நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 செப்டம்பர், 2010

தஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்-படங்கள்


பார்வையாளர்கள்

தஞ்சாவூரை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவோம் என்று செம்மொழி மாநாட்டுக்கு வந்திருந்த பெரியார் வலைக்காட்சியின் பொறுப்பாளர் திரு.பிரின்சு ஒரு விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து இருவரும் சென்னையில் மீண்டும் ஒருமுறை சந்தித்து நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோம். இந்த மாதம்(செப்டம்பர்) 27 ஆம் நாள் நடத்துவோம் என்று 23.ஆம் நாள் குறிப்பிட்டார். நானும் இசைவு தெரிவிதேன். உடனடியாக அழைப்பிதழ் ஆயத்தம் ஆனது.

இணையத்தில் என் பக்கத்திலும் விடுதலை நாளேட்டிலும் செய்தி வெளியானது முதல் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதில் உண்மையான ஆர்வம்கொண்ட அன்பர்கள் சிலர் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வாழ்த்து கூறியதுடன் நில்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு என் முயற்சியைப் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டு அனைத்து வகையிலும் உதவ வேண்டினர். அவ்வகையில் மருத்துவர் சோம.இளங்கோவன்,முனைவர் நா.கணேசன்,திருவாளர் ஆல்பர்ட்டு பெர்னான்டோ உள்ளிட்டவர்களின் தமிழன்பை இங்குக் குறிப்பிட வேண்டும்.

26.09.2010 மாலை 3 மணிக்குப் புதுச்சேரியில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஒருமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு பேருந்து புறப்பட்டது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, குடந்தை, தஞ்சாவூர் சென்று சேரும்பொழுது இரவு 10.30 மணி.வழியில் என் நண்பர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் தம் அன்பான வாழ்த்துகூறி தொலைபேசியில் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தஞ்சையில் இராசராசன் விழா நிறைவுநாள் என்பதால் மக்கள் திரள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பெயர்ந்து சென்றது.காவலர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் நண்பர் பிரின்சு அவர்கள் எனக்காக ஒரு மூடுந்துவண்டியில் வந்து நின்றார். இரவு உணவை அங்கு முடித்துகொண்டு நேரே பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்றோம். புத்தாயிரம் ஆண்டு குடிலில் எனக்கு உயர்தர அறை ஒதுக்கியிருந்தனர். இயற்கையான அமைப்பில் கட்டப்பட்ட குடில் என்று நண்பர் பிரின்சு அந்த அறையின் சிறப்பைக் கூறினார். இயற்கை எழில்சூழ்ந்த அந்த அறையில் தங்குவது ஒரு மகிழ்வாக இருந்தது. நெடுநாழிகை யானும் பிரின்சும் உலக நடப்புகளையும் தமிழக, உலக அரசியில் நடப்புகளையும் உரையாடிப் பகிர்ந்துகொண்டோம். காலையில் விரைந்து எழ வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இருவரும் இரவு 12 மணிக்கு மேல் படுக்கைக்குச் சென்றோம்.

காலையில் வைகறையில் எழுந்து என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போகும் வழியில் பழகுமுகாம் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டமை மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை அன்புடன் பழகவும் அறிவுசார்ந்த செய்திகளை அறியவும் நற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்தப் பயிற்சிமுகாம் ஏற்பாடாகி இருந்தது. ஆண்,பெண் சிறுவர்கள் இந்தப் பயிலரங்கில் பெற்றோர் நினைவு மறந்து மகிழ்ச்சியாக இருந்ததை நேரில் கண்டு வியந்தேன்.

சீருடையில் சிறுவர்கள் பெரியார் பிஞ்சுகளாக உண்மையில் தெரிந்தனர்.நான் 9.30 மணியளவில் தொடக்க விழா நடைபெறும் அரங்கத்திற்குப் புறப்பட அணியமானேன். தொடக்கவிழா ஒரு வகுப்பறையில் நடந்தது.மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

பொறியியல் பயிலும் மாணவர்களும், முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் மாணவர்களும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகப் புலமுதன்மையர் திரு.இரா.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.தமிழ் வழி இணையத்தை அறிவதன் சிறப்பை விளக்கினார்.பேராசிரியர் அருணாசலம் அவர்கள் என்னை அரங்கிற்கு அறிமுகம் செய்து பெருந்தன்மையுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

பேராசிரியர் அருணாசலம் அவர்கள் திருப்பனந்தாள் கல்லூரியில் நான் இளங்கலை நிறைவாண்டு பயின்றபொழுது அவர் இளம் முனைவர்பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்பொழுதே மூத்த மாணவர்களின் அன்புக்கு உரியவனாக நான் விளங்கிய பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி அவர் ஒரு பெரும் பண்பாளர் என்று உறுதிப்படுத்தினார். ஏனெனில் இன்றைய கல்வி உலகத்தினர் பிறரைத் தாழ்த்துவதன் வழியாகத் தம்மை உயர்த்திப் பார்ப்பர்.ஆனால் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் மற்றவர்களை உயர்த்திப் பார்க்கும் பண்பால் தாமும் உயர்ந்து நின்றார்.

நான் இன்று நடைபெறும் பயிலரங்கில் பேசப்படும் செய்திகளையும் பயிலரங்கு நடப்பதன் நோக்கத்தையும் அரங்கத்திற்கு எடுத்துக்காட்டினேன். அனைவரும் மகிழ்ச்சியுடன் என் உரையைச் செவி மடுத்தனர். செல்வி இளங்கவின் வரவேற்புரையாற்றவும், செல்வி ஈழவேங்கை அவர்கள் நன்றியுரையாற்றவும் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.
தொடக்க விழாவுக்குப் பிறகு சிறிது தேநீர் அருந்தி, கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில் கூடினோம். அங்கு என் மடிக்கணினியைப் பொருத்திப் பேராசிரியர் அறிவுச்செல்வன் அவர்கள் காட்சி விளக்கதுடன் என் உரை அமைய உதவினார். காலை 11 மணியளிவில் தொடங்கிய என் உரை 1 மணி வரை நீண்டது. தமிழ் இணைய வரலாற்றை நினைவுப்படுத்தி,தமிழ் இணையத்திற்கு உழைத்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.புகழ்பெற்ற பல தளங்களை அறிமுகம் செய்தேன். தமிழ்த்தட்டச்சு, எழுத்துரு சிக்கல், திரட்டிகள், வலைப்பூக்கள், மின்னிதழ்கள் பற்றி தேவையான இடங்களில் சுருக்கியும் உரிய இடங்களில் பெருக்கியும் என் உரையை அமைத்துக்கொண்டேன்.

பகலுணவுக்கு மீண்டும் உணவுக்கூடம் சென்றோம். அங்கு மழலைகள் பழகுமுகாம் முடித்துக்கொண்டு உணவுக்கு வந்திருந்தனர்.வந்த இளம் பிஞ்சுகளை ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்கள் அன்புடன் ஒவ்வொருவராக வினவி ஊக்கப்படுத்தினார்கள். பிள்ளைகளுடன் பழகுவதில் ஆசிரியர் பெரிய ஈடுபாடு காட்டினார். என் நிகழ்ச்சிப்போக்கு பற்றி நண்பர்கள் ஆசிரியர் கி.வீரமணி ஐயாவிடம் அறிமுகப்படுத்தினர். பிற்பகல் நிகழ்வுக்கு வருவாதக உரைத்து ஊக்கப்படுத்தினார்கள். அனைவரும் உணவு உண்டோம்.

மீண்டும் பயிலரங்கம் இரண்டு மணிக்குத் தொடங்கியது. வலைப்பூ உருவாக்கம் பயிற்சியாக நடந்தது. முதல் இரண்டு படி நிலைகளைச் செய்தபொழுது வலைப்பூ உருவாக்கத்தில் சிக்கல் நேர்ந்தது. பல்கலைக்கழகத்தில் சில பயன்பாடுகளுக்கு இணையதளத்தில் கட்டுப்பாடு இருந்ததால் புதிய வலைப்பூ உருவாக்கமுடியவில்லை என்று நினைத்தேன். பிறகு என் கணக்கைத் திறந்து செய்தி உள்ளிடல், தவறு களைதல், படம் இணைத்தல், ஒலி,ஒளி இணைத்தல், இணைப்பு இணைத்தல் பற்றி செய்முறையாக விளக்கினேன். கலந்துகொண்ட அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதால் என்னை விட அவர்கள் வேகமாகப் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினேன். பின்னர் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றியும் அதன் தேவை பற்றியும் செய்தி உள்ளிடல் பற்றியும் விளக்கினேன். மின்னிதழ்களின் பயன்பாடுகளை விளக்கிச் சுரதா தளத்தின் சிறப்பைப் பயிற்சிபெற்றவர்களுக்கு எடுத்துரைத்தேன்.

5 மணி வரை இது நீண்டது.இந்த நேரத்தில் தமிழர்தலைவர் கி.வீரமணி ஐயா அவர்கள் அரங்கத்திற்கு வந்தார்கள்.அவர்களுடன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், புலமுதன்மையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். மேலும் கவிஞர் கலி.பூங்குன்றன் ஐயா உள்ளிட்ட அன்பர்களும் வந்திருந்தனர். காலைமுதல் நடந்த பயிலரங்க நிகழ்வுகளின் சுருக்கத்தை ஆசிரியர் கி.வீரமணி ஐயா உள்ளிட்டவர்களுக்கு நினைவூட்டினேன். அனைவரும் மகிழ்ந்தனர். ஆசிரியர் அவர்கள் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். அப்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படத்தை அவர்கள் முன்பாக வலைப்பூவில் ஏற்றிக்காட்டினேன். அரங்கத்தினர் மகிழ்ந்து கைதட்டி ஆரவாரித்தனர். அதன் பிறகு தம் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இத்தகு பயிலரங்குகளை நடத்தி அறிவுப்புரட்சி நடத்த வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டார்கள். அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.நிகழ்ச்சி நிறைவுற்றது. மீண்டும் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தஞ்சையில் 7 மணியளவில் பேருந்தேறி, நள்ளிரவு 1.30 மணிக்குப் புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.


மு.இளங்கோவன்,கி.வீரமணி,பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள்


அரங்கில் மு.இ,புலமுதன்மையர் இரா.கந்தசாமி,பேராசிரியர் அறிவுச்செல்வன்


பேராசிரியர் அருணாசலம் உரை


உரையை உற்றுக் கேட்கும் மாணவிகள்


ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்


பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்


பயிற்சிபெறும் மாணவர்கள்


மு.இளங்கோவன் உரை


மாணவர்களுடன் நான்


அருட்தந்தையாருடன்...


நன்றியுரை வழங்கும் ஈழவேங்கை

திங்கள், 27 செப்டம்பர், 2010

தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு…


கலந்துகொண்ட மாணவியர் (ஒருபகுதி)


தஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு இனிதே தொடங்கியது.மாணவர்கள் இப்பொழுது செய்முறைப் பயிற்சியில் உள்ளனர்.மாலையில் தமிழர்தலைவரும்,விடுதலை இதழின் ஆசிரியருமான மானமிகு கி.வீரமணி ஐயா அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.


சோதனைப்பதிவு

சனி, 25 செப்டம்பர், 2010

தஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்அழைப்பிதழ்


தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் திங்கள் கிழமை (27.09.2010) காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற உள்ளது.

காலை பத்து மணிக்குத் தொடங்கும் தொடக்க விழா பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் முதன்மையர் முனைவர் இரா.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் பா.இளங்கவின் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். பெரியார் சிந்தனை மையம் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் அறிமுகவுரையாற்றுகிறார். முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்குகின்றார். வ.ஊ.ஈழவேங்கை நன்றியுரையாற்றுகின்றார்.

நிகழ்ச்சி ஏற்பாடு பகுத்தறிவாளர் மன்றம்& தமிழ் மன்றம்


நிகழ்ச்சி நிரல்

வியாழன், 23 செப்டம்பர், 2010

சேவியர் கல்லூரியின் பயிலரங்க நினைவுகள்-படங்கள்

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் 15.09.2010 இல் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கம் சார்ந்த நிகழ்வுகளை என்றும் நினைவுகூறும் சில படங்களை இணைத்துள்ளேன்.


பதாகை


கல்லூரி முதல்வர் முனைவர் அல்போன்சு மாணிக்கம்மேடையில் பிரான்சிசு சேவியர்,முனைவர் மு.இ,கல்லூரி முதல்வர் அல்போன்சு மாணிக்கம்


பேராசிரியர் பா.வளன்அரசு,பொறியாளர் பாப்பையா உள்ளிட்ட பார்வையாளர்கள்


பேராசிரியர் இரா.பிரான்சிசு சேவியர் வரவேற்புரை


ஆய்வாளர் ஆனந்தன் அறிமுகவுரையாற்றுதல்நன்றியுரையாற்றும் பேராசிரியர் சு.இரவிசேசுராசு


பயிற்சி பெற்ற பேராசிரியர்கள்


தினமணியில் பயிலரங்கச் செய்தி(16.09.2010)

பேராசிரியர் இரா.இராசவேலு அவர்களின் இமயம் தொடும் இசைப்பறவை நூல் வெளியீட்டு விழா

புதுவைப் பேராசிரியர் இரா.இராசவேலு அவர்கள் எழுதிய இமயம் தொடும் இசைப்பறவை என்னும் மரபுப்பாடல் நூல் வெளியீட்டு விழா இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது.முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவை அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் அவர்கள் நூலை வெளியிடுகின்றார்.பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் நூல் திறனாய்வு செய்கின்றார்.முனைவர் பாபுராவ்,அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,பாவலர் இலக்கியன்,நல்லாசிரியர் க.சீத்தாராமன்,ஈகியர் மு.அப்துல் மஜீத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

இடம்: செயராம் உணவுகம்,புதுச்சேரி
நாள் 23.09.2010
நேரம்: மாலை 6 மணி

புதன், 22 செப்டம்பர், 2010

சென்னையிலிருந்து முதன்மொழி…


முதன்மொழி

பாவாணர் உருவாக்கிய உலகத்தமிழ்க்கழகம் அமைப்பைப் புதிய வளர்ச்சியுடன் பாவாணர் பற்றாளர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த அமைப்பின் கொள்கை விளக்க ஏடாக முதன்மொழி இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது. இதுவரை எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன.

முதன்மொழி இதழின் நெறியாளர்களாக முதுமுனைவர் இரா.இளங்குமரனார்,பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, பேராசிரியர் கு.பூங்காவனம் உள்ளனர்.ஆசிரியர் குழுவில் முனைவர் ந.அரணமுறுவல்,பாவலர் கதிர்.முத்தையன், பாவலர் தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி. திரு.கி.வெற்றிச்செல்வன், புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன் உள்ளனர்.

இந்த மாத இதழில் (சூன்-ஆகத்து-2010)செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்கள், சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு,இந்திய நாகரிகத்திற்கு அடிப்படை தமிழே!,மாந்தருள் பன்றிகள், சீனத்துக்குச் சென்ற சித்த மருத்துவம், எழுத்துச்சீர்திருத்தம் எதற்கு?, நிறைமலையாம் மறைமலை, முசிறியைக் கண்டுபிடித்தல்(இது தமிழர்களுக்குப் பயன்படக்கூடிய மிகச்சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு), நாமம், NAME வரலாறு, தமிழை ஒரு பாடமாக ஏன் படிக்க வேண்டும், திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திராவிடத்தைத் தமிழியமாக மாற்றுவதற்கு, உலகத் தமிழ்க்கழகத்துடன் இணைந்தது தமிழ் ஒளி இயக்கம், தமிழ் படிப்போரே! தமிழ் வழியில் படிப்போரே! என்னும் தலைப்புகளில் அமைந்த படைப்புகள் உள்ளன.

தமிழுக்கு ஆக்கமான செய்திகளைக் கொண்டு 52 பக்கத்தில் வெளிவரும் இதழைத் தமிழ்ப்பற்றாளர்கள், நூலகங்கள் வாங்கி உதவலாம்.

தனி இதழ் 10.00 உருவா
ஆண்டுக்கட்டணம் 100.00
வாணாள் கட்டணம்: 1000.00
புரவலர் கட்டணம்: 3000.00

தொடர்புக்கு:

முதன்மொழி
726,பாவாணர்தெரு,
முல்லைநகர்,மேற்குத் தாம்பரம்,
சென்னை- 600 045
செல்பேசி + 91 9444203349

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

என் மேல்நிலைக்கல்வி நினைவுகள்...


அரசு மேல்நிலைப்பள்ளி, மீன்சுருட்டி(முகப்பு வாயில்)

 உள்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தபொழுது (1982) பத்தாம் வகுப்பில் 322/500 என்ற நிலையில் என் மதிப்பெண் இருந்தது.

 என் தந்தையார் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்க்க விண்ணப்பப் படிவம் வாங்கிவந்தார். நிறைவு செய்து அனுப்பினோம். ஒரு நாள் பிந்தி அனுப்பியதால் விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பினர்.

 பல ஊர்களில் இருந்த தொழில்நுட்பக் கல்லூரிக்கும் (ஐ.டி.ஐ) விண்ணப்பித்தோம். எங்கிருந்தும் அழைப்போலை வரவில்லை. எப்படியாவது ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிட்டால் தன் கடமை முடிந்ததாக என் தந்தையார் கருதியிருந்தார். அவர் முயற்சியை அத்துடன் நிறைவுசெய்துகொண்டார்.

 எங்கள் ஊருக்கு அருகில் இருந்த மேல்நிலைப்பள்ளிகள் இரண்டு. ஒன்று செயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி. மற்றொன்று மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த ஆண்டு தேர்ச்சி முடிவு செயங்கொண்டம் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாக இல்லை. தேர்வெழுதிய பலரும் தோல்வி கண்டனர். மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய பலரும் தேறியிருந்தனர். எனவே எங்கள் பகுதியிலிருந்து மீன்சுருட்டிக்கு மேல்நிலைக் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியானது. என்னுடன் பத்தாம் வகுப்பு பயின்ற சில மாணவர்களின் குடும்பத்தினர் பொருள் வளம், உலகியல் அறிவு பெற்றவர்களாக இருந்ததால் திருச்சிராப்பள்ளி, அரியலூர் என்று வெளியூர்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தவர்களும் உண்டு.

 என் தந்தையார் என்னை மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியில் (+2) கொண்டுபோய் சேர்த்துவிட்டார் (1982 சூன் அளவில்). எங்கள் வீட்டுக்கும் பள்ளிக்கும் சற்றொப்ப 12 கல் தொலைவு இருக்கும். நான் மிதிவண்டியில் போய்வரலாம் என்பது எங்கள் நினைவாக இருந்தது.

 தொடக்கத்தில் சில நாள் பேருந்துகளில் வீட்டிலிருந்து அருகில் உள்ள குருகாவலப்பர் கோயில் பேருந்து நிலைக்கு (இரண்டு கல்தொலைவு) நடந்து வந்து மீண்டும் பேருந்தேற வேண்டும். குருகாவலப்பர்கோயில் பிற ஊர்களுக்குச் செல்லும் முனையாக இருந்தது. அருகில் உள்ள ஊர்களிலிருந்து வரும் மாணவர்கள் மிதிவண்டியில் குருகாவலப்பர்கோயில் வந்து சேர்வார்கள். அவர்களை வைத்து மிதித்துச் செல்ல வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் அவர்கள் மிதிவண்டியில் நான் செல்வதும் உண்டு.

 குருகாவலப்பர்கோயிலில் புறப்படும் எங்கள் மிதிவண்டி கங்கைகொண்ட சோழபுரம், இளையபெருமாள் நல்லூர், முத்துச்சேர்வார் மடம் வழியாக நுழைந்து மீன்சுருட்டி சந்தை வழியாகத் தார்ச்சாலையை அடைந்து, பள்ளிக்குச் செல்வோம். திரும்பும்பொழுது சில நாள் அதே குறுக்கு வழியில் வருவோம். பல பொழுது மீன்சுருட்டி - நெல்லித்தோப்பு - குறுக்குச்சாலை - கங்கைகொண்டசோழபுரம் - குருகாவலப்பர்கோயில் வழியே உள்கோட்டை வந்து சேர்வதும் உண்டு.

 பேருந்திலும், மிதிவண்டியிலும் செல்வது என் இயல்பாகிவிட்டது.சிலநாள் இரண்டும் இல்லாதபொழுது 12 கல்தொலைவும் குறுக்கே நடந்துபோனதும் உண்டு.திரும்பி வந்ததும் உண்டு.

 மழைக்காலங்கள் என்றால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும். குடையும் இல்லை. புத்தகச் சுவடிகள் நனையாமல் இருக்க ஞெகிழிப் பைகளில் உள்ளிட்டுச் செல்வதும் உண்டு. இப்பொழுது மகிழுந்துகளில் செல்லும்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு என் கடந்து வந்த பாதைகளைக் காட்டி நினைவூட்டுவது உண்டு.

 பள்ளியில் மாணவர்கள் நீலம் வெள்ளைநிறச் சீருடை அணிதல் வேண்டும். பல மாணவர்களால் சீருடை அணிய வசதி வாய்ப்பு இல்லாமல் பெரும் அல்லலுக்கு ஆளானோம்.

 எங்கள் உடற்கல்வி ஆசிரியர் பட்டாளத்து வீரர்போல் புதியதாகப் பணிக்கு வந்தார். அவர் மிகவும் கண்டிப்புக்குப் பெயர் போனவர். நல்ல விளையாட்டு வீரர். கைப்பந்து, கால்பந்துகளில் வல்லவர். அவருக்கு இணையாக மாணவர்கள் சிலர் விளையாடுவார்கள். அவ்வாறு விளையாண்ட மாணவர்கள், அருகில் உள்ள வரதராசன்பேட்டைத் தொன்போசுகோ உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்களாவர்.

 நாங்கள் அந்த அளவு விளையாட்டில் ஈடுபாடு இல்லாதவர்கள். எங்களுக்கு அதுபோல் விளையாடும் வாய்ப்புகள் அதுநாள்வரை கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் பந்துகளைக் கூச்சமின்றித் தொட்டோம். மாணவர்களிடையே நல்லொழுங்கு ஏற்பட விளையாட்டு ஆசிரியர் பாடுபட்டார். அவர் ஆர்வத்துக்கும் எங்கள் வறுமைக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் நாளும் அவர் கைகலப்பு நடத்துவார். அவரைக் கண்டால் சீருடை அணியாத மாணவர்களாகிய நாங்கள் இடி ஒலிகேட்ட நாகம்போல் நடுங்குவோம். (இந்த ஆசிரியர் பின்னாளில் ஒருநாள் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளனாகப் பணியில் இருந்தபொழுது வங்கியில் வரிசையில் நின்றிருந்ததைக் கண்டேன்.அவர் அருகில் சென்று என் நிலை கூறியும் பழையை நிகழ்வுகளைப் பெருமையாகக் குறிப்பிட்டு அவர் கடமையைப் போற்றியும் பேசி அவருக்கு விருந்தோம்பல் செய்து அனுப்பினேன்) இது நிற்க.

 மேல்நிலைப் பள்ளியில் நான் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயின்றேன். தமிழ் ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் இருந்தன.

 தமிழ்ப் பாடத்தை நடத்தியவர் சின்னவளையம் என்ற ஊரிலிருந்து வந்த புலவர் வைத்தியலிங்கம் ஐயா ஆவார். நன்கு தமிழ் பயிற்றுவிப்பார். வெள்ளுடையில் தோற்றம் தருவார். மீசையை மிகச்சிறப்பாக நறுக்கி ஒழுங்கு செய்திருப்பார். பின்னாளில் அதே பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றதாக அறிந்தேன்.

 நான் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பயின்றபொழுது, நம் வைத்தியலிங்கம் ஐயா பகுதி நேரமாக முனைவர் பட்ட ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற வந்திருந்தார். என்னை அறிந்து அதன் பிறகு என் விடுதி அறையில் தங்கிச் செல்லும் அளவு உரிமை பெற்றிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு புலவர் ஐயா அவர்களை ஒரு முறை சந்தித்தேன். தாம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில்கின்றேன் என்றார். வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்ற வேட்கையுடைவர் ஒருவர் உண்டு என்றால் நான் வைத்தியலிங்கம் ஐயாவைத்தான் சொல்வேன்.

 ஆங்கிலப் பாடத்தை நடத்துவதில் திருவாளர் வீராசாமி அவர்கள் புகழ்பெற்றவர். அவர் எவ்வளவோ எளிமைப்படுத்தியும், ஆங்கிலத்தை எங்களுக்குப் பயிற்றுவிக்க முனைந்தும், முடியாமல் தோற்றார். ஆம். ஆங்கிலப் பாடம்தான் சிறூர்ப்புற மாணவர்களாகிய எங்களுக்கு எட்டிக்காயாக இருந்தது. தேர்வில் பலரும் தோல்வியுற்றோம். எங்கள் தவறே தவிர எம் ஆசிரியர் வல்லவரேயாவார். இதுவும் நிற்க.

 எங்களுக்கு வேதியியல் பயிற்றுவித்தவர் திரு.கலியமூர்த்தி அவர்கள் ஆவார் (எஸ்.கே.எம்). வேதியியல் கூடத்தில் பல்வேறு வேதிப்பொருட்களைப் பொறுப்புடன் கையாள்வதற்கு எங்களுக்குப் பழக்கம் உண்டாக்கியவர். வேதியியல் பதிவேடுகளைப் பொறுப்புடன் பாதுகாக்கவும் கிழமைதோறும் கையொப்பம் பெறுவதையும் ஆங்கிலத்தில் அடிக்கடிப் பேசி நினைவூட்டுபவர். அவர் நடத்திய பல வேதியியல் பாடங்கள் இன்றும் நினைவில் உள்ளன. புன்சன் அடுப்பை எரியூட்டுவதிலிருந்து, பிப்பெட், பியூரெட்டைப் பயன்படுத்துவது, வேதிப்பொருள்களைக் குடுவையில் இட்டுக் கலக்குவது யாவும் அவர் வழியாக அறிந்தவைதான்.

 இயற்பியல் பாடத்தை ஈராண்டு பயிற்றுவித்தவர் திருவாளர் வெள்ளைச்சாமி ஐயா ஆவார். கடும் சினம் கொண்டவர். அவர் உருவத்தைக் கண்டால் ஆண் பெண் அஞ்சி நடுங்குவோம். அவர் முகத்தில் சிரிப்பையே கண்டதில்லை. பாடத்தைப் பொறுப்பாக நடத்துவார். சுவடிகள் உரிய நாளில் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தளபதிபோல் ஆணையிடுவார். நல்ல வேளையாக அவரின் செய்முறைத்தேர்வில் குவியாடி பற்றிய ஒரு செய்முறையைச் செய்து பிழைத்தேன்.

 திரு.வெள்ளைசாமி ஐயாவை எங்களால் மறக்க இயலாது. ஆம். என் இசையார்வத்துக்கு அவர்தான் முதல் பாராட்டு விழா நடத்தினார் (ஆம். யாருக்கும் தெரியாமல் வகுப்பறையில் ஓர் அணி அமைத்து நாடாப்பதிவுக் கருவியில் பாடல்களைப் பாடிப் பதிவு செய்ய மாணவர்கள் என்னைத் தூண்டினர். திட்டமிட்டபடி பாடலும் பதிவானது. "நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே" என்ற திரைப்பாடலை நான் இனிமையாகப் பாடினேன். மெல்லிசையாகத் தொடக்கம் இருந்தது. மாணவர்களின் ஊக்குவிப்பால் தெருக்கூத்துக் கலைஞரைப் போல் வேகமான குரலில் பாட வைத்துவிட்டது. நாடாப்பதிவுக் கருவியில் என்குரல் பதிவாகிறது என்ற ஆசையில் திரைப்படப் பாடலைப் பாடியதால் அருகில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த திருவாளர் வெள்ளைச்சாமி ஐயாவிடம் எங்கள் ஒலிப்பதிவு அணி அகப்பட்டது. தலைமைப் பாடகராகிய எனக்குப் பெருஞ்சிறப்பும் (!) பக்கத்தில் இருந்த ஒலிப்பதிவுக் கலைஞர்களுக்குச் சிறிய அளவில் பாராட்டும் (!) நடந்தது. தலைமையாசிரியர் அறையில் விவரம் அறிந்த ஆசிரியப் பெருமக்கள் ஆர்வமுடன் திரண்டு சிறிய அளவில் மீண்டும் ஒரு மண்டகப்படி நடத்தினர்).

 பின்னாளில்தான் திருவாளர் வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு உடையவர் என்பது அறிந்து மகிழ்ந்தேன். பல திராவிட இயக்க அரங்குகளில் அவரைக் கண்டுள்ளேன். அவர்மேல் மதிப்பு பன்மடங்கானது.

 எங்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தியவர் மீன்சுருட்டியைச் சேர்ந்த திருவாளர் திருநாவுக்கரசு ஆவார். அவர் மெலிந்த தோற்றம் உடையவர். மாணவர்களாகிய எங்களிடத்து மிகுந்த அன்புகாட்டுவார். செய்ம்முறைப் பயிற்சி அன்று உணவு உண்ணமாட்டாராம். தவளை அரிந்தது, கரப்பான் பூச்சி அரிந்தது, எலியைக் குளோரோபாமில் மயங்க வைத்து அரிந்தது எல்லாம் திருவாளர் திருநாவுக்கரசர் அவர்களிடம் கற்றேன். பின்னாளில் நான் திருப்பனந்தாள் கல்லூரியில் பயின்றபொழுதும் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றும் மீன்சுருட்டியில் நலமுடன் இருப்பதாக என் நண்பர்கள் சொல்வார்கள்.

 தாவரவியல் பாடம் நடத்திய ஆசிரியர் வானதிரையன்பட்டினம் சார்ந்த திருவாளர் அண்ணாமலை அவர்கள் ஆவார். பெருந்தன்மையுடன் செலவு செய்வார். வெள்ளை வேட்டியில் அவர் நடக்கும் அழகு தனித்துச் சுட்டவேண்டியது. அவர் சட்டைப் பையில் நூறு உருவா புதிய தாள்கள் படபடக்கும். வெண்சுருட்டு வாங்குவதற்கும் ஒரு புதிய தாளை எடுத்து நீட்டுவார். அந்தத் தாளில் அவரின் செல்வச் செழிப்பு சிரிக்கும்.

 எங்களுக்கு வகுப்புக்கு வரவில்லை என்றாலும் நன்கு அறிமுகமான ஒரு பெயர் இலட்சுமணன் ஆசிரியர் ஆவார்.

 மீன்சுருட்டிப் பகுதி எப்பொழுதும் சாதிய ப்பூசல்களுக்கு எளிதில் ஆட்படும் ஊராகும். குறிப்பிட்ட சமூக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதிப்பெருமை காரணமாக அடிக்கடி கைகலப்பில் இறங்குவர். உயிரிழப்புகளில் போய் முடிவதும் உண்டு. பேருந்துகளை மறிப்பது, அடித்து நொறுக்குவது அவ்வப்பொழுது நடக்கும். ஆசிரியர்களும் சூழல் அறிந்து பக்குவமாக நடந்துகொள்வார்கள். இந்தச் சூழலில் அனைத்து இன மக்களும் மதிக்கும் ஒருவராகப் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்கள் விளங்கினார்.

 மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பதால் பலர் பகல் பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டுத் திரையரங்கிற்குச் செல்வதுண்டு. அப்பொழுதுதான் மீன்சுருட்டியில் நல்லையா திரையரங்கம் வனப்புடன் கட்டப்பட்டு நல்ல நிலையில் இயங்கியது. புதிய படங்கள் காட்டப்படும். அந்தத் திரையரங்கில் மாணவர்கள் வாய்ப்பாகப் படம் பார்க்கச் செல்வார்கள். நம் ஐயா இலக்குமணன் அவர்களுக்கு நண்பர்கள் பலர் அந்தத் திரையரங்கில் இருந்தனர். அவர்களின் ஒத்துழைப்புடன் ஐயா அவர்கள் திரையரங்கில் உள்ளே இருந்துகொண்டு, திரையரங்குக்கு வரும் மாணவர்களுக்கு அதிர்ச்சி மருத்துவம் செய்வார். அவரின் கண்டிப்பை எந்தப் பெற்றோரும் பகையுடன் பார்ப்பதில்லை. அனைவரும் மதிக்கும் நல்லாசிரியராகப் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்கள் விளங்கினார்.

 பள்ளி ஆண்டு விழா என்றால் சில ஆசிரியர்கள் பாடல், நாடகம் இவற்றிற்குப் பயிற்சியளிப்பார்கள்.  திரு.அழகர் என்று ஒரு தமிழய்யா இருந்தார். அவர் நன்கு பாடுவார். பாடல்களைப் பயிற்றுவிப்பார். நான் சில போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்கள் பெற்றேன். பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் பரிசு வாங்கியமைக்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன். அல்லது எடுக்கப்பெற்ற படங்களை நான் வாங்காமல் இருந்தேனா என்றும் நினைவில் இல்லை.

 பள்ளி ஆண்டுவிழாவில் நான் சாக்ரடீசாக நடித்த ஒரு நாடகம் அரங்கேறியது.
எங்களுக்குப் பரிசு கொடுக்காத நடுவர்களை இன்றும் திட்டித் தீர்ப்பது உண்டு.
தாடிக்காக நான் புதுச்சாவடி சென்று கற்றாழை நார் வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது.

 நீதிபதி உடைக்காக ஒரு வக்கீலிடம் கறுப்பு அங்கி வாங்கி வந்தோம். அந்த வழக்கறிஞரின் எழுத்தர் எங்களுடன் வந்து கறுப்பு அங்கியைப் பாதுகாப்பாக வாங்கிச் சென்றார். சிற்றூரில் பட்டுச்சேலை இரவல் வாங்கிய பெண் நிலை எங்களுக்கு. நான் படிக்க நினைத்தது அந்தக் காலத்தில் சட்டப்படிப்புதான்.அது நிறைவேறாமல் போனது.

 அதற்கு முன்பாக நான் பட்டாளத்துக்குப் போகப் பயிற்சியில் ஈடுபட்டதும் உண்டு. ஒருமுறை திருச்சியில் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தார்கள். அதில் கலந்துகொண்டேன். நாள் முழுவதும் அரைகுறை உடையில் அமர்ந்து ஒருமுறை இராணுவக் கல்லூரியின் விளையாட்டிடத்தை ஓடிச் சுற்றி வந்தோம். ஒரு கிலோ எடை குறைவாக இருக்கின்றேன் என்று திருப்பியனுப்பி, ஒரு மாதத்தில் வருக என்றனர். அந்தக் கனவும் நடக்கவில்லை.

 மீன்சுருட்டியில் மெகராஜ் என்று உணவகம் இருந்தது. பரோட்டோ அந்தக் கடையில் சிறப்பாக இருக்கும். மாணவர்களாகிய நாங்கள் அந்தக் கடைக்குக் கையில் கொண்டுவரும் உணவுக் குவளையுடன் சென்று உண்டு, சில பரோட்டாக்களையும் கூடுதலாக வாங்கி உண்டு வருவோம். பகல் நேரத்தில் மாணவர்களின் ஆதிக்கம் மீன்சுருட்டிக் கடைத்தெருக்களில் இருக்கும். கடைக்காரர்கள் எங்களை அன்புடன் நடத்துவார்கள்.

 முதலாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகள் வழக்கம்போல் நடந்தன. இரண்டாம் ஆண்டில் எப்படியாவது தேறிவிட வேண்டும் என்று அனைத்து வழிகளையும் (!) பின்பற்றிதான் தேர்வு எழுதினோம்.

 என் குடும்பச் சூழல், நெடுந்தொலைவு நடந்தே வந்து படிக்க வேண்டிய நிலை யாவும் என்னை அழுத்தித் தேர்வில் தோல்வியடையும் நிலைக்கு என் கல்வி நிலை அமைந்துவிட்டது.

 தேர்வில் தோல்வி என்றதால் குடும்பம், உறவினர். நண்பர்கள் யாவரும் ஆறுதல்கூட சொல்லவில்லை. மாறாகத் திட்டித் தீர்த்தனர். விருத்தாசலம் நடுவத்தில் தோற்றவர்கள் எழுதினால் தேறலாம் என்றனர். விருத்தாசலத்தில் தனித்தேர்வு எழுதினேன். மீண்டும் மீண்டும் பல முயற்சிகளுக்குப் பிறகு தேறினேன். மேல்நிலைக்கல்வி எனக்குத் தடைக்கல்லாக இருந்தது. மூன்றாண்டுகள் என் படிப்புக்குத் தடைவிதித்தது. இந்த நேரம் பார்த்து என் தந்தையார் என் தலையில் குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்தார். எனக்காக ஒரு சோடி மாடு வாங்கப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்ததற்குத் தண்டனையாக வயல்வெளிகளில் உழன்றேன்.

 வயல்வெளி எனக்கு நிறையக் கற்றுத் தந்தது. கவிதை எழுதினேன். உறவுகளைப் பற்றி அறிந்தேன். இயற்கை வாழ்க்கை வாழ்ந்தேன். வயல்வெளியை என்னால் மறக்கமுடியாது. ஆடு மாடுகளுடன் ஒரு நேச வாழ்க்கை வாழ்ந்தேன். விதைப்பது தொடங்கி அறுப்பது வரை வேளாண்மையின் அனைத்துக் கூறுகளையும் கற்றேன். பலதரபட்ட மக்களிடம் பழகினேன். உழவுத் தொழிலில் பயன்படுத்தப்பட்ட ஓராயிரம் தமிழ்ச்சொற்களை அறிந்தேன். இது பின்னாளில் நான் ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் தமிழ்ப்பாடம் நடத்துவதற்குப் பயன்பட்டது.

 வயல்வெளிகளில் நடவுப் பாடல்களையும் ஒப்பாரிப் பாடல்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். தென்மொழி என்னும் இலக்கிய ஏடு வயல்வெளி உழவனாக நான் இருந்தாலும் ஒரு கல்லூரி ஆசிரியருக்குத் தெரிவதைவிட மிகுதியான தமிழைத் தந்தது. பண்ணேர் உழவனாகவும் மின்னேர் உழவனாகவும் பின்னாளில் மாறப்போவதை இந்த மண்ணேர் உழவனுக்கு இயற்கை கற்றுத் தந்தது.

 வயல்வெளிகளில் முளைத்த இந்தக் காட்டுச்செடி பின்னால் தன்னைப் பாதுகாத்த வயல்வெளியை மறக்காமல் நன்றியறிதலாக ஒரு நினைவை வரலாற்றில் பதித்தது. ஆம் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளை வயல்வெளி என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அசைபோட வழி செய்தது.

ஆம்.

 தமிழ் நூல்களை வெளியிடும் எங்கள் பதிப்பகம் வயல்வெளிப் பதிப்பகமாகவும், ஆவணப் படங்களை வெளியிடும் எம் திரைப்பட நிறுவனம் வயல்வெளித் திரைக்களமாகவும் மலர்ந்தது இப்படித்தான்.

 இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகில் வயல்வெளிப் பதிப்பகம் தனக்கென ஒரு வரலாற்றைத் தேடிக்கொண்டது. ஆவணப் படங்களை வெளியிட்டு வயல்வெளித் திரைக்களம் உலக அளவில் அனைவரின் உதடுகளையும் உச்சரிக்க வைத்தது.

வயல்வெளி இயற்பெயரன்று.

இது காரணப்பெயர் எனலாம்

திங்கள், 20 செப்டம்பர், 2010

தனித்தமிழ் காக்கும் முனைவர் பா.வளன்அரசு...


முனைவர் பா.வளன்அரசு

இருபதாண்டுகளுக்கு முன்பு(1987-92) நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது அறிமுகமான பெயர்கள் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,முனைவர் இரா.இளவரசு,முனைவர் பா.வளன்அரசு.

பாவாணர் கொள்கைகளிலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழிலும் ஈடுபட்டிருந்த எனக்கு, இவர்களின் வழியில் தனித்தமிழ்ப் பணிபுரிந்த மூன்று பேராசிரியர்களும் முன்னோடிகளாக விளங்கினர். இத்தகு கொள்கை உரஞ்சான்ற பேராசிரியர்களை இன்று காண்டல் அரிது. கல்லூரிகளுக்கு அப்பாலும் தனித்தமிழ் பரப்பிய இம்மூவருடனும் தமிழ்த்தொடர்பு கொண்டிருந்தேன். பின்னவரான முனைவர் பா.வளன் அரசு அவர்களின் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய தனித்தமிழ்க் கட்டுரைப்போட்டியில் இரண்டுமுறை கலந்துகொண்டு இரண்டு முறையும் தங்கப்பதக்கமும் அரிராம்சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றுள்ளேன்.


விழா ஒன்றில் பா.வளன்அரசு அவர்களுக்கு ஆடைபோர்த்தும் மு.இளங்கோவன்

1992 இல் பரிசு பெற முதன்முதல் நெல்லை சென்ற நாள்தொட்டுப் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் மேல் விடுதலறிய விருப்பினன் ஆனேன். இதனிடையே தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற பல கருத்தரங்குகளில் வளன் ஐயாவுடன் கலந்துகொண்டு கட்டுரை படிக்கவும், கலந்துரையடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.அவர் தம் மாணவர்களுள் ஒருவனாகவும்,அவர் குடும்பத்தில் ஒருவனாகவும் அவர் கொள்கைவழிப் பட்டவர்களுள் ஒருவனாகவும் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் என்னைப் போற்றி வருகின்றார்கள்.அண்மையில் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டார். புதிய துறையை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் நாள்முழுவதும் அவர்கள் இருந்த பாங்கு அறிந்து மகிழ்ந்தேன்.நெகிழ்ந்தேன்.

பேராசிரியர் பா.வளன்அரசு அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கிறேன்.

முனைவர் பா.வளன் அரசு அவர்கள் 15.05.1940 இல் பாளையங்கோட்டையில் பால்பூபாலராயர்-மரியம்மாள் ஆகியோரின் மைந்தனாகப் பிறந்தவர்.பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பர் கல்லூரியிலும் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுவர் பட்டம் பெற்றவர். அமெரிக்க அனைத்து நாடுகளின் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் பட்டம் பெற்றவர்.

தூய வளனார் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆகிய நிறுவனங்களில் நாற்பத்து மூன்றாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.பயிலும்பொழுதே தூய சவேரியார் கல்லூரி வீரமாமுனிவர் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், அழகப்பர் கல்லூரியின் மாணவர் தலைவராகவும் விளங்கியவர்.மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் பாராட்டுதலைப் பெற்ற வண்டமிழ்த்தொண்டர் இவர்.

பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் தனித்தமிழ் இலக்கியக்கழகம்,மாநிலத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்க்கழகம், குறளாயம், உலகத் திருக்குறள் மையம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம், குறள் அரசுக்கழகம், திருவருட்பேரவை, கம்பன் கழகம் என்னும் பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.

பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் திருநெல்வேலித் திருமண்டில ஆசிரியர் வீட்டமைப்புச்சங்கம் வாயிலாக மீட்பர் நகர் உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.மாவட்ட ஆட்சியர் கி.தனவேல் இ.ஆ.ப. அவர்களிடம் 55 செண்டு நிலம் பெற்றுத் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் நிறுவியவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாகிடத் தேவையான அடிப்படைப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் என்று இவரைக் குறிப்பிடலாம்.

தனித்தமிழ் இலக்கியக்கழகம் வாயிலாக இருநூற்று ஐம்பது புலவர் பெருமக்களையும் ஐம்பது ஆய்வறிஞர்களையும் ஆயிரக்கணக்கான மாணவப் பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.

மாநிலத் தமிழ்ச்சங்கம் வாயிலாக முத்தமிழ் விழா, ஐந்தமிழ் விழா, எழுதமிழ் விழா, பன்முகத் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளார். மாதந்தோறும் மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் இருபது சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நிகழச்செய்கின்றார்.

உலகத் திருக்குறள் மையம் வாயிலாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மணிகளைத் திருக்குறள் பயில வைத்தும் எழுபத்திரண்டு அறிஞர் பெருமக்களைப் பாராட்டியும் சான்றிதழ் வழங்கிய பெருமைக்கு உரியவர்.

உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் மதுரை மாநகரில் திருக்குறள் ஆய்வரங்கம் ஏற்பாடு செய்து திருக்குறள் நூல்கள் பல தந்துள்ளார்.

கதிரவன் பதிப்பகம் வாயிலாக நூல்கள் பல தந்துள்ளார்.பேராசிரியர் வி.மரிய அந்தோனி எழுதிய விவிலிய வாழ்வியல் காப்பியமான அருளவதாரம் வெளிவரவும் ஒளிதரவும் உறுதுணைபுரிந்துள்ளார்.

குறள் அரசுக் கழகம் உருவாக்கித் தமிழகத்தின் முப்பத்திரண்டு மாவட்டங்களிலும் பொறுப்பாளரை உருவாக்கித் திருக்குறளை வாழ்வியல் ஆக்கிட ஊக்கத்துடன் அயராது செய்லபட்டு வருகின்றார்.


கட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், தேம்பாவணித்திறன், தமிழ்நெஞ்சங்கள், தமிழகப் புலவர் குழு அணியும் பணியும்,வண்டமிழ்த்தொண்டர் பெருமக்கள்,விவிலியக் கருத்தரங்கம், திருக்குறள் விளக்கவுரை ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். அந்தமான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,இசுரேல்,உரோமாபுரி ஆகிய பல இடங்களுக்கும் பறந்து சென்று பைந்தமிழ்ப்பணிபுரிந்துள்ளார்.

அருண்மொழிச்செல்வர் முதலான முப்பத்தாறு விருதுகள் பெற்றவர். பா.வளன்அரசு அவர்கள் பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் சிந்தனையாலும் தமிழ் வளர்ச்சிக்காகவும் எழுச்சிக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர்.மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளராகவும், தமிழகப் புலவர் குழுவின் துணைத்தலைவராகவும், குறள் அரசுக்கழகத்தின் தலைவராகவும் திகழ்கின்றார்.

ஆற்றொழுக்காகத் தனித்தமிழ் பேசுவதைக் கேட்க வேண்டுமா?அருவிபோல வரும் அருந்தமிழ் இன்பம் பெற வேண்டுமா?
பேராசிரியரை அழைக்கலாம்.

தொடர்புக்கு:
முனைவர் பா.வளன்அரசு அவர்கள்,
பதுவை இல்லம்,
3,நெல்லை நயினார் தெரு,
பாளையங்கோட்டை-627002
திருநெல்வேலி மாவட்டம்,தமிழ்நாடு

செல்பேசி : + 91 9442573900

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நிதி உதவி வழங்கிய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நன்றி…


பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909-03.01.1972)


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப் பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்ற செய்தியைத் தமிழ் உலகின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன். இந்தச் செய்தி தினமணி நாளேட்டில் வெளிவந்ததும் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்துக்குச் சென்றது.

இதனிடையே பெருமழைப்புலவருக்கு அவ்வூர் மக்களின் ஒத்துழைப்புடன் தமிழறிஞர்கள் கலந்துகொண்ட நூற்றாண்டு விழாவும் நடந்தது(05.09.2010). அந்த நூற்றாண்டு விழாவிலும் புலவர் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டோம்.

இச்செய்திகள், வேண்டுகோள்களை ஏற்று இன்று(17.09.2010) தந்தை பெரியார் பிறந்த நாளில் பெருமழைப் புலவர் குடும்பத்தின் வறுமையைப் போக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பத்து இலட்சம் உருவா கொடையாக வழங்கியுள்ளார். தமிழாய்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எங்கள் பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பெருமழைப் புலவரின் பிறந்த ஊரில் ஒரு மணி மண்டபம் அமைத்து, அதனை முத்தமிழறிஞர் அவர்களின் பொற்கையால் திறந்து நாட்டுக்கு ஒப்படைக்கவும் பணிந்து வேண்டுகிறோம். அதுபோல் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குப் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் அவர்களின் பெயரைச்சூட்டி அவரின் தமிழ்ப்பணியை என்றும் நினைவுகூரப் பல்கலைக் கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் அவர்களையும் ஆட்சிக் குழுவினரையும் வேண்டுகிறோம்.

நன்றி:தினமணி, நக்கீரன், குமுதம், மேலைப் பெருமழை ஊராட்சி மன்றம் (22.09.2010)

புதன், 15 செப்டம்பர், 2010

சேவியர் கல்லூரிப் பயிலரங்கம் இனிது நிறைவுற்றது...


பேராசிரியர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்கும் மு.இளங்கோவன்


பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(15.09.2010) காலை பத்து மணிக்குத் தொடங்கியது. இடம்.கௌசானல் அரங்கம்

தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் கலந்துகொண்டு உரையாற்றினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.துறைப்பேராசிரியர்களும்,முனைவர் பட்ட ஆய்வாளர் ஆனந்தன் அவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள்,ஆங்கிலப் பேராசிரியர்கள் முப்பதுபேரும்,ஆய்வாளர்கள்,மாணவர்கள் முப்பதுபேரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணைய வரலாறு,தமிழ்த்தட்டச்சு,புகழ்பெற்ற தளங்கள்,வலைப்பூ உருவாக்கம்,மின்னஞ்சல் வசதி,புகழ்பெற்ற இணைய நூலகங்கள், விக்கிப்பீடியா பற்றி அறிமுகப்படுத்தினார்.


தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை விளக்கும் மு.இளங்கோவன்

மாலை 4 மணிக்குப் பயிலரங்கு இனிது நிறைவுற்றது.

பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கு தொடங்க உள்ளது...

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(15.09.2010) காலை பத்து மணிக்குத் தொடங்க உள்ளது. இடம்.கௌசானல் அரங்கம்

தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.

நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவடத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகின்றார்.


தொடர்புக்கு - 9443851775

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

தமிழிசைக் காவலர் பால்பாண்டியனார்(அமெரிக்கா)


திரு.பால்பாண்டியனார்

1995 அளவில் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது அருகிலிருந்த அறையில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் தமிழிசைக் கலைக்களஞ்சியப்பணியில் மூழ்கியிருப்பார்கள். ஐயாவைத் தொடர்ச்சியாகச் சில மாதங்கள் பார்க்க முடியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. ஐயா அவர்கள் அமெரிக்காவுக்கு இசை குறித்துச் சொற்பொழிவாற்ற சென்று வந்துள்ளார்கள் என்று அறிந்தோம்.

அப்பொழுதெல்லாம் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான தொடர்பில்லை. பார்க்கும்பொழுது வணக்கம் சொல்வதும் தேவைப்படும்பொழுது பேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தை இரவல் கேட்பதும் என்ற அளவில் ஐயாவுக்கும் எனக்கும் உறவு இருந்தது.

பின்னாளில் (1998) ஐயாவின் உதவியாளனாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழிசைக் கலைக்களஞ்சியப் பிரிவில் சற்றொப்ப ஓராண்டு பணிபுரிந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவையும் யான் அறியும் வாய்ப்பு அமைந்தது.அப்பொழுது தமிழிசை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் பலரைப் பற்றி ஐயா நினைவுகூர்வார்கள். அந்த வகையில் அவரின் அமெரிக்கச் செலவு பற்றி பேச்சு வந்தால் அடிக்கடி குறிப்பிடும் பெயர் பால்பாண்டியன் என்பதாகும்.

தம்மை இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கவைத்து அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பேச வாய்ப்பு உருவாக்கியவர் திரு.பால்பாண்டியன் ஐயா என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். அந்த வகையில் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் ஐயா கேட்டறிந்த இசை பற்றியும், பார்த்தறிந்த இசைக்கருவி பற்றியும் எனக்குக் குறிப்பிடுவார்கள். எனக்கு இசையில் ஆர்வம் இருந்தாலும் நிலைத்த பணி கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்துகொண்டு, ஐயாவின் அருவி போன்ற இசையறிவை ஒரு கோப்பையளவில் மட்டும் பருகி வந்தேன்.

சில மேல்நாட்டு இசைக்கருவிகளை ஐயா அவர்கள் விலைக்கு வாங்கி வந்தார்கள். அவற்றை நம் கருவி இசையுடன் இசைத்துப்பொருத்தி இசையமைதியின் பொருத்தத்தைக் காட்டுவார்கள். விசைப்பலகை(கீபோர்டு) இல்லாமலே எனக்குச் ச ரி க ம ப த நி ச என்பவற்றைக் கைவிரல்களை மட்டும் பயன்படுத்திப் பழக்கிய திறம் நினைத்து இன்றும் வியக்கிறேன்.

ஐயா அவர்கள் அவர் நினைவாக ஓர் அழகிய புல்லாங்குழல் எனக்குப் பரிசாகத் தந்தார்கள். அதனை என் வீட்டில் கொணர்ந்து வைத்திருந்தேன். இசையறிவற்ற என் தாயார் அந்தப் புல்லாங்குழலின் அருமை உணராமல் நான் வெளியூரில் தங்கியிருந்தபொழுது அந்தப் புல்லங்குழலை விறகு அடுப்பு மூட்டி எரியூட்டும்பொழுது, அடுப்பு ஊதப் பயன்படுத்திய அறியாமையை நினைக்கும் பொழுது இன்றும் நான் வருந்துவதுண்டு. இவ்வாறு இசைமேதையின் நினைவுகள் அடிக்கடி என் உள்ளத்தில் எழுவது உண்டு.

வீ.ப.கா.சுந்தரம் பற்றி நினைக்கும்பொழுது அமெரிக்காவில் வாழும் திரு.பால்பாண்டியனார் பற்றிய நினைவு அடிக்கடி வரும். அமெரிக்க நாட்டில் வாழும் நண்பர்களான முனைவர் நா.கணேசன், மருத்துவர் சோம.இளங்கோவன், முனைவர் சங்கரபாண்டியனார்,திரு.சௌந்தர், கரு. மலர்ச்செல்வன், குழந்தைவேல் இராமசாமி உள்ளிட்டவர்கள் வழியாகத் திரு. பால்பாண்டியனார் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.

அண்மையில் இசைமேதையின் வீடு,கல்லறை பற்றிய ஒரு பதிவை என் பக்கத்தில் இட்டபொழுது என் அருமை நண்பர் திரு.இராசசேகர் அவர்கள் திரு.பால் பாண்டியனார்க்கும் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்குமான நட்பு மேம்பாட்டினை எடுத்துரைத்தார். அத்துடன் திரு.பால்பாண்டியனார் அமெரிக்காவில் தங்கியிருந்தாலும் தொழில் நிமித்தம் அடிக்கடி தமிழகம் வந்துபோவார் என்ற விவரத்தைக் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் இசையாய்வாளர் திரு.மம்மது அவர்கள் திரு.பால்பாண்டியனாரின் பொருளுதவியுடன் ஓர் இசையகராதி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்படியென்றால் அடங்காத இசையார்வம்கொண்ட திரு.பால்பாண்டியனாரை நான் பார்த்தேயாதல் வேண்டும் என்ற என் பெரு விருப்பினைத் தெரிவித்தேன். இந்த அடிப்படையில் திரு.பால்பாண்டியனாருடன் நேற்று(11.09.2010) சென்னையில் சிறு சந்திப்பு ஒன்று நடந்தது.


இராசசேகர்,பால்பாண்டியன்,மு.இளங்கோவன்

நானும் நண்பர் இராசசேகர் அவர்களும் திரு.பால்பாண்டியனார் இல்லத்துக்குச் சென்றோம். பால்பாண்டியனார் மிகவும் எளிமையான தோற்றத்தில் எங்களை அன்பொழுக வரவேற்றார். என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர் இராசசேகர். என் நாட்டுப்புறவியல், வாய்மொழிப்பாடல்கள் உள்ளிட்ட சில நூல்களை வழங்கினேன். எனக்கும், இசைமேதைக்கும் இடையில் அமைந்த உறவு பற்றி விரிவாகப் பேசினோம். ஐயாவுடன் நான் பணிபுரிந்த தமிழிசைக் கலைக்களஞ்சிய உருவாக்கப் பணிகள் பற்றி உரையாடலில் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். திரு.பால்பாண்டியனார் பற்றிய விவரங்களையும் தமிழ்ப் பணிகளையும் விரிவாக அறியும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆனால் தம்மைப் பற்றிய செய்திகளைவிடத் தமிழுக்கும்,தமிழிசைக்குமான தொடர்பை மட்டும் ஐயா அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

திரு.பால்பாண்டியன் ஐயாவுடன் உரையாடியதிலிருந்து…

திருநெல்வேலி - பாளையங்கோட்டை சான் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தவர். பொறியியல் துறையில் பட்டம்பெற்ற பால்பாண்டியன் ஐயா அவர்களுக்கு இயல்பிலேயே தமிழ்ப்பற்றும் இசையார்வமும் இருந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றபொழுது தமிழ்ப்பற்று நிறைந்த பழ.நெடுமாறன், எசு.டி.சோமசுந்தரம், பண்ருட்டி இராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் உணர்வுடன் செயல்பட்டமை பால்பாண்டியனார் போன்றவர்களுக்குத் தமிழ் ஆர்வம் தழைக்க வாய்ப்பானது.

1968 இல் முதன்முதல் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் சென்றார். பிறகு அங்குப் பணியில் அமர்ந்தார். பல்வேறு தொழில்களை வெற்றியுடன் தொடங்கி நடத்தினார். இன்றும் அவர் நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வளர்ந்து நிற்கின்றன.

அமெரிக்காவில் வாழ்ந்த - வாழும் தமிழ் அன்பர்களுடன் இணைந்து அமெரிக்காவில் தமிழ்ச்சங்கம் கண்டமை, பல மாநிலங்களில் இருந்த தமிழ்ச்சங்கங்களை இணைத்துப் பெட்னா என்ற பேரமைப்பை உருவாக்கியமை, மேலும் தமிழ் அறிஞர்களை அழைத்து உரையாற்றும் வாய்ப்பு உருவாக்கியமை, தமிழுக்கு ஆக்கமான அடிப்படை வேலைகளுக்குக் கால்கோள் செய்யும் முகமாகத் தமிழிசைப் பேரகராதி உள்ளிட்ட நூல்களை வெளியிட முன் வந்தமை யாவும் அறிந்து வியந்துபோனேன்.


தமிழிசைப் பேரகராதி

அமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பற்றாளர்கள் யாவரும் அறிந்த ஒருவராக நம் பால்பாண்டியனார் விளங்குவதை அமெரிக்க நண்பர்களுடன் நான் உரையாடும்பொழுது அறிந்துள்ளேன்.

உ.வே.சா பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநர் செகநாதன், இயக்குநர் பாரதிராசா, கவிப்பேரரசு வைரமுத்து, மேலாண்மை பொண்ணுசாமி உள்ளிட்டவர்களின் கலைப்பணிகளைப் பெட்னா அமைப்பின் வழியாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பெருமையும் பால்பாண்டியனார்க்கு உண்டு.

திரு. பழனியப்பன் அவர்கள் வீ.ப.கா.சுந்தரம் பற்றி அறிமுகம் செய்த உடன் வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்டவர்களை அழைத்து ஆதரித்தமையும் இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.

பால்பாண்டியனாரின் உள்ளத்தில் தமிழ் அறிஞர்களுக்கு அங்கீகாரம் தருவது நோக்கமாகவும் அடிப்படைத் தமிழாய்வுக்குத் தமிழில் நிறைய பணிகள் செய்ய வேண்டும் என்பது விருப்பமாகவும் உள்ளது.

அமெரிக்கத் தமிழறிஞர் சார்ச் கார்ட்டு அவர்களின் தமிழ்ப்பற்றையும் சமற்கிருத புலமையையும் பால்பாண்டியனார் வியந்தார்.

கம்பராமாயணத்தில் அறிஞர் கார்ட்டு அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு என்பதுபோல் சங்க இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு என்று வியக்கின்றார்.

உலக அளவில் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பால்பாண்டியன் அவர்கள் சென்னை- சங்கமம் முயற்சி வரவேற்கத் தகுந்தது எனவும் இந்தச் சங்கமம் முயற்சியால் சிற்றூர்ப் புறங்களில் நலிந்துகொண்டிருந்த நாட்டுப்புறக்கலையும் கலைஞர்களும் ஆதரிக்கப்பட்டனர் எனவும் இந்த வகையில் கவிஞர் கனிமொழிக்குத் தமிழ்க் கலைஞர்(!)கள் நன்றிக்கடன்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். செம்மொழி மாநாடு நல்ல முயற்சி எனவும் குறிப்பிட்டு,உலகத் தமிழறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் உலக அளவில் இணைத்த பெருமை இந்த மாநாட்டுக்கு உண்டு என்றார்.

பாடல், மெல்லிசை, நாட்டியம், உரையரங்கம் எனப் பல கூறுடன் நடக்கும் பெட்னா விழா ஆண்டுதோறும் தமிழுணர்வைப் புதுப்பித்துக்கொள்ளும் விழாவாக நடக்கிறது என்றார்.

வீ.ப.கா.சு.மேல் ஈடுபாடு கொண்டதன் காரணமாக அவரின் தமிழிசைக் கலைக்களஞ்சிய வழியில் தமிழிசைப் பேரகராதி உருவாக்கிட உதவினார். தொடர்ந்து பண்ணாராய்ச்சியைப் போற்றும் முகமாகப் பண் குறித்து ஆய்வு மேற்கொள்ள மதுரை தியாகராசர் கல்லூரியின் புரவலர் திரு.கருமுத்து கண்ணன் அவர்களின் முயற்சியுடன் மேலும் இசையாய்வு மையம் தொடங்கியுள்ளார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இசை ஆய்வாளர் மம்மது ஆகியோர் இந்த முயற்சிக்கு உதவி வருகின்றனர்.


சதிராட்டம் பரதமானது எப்பொழுது? என்பதுபோல் பண் எப்பொழுது இராகமாக மலர்ந்தது என்று அறிய வேண்டும் என்று இந்த பண்ணாய்வு மன்றம் ஆய்வுப்பணியை மேற்கொள்கின்றது.

தென்னாசிய ஆய்வு மற்றும் தகவல்கள் நிறுவனம் (South Asia Research and Information Institute (SARII) என்ற அமைப்பைப் பால்பாண்டியன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிப் பல ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில்,

பக்தி இயக்கமும் சமூகமும் (2006)
சதிராட்டம் / பரதநாட்டியம்(2007)
இந்தியாவில் சமண சமயம்(2008)
இலங்கைத் தமிழர்கள்-எதிர்கால அரசியல்(2009) என்ற பொருண்மைகளில் ஆய்வரங்குகள் அமெரிக்காவில் நடந்துள்ளன.

இந்த ஆண்டு தமிழிசை வரலாறு குறித்த ஆய்வரங்கு நடைபெறுகிறது என்று பால்பாண்டியன் குறிப்பிட்டார். திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி முதல்வர் முனைவர் மார்க்கெரட் பாசுடின் அவர்கள் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொழிலதிபர் ஒருவரைக் கண்ட நினைவில்லாமல் தமிழிசை ஆர்வலர் ஒருவருடன் உரையாடி மகிழ்ந்த மன நிறைவு பெற்றேன்.


பால்பாண்டியன்,மு.இளங்கோவன்

அதனால்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பால்பாண்டியனார் பற்றி,

இறுகிப் போன தமிழ் அறிஞர்களின்
மனதைக்கூட
இவர்
அன்புத் தமிழ் என்னும்
மந்திரக்கோல் கொண்டு
திறக்கும் வல்லமை கொண்டவர்.

எனவும்

தமிழுக்கும் தமிழ்ச்சமுதாயத்திற்கும்
ஏன்
அடுத்த தலைமுறைக்கும்
தமிழைக் கொண்டு சேர்ப்பதால்
இவரை
முப்பால் பாண்டியன்
என்று அழைப்பேன்
என்றும் போற்றிப் புகழ்ந்து பாராட்டியுள்ளார் போலும்!

வாழ்க பால்பாண்டியனார்! வளர்க அவர்தம் தமிழிசைப்பணி!

சனி, 11 செப்டம்பர், 2010

திருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவர் பெயர் சூட்ட கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, செப். 10: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராகத் திகழ்ந்து, ஆசிரியர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.

சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு உள்ளிட்ட எண்ணற்ற நூல்களுக்கு உரை எழுதினார். மேலும், மானனீகை, செங்கோல் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். 1952-ல் ஏற்பட்ட புயல், 1966-ல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி குறித்தும் அவர் எழுதிய கவிதைகள், அறிஞர்கள் மட்டுமன்றி பாமர மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தன.

அவரது நூற்றாண்டு விழா அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலப் பெருமழையில், ஆர்.எஸ்.ரங்கசாமித் தேவர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு மேல பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம், தஞ்சை சி.சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெருமழைப் புலவரின் திருவுருவப் படத்தை முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் மா.கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.

விழாவில் முனைவர் இளமுருகன் பேசியதாவது:

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் நெஞ்சில் பெருமழைப் புலவரின் உரைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ், துபாய் தமிழ் சங்கங்களின் சார்பில் பல்வேறு நாடுகளிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. விரைவில் புதுச்சேரியிலும், சென்னை மற்றும் தில்லியிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன் பேசியதாவது:

புலவரின் சொந்த ஊரான மேலப் பெருமழையில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது நூல்களை அரசு உடைமையாக்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழத் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் புலவரின் மகன்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெüரவிக்கப்பட்டனர்.

First Published : 11 Sep 2010 12:00:00 AM IST

நன்றி: தினமணி 11.09.2010

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஒரு சமூகத்தின் ஆவணம் க்ஷத்ரியன் இதழ் – தொகுப்பு


க்ஷத்ரியன் இதழ்த்தொகுப்பு முகப்பு

அவ்வப்பொழுது புதுச்சேரியில் என் இல்லத்துக்கு நண்பர்கள் வந்து மகிழ்ச்சியூட்டுவது உண்டு.புதுச்சேரி நண்பர்களும் வருவார்கள்.தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ,பிற நாடுகளிலிருந்தும் வருவது உண்டு.அவ்வாறு வரும் நண்பர்கள் பழைமை போற்றுபவர்களாக இருப்பார்கள்.சிலர் இணையம் வழி அறிமுகம் ஆகியும் நேரில் இப்பொழுதுதான் பார்க்கிறோம் என்ற நிலையில் இருப்பார்கள்.அவ்வகையில் பல ஆண்டுகளுக்கு முன் பழகிய நண்பர்கள் சிலர் வருவதாகவும் என்னைவீட்டில் இருக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். நானும் அவர்களின் வருகைக்காகக் காத்து இருந்தேன்.

நான் குறிப்பிட்ட முகவரியை விட்டு, அவர்கள் புதுச்சேரியின் பல பகுதிகளையும் அலைந்து திரிந்து எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் இருந்து மீண்டும் அழைத்தார்கள்.அதியமான் போர்க்களக் கருவிபோல் புதுச்சேரி சிதைந்து கிடக்கிறது.புதுச்சேரியில் சாலைகளில் பள்ளம் பறிப்பதும், அதை மூடுவதும்,தோண்டுவதும்,வெட்டுவதும் அதைத் தூர்ப்பதுமாக கிடந்த காட்சி கண்டு வந்த நண்பர்கள் சோர்ந்து காணப்பட்டனர்.அவர்களின் மகிழ்வுந்து எங்கள் வீட்டில் நண்பர்களை இறக்கிவிட்டுக் களைத்து நின்றது.

வந்த நண்பர்களுள் ஒருவர் திரு.சாமிக் கச்சிராயர்.கடலூர் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு நடத்திப் பல்வேறு கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருபவர். கடலூர் அடுத்த ஒரு ஊரை அரசு கையகப்படுத்த முயன்றபொழுது ஊர் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மக்களையும் ஊரையும் காத்தவர்.


சாமிக்கச்சிராயர்

இன்னொரு நண்பர் குறும்பட இயக்குநர் தமிழாகரன்.இவர் இயக்கிய உறவு என்ற குறும்படம் மாந்த உறவுகளை நேசிக்கச்செய்யும் அரிய படம்.மிகச்சிறந்த பின்னணியில் இசையும் காட்சியும் போட்டியிட்டுக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்ற படம்.பலமுனைகளில் இந்தப் படத்தில் தமிழாகரன் பங்களிப்பு செய்துள்ளார்.இயக்குநர் பாலா போல பின்னாளில் பேசப்படுவார்.


இயக்குநர் தமிழாகரன்

இன்னொரு நண்பர் திரு.அண்ணல் அவர்கள்.புகழ்பெற்ற ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் செய்திப்பிரிவில் ஏழாண்டுகள் பணிபுரிந்த பட்டறிவு உடையவர்.இவர் மாமனார் எங்கள் பகுதியான புங்கனேரிக்கார்.அவர்களும் வந்திருந்தார்கள்.எங்கள் பிள்ளைகளை அமைதியாக இருக்கும்படி அனைவரும் வேண்டிக்கொண்டோம்.அப்பொழுதும் அவர்கள் அடிக்கடி கரிக்கோல் கேட்பதும் அழிப்பான் கேட்பதும் என்று அழுது புரண்டு அடம்பிடித்தனர்.அதன் இடையே நண்பர் அண்ணலும்,கச்சிராயரும் வந்த நோக்கத்தைக் குறிப்பிட்டார்கள்.


ஆறு.அண்ணல்

அண்ணல் கையில் ஒரு புத்தகத் தொகுப்பைக் கையுடன் கொண்டு வந்து அடுக்கியிருந்தார்.இது என்ன நூல்கள் என்றேன்.

க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு என்றனர்.இதுவரை கேள்விப்படாத பெயராக உள்ளதே என்றேன்.பெரும்பாலும் ஊடகத்துறையில் இருப்பவர்கள்,புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர்கள் சிலர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலும் குறிப்பிட்ட இதழ்கள் சிலவற்றின் பெயரை மட்டும் ஒப்புவிப்பார்கள்.மற்ற இதழ்களின் பெயர்களை ஒலிக்கக்கூட மனம் விரும்ப மாட்டார்கள்.

பொன்னி என்ற திராவிட இயக்க ஏடு பற்றி ஒரு சொல் சொல்ல மாட்டார்கள்.பாவேந்தரின் குயில் பற்றி மூச்சுவிடமாட்டார்கள்.அந்த வகையில் தமிழகத்துக்கு அறிமுகம் ஆகாமல் போன க்ஷத்ரியன் இதழ் பற்றிய சிறு அறிமுகத்தை நண்பர் அண்ணல் அவர்கள் சொன்னார்கள்.எனக்கு மிகப்பெரிய வியப்பு.

நான் திராவிட இயக்க ஏடான பொன்னி என்னும் ஏட்டைப் பல ஆண்டுகள் தேடிப் பின்னர் பெற்றேன்.அதனை முழுமையாகப் பல தொகுப்புகளாக வெளியிட நினைத்தேன்.பொன்னி ஆசிரிய உரைகள் வந்தது.பொன்னி பாரதிதாசன் பரம்பரை வந்தது.

பொன்னியில் வெளிவந்த சிறுகதைகள் தொகுக்கப்பெற்று வெளியிடும் நிலையில் உள்ளது.அதில் பொன்னி வெளியான காலத்தில் அறிமுக எழுத்தாளராக இருந்து பின்னாளில் பாட்டுத்துறையில் புகழ்பெற்ற ஒருவரின் சிறுகதையும்,பிறகு அகில உலகும் போற்றும் சிறுகதை எழுத்தாளர் ஒருவரின் சிறுகதையும் இருந்தது. அந்த எழுத்தாளர்களின் வாரிசுகளை நெருங்கி வெளியிடும் என் முயற்சிக்கு அனுமதி வேண்டினேன். அவர்கள் அனுமதி மறுக்கவே அந்த எழுத்தாளர்களின் சிறுகதையைத் தமிழ் உலகம் பார்க்கமுடியாமல் உள்ளது.

வேறு யாரிடம் இருந்தாலும் இருக்கட்டும். குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பதைத்த தாயின் உள்ளம் இந்த எழுத்தாள வாரிசுகளுக்கு இல்லாமல் போனதால் பெற்றோரின் படைப்பே வெளிவராமல் பார்த்துக்கொண்டார்கள். பத்தாண்டுகளாக அந்தப் பொன்னிக் கதைத்தொகுப்பு வெளிவராமல் உள்ளது.என் நண்பர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிக்கலான அந்தக் கதைகளை மட்டும் நீக்கிவிட்டு உரிமைச்சிக்கல் இல்லாத கதைகளை வெளியிடுவோம் என்று உள்ளேன்.இந்த நிலையில்தான் நண்பர் அண்ணல் அவர்களின் க்ஷத்ரியன் இதழ்தொகுப்பு முயற்சி எனக்கு மகிழ்ச்சி தந்தது.

க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு 17 தொகுப்புகளாக வெளிவந்துள்ளது.இது 1923-1951 காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களின் தொகுப்பாகும்.
ஆய்வுரை எழுதியும், மேற்பார்வை செய்தும் மிகச் சிறந்தமுறையில் இதழ் தொகுப்பு வெளிவர உதவியர் கவிஞர் காவிரிநாடன் ஆவார்.

க்ஷத்ரியன் இதழின் ஆசிரியர் சேலம் கவிச்சிங்கம் இராஜரிஷி சு.அர்த்தநாரீச வர்மா ஆவார்(27.07.1874- 07.12.1964).இவர் பெற்றோர் சேலம் சுகவனபுரி-சுகவன நாயகர்-இலக்குமி அம்மையார்ஆவர். திருப்பூந்துருத்தி, இந்திரபீடம், சிவயோகி கரபாத்திர சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்றவர். சமற்கிருதம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்,மலையாளம்,கர்நாடக இசை,சோதிடம்,தமிழ் சித்த மருத்துவம் அறிந்தவர்.

அர்த்தநாரீச வர்மா அவர்கள் சைவசமயத்தொண்டுகள் புரிந்துள்ளார். மதுவிலக்குப் போராட்டங்களில் ஈடுபட்டவர். மடங்களில் ஆதீனப்புலவராகப் பணியாற்றியவர். தாம் பிறந்த குலத்துக்குக் குலப்பணியாற்றியவர். இலக்கியத்தொண்டுகள் செய்துள்ளார்.பல இதழ்களை வாழ்நாள் முழுவதும் நடத்தியும் நூல்கள் எழுதியும் இலகியத் தொண்டாற்றியுள்ளார்.

இவர் வடார்க்காடு மாவட்டம் கேளூரில் ஆர் நாராயணனா நாயகர் வீட்டில் நோய் வாய்ப்பட்டார். திருவண்ணாமலை முத்து ஆறுமுகம் என்பார் மண்டியில் 07.12.1964 இல் மறைவுற்றார்.திருவண்ணாமல் ஈசானி மடத்தருகே இவரின் கல்லறை உள்ளது.

க்ஷத்ரியன் இதழைப் பாதுகாத்து வழங்கியவர் திரு.பொன்.இராமச்சந்திரன் ஆவார்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசி வட்டம் குண்ணகம்பூண்டியில் வாழ்ந்த பொன்னுச்சாமிக் கண்டர் –உண்ணாமலை அம்மாள் ஆகியோரின் மகனாவார்.

க்ஷத்ரியன் இதழின் 17 தொகுளிலும் உள்ள செய்திகள் விவரம் வருமாறு:

க்ஷத்ரியன் இதழில் இட்பெற்ற செய்திகள் பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியாகத் தரப்பட்டுள்ளன.முதல் தொகுதியில் கவிஞர் காவிரிநாடனின் ஆய்வுரையும் பதிப்பாசிரியர் அண்ணல் அவர்களின் முன்னுரையும் உள்ளன.இதுவரை கிடைத்துள்ள இதழ்கள் பற்றிய புள்ளி விவரம் யாவும் முதல்தொகுதியில் உள்ளன.முதல் இதழ் அமைப்பு, முக்கிய படங்கள் மின்வருடி இணைக்கப்பெற்றுள்ளன.

தொகுதி 1

அர்த்தநாரீச வர்மா காந்தியின் பக்தர். தேசியவாதி.தன் சமூக வளர்ச்சிக்குரிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.அக்காலத்தில் வெளிவந்த நூல்கள்,இதழ்கள் பற்றிய குறிப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.மதிப்புரைகள் உள்ளன.பாடல்கள் பல உள்ளன.விளம்பரங்கள் உள்ளன.

தொகுதி 2

அமுதமொழிகள்,கீதை உபதேசம் பற்றிய செய்திகள் உள்ளன.புறநானூற்றுப் புலவர்களின் பாடல்களை உரை ஓவியமாக்கித் தந்துள்ளார்.மனிதனின் நோயற்ற வாழ்வுக்கு உரிய ஒழுக்க வழிகளைக் குறிப்பிட்டுள்ளார்.வாழ்வியல் சிந்தனைகளை இடம்பெறச்செய்துள்ளார்.

தொகுதி 3

வர்மாவின் பாடல்கள் இந்தத்தொகுதியில் உள்ளன.

தொகுதி 4

44 பொருள்களில் செய்திகள் இந்தத் தொகுதியில் உள்ளன.

தொகுதி 5

சோழர் வரலாறு,பல்லவர் வரலாறு,பாண்டியர் வரலாறு,மழவர் வரலாறு,பேராலயங்களின் வரலாறு உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் தொகுதி.

தொகுதி 6 வன்னியர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.96 தலைப்புகளில் சமுதாயச்செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தொகுதி 7
138 தலைப்புகளில் வன்னியர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.மூலதனம் நூலை மொழிபெயர்த்த தியாகி ஜமதக்கினி பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது.

தொகுதி 8

சாதிகள் பற்றிய செய்திகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

தொகுதி 9

இந்தப் பகுதி படிப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் சாதி மோதல்கள் பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.

தொகுதி 10.
கதர் பற்றிய பல தகவல்களைத் தாங்கியுள்ளது.

தொகுதி 11
400 மேற்பட்ட அரசியல் செய்திகள் உள்ளன.

தொகுதி12.
பழமொழிகள்,சிறுகதைகள், மருத்துவக்குறிப்புகள்,கூட்டுறவு,ராய்,சித்தரஞ்சன்தாசு,சேலம் வரதராச நாயுடு பற்றிய கட்டுரைகள் உள்ளன.

தொகுதி 13.
சுதேசமித்திரன்,ஸ்வராஜ்யம்,இந்தியா,தமிழ்நாடு,நவ இந்தியாவில் வெளிவந்த கட்டுரைகளின் மறுபதிப்புகள் உள்ளன.

தொகுதி 14.
இந்திய அரசியல்,காங்கிரசு கட்சி பற்றிய செய்திகள் உள்ளன.

தொகுதி 15

1931 ஆம் ஆண்டு சூலை முதல் செப்டம்பர் முடிய உள்ள காலத்தில் நடந்த அரசியல்,காங்கிரசு,வெள்ளைக்கார அரச நடவடிக்கைகளைக் கூறுகின்றது.

தொகுதி 16

அரசியல் சார்புடைய பெட்டிச்செய்திகள்,பத்தி நீண்ட செய்திகள்,பக்க கட்டுரைகளும் உள்ளன.

தொகுதி 17
பின்னாளில் வர்மா வெளியிட்ட க்ஷத்ரியன்,தமிழ்மன்னன்,க்ஷத்ரிய சிகாமணி உள்ளிட்ட இதழ்களின் தொகுப்பாக இந்தத்தொகுதி உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தை ஆராயும் சமூக ஆய்வாளர்களுக்கும் இதழியல்துறை ஆய்வாளர்களுக்குத் இந்தத் தொகுதிகள் பெரிதும் பயன்படத்தக்கன.இதுபற்றி பின்னரும் விரிவாக எழுதுவேன்

இதழ்த்தொகுப்பு வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

ஆறு.அண்ணல்
4/38 கலைமகள் நகர் 2 ஆம் முதன்மைச்சாலை,
ஈக்காட்டுத்தாங்கல்,சென்னை-600 032
பேசி : + 91 44 22250807

இதழ்த்தொகுப்பு விலை உருவா 3000-00

பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

திருநெல்வேலி-பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 15.09.2010 அறிவன்(புதன்)கிழமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த கல்லூரிகளின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற உள்ளனர்.

தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம்-பங்களிப்பு,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி உள்ளிட்ட திரட்டிகள் அறிமுகம்,தமிழின் புகழ்பெற்ற இணைய தளங்கள், மின்நூலகம்,மின்நூல்கள் சார்ந்த செய்திகள், வலைப்பூக்கள் அறிமுகம், மின்னிதழ்கள் உள்ளிட்ட செய்திகள் அறிமுகமாக உள்ளன.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் செய்கின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.

ஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.பயிற்சி பெற்றுப் பயன்பெறலாம்.

தொடர்புக்கு - 9443851775

எழுத்தாளர் பெருமாள் முருகனின் தென்கொரிய செலவு


பேராசிரியர் பெருமாள்முருகன்


நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியரும் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவருமான பேராசிரியர் பெருமாள்முருகன் அவர்கள், தென்கொரியாவில் நடைபெறும் எழுத்தாளர் உறைவிட முகாமில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டு அந்த நாட்டுக்குச் சென்றுள்ளார்.

பேராசிரியர் அவர்களின் கொரிய நாட்டுச்செலவை என் அருமை நண்பர் முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள்(பேராசிரியர்,அறிஞர் அண்ணா அரசு கல்லூரி,நாமக்கல்) முன்னமே எனக்குத் தெரிவித்தார்.உடன் கொரியாவில் உள்ள தமிழ் மரபு அறக்கட்டள்ளை, மின்தமிழ் அன்பர் முனைவர் நா.கண்ணன் அவர்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். இருவரும் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பை உருவாக்க நினைத்தேன். ஆனால் இருவரும் இருக்கும் இடங்கள் தொலைதூரம் என்று அறிகின்றேன்.இயன்றால் சந்திப்பார்கள்.

உலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களில் ஆசியக் கண்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர், பேராசிரியர் பெருமாள் முருகன் ஆவார்.தென்கொரியாவில் உள்ள கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய கொரிய கலாசார மையம் இணைந்து பரிமாற்றம், படைப்பாற்றல் குறித்த எழுத்தாளர் உறைவிட முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தென்கொரியாவில் செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கியிருந்து பண்பாட்டு பரிமாற்றம் மேற்கொள்ள உலகம் முழுவதும் இருந்து 6 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2006-இல் நடைபெற்ற முகாமில் இந்தியா சார்பில் இந்தி எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழ்ப் படைப்பாளரான பெருமாள் முருகன் 2010-இல் தேர்வாகி கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.

பேராசிரியர் பெருமாள்முருகன் 15 நூல்களை எழுதியுள்ளார். 125 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

ஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதாரி, கங்கணன் ஆகிய புதினங்களையும், நீர் விளையாட்டு, திருச்செங்கோடு ஆகிய சிறுகதைகளும், நீர் மிதக்கும் கண்கள், கோமுகி நதிக்கரை கூழாங்கற்கள் ஆகிய கவிதை நூல்களையும் படைத்துள்ளார். கூளமாதாரி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான சீசன் ஆஃப் தி பாம் என்ற நூல், ஆசிய பசிபிக் கடலோர நாடுகளில் சிறந்த முதல் 5 நாவல்களில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில், பெருமாள் முருகன் கலந்து கொள்வதன் மூலம் தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் தமிழ்ச் சமுதாய வரலாறுகள் குறித்து கொரிய இலக்கிய ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படும். அந்த நாட்டு மக்களுக்கு தமிழின் தொன்மையையும், பெருமையும் உணர்த்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும்,நண்பர்களும் பேராசிரியர் பெருமாள் முருகனைப் பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.

தென்கொரிய நாட்டில் தங்கியுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் கொரிய நாட்டு எழுத்தாளர் சந்திப்புப்பயிற்சி பற்றிய சில வினாக்களை மின்னஞ்சல் வழியாக முன்வைத்தேன்.அந்த வினாக்களும் அதற்கு அவர் வழங்கிய விடைகளும்:

1.ஒரு மாத காலத்திலும் தாங்கள் உருவாக்கும் எழுத்து சிறுகதையா /புதினமா/ கட்டுரைகளா/

சிறு நாவல் ஒன்றின் முதல் பிரதியை இந்தத் தங்கலில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். நுகர்வுக் கலாச்சாரம் நம் நடுத்தர மக்கள் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளாக அந்நாவல் வரக்கூடும்.

2தொடக்க விழா போலும் ஏதேனும் விழாக்கள் நடந்ததா?
பயிற்சி நிறைவில் சான்றிதழ்கள் ஏதேனும் வழங்குவார்கள்?

விழாக்கள் இல்லை. சான்றிதழ் தருவதும் இல்லை. நான் கேட்டிருப்பதால் 'வருகைச் சான்றிதழ்' எனக்குக் கிடைக்கும். அது கல்லூரித் தேவைக்காக. மற்றபடி அவர்கள் இது மாதிரியான விசயங்களில் அக்கறை காட்டுவதில்லை.

3.மற்ற எழுத்தாளர்களுடன் உரையாட வாய்ப்பு உள்ளதா?
அல்லது தனிறையில் தங்கி அவரவர் எழுதிக்கொண்டிருக்கின்றீர்களா?

மற்ற எழுத்தாளர்களோடு பேசலாம்; பகிர்ந்து கொள்ளலாம். வெளியே செல்லலாம். எல்லாச் சுதந்திரமும் உண்டு. பெரும்பாலும் கொரிய எழுத்தாளர்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கிலம் கூடத் தெரியவில்லை. ஆனால் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்.

3.கொரிய இலக்கியச் சிறப்பு தங்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா?
கொரிய எழுத்துகள் பிறமொழிகளில்(ஆங்கிலம்) கிடைக்கிறதா?

கொரிய இலக்கியம் பற்றி மிகக் குறைவாகவே அறிமுகம். 15ஆம் நூற்றாண்டில் தான் இந்த மொழிக்கு எழுத்து வடிவம் ஏற்பட்டுள்ளது. அதை உருவாக்கிய மன்னன் சே ஜொங் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கொரிய இலக்கிய மொழிபெயர்ப்புகள் ஓரளவு இருக்கின்றன. இந்தியாவில் இந்தியில் சில மொழிபெய்ர்ப்புகள் வந்திருப்பதாக அறிகிறேன்.

4.சிங்கப்பூர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் அந்தந்த நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களா?கவிஞர்களா?திறனாய்வாளர்களா?

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருக்கும் எழுத்தாளர்கள் ஏதோ ஒருவகையில் திறமையானவர்களாகவே இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தேர்வு செய்யும் முறையில் சில விதிகளைக் கடைபிடிப்பதால் அப்படித்தான் இருக்க வேண்டும். சிலர் ஆறுமாதம் வரை இங்கே தங்கியிருக்க நிதி உதவி கிடைக்கிறது. சிங்கப்பூர்க்காரர் ஆங்கிலத்தில் எழுதுபவர். அவர் நான்கு மாதங்கள் இங்கே தங்க உள்ளார். நான் ஒருவன் தான் குறைவான காலம்.

5.நம் நாட்டில் இருந்து உருவாக்கும் படைப்பிலிருந்து அந்த நாட்டில் தங்கி உருவாக்கும் படைப்பு வேறுபட்டு அமையுமா?
எழுத்துக்குச் சூழல் துணை செய்யுமா?
.
இந்த நாட்டில் தங்கி எழுதினாலும் நான் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றையே எழு;துகிறேன். அதனால் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. இது எழுதுவதற்குத் ; தனிமையான சூழலை உருவாக்கித் தரும் வாய்ப்புத்தான். கொடைக்கானலிலோ ஊட்டியிலோ தங்கி எழுதுவது போலத்தான் ;இருக்கிறது.

பேராசிரியர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்!
ஐயா தமிழுக்கு ஆக்கமான படைப்புகளுடன் தமிழகம் வாருங்கள்!

புதன், 8 செப்டம்பர், 2010

இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல்(O.B.C) – தமிழ்நாடு

கல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள சாதிகளின்- சமுதாயங்களின் பெயர்


1. அகமுடையர் தொழு அல்லது துளுவ வேளாளர் உட்பட
2. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்
திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
3. அம்பலக்காரர், அம்பலக்காரன்
4. ஆண்டிப் பண்டாரம்
5. அரயர், அரயன், நுலயர், நுளையர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்
திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
6. அர்ச்சகரி வேளாளர்
7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
8. ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், தென்னார்க்காடு, இராமநாதபுரம்,
விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்)
9. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள்
10. படகர்
11. பெஸ்தா, சிவியர்
12. பட்ராஜு (சத்திரிய ராஜுக்கள் தவிர)
13. பில்லவா
14. பொண்டில்
15. போயர்
16. ஒட்டர் (போயர், தொங்க போயர், கொரவா, தோட்டபோயர், கல்வதிலா
போயர், பெத்த போயர், ஒட்டர்கள், நெல்லூர்ப்பேட்டை ஒட்டர்கள் மற்றும் சூரமாரி ஒட்டர்கள் உட்பட)
17. செக்காளர்
18. சங்காயம்பூடி குறவர்கள் (வடஆர்க்காடுமாவட்டத்தில்)
19. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி
மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)

20. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி
வளையல் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) - (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)

21. கந்தர்வகோட்டைகுறவர்கள் (தென்னார்க்காடுமாவட்டத்தில்)
22. ஆதிதிராவிட வகுப்பிலிருந்து மதம் மாறியவர்கள் எந்தத்தலைமுறையில்
மதம் மாறியிருப்பினும் (கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணியில் இடஒதுக்கீடு நோக்கத்திற்காக)

23. சி.எஸ்.ஐ., முன்னாள் எஸ்.ஐ.யு.சி. (கன்னியாகுமரி மாவட்டத்திலும்
திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)

24. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும்
வடஆர்க்காடு மாவட்டங்களில்)

25. தாசரி (தொங்கதாசரிகள் மற்றும் கூடுதாசரிகள் உள்பட)
26. தக்கானி முஸ்லீம்
27. தேவாங்கர், சேடர்
28. தொப்பா குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
29. தொப்பை கொரச்சா (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை வட்டங்களில்)
30. தொம்மர்கள் (டோம் மற்றும் தொம்மர்கள் உள்பட)
31. தொங்க ஊர் கொரச்சா
32. துதெகுலா
33. ஏனாதி
34.ஏரவள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி
மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் தவிர-அங்கு இவ்வகுப்பினர் பழங்குடியினர்)

35. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்
செங்கோட்டை வட்டத்திலும்)

36. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி
மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)

37. ஈழவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்
செங்கோட்டை வட்டத்திலும்)

38. கந்தர்வகோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை தென்னார்க்காடு மாவட்டங்களில்)

39. கங்கவார்
40. கவரா, கவரை, கவரை வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும்
ரெட்டி தவிர)

41. கௌண்டர்
42. கௌடா (கம்மல, கலாலி மற்றும் அனுப்ப கௌண்டர் உட்பட)
43. ஹெக்டே
44. இடிகா
45. இல்லத்துப் பிள்ளைமார் (இல்லுவர், எழுவர் மற்றும் இல்லத்தார்)
46. இஞ்சி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை
மாவட்டங்களில்)

47. இசை வேளாளர்
48. ஜாம்புவானோடை
49. ஜங்கம்
50. ஜெட்டி
51. ஜோகி (ஜோகியர் உள்பட)
52. கப்போரா
53. கைக்கோளன், கைக்கோளர், செங்குந்தர்
54. காலாடி
55. காலா குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை
மாவட்டங்களில்)

56. களரி குரூப், களரிப் பணிக்கர் உள்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும்
திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)

57. கலிங்கி

58. கலிஞ்சி தாபி குறவர்கள் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில்)
59. கள்ளர் (ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வகோட்டை கள்ளர்கள்,கட்டப்பால் கள்ளர்கள், பிரமலைக் கள்ளர்கள், பெரிய சூரியூர் கள்ளர்கள் உள்பட)
60. கால்வேலி கவுண்டர்
61. கம்பர்
62.கம்மாளர் அல்லது விஸ்வகர்மா மற்றும் விஸ்வகம்மாளர், (தட்டார்,
பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சலா
மற்றும் விஸ்வபிராமணர் உள்பட)
63. கணி, கணிசு, கணியர், பணிக்கர்
64. கன்னட சைனீகர், கன்னடியர் மற்றும் தாசபலஞ்ஜிகா
(கோயமுத்தூர், பெரியார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
65.கருணீகர் (சீர்கருணீகர், ஸ்ரீகருணீகர், சரடு கருணீகர் கைகட்டிக்
கருணீகர், மாத்துவழிக் கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்புக் கருணீகர்)
66. கடேசர், பட்டம்கட்டி
67. கவுத்தியர்
68. கேப்மாரிகள் (செங்கற்பட்டு,புதுக்கோட்டை மற்றும் திருச்சிமாவட்டங்களில்)
69. கேரள முதலி
70. கார்வி
71. கத்ரி
72. கொங்குச் செட்டியார்கள் (கோயமுத்தூர், பெரியார் மாவட்டங்களில் மட்டும்)
73. கொங்கு வேளாளர்கள் (வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர்,அரும்புகட்டிக் கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பால கவுண்டர்,பூசாரிக் கவுண்டர், அனுப்பவெள்ளாளக் கவுண்டர், குரும்பக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர்,செந்தலைக் கவுண்டர், பவழங்கட்டி வெள்ளாளக் கவுண்டர், பாலவெள்ளாளக் கவுண்டர்,
சங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் இரத்தினகிரிக் கவுண்டர்)
74. கொப்பல வெலமா
75. கொரச்சா
76.குறவர்கள் (செங்கல்பட்டு, இராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சென்னை, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)

77. கோட்டேயர்
78. கிருஷ்ணன்வகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும்)
79. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில்
செங்கோட்டை வட்டத்திலும்)
80. குலாலா (குயவர், கும்பரர் உள்பட)
81. குஞ்சிடிகர்
82. குன்னுவர் மன்னாடி
83. குருகினிச் செட்டி
84. குறும்பர் (எங்கெல்லாம் அவர்கள் பழங்குடியினர் இல்லையோ)
85. லப்பை மற்றும் மரைக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது
உருதுவாக இருப்பினும்)
86. லம்பாடி
87. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்
திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
88. ஜங்கமா
89. மராட்டியர் (பிராமணரல்லாதவர்) (நாம்தேவ் மராட்டியர் உள்பட)
90. மகேந்திரா, மேதரா
91. மலையன், மலையர்
92. மாலி
93. மணியகார்
94. மாப்பிள்ளை
95. மறவர் (கரும்மறவர், அப்பநாடு கொண்டயம் கோட்டை மறவர்
மற்றும் செம்பநாடு மறவர்கள் உள்பட)
96. மருத்துவர், நாவிதர், விளக்கித் தலைவர், விளக்கித் தலைநாயர்
97. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் (கிறித்தவராக மதம் 110
மாறியவர் உள்பட)
98. மொண்ட குறவர்கள்
99. மூப்பன்
100. மவுண்டாடன் செட்டி
101. மூக்குவன், மூக்குவர் அல்லது மூகயர் (கிறித்தவராக மதம் மாறியவர்
உள்பட)
102. முத்துராஜா, முத்துராச்சா,மூட்டிரியர்,முத்திரியர் மற்றும் முத்தரையர்
103. முட்டலகம்பட்டி
104. நாடார், சாணார் மற்றும் கிராமணி (கிறித்தவநாடார், கிறித்தவசாணார் 118
மற்றும் கிறித்தவ கிராமணி உள்பட)
105. நகரம்
106. நாய்க்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி
மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
107. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி
மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
108. நரிக்குறவர்
109. நோக்கர்
110. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்
செங்கோட்டை வட்டத்திலும்)
111. ஒதியா
112. உவச்சர்
113. பாமுலு

114. பாணர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலிமாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)

115. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்திக்காரர் உள்பட)
116. பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தம செட்டியார்

117. பரவர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)(கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் இவ்வகுப்பு
தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)

118. பார்க்கவ குலம் (சுருதிமார், நத்தமார், மலையமார் உள்பட)
119. பெரிக்கி (பெரிகே, பெரிஜா, பலிஜா உட்பட)
120. பெருங்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)

121. பொன்னை குறவர்கள் (வடஆர்க்காடு மாவட்டத்தில்)
122. பொராயா
122. புல்லுவர் அல்லது பூலுவர்
124. பூசலா

125. சாதுச்செட்டி (தெலுங்கச் செட்டி, தெலுங்குப்பட்டிச் செட்டி, 24 மனை
தெலுங்கச் செட்டி உள்பட)

126. சக்கரவர் அல்லது காவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)

127. சக்கரைத்தமடை குறவர்கள் (வடஆர்க்காடு மாவட்டத்தில்)
128. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை,கோயம்புத்தூர்,ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)
129. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
130. சாலிவாகனர், சாகிவாகனர்
131. சாலியர், பத்மசாலியர், பட்டுசாலியர், பட்டரையர், ஆதவியார்
132. சாரங்கபள்ளி குறவர்கள்

133. சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா (சாத்தாணி, சாட்டாடி மற்றும்
சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா உள்பட)

134. சவலக்காரர்
135. சேனைத்தலைவர், சேனைக்குடையர், மற்றும் இலைவாணியர்
136. சௌராஷ்டிரா (பட்டுநூல்காரர்)
137. சோழியச் செட்டி

138. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர்
கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் உள்பட)

139. ஸ்ரீசயர்
140. தல்லி குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)

141. தோகைமலை குறவர்கள் அல்லது கேப்மாரிகள்
(திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்)

142. தொகடவீரா சத்ரியா
143. தோல்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
144. துளுவநாய்க்கர் மற்றும் வெத்தலைக்கார நாய்க்கர்
145. தொண்டமான்
146. தோரியர்
147. தொட்டிய நாய்க்கர் (ராஜகம்பளம், கொல்லவர், சில்லவர், தொக்கலவர்
மற்றும் தொழுவநாய்க்கர் உள்பட)
148. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
149. உப்புக் குறவர்கள் அல்லது செட்டிப்பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மதுரை, மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)

150. ஊராளி கவுண்டர் (மாநிலம் முழுவதும்) மற்றும் ஓருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, கோயம்புத்தூர், பெரியார், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில்)

151. வடுவர்பட்டிகுறவர்கள் (மதுரை, இராமநாதபுரம், பசும்பொன் தேவர்
திருமகன், காமராசர், திருநெல்வேலி திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்)

152. வலையர் (செட்டிநாடு வலையர் உள்பட)
153. வல்லம்பர்
154. வால்மீகி
155. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டலா, கணிகா, தெலிகுலா,செக்காளர் உள்பட)

156. வண்ணார் (சலவைத் தொழிலாளர்) ராஜகுல வெளுத்தாடர் மற்றும்
ராஜாகா (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பு)

157. வன்னிய குல சத்திரியா (வன்னியா, வன்னியர், வன்னியக் கவுண்டர்,
கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி, மற்றும் அக்னிகுல சத்திரியா)

158. வரகனேரி குறவர்கள் (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை
மாவட்டங்களில்)

159. வயல்பாடு அல்லது நாவல்பேட்டா கொறச்சர்கள்

160. வேடுவர், வேட்டைக்காரர் (மாநிலம் முழுவதும்) மற்றும் வேடர்
(கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை
வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)

161. வீரசைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
162. வெள்ளாஞ்செட்டியார்

163. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)

164. வேட்டை குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
165. வேட்டுவக்கவுண்டர், புண்ணான் வேட்டுவக் கவுண்டர்
166. ஒக்கலிகர் (வக்கலிகர், வொக்கலிகர் கப்பிலியா கப்பிலியர், ஒக்கலியா, கவுடா, ஒக்கலிய
கவுடர், ஒக்கலியா கவுடா உள்பட)

168. யாதவர் (இடையர், வடுக ஆயர் எனப்படும் தெலுங்கு பேசும் இடையர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா, மோண்ட் கொல்லா மற்றும் ஆஸ்த்தாந்தரா கொல்லா)

169. யவன
170. ஏருகுலா
171. யோகீஸ்வரர்
172. கிறித்தவ மதத்திற்கு மாறிய எந்த இந்து பிற்படுத்தப்பட்டவரும்
173. பாட்டு துர்கா
174. தேவகுடி தலையாரி
175. பொடிகார வேளாளர்
176. புலவர் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில்)
177. நன்குடி வேளாளர்
178. குக வேளாளர்
179. கள்ளர்குல தொண்டைமான்
180. திய்யா

நன்றி: மக்கள் நெஞ்சம், மார்ச்சு 14,2010