நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 21 ஜனவரி, 2023

புலவர் வீ. செந்தில்நாயகம் மறைவு!

புலவர் வீ. செந்தில்நாயகம்

 மூத்த தமிழறிஞரும் தொல்காப்பியத் தொண்டருமான புலவர் வீ. செந்தில்நாயகம் ஐயா அவர்கள் 20.01.2023 அன்று திருநெல்வேலியில் இயற்கை எய்திய செய்தியறிந்து பெருங்கவலையுற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். பாளையங்கோட்டையில் சந்தித்து ஐயா அவர்களைத் தொல்காப்பியச் சிறப்பு குறித்து உரையாற்றச் செய்து, இணையத்தில் பதிவேற்றி நெஞ்சம் நிறைவடைந்த பழைய நிகழ்வுகள் வந்துபோகின்றன. தமிழ் வாழும் காலமெல்லலாம் இத்தொல்காப்பியத் தொண்டர் புகழ் வாழ்வு வாழ்வார்.

புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

  வீ. செந்தில்நாயகம் அவர்கள் நெல்லை மாவட்டம் விக்கிரம சிங்கபுரத்தில் வாழ்ந்த நா. சு. வீரபாகு பிள்ளை, சண்முக வேலம்மாள் ஆகியோரின் மகனாக 18.02.1942 இல் பிறந்தவர்நெல்லை அரசு மாதிரிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றவர் பிறகு விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளர் நல உரிமைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை பயின்றவர்.

1960 முதல் 1964 வரை  திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றவர். இவர் திருபனந்தாளில் பயிலுங்காலத்தில் பேராசிரியர்கள் கா. . வேங்கடராமையா, தா.மா. வெள்ளைவாரணம், மு. சுந்தரேசம் பிள்ளை, சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் பேராசிரியர்களாக விளங்கினர். இவர் பயிலுங்காலத்தில்  கடையத்தில் வேலை பார்த்த முத்தரசன், குலசேகரப்பட்டினம் சார்ந்த இலக்குவனார், ஆண்டிப்பட்டி சீனிவாசன்  உள்ளிட்ட நண்பர்கள் தம் படிப்புக்கு உதவினர் என்று செந்தில்நாயகம் தம் நன்றியுடைமையைப் புலப்படுத்துவது உண்டு. நம் புலவர் அவர்கள் பயிலுங்காலத்தில் பகலுணவும், இரவுணவும் திருமடத்தில் இலவசமாக வழங்கப்பட்டன என்பது வரலாறு. பின்னர் நம் புலவர் அவர்கள்  பி.லிட், முதுகலைத் தமிழ், இளங்கல்வியியல் பட்டம் உள்ளிட்டவற்றைப் பெற்றவர். திரு. இருதய நடுநிலைப்பள்ளியில், தமிழாசிரியராகவும்(1964), புதுக்கோட்டையில் தமிழாசிரியர் பயிற்சி பெற்ற பிறகு 1967 இல் பத்தமடை இராமசேசன் உயர்நிலைப்பள்ளியில்  முதுகலைத் தமிழாசிரியராகவும் பணியாற்றி 1999 இல் ஓய்வுபெற்றவர்.

 வீ. செந்தில்நாயகம் அவர்களின் பெரும்புலமையை அறிந்த இவர்தம் பள்ளித் தலைமையாசிரியர் இவரின் வகுப்பில் கடைசி இருக்கையில் அமர்ந்து பாடம் கேட்பது உண்டு. இவர் பணிபுரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வடமொழி அறிந்தவர் என்பதால் வடமொழி இலக்கியங்களை இவருக்கு அறிமுகம் செய்தமையும் உண்டு. பத்தமடையில் பணிபுரிந்தபொழுது, சிவானந்த மகராசி அவர்கள் இவரின் கம்பராமாயணப் பொழிவு நடைபெற உதவி, இரண்டரை ஆண்டுகள் தொடர்பொழிவு நடைபெறுவதற்குத் துணைநின்றார். அம்பாசமுத்திரம்சைவத் தமிழ் அண்ணல் நடராச முதலியார் அவர்கள் நம் செந்தில்நாயகம் அவர்களின் கம்பராமாயணப் பொழிவு விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற வழி செய்து, பொழிவின் நிறைவுநாளில் நம் புலவரை யானை மீது அமர்த்தி, ஊர்வலம் வரச் செய்து பெருமைப்படுத்தினார்கள். பெரியபுராணம் குறித்த தொடர்பொழிவு ஏரல் என்னும் ஊரில் நம் புலவரால் நடத்தப்பட்டுள்ளது.

 தம் பணியோய்வுக்குப் பிறகு நெல்லை, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், காந்தி கதை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைத் தொடர்பொழிவுகளின் வழியாக இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்துவந்தவர் நம் செந்தில் நாயகம் ஐயா!

   தமிழ்த்தொண்டில் நிலைபெற்று நிற்கும் வகையில் பல நூல்களை எழுதித் தம் புலமைநலம் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்க, இத்தமிழ்த் தொண்டர் ஆவன செய்துள்ளார். இவ்வகையில் சற்றொப்ப இருபது நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.

புலவர் வீ. செந்தில்நாயகம் குறித்த பழைய பதிவு:

https://muelangovan.blogspot.com/2019/11/blog-post_24.html

புலவர் வீ. செந்தில்நாயகம் சிறப்புரை


ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பாவாணர் பிறந்தநாள் விழா!

 


இடம்: பாவாணர் பாசறை, முரம்புமவுண்டு சீயோன் (பேருந்து நிறுத்தத்தின் தென்புறம்), தெற்குச் சோழபுரம், இராசபாளையம் வட்டம், விருதுநகர் மாவட்டம். 

நாள்: 09.02.2023, வியாழக்கிழமை, நேரம்: காலை: 9.30 மணிக்கு மேல் 

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் பிறந்த நாள் விழாவினைப் பாவாணர் கோட்டத்தினர்  09. 02. 2023, காலை 9.30 மணிக்கு நடத்த உள்ளனர். இந்த நாளில் பேரணி, கொடியேற்றம், இசையரங்கம், நூல் வெளியீடு, பாவாணர் பிறந்தநாள் பேருரை, பாவாணர் கொள்கை பரப்புநர் விருதளிப்பு, நூலரங்கம், பட்டிமன்றம் எனப் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம். 

தொடர்புக்கு: ஆ. நெடுஞ்சேரலாதன், பேசி: 94432 84903