நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கம்!



  தமிழறிஞர்கள் கு.சிவமணி, க.இராமசாமி, செ.வை.சண்முகம், பெஞ்சமின் இலெபோ உள்ளிட்டோர் முன்னிலையில் சோழன்குமார் அவர்கள் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகத்தின் கல்வெட்டைத் திறந்துவைத்தல்.

     வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்டசோழபுரத்தில் 2018, ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தமிழறிஞர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றம் என்பது தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலை உலக அளவில் பரப்பும் அமைப்பாகும். இந்த அமைப்பின் கிளை கனடா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மிகச் சிறப்பாக இயங்குகின்றது.

     அரியலூர் மாவட்டம், குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெற்ற தொடக்க விழாவில்  திருவாளர்கள் சுகுமார், அருண் குழுவினரின் நாகசுர இன்னிசை  முழங்க, உலகத் தொல்காப்பிய மன்ற நிகழ்ச்சிகள் தொடங்கின. செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து உரையாற்றினர்.

     இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), அழைக்கப்பட்டு, தகுதியுரை வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து, உ.தொ. மன்றம் தோன்றிய வரலாற்றினை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

     மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களுக்குத் "தொல்காப்பிய ஆய்வறிஞர்" என்னும் விருதும், பேராசிரியர் க. இராமசாமி அவர்களுக்குச் "செம்மொழிச் செம்மல்" என்ற விருதும் வழங்கிப் பாராட்டப்பட்டது.
முனைவர் க.இராமசாமி அவர்களுக்குச் செம்மொழிச் செம்மல் என்னும் விருதளித்துப் பாராட்டும் சோழன் குமார் அவர்கள்

மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களுக்குத் தொல்காப்பிய ஆய்வறிஞர் என்னும் விருதளித்துப் பாராட்டும் ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்கள்

     பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.

     உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகத்தின் கல்வெட்டினைத் தமிழ் ஆர்வலர் திரு. சோழன்குமார் திறந்துவைத்தார். பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், பேராசிரியர் ச. திருஞானசம்பந்தம், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்த இந்த நிகழ்ச்சிக்குத் தியாக. மோகன், கி. முல்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு. இளவரசன், ஸ்ரீ. ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், கருப்பையன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

     தூ. சடகோபன், பாவலர் கலியபெருமாள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, திருவாட்டி இலெபோ அவர்கள் சிறப்பிக்கப்படுதல்
புலவர் கு.கணேசமூர்த்தி அவர்களைச் சிறப்பிக்கும் பேராசிரியர் இ. சூசை

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம் பார்க்க இங்கே செல்லவும்.


சனி, 14 ஏப்ரல், 2018

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கவிழா!





      தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, ஜப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது.

      கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெறும் தொடக்க விழாவிற்குச் செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி தலைமை தாங்குகின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதர உள்ளனர்.

      இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), பேராசிரியர் இரா. ச. குழந்தை வேலனார் (நிறுவுநர், கடலூர்த் தமிழ்ச்சங்கம்)  அழைக்கப்பட்டுள்ளனர்.

      உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து உரையாற்றுவார்.

      பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர் கூத்தங்குடி அரங்கராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் பல்லடம் மாணிக்கம், பண்ணுருட்டி இரா. பஞ்சவர்ணம், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்க உள்ளார்.

      உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

      பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் அரங்க. பாரி, முனைவர் க. திலகவதி, முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

      பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தியாக. மோகன், கி. முல்லைநாதன், ந. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

      உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு.இளவரசன், ஸ்ரீ.ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், நா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம்:  http://www.tholkappiyam.org/

தொடர்புக்கு: 9442029053 /  9786332261

சனி, 17 பிப்ரவரி, 2018

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் சப்பான் நாட்டில் வெளியீடு!



விபுலநாந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிடுகின்றார் சப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் 
கா. பாலமுருகன். முதல்படி பெறுகின்றார் டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா. அருகில் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள்.

     சப்பான் நாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்குப் பொறியாளர்களும், மேலாண்மை பயின்றவர்களும் சென்றுள்ளனர். அவ்வாறு சென்று  சப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். சப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இந்த ஆண்டு டோக்கியோ மாநகரில் அமைந்துள்ள கொமாட்சுகவா சகுரா அரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினர் (03.02.2018). ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பத்தார் கலந்துகொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கும் கலை நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

     அண்மையில் தமிழகத்தில் மறைந்த தமிழ்க் கணினித்துறை வல்லுநர் தகடூர் கோபியின் மறைவுக்கு அகவணக்கம் செலுத்தும் நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சதீசுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன், வழக்கறிஞர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, உரையாற்றினர்.

      சப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. முதல் படியைச் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் கா. பாலமுருகன் வெளியிட, டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா பெற்றுக்கொண்டார்.

     தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியப் பரவலுக்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் பங்காற்றிவரும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின்  சப்பானியக் கிளை இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றத்தை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவரும் மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதினைச் சப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கிப் பாராட்டியது.

     சப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, குழந்தைகள் வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

சப்பான் நாட்டில் வாழும் பறையிசைக் கலைஞர் தயகோ குரோசவா என்பவர் தம் குழுவினருடன் கலந்துகொண்டு பறையிசை வழங்கியமை அனைவரையும் வியப்படைய வைத்தது.

     பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் வழங்கிய தமிழின் சிறப்புரைக்கும் கையுறைப் பொம்மலாட்டக் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவைத் தொடங்கி வைக்கும் மு.இளங்கோவன்


உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சப்பானியக் கிளை உறுப்பினர்கள்

மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதை வழங்குகின்றார் சப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா. பாலமுருகன். அருகில் சப்பான் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சதீசு, வினோத்து, செந்தமிழன், மு. கலைவாணன்.

வியாழன், 2 நவம்பர், 2017

மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கிளை தொடக்க விழா!



  தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவில் தொடங்கப்பட உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங்கில் உள்ள தெலுக் பங்ளிமா காராங் என்ற இடத்தில் 23.12.2017 சனி(காரி)க் கிழமை மாலை 6 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடக்க விழாவும், தொல்காப்பியர் நூலகம் திறப்பு விழாவும் நடைபெறுகின்றன.  இந்த நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து முனைவர் மு.இளங்கோவன் வருகை தந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

  மலேசிய நாட்டில் வாழும் தமிழ்மக்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். இந்த நாட்டில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தொல்காப்பியப் பரவலுக்குப் பல்வேறு முயற்சிகளைச் செய்துவந்தார். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவரின் தொண்டினைத் தொடரவும், அவர் செய்த பணிகளை இயன்ற வரை நினைவுகூரவும், தொல்காப்பிய நூல் அறிமுகத்தைப் பரவலாக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையை மலேசியாவில் தொடங்க உள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல கிளைகளுடன் இயங்குகின்றது.

 தொல்காப்பியத்தில் ஈடுபாடுடைய அறிஞர்களை அழைத்து, தொல்காப்பியத்தை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யவும், தொல்காப்பியப் பணிகளில் ஈடுபடுவோரைச் சிறப்பிக்கவும் இந்த அமைப்பு விரும்புகின்றது.

   மலேசியாவின் மூத்த தமிழறிஞரான முனைவர் முரசு. நெடுமாறன், திரு. ம. மன்னர் மன்னன், திரு. திருச்செல்வம், திரு. கம்பார் கனிமொழி உள்ளிட்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இந்த அமைப்பை நெறிப்படுத்த உள்ளனர். தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

    தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் எங்கள் முயற்சி வெற்றியடைய அனைவரின் மேலான ஒத்துழைப்பினையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ம. முனியாண்டி, சரசுவதி வேலு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகத் தொல்காப்பிய மன்றம்  மலேசியாக் கிளை தொடங்கும் விவரம்:

தேதி: 23.12.2017 காரி(சனி)க் கிழமை
நேரம் : மாலை 6.00 மணி
இடம்: 32 B, ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா உத்தாமா, தெலுக் பங்ளிமா காராங்பந்திங்,  சிலாங்கூர்

தொடர்புக்கு:
ம. முனியாண்டி 016 4442029
சரசுவதி வேலு 012 3189968
ஒருங்கிணைப்பாளர்கள்,
உலகத் தொல்காப்பிய மன்றம் - மலேசியாக் கிளை


வெள்ளி, 13 அக்டோபர், 2017

மக்கள் தொலைக்காட்சியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா ஒளிபரப்பு!



விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவில் ஆற்றிய உரையின் முதன்மைப்பகுதிகளும், ஆவணப்படத்தின் முதன்மைக் காட்சிகளும் 14.10.2017 சனிக்கிழமை (இந்திய நேரம்) காலை 8.30 மணிமுதல் 9 மணி வரை மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்க்க இயலும். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிவித்துப் பார்க்கச் செய்யுங்கள்.

முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளாரின் தமிழ்ப்பணிகளை நம் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டுவோம்!

இணையமுகவரி:


திங்கள், 18 செப்டம்பர், 2017

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை(டிவிடி), மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு ஆலோசகர் சௌமியா அன்புமணி வெளியிட, புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொள்கின்றார். அருகில் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து, ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன்,முனைவர் ஒப்பிலா. மதிவாணன், தூ. சடகோபன்.

       முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 16.09.2017 மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைமாமணி கா. இராஜமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு அறிவுரைஞர் திருமதி சௌமியா அன்புமணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆவணப்படத்தின் ஒளிவட்டினை (டிவிடி) வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். ஆவணப்படத்தின் முதல்படியினைப் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருஷ்ணன் அவர்களும், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் அவர்களும் பெற்றுக்கொண்டனர். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, முனைவர் க. இளமதி சானகிராமன், முனைவர் ஒப்பிலா. மதிவாணன், நீதியரசர் இராமபத்திரன், முனைவர் இரா. வசந்தகுமாரி, முனைவர் ஔவை நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      எழுத்தாளரும் கவிஞருமான ஜெயபாஸ்கரன் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்கினார். விபுலாநந்த அடிகாளர் ஆவணப்படத்தில் பங்கேற்றுத் தொழில்நுட்ப உதவிபுரிந்தவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் புதுச்சேரி க. குணத்தொகையன் சிறப்புச் செய்தார். நிகழ்ச்சியைக் கவிஞர் உமா மோகன் தொகுத்து வழங்கினார். தூ.சடகோபன் நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, புலவர் கி.த.பச்சையப்பன், புலவர் சீனு.இராமச்சந்திரன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் இலங்கையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இசையமைப்பாளர் இராஜ்குமார் இராஜமாணிக்கம் சிறப்பிக்கப்படுதல்

வில்லியனூர் கி. முனுசாமி சிறப்பிக்கப்படுதல்

நாட்டியக் கலைஞர் கிருஷ்ணன் சிறப்பிக்கப்படுதல்


நாட்டியக் கலைஞர்கள் சிறப்பிக்கப்படுதல்

விழாவுக்கு வருகைபுரிந்த இலங்கை மாணவர்கள்

பார்வையாளர்களின் ஒருபகுதியினர்

பார்வையாளர்களின் ஒரு பகுதியினர்

சனி, 19 ஆகஸ்ட், 2017

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!



விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அமைச்சர். டி.என். சுவாமிநாதன் வெளியிட, அ. உமாமகேசுவரன் பெற்றுக்கொள்ளும் காட்சி
(இடம்:கொழும்பு)


     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி..டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அங்குத் திரையிட முன்வந்தேன்.

     மட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை,     மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை நான் பகிர்ந்துகொண்டேன். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் பகிர்ந்துகொண்டமை எனக்கு ஊக்கமாக இருந்தது. விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் ஏற்றுக்கொண்டேன்.

     07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.

     இலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

     யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு பேராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

     சிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

     இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

     கல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.


மாண்புமிகு அமைச்சர் டி.என். சுவாமிநாதன் அவர்களின் வாழ்த்துரை
(இடம்:கொழும்பு)


மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சிறப்புச் செய்தல் (இடம்:மட்டக்களப்பு)



வரலாற்றுப் பேரறிஞர் சி. பத்மநாதன் அவர்களின் வாழ்த்துரை (இடம்:கொழும்பு)

பணிப்பாளர் அ. உமாமகேசுவரன் அவர்களின் வரவேற்புரை
(இடம்:கொழும்பு)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் 
நா. சண்முகலிங்கன் அவர்களின் மதிப்பீட்டு உரை(இடம்:கொழும்பு)

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் மதிப்பீட்டு உரை(இடம்:கொழும்பு)

கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை அவர்களின் 
தமிழ்த்தொண்டினைப் போற்றுதல் (இடம்:மட்டக்களப்பு)

பணிப்பாளர் க.பாஸ்கரன் அவர்களைச் சிறப்பித்தல்
(இடம்:மட்டக்களப்பு)

விபுலாநந்த அடிகளாரின் தங்கை மகன் பொறியாளர் பூ. கணேசன் ஐயாவுடன் மு.இ. (இடம்: மட்டக்களப்பு)

மட்டக்களப்பு மக்களின் வரவேற்பினை ஏற்றுக்கொள்ளுதல்
(இடம்:மட்டக்களப்பு)

பேராதனைப் பல்கலை- தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகேஸ்வரன், மு.இ, பொறியாளர் பூ. கணேசன் (இடம்: மட்டக்களப்பு)


பார்வையாளர்கள்

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

முனைவர் அ. அறிவுநம்பி அவர்களின் நினைவேந்தல் கூட்டம்!




புதுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புதுவைத் திருக்குறள் மன்றத்தின் (புதிமம்) செயலாளருமான முனைவர் . அறிவுநம்பி அவர்கள் 09.04.2017 இல் இயற்கை எய்தியதை முன்னிட்டு, இன்று 25.04.2017 மாலை 6 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தின் சங்கமித்ரா அரங்கில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றைப் புதுவைத் திருக்குறள் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

முனைவர் அ. அறிவுநம்பியின் நினைவைத் தாங்கியுள்ள தமிழார்வலர்கள், திருக்குறள் அன்பர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்(து)இவ் வுலகு - திருக்குறள்.

வியாழன், 2 மார்ச், 2017

தொல்காப்பியத்தில் சிக்கல்கள் என்னும் தலைப்பில் தொடர்பொழிவு

முனைவர் இராச. திருமாவளவன்

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு 02.03.2017 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி நீட இராசப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற தொடர்பொழிவுக்குப் பேராசிரியர் கு. சிவமணி தலைமை தாங்கினார். வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன்  தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு. இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்.

பேராசிரியர் கு. சிவமணி தொல்காப்பியச் சிறப்புகளை எடுத்துரைத்து, தொல்காப்பியர் காலம் குறித்தும், கடல்கொண்ட தென்னாடு தொடர்பாக ஆகமங்களிலும் வடமொழி நூல்களிலும் இடம்பெற்றுள்ள குறிப்புகளையும் எடுத்துரைத்தார்.

தமிழறிஞர் இராச. திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிக்கல்கள் என்ற தலைப்பில் அரியதொரு ஆராய்ச்சி உரை நிகழ்த்தினார். தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள சிக்கல்கள் சிலவற்றை  அறிஞர்களின் கவனத்திற்கு முன்வைத்தார். தொல்காப்பிய நூலின் மூலம், உரையாசிரியர் கருத்துகள், இவற்றை விளக்கிக்காட்டினார். மேலும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூல்மரபு நூற்பாக்களில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார். இவர்தம் உரையில் இடம்பெற்ற கருத்துகளை ஒட்டி அறிஞர்கள் உடன்பட்டும், உறழ்ந்தும் கருத்துரைத்தனர். தமிழாகரர் தெ. முருகசாமி, பேராசிரியர் விசயவேணுகோபால், முனைவர் தி. செல்வம், பாவலர் மு.இளமுருகன், முனைவர் சிவ. இளங்கோ, தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், பாவலர் சீனு. தமிழ்மணி, புதுவைத் தமிழ்நெஞ்சன், கல்வித்துறையின் முன்னை இணை இயக்குநர் அ. இராமதாசு, திரு. தூ. சடகோபன், அறிவியல் அறிஞர் தாமரைக்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாவலர் மு. இளமுருகன் நன்றியுரை வழங்கினார்.

முனைவர் கு. சிவமணி அவர்களின் தலைமையுரை

தமிழாகரர் தெ. முருகசாமி

மு.இளங்கோவன்(அறிமுகவுரை)


செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

தொல்காப்பியமும் வள்ளலாரும் – தொடர்பொழிவு 8



அன்புடையீர்! வணக்கம்.

தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. உலகத் தொல்காப்பிய   மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் அறிஞர்களின் பங்கேற்பில் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய உரையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 16. 02. 2017, வியாழக் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119,  நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்
 அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

தலைமை: தமிழாகரர் தெ. முருகசாமி அவர்கள்

சிறப்புரை: முனைவர் அருள்திரு ஊரன் அடிகளார் அவர்கள்
      
தலைப்பு: தொல்காப்பியமும் வள்ளலாரும்

நன்றியுரை: முனைவர் இரா. கோவலன் அவர்கள்


அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / முனைவர் மு.இளங்கோவன் + 9442029053