நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தெருக்கூத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெருக்கூத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

தெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி



 தி இந்து நாளிதழின் கட்டுரை(11.04.2017)

  தமிழ் ஆய்வுலகம்  கால ஆராய்ச்சியிலும், இலக்கிய நயம் பாராட்டுவதிலும், இலக்கணப் பூசல்களிலும், மொழியாராய்ச்சியிலும், சிற்றிலக்கிய ஆய்வுகளிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை நாட்டுப்புறவியல் துறைக்கு உயிரோட்டம்  கொடுத்தார். அவரின் அன்பிற்குரிய மாணவரான . அறிவுநம்பிக்குத் தெருக்கூத்துத் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குத் தலைப்பை ஒதுக்கினார். இன்னொரு மாணவரான மு. இராமசாமிக்குத் தோல்பாவைக்கூத்து என்னும் தலைப்பை ஒதுக்கினார்.

 சங்க இலக்கிய ஈடுபாடும், சமய ஈடுபாடும் கொண்டிருந்த அ. அறிவுநம்பி தெருக்கூத்துத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தவுடன் முழுநேரத் தெருக்கூத்து ஆய்வாளாரக மாறித் தமிழகத்தின் தெருக்கூத்து நடைபெறும் இடங்களுக்குக் களப்பணிமேற்கொண்டு மாதக்கணக்கில் அலைந்து திரிந்து, ஆய்விற்குரிய குறிப்புகளுடன் நெறியாளர் முன் நின்றார். நெறியாளர் சண்முகம் பிள்ளை, தமிழ் ஆய்வுலகம் இதுவரை கண்டிராத பல புதிய செய்திகளைத் தம் மாணவர் கொண்டுவந்துள்ளதை வெகுவாகப் பாராட்டினார். நெறியாளரின் மொழிகளால் ஊக்கம் பெற்ற அறிவுநம்பி தெருக்கூத்து ஆடும் அளவிற்குப் பயிற்சி பெற்றிருந்தார்.

 வலிமையான ஆய்வினை நிகழ்த்திய தம் மாணவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் விரிவுரையாளர் பணி கொடுத்து மகிழ்ந்தது. ஐந்தாண்டுகள் மதுரையில் பணிபுரிந்த அறிவுநம்பிக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் பணி கிடைத்தது. முப்பத்தொரு ஆண்டுகள் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அ. அறிவுநம்பி இன்னும் சில மாதத்தில் ஓய்வுபெற இருந்தார். இந்த நிலையில் திடுமென உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் 09.04.2017 இல் இயற்கை எய்தியமை தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 பேராசிரியர் பூ.அமிர்தலிங்கம், இராசலட்சுமி அம்மையாருக்கு மகனாக 10.11.1952  பிறந்தவர்தான் .அறிவுநம்பி. காரைக்குடி ஊரினர். தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாஸ்நகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். கவியரசு முடியரசனார், புலவர் .பழனி உள்ளிட்டவர்கள் இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கினர். அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பை நிறைவு செய்த பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்.

 அ. அறிவுநம்பி நாட்டுப்புறவியல், சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்ட துறைகளில் பன்முகப் புலமையுடைவர். அறிவுநம்பியின் முன்னோர்கள் இராமநாதபுரம் அரண்மையின் அரசவைப் புலவர்களாக விளங்கியவர்கள். சேதுபதி மன்னர்களின்மேல் சிற்றிலங்கியங்கள் எழுதிய பெருமைக்குரியவர்கள். மரபுவழியாகக் கிடைத்த தமிழறிவும், பல்கலைக்கழகங்களில் பெற்ற பேரறிவும் அ. அறிவுநம்பியைப் புகழ்பெற்ற கல்வியாளராக மாற்றியது. உலக அளவில் அறிமுகமான தமிழறிஞராக இவர் விளங்கமுடிந்தது.

   அ. அறிவுநம்பி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது மட்டும் தம் பணி என்று நிறுத்திக்கொள்ளாமல் அனைவரையும் உடன்பிறந்தாராக நினைத்துப் பழகும் இயல்புடையவர். எளிமையும் அன்பும் இவரிடம் இருந்த உயர் பண்புகளாகும். ஆய்வு எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் பல்துறையிலும் நூல்களை எழுதித் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர். புதுதில்லி முதல் குமரிமுனைவரை உள்ள தமிழ்த்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், கல்விக்குழுக்கள், ஆய்வறிஞர் குழுக்களில் இடம்பெற்றிருந்தவர். ஆண்டுக்கு ஒரு நூல் எழுதி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இவர்தம் நூல்கள் அரசுப் பரிசில்களையும், இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்ற பெருமைக்கு உரியன.

  பாரதியாருக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தி உலக அளவில் இருக்கும் பாரதி ஆய்வாளர்களை ஒன்றிணைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தராகவும், இயக்குநராகவும், புலமுதன்மையராகவும், தமிழியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். புதுச்சேரியில் இயங்கிவரும் புதிமம் என்ற திருக்குறள் பரப்பும் அமைப்பின் செயலராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தவர்.

 
  பதினைந்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டு ஆய்வரங்கில் கட்டுரை படித்தவர். அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இவர்தம் கட்டுரை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கத் தமிழர்களால் பாராட்டப்பட்டது. இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ஆய்வரங்குகளில் ஆய்வுரை வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.


 அ. அறிவுநம்பியிடம் கொடுத்த பணிகளைச் சிறப்பாக முடித்துக் கொடுப்பார் என்பதால் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு இவர்தம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளது. இவர் கலந்துகொள்ளும் எந்தக் கூட்டத்திலும் தனிமுத்திரை பதிப்பதை வழக்கமாக கொண்டவர். நேர்முகத் தேர்வுகளில் தம் முடிவுகளைத் துணிவாக எடுத்துவைக்கும் இயல்புடையவர். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகளில் இவர் புறத் தேர்வாளராகக் கலந்துகொள்ளும்பொழுது, பார்வையாளர்கள் வரிசையிலிருந்து கேட்கப்படும் வினாக்கள் அனைத்தையும் குறித்துக்கொண்டு, ஆய்வாளரிடமிருந்து விளக்கம் பெறுவதை இலாவகமாகச் செய்வார். தமக்கு ஓய்வும் வாய்ப்பும் இருக்கும் பொழுது யார் அழைத்தாலும் கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

   அறிவுநம்பி சமூகம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்துப் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தவர். எளிமையும் தெளிவும் கொண்டவை இவரின் கட்டுரைகள்.  சொல்ல வந்தவற்றை விளக்க இவர் எடுத்து முன்வைக்கும் உதாரணங்களும்,  இவரின் சொல்லாற்றலும் கற்பவரை வசியப்படுத்துவன. நடைமுறையிலிருந்து இவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் படிப்பவரைப் பரவசப்படுத்துவன. எழுத்துத்துறையில் மட்டுமல்லாம் மேடைப்பேச்சிலும் அறிவுநம்பி தேர்ந்த கலைஞராக விளங்கியவர். நகைச்சுவை கலந்து பேசும் இவரின் பேச்சினைக் கேட்பதற்கு மாணவர் கூட்டம் ஒவ்வொரு கல்லூரியிலும் உண்டு.  வகுப்புகளை நகைச்சுவையுடன் கொண்டுசெல்லும் பேராற்றல் பெற்றவர் இவர். இவரிடம் பயிலும் மாணவர்கள்  தாங்கள் எழுதும் நூல்களுக்கு இவரிடம் அறிமுகச் செய்தி பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். புதுவையைச் சேர்ந்த ஒரு மாணவர், ’தமிழர் தம் குடிப்பழக்கம்’ என்ற தம் நூலுக்கு அறிமுகச் செய்தி வாங்கிய பொழுது, ’போடாமலே இவர் ஆடுபவர்" என்ற தலைப்பில் இவர் வழங்கிய அறிமுகவுரை அனைத்து மாணவர்களாலும் இரசிக்கப்பட்டது. ஏனெனில் அந்த மாணவர் கரகாட்டம் ஆடுபவர் என்பதும், மாணவரின் நூல் தலைப்பு மது தொடர்பில் இருப்பதும் உணர்ந்து இருபொருளில் பேராசிரியர் எழுதியதே மகிழ்ச்சிக்குக் காரணங்களாகும். அதுபோல் இவரின் இன்னொரு மாணவரை அறிமுகப்படுத்தும் பொழுது, " இவர் போட்டி ஒன்றில் பங்கு கொண்டால் மற்றவர்களிடம் கேட்கப்பட வேண்டிய வினா, இரண்டாவது பரிசு யாருக்கு? என்று எழுதியதும் இவரின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும்.

  மாணவர்கள் இவர்களிடம் அணிந்துரை பெறுவதை வாடிக்கையாகக் கொள்வதுபோல் தம் நூல்களுக்கு மாணவர்களிடம் அணிந்துரை பெறுவதை அறிவுநம்பி வழக்கமாக கொண்டிருந்தவர். அறிவுநம்பியின் கையெழுத்துத் தமிழக அளவில் புகழ்பெற்ற ஒன்றாகும். கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு ஓவியம்போல் இவரின் கையெழுத்து இருக்கும். எதனையும் திட்டமிட்டு முடிக்கும் ஆற்றலும், முடிவெடுக்கும் திறனும் அனைவராலும் பாராட்டப்படுவன.

 அறிவுநம்பி கவிதை எழுதுவதிலும் ஆற்றல்பெற்றவர். பல்வேறு புகழ்பெற்ற கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளுக்காக நேர்முக வருணனை செய்வதிலும் கைதேர்ந்தவர்.

    தம் ஆசிரியர்களின் மேல் மிகுந்த நன்றியுணர்ச்சியும், மரியாதையும் கொண்டவராகப் பேராசிரியர் அ. அறிவுநம்பி விளங்கினார். தம் ஆசிரியர்களை மேடைதோறும் நினைவுகூர்ந்து அவர்களின் சிறந்த கருத்துகளை அவையினருக்கு நினைவூட்டுவது அவர்தம் பழக்கம்.  தம் பேராசிரியரான வ.சுப. மாணிக்கம் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவதில் ஆர்வம்கொண்டு சில பணிகளைத் திட்டமிட்டுச் செய்துகொண்டிருந்தார். வ.சுப.மாணிக்கம் குறித்த நூலொன்றினை மூன்று நாளுக்கு முன்பாக எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்பியிருந்தார். அந்த நூலே அறிவுநம்பியின் வாழ்க்கைத் தடயத்தைக் காட்டும் கடைசி ஆவணமாக அமைந்துவிட்டது. புதுவைப் பல்கலைக்கழகம் ஒரு அறிவுக்கலங்கரை விளக்கினை இழந்து நிற்கிறது.

நன்றி:  தி இந்து (தமிழ்) நாளிதழ் 11.04.2017

குறிப்பு: இந்து நாளிதழ் வெளியிட்ட கட்டுரையின் முழு வடிவம்

ஞாயிறு, 5 மார்ச், 2017

தெருக்கூத்துக் கலைஞர் பட்டு கவுண்டர்!


தெருக்கூத்துக் கலைஞர் பட்டு கவுண்டர்


நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு இரண்டு நண்பர்கள் அண்மையில் வந்தனர். ஒருவர் முன்பே அறிமுகம் ஆனவர். அவரின் பெயர் திரு. குணசேகரன் என்பதாகும்.  பொ.தி.ப. சாந்தசீல உடையார் அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்தவர். உடன் வந்தவர் அவரின் தம்பி திரு. சரவணன் ஆவார். வந்தவர்கள் பலபொருள்குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் எங்களின் பேச்சானது தெருக்கூத்து நோக்கி நகர்ந்தது.

புதுச்சேரியில் மிகுதியான தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்துள்ளமையையும் அவர்களைப் பற்றிய போதிய பதிவுகள் இல்லாமல் உள்ளதையும் அவர்களிடம் தெரிவித்தேன். என்னுடன் உரையாடிய சரவணன் தெருக்கூத்துக் கலைஞர் என்பதையும், கலைமாமணி கோனேரி இராமசாமி அவர்களின் கலைக்குழுவில் உள்ளவர் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

சரவணன் அவர்களிடம், தங்களுக்குத் தெரிந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞர்கள் புதுவையில் உள்ளனரா? என்று வினவினேன். கல்விப் புலத்திலிருந்து தங்கள் கலையை நோக்கி வினவுபவர் உள்ளாரே என நினைத்து, ஆர்வமுடன் உரையாடலை அவரும் தொடர்ந்தார். தங்கள் உறவினர்கள் பலர் கூத்துக்கலைஞர்கள் எனவும், தங்கள் உறவினருள் அகவை முதிர்ந்த கூத்துக்கலைஞர் ஒருவர் இப்பொழுதும் உள்ளார் எனவும் தெரிவித்தார். அன்றுமுதல் அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக் கலைஞரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டேன்.

கூத்துக்கலைஞர் சரவணன் தம வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலாகத் திருமணக்கூடங்கள், விழா மேடைகள் ஆகியவற்றை ஒப்பனைப்படுத்தும் கலைஞராகவும் கூடுதல் பணிகளைச் செய்வது உண்டு. திருமண நாளில் மண்டபங்களில் மணமேடையை அழகுப்படுத்துவது, அதனைப் பிரித்தெடுத்து மீண்டும் அடுத்த  மண்டபத்துக்குக் கொண்டு செல்வது, அங்குப் பணி முடிந்த பிறகு வீட்டுக்குக் கொண்டுவருவது என்று எப்பொழுதும் பணி அழுத்தமாக இருப்பவர். நான் அழைக்கும்பொழுது இதனைக் கூறி, விலகிக்கொள்வார். அவர் அழைக்கும்பொழுது நான் அலுவலகத்தில் உழன்றுகொண்டிருப்பேன்; அல்லது அயலகப் பயணங்களில் இருப்பேன். இருவரும் சந்திக்கும்பொழுது ஒளி ஓவியர் எங்களுடன் இணையமுடியாதபடி சூழல் இருக்கும்.

இன்று(04.03.2017) மாலை ஒளி ஓவியர், கூத்துக்கலைஞர், நான் மூவரும் ஒருபுள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் புதுவையின் கடைசி எல்லைப்பகுதியில் இருந்த நாவற்குளம் பகுதியை அடைந்தோம். ஒருகாலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்த பெரும் தோப்புகளும், பனந்தோப்புகளும், பொன்விளையும் பூமியுமாக இருந்த நாவற்குளம் என்ற செம்மண் நிலம் இன்று, சிமெண்டு மாளிகைகள் எழுப்பப்பெற்று, சமூகத்தில் முதன்மையானவர்கள் வாழும் இடமாக மாறிவிட்டது.

எங்களின் வருகைக்குக் குணசேகரனும் சரவணனும் காத்திருந்தனர். சாலையை ஒட்டிய ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் முன்பகுதியில் ஒரு அகவை முதிர்ந்த பெரியவர் அமர்ந்திருந்தார். என்னை அழைத்துச் சென்று அந்தப் பெருமகனாரிடம் அறிமுகம் செய்தனர். முன்பு என்னைப் போல் மூவர் சென்று உரையாடித் திரும்பியுள்ளனர். அவர்களின் செயலால் சோர்வுற்று இருந்த பெரியவர் என்னையும் அந்தப் பட்டியலில் இணைத்து, நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. மனச்சோர்வுடன்தான் பேசினார்.

குடும்பத்தில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தனர். அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக்கலைஞரை உள்ளே அழைத்து, விளக்கொளியில் அமரச் செய்து உரையாடத் தொடங்கினோம். “பேட்டி” காணும் செய்தியாளர்கள் என்ற பெயரில் யாரேனும் வந்திருந்தால் வந்த வேகத்தில் திரும்பியிருப்பார்கள். ஐயாவை எங்களின் வழிக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் பாடுபட்டோம்.

என் பெயர் பட்டு கவுண்டர்.  அப்பா பெயர்  பெரியதம்பி, அம்மா பெயர் காத்தாயி. இப்பொழுது எனக்குத் தொண்ணூற்றெட்டு வயது ஆகிறது என்றார். பிறந்து வளர்ந்தது, படித்தது, வாழ்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். தாய் மாமன் சு. இராஜகோபால் அவர்களிடம் தெருக்கூத்துப் பாடல்களையும், நாடகப் பாடல்களையும் கற்றுக்கொண்டேன் என்றார். இந்தத் தகவலைப் பெறுவதற்குள் பெரும் முயற்சி எனக்குத் தேவைப்பட்டது. நான் கத்திக் கதறி விவரங்களை வாங்குவதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடினர். அகவை தொண்ணூற்று எட்டு என்றாலும் இன்னும் கண்ணாடியில்லாமல் செய்தித்தாளைப் படிக்கின்றார்.

தெருக்கூத்துக் கலைஞர் பட்டு கவுண்டர்


திரு. பட்டு கவுண்டர் அவர்கள் பெருகிய நிலங்களைக் கொண்ட வளமான வாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அந்நாளைய பிரெஞ்சு அரசுக்குத் துப்பாக்கிக்குப் பயன்படும் பொருள்களைச் செய்து வழங்கியுள்ளார். அதனால் புதுவையின் ஒதுக்குப்புறமாக இருந்த இவர்களின் நிலங்கள் வரை புதுச்சேரியின் எல்லையைப் பிரெஞ்சியர் அமைத்தனர் என்பதை அறியமுடிந்தது. சற்றுத் தொலைவில் ஆங்கிலேயர்களின் முகாம்(கேம்ப்) இருந்துள்ளதையும் உரையாடலில் அறிந்தேன்.

பட்டு கவுண்டர் தம் வீட்டை ஒட்டிய பகுதியில் அக்காலத்து இளைஞர்களாக இருந்த உறவினர்களை ஒன்றிணைத்துத் தெருக்கூத்தினைக் கற்றுள்ளார். இவர்களுக்கு ஆசிரியராக இருந்து, இராஜகோபால் என்பவர் தெருக்கூத்துக் கலையை அனைவருக்கும் பயிற்றுவித்துள்ளார். பலநாள் பயிற்சி எடுத்து, அரங்கேறிய தெருக்கூத்துக் கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும், கோடைக் காலங்களிலும்  அந்தநாளில் தெருக்கூத்து ஆடியுள்ளனர். பக்கத்து ஊர்களிலிருந்து தெருக்கூத்துக்குத் தேவையான இசைக்கருவிகள், ஒப்பனை செய்வதற்குரிய அணிகலன்கள், கட்டைகள் வாடகைக்கு அமர்த்திப் பயன்படுத்தியுள்ளனர். அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று தெருக்கூத்து ஆடியுள்ளனர்.

பட்டு கவுண்டர்  தருமன், கண்ணன், நாரதன் வசிஷ்டர், அபிமன்யு என்று பல்வேறு பாத்திரங்களில் ஆர்வமாக நடித்தவர். இன்றும் மெல்லிய குரலில் இந்தப் பாத்திரங்கள் பாடும் பாடல்களைப் பாடிக்காட்டித் தம் இளமைக்காலத் தெருக்கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பாடல்களைப் பாடும்பொழுது அடிக்கடி களைப்படைந்துவிடுகின்றார். நினைவுக்குச் சில பாடல்களையும் உரையாடல்களையும் ஒளிப்பதிவு செய்துகொண்டோம். இருபத்தைந்து வயதில் தெருக்கூத்து ஆடத் தொடங்கிய பட்டு கவுண்டர் 60 வயது வரையும் தெருக்கூத்தின் உச்ச நிலையைத் தொட்ட கலைஞராக விளங்கியுள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்கள் சிலரிடம் புகுந்துள்ள மது, புலால் உண்ணுதல் என்ற பழக்கங்கள் இல்லாதவராகவும், அறச்சிந்தனை கொண்டவராகவும் விளங்கும் பட்டு கவுண்டர் அவர்கள் போற்றி மதிக்கத்தக்க கலைஞர் என்பதில் ஐயமில்லை.
தெருக்கூத்துக் கலைஞர்கள் பட்டு கவுண்டர், பெருமாள்சாமி, மு.இ.

பட்டு கவுண்டர் அவர்களின் மகன் பெருமாள்சாமியும் தெருக்கூத்துக் கலைஞர். இப்பொழுது பகலில் தச்சுத்தொழிலும், இரவில் தெருக்கூத்துப் பணியுமாக உள்ளார். பட்டு கவுண்டரின் பெயரன் பற்குணன் கணினி வரைகலையில் பயிற்சிபெற்று வருகின்றார். இவரும் இளம் அகவையிலையே தாத்தாவுடன் இணைந்து தெருக்கூத்தினைப் பார்ப்பது, பாரதக் கதை கேட்பது என்று விருப்பத்துடன் இருந்து, தெருக்கூத்தில் கண்ணன் வேடம் அணிந்து, பாட்டிசைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருபவர். மூன்று தலைமுறைக் கூத்துக்கலைஞர்களை ஓரிடத்தில் சந்தித்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. மூவரின் பாடலையும் ஒளிப்பதிவு செய்தோம்.

நாவற்குளம் பகுதி வளர்ச்சி அடைவதற்குச் சாலை அமைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும், கோயில் கட்டவும் கோடிக்கணக்கான மதிப்புடைய தம் நிலங்களை அன்பளிப்பாக வழங்கிய கொடை நெஞ்சர்  பட்டு கவுண்டர் என்பதை அறிந்து கைகுவித்து வணங்கித் திரும்பினேன்.

ஞாயிறு, 31 மார்ச், 2013

தெருக்கூத்துக் கலைஞர் கோனேரி இராமசாமி




பொறியாளர் கோனேரி இராமசாமி


புதுவையில் இலக்கிய மேடைகளிலும் அரசு விழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் தெருக்கூத்து நடித்துக்காட்டுவதை வழக்கமாகக் கொண்டவர் கோனேரி இராமசாமி. இவர் புதுவையில் தெருக்கூத்துக் கலை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுபவர். தந்தையார் வழியாகத் தெருக்கூத்தைக் கற்றுத் தேர்ந்து ஐந்து வயதுமுதல் கடந்த நாற்பதாண்டுகளாகத் தொடர்ந்து தெருக்கூத்துக் கலையில் தம்மை ஈடுபடுத்தி வருபவர்.

தெருக்கூத்துக் கலைஞர்களின் நலனுக்காக மக்கள் கலைக்கழகத்தை 1990 இல் உருவாக்கி நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து வருபவர். தம் ஊதியத்தின் பெரும்பகுதியைத் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு வழங்குவதுடன் அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்பவர்.

கோனேரி இராமசாமி அவர்கள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடகங்களில் நடித்துள்ளார். இராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரன் கதை, காத்தவராயன்கதை, கந்தபுராணம் உள்ளிட்ட கதைகளின் அடிப்படையில் தெருக்கூத்து நிகழ்த்துவதுடன் காலத்திற்குத் தேவையான சமூக விழிப்புணர்வுச் செய்திகளைத் தெருக்கூத்துகளாக நிகழ்த்தி வருகின்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்குப் பயிற்சியளித்துத் தெருக்கூத்து நடத்த வழிவகை செய்துள்ளார். துரியோதனனாகவும், கர்ணனாகவும் கோனேரியார் மிகச்சிறப்பாக நடித்து மக்களின் மதிப்பைப் பெறுவது உண்டு. பெண் வேடம் கட்டியும் ஆடுவார். எந்த வேடத்தையும் ஏற்று நடிப்பதில் வல்லவர். அதுபோல் உடனுக்குடன் பாடல்புனைந்தும், சூழலுக்கு ஏற்பக் கதைகளைப் புனைந்தும் நடித்துக்காட்டுவார்.

கோனேரி இராமசாமி அவர்கள் இயற்கையாகப் பாட்டு எழுதும் ஆற்றல் பெற்றவர். சிக்கலான சிந்துப்பாடல்கள், வண்ணப்பாடல்களை மிக எளிதாக எழுதிவிடும் ஆற்றல் இவருக்கு உண்டு. சிறிய வயதிலிருந்து இசைப்பாடல்களைக் கேட்டு உள்வாங்கிக்கொண்டதால் எந்தத் தலைப்பிலும் எந்த அமைப்பிலும் உடன் பாடல் எழுதிவிடுவார்.

மூவுணர்வுகள்(காதல்), மூவுணர்வுகள்(பாசம்), மூவுணர்வுகள்(நட்பு), கல்லாடன் அந்தாதி, நரம்பின் நாதம், சிறுவர் சிந்து,  அந்தாதி சிந்தாயிரம், தமிழ்ப்பேரண்டம், கண்ணன் பிறப்பு(தெருக்கூத்து இசைநாடகம்), சக்தி சதகம், விராடபருவம் (தெருக்கூத்து நாடகம்) தமிழ்த்தாய்த் திருப்புகழ் (கூத்திசை வண்ணப்பாடல்கள்) உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கோனேரி இராமசாமியின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

கோனேரி இராமசாமி அவர்கள் 15.11.1966 இல் புதுவை மாநிலம் கோனேரிக்குப்பம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.  பெற்றோர் பாண்டுரங்கக் கவுண்டர் - கண்ணம்மாள் ஆவர். இவருடன் பிறந்தவர்கள் தட்சணாமூர்த்தி (இவரும் கூத்துக் கலைஞர்), இராமு, அமுது, தனலட்சுமி ஆவர்.

கோனேரி இராமசாமி எட்டாம் வகுப்பு வரை கூடப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்றவர். இளமையில் தமிழ் இலக்கியங்களில் நல்ல ஈடுபாடுகொண்டவர். திருக்குறளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறட்பாக்களை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். பத்தாம் வகுப்பில் புதுவை மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர். இவர் பெற்ற மதிப்பெண்422 / 500.

பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு பேச்சுப்போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும், திருக்குறள் மனப்பாடப் போட்டிகளிலும் பல பரிசில்களைப் பெற்றவர். புதுவை அரசின் மோதிலால் நேரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றவர். பின்னர்ப் பொறியியல் பயின்று, புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பொறியாளராகத் தற்பொழுது பணிபுரிகின்றார். கோனேரி இராமசாமி அவர்களின் கலைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு இவருக்குக் கலைமாமணி விருது(2002) வழங்கிச் சிறப்பித்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குத் தம் குழுவினருடன் சென்று தெருக்கூத்து நிகழ்த்திய பெருமைக்குரியவர்

கோனேரி இராமசாமி அவர்களின் துணைவியார் பெயர் மாலதி என்ற சரசுவதி. இவர்களுக்குச் செந்தமிழ்ச் செல்வன், செவ்வந்திமலர், செங்கதிர் வேந்தன் என்ற மழலைச் செல்வங்கள் உள்ளனர்.

நாள்தோறும் தெருக்கூத்துக் கலைஞர்களைச் சந்திப்பது, கூத்துப் பயிற்சியளிப்பது, நடிப்பது என்று தெருக்கூத்தை வளர்தெடுக்க வாழ்ந்து வருகின்றார் புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் இந்தப் பொறியாளர்.
 
கோனேரி பா. இராமசாமி அவர்கள் புதுவை நாட்டுப்புறக் கலைஞர்களை அறிமுகம் செய்யும் காணொலி!.
 

தொடர்பு முகவரி:
பொறியாளர் திரு.கோனேரி இராமசாமி அவர்கள்
எண் 2, முதல் பிரதானசாலை, ஆருத்ரா நகர், கவுண்டர்பாளையம்,
புதுச்சேரி- 605 009
பேசி: 0091- 9367600371 / 0091 - 9344440371







குறிப்பு: கோனேரி இராமசாமி அவர்களின் தெருக்கூத்து நேர்காணல்களை அடுத்த பதிவுகளில் வெளியிடுவேன்

திங்கள், 5 ஜனவரி, 2009

காஞ்சிபுரத்தில் கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு ஆய்வரங்கம்...


அரங்கப் பலகை

04.01.2009 ஞாயிறு பிற்பகல் மூன்று மணிக்குக் காஞ்சிபுரத்தில் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழி வாக நடைபெற்ற கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு குறித்த ஆய்வரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.காஞ்சிபுரம் சார்ந்த தெருக்கூத்துக் கலைஞர்கள்,நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காலை ஒன்பது மணிக்குப் புதுச்சேரியில் புறப்பட்டு, பகல் பன்னிரண்டரை மணிக்குக் காஞ்சி புரம் சென்று சேர்ந்தேன்.எனக்காக என் மாணவர் மோகனவேல் அவர்களும் கூழமந்தல் (சோழமண்டலம் எனபதன் ஆங்கிலத் திரிபு இந்த ஊர்)திரு. உதயகுமார் அவர்களும் எனக்காகக் காத்திருந்தனர்.பகலுணவுக்குப் பிறகு காஞ்சிபுரம் மகாலட்சுமி திருமண மண்டபம் சென்று சேர்ந்தோம்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள், ஆய்வு மாணவர்கள் பலர் வந்திருந்தனர். தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் அறிமுகமாகி உரையாடினோம். கவிஞர்கள், கலைஞர்கள் எனப் பல திறத்தினர் இருந்தனர்.மூத்தவர்களும் பலர் வந்திருந்தனர்.ஆழ்வார் பாடல்களில் வல்ல கலைமாமணி கரந்தைத் தாமோதரன் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். அவர் ஆழ்வார் பாசுரங்களைப் பொருள் உணர்ந்து பாடுவதில் வல்லவர்.கொரியா கண்ணன்
ஐயாவுக்கு நன்கு பயன்படக்கூடியவர். அவர் பாடிய சில குறுவட்டுகளை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.இவர் போல் பாட வல்லவர்கள் இருப்பின் தமிழ்ப்பாசுரங்கள் மக்களிடம் நன்கு பரவும்.

பேராசிரியர் ப.அண்ணாதுரை அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான காரணத்தைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.அவரை அடுத்துத் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் பக்கிரிசாமி பாரதி அவர்கள் கர்நாடக இசை பற்றியும் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும் நன்கு அறிமுகம் செய்தார்.

அவரையடுத்து நான் தமிழ் இலக்கணம்,இலக்கியங்களில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு பற்றியும் தமிழர்களின் இசையறிவு பற்றியும் இளங்கோவடிகளின் இசைப்புலமை பற்றியும் தெய்வசிகாமணிக் கவுண்டர் பதிப்பித்த பஞ்சமரபு பற்றியும் எடுத்துரைத்து என் பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.

தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் இசையமைப்பு உள்ளதைப் பாடிக்காட்டி விளக்கினேன்.புட்பவனம் குப்புசாமி,கரிசல் கிருட்டிணசாமி உள்ளிட்டவர்களின் பாடல்களையும் பிற மக்கள் வழக்கில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களையும் பாடிக்காட்டினேன். தமிழகத்திலும், கேரளாவிலும்,இலங்கையிலும்,மலேசியாவிலும் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடிக்காட்டி விளக்கினேன்.

ஒரு மணிநேரம் நீண்ட என் உரையில் நாட்டுப்புறப் பாடல்களின் செழுமையான வடிவம்தான் தமிழிசையாக இருந்தது எனவும் வேற்றுமொழிக்காரர்களின் வருகையால் கர்நாடக இசை என்னும் பெயரில் தெலுங்குமொழிப் பாடல்கள் வந்தன எனவும் குறிப்பிட்டு, ஊடகங்களும் அரசும் நாட்டுப்புறக் கலைகளுக்கு,கலைஞர்களுக்கு முதன்மையளிப்பதில்லை என்று குறிப்பிட்டுப் பின்லாந்து நாட்டில் நாட்டுப்புறக் கலைகளுக்கு உரிய முதன்மை தருவதை நினைவுகூர்ந்தேன்.அனைவரின் உள்ளம் மகிழும்படியாக என் உரையிருந்தது.

என் பேச்சுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசு கலை பண்பாட்டுத்துறையின் துணை இயக்குநர் திரு.வ.செயபால் உரையாற்றினார்.அவர் உரையில் நாட்டுப்புறப்பாடல்களின் சிறப்பை அழகாகத் தொகுத்து வழங்கினார்.எங்கள் உரைகளுக்குப் பிறகு பாரதக் கதையிலிருந்து திரௌபதைத் துகிலுரிதல் பற்றிய தெருக்கூத்து நிகழ்ந்தது.மிகச் சிறப்பாக இருந்தது.

கலைநிகழ்வையும் பல கலைஞர்களையும் கண்ட மன நிறைவில் வெளியே புறப்பட்டபொழுது எங்கள் பகுதியான அணைக்கரையை அடுத்த முள்ளங்குடி மதகுச்சாலை சார்ந்த ஆசிரியர் மு.இராசகோபாலன் அவர்கள் அறிமுகம் ஆனார்.பணியின் நிமித்தம் காஞ்சிபுரத்தில் தங்கியுள்ளார்.அவரைக் கண்டு உரையாடியாது மறக்க இயலாத மகிழ்ச்சியான நிகழ்வாகும். நான் புதுவை வருவதற்குள் என் இணையத்தளம் பார்வையிட்டு என் பணிகளை ஊக்கப்படுத்தியவர்.தமிழ் இணையத்தள வளர்ச்சிக்குக் காஞ்சியில் ஒரு நம்பிக்கை முனை தென்பட்டதே மகிழ்ச்சிக்குக் காரணம்.


பேராசிரியர் ப.அண்ணாதுரை வரவேற்பு


முனைவர் பக்கிரிசாமி பாரதி


துரியோதனன்


துச்சாதனன்...


திரௌபதை...


கிருட்டிணன் வேடத்தில்...


கரந்தைத் தாமோதரன்