நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை


தில்லை சிதம்பரப்பிள்ளை

     இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிசர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டுக் காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர்; 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனையில் பயின்று 1969 இல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

     தில்லை சிதம்பரப்பிள்ளைக்குக் கல்லூரியில் கற்கும் நாள்களில் கல்வி சாராத பல நூல்களைப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. எனவே இவரின் உள்ளம் படைப்புநூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது. எனவே, அவ்வப்போது நாடகங்கள் சிலவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் சில இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன என்பதை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

     தில்லை சிதம்பரப்பிள்ளை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றுத் தகுந்த வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகள் இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும், சிரித்திரன் பத்திரிகையில் நகைச்சுவை எழுதுபவராகவும் பணியாற்றியவர்.

     இவர் எழுதிய கட்டுரைகள்  வீரகேசரியில் வெளிவந்ததோடு நின்றுவிடாமல்  அக் கட்டுரைகளில் சில அன்றைய ஆட்சியாளர்களிடம் மொழிபெயர்ப்புடன் இவரால் சமர்ப்பிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தனவும் உண்டு.

     எடுத்துக்காட்டாக அரசு பனை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் அமைக்க அப்போதய இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பீடத்தலைவர் பேராசிரியர் . குலரத்தினம் அவர்களுக்கு உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். பல ஆண்டுகளாகப் பெருந்தொகையான பட்டதாரிகள் வேலை எதனையும் பெற வாய்ப்பின்றி இருந்த காரணத்தினை ஆய்வுசெய்தபோது  பட்டதாரிகளுக்கு வேலைப் பயிற்சித் திட்ட முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை எழுதினார். அதனை அப்போதைய ஆட்சியாளர்களிடம் கையளித்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் - சிங்களப்  பட்டதாரிகள் பயிற்சி பெற்றதுடன் தகுந்த வேலையிலும் அமர்த்தப்பட்டனர்

     இலங்கை அரசாங்கத்தின் கூட்டுத்தாபனம் ஒன்றில் 15 ஆண்டுகள் நிர்வாக உத்தியோகத்தவராகவும், தொடர்ந்து உதவி முகாமையாளராகவும் கடமையாற்றியவர். அக்காலத்தில் தேவைக்கேற்ற சிறந்த கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இக்கட்டுரைகள் பத்திரிகைகளுக்கும், கடமையாற்றிய அரச நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  உதவியுள்ளன. தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் கருத்தரங்கம், மேடைப் பேச்சுக்களில் பேச்சாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

                1985 முதல் இலங்கைத் தமிழர்கள் சுவிசர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறினர். சுவிசில் வழக்கில் இருந்த பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி  மொழி இவற்றில் ஒன்றை இருப்பிடத்திற்கேற்ப கற்கவேண்டிய சூழ்நிலை  ஈழத்தமிழர்களுக்கு அப்பொழுது ஏற்பட்டது. அம்மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது  இக்காலப் பகுதியில் இங்குவாழ்ந்த தமிழ் மக்கள் உள்ளுர் மொழிபற்றி அதிகம் அறியவில்லை. எனவே  இந்த நாட்டின் நடைமுறைகளையும், சிறார்களின் கல்வி முறைகளையும் அறிவதற்கு இதழின் முக்கியத்துவம் உணர்ந்து, மின்மினி என்ற இதழைத் தொடங்கினார். தங்கள் தங்கள் சமய, கலை பண்பாடுகளைப் பேணிக்காக்க உதவும் வகையில் தமிழ் மொழி அறிவைத் தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டவும் சில முக்கிய செய்திகளை அறியச் செய்யவும் மின்மினி இதழ் வெளியிடப்பட்டது     1993 புரட்டாசி மாதம் சுவிசர்லாந்து  வோ மாநிலத்தில் முதன்முதலாக  மின்மினி இதழ் உதயமானது, முதலில்  மாநில அளவில் இங்கு வாழும் தமிழ் மக்களைச் சென்றடைந்தது. மின்மினி இதழ் நேரடியாக அவரவர் வீட்டுக்கு அஞ்சல் பெட்டியில் இலவசமாகவே கிடைக்கும்படியாக அனுப்பப்பட்டது. பின் படிப்படியாகத் தமிழ் மக்கள் வாழும் எல்லா மாநிலங்களுக்கும் இதன் சேவை பரவியது.  அங்குள்ள வியாபார நிலையங்கள் வழியாகவும் மின்மினி விநியோகிக்கப்பட்டது. பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.

                ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுத் தனித்தனியாக பதிப்புகள் சில வருடங்கள் வெளியிடப்பட்டன.

                தில்லை சிதம்பரப்பிள்ளை 1985 ஆம் ஆண்டு முதல் சுவிசர்லாந்தில் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் ஆங்கில, தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்தும் சில அரச சார்புடைய ஆவண நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியவர்.  தனியார் தமிழ் ஆவணங்களைப் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தல், வரியிறுப்புப் பத்திரங்களை நிறைவுசெய்வதற்கு உதவுதல், கணினி, இணையம் ஆகியவற்றில் வேண்டியோர்க்கு உறுதுணை அளித்தல் போன்றவற்றில் ஆர்வமாகச் செயல்பட்டவர்.

     தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி என்ற தமிழ் இதழினை அன்றைய தேவைகருதி ஆரம்பித்து 24 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.

                2013 ஆம் ஆண்டில் இருந்து மின்மினி இதழின் வழியாக மாநாடுகள் நடத்துவோர்க்கும், ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்புப்பாலமாகச் சேவைமனப்பான்மையுடன் கடமையாற்றி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் வேண்டும். 2014 இல் நடைபெற்ற 2 வது முருகபக்தி மாநாடு, 2014இல் சிட்னியில் நடைபெற்ற சிட்னி முருகன் சைவநெறி மாநாடு, புதுச்சேரி அருள்மிகு திருப்புகழ் மன்ற வெள்ளிவிழா மாநாடு 2014, 2015 இல் நடைபெற்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 2015, 2016 மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு  ஆகியவற்றின் செய்திகளை உலக அளவில் தெரியப்படுத்தி, கல்வியாளர்களுக்கு உதவியுள்ளார்.

                தமிழ் மொழி இந்தப் பூமிப்பந்தில் தொடர்ந்து  வாழ வழிதேடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய பொறிமுறைகளைப் பல ஆய்வாளர்களிடமிருந்து பெற்று, அக்கரையில் பச்சை என்ற கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட உழைத்துவருகின்றார். இந்த நூல் நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இலவசமாகவே சென்றடையவேண்டுமென்ற நோக்கில் முயற்சிகள் இவரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                மின்மினி இதழில் வெளியிடப்படும் இவரின் கட்டுரைகள் தமிழ் மக்களின் கல்வி சமய வேறுபாடின்றிக் கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதாக அமைவனவாகும்.

     சுவிசர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம்  ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.  அதனைக் கட்டுப்படுத்த பலதிட்டங்கள் தீட்டப்பட்டும் அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அமல்படுத்தப்படவில்லை. மின்மினியில் இது தொடர்பான தீர்வுக்குப் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மேலும் அதன் மொழிபெயர்ப்பைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது அனுப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.  மாநிலங்கள் அளவிலான மின்மினி ஆசிரியரது தீர்வுத்திட்டம் ஒன்று மேல்மட்டத்தில் ஆராயப்பட்டுத் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.


     புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தில்லை சிதம்பரப்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், மக்களுக்கும் பயன்படும் அரிய செயல்களைத் தொடர்ந்துசெய்துவருகின்றார். கால்நூற்றாண்டாக மின்மினி இதழ்வழியாக உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் இவர்தம் தொண்டு தொடர்வதாகுக! நீடு நிலைபெறுவதாகுக!

****இக்கட்டுரையைப் பயன்படுத்துவோர், திருத்தி எழுதுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

நாவற்குடா இளையதம்பி தங்கராசா மறைவு!

நாவற்குடா இளையதம்பி தங்கராசா

     இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள நாவற்குடா ஊரில் பிறந்த இளையதம்பி தங்கராசா அவர்கள் தம் 84 ஆம் அகவையில் இன்று (22.08.2017) அதிகாலை 2.30 மணியளவில் கனடாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவர்தம் பெற்றோர் அமரர் பத்தினியர் இளையதம்பி - பிள்ளையம்மா ஆவர்.

     விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். தங்கராசா அவர்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆய்வுத்துறையில் உயரதிகாரியாக 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  தம் பணிக்காலத்தில் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதித் தம் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெற்றவர். இலங்கைப் போர்ச்சூழலால் கனடாவுக்குக் குடிபெயர்ந்த இவர் தம் மகன்களுடன் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.

                 தங்கராசா அவர்கள் கடந்த 2015 ஆம்  ஆண்டு" நான் என் அம்மாவின் பிள்ளை" என்ற புதினத்தை எழுதி, இரண்டு பாகங்களாக வெளியிட்டவர். 2008 இல்  மட்டக்களப்பு மாமாங்ககேசுவரப் பிள்ளையார் மான்மியம் என்னும் நூலினை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய பெருமைக்குரியவர். இருமொழிப் புலமைகொண்டவர் இவர் என்பதற்கு இந்த நூல்கள் சான்றாகும். மட்டக்களப்பு என்னும் தம் ஊரின்மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இவர் எழுதிய "நான் என் அம்மாவின் பிள்ளை" எனும் அரிய புதினம் என்றும் இவர்பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும். எழுத்தாளராகவும், மாந்த நேயம்கொண்ட மனிதராகவும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்ந்த தங்கராசா அவர்கள் என்மீது அளப்பரிய அன்புகொண்டவர்.

நூல்வெளியீட்டு நிகழ்வு, கனடா(12.06.2016)

நூல்வெளியீட்டு நிகழ்வு, கனடா(12.06.2016)


     தங்கராசா அவர்களின் புதின நூல் வெளியீட்டு நிகழ்வுக்காக யான் கனடா சென்றிருந்தபொழுது, தம் இல்லத்துக்கு அழைத்து விருந்தோம்பி, நினைவாக யாழ்நூலைப் பரிசளித்து, விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். பேராசிரியர் இ.பாலசுந்தரம், தமிழ்த்தொண்டர் சிவம்வேலுப்பிள்ளை ஆகியோரின் தொடர்பால் அமைந்த தங்கராசா ஐயாவின் நட்பும், நினைவும் ஊழிதோறும் நீடித்து நிற்கும்.

     எங்களின் விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தைப் பார்த்து, எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்துவார்கள் என்று அதற்குரிய நாளுக்குக் காத்திருந்த வேளையில் தங்கராசா அவர்களின் திடீர் மறைவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தங்கராசா அவர்களுக்கு உயர்தரமான மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டிருந்தும் மருத்துவம் பயனளிக்காத நிலையில் இன்று அவரின் ஆருயிர் பிரிந்தது.

     ஐயா தங்கராசா அவர்களைப் பிரிந்து வருந்தும் எங்கள் அன்னையார் சொர்ணம்மா தங்கராசா அவர்களுக்கும், அவர்களின் அருமை மகன்கள், மருமகள்கள், பெயரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

     மீன்பாடும் தேன்நாடு தம் தவப்புதல்வருள் ஒருவரை இழந்து நிற்கின்றது!
தங்கராசா ஐயா குடும்பத்தாருடன் ...

நான் என் அம்மாவின் பிள்ளை புதினம் பற்றிய அறிய இங்கே செல்க!

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

விபுலாநந்த அடிகளார் தடம் தேடியபொழுது...
     விபுலாநந்த அடிகளார் தமிழகத்தில் பல ஊர்களுக்குச் சென்று, பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டுள்ளார். பல ஊர்களில் அவரின் சிறப்புரைகள் நடைபெற்றுள்ளன. பல நிறுவனங்களில் நற்பணிகளைத் தொடங்கிவைத்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால் முழுமையாக இவை யாவும் தொகுக்கப்படாமல் போனமை நம் போகூழ் என்றே குறிப்பிட வேண்டும்.

     கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிஷனுக்குப் பலமுறை விபுலாநந்த அடிகளார் வந்து சென்றுள்ளமையை அவர் எழுதிய கடிதக் குறிப்புகளில் அறிந்து, கோவைக்குச் சென்று மிஷன் சுவாமிகளுடன் உரையாடி விவரம் வேண்டினேன். மிஷனில் பழைய படங்கள் இருக்கும் என்று பலமுனைகளில் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. விபுலாநந்த சுவாமிகள் கோவை மிஷனுக்குப் பலமுறை வந்துள்ளதை நான் தொடர்ந்து மிஷன் சுவாமிகளிடம் நினைவூட்டிய பிறகு விருந்தினர் விடுதியில் ஒரு கல்வெட்டில் விபுலாநந்த அடிகளார் பெயர் இருப்பதை சுவாமிகள் நினைவுகூர்ந்தார். அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபொழுது விபுலாநந்த அடிகளார் 1942 இல் விருந்தினர் விடுதியைத் திறந்துவைத்த ஒரு கல்வெட்டைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியுற்றேன்.

     கோவை மிஷன் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்த திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களும், விபுலாநந்த அடிகளாரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். (பின்னாளில் திருக்கொள்ளம்பூதூரில் யாழ்நூல் அரங்கேறியபொழுது அந்த வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் செட்டியார் கலந்துகொண்டமையை இங்கு நினைத்துப் பார்த்தல் வேண்டும்.) திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று 19.05.1942 இல் கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற விழாவில் விருந்தினர் விடுதி ஒன்றினை விபுலாநந்த சுவாமிகள் திறந்துவைத்துள்ளார். கோவை மிஷனில் உள்ள விருந்தினர் விடுதிக் கல்வெட்டில், திருப்பூர் சு. சுப்பிரமணிய செட்டியார் பழனியம்மாள் விருந்தினர் விடுதி திரு. தி. சு. தண்டபாணி செட்டியார் அவர்களால் கட்டித் தரப்பட்டது. திரு. விபுலானந்த சுவாமிகளால் திறந்துவைக்கப்பட்டது. 19.5.42" என்று பதிக்கப்பட்டுள்ளது. விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிய இதுபோன்ற சான்றுகள் பெரிதும் உதவும்.

சனி, 19 ஆகஸ்ட், 2017

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அமைச்சர். டி.என். சுவாமிநாதன் வெளியிட, அ. உமாமகேசுவரன் பெற்றுக்கொள்ளும் காட்சி
(இடம்:கொழும்பு)


     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி..டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அங்குத் திரையிட முன்வந்தேன்.

     மட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை,     மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை நான் பகிர்ந்துகொண்டேன். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் பகிர்ந்துகொண்டமை எனக்கு ஊக்கமாக இருந்தது. விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் ஏற்றுக்கொண்டேன்.

     07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.

     இலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

     யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு பேராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

     சிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

     இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

     கல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.


மாண்புமிகு அமைச்சர் டி.என். சுவாமிநாதன் அவர்களின் வாழ்த்துரை
(இடம்:கொழும்பு)


மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சிறப்புச் செய்தல் (இடம்:மட்டக்களப்பு)வரலாற்றுப் பேரறிஞர் சி. பத்மநாதன் அவர்களின் வாழ்த்துரை (இடம்:கொழும்பு)

பணிப்பாளர் அ. உமாமகேசுவரன் அவர்களின் வரவேற்புரை
(இடம்:கொழும்பு)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் 
நா. சண்முகலிங்கன் அவர்களின் மதிப்பீட்டு உரை(இடம்:கொழும்பு)

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் மதிப்பீட்டு உரை(இடம்:கொழும்பு)

கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை அவர்களின் 
தமிழ்த்தொண்டினைப் போற்றுதல் (இடம்:மட்டக்களப்பு)

பணிப்பாளர் க.பாஸ்கரன் அவர்களைச் சிறப்பித்தல்
(இடம்:மட்டக்களப்பு)

விபுலாநந்த அடிகளாரின் தங்கை மகன் பொறியாளர் பூ. கணேசன் ஐயாவுடன் மு.இ. (இடம்: மட்டக்களப்பு)

மட்டக்களப்பு மக்களின் வரவேற்பினை ஏற்றுக்கொள்ளுதல்
(இடம்:மட்டக்களப்பு)

பேராதனைப் பல்கலை- தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகேஸ்வரன், மு.இ, பொறியாளர் பூ. கணேசன் (இடம்: மட்டக்களப்பு)


பார்வையாளர்கள்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வெள்ளைநிற மல்லிகையோ...!


விபுலாநந்த அடிகளார் எழுதிய "வெள்ளைநிற மல்லிகையோ..." எனத் தொடங்கும் பாடல் இறையீடுபாடு கொண்ட அன்பர்களின் பார்வையில் ஓர் அறிவார்ந்த பாடலாகப் போற்றிப் பாடப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் அந்தப் பாடலை அறியாதவர்கள் மிகவும் குறைவு; இல்லை என்றே சொல்லலாம். அத்தகு பெருமைக்குரிய மக்கள் பாடலை விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படத்திற்காக இசையமைத்து, இணையத்தில் வெளியிட்டோம். பல்லாயிரம் அன்பர்கள் கேட்டு மகிழ்ந்ததுடன் எங்கள் முயற்சியை நல்லுள்ளம்கொண்டோர் பாராட்டி ஊக்கப்படுத்தினர். அதனைக் காட்சிப்படுத்திப் பார்க்க நினைத்தோம். எங்களின் ஆவணப்படத்திற்காக நாட்டியக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாகக் காட்சிப்படுத்தினோம். இன்னும் சில நாள்களில் அந்தப் பாடல் உலகத் தமிழர்களின் கண்ணையும் கருத்தையும் கவர உள்ளது. பாடல் காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றோம்.


படங்கள் உதவி: நாராயணசங்கர்