முனைவர் சு.வேல்முருகன்
புதுவையில் புகழ்பெற்ற ஆய்வாளர்களுள் சொல்லாய்வுச்செல்வர்
சு.வேல்முருகன் அவர்கள் குறிப்பிடத்தகுந்த பெருமைக்குரியவர். நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில்
ஆய்வுமாணவனாக இருந்த காலத்திலிருந்து சு.வேல்முருகன் அவர்களை நன்கு அறிவேன். அவருடன்
இணைந்து அரிக்கமேட்டு அகழாய்வுக்குச் சென்ற நினைவுகள் அலைமோதுகின்றன.
அரிக்கமேடு பற்றிய விவரங்களை நண்பர்களிடம்
கேட்டபொழுது சிறு சிறு செய்திகளை மட்டும் சொன்னார்கள். ஆனால் சு.வேல்முருகன் அவர்களைக்
கேட்டபொழுது மலைக்கத்தகுந்த செய்திகளைச் சொல்லி வியப்பூட்டினார். அதனால் அவரை அழைத்துக்கொண்டு,
ஒளிப்படக் கலைஞர் செந்தமிழினியனையும் அழைத்துக்கொண்டு அரிக்கமேடு சென்றேன். அங்கிருந்த
ஒவ்வொரு பகுதிகளையும் எனக்கு விரிவாகக் காட்டி, அரிக்கமேடு குறித்த விரிவான விவரங்களை எனக்குச்
சொன்னார். சு.வேல்முருகன் அவர்களின் முன்னோர் அரிக்கமேடு அகழாய்வில் பணியாற்றிய விவரத்தையும்
அதனால் அரிக்கமேட்டு ஆய்வில் கூடுதல் விவரம் தமக்குத் தெரியும் என்றும் சொல்லித் தாம்
சேமித்து வைத்திருந்த அரிக்கமேட்டு அரும்பொருள்களை என் பார்வைக்கு உட்படுத்தினார்.
அதுபோல் அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், ஓடுகள், சாயம் தோய்ந்த பொருள்களையெல்லாம் எனக்குக்
காட்டினார். நினைவுக்குச் சில பொருட்களை வீட்டுக்குக் கொண்டு வந்தேன். அதன்பிறகு அரிக்கமேடு
குறித்த ஒரு கட்டுரை எழுதித் தினமணி ஏட்டில் அது வெளிவந்தது.
பின்னர்த் தமிழ் இலக்கியம், இலக்கணம் சார்ந்த,
தமிழ் உணர்வாளர்கள் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்பொழுது சு.வேல்முருகன்
ஐயாவிடம் நலம் வினவி மகிழ்வேன். இவர்கள் வாணிதாசன் இலக்கிய ஆய்வுகளிலும், புதுவைச்
சிவம் இலக்கிய ஆய்வுகளிலும் ஆழங்கால்பட்ட புகழ்ப்பெருமைக்குரியவர். சிறப்பிற்குரிய
சு.வேல்முருகன் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.
முனைவர்
சு.வேல்முருகன் அவர்களின் தமிழ்வாழ்க்கை
சு.வேல்முருகன் அவர்கள் புதுவை மாநிலம் தவளக்குப்பத்தில்26.12.1946 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் சுப்பராயன்-செங்கேணி ஆவர். தமிழிலும்,
ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
புதுவை அரசின் கல்வித்துறையில் 37 ஆண்டுகள்
விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புதுவை அரசின் நல்லாசிரியர் விருது, கலைமாமணி
விருது பெற்றவர். இவர்தம் நூல்கள் தமிழக அரசாலும், புதுவை அரசாலும் பரிசுக்குரியதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சொல்லாய்வு, கல்வெட்டாய்வு, அகழாய்வுத்துறைகளில் ஈடுபாடுகொண்டவர்.
மேடைகளில் கேட்டார் உளங்கொள்ளும் வகையில் உரையாற்றுவதில் வல்லவர். தமிழுக்கு ஆக்கம்
தேடும் போராட்டங்களில் ஈடுபட்டுத் தொடர்ந்து குரல்கொடுப்பவர். புதுவையின் பல்வேறு இலக்கிய
அமைப்புகளில் பொறுப்பேற்றும், இணைந்தும் பணிபுரிகின்றார்.
சு.வேல்முருகன் அவர்கள் செந்தமிழ்க்கொண்டல்
ஆய்விதழின் ஆசிரியராக விளங்குகின்றார்.
முனைவர்
சு.வேல்முருகன் தமிழுக்கு வழங்கிய கொடை:
1. அன்னை இந்திரா ஒரு வெள்ளைப்புறா
2. வாணிதாசன் பாடல் திறாய்வு
3. ஆராய்ச்சி ஒரு சொல்லாய்வு
4. கோப்பெருஞ்சிங்கன் கனவு
5. வாணிதாசன் குழந்தை இலக்கியம்
6. வாணிதாசன் பாடல்களில் உருக்காட்சி
7. மாறுபட்ட மல்லிகை
8. கம்பன் பாடிய அறம்
9. கம்பனில் அறிவு
10. பகல் அல்லி
11. சேக்கிழார் வரலாறு
12. சுந்தரர் வரலாறு
13. அப்பர் வரலாறு
14. புதுச்சேரி மண்ணில் பிரான்சுவா மர்த்தேன்
15. வாணிதாசன் கவிதைக்கலை
16. கம்பனில் அருமறை ஆட்சி
17. வாகூர் நாட்டு வண்டார்குழலி
18. திருவக்கரை வரலாறு
19. செவ்வியல்மொழி தமிழ்
20. சேக்கிழாரும் செந்தமிழும்
21.சமுதாய மறுமலர்ச்சிக்குப் புதுவைச் சிவத்தின் பங்களிப்பு
மு.இளங்கோவன், சு.வேல்முருகன் (அரிக்கமேட்டில் மணி,ஓடுகள் தேடுதல்)
20. சேக்கிழாரும் செந்தமிழும்
21.சமுதாய மறுமலர்ச்சிக்குப் புதுவைச் சிவத்தின் பங்களிப்பு
மு.இளங்கோவன், சு.வேல்முருகன் (அரிக்கமேட்டில்)
மு.இளங்கோவன், சு.வேல்முருகன் (அரிக்கமேட்டில்)
மு.இளங்கோவன், சு.வேல்முருகன் (அரிக்கமேட்டில்)
1 கருத்து:
கொடைகள் அருமை...
அவரைப் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி...
கருத்துரையிடுக