நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 ஜூன், 2012

நீச்சல்காரனின் தமிழுக்கு ஆக்கமான சந்திப்பிழை திருத்தி…




இணையத்தில் குழுச்சண்டைகள், இனச்சண்டைகள், சாதிச்சண்டைகள், அவதூறு பரப்பல், துதிபாடல் என்று பலவகை செயல்பாடுகள் ஆர்ப்பாட்டமாக நடந்துவருவதை அறிவோம். அங்கொன்றும் இங்கொன்றும் தமிழுக்கு ஆக்கமான வேலைகள் அமைதியாக நடைபெறுவதனைக் காணும்பொழுது மகிழ்ச்சி தோன்றுகின்றது.

பிறதுறைகளில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தாய்மொழியாம் தமிழுக்கு ஆக்கமான வேலைகளைச் செய்யும்பொழுது அவர்களைத் தொழுது வணங்கவேண்டியுள்ளது. தொழில்நுட்பத்தைக் காசுபார்க்கும் கலையாகப் பலர் செய்கின்றனர். சிலர் தொண்டு உணர்வுடன் செய்கின்றனர். தொண்டு உணர்வுடன் தொழில்நுட்ப அறிவைத் தமிழுக்கு வழங்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை நான் காணும்பொழுதெல்லாம் பாராட்டத் தயங்கியதே இல்லை. அவ்வகையில் மதுரையில் பிறந்து புனேயில் பணிபுரிந்துவரும் நண்பர் நீச்சல்காரன் அவர்களின் நாவி என்னும் மொன்பொருளைக் கண்டு மகிழும் ஒரு வாய்ப்பு அண்மையில் அமைந்தது.

நாவி என்பது தமிழில் சந்திப்பிழைகளைத் திருத்தும் இலவச மென்பொருளாகும். இதில் அடிப்படையான சந்திப்பிழைகளைத் திருத்தும் வசதி உள்ளது. பிறமொழிச்சொற்கள், உயர்திணைப்பெயர்கள் இவற்றைத் திருத்த இந்த மென்பொருள் உதவாது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். தமிழ் இணையக்கல்விக்கழக நூலகத்தில் இட்பெற்றுள்ள நூல்கள், கவிக்கோ ஞானச்செல்வன் நூல், புகழ்பெற்ற பதிவர்களின் எழுத்துகளை அடிப்படையாகக்கொண்டு இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

2011 இல் தொடங்கிய முயற்சி இடையில் தொய்வுற்றுள்ளது. மீண்டும் திருத்தியைச் சீர்செய்து இப்பொழுது பொதுவெளியில் வைத்துள்ளார். தமிழறிஞர்கள், இலக்கண ஆர்வலர்கள் பிழை திருத்தம் சார்ந்து நீச்சல்காரனுக்கு உதவினால் தமிழுக்கு ஆக்கம் நல்கும் இலவச மென்பொருளாக உலகத் தமிழர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும்.

நாவி மென்பொருளை மட்டுமன்றி ஆடுபுலியாட்டம், கோலங்கள் குறித்த நிரலையும் நீச்சல்காரன் தந்துள்ளார். 25 அகவை இளைஞராகத் தெரியவரும் நீச்சல்காரன் தன் முகத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. அவரின் பணிவும், அடக்கமும் எனக்கு மகிழ்ச்சி தந்தது. எதிர்நீச்சலிட்டுத் தமிழுக்கு உழைக்கும் நீச்சல்காரனைத் தமிழன்னை வாழ்த்துவாளாக!.

நீச்சல்காரனின் பணிகளைப் பார்வையிட…

நாவியில் பிழைகளைச் சரிபார்க்க…

சனி, 23 ஜூன், 2012

இலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு


முனைவர் ச.சுபாசு சந்திரபோசு

திருவையாறு அரசர் கல்லூரியில் 1985 முதல் 2008 வரை தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் ச.சுபாசு சந்திரபோசு அவர்களின் பெற்றோர் திருவாளர் சண்முகம், பாக்கியம் அம்மா ஆவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூரில் 10.06.1949 இல் பிறந்தவர். தமிழில் முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்டங்களை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். மொழியியல் முதுகலைப் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில 1982 முதல் 1985 வரை ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

"தமிழ் இலக்கணங்களில் வடமொழி இலக்கணத்தின் செல்வாக்கு" என்ற தலைப்பில் இவர் நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்றுப் பெருந்திட்டப்பணியை நிறைவு செய்தவர். தற்பொழுது "செம்மொழித் தமிழ்நூல்களில் வினைவழிப்பெயர்கள்" என்னும் திட்டப்பணியைச் செம்மொழி நிறுவனத்திற்காக மேற்கொண்டுள்ளார்.

இலக்கணம், இலக்கியம், படைப்புநூல்கள் என்று பன்முகத்தன்மையில் பல நூல்களை எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க இலக்கணப் புலமையும் மொழியியல் அறிவும்கொண்ட அறிஞர்களுள் முனைவர் ச.சுபாசுசந்திரபோசு அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கல்லூரிப் பணிகளில் கரைந்துபோனதால் இவர்களைப் போன்ற மேதைகள் வெளியில் தெரியாமல் போய்விடுவது தமிழகத்தின் வரலாறாக உள்ளது.

இலக்கணம்,மொழியியல் தொடர்பான பேராசிரியரின் நூல்கள்:

1. காலங்கள் (தமிழக அரசின் பரிசுபெற்றநூல்)
2. சொல்லியல் ஆய்வுங்கள்
3. எழுத்தியல் ஆய்வுகள்
4. வினைப்பாகுபாட்டில் எச்சங்கள்
5. பழந்தமிழ் வடிவங்கள் மீள்பார்வை

புதினங்கள்

1. மாவீரன் வாட்டாக்குடி இரணியன்
2. சாம்பவான்ஓடைச் சிவராமன்
3. பயிர்முகங்கள்
4. அக்கினிக் குழந்தைகள்
5. மலைப்பாம்பு மனிதர்கள்
6. காலவெள்ளம்
7. கூத்தாயி

சிறுகதைத் தொகுப்புகள்

1. கனவுகள்
2. சிவப்புநாளங்கள்
3. மாத்தாத்தா
4. குதிரைக்கு வைக்கோல்
5. ஐம்பது விழுக்காடு
6. தாமரைச் சிறுகதைகள்(தொகுப்பு)
7. புதுமைப்பித்தன் சிறுகதைகள் (ஐந்து
தொகுதிகள்- தொகுப்பு)

கவிதை

பாரதி நமது நதி
ஆம்பல் ஆறுமுகம்

வரலாறு

கண்ணந்தங்குடி வரலாறு
இலக்கிய வரலாறு

கட்டுரை

நல்லதோர் வீணை

உரைநடை

வீரபத்திர இராமாயணக்கும்மி

சுவடிப்பதிப்பு

வீரபத்திர இராமாயணக்கும்மி 1
வீரபத்திர இராமாயணக்கும்மி 2
சிறுவர் இலக்கியம்
மயக்குறு மாக்கள்

நாட்டுப்புறவியல்

நஞ்சைநாட்டு மனிதர்கள்
நாட்டுப்புறக்கதைகள்
நாட்டுப்புற நகைச்சுவைகள்

பெற்ற விருதுகள்

1.காலவெள்ளம்- சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு
2.தமிழறிஞர்கள் மகனுக்குப் பிரிவில் மருத்துவப் படிப்புக்கான இடம்
3.செங்கமலத்தாயார் அறக்கட்டளை இலக்கியவிருது (மன்னார்குடி 2011)

தொடர்பு முகவரி:

பேராசிரியர் ச.சுபாசு சந்திரபோசு
43, அருள்வனம், திருச்சி புறவழிச்சாலை
நாஞ்சிக்கோட்டை அஞ்சல்
தஞ்சாவூர்-

செல்பேசி: 0091 9894905038

வெள்ளி, 22 ஜூன், 2012

பிரான்சில் தமிழ் இலக்கிய உலகமாநாடு, சூலை 7,8, - 2012




பிரான்சு முத்தமிழ்ச்சங்கம், இலக்கியத்தேடல் அமைப்பு தமிழ் இலக்கிய உலக மாநாட்டைப் பிரான்சு நாட்டில் 2012 சூலை 7, 8 ஆகிய நாள்களில் நடத்துகின்றது,

தமிழகத்திலிருந்து அப்துல்ரகுமான், சிற்பி, இந்திரன், கு.சின்னப்ப பாரதி, கே.கருணாநிதி, சிவக்கொழுந்து, உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். பிறநாடுகளிலிருந்தும் கலை, இலக்கியம் சார்ந்த துறைகளிலிருந்து பெருமக்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.


புதன், 20 ஜூன், 2012

தி இந்தியன் எக்சுபிரசு நாளிதழுக்கு நன்றி…




இந்தியன் எக்சுபிரசு மதுரைப் பதிப்பு(18.06.2012, பக்கம் 2)

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற(17.06.2012) தமிழ் இணையப் பயிலரங்கிற்குச் சென்றபொழுது புதிய நண்பர்கள் பலருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற இப்பயிலரங்கம் குறித்த செய்தி அமைப்பாளர்களால் மதுரை நகரம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இணையப் பயிலரங்க நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகத் தி இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தின் சிறப்புச் செய்தியாளர் அவர்கள் என்னைச் சந்தித்துத் தமிழ் இணையப் பயிலரங்கம் குறித்த பல விவரங்களை ஆர்வமாகக் கேட்டார்கள். பிறகு என் கல்விப் பின்புலம், தமிழ் இணையப் பரவலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் என் முயற்சி, தமிழ் இணையப் பயிலரங்கத்தால் உலக அளவில் இந்த முயற்சி ஆர்வமுடன் கவனிக்கப்படுவதையெல்லாம் நான் எடுத்துரைத்தேன். இந்தியன்எக்சுபிரசு செய்தியாளர் அவர்கள் அனைத்து விவரங்களையும் சிறப்பாகப் பதிவுசெய்துகொண்டார்கள்.

பயிலரங்கம் தொடங்கியதும் அந்த நிறுவனத்தின் ஒளிப்படக்கலைஞரும் வந்து சிறப்பாகப் படங்களை எடுத்துக்கொண்டார்.

அன்றைய நாள் முழுவதும் சற்றொப்ப ஆறு மணிநேரம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து இரவே நான் புதுச்சேரிக்குப் புறப்பட்டுவிட்டேன். விடியற்காலை புதுச்சேரி வந்து சேர்ந்தேன். 18.06.2012 காலை மதுரையிலிருந்து முனைவர் வா. நேரு அவர்கள் செல்பேசியில் தொடர்பு கொண்டு, இந்தியன் எக்சுபிரசு இதழில் என் நேர்காணல் மிகச்சிறப்பாக வெளிவந்துள்ளதாகவும் தென்தமிழகம் முழுவதும் இந்தச் செய்தி வெளியாகும் எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். இந்த நேர்காணல் வாயிலாகத் தமிழ் இணையப் பயிலரங்கம் குறித்த செய்தி நன்கு பரவும் என்று நம்புகின்றேன். கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, தென்காசி எனத் தென் தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் நண்பர்கள் நாளிதழ்ச்செய்தி கண்டு, பாராட்டிப்பேசினர்.

என் தமிழிணையப் பணியை உலகுக்கு அறிமுகப்படுத்திய தி இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தாருக்கும், செய்தி ஆசிரியர், செய்தியாளர், ஒளிஓவியர் ஆகியோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திங்கள், 18 ஜூன், 2012

இளம் அகவையில் ஒரு மூதறிவாளர் மருத்துவர் ப.உ.இலெனின்…


மருத்துவர் ப.உ.இலெனின்

திரைப்பட இயக்குநர் ஒளிஓவியர் தங்கர்பச்சான் அவர்களின் பதிப்பகம் வெளியிட்ட ஓமியோ மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களின் நூல்கள் வழியாகத்தான் மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார். பிறகுதான் தெரிந்தது எங்கள் பேராசிரியர் த. பழமலை அவர்களின் மகன் இவர் என்று.

புதுச்சேரிக்கு நான் பணிக்கு வந்த பிறகு மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. நானும், என் குடும்பத்தாரும் தொடர்ந்து அவரிடம் மருத்துவம் பார்த்துக்கொள்வதுடன் பேராசிரியர் தமிழண்ணல், சிங்கப்பூர் கோவலங்கண்ணன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களுக்கும் மருத்துவம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளேன். சமநிலத்தில் நடப்பதற்கே பெரும் துன்பம் அடைந்த பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் மருத்துவரின் மருத்துவமுறையால் மாடிப்படிகளில் ஏறி இறங்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டார். தொடர்ந்து அவர் குடும்பத்தாருக்கு மருந்து மாதந்தோறும் நான் வாங்கி அனுப்புவேன். தமிழண்ணல் அவர்கள் வரைவோலையாகப் பணம் அனுப்பிவைப்பார்கள்.

மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள் நல்ல மருத்துவர் என்பதுடன் மனிதநேயப் பற்றாளராகவும் விளங்குபவர். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்ப்பார் என்பதைச் சிலர் மட்டும் அறிவோம். மருத்துவர் இலெனின் அவர்கள் வானொலி, தொலைக்காட்சி, செய்தி ஏடுகளில் தம் மருத்துவ அறிவைப் பொதுமக்களுக்கு உரையாடல் வழியும் எழுத்துக்கள் வழியும் வழங்கி மகிழ்பவர்.

மருத்துவர் ப.உ. இலெனின் அவர்கள் 26.06.1970 இல் பிறந்தவர். பெற்றோர் பேராசிரியர் த.பழமலை, ஆசிரியர் உமா.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி, மற்றும் மருத்துவமனையில் BH.M.S., மற்றும் M.D மருத்துவப் படிப்புகளை நிறைவுசெய்து, 1994 முதல் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகப் புதுச்சேரியில் மருத்துவப்பணியாற்றி வருகின்றார். இதுவரை மருத்துவம் சார்ந்து 36 நூல்களை எழுதியுள்ளார். மருத்துவத்தில் இவர் எழுதாதத் துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளமை இவரின் பலதுறை அறிவுக்குச் சான்றாகும்.

மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களின் மருத்துவத்துறைப் பேரறிவு கண்டு இந்திய அரசு சுகாதாரத்துறையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் ஆலோசகராகவும், உயர்நிலைக்குழுவின் ஆட்சிமன்ற உறுப்பினராகவும் அமர்த்தியுள்ளது.

மருத்துவர் ப.உ. இலெனின் அவர்கள் இனிய பேச்சுக்கும் கனிந்த பார்வைக்கும் உரியவர். திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் மருத்துவருக்குக் குறிப்பிடும் அனைத்து இலக்கணங்களையும் இலெனின் பெற்று விளங்குகின்றார். தம்மை நாடிவரும் நோயுற்றோருக்கு அன்புகுழைத்து மருத்துவம் பார்க்கும் இவர் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் அறிமுகப்படுத்தி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தமிழில் நூல்களாகத் தொடர்ந்து எழுதி மக்கள் மருத்துவராக விளங்க, வாழ்த்தி மகிழ்கின்றேன். மருத்துவர் இலெனின் அவர்களால் மருத்துவம் தமிழில் செழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

மருத்துவரின் தொடர்புமுகவரி:

மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள்,
மனைஎண் 8, குண்டுசாலை ரோடு,
நடேசன்நகர், (இந்திராகாந்தி சிலை அருகில்)
புதுச்சேரி- 605 005

தொலைபேசி(அலுவலகம்: 0091 413 2204876
செல்பேசி: 0091- 9345456056

ஞாயிறு, 17 ஜூன், 2012

மதுரைத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது…


சுப.முருகானந்தம் அவர்கள் வரவேற்புரை

மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 17.06.2012 காலை
பத்து மணியளவில் இனிதே தொடங்கியது. மதுரை வா.நேரு தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. சுப.முருகானந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பிரின்சுபெரியார் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு அனைவருக்கும் பயிற்சி வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சிபெற்று வருகின்றனர்.

அறிமுகவுரை பிரின்சு


நேரு அவர்கள் தலைமையுரை


பார்வையாளர்கள்(ஒருபகுதி)


மு.இளங்கோவன்- சிறப்புரை

வெள்ளி, 15 ஜூன், 2012

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்பரிசு


எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி

பொதுவுடைமை இயக்க உணர்வுகளை நெஞ்சில்தாங்கி எளிய வாழ்க்கை வாழ்ந்துவருபவரும் தமிழகத்தின் மூத்த படைப்பாளியுமான எழுத்தாளர் கு.சின்னப்பபாரதியின் படைப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியன. இவர்தம் சங்கம், தாகம் உள்ளிட்ட புதினங்கள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களால் ஆர்வமுடன் படிக்கப்பட்டு வருகின்றன.

மூத்த எழுத்தாளர் சின்னப்பபாரதி அவர்கள் தம்மையொத்த படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முகமாக மக்கள்கொடைப்பணத்தில் ஓர் அறக்கட்டளை நிறுவி அதன்வழியாக ஆண்டுதோறும் படைப்பாளர்களை அழைத்துப் பரிசில் நல்கிப் பாராட்டிவருகின்றார். அந்தவகையில் சென்ற ஆண்டு "இணையம் கற்போம்" என்ற என் நூலும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு வழங்கிப் பாராட்டப்பெற்றது. அப்பொழுதாதன் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அவர்களை நேரில் கண்டேன். என் படைப்புகளையும் என் முயற்சிகளையும் கு.சின்னப்பபாரதி அவர்களுக்கும் அறக்கட்டளைக்கும் அறிமுகம் செய்தவர்கள் நாமக்கல் செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் ஐயா அவர்கள் ஆவார். கல்லூரி முதல்வர் திரு.செந்தில் அவர்கள் என் இணையம் கற்போம் நூலைக் கற்று மாணவர்களுக்கு அந்த நூலை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். இவ்வாறு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அறக்கட்டளை இந்த ஆண்டும் பரிசிக்குரிய நூல்களை வரவேற்று அறிவிப்பு செய்துள்ளது. அறிவிப்பைக் கீழ்வரும் பகுதியால் அறிக.

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்பரிசு நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்கு தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து நூல்களை வரவேற்கிறது.

இந்த ஆண்டு முதல் முதன்மைப்பரிசு ரூ.1½ இலட்சம் (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) வழங்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. பிற சிறப்புப்பரிசுகள் ஒவ்வொரு துறைக்கு ஒரு பரிசாக ரூபாய் பத்தாயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது. பணமுடிப்புடன் கேடயமும் சான்றிதழும் வழங்கப்படும். 2012, அக்டோபர் 2ஆம் நாள், காந்தி பிறந்த நாளன்று இப்பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

விதிமுறைகள்:

• நாவல், கட்டுரை(இலக்கிய ஆய்வு உட்பட), சிறுகதை, மொழிபெயர்ப்பு, கணினித் தமிழ்இலக்கியம், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள், சமூகசேவை, நாடகம், கவிதை மற்றும் சிறந்த பத்திரிக்கையாளர் ஆகிய துறைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

• எழுத்தாளர், பதிப்பாளர் அல்லது அவர்கள் சார்பாக யாரும் நூல்களை அனுப்பி பரிந்துரைக்கலாம்.

• விண்ணப்பப் படிவம் www.kucbatrust.com/application_fom.pdf என்ற இணைய தளத்தில் கிடைக்கும். பிரதி எடுத்து நிரப்பி அனுப்பிட வேண்டும்.

• விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் பரிசுக்கான பரிந்துரை நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பி வைத்திட வேண்டும்.

• சிற்றிதழ்கள் எனின் 2011ஆம் ஆண்டு வெளிவந்த அனைத்து இதழ்களின் மூன்று பிரதிகளை அனுப்ப வேண்டும்.

• சிறந்த பத்திரிக்கையாளர் விருதுக்கு, பெயரை யார் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம்.
அவரது பணிகளை விபரமாக விண்ணப்பப்படிவத்துடன் பின் இணைக்க வேண்டும்.

• பரிசுத்தெரிவு இறுதி முடிவு அறக்கட்டளையின் தனிப்பட்ட முடிவாகும்.

• இந்தியா, சர்வதேச நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ்ப்படைப்பாளிகள் எவரும் கலந்து கொள்ளலாம்.

• படைப்புகள் ஐந்து ஆண்டுகளுக்குள் அதாவது 01.01.2007 முதல் 31.12.2011 வரை வெளிவந்ததாக இருத்தல் வேண்டும்.

• ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளான படைப்புக்களில் முதன்மைப் பரிசுக்கான தகுதியான நூல்கள் கிடைக்கப் பெறாவிட்டால் தமிழ் இலக்கியப்பரப்பில் வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் என்கிற வகையில் தகுதியான ஒருவருக்கு அறக்கட்டளை பரிசு வழங்கும்.

• பரிசுக்கான விண்ணப்பமும் நூல்களும் ஜுலை 15ஆம் தேதிக்குள் வந்துசேரவேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படமாட்டாது.

• விண்ணப்பம் மற்றும் நூல்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,

திரு. சி. க. கருப்பண்ணன், IRS(ஓய்வு)
துணைத்தலைவர்,
கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை,
செல்லம் மழலையர் பள்ளி,
சின்ன அய்யம்பாளையம் (அஞ்சல்),
நாமக்கல் (மாவட்டம்),
தமிழ்நாடு – 637 003.
அலைபேசி: 9487090666

மேற்கண்ட அறிவிப்பினைக் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் தலைவர். டாக்டர். பொ. செல்வராஜ், செயலாளர். திரு.கா.பழனிச்சாமி, ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள்.

நன்றி: கு.சின்னப்பபாரதி இணையதளம்

புதன், 13 ஜூன், 2012

கு.சின்னப்ப பாரதியின் புதுவை வருகை…


கு.சின்னப்ப பாரதி, கி.இரா

இன்று வைகறையில் செல்பேசி மணியடித்துப் பிரஞ்சுப் பேராசிரியர் நாயக்கர் எழுப்பினார். இன்று நாமக்கல்லிலிருந்து எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அவர்கள் புதுவை வருவதாகவும் மாலை நான்கு மணிக்கு வரும் அவரை அழைத்துப் போற்றுவது என் பொறுப்பு என்றும் கூறினார். பேராசிரியர் நாயக்கர் அவர்கள் குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்வு என்பதால் ஐயாவை வரவேற்கும் பொறுப்பு எனக்கு அமைந்தது. மாலையில் எனக்கு ஆறு முனைகளில் வேலை நடந்துகொண்டிருந்தது. அனைத்தையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்த எனக்கு ஐயாவை வரவேற்பதும் ஒருபணியாக அமைந்தமை மகிழ்ச்சியாக இருந்தது.

“அம்சம்” பயண ஏற்பாட்டகத்தில் ஐயா கு.சின்னப்பபாரதி அவர்கள் இருந்தார். மாலை 4 மணிக்கு அங்குச் சென்று ஐயாவை வரவேற்று அவருடன் இணைந்துகொண்டேன். அடுத்த மாதம்(சூலை) முதல் கிழமையில் பிரான்சு நாட்டில் கு.சின்னப்பபாரதியின் சங்கம் நூல் பிரெஞ்சுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியீட்டு விழா நடைபெறுவதாகவும் அந்த விழாவில் கலந்துகொள்ளவும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்குச் செல்லவும் ஐயா அவர்கள் நுழைவுச்சீட்டு(விசா) பெறுவதற்காகப் புதுவை வந்திருந்தார்கள். பயண ஏற்பாட்டாளர்கிடம் தம் பயணத்திட்டம் குறித்து விளக்கமளித்து உரிய ஏற்பாடுகள் செய்யும்படி பயண ஏற்பாட்டகத்தில் சொல்லிப் புறப்பட்டோம்.

கு.சின்னப்பபாரதி அவர்கள் எழுத்தாளர் கி.இரா. அவர்களைக் காண வேண்டும் என்றார்கள். இருவரும் கோவை பழமுதிர்நிலையத்தில் அரத்திப் பழம், கொடிமுந்திரிப்பழம் வாங்கிக்கொண்டு கி.இரா. ஐயா இல்லம் சென்றோம் புதுவையில் அரசு குடியிருப்பின் புதிய வீட்டில் ஐயா கி.இரா. அவர்கள் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

ஒருவருக்கொருவர் நலம் வினவினோம். இருவரையும் பேசிக்கொண்டிருக்கும்படி கூறிவிட்டு, ஒரு மணி நேரம் என் பணிகளுக்காகப் பிரிந்தேன். மீண்டும் இருவரையும் காணத் திரும்பினேன். கி.இரா.அவர்களும் கு.சின்னப்பபாரதி அவர்களும் தங்கள் எழுத்துகளைப் பற்றியும் இன்றைய இலக்கிய உலகம் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். இருவரின் பேச்சுகளையும் உற்றுநோக்கியிருந்தால் பயனுடைய பல செய்திகளைப் பெற்றிருக்கமுடியும்.

இரண்டு எழுத்தாளர்களும் தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். எனவே இருவரையும் நினைவுக்காகச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன். மீண்டும் விடைபெற்று, புதுவை- வில்லியனூரில் நடைபெற்ற திருமணத்திற்குக் கு.சின்னப்பபாரதி அவர்ளுடன் சென்றோம். இனிய பட்டறிவாக இந்தச் சந்திப்பு இருந்தது.


கு.சின்னப்ப பாரதி,


பேராசிரியர் நாயக்கர், கு.சி.பாரதி,கி.இரா


மு.இளங்கோவன், கு.சின்னப்ப பாரதி, கி.இரா

திங்கள், 11 ஜூன், 2012

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளிவிழா-2012


பால்டிமோர் துறைமுகம்

தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப்போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய அமைப்பு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைஎன்பதாகும்.

வடஅமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள்கொண்டு ஒருகுடையின்கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவையானது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கிவருகிறது.

ஆண்டுதோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவைக் கொண்டாடிவருகிறது பேரவை. இவ்வாண்டு அதன் 25 ஆண்டு காலப் பணியையும் நிறைவுசெய்யும்பொருட்டு, அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவினைத் தனது வெள்ளிவிழாவாக மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், சூலை மாதம் 6, 7, 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. இம்மூன்றுநாள் பெருவிழாவுக்குக் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடவுள்ளார்கள்.
ஒவ்வோர்ஆண்டும், அமெரிக்கத் தமிழ்த்திருவிழாவினைத் தமிழறிஞர் ஒருவருக்குச் சிறப்புச்செய்யும் வகையில் அவர்தம் பெயர்சூட்டிப் பெருமைப்படுத்திவருகிறது பேரவை. சென்றஆண்டு பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அவ்வகையில் இவ்வாண்டு, பேரவையின் வெள்ளிவிழாவானது முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகப் போற்றப்பட்டு அவர்தம் பணிகளை அமெரிக்கத் தமிழர்களுக்குக் கொண்டுசேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

”தமிழால்இணைவோம்! செயலால்வெல்வோம்!!” எனும் இயன்மொழியைக் கொண்ட அமெரிக்கத் தமிழ்த்திருவிழாவில், தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு போற்றும் முகமாகப் பலநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. வாழும்கலைப் பயிற்சி சிறீசிறீ இரவிசங்கர் அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலைவித்தகர் கலைச்செழியன் பயிற்சி, இ.ஆ.பணியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், ‘விஜய்டிவி’ சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணிநடிகர் பரத், முன்னணி நடிகை அமலாபால் மேடைநிகழ்ச்சி, கன்னடப் பைங்கிளி சரோசாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரெண்டாபெக், எழுத்தாளர் எஸ். இராமகிருட்டினன் இலக்கியப்பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் தலைமையில் கவியரங்கம், டி.கே.எசு. கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில்சித்ரா, ஐங்கரன்குழுவினர் வழங்கும் மெல்லிசைநிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான பண்பாட்டுப் பொருண்மியங்கள் தாங்கிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

இணையரங்குகளில் இணைஅமர்வுகளாக, தமிழ்த்தேனீப் போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன் – தமிழச்சி 2012, முன்னாள்மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்கத் தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல்பயிற்சி, தமிழ்மணம்இணையப்பட்டறை, வலைஞர்சங்கமம்முதலானவையும்இடம்பெறவுள்ளன.

2012 ஆம் ஆண்டிற்கான அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவானது, பேரவையின் வெள்ளி விழாவாகவும்அமைந்திருப்பதால்அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை, வாசிங்டன்வட்டாரத் தமிழ்ச்சங்கம் சிறப்பாகச் செய்துவருகிறது. சூலை ஐந்தாம்நாள் மாலை தமிழிசைவிழா, விருந்தினர்மாலை எனத் துவங்கும் தமிழ்த்திருவிழா, சூலை 6, 7 ஆகியநாட்களில் முழுநாள்விழாவாக நடைபெறும். சூலை 8ம் நாள்காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்குவரும்.

விழாவுக்குப் பேரவை இணையதளத்தில் முன்பதிவுசெய்துகொள்ளவேண்டும். முன்பதிவு செய்துகொள்ளவும், பேரவைவிழாகுறித்தகூடுதல்தகவல்களைப் பெறவும்நாடவேண்டிய இணையதளமுகவரி: www.fetna.org

பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள்சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்துகொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள்பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான ’வலைஞர்சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர்பழமைபேசி: 980 322 7370.

தமிழிசை விழாவிலும், மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகளில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பொற்செழியன் 314 249 0706

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலான கவியரங்க ஒருங்கிணைப்பாளர்,திரு.கார்த்திகேயன்தெய்வீகராசன்.கவியரங்கத்தில் பங்கேற்க விழைவோர்அவரைத்தொடர்புகொள்ள: 860 212 2398

‘விஜய்டிவி’ புகழ் சிவகார்த்திகேயன் நடத்தும் விவாதமேடையில் பங்கேற்றுச் சிறப்பிக்க, அதன் ஒருங்கிணைப்பாளரான இரா.மனோகரன் அவர்களைத் தொடர்புகொள்ள: 267-421-2891
கூடுதல்தகவல்களைப் பெறவும், இதர செய்திகளுக்கும் தலைவர்மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்புகொண்டு பேசலாம். முனைவர் தண்டபாணிகுப்புசாமி, தலைவர், வடஅமெரிக்கதமிழ்ச்சங்கப்பேரவை, 843-814-7581 திரு.பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளிவிழா ஒருங்கிணைப்பாளர், 301-237-1747

அமெரிக்காவின் நாட்டுப்பண்(national anthem) உயிர்த்த நகரமாம் பால்ட்டிமோர் நகரில் சற்றொப்ப இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஒன்றுகூடி, இவ்வாண்டுக்கான தமிழ்த்திருவிழாவினைத் தங்களது பேரவையின் வெள்ளிவிழாவாகக் கொண்டாடும் பொருட்டுப் பேரவை முன்னணியினர் முனைப்பாகக் களப்பணியாற்றி வருகிறார்கள்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் படத்திறப்பு நிகழ்ச்சி


இரா.முத்துக்குமாரசாமி,இரா,இளவரசு,பெருங்கவிக்கோ-படத்திறப்பாளர்கள்

சிங்கப்பூரில் வாழ்ந்த பாவாணர் பற்றாளர் வெ.கரு. கோவலங்கண்ணன் அவர்கள் அண்மையில் சிங்கப்பூரில் இயற்கை எய்தினார். அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் அரங்கில் 08.06.2012 மாலை 7மணிக்கு நடைபெற்றது.

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் தலைமை தாங்கி ஐயா கோவலங்கண்ணன் அவர்களின் படத்தினைத் திறந்துவைத்து இரங்கலுரையாற்றினார். பேராசிரியர் இரா.இளவரசு அவர்கள் கோவலங்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்றினை எடுத்துரைத்து உரையாற்றினார். முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் கோவலங்கண்ணன் அவர்கள் நிறுவிய பல்வேறு அறக்கட்டளைகளையும் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

பாவாணர் அவர்களின் திருமகனார் திரு.தே.மணி அவர்கள் பாவாணர்மேல் கோவலங்கண்ணன் அவர்களுக்கு இருந்த தமிழ்ப்பற்றையும் பாவாணர் நூல்கள் பரவவும், வறுமை நீங்கவும் செய்த செயல்களையும் நினைவுகூர்ந்தார்.

கோவலங்கண்ணன் அவர்களின் அலுவலகத்தில் பணிபுரிந்து தேவநேயம்.ஆர்க் என்ற இணையதளத்தை வடிவமைத்துப் பாவாணர் நூல்கள், பாவாணர் மடல்களை இணையவெளியில் உலாவரச்செய்த கவி அவர்களின் உரை கோவலங்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்றை எடுத்துரைத்தது.

உலகத்தமிழ்க்கழகப் பொதுச்செயலாளர் முனைவர் அரணமுறுவல் பாவாணர் கொள்கைகள் நடைமுறைப்படுத்தவேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசினார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமகனார் திரு. மா.பூங்குன்றன் அவர்கள் கோவலங்கண்ணன் அவர்களின் தனித்தமிழ் ஈடுபாட்டையும் தமிழறிஞர்களைப் புரந்தருளிய பாங்கையும் விவரித்தார்.

நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கப்பூர் கோவலங்கண்ணன் அவர்களுடன் பழகிய பழக்கத்தையும் எனக்கும் அவருக்கும் இருந்த நட்பு நெருக்கத்தையும் நினைவுகூர்ந்து பேசினேன். முறம்பு பாவாணர் கோட்டத்திற்கு உதவியது, வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு, அதன்வழிப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிறுவிய அறக்கட்டளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்ட பாவாணர் அறக்கட்டளை, கோவலங்கண்ணன் அவர்கள் வெளியிட்ட தமிழ்நூல்கள், முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கும் கோவலங்கண்ணன் அவர்களுக்கும் இருந்த தொடர்பு பற்றி எடுத்துரைத்தேன்.

நிகழ்ச்சியை திரு.வீரபாகுசுப்பிரமணியன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.

முனைவர் அருகோ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், அன்புவாணன் வெற்றிச்செல்வி, வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் க.தமிழமல்லன், பதிப்பாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். பாவாணர் பற்றாளர்கள், தென்மொழி அன்பர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அலுவலர்கள், கோவலங்கண்ணன் ஐயாவின் மகன் பொற்கைப்பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் நிறைந்த எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.


தே.மணி,இராமர் இளங்கோ,இரா.முத்துக்குமாரசாமி,இரா.இளவரசு.அரணமுறுவல்


வீரபாகு,இரா.இளவரசு,இராமர் இளங்கோ


மு.இளங்கோவன் மலர்வணக்கம் செய்தல்


பார்வையாளர்கள்

மதுரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் சிறப்புற நடைபெற உள்ளது.


நாள் : 17.06.2012, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
இடம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை-3

தஞ்சை வல்லம்- பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் - ஊரக வளர்ச்சி உயராய்வு மையமும், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும் பகுத்தறிவாளர் கழகமும், இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கத்தை நடத்துகின்றன.

தமிழ் இணையப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற, குறிப்பிட்ட இடங்களே இருப்பதால் முதலில் பதிபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுத்தறிவாளர் கழகம்சார்ந்த அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

வா. நேரு, 9443571371
வே.செல்வம், 9843346346,
மீ.அழகர்சாமி, 9245289949