நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 17 ஜனவரி, 2020

பெரும்புலவர் கா.ர. கோவிந்தராச முதலியார்… செந்தமிழ்ச்செல்வியின் பழைய ஏடுகளை இன்று புரட்டிக்கொண்டிருந்தபொழுது பெரும்புலவர் கா.. கோவிந்தராச முதலியாரின் வாழ்வையும் தமிழ்ப்பணிகளையும் படித்து வியப்புற்றேன். முன்பே இப்புலவர் பெருமானின் தமிழ்ப்புலமை நலத்தை நாமக்கல் புலவர் பொ. வேல்சாமி அவர்கள் உரையாடலின்பொழுது தெரிவித்தார்கள். இன்று முழுவதும் கா.ரா.கோவிந்தராச முதலியாரின் தமிழ்ப்புலமையை அறிந்துகொள்வதில் நேரம் கழிந்தது. பழம் இருக்க, சுளை விழுங்கும் இன்றைய பல்கலைக்கழகப் பேராசிரியர்களை நோக்கும்பொழுது, பள்ளிப் பணியில் இருந்துகொண்டு, இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் பதிப்பித்து வெளியிட்ட கா.ர. கோவிந்தராசனாரின் புலமையையும் வாழ்வியலையும் தமிழுலகம் அறிய வேண்டும் என்ற நோக்கில் அவர் பற்றிய சில குறிப்புகளை எழுதி நினைவூட்டுகின்றேன். இக்குறிப்புகளைச் செந்தமிழ்ச்செல்வி ஏட்டிலிருந்தும், பிற நூல்களிலிருந்தும் எடுத்து வழங்குகின்றேன்.

  கா.ர. கோவிந்தராச முதலியார் அவர்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த அரங்கசாமி முதலியார், கமலாம்பாள் ஆகியோரின் மகனாக 31.10.1874 இல் பிறந்தவர். இவருடன் பிறந்தோர் திருவேங்கட முதலியார், நாகரத்தின அம்மையார் ஆவர்.

 இளம் அகவையில் தந்தையை இழந்த கோவிந்தராசனார்  செங்கல்வராயர் இலவயப் பள்ளியில் பயின்று கல்வி கற்றார். தாமே நூல்களைக் கற்றும், அண்டை, அயலில் நடைபெறும் சொற்பொழிவுகளைக் கேட்டும் தமிழார்வம் பெற்றார். இதனைக் கண்ணுற்ற இராமலிங்கத் தம்பிரான் அவர்கள் சா. பசுபதி நாயகர் அவர்களிடம் சேர்ப்பித்து, கல்வி கற்க வழி சமைத்தனர். இவரிடம் நம் புலவர் அவர்கள் திருவேங்கடமாலை உள்ளிட்ட நூல்களைப் பாடம் கேட்டனர். அப்பன் செட்டியார் என்னும் புலவர் பெருமகனார் அக்காலத்தில் இலக்கண நூல்களில் புலமை நலம் வாய்த்தவராக விளங்கினார். அவரிடம்  நன்னூல் காண்டிகையுரையைக் கா.ர.கோ. கற்றார்.

  காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மகாவித்துவான் இராமசாமி நாயுடு அவர்களிடம் தஞ்சைவாணன் கோவை, நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம், திருக்குறள், கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார். இவருடன் உடன் கற்ற பெருமைக்குரியவர் பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் ஆவார்.

  ’தியாலசிக்கல்’ உயர்நிலைப் பள்ளியில் பெரும்புலவராக விளங்கிய கோ. வடிவேலுச் செட்டியாரிடத்து நன்னூல் இராமானுசக் கவிராயர் விருத்தியுரை, புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார்.

  கா. ர. கோவிந்தராச முதலியார் தொல்காப்பியத்தைத் தாமே கற்கும் பெரும் வேட்கையோடு கற்றார். தொல்காப்பியப் பாடத்தில் அவ்வப்பொழுது ஏற்படும் ஐயங்களைப் போக்கிக்கொள்ள அக்காலத்தில் பெரும்புலவராகத் திகழ்ந்த த.கனகசுந்தரம் பிள்ளை அவர்களின் உதவியைப் பெற்றார்.

 கா.ர,கோ.தம் இருபத்தோராம் அகவையில் (1895)  அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, தொடக்கத் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றார். சிறுவள்ளூர் துணை உயர்வுப் பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். பின்னர் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். 1910 ஆம் ஆண்டு முதல் 1922 ஆம் ஆண்டு வரை பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் துணைத் தமிழாசிரியராகத் தொண்டுபுரிந்தார். மாணவர்களிடத்து எளிமையும் அன்பும் கொண்டு பழகி, இசையுடன் பாடம் நடத்தியதால் மாணவர்களின் உள்ளங்கவர்ந்த ஆசிரியராக இவர் விளங்கினார்.

 கா.ர.கோ அவர்கள் தம் இருபத்தேழாம் அகவையில் சீவரத்தனம் அம்மையாரை மணந்துகொண்டார். இவர்களுக்குக் கிருட்டினவேணி என்னும் பெயரிய பெண் மகவு வாய்த்தது.

பதிப்புப் பணி

1936 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப்பள்ளி பணியிலிருந்து ஓய்வுற்று, தம் தமிழாய்வுப் பணியில் தொடர்ந்து உழைத்தார். இவர் நன்னூலை ஆறுமுறை படித்ததாகவும், பன்னிருமுறை பாடம் சொன்னதாகவும் கூறுவர். இவரின் இலக்கணப் புலமைக்கு இணைசொல்ல ஒருவர் இல்லை என்று புலவர் பெருமக்கள் கொண்டாடுவர். இப்புலமையின் பயனாக இவர் யாப்பருங்கலக் காரிகை, நன்னூல் இராமானுசக் கவிராயர் விருத்தியுரை, இறையனார் அகப்பொருளுரை, வீரசோழியம் பழைய உரை, அகப்பொருள் பழைய உரை, நேமிநாதம், தொல்காப்பியம் முதல் சூத்திரவிருத்தி, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை முதலிய அரும்பெரும் நூல்களைப் பதிப்பித்து வழங்கியுள்ளார். இவர் வழங்கும் அடிக்குறிப்புகள் இவர்தம் அறிவாராய்ச்சிக்குக் கட்டியம் கூறுவனவாகும்.

உரைநூல்கள்

 சரசுவதி அந்தாதி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, பன்னிரு பாட்டியல், அரங்கசாமிப் பாட்டியல் முதலிய நூல்களுக்கு உரை வரைந்துள்ளார். களவழி நாற்பது,  திரிகடுகம், நான்மணிக் கடிகை, ஏலாதி, நளவெண்பா உள்ளிட்ட நூல்களுக்கு இவர் தந்துள்ள குறிப்புகள் அனைவராலும் போற்றப்படுவனவாகும். மேலும் பல செய்யுள் நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார். உரைநடை நூல்கள் பலவற்றையும் இயற்றியுள்ளார். அவற்றுள் கோவலன் சரிதை, சங்கநூல், இந்திய வீரர், ஆழ்வார் வரலாறு, ஆழ்வார் வழிக் குரவர் வரலாறு உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கனவாகும். திருப்பாவை ஆராய்ச்சி, முல்லைப்பாட்டு உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார். அம்பிகாபதியும் அரசிளங்குமரியும் என்னும் நாடக நூலையும் இயற்றியுள்ளார்.

 தம் வாழ்நாள் முழுவதும் தமிழோடு கழித்த பெரும்புலவர் கா.ர. கோவிந்தராச முதலியார் முதுமை காரணமாகவும், நோய் வாய்ப்பட்டும் 1952 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 12 ஆம் நாள் இயற்கை எய்தினார். வைணவ ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைவருடனும் நல்லுறவு பேணிய கா.ர.கோவிந்தராச முதலியார் அவர்களின் தமிழ்ப்பணிகளை இலக்கிய ஆர்வலர்களாகிய நாம் போற்றிப் புகழ்வோம். வாழ்க பெரும்புலவரின் தமிழ்த்தொண்டு.

நன்றி:
செந்தமிழ்ச் செல்வி, மாத இதழ், சென்னை.
புலவர் திரு. நா. வேல்சாமி, நாமக்கல்.


புதன், 1 ஜனவரி, 2020

துயரத்தோடு விடிந்த புத்தாண்டு! மருத்துவர் ப.உ.இலெனின் மறைவு!

மருத்துவர் ப.உ.இலெனின்

 புகழ்பெற்ற மருத்துவர் வல்லுநர் அண்ணன் ப.உ.இலெனின் அவர்கள் இன்று (01.01.2020) அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியைப் பெருந்துயரத்துடன் தெரிவிக்கின்றேன்.

 ப.உ. இலெனின் அவர்கள் பேராசிரியர் த. பழமலை அவர்களின் மூத்த மகனார் ஆவார். புதுச்சேரியில் ஹோமியோ மருத்துவமனை நடத்தி, மக்களின் நோய்நீக்கிப் பெரும் புகழ் பெற்றவர். இளம் அகவை கொண்ட மருத்துவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

 கடந்த பதினைந்து ஆண்டுகளாக மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். பதினைந்து ஆண்டுகளாக எனக்கு ஏதேனும் உடல் நலிவு எனச் சென்று, அறிகுறி சொன்னால், சில மாத்திரைகளைக் கொடுத்து உண்ணுமாறு சொல்வார். வீடு திரும்புவதற்குள் குணமாகிவிடும். என்னைப் போல் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களுக்கும் மருத்துவம் பார்த்து குணப்படுத்தியவர்.

 மருத்துவர் ..இலெனின் அவர்கள் நல்ல மருத்துவர் என்பதுடன் மனிதநேயப் பற்றாளராகவும் விளங்கியவர். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்ப்பார் என்பதைச் சிலர் மட்டும் அறிவோம். மருத்துவர் இலெனின் அவர்கள் வானொலி, தொலைக்காட்சி, செய்தி ஏடுகளில் தம் மருத்துவ அறிவைப் பொதுமக்களுக்கு உரையாடல் வழியும் எழுத்துக்கள் வழியும் வழங்கியவர்.

 மருத்துவர் .. இலெனின் அவர்கள் 26.06.1970 இல் பிறந்தவர். பெற்றோர் பேராசிரியர் .பழமலை, ஆசிரியர் உமா.

 மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மற்றும் மருத்துவமனையில் BH.M.S., மற்றும் M.D மருத்துவப் படிப்புகளை நிறைவுசெய்து, 1994 முதல் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகப் புதுச்சேரியில் மருத்துவப்பணியாற்றி வருகின்றார். இதுவரை மருத்துவம் சார்ந்து 50 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மருத்துவத்தில் இவர் எழுதாதத் துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளமை இவரின் பலதுறை அறிவுக்குச் சான்றாகும்.

 மருத்துவர் ..இலெனின் அவர்களின் மருத்துவத்துறைப் பேரறிவு கண்டு இந்திய அரசு சுகாதாரத்துறையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் ஆலோசகராகவும், உயர்நிலைக்குழுவின் ஆட்சிமன்ற உறுப்பினராகவும் அமர்த்தியது.

 மருத்துவர் .. இலெனின் அவர்கள் இனிய பேச்சுக்கும் கனிந்த பார்வைக்கும் உரியவர். திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் மருத்துவருக்குக் குறிப்பிடும் அனைத்து இலக்கணங்களையும் இலெனின் பெற்று விளங்கியவர். தம்மை நாடிவரும் நோயுற்றோருக்கு அன்புகுழைத்து மருத்துவம் பார்க்கும் இவர் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் அறிமுகப்படுத்தி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தமிழில் நூல்களாகத் தொடர்ந்து எழுதி மக்கள் மருத்துவராக விளங்கினார்.

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அருகில் உள்ள, சவகர் நகர் நான்காம் குறுக்கில் இலெனின் அவர்களின் உடல் மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

 மருத்துவ மாமணியாக விளங்கிய அண்ணன் ப.உ.இலெனின் அவர்களின் புகழ் நீடு நிற்கும்!