நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 28 ஜனவரி, 2016

உலகத் தொல்காப்பிய மன்றம் - புதுவைக் கிளையின் சார்பில் தொல்காப்பியம் தொடர்ப்பொழிவு!

அன்புடையீர் வணக்கம்.

உலகத் தொல்காப்பிய மன்றம்  2015, செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள் பிரான்சில் தொடக்க விழாவினைக் கண்டது. அதனை அடுத்து கனடா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இதன் தொடக்க நிகழ்வுகள் சிறப்பாக நடந்தன. உலகத் தொல்காப்பிய மன்றம் ஆய்வு நோக்கில் சில பணிகளை அமைதியாகச் செய்துவருகின்றது. விரைந்து அப்பணிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும். இந்நிலையில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவினை  மாதந்தோறும்  நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் மாலை 6.30 மணி முதல் 7. 30 மணி வரை ஒருமணி நேரம் தொல்காப்பியம் குறித்த ஆய்வுரையை  அறிஞர் ஒருவர் வழங்குவார். தொல்காப்பிய நூலின் அமைப்பு, மூலப்பதிப்புகள், மொழிபெயர்ப்புகள், உரைகள், தொல்காப்பிய ஆய்வுகள் குறித்து அறிஞர்களின் பொழிவுகள் அமையும்.

புதுச்சேரி நகரில் நடைபெறும் இந்த நிகழ்வுக்குத் தமிழ் அன்பர்களும், தொல்காப்பிய ஆர்வலர்களும் வருகை தரலாம். குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்குவதும் குறித்த நேரத்தில் முடிப்பதும் பின்பற்றப்படும். வரும் பிப்ரவரி 6 இல் (காரிக் கிழமை) முதல் நிகழ்வு தொடங்க உள்ளது.

பொழிவாளர் விவரம், நிகழ்ச்சி நடைபெறும் இடம் விரைந்து அறிவிக்கப்பெறும்.

புதுவை நிகழ்வினை முனைவர் ப. பத்மநாபன் அவர்களும், திரு. செ. திருவாசகம் அவர்களும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும் ஒருங்கிணைக்க உள்ளனர்.

தொடர்புகொள்ள:
முனைவர் ப. பத்மநாபன் + 9443658700
திரு. செ. திருவாசகம் + 9585509560
முனைவர் மு. இளங்கோவன் + 9442029053


ஞாயிறு, 24 ஜனவரி, 2016

சிந்தனைக் கவிஞர் பனப்பாக்கம் கு. சீத்தா

பனப்பாக்கம் கு. சீத்தா

பாவேந்தர் பாரதிதாசன் குயில் இதழைப் படித்தவர்களுக்கும், உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதை இதழ்களைப் படித்தவர்களுக்கும் நன்கு அறிமுகமான பெயர் பனப்பாக்கம் கு. சீத்தா என்பதாகும். திராவிட இயக்கச் சிந்தனையும், தமிழ்ப்பற்றும் கொண்ட பனப்பாக்கம் கு. சீத்தா அவர்கள் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். பன்னூலாசிரியராகவும், பல கவியரங்க மேடைகளில் தித்திக்கும் கவிதைகளைப் படைத்தவராகவும் விளங்கும் இவர்தம் வாழ்க்கைப் பயணம் வற்றாத கவியாறாக ஓடியுள்ளது.

விழுப்புரத்தை அடுத்துள்ள பனப்பாக்கம் என்னும் ஊரில் திருவாளர்கள் குப்புசாமி, வீரம்மாள் ஆகியோரின் மகனாக கு. சீத்தா 24. 10. 1937 இல் பிறந்தவர். கு. சீத்தாராமன் என்பது இவர்தம் இயற்பெயராகும். பனையபுரத்தில் தொடக்கக் கல்வியும், விக்கிரவாண்டியில் (விக்கிரம பாண்டிய புரம்) நடுநிலைக் கல்வியும், வளவனூர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியும் பெற்றவர். இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். அதன் பிறகு பி.லிட், முதுகலைப் பட்டம் என்று தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்தவர். வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக இருந்து 1995 இல் பணி ஓய்வு பெற்றவர்.

பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் 1962 இல் திருமதி இந்திராணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அன்புச்செல்வி, அறிவுச்செல்வி, அறிவண்ணல், அனிச்சமலர் ஆகிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

இராஜாஜியின் குலக்கல்வித்திட்டம் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றவர். ஆசிரியர் போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறைசென்றவர்.

பனப்பாக்கம் கு. சீத்தா அவர்கள் குயில், தென்றல், திராவிடநாடு, நம்நாடு, முரசொலி, முல்லை, காவியம், இலக்கியம், கவிதாமண்டலம், நமது நாடு உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து கவிதை எழுதியவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார், உவமைக்கவிஞர் சுரதா, கவியரசு கண்ணதாசன், கவியரசு முடியரசன், பாவலர் வாணிதாசன் ஆகியோர் தலைமையில் கவியரங்கேறியவர். இவர்தம் கவிதைகளையும் தமிழ்ப்பணிகளையும் ஆராய்ந்து பலர் பட்டம் பெற்றுள்ளனர்.

பனப்பாக்கம் கு. சீத்தா அவர்களின் நூல்கள் பாட நூல்களாக இருந்துள்ளன. இவர் தமிழ்நாட்டரசின் பாடநூல் குழுவில் இடம்பெற்று 11 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களின் ஆசிரியராக இருந்தவர். மலேசியாவில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மறை ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டவர்.

'கு. சீத்தாவின் பாட்டுப்பயணம்' என்ற திங்கள் இதழை நடத்தியவர். 1958 இல் தமிழ் எழுத்தாளர் மன்றம் தொடங்கியவர். பாவேந்தர் பாரதிதாசனுக்கு விழா எடுத்த பெருமைக்குரியவர். புலிக்கொடியோன், பனப்பாக்கம் கு. சீத்தாவின் பாட்டுப்பயணம் (இரு தொகுதிகள்), பாட்டரங்கப் பயணம்(இரு தொகுதிகள்) முதலியன இவரின் நூல்களாகும். மதியொளி என்ற கையெழுத்து ஏட்டை மாணவப்பருவத்தில் நடத்தியவர்.

உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வருபவர்.

பனப்பாக்கம் கு.சீத்தா அவர்கள் பெரியார் படைப்புகள், அண்ணா படைப்புகள், திருக்குறள், உள்ளிட்ட நூல்களைக் கொண்ட ஆய்வு நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

1978 இல் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் பாவேந்தர் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். 1991 இல் பாவேந்தர் விருது பெற்றவர். கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் உள்ளிட்ட சிறப்புக் கவியரங்கங்களில் பங்கேற்றவர். 

பனப்பாக்கம் கு.சீத்தா அவர்கள் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதைகளைப் போல் உயிரோட்டமான கவிதை வடிப்பதில் வல்லவர்.

புதுச்சேரி, சென்னை, திருசிராப்பள்ளி, சீன வானொலிகளில் இவரின் உரைகள் நேர்காணல்களாக ஒலிபரப்பப்பட்டுள்ளன.


தமிழ் வாழ்க்கை வாழ்ந்துவரும் சிந்தனைக் கவிஞர் பனப்பாக்கம் கு. சீத்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

பேராசிரியர் தெ.முருகசாமி அவர்கள்

பேராசிரியர் தெ.முருகசாமி

தமிழ் இலக்கியப் பரப்பில் நினைவுகூரத் தக்க அறிஞர்களுள் முனைவர் தெ. முருகசாமி அவர்கள் சிறப்பிடம் பெறுபவர் ஆவார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய இவர் தமிழ் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகளை வரைந்து வருபவர். தமிழ்ப்புலமையும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இவர்தம் வாழ்க்கைக் குறிப்பை இவண் பதிந்து வைக்கின்றேன்.

முனைவர் தெ. முருகசாமி அவர்கள் கடலூர், ‘புரூக்சுபட்டு’ என்னும் ஊரில் 18. 04. 1943 இல் திருவாளர்கள் தெய்வநாயகம், தனபாக்கியம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள வண்டிக்காரன்பாளையம் என்னும் ஊரில்தான் பேராசிரியர்கள் இரத்தினசபாபதி, இராசாக் கண்ணனார், நடேச முதலியார், ஆ. சிவலிங்கனார், சுந்தரசண்முகனார் உள்ளிட்ட அறிஞர்கள் பிறந்து, தமிழுக்குத் தொண்டு செய்தனர்.

புருக்சுபட்டு என்னும் ஊர் ஆங்கிலேய அதிகாரி ஒருவரின் பெயரில் அமைந்த ஊராகும். இந்த ஊர் இறைவனை  வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள்  “புருடேசர் நகர்க் குகனே” என்று புகழ்ந்து ஒரு பதிகம் பாடியுள்ளார்.

தெ.முருகசாமி அவர்கள் கடலூர் முதுநகரில் தொடக்க, உயர்நிலைக் கல்வி பயின்றவர். பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிறகு மயிலம் கல்லூரியில் தமிழ் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, பி.ஓ.எல்., முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மயிலம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்று(1970), கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி 2000 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றவர். இதழ்களுக்குக் கட்டுரை வரைதல், இலக்கியப் பொழிவு நிகழ்த்துதல், சமய இலக்கியங்களைப் பயிற்றுவித்தல் போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.

பேராசிரியர் தெ.முருகசாமி அவர்கள் மிகச் சிறந்த கட்டுரையாசிரியர் ஆவார். இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள், வழிபாடு குறித்து அரிய கட்டுரைகள் வரைந்துள்ளார். செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, குமரகுருபரர், மக்கள் சிந்தனை, உழவாரம், மெய்கண்டார், தெளிதமிழ், தினமணி, பொதுமறை (மதுராந்தகம்) உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருபவர். தமிழகத் திருக்கோயில்களில் வடமொழி அர்ச்சனை கூடாது என்று ஆணித்தரமாக எழுதி, உண்மை விளக்கியவர்.

அகநானூறு - களிற்று யானை நிரைப் பகுதிக்கு உரைவரைந்த பெருமைக்குரியவர். அரிமளம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், திருப்போரூர் முருகன் சந்நிதி முறை உள்ளிட்ட நூல்களுக்கு உரை வரைந்தவர். தவத்திரு. குன்றக்குடி அடிகளார் நூல்கள் தொகுப்பாக வெளிவந்தபொழுது அதன் உருவாக்கத்தில் பணிபுரிந்தவர்.

தெ.முருகசாமி அவர்கள் 1964 இல் பி.ஓ.எல். படிக்கும் காலத்தில் நேரு அவர்களின் பிறந்தநாள் நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதுபொழுது நடைபெற்ற இசைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதன் காரணமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொணடு டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களில் கையால் பரிசு பெற்றவர்.

முனைவர் அப்துல் கலாம் அவர்களின் கையால் சங்க இலக்கிய நூல்கள் தில்லியில் வெளியிட்டபொழுது, அவரால் சிறப்பிக்கப்பட்டவர்.

தமிழ் இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறித்த பெரும்புலமை கொண்ட பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு விளக்கும் தொடர்ப்பொழிவுகளைச் செய்துவருகின்றார்.

பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் தமிழ்போல் நெடிது வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.வெள்ளி, 15 ஜனவரி, 2016

அச்சுத்துறை வழியாக அருந்தமிழ்ப்பணி!..அன்னை அருள் அச்சகம், புதுச்சேரி என்ற பெயரை முனைவர் இரா. திருமுருகனார் நடத்திய தெளிதமிழ் ஏட்டில் பலவாண்டுகளுக்கு முன் பார்த்த நினைவு உண்டுஅன்னை அருள் அச்சகத்தினர் மற்ற அச்சகம்போல் வழக்கமான அச்சுப்பணிகளைத்தான் தொடக்கத்தில் செய்து கொண்டிருந்தனர். முனைவர் இரா. திருமுருகனார், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா போன்ற அறிஞர் பெருமக்கள் இந்த அச்சுக்கூடத்திற்கு வருகைதரத் தொடங்கியதிலிருந்து அச்சகம் தமிழ்ப்பணிக்கு முதன்மைதரத் தொடங்கியது.

அன்னை அருள் அச்சகம் உரிமையாளர் திருவாளர் இரா. கோவிந்தசாமி அவர்கள் வள்ளலார், அம்பேத்கார், பாவேந்தர் உள்ளிட்டவர்களின் கொள்கைகளை அச்சிட்டு இலவசமாக அளிக்கத் தொடங்கினார். தமிழ் உணர்வாளர்களின் பார்வைக்கு இவை கிடைத்ததும் அச்சுக்கூடம் மெல்ல மெல்லத் தமிழ்ப்பணிக்கு உரிய வேடந்தாங்கலாகப் புதிய பரிமாணம் பெறத் தொடங்கியது.திருவள்ளுவர் உருவம்கொண்ட பித்தளை விளக்கு உருவாக்கப்பட்டு அடக்க விலைக்குத் தரப்பட்டது. தமிழக எல்லைமீட்புப் போரில் உயிர்நீத்த சற்றொப்ப 300 தமிழ் வீரர்களின் படங்கள் திரட்டித் தொகுத்து, வரையப்பட்டு நாள்காட்டி வடிவில் தமிழகம் முழுவதும் பரவியது. தமிழகத்தின் திருக்கோயில்களின் அரிய படங்கள் போதிய குறிப்புகளுடன் அச்சிடப்பட்டு, உலகம் முழுவதும் சென்ற ஆண்டு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு நாள்காட்டி, திருவள்ளுவரின் திருவுருவம் அமைத்து, அழகாக வெளியீடு கண்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பேட்டை அன்னை அருள் அச்சகம் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. உலகத் தரத்திலான தாள், கட்டமைப்பு, செய்திகள் கொண்ட இந்த நாட்குறிப்பேடு விலைக்குக் கிடைக்கின்றது. 500 உருவா விலை குறிக்கப்பட்டுள்ள இந்த நாட்குறிப்பேடு தமிழன்பர்களுக்கு 250 உருவாவுக்குக் கொடுக்கப்பட உள்ளது.

2016 ஆம் ஆண்டு நாள் குறிப்பேடு 408 பக்கங்களைக் கொண்டுள்ளது. வள்ளலாரின் பாடலும், உலகம், விண்மீன், கோள்கள், ஓரைகள், கோள்களைக் கண்டுபிடித்தோர், உடுக்களின் பெயர்கள் உவாக்களின் பெயர்கள், காலம் குறித்த சிறப்புச் செய்திகளைக் கொண்டும், நம் தன் விவரக்குறிப்புகளைப் பொறித்துக்கொள்ளும் வகையிலும் நாட்குறிப்பேடு தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்களின் பிறந்தநாள், நினைவுநாள் குறிப்புகள், திருக்குறள், திருமந்திரம், நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் போன்ற நெறிநூல்களின் பாடல்கள் பொருத்தமாக நாள்குறிப்பேட்டில் வழங்கப்பட்டுள்ளன.


அச்சுப்பணி வழியாக அருந்தமிழ்ப்பணியாற்றும் திருவாளர். இரா. கோவிந்தசாமி அவர்களின் தமிழ்ப்பற்றினை ஊக்கப்படுத்தும்வகையில் இவர்தம் பணிகளை ஆதரிப்பது தமிழர்தம் கடமையாகும்.

நாள்குறிப்பேடு, நாள்காட்டி, அச்சுவேலைகளுக்குத் தொடர்புகொள்க:
0091 413 2336204 /  2336205

அன்னை அருள் அச்சகம்
169, ஈசுவரன்கோயில் தெரு, புதுச்சேரி – 605 001

mothergraceoffset@gmail.com

இணையதளம் பார்வையிட இங்கு அழுத்துக

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் ந. அருணபாரதி அவர்கள்


முனைவர் ந. அருணபாரதி அவர்கள்

பெரும்புலமையும் ஆய்வுநுட்பங்களும் கடும் உழைப்பும் கொண்ட தமிழறிஞர்களின் எண்ணிக்கை தமிழகப் பல்கலைக்கழகங்களில் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிஞர் பெருமக்கள் ஆற்றாமைகொண்டு அடிக்கடி உரைக்கக் கேட்டுள்ளேன். பிற மாநிலங்களில், பிற நாடுகளில் இருந்த தமிழ்த்துறைகளும் மூடுவிழா கண்டு வருகின்றன; அல்லது பெயருக்கு உயிர்ப்புடன் உள்ளன. தமிழகத்திற்கு வெளியில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறையின் பணிகளை ஓய்வில் அசைபோட்டபொழுது பனாராசு இந்துப் பல்கலைக்கழகம் என் நினைவுக்கு வந்தது.  நடுவண் அரசின் நிதிநல்கையில் செழிப்புற்று விளங்கும் இப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சற்றொப்ப 38 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர்  . அருணபாரதி அவர்களின் நினைவும் அவர்களின் பன்மொழிப் புலமையும் நெஞ்சில் நிழலாடின. பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பிறகு சென்னையில் வாழ்ந்துவரும் அவருடன் அண்மையில் உரையாடும் வாய்ப்பினை உருவாக்கிக்கொண்டேன். அவருடன் உரையாடியதிலிருந்து பல்வேறு அறிவார்ந்த செய்திகளைத் தெரிந்துகொண்டேன்.

பேராசிரியரின் இளமைப் பருவம்

நாகை மாவட்டம் குமாரக்குடி (பூம்புகார் - தரங்கம்பாடி சாலையில் உள்ள ஊர்) என்னும் ஊரில் திருவாளர்கள் நல்லசேவு, ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்புமகனாக ந. அருணபாரதி 15.06.1947 இல் பிறந்தவர். ஆக்கூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பு வரை பயின்றவர். பின்னர் ஓராண்டு புகுமுக வகுப்பினை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இளங்கலைத் தமிழ்ப் பட்டத்தினையும் (1966-1969), முதுகலைத் தமிழ்ப் பட்டத்தினையும் (1969-1971) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்று விளங்கிய மொழியியல் துறையில் 1971 முதல் 73 வரை பயின்று மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கன்னடம், தெலுங்கு, சீனம் உள்ளிட்ட மொழிகளைப் பயின்று பட்டயச் சான்று பெற்றவர்.

1974 ஆம் ஆண்டு பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தவர்.  11 ஆண்டுகள் விரிவுரையாளராகவும், எட்டாண்டுகள் இணைப் பேராசிரியராகவும், 19 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

பனாராசு இந்துப் பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றியபொழுது ஐரோப்பியர்கள், சிங்களர்கள், மலேசியர்கள், சப்பானியர்கள், அமெரிக்கர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் தமிழ் கற்றுள்ளனர்.

தமிழை எவ்வாறு எளிமையாகப் பிற மொழியினருக்குக் கற்பிப்பது? என்ற துறையில் மிகச்சிறந்த புலமையுடைவராக நம் பேராசிரியர் அருணபாரதி விளங்குபவர். இதுவரை மூன்று நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். பயன்பாட்டில் உள்ள 4000 மொழியியல் சொற்களுக்குத் தமிழ் விளக்கம் தரும் வகையில் இவர் உருவாக்கிய Glossary of linguistics English- Tamil, (Madras, Tamil Nulagam, 1976) என்னும் நூல் இவர்தம் உழைப்புக்குக் கட்டியம் கூறும் நூலாகும். மேலும் அடிப்படைத் தமிழ்க்கல்வி பயில்வதற்குரிய இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார். இதில் தமிழ்ப்படிப்புக்கு உதவும் வகையில் 29 பாடங்களைக் கொண்ட தமிழ் ரீடர் என்னும் நூல் பிறமொழி மாணவர்கள் தமிழைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் எழுப்பட்ட நூலாகும்.

பேராசிரியர் ந. அருணபாரதி அவர்கள் 11 ஆண்டுகள் துறைத்தலைவராக, இந்துப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, நேபாளி உள்ளிட்ட பிறமொழியினருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் இவருக்கு அமைந்தது.

பேராசிரியர் ந. அருணபாரதி அவர்கள் தம் பணிக்காலத்தில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, மத்தியத் தேர்வாணையம், பல்கலைக்கழகங்களின் நேர்முகத்தேர்வுகளுக்கு வல்லுநராகப் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்கு ஆளுநரின் முன்மொழிவாளராக இருந்து நேர்காணல்களை நேர்மையுடன் நடத்தியவர். தமிழகத்திலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் இவருக்கு வந்த அறுநூற்றுக்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிட்டுள்ளார்.


தமிழ் உரைநடையும், தெலுங்கு உரைநடையும் என்ற பொருளில் (Comparative study of development of Prose in Tamil and Telugu) . அருணபாரதி அவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்து, அரிய செய்திகள் பலவற்றைத் தம் ஆய்வேட்டில் வெளிக்கொணர்ந்தார். பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்று விளங்கிய தெலுங்குப் பேராசிரியர் சூரியநாராயணா அவர்களின் மேற்பார்வையில் இவரின் முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. 

ந. அருணபாரதி அவர்களின் ஆய்வேடு அரிய செய்திகள் பலவற்றைத் தரும் தரத்தையுடையது. வீரமாமுனிவர் சரித்திரம் என்ற அரிய நூல் பற்றிய குறிப்பு இவர் ஆய்வேட்டில் உள்ளது. தமிழில் முதல் பாடப் புத்தகம் மாற்றுமொழியினருக்கு Madras Engineering college papers என்ற பெயரில் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம், ஜொக்கியம் ஆகிய மொழிகளில் அமைந்த அகராதி பயன்பாட்டில் இருந்துள்ளது என்ற குறிப்பையும் தம் ஆய்வேட்டில் பதிந்துள்ளார்.

காசி யாத்திரை சரித்திரம்என்ற தெலுங்கு நூலின் செய்தியையும் சுவைபட நம் பேராசிரியர் தம் ஆய்வேட்டில் பதிந்துள்ளார்.

ஆய்வு நெறியாளர்கள் பெரும்பான்மையர் குறிப்பிட்ட சில துறைசார்ந்த செய்திகளை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும்படி குறிப்பிடுவார்கள். நம் பேராசிரியர் ந. அருணபாரதி அவர்களோ தமிழ் - சமற்கிருதம், தமிழ் - தெலுங்கு, தமிழ் - கன்னடம், தமிழ்நேபாளி போன்ற இருமொழி ஒப்பீட்டு ஆய்வுகளுக்கு முதன்மை தந்து  8 ஆய்வாளர்களுக்கு நெறியாளராக விளங்கியுள்ளார்.

இந்தியக் குடியரசுத்தலைவரின் பெயரில் அமையும் நல்லாசிரியர் விருது இவருக்கு 2012 ஆம் ஆண்டு பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆய்வேடுகள், ஆங்கில ஆய்வேடுகள், ஆங்கிலத்தில் எழுப்படும் பிறமொழி ஆய்வேடுகளை மதிப்பிட்டுத் திறம் காட்டும் அரும்புலமை பெற்ற பேராசிரியர் ந. அருணபாரதி போன்ற அறிஞர்களின் வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.

பேராசிரியர் ந. அருணபாரதி அவர்களுக்கு நம் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் வாழ்த்துகள் உரியவாகட்டும்.புதன், 6 ஜனவரி, 2016

பேராசிரியர் வே. ச. திருமாவளவன் அவர்கள்


முனைவர் வேதிருமாவளவன் 

புதுவைப் பேராசிரியர்களுள் முனைவர் வே. . திருமாவளவன் அவர்கள் கல்வித்துறை ஈடுபாடும், ஆய்வுத்திற மேம்பாடும் கொண்டவர்; நிர்வாகத் திறன் மிக்கவர். புதுவை மாநில அரசின் கல்லூரியான மதகடிப்பட்டு, பெருந்தலைவர் காமராசர் கல்லூரி உருப்பெறுவதற்கு ஊக்கமாக உழைத்தவர். இதன் வழியாகச் சிற்றூர்ப்புற மாணவர்களின் அறிவுக்கண் திறந்தவர். முனைவர் வே.ச. திருமாவளவன் அவர்கள் "மதுரை வீரன் கதைகள் ஓர்ஆய்வு", "கோபுரச்சிலை", "அகநானூறும் காதா சப்தசதியும்" என்னும் அரிய நூல்களைத் தந்த சான்றோர் ஆவார். இவர்தம் எளிமையும் நேர்மையும் அமைந்த வாழ்வை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் வாழ்ந்த வே. சங்கரன், அசலாம்பாள் ஆகியோரின் மகனாக 01.07.1939 இல் வே. ச. திருமாவளவன் அவர்கள் பிறந்தவர். இளமைக் கல்வியைப் புவனகிரியில் பயின்றவர். இண்டர்மீடியட் எனப்படும் இடைநிலைவழிக் கல்வியையையும், இளங்கலைக் கீழைக் கலையியல் (B.O.L) படிப்பையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், மு.அருணாசலம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, நடேச முதலியார், சிந்தாமணி, இலட்சுமணசாமி நாயுடு, சோமசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் கல்வி பயின்ற பெருமைக்குரியவர்.

வே.ச. திருமாவளவன் அவர்கள் 1960 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தவர். பின்னர் 1961 முதல் 1963 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று எம். ஓ. எல். பட்டம் பெற்றவர். புதுவை அரசின் கல்லூரிப் பணியில் 24.06.1963 இல் உரையாளராக இணைந்தவர். 1967 இல் காரைக்கால் கல்லூரியில் பணியேற்று அங்குப் பதின்மூன்றாண்டுகள் பணியாற்றியவர். பின்னர் புதுச்சேரியில் அமைந்துள்ள தாகூர் கலைக்கல்லூரியிலும், பட்டமேற்படிப்பு மையத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியவர். மதகடிப்பட்டு, பெருந்தலைவர் காமராசர் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக மூன்று ஆண்டுகள் இருந்து இவராற்றிய கடமை அனைவராலும் போற்றும் தரத்தில் இருந்தது.

பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்கள் 1991 இல் வெளியிட்ட மதுரை வீரன் கதைகள் ஓர் ஆய்வு என்னும் நூல் மதுரைவீரன் கதைகளை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அரிய ஆய்வு நூலாகும்.


1. முன்னுரை, 2. அ. மதுரை வீரன் கதைச்சுருக்கம், ஆ. நிகழ்ச்சிகள் - ஒப்பாய்வு 3. சமுதாயச் சூழலும் மதுரைவீரன் கதையும், 4 மதுரை வீரன் கதைக்கருவும் அதன் வளர்ச்சியும், 5. முடிவுரை என்னும் தலைப்புகளில் இந்த நூல் அமைந்துள்ளது. 184 பக்கம் கொண்ட இந்த நூல் நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு முன்மாதிரியாக அமைந்த நூலாக உள்ளது.


பேராசிரியர் வே.ச. திருமாவளவன் எழுதிய கோபுரச்சிலை என்னும் நூல் 10 கட்டுரைகள் அடங்கிய நூலாகும். கோபுரச்சிலை, மூதின் முல்லை, புதுத்தீ, கள்ளும் காமமும், வித்துவக்கோட்டம்மா, கம்பன் படைப்பில் கும்பகர்ணன், குமரகுருபரரின் தமிழ் நெஞ்சம், நாட்டுப்புறப் பாடல்களில் பாட்டாளியின் குரல், நாட்டுப்புறப் பாடல்களில் கூந்தல் புனைவு, பாரதிதாசன் நோக்கில் பாரதியார் என்னும் தலைப்புகளில் அமைந்த இந்த நூல் மைசூர் பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்ற மாணவர்களுக்குப் பாடநூலாக இருந்துள்ளது.


அகநானூறும் காதா சப்தசதியும் - ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்த பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு 2008 ஆம் ஆண்டு நூல்வடிவம் பெற்றுள்ளது.

முன்னுரை, 1. அகநானூறும் காதா சப்தசதியும் ஓர் அறிமுகம், 2. அகநானூறு காட்டும் அக வாழ்க்கை, 3. காதா சப்தசதி காட்டும் அக வாழ்க்கை, 4. அகநானூறும் காதா சப்த சதியும் ஒப்பீடு, முடிவுரை என்னும் தலைப்புகளில் இந்த நூல் செய்திகள் உள்ளன.


தமிழ் நூலினையும், பிராகிருத மொழி நூலினையும் ஒப்பிட்டு நம் பேராசிரியர் வழங்கியுள்ள ஆய்வுச் செய்திகள் கற்போர்க்குக் கழிபேருவகை வழங்குவனவாகும். இந்த ஆய்வின் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியவர் முனைவர் எஸ்.ஆரோக்கியநாதன் ஆவார்.

2009 ஆம் ஆண்டு புதுவை அரசின் கலைமாமணி விருதுபெற்ற பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்கள், புதுவைத் தமிழ்ச்சான்றோர் பேரவையை நிறுவித் தமிழ்த்தொண்டு செய்துவருகின்றார். கவிதைச்சோலை என்னும் மரபுப்பாடல் நூலினை வெளியிடும் பணியில் இப்பொழுது உள்ளார். தம் பெற்றோர் நினைவாகப் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் ஓர் அறக்கட்டளை நிறுவியுள்ளார்.

பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்கள் 1964 இல் திருமதி கஸ்தூரி அம்மாளை மணந்து, இல்லறப் பயனாய் இரண்டு ஆண் மக்களும் இரண்டு பெண் மக்களும் இவர்களுக்கு வாய்த்தனர். நிறைவாழ்வு வாழும் பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்கள் நீடு வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.


ஞாயிறு, 3 ஜனவரி, 2016

‘சனதா’ சி. மாணிக்கம் மறைவு!சிங்கார. மாணிக்கம்

எங்கள் குடும்ப நண்பரும், உள்கோட்டையில் சனதா மளிகை, சனதா அழகுப் பொருள் அங்காடி போன்ற நிறுவனங்களை நடத்தியவரும், தந்தை பெரியார் அவர்களுக்கு உள்கோட்டையில் சொந்தப் பொறுப்பில் சிலை நிறுவியவரும், குடந்தை கதிர். தமிழ்வாணன் அவர்களை அழைத்துவந்து, தனித்தமிழ் வகுப்புகள் நடைபெறுவதற்கு வழிகோலியவருமான அண்ணன் சிங்கார. மாணிக்கம் அவர்கள் 02.01.2016 இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உள்கோட்டைப் பகுதியில் எளியநிலை மாணவர்கள் பலர் படித்து மருத்துவர்கள், பொறியாளர்கள் என முன்னேறுவதற்கு நிதியுதவி செய்தவர் என்பதும், ஊர் முன்னேற்றத்திற்குத் தாமே சென்று பல்வேறு நற்பணிகள் செய்தவர் என்பதும் இவரின் சிறப்புகளாக அமையும்.

'சனதா' கட்சி தோற்றம் பெற்ற நாளில் இவர் மளிகைக் கடை திறந்ததால் அன்று முதல் சனதா மளிகை என்று இவர் கடைக்கும், இவருக்குச் 'சனதா' என்றும் பெயர் அமைந்தது. மற்றபடி இவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இறுதிவரை தந்தை பெரியார் கொள்கையுடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்தவர்.

'சனதா' சி. மாணிக்கம் அவர்கள் யான் பதிப்பித்த விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூல் வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்தியவர். நான் முனைவர் பட்டம் பெறுவதைக் காண்பதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வருகை தந்தவர். 


என் திருமணத்தைத் தந்தையார் நிலையில் நின்று நடத்தியவர். என் திருமணத்திற்கு வருகை தந்த பேராசிரியர்கள் தமிழண்ணல், இரா. இளவரசு, க. ப. அறவாணன், கதிர். தமிழ்வாணன் உள்ளிட்டவர்களை வரவேற்று விருந்தோம்பியவர். எங்களின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் இணைந்து நின்றவர். எங்களின் குடும்ப மூத்த உறுப்பினராக விளங்கிய அண்ணன் ‘சனதா’ சிங்கார. மாணிக்கம் அவர்களை இழந்து, கையற்று நிற்கின்றோம்!


சிங்கார. மாணிக்கம் அவர்களின் புகழ் இப்புவியில் நின்று நிலவ அவர் வழியில் நடப்போம்!

வெள்ளி, 1 ஜனவரி, 2016

மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்று நூல் தந்த க. முருகன் அவர்கள்


க.முருகன்

 செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் என்னும் இரண்டு நூல்களையும் 2013, சூன் 7 இல் மலேசியாவில் வெளியிடுவதற்குரிய வகையில் அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தார். அந்த நூல் வெளியீட்டு விழாவில் ஒளி ஓவியர் ஒருவர் சிறப்பாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அகவை நிரம்பியிருந்த அந்தப் பெருமகனாரிடம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை எனக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் சொன்னவண்ணம் எனக்குப் படங்களை அனுப்பியிருந்தார். பின்னர் அவருக்குத் தொலைபேசி வழியாக என் நன்றியைத் தெரிவித்தேன்.

  பின்பொருமுறை குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியொன்றை மலேசியத் தமிழ்வள்ளல் ஐயா மாரியப்பனார் கிள்ளான் நகரில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கும் மேலே குறிப்பிட்ட ஒளி ஓவியர் வந்திருந்து, உரை நிகழ்த்தினார். ஒளி ஓவியர்கள் பெரும்பாலும் தம் தொழிலுடன் நிறுத்திக்கொள்வார்கள். சிலர் சமூக அக்கறையுடன் கூடுதல் பணிகளையும் செய்வதில் ஈடுபடுவார்கள். நம் ஒளி ஓவியர் பன்முகத் திறமையுடையவர். ஒளி ஓவியரைத் தனித்து நிறுத்தி உரையாடினேன். அவர் ஆசிரியர் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும், நாடகத்துறையில் ஈடுபாடு உடையவர் என்பதும் பின்புதான் தெரிந்தது. அவரிடம் மலேசியத் தமிழர்கள் குறித்தும், தமிழர்களின் பண்பாடு குறித்தும் அரிய செய்திகள் உள்ளமையை உரையாட்டின் வழியாக ஒருவாறு உணர்ந்துகொண்டேன்.

  மலேசியத் தமிழர்களின் வரலாறு, கலை, பண்பாட்டுக்கூறுகள், தமிழ்க்கல்வி வரலாறு குறித்த விவரங்கள் அண்மையில் எனக்குத் தேவைப்பட்டன. ஒளி ஓவியர் அவர்களின் நினைவுதான் முதலில் வந்தது. உடனடியாக நம் ஒளி ஓவியரைத் தொடர்புகொண்டேன். தமக்குத் தெரிந்த விவரங்களை அழகாகப் பட்டியலிட்டு உதவினார்கள்.

  ஒளி ஓவியராகவும், நாடகக் கலைஞராகவும், நல்லாசிரியராகவும் விளங்கும் அப்பெருமகனாரின் பெயர் க. முருகன் ஆகும். அவர் தம் பணிகளுள் இரண்டினைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். 1. சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் (2012), 2. சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் வரலாறு (நேற்று, இன்று, நாளை) (2015) என்னும் இரண்டு அரிய நூல்களை வழங்கியர். அரிய ஆய்வுத் தரம் கொண்ட நூல்களைத் தமிழுலகுக்கு வழங்கிய க. முருகன் அவர்கள் போற்றிப் பாராட்டப்பட வேண்டிய பெருமகனார் ஆவார்.

மலேசியாவில் வாழும் தமிழர்கள் மிகச் சிறந்த தமிழ்ப்பற்றுடையவர்கள். தாயகத்திலிருந்து யார் சென்றாலும் அவர்களை அன்புடன் வரவேற்று விருந்தோம்புவதை ஒவ்வொரு மலேசியத் தமிழர்களும் சிறப்பாகச் செய்வார்கள். இவர்களின் பண்புகளைப் பெறவேண்டியவர்களாக நாமும் உள்ளோம். தாயகத்தாராகிய நாம் மலேசியாவிலும், மற்ற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் படைக்கும் அரிய படைப்புகளைத் தமிழகத்தில் வரவேற்றுப் படிக்க வேண்டும். தக்க நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சிறு முயற்சிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழார்வலர்களை வேண்டுகின்றேன்.


  மலேசியாவைப் பொறுத்தவரை நம் தமிழ் மக்கள் குடியேறியவர்களின் மரபு வழியினராகவே உள்ளனர். தாயகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கலைகள், சிறு தெய்வ வழிபாடுகள், தோட்டப்புறப் பாடல்கள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தொகுத்துப் பாதுகாக்கவும், தமிழர்களின் வரலாறு குறித்த ஆவணங்களைத் திரட்டி வழங்கவும் அங்குள்ள தமிழார்வலர்களும், தமிழமைப்புகளும் முன்வரவேண்டும். இம்முயற்சியில் ஈடுபட்டவர்களை ஊக்கப்படுத்துவது நம் கடமையாக இருக்க வேண்டும்.

  திரு. முருகன் அவர்கள் உருவாக்கியுள்ள சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு (நேற்று, இன்று, நாளை) என்னும் நூலில் மலேசியாவில் தமிழ்க்கல்வியின் தோற்றம் பெற்ற வரலாறு விரிவாகத் தரப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப் பள்ளிகளின் வரலாறு சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் ஆசிரியராகவும், அமைப்பாளராகவும் இருந்து பணிபுரிந்ததால் தமிழ்க்கல்வி குறித்த அரிய வரலாற்றுச் செய்திகளை முழுமைப்படுத்தி, படத்துடன் நமக்கு வழங்கியுள்ளார். இந்த நூலினை நம் கல்வித்துறை, நூலகத்துறை வாங்கி ஆதரிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தேடிப்பிடித்து இந்த நூல்களை வாங்கித் தம் இருப்பில் வைக்க வேண்டும். இந்த நூலாசிரியரைத் தமிழகத் தமிழாசிரியர்களும் கல்வியாளர்களும் அழைத்துப் பாராட்ட வேண்டும்.


  
திரு. முருகனின்சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள்என்னும் நூல் மலேசியத் தமிழ் நாடகத்துறை வளர்ச்சியை நமக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் பள்ளி மேடைகளின் வழியாகத் தமிழ் நாடகங்கள் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அரிய படங்களுடன் நூலாசிரியர் வழங்கியுள்ளார். ஈடுபாட்டு உணர்வுடன் வெளிவந்துள்ள இந்த நூலும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூலாகும்.

 மலேசியாவில் உள்ள பால்மரக் காட்டில் உழைத்து, முன்னேறிய குடும்பத்தில் திரு. முருகன் அவர்கள் பிறந்தவர். பால்மரத் தொழிலின் அனைத்துப் பணிகளையும் அறிந்தவர். படித்து, பணியில் இணைந்து, தம் எழுத்தாற்றலாலும் தமிழ் ஈடுபாட்டாலும் தமிழர்களின் வாழ்வியல் பகுதிகளை ஆவணப்படுத்திய பெருமைக்குரியவர். தாமே மிகச் சிறந்த நடிகராகவும் விளங்குபவர். தமிழகத்து நாடக நடிகர்கள், திரைக்கலைஞர்களின் நடிப்பாற்றலை உள்வாங்கிக்கொண்டு இவர் மலேசியா மேடைகளில் சிறப்பாகத் தம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துபவர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் உச்சரித்த ஒவ்வொரு வசனங்களையும் இவர் தம் மனத்தில் தேக்கிவைத்துள்ளமை பாராட்டிற்குரிய ஒன்றாகும். தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்களின் சிறுதெய் வழிபாடு, அவர்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களை அறிந்துவைத்துள்ள இவர்தம் வாழ்க்கையினை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

  க.முருகன் அவர்கள் மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் பத்தாங் பெர்ஜுந்தை, சுங்கை திங்கி தோட்டத்தில் 17. 05. 1950  அன்று பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள்  சி. கண்ணன், சின்னகண்ணு ஆவர். முருகனின் தாத்தா திரு. சின்ன முருகன் அவர்கள் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்குச் சென்றவர்.

 . முருகன் அவர்கள் சுங்கை ரம்பைத் தோட்டத் தமிழ்ப் பள்ளியில்  1 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயின்றவர் (1957 – 1962). கம்போங் குவந்தான் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் புகுமுக வகுப்பு முதல் பாரம் 2 வரை (1963 – 1965) பயின்றவர். 1966 சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியிலும் (பாரம் 3),  1967 சுல்தான் அப்துல் அஜீஸ் இ.நி.பள்ளியில் 1968 – 1969 (பாரம் 4 & 5) பயின்றவர்.

 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1972 ஆண்டு வரை ரப்பர் தோட்டத்தில் (குமாஸ்தா) பணிபுரிந்தவர். 1972 அக்டோபர்  முதல் 1975 வரை தற்காலிகத் தமிழாசிரியராகக்  கேரித் தீவில் உள்ள கிழக்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றியவர்.

  1975 முதல் 1978   வரை பகுதி நேர ஆசிரியர் பயிற்சி பெற்று, 1978 முதல் 1983 ஆண்டு வரை பயிற்சி பெற்ற ஆசிரியர் என்ற நிலையில் கேரித்தீவு, கிழக்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணிபுரிந்தவர்.  

 1984 – ஜூலை முதல் 1997 வரை சிலாங்கூர் மாநிலம் கோல லங்காட்        மாவட்டம்,  தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.       

1997, ஆகஸ்ட் 16 முதல்  2000 ஜூலை 31 வரை கேரித்தீவு மேற்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். 

 1998 – 1999  - கல்வி தொடர்பான டிப்ளோமா பட்டயம் பெற்று, 1.8.2000 முதல் 16.05.2006    வரை சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் (Selangor State Tamil School Organizer) என்ற நிலையில் பணிபுரிந்தவர். தமிழ்ப் பள்ளிகளுக்கான கணித பாட (1,2,3 ஆம் வகுப்புகளுக்கான) நூல்களை எழுதியவர்.

 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கணித பாட தன்முனைப்பாளராகப் பணியாற்றியவர்.    1996 – 2000 வரை 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் மொழிச் சோதனைத் தாள் திருத்துநர்களுக்குத் தலைமையாளராகப் பணியாற்றியவர்.

பெற்ற விருதுகள்:

அரசு வழி - சிலாங்கூர் மாநில சுல்தான் வழங்கியது – AMS (2002)
                              மலேசிய மாமன்னர் வழங்கியது     - AMN (2004)
கல்வித்துறை வழி      - கோல லங்காட் மாவட்ட நிலையில் ஆசிரியர் மணி விருது  (2009)

கலையுலகப் பணி:

தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கத்தின் தலைவர் (2007 முதல் இன்று வரை)

 மலேசியத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளித்துத் தமிழ் நாடங்கள் மலேசியாவில் வளர்ச்சி பெறுவதற்கு ஆண்டுதோறும் நாடக நிகழ்வுகளை நடத்தி, பரிசளித்துப் பாராட்டும் இவரின் முயற்சி போற்றத்தக்கது.

மலேசியத் தமிழர்களின் பண்பாடுகள் குறித்த நூல்களையும் எழுதி உதவும்படி நல்லாசிரியர் க. முருகன் அவர்களை வேண்டுகின்றேன்.

திரு.. முருகன் அவர்கள் நிறைவாழ்வு வாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.