நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழச்சி தங்கபாண்டியன் உரை


குத்துவிளக்கு ஏற்றும் கவிஞர் தமிழச்சி

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா இன்று 31.08.2010 காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.கல்லூரியின் முதல்வர் முனைவர் து.சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.பொன்னுத்தாய் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

பாரதிதாசன் கல்லூரியின் பேராசிரியர்கள்,மாணவிகள் மிகுதியான எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கல்லூரி மாணவியர் உள்ளம் உவகை அடையும் வகையில் அரியதோர் சொற்பொழிவாற்றினார்.அவர் உரையிலிருந்து....

நான் அரசியல் பின்புலம்,எழுத்தாளராக, கவிதைப்பின்புலம் கொண்டவளாக அறிமுகமாவதைவிடத் தென் தமிழகத்தின் கடைக்கோடிக் கிராமத்துப் பெண்ணாக அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கவிதை என்றால் இன்று காதல் கவிதைகள்தான் என்ற நிலை உள்ளது.
மூவாயிரம் ஆண்டுகால மரபுகொண்ட தமிழ் இலக்கியத்தில் ஆழமான கவிதை மரபு உண்டு. பிறமொழியில் புலமை இருந்தால் சமூகத்தில் மதிப்பு உடையவர்களாக மக்கள் மதிக்கின்றனர்.ஆனால் நம் சிறப்பு மிக்க மொழியில் புலமை இருந்தால் அவற்றை மக்கள் மதிப்புக்குரியதாகக் கருதுவதில்லை.இது வேதனை தரும் செய்தியாகும்.
உங்கள் வாழ்க்கையிலிருந்து படைப்புகள் உருவாக வேண்டும்.

பாவேந்தரின் குடும்ப விளக்கில் முதியோர் காதல் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.
"நீ இருக்கின்றாய் என்பது ஒன்றே போதும்" என்று பாடுவது சிறப்பு.
கவிஞர்கள், புலவர்கள் பெண்களுக்கு இலக்கணம் வகுத்தவர்வகள் ஆண்களுக்கு ஏன் வகுக்கவில்லை? என்று கேட்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு குரல்கள் கொண்டுள்ளன.

மரபின் அச்சில்தான் புதுமைச் சக்கரங்கள் சுற்றுகின்றன.

பழைமையை உள்வாங்கிக்கொண்டு புதுமைகளைப் படைக்க வேண்டும்.
பாப்லோ நெருடா பேரபத்து விளைவிக்கக்கூடியது கவிதை என்றார்.
வாழ்க்கையை விமர்சனத்துக்கு உட்படுத்துவதுதான் எழுத்தாளின் கடமையாக இருக்க வேண்டும்.

யாரை முன்னுதாரணமாக வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மரங்களும்,விலங்குகளும் எங்கள் உடன் பிறந்தவை என்று கருதும் பழங்குடி மக்கள் இன்று சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கின்றனர்.அவர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.

மாணவிகள் கலந்துகொண்டு தமிழச்சியின் கவிதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
எஞ்சோட்டுப்பெண்,வனப்பேச்சி,பேச்சரவம் கேட்டிலையோ நூல் பற்றி மாணவிகள் வினாக்கள் எழுப்பினர்.

மேலும் கவிஞரின் படைப்பு அனுபவங்கள் பற்றியும் வினாக்கள் எழுப்பினர்.மாணவிகள் பலரும் தமிழச்சியின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்புவித்தனர்.இலங்கைப் புலம் பெயர் மக்கள் பற்றி தமிழச்சி எழுதிய கவிதைகள் மாணவிகளுக்குப் பெருவிருப்பமாக இருந்ததை அறியமுடிந்தது.


எதனைப் பற்றியும் எழுதலாம்.அவ்வாறு எழுதும் படைப்பு சிறந்ததாக இருக்கும் என்று நிறைவுசெய்தார் கவிஞர்.


உங்களுக்குப் பிடித்த மிகச்சிறந்த கவிஞர்கள் யார்?

சங்கப்பெண் கவிஞர்கள்,கிரேக்கக்கவிஞர்கள்,தமிழில்
இரா.மீனாட்சி,பிரமிள்,ஆத்மாநாம்,தேவதச்சன் உள்ளிட்ட கவிஞர்கள் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்துள்ளனர்.

வனப்பேச்சி,மஞ்சனத்தி என்று பெயர் வைக்க காரணம் என்ன?

நான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையைப் பதிவு செய்ய இந்த தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தேன்.




செம்மொழி விருது பெற்ற மு.இளங்கோவனைப் பாராட்டும் கவிஞர் தமிழச்சி



நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்,மாணவர்கள்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தென்செய்தி இதழ் வளர்ச்சிக்கு நிதி கையளிப்பு விழா


செல்வி சா.நர்மதா,செம்பியன் ஆகியோர் இரண்டரை இலக்கம் உருவா நிதிக்கான வரைவோலையைப் பழ.நெடுமாறன் அவர்களிடம் வழங்கல்,அருகில் மு.வ.பரணன்

புதுச்சேரித் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் தனித்தமிழில் நாளிதழ் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு நிதி திரட்டினர்.தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் முதன்மைப் பொறுப்பாளராக விளங்கிய முனைவர் இரா.திருமுருகனும்,பொருளாளர் தி.ப.சாந்தசீலனார் அவர்களும் அடுத்தடுத்து இயற்கை எய்தியதால் தனித்தமிழ் நாளிதழுக்குத் திரட்டப்பட்ட தொகயைத் தமிழ்,தமிழின வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றும் தென்செய்தி இதழுக்கு வழங்கத் தீர்மானித்தனர்.

அவ்வகையில் தென்செய்தி இதழாசிரியர் திரு.பழ.நெடுமாறன் அவர்களிடம் இரண்டரை இலக்கம் உருவா நிதியினை இன்று(30.08.2010) மாலை புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் அறக்கட்டளையின் தலைவர் திரு.செம்பியன்,பொருளாளர் தி.ப.சா.நர்மதா,முனைவர் தமிழப்பன், மு.வ.பரணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி வழங்கினர்.

நிதியினை ஏற்றுக்கொண்ட பழ.நெடுமாறன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அரியதோர் உணர்வுரையாற்றினார்.அவர் உரையிலிருந்து சில பொறிகள்:

தமிழ்நாடு என்ற பெயரில் மதுரையிலிருந்து திரு.தியாகராச செட்டியார் தமிழில் நாளிதழ் நடத்தினார். அந்த இதழ் இடையில் நின்றாலும் அதன் தாக்கம் தமிழ் இதழியல் வரலாற்றில் காணப்படுகின்றது.இந்த இதழில் தமிழறிஞர்கள் மா.இராசமாணிக்கனார், ஒளவை. துரைசாமியார், அ.கி.பரந்தாமனார் உள்ளிட்ட அறிஞர்கள் பணிபுரிந்தனர்.

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தமிழ் ஓசை என்ற நாளிதழைச் சென்னை,கோவை,திருச்சி உள்ளிட்ட ஊர்களிலிருந்து வெளிவரும்படி நடத்தினார்.இன்று சென்னையிலிருந்து மட்டும் பெரும் பொருள் இழப்புகளுக்கு இடையே வெளிவருகின்றது.

இதழியல்துறை இன்று வணிகமயமாகி விட்டதால் தமிழ் உணர்வு சார்ந்த செய்திகளை வெளியிடும் ஏடுகள் வெளிவருவதில் சிக்கல் உள்ளது.தமிழார்வலர்களால் வணிக இதழ்களுக்கு நடுவே போட்டியில் வெற்றிபெற முடியவில்லை.

நானும் செய்தி என்ற பெயரில் (1972-76) மதுரையிலிருந்து நாளிதழ் வெளியிட்டேன்.பின்னர் நிறுத்தினேன்.இதழ்கள் இன்று வணிக மயமானதால் மொழி,இனம் பற்றி எழுதுவதில்லை. பரபரப்பு செய்திகளை வெளியிட்டு ஆதாயம் அடைகின்றனர்.

பிரான்சு நாட்டில் பிரஞ்சு அகாதெமி மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணைபுரிகின்றது. அங்கெல்லாம் 96 பக்கத்தில் இதழ்கள் வெளிவருகின்றன.ஒரு இதழில் மூன்று ஆங்கிலச் சொல்லைக் கலந்து எழுதியமைக்கு அந்த இதழ் ஆசிரியர் பிரஞ்சு அகாதெமிக்கு அழைக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்டார்.ஆனால் தமிழகத்தில் ஆங்கிலமும்,சமற்கிருதமும் கலந்து எழுதப்படுகின்றன.

சிற்றிதழ்கள்தான் இன்று தமிழ்மொழி,தமிழ்த் தேசியத்திற்குப் பாடுபடுகின்றன.தமிழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவருகின்றன.இவை பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையேதான் வெளிவருகின்றன.திராவிட இயக்க ஏடுகள் முந்நூறுக்கும் மேல் வெளிவந்தன.

தமிழுக்கு ஐயாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு.வரலாற்றை நோக்கும்பொழுது தமிழுக்கும் தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது.தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருத ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.புலவர்களும் மன்னர்களும் இணைந்து இப்போரில் வெற்றிகண்டனர்.

வடமொழி ஆதிக்கத்தால் தமிழ் சிதைந்தது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என்று பிரிந்தது. பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் தந்த தமிழர்கள் கேரளர்களாக மாற்றம் அடைந்து எதிரிகளாகிவிட்டனர்.

மொழியடிப்படையில் அழிவுகளைத் தொடங்கியதால் அரசன் பெயர்,ஊர்ப்பெயர், கோயில்களின் பெயர்,இறைவன் பெயர்,ஆறுபெயர்,குளம்பெயர் யாவும் வடமொழியாயின.மணிப்பிரவாள நடை உருவானது.அவற்றைப் புலவர்கள் தடுத்து நிறுத்தினர்.இருபதாம் நாற்றாண்டில் மறைமலையடிகள், பாவாணர்,பெருஞ்சித்திரனார்,தங்கப்பா,இரா.திருமுருகனார் உள்ளிட்ட அறிஞர்கள் தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் நான் கிருஷ்ணன் என்ற பெயரில் இருந்தவன் நெடுமாறன் ஆனேன்.

எனவே தான் தொடர்ந்து தமிழ்ப்பகைவர்கள் மொழியையும் இனத்தையும் பல சூழ்ச்சி செய்து அழித்து வருகின்றனர்.இரண்டாம் உலகப்போரில் மாண்டதை விட ஈழத்தமிழர்கள் இன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நம் காலத்திலேயே தமிழ் அரியணை ஏற வேண்டும் என்றார்.


பழ.நெடுமாறன் அவர்களுக்கு ஆடை போர்த்தி மகிழும் செல்வி சா.நர்மதா

நிகழ்ச்சியில், பொருளாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட செல்வி.தி.ப.சா.நர்மதா நன்றிகூறினார்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாருக்கு நூற்றாண்டுவிழா

 இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல்,பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின்(05.09.1909) நூற்றாண்டு விழாவை அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி வட்டம் மேலைப்பெருமழையில் 05.09.2010(ஞாயிற்றுக் கிழமை) ,மாலை நான்கு மணிமுதல் இரவு ஏழு மணிவரை கொண்டாட விரும்புகிறோம்.

 புலவர் பெருமான் அவர்கள் தமிழ் நினைவில் தோய்ந்திருந்ததால் குடும்பவளர்ச்சியில் நாட்டமில்லாமல் திகழ்ந்துள்ளார். அவர் பிள்ளைகளுக்கே ஐயாவின் பெருமை முழுமையாகத் தெரியாமல் உள்ளது.அவர் ஊரினரும் ஓரளவே ஐயா பற்றி அறிவார்கள்.இந்த நிலையில் மேலைப்பெருமழை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திருவாளர் சோ. இராசமாணிக்கம் அவர்களும் இன்றைய ஊராட்சி மன்றத்தலைவர் திருவாட்டி வேதவள்ளி இராசமாணிக்கம் அவர்களும், மேலைப்பெருமழையில் பிறந்து, தஞ்சாவூரில் வாழ்ந்து வரும் திரு.சிவபுண்ணியம் அவர்களும் புலவர் பெருமானின் நூற்றாண்டு விழாவை நடத்த இயன்ற உதவிகள் செய்ய ஆர்வமுடன் உள்ளனர்.

 தமிழுக்கு உழைத்த பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் பெருமையை உலக அளவில் தெரிவிக்கவும் பதிவு செய்யவும் விரும்புகிறோம்.

 ஆர்வமுடைய தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள்,அயல்நாடுகளில் வாழும் தமிழன்பர்கள் இணைந்து ஐயாவின் பெருமையினை நினைவுகூரப் பணிவுடன் அழைக்கின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப நிகழ்வாக இதனைக் கருத வேண்டும்.
பெருமழைப் புலவரின் அறிவாற்றலையும் தமிழ்ப்பணிகளையும் குறித்துக் கருத்துரைக்க விரும்புபவர்கள் அவரவர் சொந்தப் பொறுப்பில் வந்து சிறப்பிக்கவேண்டும் என்று விரும்புகின்றோம்.

 பெருமழைப் புலவருக்கு விழா ஒன்று எடுத்து அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்ற என் விருப்பத்தை முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ ஐயா அவர்களிடம் தெரிவித்துக் கலந்துரையாடினேன்.துணைவேந்தர் அவர்களுக்கு அந்த நிகழ்வில் பங்கெடுக்கும் பேரார்வம் இருந்தும் குறிப்பிட்ட நாளில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர்கள் சென்னையில் இருக்கவேண்டிய நிலை உள்ளதை உணர்த்தினார்கள். எனினும் அவர்களின் பேரன்பையும் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.அவர்களை அடுத்துச் செந்தமிழ் அந்தணர் மதுரைப்புலவர் இரா. இளங்குமரனார் அவர்களைக் கலந்துகொள்ள வேண்டினேன்.புலவர் அவர்கள் அன்றைய நாளில் அரியலூரில் ஒரு திருமணம் நடத்திவைக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள். அதனால் மாலையில் வைத்தால் கலந்துகொள்ள இயலும் என்ற தம் தமிழார்வத்தைப் புலப்படுத்தித் தம் அன்பான வாழ்த்தைத் தெரிவித்தார்கள்.

 சிங்கப்பூர் தமிழ் அன்பர் திரு முஸ்தபா அவர்கள் பெருமழைப்புலவரின் மேல் பெருவிருப்பம் கொண்டவர்கள்.அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் ஒரு திட்டம் வரைந்து வழங்கும்படியும் வேண்டினார்கள்.அன்றைய நாளில் வேறொரு முதன்மையான பணியில் இருப்பதால் இன்னொரு வாய்ப்பில் தாம் கலந்துகொள்வதாக உறுதி செய்து வாழ்த்தினார்கள்.
புலவரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கவும் நிகழ்ச்சி சிறக்கவும் பலர் ஆர்வம்காட்டி ஊக்கமூட்டி வருகின்றனர்.

 நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு புலவர்பெருமானின் அறிவாற்றலையும், சங்க இலக்கியத் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூரும் அறிஞர்களின் பட்டியல் பின்வருமாறு:

முனைவர் மு.இளமுருகன், தமிழ்ப்பேராசிரியர்,த.உ.ம.கலைக்கல்லூரி,தஞ்சாவூர்

முனைவர் அரங்க.சுப்பையா, தமிழ்ப்பேராசிரியர்(பணிநிறைவு),தஞ்சாவூர்

புலவர் உதயை மு.வீரையன் அவர்கள்,சென்னை

முனைவர் ஒப்பிலா.மதிவாணன் (இயக்குநர்,பதிப்புத்துறை,சென்னைப்பல்கலைக்கழகம்)

பேராசிரியர் சு.தமிழ்வேலு, அ.வ.கல்லூரி,மன்னம்பந்தல்,மயிலாடுதுறை

முனைவர் நா.தனராசன், தமிழ்த்துறைத் தலைவர், திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி,திருவாரூர்

புலவர் நாச்சிகுளத்தார் (பெருமழைப்புலவரின் மாணவர்)

திரு.நாகை எழில்கோ, தமிழாசிரியர்,தென்னம்புலம்

முனைவர் மு.இளங்கோவன் (பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,புதுச்சேரி),

அன்பர்களின் வருகைக்கு ஏற்ப விழா அரங்கில்தான் சிறப்புரை, கருத்துரைஞர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். ஆனால் நிகழ்ச்சி வசதிக்காக ஒரு கிழமையில் ஒரு மாதிரி நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு செய்யப்பெறும்.

விழாக்குழுவினருடன் தொடர்புகொள்ள விரும்புவோர் பின்வரும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

திரு.சோ.பசுபதி(புலவரின் தலைமகன்,மேலைப் பெருமழை) + 91 9698985730
திரு.சோ.இராசமாணிக்கம் (ஊ.ம.தலைவர், மேலைப் பெருமழை) + 91 9842425215
திரு.சி.சிவபுண்ணியம்(தஞ்சாவூர்) + 91 9443126615
திரு.இரவி(திருத்துறைப்பூண்டி) + 91 9443806094
முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி) + 91 9442029053

திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையில் பாண்டி என்ற ஊரில் இறங்கி மேலைப்பெருமழையை எட்டுக் கல் தொலைவு தானியில்/ பேருந்தில் அடையலாம்.

குறிப்பு: பெருமழைப்புலவரின் குடும்பநிலையையும் சிறப்பையும் வெளியுலகுக்கு எடுத்துக்காட்டிய தினமணி இதழுக்கு இந்த இடத்தில் நன்றி கூறுவது பொருத்தமாகும்.


திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழறிஞர் இரா.சாரங்கபாணியார் மறைவு


முனைவர் இரா.சாரங்கபாணியார்(18.09.1925-23.08.2010)

காரைக்குடிஅழகப்பா கல்லூரி,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த முனைவர் இரா.சாரங்கபாணி ஐயா அவர்கள் இன்று(23.08.2010) காலை பதினொரு மணிக்குச் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அவர்தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை(24.08.2010) சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அவர் இல்லத்திலிருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இறுதி ஊர்வலத்தில் முனைவர் பொற்கோ(மேனாள் துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்),மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் உள்ளிட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், உறவினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.முனைவர் இரா.சாரங்கபாணி பற்றி முன்பும் எழுதியுள்ளேன். என் பதிவைக் காண்க.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடி ஊரினர்.18.09.1925 இல் பிறந்தவர்.பெற்றோர் பொ.இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார்.
தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் ,சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று,1942 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்பயின்று புலவர் பட்டமும்(1947),பி.ஓ.எல் பட்டமும்(1949) பெற்றவர்.முதுகலை(1955),எம்.லிட்(1962), முனைவர்பட்டம்(1969) ஆகியவற்றைச் சென்னைப்பல்கலைக்கழகத்தின் வழியாகப் பெற்றவர்.

அறிஞர் சாரங்கபாணியார்க்கு ஆசிரியர்களாக இருந்து நெறிப்படுத்தியவர்களுள் கா.சுப்பிரமணிய பிள்ளை,தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார், ஆ.பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை, வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

1949 ஆம் ஆண்டில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பணியாற்ற தொடங்கினார். விரிவுரையாளர் பணியேற்ற இவர் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் சிறந்தார்.1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார்.

இவர் எழுதிய பரிபாடல் திறன்(1975),மாணிக்கச்செம்மல்(1999) நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசில்களைப் பெற்றுள்ளன. குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் பட்டமும்(1981),சீராம் நிறுவனத்தின் திருக்குறள் பொற்கிழியும்(1991),தமிழ்நாட்டரசின் விருதும்(1998),மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச்செம்மல் விருதும் பெற்றவர்(2000).

அறிஞர் இரா.சாரங்கபாணியார் வழங்கிய நூற்கொடை

01.இயற்கை விருந்து(1962)
02.குறள் விருந்து(1968)
03.பரிபாடல் திறன்(1972)
04.A critical Study of Paripatal(1984)
05.A Critical Study of Ethical Literature in Tamil(1984)
06.சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இருதொகுதி)1986
07.திருக்குறள் உரை வேற்றுமை, அறத்துப்பால் (1989)
08.திருக்குறள் உரையாசிரியர்கள்(1991)
09.திருக்குறள் உரை வேற்றுமை, பொருட்பால் (1992)
10.திருக்குறள் உரை வேற்றுமை, காமத்துப்பால்(1992)
11.சங்கச் சான்றோர்கள்(1993)
12.வள்ளுவர் வகுத்த காமம்(1994)
13.புறநானூற்றுப் பிழிவு(1994)
14.மாணிக்கச் செம்மல்(1998)
15.திருக்குறள் இயல்புரை(1998)
16.சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்(1999)
17.திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம் (2000)
18.சங்கத்தமிழ் வளம்(2003)
19.பரிபாடல் உரைவிளக்கம்(2003), கோவிலூர் மடம்
20.சங்க இலக்கிய மேற்கோள்கள்(2008)
21.சங்க இலக்கியப்பிழிவு(2008)
22.திருக்குறள் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)
23.பரிபாடல் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)

அறிஞர் இரா.சாரங்கபாணியார் இல்ல முகவரி :


குறள் இல்லம்,
330,மாரியப்பா நகர்,
அண்ணாமலை நகர்,சிதம்பரம்-608 002
தொலைபேசி : 04144 - 238038

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தமிழுக்கு அறக்கட்டளை நிறுவிய சிங்கப்பூர் எம்.ஏ. முஸ்தபா!


எம்.ஏ. முஸ்தபா

சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் எம்.ஏ. முஸ்தபா.

 ஆம். நாணயமாற்று நிறுவனங்களில் உலக அளவில் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற ஏசியன் எக்சேஞ்சு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தும் முஸ்தபா அவர்கள் பிறந்தது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகும். இப்பொழுது தொழில் நிமித்தமகாச் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று இருக்கின்றார். பணம் மாற்று (money exchange) உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகின்றார். உலக அளவில் தரமான தங்கம் பற்றி நன்கு அறிந்தவர். தமிழகத்திலும் இவருக்குப் பல நிறுவனங்கள் உண்டு. அடிக்கடித் தமிழகத்திற்கு வந்து தமிழக உறவுகளைப் போற்றி வருகின்றார். சிங்கப்பூரில் பல்வேறு தொழில்களைத் தொடங்கி நடத்துவதுடன் உலகின் பல நாடுகளில் இவரின் நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் அறிமுகமாகியிருக்கும் இவர் தன்னம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் வல்லவர். சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ்ப்பணிகளில் முன்னிற்பவர். அயராத உழைப்பும், நிர்வாகத்திறமையும், பேச்சு வன்மையும், பழகும் பண்பும் கொண்டவர். தமிழில் பேசுவோம் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்ப்பணிபுரியும் இவரின் வாழ்க்கை முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டானதாகும். எம். ஏ. முஸ்தபாவுடன் உரையாடியதிலிருந்து...

உங்களின் இளமை வாழ்க்கை பற்றி...

முத்துப்பேட்டையில் அப்துல்காசிம், ரஹ்மத் அம்மாள் ஆகியோர்க்கு மகனாக நான் 18.08.1949 இல் பிறந்தேன். எங்களின் முன்னோர்கள் கப்பல் வணிகத்தில் சிறந்திருந்தாலும் தந்தையார் எளிய நிலையில் வணிகம் நடத்திவந்தார். தந்தையார் அப்துல்காசிம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வணிகம் செய்வதற்காகச் சென்று வந்தவர். எங்களின் குடும்பத்திற்கு 'நகுதா குடும்பம்' என்று பெயர் ( நகுதா என்றால் பாய்மரக்கப்பல் என்று பொருள். எங்கள் முன்னோர்கள் பாய்மரக் கப்பலில் வணிகம் செய்தவர்கள்). எங்களின் தந்தையார் 1920 அளவில் மலேசியா சென்று வணிகம் செய்தவர்.


எம்.ஏ. முஸ்தபா

 நான் முத்துப்பேட்டையில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றேன். அதன் பிறகு அண்ணனின் அறிவுரைப்படி 1966 இல் சென்னைக்கு வணிகத்திற்கு வந்தேன். மயிலாப்பூர் பகுதியில் 'டாலர் ஸ்டோர்' என்ற பெயரில் ஒரு கடையை நடத்தினோம். எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருள்கொண்ட பொதுவணிகக்கடை அது. வணிகம் சரியாக நடைபெறாததால் நான்கு ஆண்டுகளில் கடையை இழுத்து மூடவேண்டியநிலை. இல்லை. கடை தானே மூடிக்கொண்டது.

 கடை வைத்து முன்னேறலாம் என்று நினைத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் அப்துல் கறீம் என்ற பொறியாளருடன் இணைந்து 'ஹாரிஸ் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற பெயரில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டேன். எதிர்பார்த்த முன்னேற்றம் அதிலும் இல்லை. என் முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன. கனவுகளுடன் ஊரிலிருந்து வந்த எனக்கு எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் என் உடன் பிறந்தவர்கள் சிங்கப்பூர் சென்று வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். தோல்வியில் துவண்ட நான் இசுலாமிய மார்க்க நூல்களைப் படிப்பதும் இறை ஈடுபாட்டில் திளைப்பதுமாக இந்தக் காலகட்டத்தில் இருந்தேன்.

உங்கள் உடன் பிறப்புகள் பற்றி..

என் பெற்றோர்களுக்கு ஒன்பது குழந்தைகள். முதல் இருவர் பெண்குழந்தைகள். அடுத்தவர் அண்ணன் யாகூப். அவரையடுத்து யூசுப். பின்னர் கமால், பக்ருதின் என்ற இரட்டையர்கள். அவர்களுக்கு அடுத்து நான். எனக்குப் பின்னர் தங்கை ஒருவர். அடுத்துத் தம்பி தமீம். தந்தையார் 1975 இல் இயற்கை எய்தினார். குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்பட்டது. மற்ற சகோதரர்கள் வசதியுடன் இருந்தனர். ஆனால் வேலையில்லாமல் இருந்தவன் நான். என்றாலும் பாகப்பிரிவினையால் குடும்பத்தில் அமைதி குலையக்கூடாது என்று பெருந்தன்மையாக என் பங்கின் சில பகுதிகளை உடன்பிறப்புகளுக்கு விட்டுத் தந்து அமைதியாகப் பாகப்பிரிவினையை முடித்தேன்.

தங்கள் இல்லறவாழ்க்கை பற்றி...

1976 இல் எனக்குத் திருமணம். கதீஜா நாச்சியா என்னும் அம்மையாரை மணந்துகொண்டேன். எங்களுக்கு ஆண் குழந்தைகள் இருவரும் பெண் குழந்தைகள் மூவரும் பிறந்தனர். ஆண்மக்கள் என் வழியில் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் வாழ்க்கை பற்றி...

1978 அளவில் நான் சிங்கப்பூர் சென்று பணமாற்றுத் தொழிலில் உடன்பிறந்தாருடன் ஈடுபட்டேன். அண்ணன் யாகூப் அவர்கள் பல்பொருள் அங்காடிக் கடையைக் கவனிக்கத், தம்பியுடன் இணைந்து பணமாற்றுத் தொழிலில் ஈடுபட்டேன். பணமாற்று இன்று வானுயர் கட்டடங்களில் மிகப்பெரியத் தொழிலாக நடந்தாலும் அன்று சிங்கப்பூர் கடற்கரைக்கு அருகில் கப்பலில் வரும் பயணிகள், மாலுமிகளுக்கு உரியப் பணமாற்று இடமாக 'சேஞ்ச் அலி' என்னும் இடம் விளங்கியது. அங்குதான் நானும் - தம்பி தமீமும் இணைந்து பணமாற்று வணிகத்தைத் தொடங்கினோம். 1980 இல் என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. பணமழை பெய்யத் தொடங்கியது. மிகப்பெரிய அளவில் வணிகம் சூடுபிடித்தது. அடுக்கடுக்காகத் தொழிலில் இலாபம் ஈட்டினேன். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றேன்.

நான் சம்பாதித்த பணத்தை உரியவகையில் செலவிடும் எண்ணம் ஏற்பட்டது. மொழிப்பணிக்கும், சமயப்பணிக்கும், கல்விப்பணிக்கும் என் பொருளை மகிழ்ச்சியுடன் செலவிட முடிவெடுத்தேன்.

தங்களின் அறக்கட்டளை பற்றி சொல்லுங்களேன்.

சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் இலக்கியப் பாலம் அமைக்கும் விருப்பம்கொண்டு "முஸ்தபா தமிழ் அறக்கட்டளை" என்ற அமைப்பை 2001 இல் ஏற்படுத்தினேன். பல்வேறு செயல்திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், சிங்கப்பூர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பெயரில் ஓர் ஆய்விருக்கை உருவாக்கினேன். அந்த ஆய்விருக்கையில் தொடர்ந்து சிறப்பாக ஆய்வு நடைபெற இருபது இலட்சம் உரூவாவினுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பங்குகளை வாங்கித் தந்துள்ளேன். அத்தொகை வழியாகக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிங்கப்பூர்-மலேசிய இலக்கிய ஆய்வு தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உண்டு.

மேலும் சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தையும் திரட்டித் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனியாக வைக்க ஏற்பாடு செய்துள்ளேன். தமிழ் இலக்கியங்களைப் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், தமிழறிஞர்களுக்கு உதவி செய்தல், ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது இந்த அறக்கட்டளையின் பணிகளில் குறிப்பிடத்தகுந்தது.

சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் பணிகளை ஊக்கப்படுத்துவதற்குப் பல திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றேன். சிங்கப்பூரில் நடக்கும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு இயன்ற வகையில் பொருளுதவி செய்துவருகின்றேன். மேலும் சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஆண்டுதோறும் தேர்வு செய்து கரிகாலச் சோழன் தங்கப் பதக்க விருது வழங்கிப் பாராட்டுவதையும் முஸ்தபா அறக்கட்டளை கடமையாகக் கொண்டுள்ளது. தி சிராங்கூன் டைம்ஸ் (The serangoon Times) என்ற தமிழ் மாத இதழையும் நடத்தி வருகின்றோம்.

தங்களின் சமயப்பணி பற்றி...

இசுலாமிய நெறிகளைத் தமிழில் எடுத்துரைக்கும்வகையில் தமிழில் நூல்கள் இல்லாத குறை உண்டு. எனவே இசுலாமியத் தமிழ்நூல்களை வெளியிடச் சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையை நிறுவியுள்ளேன். இவ்வறக்கட்டளையின் சார்பில் இயங்கும் பதிப்பகம் திருக்குர்ஆன் நூலினை அரபி மூலத்துடன் வெளியிட்டுள்ளது. மேலும் முகமது நபிகளின் பொன்மொழிகளை வெளியிடும் முயற்சியிலும் முன்னிற்கின்றது. நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இசுலாமிய நூல்கள் விற்பனை செய்யும் தரமான விற்பனை மையத்தையும் இந்த அறக்கட்டளை நடத்த உள்ளது.

தங்களுக்குக் கல்விப்பணியில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?

எதிர்காலத்தை நான் திட்டமிட்டுச் செயல்படுவது வழக்கம். எனவே என் பிறந்த ஊரில் வரும்பொழுது தங்குவதற்குப் பெரிய வளமனைகளைக் (பங்களா) கட்டுவதை விரும்பாமல் பள்ளிக்கூடம் கட்டும் பணியில் ஈடுபட்டேன். ஊரில் முசுலிம் பெண்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட இனப் பெண்களும் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இதனையறிந்து ஒரு பள்ளியை நிறுவினேன். என் தாயர் ரஹ்மத் அவர்களின் பெயரில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் 1996 முதல் பள்ளி செயல்பட்டு வருகின்றது.

இயற்கை எழிலுடன் விளங்கும் பள்ளியில் தோப்புகளும், தேக்குமரங்களும் அழகுடன் காட்சி தருகின்றன. மா, கொய்யா, வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களின் காய், பழங்களைப் பறிக்காமல் அதனை இயற்கையாகப் பறவைகள், விலங்குகள் உண்ணுவதற்கு வழிகண்டுள்ளேன்.


ரஹமத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

எங்கள் பள்ளியில் ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் 150 மாணவிகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இசுலாமியப் பெருமக்கள் தங்கள் பெண்குழந்தைகளை வெளியில் சென்று படிக்க அனுமதிப்பதில்லை. அதுபோல் கிராமப்புறம் சார்ந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வெளியில் சென்று படிக்க அனுமதிப்பதில்லை. இதனை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாக இந்தப் பள்ளியை உலகத் தரத்திற்கு நடத்துகின்றேன். இந்தப் பள்ளியில் மாணவிகள் அதிக அளவில் முசுலீம்களாக இருந்தாலும் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து, கிறித்தவர்களே ஆவர். இந்து, கிறித்தவ சமயம் சார்ந்த மாணவிகளும் படிக்கின்றனர். அனைத்து மத்தினரும் கைகோர்த்துக் கல்வி பயிலும் இத்தகு பள்ளி தமிழகத்தில் வேறு இல்லை எனலாம்.


மகளிர் பள்ளிவாசல்

பெண்கள், மாணவிகள் மட்டும் தொழுகை நடத்த ஒரு பள்ளி வாசலும் பள்ளியில் உண்டு. மதத் திணிப்புக்கு இங்கு வழியில்லை. விரும்பியவர்கள் விரும்பிய வகையில் வழிபாடு நடத்தலாம். பள்ளிக்கட்டணம் யாவும் மற்ற இடங்களை நோக்கக் குறைவாகவே உள்ளது. காற்றோட்டமான அறைகள், போக்குவரத்து வசதிகள், பணியாளர்களுக்குப் பணிப்பாதுகாப்பு யாவும் செய்துள்ளேன்.

தங்களின் தமிழ் ஆர்வம் பற்றியும் சமய ஈடுபாடு பற்றியும் கூறவும்...

எந்த வகையான மதமாச்சரியத்துக்கும் நான் இடம் தருவதில்லை. மதச்சின்னங்களும் அணியாமல் வாழ்ந்து வருகிறேன். தமிழ்க் கவிஞர்களிடத்து எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. கவிஞர்கள் வைரமுத்து, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மேத்தா உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதை இயல்பாகக் கொண்டுள்ளேன். அதுபோல் சிங்கப்பூருக்கு வரும் தமிழறிஞர்களைக் கௌரவிப்பதிலும் நான் முன்னிற்பது உண்டு.

இசுலாமிய நெறியை வாய்ப்பேச்சாக்கிக் கொள்ளாமல் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். தமிழை விளம்பரப் பொருளாக்காமல் வாழ்க்கையில் அனைத்து இடங்களிலும் பின்பற்றுகிறேன். என் பிள்ளைகள் வீட்டில் தமிழில் பேசுவதையே விரும்புகிறேன். வீட்டில் தமிழ் பேசினால்தான் நாட்டில் தமிழ் வாழும். தமிழர்களாக வாழமுடியும். மொழியை இழந்தால் பண்பாட்டை இழப்போம். தமிழை இழந்தால் அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து அமர்ந்துகொள்ளும். ஆங்கிலப் பண்பாடு நடைமுறைக்கு வரும். ஆங்கிலப் பண்பாட்டைப் பின்பற்றினால் வேரை மறந்தவர்களாக மாறிவிடுவோம். ஆங்கிலம் மூக்குக் கண்ணாடி போன்றது. தேவையென்றால் கழற்றி வைத்துக்கொள்ளலாம். தமிழ் கண் போன்றது. கழற்றி வைக்கக்கூடாது.


மு.இளங்கோவன், எம். ஏ.முஸ்தபா

சனி, 14 ஆகஸ்ட், 2010

மொழிஞாயிறு பாவாணரின் அரிய கட்டுரை ஒன்று கிடைத்தது...

இரண்டு நாளுக்கு முன் புதுச்சேரி-பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் ஔவை.சு.துரைசாமி பிள்ளை அவர்களின் மத்தவிலாச பிரகசனம் என்ற கட்டுரையைத் தேடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எதிர்பாராத வகையில் பாவாணரின் "மொழித்திறத்தின் முட்டறுப்பது மொழி நூலே "என்ற கட்டுரை கிடைத்தது.எட்டுப்பக்க அளவுள்ள கட்டுரை.1955 இல் உருவான கட்டுரை.தமிழ்மண் பதிப்பக வெளியீடுகளில் இக்கட்டுரை வெளிவந்துள்ளதா என இனிதான் பார்க்கவேண்டும். வந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்"

என்னும் பழைய வெண்பாவை எடுத்துக்காட்டித் தொடங்கும் கட்டுரை மொழித்திறத்தின் முட்டறுக்கத் துணைபுரியும் நூல்கள், அகராதி,இலக்கணம்,சொற்பிறப்பியல் என்னும் சொல்லியல்,மொழிநூல் என நால்வகை என்று வகைப்படுத்துகிறது.

இதுபோதுள்ள தமிழிலக்கண நூல்களிலுள்ள வழுக்களிற் பல தொல்காப்பியத்தினின்றே தொடர்ந்து வருகின்றன.அவை பல திறத்தன.அவையாவன:

1.எழுத்துநிலை
2.புணர்மொழிச்சொற்கள்
3.புணர்ச்சித்திரிபு
4.பகுசொல்லுறுப்புப் பிரிப்பு
5.தொகைச்சொல்லியல்பு
6.சொல்வரலாறு
7.சொல்வகை

என்னும் குறுந்தலைப்புகளில் பாவாணர் அரிய விளக்கங்களைத் தந்துள்ளார்.
(நேரம் கிடைக்கும்பொழுது முழுக்கட்டுரையையும் வெளியிடுவேன்)

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இனிதே நிறைவுற்ற திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ் இணைய அறிமுக விழா


தூய நெஞ்சக் கல்லூரி

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ் இணையம் அறிமுக விழா 11.08.2010 அறிவன்(புதன்)கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற்றது. தூய நெஞ்சக்கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என 75 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


முனைவர் மரியசூசை அடிகளார்(முதல்வர்)

கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ. மரியசூசை அவர்கள் தலைமை தாங்கினார்.மாணவர்களுக்குத் தட்டச்சுப் பயிற்சியின் தேவை,கணிப்பொறி,இணையத்தின் தேவையை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அருட்தந்தையார் அவர்கள் எடுத்துரைத்தார். கு.கலையரசி அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்ற்றார். பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் நிகழ்ச்சி பற்றியும் ,நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் பற்றியும் அறிமுகவுரையாற்றினார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் காட்சி விளக்க உரையாற்ற்றினார்.தமிழ் இணையம் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து தமிழ் இணையத்துக்கு உழைத்த அறிஞர் பெருமக்களை நினைவூகூர்ந்தார்.சிங்கப்பூர் கோவிந்தசாமி,யாழன் சண்முகலிங்கம், உமர்தம்பி, முரசு முத்தெழிலன்,பாலா பிள்ளை,முகுந்து,கோபி,காசி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தமிழ் இணையத்துறைக்கு ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார்.

தமிழ் சார்ந்த தளங்களான மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, நூலகம் தளம்,சுரதா,தட்சு தமிழ்,தமிழன் வழிகாட்டி,சங்கமம் லைவ்,தளவாய் சுந்தரத்தின் வலைப்பூ தளம் உள்ளிட்ட பல தளங்களின் சிறப்பை எடுத்துரைத்து ஒவ்வொரு தளத்தின் தனித்தன்மைகளையும் எடுத்துரைத்தார். பங்கேற்றவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சுக்கு உதவும் குறுவட்டுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.தொடக்கத்தில் அனைவருக்கும் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பை விளக்கும் படப்படி வழங்கப்பட்டது. மாணவர்கள் தட்டச்சுப் பழகப் பத்து நிமையத்தில் பழகிக்கொள்ள முடியும் என்று கூறித் தமிழ் 99 பலகையின் அமைப்பு அனைவருக்கும் விளக்கப்பட்டதால் இனி அவர்கள் எளிதாகத் தட்டச்சுப்பழக முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

பேராசிரியர்கள் பொன்.செல்வகுமார்,மாரியப்பன்,பார்த்திபராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

க.பிரபாகர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


அறிமுக உரையாற்றும் பேராசிரியர் பாலசுப்பிரமணியன்


கலந்துகொண்ட மாணவிகள்



பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

என் மேலைப்பெருமழைச் செலவு


பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்

 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திருத்துறைப் பூண்டிக்குப் பேருந்தேறினேன் (31.07.2010). முத்துப்பேட்டையில் நண்பருடன் உரையாடிய பல செய்திகளை அசைபோட்டபடி பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.

 அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது இந்தப் பகுதியில்தானே பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் ஊர் உள்ளது என்று.அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரை வினவினேன். மேலைப்பெருமழைக்குப் போக வழி உங்களுக்குத் தெரியுமா? என்றேன். உடன் மகிழ்ச்சியடைந்த அவர் அடுத்த பேருந்து நிறுத்தம் பாண்டி என்பதாகும். அங்கு இறங்கிச் சென்றால் எட்டு கி.மீ தூரத்தில் மேலைப்பெருமழை உள்ளது என்றார். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை பேருந்து செல்வதாகவும் விரைந்து போகவேண்டும் என்றால் தானி அங்கு நிற்கும். அதில் செல்லலாம் என்று கூறினார். நடத்துனரிடமும் உறுதி செய்துகொண்டேன். பிறகு என்ன?

 பாண்டி என்ற ஊரில் பேருந்திலிருந்து இறங்கினேன். என்னுடன் அகவை முதிர்ந்த பெரியவர் ஒருவரும் இறங்கினார். வேட்டி, சட்டை அணிந்து துண்டும் அணிந்திருந்தார். சமூகத்தில் மதிக்கத்தகுந்த தோற்றம். அவரை வினவினேன். நான் புதுச்சேரியிலிருந்து வருகின்றேன் எனவும் மேலைப் பெருமழைப் புலவர் பற்றி ஆய்வு செய்து வருகின்றேன் எனவும் கூறினேன்.

 மகிழ்ச்சியடைந்த அவர், தாம் அஞ்சல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளேன் எனவும் தற்பொழுது ஊராட்சிமன்ற உறுப்பினராக உள்ளேன் எனவும் கூறியதுடன், பெருமழைப்புலவர் மேல் அளவுகடந்த பாசம் உடைய நாச்சிக்குளத்தார் அவர்களை இப்பொழுதுதான் கண்டேன் எனவும் அவரைக் கேட்டால் பெருமழைப்புலவர் பற்றி அறியலாம் எனவும் கூறினார். அத்துடன் புலவர் நாச்சிக்குளத்தாரைச் சந்திக்கவேண்டிய அவர் விருப்பத்தையும் தெரிவித்தார்.

 அவர் கருத்தில் எனக்கு உடன்பாடு என்றாலும் நான் முதலில் பொ.வே.சோமசுந்தரப் புலவர் பிறந்த ஊரினைப் பார்வையிடவும், அவர் பிள்ளைகள் பற்றி அறிவதையும் முதன்மை நோக்கமாக நினைத்தேன்.பின்னர் நாச்சிக்குளத்தார் உள்ளிட்ட புலவருடன் பழகிய அன்பர்களைக் கண்டு மகிழ நினைதேன். ஏனெனில் நான் பாண்டியில் இறங்கியபொழுது பகல் மணி மூன்று இருக்கும். பொழுதுக்குள் என் பணி முடித்துக்கொண்டு இரவே நான் புதுச்சேரி திரும்பியாதல் வேண்டும். எனவே நான் மேலைப்பெருமழை செல்வதற்குப் பரபரப்பாக இருந்தேன்.

 ஊராட்சி மன்ற உறுப்பினர் ஐயா அவர்கள் அருகில் இருந்த ஒரு தானி ஓட்டுநரை வினவி என்னை மேலைப்பெருமழையில் கொண்டுபோய்ப் புலவர் இல்லத்தில் விடவும், அங்கு உரையாடிய பிறகு மீண்டும் அழைத்துவரவும் சொன்னார். அங்கு வந்த ஓரிருவரிடம் தானி ஓட்டுநர் புலவர் குடும்பம் பற்றிய செய்திகளைப் பெற்றுக்கொண்டார். தானி இப்பொழுது மேலைப்பெருமழைக்கு விரைந்தது. வயல்வெளிகள் உழுது கிடந்தன. இடையில் தென்பட்ட சில ஊர்ப்பெயர்கள் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி புதினத்தில் இடம்பெற்ற பெயர்களாகத் தெரிந்தன.



 தானி ஓட்டுநரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். என் பணிநிலை, ஆய்வு ஆர்வம் கூறியதும் தானி ஓட்டுநரும் மெதுவாக அவர் மனம் திறந்தார். அவர் பெயர் திரு.பழனி என்பதாகும். தமிழ்ப்பற்றுடைய குடும்பம் சார்ந்தவர். தமிழ் படிக்க நினைத்தவர். வீரவாள் என்ற சிற்றிதழ் நண்பர்களுடன் இணைந்து நடத்தியவர். இந்த இதழ் இடையில் நின்றதாம். தம் தமிழ் படிக்கும் விருப்பம் நிறைவேறாததால் தம் மகளைத் தமிழ் படிக்க வைத்துள்ளேன் என்றார். மகிழ்ந்தேன்.

 மேலும் தம் சிறிய தந்தையார் திருப்புகழில் நல்ல பயிற்சியுடையவர் என்றும் திருமுருக கிருபானந்தவாரியாரால் சிறப்பிக்கப்பெற்றவர் என்றும் கூறினார். பழனி அவர்களின் பிறந்த ஊர் குன்னலூர் என்றார்.அவ்வூர் குன்னலூர் என்று பெயர்பெற்றமைக்கான காரணம் கூறினார். அருகில் இடும்பாவனம் என்ற ஊர் பாடல்பெற்ற ஊராக உள்ளதையும் கூறினார். ஔவையார் சிலை அந்தப் பகுதியில் உள்ளதாகவும் கூறினார். ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்தப் பகுதி பசுமையுடன் இருக்கும் என்றார். தண்ணீரின் வருகைக்கு வயல்வெளிகள் காத்துக்கிடந்தன. கோடை உழவு செய்து வைத்துள்ளனர். கண்ணுக்கு எட்டியதூரம் வயல்வெளிகளே காட்சி தந்தன.

 மேலைப்பெருமழைக்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இருபது கல் தொலைவு. அதனைப் பெருமழைப் புலவர் உள்ளிட்ட மக்கள் அந்தக் காலத்தில் நடந்தே அடைவார்களாம். வயல் வரப்புகளில்தான் முன்பு நடந்து செல்ல வேண்டியிருந்ததாம். அண்மையில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த திருவாளர் இராசமாணிக்கம் அவர்களின் காலத்தில்தான் ஊருக்குப் பல நல்ல வசதிகள் கிடைத்தன என்றும் அறிந்தேன். திருவாளர் இராசமாணிக்கனார் எளிய நிலையிலிருந்து மக்கள் மதிக்கும் தலைவராக உயர்ந்தவர். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பேருள்ளத்தினர். இவர் ஊருக்கு வேண்டிய பல நல்ல செயல்களைச் செய்ததால் குடியரசுத்தலைவரின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மனைவியார் இப்பொழுது ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளதாக அறிந்தேன்.

 மேலைப்பெருழமையை எங்கள் தானி நெருங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் தெரிந்தன. ஊரின் முகப்பில் ஒரு குளம் அழகுடன் காட்சியளித்தது. பள்ளிக்கூடமும் இந்த ஊரில் இருக்கிறது.

 குளத்தின் கரையில் தென்னை மரங்கள் இருந்தன. அவற்றை அழகுடன் பராமரிகின்றனர். பூங்கா போலும் அதன் வனப்பு உள்ளது. அதற்கு பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நினைவுப் பூங்கா என்று பெயர். இவ்வாறு பெயர் வைக்கும் அளவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்குப் புலவர் மேல் பற்று ஏற்பட ஒரு காரணம் உண்டு.

 தஞ்சாவூருக்கு நம் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் ஒருமுறை சென்றிருந்தபொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது சாதாரணமாக எதிர்ப்பட்ட பெரியவர் ஒருவர் நம் ஊராட்சி மன்றத் தலைவரை என்ன ஊர் என்று பேச்சு வாக்கில் வினவியுள்ளார். மேலைப்பெருழமழை என்று உரைத்தாராம். ஊர்ப்பெயர் கேட்ட பெரியவர் நம் ஊராட்சிமன்றத் தலைவரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினாராம். ஊராட்சிமன்றத் தலைவருக்குச் செய்தலறியாத திகைப்பு. ஊர்ப்பெயர் சொன்னதும் எதற்கு நம் காலில் விழுந்தார்? என்று பதைபதைப்பு. விழுந்து வணங்கி எழுந்தப் பெரியவர் சொன்னாராம்.

 தாங்கள் மேலைப்பெருமழையில் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்த ஊரிலிருந்து வந்துள்ளதால் தங்களை வணங்கினேனே தவிர தங்களையல்ல என்றாராம். அதன் பிறகுதான் நம் ஊராட்சி மன்றத் தலைவருக்குப் பெருமழைப் புலவரின் சிறப்புத் தெரியவந்தது. ஊருக்கு வந்த கையுடன் அவர் பிள்ளைகளையும் ஊர்ப் பெரியவர்களையும் அழைத்து ஊரில் ஏற்படுத்த உள்ள பூங்காவுக்குப் புலவர் பெயர் வைக்க எண்ணி அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். ஆம். மேலைப் பெருழமழையில் புலவர் பெயரில் ஒரு பூங்கா ஏற்படுத்தப்பட்டு வருவோரை வரவேற்கின்றது.


புலவரின் பெருமை சுமந்து நிற்கும் பூங்கா

 ஊராட்சிமன்றத் தலைவர் பெருமழைப்புலவரின் வாழ்க்கைக் குறிப்பையும் நண்பர் ஒருவருடன் இணைந்து அச்சிட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கியுள்ளார். செம்மொழி மாநாட்டை ஒட்டி இவ்வாழ்க்கைக்குறிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இது நிற்க.

 நாங்கள் புலவரின் வீட்டை அடைவதற்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிதில் சென்று சேர்ந்தோம். அந்த வீட்டை அடைந்து, எங்கள் வருகையின் நோக்கத்தையும் விருப்பத்தையும் சொன்னோம். ஒரு தம்பி எங்களை அன்பொழுக வரவேற்றார். அவர் பெயர் மா.குமார் என்றார். தாம் புலவரின் பெயரன் என்றார். தனியார் செல்பேசி நிறுவனத்தில் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார். தம் பெரிய தந்தையார் பெயர் சோ.பசுபதித்தேவர் எனவும் தம் தந்தையின் பெயர் சோ.மாரிமுத்துத் தேவர் எனவும் கூறினார்.

 தந்தையாரும் பெரிய தந்தையாரும் வெளியில் சென்றுள்ளதாகக் கூறினார். அவர் வீட்டில் தங்கித் தண்ணீர் குடித்துப் புலவரின் சிறப்புகளை நான் எடுத்துரைத்தேன். அந்த நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க ஒரு அகவை முதிர்ந்தவர் உள்ளே நுழைந்து எங்களை வரவேற்றார். அருகிலிருந்த தம்பி குமார் சொன்னார். இவர்தான் எங்கள் பெரியப்பா பசுபதி தேவர் என்றார். பதசுபதி தேவரைப் பார்த்ததும் புலவரைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கு. ஆம் புலவரின் உடைமைகளுள் ஒன்றைக் கண்ட பெரு மகிழ்வு எனக்கு ஏற்பட்டது. அன்பொழுக அவரிடம் பேசினேன்.


சோ.பசுபதி(புலவரின் தலைமகன்)


சோ.மாரிமுத்து(புலவரின் இரண்டாம் மகன்)


 காலையில் நூறுநாள் வேலைக்குச் சென்றதாகவும் அந்த அடையாள அட்டையை வயல்வரப்பில் போட்டுவிட்டு மறந்து வந்ததாகவும் அதனை ஓடி எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.


புலவரின் மனைவி மீனாம்பாள் அம்மா

 நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தமணி, வளையாபதி, குண்டலகேசி, சிறுகாப்பியங்க ளான உதயணகுமாரகாவியம், நீலகேசி மற்றும் பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம்,பரிபாடல், ஐந்திணை எழுபது,ஐந்திணை ஐம்பது, திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் முதலிய நூல்களுக்கு உரைவரைந்த புலவரின் குடும்பத்தார் கூலிவேலைக்குச் செல்லும்படியான குடும்பநிலையறிந்து, நேரில் கண்டு என் கண்களில் துன்பக்கண்ணீர் துளிர்த்தது.

 ஐயகோ! என் தமிழ்நாடே! யானையும்,குன்றும்,பதினாறு நூறாயிரம் பொன்னும், மணிமண்டபமும் வழங்கி ஆதரித்த மன்னர்கள் ஆண்ட தமிழ்நாட்டில் அறிவில் வல்ல புலமைநலச் சான்றோரின் குடும்பம் வறுமைநிலையில் இருப்பது என்னே! என்று மனம் வருந்தினேன்.

 புலவர் தங்கியிருந்த இடம், அவர் படுத்திருந்த இடம், அவர் உரை வரைந்த இடம், அவரின் கடைசிக்காலம் எந்த இடத்தில் கழிந்தது என்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டேன். புலவரின் உரை வரைந்த ஒருநூல்கூட அவர்கள் குடும்பத்தில் இல்லை. அவர்கள் வீட்டில் தமிழக முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆகியோர்க்கு உதவி வேண்டி வரைந்தனுப்பிய சில மடல்களின் படிகள் மட்டும் இருந்தன. வாரிசு சான்று இருந்தால் உதவு முடியும் என்று சில அதிகாரிகள் சொன்னதாக அறிந்தேன். வாரிசு சான்றிதழ் வாங்குவது அவ்வளவு எளிதானசெயலா?. ஊர் நிருவாக அதிகாரி, வட்டாட்சியர், நீதிமன்றம் வரை இவர்களால் செலுவு செய்து வாங்குவது நடக்காத செயல். அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே இவர்கள் வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள்? புறச்செலவுகளுக்கு ஏது பணம்?.

 புலவர் இறந்து சற்றொப்ப நாற்பது ஆண்டுகள் ஓடி மறைந்துள்ளன. புலவரின் மக்களுக்கோ அவர் எழுதிய நூல்கள், உரைவரைந்த நூல்கள் பற்றிய முழுவிவரமும் தெரியவில்லை. மேலும் அவர்களைப் புலவர் அதிகம் படிக்க வைக்காததால் முழுவிவரத்தையும் நினைவுகூர முடியவில்லை. இருப்பினும் சோழநாட்டுப்புலவர் என்ற நூலிலிருந்து கருப்பக்கிளர் சு.அ. இராமசாமிப் புலவர் எழுதிய பெருமழைப்புலவர் பற்றிய வாழ்க்கைக்குறிப்பைத் தனித்து அச்சிட்டு அனைவர் பார்வைக்கும் உட்படும்படி செய்துள்ளனர்.

 புலவரின் மகன்கள் தம் பிள்ளைகளிடம் குடும்பப்பொறுப்பை ஒப்பளித்துவிட்டு எளியநிலையில் வாழ்ந்துவருவதை அறிந்து இந்த நிலையை மாற்றத் திட்டமிட்டபடியும், புலவரின் புகழ் உலகு உள்ளவரை நின்று நிலவுமான பணிகளைச் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவர்களிடம் பிரியா விடைபெற்றேன்.


சோ.பசுபதி, சோ,மாரிமுத்து(புலவரின் இரு மகன்கள்)


ஊராட்சி மன்றத் தலைவர் இராசமாணிக்கம்,சோ.பசுபதி


புலவர் பெற்ற விருது


மேலைப்பெருமழைப் பேருந்து நிறுத்தம்

தொடர்புடைய பதிவு  இங்கு

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்


பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்

மேலைப்பெருமழையில் வாழ்ந்த பொ.வே.சோமசுந்தரனார் பற்றி மூன்றாண்டுகளுக்கு முன்பு தமிழ் உலகத்துக்கு ஆய்வடிப்படையில் என் பதிவில் எழுதியிருந்தேன். இக்கட்டுரையைக் கண்ணுற்ற முனைவர் பொற்கோ அவர்கள்(மேனாள் துணைவந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்) தம் புலமை இதழில் இக்கட்டுரையை வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்கள்.

சென்ற கிழமை மேலைப்பெருமழைப் புலவரின் இல்லம் சென்று வந்தேன். இந்த நிலையில் தினமணியில் புலவரின் குடும்பச்சூழல் அறிந்து செய்தி வெளியிட்ட தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களுக்கும், செய்தியாளர் திரு.இரவி (திருத்துறைப்பூண்டி)அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி)

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையில் வாடி வருகின்றனர். செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, சோமசுந்தரனாரின் வாரிசுகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தவர் பொ.வே. சோமசுந்தரனார்.

நூலை இயற்றிய மூல ஆசிரியர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள் வரிசையில் சோமசுந்தரனாருக்கு தனியிடம் உண்டு. மேலும், சிறந்த உரையாசிரியர்களாகத் திகழ்ந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வரிசையில் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக திகழ்ந்தவர் சோமசுந்தரனார்.

இளமையில் வறுமையின் காரணமாக, திண்ணைப் பள்ளி வரை மட்டுமே படித்த அவர், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் மாணவராக விளங்கியதுடன், விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன்னோதுவார், பூவராகன் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரிடமும் பாடம் கற்ற பெருமைக்குரியவர்.

பல்கலைக்கழகக் கல்வியில் முதல் மாணவராக தேறியபோது, தமிழ் தெரியாத ஆங்கிலேய ஆளுநர் எர்ஸ்கின் பிரபு அளித்த சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு, ஊர் திரும்பிய அவர், மீண்டும் உழவுத் தொழிலை மேற்கொண்டார்.

இந்நிலையில், கதிரேசன் செட்டியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவாசகத்துக்கான உரையை சோமசுந்தரனார் எழுதினார். இதுவே, பின்னாளில் அவர் சிறந்த உரையாசிரியராக திகழக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

இதைத்தொடர்ந்து, பழந்தமிழ் நூல்களை வெளியிட்டு வந்த சைவ சித்தாந்த நூல்பதிப்பு கழகத்தின் தலைவர் சுப்பையாப்பிள்ளை, கறுப்புக்கிளார் ராமசாமிப் புலவர் மூலமாக சோமசுந்தரனாரின் தமிழ்ப் புலமையை கண்டு வியந்து, முன்னர் உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கும் சோமசுந்தரனாரை வைத்தே விளக்கமாக உரை எழுதி வெளியிட்டார்.

அவ்வாறு சோமசுந்தரனார் எழுதிய விளக்கமான உரையில், பழம் புலவர்களின் சில கருத்துகளை மறுத்து எழுதி, அந்தக் காலத்திலேயே புலவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திய வரலாறும் உண்டு.

சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயண குமாரகாவியம், நீலகேசி மற்றும் பெருங்கதை, வெண்பாமாலை, கல்லாடம், பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கும் உரை எழுதிய பெருமைக்குரியவர் சோமசுந்தரனார்.

இவை தவிர, செங்கோல், மானனீகை முதலிய உரைநடை நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறும் எழுதிய பெருமைக்குரிய சோமசுந்தரனாரின் நூல்கள், நாடகங்கள், பின்னாளில் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சோமசுந்தரனார், 1972-ம் ஆண்டு, ஜனவரி 3-ம் தேதி காலமானார்.

செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரின் சிறப்பையும், புலமையையும் முரசொலியில் எழுதி, அவருக்கு மேலும் பெருமை சேர்த்தார்.
வறுமையின் பிடியில் வாரிசுகள்: புலவரின் மறைவுக்குப் பிறகு, சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையின் பிடியில் சிக்கி, உழன்று வருகின்றனர். சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவரும் மேலப்பெருமழை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர் என்பது வேதனையளிக்கும் விஷயம்.

"எங்கள் தந்தையின் புகழ் அவர் உயிரோடு இருக்கும்வரையில் எங்களுக்குத் தெரியவில்லை. தமிழை நேசித்த அளவுக்கு, குடும்பத்தின் நிலையை மேம்படுத்த அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.

எங்களின் நிலை குறித்து தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியப்படுத்தி, கடிதம் அனுப்பி இருக்கிறோம். எங்கள் தந்தை குறித்து நன்கு அறிந்த முதல்வர் கருணாநிதி, எங்களுக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்' என்றனர் பசுபதி, மாரிமுத்து.

இதுகுறித்து மேலப்பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம் கூறியது:

மேலப்பெருமழை கிராமத்துக்கு பெருமை சேர்த்த சோமசுந்தரனார் பெயரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும், அவரின் தமிழ்ப் பணியை உலகறியச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

சோமசுந்தரனாரின் வாரிசுகளுக்கு நிதியுதவி அளித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு சோமசுந்தரனாரின் பெயரைச் சூட்டுவதுடன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் பன்னாட்டுத் தமிழறிஞர்கள் பங்கேற்கும் இருக்கையையும் அமைக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள், இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி: தினமணி(08.08.2010)

இணைப்பு:  https://muelangovan.blogspot.com/2010/08/blog-post_25.html

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா


அழைப்பிதழ்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ் இணையம் அறிமுக விழா 11.08.2010 அறிவன்(புதன்)கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ. மரியசூசை அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் கு.கலையரசி அவர்கள் வரவேற்புரையும், பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் அறிமுகவுரையும் ஆற்ற உள்ளனர்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் காட்சி விளக்க உரையாற்ற உள்ளார். க.பிரபாகர் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.

தமிழ் முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுமாணவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், அருகில் உள்ள கல்லூரி சார்ந்த பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.மரியசூசை அவர்கள் செய்துள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பேராசிரியர் ச.சம்பந்தமூர்த்தி அவர்களின் வருகை...




அலுவலகத்துக்குக் கல்லூரிப் பணிநாளிலும், இல்லத்துக்கு காரி, ஞாயிறு கிழமைகளிலும் நண்பர்கள் சிலர் வருகை தந்து மகிழ்ச்சியூட்டுவார்கள். இன்று பேராசிரியர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து மகிழ்ச்சியூட்டினார். இருவரும் இரண்டுமணிநேரம் சங்க இலக்கியங்கள் பற்றி உரையாடினோம். குறிஞ்சிநிலக் காட்சி பற்றி எங்கள் பேச்சு நகர்ந்தது.

பேராசிரியர் அவர்கள் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், புல முதன்மையராகவும் இருந்து ஓய்வுபெற்றவர்கள். ஐயா பற்றி முன்பே ஒரு பதிவு இட்டுள்ளேன்.அதியச முருங்கையை உருவாக்கிச் சாதனை படைத்தவர். அடிக்கடித் தம் புதுச்சேரி இல்லத்துக்கு அழைப்பார்கள். எனக்கு உள்ள இடைவெளி இல்லாத பணிகளால் காலம் தாழ்ந்துகொண்டே போகிறது. எப்படியும் விரைந்து சென்றுவர வேண்டும்.

பழந்தமிழரின் வேளாண்மை, வாழ்க்கைமுறை பற்றியே எங்கள் உரையாடல் இருந்தது. குறிஞ்சி நிலம் பற்றிய செய்திகளை நினைவிலிருந்த அடிப்படையில் பகிர்ந்துகொண்டோம். கடம்ப மரம் பற்றி நான் சொன்னேன்.அச்சொல் கிரேக்கத்தில்,இலத்தினில் இருப்பதை ஐயா சொன்னதும் எனக்கு மகிழ்ச்சி மேலிட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தலமரம் கடம்பமரம். அங்குக் கடம்பமரத்தைத் தலமரமாக வைக்க நம் பேராசிரியர் எவ்வளவோ முயன்றும் அதிகாரி ஒருவர் தடைக்கல்லாக இருந்து மரம் நடமுடியாமல் இருந்துவிட்டார்.

குறிஞ்சி பற்றிய செய்தி குறிஞ்சிப்பாட்டு,மலைபடுகடாம், சிலம்பு(குன்றக்குரவை), குறுந்தொகை,குறிஞ்சிக்கலி, குற்றாலக்குறவஞ்சி உள்ளிட்ட நூல்களில் இருப்பதை எடுத்துரைத்தேன். இது பற்றி விரிவாகச் சிந்திக்கவேண்டும்.

எங்கள் பேச்சின் ஊடே தேநீரின் கதை என்ற சிறு நூலை அன்பளிப்பாகத் தந்தார்கள்.40 பக்கம் உள்ள அந்த நூலில் நாம் ஆர்வமுடன் பருகும் தேநீர் வரலாற்றையும்,சிறப்பையும் மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். இந்த நூலைப் பார்த்ததும் விக்கிப்பீடியாவுக்கு ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது என்று நினைத்தேன்.பேராசிரியர் செல்வா பார்த்திருந்தால் மிக மகிழ்வார்.

இந்த நூலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் தேயிலைச்செடிகள் தோன்றின. வடகிழக்கு மாநிலங்கள்,மியான்மர்,தென்கிழக்குச் சீனா,திபெத் முதலிய பகுதிகளில்தான் தேயிலை முதலில் காணப்பட்டது என்கின்றார்.

தேயிலை பழைய சீனமொழியில் Tu என்று அழைக்கப்பட்டது.இந்த Tu என்ற பெயர்தான் Te ஆக மாறிப் பின்னர் Tea என்று மாறியது என்கின்றார்.இதுபோல தேயிலைக்கு Cha என்ற பெயரும் சீனாவில் வழக்கத்தில் இருந்தது.அந்தப் பெயர் மருவி Chai என்று அழைக்கப்பட்டது என்கின்றார்.

தேயிலையின் தாவரவியல்பெயர் கெமிலியா சைனன்சிசு என்பதாகும்.இந்தத் தேயிலை சீனாவிலும் அசாமிலும் காணப்பட்டது.முதலில் சீனாவில் இருந்த தேயிலைச்செடிதான் கண்டு பிடிக்கப்பட்டது.தேயிலையைச் சைனா இரகம் என்றும் அசாம் இரகம் என்றும் இரண்டாகப் பிரிப்பர்.தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுவது அசாம் இரகம் ஆகும்.1823 இல் இராபர்ட்டு புருசு என்ற படைவீரர் அசாமில் தேயிலையைக் கண்டுபிடித்தார்.தேநீரின் வரலாறு சற்றொப்ப 5000 ஆண்டு வரலாறு உடையது என்கின்றார்.

தேநீருக்கு 25 மேற்பட்ட மருத்துவக்குணங்கள் உண்டு என்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை புற்றுநோய் வராமல் தடுக்கும்.இரத்தக்குழாயின் உள்சுவற்றைச் சுத்தம் செய்யும்.இரத்த அழுத்தம்,மன அழுத்தம் போக்கும்.குடலைத் தூய்மைப்படுத்தும்.ஊக்கம் தரும்.வாயின் கெட்ட வாடையை நீக்கும்.உடல் எடை குறைக்கும்.சளி,தலைவலி போக்கும்.முகத்தைத் தேநீர்கொண்டு கழுவ பொலிவுபெறும்.

தேயிலை கருப்புத்தேயிலைத்தூள்,பச்சைத்தேயிலைத்தூள்,ஊலாங் தேயிலைத்தூள்,வெள்ளைத் தேயிலைத்தூள் என்று வகைப்படுத்தப்படுவதுண்டு.பச்சைத்தேயிலை சிறந்தது என்றும் இதில் பால் கலக்காமல் உண்டால் நல்ல பயன் உண்டு என்றும் குறிப்பிட்டுவிட்டு மேலும் பயனுடைய பல தகவல்களைப் பேராசிரியர் ச.சம்பந்தமூர்த்தி எழுதியுள்ளார்.எளிய நடையில் அரிய நூல் தந்த பேராசிரியர் நம் மதிப்புக்கும்,நன்றிக்கும் உரியவர்.

தொடர்புக்கு
முனைவர் ச.சம்பந்தமூர்த்தி
40,நான்காவது குறுக்குச்சாலை, இரண்டாவது முக்கியச்சாலை,
மூகாம்பிகை நகர்,
நயினார் மண்டபம், புதுச்சேரி-605 004,இந்தியா
0413-2358848

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

அநுராகம் பதிப்பகம் நடத்தும் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்களுக்கான பொதுஅறிவுப் போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு

அநுராகம் பதிப்பகம் நடத்தும் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்களுக்கான பொது அறிவுப் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வெற்றிபெறும் மாணவர்கள் மலேசியாவுக்குச் சுற்றுலா சென்றுவர வாய்ப்பு உண்டு.அறிவார்வம் நிறைந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த நல்ல வாய்ப்பு.பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரியில் பயிலும் மாணவர்களும்,பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் கலந்துகொள்ளலாம்.போட்டி விவரங்களை மேலுள்ள / கீழுள்ள அறிக்கையில் கண்டுகொள்ளலாம்.


ஆசிரியர்களுக்கான அறிவிப்பு


மேலும் விவரம் வேண்டுவோர் தொடர்புக்கு:

அநுராகம் பதிப்பகம்
19,கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை-600017

தொலைபேசி: 044- 24345641 / 24313221