அறிஞர்களுடன் இவர் பழகியதுடன் தமிழ்ப்பற்றுடைய உணர்வாளர்கள் பலருடன் பழகிய பெருமைக்கு உரியவர். தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியில், நாட்டுப்புறவியல், பக்தி இலக்கியம், புத்திலக்கியம் பாரதியார், பாரதிதாசன் பாடல்களில் நல்ல பயிற்சியுடையவர். இவர்தம் பாடல்களின் சிறப்பைப் பிற மொழியினருக்கு எடுத்துரைத்தவர். ஆங்கிலத்திலும் செக் மொழியிலும் மொழிபெயர்த்தவர். இவர் தம் வாழ்வியலை இங்கு நோக்குவோம்.

கமில் சுவலபில் அவர்கள் செக்கோசுலேவியா நாட்டில் உள்ள பிராகா(Prague) என்னும் மாநகரில் 17-11-1927 ஆம் ஆண்டில் பிறந்தவர்.தந்தை கமில் சுவலபில் தாயார் மரியம்மா. கமில் வக்ளாவ் சுவலபில்(Kamil Vaclav Zvelebil) என்பது இவர்தம் முழுப்பெயராகும்.(சுவலபில் என்பதற்கு To make everything better,to make everything more perfect:more beautiful என்பது பொருளாகும்.எனவே பின்னாளில் சைவசித்தாந்த நூற்பதிப்புகழக ஆட்சியர் வ.சுப்பையா பிள்ளை அவர்கள் நிரம்ப அழகியர் என்ற பெயரைக் கமில் சுவலபிலுக்குத் தமிழில் சூட்டினார்).

பிராகாவில் அமைந்துள்ள சார்லசு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் (1946-52). இந்தியவியல்,ஆங்கில இலக்கியம்,சமற்கிருதம்,தத்துவம் பயின்றவர் .சமற்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்(1952).பின்னர் திராவிட மொழியியலில் இரண்டாவது முனைவர் பட்டத்தையும் பெற்றவர்(1959). 1952 முதல் 1970 வரை செக்கோசுலேவியாவில் அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். கமில் சுவலபில் அவர்களுக்கு கிரேக்கம், இலத்தீன், செருமன், ஆங்கிலம், உருசியன், சமற்கிருதம், தமிழ் முதலிய மொழிகள் நன்கு தெரியும். மலையாளம், இந்தி, பிரஞ்சு,இத்தாலியன்,போலிசு உள்ளிட்ட மொழிகளையும் அறிவார்.

செக்நாட்டில் தூதுவரகத்தில் பணிபுரிந்த தமிழ் அன்பர் ஒருவர் வழியாக தமிழ் கற்கத் தொடங்கிய கமில் அவர்கள் வானொலி வழியாகவும் நூல்கள் வழியாகவும் தமிழ் படிக்கத் தொடங்கினார்.தமிழ் பற்றி பிரஞ்சுமொழியில் பியாரே மெய்லே (Perre Meile) என்பவர் எழுதிய Introduction an Tamoul என்ற நூல் வழியாகவும் தமிழ் அறிமுகம் கிடைத்தது. தென்னிந்தியாவிற்கு பலமுறை களப்பணி ஆய்வுக்காக வந்துள்ளவர். சென்னைக்கு இவர் வருகை தரும்பொழுது தமிழகத்து அறிஞர்கள் இவருக்கு வரவேற்பு நல்கியும் பாராட்டு வழங்கியும் பன்முறை ஊக்குவித்துப் போற்றியுள்ளனர்.


கமில் சுவலபில்

சென்னை மாநிலக்கல்லூரியில் சென்னைத் தமிழ்க்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 07.09.1962 இல் அறிஞர் மு.வ. தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிஞர்கள் பலர் கமில் சுவலபில் அவர்களைப் பாராட்டிப் பேசினர். மு.வ.கமில் பற்றி குறிப்பிடும்பொழுது "இவர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகின்ற போப்; நம்மிடையே வாழ்ந்து வருகின்ற கால்டுவெல், தமிழ்மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்டிருக்கிறார். நற்றிணை, புறநானூறு நன்கு அறிந்தவர். சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்து வருகிறார். கல்கியின் நாவல்களையும் மொழிபெயர்த்து வருகிறார். தானே தமிழ் கற்றவர். தமிழ் ஒலியே கேட்காத நாட்டிலிருந்துகொண்டே தமிழ் கற்றவர்." என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்(செந்தமிழ்ச்செல்வி 37: 1.பக்கம் 33).

முனைவர் கா.மீனாட்சிசுந்தரம், வில்லியம் வில்லட்சு உள்ளிட்டவர்களின் உரைக்குப் பிறகு அன்று அறிஞர் கமில் சுவலபில் உரையாற்றியுள்ளார். திருக்குறள், பாவேந்தர் பாடல்களை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றியுள்ளார். அவர் பேச்சில் 1958 இல் ஒரு முறை சென்னைக்கு வந்துள்ளதை அறியமுடிகிறது.மேலும் செக் மொழியில் குழந்தைகளுக்குத் தென்னிந்தியா பற்றி ஒரு நூல் எழுதியுள்ளதையும், கடந்த நான்காண்டுகளில் உருசியா, செக், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார்.

அதுபோல் 14.09.1962 இல் மறைமலையடிகள் நூல் நிலையத்தில் கமில் சுவலபில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை அவர்கள் கமில் சுவலபில் அவர்களுக்கு "நிரம்ப அழகிய கமிலர்" என்ற செந்தமிழ்ப் பெயரைச் சூட்டினார். பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மு.வ, மயிலை சீனி. வேங்கடசாமி உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கமில் கற்கவும் கற்பிக்கவும் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். அவ்வகையில் 1965-66 இல் அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பல்கலைக்கழகத்திலும், 1967-68 இல் செருமனி கெய்டல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1968 இல் சார்லசு பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றார்.1970 இல் பிரான்சில் வரகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். லெய்டன் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். நெதர்லாந்து யூட்ரிச் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1992 இல் தம் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இப்பொழுது பிரான்சு தலைநகரம் பாரிசுக்கு அருகில் ஒரு சிற்றூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். உடல்நலக்குறைவு ஏற்பட்டபொழுதும் எழுதுவதிலும் படிப்பதிலும் கவனம் செலுத்தியவர்.

1952 இல் நீனா (Dr. Nina Zvelebil) என்னும் அம்மையாரை மணந்துகொண்டு மூன்று மக்கள் செல்வங்களைப் பெற்றவர்.

கமில் சுவலபில் அவர்கள் தமிழ்மொழியை அறிஞர் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை அவர்கள் வழியாகவும் நன்கு அறிந்துள்ளார். இதன் நன்றி அறிகுறியாகத் தம் நூல் ஒன்றினை தம் ஆசிரியருக்குப் படையல் இட்டுள்ளமை இவரின் நன்றியுணர்வைக் காட்டுவதாகும். அதுபோல் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்களிடத்தும் கமில் சுவலபில் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு இருந்துள்ளது.

தமிழின் மிகப்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தை மொழிபெயர்க்கும் அளவிற்கு இவருக்குத் தமிழ்ப்புலமையும் ஆங்கிலப்புலமையும் இருந்துள்ளமை நமக்கு வியப்பளிக்கின்றது. தமிழ் நூல்கள் பலவற்றை ஆங்கிலத்திற்கும் செக்மொழிக்கும் பெயர்த்துள்ளார். கமில் சுவலபில் அவர்கள் தமிழ் இலக்கியம்,இலக்கணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதுடன் மொழியியல் நோக்கிலும் இம்மொழியையும் இலக்கியங்கள், இலக்கணங்கள், நாட்டுப்புறவியல் சார்ந்த செய்திகளையும் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த தொல்காப்பியம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய உரைவளத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

தமிழ்க்கடவுளான முருகனிடத்து இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.திருமுருகன் பற்றி இவர் எழுதியுள்ள ஆங்கில நூலில் முருகபெருமான் குறித்த அனைத்துச் செய்திகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சிவன், முருகன், வள்ளியை மணம் முடித்தல் தொடர்பான புராண, இதிகாச் செய்திகள் விளக்கப்பட்டுக் களப்பணிகள் வழியாகச் செய்திகள் சிறப்புடன் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் கமில் சுவலபில் அவர்கள் Smile of Murugan என்று பெயரிட்டுள்ளமை இவரின் முருக ஈடுபாட்டுக்கு மற்றொரு சான்றாகும்.அதுபோல் நடராசரின் ஆனந்த தாண்டவம் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.

தமிழ் யாப்புப் பற்றி அறிஞர் சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள் வழியாக ஈடுபாடு வரப்பெற்ற கமில் சுவலபில் தமிழ் யாப்புப் பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர்தம் யாப்பு குறித்த பல நூல்களை முனைவர் பொற்கோ அவர்கள் மதிப்பீடு செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்.கமில் சுவலபில் அவர்களுக்குத் தமிழ் யாப்புப் பற்றிய நல்ல புரிதல் உண்டு என அறஞர் பொற்கோ குறிப்பிடுவார். தமிழ்-சப்பானிய மொழி உறவு குறித்த கருத்தில் நல்ல கருத்து கமில் சுவலபில் அவர்களுக்கு இருந்துள்ளது.

அறிஞர் தமிழண்ணல் சப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கமில்சுவலபில் அவர்களைக் கண்டு பழக ஒரு கிழமை வாய்ப்புக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார். தமிழ் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கும் சமற்கிருத முதன்மை கமில் சுவலபில் அவர்களிடம் தொடக்கத்தில் தென்பட்டாலும் தமிழ் இலக்கணத் தையும், சங்க இலக்கியத்தையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் வரன்முறைப்படுத்தி ஆங்கிலம் வழியாக உலகிற்கு வெளிப்படுத்தியவர்களில் கமில் சுவலபில் குறிப்பிடத்தகுந்தவர் என்கிறார் தமிழண்ணல்.

அதுபோல் தமிழுக்கு அமைந்த செவ்வியல் பண்புகளைத் தொடக்கத்தில் சான்றுகள்வழி விளக்கியவரும் கமில் சுவலபில் அவர்களே எனக் கருதுகிறார். தமிழண்ணல் அவர்களிடம் மதுரையில் சங்க இலக்கியம் கற்ற தக்ககசி அவர்கள்(சப்பான்) கமில் சுவலபில் அவர்களிடம் சங்க இலக்கியம் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

நீலகிரிப்பகுதியில் பேசப்படும் இருளர் மொழி பற்றிய ஆய்வில் கமில் சுவலபில் அவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். இருளர் மொழியை மொழியியல் நோக்கில் ஆராய்து வெளிப்படுத்தியவர். கமில் சுவலபில் அவர்கள் கடுமையான உழைப்பாளி. படித்தல், எழுதுதல், ஆராய்தல், வெளியிடுதலில் கவனமுடன் செயல்பட்டவர். இவர்தம் நூல்கள் கட்டுரைகள் பல்லாயிரம் பக்கங்களில் வெளிவந்து தமிழின் சிறப்பை உலகிற்கு வெளிக்காட்டுவனவாகும். தமிழின் எல்லாத்துறை பற்றியும் மேலைநாட்டிற்கு அறிமுகம் செய்தவர் கமில் சுவலபில்.

திராவிட மொழியியல், சங்க இலக்கியம் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் எழுதியவர். தமிழ் வழக்குச்சொற்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

அறிஞர் வானமாமலை அவர்கள் தமிழில் எழுதிய நாட்டுப்புறவியல் சார்ந்த பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் செக்மொழியிலும் மொழிபெயர்த்துள்ளதாக அறியமுடிகிறது. குறிப்பாக முத்துப்பட்டன் கதை பற்றி வானமாமலை அவர்கள் சரசுவதி ஏட்டில் எழுதிய கட்டுரைகளைக் கண்ட கமில் சுவலபில் அவர்கள் அக்கதையை உலகிலேயே மிகச்சிறந்த கதைப்பாடல்களுள் இது ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதன காமராசன் கதை, மயில் இராவணன்கதை இரண்டையும் ஆங்கிலத்தில் பெயர்த்து பிற நாட்டினர்க்கு அறிமுகம் செய்துள்ளார்.1987 இல் வெளி வந்துள்ள இந்நூல் நம் நாட்டுப்புறக் கதைப்பாடல்களையும் இதிகாசங்கள், புராணங்களையும் நன்கு அறிமுகம் செய்யும் முன்னுரையைப் பெற்றுள்ளது.இருளர்மொழியில் வழங்கும் கதைப்பாடல்களையும் இக் கதையுடன் இணைத்து ஆராய்ந்துள்ளார். தமிழ் சமற்கிருத மொழிகளில் கிடைக்கும் விக்கிரமா தித்தியன் கதையையும் ஆய்வு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

பாரதியார் பாடல்களில் கமில் சுவலபில் அவர்களுக்கு நல்ல பயிற்சி இருந்தது.பாரதியார் பற்றி 1952 அளவில் மிகச்சிறந்த ஆய்வுகளை நிகழ்த்தி தரமான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிப் பாரதிப் புகழை உலகிற்கு உணர்த்தியவர்.'தமிழ் கல்சர்'என்னும் இதழில் பாரதி குறித்து பல கட்டுரைகளைக் கமில் சுவலபில் எழுதியுள்ளார்.பாரதி பாடல்கள் (bharathis Poems) என்னும் தலைப்பில் இவர் எழுதியுள்ள கட்டுரை பாரதியை நன்கு அறிமுகம் செய்கிறது.

புதிய ஆத்திசூடியையும் அதன் சிறப்புகளையும் கமில் மிகச்சிறப்பாகப் பாராட்டி எழுதியுள்ளார். பாப்பா பாட்டு என்னும் பாடலைக் கமில் ஆய்வுக்கு உட்படுத்தி, குழந்தைகளுக்குப் பாராதியார் சொன்ன அறிவுரைகளை நினைவுகூர்ந்து எழுதியுள்ளார்.பாப்பா பாட்டின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வழங்கியுள்ளார். 16 பாடல்களில் பாரதியார் 30 சமற்கிருதச் சொற்களை ஆண்டுள்ளார் எனக் கமில் சுவலபில் குறிப்பிட்டுள்ளார்.'வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே' என்று பாரதி பாடியுள்ள பாடலையும் திறனாய்வுக்கு உட்படுத்தியுள்ளார். பாரதியாரின் பாடல்களை அறிமுகம் செய்யும் கட்டுரையாகவும் திறனாயும் கட்டுரையாகவும் இது உள்ளது.

பாரதியாரின் இளமை வாழ்க்கையையும் கமில் சுவலபில் ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். பாரதியார் கால இந்திய நிலை, தமிழக நிலை ஆகியவற்றை அரசியல், சமூகப் பின்புலத்துடன் ஆராய்ந்து எழுதியுள்ளார். பாரதியாரின் கல்வி, காசி வாழ்க்கை, திருமணம், எட்டயபுர அரண்மனை வாழ்க்கை, விடுதலை உணர்வு, கல்வியில் சிறந்து விளங்கியமை யாவும் கமில் சுவலபில் அவர்களால் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

உ.வே.சாமிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் என் சரித்திரம் என்னும் நூலை கமில் சுவலில் அவர்கள் The Story of My Life என்னும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ள இந்நூல் வெளிநாட்டினருக்கு உ.வே.சா. அவர்களின் பணிகளை அறிவிக்கும் ஆவணமாக விளங்குகிறது.

திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஒலியியல் (Comparative Phonology), நீலகிரிப் பழங்குடி மக்கள் மொழி (இருளர் மொழி) உள்ளிட்ட நூல்கள் இவருக்கு நிலைத்த புகழைப் பெற்றுத் தந்தன.

சமற்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலிருந்து செக், ஆங்கிலம், செர்மனி, சுலோவக் மொழிகளுக்கு மொழிபெயர்ப்புப் பணிகள் வழியாக இலக்கியப் பணி செய்துள்ளார். நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இதுவரை 500 மேற்பட்ட படைப்புகளை வழங்கியவர். பல்வேறு அமைப்புகளில் இருந்து பணிசெய்துள்ளார். சாகித்திய அகாதெமியின் சிறப்பு கருத்துரையாளரகவும் இருந்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழியில் ஆய்வு இதழ் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகும் பிரான்சில் நூலாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். தமிழுக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு என்றும் தமிழர்களால் நினைவுகூரத்தக்கன. ஆராயாத் தக்கன.

கமில் சுவலபில் நூல்கள் சில :

1.Siddha Quest for Immortality Sexual, Alchemical and Medical Secrets of the Tamil Siddhas,the Poets of the Powers
2.Hippalos The conquest of the Indian Ocean
3.Comparative Dravidian Phonology,
4.Dravidian Linguistics: An Introduction
5.Tamil Literature, E.J. Brill, Leiden, 1975,
6.Companion Studies to the History of Tamil Literature,
7.The Smile of Murugan: On Tamil Literature of South India,
8.The Poets of the Powers: Magic, Freedom, and Renewal,
9.Literary Conventions in Akam Poetry
10.Two Tamil Folktales: The Story of King Matanakama, the Story of Peacock Ravana,
11.Lexicon of Tamil Literature,
12.Nilgiri areal studies,
13.Introducing Tamil literature,
14.Ananda-tandava of Siva-sadanrttamurti: The development of the concept of Atavallan-Kuttaperumanatikal in the South Indian textual and iconographic tradition,
15.Introduction to the Historical Grammar of the Tamil Language,
16.The Irulas of the Blue Mountains, Foreign & Comparative Studies
17.Tamulica et Dravidica: A Selection of Papers on Tamil and Dravidian Linguistics,
18.Classical Tamil Prosody An Introduction
19.The Story of My Life (2 volumes)
20. History of Tamil Literature
21.Tirumurugan
22.The Poets of Powers
23.Tamil Literature
24.Tolkappiyam - collatikaram
25.Tamil Trations on Subrahmannya Murugan


முருகன் பற்றிய கமில் நூல்


கமில் நூல்


கமில் நூல்


கமில் கட்டுரை


கமில் நூல்


உ.வே.சா வாழ்க்கை வரலாறு


கமில் நூல்


கமில் நூல்


கமில் நூல்


கமில் நூல்


கமில் நூல்

நனி நன்றி

தமிழ் ஓசை நாளேடு - களஞ்சியம்,
அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 8,சென்னை(16.11.2008)
http://www.tamilnation.org/
பிரஞ்சு நிறுவன நூலகம்(IFI),புதுச்சேரி
முனைவர் நீனா(Dr. Nina Zvelebil.),பாரிசு,பிரான்சு
பேராசிரியர் மரேக் சுவலபில் (Professor Marek Zvelebil)Sheffield,United Kingdom.
முனைவர் பொற்கோ
முனைவர் க.இராமசாமி
முனைவர் தமிழண்ணல்
திரு.இரகுநாத் மனே(பிரான்சு)
முனைவர் நா.கணேசன்,நாசா விண்வெளி ஆய்வு நடுவம்,அமெரிக்கா

புதன், 12 நவம்பர், 2008

பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் திருவுருவப் படம்


பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள்

பெருமழைப் புலவர், பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் சங்க இலக்கிய உரைச்சிறப்பில் மயங்கிய யான் அவர் பற்றி முன்பே கட்டுரை வரைந்துள்ளேன். அவரின் படம் ஒன்று இன்று பிரஞ்சு நிறுவன நூலகத்தில் பழைய செந்தமிழ்ச் செல்வி ஏடுகளைப் புரட்டிய பொழுது கிடைத்தது.முன்பு பார்த்த படங்களிலிருந்து இது தெளிவாக இருந்ததால் அனைவரின் பார்வைக்கும் வைத்துள்ளேன்.

நன்றி: செந்தமிழ்ச்செல்வி மாத இதழ்,கழக வெளியீடு.
பிரஞ்சு இன்சிடியூட் நூலகம், புதுச்சேரி

புலவர் வரலாறு அறிய...

செவ்வாய், 11 நவம்பர், 2008

சங்க இலக்கிய ஈடுபாட்டில் மலைபடுகடாம் ஆய்வும் என் களப்பணிப் பட்டறிவும்...

நவிரமலையின் தூரக் காட்சி

  சங்க நூல்களில் ஆற்றுப்படை நூல்களைக் கல்லூரிப் பருவத்தில் ஆர்வத்துடன் கற்றுள்ளேன். அதன் வெளிப்பாடாக மாணவராற்றுப்படை (1990), அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூல்களை மாணவப் பருவத்தில் எழுதி வெளியிட்டேன். அந்நூல்கள் என் யாப்புப் பயிற்சியை இன்றும் காட்டி நிற்கின்றன.

  இந்நூலுள் ஒன்றான அச்சக ஆற்றுப்படையைப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுது என் வகுப்புத் தோழி அ. மாதவி அவர்களிடம் காட்டினேன். அவர்கள் தம் தந்தையார் புலவர் அப்பாசாமி அவர்களிடம் காட்டியுள்ளார். அப்பாசாமி ஐயா அவர்கள் அந்நாளில் தமிழ் நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்களின் உதவியாளராக ஆராய்ச்சிப் பணிகளில் துணை நின்றவர். நூலில் ஈர்ப்புண்ட அப்பாசாமி ஐயா அவர்கள் கோபாலையர் அவர்களிடம் அச்சக ஆற்றுப்படையைக் காட்டப் புலவர் பெருமகனார் அந்நூலின் சுவையருந்தி வாயாரப் பாராட்டிக்கொண்டு இருந்துள்ளார்.

  மாணவப்பருவத்தில் இதுபோல் மரபுப்பாடல் எழுதுபவர்கள் இக்காலத்தில் இருக்கின்றார்களா? என வியந்த வியப்பே அப்பாராட்டிற்குரிய காரணமாகும். என் பேராசிரியர் க. ப. அறவாணனார் அவர்கள் ஒருநாள் என்னை அழைத்து, அண்மையில் தாம் கோபாலையர் அவர்களைச் சந்தித்ததாகவும், அச்சக ஆற்றுப்படை இயற்றிய என்னைக் காண விரும்பியதாகவும் என் பேராசிரியர் அவர்கள் சொல்லி, இசைவுகொடுத்து என்னைக் கோபாலையர் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.

  புதுச்சேரி, பிரெஞ்சு நிறுவனத்திற்குச் சென்று கோபாலையர் அவர்களின் இடம் சார்ந்தேன். புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். பிரெஞ்சுக்கார மாணவர் ஒருவர் அப்பாடத்தை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தார். சுவாமி வணக்கம். பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள் என அறிமுகம் ஆனேன்.

  அச்சக ஆற்றுப்படையை நினைவூட்டியதும் அருவி வழிந்தோடுவதுபோல் என் பாட்டு வரிகளைச் சுவாமிகள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். நிறைகாண்தோறும் பூரித்த அந்த தமிழுள்ளம் சிறு சிறு அரில்களைக் கண்டெடுத்துக் காட்டியது. அவற்றை வழுவில எனும் தன்மையிலும் நிறுவிக்காட்டினார்கள். அவர்களின் அறிவு கண்டு மருண்ட யான் சுவாமி தங்கள் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் சொன்ன அந்தப் புகழ் மொழிகளைக் கையெழுத்தில் அன்புகூர்ந்து எழுதியருளுங்கள் என மன்றாடினேன்.

  ஓரிரு நாள் கழித்துத் தம் இல்லம் வந்து வாங்கிச் செல்க என அன்போடு தெரிவித்தார்கள். அவ்வாறே சில நாள் கழித்துச்சென்று அவர்தம் கையெழுத்தில் அவர்தம் மதிப்புரையை வாங்கி வந்தேன். பின்வருமாறு எழுதி உதவினார்கள்.

   ''அச்சகம் ஒன்றனான் விழைந்த நற்பயன் முழுமையாகப் பெற்றான் ஒருவன் அவ்விழைவான் அலமருவான் ஒருவனை அவ்வச்சகத்துக்கு முழுப்பயன்கொள்ள ஆற்றுப் படுத்தலாக அமைந்த இவ்வாற்றுப்படைச் செய்யுள் இனிய எளிய தமிழ்நடையான், இடைப்பட்ட ஊர்கள்,யாறுகள் இவற்றின் வரலாற்றுப் பின்னணியைத் தெரித்துக் கற்பாருக்கு விருந்தாக அமைந்துள்ளது. இளைஞர் மூத்தோர் இவர்தம் கடமைகளை உணர்த்தித் தன்மை நவிற்சியே பெரும்பாலும் அமைய இப் பிரபந்தத்தை யாத்த இளங்கவிஞர் இத்துறையில் புலன் அறிந்து யாக்கும் நிலனறி சான்றோராய்த் திகழ எம்பெருமான் அருளுவானாக''

 என எழுதித் தி.வே.கோபாலையர் என்று ஒப்பமிட்டு,13.03.1993 என நாளிட்டு வழங்கினார்கள்.

  இச் சான்றினைப் பெற்ற பிறகு அறிஞர் தி. வே. கோபாலையர் மேல் விடுதல் அறியா விருப்பினன் ஆனேன்.

  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் ஆய்வு மாணவனாக இருந்தபொழுது நடைபெற்ற கருத்தரங்குகளுக்கு வந்தபொழுது அவர்களுக்குப் பணிவிடை செய்வதை மிகப்பெரும் பேறாக எண்ணிச் செய்தேன்.

  அதுபோல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தபொழுது சங்க இலக்கியம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ''சங்கப் பாடல்களில் நாட்டுப்புறவியல் கூறுகள்'' என்ற கட்டுரையைப் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் தலைமையில் படித்தேன். பார்வையாளர் வரிசையில் அறிஞர்கள் தி.வே.கோபாலையர், சோ.ந.கந்தசாமி, பெ.மாதையன், ந.கடிகாசலம் உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்தனர். கட்டுரையைப் படித்து முடித்ததும் அவைத்தலைவர் சுப்பு ரெட்டியார் எழுந்து என் இளமைப் பருவத்தையும், தோற்றத்தையும், கட்டுரை உருவாக்கத்தையும், படைத்த முறையையும் கண்டு வியந்து, இவ்விளைஞர் இதே முறையில் சங்க இலக்கியத்தைக் கற்பதிலும் ஆய்வுசெய்வதிலும் ஈடுபட்டால் தமிழகத்தின் வருங்கால மிகச் சிறந்த பேராசிரியராக விளங்குவார் என யான் வணங்கும் திருப்பதி ஏழுமலையான் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்'' என்று அவைக்கு என்னை நம்பிக்கையுடன் சுட்டிக்காட்டினார்கள்.

  அப்பொழுது தி.வே.கோபாலையர் அவர்கள் கட்டுரை பற்றியும் உரையாசிரிர் பெருமக்கள் பற்றியும் பல கருத்துகளை வியந்து சொன்னார்கள். அந்த நாளில் அங்கு வந்த தி.வே. கோபாலையர், தஞ்சைத் தமிழ் அறிஞர் ச.பாலசுந்தரம், இலக்கணப் புலவர் முனைவர் இரா. திருமுருகனார் ஆகியோருடன் இணைந்து ஒரு படம் எடுத்துப் பாதுகாத்து வருகிறேன். இவ்வாறு அறிஞர்களின் தொடர்பும் யான் பயின்ற திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் புலமைப் பின்புலமும் சங்க நூல்களில் எனக்கு நல்ல ஈடுபாட்டை ஏற்படுத்தின.

 பாவலரேறு பெருஞ்சித்திரனார், தங்கப்பா ஆகியோரின் மரபுப் பாடல்கள் நற்றமிழில் பாடல் புனையும் வேட்கையை ஏற்படுத்தின. புறநானூற்றுப் பாடல்கள் போல் தமிழ் மறவர்களின் வீரத்தைப் புகழ்ந்து பல பாடல்களைக் கல்லூரிப் பருவத்தில் இயற்றினேன். இவற்றுள் சில அச்சேறியுள்ளன.

  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பரம்பரை என்ற பொருளில் முனைவர் பட்டம் 1997 இல் பெற்றாலும் தக்க கல்விப் பணியோ, ஆராய்ச்சிப் பணியோ அமையாமல் நிலையில்லாத பணிகளில் சில காலம் இருந்தேன். அந்த நிலையில் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியளித்துப் புலவர் இலக்குமி பங்காரு அடிகளார் தமிழ்ப்பணிக்கு வழிவகுத்தார்கள்(1999). அப்பணி எனக்கு அமைவதற்குப் பெருங்கருணை காட்டியவர்கள் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தலைவரும் வள்ளலார் கொள்கைகளில் பேரீடுபாடு கொண்டவர்களும் திருக்குறள் பற்றாளருமான திருநிறை. கோ. ப. அன்பழகனார் ஆவார்கள். 

  அப்பொழுது கலவையை அடுத்திருந்த ஆர்க்காடு நகருக்கும், செய்யாறு, வந்தவாசி, காஞ்சிபுரம் ஆரணி பகுதிகளுக்கும் பேருந்தில் செல்லும் பொழுது ஒப்பனை கலையாத முகங்களுடன் பல கூத்துக் கலைஞர்கள் பேருந்துகளில் செல்வதைக் கவனித்தேன். கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை நினைவுகள் தோன்றும். அப்பகுதி எனக்குச் சங்க இலக்கியப் பகுதிகளாக என் கண்முன் விரியும். நற்றிணையில் புகழப்படும் ஆர்க்காட்டில் வாழ்ந்ததை மிக உயர்வாக நினைக்கிறேன்(1999-2005).

  கலவையில் பணிபுரிந்தபொழுது அறிஞர் மா.இராசமாணிக்கனார் அவர்களின் பத்துப்பாட்டு ஆராய்ச்சியைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மலைபடுகடாம் நூல் பாடப்பெற்ற பகுதிகளைப் பார்வையிடும் வேட்கை மிக்கிருந்தது. பொறிஞர் கு. வேங்கடாசலம் என்னும் அறிஞர் செங்கம் அருகில் உள்ள வளையாம்பட்டு ஊரில் வாழ்வதாகவும், அவர் நன்னன் நாடு என்னும் இதழ் நடத்துவதாகவும்,நவிரமலை விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டவர் எனவும் அறிந்தேன்.


பொறிஞர் கு.வெங்கடாசலம்

 அவரைக் காண்பதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு திருவண்ணாமலையில் மின்துறையில் பணிபுரிந்த என் நண்பர் தமிழியலன் அவர்களை வேண்ட, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒருநாள் வளையாம்பட்டு சென்று அறிஞர் வெங்கடாசலனாரைக் கண்டு உரையாடினேன். அவரின் நவிரமலை ஆய்வு முயற்சிகளை அறிந்து வியந்தேன். நன்னன்நாடு இதழ்களைப் பெற்றுக்கொண்டும், அவர் பேச்சைப் பதிவு செய்துகொண்டும் படமெடுத்துக்கொண்டும் திரும்பினேன்.

நன்னன் நாடு இதழ் முகப்பு

 திரும்பும் வழியில் செங்கத்திலிருந்து போளூருக்குப் பர்வதமலை அடிவாரமாகவே பேருந்தில் வந்தேன். வரும் வழியில் பர்வதமலை செல்லும் வழி என்னும் பலகைகளைக் கண்டபொழுது யானுற்ற இன்பம் யாருற்றார்? என்னும் நினைவே நிற்கிறது. அந்நாளில் பொறிஞர் வேங்கடாசலனாரிடம் உரையாடிய பொழுதுதான் நவிரமலையின் பல சிறப்புகளை அறிந்தேன்.

 மலைபடுகடாம் உரையைக் கற்றபொழுது பர்வதமலை, திரிசூலகிரி என்னும் பெயர்கள் அம்மலைக்கு உண்டு என்பதை அறிந்திருந்தேன்.

  பர்வதமலை பற்றிய ஒரு நூல் உ.வே.சா. நூலகத்தில் இருப்பதை நண்பர்கள் வழியாக அறிந்தேன். அதனைப் பார்க்க உ.வே.சா. நூலகம் சென்றேன். என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் அந்நூல்களைப் பார்க்க ஆவன செய்தார்கள். ஆய்வுக் குறிப்புகள் பலவற்றையும் சொன்னார்கள். அங்கு வந்த சில அன்பர்கள் பர்வத மலை பற்றியும் அம் மலைப் பயணம் குறுவட்டில் விற்கிறது எனவும் தெரிவித்திருந்தனர். பொதிகைத் தொலைக்காட்சியில் அம் மலைப் பயணம் காட்டப்பட்டது என்பதும் அறிய நேர்ந்தது. காஞ்சிபுரத்தில் அக் குறுவட்டுக் கிடைக்கும் என்ற விவரமும் தெரியவந்தது.

  வேலூர் சார்ந்த தமிழ்ப்புலவர்கள், மூத்த தமிழறிஞர்களைக் காணும் பொழுதெல்லாம் நவிரமலை பற்றியே என் பேச்சு இருக்கும். வேலூர்ப் பேராசிரியர் பட்டாபிராமன் அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. பேராசிரியர் அவர்கள் பல அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். மொழிபெயர்ப்பு வேலைகளில் கவனம் செலுத்தியவர்கள். மொழிபெயர்ப்பு குறித்த நூல் எழுதியவர்கள்.அவர் மாணவர் ஒருவர் பாலாசி என்பவர் அருணகிரிமங்கலம் என்னும் ஊரில் இருப்பதையும் அவர் மலைப் பயணத்திற்கு உதவுவார் எனவும் பேராசிரியர் கூறியிருந்தார்கள்.

  பாலாசி அவர்களின் வழியாக நவிரமலையைக் கண்டு மகிழலாம் என்னும் நினைவில் பலநாள் கடந்தன. ஒருநாள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்பினை வேலூர் முத்துரங்கம் கல்லூரியில் மேற்கொண்டிருந்தேன். மலைபடுகடாம் பாடவகுப்பு. மாணவர்களுக்குப் பாடத்தின் ஊடாக, இந்த நூலை (மலைபடுகடாம்) இங்கு அமர்ந்து படித்தலிலும் அருகே உள்ள நவிரமலை, செங்கம் முதலான பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்ட பிறகு படித்தல் வேண்டும் என்றேன். மேலும் நவிரமலையில் ஏற முடியாமல் அறிஞர் இராசமாணிக்கனார் திரும்பியதையும் குறிப்பிட்டேன்.

  அப்பொழுது அங்கு பயின்றுகொண்டிருந்த மாணவி இரீட்டா என்பவர்கள் தாம் பர்வதமலைப் பகுதிக்கு அருகிலிருந்து வருவதாகவும், மலையேற்றம் பற்றியும் மலையேற உகந்த நாள் பற்றியும் தெரிவித்தார்கள். அப்பொழுது சில மாணவர்கள் தாம் நவிரமலை ஏறியுள்ளதாகவும், அம் மலைப்பயணத்தின் கடுமையையும் தெரிவித்தனர். வகுப்பு நவிரமலையைத் தாண்ட முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

  இயல்பிலேயே நவிரமலை பற்றி அறிய பல முயற்சி செய்த எனக்கு இம் மாணவர்களின் துணையுடன் நவிரமலையில் ஏறிவிடுவது என்று முடிவு செய்தேன். நவிரமலை பற்றி உ.வே.சா நூலகத்தில் படித்த நூல் மலைப்பயணத்தின் அச்சத்தை எனக்கு மிகுவித்திருந்தது. எனினும் அறிஞர் மா. இராசமாணிக்கனார்க்குக் கிடைக்காத உதவிகளும் வாய்ப்புகளும் எனக்குக் கிடைத்துள்ளது. அவற்றைப் பயன்படுத்தித் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியை விளக்கமாகப் படிக்கலாமே என நினைத்து மாணவர்களிடம் நாளைக்கே மலைப்பயணம் செல்லலாம் என்று விருப்பம் தெரிவித்தேன்.

  மறுநாள் ஆகத்துப் பதினைந்து தன்னுரிமை நாள் விடுமுறை என்பதால் மலைப்பயணம் உறுதிசெய்யப்பட்டது. ஆகத்துப் பதினைந்து காலை ஆறு மணிக்குப் போளூர் பேருந்து நிலையம் வந்துவிடுவதாகச் சொல்லி ஆர்க்காடு வந்தேன்.என் அன்பிற்குரிய மாணவர்கள் கா. இரமேசு, விவேகானந்தன், செல்வம்(குடியாத்தம்) போளூரில் காத்திருப்பதாகச் சொன்னார்கள்.

  இரவு நேரத்தில் பயணத்திட்டம் பற்றித் திட்டமிட்டேன். வேலூர் மாவட்ட தொலைபேசி அட்டவணையை எடுத்துப் பாலாசி என்னும் பெயரில் அருணகிரி மங்கலத்தில் உள்ள பாலாசிகளுக்கெல்லாம் தொலைபேசியிட்டுத் தமிழ் முதுகலை கற்ற, பேராசிரியர் பட்டாபிராமனின் மாணவர் பாலாசி அவர்களிடம் என் திட்டம் சொன்னேன். நாளை காலை வருவதாகவும் உரைத்தேன். அவரும் அவர் நண்பர்களுடன் காத்திருந்தார். சொன்னவாறு ஐம்பது கல் தொலைவுள்ள போளூரில் காலை ஆறு மணிக்கு நின்றேன். என் மாணவர்களும் கூடினர். அருணகிரிமங்கலம் சென்றோம்.

  பாலாசி அவர்கள் காத்திருந்தார். இன்சுவை உணவு படைத்த அவர்களின் தாயரின் கைச்சுவையை வாழ்நாளில் மறவேன். தண்ணீர்க் குடுவைகள், உணவுப் பொட்டலங்கள், தின்பண்டங்கள் எடுத்துக்கொண்டு உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர்,  அந்த நவிரமலைக் கோயிலில் முன்பு பணிபுரிந்த சாமியார் ஒருவர் என எங்களின் மலைப்பயணக்குழு ஆர்வமாகப் புறப்படும்பொழுது காலை எட்டரை மணி இருக்கும்.

  வழியில் கண்ட காட்சிகளுக்கெல்லம் பாலாசி விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். வழியில் தெரிந்த கோயில்களில் வழிபாடுகள் செய்தபடியும் இரேணுகாம்பாள் கோயில் பற்றி அறிந்து மலையடிவாரம் சென்றோம். என் கவனம் முழுவதும் மலையுச்சியில் உள்ள காரியுண்டிக் கடவுளைப் பற்றியும் மலைக்காட்சிகள் பற்றியும் இருந்தன.

  மலையில் ஏறும்பொழுது வழியில் சிறு பாம்புக்குட்டியைக் கண்டதும் ஏதோ கெட்ட சகுணமாக நினைத்தனர். எங்கள் ஆர்வத்தை மலையுச்சியின் உயரம் படிப்படியே தணிவித்தது. ஆம் சரளைக்கற்கள், நெடுங்குத்துகள், ஆபத்தான வழுக்குகள் இவற்றைக் கடந்தும் படம்பிடித்தபடியும் சென்றோம். சாமியார் அவர்கள் பல கதைகளைச் சொன்னபடி அவர் விரைந்து மலையேறுவார். சிறிதுதூரம் சென்று எங்களுக்காகக் காத்திருப்பார். இங்கு அமரலாம் என்பார். எங்கள் விருப்பம்போல் அயர்ந்து, அமர நினைத்தால் இன்னும் சிறிது தூரம் சென்றால் காற்றோட்டமான இடம் இருக்கும். அங்கு அமரலாம் என்பார். அவர் வழிகாட்டலில் சென்றோம்.

மலையிலிருந்து கீழே பார்த்தால் நாம் கடந்துவந்த அகல்பாதை 
கோடாகக் காட்சி தருகிறது


மலை ஏறும்பொழுது முதலில் காணப்படும் வேல்


நவிரமலை ஒட்டிய சவ்வாது மலைக்காட்சி


நன்னனின் கோட்டை தூரக்காட்சி


மலைமேல் ஒரு மலை

  அவர்களிடம், சாமி நீங்கள் ஏன் மலையிலிருந்து இறங்கி கீழே வாழ்கின்றீர்கள் என்றேன். பன்னிரண்டு ஆண்டுகள் மலையிலேயே இருந்த அவர் கீழே இறங்கி வரும்பொழுது தம் கடந்த கால வாழ்க்கையைச் சொல்வதாகச் சொன்னார்கள். கடப்பாறை நெட்டு, கணக்கச்சி ஓடை முதலானவற்றின் கதைகளைச் சாமியார் எங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். இடையில் நன்னனின் கோட்டை அமைப்பு இருப்பதை உணர்த்தினார்கள். அதனைப் படம்பிடித்துக் கொண்டேன். அக் கோட்டையின் பன்முகக் கோணங்களை அறிந்து கோட்டை இருந்ததற்கான வாய்ப்புகளை உறுதிசெய்து கொண்டோம்.

  கடப்பாறை நெட்டு என்னும் பகுதி ஆபத்தான பகுதியாகும். நேர்ச்செங்குத்தாக மலையில் அடிக்கப்பெற்றுள்ள கடப்பாறை போன்ற ஆணிகளைப் பற்றிக்கொண்டும் சங்கிலிகளைப் பற்றிக்கொண்டும் ஏற வேண்டும். மலைபடுகடாம் ஆசிரியர் 'குறவரும் மருளும் குன்றம்' என்றது இப்பகுதியைப் போலும். தேர்ச்சக்கரம் போன்ற தேனடைகள் இன்றும் உள்ளன. மேக முழக்கம் கேட்டபடி இருந்தது. இடையில் சுனைகள், கோட்டை அமைப்புகள், பாதுகாப்பு அரண்கள் உள்ளன.

  கணக்கச்சி ஓடை என்னும் பகுதி ஆபத்தானது. ஒரு மலைப்பகுதியிலிருந்து இன்னொரு மலைப்பகுதிக்குத் தாவிச் செல்வது போன்ற அமைப்பு உள்ளது. இவ்விடத்தில் கணக்கன் ஒருவனும் அவன் மனைவியும் செல்லும் பொழுது கணக்கன் தவறி விழுந்து விட்டதாகவும், அவன் பிரிவாற்றாமல் மனைவியான கணக்கச்சி மலையிலிருந்து உருண்டு உயிர் துறந்ததையும் குறிப்பிட்டனர்.

  அவ்வாறு ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்குத் தண்டவாளம் போன்ற இரும்பின் பகுதிகளை இன்று இட்டு வைத்துள்ளனர். ஒரு மணியளவில் பன்னிரண்டு கல்தொலைவுள்ள மலைப்பகுதியில் ஏறினோம். சிறிது நேர ஓய்வுக்குப்பிறகு இறைவழிபாட்டில் நண்பர்கள் ஈடுபட்டனர்.

  மலையுச்சியில் சிறு கருங்கல் கோயில் உள்ளது. சில சிலைகள் உள்ளன. கதவு இல்லை. இரவு பகல் எந்த நேரமும் மக்கள் வந்து வழிபடுவார்களாம். முழுநிலவு நாளில் கூட்டம் அதிகம். வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்களாம். கைப்பேசி இணைப்புகளும் கிடைக்கின்றன. மேகம் மூட்டமாக இருக்கும். இடி இடிப்பது அதிகம். போகர் சிலை இருக்கின்றது. காரியுண்டிக்கடவுளான சிவனின் சிலையும், அம்மையின் சிலையும் உள்ளது.

 மலையுச்சியில் அவசரத் தேவைக்குச் சில பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றின் விலை மலையளவு அதிகம். அவற்றைக் கீழிருந்து உறிகளில், மூட்டைகளில் சுமந்துசென்று விற்கின்றனர். குளுக்கோசு, தண்ணீர் பாக்கெட்டுகள், படையல் பொருள்கள் சில கிடைக்கும். பலகோணங்களில் அப்பகுதியைப் படம்பிடித்துக்கொண்டு, உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு கீழே இறங்க முயன்றோம். அதற்கு முன்பாகக் குழுவினர் அனைவரும் நினைவாகச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்..(தொடரும்)

தொடர்புடைய பதிவுகள்: நவிரமலை


(இதில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாகச் சென்று வேறு படங்களையும், செய்திகளையும் கண்டுகொள்க. படங்களை எடுத்தாளுவோர் இசைவு பெறுக)

ஞாயிறு, 9 நவம்பர், 2008

முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்

முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்
 
     தமிழ்நாட்டு மக்களுக்குச் சிங்கப்பூர் கனவுநாடாக உள்ளது. மிகச் சின்னஞ் சிறு தீவாக உள்ள சிங்கப்பூர் 09.08.1965 இல் மலேசியாவிலிருந்து பிரிந்தது. இரு நாடுகளும் எந்தப் பகை உணர்வும் இல்லாமல் அமைதியாக உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சிங்கப்பூரில் இயற்கை வளமோ, தொழிற்சாலைகளோ எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் குடிநீருக்கே அண்டைநாடான மலேசியாவை எதிர்பார்த்து இருக்கும் நாடு. மலேசியாவிலிருந்து குடிநீரை விலைக்கு வாங்கினாலும் தூய்மை செய்யப்பெற்ற குடிநீரை மலேசியாவிற்கே வழங்கும் அளவில் முன்னேற்றங்களைக் கொண்ட நாடு சிங்கப்பூர். சட்டத்தை ஒழுங்காக மதிப்பதும், அவரவர்களின் உரிமைக்கு மதிப்பளிப்பதும் அந்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாகும். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதைச் சிங்கப்பூரில்தான் காணமுடியும். 

    வானளாவிய கட்டடங்களில் தமிழர்கள் வளமாக வாழும் நாடு சிங்கப்பூராகும். பல தலைமுறைகளாகத் தமிழ் நாட்டுடன் இந்த நாட்டுக்குத் தொடர்பு இருந்துள்ளது. தமிழர்கள் பலர் பல காரணங்களால் சிங்கப்பூரில் குடியேறி அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்துள்ளனர். தமிழர் ஒருவர்தான் இன்று அந்நாட்டின் அதிபராக உள்ளார் என்பது நமக்குப் பெருமை தரத் தக்க ஒன்றாகும். தமிழ்மொழி சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். தமிழ்மொழியில் ஏடுகள் பல வெளிவருகின்றன.பல நூல்கள் வெளிவருகின்றன.சிங்கப்பூரில் உள்ள தமிழ் வானொலி மிகச்சிறப்பாகத் தமிழ் ஒலிப்பு முறைகளைக் கையாளும். தவறாக ஒலிப்பது உறுதி செய்யப்பெற்றால் அவரை உடன் பணியிலிருந்து நீக்கிவிடுவர். தமிழுக்கு முதன்மை இருந்த சிங்கப்பூரில் நம் தமிழகத்துத் தனியார் தொலைக்காட்சிகள் புகுந்து மொழியைப், பண்பாட்டைச் சிதைத்து வருவதை அங்குள்ள தமிழர்கள் விரும்பவில்லை. தமிழ் கற்பக்கும் பணியில் பல ஆசிரியப் பெருமக்கள் தமிழகத்திலிருந்து சென்று பணிபுரி கின்றனர். சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களாக இவர்கள் இருந்தாலும் தாய்த் தமிழகத்தின ருடன் நல்ல தொடர்பில் இருக்கின்றனர். தமிழ் மொழி, இலக்கியம், கற்பித்தல், இணையம் சார்ந்த ஆய்வுகள் பல சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றன. அவ்வாய்வுகளில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுள் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். 

     புதுச்சேரி மாநிலத்தின் திருமலைராயன் பட்டனத்தில் 1954 இல் பிறந்தவர். இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற சிவகுமாரன் அவர்களின் வளர்ச்சியில் அவர்தம் ஆசிரியர் பெருமக்கள் சீனிவாச சாத்திரியார். ஆதிநாராயணன், சாமி.தியாகராசன் பேரார்வம் கொண்டவர்கள். ஆ.இரா. சிவகுமாரன் முதுகலைப் பட்டப் படிப்பைத் தமிழ்நாட்டில் முடித்தவர். தமது பெற்றோரின் நாடாகிய சிங்கப்பூரில் குடியேறியவர். கற்றலிலும் கற்பித்தலிலும் ஆர்வமுள்ள இவர் ஆசிரியர் பணியைத் தேர்வு செய்து கடந்த 29 ஆண்டு காலமாகப் கற்பித்தல் துறையில் பணிபுரிந்து வருகிறார். 1995 முதல் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசியக் கல்விக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். துணைப் பேராசிரியரான இவர் 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்துறையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயல்பட்டு வருகிறார்.
    முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் 

 இவர் தமிழ்மொழி, இலக்கியம், கணினி, கற்பித்தல் முறைகள் ஆகிய பாடங்களைக் கற்பித்து வருகிறார்.தயாரிப்புடன் சென்று பல்வேறு உத்திமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் உளத்தியல் புரிந்து கற்பிப்பதில் வல்லவர். தமிழ்,மலாய். ஆங்கிலம், சீனம் என்னும் நான்கு மொழிச்சூழலில் தமிழ் மாணவர்களுக்குக் கற்பிப்பது சிக்கலான ஒன்றாகும். தமிழகத்திலிருந்து செல்லும் பேராசிரியர்கள் தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் கற்பிப்பதில் வல்லவர்கள்தான் ஆனால் சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலை உள்வாங்கிக்கொண்டு கற்பிப்பதிலும் பாடத்திட்டம் வகுப்பதிலும் சிவகுமாரன் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றவர். தமிழ்மொழியில் எழுதி முனைவர் பட்டம் பெற முன்பு சிங்கப்பூரில் இயலாது. இந்த நிலையை மாற்றி முனைவர் ஆ. இரா. சிவகுமாரன் சிங்கப்பூரின் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் ஆய்வேட்டை எழுதி Ph. D. பட்டம் பெறுவதற்கு முதன் முதலில் வழி வகுத்தார். அதற்குப் பேருதவி புரிந்தவர் நெறியாளராக விளங்கிய முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களாவார். "சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஒரு திறனாய்வு (1965-1990)" என்னும் தலைப்பில் தம்மை முதன்முதலில் பதிவு செய்துகொண்டு கடுமையாக உழைத்துத் தரமான ஆய்வேட்டை உருவாக்கி அளித்துப் பட்டம் பெற்றுள்ளார். ஒவ்வொரு இயலும் ஒரு முனைவர் பட்டம் வழங்கும் அளவுக்குக் கடும் உழைப்பில் மலர்ந்துள்ளன.


    ஆ.இரா.சிவகுமாரன் அவர்களின் நூல் (முனைவர் பட்ட ஆய்வேட்டின் 
ஒரு பகுதி) 

 வரலாறு தெளிவுபெறாமல் இருந்த பல இடங்கள் சிவகுமாரனின் ஆய்வேட்டால் வெளிச்சம் பெற்றன. சிங்கப்பூரின் வரலாறு, சிங்கப்பூருக்குத் தமிழர்கள் சென்ற வரலாறு, தமிழர்கள் இயற்றிய இலக்கியங்கள், நடத்திய ஏடுகள், வெளியிட்ட நூல்கள், தமிழர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கிய தமிழவேள் சாரங்கபாணியார் பற்றிய செய்திகளை ஆ.இரா.சிவகுமாரன் நன்கு விளக்கியுள்ளார். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பாக முனைவர் பட்ட அளவில் ஆய்வு செய்து முதன் முதலில் பட்டம் பெற்றவரும் இவரே. இவர்தம் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன்(சிங்கப்பூர் தமிழ்க்கல்வி வளர்ச்சியில் மிகப்பெரும் பங்களிப்புகளைச் செய்து வருபவர்) அவர்கள் சிவகுமாரனின் ஆய்வு அறிவு வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் காரணமானவர்கள். 

    ஆ.இரா.சிவகுமாரனின் 'சிங்கப்பூர் மரபுக்கவிதைகள் ஒரு திறனாய்வு', 'சிங்கப்பூர்த் தமிழ்க் குழந்தை இலக்கியம்' என்னும் நூல்கள் சிங்கப்பூரிலும், தமிழகத்திலும் போற்றப்படும் நூல்களாகும். ஆ.இரா. சிவகுமாரன் தனியாகவும் வேறு பேராசிரியர்களோடு இணைந்தும் இதுவரை ஐந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார். பதிப்பாசிரியராக இருந்து இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். "Old Bubble Cooks" என்னும் சிறுவர் சித்திரக்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கு எழுதவும் பேசவும் மொழிபெயர்க்கவுமான ஆற்றல் பெற்றவர். இதுவரை சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல அனைத்துலக ஆய்வரங்குளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தாலும், புதுவைப் பல்கலைக்கழகத்தாலும், புதுவை மொழியியல் புலத்தாலும் அழைக்கப்பட்டு அங்குச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் தொடர்பான, கல்வி சார்ந்த பல சிறப்புச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளர். தமிழகம்,புதுவை சார்ந்த கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் பலமுறை உரையாற்றிய பெருமைக்கு உரியவர். 

     சிங்கப்பூர் "தமிழ்மொழிப் பாடத்திட்டம் கற்பித்தல்முறை மறு ஆய்வுக் குழுவின்" கூறாகிய 'கற்பித்தல் முறையும் ஆசிரியப் பயிற்சியும்' என்னும் துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார். தமிழ்மொழி பாட நூலாக்கக் குழுவின் ஓர் அங்கமாகச் செயல்படும், வழி நடத்தும் குழுவில் (Steering committee) உறுப்பினராக இருந்து பல ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்கி வந்துள்ளார். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தமிழ்ப்பாட நூல்கள் சிங்கப்பூர்க்கல்வி அமைச்சால் வெளியிடப்படுகின்றன. அதன்தொடர்பில் கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தை ஒட்டிப் பல வகுப்புகளுக்கும் குறு வட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இக் குறுவட்டுகளை உருவாக்கும் நிறுவனத்தின் மதியுரைஞராக இருந்து திறம்படச் செயலாற்றி வருகிறார். தற்பொழுது சிங்கப்பூர் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படும் தமிழ்மொழிப் பாட நூல்களின் மதியுரைஞராக இருந்து செவ்வனே செயல்படுகிறார். சிஙப்பூரில் தமிழ்க்கல்வி பல்வேறு தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி கற்பிக்கப்படுகின்றது. அக்கருவிகளைப் பயன்படுத்தி தமிழ்மொழியை எளிமையாகக் கற்பிப்பது எவ்வாறு என்பதில் பல சோதனை முயற்சிகளில் ஈடுபட்டவர். 

     சிங்கப்பூரில் சைவமும் தமிழும் தழைப்பதற்குக் கடந்த 25 ஆண்டுகளாக உறுதுணையாக இருந்துவரும் திருமுறை மாநாட்டின் தொடக்கக் காலம் முதல் உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது அதன் துணைத் தலைவராக விளங்குகிறார். 1983 ஆம் ஆண்டிலிருந்து திருமுறை மாநாட்டின் ஒரு கூறாக நடைபெற்று வரும் திருமுறைப் போட்டிக் குழுவின் ஒருங்கிணைப் பாளராக இருந்து ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு வருகிறார். திருமுறை மாநாட்டின் வெள்ளிவிழா ஆண்டான கடந்த 2005ஆம் ஆண்டில் (16, 17 ஏப்ரல் 2005) சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கப்பூர் பன்னிரு திருமுறை ஆய்வரங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆய்வரங்க நிகழ்வுக்கொத்தின் பதிப்பாசிரியராகவும் இருந்து பணிபுரிந்தவர். யூனூஸ் சமூக மன்றத்தின் இந்திய நற்பணி செயற்குழுவில் (Eunos Indian Activity Executive committee) 16 ஆண்டுகளாகச் சேவைசெய்து வருகிறார். தற்போது அதன் தலைவராக இருந்து வருவதோடு ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் இணைந்த அல்ஜூனைட் நாடாளுமன்றக் குழுத்தொகுதியின் இந்திய நற்பணி செயற்குழுவின் (Chairman - Aljunied GRC Indian Activity Executive Committee) தலைவராகவும் இருந்து வருகிறார். அதோடு பல இனங்களுக்கிடையே நன்னம்பிக்கையை உருவாக்கும் குழு (Inter Racial Confidence Circle) உறுப்பினராகவும், யூனூஸ் சமூக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். 

     சிங்கப்பூர் மக்கள் கழக நற்பணி செயலவைக் குழுவில் (அல்ஜூனைட் நாடாளுமன்றக் குழுத்தொகுதியைப் பிரதிநிதித்து) ஒருங்கிணைப்பாளராக 2006 முதல் 2008 வரை திறம்படச் செயல்புரிந்து வந்துள்ளார். சிங்கப்பூர் தேசிய நூல் நிலையத் தமிழ்ப் பிரிவு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் ஆக்கபூர்வமான முறையில் செயல்பட்டு வந்துள்ளார். மேலும் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சிலும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு அமைப்பிலும், சிங்கப்பூர் சிம் பல்கலைக் கழகத்திலும் பல முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்.


தமிழ் ஓசை களஞ்சியம்(09.11.08) 

     முனைவர் ஆ.இரா. சிவகுமாரனின் நற்சேவையைச் சிங்கப்பூர் மக்கள் கழகம் (People Association) பாராட்டி இருமுறை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் கழகம் "தமிழர் திருநாள் விருது" வழங்கி இவரைக் கெளரவித்துள்ளது. இவர் பணிபுரியும் தேசியக் கல்விக்கழகம், இவரின் கற்பித்தல் பணியைப் பாராட்டும் வண்ணம் 2002-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஐந்துமுறை நல்லாசிரியர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. இவர் 2004ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழவேள் கோ. சாரங்கபாணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் முன்னிலையில் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவர் புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் "டாக்டர் ஏ ஆர்ஏ சிவகுமாரன் கல்வி அறக்கட்டளை" என்னும் அறக்கட்டளையை 2004-ம் ஆண்டு நிறுவியுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதலாவதாக வரும் மூன்று இளங்கலைத் தமிழ் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவிநிதி வழங்கி வருகிறார். சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இவரின் பெற்றோர் "இராமலிங்கம் அபிராமி" பெயரால் 2004-ல் ஓர் அறக்கட்டளையை நிறுவி உள்ளார். இதன் மூலம் ஆண்டுதோறும் ஒரு தலைப்பில் ஆய்வு செய்யவும் அக்கருத்துகள் கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளவும் வழி செய்துள்ளார். அவ்வாறு நடைபெற்ற அறக்கட்டளைப்பொழிவில் 10-6-2005 வெளிவந்த முதல் நூல் முதுமுனைவர் தி.ந. இராமச்சந்திரனின் "பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்" என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திருமுறைகளில் ஈடுபாடுகொண்ட குடும்பத்தில் தோன்றிய இவரும் திருமுறைகளில் ஈடுபாடு கொண்டவராவார். 

        புதுவைப் பல்கலைக் கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் இவரின் பெற்றோர் "இராமலிங்கம் - அபிராமி" பெயரால் 2007-ல் ஓர் அறக்கட்டளையை நிறுவி உள்ளார். சிவகுமாரனுக்கு நல்ல சைவ சமய ஈடுபாடு உண்டு. எனவே சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் முன்னின்று உழைப்பவர். சிங்கப்பூரில் உள்ள அருள் மிகு செண்பக விநாயகர் கோவில் உறுப்பினராகவும் , அருள்மிக உருத்திர காளியம்மன் ஆலய உறுப்பினராகவும் இருந்து சைவமும் தமிழும் வளர உழைத்து வருகிறார். திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் பொறுப்பை வகிக்கிறார்.உலக அளவில் நடைபெறும் பல இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராக இருந்து பணிபுரிபவர். தமிழகத்து முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிபவர். திருமுறைப் போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிங்கப்பூரில் திருமுறைப் பேச்சுப் போட்டி, திருமுறை ஓதும்போட்டி, திருமுறை வண்ணம் தீட்டும் போட்டி, திருமுறை திருவேடப்போட்டி, திருமுறை நாடகப்போட்டி, திருமுறைக் கட்டுரைப் போட்டிகளைச் சிறப்புற நடத்தியவர். சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உழைத்துவரும் பேராசிரியர் சிங்கப்பூர் தமிழ் வளர்ச்சி பற்றியும் தமிழ்க்கல்வி வளர்ச்சி பற்றியும் ஆராய்ந்து எழுதி, தமிழகத்து மக்களுக்கு வழங்கவேண்டும். 

 நனி நன்றி: 

தமிழ் ஓசை நாளேடு, களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள்,வரிசை 7(09.11.2008),சென்னை. 
முனைவர் சுப.திண்ணப்பன் 
முனைவர் பொற்கோ