'பாவலர் மணி' ஆ.பழநி
நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது (1993)
பாவலர் முடியரசனாரைச் சந்திப்பதற்குக் காரைக்குடி சென்றிருந்தேன். அப்பொழுது அனிச்ச அடி ஆசிரியர் ஆ. பழநி அவர்களைக் கண்டு உரையாடினேன்.
அதன் பிறகு காரைக்குடி செல்லும்பொழுதெல்லாம் அவரைச் சந்திப்பது வழக்கம். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடும் காப்பியங்களைத் தேடிக் கற்கும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு ஆ.பழநியின் தமிழ்ப்பணிகள் கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழில் மரபு நூல்களைப் படைப்பதிலும் தமிழ் இலக்கியங்களில் பொதிந்துகிடக்கும் நுட்பங்களை எடுத்துக்காட்டித் திறனாய்ந்து எழுதுவதிலும் இவர் வல்லவர்.
தமிழாசிரியராகப் பணியாற்றி, பணி நிறைவுக்குப் பிறகும் தொடர்ந்து சிந்திப்பதும் எழுதுவதுமாக இவர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார். தமிழைக் குலைப்போரும் சிதைப்போரும் எழுத்தாளர்களாகப் போற்றி விளம்பரப்படுத்தப்படும் இன்றைய தமிழுலகில் அமைதியாகவும் அடக்கமாகவும் தமிழ்ப்பணியாற்றிவரும் ஆ.பழநியின் தமிழ்ப்பணிகளை இங்கு நினைவுகூர்கின்றேன்.
வேளாண்மைக் குடும்பத்தில்
பிறந்து வறுமையிடையிட்ட
நிலையில் தமிழ்க்கல்வி
கற்று, கற்றோர் உலகில் தனக்கெனத் தனித்த இடம்பிடித்த
ஆ.பழநி திராவிட இயக்கச் சிந்தனையாளர் ஆவார்;
பகுத்தறிவுக் கொள்கையும் கடவுள் மறுப்புக் கொள்கையும் கொண்டவர். படைப்பு இலக்கியத்துறையில் பல நூல்களைத் தந்தவர். தமிழ் இலக்கியங்களில்
பொதிந்துகிடக்கும் உண்மைகளைத் திறனாய்ந்து வெளிப்படுத்தும் வகையில் இவர் வழங்கியுள்ள நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் என்றும் போற்றத்தக்கன. இவர்தம் சிலப்பதிகார ஆய்வுகளும் கம்பராமாயண ஆய்வுகளும் கற்போர்க்குக் கழிபேருவகை விளைவிக்கும் தன்மையன.
ஆ.பழநி எழுதிய அனிச்ச அடி செய்யுள் நாடகமும், சாலி மைந்தன் பாவியமும் கற்போர் உள்ளத்தில் கலந்துநிற்கும் நூல்களாகும்.
காரைக்குடியில்
வாழ்ந்த திருவாளர் ஆண்டியப்பன், உமையாள் ஆகியோரின் ஒன்பதாவது பிள்ளையாக ஆ.பழநி பிறந்தவர் (07.11.1931). இவர்களின் குடும்பம் வேளாண்மைக் குடும்பமாகும். ஐந்தாம் வகுப்புவரை கல்வி பயின்றவர். இளமையில் இரண்டாண்டுகள்
வட்டிக் கடையொன்றிலும்
இரண்டாண்டுகள் துணிக்கடையிலும், பல்பொருள் அங்காடி ஒன்றில் ஓராண்டும் பணிபுரிந்தவர். அதன் பிறகு குடும்பத்தொழிலான
வேளாண்மையில் எட்டாண்டுகள்
ஈடுபட்டிருந்தவர். பல்வேறு தொழில்களைச் செய்யும்படி
வாழ்க்கைநிலை இவருக்கு அமைந்தாலும்
படிப்பதை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டிருந்ததால் நிறைபுலமை பெற்ற தமிழறிஞராக இவர் மிளிர்ந்தார்.
1950 ஆம் ஆண்டளவில் தமிழகத்தில்
கிளைபரப்பி வளர்ந்த திராவிட இயக்க உணர்வு நம் பாவலரையும் பற்றிக்கொண்டது. திராவிடநாடு, போர்வாள், திராவிடன் போன்ற ஏடுகளைத் தொடர்ந்து படித்துத் தம்மைத் திராவிட இயக்க உணர்வாளராக அமைத்துக்கொண்டவர். உள்ளத்தில் படிந்த திராவிட இயக்க உணர்வு இவரைத் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் வரலாற்றையும் படிக்கும் மாணவராக மேலைச்சிவபுரி
கல்லூரிக்கு அனுப்பியது.
ஆ.பழநி 1959 இல் மேலைச்சிவபுரி கல்லூரியில்
பயின்றுகொண்டிருந்தபொழுது வால்குடல் அழற்சி நோயினுக்கு ஆளானவர். நோய் தணிக்க அறுவைப் பண்டுவம் செய்துகொண்டவர். அப்பொழுது நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி ஏற்பட்டு, அதனையும் அறுத்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தேர்வை உரிய காலத்தில் எழுத முடியாமல், காலம் தாழ்ந்து, 1962 இல் புலவர் பட்டம் பெற்றவர்.
1964 ஆம் ஆண்டு காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் ஆ.பழநி தமிழாசிரியராகப் பணியேற்றவர்.
அப்பள்ளியில்
தமிழ் உணர்வு மிக்க பல மாணவர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். பாவலர் முடியரசன், பேராசிரியர் தமிழண்ணல் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களுடன் பழகவும் பணிபுரியவுமான சூழல் இவருக்கு அமைந்தது.
1968 ஆம் ஆண்டு சென்னையில் அமைந்துள்ள சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டினை ஒட்டி நடத்திய திருக்குறள்
புத்துரைப் போட்டியில் பரிசு பெற்றவர். 1973 இல் சை. நூ. கழகம் நடத்திய செய்யுள் நாடகப் போட்டியில் இவர் எழுதிய அனிச்ச அடி என்னும் செய்யுள் நாடகம் முதல்பரிசைப்
பெற்றது. மேலும் தமிழகத் தமிழாசிரியர்
கழகம் நடத்திய செய்யுள் நாடகப் போட்டியில் “அன்னி மகள்” என்ற நாடகம் எழுதி, மூன்றாம் பரிசினைப் பெற்றவர்.
1983 இல் பண்டிதமணியின் நாடகத் தமிழ் என்னும் திறனாய்வு நூலினை இவர் எழுதியவர்.
1985 இல் சாலிமைந்தன்
என்னும் காப்பியத்தை
எழுதி வெளியிட்டவர்.
இந்த நூல் தமிழகப் பல்கலைக்கழகங்களில்
பாட நூலாக இருந்த பெருமைக்குரியது.
1989 ஆம் ஆண்டு பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என்னும் ஒப்பீட்டு நூலை ஆ.பழநி எழுதி வெளியிட்டவர்.
1980 இல் கானல்வரியா, கண்ணீர் வரியா என்ற திறனாய்வு நூல்வெளியானது. 1991
இல் இளங்கோவடிகள்
காப்பியக் கலைத்திறன், கோவலன் வீழ்ச்சியும் இளங்கோ மாட்சியும் என்னும் நூல்களை வெளியிட்டவர்.
இவர் சிலம்பில் சில மறைப்புகள் என்ற நூலினை 1993 இல் எழுதி வெளியிட்டவர். 2004 இல் இவரின் கம்பன் காட்டும் போரற்ற உலகம் என்ற திறனாய்வு நூல் வெளியானது. 2005 இல் காரல் மார்க்சு காப்பியம் வெளியாயிற்று. பாண்டியன் பரிசில் வரலாற்றுப் பார்வையும் – குறியீட்டுச் செய்தியும், களங்கண்ட கவிதைகள் முதலிய நூல்களையும் எழுதி வழங்கியவர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வழியாகச் சிலப்பதிகாரம் செம்பதிப்பு வெளியிடுவதற்கு இவர் பதிப்பாசிரியராக இருந்து அப்பணியை நிறைவு செய்து வழங்கியவர்.
ஆ.பழநி பெற்ற சிறப்புகள்:
நெல்லையில் இயங்கிவரும் தனித்தமிழ் இலக்கியக் கழகம்
1974 இல் அனிச்ச அடி நாடகத்திற்கு ஒரு திறனாய்வு அரங்கை நடத்திப் பாவலர்மணி என்னும் பட்டத்தினை ஆ. பழநிக்கு வழங்கியது. 1980 இல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பறம்புமலையில் நடத்திய விழாவில் இவருக்குக் கவிஞர்கோ என்னும் விருதளித்துப் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆ. பழநியின் பாத்துறைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1997 இல் கோவில்பட்டித் திருவள்ளுவர்
கழகம் இவருக்குத் திருவள்ளுவர்
விருது வழங்கிச் சிறப்பித்தது. 1997 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம்
பேரவை உறுப்பினராக
இவரை நியமனம் செய்தது.
1999 இல் காரைக்குடிச் சுழற்கழகம் ஆ.பழநிக்குப் புலவர் மாமணி என்னும் விருது வழங்கிப் பாராட்டியது.
2002 இல் பாரதிதாசன் தமிழ்ப்பேரவை, தமிழ் நெறிச் செம்மல் விருது வழங்கியுள்ளது. 2003 இல் மதுரை மீனாட்சி அருள் தமிழ் மன்றம் பாராட்டும் பொற்கிழியும் வழங்கிப் பாராட்டியுள்ளது.
2007 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டமும் பொற்பதக்கமும் பொற்கிழியும்
வழங்கிப் பாராட்டியுள்ளது.
அனிச்ச அடி நூலின்
சிறப்பு
புலவர் ஆ. பழநியின் அனிச்ச அடி என்னும் நூல் மனோன்மணியம் செய்யுள் நாடகத்துக்கு அடுத்துத் தமிழில் வெளிவந்த முதன்மையான செய்யுள் நாடகம் ஆகும். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் நாடகப் போட்டி 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. தமிழகத்தின்
புலவர் பெருமக்கள் பலர் செய்யுள் நாடகங்களை இயற்றிப் போட்டிக்கு அனுப்பினர். இவர் இயற்றிய அனிச்ச அடி நூல் முதல் பரிசான ஆயிரம் வெண்பொற்காசினைப்
பெற்றது.
கவியரசு முடியரசனார்
இந்த நூலின் சிறப்பினைப்,
பாட்டென்ற பேரால் பழுதுபட்ட சொற்றொடரைக்
கேட்டென்ற னெஞ்சம் கிறுகிறுத்தேன் – வேட்டெழுந்து
நாடகமாம் நன்மருந்தை நண்பன் பழநியெனும்
பாடல்வலான் தந்தான் படைத்து
தேன்கலந்து தந்தனனோ தெள்ளமுதந் தந்தனனோ
நான்கலந்தே இன்புற்றேன்
நாடோறும் – வான்பறந்தேன்
வாட்டும் துயர்துறந்தேன்
வையம் தனைமறந்தேன்
பாட்டை அவன்படிக்கக்
கேட்டு
கூற்றமிலா வாழ்வு கொடுத்த தமிழ்த்தாயே
ஏற்றவரம் இம்மகற்கும்
ஈந்தருள்வாய் – சாற்றுக்
கவிச்சுவையை விஞ்சும் கவிமாலை நின்றன்
அனிச்சஅடிக் கீந்தான் அவன்
என்று போற்றிப் பாடியுள்ளார்.
பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் ஆய்வுரை நூலுக்கு அழகூட்டுகின்றது. ஆர். நடராசன் அவர்களின் The Story of Anicha Adi the Epic Drama என்னும் பெயரில் அமைந்த அறிமுக உரை, நூலாசிரியரின்
முன்னுரை, பதிப்பகத்தாரின்
பதிப்புரை இந்த நூலின் பெருமையை அறியப் பெரிதும் துணைசெய்கின்றன.
குறுந்தொகையில் இடம்பெறும் 292, 72 என்னும் எண்ணிட்ட இரண்டு பாடல்களின் செய்திகளில் பெண்கொலை புரிந்த நன்னனைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. அதனையொட்டி, சங்க காலப் பின்புலத்தில் அனிச்ச அடி செய்யுள் நாடகம் புனையப்பட்டுள்ளது. ஐந்து அங்கங்களாக நாடகம் நடையிடுகின்றது.
அனிச்ச அடியின் கதை மாந்தர்களாக,
அருளாழி – சேரர் படைத் துணைத்தலைவன் (கதைத் தலைவன்),
சுரும்பார் குழலி- அருளாழியின் மனைவி
ஆய் எயினன் – சுரும்பார் குழலியின் தந்தை (போர்ப்படைத்
தளபதி)
அணிவளை – ஆய் எயினனின் மனைவி
அனிச்ச அடி – கோசர் குலப் பெண்
கணியன் கீரன் - அனிச்ச அடியின் தந்தை
மிஞிலி – துளு நாட்டுப் படைத்தலைவன்
நன்னன்- துளு நாட்டு அரசன்
நார்முடிச்சேரல் – சேர மன்னன்
சேரன் செங்குட்டுவன் – நார்முடிச் சேரல் இளவல்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் – நார்முடிச் சேரலின் இளவல்
பரணர் – சேரநாட்டுப்
புலவர்
மோசிகீரனார் – துளு நாட்டுப் புலவர்
வேங்கைமுகன் – குறும்பர் தலைவன், பவளத்தீவின்
அரசன்
கோட்புலி – வேங்கை முகனின் மகன்
முதலான கதை உறுப்பினர்கள் நம் நெஞ்சில் நிலைபெறுகின்றனர்.
குழலியும் அவள் கணவன் அருளாழியும் நன்னனின் வெள்ளணி விழாவுக்குச்
செல்லுதலும், அங்கு மிஞிலி என்பவனின் வஞ்சனையால் குழலி கொலைத்தண்டனை யுறுதலும், அருளாழி பகைவர்களை வீழ்த்துவதும், அருளாழியை அனிச்ச அடி விரும்புவதும் இறுதியில் அனிச்ச அடியும் அருளாழியும் இறப்பதும் கதைக்கூறுகளாக உள்ளன.
ஆசிரியப்பாவின் வழியாகச் சங்க இலக்கியச் செறிவையும், அவலச் சுவையையும் இந்த நாடகச்
செய்யுளில் ஆ. பழநி தந்து நாடகத்தைப் புனைந்துள்ளார். திருக்குறள்
கருத்துகள், பழமொழிகள், இரட்டுறமொழிதல், உள்ளுறை முதலியவற்றை இடத்துக்கு ஏற்ப ஆண்டு, நாடகத்தை மிளிரும்படிச்
செய்துள்ளார்.
சுந்தரனாரின் மனோன்மணியம்
மொழிபெயர்ப்பு நூல் எனவும், அனிச்ச அடி தமிழ்ப் பண்பு மிகுந்து நிற்கும் நூல் என்றும் இந்த நூலைக் குறித்து நம் பேராசிரியர் தமிழண்ணல் அரணிட்டு எழுதியுள்ளார்.
“உறவினால் உறுவது ஒழிகலாத் துன்பமே
இறவினால் வருவது எண்ணிலா இன்பமே”
என்ற அனிச்ச அடியின் கூற்று நாடகத்தின் முத்தாய்ப்பான
வரிகளாகும்.
“திருந்திழாய்! நீயென் திரும்பியும்
நோக்கியும்
இருந்தும் எழுந்தும் எங்கே மனத்தினைப்
போய்வர விடுத்தனை புகலுதி!”
எனப் பாவியம் தொடங்குகின்றது.
அனிச்ச அடி பாவியத்தில் காமமிக்க கழிபடர்க் கிளவியாக,
கடலலையில் வருகயல்கள்
கரையிலுனக் குணவுதர
மடலவிழும் முடத்தாழை
மரமுறங்கு மிளங்குருகே!
படர்நலியத் தனியிருந்து
பனியருவி விழிபொழிய
இடர்வழங்கு மவருணர
இயம்பலுனக் கரிதலவே” (பக்கம் 25)
விரிமலரில் உறைநறவம்
விரும்பிநனி யருந்தியயற்
பெரியமரச் சிறுகிளையிற்
பிரசமிசை விழிவளரும்
கரியநிறச் சிறையளியே
கனலிடை யுறையுநிணம்
இரிந்துருகு மெனவுருகும்
எனதுநிலை சொலலரிதோ” ( பக்கம் 26)
எனவரும் அனிச்ச அடியின் வரிகள் மரபுப்பாடல்களைச் சுவைப்பவர்களுக்குத் தேனொத்த வரிகளாகும்.
சாலிமைந்தன் பாவியம்
மணிமேகலைக் காப்பியத்தில் படைக்கப்பட்டிருக்கும் மாந்தனான ஆபுத்திரன் வைதீக நெறிகளை
எதிர்ப்பவன் ஆவான். அந்த ஆபுத்திரன் வரலாறுதான் சாலிமைந்தன் நூலின் காப்பியக் கதையாக விரிந்துள்ளது.
ஆ. பழநி எழுதிய சாலிமைந்தன் பாவியம் 1985 இல் வெளிவந்தது. 1. கங்கைக் காண்டம், 2. குமரிக்காண்டம், 3. கூடற்காண்டம், 4. மணிபல்லவக் காண்டம் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. 29 படலங்களைக் கொண்டு, 835 செய்யுள்களைக் கொண்ட நூல் இதுவாகும்.
மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் ஆபுத்திரன் வேள்விகளை எதிர்ப்பவன்; பசித்தவர்க்கு உணவு வழங்குவதில் பேரீடுபாடு கொண்டவன். எனவே நாடு நலம்பெற, வைதீக நெறிகளை எதிர்க்கும் பாத்திரமாக ஆபுத்திரனைக் காப்பியத் தலைவனாக்கி ஆ. பழநி பாவியம் புனைந்துள்ளார். சாத்தனாரின் ஆபுத்திரன் இக்காப்பியத்தில் ஆபுத்திரன், ஆமகன், ஆன்மகன், ஆன்மைந்தன், ஆவின்மைந்தன், சாலிமைந்தன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றான்.
“சாலிக்குண்டோ தவறு”
“பார்ப்பார்க்கொவ்வாப் பண்பின் ஒழுகி
காப்புக்கடை கழிந்து”
“அரும்பெறல் மனைவி யான்”
எனவரும் மணிமேகலைத் தொடர்களை எடுத்துக்கொண்டு, ஆபுத்திரன், சாலியின் சிறப்புகளை விதந்து ஓதி, பாவியம் புனைந்தமைக்கான காரணங்களை
நூலாசிரியர் தருக்கமுறையில் எடுத்துரைத்துள்ளமை போற்றும்படியாக உள்ளது.
சாலிமைந்தன் நூலுக்குப் பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் காப்பிய அறிமுகம் என்னும் தலைப்பில் வரைந்துள்ள அணிந்துரை சிறப்பாக உள்ளது. மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் மதிப்புரை நூலுக்கும் நூலாசிரியருக்கும் கிடைத்துள்ள மிகப் பெரும் மதிப்பளிப்பு என்று குறிப்பிடலாம். ஆ. பழநியைப் பற்றி, “கவியூற்றம், பகுத்தறிவியம், மரபிற் புரட்சி, இயற்கைப் புனைவு, ஒட்பநுட்பம், செந்தமிழூற்றம், கொள்கையெழுத்து என்றிணை நற்றிறன் இயல்பிலே வாய்ந்தவர் பழநியார்” என்று வ.சுப.மா. குறிப்பிட்டுள்ளமை பொருத்தமான சொற்களாகும் (பக்கம் 25).
சாலிமைந்தன் கதையமைப்பு
கங்கையாறு பாயும் வாரணாசியில் ஆரண அறிஞர் அபஞ்சிகன் என்னும் அந்தணன், தன் பெற்றோர் வற்புறுத்தலுக்காக அழகு நிறைந்த சாலி என்பாளை மணம் செய்துகொண்டான். வேள்வித்தொழிலில் விருப்பம்கொண்டிருந்த அபஞ்சிகன் சாலியின் இளமைத்தன்மையை நெஞ்சில் தேக்காமல் இருந்தான். சோதிடத்துச் செய்தியை நம்பி, சாலியை வீட்டை விட்டு வெளியேற்றினான். உயிரைப் போக்கிக் கொள்ள கங்கையை அடுத்த காட்டில் இருந்த ஆலமரக் கிளையில் ஏறி, விழுதைத் தன் கழுத்தில் சுற்றி இறக்க முற்பட்ட பொழுது அவளுடன் வந்த ஒரு முதுநாய் குரைக்க, தென்னாட்டு வணிகன் இளஞ்சாத்தன் சாலியைக் காப்பாற்றினான். இளஞ்சாத்தனின் மேல்சாய்ந்த சாலி, அவனின் அன்புப் பிடியில் அடைக்கலமானாள்.
“
தழுவியதாற் புத்தின்பம் தன்னுடலிற் படர்ந்தாலும்
வழுவியதாற் பெண்மையென வருநாணம் அறிவுறுத்தி
எழுவதனால் அணைத்திருக்கும் இருகையால் சிறைநீக்கித்
தொழுபவளாய்த் தனிநின்றாள்; பேச்சொன்றும் தோன்றாளாய் (பக்கம்,48)
என்று சாலியின் நிலையைப் பாவலர் நம் கண்முன் பாட்டோவியமாகப் படைத்துக் காட்டுகின்றார்.
சாலியை விடுத்து இளஞ்சாத்தன் வணிகத்தின் பொருட்டு சாவகத் தீவு செல்கின்றான்.
சாலி கருவுற்றதை அறிந்த அந்தணர்கள் அவளுக்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்து வீட்டைவிட்டு வெளியேற்றினர். சாலி தெற்கு நோக்கி வருகின்றாள். தெற்கு நோக்கிச் செல்கையில் ஆயர் சேரியில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். 'வயணங்கோடு' என்ற ஊருக்கு அருகில் உள்ள ஒரு கொல்லையில் குழந்தையை விட்டுவிட்டு, மறைவாக நிற்கும்பொழுது பசு ஒன்று அக் குழந்தைக்குப் பால்கொடுத்தது.
அந்த வழியில் வந்த இளம்பூதி – அஞ்சனை என்னும் இருவரும் குழந்தையைக் கண்டு, எடுத்துச் செல்கின்றனர். அக்குழந்தைக்கு ஆபுத்திரன் என்று பெயர்சூட்டி வளர்த்தனர். ஆபுத்திரன் எல்லாக் கலைகளையும் கற்று வளர்ந்தான்.
அவ்வூரில் வாழும் அந்தணர்கள் வேள்வியில் பலியிடப் பசுக்களைத் தேடுகின்றனர். பசு இல்லாத சூழலில் இளம்பூதியின் வீட்டில் இருந்த பசுவை வேள்விக்கு வேண்டுகின்றனர். ஆபுத்திரனுக்குப் பால்கொடுத்த பசுவின் கன்று இதுவாகும். இளம்பூதி மறுக்கின்றான். ஆனாலும் அந்தணர்கள் பசுவைக் கவர்ந்து வேள்விக்கூடம் சென்றனர். ஆபுத்திரன் வேள்வியிலிருந்து பசுவை மீட்டுக் கொணர்ந்தான். அப்பொழுது அதமயன் என்னும் அந்தணன் ஆபுத்திரனைக் கோலால் தாக்க முயற்சி செய்கின்றான். அந்தப் பசுமாடு முட்டி, அதமயன் இறந்தான். வேதியர்கள் ஆபுத்திரனை வெறுத்து, அவன் பிறப்பைப் பழித்துப்பேசினர். அந்தணர்களின் வற்புறுத்தலுக்கு ஆளான இளம்பூதி ஆபுத்திரனை வீட்டிலிருந்து வெளியேற்றினான். ஆபுத்திரன் பசியுடன் மதுரைக்கு வருகின்றான். அங்குச் சாலியைச் சந்திக்கின்றான். பசியால் வருந்துபவர்களுக்குப் பசிபோக்குவதையும், கொலை வேள்வியைத் தடுத்து நிறுத்துவதையும் கொள்கையாகக் கொண்டு அங்குத் தங்கியிருந்தான்.
பசுவை வெட்டி நடத்தும் வேள்வியை ஆபுத்திரன் தடுத்ததால் அனைத்து ஊர் அந்தணர்களும் அவனை எதிர்த்தனர். அதனால் அங்கிருந்து வேறு இடம் வந்தான். ஆபுத்திரன் இளஞ்சாத்தனைச் சந்திக்கின்றான். ஆபுத்திரன், இளஞ்சாத்தன், சாலி ஆகியோர் உறவு மூவருக்கும் தெரிகின்றது. சாவகத்தீவில் தொண்டு செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது என்று கூறி ஆபுத்திரனை இளஞ்சாத்தன்
அழைக்கின்றான். ஆபுத்திரன் அவனுடன் சாவகம் செல்கின்றான். இடையில் மூலகன் என்பவன் சூழ்ச்சியால் குறுவாள் கொண்டு கப்பலின் பாயினை அறுத்தெறிந்தான். கப்பல் பயணம் தடைப்பட்டு அருகில் இருந்த மணிபல்லவத் தீவுக்கு அனைவரும்
செல்கின்றனர். மணிபல்லவத் தீவில் மூலகன் ஆபுத்திரனைக் கொல்ல நினைகின்றான். ஆனால் எதிர்பாராத விதமாக பாம்பு தீண்டி, மூலகன் இறந்துவிடுகின்றான். ஆபுத்திரன் இல்லாமல் கப்பல் புறப்பட்டுச் சென்றபொழுது, இளஞ்சாத்தன் ஆபுத்திரனை ஏற்றிவர மீண்டும் மணிபல்லவத்துக்குக் கப்பலைத்
திருப்பச் சொல்கின்றான். கப்பல் நிற்காமல் சாவகம் செல்கின்றது.
இளஞ்சாத்தன் சாவகத்தில் ஆபுத்திரன் நினைவாக அறச்சாலை அமைப்பதுடன்,
மீண்டும் ஆபுத்திரனைத் தேடி, மணிபல்லவம் வருகின்றான்.
மணிபல்லவத்திலிருந்து வேறு கலத்தின் வழியாக ஆபுத்திரன் சாவகம் செல்கின்றான். இளஞ்சாத்தன் அங்கு ஆபுத்திரன் பெயரில் அறச்சாலைகளை நிறுவியிருந்தமையைக் கண்டான். உண்மைநிலை உணர்ந்த ஆபுத்திரன் இளஞ்சாத்தனைச் சந்திக்க நினைக்கின்றான். மீண்டும் மணிபல்லவத் தீவினுக்கு வருகின்றான்.
முன்பே ஆபுத்திரனைத் தேடி பணிபல்லவம் வந்த இளஞ்சாத்தன் அங்கிருந்த தீவதிலகையிடம் ஆபுத்திரனைக் குறித்து வினவியதும், அவள் காட்டிய முடங்கல் கண்டு, இளஞ்சாத்தன் வடக்கிருந்து உயிர் துறக்கின்றான். அங்கு இறந்த இளஞ்சாத்தனின் எலும்பு இருக்கின்றது. இதனைத் தீவதிலகை வழியாக அறிந்த ஆபுத்திரன்,
“இன்புறுத்துஞ் செல்வநலம் மிகவுடையா யென்றாலும்
என்பொருட்டா லுயிர்நீத்தாய் என்பதெற்கோர் வியப்பாமால்
என்பொருட்டா லுயிர்நீத்தா யென்பதனைக் கண்டபின்பும்
தன்பொருட்டால் யான்வாழ்தல் தாங்ககிலா வியப்பாமால்”
என்று வருந்துவதைக் கவிஞர் சிறப்பாகப் பாடியுள்ளார்.
“என்கதையைக் கேட்டந்நாள் இருவிழிநீர் கொட்டியவன்
தன்கதையுள் என்கதையும் தழுவுமென அறியேனால்
தன்கதையுள் என்கதையும் தழுவுமென அறிவேனேல்
என்புகளின் குவைகண்டிங் கினைவுறுதல் செய்யேனால்” (பக்கம்
262)
என்று இளஞ்சாத்தனின் உறவு நினைந்து ஆபுத்திரன் கலங்கும் வரிகளில் கற்போரைக் கரைந்துருகச்
செய்யும் தன்மையன.
இந்த நிலையில் சாலி அங்கு வந்தாள். இளஞ்சாத்தன் இறக்கும்பொழுது, “சாலியின்பால் எனக்குப் பிறந்த மகனே ஆபுத்திரன்” என்று தீவதிலகையிடம் கூறி இளஞ்சாத்தன் உயிர்துறந்துள்ளான். உண்மைநிலை உணர்ந்த சாலி, இறந்த இளஞ்சாத்தனை நினைத்து உயிர் விடுகின்றாள்.
அந்த நிலையில் ஆபுத்திரன்,
நாவூறும் இனியமொழி நாம்பேசிக் கூடாமல்
சாவூரில் கூடவெனச் சதிசெய்த தவ்விதிதான்
சாவூரில் கூடவெனச் சதிவிதிதான் செய்திலதேல்
நீவேறு நான்வேறாய் நிற்போமா கூடலிலே” (பக்கம் 265)
என்று புலம்பும் வரிகள் கதைநிகழ்வின் நிலையை நமக்கு எடுத்துரைக்கப் போதுமானவையாக
உள்ளன.
கருவாகி வரும்போதே கடுந்துயரந் தாய்க்கீந்தேன்
உருவாக்கி வளர்த்தார்க்கும் உறுதுயரே யானீந்தேன்
வருவாயென் றழைத்தானை வானுலகம் போக்கியுளேன்
பொருவாரு மில்லாத புண்ணியர்யார் என்போலே” (பக்கம் 265)
என்று கூறியவனாய், ஆபுத்திரன் தன் கையிலிருந்த
பாத்திரத்தைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து, தாமும் உயிர்விடுவதாக
ஆ. பழநி தம் பாவியத்தில் புனைந்துள்ளார். இவ்வாறு துன்பத்தில் முடியும் ஆபுத்திரன் வரலாறு காலம் காலமாக சமூகத்தில் நிலவிய வேள்வி, மூடப் பழக்கவழக்கம், வருண வாழ்க்கை ஆகியவற்றை எடுத்துரைத்துச் சமூகச் சீர்திருத்தம் காட்டும் பாவியமாக நூலாசிரியரால் படைக்கப்பட்டுள்ளது.
தமிழுக்குப் பாவிய அணிகலன் சூட்டியும், நல்லாய்வு நூல்கள் வழங்கியும் தமிழ் வாழ்வு வாழ்ந்துவரும் ஆ. பழநி தமிழர்களின் போற்றுதலுக்கு உரியவர்.
ஆ.பழநியின் நூலடைவு:
1.
அனிச்ச அடி
2.
அன்னிமகள்
3.
சாலிமைந்தன்
4.
காரல் மார்க்சு காவியம்
5.
களங்கண்ட கவிதைகள்
6.
பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?
7.
பண்டிதமணியின் நாடகத் தமிழ்
8.
சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு
அ. கானல்வரியா கண்ணீர் வரியா
ஆ. இளங்கோவடிகளின் காப்பியக் கலைத்திறன்
இ. கோவலன் வீழ்ச்சியும் இளங்கோ மாட்சியும்
ஈ. சிலம்பில் சில மறைப்புகள்
9.
பாண்டியன் பரிசில் வரலாற்றுப் பார்வையும்-
குறியீட்டுச் செய்தியும்
10.
கம்பன் காட்டும் போரற்ற உலகம்
11.
திருக்குறள்: உரைகளும் சில குறைகளும்
***
இக்கட்டுரைக் குறிப்புகளையும், படத்தையும் எடுத்தாளுவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.
நன்றி: வல்லமை இணைய இதழ்