என்னைநான் இழந்தேன்; இன்ப
உலகத்தில் வாழ லுற்றேன்;
பொன்துகள், தென்றற் காற்று,
புதுமணம், வண்டின் பாட்டு,
பன்னூறு செழுமா ணிக்கப்
பறவைபோல் கூட்டப் பூக்கள்
இன்றலாம் பார்த்திட் டாலும்
தெவிட்டாத எழிலின் கூத்தே!”
- பாவேந்தர்
பாவேந்தர்
பாரதிதாசனின் பாடல்கள் பலதிறத்தன. மொழி, இனம், நாடு, காதல், இயற்கை, பகுத்தறிவு, பெண்ணுரிமை
முதலான பொருண்மைகளில் இவர்தம் பாடல்கள் உள்ளன. இப் பாடல்களில் இவர்தம் கவிதைபுனையும்
திறனும், இயற்கையீடுபாடும், மக்கள் பற்றும் தெரிகின்றன. இக் கட்டுரை பாவேந்தரின் இயற்கையீடுபாட்டைக்
காட்டும் பாடல்களைச் சுவைநோக்கில் ஆராய்ந்து, தமிழ்க் கவிதை உலகில் இயற்கையுணர்வு மிகுந்த
கவிஞராகப் பாவேந்தர் விளங்கியுள்ளமையை எடுத்துரைக்க முனைகின்றது.
தமிழ்க் கவிதைகள் மண்ணுடனும், மக்களுடனும் நெருங்கியத்
தொடர்புகொண்டு முற்காலத்தில் எழுந்தன. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனும்
நிலத்தின்கண் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், தொழில்கள், கலைகள், பழக்க வழக்கங்கள், இயற்கைப்
பொருட்கள் (மரம், செடி, கொடி, நிலவு, நாய், புலி, அரிமா, யானை), போரியல், அரசாட்சி,
ஆகியவற்றை உள்ளடக்கிப் பழந்தமிழ் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு நிலத்திற்கும்
ஏற்றப் பெரும்பொழுது, சிறுபொழுது, நிலத்திணைகள் (தாவரங்கள்), வாழும் மக்களின் உணர்வு
நிலைகள் யாவும் மிகத் துல்லியமாகப் பழந்தமிழ் நூல்களில் காட்டப்பட்டுள்ளன. இயற்கையில்
ஊறித் திளைத்தும், நுண்மையாக நோக்கியும் பண்டைப் புலவர்கள் தம் படைப்புகளைச் செறிவு
செய்தனர். உலகம் உள்ளவரை மாறாத இயற்கைப் பண்புகளை – பொருட்களைப் படைத்துக் காட்டித்
தம் படைப்புகளை நிலைநிறுத்தினர்.
பக்திக் காலத்திலும், இடைக்காலத்திலும் சமய உணர்வாளர்கள்,
காப்பிய ஆசிரியர்கள் முதலாயினோர் தத்தம் படைப்புகளில் வாய்ப்பு நேரும்போது மட்டுமே
இயற்கைப் பொருளைப் பற்றி எழுதினர். சில நேரங்களில் புனைந்துரைத்துக் கூறப்படும் வண்ணம்
இயற்கையழகு கையாளப்பட்டது. வாளைமீன் துள்ளல், கமுகமரம், வானுலகுக்குக் கவரி வீசும்
கா வனங்கள், அயோத்தியின் அழகு, கொழுஞ்சோறு வடித்துக் கஞ்சியோடிய புகார், கற்பனையில்
புனைந்துகாட்டிய கயிலைக் காட்சி என்றே இயற்கையழகு குறிப்பிடப்பட்டது. இவையாவும் பகுத்தறிவுக்கு
உட்படுத்திப் பார்க்கும்போது அல்லது இயற்கை நேய நுண்ணுணர்வாளர்கள் பார்வைக்கு உட்படும்போது
மெய்ம்மைகளின் விழுக்காடு சிறிது குறைவாகவே உள்ளது எனலாம்.
இருபதாம் நூற்றாண்டில் எழுந்த எழுச்சிக் கவிஞரான
பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் உள்ள இயற்கையழகுக் காட்சிகளைக் காணும் போது சங்க
காலக் கவிஞர்களின் மரபில் உதித்த – அவர்களின் தொடர்ச்சியாளராகவே பாவேந்தர் நம் கண்ணுக்குப்
புலப்படுகின்றார். பாரதியின் படைப்புகளில் மாந்த உணர்வுகள் திறம்படப் படைத்துக் காட்டப்பட்டுள்ளது.
சில இடங்களில் இயற்கையழகு மிகச் சிறப்புடன் ஆளப்பட்டுள்ளது. பாரதியின் வழியில்வந்த
பாவேந்தரின் படைப்புகளில் இயற்கையழகு சிறப்புடன் புனையப்பட்டுள்ளது. இவர் இயற்கையினைக்
காட்டும் திறனையெல்லாம் நோக்கும்போது, உலகப் பெருங் கவிஞர்கள் வரிசையில் பாவேந்தரின்
படைப்புகள் இணைத்து எண்ண இடம் உண்டு. ‘அழகின் சிரிப்பு’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள
அழகுக் காட்சிகள் பாவேந்தரின் இயற்கையீடுபாடு - இயற்கையில் திளைக்கும் நுண்ணுணர்வு
– பாட்டுணர்வு மிகுந்த உணர்வுக்கிளர்வு நிலைகள் முதலியனவற்றைக் காட்டும் ஆவணங்களாக
உள்ளன. பாவேந்தரின் பிற படைப்புகளிலும் அவர்தம் இயற்கைநேய உணர்வுகள் மின்னி மிளிர்கின்றன.
பாவேந்தரின் படைப்புகளில் உவமைகளை விளக்கும்பொழுது
இயற்கையழகு சிறப்புடன் காட்டப்பட்டுள்ளது. பொருள்களின் தன்மையாலும், காட்சிகளை முழுமைப்படுத்தி
அடுக்கிக் காட்டும் முறைமையாலும் பாவேந்தரின் இயற்கை குறித்த படைப்புணர்வு சிறப்புப்
பெறுகின்றது. எந்த ஒரு பாடலைப் பாடினாலும், அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள பொருளைப்
பற்றி இனியொருவர் இதனைவிடச் சிறப்பாகப் பாடிவிட முடியாது என்னும் அளவிற்குத் தம் அனைத்து
ஆற்றல்களையும் ஒன்று திரட்டிக் கவிதை வழங்கும் பண்பினைப் பாவேந்தரிடம் காண முடிகின்றது.
இயற்கையழகினைப் படைக்கும்போது பல்வேறு வடிவங்களைப் (ஆசிரியம், கண்ணி, சிந்து, வண்ணம்
முதலியன) பயன்படுத்திப் பாவேந்தர் படைப்புகளை யாப்பது வழக்கம். எந்த வேடம் ஏற்றாலும்
தம் திறமையால் அந்தந்த வேடங்களின் உண்மைத் தன்மைகளைச் சிறந்த கலைஞரால்தான் எதிரொலிக்க
முடியும். அத்தகு திறன்பெற்ற கலைஞரைப்போல் தாம் எடுத்துக்கொண்ட எந்த வடிவமாயினும் தம்
கலையுணர்வால் வடிவம் முதன்மைபெறாமல் பாடும் பொருண்மையை முன்னணிக்குக் கொண்டுவரும் பாட்டாண்மை
பாவேந்தரிடம் உள்ளது.
இயற்கையின் அனைத்துப் பொருட்களும் - கூறுகளும்
அழகு நிறைந்தவையே. அவற்றைக் காண்பவர்களின் தன்மைக்கு ஏற்பவே அழகுணர்ச்சி புலப்படும்.
பாவேந்தர் காட்டும் வானம்பாடி, தென்றல், புறா, கதிரவனின் காட்சி, நிலா, அகில், மரங்கள்,
குழந்தை, குறத்தி, குன்று என யாவும் படிப்பவர்களின் மனத்திலிருநு;து நீங்காத காட்சிகளாகும்.
இயற்கையை எவ்வாறு நோக்க வேண்டும். கற்க வேண்டும் என்பதற்குத் தொடக்கப்பள்ளிப் பாடம்போல்
பாவேந்தரின் இயற்கையைப் புனையும் திறன் விளங்குகிறது.
இயற்கையில் ஒன்றாதவர்களும், இயற்கையை முழுமையாக
உணராதவர்களும் முழுமையான கவிஞர்களாக மலர முடியாது. எனவேதான் உண்மையான பாவலர்களுக்குரிய
தகுதிகளை மதிப்பிடும்பொழுது, “நுண்ணோக்கு, இயற்கையீடுபாடு, சொல்வன்மை, துணிவு” என்னும்
பத்து அருங்குணங்களை வலியுறுத்துவார் பாவலரேறு பெருஞ்சித்திரனார் (கனிச்சாறு, முன்னுரை.
ப.6). இவற்றுள் நுண்ணோக்கு, இயற்கையுடன் மிகுதியும் தொடர்புடையன. இப் பண்புநலன்கள்
யாவும் செழிப்புற்று விளங்குபவராகப் பாவேந்தர் உள்ளார். பாவேந்தரிடம் மண்டிக் கிடக்கும்
இயற்கைநேய உணர்வினை அறியும்வண்ணம் அவர்தம் படைப்புகளில் இடம்பெற்றுள்ள சில இயற்கைநேயக்
காட்சிகள் இங்கு விளக்கிக் காட்டப்பட்டு அவர்தம் இயற்கையுணர்வு சான்றுகளுடன் நிறுவப்படுகின்றது.
வானம்பாடி
வழங்கும் இசை
வானம்பாடி என்னும் பறவையை ‘வானம்வாழ்த்தி’ என
இலக்கிய ஆசிரியர்கள் குறிப்பிடுவது உண்டு. வானம்பாடி வானிலிருந்து விழும் மழைநீரை விரும்பியுட்கொள்ளும்.
இந்நீரை வேண்டி வான்மிசையிருந்து அழகிய குரலெடுத்துப் பாடுவதைச் சங்க நூல்களிலும் பிற
நூல்களிலும் காணலாம்.
“துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்”
(கலித்.46:20)
எனவும்,
“துளிநசைப்
புள்” (புறநா.198:25)
எனவும்,
“தற்பாடிய
தளியுணவிற்
புட்டேம்பப்
புயன்மாறி” (பட்டினப்.3-4)
(‘துளி
உணவாகையினாலே தன்னைப் பாடிய வானம்பாடி புலரும்படி மழையைப் பெய்தலைத் தவிர்த்து மேகம்
பொய்த்து வற்கடகாலமாயினும்’ – நச்சர் உரை)
எனவும்
வானம்பாடியின் இசையழகு புலவர்களால் போற்றிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், சீவகசிந்தாமணியில்
“வானம்பாடி மேகத்துப் பிறந்த துளியையே நச்சிப்பாடுமாறு போல” (சீவக.2897) எனும் குறிப்பும்
உள்ளது. இவற்றை நோக்கும்போது சங்கப் புலவர்க்கும் வானம்பாடியின் இசையில் மயங்கியுள்ளமை
தெரிகிறது.
பாரதிதாசன் பல்வேறு குருவிகள், பறவைகள், விலங்குகள்
பிற இயற்கைப் பொருட்களைப் பாடியிருப்பினும், வானம்பாடியின் இசையில் தம் உள்ளத்தைப்
பறிகொடுத்துள்ளமையை அவர் பாடலின்வழி அறிய முடிகின்றது. வானம்பாடியின் இசை பாவேந்தரின்
கற்பனைக்குச் சிறகு கட்டிப் பறக்கவிட்டுள்ளது.
‘அழகுடன் பொலிந்து விளங்கும் வான்வெளியிலிருந்து
ஓர் ஓசை ஒலிக்கிறது. இவ் அழகிய ஓசையை வானம் தான் வழங்குகிறதா? அல்லது வானில் தனித்து
அரசாட்சி செய்யும் வான் நிலவுதான் பாடுகிறதா?
அல்லது மலர்தோறும் சென்று தேனைத் தேர்ந்தெடுத்து உண்ணும் சிறிய தும்பிதான் தன்
மழலைக் குரல் எடுத்து ‘ரீங்காரம்’ இடுகின்றதா? அல்லது அஞ்சி நடுக்கம் கொள்ளச் செய்யும்
இடியோசை தன் தன்மையிலிருந்து இறங்கி மென்மையைக் கற்று இனிமையுடன் முழங்குகின்றதா? அல்லது
விரைந்து பறக்கும் வானஊர்தியில் செல்லும் வழிச் செலவினன் தமிழகத்து இசைக் கலைஞன் ஊதும்
புல்லாங்குழல் ஓசையா? அல்லது செவ்வியல் கலையில் வல்லவளும், தமிழ் முழுதறிதறிந்த தன்மையளும்
ஆன பெண்ணொருத்தித் தம் குரல் இசையால் மகிழ்ச்சிப் பொங்கப் பாடும் இசைப்பாடலா? அல்லது
யாழின் முழக்கமா? எனக் கவிஞரின் கவிதை ததும்பும் கற்பனையுள்ளம் இசை வந்த வழியினைக்
குறித்து நினைக்கும்போது மேற்கண்ட உணர்வுகள் அவர் நெஞ்சில் நீரூற்றாய்க் குமிழ்விட்டு
வெளிவந்தன. பிறகுதான் புரிகிறது வானம்பாடிக் குருவியின் இசைதான் பாவேந்தருக்கு இவ்வாறெல்லாம்
புது நினைவுகள் உண்டாகக் காரணமாக அமைந்தது. இதனைப் பாவேந்தர்,
“வானந்தான் பாடிற்றா? வான்நிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
மெல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?
வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்
நீநம்பாய் என்றுநிமிர்ந்த என்கண் ணேரில்
வானம்பாடிக் குருவி காட்சி வழங்கியது”
(பா.க.,ப.769)
என்று
பாடியுள்ளார்.
ஒரு வியப்புக் காட்சியை நம் கண்முன் நிறுத்த பாவேந்தர்
காட்டும் பல்வேறு அழகு அமைப்புகள் இப்பாடலில் திறம்படக் கையாளப்பட்டுள்ளன. திறன்மிக்க
நாடக ஆசிரியரைப்போலப் பாவேந்தர் ‘வானம்பாடி’க் கவிதையை உருவாக்கியுள்ளார். கல்லில்
சிலைவடிக்கும் ஒரு கல்தச்சன் தம் கையாலும், கருவியாலும் சிலையின்கண் பல்வேறு கலைக்கூறுகளையும்
நுட்பமாகப் பதிவு செய்தல்போல் பாவேந்தர் கற்பனையாற்றல் - மொழியாளுமை – வெளியீட்டுத்தன்மை
– காட்சிகளுக்கு வழங்கும் அடுத்தடுத்த முதன்மைகள் என்ற நிலைகளைத் திறம்பட ஆண்டு தம்
திறன் முழுமையையும் இப்படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கையில் ஊறித் திளைத்துச்
சிறு குருவியின் ஓசையை மிகப் பெரும் சுவையுர்ச்சிகளுக்கு உட்படுத்தும் பாவேந்தரின்
கவிதையின் காட்சியமைப்புக் கூறுகளைப் பிற புலவர்களிடம் காண்பது அரிது.
நிலவுக்
காட்சி
என்றும் நின்று நிலவிப் பட்டொளி வீசும் பான்மை
கொண்டது நிலவு. இந்நிலவு தமிழகத்துப் புலவர்களாலும், அயன்மொழிப் புலவர்களாலும் பலவாறு
தத்தம் சுவையுணர்வு, நுண்ணோக்குத் திறனுக்கு ஏற்பப் புனையப்பட்டுள்ளது. சங்கக் காலத்துப்
புலவர்களின் பாடல்களில் நிலவு என்பது ‘களவை’ வெளிப்படுத்தும் பொருள்களுள் ஒன்றாகவே
காட்டப்பட்டுள்ளது. மேலும், தனிமைத்துயரில் சிக்கிக் கிடக்கும் தலைவன், தலைவியரைக்
கொடுமைப்படுத்தும் பொருளாகவும், சேர்ந்திருப்பவர்களுக்கு ‘நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா
முற்றத்து’ இன்பம் தருவதாகவும் காட்டப்பட்டுள்ளது. ஆனால், பாவேந்தரின் நுண்மையுணர்வோ
தமிழகத்துப் பெரும்புலவர்களையும், வெளிநாட்டுப் பாவலர்களையும் வியப்புக் கடலில் ஆழ்த்தும்வண்ணம்
நிலவு பற்றிப் பல்வேறு கோணங்களில் செய்திகளைத் தரும் நிலையில் உள்ளது.
வானத்தை ஆடையாகவும் - நிலவை ஒளி முகமாகவும் காட்டும்
பாவேந்தர் நிலவின் கொள்ளை வனப்பில் சிக்கிச் சிதைகிறார். நிலவு எழிலில் மயங்கி, எழுந்து
நின்று, இம் மானுடத்துப் புலனுணர்வு உடையவர்கள் அனைவரிடமும் வானச் சோலையில் பூத்த தனிப்பூவை
– சொக்க வெள்ளிப் பாற்குடத்தை, அமுதத்தின் ஊற்றை – காலை வந்த கனற்பிழம்பாய்க் காட்சி
தந்த செம்பரிதி கடலில் மூழ்கித் தம் கனல் தன்மையை விட்டொழித்து ஒளிப்பிழம்பாய் விளங்கும்
நிலவை நேசித்துப் புரட்சிக் கவி நூலில் பாடியுள்ளார். உலகில் உள்ள அழகுகள் அனைத்தையும்
ஒன்று திரட்டி, அவ்வழகுச் செழுமை கட்டுக் குலையாமல் இயற்கை அன்னையானவள் தந்த முழுமைதான்
நிலவோ என்று வியந்து நேசிப்பதைச்
“சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ!”
(பா.க.,ப.132)
என்று
பாடியுள்ளார்.
நிலவுப் பெண்ணை நேசித்ததோடு பாவேந்தர் நிறுத்திக்கொள்ளவில்லை.
நிலவு நீந்தி விளையாடும் இடமாக விளங்கும் வான்பரப்பு முழுவதையும் பாவேந்தரின் கவிதையுள்ளம்
காதலிக்கின்றது. நாம் விரும்பும் பெண்ணை அல்லது ஆணைச் சார்ந்திருப்போர்களையும் நேசிப்பது
உலகில் உள்ள மாந்தர்களிடம் காணத் தக்க ஓர் உயரிய உளவியல் பண்பாகவே உள்ளது. சங்க இலக்கியத்தில்
ஒன்றான குறுந்தொகையில் இவ் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிவு செய்துள்ளனர்.
“அகவன் மகளே யகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே” (குறுந்.23)
கட்டுச் சொல்ல வந்த அகவன் மகளிடம் தலைவனால் வருத்தம்
கொண்ட தலைவியின் தோழி, தலைவனின் குன்றத்தின் பெருமையைப் பாடும்படி வேண்டினள். காரணம்
தலைவனுக்கு உரிமையுடைய குன்றின் பெருமையைக் கேட்கும்போது தலைவனால் தண்ணளி செய்யப்பெற்ற
உணர்வு தலைவிக்கு உண்டாகும் என்பதால் இத்தகு நுண்ணுணர்வு வெளிப்பாடு காட்டப்படுகின்றது.
இதனையொப்பவே நிலவிடம் நேசம் கொள்ளும் பாவேந்தர், நிலவு உலவும் இடமாகக் கருதப்படும்
வான்பரப்பின் மீதும் மையல் கொள்கின்றார். இன்பமென்னும் பால் நுரையாகவும், குளிர் விளக்காகவும்
விளங்கும் நிலவினைப் பல்வேறு உருவகக் காட்சிகளாலும், உவமைக் காட்சிகளாலும் அழகுபடுத்திப்
புனைந்து காட்டியுள்ளார்.
“உன்னைஎன திருவிழியாற் காணுகின்றேன்;
ஒளிபெறுகின்றேன்; இருளை ஒதுக்கு கின்றேன்;
இன்னலெலாம் தவிர்க்கின்றேன்; களிகொள் கின்றேன்
எரிவில்லை குளிர்கின்றேன் புறமும்
உள்ளும்!
அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி
ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!
இன்பமெனும் பால்நுரையே! குளிர்விளக்கே!
எனை இழந்தேன்! உன்னெழிலில் கலந்த தாலே!”
(பா.க.ப.133)
மேலும், ‘முழுமைநிலா’ எனத் தொடங்கும் ஒரு பாடலில்
நிலவுக் காட்சியை நுட்பமாக வரைந்து காட்டுகின்றார் பாவேந்தர். நிலவொளி நீக்கமற எங்கும்
நிறைந்து காணப்படும் நிறைமதி நாளில் பெருமரங்களின் அடியில் நின்று தரையை நோக்கும்பொழுது
மரத்தில் உள்ள இலைகள், கிளைகள் இவற்றின் ஊடே புகுந்து தரைக்கு வரும் நிலவெளிச்சம் பாவேந்தரின்
பார்வைக்கு உட்படும்போது அது மயிலின் தோகையிடத்து உள்ள ஒளிச்சுடர்;க் கண்ணாகத் தெரிகின்றது.
மரத்தின் நிழலால் இருளும் நிலவின் வெளிச்சத்தால் ஒளியும் கொண்டு விளங்கும் பகுதியைப்
பாவேந்தர் மயிலின் கண்ணாகப் பார்க்கும் அழகு அவர்தம் இயற்கைநேய ஈடுபாட்டிற்குச் சான்றாக
உள்ளது. இதனைக்
“குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில்வான விளக்கு – நம்
பொருட்டு வந்தது பாடிஆடிப்
பொழுது போக்கத் துவக்கு!
மரத்தின் அடியில் நிலவுவெளிச்சம்
மயில்தோகை விழிகள்! பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்
சேர்த்து மெழுகும் வழிகள்” (பா.க.,ப.233)
என்று
எழுதியுள்ளமை பாவேந்தரின் கற்பனையுள்ளத்தை நமக்குக் காட்டுகின்றது.
பாவேந்தர்
காட்டும் கதிரவக் காட்சி
ஒரு பெரும் தனிச்சுடராக விளங்கும் சிறப்பு ‘ஞாயிற்றி’னுக்கு
உண்டு. தன் கதிர்க்கையால் உலகில் உறவு கொள்ளும் ஞாயிறு சங்கக் காலம் முதல் இன்று வரை
பல்வேறு புலவர்களால் பலவாறு புனைந்து காட்டப்பட்டுள்ளது. ‘உலகம் உவக்க ஒளிதலும் பலர்
புகழ் ஞாயிற்றின்’ சிறப்பு திருமுருகாற்றுப்படை முதல் இன்றைய புதுப்பாவலர்கள் வரை வெவ்வேறு
வகையில் வரிசையிடப்பட்டுள்ளது. இருதாம் நூற்றாண்டின் பெரும்பாவலரான பாரதியார், பாஞ்சாலி
சபதத்தில்,
“பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!...
தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி
விட்ட வோடைகள்! – வெம்மை தோன்றாமை
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! – பாரடீ!
நீலப் பொய்கைகள்! – அடடா, நீல
வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!......
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்! காணடி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!” (பாரதியார் கவிதைகள், ப.467)
என்று
கதிரவக் காட்சியைப் பார்த்து ஓவியமாகத் தீட்டியுள்ளார்.
பாவேந்தர் தமக்கு முந்தைய புலவர்களிலிருந்து வேறுபட்டுத்
தனித்திறம் பெற்றவராக ஆற்றல் சான்றவராக நம் கண்முன் அவர்தம் படைப்புகளால் தெரிகின்றார்.
பாவேந்தரின் படைப்புகளின் பரப்பையெல்லாம் கண்டு அங்குமிங்கும் கிடக்கும் கதிரவக் காட்சிகளையெல்லாம்
ஒன்று திரட்டி நோக்கும்போது அவரின் நுண்ணுணர்வுச் சிறப்பு வெளிப்படும். புதுமைபுனையும்
போக்கு தெரிய வரும்.
காலையிளம் பரிதி, நடுப்பகல் ஞாயிறு, மாலையில்
தெரியும் மாணிக்கச் சுடர்க் கதிரவன் என ஒருநாளின் பலநேரத்துக் கதிரவனின் தோற்றம் பாவேந்தரால்
படம்பிடிக்கப்படுகின்றது. “அன்றன்றும் புதுமையடி ஆருயிரே நீ கொடுக்கும் இன்பம், என்றதுபோல்
பாவேந்தர் காட்டும் ஞாயிற்றின் அழகும், வான்பரப்பும், கடல்பரப்பும் எழிலோவியமாய் ஒவ்வொரு
நிலையிலும் காட்சி தருகின்றன.
“எழுந்தது செங்கதிர்தான்
கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத் தூற்றல்! (பா.க., ப.413)
எனவும்,
“கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து
விழித்தான், எழுந்தான், விரிகதிரோன் வாழி”
எனவும்,
“தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான்
செங்கதிர்ச் செல்வன்”
எனவும்,
“நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென
ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக்
கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி”
எனவும்,
“அருவி மலைமரங்கள் அத்தனையும் பொன்னின்
மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான்” (பா.க.,ப.378,
379, 380)
(மணிவாசகர் பதிப்பக வெளியீடு)
எனவும்,
“தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னிலே ஓர்
செங்கதிர் மாணிக்கத்துச்
செழும்பழம்
முழுகும் மாலை” (பா.க.,ப.420)
எனவும்
கதிரவன் புவியில் செலுத்தும் அழகு அரசாட்சியைப் பாவேந்தர் புதுமைநயம் தோன்றப் புனைந்துள்ளார்.
கதிரவனின் காட்சியைப் பாவேந்தர் மேம்போக்காகப்
புலப்படுத்தாமல் தேர்ந்த சொற்களைக் கொண்டு, உரிய தெளிவும் திட்பமும் விளங்கும் வண்ணம்
தம் கவிதைகளைப் புனைந்துள்ளார். தாம் பாட நினைக்கும் பொருள் - அப்பொருளின் சிறப்புக்
கூறுகள் - அப்பொருள் சார்ந்த பின்புலங்கள் - அப்பொருள் கவிஞரின் உள்ளத்தில் ஏற்படுத்திய
கிளர்ச்சிகள் - அக்கிளர்வால் கவிஞர் பெற்ற மன உணர்வுகள் யாவும் பாவேந்தரின் இயற்கை
பற்றிய பாடல்களில் மிகுதி எனலாம். பாவேந்தரின் பிற படைப்புகளிலிருந்து இயற்கையைப் பாடும்
பாடல்கள் கவனமுடன் செதுக்கப்பட்டுள்ளன என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.
குன்றக்
காட்சி
பாவேந்தர் பல ஊர்களுக்கும் சென்ற நேரங்களிலெல்லாம்
இயற்கைச் சூழல்களைக் கண்டு மகிழும் ஆர்வம் கொண்டிருந்தமையை அவர் தம் வாழ்வில் காண முடிகின்றது.
குன்றுகளையும், மலைகளையும் இலக்கியங்களின் வழியாக அறிந்தும், நேரில் கண்டும் பாவேந்தர்
தம் படைப்புகளில் குன்றின் சிறப்பினையும், வனப்பினையும் திறம்பட ஆண்டுள்ளார்.
மலையை நிலமகளின் முகையாகக் காணும் இளங்கோவடிகள்,
“குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்று அருவியாடியும், சுனை குடைந்தும்”
மகிழும் மக்களைத் தம் காப்பியத்தில் காட்டுகின்றார். (காண்க: சிலப்.குன்றக்குரவை).
வேறுபல சங்க நூல்களிலும் குன்றத்தின் சிறப்பு
வனப்புடன் புனையப்பட்டுள்ளமையையெல்லாம் அவ்வந் நூல்களில் கண்டு மகிழலாம். பாவேந்தர்
குன்றக் காட்சிகளை எழிலுறப் புனைந்தும், எளிய சொற்களால் குன்றக் காட்சிகளை எழிலுறப்
புனைந்தும், எளிய சொற்களால் குன்றிற்கே அழைத்துச் சென்று காட்டியும் நம்மை மகிழ்ச்சியில்
திளைக்கச் செய்கின்றார். ‘குன்றம்’ என்பவை அருவியுடனும், செடி கொடிகளுடனும், பல்வேறு
பறவையினங்கள், மரங்களுடனும் காட்சி தரும் மாண்புடையன. பனிபடர்ந்த குன்றின் வனப்பினைப்
பாவேந்தர் எழிலான உருவக் காட்சிகளில் காட்டுகின்றார்.
“அருவிகள் வயிரத் தொங்கல்!
அடர்செடி, பச்சைப் பட்டே!
குருவிகள் தங்கக் கட்டி!
குளிர்மலர், மணியின் குப்பை
எருதின்மேற் பாயும் வேங்கை
நிலவுமேல் எழுந்த மின்னல்
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள் பார டாநீ” (பா.க.,ப.420)
குன்றத்தின் சிறப்பினைக் காட்டும் மேற்கண்ட பாடலில்
அங்குள்ள அனைத்துக் கூறுகளையும் விடுபடாமல் பாடிக் கவிதையை முழுமைப்படுத்தும் திறமை
பாவேந்தரிடம் மிகுதியாக உள்ளது. குன்றினைப் பாடும்போது குன்றின் தனிக்காட்சி, அதன்
காலைக்காட்சி, இரவுக்காட்சி, குன்றில் உறைவோர், பிற பறவை விலங்கினங்கள் யாவும் கவிதைகளில்
காட்டப்படுகின்றன. மழைமுகில் சூழ்ந்து நிற்கும்போது மின்விடும் காட்சி எருதின் மேல்
பாயும் வேங்கைபோல் உள்ளது என ஒரு நொடியில் காட்சியினைக் கண்முன் நிறுத்தும் திறம் குறிப்பிடத்தகுந்த
ஒன்றாகும்.
குன்றத்தின்கண் உள்ள தினைப்புனங்களில் காவல்புரியும்
குறத்தியர்களைப் பற்றிப் பாவேந்தர் உரைக்கும்பொழுது நுட்பமாகக் காட்டுகின்றார். தினைக்கதிர்கள்
பழுத்து நிற்கும்போது, அத் தினைகளைச் சுமக்கும் தாள் பகுதி பழுப்பு நிறத்தில் (பொன்னிறம்)
காட்சி தரும். வெறும் தினை என்று குறிப்பிடாமல் பழுத்த தாளுடைய தினை என்று கவிதையோட்டத்தின்
ஊடேயும் கவனமுடன் இயற்றியுள்ளது பாவேந்தரின் இயற்கையீடுபாட்டுக்கு அரண் தரும் சான்றாம்.
அங்குள்ள குறத்தியர் ஏறி நின்று கவண் வீசும் பரண் தேர்போல் நீண்டிருக்கும் எனவும்,
அவர்களின் விழி நீலமலர் போன்றது எனவும், செவ்விய கை செங்காந்தள்பூ போலச் செம்மைநிறம்
கொண்டது எனவும், அக் குறத்தியரின் இடுப்பு உடுக்கை போல் உள்ளது எனவும் பாவேந்தர் காட்சிப்படுத்துவதை,
“நிறைதினைக் கதிர்மு திர்ந்து
நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்
புறத்தினில் தேர்போல் நீண்ட
புதுப்பரண் அமைத்து, மேலே
குறத்தியர் கவண்எ டுத்துக்
குறிபார்க்கும் விழி, நீ லப்பூ!
எறியும்கை, செங்காந் தட்பூ!
உடுக்கைதான் எழில்இ டுப்பே!” (பா.க.,ப.421)
எனும்
பாடல்வழி அறியலாம்.
தூரத்திலிருந்து காண்பவர்களுக்குக் குன்றம் கருநீலத்தில்
காட்சி தரும். நெருங்கியிருந்து காண்பவருக்குப் பச்சை நிறம் காட்டும். நம் பாவேந்தரோ
இரவின் நிலவொளியில் திகழும் குன்றம் ஒன்றினை நம் கண்முன் தூக்கி வந்து நிறுத்துகிறார்.
நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பொருள்களை எடுத்து, உவமைகாட்டுவது பாவேந்தரின் தனிச்
சிறப்பாக உள்ளது.
நீல முக்காடு அணிந்த நிலவுப்பெண் நன்கு சுண்டக்காய்ச்சிய
திரட்டுப் பாலில் உறைமோர் ஊற்றிப் பெரிய மத்தால் கடைந்து, அப்பொழுது உருவாகும் தூய
வெண்ணெயை எடுத்துக் குன்றின்மேல் வீசினால் எவ்வாறு பால்ஒளி எங்கும் பரவிக் காணுமோ அதுபோல்
குன்றம் நிலவு ஒளியில் திகழ்ந்தது என்பதை,
“நீலமுக் காட்டுக் காரி
நிலாப்பெண்ணாள் வற்றக் காய்ந்த
பாலிலே உறைமோர் ஊற்றிப்
பருமத்தால் கடைந்து, பானை
மேலுற்ற வெண்ணெய் அள்ளிக்
குன்றின்மேல் வீசி விட்டாள்!
ஏலுமட் டுந்தோ ழாநீ
எடுத்துண்பாய் எழிலை எல்லாம்” (பா.க.,ப.422)
என்று
வியப்புடன் பாடுகின்றார்.
புறாக்
காட்சி
‘புறா’ என்னும் பறவையின் காதலன்பு பழந்தமிழ் நூல்களில்
பளிச்சிடக் காண்கின்றோம். கலித்தொகை நூலில்,
“இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீந்த வுலவையாற்
றுன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு
ளன்புகொள் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
மென்சிறகரா லாற்றும் புறவெனவு முரைத்தனரே”
(கலித்.11)
என்று
வெம்மையிலிருந்து தம் அன்புப் பெடையைச் சிறகசைத்துக் காத்த ஆண்புறாவின் ஆண்மை பேசப்படுகின்றது.
புறாக்களில் பலவகை இனங்கள் உள்ளன. அறிவில் சிறந்த மதிப்பு மிக்க புறாக்கள் பல இலட்சம்
விலை கொண்டவை. பல கல்தொலைவிலிருந்து கூடத் தம் இருப்பிடத்திற்குக் குறித்த நேரத்தில்
வந்து சேரும். குதிரை, எருது, சேவல் இவற்றை முன்னிறுத்திப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்
வழங்குவதுபோலப் புறாவுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்புறாக்களின் வாழ்க்கை அன்புமயமும்,
அறிவுமயமும் கொண்டது. ஒரு ஆண்புறா ஒரு பெண் புறாவுடன் மட்டுமே கூடி வாழும். இப்புறாக்கள்
ஒன்றுடன் ஒன்று காதல் கொள்ளத் தொடங்கல் - ஒன்றுக்கொன்று தம் காதல் விருப்பத்தைத் தெரிவித்தல்
- காதலை மறுத்தல் - காதலுக்கு உடன்படல் - காதல் வாழ்க்கை - இன்பம் காணல் - இளம் புறாக்களை
உண்டாக்கல் - பாதுகாத்தல் - அகவாழ்க்கையில் நெறிபோற்றல் - நெறிபிறழல் எனப் புறாவின்
வாழ்வில் பல படிநிலைக் கூறுகள் உள்ளன. இவற்றையெல்லாம் புறா வளர்ப்போர் அல்லது பறவையியல்
அறிவுடையோர் மட்டுமே அறிய முடியும். புறாவின் வாழ்வில் உள்ள அனைத்துக் கூறுகளையும்
அறிந்தவராகப் பாவேந்தரை அவர்தம் படைப்புகள் காட்டுகின்றன.
காதல் கொண்ட புறாக்களில் ஆண்புறா தன் விருப்பத்திற்குரிய
பெண் புறாவைச் சுற்றி வரும். இதனை எதிர்ப்பதுபோல் பெண் புறா கண்களால் எச்சரிக்கும்.
பின்பு பெண்புறா தலை தாழ்த்தி ஆண்புறாவை அழைக்கும். இவ்வியற்கைச் செயல் நெறிகளை ஊன்றி
நோக்கும் பாவேந்தர் இக்காட்சிகள் பற்றி உணராதவர்கள்கூட உணரும் வண்ணம்,
“தலைதாழ்த்திக் குடுகு டென்று
தன்னைச்சுற்றும் ஆண்பு றாவைக்
கொலைபாய்ச்சும் கண்ணால் பெண்ணோ
குறுக்கிற் சென்றே திரும்பித்
தலைகாட்டித், தரையைக் காட்டி
‘இங்குவா’, எனஅ ழைக்கும்
மலைகாட்டி அழைத்தாலுந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்?” (பா.க.,ப.436)
என்ற
பாடலில் விளக்குகின்றார்.
அன்பு கொண்ட புறாக்கள் தம் காதல் வாழ்வின் பயனாக
ஈன்ற குஞ்சுகளுக்கு உணவூட்டும் பாங்கினையும் பாவேந்தர் தாயின் பரிவுணர்ச்சியோடு அணுகி
நமக்குக் காட்டுகின்றார். தொலைதூரங்களுக்குப் பறந்து செல்லும் தாய்ப்புறாவும், தந்தைப்புறாவும்
இரையினைக் கொணரும். தாம் அதனை முதலில் நன்கு உணவாக்கி வாயில் வைத்திருந்து தம் குஞ்சியின்
பசிவாய் திறந்ததும் அவ்வாயில் கக்கித் தம் குஞ்சுகளை உயிர்ப்பூட்டி வளர்க்கும். பெண்புறாவும், ஆண்புறாவும் மாந்தர்களைவிடவும் பாசம்
மிகக் கொண்டவைகளாக ஊட்டி மகிழும். இந்தப் பாச உணர்ச்சிகள் மாந்தரிடம் மட்டும் இல்லை.
விலங்குகள், பறவைகள் என உலக உயிர்கள் அனைத்திடமும் உண்டு என்று பாவேந்தர் நமக்குச்
சொல்லாமல் சொல்கின்றார். பாசம் தோய்ந்த சொற்கள் கொண்டு பாவேந்தர் இக்கருத்தினைத்
“தாய்இறை தின்ற பின்பு
தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும் குஞ்சு
தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்
தாய்அருந் தியதைக் கக்கி த்
தன்குஞ்சின் குடல்நி ரப்பும்
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்
அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!”
(பா.க.,ப.437)
என்ற
பாடலில் வைத்துள்ளார்.
பாவேந்தர் உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பற்றும்
பாசமும் கொண்டவர் என்பதும், நுண்ணுணர்வுகள் பெற்றவர் என்பதும் பறவையியல், நிலநூல் அறிவு
முதலிய பலதிற அறிவுப் பெருமை கொண்டவர் என்பதும் இச்சான்றுகள் வழியாகத் தெரிகின்றது.
அணில்
வீச்சு
தமிழ் இலக்கியங்களில் அணில் பற்றிய செய்திகள்
பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. சங்க நூல்களிலும், பிற காப்பிய நூல்களிலும் அணிலின் அழகுக்
காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. குறுந்தொகை நூலுள்,
“அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்ற
லப்பென் தோழியவ ரகன்ற ஞான்றே” (குறுந்.41)
என்று
தலைவனைப் பிரிந்த தலைவியின் அழகுநலன், அணில் விளையாடும் தனிமையுடைய வீட்டினையொத்துக்
கவினின்றி இருந்ததாகப் புலவர் பாடியுள்ளார். யாரும் ஆள் இல்லாத வீட்டில் அணில் விளையாடுதல்
இயற்கை என்றவாறு காட்டப்படுகின்றது. அணில், மக்கள் உள்ளவழி இல்லத்தில் வாழாது என்பது,
‘வரிப்புற வணிலோடு கருப்பை யாடாது” (பெரும்பாண்.85) எனும் பாடலடியாலும் உணரலாம். இத்தகு
அணில் வாழ்க்கை, இயக்கம் பற்றிய எந்தப் புலவரும் இனிச் சிறப்புடன் குறிப்பிட்டுவிட
முடியாதவாறு தம் பாட்டுத் திறமையால் பாவேந்தர் அணிலின் செயல்பாடுகளை அழகுடன் புனைந்து
காட்டியுள்ளார்.
ஊர்ந்து செல்லும் உயிரிகளில் அணிலின் இயக்கம்
மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டது. எந்த நேரமும் அணில் மிகவும் சுறுசுறுப்பாகவும்
விழிப்பாகவும் இருக்கும். சிறு ஒலி எழுந்தால்கூட உடன் தன் இயக்கத்தை விரைவுபடுத்தித்
தாண்டிச் சென்றுவிடும். முருங்கைமரம், வீட்டில் ஒட்டுப் பகுதிகள் - முன்றில்கள் இவற்றில்
விளையாடும் அணிலின் அசைவுகள் பாவேந்தரால் உள்ள நோக்கப்பட்டுப் பாட்டு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது
அவரின் இயற்கைநேய ஈடுபாட்டைக் காட்டுவதாக அமைகின்றது.
‘கீச்சுக்கீச்சு’ என்று கத்தும் இயல்புடையது
அணில். இது கிளைகளில் வீச்சென்று தாவிச் செல்லும் இயல்பினது. அம்பு பாய்ச்சியதுபோல்
விரைந்து பாய்ந்துச் செல்லும். அவ்வாறு பாய்ந்துச் சென்ற அணில் இன்பநோக்கில் இணையும்போது
ஆண் அணில் பெண் அணிலின் முதுகின் மீது குதிக்கும். இதுவே இவ் உயிரியின் இன்பப்பெருக்க
முறையாகவும் உள்ளது. இவ்வாறு இணையும் ‘பொழுது’ மிக மிகச் சிறிதேயாகும். இவ் உயிரியின்
வாழ்விடம் - இயக்க விரைவு – காதல் புரிதல் இன்பக் கலவி யாவும் காட்டும் வண்ணம் தம்
படைப்பை உயிரோட்டமாகப் பாவேந்தர் அமைப்பதைக்,
“கீச்சென்று
கத்தி – அணில்
கிளையொன்றில் ஓடிப் - பின்
வீச்சென்று பாய்ந்துதன் காதலன்வாலை
வெடுக்கென்று தான்கடிக்கும்
ஆச்சென்று சொல்லி – ஆண்
அணைக்க நெருங்கும் - உடன்
பாய்ச்சிய அம்பெனக் கீழ்த்தரை
நோக்கிப்
பாய்ந்திடும் பெட்டை அணில்
மூச்சுடன் ஆணோ – அதன்
முதுகிற் குதிக்கும் - கொல்லர்
காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளிஆகக்
கலந்திடும்” (பா.க., ப.161)
என்னும்
பாடலின்வழி அறிய முடிகின்றது.
குழந்தையின் அழகு வெளிச்சம்
பாரதிதாசன் குழந்தையுள்ளம் படைத்தவர் என்பதை நேரில்
பழகியவர்கள் குறிப்பிடுவர். எனினும், இளகிய நெஞ்சமும், கடுஞ்சினம் கொள்ளும் நெஞ்சமும்
அப்பெருந்தகையிடம் காணப்பட்டதையும் அறிஞர்கள் சொல்லத் தவறுவதில்லை. பெரும்பாலும் இளகிய
உணர்வுடையவராகவே விளங்கிய பாவேந்தர் குழந்தைகளைப் பற்றிப் பாடும் இடங்களில் எல்லாம்
தக்க உவமைகளின் வழித் தம் தனித்திறனைக் காட்டுவது இயல்பு. ‘காலுக்குப் புன்னை இலை போலும்
செருப்பணிந்து’ செல்லும் சிறுவர்களைப் படம்பிடித்துக் காட்டுவதிலும் பாவேந்தர் நுட்பமுடன்
படைப்பினை வழங்கியுள்ளார். குழந்தைகளின் உடல் வனப்பு, சிரிப்பு, கால், கை அழகு, இமையின்
இயல்பு யாவும் பாவேந்தர் காட்டும் குழந்தையிடம் மிகுதியாக இருக்கும்.
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு!........
குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தான் அறிவார்.
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!...
செம்பவ ழத்துச் சிமிழ்சாய்த்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!” (பா.க.,
ப.798)
என்று
பாடியுள்ளமை அவர் இயற்கையழகில் கொண்டுள்ள ஈடுபாட்டையும் அவ் இயற்கையீடுபாட்டு உணர்ச்சியைப்
பொருத்தமான உவமைகளில் பொதிந்து காட்டும் புலமை நலத்தையும் காட்டுவனவாகும்.
சிட்டுக்குருவி
சிட்டுக் குருவியின் வாழ்க்கையையும் பாவேந்தர்
கூர்ந்து நோக்கிப் பாடல் புனைந்துள்ளார். வீட்டிலிருந்த குருவிக் கூட்டிலிருந்து கீழே
விழுந்துவிட்ட ‘குஞ்சு’ ஒன்றின் இயல்புகளையும், அக்குஞ்சுக்கு விரைந்தோடி வந்துதவும்
தாய்ப்பறவையையும் காட்டிப், பாவேந்தர் உலக உயிர்கள் அனைத்துடனும் தமக்குள்ள ஈடுபாட்டைப்
பதிவு செய்து விடுகின்றார். புழு, பூச்சு, பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடி என
அனைத்து உயிரிகளின் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், உணர்வுகள் யாவும் கவிஞனுக்குத்
தெரிந்திருக்க வேண்டும் என்ற இயற்கைக் கல்வியினைப் பாவேந்தர் தம் படைப்புகளில் வைத்துள்ளார்.
குருவியின் குஞ்சு தரையில் விழுந்து துடித்தபோது ‘கீச்சுக் கீச்சு’ என்று கத்தியது.
இது கேட்ட தாய்ப்பறவை மின்சாரத்தில் இயங்கும் விசிறி போல விரைந்து அசையும் இறக்கையால்
‘சரேலென’ வந்து தம் நேய உணர்ச்சியைக் காட்டியது. பாவேந்தரின் கைவண்ணத்தில்,
“கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு
வீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!
யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்
கீச்சுக் கீச்சென்று கூச்சலிட்டது.
கடுகு விழியால் தடவிற்றுத் தாயை
தீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!
தும்பைப் பூவின் துளிமுனை போன்ற
சிற்றடி தத்தித் திரிந்து, சிறிய
இறக்கையால் அதற்குப் பறக்கவோ முடியும்!
மின்இயக்க விசிறி இறக்கையால்
சரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது.
கல்வி சிறிதும் இல்லாத் தனது
செல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி
‘இப்படி வா’ என இச்இச் என்றதே!
இப்படிப் போவதை அறிந்து துடித்ததே!” (பா.க.,
ப.799, 800)
எனும்
பாடலாய் மலர்ந்துள்ளது. குழந்தைகளைப் பாதுகாக்க குழந்தைப் பள்ளிகள் தேவை என்பதை வலியுறுத்தி
எழுதிய பாடலில் பறவை-குஞ்சு பாசநிலையைப் பாவேந்தர் காட்டுகின்றார்.
தமிழ்க் கவிதையுலகில் இயற்கையைப் பாடுவதில் பாவேந்தர்
சிறப்புப் பெறுகின்றமை சங்க நூல்கள் - பிற நூல்களின் ஒப்பீடுகளின் வழி அறியமுடிகின்றது.
இயற்கைப் பொருள்களைப் பாடும்பொழுது நுண்ணோக்கும், முழுமையாக உணர்தலும், சிறப்பாக வெளிப்படுத்தும்
வெளியீட்டு உத்தியும் பாவேந்தரிடம் சிறப்பாக உள்ளமையைக் கட்டுரை தெளிவாக்கியுள்ளது.
பாவேந்தரின் படைப்புகளில் இடம்பெற்றுள்ள அவர்தம் இயற்கை நேயமே அவரை மிகச் சிறந்த கவிஞர்களின்
வரிசைக்கு இட்டுச் சென்றது எனலாம்.