நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 டிசம்பர், 2007

உழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளது.அதைச் சித்திரிப்பதே ஒன்பதுரூபாய் நோட்டு -தங்கர்பச்சான்

புதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டுவிழாவைப்
புதுச்சேரி நண்பர்கள் தோட்ட அமைப்பினர் 29.12.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் நடத்தினர்.அதில் கலந்துகொண்டு இயக்குநர் தங்கர்பச்சான் தன் திரைப்படங்கள் பற்றி விரிவாகப்பேசினார்.

படைப்பாளிகள் பலர் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மிகச்சிறப்பாகத் திறனாய்வு செய்தனர். பத்திரிகைகளைவிட மிகச்சிறப்பாகச் செய்தமை பாராட்டிற்கு உரியது. பத்திரிகைகள் கதைச்சுருக்கம் வெளியிடுவதையேஇன்று திறனாய்வாக நினைக்கிறது.
இதுவரை 87 பத்திரிகையில் ஒன்பது ரூபாய் நோட்டு பற்றி திறனாய்வு வந்துள்ளது. அனைவரும் இப்படத்தை விரும்பிப்பார்க்கின்றனர். பலரைத்தூங்கவிடாமல் செய்த படம் இது. வெளி நாடுகளிலிருந்து பலரைத் தம் பிறந்த ஊருக்கு வரவழைத்த படம் இது. மண்ணையும் மக்களையும் நேசிக்கும் படம். பெற்றோர் பாசத்தை வலியுறுத்தும் படம் இது.

என் 24 வயதில் எழுதத் தொடங்கிய கதை.அனைவருக்கும் காதல் ஊற்றெடுக்கும் வயதில் நான் மட்டும் வாழ்க்கையை உள்வாங்கிக்கொண்டு அதன் ஆழம் பற்றி எண்ணி எழுதியுள்ளேன். உழைக்கும் விவசாயகுடும்பத்திலிருந்து நான் வந்துள்ளதால் உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையைப்பதிவு செய்தேன்.

101 ஆண்டுகால திரைப்பட வரலாற்றில் இதுவரை விவசாயிகளின் வாழ்க்கையை ஆழமாக யாரும் பதிவுசெய்யவில்லை. அனைவரும் உண்டு உயிர் வாழக் காரணமாக இருக்கும் விவசாயியை யாரும் நினைப்பதே இல்லை. அழுக்கு,வியர்வை,நாற்றம் உழைப்பவர்களிடமே இருக்கும்.உழைப்பின் அடையாளமான வியர்வையை இச்சமூகம் உதாசீனப்படுத்துகிறது. உழவர்கள் - உழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளதை ஒன்பது ரூபாய்நோட்டு சித்திரிக்கிறது.

ஒவ்வொருவரும் நம் உள்ளத்தை யாரிடமோ பறிகொடுத்துள்ளோம்.அவ்வாறு பறிகொடுத்த உங்கள் உள்ளங்களை என் வழிக்குக் கொண்டுவர நான் செய்த சூழ்ச்சியே அழகி திரைப்படம். படித்த இளைஞர்களை விலை பேசி வாங்கிச்செல்லும் பணக்காரர்களை அடையாளம் காட்டுவதே சொல்லமறந்த கதை.தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் முதல்படமே தென்றல். பெண்களின் உழைப்பில் வாழும் சமூக அக்கறை இல்லாதவர்களைக்
காட்டுவதே சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி.இப்படத்தில் நடிக்க யாரும் முன்வராத்தால் நானே நடிக்கவேண்டியிருந்தது.பள்ளிக்கூடம் பலவற்றின் நிலையை எடுத்துச்சொல்லி தனக்கு அறிவு தந்த பள்ளியை நினைக்கும் படி மாணவர்களுக்கு அறிவுரை சொன்னபடம் பள்ளிக்கூடம்.

எனவே சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டனவே என் படங்கள்.அழகி படம் திரையிடப்பட்ட முதல்நாள் என் குடும்பம் உட்பட 21 பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம். இன்று 700 பேர் வரை பார்க்கின்றனர்.இவ்வளவு பேரை இழுக்க இவ்வளவுநாள் ஆகியுள்ளது. இளைஞர்கள் என் படம்பார்க்க வருவதில்லை.நடுத்தர வயதிற்கு மேல் உள்ளவர்களே என் படத்தை விரும்பிப் பார்க்கின்றனர்.

சத்தியராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு கதையைப் புரிந்துகொண்டு நடித்ததால்தான் - அப்படத்தில் மாதவராக வாழ்ந்ததால்தான் இப்படம் மிகச்சிறப்பாக அமைந்தது.

விழாவில் நடிகர் சத்தியராசு அவர்கள் கலந்த்கொண்டு தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.தங்கர்பச்சானின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் நடித்த இன்பநிலா அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.

திரைப்படக் கலைஞர்களுக்குப் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினார். புதுச்சேரியைச் சார்ந்த பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.பாராட்டிப்பேசினர்.

சனி, 29 டிசம்பர், 2007

புதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா

புதுச்சேரி நண்பர்கள் தோட்ட அமைப்பினர் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழாவை இன்று 29.12.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் நடத்துகின்றனர்.

சுந்தரமுருகன் வரவேற்க ப.திருநாவுக்கரசு தலைமையில் விழா நடைபெறுகிறது. இயக்குநர் தங்கர்பச்சான்.நடிகர் சத்தியராசு,நடிகர் அர்ச்சனா,படத்தொகுப்பாளர்பி.இலெனின்,இசையமைப்
பாளர் பரத்வாசு கலந்துகொண்டு பாராட்டுப் பெறுகின்றனர்.புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் விருது வழங்கிப் பாராட்ட உள்ளார்.

நண்பர்கள் தோட்டம் வெளியிடும் நாள்காட்டியை நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமதாசு அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமி நாராயணன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அனந்தராமன்,இரா.சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

முனைவர் நா.இளங்கோ, க.தமிழமல்லன், இரா.தேவதாசு,புதுவை யுகபாரதி பாராட்டுரை வழங்குகின்றனர். மு.சச்சிதானந்தம் அவர்கள் நன்றியுரை கூற உள்ளார்.புதுவையில் உள்ள பல்வேறு தமிழமைப்புகள்,கலை,இலக்கிய அமைப்புகள் சார்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

வெள்ளி, 21 டிசம்பர், 2007

தமிழக,தமிழ் வரலாற்றில் மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் பங்களிப்பு...

தமிழக வரலாற்றில் தந்தை பெரியார் அவர்கள் முழுநேரத் தமிழகச் சிந்தனையாளராக இருந்தார். தமிழ் மக்களுக்கு இடையூறு வரும்பொழுதெல்லாம் அம் மக்களுக்குக் குரல் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அம் மக்களுள் பலர் அவரை அவதூறு பேசினானாலும் அவர்களுக்கு உழைப்பதையே கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வகையில்
தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள உயரிய தலைவர்தான் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள்.

தமிழ்நாடும் தமிழ்மொழியும் வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறாமல் இருக்க அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் என்றும் வரலாற்றில் நின்று நிலவும். இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்லாமல் இருக்க அவர் திட்டமிட்டுப் பல நல்ல செயல்களைச் செய்துள்ளார்.

இளைஞர்களின் கல்வி நலன், வேலை வாய்ப்பு, பணி உயர்வு இவற்றை வைத்து இவர் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டம் இந்திய மக்களுக்கே வழிகாட்டக் கூடியதாக மாறியுள்ளதை இந்தியச் சமூக வரலாறு உணர்ந்தவர் அறிவர்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற போர்வையில் தமிழகம் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்தியவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள். இந்தியப் பெரு முதலாளிகள் சில்லறை வணிகப் போர்வையில் நுழைந்தபொழுது தடுத்து நிறுத்தியவரும் இவரே.

குடிப்பழக்கத்தால் குடும்பப் பெண்கள் மிகுதியாகப் பாதிக்கப்படுவதைத் தம் மகளிர் அணி வழியாக எதிர்ப்பவரும் மருத்துவரே.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்று மருத்துவராக இருந்து இவர் கொடுக்கும் குரல் நோயாளிகளுக்கு அமிழ்தமாக இருக்கிறது.

தமிழ் மொழியைச் சிதைத்து எழுதுவதையே இதழ்கள் தொழிலாகச் செய்து கொண்டிருக்கையில் இவர் தமிழ் ஒசை ஏட்டைநல்ல தமிழில் நடத்துவதைப் பார்க்க மொழி ஞாயிறு பாவாணரும், பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இல்லையே என்ற ஏக்கமே மேலிட்டு நிற்கிறது. வானூர்திகளும், குற்றச்சாற்றும், மகிழுந்தும், போக்கிலிகளும் இவரால் அல்லவா வெளியே தெரிந்தனர்.

குத்தாட்டங்களும், அருவருப்பான உடலசைவுகளும், அழுத பெண்களும், பேய் பிசாசு கதைகளும் கொண்டு உயர் சாதியினர் அரசோச்சும் கூடாரமாக இருந்த தொலைக்காட்சிகளின் நடுவே கறுப்பு முகங்கள் கதைத் தலைவர்களானது மருத்துவரால்தானே நடந்தது. தொலைக்காட்சிகளில் இலக்கணம் இலக்கியம், தமிழிசை, நாட்டுப்புறக் கலைகள் புதுவாழ்வு பெற்றது மருத்துவர் ச.இராமதாசு அவர்களால்தானே நடைபெற்றன.

சென்னை நாகரில் தெலுங்கிசை தெருக்கள் தோறும் உள்ள சபாக்களில் அரங்கேறும்பொழுது தமிழ்ப்பண்ணிசை மனிமன்றம் கண்டவர் இவரல்லவா? அதனால்தான் மலேசியா உள்ளிட்ட அயல்நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் மருத்துவர் ச.இராமதாசு அவர்களைப் பெரிதும் மதிக்கின்றனர்.

இவரின் தைலாபுரம் தோட்டம் இளைஞர்களை, மகளிரை, அரசியல் கட்சியினரை, எழுத்தாளர்களை, கலைஞர்களை அறிவாளிகளாக மாற்றும்
பயிற்சிப் பயிலரங்காக உள்ளதை அங்குச் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

புதன், 19 டிசம்பர், 2007

தமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு?

தமிழகத்தில் ஆட்சிமொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அச்சட்டம் நடைமுறையில் இல்லை என்பதற்குப் பலசான்றுகள் உள்ளன.தமிழகத்தில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் தகவல்கள் யாவும் ஆங்கிலத்தில் உள்ளமையை இங்கு நினைவிற்கொள்க.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,பதிவாளர்கள் தமிழ்ப்பற்றாளர்களாக இல்லாமையே இதற்குக்காணரம்.தமிழ்ப்பற்றுடன் விளங்கிய முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் துணைவேந்தராக விளங்கியபொழது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்
ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.அதனை மற்ற பல்கலைக்கழகத்தாரும் நடைமுறைப்படுத்தலாமே!

அயல்நாட்டினருக்கு இணையதளத் தகவல்கள் எனப் பொய்க்காரணம் புகல்வோர் அதிகம்.நம் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தமிழர்களே அதிகம்.அயல்நாட்டினர் எண்ணிக்கையை எண்ணிச் சொல்லிவிடலாம்.நிலை
இவ்வாறு இருக்க தமிழிலும் ஆங்கிலத்திலும் தகவல்கொண்ட இணையதளத்தைப் பெற்ற பல்கலைக்கழகமாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் மட்டும் இயங்குகிறது. ஏனைய தமிழகப் பல்கலைக்கழகங்கள் தமிழில் தகவல்களைத் தராமல் ஆங்கில அடிமைகளின் கூடாரமாக விளங்குவதை எவ்வாறு மாற்றுவது?.இந்தியக் குடிமகனின் வளர்ச்சிக்கு மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்கக்கூடாது என்பதுதானே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.

அரசின் சட்டத்தை மீறுபவர்களை என் செய்வது?அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதானே பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாக இருக்கமுடியும் ?தொடர்புடையவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2007

தமிழ்வளர்ச்சிப்பணியில் குடந்தைக் கதிர்.தமிழ்வாணன்


குடந்தைக் கதிர் தமிழ்வாணனார்

  தமிழ்ப்பணி என்பது பல்வேறு வகையினவாக அமைகிறது. தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் எழுதுவது, பேசுவது, பயிற்றுவிப்பது, பயில்வது, ஆராய்வது என யாவுமே தமிழ்ப்பணியாகக் கருதத் தக்கனவே.இத்தகு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் சிலரே. அவர்கள் அனைவரும் தமிழ்வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அத்தகு பெருமைக்குரிய தமிழ்வாழ்க்கை நடத்துபவர்களில் குடந்தையில் வாழ்ந்துகொண்டிருக்கும் 'பாவாணர் பற்றாளர்' கதிர் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர்களின் வாழ்க்கையை அறிந்தபொழுது அவர்மேல் அளவுகடந்த மதிப்பும், அவர்கள் செய்துவரும் பணிகளை உற்றுநோக்கியபொழுது வியப்பும் மேலிட்டு நிற்கிறது.

  திருக்குறளில் ஆழ்ந்த பற்றும், பயிற்சியும் கொண்ட கதிர் தமிழ்வாணனார் தனித்தமிழில் சொற்பெருக்காற்றும் இயல்பினர். பல கோயில்களுக்குத் தமிழ்மறைகளின் வழியில் திருக்குடமுழுக்கு நிகழ்த்திய பெருமைக்கு உரியவர். நாடு முழுவதும் பல திருமணங்களைத் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பனுவல் உள்ளிட்ட தமிழ்மறைகள் ஓதி நடத்திய பெருமைக்கு உரியவர். இவர்தம் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

  கதிர் தமிழ்வாணனார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் ஊரில் திருவாளர்கள் கு.கதிர்வேல்-சாலாட்சி அம்மாள் இவர்கட்கு மகனாக 23.04.1937 இல் பிறந்தவர். குத்தாலம் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்று பின்னர் ஆசிரியர் பயிற்சிபெற்று 28-11-1961 முதல் குடந்தை நகராட்சிப்பள்ளியில் 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற மறுநாள் தமக்குத் தலைமை ஆசியரியர்களாக வாய்த்த ஆசிரியப் பெருமக்களையும் தமக்குக் கல்வி வழங்கிய கல்வி நிறுவனங்களையும் சென்று வணங்கி வந்தவர்.

  கதிர் தமிழ்வாணனார் அவர்கள் பெற்றோர்கள் வழியும் கற்றோர்கள் வழியும் தமிழ்நூல்களைக் கற்று மகிழ்ந்தவர். கல்வெட்டறிஞர் வை.சுந்தரேச வாண்டையார் உள்ளிட்ட அறிஞர்கள் வழியாகத் தமிழிலக்கிய அறிமுகம் பெற்ற இவர் தாமே கற்றுத்தகுதி பெற்றார். பாவாணரின் உலகத் தமிழ்க்கழகப் பணிகளில் முன்னின்று உழைத்தவர்.தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் பேச்சில் ஈர்ப்புண்ட இவருக்குத் திருக்குறள் பின்னாளில் வழிகாட்டி நூலாக ஆனது. தம்மிடம் பயிலும் மாணவர்கள் பலருக்குத் தமிழுணர்வும் திருக்குறள் பற்றும் ஏற்படக் காரணமாக விளங்கியவர். இவர்தம் வகுப்பறையில் நாள்தோறும் திருக்குறளை எழுதிப் போடுவதும் வீட்டு அரங்கத்தில் திருக்குறளைப் பலரின் பார்வைக்கு எழுதி வைப்பதும் இவர்தம் அன்றாடக் கடமையாகும்.

  குடந்தை நகராட்சிப்பள்ளிகள் இருபத்தொன்றிற்கும், திருவள்ளுவர் படத்தை நகராட்சியின் இசைவுடன் வழங்கித் திருக்குறள் தொண்டு செய்துள்ளார்.

 தம் வகுப்பில் பயின்ற மா.தையல்நாயகி என்னும் மாணவியின் நினைவாற்றல் அறிந்து அம்மாணவிக்குத் திருக்குறள் 1330 உம் முற்றோதல் செய்யும் பயிற்சி தந்தார்.அம் மாணவிக்குத் 'தமிழ்மறைச்செல்வி' என்னும் பட்டத்தையும் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்.தமிழ்நாட்டரசு இவர்தம் திருக்குறள் பயிற்றுவிக்கும் பணியைப் போற்றி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அரசுவிழாவில் ஆடையும் பதக்கமும் அளிக்கப்பெற்று 'திருக்குறள் நெறித்தோன்றல்' என்னும் நற்சான்றிதழும் அளிக்கப்பட்டுப் பாராட்டப்பெற்றார்.

  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் திருக்குறள் பேரவையில் பல பொறுப்புகளில் இணைந்து பணிபுரிந்தவர். திருக்குறள் பதின்கவனகர் பெ.இராமையா அவர்களின் திருக்குறள் திறனை அறிந்து 1979 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக ஒருமாதம் மருத்துவ விடுப்பெடுத்துக்கொண்டு கவனகரைத் தம் இல்லத்தில் தங்க வைத்துக் குடந்தையிலும் அண்டை, அயலில் உள்ள ஊர்களிலும் திருக்குறள் கவனக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கவனகரின் ஆற்றல் மாணவர்க்குத் தெரியும்படிச் செய்தார்.திருக்குறளைத் தம் வாழ்க்கையில் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டவர். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் வழியாகப் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார் இவற்றுள் திருக்குறள் குறித்த உரைகள் குறிப்பிடத்தக்கன.

 கதிர் தமிழ்வாணனார் அவர்களின் வீட்டு மாடியில் ஒலிபெருக்கி அமைக்கப்பெற்று நாளும் திருக்குறள் ஒலிபரப்பப்படுகிறது. இவர்தம் வீட்டில் உள்ள இடங்களுக்குத் தக திருக்குறளும் தமிழ்வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. சிறுபூந்தொட்டிகளில் உள்ள எழுத்துகளை உற்று நோக்கினால் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்று எழுதி வைக்கப்பெற்றிருக்கும் பாங்கினைக் காணும்பொழுது தமிழின்பம் பெறலாம். அதுபோல் மின்விசிறியின் இறக்கை மூன்றிலும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என எழுப்பட்டிருப்பதைக் காணும் யாவரும் வியந்து நிற்பர்.

  அயல்நாட்டுக்காரர்களும், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் இவர் வீட்டுத்தமிழை வியப்பர். அதனால்தான் குமுதம், தேவி, இதயம்பேசுகிறது முதலான பல்வேறு புகழ்பெற்ற ஏடுகளும் வீட்டில் நடைபெறும் தமிழ்ப்பணியை நாட்டுக்கு எடுத்துரைத்தன போலும்.

  மொழிஞாயிறு பாவாணர் அவர்களைத் தம் அறிவாசானாக ஏற்றுக்கொண்ட கதிர் தமிழ்வாணனார் பாவாணரின் வழியில் 1987 இல் நீடாமங்கலம் மருத்துவர் மறையரசன் அவர்களுடன் இணைந்து 4 கட்டங்களாக 1000 குழந்தைகளுக்குத் தனித்தமிழில் பெயர் சூட்டி மகிழ்ந்தார். 1990 இல் குடந்தையில் உள்ள ஆயிரம் கடைப்பெயர்களை ஆய்வு செய்து தாமே தமிழ்ப்பெயர்களை வைத்திருந்த கடை உரிமையாளர்களைப் பாராட்டி மகிழ்ந்தார்.

  ஆரவார நாகரிகத்திற்கு ஆட்படாத இவர் இதுவரை கே.பி.சுந்தராம்பாள் நடித்த அவ்வையார் படம் மட்டும் பார்த்தவர்.தம் மனைவியாரும் பிள்ளைகளும் தம் வழியில் நிற்கும் படி வாழ்பவர். பாவாணர் தனித்தமிழ்ப்பயிற்றகம் என்னும் அமைப்பை நிறுவி உள்கோட்டை, குத்தாலம், தஞ்சாவூர், திருவையாறு என ஒவ்வொரு ஊருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று தனித்தமிழ்ப்பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்திவருகின்றார்.

  பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனாரின்மேல் அன்பு கொண்ட இவர் அவர் தம் பெருமையைக் குடந்தைப் பகுதியில் நிலைநாட்டிவருபவர்.

  குடும்பவிழாக்கள், சடங்குகள், கோயில் பணிகள், திருமணம், வகுப்பறை என அனைத்து நிலைகளிலும் தூய தமிழ் பயன்படுத்தும் கதிர் தமிழ்வாணனார் வள்ளுவர் வழியிலும் வள்ளலார் வழியிலும் வாழ்பவர்.தம் மறைவுக்குப்பிறகு தம் உடலையும் கண்ணையும் பிறருக்கு உதவும் படியாக மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கி இசைவுதெரிவித்து ஒப்புதல் வழங்கியுள்ளார்.தாம் இதுநாள்வரை பயன்படுத்திய, தொகுத்து வைத்திருந்த அரிய நூல்களை மாணவர்களுக்குப் பயன்படும்படியாக நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் . தமிழுணர்வும்,இறையுணர்வும் கொண்ட கதிர் தமிழ்வாணனார் அவர்கள் குடந்தைப்பகுதியில் வாழும் தமிழறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

முகவரி:

குடந்தைக் கதிர் தமிழ்வாணனார்
பாவாணர் இல்லம்
54,செல்வராசு நகர்,
குடந்தை -612001,தமிழ்நாடு,இந்தியா
பேசி: + 9364212184

செவ்வாய், 11 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


சட்டப்பேரவைத்தலைவர்
மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


பயிலரங்கில் பயிற்சி பெறுவோர்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


பாரதிதாசன் பல்கலைக்கழகத்துணைவேந்தர்
முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள்
சட்டப்பேரவைத்தலைவர்,புதுச்சேரி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு நிகழ்ந்தமுறை...

  புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டு நண்பர்கள் பலரின் உடலுழைப்பாலும்,பொருளுதவியாலும் 09.12.2007 ஞாயிறு காலை 09. 00 மணி முதல் இரவு 08.30 மணிவரை புதுச்சேரி சற்குரு உணவகத்தின் கருத்தரங்க அறையில் சிறப்பாக நடைபெற்றது.

  காலை 9-00 மணிக்குப் பங்கேற்பாளர்களின் பதிவு தொடங்கியது.நிகழ்ச்சியில் 98 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு பயிற்சிபெற்றனர். 9-30 மணிக்கு நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தைக் கோ.சுகுமாரன் அவர்கள் வழங்கினார் அவரைத்தொடர்ந்து தமிழா முகுந்த் அவர்கள் தமிழ் எழுத்துருக்களின் செயலிகளை எவ்வாறு நிறுவுவது எனச்செயல் விளக்கம் அளித்தார். இடையிடையே சென்னை நண்பர்களும் முகுந்துடன் இணைந்து கொண்டனர். இரா.சுகுமாரன் இளங்கோ செயலி நிறுவுவதை விளக்கினார்.

  காலை 10.00 முதல் 10.30 வரை முனைவர் மு.இளங்கோவன் தமிழ் 99 தட்டச்சுப் பலகையின் வருகை, பயன்பாடு, நிறை, குறைகளைப் பகிர்ந்து கொண்டார். மா.சிவகுமார் இடையில் வந்து அவையின் இறுக்கத்தைக் குறைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார். பங்கேற்பாளர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு விளக்கம் தரப்பட்டது.

  10.30 முதல்11.00 மணி வரை க.அருணபாரதி கணினியில் தமிழ்ப்பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.இதில் மின்னஞ்சல் வசதி,அரட்டை பற்றி விவாதிக்கப்பட்டது.  இவ்வாறு நடைபெற்ற பயிலரங்க நிகழ்வுகளை ஓசை செல்லா, வினையூக்கி, சிவகுமார் முதலானவர்கள் தமிழ்வெளி, தமிழ்மணம் முதலான தளங்கள் வழியாகப் படத்துடன் நேரடி ஒளிபரப்புச் செய்தனர்.

  தேநீர் இடைவேளைக்குப்பிறகு உபுண்டு இராமதாசு அவர்கள் தமிழில் உள்ள இயங்குதளங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 12.00 -12.30 வரை முகுந்த் இணைய உலவிகளான பயர்பாக்சு பற்றிப்பேசினார்.

  12.30 -1.00 மணிவரை முனைவர் மு.இளங்கோவன் தமிழில் உள்ள தரவுதளங்கள், இணையதளங்கள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள் பற்றி விரிவாகப்பேசினார். விக்கிபீடியா, விருபா, நூலகம், சென்னை நூலகம், மதுரைத் திட்டம், திண்ணை, பதிவுகள் பற்றி விரிவாகப் பேசி சிறப்புமலரில் உள்ள தம் கட்டுரையில் தமிழில் உள்ள தளங்களைப் பற்றிய பட்டியல் உள்ளதை அவைக்கு நினைவூட்டினார்.

பகலுணவுக்குப்பிறகு 2.00- முதல் 3.00 மணிவரை முனைவர் நா.இளங்கோ அவர்கள் வலைப்பதிவு அறிமுகம் என்னும் பொருளில் பல்வேறு செய்திகைப் பகிர்ந்துகொண்டார். அவர் உரைக்குப்பிறகு அரங்கில் பொருத்தப்பட்டிருந்த கணிப்பொறிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பலர் மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக் கொண்டனர். பலர் வலைப்பூ உருவாக்கிக்கொண்டனர். மா.சிவகுமார், வினையூக்கி, வெங்கடேஷ் முதலான தோழர்கள் இதில் பெரும்பங்காற்றினர்.

பிற்பகல் 3.00 மணிக்கு வலைப்பூவில் படம் இணைப்பது,ஓசை இணைப்பது பற்றி பிரேம்குமார்,ஓசை செல்லா பயிற்சியளித்தனர். இடையிடையே வேறு நண்பர்களும் இணைந்துகொண்டனர். பயிற்சிக்கு வந்திருந்த முத்துராசுவின் கவிதை வாசிப்பைப்பதிவு செய்து ஓசை செல்லா அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இரா.சுகுமாரன் திரட்டிகளில் இணைப்பது உட்பட பல தகவல்களை அவ்வப்பொழுது வழங்கினார். மா.சிவகுமார் திரட்டிகளில் இணைப்பது பற்றி இடையிடையே விளக்கினார். தூரிகா வெங்கடேஷ் கூட்டு வலைப்பதிவு உட்பட பல தகவல்களைப்பகிர்ந்துகொண்டார்.

இணைய இதழ்களில் எழுதுவது பற்றி முனைவர் மு.இளங்கோவன் விளக்கினார். திண்ணை, பதிவுகள், சிபி, வணக்கம் மலேசியா முதலான இதழ்களில் எழுதுவது பற்றி விளக்கினார்.இவ்வாறு பயிலரங்கு நிறைவுநிலைக்கு வந்தது.

பயிற்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. மைசூர் செம்மொழி நிறுவன நண்பர்கள், பேராசிரியர் மயிலாடுதுறை நெடுஞ்செழியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் தங்கள் நிறைவான கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மாலை 6.30 மணியளவில் நிறைவுவிழா தொடங்கியது.

பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமை தாங்கினார். கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார்.க.அருணபாரதி வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் நா.இளங்கோ தொடக்கவுரையாற்றினார். பேராசிரியர் மு.இளங்கோவன் நோக்கவுரை யாற்றினார். பராதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் கருத்துரை வழங்கினார். கணிப்பொறி, இணையவரலாறு, தமிழ் இணையத்தில் இடம்பெற்றமை, தமிழ் ஒருங்குகுறி குறித்துள்ள சிக்கல்கள், முழுமையான ஒருங்குகுறி இடம்பெற உள்ள நிலை இவற்றை நிரல்பட விளக்கினார். தமிழ்மொழி அனைத்து நிலைகளிலும் இடம்பெறவேண்டியதன் தேவை பற்றி எடுத்துரைத்தார். பயிற்சிப்பட்டறை என்பதைவிட பயிற்சிப் பயிலரங்கு என்றிருப்பதன் பொருத்தப்பாட்டை விளக்கினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் நிறைவுரை யாற்றினார். தமிழ்வளர்ச்சிக்குப் புதுவை அரசு தொடர்ந்து பாடுபடும் எனவும், கணிப்பொறியில் தமிழ் இடம்பெறுவதற்கு இயன்ற உதவிகளைச்செய்ய அணியமாக இருப்பதாகவும் உறுதியளித்தார். பயிலரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது

தூரிகா வெங்கடேஷின் நன்றியுரையுடனும் நாட்டுப்பண்ணுடனும் இரவு 8.30 மணிக்கு விழா இனிதே நிறைவடைந்தது.

திங்கள், 10 டிசம்பர், 2007

தமிழில் இணைய இதழ்கள்

  இருபதாம் நூற்றாண்டு வழங்கிய தகவல்தொடர்புக்கருவிகளுள் இணையம் குறிப்பிடத் தகுந்த, தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று விளங்குகிறது. செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் இதன் சிறப்புகள் பலவாக உள்ளன. அச்சுவடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் தகவல்களைப் பெறக்கூடிய, வழங்கக் கூடிய இருவழிக் கருவியாக இது விளங்குகிறது. இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தகவல்களைப் பல முனைகளில் இருந்து பல வடிவங்களில் பெற்றுக்கொள்ள, அனுப்ப முடிகிறது. எனவே அச்சுவடிவில் ஒரு குறிப்பிட்ட நில எல்லைக்குள் கிணற்றுத் தவளையாக இருந்த ஊடகங்களும், ஒலி, ஒளி வடிவில் இருந்த ஊடகங்களும் இணையத்தின் வழியாக இன்று உலகம் முழுவதற்கும் பயன்படத்தக்க படைப்புகளை, தகவல்களை உலகச்சொத்தாக்க முனைந்துள்ளன.

உலகப் போட்டிக்கு ஈடு கொடுத்து ஒவ்வொருவரும் தங்கள் நலனுக்காக இணையத்தை ஒவ்வொரு வகையில் சார்ந்து நிற்கின்றனர். அவ்வகையில் அச்சில் வந்த,வரும் இதழ்கள் பலவும் தங்கள் இதழ்களை மின்னிதழ்களாகவும் (e-zines) வெளியிடுகின்றன. அவ்வகையில் உலக மொழிகள் பலவற்றுள்ளும் மின்னிதழ்கள் வெளிவருகின்றன. இக்கட்டுரை தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள் சிலவற்றை அறிமுகம் செய்கின்றது.

இணையதளம்,இணைய இதழ்,வலைப்பூ வரையறை

  தமிழில் வெளிவரும் இணைய இதழ்களைப்பற்றி அறிவதற்கு முன்பாக இணையதளம், இணைய இதழ், வலைப்பூ என்னும் சொற்களைப்பற்றிய வரையறையைச் செய்துகொள்வது நன்று. ஏனெனில் இவை யாவும் தொடர்புடையனவாக இருப்பதால் ஒன்றுபோல் தோன்றும்.

    இணையதளம் என்பது ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு, அல்லது தனிநபர் தமது விவரங்கள், தகவல்கள், செய்திகள், சேவைகள் முதலானவற்றை, எழுத்தாகவோ, படமாகவோஒலி, ஒளி வடிவிலோ தருவது இணையதளமாகக் கருதலாம். எ.கா. அப்பல்லோ மருத்துவமனையின் தளம் (www.apollohospitals. com) அதன் சேவை,மருத்துவர்கள் பற்றிய விவரம், வசதிகள் இவற்றைத் தாங்கியுள்ளமையை நினைவிற்கொள்க.

 இணைய இதழ்கள் என்பவை அச்சுவடிவ இதழ்களைப் போலவே பல்வேறு செய்திகள், படைப்புகள், படங்கள் இவற்றைக்கொண்டு வெளிவருவனவாக உள்ளன. 

எ.கா. கீற்று, திண்ணை. பதிவுகள், நிலாச்சாரல், எழில்நிலா, அந்திமழை முதலியன.

 வலைப்பூ என்பது தம் விருப்பத்தை எழுத்தாகவோ, படமாகவோ,ஒலி,ஒளி வடிவாகவோ வழங்குவது. கட்டணம் கட்டியும், இலவசமாகவும் வலைப்பூக்களை உருவாக்கமுடியும். பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்றன. Google நிறுவனத்தின் www.blogger.com என்னும் வலைப்பூ சிறந்த நூல்கள், சிறந்த தளங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், பதிப்பு, நூல் தொர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டு வருவதை அத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம்.

இணைய இதழ்கள்

 தமிழ்மொழியில் பல்வேறு இணைய இதழ்கள் வெளிவருகின்றன. இவ்விதழ்கள் இலவசமாகவும், கட்டணம் கட்டியும் படிக்கும் படியாக உள்ளன. அதுபோல் அனைவரும் எளிதில் படிக்கும்படியாக ஒருங்குகுறி (unicode) எழுத்திலும், எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் படி தனிவகை (டாம்,டேப்) எழுத்திலும் வெளிவருகின்றன. ஒருங்குகுறியில் வெளிவரும் இதழ்களையே அனைவரும் விரும்பிப்படிக்கின்றனர்.

 தொடக்கத்தில் டாம்,டேப் எழுத்துகளைப் பயன்படுத்திய இதழ்கள்கூட உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஒருங்கு குறிக்கு மாறிவிட்டன.தனிவகை எழுத்தில் தொடக்கத்தில் வெளிவந்த தினபூமி,தினமணி இதழ்கள் இன்று ஒருங்கு குறியில் வருகின்றமையைக் கவனத்தில் கொள்ளவேண்டும். எழுத்துருக்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கவேண்டிய தளத்திற்கோ,இதழிற்கோ படிப்பாளிகள் செல்லத் தயங்குகின்றனர்.தினத்தந்தி இதழ் ஒருங்குகுறியில் இல்லாமையால் படிக்கும் சிக்கல் உள்ளது.

இணைய இதழ்களின் வகைப்பாடு

இணைய இதழ்களை அதன் வெளியீட்டு முறைகளுக்கு ஏற்ப நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்றெல்லாம் வகைப்படுத்தமுடியும். நாளிதழையும் காலை இதழ், மாலை இதழ் என வகைப்படுத்தலாம்

நாளிதழ்

பெரும்பாலான அச்சு இதழ்கள் இன்று மின்னதழ்களை வெளியிடுகின்றன. தினமலர், தினமணி, தினபூமி,விடுதலை, தினத்தந்தி, தினகரன், மாலைமலர் முதலியன இணைய இதழ்களாக வெளிவருவதில் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் தினமலர் நாளிதழ் மின்னிதழாக வெளிவருவதுடன் குறிப்பிட்ட மணி நேரத்தில் செய்திகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது. மேலும் அயல்நாட்டுத் தமிழர்களைக் கவரும் பல்வேறு உத்திகளையும் பின்பற்றி அயலகத் தமிழர்களைத் தன் இதழைப் படிக்கும்படி செய்கின்றது. உலகத்தமிழர் செய்திகள், பிற மாநிலச்செய்திகள், மாவட்டங்கள் என்றெல்லாம் பல்வேறு வகையில் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்றது. இவ்வகையில் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆத்திரேலியா, சீனா, சப்பான் முதலான நாடுகளில் நடைபெறும் செய்திகளை அந்த அந்த நாட்டிலிருக்கும் செய்தியாளர்கள் திரட்டி அனுப்புகின்றனர்.

 இது தவிர புதினம்.காம், சங்கதி, பதிவு, லங்காசிறீ, தினக்குரல், உதயன், தட்சுதமிழ், வெப் உலகம், சிபி.காம், பி,பி.சி.தமிழ், வணக்கம் மலேசியா முதலான தளங்கள் பல்வேறு வகையில் அன்றாடச் செய்திகளைத் தருகின்றன.

வார இதழ்கள்

  தமிழகத்தில் அச்சில் வெளிவரும் வார இதழ்கள் பலவும் மின்னிதழாகவும் வெளிவருகின்றன. மின்னிதழின் தரம் படிப்பாளிகளை மனத்தில்கொண்டு சிறப்புப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தும் சில இதழ்கள் வழங்குகின்றன. ஆனந்தவிகடன், குமுதம், மங்கையர்மலர், கல்கி, நக்கீரன்(வாரம் இருமுறை) முதலிய இதழ்கள் இணைய இதழ்களாகவும் கிடைக்கின்றன. இவற்றுள் சிலவற்றை இலவசமாகவும், சிலவற்றைக் கட்டணம் கட்டியும் படிக்கவேண்டியுள்ளது.

திண்ணை

 திண்ணை வாரந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது. இதன் வடிவமைப்பும், வகைப்பாடும் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது. முகப்பு, அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும், கலைகள்-சமையல் என்னும் வகைப்பாட்டில் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. எட்டாண்டுகளாகத் தொடர்ந்து வாரந்தோறும் இவ்விதழ் புதுப்பிக்கப்பட்டுத் தரமான படைப்புகளைத் தாங்கி வெளிவருகின்றமை பாராட்டிற்கு உரியது. உலகம் முழுவதும் இவ்விதழுக்கு வாசகர்கள் உள்ளனர். அதுபோல் படைப்பாளிகளும் உள்ளனர்.உலகம் முழுவதும் நடைபெறும் தமிழ் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைத் திண்ணை வழங்குவதில் ஓர் உலகப்பார்வை உள்ளமை புலனாகும். அனைத்துத்தர மக்ககளும் அமர்ந்துபேசும் இடமாகத் திண்ணை இருப்பதுபோல் திண்ணை இணையதளமும் அனைத்துக் கொள்கைகளையும், கருத்துகளையும் கொண்டவர்களைத் தம் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளமை திண்ணையின் தனிச்சிறப்பாகும்.

 திண்ணையில் பல வகையான படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வந்து வழங்குகின்றனர். கதை, கட்டுரை, கடிதம், ஆய்வுகள், நாட்டுநடப்புகள், இலக்கியச்சந்திப்புகள், விவாதங்கள், உலக அரசியல் முதலியன பற்றிய பல தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய ஆவணப்பகுதிக்குச் சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்தும் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.

திண்ணையில் கி.இராசநாராயணன், அம்பை, கோபால் இராசாராம், அ.மார்க்சு, விக்கிரமாதித்தியன், காஞ்சனா தாமோதரன், வாசந்தி, பாவண்ணன், வ.ந.கிரிதரன், பழ.நெடுமாறன், இன்குலாப், சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, தேவமைந்தன், செயபாரதன், பிச்சினிக்காடு இளங்கோ முதலானவர்கள் பலவகையில் தங்கள் படைப்புகளை வழங்கியுள்ளனர்.

மாத இதழ்கள்

தமிழ் இணைய இதழ்கள் மாதஇதழாகவும்சிலவெளிவருகின்றன. அவற்றுள் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இதழ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் (www.pathivugal.com). பதிவுகள் இலவசமாக வெளிவரக்கூடிய இதழாக இருப்பினும் ஆண்டுக்கு 24 டாலர் கட்டணம் கட்டும்படி வேண்டுகிறது. ஆசிரியர் வ.ந.கிரிதரன். 2000 ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் முரசு அஞ்சல் (இணைமதி) எழுத்துரு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது ஒருங்குகுறி எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல்விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், திரைப்படம், வாசகர் எதிரொலி, நாவல், உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக கையேடு, இலவச விளம்பரம்,நூல் அங்காடி,சமூகம் என்னும் தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன.

இலக்கிய இதழ்கள்

 இலக்கியம், இலக்கணம், படைப்புகள் சார்ந்த செய்திகளைக்கொண்டும் இதழ்கள் வெளிவருகின்றன. திண்ணை என்னும் இணைய இதழ் பல்வேறு படைப்பாளிகள், எழுத்தாளர்கள்,ஆய்வாளர்களின் படைப்புகளைத் தாங்கித் தொடர்ந்து வெள்ளிக்கிழமைதோறும் வெளிவருகின்றது.புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் என்னும் மாத இதழ் இலக்கியம், இலக்கணம் தமிழ்வளர்ச்சி சார்ந்த செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றது.

 பதிவுகள் என்னும் இதழ் கனடாவிலிருந்து வ.ந.கிரிதரன் அவர்களால் சிறப்பாக இலக்கியம் சிறுகதை,கவிதை, கட்டுரை முதலான பலதரப்பட்ட செய்திகளுடன் வெளிவருகின்றமை குறிக்கத்தக்க ஒன்றாகும். இந்த இதழில் திண்ணை, தமிழ்மணம், விக்கிபீடியா, வார்ப்பு, நூலகம்,கீற்று,மதுரைத்திட்டம், சென்னை நூலகம் முதலான இதழ்,தளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.

  படைப்பாளிகளுடன், இலக்கிய ஆர்வலர்களுடன் தம் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், எல்லைகளைக் கடந்து அனைவருடனும் தொடர்புகொள்ளவும் பதிவு தோற்றுவிக்கப்பட்டது என்று இதன் நோக்கம் பதிவாகியுள்ளது. குழுமனப்பான்மையின்றி, அனைவரும் கலந்து பங்காற்றும் இதழாகவும், உலகில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளை இலவசமாக வெளியிடும்இதழாகவும்இது உள்ளது. இவ்விதழில்இந்திரன், செயபாரதன், கா.சிவத்தம்பி, செயமோகன், சுப்பிரபாரதிமணியன், அ.முத்துலிங்கம், பிச்சினிக்காடு இளங்கோ, நளாயினி, சோலைக்கிளி கிரிதரன் முதலானவர்கள் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

 வடஅமெரிக்கா, ஆத்திரேலியா, ஐரோப்பா, சிங்கப்பூர், சப்பான், மலேசியா, இலங்கை, இந்தியா உட்பட பலநாடுகளின் வாசகர்கள் இந்த இதழுக்கு உண்டு. பதிவுகள் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலப் படைப்புகளும் இதில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மாத இதழாகப் பதிப்பிக்கப்பட்டு அனைவராலும் விரும்பிப்படிக்கப்படுகின்றது.

 பொள்ளாச்சியிலிருந்து பொள்ளாச்சிநசன் அவர்களால் வெளியிடப்படும் தமிழம். நெட் (www.thamizham.net) என்னும் இதழ் தமிழில் வெளிவரும் இதழ்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் (இதனைத் தளமாகவும் கொள்ளலாம்). தமிழறிஞர்களின் படங்கள், அறிஞர்களின் வாழ்க்கைக்குறிப்பு, பொள்ளாச்சி நசன் அவர்களுக்கு வரும் இதழ்கள் மடல்கள் பற்றிய விவரம், நூல் மதிப்புரை, தமிழ்ப்பாடம், திருக்குறள், இலக்கிய நிகழ்வுகள், அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பாடங்கள் உலக அளவில் மதிக்கப்படுகின்றன. மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.

 புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் தலைசிறந்த தமிழறிஞர்களின் பாடல்கள், இலக்கண, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், நூல்மதிப்புரை, தமிழ்சார்ந்த நிகழ்வுகள், பாடல் எழுதும் பயிற்சி முதலியவற்றைக்கொண்டு மூன்று இதழாக இணைய இதழாக வெளிவருகிறது.

இணைய இதழ்களின் பயன்

 இணைய இதழ்களைப் படிப்பவர்கள் உலக அளவில் உள்ளதால் படைப்பாளியின் படைப்பு உலக அளவில் செல்கிறது. உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இணைய இதழ்கள் செய்கின்றன.ஒரு படைப்பாளியின் படைப்புகளை எளிதில் திரட்டமுடிகிறது. பின்னூட்டங்களின் வழி நம் படைப்புகளின் தன்மையை உணரமுடியும். அச்சு வடிவ இதழ்களைப் படித்த பிறகு சேமிக்க வீட்டில் இடம் தேவை. அச்சுவடிவ இதழ்கள் நம்மை அடைய கால தாமதம் ஏற்படலாம். இதழ்களை வாங்க தொகை தேவை.ஒரு இதழை ஒரு இடத்திலிருந்து ஒருவர்தான் படிக்கலாம். ஆனால் இணைய இதழை உலகின் பல பகுதிகளிலிருந்து பலர் படிக்கலாம்.பி.பி.சி. போன்ற தளங்களில் செய்திகைளைப் படிப்பதுடன் செய்திகளை ஒலிவடிவில் கேட்கவும் முடிகிறது.

 இணைய இதழ்களைப் பலர் தொடங்கி நடத்தினாலும் சில இதழ்கள்தான் தொய்வின்றி வருகின்றன. தரமாக இதழ்கள் வெளிவந்தாலும் போதிய ஆதரவு இன்மையாலும், பொருள் நெருக்கடியாலும்,குழு மனப்பான்மையாலும் பல இதழ்கள் வெளிவராமலும் பராமரிக்கமுடியாமலும் போய்விட்டன. வெளிவந்த, வெளிவரும் சில இதழ்களைத் திரட்டித்தர இக்கட்டுரை முனைகிறது (இப் பட்டியல் முழுமையானதல்ல. விடுபட்ட இதழ்களைத் தெரிவிக்கப் பட்டியலை முழுமைப்படுத்தலாம்).

தமிழில் சில இணைய தளங்களும், இதழ்களும்

1. தினமலர் www.dinamalar.com
2. தினகரன் www.dinakaran.com
3. தினதந்தி www.dailythanthi.com
4. குமுதம் www.kumudam.com
5. தட்சு தமிழ் http://thatstamil.oneindia.in/
6. மாலைமலர் www.maalaimalar.com
7. தினமணி www.dinamani.com
8. பதிவு.காம் www.pathivu.com
9. தமிழ் சினிமா.காம் www.tamilcinema.com
11. ஆனந்தவிகடன் www.vikatan.com
12. நிதர்சனம் www.nitharsanam.com
13. வீரகேசரி ஆன்லைன் www.virakesari.lk
14. யாழ்இணையம் www.yarl.com
15. அறுசுவை www.arusuvai.com
16. வெப்உலகம் www.webulagam.com
17. பி.பி.சி தமிழ் www.bbc.co.uk/tamil
18. சிபிதமிழ் www.tamil.sify.com
19. மாலைச்சுடர் www.maalaisudar.com
20. உதயன் தமிழ்நாளிதழ் www.uthayan.com
21. தமிழன் எக்சுபிரசு www.tamilanexpress.com
22. தமிழ்.நெட் www.tamil.net
23. தமிழ்க்கூடல் www.koodal.com
24. தமிழ்பிலிம் மியூசிக் www.tfmpage.com
25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) www.cinemaexpress.com
26. தேனி.இலங்கை www.thenee.com
27. தினபூமி www.thinaboomi.com
28. தமிழ்மணம் www.thamizmanam.com
29. தமிழ் பிலிம் கிளப் www.thamilfilmclub.com
30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) www.wikipedia.org
31. புதினம் www.puthinam.com
32. பதிவுகள் www.pathivukal.com
33. சங்கதி www.sankathi.com
34. அதிர்வு www.athirvu.com
35. சுடரொளி www.sudaroli.com
36. யாழ் இணையம் www.yarl.com
37. தமிழ்ஆர் www.tamilr.com
38. சுவிசு முரசம் www.swissmurasam.com
39. மட்டுஈழநாதம் www.battieezanatham.com
40. ஈழநாதம் www.eelanatham.com
41. தினக்குரல் www.thinakural.com
42. ஒரு பேப்பர் www.orupaper.com
43. பரபரப்பு www.paraparapu.com
44. முழக்கம் www.muzhakkam.com
45. கனடாமுரசு www.canadamurasu.com
46. சுதந்திரன் www.suthanthiran.com
47. ஈழமுரசு www.eelamurasu.com
48. தமிழ்முரசு
49. விடுதலை www.viduthalai.com
50. தமிழ்நாதம்
51. லங்காசிறீ www.lankasri.com
52. தமிழர்தகவல் மையம் www.maalaisudar.com
53. சுரதா www.suratha.com
54. தமிழ்நியூசு டி.கே www.tamilnews.dk
55. சற்றுமுன் www.sarumun.com
56. கல்கி www.kalkiweekly.com
57. வணக்கம் மலேசியா www.vanakkammalaysia.com
58. அலைகள் www.alaikal.com
59. தென்செய்தி www.thenseide.com
60. நோர்வே தமிழ் www.norwaytamil.com
61. ஈழதமிழ் www.eelatamil.com
62. நெருடல் www.nerudal.com
63. தமிழ்விண் www.tamilwin.net
64. விருபா www.viruba.com
65. அறுசுவை www.arusuvai.com
66. சோதிடபூமி www.jothidaboomi.com
67. மதுரைத்திட்டம் www.projectmadurai.com
68. குவியம் www.kuviyam.com
69. நாதம் www.natham.com
70. தமிழோவியம் www.tamiloviam.com
71. காலச்சுவடு www.kalachuvadu.com
72. உயிர்மை
73. அப்பால் தமிழ் www.appal-tamil.com
74. வார்ப்பு(கவிதை இதழ்) www.vaarppu.com
75. நெய்தல் www.neithal.com
76. கவிமலர் www.kavimalar.com
77. இளமை
78. தமிழமுதம்
79. நிலாச்சாரல் www.nilacharal.com
80. தமிழம் www.thamizham.net
81. எழில் நிலா www.ezhilnila.com
82. வானவில் www.vaanavil.com
83. தமிழ்த்திணை(ஆய்வுஇதழ்) www.tamilthinai.com
84. தோழி.காம்
85. திசைகள்
86. அம்பலம் www.ambalam.com
87. ஆறாம்திணை www.araamthinai.com
88. மரத்தடி www.maraththadi.com
89. தமிழ் எழுதி www.http://tamileditor.org
90. தமிழ்முரசு(சிங்கப்பூர்-ஒருங்குகுறி) www.tamilmurasu.asia1..com.sg
91. அமுதசுரபி
92. கலைமகள்
93. முரசொலி www.murasoli.in
94. கீற்று www.keetru.com
95. தமிழகம்.காம் www.thamizhagam.com
96. மஞ்சரி
97. ஈழவிசன்
98. தமிழ் ஆசுதிரேலியா www.tamilaustralian.com
99. எரிமலை www.erimalai.com
100. இன்தாம் intamm
101. வரலாறு www.varalaaru.com
102. மொழி www.mozhi.net
103. செம்பருத்தி www.semparuthi.org
104. தமிழமுதம் www.tamilamutham.com
105. தாயகப்பறவைகள் www.thayakaparavaikal.com
106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் www.tamilvu.org
107. சூரியன் www.sooriyan.com
108. திண்ணை www.thinnai.com
109. புதுச்சேரி.காம் www.pudhucherry.com
110. நக்கீரன் www.nakkheeran.com
111. தி.க.பெரியார் www.periyar.com
112. தமிழ் அரங்கம் www.tamilcircle.com
113. தமிழ்வாணன் www.tamilvanan.com
114. திராவிடர் www.dravidar.org
115. உண்மை www.unmaionline.com
116. புதுவிசை www.puthuvisai.com
117. முத்தமிழ்மன்றம் www.muthamilmantram.com
118. தமிழகம்.நெட் www.thamizhagam.net
119.மங்கையர்மலர் www.mangayarmalarmonthly.com
120. கல்கி www.kakionline.com
121. கீற்று வழங்கும் இணைப்புகள்(www.keetru.com)
கவிதாசரன்
கருஞ்சட்டைத் தமிழர்
புதிய காற்று
அணி
அணங்கு
குதிரைவீரன்பயணம்
விழிப்புணர்வு
தீம்தரிகிட
கதைசொல்லி
புதுவிசை
கூட்டாஞ்சோறு
அநிச்ச
புதுஎழுத்து
உங்கள் நூலகம்
புதியதென்றல்
வடக்குவாசல்
புன்னகை
உன்னதம்
புரட்சி பெரியார்முழக்கம்
தலித்முரசு
122. கணித்தமிழ் www.kanithamizh.com
123. முத்தமிழ்ச்சங்கம் www.muthamilsangam.co.nz
124. கருத்து www.karuthu.com
125. சித்தர்கோட்டை www.chittarkottai.com
126. பொய்கை www.poikai.com
127. கௌமாரம் www.kaumaram.com
128. தமிழோவியம் www.tamiloviam.com
129. தமிழ்வலை www.http://kanaga-sritharan.tripot.com.com
130. மலேசியநண்பன்
131. கணையாழி
132. கணியத்தமிழ் www.kaniyatamil.com
133. தமிழ்முதுசொம் www.tamilheritage.org
134. தென்றல் www.tamilonline.com/thendral
135. பதியம் www.pathiyam.com
136. தமிழ்வெப்துணிமா www.tamil.webdunia.com
137. ஊடறு www.oodaru.com
138. முத்துக்கமலம் http://www.muthukamalam.com
139. வரலாறு www.varalaru.com
140. தென்னிந்திய ச.வ.ஆ.நிறுவனம் www.sishri.org

குறிப்பு: புதுச்சேரி வலைப்பதிவு பயிலரங்கில்(09.12.2007) வெளியிடப்பெற்ற மலரில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரையை வலைத்தள நண்பர்களுக்கு வழங்கியுள்ளேன். கட்டுரைச் செய்திகளைப் பயன்படுத்துவோர் இணைப்பு வழங்கவும்.

( பலவாண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை என்பதால் பல இதழ்களின் வரவு இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு)


சனி, 8 டிசம்பர், 2007

விடிந்தால் திருமணம்....

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ்வலைப்பதிவு நண்பர்களே!

நாளை (09.12.2007) ஞாயிறு காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
புதுச்சேரியில் தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையும், மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நிறைவு விழாவும் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறன.100 கணிப்பொறி ஆர்வலர்கள் பயிற்சி பெறுகின்றனர். புதுவை, தமிழகம், மைசூர், பெங்களூரு முதலான இடங்களிலிருந்து பயிற்சிபெற பலர் வருகின்றனர்.

புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி, சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர். பட்டறை நிகழ்வுகள் உடனுக்குடன் உலகுக்கு அறிவிக்கும்படி இணைய ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியை வாழ்த்துங்கள் நண்பர்களே!

வெள்ளி, 7 டிசம்பர், 2007

மக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T.H)...

மக்கள் தொலைக்காட்சி உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் தொலைக்காட்சியாக உள்ளது. இத் தொலைக்காட்சியில் திரைப்படம் தவிர்ந்த, தமிழ்ப்பண்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் தமிழ்க்கூடல், சொல்விளையாட்டு, செய்திகள், வணிகம் சார்ந்த நிகழ்ச்சிகள், பயனுடைய பொழுதுபோக்குகள், மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகி உலக அளவில் அனைவராலும் விரும்பப்படுகிறது.

கம்பி வசதி இல்லாதவர்களும்,பிற தொலைக்காட்சிகளைப் பார்க்க விரும்பாதவர்களும் பயன்பெறும் வண்ணம் செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக வீட்டிற்கு இணைப்பு நல்கும் வகையில்(D.T.H) வழியாக மக்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவின் எந்த ஊரிலிருந்தும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இனி மக்கள் கண்டு மகிழலாம். மாத வாடகை இல்லாமல் தொடக்கத்தில் ஆகும் செலவுடன் நிகழ்ச்சிகளைக் காணலாம். 1500 உரூவாவிலிருந்து 2500 உரூவா வரை முதற்கட்ட செலவு செய்தால் மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட சில தமிழ் ஒளிபரப்புகளைக் கண்டு மகிழலாம். மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். தமிழர்களாக வாழ்வோம். பிற நாட்டினரின் பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்.

சனி, 1 டிசம்பர், 2007

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் வரவேற்பு

மலேசியாவிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் 34 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குச் சுற்றுச் செலவாக வந்துள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் எழுத்தாளர்களைச் சந்தித்து மலேசியத்தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்வது இவர்களின் வருகையின் நோக்கமாகும். தமிழக அரசு இவ்வருகையை ஊக்குவிக்கும் முகமாகப் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. 

மலேசிய எழுத்தாளர்குழு நேற்று (30.11.2007) வெள்ளிக்கிழமை புதுச்சேரி வந்தது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய எழுத்தாளர்கள் தங்கள் இலக்கிய நிலைகளைப் பகிர்ந்த்துகொண்டனர். புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார். 

புதுவை அறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள், பல்வேறு கலை, இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். புலவர் சீனு. இராமச்சந்திரன், கல்வி வள்ளல் வி. முத்து, ஆதவன் உள்ளிட்ட தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தினரும் விழாவைச் சிறப்புடன் நடத்தினர்.

 இருநாட்டு எழுத்தாளர்களும் அறிமுகமாகித் தங்கள் படைப்புகள், எழுத்துப் பணிகளைப் பரிமாறிக்கொண்டனர். 01.12.2007 இன்று புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறையில் மலேசியத்தமிழ் இலக்கியங்கள் குறித்த கருத்தரங்கில் எழுத்தாளர்கள் கட்டுரை படிக்கின்றனர். பேராசிரியர் சபாபதி, கார்த்திகேசு, முரசு.நெடுமாறன். இராசேந்திரன், புண்ணியவான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் வந்துள்ளனர்.

ஞாயிறு, 25 நவம்பர், 2007

புதுச்சேரியில் 11 ஆவது தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கம் நடத்திவருகிறது.அந்த அந்த ஆண்டு வெளிவரும் நூல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் நேரடியாகப் பார்த்து வாங்க நல்ல வாய்ப்பாக இது அமையும்.இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி வேல்.சொக்கநாதன் திருமணமண்டபத்தில் திசம்பர் 17முதல் 26 வரை நடைபெற உள்ளது.அலுவலக நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணிவரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரையும் கண்காட்சி நடைபெறும்.கண்காட்சியில் வாங்கும் நூல்களுக்கு 10% கழிவு வழங்கப்படும்.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ எண்பதிற்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் நூல்கள் பார்வைக்குக் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு,இந்தி முதலான மொழிகளில் அமைந்த நூல்கள் கிடைக்கும்.கல்வி நிறுவனங்களுக்குச் சிறப்புக்கழிவு உண்டு.நாள்தோறும் இன்னிசை.வினாடி-வினா போட்டிகள் நடைபெறும். 200 உரூவாவிற்குமேல் நூல்கள் வாங்குவோர்க்கு ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.அனுமதி இலவசம்.

செவ்வாய், 20 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை குறித்த கலந்துரையாடல்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை வரும் திசம்பர் 9 இல் புதுச்சேரியில் நடைபெறுகிறது.இதற்கான சிறப்புக் கலந்துரையாடல் இன்று 20.11.2007 இரவு 8 மணி முதல் 9.30 வரை புதுச்சேரியில் நடந்தது.

நிகழ்ச்சியை எவ்வாறு நிகழ்த்துவது என நண்பர்கள் சொன்ன வழிகாட்டல்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.வெளியூர் நண்பர்கள்,வெளிநாட்டு நண்பர்கள் தெரிவித்த
கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.மலர் வெளியீடு,வரும் பயிற்சியாளர்கள் மகிழ்ச்சியுடனும்,ஆர்வத்துடனும் பங்குபெற உரிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
எதிர்பார்த்ததைவிட பயிற்சியாளர்கள் மிகுதியாக வரவிரும்புவதால் வருகை பற்றிய சில
வரையறைகள் இணையம் வழியாகவும்,மின்னஞ்சல் வழியாகவும் தெரிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சனி, 17 நவம்பர், 2007

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் என்னும் பெயரில் ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களின்
கலை, இலக்கிய வளர்ச்சிப் பணிகளுக்குத் தமிழ்நாட்டில் புதிய கலை, இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இவ்வமைப்பின் தொடக்கவிழா முறைப்படி தமிழகத்தின் தலைநகரில் விரைவில் நடைபெற உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் கலை, இலக்கியங்களை வளர்த்தல்
இப் படைப்புகளை வழங்கும் படைப்பாசிரியர்களைப் பாராட்டல்,விருதுவழங்கிச் சிறப்பித்தல்,
படைப்பாளர்களை உருவாக்கும் நோக்கில் பயிற்சியளித்தலைச் செய்யத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.இது பற்றிய விவரம் பின்னர் விரிவாகப் பதிவுசெய்வேன்.

திங்கள், 12 நவம்பர், 2007

தினமணியில் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி...

இன்றைய(12.11.07) தினமணி இதழில் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி விரிவாக
செய்தி வெளிவந்துள்ளது.

பார்க்க :

புதுச்சேரி - 12 2007 00:11

கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் வலைப்பதிவுகள்

புதுச்சேரி, நவ. 11: கணினியில் வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கணினியைத் தமிழில் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகளில் எழுதுவதற்கான வசதிகளை பிளாக்கர்.காம், வேர்ட்பிரஸ்.காம் உள்ளிட்ட பல தளங்கள் இலவசமாக வழங்குகின்றன.

யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரில் இலவசமாக வலைப்பதிவுகளை ஆரம்பித்து தங்கள் கருத்துகளை எழுத முடியும். தங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இதில் விவாதிக்க முடியும். கதை, கவிதை, கட்டுரை, திரைவிமர்சனம் என எழுதலாம்.

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள தமிழ்த் திரட்டிகள் உள்ளன. இவைகள் இலவசமாக வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கின்றன.

இதற்காகத் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழூற்று உள்ளிட்ட திரட்டிகள் செயல்படுகின்றன. எழுதுபவர்கள் இந்தத் திரட்டிகளில் தங்கள் வலைப்பதிவுகளை இணைத்துக் கொண்டால் ஒரே இடத்தில் உலகில் உள்ள அனைவரும் படிக்க முடியும்.

தமிழ்மணம் திரட்டியில் 2354 பேர் தங்கள் பதிவுகளை இதுவரை இணைத்துள்ளனர். இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 143 பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதேபோல் தேன்கூட்டில் 1874 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளனர். இந்திய மொழிகளில் தமிழில்தான் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த வசதி வாய்ப்புகள் இருப்பதால் கணினியில் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இயங்குதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பலருக்குத் தேவை.

புதுச்சேரியில் இந்த வலைப்பதிவுகள் குறித்தும், கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைக் கொண்டு செல்வது, இது தொடர்பான இயங்குதளங்களையும், தமிழ் மென்பொருள்களையும் அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பதிவுகளில் தமிழைப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல உள்ளது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன்.

இதற்காக இவர்கள் டிசம்பர் 9-ம் தேதி ஒருநாள் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளனர். இதில் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார்.

இந்த அமைப்பைத் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணினி நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களில் தமிழின் பங்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற பயிற்சி பட்டறைகள் இதற்கு வலு சேர்க்கும்.

நன்றி : தினமணி 12.11.2007

ஞாயிறு, 11 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை வரும் திசம்பர் 9 இல் புதுச்சேரி சற்குரு உணவகத்தில்  நடைபெற உள்ளதால் அதற்கான கலந்துரையாடல் கூட்டம் இன்று (11.11.2007) புதுச்சேரியில் காலை 10.30 மணியிலிருந்து பகல் இரண்டு மணிவரை நடைபெற்றது.

பட்டறை நிகழ்முறை, பட்டறையில் பேசப்பட உள்ள தலைப்புகள், பயிற்சியளிக்கப்படும் துறை, பயிற்சியளிப்போர், மாலையில் புதுவை முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழா நிகழ்முறை  பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.

சென்னை வலைப்பதிவர் பட்டறையைச்சேர்ந்த தோழர்கள் சிலரை விருந்தினர்களாக அழைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பட்டறையில் சிறப்புமலர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.

தொடர்புக்கு:
இராச.சுகுமாரன் :9443105825
மின்னஞ்சல் : rajasugumaran@gmail.com

சனி, 10 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி இந்து நாளிதழில்...

புதுச்சேரி தமிழ் வலைப்பதிவர் பட்டறை பற்றிய செய்தியை இன்றைய (10.11.2007) இந்து
நாளிதழில் பின்வருமாறு வெளியிட்டு உதவியுள்ளனர்.

Puducherry

Workshop for bloggers

Special Correspondent

PUDUCHERRY: A workshop for bloggers would be conducted by the Puducherry Bloggers Wing here on December 9.

According to coordinator of the programme R. Sugumaran, the proposed workshop aims at providing adequate training for using Tamil in computers on a wider basis.

Imparting training in operating systems and software in Tamil, sending e-mail in Tamil and writing in Tamil blogs, with the assistant of required software, would be the components of the programme. For further details, contact 94431-05825.

நன்றி : இந்து நாளிதழ்

திங்கள், 29 அக்டோபர், 2007

திருமுதுகுன்றத்திலிருந்து கருப்புச்சொற்கள்...

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) இலக்கியப் படைப்பாளிகள் பலரை வழங்கியமண். இவ்வூரிலும் அண்டை, அயலில் உள்ள ஊர்களிலும் பிறந்த பல படைப்பாளிகள் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல படைப்புகளை வழங்கியுள்ளனர். இப்பகுதியில் பிறந்த திரைப்பா ஆசிரியர் அறிவுமதியின் எழுத்துகளும் வளர்ச்சியும் இப்பகுதி இளைஞர்களைக் கவிஞர்களாகவும், கதையாசிரியர்களாகவும், சிற்றிதழாசிரியர்களாகவும் மாற்றின எனக் குறிப்பிட்டால் மிகைக்கூற்றாக இருக்காது.

கண்மணி குணசேகரன், இரத்தின.கரிகாலன், இரத்தின.புகழேந்தி, பட்டிசெங்குட்டுவன், தெய்வசிகாமணி (நடவு ஆசிரியர்), தாமரைச்செல்வி (புதின ஆசிரியர்) முதலானவர்கள் இப்பகுதியின் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்லடம் மாணிக்கம், த.பழமலை. வே.சபாநாயகம், தங்கர்பச்சான் போன்றவர்களும் இளைஞர்களை எழுதச்செய்யும் இயல்புடையவர்கள். இவர்கள் இப்பகுதியினர்.

இம்மண்ணிலிருந்து ஆவாரம்பூ என்னும் பெயரில் சிவா என்னும் இளைஞர் தரமான சிற்றிதழ் தொடங்கி நடத்தினார். மூன்று இதழ்கள் வெளிவந்த பிறகு தமிழ்ப்பற்றின் காரணமாகச் சிவா என்னும் தம் பெயரை இளந்திரையன் என மாற்றியும், ஆவாரம்பூவைக் 'கருப்புச்சொற்கள்' என்னும் பெயரிலும் வெளியிட்டுள்ளார். தரமான படைப்புகளுடன் கருப்புச்சொற்கள் இதழை வெளிக்கொண்டுவந்துள்ள இளந்திரையனைப் போற்றி வரவேற்போம்.

அவர்தம் முகவரி:

இளந்திரையன்
470/ 1 பாரிவீதி,
பாலாசிநகர்,பெரியார் நகர்(தெற்கு),
திருமுதுகுன்றம் -606001,தமிழ்நாடு

ஞாயிறு, 28 அக்டோபர், 2007

தமிழ்நாட்டில் தமிழ்படித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது!

தமிழ்மொழி தொன்மையானது,செம்மொழித்தகுதியுடையது என மேடைமுழக்கம் செய்தவர்களே தமிழ்படித்தவர்களுக்கு எதிரான செயல்களில் இன்று இறங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தமிழ் இலக்கியங்களை இளங்கலை, முதுகலை,இளம்முனைவர்,முனைவர் பட்ட வகுப்புகளில் நேரடி வகுப்புகளில் பயிற்றுவிக் கின்றன.இதில் பல்லாயிரம் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல இலட்சம் மாணவர்கள் தமிழ் இலக்கியங்களை நேரடியாகப் படித்துவிட்டு,கல்வியியல்
( B.Ed) பட்டங்களைப் பெற்றும் பல ஆண்டுகளாக வேலையின்றி வேலைவாய்ப்பகத்தில் பதிவுசெய்துவிட்டுப் பணிவாய்ப்பின்றி உள்ளனர்.இவர்கள் எந்தச் சங்கத்தின் பெயரிலும் ஒன்றுகூடாமல் உள்ளதால் பணிவாய்ப்பிற்குரிய அறிகுறியே இல்லாமல் உள்ளனர்.இவ்வாறு தமிழ் இலக்கியம் பயின்றவர்களில் மகளிரின் எண்ணிக்கை மிகுதி. தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் மிகுதியாகும்.இவ்வாறு தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்றவர்களின் நிலை உள்ளது.

இன்று ஆசிரியர் பயிற்சியைக் காசுக்கு விற்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் மிகுதியாகத் திறந்து கடைவிரித்துக் கிடக்கின்றன.இங்குப் படித்து(!) வேலைக்கு வருபவர்கள் செய்யும் முதல் வேலை தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரத் தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டங்களைக் காசுக்குப் பெற்று விடுகின்றனர்.

தொடக்கப்பள்ளிகளில் வேலைக்குச்சேரும் இவர்கள் தங்களின் அஞ்சல்வழிப் பட்டங்களைக் காட்டி நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராக வந்துவிடுகின்றனர். இதற்கு இவர்களின் கூட்டணிகளும்,பணப்புழக்கமும்,வாக்குகளும்,அரசியல்காரர்களை வளைத்துப்போடும் மாநாட்டு உத்திகளும் பெரிதும் கைகொடுக்கின்றன.

ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள் (D.T.Edu.) கல்லூரி,பல்கலைக்கழகத்திலும் கால்வைத்து விடுகின்றனர். ஆசிரியர் பயிற்சியோடு பணிக்கு வந்தவர்கள் பட்டம்பெற்றால் பணப்பயன் வழங்கலாமே தவிர தகுதி மீறிய பணியைக்கொடுப்பது கல்வியுலகில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் எனக் கல்வியாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களை முறையாகப்படித்தவர்களே தமிழாசிரியராக வருதல் வேண்டும்.தமிழ் தவிர பிற கணக்கு,ஆங்கிலம்,வரலாறு,அறிவியல் பட்டம் பெற்றாலும் ஆசிரியர்பயிற்சி மட்டும் பெற்றுத் தொடக்கப்பள்ளியில் பணியில் இருப்பவர் கல்வியியல் பட்டம் பெற்றால்தான் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.தான் பட்டம் பெற்றுவிட்டேன் என்னை நடுநிலைப்பள்ளி ஆசிரியராக்கு எனத் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் பிறதுறை ஆசிரியர்கள் கேட்பதில்லை.விதியும் இல்லை.

ஆனால் ஆசிரியர்பயிற்சி மட்டும் முடித்து தொடக்கப்பள்ளியில் பணியிலிருப்பவர்கள், அஞ்சல்வழியில் தமிழ் பி.லிட்,பி.ஏ பட்டம் மட்டும் பெற்றவர்கள் நடுநிலைப்பள்ளித் தமிழ்ஆசிரியராகலாம் என அண்மையில் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.இவ்வகையில் 6700 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இவ்வாறு செய்வதன்வழி எதிர்காலத்தில் தமிழ் இலக்கியம் நேரடியாகப்படிப்போர் எண்ணிக்கை இல்லாமல் போகும். தமிழகத்தில் நேரடியாக நடைபெறும் பல்வேறு கல்லூரிகளின் தமிழ்வகுப்புகள் மாணவர்களின் வருகை இன்மையால் மூடவேண்டியதேவை ஏற்படலாம். தமிழ்வகுப்புகளை இதுநாள் வரை படித்துவிட்டு பணிக்குச் செல்லாதவர்கள் பாரதூரமான துன்பங்களைச் சந்திப்பர்.இவற்றை எதிர்த்துத் தமிழ் படித்த மாணவர்கள் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

அஞ்சல்வழிக்கல்வியால் தமிழுக்கு நேர்ந்துள்ள முதல்அடியாக இதனைக்கருதலாம். தமிழ்நாட்டுக் கல்வியில் அறிவுப்பூர்வ பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளதை இது காட்டுகிறது.

வியாழன், 25 அக்டோபர், 2007

ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்

 திருவண்ணாமலைக்குப் பல சிறப்புகள் உண்டு.சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நன்னன் என்ற அரசனின் தலைநகரம் திருவண்ணாமலைக்கு அருகில் செங்கம் என்னும் பெயரில் புகழ்பெற்ற ஊராக இன்றும் விளங்குகிறது. அண்ணாமலையார் திருக்கோயிலும், இன்னும் பல்வேறு புகழ்பெற்ற ஊர்களும்,மலைகளும் இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. இவ்வூரில் வாழும் சி.மனோகரன் என்னும் அன்பர் அமைதியாக ஒரு பெரும்பணியை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாகச் செய்து வருகின்றார். இவ்வூரிலும் பக்கத்து ஊர்களிலும் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகள், அறிஞர்களின் பேச்சுகள், சொற்பொழி வுகள், சுழலும்சொற்போர், நாடகங்கள்,தெருக்கூத்துகள்,பட்டிமண்டபங்கள், இசை நிகழ்ச்சிகளை ஒலிநாடாக்களில் பதிவுசெய்து பாதுகாத்து வருகின்றார். வறுமைநிலையில் வாழ நேர்ந்தாலும் தம் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து பல்லாயிரக் கணக்கான மணிநேரம் பதிவு செய்யப்பெற்ற ஒலிநாடாக்களைப் பாதுகாப்பதிலும், தொடர்ந்து பதிவு செய்வதிலும் ஈடுபட்டுள்ளார்.


 இலக்கியங்களை,தத்துவங்களை, கதைகளைப் பாட்டாகவும், உரையாகவும் மக்களிடம் கொண்டுசேர்த்த எத்தனையோ அறிஞர்களின் முகத்தைப் பார்க்கவும், பேச்சைக் கேட்கவும் முடியாதபடி பதிவுசெய்யும் நாட்டம் இல்லாதவர்களாக நம் முன்னோர்கள் இருந்துள்ளனர். அரிய பொருள் பொதிந்த பேச்சுகள் காற்றோடு காற்றாகவும், உருவம் மண்ணோடு மண்ணாகவும் கலந்துபோயின. பதிவுக்கருவிகள் வந்த பிறகும் நாம் விழிப்படைந்தோமா என்றால் இன்னும் தேவை என்ற அளவில்தான் நிலைமை உள்ளது.அடுத்த தலைமுறைக்கு உ.வே.சா, மறைமலையடிகளார், பாவாணர், பெரியார், அண்ணா ,காமராசர், திரு.வி.க, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் முதலானவர்களின் பேச்சு, பாடல்கள் சில மணி நேரம் கேட்கும்படி இருக்குமே தவிர முழுமையாக நாம் அவற்றைப் பதிவு செய்தோமில்லை. பாதுகாத்தோமில்லை.

இக்குறையைப் போக்கும் வகையில் திருவண்ணாமலை சி.மனோகரன் அவர்களின் முயற்சி உள்ளது. இவருக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஒலி இலக்கியச் செம்மல் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர் தமிழ்ஒளிஇயக்க அன்பர்கள். எதற்குப் பாராட்டு? ஏன் பாராட்டு? பாராட்டுப் பெற்றவருக்கு இப்பாராட்டு பொருந்துமா என்பது பற்றி இங்கு எண்ணிப் பார்ப்போம்.


அறிஞர்களின் பேச்சுகளை ஊர் ஊராகச் சென்று கேட்டதோடு அமையாமல் பதிவுசெய்து பாதுகாத்தும், வேண்டியவருக்குக் குறைந்த செலவில் படியெடுத்தும் வழங்கும் பணியை மேற்கொள்பவர் திருவண்ணாமலை சி.மனோகரன். (மனோகர் ரேடியோ அவுசு36 டி,திருவூடல்தெரு, திருவண்ணாமலை (தொலைபேசி + 9944514052 ) என்னும் முகவரியில் வாழும் இவருடன் உரையாடியதன் வழியாகப் பல தகவல்களை அறியமுடிந்தது.


சி.மனோகரன் அவர்களின் சொந்த ஊர் திருவண்ணாமலையை அடுத்த சோழவரம் என்பதாகும். பெற்றோர் சின்னக் குழந்தைவேலு, ஆண்டாள். பள்ளியிறுதி வகுப்புவரை படித்தவர். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்றவர். சுவர்களில் விளம்பரப் பலகைகள் எழுதும் பணியில் தொடக்கத்தில் ஈடுபட்டிருந்தார். பின்பு திருச்சி சியாமளா ரேடியோ இன்சுடியுட்டில் வானொலி பழுதுபார்க்கும் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு 1974 இல் தாமே சிறிய அளவில் ஒரு பழுது பார்க்கும் கடையைத் தொடங்கி நடத்தினார். 1984 இல் பதிவுக்கருவி வாங்கும் அமைப்பு அமைந்தது. அதன்பிறகு திருவண்ணாமலையிலும் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யத் தொடங்கினார். இவர் பதிவு செய்த ஒலிநாடாக்கள் என்ற வகையில் அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்களின் சொற்பொழிவாக அமைந்த பின்வரும் ஒலிநாடாக்கள் மிகச்சிறந்த தொகுப்புகளாகக் கொள்ளலாம்(இப்பட்டியல் முழுமையானதல்ல).


1.தொல்காப்பியம் 39 மணிநேரம்


2.சங்கஇலக்கியம்

திருமுருகாற்றுப்படை 6 மணிநேரம்

நற்றிணை 2 மணிநேரம்

திருக்குறள் 7 மணிநேரம்


3.சிலப்பதிகாரம் 40 மணிநேரம்

4.திருவாசகம் 120 மணிநேரம்

5.திருக்கோவையார் 19 மணிநேரம்

6.பெரியபுராணம் 150 மணிநேரம்

7.மகாபாரதம்,

8.கந்தபுராணம், 15 மணிநேரம்

9.திருவிளையாடல்புராணம் 75 மணிநேரம்

10.திருப்புகழ் 13 மணிநேரம்

12திருமந்திரம் 40 மணிநேரம்

13.பதினோராம் திருமுறை 45 மணிநேரம்

14.திருவிசைப்பா 9 மணிநேரம்

மேற்குறித்த தொகுப்புகள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தத் தக்கன.


 பல்லாயிரம் ஒலிநாடாக்களில் பலபொருள்களில் அறிஞர்கள் பேசிய பேச்சுகளைப் பதிவுசெய்ய இவர் எடுத்த முயற்சிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. அவை சிதைந்துவிடாமல் போற்றிப் பாதுகாக்கும் இவரின் அர்ப்பணிப்பு உணர்வுக்குத் தமிழகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் எளியகுடும்பத்தில் பிறந்து வளர்ந்து பழுதுநீக்கும கடை வருமானத்தில் குடும்பத்தைக் கவனித்து, ஊர் ஊராகச் சென்றுவரப் பேருந்துக் கட்டணம், தங்குமிடம், உணவுச்செலவுக்குப் பெரிதும் திண்டாடியுள்ளார்.பதிவு செய்ய ஒலிநாடாக்கள் இல்லாமல் பல நாள் ஏங்கியுள்ளார்.


சி.மனோகரன் சிறந்த சிவ பக்தர்.12 ஆண்டுகள் தொடர்ச்சியாக 2 மணி நேரத்தில் மலைவலம் வந்தவர். இவர் ஓதுவார்கள் பலரும் பாடிய தேவார, திருவாசகங்களைப் பல்வேறு குரலில் பதிவுசெய்துள்ளார்.தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களான திருக்குறளார் வீ.முனிசாமி, சோ.சத்தியசீலன், அ.அறிவொளி, சாலமன் பாப்பையா, இராசகோபாலன், இரா.செல்வகணபதி, மலையப்பன், தா.கு.சுப்பிரமணியன், சண்முகவடிவேல், அகரமுதல்வன், நெல்லைக் கண்ணன், சுகிசிவம், சரசுவதி இராமநாதன், ம.வே.பசுபதி முதலானவர்களின் பேச்சுகள் பலநூறு மணிநேரம் பதிவுசெய்யப்பட்டு இவரிடம் உள்ளன.


திருவள்ளுவர், சிலப்பதிகாரம், கம்பன், வள்ளலார், கண்ணதாசன், பெரியபுராணம், பத்திரிகைத்துறை சார்ந்த தலைப்புகளில் நடைபெற்ற பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழலும் சொற்போர் தொடர்பான எழுபது நிகழ்ச்சிகளுக்கு மேலான பதிவுகள் இவரிடம் உள்ளன.


ஒலிப்பதிவு ஆர்வலர் சி.மனோகரனைச் சந்தித்து உரையாடியபொழுது திருவண்ணாமலை சார்ந்த இலக்கிய ஆர்வம்,நாட்டுப்புறவியல்ஆய்வு சார்ந்த பல செய்திகளைப் பெற முடிந்தது.அவரிடம் உரையாடியதிலிருந்து...

ஏன் பேச்சுகளைப் பதிவுசெய்யவேண்டும் என்று நினைத்தீர்கள்?


ஒரு பொருளைப் பற்றிப் பேச வருபவர்கள் நம்மைவிட அதிகம் கற்றவர்களாக இருப்பர். நாம் அதிகம் படிக்காதபொழுது மற்றவர்களின் பேச்சைக்கேட்பதே பல நூல்களைப் படிப்பதற்குச் சமமாகும். 'கற்றிலனாயினும் கேட்க' என்கிறார் திருவள்ளுவர். நான் கேட்டதோடு அமையாமல் மற்றவர்களும் கேட்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பதிவுசெய்து பேச்சுகளை ஒலிநாடாக்களில் பாதுகாத்துவருகிறேன்.


உங்கள் இளமைக்காலம் பற்றி?


வறுமை நிறைந்த குடும்பம்.படிக்க வசதி இல்லை.பணிக்குச் செல்லவும், நன்கொடைதரவும் வசதி இல்லை. வானொலி பழுதுபார்க்கும் கடைவைக்க முதலீடு இல்லை. சேட்டு ஒருவரின் உதவியால் சிறிய கடை வைத்துக் குடும்பத்தைக்காப்பாற்றிவருகிறேன்.


அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்களின் பேச்சு அமைந்த ஒலிநாடாக்களை ஆர்வமுடன் பாதுகாக்க காரணம் என்ன?


எனக்குச் சைவ சமய ஈடுபாடு அதிகம்.'அண்ணாமலை அண்ணாமலை' எனப்படிக்கும் காலத்திலிருந்து சொல்வேன். சமயம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் படித்தால் நூல்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி என் கல்விநிலை குறைவாக இருந்தது. இந்த நிலையில் செய்தித்தாள்களில் இரத்தினகிரியில் திருவிளையாடல் புராணம் பற்றி அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் உரையாற்றும் செய்தி கண்டேன். அதன்பிறகு அங்குச்சென்றேன். முதன்முதல் கு.சுந்தரமூர்த்தி அவர்களை அங்குக் கண்டு பழகினேன். அவர்பேச்சில் ஈடுபாடு கொண்டேன். கு.சுந்தரமூர்த்தி அவர்கள் எதனைப் பேசினாலும் சங்க இலக்கியங்கள் 38 நூல்களையும் மேற்கோளாகக் காட்டுவார். சமயநூல்கள் புராண நூல்கள் பற்றியெல்லாம் கூறுவார். எனவே அவர் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பதிவுசெய்வதைக் கடமையாகக் கொண்டேன்.


பேச்சுப்பதிவில் பல்வேறு இடையூறுகளைச்சந்தித்திருப்பீர்களே? அவை பற்றி..


பொருளாதார நெருக்கடியால் பலமுறை துவண்டுள்ளேன்.பேருந்துக்குப் பணம் இல்லாமலும் ஒலிநாடா வாங்க வசதியில்லாமலும் பலமுறை தவித்துள்ளேன்.பாடகர்கள் சிலர் தம் தொழில் பாதித்துவிடும் எனப் பதிவு செய்யக்கூடாது என்பர். அத்தகு இயல்புடையவர்கள் பாடல்களை நான் கேட்பதுகூடக் கிடையாது.ஆனால் பேச்சாளர்கள் யாரும் என்னைத் தடுத்தது கிடையாது.

பாரதக் கதைகளைப் பல ஒலி நாடாக்களில் பதிவுசெய்து வைத்துள்ளீர்கள்? பாரதக்கதை சொல்பவர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்றவர்கள் யார்?


நான் பாரதக் கதைகளைப் பலர் பாடக் கேட்டுள்ளேன். பலரின் பாடலைப்பதிவு செய்துள்ளேன்.பாரதக் கதைகளை அனைவரும் சுவைக்கும்படி எளிமையாகவும் இசையோடும் பாடுவதில் மேல்நந்தியம்பாடி ச.நடராசன் சிறந்தவர். எனவே அவருடைய பாரதக்கதை முழுவதையும் பதிவுசெய்யவேண்டும் என நினைத்தேன். திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கேட்டவரம்பாடி முதலான ஊர்களில் அவர்சொன்ன செய்துள்ளேன். 110 ஒலிநாடாக்களில் பாரதக்கதை என்னிடம் பதிவு செய்யப்பட்டது உள்ளது. அவர்மகன் ந.செல்வராசு பின்பாட்டு நன்கு பாடுவார்.


பம்பை, தபேலா, ஆர்மோனியம் முதலான இசைக்கருவிகள் வைத்து இடும்பிக்குறி என்ற கதை சொன்னார்கள். பாரதக் கதையை ஒரு இடும்பி குறியாகச் சொல்வதுபோல் பாடுவது இக்கதை. மேல்நந்தியம்பாடி நடராசனுக்கு 60 வயது இருக்கும். இவர் தேவாரம், திருவாசகம் முதலானவற்றைக் கண்ணீர் வரும்படி பாடும் இயல்பினர்.


திருவண்ணாமலை மாவட்டம் என்றால் தெருக்கூத்து அதிகம். இதில் யார் யார் புகழ்பெற்றவர்கள்?இதன் ஒலிநாடாக்கள் உள்ளனவா?


தெருக்கூத்தில் தேவனூர் பழனி புகழ்பெற்றவர். மக்களுக்கு அறிவுரை பாரதக்கதை வழிசொல்வார். வேடம் அணிந்தும், கட்டைகள் கட்டிக்கொண்டும் ஆடுவார். கள்ளிக் காத்தான் கதை, கற்பகவல்லி கதை, கற்பகாம்பாள் நாடகம், காத்தவராயன் கழுகு ஏறுதல் முதலானவை மணியால் சிறப்புடன் நடிக்கப்பட்டன. (47 வயதிருக்கும் பொழுது இறந்துவிட்டார்)

பெண்ணாத்தூர் பக்கம் நல்லாண்பிள்ளை பெற்றாள் என்ற ஊரில் அரவான் களப்பலி, கர்ணமோட்சம் என்ற நாடகம்நடித்தவர்கள் பதிவு செய்யச் சொன்னபொழுது 10 மணிநேரம் பதிவு செய்து அந்த நடிகர்களுக்கு அளித்தேன்.

கல்வெட்டு நடேசன் குழுவும் நன்கு ஆடும். இதனையும் பதிவு செய்துள்ளேன். ஏறத்தாழ 50 மணிநேரம் தெருக்கூத்துப் பற்றி என்னிடம் ஒலிநாடாக்கள் என்னிடம் உள்ளன.


உங்களிடம் வணிகரீதியாக ஒலிநாடாக்களை யாரேனும் பதிவு செய்து வாங்குகின்றார்களா?


பதிவுக்கு ஒரு மணிநேரத்திற்கு எட்டு உரூபாய் எனத் தொடக்கத்தில் வாங்கினேன்.இப்பொழுது சிறிது ஏற்றியுள்ளேன்.


இப்பொழுது குறுவட்டுகள் வந்துவிட்டன. இவை குறைவான விலையில் நீண்டநேரம் கேட்கும்படியான பாடல்களைத் தாங்கி வருகின்றன.இக்காலச்சூழலில் அதிக விலைக்கு ஒலிநாடாக்களை விற்கமுடியுமா? பாதுகாக்க முடியுமா?


எனக்குச் சாதாரண கேசட் வாங்கவே பணம் கிடைப்பதில்லை. இந்த நிலையில் என்னிடம் உள்ள சாதாரண ஒலிநாடக்களைக் குறுவட்டாக மாற்றி வணிக முறையில் விற்க இயலாது. யாராவது என் பல ஆண்டுகால உழைப்பைமதித்து உதவி செய்தால் அறிஞர்களின் பேச்சைக் குறைந்த விலையில் வழங்குவதில் மறுப்பேதும் இல்லை.


பலவிதமான பதிவுக்கருவிகள் வைத்துள்ளீர்கள்.எவ்வாறு வாங்கினீர்கள்?


பலரிடம் கடன்பெற்றுதான் இவ்வெளிநாட்டுக் கருவிகளை வாங்கினேன்.என் முயற்சியை மதிக்கும் அன்பர்கள் சிலர் வட்டியில்லாக் கடன் கொடுத்தனர்.சிலர் என்னிடம் உள்ள பதிவுகளைப் படியெடுத்துக் கேட்டனர். அவ்வகையில் சிதம்பரம் பாபா சுவாமிகள் பல ஆயிரம் உரூபாவிற்கு ஒலிநாடாக்களை வாங்கி ஆதரித்தார்.


அறிஞர்களின் பேச்சுகள், சொற்பொழிவுகள் மட்டும் பதிவுசெய்த நீங்கள் சாதாரண மக்களின் பேச்சுகள், பாடல்களைப் பதிவு செய்துள்ளீர்களா?


இருளர் இன மக்கள் கன்னிமார்சாமி நிகழ்ச்சியைக் கட்டைக்கட்டி ஆடுவர். கிராமிய, பழைமையான பாடல்களைப் பாடுவர். இங்குக் கடைத்தெருவில் அவர்கள் வந்தபொழுது கடையில் அமரச் செய்து பதிவுசெய்தேன். மன்மத தகனம் பதிவு செய்துள்ளேன் (தாழ்த்தப்பட்ட மக்கள் பாடுவது).


உங்கள் ஒலிப்பதிவு முயற்சி யார் யாருக்கு உதவியாக இருக்கும்?


என் ஒலிநாடாத்தொகுப்பு அனைவருக்கும் பயன்பட்டாலும் கண்பார்வையற்ற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். குறிப்பாகத் தமிழிலக்கியம் படிப்பவர்களுக்குப் பயன்படும். எந்நேரமும் பயணத்தில் இருப்பவர்கள் ஒலிநாடாக்களைக் கேட்பதன்வழித் தமிழிலக்கியங்களை அறியமுடியும். ஓரளவே படிப்பறிவு உடையவர்களுக்கும் உதவியாக இருக்கும். இலக்கண நூல்கள், சமயநூல்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்னிடம் உள்ள ஒலிநாடாக்களைக் கேட்டால் பாடத்தை எளிமையாக நடத்தமுடியும். குறுவட்டாகும் பொழுது மாணவர்களுக்கும், குறிப்பாக அஞ்சல்வழியில் தமிழ் படிப்பவர்களுக்கும், அயல்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மிகச்சிறந்த பயன் கிடைக்கும். தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தோல்வியடைந்தனர். என்னிடம் உள்ள ஒலிநாடாக்களைக் கேட்டுப் படித்தபிறகு தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அயல்நாட்டுத் தமிழர்கள் யாரேனும் உங்கள் பதிவுகளைப் பாதுகாக்க,விலைக்கு வாங்க நினைத்தால் தருவீர்களா?


என் பல ஆண்டு கால முயற்சியை, உழைப்பை மதித்து உதவி செய்தால் பிற்காலத்தில் வழங்க முடிவுசெய்துள்ளேன்.

இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தாலும் தன் சேமிப்பில் உள்ள ஒலி நாடாக்களை வரிசைப்படுத்துவதிலும், அவற்றிற்கு ஒழுங்கான வரிசை எண் இட்டு அடுக்கி வைப்பதிலும் தேடி வரும் வாடிக்கையாளருக்குப் பதிவு செய்வதிலும் பம்பரமாக இயங்குகிறார் இந்த ஒலி இலக்கியச்செம்மல்...


நன்றி : திண்ணை இணையதளம் (11.10.2007)

செவ்வாய், 23 அக்டோபர், 2007

மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டுவிழா-கருத்தரங்கம்

புதுச்சேரியில் மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம் அவர்களின் நூற்றாண்டுவிழாக்கருத்தரங்கம்
இன்று(23.10.2007) புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.புதுவையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பணிகளைச் செய்தவர் புதுவைச்சிவம்.

தமிழ்,திராவிடஇயக்கம்,பொதுவுடைமை இயக்கம்,பாவேந்தர் வரலாற்றுடன் தொடர்புடைய வராகப் புதுவைச்சிவம் விளங்கியவர்.

1908 அக்டோபர் 23 ஆம் நாள் புதுவை,முத்தியால்பேட்டையில் பிறந்தவர்.பெற்றோர் சண்முகவேலாயுதம்,விசாலாட்சி.பாவேந்தரோடு நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தவர். புதுவைமுரசு என்னும் இதழின் ஆசிரியராக விளங்கியவர்.ஞாயிறு நூற்பதிப்புக்கழகம் தொடங்கிப் பல நூல்களைப்பதிப்பித்தவர்.

அண்ணாவின் ஆரியமாயைத் தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டபொழுது புதுவையில் அச்சிட்டு வெளியிட்டவர்.மகாகவி பாரதியார் என்னும் நூலையும் வெளியிட்டவர்.திராவிட இயக்க எழுத்தாளர்கள் பலரின் நூலைவெளியிட்டவர்.சில காலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

1968 இல் புதுவையின் துணைமேயராகவும்,1969 இல் தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்தவர்.மாநிலங்களவையில் அப்பொழுது தமிழில் பேசியவர்.

புதுவைச்சிவம் தம் கருத்துகளைப் பாடலாகவும்,நாடகமாகவும்,உரைநடையாகவும் வெளியிட்டவர்.தந்தை பெரியார்,அறிஞர்அண்ணா,பாவேந்தர்,கலைஞர் முதலானவர்களுடன்
பழகிய புதுவைச்சிவம் அவர்கள் 31.08.1989 இல் இயற்கை எய்தினார்.

புதுவைச்சிவத்தின் நூற்றாண்டினைப் புதுவை அரசு சிறப்பாக இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளது.

நூற்றாண்டின் நினைவாகப் பாட்டாளி மக்கள்கட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் இரா.திருமுருகனார்,பேராசிரியர் இராச. குழந்தை வேலனார் ஆகியோர் கட்டுரை படித்தனர்.

மக்களவை உறுப்பினர் முனைவர் மு.இராமதாசு.சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. அனந்தராமன்,குரு.பன்னீர்செல்வம்,பெ.அருள்முருகன் முதலானவர்களும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

புதுவைச்சிவத்தின் பணிகளை நினைவுகூறும் முகமாகப் பல்வேறு நினைவுச்சின்னங்களை ஏற்படுத்தவேண்டும் என அனைவரும் விருப்பம் தெரிவித்துப்பேசினர்.

சனி, 20 அக்டோபர், 2007

தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930) தமிழ் மொழிக்கு எண்ணற்ற அறிஞர்கள் பல்வேறு வகையில் தொண்டு செய்துள்ளனர். அவ்வறிஞர்கள் வரிசையில் தொல்காப்பியச் செல்வர் எனவும், சித்தாந்த நன்மணி எனவும், முத்தமிழ் வித்தகர் எனவும் அறிஞர் உலகால் போற்றப்படும் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேராசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்குபவர். அண்மையில் இவருக்கு எம்.ஏ.சி அறக்கொடையின் டாக்டர் இராசா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஓர் இலக்கம் உரூபா தொகையும், ஒரு வெள்ளிப்பேழையும், ஒரு பட்டயமும் சென்னை இராசா அண்ணாமலை மன்றத்தில் அக்டோபர் 12 இல் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்வுயரிய விருதைத் தகுதி அறிந்து வழங்கிய அரசர் குடும்பத்திற்கும் பரிந்துரை செய்த அறிஞர்களுக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றியும் பாராட்டும் தெரிவித்து நிற்கின்றது.

 ஏனெனில் இன்று விருதுக்கும் பாராட்டுக்கும் அலையாய் அலைந்து நடையாய் நடந்து பல்வேறு தந்திரங்களைப் பின்பற்றும் போலிப்புகழ் விரும்பிகளுக்கு நடுவே தமிழ்நூல்களையே தம் செல்வமாகக் கருதி, தமிழ்வடிவாகவே வாழ்ந்துவரும் தமிழ்ச்சான்றோருக்கு விருது கிடைத்துள்ளமை எம்மனோர்க்கு மிகு மகிழ்ச்சி தருகின்றது. இவ்விருதுக்கும் இதனினும் உயரிய விருதுகளுக்கும் தகுதிப்பாடுடைய பேராசிரியர் அவர்கள் கற்றவர்களும் மற்றவர்களும் உளங்கொள்ளும் வகையில் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சமய நூல்களைப் பாடமாகவும், சொற்பொழிவாகவும் வழங்கும் பேராற்றல் பெற்றவர்கள். தன்னலங்கருதாமல் தமிழ்நலம் கருதி உழைத்த இவர்களுக்கு இப்பரிசில் கிடைத்தமை அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது. இவரிடம் கற்றவர்கள் இன்று உலகம் முழுவதும் தமிழ்ப்பணி செய்கின்றனர்.

 இவர்தம் இலக்கிய, சமய உரைகள் கேட்டோர் இனியொரு முறை இவர்தம் உரையையும் பாட்டையும் கேட்க மாட்டோமா என ஏங்கும்படியாக இவர் பேச்சு அமையும்.கல்லூரியில் பாடம் நடத்தும் பொழுது தொடர்ச்சியாக ஏறத்தாழ நான்குமணி நேரம் கூட இவர் வகுப்பு நீண்டிருக்கும். மாணவர்கள் யாவரும் இலக்கணப்பாடம் என்பதையே மறந்து 'சித்திரப் பாவையெனத்' தமிழின்பம் பருகுவர். எல்லோருக்கும் கசப்பாக இருக்கும் இலக்கணப்பாடம் இவர் நடத்தத் தொடங்கினால் அமிழ்தாக இனிக்கும்.
 இவர் நடத்தும் பாடத்தோடு நின்று கொள்ளாமல் இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள், உரையாசிரியர்கள்,உலகியல் என ஒரு வட்டமடித்து வரும்பொழுது தமிழின் அனைத்து நூல்களையும் படித்த மனநிறைவைப் பாடம் கேட்போர் பெறுவர். எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியம் நடத்தத் தொடங்கினால் தொல்காப்பிய உரையாசிரியர் அனைவரும் வந்துசெல்வர். திருக்குறள் பரிமேலழகர், பிற உரையாசிரியர்கள் வந்துபோவர். குமரகுருபரர், சமயக் குரவர்கள் குறிப்பாகத் திருவாசகம் இடம்பெறும். இளங்கோவடிகள் பாட்டு வடிவில் கானல்வரி பாடுவார். கம்பனைக் கரைகண்டவர் இவர். இத்தகு தகுதிப்பாடுகள் நிறைந்திருந்த காரணத்தால் பிறர் நெருங்கத் தயங்கிய தொல்காப்பியத்தின் அனைத்து உரையையும் விருப்பத்தோடு பதிப்பித்தார். சாத்திர நூல்களுக்கு அனைவரும் விரும்பும் வகையில் உரை செய்தார்.

 பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சிவகாசி சிவனடியார் அறநெறிக்கழகம், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், இரத்தினகிரி, ஆர்க்காடு, சென்னை, புதுச்சேரி, கடலூர் முதலான ஊர்களில் மாதம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்ச்சொற்பொழிவுகள் செய்துவருகின்றார். இவர்தம் தமிழ் வாழ்வை இக்கட்டுரையில் தொகுத்துரைக்கக் காணலாம்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் இளமை வாழ்க்கை

 கு.சுந்தரமூர்த்தி அவர்கள் சிவநெறியில் நின்றொழுகும் குடும்பத்தில் 14.04.1930 இல் தோன்றியவர். இவர்தம் பெற்றோர் குப்புசாமி, நாகரத்தினம் அம்மாள். ஊர் தொட்டியம் அருகில் உள்ள தோளூர்ப்பட்டி. எட்டாம் வகுப்பு வரை பிறந்த ஊரில் பயின்றவர். தந்தையார் ஊர்நலப் பணியில்(கர்ணம்) இருந்ததால் பிற ஊர்களில் வாழ நேர்ந்தது.பின் நுழைவுத்தேர்வு எழுதித் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர்(1945-1950). அங்குப் பயின்று தேர்ச்சி முடிவு வந்த உடன் அக்கல்லூரியிலேயே தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

 பேராசிரியராகவும், முதல்வராகவும் அக்கல்லூரியிலேயே தம் பணிக்காலம் வரை (26.06.1950-31.05.1988) தொடர்ந்து பணிசெய்தார் (மீள் விடுப்பில் ஓராண்டு அண்ணாமலைப் பல்கலையில் பணி). மாற்றச் சான்று வாங்காமலே பணிசெய்த பெருமைக்குரியவர் . பேராசிரியர்கள் கா.ம.வேங்கடராமையா, தி.வே.கோபாலையர், நகராமலை இராமலிங்கம் பிள்ளை, ச. தண்டபாணி தேசிகர் முதலானவர்களிடம் தமிழ்பயின்ற பெருமைக்கு உரியவர். இவர்களுள் இராமலிங்கம் பிள்ளையும்,கோபாலையரும் கு.சுந்தரமூர்த்தியின் ஆழ்ந்த படிப்புக்குக் காரணகர்த்தர்களாக விளங்கினர்.

 படிக்கும் காலத்தில் படிப்பில் முதல் மாணவராக விளங்கியதால் காசித் திருமடத்தின் தலைவர் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். அங்குப் பணி செய்த காலத்தும் திருமடத்தின் கல்விப் பணிகளில் தாளாளர் முதலான பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச்செய்தார். பணி நிறைவு பெற்றதும் இவர்தம் தமிழறிவும் சமய அறிவும் இவ்வுலகிற்குத் தேவை என்பதை உணர்ந்த தருமையாதீன அடிகளார் அவர்கள் இவர்களை அனைத்துலகச் சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியமர்த்தினார்.

 மலேசியா, இலங்கை, இலண்டன் முதலான அயலகத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றியவர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழ கத்தின் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றுவதன் வாயிலாகத் தமிழ் இலக்கி யங்களையும் சமய நூல்களையும் மக்கள் மனத்தில் பதிய வைப்பதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார். (இவர் பல்வேறு தலைப்புகளில் பேசிய பேச்சுகள் பல்லாயிர மணிக்கணக்கில் திருவண்ணாமலை திரு.மனோகரன் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பற்றிப் பின்பு எழுதுவேன்)

 கு.சுந்தரமூர்த்தி அவர்கள் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார் அவற்றுள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான், முதுகலை. முனைவர் (Ph. D) பட்டங்களும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதம்(1954), சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் சைவப் புலவர் பட்டங்களும்(1968) குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் பணி

 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் படித்ததும் அங்குப் பேராசிரியராகப் பணி புரிந்ததும் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்குப் பல்வேறு பெருமைகள் உருவாகக் காரணங்களாயின. திருமடத்தின் சார்பான நிறுவனமானதால் முதலில் தமிழ் இலக்கண, இலக்கியங்களில், சமயநூல்களில் நல்ல பயிற்சியும்,புலமையும் ஏற்பட்டது. தமிழகத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் அங்குப்பணி செய்ததால் பலரிடம்பயிற்சி பெறமுடிந்தது. சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலானவற்றில் ஆளவை உறுப்பினராகவும்,கல்விக்குழு உறுப்பினராகவும் பலமுறை பணிபுரிந்துள்ளார். செந்தமிழ்ச்செல்வி, குமரகுருபரர் முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணிபுரிபவர். இவர் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம் முதலான காப்பியங்களையும் மாணவர்களின் உள்ளம் கொள்ளும்படி பாடமாக நடத்துபவர். சைவசித்தாந்த சாத்திர நூல்களை எளிமையாக யாவருக்கும் விளங்கும்படி நடத்தியதால் சாத்திர நூல்களைத் தமிழகத்தில் படிப்பதில் ஒரு மறுமலரச்சி தோன்றியது எனலாம். முனைவர் ம.வெ.செயராமன், பொற்கோ, ம.வே.பசுபதி முதலானவர்கள் இவர்தம் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் பதிப்புப்பணிகள்

 பதிப்புப்பணிகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் உ.வே.சா.அவர்கள்.அவர்கள் காலத்தில் நூல்களை வெளிப்படுத்துவது போற்றுதலுக்கு உரிய பணியாக இருந்தது.அவர்கள் காலத்திற்குப் பிறகு பழந்தமிழ் நூல்களின் விளங்காத பகுதிக்கும் உரைகளுக்கும் விளக்கம் தரும் பதிப்புகளும்,உரைவிளக்கம் தரும் பதிப்புகளும் தேவையாக இருந்தது. அவ்வகையில் தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப் பியத்தின் அனைத்து உரைகளையும் ஆராய்ச்சி முன்னுரையுடனும் விளக்கவுரையுடனும் பதிப்பிக்கும் முயற்சியில் கு.சுந்தர மூர்த்தி அவர்கள் ஈடுபட்டார்.சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகமும், அண்ணாமலைப்பல்கலைக் கழகமும் இப்பணியில் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்குப் பெருந்துணை செய்தன.சொந்தப் பதிப்பாகவும் பல நூல்களை வெளியிட்டார்.

தொல்காப்பியப் பதிப்புகள்

 சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் வழியாகத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையை விளக்கவுரையுடன் 1962 இல் பதிப்பித்தார்.தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையை விளக்கவுரையுடன்1963 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரையை விளக்கவுரையுடன் 1964 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை விளக்கவுரையுடன் சொந்தப்பதிப்பாக 1965 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் செய்யுளியலை நச்சினார்க்கினியர் உரையுடனும் விளக்கவுரையுடனும் 1965 இல் கழகம் வழிப்பதிப்பித்தார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரையை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழி 1979 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழி 1981 இல் வெளியிட்டார். தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சர், பேராசிரியர் உரைகளை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழி 1985 இல் வெளியிட்டார்.

 மேலும் தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கண நூலைத் தம் சொந்தப்பதிப்பாக 1967 இல் வெளியிட்டார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைக் கழகம் வழி 1972 இல் வெளியிட்டார். மேற்கண்ட இலக்கண நூல்களைக் கற்கப் புகும் ஆர்வலர்கள் யாரும் எந்த வகை இடையூறும் இல்லாமல் இவ்விலக்கண நூல்களைப் பயிலும்படி இவர் வரைந்துள்ள ஒப்புயர்வற்ற விளக்கவுரைகளும், ஆராய்ச்சி முன்னுரையும் இவரின் ஆழ்ந்த கல்விப் பரப்பையும், நுண்ணிய ஆராய்ச்சித் திறனையும் காட்டும். மூல நூலாசிரியரின் கருத்துகளை எடுத்துரைத்தும், உரையாசிரியர்களின் அறிவுச்செழுமையை விளக்கியும் நூலின் மீதும், உரையாசிரியர்கள் மீதும் மதிப்பு உண்டாகும் படி இவர் எழுதிச் செல்வார். இவர்தம் உரைகள் வழியாகப் பண்டைக் காலப் பதிப்புகள் பற்றிய பல குறிப்புகளும் வரலாறும் நமக்குப் புலனாகின்றன.

 தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணர் உரைபற்றிய முன்னுரையில் பேராசிரியர் பின்வரும் அரிய செய்திகளப்பதிவு செய்துள்ளார்.

' எழுத்ததிகார இளம்பூரணர் உரையை முதன்முதல் பதிப்பித்து உதவியவர்கள் பூவிருந்தவல்லி, திரு.சு. கன்னியப்ப முதலியார் அவர்கள் ஆவர். அப்பதிப்புத் திரிசிரபுரம் மகா வித்துவான் திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கருள் ஒருவராகிய திரு. சுப்பராயச் செட்டியார் அவர்களால் பரிசோதிக்கப்பெற்று கி.பி.1868 இல் வெளியிடப்பட்டதாகும். அப்பதிப்பு ஏட்டில் கண்டவாறே பதிப்பிக்கப் பெற்றுள்ளது. உரை பொழிப்புரையாயுள்ளது. விளக்கவுரை எடுத்துக்காட்டுகள் ஆகிய அனைத்தும் அதனுடன் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பாக்கள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. இப்பதிப்பை வேறு பல பிரதிகளோடு ஒப்பிட்டுப் பதவுரையாக்கியும், விளக்கம் எடுத்துக்காட்டுக்களைத் தனித்தனியே பிரித்தும் தமது கருத்தையும் ஆங்காங்கு வெளிப்படுத்தியும் இரண்டாவதாகப் பதிப்பித்துதவியவர் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் ஆவர்......' எனத் தம் கலத்திற்கு முன்பு நிகழ்ந்த பதிப்பு முயற்சியை வரலாற்றுப் பதிவாக வழங்குவதில் வல்லவராக விளங்கியவர்.

 தொல்காப்பியம் சேனாவரையர் உரையைப் பதிப்பிக்கும் பொழுது அரிய பல வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார் .'... சேனாவரையர் உரை முதன்முதல் திரு.சீனிவாச சடகோபமுதலியார் அவர்களின் வேண்டுகோளின்படி, கோமளபுரம் திரு. இராசகோபால் பிள்ளை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டுத் திரு. பு.கந்தசாமி முதலியார் அவர்களால் 1868 இல் பதிப்பிக்கப்பட்டது.பின்பு யாழ்ப்பாணத்து நல்லூர் திரு.ஆறுமுக நாவலர் அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு திரு.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களால் 1886 இல் பதிப்பிக்கப்பட்டது. பின்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் 1923 இல் பதிப்பிக்கப்படது. அதனையடுத்துப் புன்னாலைக்கட்டுவன் திரு.சி.கணேசையர் அவர்கள் குறிப்புரையுடன் திரு.நா.பொன்னையா அவர்களால் 1938 இல் பதிப்பிக்கப்படது. ...'

 இவ்வாறு ஒவ்வொரு நூலையும் பதிப்பிக்கும்பொழுது பல்வேறு பதிப்பு வரலாற்றைப் பதிவு செய்வதுடன் பல நூல்களை ஒப்பிட்டுத் திருத்தமாகத் தம் பதிப்பைப் பதிப்பித்துள்ளார். பொருள் விளக்கத்துடன் புதிய எடுத்துக்காட்டுகளையும் தந்துள்ளார்.நூற்பாவிலும் உரைக ளிலும் கண்டுள்ள பாட வேறுபாடுகளை அடிக்குறிப்பாகத் தருபவர்.ஒவ்வொரு நூற்பாவின் அடியிலும் விளக்கவுரை எழுதிப் படிப்பவருக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் பயன் படும்வண்ணம் செய்துள்ளார்.ஒவ்வொரு இயலின் முகப்பிலும் பொருளமைப்பு என்னும் பெயரில் கு.சுந்தர மூர்த்தி அவர்கள் எழுதியுள்ள பகுதிகள் தொல்காப்பியம் கற்கப் புகுவார்க்குப் பேருதவியக இருக்கும்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் தமிழ்இலக்கியப்பணிகள்

 தமிழின் தலைசிறந்த நூலான திருக்குறளில் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மிகச்சிறந்த ஈடுபாடு உண்டு.அனைத்துத் திருக்குறளையும் பரிமேலழகர் உரையுடன் சொல்லும் ஆற்றல்பெற்றவர். மற்ற உரையாசிரியர்களையும் நன்கு கற்றவர். எனவே திருக்குறளைப் பல்வேறு வகைகளில் பதிப்பித்துள்ளார். அவற்றுள் ம.வெ.செயராமன் அவர்களின் பொருளுதவியால் வெளியிட்ட திருக்குறள் உரைத்திறன் நூல் குறிப்பிடத்தக்கது.1981 இல் வெளிவந்த இந்நூலில் பரிமேலழகரின் உரையை அடியொற்றியும் அவர்தம் விளக்கத்திற்கு விளக்கமாகவும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. பரிமேலழகர் மாறுபடும் இடங்களும் இவ்வுரையில் சிறப்புடன் விளக்கப்பட்டுள்ளன. பிற உரையாசிரியர்களின் உரை வன்மை, மென்மைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி முன்னுரை என்று 44 பக்கங்களில் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் தந்துள்ள விளக்கம் அவரின் நுண்ணிய புலமையையும்,ஆராய்ச்சி வன்மையையும் காட்டும். இந்நூலின் அமைப்பு குறளும், பரிமேலழகர் உரையும், இவர்தம் விளக்கவுரையுமாக அமைந்துள்ளது.

 திருமுருகாற்றுப்படை உரைத்திறன்(ஐவர் உரையுடன்) என்னும் பெயரில் இவர் வரைந்துள்ள உரை திருமுருகாற்றுப்படையைச் சுவைத்துக் கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்குவதாகும். இரத்தினகிரி அருள்திரு பாலமுருகன் திருக்கோயில் சார்பில் இந்நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோல் நீதிநெறிவிளக்கம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், சீர்காழிக் கோவை,அபிராமி அந்தாதி, கந்தர் கலிவெண்பா, சங்கரமூர்த்திக் கோவை, கந்தர் அனுபூதி, தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, திருமுல்லைவாயில் புராணம், திருவிளையாடற்புராணம் முதலான நூல்களுக்கு உரையும் குறிப்புரையும் எழுதியுள்ளார்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் திருமுறைப் பதிப்புப்பணிகள்

 கு.சுந்தரமூர்த்தி அவர்கள் திருமுறைகளில் நல்ல பயிற்சியுடையவர். பலகாலம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்த ஆற்றலுடையவர். திருமுறைகளைப் பல்வேறு நிறுவனங்கள் பல வடிவில் பதிப்பித்தபொழுது திருமுறைகளின் சிறப்பு வெளிப்படும் வண்ணம் ஆற்றல் சான்ற ஆராய்ச்சி முன்னுரைகளையும் விளக்கங்களையும், குறிப்புரைகளையும் எழுதியவர். சிவகாசி சிவனடியார் அறநெறிக்கழகம் வழியாகச் சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகியோரின் திருமுறைகளை வரலாற்று முறையில் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதுவரை வெளிவந்த பதிப்புகளில் பேராசிரியரின் இப்பதிப்பு அழகிய வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் தத்துவ நூல்களுக்கான உரைப்பங்களிப்பு

 தமிழில் சைவ சமயத் தத்துவத்தை விளக்குவன சாத்திர நூல்களாகும்.பதினான்கு சாத்திரநூல்கள் உள்ளன.இப் பதினான்கு சாத்திரநூல்களுக்கும் உரை எழுதிய பெருமை கு.சுந்தரமூர்த்தி அவர்களையே சாரும். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்த இவ்வுரை நூல்கள் சமய உலகால் பெரிதும் விரும்பப்படுவன. எளிய முறையில் நடப்பியல் உண்மைகளை எடுத்துக்காட்டித் தமிழ்மரபு மாறாமல் உரைவரையும் பாங்கு இவருக்குக் கை வந்த கலையாக உள்ளது.

 பணிவு நிறைந்த மாணவராகவும், பண்பு செறிந்த பேராசிரியராகவும், ஆளுமை நிறைந்த கல்லூரி முதல்வராகவும், மயக்கம் போக்கித் தெளிவு நல்கும் உரையாசிரியராகவும், பிழையற்ற நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியராகவும், இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள், சாத்திரநூல்கள் இவற்றில் பழுத்த புலமைநலம் சான்ற அறிஞராகவும்,கேட்போர் வியக்கும் வகையில் சொற்பொழிவு செய்யும் நாவலராகவும் விளங்கும் கு.சுந்தரமூர்த்தி என்னும் உண்மைத் தமிழறிஞரை வாழும் காலத்திலேயே தமிழக அரசும், உலகெங்கும் உள்ள தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் போற்றவேண்டும். அண்ணாமலை அரசர் பெயரிலான விருது பெறுவது அதன் தொடக்கமாக அமையட்டும்...

நன்றி : திண்ணை இணையதளம் 04.10.2007