நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 மார்ச், 2010

செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குரிய தொகை பெற்றேன்…

 இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குரிய தொகையினை இன்று (28.03.2010) சென்னைத் தாச் கொரமண்டல் விடுதியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருக்கையால் பெற்றமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

  என்னைப் போல் மொத்தம் 15 பேர் இளம் அறிஞர் விருது பெற்றார்கள். மேலும் மூத்த தமிழறிஞர் பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது ஐந்து இலட்சம் உருவா பரிசிலாக வழங்கப்பெற்றது. இளம் அறிஞர்களுக்குரிய விருதுத் தொகை உருவா ஒரு இலட்சம் ஆகும். இது பற்றிய விரிவான செய்தியைப் பின்னர் வழங்குவேன். கிடைத்த சில படங்களைப் பார்வைக்கு வைக்கிறேன்.


 தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல். அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன், முனைவர் க.இராமசாமி


செம்மொழி விருதுத்தொகை பெறும் எனக்கு வா.செ.கு.சிறப்பு செய்தல்


தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல். அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன், முனைவர் க.இராமசாமிதமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல். அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன்,முனைவர் க.இராமசாமி
தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல்.அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன்,முனைவர் க.இராமசாமி
என்னுடன் விருது பெற்ற மற்ற பேராசிரியர்கள்

சனி, 27 மார்ச், 2010

புதுச்சேரியில் பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்தொகுதிகள் அறிமுகவிழா


தோழர் வே.ஆனைமுத்து


பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்

புதுச்சேரியில் பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்தொகுதிகள் அறிமுகவிழா 26.03.20010 மாலை 6.30 மணிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் நடந்தது.பெரியாரியல் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள் (இருபது தொகுதிகள்)இரண்டாம் பதிப்பு நூலின் அறிமுக விழாவுக்குச் சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார்.புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தனித்தமிழ் அன்பர்கள்,சமூகச் சிந்தனையாளர்கள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.300 பேருக்கு மேல் முன்பதிவு செய்துகொண்டவர்கள் நூல் தொகுதிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.தந்தை பெரியார் அவர்களின் சமூகச்சீர்திருத்தம் பற்றியும்,நூல் தொகுப்பு முயற்சி பற்றியும் எடுத்துரைத்தார்.தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் வெளியூர் நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டியிருந்ததால் இடையில் விடைபெற்றுக்கொண்டார்.அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சோம.இராசேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பெரியார் சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு வெளிவர ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து உழைத்தவர் இவர்.இவர் தம் பதிப்புப்பணி பட்டறிவுகளையும், பெரியாரின் கொள்கை, அறிவுத்தெளிவையும் எடுத்துரைத்தார்.இந்தத் தொகுப்பில் நேர்ந்த சிக்கல்களையும் தோழர் வே.ஆனைமுத்துவின் அறிவுத்திறனையும் நினைவாற்றலையும் எடுத்துரைத்தார்.தந்தை பெரியார் கொள்கைகளை வே.ஆனைமுத்து அவர்கள் பரப்ப எடுத்துக்கொண்ட முயற்சி பற்றியும் விளக்கினார்.நூலின் உருவம், உள்ளடக்கம்,வெளியீடு என அனைத்து நிலைகளிலும் வே.ஆனைமுத்து மேற்கொண்ட முயற்சி பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.


தோழர் வே.ஆனைமுத்து உரையாற்றல்


நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்


தோழர் வே.ஆனைமுத்துவிடம் நான் நூல் தொகுதிகளைப் பெறுதல்

வெள்ளி, 26 மார்ச், 2010

புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கணினியும் தமிழும் செயல்முறை விளக்கம்


ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இரா.வளவன் உரை

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இன்று(26.03.2010) மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரை கணினியும் தமிழும் என்ற தலைப்பில் செய்முறை விளக்கத்துடன் என் உரை இடம்பெற்றது.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இரா.வளவன் அவர்கள் தலைமை தாங்கிக் கணினி,இணையப் பயன்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.

நான் கணிப்பொறி,இணையத்தின் சிறப்புகளை,செயல்முறைகளை இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்குப் பயிற்றுவித்தேன்.தமிழ்த் தட்டச்சு முதல் தமிழில் வலைப்பூ உருவாக்கம் வரை என் உரை நீண்டது.இணைய இணைப்பு கிடைக்கவில்லை. என் கையில் இருந்த காட்சி விளக்கத்தின் துணையுடன் செய்திகளை எடுத்துரைத்தேன்.

மதுரைத் திட்டத்தில் இருந்த தொல்காப்பியம் மூல வடிவத்தைக் காட்டி அதற்கு இணையான ஒலி வடிவைச் செம்மொழி நிறுவனப் பக்கத்திலிருந்து முன்பே நான் பதிவு செய்து வைத்திருந்ததைக் காட்டி மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் பயிற்றுவிக்க இணையம் உதவுவதை எடுத்துக்காட்டினேன். தமிழின் புகழ்பெற்ற தளங்கள்,தமிழ்க்கணினிக்கு உழைத்தவர்களை அறிமுகம் செய்து அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்தேன். கல்வி, இலக்கியம் சார்ந்த செய்திகளை ஆசிரியர் பயிற்சி பெறுபவர்கள் பயன்பெறத்தக்க வகையில் எடுத்துரைத்தேன்.

நிறைவாக மாணவர்கள் தங்கள் கருத்துரைகளை வழங்கினர்.தமிழ் விரிவுரையாளர் தேவி. திருவளவன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.பேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


பயிற்சியில் பயன்பெற்ற மாணவியர்


மாணவர்கள்-மாணவியர்


கருத்துரைக்கும் மாணவி

செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்!தகவல் தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது.இதனால் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களைத் தமிழால் தொடர்புகொள்ள முடிகிறது.தமிழ்ப்பணிகள் தனியொருவர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து பலரும் இணைந்து குழுப்பணியாகச் செய்யும் நிலை உருவாகியுள்ளது.தமிழ் நூல்கள் மின்னூல்களாக மாறியதும்,தமிழ் இதழ்கள் தேசம் கடந்த வாசகர்களைப் பெற்றதும் தமிழ் இணையத்தால் எனில் மிகையன்று. ஒருதுறை சார்ந்த ஆய்வு முயற்சிகளுக்குப் பலதுறை அறிவு பெற்றவர்கள் இணைந்து பணிபுரிவதற்கு வாய்ப்பு உருவாக்கியது இணையம் ஆகும்.அச்சு ஊடகங்களில் இருந்த தகவல்கள் மின்னணு ஊடகங்களுக்கு வந்ததால் தகவல்கள் பலமுனை வசதிகளைக் கொண்டதாக மாறியது.

அவ்வகையில் அச்சில் இருந்த அகரமுதலிகள் இணையத்தில் மின் அகரமுதலிகளாக மாறியதும் சொற்களுக்குப் பொருள்கள் என்ற நிலையிலிருந்து மாறி, கூடுதல் தகவல்களைக் கொண்டதாக மலர்ந்தது (ஒலிப்புமுறை, படங்கள், வரைபடங்கள், தொடர்புடைய சுட்டிகள், தொடர்புடைய பிறமொழிச் சொற்கள்).தமிழ் அகரமுதலிகள் பல இணையத்தில் மின்னகர முதலிகளாக உள்ளன.அவற்றுள் ஒன்று விக்கிமீடியா நிறுவனத்தின் தமிழ் விக்சனரியாகும். தமிழ் விக்சனரியினை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

விக்கிப்பீடியா என்ற தளம் பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.இது பன்மொழியில் தகவல்களைத் தரும் தளமாகும்.அமெரிக்க இணையத்தொழில் வல்லுநரான சிம்மி வேல்சு,அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் இருவராலும் உருவாக்கப்பட்ட இத்தளம் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழியில் உருவாக்கப்பட்டது. விக்கிமீடியா பவுண்டேசன் இதனை நடத்திவருகிறது.உலக அளவில் கல்வி இன்று வணிக மயமானது எண்ணி வருந்திய இவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் 'அனைவருக்கும் உயர்வான அரியக் கல்வி' என்ற எண்ணத்தின் அடிப்படையில் பிறந்ததே விக்கிமீடியாத் திட்டமாகும்.

'விக்கி' என்ற அவாய் மொழிச் சொல்லுக்கு, 'விரைவு' என்று பொருளாகும். விக்கித் தொழில் நுட்பம் மூலம், பல அரிய செயல்களை, விரைவாகச் செய்ய முடியும். அதனால் பல்வேறு மொழிகளைத் தமிழ் மொழியுடன், உடனுக்குடன் விரைவாக, ஒப்பிட்டு நமது தரத்தைக் கண்டுணர முடியும். கல்வியில் சிறக்காமல் எந்த விரைவான வளர்ச்சியையும் நம்மால் எட்ட முடியாது. இந்த இணையத்தள வடிவமைப்புக்கான 'விக்கிமொழியினைக்' கற்பது மிகவும் எளிது. அவ்வாறு அறிவதன் வழியாக ஒவ்வொரு மொழியினரும் அவரவர் மொழிக்குத் தொண்டாற்றமுடியும்.


உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன.அதாவது ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரநிரலில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது. ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது.2002 திசம்பர் 12 இல் ஆங்கில விக்சனரி உருவானது.172 மொழிகளுக்கான விக்சனரிகள் விக்கிப்பீடியா வழியாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.தமிழ் விக்சனரி இலக்கியம், இலக்கணம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்ச்சொற்களுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தருகிறது.

தமிழ்விக்சனரி தோற்றம்: பங்களிப்பு

தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004 இல் தொடங்கப்பட்டது. இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும்,ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரிபவரும், கணினித்துறையில் ஈடுபாடுடையவருமான மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கட்டுரைகள் பல உருவாக்கி உள்ளிட்டவர்.இவரே தமிழ் விக்சனரிக்குப் பங்களித்தவராக அனைவராலும் குறிப்பிடப்படுகின்றார்.இவரைத் தொடர்ந்து இரவி,சுந்தர், செல்வா, மயூரன்,பழ.கந்தசாமி,தகவல் உழவன்,ஆமாச்சு, சிவக்குமார், பரிதிமதி,நக்கீரன் உள்ளிட்டவர்கள் மிகுதியாகப் பங்களித்துள்ளனர்.இவர்களுள் சுந்தர் அவர்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பக்கத்தில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த சொற்களைத் தானியங்கிமுறையில் விக்கியில் ஏற்றியுள்ளார்.இவ்வகையில் சற்றொப்ப ஓர் இலட்சம் சொற்கள் பதிவேறியுள்ளதாக அறியமுடிகிறது.

பேராசிரியர் செல்வா அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களைப் பதிவேற்றியுள்ளார். தகவல் உழவன் அவர்கள் உயிரியல் சார்ந்த சொற்களைத் தமிழ் விக்சனரியில் இணைத்துள்ளார். பழ.கந்தசாமியின் பங்களிப்பும் தனித்துச் சுட்டத்தக்கது.

தமிழ் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடக்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களாகவும் அதற்குரிய விளக்கங்களாகவும் உள்ளன.பலதுறை சொற்களாக இன்று விரிவுபெற்று காணப்படும் தமிழ் விக்சனரி 1,05,390 சொற்களைக் கொண்டு(23.02.2010) உலக அகரமுதலிகளில் 14 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ்விக்சனரிஅமைப்பு

தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன், இந்தி, மலையாளம், கன்னடம்) உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. தமிழில் ஒலிப்புமுறை தொழில்நுட்பம் முழுமை பெற்றால் தமிழ் விக்சனரியையும் ஒலிப்புமுறை கொண்ட வசதியுடைய மின்னகரமுதலியாக மாற்றமுடியும்.தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட படங்களும் உள்ளன.தொடர்புடைய இணைப்புகளும் அதனை விளக்கும் கட்டுரைகளும் உள்ளன.சுருங்கச்சொன்னால் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்களைப் பற்றியபடி உலக அளவில் பல தளங்களுக்குச் செல்லவும்,பல செய்திகளைப் பார்வையிடவும் வாய்ப்பு உண்டு.அச்சு நூல்களில் இத்தகைய செய்திகளைக் காண்டல் அரிது.இலக்கணம் சார்ந்த செய்திகளையும் விக்சனரி சிறப்பாகக் கொண்டுள்ளது.

தமிழ் விக்சனரியைப் பயன்படுத்தும் முறை

தமிழ் விக்சனரியைப் பயன்படுத்த நேரடியாகத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் சென்று,தமிழ் விக்சனரி என்ற தலைப்பை அழுத்தி அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து, சொற்களுக்கு உரிய பொருள் அறியலாம்.அல்லது கூகுளில் சென்று ஆங்கிலச்சொல்லைத் தட்டச்சிட்டு, தமிழ் என்று அருகில் அச்சிட்டால் நமக்குரிய தமிழ்ச்சொற்பொருள் விக்கிப்பீடியாவில் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாகக் கூகுள் தேடுபொறிக்குச் சென்று ஆங்கிலத்தில் mother என்று ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு, அருகில் தமிழ் என்று தட்டச்சிட்டுத் தேடத் தொடங்கினால் நாம் விக்சனரியின் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோம். mother என்று தலைப்பும் அதன் அடியில் ஒலிப்பு வசதி,பெயர்ச்சொல் என்ற குறிப்புகள் காணப்படும்.இதில் mother என்பதற்குத் தாய்,அம்மா, அன்னை என்று விளக்கம் தரப்பட்டிருக்கும்.இதில் உள்ள தாய் என்ற சொல்லை அழுத்தினால் தாய் என்பதற்கு அம்மா எனவும் தாய் ஒரு மொழி எனவும்(தாய்லாந்தில் பேசப்படும்மொழி) குறிப்பு இருக்கும்.இதில் உள்ள அம்மா என்பதைச் சொடுக்கினால் அடுத்த ஒரு பக்கம் விரியும்.

அம்மா என்ற சொல் பற்றிய பகுதியாக இருக்கும் இப்பக்கத்தில் அம்மா என்ற சொல்லுக்கு உரிய சொற்பிறப்பு,பெயர்ச்சொற்கள் என்ற இரண்டு பெரும் பிரிவில் செய்திகள் அடக்கப் பட்டிருக்கும். சொற்பிறப்பு விவரிப்பதற்குத் தலைப்பு உள்ளது(இனிதான் சொல்லாய்வாளர்கள் அந்தப் பகுதியை முழுமைப்படுத்த வேண்டும்). அம்மா என்பதற்கு 1.தாயை விளிப்பதற்குப் பயன்படும் சொல். 2.மரியாதைக்குரிய பெண்களை விளிப்பதற்குப் பயன்படும் சொல் என்று குறிப்புகள் இருக்கும்.அதனை அடுத்து மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் மலையாளம், இந்தி, தெலுங்கு,ஆங்கிலம்,பிரஞ்சு,செர்மன் உள்ளிட்ட மொழிகளில் mother என்ற சொல்லை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதற்கு உரிய சொல் பார்வையிடும் வசதியும் உள்ளது(சில மொழிகளில் விடுபாடு உள்ளது).

தொடர்புள்ள சொற்கள் என்ற தலைப்பில் அன்னை,தாய், அம்மம்மா, அம்மாச்சி, அம்மான், அம்மன்,அம்மாயி என்ற சொற்கள் உள்ளன. இவற்றையும் பார்க்க என்ற தலைப்பில் "அப்பா" என்ற சொல் உள்ளது.அதனைச் சொடுக்கிப் பார்த்தால் அப்பா என்பதற்குத் தந்தை என்ற விளக்கமும் ஆங்கிலம், இந்தியில் இச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்ற குறிப்பும் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேடுக பகுதியில் pongal என்ற சொல்லைத் தட்டச்சிட்டுத் தேடப் புகுந்தால் பொங்கல் தொடர்பான பல சொற்கள்,படங்கள் நமக்குக் கிடைக்கும்.சர்க்கரைப் பொங்கல்,வெண்பொங்கல், கதிரவன்,கரும்பு, பானை, மஞ்சள்,சல்லிக்கட்டு,அறுவடை சார்ந்த பல சொற்களும் தொடர்புடைய படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.ஒரு சொல் தேடலுக்குச் சென்றால் சொல்தேடல் என்று இல்லாமல் பலவகை படங்களையும் தகவல்களையும் தந்து நம்மை அகராதிப் பயன்படுத்தும் ஆர்வலர்களாக மாற்றுவதில் விக்சனரி முக்கிய பங்கு வகிக்கிறது. தைப்பொங்கல் என்ற தலைப்பில் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளதை அறிவிக்கும் ஒரு தொடுப்பும் உள்ளது.

அவ்வாறு நாம் தேடும் தமிழ்ச்சொல்லையோ, ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லையோ சார்ந்திருக்கும் சொற்பொருள் விளக்கங்கள் யாவும் சிறப்புடன் பொருள் உணர்த்த விக்கிப் பங்களிப்பாளர்கள் கொண்டிருக்கும் முயற்சியைப் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ் விக்சனரியில் சொற்களை உள்ளிடுவது எப்படி?

தமிழ் விக்கிப்பீடியாவை முறையாகப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று.நம்முடைய பயனர்பெயர்,கமுக்கக்குறியீடு உள்ளிட்டவற்றை வழங்கி, கலைந்த எழுத்துகளை உற்றுநோக்கி,நம் மின்னஞ்சல் முகவரி வழங்கிப் பதிந்தால் நம் பெயரை ஏற்றுக்கொண்டு நமக்கு மின்னஞ்சல் வழி விக்கிமீடியா நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பும்.அம்மடலைத் திறப்பதன் வழியாக நாம்தான் கணக்குத் தொடங்கியுள்ளோம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.அதன் பிறகு விக்சனரி பக்கத்தில் புகுபதிவு செய்துகொண்டு நாம் விக்சனரியைப் பயன்படுத்தலாம். புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச்செய்யலாம்.நம் கணிப்பொறியின் ஐ.பி.எண் விக்கிப்பீடியா தளத்தில் பதிவாகும்.எந்தக் கணிப்பொறியிலிருந்து திருத்தப்பட்டது என்ற விவரத்தைக் கண்டுபிடிக்கமுடியும்.

சொற்களை உள்ளிடுவது...

விக்கிப்பீடியாவின் விக்சனரியில் முன்பே சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாம் பதிவு செய்ய நினைக்கும்சொல் முன்பே பதிவேறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள தேடுக பகுதியில் சென்று ஒருங்குகுறி எழுத்தில்(தமிழ் என்றால்)நாம் பதிவிட நினைக்கும் சொல்லைத் தட்டச்சிட வேண்டும்.இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு திட்டப்பக்கம் பகுதியில் உள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்ற தலைப்பை அழுத்த வேண்டும். புதிய பக்கத்தை உருவாக்கவும் என்ற பகுதியில் உள்ள கட்டங்களில் ஆங்கிலம், தமிழ் இந்தப் பகுப்பில் பெயர்,வினை,உரிச்சொற்களுள் உரியனவற்றை ஆராய்ந்து அந்தப் பெட்டியில் நாம் உள்ளிட நினைத்த சொற்களை இட்டு அதற்குரிய விளக்கங்களை விக்சனரியில் கொடுத்துள்ள விளக்கக் குறிப்புகளைக் கொண்டு உள்ளிடமுடியும்.


சொற்களைச் சேர்க்க உதவும் பெட்டிகள்

இவ்வாறு தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் உள்ளிடுவதன் வழியாகத் தமிழ்ச்சொல்வளத்தை உலக அரங்கில் எடுத்துரைக்கமுடியும். படங்கள்,ஒலிப்புமுறைகள், அட்டவணைகள், கட்டுரைத் தொடுப்புகளை வழங்கத் தமிழ்ச்சொல் பற்றி அறிய விரும்புவோருக்குப் பேருதவியாக இருக்கும்.

தமிழ் விக்சனரியின் முதற்பக்கம்

தமிழ் விக்சனரியின் முதற் பக்கத்தில் தமிழ் விக்சனரி பற்றிய விவரங்கள் உள்ளன.இதில் சொற்களைத் தேடுவதற்கு வாய்ப்பாக தமிழ்எழுத்துகள்,ஆங்கில எழுத்துகளின் முதல் எழுத்துகள் இருக்கும் இவற்றின் துணைகொண்டும் தேடலாம்.மேலும் சொற்பகுப்புகள், பின்னிணைப்புகள்,அண்மைப் பங்களிப்புகள் என்ற தலைப்புகளைச் சொடுக்கியும் ஒவ்வொரு பயன்பாட்டைப் பெறலாம்.

பின்னிணைப்புகள் என்ற தலைப்பைச் சொடுக்கும்பொழுது தமிழ்ச்சொற்கள் பல வகைப்பாட்டில் இருப்பதை அறியலாம்.இன்னும் தொகுக்கப்பட வேண்டிய செய்யப்பட வேண்டிய பணிகள் நிறைய இருப்பதை இந்தப் பகுதி நமக்குக் காட்டுகிறது.பின்னிணைப்புகள் பகுதியில் தமிழ் எழுதப்பழகு,கலைச்சொற்கள், தமிழ் அகராதி,பின்னிணைப்புகள் என்ற குறுந்தலைப்புகள் இருக்கும்.இதில் தமிழ் எழுதப் பழகு என்ற பகுதியில் தமிழ் எழுத்துகளை எவ்வாறு எழுத வேண்டும் என்ற காட்சி விளக்கம் உள்ளது.

அதுபோல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆங்கிலம்,ஆங்கிலம் தமிழ் என்ற இரு வகையில் சொற்கள் பகுக்கப்பட்டுள்ளன.தமிழ் ஆங்கிலம் என்ற வகையில் முதலில் தமிழ்ச்சொற்களும் அடுத்து அதற்குரிய ஆங்கிலச்சொற்களும் எந்தத்துறையில் இந்தச்சொல் பயன்படுகிறது என்ற குறிப்பும் உள்ளன.அதுபோல் ஆங்கிலம் தமிழ் என்ற வகையில் ஆங்கிலச் சொல்லும் அதற்குரிய தமிழ்ச்சொல்லும் எந்தத்துறையில் பயன்படுகிறது என்ற விவரமும் உள்ளன.

தமிழ் அகராதி என்ற பகுப்பில் பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் குறித்த அகராதியாக இது உள்ளது.இப்பகுதி இன்னும் வளப்படுத்த வேண்டிய பகுதியாக உள்ளது. பின்னிணைப்புகள் என்ற பகுதியில் நாடுகள், பறவைகள்,விலங்குகள் முதாலானவற்றின் பெயர்களைக் குறிக்கும் சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழ்நூல் பட்டியல் என்ற குறுந்தலைப்பில் உள்ள நூல் பட்டியல் நீண்டு வளர்க்கப்பட வேண்டிய பகுதியாகும். கல்வித்துறைகள் என்ற பகுப்பில் உள்ள தலைப்புகள் தொடர்பான பல சொற்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது அப்பட்டியலைப் பார்வையிடும்பொழுது நமக்குத் தெரிகிறது.

தமிழ் விக்சனரியை வளப்படுத்துவதன் வழியாகத் தமிழ்ச்சிறப்பை உலகுக்கு அறிவிக்க முடியும்.இதற்குப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் தேவையாக உள்ளது.

தமிழ் விக்சனரி சொல் தொகுப்பு மூலங்கள்

தமிழ் விக்சனரியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி(http://dsal.uchicago.edu/),பால்சு அகராதி,தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் அகராதி,கிரியா அகராதி,கழக அகராதி,வின்சுலோ அகராதி,பெப்ரியசு அகராதி உள்ளிட்ட அகராதிகளிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.தனிமாந்தர்களின் பங்களிப்பும் உண்டு.அகராதியில் இடம்பெற்றுள்ள சொற்களுக்கு மேற்கண்ட அகராதிகளின் பொருள்களே உள்ளன. பதிவுரிமைச் சிக்கலால் இந்த விக்சனரியில் தனிநபர்,நிறுவனங்களின் அகராதிகளில் இடம்பெற்றுள்ள சொற்களை இணைப்பதில் தேக்கம் காணப்படுகிறது.எனினும் முற்றாகப் பதியபடாமல் பகுதியாகப் பன்படுத்திக் கொள்வதாலும் அடிக்குறிப்பு வழங்குவதாலும் ஒரு உயர்நோக்கில் பன்னாட்டவருக்கும் பயன்படுவதாலும் இதில் சட்டச் சிக்கல் என்று தயங்க வேண்டியதில்லை. இணைக்கபடாமல் உள்ள சொற்களைப் பகுதி வாரியாக இணைக்க அகராதியியல் அறிஞர்கள் விக்சனரிக்கு முன்வந்தால் விக்சனரி பலநிலைப் பயன்பாட்டு அகராதியாக வளரும்.

தமிழாசிரியர்களின் / ஆய்வாளர்களின் பங்களிப்பு

விக்சனரி தன்னார்வலர்களால் உருவாக்கப்படுவது.எனவே தமிழார்வம் ஒன்றையே பற்றுக்கோடாகக்கொண்டு பணிபுரியும் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவத்துறை சார்ந்த ஆர்வலர்கள் எழுதும் தமிழில் உள்ள பிழைகளை,வழுக்களை நீக்குவதில் தமிழறிந்தோர் முன்னிற்கலாம்.அதற்குரிய எளிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டால் இப்பிழை நீக்கப் பணியில் இணையலாம்.

நமக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்க விக்கி ஆர்வலர்கள் அணியமாக இருப்பதால் நம் அறியாமையாலும் கவனக்குறைவாலும் செய்யும் சிறுபிழைகள் தொடர்பாகக் கவலைகொள்ளாமல் பணியாற்றலாம்.உலகெங்கும் பரவி வாழும் தமிழார்வலர்களும் விக்கி ஆர்வலர்களும் இவற்றை உடனுக்குடன் கண்ணில்பட்டதும் சரி செய்துவிடுவார்கள்.

விக்சனரியில் சில குறியீடுகள்

தட்டச்சுப் பலகைகளில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் சில விசைகளே, விக்கித் திட்டங்களுக்கு அடிப்படை ஆகும். அனைத்து மொழிகளுக்கும், இக்குறியீடுகளே அடிப்படை விக்கிமொழியாகும்.

விக்சனரியில் நாம் சொற்களை இணைக்கும்பொழுது சில குறியீடுகளை நினைவிற் கொண்டால் மிக எளிதாகப் புரிந்துகொண்டு சொற்களை உள்ளிடலாம்.சொல் தொகுப்புக்குரிய பெட்டியில் சில வடிவமைக்கப்பட்ட குறியீடுகள் உள்ளன.அவற்றின் உதவியால் சொற்களைச் சிறப்பாக அடையாளப்படுத்த முடியும்.

[[ ]]

{{ }}

*

#

|

= =

=

என்பன சில குறியீடுகள்.

எந்தவொரு சொல்லுக்கேனும் உள்ளிணைப்பு (அச்சொல்லைச் சொடுக்கினால் வேறு இடத்துக்கு இட்டுச்சென்று குறிப்புகள் காட்டும், மீசுட்டு) வேண்டும் எனில் [[ ]] என்ற குறி பயன்படுத்தப்படுகிறது. {{ }} என்பது"வார்ப்புரு" வைப் பதியப் பயன்படுத்தப்படுகிறது. (அதாவது ஒரு குறிப்பிட்ட அறிவிப்புப் பட்டையையையோ, ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஓர் அட்டவணையையோ இடும் வார்ப்புரு (templete)).

ஒரு வரியின் முதலில் * என்று இட்டால் அது ஒரு பட்டியல் போல் வரும்.ஒரு வரியின் முதலில் # என்று இட்டால் அந்தப் பட்டியலில் உள்ளவை வரிசைப்படி 1, 2, 3 என்று தானே சீராக வந்துவிடும் (1, 2, 3 எல்லாம் போடவேண்டியதில்லை).

நெடுக்குக் குறி (பைப், pipe) பிரிப்பைக் காட்டுவது ( எடுத்துக்காட்டாகப் படங்கள் இடும் பொழுது அதன் அளவு, பட விளக்கம்,இடப்பக்கம் இருக்க வேண்டுமா வலப்பக்கம் இருக்க வேண்டுமா என்றெல்லாம் காட்ட [[படிமம்:Tamil.jpg|thumb|right|250px|15 ஆவது நூற்றாண்டு தமிழ் எழுத்துகள்]] என்றெல்லாம் இடும்பொழுது பிரித்துக்காட்ட (right|250px..)இடும் குறியாக இது பயன்படுத்தப்படுகிறது.

பதிவேற்றப்பட்டவைகளைப் பற்றிய, பல விபரங்கள் (யார், எந்த நேரத்தில், எந்நாளில் போன்றவைகள்) தானாகவே பதிவாகிவிடும். ஒரு சொல்லைத் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ பிறர் அழித்து விட்டால், அதை வெகு சுலபமாக மீட்டெடுக்க முடியும்.

இயற்றப்பட்ட கட்டுரையைப் போன்ற கட்டுரை, பிற மொழியில் இயற்றப்பட்டிருந்தால் அதுவும் தானாகவே இணைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப் படும் வசதியும் உண்டு.

தமிழிலக்கணப் பதங்கள்

தமிழ் விக்சனரியில் தமிழிலக்கணப் பதங்கள் என்ற ஒரு பகுப்பு உள்ளது.இதில் தமிழறிஞர்களின் பங்களிப்புக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.தமிழ் வினைச்சொற்கள், பல்பொருள் ஒருமொழி என்ற இரு பகுப்பில் பல சொற்களுக்குரிய விளக்கம் தரப்பட்டுள்ளன. தமிழிலக்கணப் பதங்கள் என்ற பகுப்பில் 47 பக்கங்களில் கட்டுரைகள் உள்ளன என்ற குறிப்பு காணப்படுகிறது. அ,ஆ,இ,உ,எ,ஒ,க,ச,த,ந,ப,ம,வ,என்னும் தொடக்க எழுத்துகளில் உள்ள சொற்கள் இடம்பெற்றுள்ளன.இதில் "ம"தொடக்கத்தில் உள்ள மாத்திரை என்ற சொல்லை அழுத்தினால் தமிழ் யாப்பில் மாத்திரை என்பதைக் குறிக்கும் விளக்கமும் கண்ணை இமைத்துக் காட்டும் காணொளிப்படமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

விக்சனரியில் இடப்பக்கத்தில் உள்ள வழிசெலுத்தல்,தேடுக,கருவிப்பெட்டி என்ற மூன்று குறிப்புகளைக் கவனிக்க வேண்டும்.வழி செலுத்தல் என்பது முதற்கட்டமாக விக்சனரி விவரங்களை அறியும் பகுதியாகும்.தேடுக என்ற பகுதியில் உள்ள பெட்டியில் நமக்குத் தேவையான சொற்களை ஒருங்குகுறி எழுத்தில் தட்டச்சிட்டுத் தேடலாம்.அதுபோல் கருவிப்பெட்டி என்ற பகுதியில் உள்ள சிறப்புப் பக்கங்கள் என்ற பகுதிகள் குறிப்பிடத்தகுந்த பகுதியாகும்.இதில் உள்ள பகுப்புகளைக் கொண்டு விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்களை நாம் பார்வையிடலாம்.

காப்புரிமை என்ற பெயரில் தமிழின் சொல்வளம், குடத்திலிட்ட விளக்காக ஒரு சிலரிடத்தில் இருக்கின்றன. நிதியுதவி செய்யும் ஆதரவாளர்கள் இருந்தும், தரமாகத் தமிழில் தட்டச்சு செய்யப் பங்களிப்பாளர்கள் இல்லை. மேலும் விரைவாகப் பதிவேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

வளர்நிலையில் இருக்கும் தமிழ் விக்சனரிக்குத், தமிழ் முன்னணியில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், முனைப்பாகச் செயல்படுபவர் கள்வேண்டும். அத்தகையவர் தமிழ் விக்சனரியின் 'ஆலமரத்தடி' என்ற பகுதியில் இருக்கும், TamilBOT என்ற துணைப்பிரிவில், தங்கள் பெயரை, மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்தால், பதிவு செய்தவருக்கு உரிய நேரத்தில், செய்ய வேண்டியப் பணிகள் குறித்து குறிப்புகள் அனுப்பப்படும். அதில் அவரவருக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப்பணிச் செய்யலாம். தமிழ் விக்சனரி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தமிழ்வளம் காட்டும் களமாகவும் தளமாகவும் உள்ளது.

நனி நன்றி: தினமணி நாளிதழ்(23.03.2010)சென்னை
(தினமணியில் வந்த என் கட்டுரையின் முழுவடிவம்)
* கட்டுரை முழுமையடைய கருத்துரை நல்கிய விக்கித் திட்ட நண்பர்களுக்கு நன்றியன்

திங்கள், 22 மார்ச், 2010

செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகள் வழங்கும் விழா

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் குடியரசுத் தலைவரின் தொல்காப்பியர் விருது மற்றும் 15 இளம் அறிஞர் விருதுகளுக்கான 20 இலட்ச ரூபாய் பொற்கிழிகள் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி வரும் 28ஆம் தேதி சென்னையில் வழங்குகிறார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் அறிஞர் ஒருவருக்கு 5 இலட்ச உரூபாய் பொற்கிழியுடன் தொல்காப்பியர் விருதும், அயல்நாட்டு அறிஞர் ஒருவருக்கும், அயல்நாடு வாழ் இந்தியர் ஒருவருக்கும் தலா 5 இலட்ச உரூபாய் பொற்கிழி கொண்ட குறள்பீட விருதும் வழங்கப்பட உள்ளது.

மேலும் இளம் தமிழறிஞர்களிடையே தமிழ் ஆராய்ச்சித் திறனை வளர்த்திடும் நோக்கில் தலா ஒரு இலட்ச உரூபாய் பொற்கிழியுடன் 5 இளம் அறிஞர் விருதுகளும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி 2005 - 06ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெறுவோர் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இந்த விருதுகளை வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கவுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

நனி நன்றி: நக்கீரன் இணையத்தளம்

ஞாயிறு, 21 மார்ச், 2010

தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய சிங்கப்பூர் கோவலங்கண்ணன் அவர்களின் கருத்துரை

சிங்கப்பூரில் வாழும் திரு.கோவலங்கண்ணனார் தமிழ்ப்பற்றும் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் கொண்டவர்.பிறதுறைகளில் கடமையாற்றினாலும் தமிழ்ப்பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாவாணர் நூல்கள் வெளிவரவும்,பாவாணர் புகழ் பரவவும் பாடுபட்டு வருபவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழிசை வளர்ச்சிக்கு அறக்கொடை நிறுவியவர்.சிங்கப்பூரில் தமிழறிஞர்களை அழைத்துப் போற்றி வரும் இவர் அண்மையில் எழுத்துச்சீர்திருத்தம் தேவையில்லை என்று எனக்கு எழுதிய மடலைத் தேவை கருதி அவர் இசைவுடன் என் பக்கத்தில் வைக்கிறேன்.அதுபோல் தமிழ் எழுத்துப் பற்றி முன்பு சிந்தித்து வெளியிட்ட அறிக்கையையும் தேவை கருதி வைக்கிற்றேன்.


திரு.கோவலங்கண்ணனார் மடல் கீழே உள்ளது.

இன்று தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாது தேவைப்படுவது தமிழை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் முழுமையாக ஆளுமைப்படுத்துவதேயன்றி, எழுத்துச் சீர்மையன்று. சீர்மை வேண்டுவோர் முன்பெல்லாம் தட்டச்சையும் கணிப்பொறியையும் காட்டி அவற்றைத் தமிழில் இயக்குவது அரிது என்றும் இடர்ப்பாடு மிக்கது என்றும் கூறிவந்தனர். இன்றோ கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் தமிழை இனிதே பயன்படுத்துகிறோம். கணிப்பொறி அறிவியல் விண்ணைத் தொட்டுவிட்டது. கணிப்பொறியில் தமிழையும் பிற மொழிகளையும் ஒலி ஒளி வடிவில் எளிதில் செலுத்திப் பயன்படுத்தும் வழி பிறந்துள்ளது. விசைப் பலகை (key board)யின்றி, எழுதுகோல் கொண்டு சிலேட்டில் அல்லது தாளில் இயல்பாக எழுதுவது போல் கணிப்பொறி திரையில் இப்போதுள்ள நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் கணிப்பொறியில் பதிவு செய்ய முடியும்.

இப்போது இக்கூற்றை விட்டுவிட்டுத் தமிழைத் தங்களால்தான் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் ‘அறிஞர்கள்’, இன்றையத் தமிழ் வரிவடிவம், நம் குழந்தைகள் தமிழைக் கற்பதற்குத் தடையாகவும் தொல்லையாகவும் இருப்பதாக, மற்றொரு பொய்யான கரணியத்தை முன் வைத்து எழுத்து சீர்மையை வேண்டும் என்கின்றனர்.

இவர்கள் கூறும் கரணியம் பொருந்தாது என்பதனைத் தமிழ்ப் பெற்றோராகிய நாம் நன்கு அறிவோம். நானும் அறிவேன். என் பிள்ளைகளுக்குத் தாய் மொழி சீனம். தந்தை மொழி தமிழ். அவர்கள் எவ்விதச் சிக்கலும் இல்லாமல் தமிழைப் படித்தார்கள். என் தலைமகளுக்குத் தமிழ் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்த போதே மற்ற இரு பிள்ளைகளும் தானாகவே கற்றுக் கொண்டார்கள். மேல்நிலை 12 ஆம் வகுப்பு வரை தமிழைப்படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள்.இங்கே நாம் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ் அரிச்சுவடியை ஒரு சில நாள்களில் கற்று, எழுத்துக் கூட்டி, தமிழ் நாளிதழையோ நூலையோ படிக்க இயலும்.சீன மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஒருவர் சீன நாளிதழையோ நூலையோ படிப்பதற்குக் குறைந்தது இரண்டாயிரம் வரிவடிவங்களை மனனஞ் செய்திருக்க வேண்டும். இது போல் ஆங்கில அரிச்சுவடியைக் கற்ற பின் எழுத்துக் கூட்டி ஆங்கில நாளிதழையோ நூலையோ படித்தல் இயலாது என்பது நாடறிந்த உண்மை.

இவை இப்படியிருக்கத் தமிழைக் கற்றல் கற்பித்தல் கடினம், கடினம் என்று பிதற்றுவது முறையாகுமோ?

எழுத்துச் சுருக்கமோ வரி வடிவ மாற்றமோ நம் மொழியை வாழ வைக்காது. மாறாகச் சீர்குலையச் செய்து விடும்.

மொழி வாழ வளர வேண்டுமென்றால் அது பேச்சு மொழியாகவும் மக்கள் வழக்கு மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழை வாழ வைக்க தமிழ் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நிலை நாட்ட வேண்டும்.
அதன் பின் எழுத்து சீர்மை வேண்டின் தமிழறிஞர்கள், மொழி நூல் வல்லார்கள், கணிப்பொறி வல்லார்கள் ஒன்று கூடி முடிவு செய்யலாம்.
வாழ்க தமிழ்!

அன்பன்
வெ.கரு. கோபாலகிருட்டிணன் (வெ.கரு. கோவலங்கண்ணன்),
முதல்வர், வணிகக் கல்விச் சாலை, சிங்கப்பூர்
மடல்நாள் 20.03.2010


செவ்வாய், 16 மார்ச், 2010

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என் கட்டுரையும், அறிஞர் வா.செ.குழந்தைசாமியாரின் மறுப்புக் கட்டுரையும்

அறிஞர் வாங்கலாம்பாளையம் செ.குழந்தைசாமியார் இந்திரகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர் என்பதும்,இணையப் பல்கலைக்கழகத்தின் இந்நாள் தலைவராகவும் இன்னும் அரசு சார்ந்த பல நிறுவனங்கள்,அமைப்புகளில் பலநிலைகளில் பொறுப்பேற்றுள்ளவர் என்பதும் நாம் அறிந்ததே.செம்மொழி மாநாட்டின் தலைமைக் குழுவின் துணைத்தலைவராகவும் இவர் உள்ளார்.சற்றொப்ப அரை நூற்றாண்டுக்காலம் அரசின் உயர் பொறுப்புகளில் இருந்ததால் இவரைக் கல்வியாளர் என்று தமிழ் உலகு மதிக்கிறது.இவர்தம் நூலுக்குப் பேராசிரியர்கள் பலர் திறனாய்வு,ஆய்வுரை, மதிப்புரை,அணிந்துரை எழுதியதுடன் அமையாமல் கருத்தரங்குகள் நடத்தியும்,கூடிப்பேசியும் இவர்போல் ஒரு கவிஞர் இல்லை என்று இன்றுவரை வாயாரப் புகழ்ந்து போற்றிப்பாடியும் வருகின்றனர்.

அவ்வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் பயின்றபொழுது எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பில் ஒரு கருத்தரங்கும் அறிஞர் வா.செ.கு.அவர்களை மகிழ்ச்சிப்படுத்த நடத்தப்பெற்றது.கருத்தரங்கு நடந்ததன் நோக்கம் அறிஞர் வா.செ.கு.அவர்களின் எழுத்தை நடைமுறைப்படுத்த வழி செய்வதே ஆகும். ஆனால் அங்கு வந்த அறிஞர் இரா.திருமுருகனார்,இறைவிழியனார், தமிழண்ணல், பாலசுந்தரனார் உள்ளிட்டவர்கள் (பெயரில் என் நினைவுக்குறையால் மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு)எழுத்துத் திருத்தம் வேண்டாம் என்று வாதிட்டனர்.திருத்தம் வேண்டும் என்றவர்கள் அவரவர்களின் மனம்போன போக்கில் எழுத்தைத் திருத்தலாம் என்றும் தங்கள் திருத்தமே சிறந்தது என்றும் வாதிட்டனர். ஒருவர் தமிழ் எழுத்துகளே வேண்டாம் அனைத்தையும் ஆங்கிலக்குறியீடுகளில் வரையலாம் என்றதுதான் உச்சக்கட்ட வேடிக்கை.இன்னொருவர் புதிய ஐந்து குறியீடுகளில் தமிழை எழுதிவிடலாம் என்றார்.

இன்றும் கூட சில அன்பர்கள் ஆங்கில எழுத்தைகளைப் பயன்படுத்தித் தமிழை எழுதலாம் என்றும் தமிழ்க்குறியீடுகளே வேண்டாம் என்றும் மீயுயர் புரட்சிக்கு வித்திடுகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்று நாளும் என் கையில் ஒரு தாளைத் திணிப்பது வழக்கம்.இப்படி ஆள் ஆளுக்குத் திருத்தம் செய்யும் அளவில் தமிழ் இல்லை என்பதை முதலில் மனத்தில் பதிக்க வேண்டும்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் ஒலி,எழுத்துப் பிறப்பு பற்றி இலக்கணப் புலவர்கள் சிந்தித்து எழுதி வைத்துள்ளதைக் கண்டு மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் வியக்கின்றனர்.அப்படியிருக்க வறியவன் கையில் கிடைத்த அணிகலன் போலத் தமிழ்மொழியின் அருமை அறியாத சிலரிடம் தமிழ்த்தலைமை அகப்பட்டுக்கொண்டதால் தமிழர்கள் யாவரும் கலங்கி நிற்கின்றோம்.

அதனால்தான் தமிழண்ணல்,இரா.இளங்குமரனார்,பொற்கோ,இரா.இளவரசு போன்ற ஊற்றம் செறிந்த தமிழ்ப் பேரறிஞர்களை ஒதுக்கிவிட்டு நாட்டில் பல களியாட்டங்கள் நடந்துவருவதை எம்மனோர் கண்டு வருத்தம்கொள்ள வேண்டியுள்ளது.இன்று தமிழகத்தில் முற்றகாத் தமிழ் வழிக்கல்விக்குரிய வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன.அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழ் வழிப்பள்ளிகள் நடைமுறையில் உள்ளன.ஏழை,எளிய குடும்பம் சார்ந்த பிள்ளைகள் தமிழ் வழியில் படித்து வருகின்றனர். அக்குழந்தைகளின் படிப்புக்கும் வேட்டு வைக்கும் வகையில் இன்று எழுத்துத் திருத்த முயற்சிகளும் அயல்நாட்டில் வாழும் சிலரின் மத்தள வேலைகளும் உள்ளன.

பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வேட்டிலும் வேறு சில நூல்களிலும் அறிஞர் வா.செ.கு.அவர்களை யான் அவரின் பாப்புனையும் ஆற்றல் போற்றி எழுதியுள்ளதும் இங்கு நினைவிற் கொள்ளத் தக்கதே.அறிஞர் வா.செ.கு.அவர்கள் நீரியல்துறையில் வல்லுநர் என அன்பர்கள் குறிப்பிடுவது உண்டு.ஆனால் அது தொடர்பான அவர் கட்டுரைகள்,நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் அவரின் எழுத்துச்சீர்திருத்தம்,அறிவியல் தமிழ்,வள்ளுவம் சார்ந்த நூல்கள் இவற்றைப் படித்துள்ளேன்.அவர் பொழிவுகளைப் பல இடங்களில் கேட்டுள்ளேன்.அவரின் நாற்பதாண்டுக் கால முயற்சியான எழுத்துத்திருத்தம் என்பது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்று நினைத்து, அண்மைக்காலமாக அதனைத் தீவிரப்படுத்தி,தம் செல்வாக்கு கொண்டு நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார்.தமிழறிஞர்கள் பலரும் காலந்தோறும் இவரின் எழுத்தையும் பேச்சையும் கண்டித்தே வந்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள சொம்மொழி மாநாட்டில் எழுத்துத் திருத்தம் தொடர்பில் ஓர் ஆணை பெற்று விட வேண்டும் என்று அரசியலின் உயர்மட்டத் தலைவர்களின் துணையுடன் பல முயற்சிகளைச் செய்து வருகிறார்.

அதன் ஓர் அடையாளமாகப் பொதிகைத் தொலைக்காட்சியில் தோன்றி எழுத்துத்திருத்தம் தேவை என்று உரையாடி வருகிறார்.எழுத்தாளர் முனைவர் திருப்பூர் கிருட்டினன் அவர்களுடன்(ஆசிரியர்-அமுதசுரபி) உரையாடும் நிகழ்ச்சி அடிக்கடி இந்திய அரசின் பொதிகைத் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பாகிறது. நாட்டு வளங்கள்,வேலை வாய்ப்புகள்,அவலங்கள்,நிகழ்வுகள், கலைக்காட்சிகள் பல இருக்கப் பொதிகை இந்த நிகழ்ச்சியை அடிக்கடி மறு ஒளிபரப்பு செய்வதன் தேவை என்ன?உள்நோக்கம் என்ன? எனப் பொது மக்கள் வினா எழுப்புகின்றனர்.இந்தப் பின்னணி பற்றியெல்லாம் நம் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்கள் கவலைகொள்ளாமல் ஆறாம் ஊதியக்குழுப் பணப்பயன் எப்பொழுது கிடைக்கும் அல்லது எந்த வகையில் ஆய்வுத்திட்டம் வரைந்தால் செம்மொழி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழக நல்கைக்குழுவில் பணம்பெற்று தமிழ்வளர்க்கலாம்(!) என்று ஆலாய்ப் பறக்கின்றனர்.

இணையத்திலும் எழுத்துத் திருத்திகள் சிலர் பக்குவமாக பொய் புனைந்து எழுதி வருகின்றனர். அவ்வடிமைச் சிந்தனையாளர்கள் சொல்லும் பொய்யுரை என்ன எனில் அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், இங்கிலாந்திலும் படிக்கும் பிள்ளைகள் தமிழ் எழுத முடியாமல் தவிக்கின்றனராம்.(இந்த அடி வருடிகளின் துணையுடன் அந்த அந்த நாடுகளில் சிலரைப் பிடித்து குழந்தைகளுக்குத் தமிழ் எழுதக் குறியீடுகள் இடையூறாக உள்ளன என்று நயப்புரை கூறியும்,தக்க ஆள் பிடித்தும் பொய்யாகக் கையொப்பம் சிலர் பெற்று வந்துள்ள நிகழ்வுகளும் உண்டு.சிங்கப்பூரில் அப்படி எழுத்துக்குறியீடு மாற்றம் வேண்டும் என்று ஒரு கையெழுத்து இயக்கம்(!) நடத்தப்பட்டுக் கையொப்பம் திரட்டப்பட்டுள்ளது என்ற செய்தி சிங்கப்பூரில் உள்ள தமிழர்களுக்கும்,தமிழகத்துத் தமிழர்களுக்கும் தெரியாத செய்தியாகும். ஆனால் இந்தக் கையொப்பத் தாள்களைச் சான்றாகக் காட்டவும் சில எழுத்துத்திருத்திகள் முன்வந்துள்ளனர்.

அயல்நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிப்போன,மேட்டுக்குடியினரான பிற நாட்டு வாழுநர்களுக்கு வாதிடும் இவர்கள் சொந்த நாட்டுக்குழந்தைகள் தாய்மொழி வழியில் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றரே என்று என்றைக்காவது வருந்தியதுண்டா?எழுதியதுண்டா?அரசியல் தலைவர்களைத் தூதுவிடுத்ததண்டா?சீனாவில், சப்பானில் எழுத்துத் திருத்தப்படுகிறது என்று காதில் பூச்சுற்றி அரசியல் தலைவர்களையும் அப்பாவி மக்களையும் மருட்டும் இந்தக் கல்வியாளர்கள் அந்த நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வி கற்பிக்கப்படுவதை என்றைக்காவது முனுமுனுத்தது உண்டா?.தனக்குத் தேவை என்றால் பெண்ணும் மாப்பிளையும் என்று போற்றும் இவர்கள் வேண்டாம் என்றால் இழிமொழியில் பழிக்கும் சிற்றூர் கல்லா மக்கள் ஒத்தவரே என்க.இவை யாவும் நிற்க.

அண்மையில் தமிழோசை ஏட்டில் நான் எழுதிய எழுத்துச் சீர் திருத்தம் தேவையா என்ற என் கட்டுரை வெளியானது(31.01.2010). இணையத்திலும் அதனைப் பதிந்தேன்.இணையத்தில் என் கட்டுரை வெளிவந்த பிறகு அயல்நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழகத்தில் நடக்கும் எழுத்துத்திருத்த முயற்சிகள் தெரியவந்தன.மலேசியா,அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் எழுத்துதிருத்த முயற்சியைக் கண்டித்து எழுதினர்.மலேசியாவில் இதனைக் கண்டித்து ஒரு இணையத்தளமே தொடங்கப்பட்டது. தமிழகத்தில் பேராசிரியர் மறைமலை அவர்களின் முயற்சியால் பொறிஞர் இரா.ம.கி.உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட எழுத்தச்சீர்திருத்த எதிர்ப்புக் கருத்தரங்கம் ஒன்று நடந்தது.பேராசிரியர் தங்கப்பா அவர்கள் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் ஏட்டில் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைக் கண்டித்தும் தமிழக அரசு இதற்குச் செவி சாய்க்கக் கூடாது என்றும் ஓர் அரிய கட்டுரை எழுதினார்.

மேலும் என் கட்டுரை வெளிவந்தவுடன் அரசுத்துறையில் துணைச்செயலாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற க.சி.இராமமூர்த்தி அவர்கள் என் பெயருக்கு மடல் வழி எழுத்து,எண்ணுப்பெயரில் மாற்றம் வேண்டும் என்று சான்று காட்டி ஒரு நல்ல கட்டுரை அனுப்பினார்,பின்னர் அக்கட்டுரை ஓரிரு நாளில் தமிழோசையில் அவர் முயற்சியால் வெளிவந்தது.அதன் பின்னர் ஒரு கிழமை கழித்து நம் வா.செ.கு. அவர்கள் ஐந்து நாள் தொடராக எழுத்துச்சீரமைப்பு தொடர்பில் ஒரு கட்டுரை தமிழ் ஓசையில் வெளியிட்டார்.

எழுத்துச்சீரமைப்பு: இனப்பாதுகாப்புக்கு அவசியம்,தமிழ் ஒரு பண்பாட்டுத் தேவை,அளவில் விதை-விளைவில் விழுது,மாறாத பொருளெதுவும் வளர்வதில்லை,தலைமுறையினர் சுமையைக் குறைப்போம்
(23.02.2010-28.02.2010)என்னும் தலைப்புகளில் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றத்துடனும், மாறுகொளக்கூறல் என்னும் விதிக்குட்பட்டும்,மிகைபடக்கூறல் எனவும் கூறியது கூறல் என்ற கொடுங்குற்றத்திற்கு ஆட்பட்டும் நம் ஐயாவின் கட்டுரை இருந்தது.அதில் நான் விடுத்த வினாக்களுக்கு உரிய விடை ஒன்றும் இல்லை என்பது அறிந்து திகைத்தேன்.இதே கட்டுரையைத் தமிழ் ஓசையின் சார்பு ஏடனா பசுமைத் தாயகம் சுற்றுச்சூழலிலும் ஐயா அவர்கள் முன்பே சிற்சில மாற்றங்களுடன் வெளியிட்டார்கள்.

அறிஞர் வா.செ.கு.கட்டுரையில் செய்திகள் மிகவும் குறைவாகவும் பொருத்தமற்ற படங்கள் அடைக்கப்பட்டும் இருந்ததை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.நம் கருத்துகளை நிலைநாட்டவும் பிறர் கருத்தை மறுக்கவும் துறைசார் வல்லுநர்களின் கருத்துகளை மேற்கோளாகக் காட்டுவது அறிஞர் உலகும் ஆராய்ச்சி உலகும் பின்பற்றும் நடைமுறை.ஆனால் அவர் கவிதை வரிகளை அவரே பல இடங்களில் தேவையற்று மேற்கோளாக எடுத்துக்காட்டி மகிழ்ந்துள்ளார்.அவர் விருப்பமும் இயல்பும் இவை எனத் தள்ளுக.

கட்டுரையை வா.செ.கு.ஐயா அவர்கள் இவ்வாறு நிறைவு செய்கிறார்.

"மலேசியா,இலங்கை,சிங்கப்பூர்,அமெரிக்கா,போன்ற நாடுகளில் நான் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடைகளில் விளக்கியபொழுது,எதிர்ப்புத்தெரிவித்தவர்களைக் கண்டதில்லை.மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட,இவ்வளவு எளிய சீர்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற வினாவைத்தான் எழுப்பினார்கள்.

அவர்கள் வினாவுக்கு நான் சொன்ன விடை: இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்;மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட.ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது எனபதுதான்.தலைவர்கள் தாமாக உருவாவதில்லை.நாம்தான் உருவாக்க வேண்டும்".

இந்த முடிவுரைப்பகுதியால் தம் கருத்துக்குத் தலையாட்டிக் கையொப்பமிடும் தலைவரை அவர் விரும்புவது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.அத்தகு தலைவர்கள் தமிழகத்தில் தோன்றாதிருப்பாராக!ஏனெனில் புகழெனில் உயிரும் கொடுப்பர்.பழியெனில் உலகு கிடைப்பினும் பெறாத மான மறவர்கள் நடமாடிய மண் இத்தமிழ் மண்.

(இன்று (16.03.2010) இலக்கணக்கடல் அறிஞர் இரா.திருமுருகனார் அவர்களின் பிறந்த நாள்.அவர் நினைவாக இக்கட்டுரை வெளிவருகிறது.)

திங்கள், 15 மார்ச், 2010

முனைவர் இரா.திருமுருகனார் பிறந்த நாளும்,நூல் வெளியீட்டு விழாவும்


முனைவர் இரா.திருமுருகனார்(16.03.1929-03.06.2009)

புதுச்சேரித் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் தமிழிலக்கணமும் இசையும் அறிந்த பேரறிஞர்.அன்னாரின் பிறந்த நாள் விழா 16.03.2010 செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரியில் கொண்டாடப்பட உள்ளது.மேலும் ஐயாவிடம் யாப்பறிவு பெற்ற அம்மா மாநி அவர்களின் குறளாயிரம் என்ற குறட்பா நூல் வெளியீடும் நடைபெற உள்ளது.

இடம்: இரெவே சொசியால் மன்றம்,இலப்போர்த் வீதி,புதுச்சேரி,
நாள்: 16.03.2010 நேரம்: மாலை 6 மணி

தலைமை: பாட்டறிஞர் இலக்கியன்
தமிழ்த்தாய் வாழ்த்து ஈகியர் மு.அப்துல் மசீது
வரவேற்புரைஅ.முத்துசாமி

வாழ்த்துரை:
வில்லிசை வேந்தர் இ.பட்டாபிராமன்
தமிழ்மாமணி துரைமாலிறையன்
பாவலர் சு.சண்முகசுந்தரம்

குறளாயிரம் வெளியீடு: திருவாட்டி யமுனா அம்மையார்(திருமுருகனாரின் துணைவியார்)
முதல்படி பெறுதல்: திரு இரா.தி.அறவாழி (திருமுருகனாரின் மகன்)

தொகுப்புரை: பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன்
நன்றியுரை வெ.கிருட்டினகுமார்

நான் மாநியின் குறளாயிரம் நூலை ஆய்ந்து ஆய்வுரை நிகழ்த்த உள்ளேன்(முன்பே என் வலைப்பதிவில் நூல் மதிப்புரை வெளியிட்டுள்ளேன்).

சனி, 13 மார்ச், 2010

மயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் பயிலரங்கம்-படங்கள்


முனைவர் மா.சற்குணம்(கல்லூரி முதல்வர்)

மயிலம் முருகன் திருக்கோயில் உலகப் புகழ்பெற்ற திருக்கோயிலாகும்.பாவேந்தர் மயிலம் சுப்பிரமணிய துதியமுது,சண்முகன் வண்ணப்பாட்டு முதலிய நூல்களை எழுதியுள்ளமையை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.இவ்வூரில் உள்ள திருமடத்தின் சார்பில் தமிழ்க்கல்லூரி நடைபெற்றது.இன்று இக்கல்லூரி சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரி என்று பெயர் தாங்கித் தமிழுடன் கலை,அறிவியல் பாடங்களையும் படிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.

முன்பே ஒருமுறை இக்கல்லூரியில் சிறப்புரையாற்றியுள்ளேன்.தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புறச்சாயல்கள் என்ற தலைப்பில் என் உரை ஒன்றரை மணி நேரம் அளவில் இருந்ததாக நினைவு.அப்பொழுதே நான் தமிழ் இணையம் பற்றி உரையாற்ற வேண்டும் என்று அந்நாள் கல்லூரி முதல்வர் வேண்டுகோள் வைத்தார்.நானும் இசைந்தேன்.பணிச்சூழலால் இயலாமல் இருந்தது.அண்மையில் நடந்த விழா ஒன்றில் இந்நாள் கல்லூரி முதல்வரும், கல்லூரிச் செயலாளரும் வந்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டினர். பேராசிரியர் எழில் வசந்தன்,பேராசிரியர் இலட்சாராமன் ஆகியோரும் வரும்படி விருப்பம் தெரிவித்தனர். விடுமுறையைப் பயன்படுத்தி இன்று காலையில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.சற்றொப்ப நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக என் உரை இருந்தது.சிறு அறிமுகமும் மாணவர்களின் கருத்து கூறலும் இந்த நேரத்தில் அடங்கி இருந்தது.

கல்லூரியின் கணினி அரங்கில் பயிலரங்கம்.மாணவர்கள் 150 பேருக்கு மேல் இருந்தனர். பேராசிரியர்கள்,சிறப்பு விருந்தினர் என அரங்கம் நிறைந்தது.இட நெருக்கடி காரணமாக அனைவரும் கீழே அமர வேண்டிய நிலை.எனினும் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால் தங்களின் இருக்கை பற்றி கவனம் செலுத்தாமல் சுவடிகளில் குறிப்பெடுத்துக் கொண்டனர்.நானும் தமிழிணைய வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்து,இன்று கணினியில் தமிழின் அனைத்துப் பயன்பாடுகளையும் விளக்கினேன்.

முதல் இரண்டு மணி நேரம் இணைய இணைப்பு சரியாக இருந்தது.பின்னர் இணைய இணைப்பு தடைப்பட்டது.இது போன்ற நேரத்தில் பயன்படுத்த என் இயங்குமோடம் உதவி செய்யும்.இன்றும் உதவியது,காட்சி விளக்கமும் உதவியது.தமிழ்த்தட்டச்சுக்கு உதவும், எ.கலப்பை,என்.எச்.எம்.எழுதி,முரசு அஞ்சல் பற்றி எடுத்துரைத்தேன்.தமிழ் 99 விசைப் பலகையின் பயன்பட்டை விளக்கினேன்.மற்ற அனைத்துப் பயன்பாடுகளையும் விளக்கினேன். மின்னஞ்சல் அனுப்ப,உரையாடப் பயிற்றுவித்தேன்.

தமிழில் எடுத்துரைத்ததால் தமிழ்க்கல்லூரி மாணவர்கள் நன்கு விளங்கிக்கொண்டனர். தொல்காப்பியம் உள்ளிட்டவற்றை இனி கேட்க முடியும் என்று செம்மொழி நிறுவனம் வெளியிட்ட சில பாடல்களை அறிமுகம் செய்தேன்.வலைப்பூ உருவாக்கப் பழக்கினேன்.தமிழ் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டினேன்.விக்கிப்பீடியாவில் கட்டுரை வரைய வேண்டினேன். குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 வகை மலர்களைக் காட்டியதும் அனைவரும் வியந்தனர்.

விக்கியை அறிமுகப் படுத்தினேன்.புகழ்பெற்ற தளங்கள் எல்லாம் என்னால் அறிமுகம் செய்யப்பெற்றன.பல மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருந்ததும் கணினி அறிமுகம் இருந்ததும் மகிழ்ச்சி தந்தது.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுச்சேரிக்குப் புறப்பட்டேன்.


கல்லூரி நிருவாகத்தினர்,பேராசிரியர்கள்


பங்கேற்ற மாணவியர்


பங்கேற்ற மாணவர்கள்


பங்கேற்ற மாணவியர்


மு.இ

மயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் பயிலரங்கு

மயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில்
தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் பயிலரங்கு இன்று(13.03.2010) காலை பத்து மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்றது.பேராசிரியர் மா.சற்குணம் அவர்கள்(முதல்வர்)தலைமையேற்றார்.புதுச்சேரியிலிருந்து நான் காலை உந்து வண்டியில் புறப்பட்டு பேராசிரியர் எழில்வசந்தன் அவர்களுடன் அரங்கம் அடைந்தேன்.பேராசிரியர்களும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,நூலகங்கள் , விக்கிப்பீடியா உள்ளிட்ட இணையப் பயன்பாடுகளை அறிந்தனர்.வலைப்பூ உருவாக்கம் பற்றியும் செயல் விளக்கம் வழியாக விளக்கினேன்.உத்தமம் போன்ற தமிழ் இணையம் சார்ந்த அமைப்பையும் அரங்கினருக்கு அறிமுகம் செய்தேன்.150 மாணவர்களும் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டமை மகிழ்ச்சி தந்தது.

வியாழன், 11 மார்ச், 2010

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் இணையம் அறிமுகம்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் இணையம் அறிமுக நிகழ்வு இரண்டு நாள் நடைபெற்றது.இதில் தமிழ்த்தட்டச்சு,தமிழ்த்தளங்கள்,விக்கிப்பீடியா உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன.விரிவான செய்திகள் பின்னர் இடுவேன்.

திங்கள், 8 மார்ச், 2010

நாமக்கல் செல்வம் கல்வி நிறுவனங்களில் தமிழ் இணையம் அறிமுகம்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்

நாமக்கல் மாவட்டம் தமிழகத்தில் கல்வித்துறையில் சிறந்த மாவட்டமாக விளங்குகிறது.அம்மாவட்ட ஆட்சியராக விளங்கும் திரு.சகாயம் இ.ஆ.ப.அவர்களின் தன்னம்பிக்கை,தமிழ்ப்பற்று,தூய்மையான ஆளுகை ஆகியவற்றை நண்பர்கள் வழியாகவும்,செய்தி ஏடுகள் வழியாகவும் அறிந்திருந்தேன்.அவர்களை வாய்ப்பு நேரும்பொழுது கண்டு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அதனிடையே காவல்துறையில் கூடுதல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ்ப்பற்றாளர் திரு.கருப்பண்ணன் அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று அங்கு(நாமக்கல்)ச் செல்ல பலநாள் நினைத்தும் 05.03.2010 அன்றுதான் கைகூடியது.நானும் திருவாளர் கருப்பண்ணன் அவர்களும் முன் பார்த்தறியாதவர்கள்.உணர்வொத்தவர்கள்.

புதுச்சேரியில் என் பணிமுடித்து,மாலை 6 மணியளவில் விழுப்புரத்தில் தொடர்வண்டி ஏறினேன்.இரவு 9.15மணியளவில் திருச்சிராப்பள்ளி சென்றடைந்தேன்.உணவுக்குப் பிறகு நாமக்கல் நோக்கிச் செலவு. இடைக்கிடையே நான் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறேன் என்று அன்பு வினவுதல் நம் கருப்பண்ணன் ஐயாவிடமிருந்து தொடர்ந்துகொண்டிருந்தன.நடு இரவு 12.15 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எனக்காகக் கருப்பண்ணன் அவர்கள் காத்திருந்தார்.என்னைக் கண்டதும் ஐயாவுக்குச் சிறிது மருட்சியாக இருந்தது.காரணம் நான் அகவை முதிர்ந்த ஆளாக இருப்பேன் என்று நினைத்து முதலில் ஏமாற்றம் அடைந்தார்கள்.ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆனோம்.

அந்த நடு இரவில் சில காட்சிகளைக் காட்டினார்.நகராட்சி இசைவு பெற்று மக்களுக்குப் பயன்படும் பொன்மொழிகளைப் பேருந்து நிலையச்சுவர்களில் அவர் ஓய்வுக் காலத்திற்குப் பிறகு தொடர்ந்து தம் கைப்பட எழுதி வருவது கண்டு மகிழ்ந்தேன்.கையூட்டுக்கு எதிராக ஒரு போராளியாகச் செயல்படும் இவர் தம் பணிக்காலத்தில் தூய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.மக்களின் வரிப்பணத்தில் தாம் வாழ்ந்து வருவதாகவும் அம்மக்களுக்கு உழைப்பதே தம் கடமை எனவும் கூறினார்.இவர் போன்ற அதிகாரிகளைப் பார்க்கும் பொழுதுதான் அரசு ஊழியர்களில் சிலராவது நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.

இரவு அவர் இல்லத்தில் தங்க வைத்து உரையாடினார்.நடு இரவு இருவரும் கண் அயர்ந்தோம்.காலையில் கண் விழித்ததும் என்னைக் காண நூல் தொகுப்பாளர் திரு. இராமசாமி ஐயா அவர்கள் வந்துவிட்டார். அவர்கள் கீழே விழுந்து கால் பாதிக்கப்பட்ட சூழலிலும் என்னைக் காண வந்தமை நெகிழ்ச்சியாக இருந்தது.அவர் அன்புக்கு யான் யாது கைம்மாறு ஆற்றுவேன்?.முன்பே அன்னாரைத் தமிழ் ஓசை நாளேட்டில் நேர்கண்டு எழுதி அவரின் தமிழ்ப்பணியை வெளியுலகுக்குக் கொண்டுவந்தேன்.(என் வலைப்பூவிலும் அவர் பற்றி செய்தி உள்ளது).சிறிது உரையாடி மீண்டும் சந்திப்பதாக உறுதியளித்து, செல்வம் கல்லூரிக்குக் காலை 9.30 மணிக்குச் சென்றோம்.

செல்வம் கல்வி நிறுவனம் நாமக்கல்லின் புகழ்பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி,ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரி எனப் பல நிறுவனங்கள் உள்ளன.ஆசிரியர்களும் மாணவர்களுமாக 150 பேருக்கு மேல் அரங்கில் ஒன்றுகூடினோம். தினமணி செய்தியாளர் திரு.முருகன் அவர்கள் வந்திருந்து செய்திகளைச் சேகரித்து மறுநாள் கோவைப் பதிப்பில் விரிவாக வெளியிட்டிருந்தார்.

தமிழ் இணைய வரலாற்றை நினைவூட்டித்,தமிழில் நாம் இணையத்தைப் பயன்படுத்த முடியும் ஆங்கில அறிவு அதிகம் தேவை என நினைக்காதீர்கள்,ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறி,தமிழ்த்தட்டச்சு தொடங்கி மின்னஞ்சல்,வலைப்பூ,நூலகங்கள்,மின்னிதழ்கள் பற்றி எடுத்துரைத்தேன்.அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.சொக்கலிங்கம் அவர்கள் வரவேற்றார். திரு.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.

கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு.செந்தில் அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுவைக்குப் புறப்பட்டேன்.திரு.இராமசாமி ஐயாவைச் சந்திக்க இயலாதவாறு என் பயணத்திட்டத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்தது.அவரிடம் மீண்டும் ஒருமுறை வந்து காண்பதாகச் சொல்லி விடைபெற்று வந்தேன்.


திரு.கருப்பண்ணன்,திரு.இராமசாமி


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்


பேராசிரியர்கள்,மாணவர்கள்


நானும்,கல்லூரி முதல்வர் திரு.செந்தில்குமார் அவர்களும்


நான்,திரு.கருப்பண்ணன்(காவல்துறை-ஓய்வு),திரு.சொக்கலிங்கம்(முதல்வர்),பிற பேராசிரியர்கள்

ஞாயிறு, 7 மார்ச், 2010

புதுச்சேரி அருகில் இராசேசுவரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையத்தமிழ் அறிமுகம்


அ.அழகிரிசாமி,குமாரசிவ.இராசேந்திரன்,மு.இளங்கோவன்,மா.சற்குணம், குமாரசிவ. சிவக்குமார்

புதுச்சேரியை அடுத்துக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பொம்மையார்பாளையம் ஊரில் மயிலம் திருமடத்திற்கு உரிமையான இராசேசுவரி மகளிர் கல்லூரி சிறப்பாக இயங்குகிறது.

இக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் அ.அழகிரிசாமி அவர்களின் அன்பு அழைப்பால் 05.03.20010 இல் நடைபெற்ற தமிழ்மன்ற விழாவில் பேராசிரியர்கள்,மாணவர்கள் என மொத்தம் அறுநூறு ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

காலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேராசிரியர் க.சசிதேவி அவர்கள் வரவேற்புரை வழங்க,சிவத்திரு.குமாரசிவ.இராசேந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.முனைவர் அ.அழகிரிசாமி அவர்களின் முன்னிலையில் நடந்த விழாவில் சிவத்திரு.குமாரசிவ.சிவக்குமார்,முனைவர் மா.சற்குணம்(முதல்வர்,மயிலம் கலைக்கல்லூரி) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முந்திரிக்காட்டு நடுவில் அழகிய கலைக்கோயிலாக இராசேசுவரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.என்னுடைய "இயங்குமோடம்" மிகச் சிறப்பாக இயங்கியது.அரங்கில் இருந்தபடியே பல நாடுகளைச் சேர்ந்த நண்பர்களுக்கு இணைய அறிமுகம் விழா பற்றி செய்திகள் தந்தேன்,பலரும் வாழ்த்துரைத்தனர்.திறந்தவெளி அரங்கு என்பதால் என் காட்சி விளக்கம்(பவர் பாயிண்டு) கடைசி வரிசையில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.எனினும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் பேசியதால் அனைவரும் சுவைத்துக் கேட்டனர்.தமிழ்த்தட்டச்சு தொடங்கி, தமிழில் உள்ள மின்னஞ்சல் வசதி,வலைப்பூ,நூல்கள்,விக்கிப்பீடியா,மின்னிதழ்கள் என அனைத்துத் தமிழ் வாய்ப்புகளையும் எடுத்துரைத்தேன்.

இந்த நிகழ்வுக்கு வாழ்த்துரை வழங்க வந்திருந்த மயிலம் கல்லூரி முதல்வர் முனைவர் மா.சற்குணம் அவர்கள் விரைவில் தங்கள் கல்லூரியில் இத்தகு செய்திகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என என்னை அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.விரைவில் பயிலரங்கமாக நடத்த வேண்டும் என்று கல்லூரி தாளாளர் திரு.இராசேந்திரன் அவர்களும் வேண்டுகோள் விடுத்தார்.இந்த நிகழ்வுக்குப் பொம்மையார் பாளையம் சார்ந்த ஊர்ப்பெரியவர்களும் வந்திருந்தனர்.அனைவருக்கும் புரியும் வண்ணம் உரையாற்றியதால் என் உரைக்கு நல்ல வரவேற்பு இருந்ததை நான் உணர்ந்தேன்.


திரு.குமாரசிவ.இராசேந்திரன்(தாளாளர்)


முனைவர் அ.அழகிரிசாமி(முதல்வர்)


பங்கேற்ற மாணவியர்கள்(ஒரு பகுதி)


பங்கேற்ற மாணவியர்கள்(ஒரு பகுதி)


பார்வையாளர்கள்


நான் உரையாற்றும் காட்சி

செவ்வாய், 2 மார்ச், 2010

புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம்


பங்கேற்பாளர்கள்

புதுச்சேரியின் புகழ்பெற்ற கல்லூரிகளுள் ஒன்று தாகூர் கலைக்கல்லூரி.இங்குப் பணிபுரியும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பலரும் என் கெழுதகை நண்பர்கள்.பல திங்களாகத் தங்கள் கல்லூரிக்கு வந்து தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.தொடர்ந்து பல வேலைகளில் இருந்ததால் காலம் கனியாமல் இருந்தது.இன்று நடைபெற்ற எளிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன்.பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட சற்றொப்ப 100 பேர் கணிப்பொறித்துறை அரங்கில் கூடித் தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.

தமிழும் இணையமும் என்ற இந்தச் சிறப்புரைக்கு ஏற்பாடு செய்தவர் பேராசிரியர் நா.வச்ரவேலு அவர்களாவார்.அவரின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சுந்தர.கலிவரதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரிப் பேராசிரியர் ப.கொழந்தைசாமி அவர்கள் அறிமுக உரையாற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர் பாபுராவ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.புதுச்சேரி மொழியியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சுதர்சன் அவர்கள் இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.

அகண்டவரிசை இணைய இணைப்பு அரங்கில் இல்லாததால் நான் என் மடிக்கணினியில் இயங்கும் "மொபைல் மோடம்" கொண்டு சென்றேன்.மடிக்கணினியில் இணைய இணைப்புக்கு முயன்றபொழுது இணைப்பு கிடைக்கவில்லை.அப்பொழுதுதான் நண்பர்கள் வானூர்தி நிலையம் அருகிலேயே இருப்பதால் இங்கு எந்தக் கோபுரமும் இல்லை என்றனர்.இணைய இணைப்பு இல்லை என்றால் பயன்படுத்த காட்சி விளக்கம்(பவர் பாயிண்டு) வைத்திருந்தேன்.ஓரளவு அவற்றைக்கொண்டு தமிழ் இணையத்தின் பலவகைப் பயன்பாடுகளையும் விளக்கிவிடமுடியும்.சிறப்பாகத் தயாரித்து வைத்திருந்த பல செய்திகள் கொண்ட என் "பவர்பாயிண்டு" உதவியது. இடையூறு இல்லாமல் ஒரு மணி நேரம் தமிழ் இணையத்தை அவர்கள் புரிந்து கொள்ளும்படி எளிய நடையில் விளக்கினேன்.பலருக்கும் இது ஒரு புதுத்துறையாக இருந்திருக்கும்.என் உரைக்குப் பேராசிரியர் மணி அவர்கள் உதவியாக இருந்து இணைப்புகள் உள்ளிட்டவற்றைப் பொருத்தமாகக் கவனித்துக்கொண்டார்.

தமிழ்த் தட்டச்சில் தொடங்கினேன்.தமிழ் 99 விசைப் பலகை பற்றி விளக்கினேன். இ.கலப்பை, என்.எச்.எம்.எழுதி,மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,நூலகம்,சுரதா தளம்,பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி,விக்கிப்பீடியா,விக்சனரி,இணைய இதழ்கள்,நூலகங்கள்,உரை-பேச்சு,வலைப்பூ, மின்னஞ்சல் என இணையத்தின் முதன்மையான பல செய்திகளை எடுத்துரைத்தேன். தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி பற்றிய அறிமுகம் செய்தேன்.


முனைவர் சுதர்சனன்,நான்,முனைவர் பாபுராவ்


பங்கேற்ற பேராசிரியர்கள்,மாணவர்கள்


பங்கேற்பாளர்கள்


இ.கலப்பையை விளக்கும் நான்