நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 19 ஜூன், 2016

தொல்காப்பியம் குறித்த சிறப்புரை





தொல்காப்பியம் என்னும் ஒப்புயர்வற்ற இலக்கண நூலினைக் கற்கத் தொடங்கிய நாளினை நினைத்துப்பார்கின்றேன். 1987 முதல் 1992 வரை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் பேராசிரியர்களின் பயிற்றுவித்தலில் இந்த நூலினை அறிந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகு முனைவர் கு. சுந்தரமூர்த்தி ஐயாவின் உரைகளும், பொழிவுகளும் இந்த நூலின்மேல் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. அறிஞர் பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தல் இந்த நூலை ஆய்வுப்பொருளாக்கிக்கொள்ள அடிகோலியது. புலவர் பொ.வேல்சாமி, முனைவர் கு.சிவமணி, முனைவர் ப.பத்மநாபன் உள்ளிட்ட அறிஞர்களின் தொடர்ந்த ஊக்கமொழிகள் என்னை வரம்பிட்டு நிலைப்படுத்துகின்றன.

உலகத் தொல்காப்பிய மன்றம் என்னும் பேரமைப்பின் வழியாக உலகப் பரவலுக்கு உரிய வகையில் தொல்காப்பியத்தைப் படிக்கவும் பரப்பவும் என் முயற்சி மீள்பிறப்பு எய்தியது.

பெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரமைப்பு என்னும் வளர்ப்புத்தாய் ஒரு களம் அமைத்து என்னைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்ற ஓர் அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது.

ஆம்! இன்று 19.06.2016 இரவு தொல்காப்பியத்தின் சிறப்புகள் குறித்த என் உரை தமிழ் ஆர்வலர்களின் முன்பாக அரங்கேற்றம் காண உள்ளது. என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டவர்கள் உலகெங்கும் பரவியுள்ளனர். இத்தகு பெருமைக்குரிய தமிழ் அன்பர்கள் என் உரையைச் செவிமடுத்து, நிறைகுறைகளைச் சுட்டி என் முயற்சியை ஊக்கப்படுத்தலாம்.


நாள்:  ஜூன் 19 (06/19/2016)
நேரம்: இரவு 8:30  ET (கிழக்கு நேரம் - ஞாயிறு மாலை 8:30-9:30)
Eastern Time 8:30 PM, i.e., California Time 5:30 PM.

By Conference Call (பல்வழி அமைப்பு):




வியாழன், 9 ஜூன், 2016

நாவற்குடா இளையதம்பி தங்கராசாவின் நூல்வெளியீட்டு விழா!






நாவற்குடா இளையதம்பி தங்கராசா எழுதிய நான் என் அம்மாவின் பிள்ளை என்ற அரிய நூலின் வெளியீட்டு விழா 12.06.2016 மாலை 5 மணிக்குக் கனடாவில் பேராசிரியர் . பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது. இடம்: St. James Cardinal McGuigan Catholic High School (Keele & Finch) 1440, Finch Avenue West.   மு.இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.  ஆர்வம் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். மட்டக்களப்பின் மரபுவழி வாழ்க்கையை அறிய உதவும் அரிய நூல் இதுவாகும்.

திங்கள், 6 ஜூன், 2016

கனடாவில் தொல்காப்பிய முழக்கம்!



தமிழ்த்தாய் வாழ்த்துடன்...


  கனடா ஒண்டாரியோவின் தலைநகர் டொராண்டோவில் அமைந்துள்ள பெரிய சிவன்கோயில் அரங்கத்தில்  05.06.2016ஆம் நாள்(ஞாயிறு)  மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் குத்துவிளக்கேற்றி, விழா தொடங்கிவைக்கப்பட்டது. முதல் நிகழ்வாகத் தொல்காப்பியப் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

  கனடா டொரண்டோவின் தமிழ்க் கல்வித்துறை-அதிகாரி பொ. விவேகானந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் தலைவர் சிவ. பாலு அவர்கள் தலைமையுரை வழங்கினார்.

  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நெறியாளர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து அவையினருக்கு அறிமுகம் செய்தார்.

  சிலம்பொலி சேத்திரா மாணவிகள் வரவேற்பு நடனத்தின் வழியாகத் தொல்காப்பியச் சிறப்பினை அவையினருக்கு நினைவூட்டினர்.

  சிங்கப்பூர் நன்யாங்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் குறித்தும், கல்விப்புலங்களில் அதனை அறிமுகம் செய்வது குறித்தும் பயனுடைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

  தொல்காப்பியப் போட்டிகளில் கலந்துகொண்ட இளம் பருவத்து மாணவர்களுள் முதல்பரிசு பெற்ற மாணவர்கள் தொல்காப்பியர் பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் பேசிய பேச்சுகள் அவையினரை வியப்பில் ஆழ்த்தின.

  தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியம் எண்ணுப்பெயர்களும் அளவைப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுப்பெயர்கள், அளவைப்பெயர்கள் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். அளவைப் பெயர்கள், எண்ணுப்பெயர்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதைக் குறிப்பிட்டார். கழஞ்சு, உழக்கு, நாழி, கஃசு, பனை, தொடி, கலம், சாடி, தூதை, தினை, வட்டி, அகல், பதக்கு, தூணி, மண்டை பற்றி விரிவாக ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும் என்று தெரிவித்தார்.

  இதழியல் துறை, திரைத்துறை, பண்பலை வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களும், பிறமொழி ஆதிக்கமும், புலம்பெயர் வாழ்க்கையும் தமிழைச் சிதைத்துவரும் இன்றைய சூழலில் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள மொழிக்காப்பு முயற்சிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அறிய வேண்டும் என்று அவையினரைக் கேட்டுக்கொண்டார். தமிழ்ப்புலவர்கள் பிறமொழிக் கதைகள், சொற்களை ஆளும்பொழுது தமிழ் மரபுக்கு உட்பட்டு எழுதியுள்ளமைபோல் நாமும் தமிழ்மொழி மரபறிந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்மொழியின் பேச்சு வழக்கு, எழுத்து வழக்குகளை ஆராய்ந்து தொல்காப்பியர் கண்டுரைத்த முடிவுகள் இன்றும் பொருந்தும்படி உள்ளதை அவையினருக்குச் சான்றுகாட்டி விளக்கினார்.

  கனடாவில் ஆசிரியர் பணியாற்றும் திரு. பொ. அருந்தவநாதன் அவர்களின் தொல்காப்பியர் வழி நாட்டாரிசை என்ற நிகழ்வு அவையினரை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்வாகும். தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள நாட்டார் செய்திகளை எடுத்துரைத்துச் சான்றுகாட்டி, குழுவினருடன் திரு. அருந்தவநாதன் தம் கலைநிகழ்ச்சியை வழங்கியமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இந்த நிகழ்வு தமிழர்கள் பரவி வாழும் அனைத்து இடங்களிலும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

  திருமதி கௌசல்யா அவர்களின் சிவசக்தி நுண்கலைக்குழுவினர் மிகச் சிறந்த நாட்டிய நிகழ்வைத் தொல்காப்பியத்தைச் சிறப்பித்து வழங்கினர்.

  தொல்காப்பிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய விழா மலரை வெளியிட்டுப் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அருட்தந்தையருமான ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் உரையாற்றினார்.

  பேராசிரியர் பா. பசுபதி அவர்களின் தலைமையில் பயன்மிகு தொல்காப்பியம் என்ற தலைப்பில் கவியரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் பசுபதி அவர்கள் மரபுக்கவிதையில் பெரும்புலமை பெற்றவர் ஆதலால் சந்தக்கவிதை வழங்கி அனைவரின் இதயத்திலும் இடம்பிடித்தார். கவிஞர் அன்புடன் புகாரி தொல்காப்பியம் குறித்து வழங்கிய கவிதை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. அதுபோல் கவிஞர் சபா. அருள் சுப்பிரமணியம், தீவகம் வே. இராசலிங்கம் ஆகியோர் சிறப்பான கவிதைகளை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனாடக் கிளையின் செயலாளர் திருமதி கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு விழா இனிது நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
  
தமிழை வணங்கும் அவையினர்

சிவ.பாலு, மு.இளங்கோவன், பேராசிரியர் இ.பாலசுந்தரம்

தொல்காப்பியத்தை முழங்கும் மாணவர்

பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்களின் உரை

தொல்காப்பியப் பரிசில் பெற்ற தமிழ்ச்செல்வங்கள்

தொல்காப்பியம் பெருமை உரைக்கும் நாட்டியம்

பரிசு வழங்கும் திருமதி பாலசுந்தரம்

பார்வையாளர்கள்



தொல்காப்பிய இசைமுழக்கம்

மு.இளங்கோவன் உரை

பேராசிரியர் பசுபதி, அன்புடன் புகாரி உள்ளிட்ட நண்பர்களுடன்..

அன்புடன் புகாரி அவர்களின் கவிதைச்சாரல்...

உதயன் ஆசிரியர் பரிசு வழங்கல்

பேராசிரியர் சந்திரகாந்தன் பரிசு வழங்கிய காட்சி

தொல்காப்பியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு 
மு.இளங்கோவன் பரிசு வழங்கும் காட்சி

ஞாயிறு, 5 ஜூன், 2016

கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச்சி

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்க விழா...

  கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில்  04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது.  முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

  கனடாவின் கல்வித்துறை - தமிழ், அதிகாரி திரு. பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். திரு. க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். திருமதி லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு. சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

  திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்கள் தொல்காப்பியம் சுட்டும் நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் சிறப்பான உரை வழங்கினார்.

  பிற்பகல் 3 மணிக்கு அமைந்த இரண்டாவது செயல் அமர்வில் சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் கணினித் தமிழும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

  திரு. சிவபாலு அவர்கள் மரபுப்பெயர்கள் என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்து அரிய உரை வழங்கினார். செல்வி மேரி கியூரி போல் அவர்கள் உடற்கூறியலும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் ’உந்தி முதலா முந்து வளி’ என்னும் நூற்பா அடியை விளக்கி அவையினரின் பாராட்டினைப் பெற்றார். முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள் அரிஸ்டாட்டிலும் தொல்காப்பியரும் - உயிரினப் பாகுபாடு என்ற தலைப்பில் சிறப்பாக உரை வழங்கினார். அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நூல்களின் ஒப்பாய்வு என்ற தலைப்பில் சிந்திக்கத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்தார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் பண்டைத் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மருத்துவர் இலம்போதரன் அவர்கள் கலந்துகொண்டு தொல்காப்பியமும் எழுத்துக்களின் பிறப்பும் என்ற தலைப்பில் தம் மருத்துவப் பட்டறிவுகொண்டு அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். திருமதி கவிதா இராமநாதன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் மக்கள் சமுதாயம் என்ற தலைப்பில் சிறந்த செய்திகளை அவைக்கு வழங்கினார்.


  திருமதி கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு முதல்நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. 

  கனடாவில் வாழும் தமிழன்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வெள்ளி, 3 ஜூன், 2016

கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்





  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.

  முதல் நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா இரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.

  மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் செயல் அமர்வு முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் நடைபெறுகின்றது.

  சுகந்தன் வல்லிபுரம், த. சிவபாலு, மேரிபோல், பால. சிவகடாட்சம், ஜோசப் சந்திரகாந்தன், இ.பாலசுந்தரம் மருத்துவர் இலம்போதரன், கவிதா இராமநாதன், சாரதா குமாரசாமி ஆகியோர் தொல்காப்பியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்குகின்றனர்.

  மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், தொல்காப்பியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு, நாட்டியம், தொல்காப்பியர் வழி நாட்டாரிசை, சிறப்புரை, நூல்வெளியீடு, கவியரங்கம் எனப் பல நிகழ்வுகள் இரண்டு நாளும் நடைபெறுகின்றன. கவியரங்கில் பேராசிரியர் பா. பசுபதி தலைமையில்  புகாரி, சித்தி விநாயகம், தீவகம் வே. இராசலிங்கம், சபா. அருள் சுப்பிரமணியம் ஆகிய கவிஞர்கள் கவியரங்கேறுகின்றனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைக் கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


  உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு 2015 செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இதன் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தொடர்புக்கு: சிவ.பாலு அவர்கள்: 416 546 1394