நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 26 டிசம்பர், 2016

“வெட்டிக்காடு” சுயுபுனைவின் வெளிப்பாடு



இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று சுயபுனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக் கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.

தம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977 இல் சுயபுனைவு என்னும் சொல்லை வழங்கியவர் செர்ஜ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky). குறிப்பாகப் பிரெஞ்சுத் தேசத்தில் வாழ்ந்த படைப்பாளிகள் மிகச் சிறந்த புனைவு இலக்கியங்களைத் தந்துள்ளனர். ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி என்னும் புனைவு இலக்கியம் குர்தீஸ்தான் விடுதலைப் போரை மிக அழகிய வடிவில் தந்துள்ளது. சலீம் சுயபுனைவாகத் தம் படைப்பை உருவாக்கினாலும் குர்திஸ்தானின் பழைய வரலாறு, பண்பாட்டுச்சிறப்பு, வாழ்க்கை முறை என அனைத்தையும் நுட்பமாகப் பதிவுசெய்திருப்பார்.

சுயபுனைவு வடிவில் தமிழில் நிறைய படைப்புகள் சிறுகதையாகவும், புதினமாகவும், திரைப்படமாகவும், கவிதைகளாகவும் வந்துள்ளன. கி. ராவின் பிஞ்சுகள் என்ற குறுநாவல் சுயபுனைவுக்கு நல்ல சான்று. பேராசிரியர் த. பழமலய் அவர்களின் சனங்களின் கதை குறிப்பிடத்தக்க படைப்பு. சேஷாசலத்தின் ஆகாசம்பட்டு, சிற்பியின் கிராமத்து நதி குறிப்பிடத்தக்க கவிதை இலக்கியங்களாகும். கிராமப்புறத்து நிகழ்வுகள், கதைமாந்தர்கள், சொல்லாட்சிகள் கொண்டு புதிய இலக்கியப் போக்காக இத்தகு நூல்கள் வெளிவந்த பிறகு பல்வேறு படைப்புகள் தமிழில் வெளிவந்தன. குறிப்பாக நடுநாட்டு இளைஞர்கள் தங்கள் படைப்புகளில் தங்கள் வாழ்க்கை, பழக்க வழக்கம், குடும்ப அமைப்பு, ஊர், உறவு, தெய்வம் என அனைத்தையும் உள்ளடக்கிய படைப்புகளை வழங்கினர். தங்கர்பச்சானின் ஒன்பதுரூபாய் நோட்டு, வெள்ளைமாடு, குடிமுந்திரி உள்ளிட்ட படைப்புகளைச் சொல்லலாம். கி. தனவேல் இ.ஆ.ப. அவர்களின் செம்புலச் சுவடுகள் நூலில் புதுக்கூரைப்பேட்டை (இன்றைய நெய்வேலியின் பகுதி) மக்களின் வாழ்க்கைச் சுவடுகள் பதிவாகியுள்ளன.

வெட்டிக்காடு என்னும் தம் ஊர்ப் பெயரில் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதியுள்ள நூல் சுயபுனைவு வடிவில் வந்துள்ள சிறந்த நூலாக புலப்படுகின்றது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் நல்ல மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதன்மை பெற்றுப் பாராட்டுப் பெறுவதை ஆண்டுதோறும் காண்கிறோம். இப்படித் திறன் படைத்த மாணவ மாணவியர் பிற்பாடு என்ன ஆனார்கள் என்பதை அவர்களே சொன்னால்தான் உண்டு. இந்நூல் பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாநில முதன்மை பெற்ற கிராமத்து மாணவரான இரவிச்சந்திரன் கல்வி தனக்கு ஏற்றம் தந்ததை விளக்கும் நூல்.

இரவிச்சந்திரன் இப்போது உலகளாவிய அளவில் முன்னோடித் தொலைத்தொடர்பு கட்டமைப்புத் திட்டங்களில் (Telecommunications Network) மின்னணுப் பொறியாளராக பணியாற்றுகிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மலர்ந்துள்ள இவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, பணியின் காரணமாகச் சிங்கப்பூரில் வசித்துவருகிறார். ஒவ்வொரு நாளும் அலுவல் காரணமாக கண்டம்விட்டுக் கண்டம் பறக்கிறார். வானுலக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தாம் பிறந்த வெட்டிக்காடு என்னும் சிற்றூரின் நினைவு இவரைப் பேயைப் போல் பிடித்தாட்டியதால் தம் அனுபவங்களை 2003 முதல் எழுதத் தொடங்கினார்.

இரவி 17 வயது வரை தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு ஊரில் வாழ்ந்து, சராசரி உழவர் குடும்பத்தின் அனைத்து வகையான மேடுபள்ளங்களையும் கடந்து, கிண்டிப் பொறியியல் கல்லூரியில் மின்னணுப் பொறியியல் படித்து, தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பட்டம் (எம்.பி.) பெற்றவர். பத்தாம் வகுப்பில் மாநில அளவில் தர முதன்மை பெற்று, இந்திய அரசின் உதவித் தொகைபெற்றுப் பொறியியல் கல்வி பெற்றவர்.  இவரின் உள்ளம் கிராமத்து இளைஞனின் உள்ளம். பதினேழு வயது வரை வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஆழ்மனத்துள் புதைந்து கிடந்து, நேரமும் சூழலும் உந்தித் தள்ள அவை சிறுகதை, கவிதை, எழுத்துரை எனப் படைப்புகளாக வெளிவந்துள்ளன.

தம் கிராமத்து இளமைக்கால நினைவுகளையும் சில உண்மை நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது கட்டுரையாக்கிய இவர், இவற்றைத் தொகுத்து வெட்டிக்காடு என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். வெட்டிக்காடு, காடுவெட்டி என்னும் ஊர்ப்பெயர்கள் பண்டைக்காலத்தில் மக்கள் காடு கரம்புகளை அழித்து ஊராக்கிய வரலாற்றைச் சொல்கின்றன. அந்த வகையில் வயலும் வயல்சார்ந்த பகுதியுமாக விளங்கும் வெட்டிக்காடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த சோமு ஆலம்பிரியர் என்னும் நெல்வணிகரின் மகனாகப் பிறந்து, படிப்புடன் ஊடுதொழிலாக ஆடுமாடுகளை மேய்ப்பது ஏரோட்டுவது, பனங்காய் வெட்டுவது, நாவல்பழம் பறிப்பது என்று கிராமத்துக்குரிய அனைத்துப் பொழுதுபோக்குகளையும் பயின்ற ஒரு பட்டிக்காட்டுச் சிறுவனின் இளமைக்கால நிகழ்வுகள்தான் இந்த வெட்டிக்காடு நூலின் உள்ளடக்கமாக விரிந்து நிற்கின்றது.

வெட்டிக்காடு நூலில் கரைந்த எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி, முனைவர் ம.இராசேந்திரன், நீதியரசர் நாகமுத்து ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் சிறப்புகளை இனங்காட்டியுள்ளன. இரவிச்சந்திரனின் இன்றைய வளர்ச்சி நிலையையும், கடந்துவந்த பாதைகளையும் வியப்புடன் பார்த்து மகிழும் அணிந்துரை அறிஞர்கள் தங்கள் இளமைக் கால நிகழ்வுகளையும் கிராமப்புறங்கள் நாகரிக வளர்ச்சியால் அடையாளங்களை இழந்து வருவதையும் மறவாமல் பதிவுசெய்துள்ளனர்.

சமூக பொருளாதார மேல்சாதிக்காரர்களால் வரலாறு எழுதப்படும் சூழலில் அடித்தட்டு மக்களின் வரலாறு (Subaltern History) எழுதப்பட்டு வருவதை வரவேற்கும் சுந்தர்ராஜ் மாணிக்கம் போன்றவர்களை நினைக்கும்பொழுது வெட்டிக்காடு நூலின் முக்கியத்துவம் விளங்கும்.

பன்னிரண்டு தலைப்புகளில் அமையும் வெட்டிக்காடு நூல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

வெட்டிக்காடு என்னும் முதல் தலைப்பில் ஊர் அமைவிடம், உழவுத்தொழில் செய்யும் மக்களின் நிலை, ஊரின் காலைக்காட்சி உள்ளிட்ட தாம் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் சிறப்புகளை இரவி பதிவுசெய்துள்ளார். உழுதல், விதைத்தல், பறித்தல், நடுதல், அறுத்தல் என்று ஆறு மாதம் ஊர் அமர்க்களப்படும். இங்கு நடவுப்பாடல் வழியாகவும், தெருக்கூத்துகள் வழியாகவும் இசைத்தமிழ் வளர்ந்ததை இரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். மாடுமேய்த்தலும், ஆடுமேய்த்தலும் கிராமங்களின் தேசியத்தொழிலாகும். கபடி விளையாடுதல், ஓரியடித்தல், கிளிகோடு பாய்தல், பந்தடித்தல், பட்டம் விடுதல் போன்ற கிராமத்து விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

வெட்டிக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பெருந்தலைவர் காமராசரின் கல்விக்கொடையால் கிடைத்தது. இரண்டு ஆசிரியர்களுடன் எழுபத்தைந்து மாணவர்களைக் கொண்டு பீடுநடைபோட்ட பள்ளி அது. இரவிச்சந்திரன் நான்காம் வயதில் அடம்பிடித்துப் பள்ளிக்குச் சென்றது முதல் சுப்பிரமணியன் ஆசிரியரிடம் அகரம் பயின்றது வரையிலான செய்திகளைப் படிக்கும்பொழுது கிராமத்து மனிதர்கள் அனைவரும் தங்களின் இளமை வாழ்க்கைக்குக் கட்டாயம் திரும்புவார்கள். ஒன்றாம் வகுப்பில்(1973) சேர்ந்தது தொடங்கி தம் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் இரவி. வேப்பங்குச்சியில் பல்துலக்கியது, கிராமத்து ஏரிகளில் குளித்தமை பற்றி விளக்கும் இரவிச்சந்திரன் பேஸ்ட், பிரஷ், சோப் நாங்கள் பார்க்காதது என்கின்றார். பழைய சோறும் தயிரும் உணவாக அமைந்த கிராமத்து வாழ்க்கையில் இட்டிலி, தோசை போன்ற உணவுகள் பொங்கல் தீபாவளியில்தான் கிடைக்கும் என்கின்றார். நம் உணவு, பழக்க வழக்கம், பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதை எதிர்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமூக ஆவணம்.

அக்கா திருமணத்தன்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்ததைப் பாராட்டிய சுப்பிரமணியன் சாரின் பேருள்ளம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. பள்ளிக்கு நாள்தோறும் செல்லும் பழக்கத்தை நினைவூட்டும் இரவி, பின்னாளில் இரண்டு முறை விடுப்பெடுக்க நேர்ந்தமைக்கான காரணத்தையும் கூறத் தயங்கவில்லை, பன்னிரண்டு ஆண்டு பள்ளி வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயும், கடுங்காய்ச்சலும் விடுப்பெடுக்க வைத்ததைக் குறிப்பிடுகின்றார் (பக்கம்42). எட்டுக் கிலோ மீட்டர் தொலைவிலிருந்த மன்னார்குடிப் பள்ளிக்குப் பேருந்தில்  செல்லக் காசு இல்லாத பொழுது, நடந்தே சென்றுள்ளதையும் காலில் செருப்பில்லாமல் நடந்துபோனதால் தார் காலில் படிந்து சுட்ட நிலையையும் படிக்கும்பொழுது இரவியின் வறுமை வாழ்க்கை கண்ணீர்வரச் செய்கின்றது.

அரசுபள்ளிகள் ஆதரிப்பார் இன்றிக் கிடக்கும்பொழுது, இன்றைய கான்வெண்டு கல்விக்கூடங்கள் வேன்களிலும் ஆட்டோக்களிலும் கிராமத்துப் பிள்ளைகளைச் சீருடைகளில் அள்ளிக்கொண்டு போவதைக் காணும்பொழுது தமிழகக் கல்வி வரலாறு இருவேறு துருவங்களில் பயணம் செய்வதை உணரலாம். ‘எருமை மாடு மேய்க்கிறவனுக்கும் மாட்டுக்கறி திங்கிறவனுக்கும் படிப்பு வராதுஎன்று சுப்பிரமணியன் ஆசிரியர் சொன்னதை நினைத்த இரவி மாடுமேய்க்க மறுத்த நிகழ்வும் பதிவாகியுள்ளது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இளமை வாழ்க்கையைத் திறந்து காட்டியுள்ள இரவியின் எழுத்துகள் தமிழ்கக் கல்வி வரலாற்றை அறிய விரும்புவர்களுக்குப் பேருதவி புரிவன.

கிண்டிப் பொறியியல் கல்லூரியில் சேரும் தம் பதினேழாம் வயதுவரை மாடுமேய்த்த வரலாற்றை நினைவுகூர்ந்துள்ளார். படிப்பறிவு இல்லாத அம்மாவுக்கு மாடுமேய்ப்பதைச் செய்யாத மகன்மேல் எப்பொழுதும் கோபம்தான். எழுதிய நோட்டுகளைக் கிழித்தமை, நான்காம் வகுப்பில்தான் ஏபிசிடி படிக்கத் தொடங்கியது, ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயர் எழுதியது என்று பூர்வாசிரம வரலாறு பதிவாகியுள்ளது. ஆங்கிலத்தில் 36 மதிப்பெண் வாங்கியதற்குத் திட்டித் தீர்த்த இந்திரா டீச்சர், “பர்ஸ்ட் ரேங் மாணவன் சீனிவாசன் ஆங்கிலத்தில் 98… நீயெல்லாம் கிராமத்துல மாடு மேய்க்கதான் லாயக்கு”(பக்கம் 52) என்று கூறிய கண்டிப்புச் சொற்களும் அவமானச் சொற்களும்தான் இரவியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன. அதே இந்திரா டீச்சர் இரவியின் மாநில முதன்மை மதிப்பெண் பார்த்து, வாழ்த்தியிருப்பது நெகிழ்ச்சி! தம் இளமைக்கல்விக்கு வித்திட்ட சுப்பிரமணியன் சார், முத்துக்கிருஷ்ணன் சார் இருவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

பள்ளியைத் திறப்பது, கூட்டுவது, மணி அடிப்பது, உணவுக்குரிய பொருள்களை எடுத்துத் தருவது, உணவு சமைப்பது, பரிமாறுவது, ஆசிரியர்களுக்குத் தேநீர் வாங்கிவருவது, ஆசிரியர்களின் வயல்வேலைகளின்பொழுது அதற்குரிய குற்றேவல் செய்வது, ஆசிரியர்கள் வராதபொழுது வகுப்புகளை அமைதியாகப் பார்த்துகொள்வது, பள்ளியைப் பூட்டிச் செல்வது வரையிலான கிராமப்புறப் பள்ளிப் பணிகளை மனந்திறந்து எழுதியுள்ளார். இந்த வாழ்க்கையை இன்றைய மாணவர்கள் கேட்பதற்குக்கூட வாய்ப்பில்லை.

தேர்வில் பார்த்து எழுதுவது தவறு என்பதை அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்த இரவி தம் கிண்டிப் பொறியியல் கல்லூரிச் சம்பவங்களை நினைவுப்படுத்தி, அங்கும் தான் பார்த்து எழுதாமல் நேர்மையாக எழுதியதைப் பதிவு செய்கின்றார். தவறு செய்வதற்குரிய வாய்ப்பு வந்தாலும் அங்கும் நேர்மையுடன் நடந்துகொள்ளும் உயர்பண்பே இவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றங்களைத் தந்தது என்கின்றார். வெட்டிக்காடு தொடக்கப்பள்ளியில் பெற்ற படிப்பு, நேரம் தவறாமை, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் முழுமனத்துடன் திறம்படச் செய்தல், நேர்மை போன்ற பண்புகளே முன்னேற்றத்திற்குக் காரணம் என்கின்றார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள உன்னால்முடியும் தம்பி என்ற சிறுகதையில் சண்முகம் என்ற பாத்திரத்தின் வழியாக இரவி தம் இளமைக்கால வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். வெட்டிக்காட்டுக்கு அருகில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் ஏழாம் வகுப்புப் படித்தபொழுது கடலைச்செடிக்குத் தண்ணீர் இறைத்திருக்கிறார். பெற்றோரோ கல்விக்கு ஆதரவு தரவில்லை. இந்நிலையில் சிரியர் இராஜகோபால் என்பவர் கொடுத்த ஊக்கமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்து மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள தடைகளையும் உதவிய ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் இரவி நினைவுகூர்ந்துள்ளார். வறுமையில் படித்து முன்னேறி, அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளராக உயர்வு பெற்றுத் தாம்படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த நிலையை அழகிய கதையாக்கிக் காட்டியுள்ளார். கவிதை, கதை, உரைநடை என்று பல்வேறு வடிவங்களில் இந்தப் படைப்பை அமைத்துள்ளார்.

அய்யனார்சாமி என்ற சிறுகதையில் புலவர் சவுந்தரராசன் பகுத்தறிவுக் கொள்கையுடையவர் எனவும், அச்சம் என்பதை அறியாதவர் எனவும் தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிப்பதில் தயக்கம் காட்டாதவர் எனவும் அறிமுகம் செய்கின்றார். அதே நேரத்தில் ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்புச்சுவடி வாங்கித் தருவதுடன் தம் மன்னார்குடி வீட்டுக்கு விடுமுறை நாளில் வரச்செய்து உணவுகொடுத்துப் படிப்புச்சொல்லித் தருவார் என்றும் அவரின் பொறுப்பார்ந்த ஆசிரியப்பண்புச் சிறப்பையும் நமக்கு அறிமுகம் செய்துள்ளார். புலவர் ஐயா தம் இடுப்பில் கத்தியை எப்பொழுதும் சொருகியிருப்பார் எனவும் ஒருமுறை விடுப்பு தராத தலைமையாசிரியரின்  மேசைமீது கத்தியை எடுத்துக் குத்தி, மிரட்டியதையும் இக்கதையில் இரவி குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் செய்யும் குறும்புகளைக் கவனித்துப் புலவர் கடும் தண்டனை கொடுத்ததால் பல மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போனதையும் குறிப்பிடுகின்றார். கடைசி பெஞ்சு இராமமூர்த்தி அய்யனார்சாமி போல் அருள் சொன்னதை விளக்கியுள்ள காட்சி இரவியிடம் மிகச்சிறந்த எடுத்துரைப்பு ஆற்றல் உள்ளதை நமக்கு நினைவூட்டுகின்றது.

கொட்டாப்புலிக் காளைகள் என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்கமுடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம்வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின் குரலுக்குப் பணிந்து அந்த மாடுகள் அம்மாவை நெருங்கி வந்ததையும் அறியும்பொழுது நமக்கு ஆச்சரியத்தை இந்தக் கதை ஏற்படுத்துகின்றது.

வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் அறிவுள்ளவையாகவும், மானமுள்ளவையாகவும், வீரமுள்ளவையாகவும் இருப்பதைக் கொட்டாபுலிக் காளைகள் கதை உணர்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் தம்மைக் கவனிக்கும் அம்மா, அப்பா, நாகநாதனைத் தவிர மற்றவர்களைத் தம்மை நெருங்கவிடாமல் செய்யும் கொட்டாபுலிக் காளைகளைப் போல் வரலாறு படைத்த பல காளை மாடுகள் தமிழகத்தின் கிராமங்களை ஆட்சிசெய்துள்ளதை ஒவ்வொரு உழவனும் தங்கள் வாழ்க்கையை எழுதும் பொழுது இதுவரை தமிழுக்குக் கிடைக்காத கதைக்கருக்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தம் குடும்பத்தினருடன் வண்டிமாடுகளை இணைத்துப் புகைப்படம் எடுப்பதையும், மாடுகளின் அருகில் நின்று புகைப்படும் எடுப்பது, வண்டியோட்டுவதுபோல் புகைப்படம் எடுப்பது தமிழகத்து உழவர்களின் விருப்பமாகும்.

கொள்ளிவாய்ப் பிசாசுகள் என்ற கதையில் கிராமங்களில் காலம் காலமாக நம்பப்படும் கொள்ளிவாய்ப் பிசாசுக் கதையைச் சொல்லி தம் அண்ணன் இந்திரஜித் மூலமாகப் பயம் தெளிந்த தம் அனுபவத்தை எழுதியுள்ளார்.

நாவற்பழம் சிறுகதையில் பள்ளி நிகழ்வுகள் பேசப்படுகின்றன. மாரியப்ப கண்டியர் வீட்டின் நாவல்பழம் திருடித் தின்னும் நிகழ்வு தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. இரவி, உப்பிலி, இராதா மூவரும் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிப்பதும் இந்தக் கூட்டுக்கொள்ளையில் பங்கேற்காத இளஞ்செழியன் இரவியின் அப்பாவிடம் பற்றவைப்பதும், அப்பாவின் தண்டனையும் இந்தச் சிறுகதையைச் சுவையுடையதாக்குகின்றது. அன்று அப்பாவிடம் வாங்கிய அடிதான் முதலும் முடிவும் என்று கதையை இரவி முடித்துள்ளார்.

பொங்கல் என்ற தலைப்பில் இரவிச்சந்திரன் எழுதியுள்ள எழுத்துரையில் கிராமங்கள் எவ்வாறு தம் பாரம்பரிய இயல்புகளை இழந்து, தனித்தன்மை கெட்டு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன என்பதைப் பதிவு செய்துள்ளார். பொங்கல் திருவிழா உறவினர்கள் ஒன்றுகூடி நடத்தும் பெருவிழாவாக நடைபெற்று மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்த நிலை மாறிக் கிராமங்களில் பிரிவுகள் உண்டாகி, மனக் கசப்புகளால் பிரிந்து கிடக்கும் நிலையை எடுத்துரைத்துள்ளார். வழிபாட்டு முறைகள், உறவினரின் ஒன்றுகூடல், சிற்றூர்ப்புறப் பழக்க வழக்கங்கள், கிராமப்புற விளையாட்டுகள், சிற்றூர் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், சடங்குகள், வேளாண்மை, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டும் எழுத்துரைகளாக இரவியின் எழுத்துரைகள் உள்ளன. ஒற்றுமையுடன் வாழ்ந்த கிராமத்து மக்கள் சண்டை சச்சரவுகளால் போலிஸ், கோர்ட்டுக்குச் செல்லும் நிலையில் உள்ளதைக் கவலையுடன் பதிவுசெய்துள்ள இரவியின் ஆதங்கம் ஒவ்வொரு எழுத்திலும் பதிவாகியுள்ளது.

களவாணி திரைப்படம், குற்றப்பரம்பரை புதினம் குறித்த மதிப்பீடுகளையும் எழுதியுள்ளார்.

அப்பா என்னும் தலைப்பில் எழுபது வயதுவரை வாழ்ந்து, இயற்கை எய்திய தம் தந்தையின் குணநலன்களை இரவி வரலாறாக்கியுள்ளார். ஒவ்வொரு மகனும் தந்தையின் வரலாற்றை எழுதும்பொழுது தமிழகப் பண்பாட்டு வரலாறு முழுமையடையும். அன்பின் வடிவமாகவும், பாசத்தின் உருவமாகவும் விளங்கிய தம் தந்தை சோமு ஆலம்பிரியர் குழந்தைகள் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி விளக்குகின்றார். உழைப்பால் உயர்ந்த தன் தந்தை வெட்டிக்காட்டு மக்களும் சுற்றுவட்டார மக்களும் போற்றும்படியாக வாழ்ந்தவர் என்பதை ஒவ்வொரு கருத்துகளாக அடுக்கிக்காட்டி ஒரு சித்திரமாக நமக்கு வரைந்து காட்டுகின்றார். அப்பா பிள்ளைகளைப் படிக்க வைத்த பாங்கு, கூத்துக்கலையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டி, சிலநாளில் குடிப்பது உண்டு என்று பதிவு செய்து நடுநிலையாளராக இரவி நமக்குக் காட்சி தருகின்றார்.

சோமு ஆலம்பிரியார் நேர்மையாளர்; வணிகத்தை உயர்வாகப் போற்றியவர்; தொழில் தர்மம் கடைப்பிடித்தவர்; நம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர்; தம் பிள்ளைகளின் படிப்பு, பணிக்காக வீட்டிலிருந்த நகைகளை விற்றாலும் உழைத்து வாங்கிய நிலங்களை விற்க மறுத்தவர். தந்தை 69 ஆம் வயதில் இயற்கை எய்திய நேரத்தில் இரவியின் செமஸ்டர் தேர்வு தொடங்கியதால் அப்பாவின் இறப்புச் செய்தியைப் பத்துநாள் கழித்துதான் தெரிந்துகொண்டார்.” அமெரிக்கக் குடியுரிமை பெற்று இன்று நல்ல வேலையில் ஓரளவு வசதியான வாழ்க்கை. ஆனால் பார்க்கத்தான் அப்பா இல்லை!”(பக்கம் 124) என்று முடித்துள்ளமை நம் கண்ணில் கண்ணீர் வரச்செய்கின்றது.

தேடுகிறேன் என்ற தலைப்பில் பிறந்து வாழ்ந்த வெட்டிக்காடு கிராமத்தில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு, தொழில் யாவும் மாற்றமடைந்து புதிய தலைமுறை உருவாகிவிட்டதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். உழவுமாடுகள், நடவு, அறுவடை, கதிரடிக்கும் காட்சிகள், ஏற்றம், முச்சந்தி உரையாடல், கோயில் திருவிழாக்கள், கூத்துகள், சிற்றூர் விளையாட்டுகள், உடையலங்காரம் யாவும் மறைந்து வெட்டிக்காடு புதிய வடிவம் பெற்ற்றுள்ளதைக் கண்டு, தாம் ஓடி விளையாண்ட கிராமம் எங்கே என்று கேட்கும் ஒரு கேள்வியில் நூறாண்டு  மாற்றம் அடங்கியுள்ளதை உணரலாம்.

நூலில் உள்ள எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

சுய புனைவாகத் தெரியும் வெட்டிக்காடு நூல், தன் வரலாறாகவும், குடும்ப வரலாறாகவும், ஊர் வரலாறாகவும் தமிழர் பண்பாட்டு வரலாறாகவும் உயர்ந்து நிற்கின்றது.

குறிப்பு; வெட்டிக்காடு நூல் 18.12.2016 மாலை தஞ்சையில் வெளியிடப்பட்ட து.

நூல்வெட்டிக்காடு
ஆசிரியர்: இரவிச்சந்திரன்
பக்கம்: 128
விலை: 150 - 00
கிடைக்குமிடம்சோ. இரவிச்சந்திரன், 14 , புளோரா சாலை,
# 08-02அளாளியா பார்க், சிங்கப்பூர் 509 731
மின்னஞ்சல்: vssravi@gmail.com

இணையத்தில் வாங்குவதற்கு!

1. வெட்டிக்காடு http://www.noolulagam.com/product/?pid=33232

2. கீதா கஃபே http://www.noolulagam.com/product/?pid=33231

செவ்வாய், 20 டிசம்பர், 2016

தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீடு!


நூல்வெளியீட்டு விழாவில்
முனைவர் ம.இராசேந்திரன், வேல.இராமமூர்த்தி, மு.இளங்கோவன், ஈரோடு கதிர், பொறியாளர் இரவிச்சந்திரன், மருத்துவர் வி.தனபால் உள்ளிட்டோர்

தஞ்சாவூர் இராசப்பா நகரில் அமைந்துள்ள ஐசுவர்யம் மகாலில் 18.12.2016 ஞாயிறு மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் வாழும் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு, அவர் மனைவி கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவ மனையின் மருத்துவர் வி. தனபாலன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் அப்துல்லா வரவேற்புரை வழங்கினார். வெட்டிக்காடு என்ற நூலினை எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி வெளியிட, முதற்படியினை ஜெயம் சோமு பெற்றுக் கொண்டார். கீதா கஃபே நூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட, பத்மாவதி தனபாலன், முனைவர் பழனி. அரங்கசாமி பெற்றுக் கொண்டனர். கீதா கஃபே நூலினை எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பாக அறிமுகம் செய்தார். முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் திருவாட்டி கீதா இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

     நூலாசிரியர்கள் இரவிச்சந்திரன், கீதா இரவிச்சந்திரன் ஏற்புரை வழங்கினர். சுரேகா சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.     எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், உறவினர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெட்டிக்காடு நூலினை அறிமுகம் செய்து மு.இளங்கோவன் பேசியதாவது:

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர். இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். கிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள் இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும். மேல்தட்டு வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பேசினார்.

 நூல்வெளியீட்டு விழா- மேடையில்

வியாழன், 15 டிசம்பர், 2016

'வைணவ இலக்கியச்செம்மல்' பாவலர்மணி சித்தன்


பாவலர்மணி சித்தன்

புதுவையின் பழைய வரலாற்றை நெஞ்சில் சுமந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் அறிஞர்களுள் பாவலர்மணி சித்தன் குறிப்பிடத்தக்கவர். 96 அகவையைக் கடந்தபோதிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருபவர். வைணவ இலக்கியத்தில் நல்ல புலமையும், பயிற்சியும் உடைய பாவலர்மணி சித்தன், பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர். இவர்தம் தமிழ்ப்பணியை அறிவதற்குப் பல நாட்களாகத் திட்டமிட்டும் இயலாமல் இருந்தது. கல்வெட்டு அறிஞர் வில்லியனூர் வேங்கடேசனாருடன் இன்று சித்தன் அவர்களின் இல்லம் சென்றேன். மூன்று மணி நேரம் உரையாடி, அரிய செய்திகள் பலவற்றை அறிந்துகொண்டேன். வழக்கம்போல் காணொளியில் இவர் பேச்சைப் பதிவுசெய்தேன்.

பாவலர்மணி சித்தன் 1920 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆறாம் நாளில் புதுச்சேரியில் பிறந்தவர். இயற்பெயர் இராதாகிருஷ்ணன். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் முத்துசாமிப்பிள்ளை என்ற முதலியாண்டான், ஆதிலட்சுமி அம்மாள். தொடக்கக் கல்வியாக எழுத்துப் பயிற்சி முதல் எண்சுவடி வரை புதுச்சேரி காந்தி வீதியில் இருந்த பஜனை மடத்தில் பயின்றவர். கல்வே கல்லூரியில் பிரெஞ்சுப் படிப்பைப் படித்தவர். கல்வே கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவராகப் பயின்றவர். தனிப் பயிற்சியாகவும் பாவேந்தரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். புதுவையில் இருந்த புதுவைக் கல்விக் கழகத்தில் தேசிகம் பிள்ளை, தில்லை கோவிந்தன் உள்ளிட்டவர்களிடம் மொழிப்பயிற்சி பெற்றவர். 19 அகவையில் தமிழாசிரியராகத் தேர்வுபெற்றாலும் மருத்துவத்துறையில் ஊதியம் அதிகம் என்பதால் ஆசிரியர் பணிக்குச்  செல்லாமல் மருத்துவமனையில் உதவி மருத்துவராகப் பணியில் இணைந்தவர். தமிழார்வம் காரணமாகப் பண்டிதர் வீ. துரைசாமி முதலியார் அவர்களிடம் பயிற்சி பெற்று, வித்துவான் தேர்வு எழுதி, 22 ஆம் அகவையில் வித்துவான் பட்டம் பெற்றவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் தேர்வெழுதி வெற்றிபெற்றவர்.

சித்தன் அவர்களின் குடும்பம் மரபு வழியான வைணவக் குடும்பம். எனவே இளம் அகவையில் ஆழ்வார் பாசுரங்களை நாளும் மனப்பாடம் செய்ய வேண்டிய சூழல். அதற்காகப் புதுவை வரதராசலு நாயுடு என்பவரிடம் வியாழன், ஞாயிறு கிழமைகளில் காலை எட்டுமணி முதல் 12 மணிவரை பாசுரங்களைப் படித்து நெட்டுருப்படுத்தியவர். திருவரங்கம் மீ. கோ. இராமாநுச சுவாமிகளிடம் ஆழ்வார்களின் பாசுரங்களைச் சிறப்பாகப் பயின்றவர். 18 அகவைக்குள் ஆழ்வார்களின் நாலாயிரம் பாடல்களும் சித்தனுக்கு மனப்பாடமானது. பெற்றோர் இதற்காக ஒரு விழா எடுத்துப் பாராட்டினர். இதனை அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் தம்மைச் சந்திக்க சித்தனை அறிவுறுத்தினார். பாவேந்தரின் தொடர்பு அமைந்ததும் சித்தனுக்கு இலக்கிய இலக்கண ஈடுபாடு மிகுதியானது. ஆழமாகத் தமிழ் கற்கத் தொடங்கினார். வைணவ அமைப்புகள் பலவற்றில் இணைந்து இலக்கிய - சமயப் பணியாற்றவும் வாய்ப்புகள் அமைந்தன.

பாவலர்மணி சித்தன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பல் அறுவை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புதுவையில் வாழ்ந்த அறிஞர்கள், தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தனின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிப் புதுவை அரசு தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகளை அளித்துச் சிறப்பித்தது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் வைணவ இலக்கியங்கள் குறித்தும் கம்ப ராமாயணம் குறித்தும் அரிய சொற்பொழிவுகளாற்றியுள்ளார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைபாடியுள்ளார். இலக்கியப் பயணமாக இலங்கை, பிரான்சு, சுவிசு, உரோமாபுரி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அரிய உரையாற்றி மீண்டவர்.

பிரான்சு நாட்டு அறிஞர் பிலியோசா அவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தன் பிலியோசா அவர்களின் பன்மொழிப் புலமை, இலக்கிய ஈடுபாடு, தமிழாராய்ச்சித் திறத்தினை அறிந்து, அவர்மேல் உயர்ந்த மதிப்பினைக் கொண்டவர்.

புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனைச் சந்தித்து நாளும் உரையாடும் வாய்ப்பினைச் சித்தன் பெற்றிருந்தவர். காமராசர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, தமிழர் ஒருவர் முதலமைச்சாரனமையைப் பாராட்ட நினைத்துப் பாவேந்தர் விழாவெடுத்தார். அந்தநாளில் கவியரங்கம் ஒன்று நடந்தது. அப்பொழுது காமராசரின் சிறப்பினைக் கவிதையாகப் பாடிய சித்தனைப் புகழ்ந்து பாவேந்தர்,

வித்துவான் புதுவைச் சித்தர்
இராதா இந்நேர மிங்கே
நத்துவார்க் கெலாமி னிக்க
நறுங்குறிஞ் சித்தேன் பெய்தார்;
அத்தவக் கவிஞர் நன்னூல்
ஆய்ந்தவர், தமிழ்க்காப் பாளர்!
முத்தமிழ்ச் செல்வர் வாழி;
மொழிகின்றோம் அவர்க்கு நன்றி!

என்று பாடினார்.

குயில் இதழில் சித்த மருத்துவம் சார்ந்த பாடல்களை இராதாகிருஷ்ணன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவரைச் சித்தன் எனப் பெயரிட்டுப் பாவேந்தர் எழுதவைத்தார். அன்றுமுதல் சித்தன் என்ற புனைபெயரே நிலைபெறலாயிற்று.

சித்தன் புதுவைப் பல்கலைக்கழகத்திலும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திலும், புதுவைக் கம்பன் கழகத்திலும் அறக்கட்டளையை நிறுவி வைணவ இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். பல்வேறு  வைணவ மாநாடுகளை ஏற்பாடு செய்து திறம்பட நடத்தியவர். சைவ இலக்கிய ஈடுபாடும் இவருக்கு உண்டு.

பாவலர்மணி சித்தனின் தமிழ்க்கொடை:

1.   அருட்கவி சுத்தானந்தர்
2.   புதையுண்ட நாகரிகம்
3.   தாமரைக்காடு(கவிதைகள்)
4.   பாவேந்தருடன் பயின்ற நாள்கள்
5.   புதுமை நயந்த புலவர்
6.   துரை வடிவேலனார்
7.   பங்காரு பத்தர்
8.   வேளாளர்
9.   பாரதி கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்
10. கம்பன் பிள்ளைத்தமிழ்
11. கம்பனும் திருமங்கை மன்னனும்
12. மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்
13. கம்பன் கற்பகம்
14. பாட்டரங்கில் கம்பன்
15. கம்பனில் மனிதம்
16. கம்பனின் கற்பனைத் திறன்
17. கடல்கடந்த கம்பன்
18. கம்பர் வித்தகம்
19. தேவ தேவி(குறுங்காப்பியம்)
20. வைணவ மங்கையர்(கவிதை)
21. திருமால் திருநெறி
22. வஞ்சி விடுதூது
23. பாலகர்க்குப் பாட்டமுதம்
24. களம் கண்ட கவிதைகள்
25. இராமாநுசர்(புரட்சித்துறவி)


புலவர் அரசமணியின்  அன்புவிடு தூது நூலினைச் சித்தன் உரையுடன் பதிப்பித்துள்ளார்.


புதுவையில் வாழ்ந்த இலக்கியப் புலவர்கள், பாவலர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுடன் பழகியும், தமிழ்ப்பணியாற்றியும் தமிழுலகுக்குப் பன்னூல்களைத் தந்தும் பாவலர்மணி சித்தனின் தமிழ் வாழ்க்கை தொடர்கின்றது. வைணவ இலக்கியங்களைப் பயின்று கற்றுத் துறைபோகிய அறிஞராக விளங்குவதுடன் பாவலராகவும் நாவலராகவும் விளங்கும் இவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் தமிழர் கடன்!
பாவலர்மணி சித்தன்

மு.இ, பாவலர்மணி சித்தன், வில்லியனூர் வேங்கடேசனார்

குறிப்பு: கட்டுரை, படங்களை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

புதன், 14 டிசம்பர், 2016

பதிப்புத்துறை அறிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்


வெள்ளையாம்பட்டு சுந்தரம்

1993 ஆம் ஆண்டு முதல் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயாவை அறிவேன். எங்கள் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை சார்பில் என்னுடைய அச்சக ஆற்றுப்படை என்ற நூலினை வெளியிட்ட நிகழ்வில் முதல்படியைப் பெற்றுக்கொண்டவராக வெள்ளையாம்பட்டு சுந்தரம் அறிமுகம் ஆனார். அதன்பிறகு என் வாழ்க்கையில் அமைந்த படிப்பு, ஆய்வு, பணிநிலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா அவர்களைக் கண்டுள்ளேன். அவர் பதிப்பித்த நூல்களை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டுப் பார்த்தால் முதல் தலைமுறை எழுத்தாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தேடிப்பிடித்து அவர்களின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம்கொண்டவராக விளங்கியமையை உணரலாம். பி.எல்.சாமி உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை வெளியிட்டவர் என்ற வகையில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் மேல் எனக்கு எப்பொழுதும் மதிப்பு மேம்பட்டே இருந்தது. அது தவிர அவர் பற்றிய வேறு விவரங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது.

புதுச்சேரியில் இலக்கியப் புரவலராக விளங்கிய திருமுடி சேதுராமன் செட்டியார் அவர்களின் இல்லத்தில் இன்று நடைபெற்ற மணவினை உறுதிப்பாட்டு நிகழ்வுக்கு வந்திருந்த வெள்ளையாம்பட்டாரைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவர் என்னுடன் உரையாட விரும்பியதை அறிந்தேன். அவரின் பயணத்திட்டத்தை அறிந்துகொண்டு, இவருடன் ஒரு நேர்காணல் செய்யத் திட்டமிட்டேன். காணொளியில் இவரின் நேர்காணலை இன்று பதிவு செய்தோம்(ஓய்வில் காணொளியைத் தொகுத்து வழங்குவேன்).

ஐம்பதாண்டுகாலத் தமிழ் இலக்கிய உலகம், பதிப்புத்துறை, அரசியல் உலகம், அவர்தம் திரைப்படத்துறைப் பங்களிப்பு, சான்றோர் பெருமக்களின் வாழ்வியல் என்று சற்றொப்ப மூன்று மணிநேரம் எங்கள் உரையாடல் நீண்டது.

வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாம்பட்டு என்னும் சிற்றூரில் 04.09.1933 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சிவானந்தம், சாரதாம்பாள் ஆவர். எட்டாம் வகுப்புவரை அனந்தபுரம் பள்ளியிலும் பண்ணுருட்டி புதுப்பேட்டையிலும் கல்வி பயின்றவர். தந்தையாரை இழந்ததால் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. இதன் காரணமாகப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத் தறித்தொழிலில் உழைத்தார். உறவினர் ஒருவரின் முயற்சியில் சென்னையில் ஒரு ஏற்றுமதித் துணி நிறுவனத்தில் ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கினார். கைத்தறி மூட்டிகளை (லுங்கி) வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் என்பதால் கடுமையாகப் பணி செய்ய வேண்டிய நிலையில் உழன்றவர்.

விடுமுறை நாள்களின் ஓய்வு நேரங்களில் பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கிச்சென்று சென்னைப் பல்கலைக்கழகத்து வளாகத்தில் அமர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். தாம்  படித்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களைக் கண்டு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அக்காலத்தில் தன்முன்னேற்ற நூல்களை எழுதிப் புகழ்பெற்ற அப்துல் றகீம் அவர்களைக் கண்டு தம் உரையாடலைத் தொடங்கிய இவர் பன்மொழிப்புலவர் க. அப்பாத்துரையார், திருக்குறளார் முனுசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், அ. ச. ஞானசம்பந்தன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., வாணிதாசன், புலியூர்க் கேசிகன், உவமைக் கவிஞர் சுரதா, சுப்பு ஆறுமுகம், இராம கண்ணப்பன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்.

திரைப்படத் துறையில் புகழ்பெற்று விளங்கிய கண்ணதாசனின் உதவியாளராக 1957 அக்டோபரில் இணைந்தவர். பல்வேறு திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்து உழைத்தவர். மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, இதயவீணை, கவலையில்லாத மனிதன், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், மகளே உன் சமத்து, திருமகள், தங்கமலர் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம் 1946 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு தன்மான உணர்வு தழைத்தவராகவும், பகுத்தறிவாளராகவும் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. விடுதலை, உண்மை உளிட்ட இயக்க ஏடுகளையும் பெரியார் நூல்களையும், அம்பேத்கார் நூல்களையும் காந்திய நூல்களையும், நேருவின் படைப்புகளையும் கற்றுத் தெளிந்தவர்.

ஐம்பதாண்டுகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களைப் பற்றியும் பதிப்பகங்கள் பற்றியும் பல்வேறு செய்திகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். தம் நண்பர் ஒருவரின் ஏற்பாட்டில் சேகர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, முதல் முறையாகப் பதினைந்து நூல்களை வெளியிட்டதையும் அதன் பிறகு ஆண்டுதோறும் கனிசமான நூல்களை வெளியிட்டுவருவதையும் குறிப்பிட்ட  வெள்ளையாம்பட்டு சுந்தரம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தாம் பதிப்பித்துள்ளதையும், ஒவ்வொரு நூலுக்கும் வரைந்துள்ள பதிப்புரைகள் குறிப்பிடத்தக்க சிறப்பிற்கு உரியன என்றும் குறிப்பிட்டார். இவரின் பதிப்பகம் புதினங்களை வெளியிடுவதில்லை என்ற குறிக்கோள் கொண்டது. வரலாறு, கல்வெட்டு சார்ந்த நூல்களுக்கு முதன்மையளித்து வெளியிடுவது இவர் இயல்பு. நூலகங்களில் இந்த நூல்கள் இருந்தால் இந்தத் தலைமுறையினர் கற்கவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையாவது கற்பார்கள் என்ற நம்பிக்கையில் நூல்களைப் பதிப்பித்து வருகின்றார்.

தெய்வசிகாமணி ஆச்சாரியார் எழுதிய மேடைத்தமிழ் என்ற நூலுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும்  திரு. வி. க. அணிந்துரை 16 பக்கம் எழுதியுள்ளார் என்ற செய்தியைப் போகும் போக்கில் தெரிவித்தார். இந்த நூலில் பெரியாரின் மேடைப்பேச்சின் சிறப்பு, அண்ணாவின் மேடைப்பேச்சு முறை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளதையும் பகிர்ந்துகொண்டார். நூல்களை வாங்குவது, கற்பது, கற்ற வழியில் நிற்பது வெள்ளையாம்பட்டு சுந்தரம் இயல்பாகும்.

1954-55 அளவில் தந்தை பெரியார் திருமழிசை ஊருக்கு வந்துபொழுது புதிய சுவடியில் கையெழுத்து வாங்கிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதுடன் அன்றைய நாளில் பெரியார் மூன்றுமணி நேரம் சொற்பொழிவாற்றிய அரிய செய்தியைத் தெரிவித்தார். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ உள்ளிட்ட உலக அறிஞர்களின் வரலாறு, பணிகளை எடுத்துக்காட்டி இவர்களின் மேம்பட்டவர் பெரியார் என்று பேருரை ஒன்றையை இந்த நேர்காணலில் நிகழ்த்தினார்.

தமிழ்நாட்டுப் பள்ளிகள்  கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்த அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்கள், சிற்பங்களைக் குறித்து நன்கு அறிந்துவைத்துள்ளார். தக்க அறிஞர்களை அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள கல்வெட்டுகள், அரிய வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டித் தமிழக வரலாறு துலங்குவதற்குரிய பதிப்புப்பணிகளைச் செய்துள்ளார். தொல்லியல் அறிஞர்கள் இரா. நாகசாமி, கோபிநாத், முனைவர் இராச. பவுன்துரை, பேராசிரியர் இரா.மதிவாணன், முனைவர் இரா. கலைக்கோவன், நடன. காசிநாதன், முனைவர் மா. சந்திரமூர்த்தி, ச. கிருஷ்ணமூர்த்தி, பாகூர் குப்புசாமி, வில்லியனூர் வெங்கடேசன், வே. மகாதேவன்,  உள்ளிட்டோரின் கோயில், கல்வெட்டு சார்ந்த நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப்பணிபுரிந்துவரும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் தம் 84 ஆம் அகவையிலும் படிப்பதிலும் எழுதுவதிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் வாழ்க்கை இளைஞர்களுக்கு முன்மாதிரி வாழ்க்கையாகும்.

23.02.1956 ஆம் ஆண்டில் பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார் தலைமையில் வெள்ளையாம்பட்டு சுந்தரம், கோகிலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இப்பொழுது இருவர் மட்டும் உள்ளனர்.



                                           வெள்ளையாம்பட்டு சுந்தரம்

                           மு.இளங்கோவன், வெள்ளையாம்பட்டு சுந்தரம்

குறிப்பு: கட்டுரையைப், படங்களை எடுத்து ஆள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் “கரிகாற்சோழன் விருதுக்குத்” தேர்வானோர் பெயர் அறிவிப்பு...



தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பில் வழங்கப்படும் கரிகாற்சோழன் விருதுகள் பெறும் தகுதியாளர்களை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும் இவ்விருதுக்குச் சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் படைப்புகள் வரவேற்கப்பட்டுத் தகுதியான படைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் கரிகாற்சோழன் விருது வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு முதல் கூடுதலாக இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர் ஒருவருக்கும் இவ்விருது சேர்த்து வழங்கப்படும் என முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு எம்.ஏ. முஸ்தபா அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


போட்டி முடிவுகள்:

1. மலேசியாவுக்கு வழங்கப்படும் விருது மறைந்த திரு. செ. சீனி நைனா மும்மது எழுதிய தொல்காப்பியக் கடலின் ஒரு துளி கட்டுரைக்கும்,

2. சிங்கப்பூர் எழுத்தாளர் திரு. சித்தூராஜ் பொன்ராஜ் எழுதிய மாறிலிகள் சிறுகதைக்கும்,

3. இலங்கையைச் சேர்ந்த திரு. மு. சிவலிங்கம் அவர்கள் எழுதிய பஞ்சம் பிழைக்க வந்த சீமை என்ற புதினத்துக்கும் வழங்கப்படுகிறது. 

குறிப்பு: விருது வழங்கப்படும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை

சிங்கப்பூர்

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீட்டு விழா




பொறியாளர் சோ. இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு என்ற நூலும் எழுத்தாளர் கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே என்ற நூலும் தஞ்சாவூரில் வெளியிடப்பட உள்ளன. சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.


நாள்: 18.12. 2016(ஞாயிறு), நேரம்: மாலை 5 மணி

இடம்: ஐசுவர்யா மகால், மருத்துவக் கல்லூரிச் சாலை, இராசப்பா நகர், தஞ்சாவூர்

தலைமை: நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள், நீதிபதி,உயர்நீதி மன்றம், சென்னை

வரவேற்புரை: எழுத்தாளர் எம். எம். அப்துல்லா அவர்கள்

வெட்டிக்காடு நூல் வெளியீடு: எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி அவர்கள்

முதல்படி பெறுதல்:
திருமதி ஜெயம் சோமு அவர்கள்
திரு. அ. அப்பாவு அவர்கள், மேனாள் கூடுதல் வணிகவரி ஆணையர்

கீதா கஃபே நூல் வெளியீடு: முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள்
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

முதல்படி பெறுதல்: 
திருமதி பத்மாவதி தனபாலன் அவர்கள்
முனைவர் பழநி. அரங்கசாமி அவர்கள், மேனாள் ஆங்கிலத்துறைப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

வெட்டிக்காடு நூல் அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

கீதா கஃபே நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்கள்

ஏற்புரை: பொறியாளர் சோ.இரவிச்சந்திரன் அவர்கள், இயக்குநர், இக்சியா தொடர்பகம், சிங்கப்பூர்
கீதா இரவிச்சந்திரன் அவர்கள் எம்.ஏ.; எம். ஃபில்.

நன்றியுரை: மருத்துவர் வி. தனபாலன் அவர்கள்
வினோதகன் மருத்துவமனை, தஞ்சாவூர்


நிகழ்ச்சி நெறியாளர்: திரு. சுரேகா சுந்தர் அவர்கள்