நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 மார்ச், 2007

தமிழ் மாணவர்களுக்குத் தமிழில் கலந்துள்ளஅயல்மொழிச் சொற்களை அடையாளம் காட்டல்

 தமிழ்மொழி பல நூற்றாண்டுக்காலப் பழைமையைக் கொண்டது. தமிழ்மொழியிலிருந்து பல்வேறு மொழிகள் கிளைத்து, வளர்ந்துள்ளதைத் தமிழ்மொழியையும், பிறமொழிகளையும் ஆராய்ந்த மொழியியல் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழிலிருந்து கிளைத்த மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன) பிறமொழிச் சொற்களின் கலப்புடன் வழங்குகின்றன. அயற்சொற்களின் கலப்பின்றி அம்மொழிகளை வழங்கமுடியாதபடி அம்மொழிகளின் நிலை உள்ளது. ஆனால் பிறமொழிச் சொற்களின் கலப்பின்றித் தமிழால் தனித்தியங்க முடியும் என்று கால்டுவெல் பெருமகனார் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தமிழர்களின் விழிப்பின்மையாலும், மொழிக்காப்பு உணர்வு இன்மையாலும், போலி நாகரிகப் போக்கினாலும் தமிழ் மொழியில் இன்றைக்குப் பல்வேறு மொழிகளின் கலப்பு அமைந்துள்ளது

  தமிழில் ஏறத்தாழ இருபத்தைந்து மொழிகளின் சொற்கள் கலந்துள்ளதாகவும், நாம் வழங்கும் தமிழ்ச்சொற்களில் எண்பது விழுக்காடு அயற்சொற்கள் மலிந்துள்ளன என்றும் பேராசிரியர் . அருளி அவர்கள் குறிப்பிடுவார். தமிழகத்தின் மீது வேற்றவர்களின் வல்லாண்மை ஏற்பட்டபொழுதெல்லாம் அது மொழி, இன, நாட்டு, பண்பாட்டில் பல தாக்கங்களை ஏற்படுத்தின. அத்தகு சூழலிலெல்லாம் இயன்ற வகைகளில் நம்முன்னோர் தமிழ் மொழியைப் பாதுகாத்து வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர்

 வடசொற்களை வழங்க நேர்ந்தபொழுது "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ' (வட எழுத்து நீக்கி) எழுதினர். சில இடங்களில் வடசொற்களைத் தமிழ்ப்படுத்தி வழங்கும் போக்கும் நிலவியது (கம்பன் இரணியனைப் பொன்னன் எனவும், பண்டிதமணியார் "அர்த்தசாத்திரம்' என்பதைப் "பொருணூல்' எனவும் தமிழ்ப்படுத்தி வழங்கியதை நோக்குக). மொழிக்காப்பு முயற்சி என்பது இயல்பாகத் தொடங்கப்பெற்றது.

 இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழிக்காப்பு உணர்வு மறைமலையடிகளாரால் தனித்தமிழ் இயக்கமாக வளர்ந்தது. மறைமலையடிகளார் வழியில் நீலாம்பிகையார், பாவாணர், பெருஞ்சித்திரனார் வழி வளர்ந்து நிற்கும் தமிழ்ப்பணி மு. தமிழ்க்குடிமகனார்,  பா. வளன்அரசு, இரா. இளவரசு முதலானவர்கள் காலத்தில் மக்கள் மன்றங்களை நோக்காக வைத்து வளர்ந்தது. பேருந்து, விளம்பரப் பலகை, கோயில் போற்றி, தமிழ்வழிக் கல்விப் போராட்டம், செம்மொழி அறிவிப்புப் போராட்டம், திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டல், மாந்தர் பெயர் மாற்றம் எனத் தமிழ்க்காப்பு வேலைகள் பலதிறத்தனவாக அமைந்துள்ளன. தமிழ்ச்சொற்களை உருவாக்கல், பழஞ்சொற்களைப் பதிவு செய்தல், வழக்குச் சொற்களைத் தொகுத்தல் எனச் சொற்காப்பு - வளர்ச்சிப் பணிகள் நூல் தொகுப்புகளாகவும், அகர முதலிகளாகவும், உரைகளாகவும் இருக்கின்றன. இதிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல, தமிழ்ச் சொற்களைப் பரப்பும் பணியைத் தொடக்கப் பள்ளிகளிலேயே தொடங்க வேண்டியுள்ளது.

                தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் அமையும் தமிழ்ப்பாடங்கள் பெரும்பாலும் சடங்குத் தன்மையுடன் அமைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வழிபாட்டுப்பாடல்கள், மறுமலர்ச்சிப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், அரிய இலக்கணக் குறிப்புகள், மொழியியல் செய்திகள் (கல்லூரிகளில்), பேச்சுப்பயிற்சி, கட்டுரைப்பயிற்சி எனத் தமிழ்ப்பாடங்களின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. இவற்றினிடையே "அறிவியல்தமிழ்' என்ற அமைப்பில் அறிவியல் செய்திகள், குறிப்புகள், சொற்கள் தமிழ்ப்பாட நூல்களின் வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 இப் பாட அமைப்புகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி எளிமைப்படுத்தும் முயற்சி தேவை. ஆட்சியாளர்களைக் கவனத்தில் கொண்டு பாடநூல் ஆயத்தம் செய்வதை விடுத்தல் வேண்டும். குமூகத்தில் புகழ் பெற்றவர்களிடம் பயன்நோக்கி அவர்தம் படைப்புகள் நூலாவதும் உண்டு. புத்தகச் சந்தையினரின் கழிவுகளுக்கு விலைபோகும் சில கல்வியாளர்கள், தமிழ்ப் பண்பாட்டிற்குப் புறம்பான நூல்களைப் பாட நூல்களாக்கியுள்ளதையும் கூர்ந்து நோக்கும் போது உணர முடிகிறது. நல்ல மாந்தப்பண்புகளைத் தாங்கிய அடுத்த தலைமுறையை நினைவில் கொண்டு பாடநூல்கள் இயற்றப்பட வேண்டும்.

 ஒவ்வொரு இனமும் படிப்பின் வழியாகத் தன் அடையாளங்களையும், அறிவுத் தொடர்ச்சிகளையும் தன் பிறங்கடைகளுக்கு (சந்ததிகளுக்கு) உணர்த்த நினைக்கின்றது. இந்நிலையில் செய்தித்தாள், வானொலி, பண்பலை வானொலி (எப்.எம்.), தொலைக்காட்சி, திரைப்படம், அரசியல் துறையினரிடமிருந்து தமிழைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.

ஊடகங்களில் தமிழ்ச்சிதைவு:

 அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகத்தொடர்பின் அடிப்படையில் செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் முதலானவற்றை மக்கள் நாள்தோறும் பயன்படுத்துகின்றனர். இவ்வூடகங்கள் மொழிச்செப்பம் பற்றிய கவலை துளியும் இல்லாமல் இயங்குகின்றன. அயற்சொற்களை முறையின்றிக் கலந்தும், செம்மைச் சொற்களைப் பலவாறு திரித்தும், கூட்டியும், குறைத்தும் எழுதிவரும் - பேசிவரும் போக்கினை அறிய முடிகின்றது.  இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் முகத்தான் தொடக்கநிலையிலிருந்து மாணவர்களுக்கு இவற்றைக் கல்வித்தகுதிக்கு ஏற்ப அறிமுகம் செய்ய வேண்டும். ஊர் ஊராகச் சென்றோ, நாடு நாடாகச் சென்றோ, கண்டம் விட்டுக் கண்டம் கடந்தோ, இப்பணிகளைக் கையில் எடுப்பதைவிடத் தொடக்கப் பள்ளிகளில் பாடநூல்களில் செய்வதன்வழி உலகம் முழுவதும் இப்பணி விரிவடையும். தொடக்கத்தில் இச்செய்தி பதியம்போடப்படுவதால் பசுமரத்தாணி போல் மாணவர்களின் நினைவில் நிற்கும்.

 இன்றைய தொடக்கப்பள்ளிப் பாடநூல்களில் இடம்பெறும் பாடல்கள், கட்டுரைகள் முதலிய யாவற்றிலும் வேற்றுமொழிச் சொற்கள் அளவின்றி விரவியுள்ளன. இவ்வாறு வேற்றுமொழிச் சொற்கள் கலந்துள்ள பழம்பாடல்களைப் பாடத்திட்டத்தில் அமைக்கும்பொழுது அயற்சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டித் தனியாக அடையாளம் காட்டலாம் (இலக்கணக் குறிப்புகள் தருதல்போல). அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தரலாம். அதுபோல் அயற்சொல் விரவாத தூயதமிழில் படைப்புகளை உருவாக்கும்படி படைப்பாளர்களை வேண்டலாம். அல்லது தரமான படைப்புகளை உருவாக்குவோரிடமிருந்து படைப்புகளைப் பெற்று, அவற்றில் இடம்பெற்றுள்ள அயற்சொற்களை அவர்களின் இசைவுடன் நீக்கலாம்.

இன்றைய பாடநூல்களில் அயற்சொற்களின் நிலை :

 தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை அமைந்துள்ள தமிழ்ப்பாட நூல்களில் அயற்சொற்கள் மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு (நெஞ்சில் நிறுத்துங்கள், பக்கம் 75 (2001)ப் பாடநூலிலும், சென்னைப் பல்கலைக்கழக இளநிலை இரண்டாம் ஆண்டுப் பாடநூலிலும் அயற்சொற்கள் அறிமுகம் எனும் பகுதி இடம்பெற்றுள்ளது. இவற்றுள் கல்லூரி நிலையில் மாணவர்களுக்கு அயற்சொற்கள் அறிமுகப் பகுதியை நடத்தும்பொழுது ஆர்வமுடன் மாணவர்கள் கேட்கின்றனர்.  மகிழ்ச்சியுடன் பங்குபெறுகின்றனர். தாம் இதுவரை கேட்ட சொற்கள் யாவும் பிறமொழிச் சொற்களா என அறிந்து வியக்கின்றனர். அவ்வாறு மாணவர்களைப் பாடத்தை நோக்கி ஈர்க்க அவர்களின் வழக்கத்தில் அன்றாடம் பயன்கொள்ளும் சொற்களைச் சான்றுகாட்டி ஆர்வத்தை மேலும் தூண்டவேண்டும்.

 மாணவர்களின் பயன்பாட்டில் உள்ள பலதுறைச் சொற்களையும் ஒவ்வொரு வகுப்பில் பயிலும் மாணவர்களின் அறிவுத் திறனுக்குத் தக்கபடி அறிமுகம் செய்யலாம். புதுவகைச் சொற்களை அறிமுகம் செய்யும் பொழுது வழக்கத்திற்குக் கொண்டு வரும் வண்ணம் புதுவகை நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக வகுப்பறைகளில் உள்ள மாணவர்களின் பெயர்கள் தூயதமிழ்ப் பெயர்களாகவும், பிறமொழிச் சொல்லாகவும் இருப்பதைப் பட்டியலிட்டு வரிசைப்படுத்தலாம். பிறமொழிச்சொற்களைப் பெயராக வைத்துள்ளவர்களுக்குக் குறைந்த அளவு தம்பெயர் அயல்மொழிச் சொல்லாக உள்ளமையை நினைவுப்படுத்தலாம். விரும்பினால் பிறமொழிச் சொற்களை நீக்கித் தமிழ்ப்பெயராக வைத்துத் தொடர்ந்து அப்பெயர் வழங்குவதற்குரிய வழிகளைச் சொல்லலாம். அல்லது தமிழ் மரபுக்கு ஒவ்வாத வகையில் எழுதுவோர்களைத் தவறு காட்டி நல்வழிப் படுத்தலாம். இவ்வாறு இளம் அகவையில் தொடக்க வகுப்புகளில் மாணவர்களிடம் பிறமொழிச் சொற்களை அறியும் ஆர்வத்தை உண்டாக்கினால் வளர்ந்துவரும் சூழலில் தத்தம் துறைகளில் தமிழல்லாத பிறமொழிச் சொற்களை நீக்கிப் புதுச் சொல் கொணரும் வேட்கை உண்டாகும். இவ்வாறு வேற்றுமொழிச் சொற்களைப் பற்றிய ஓர் எழுச்சியை மொழிப் பயன்பாட்டில் உருவாக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

 இன்றையத் தொடக்க வகுப்புப் பாட நூல்களில் சில தூயதமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை நன்றியுடன் சுட்டியாக வேண்டும். ஒன்றாம் வகுப்புப் பாட நூலில் ஆயத்தம், வண்ணக்கலவை, பேருந்து நிலையம், பேசி, கணினி, கொடிமுந்திரி முதலான சொற்கள் இடத்திற்கேற்ப எளிய முறையில் ஆளப்பட்டுள்ளன. இவ்வாறு ஆளப்பட்டதால் தொடக்க வகுப்பு மாணவர்கள் மருள்வார்கள் என்று சொல்லமுடியாதபடி இச்சொற்களின் பயன்பாடு உள்ளது.

 அதே ஒன்றாம் வகுப்புப் பாடநூலில் வசனம், துட்டு, தகவல், ரேகை, வனம், சூரியன், பசு, சர்க்கஸ், ஆப்பிள், சீக்கிரம், பாபு, மேகம், ஆதவன் முதலான பிறமொழிச் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் பொழுது கவனமுடன் செயல்பட்டு இருந்தால் பிறமொழிச் சொற்கள் கலவாத பாடநூலாக ஒன்றாம் வகுப்புப் பாடநூலை உருவாக்கி இருக்கலாம். இதற்குப் பாடநூல் உருவாக்கும் குழுக்களில் மொழிப்பற்றும், இலக்கணப் புலமையும், புதிய அறிவார்வம் கொண்டவர்களும் இடம்பெறுவது மிகத் தேவை. அதுபோல் ஒன்றாம் வகுப்புப் பாடநூலில் தமிழ் மாதங்கள் என்று இடம்பெறும் பன்னிரு மாதப்பெயர்களும் சமற்கிருதச் சொற்களாக உள்ளன. இவற்றைப் பிறமொழிச் சொல்லாகக் காட்டி, இவற்றிற்குரிய தமிழ் மாதச் சொற்களை இணைத்துக் காட்டும்பொழுது உலகம் முழுவதும் தமிழ்ச்சொற்கள் எளிதில் பரவும்.

 தமிழ்ப்பாடம் உருவாக்கும்பொழுது கிரந்த எழுத்துக்களை , , ­, என்று அறிமுகம் செய்வதுபோல் தொடக்க வகுப்புகளில் அயற்சொற்களை அறிமுகம் செய்வது மிகுபயன் தரும்.மூன்றாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ள அயற்சொற்களை நோக்கும்பொழுது பாடநூல் தமிழ்ப்பாடநூலா அல்லது அயல்மொழிச் சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டும் அகரமுதலியா என்ற வினா எழும் வண்ணம் பாடநூல் உள்ளது. மூன்றாம் வகுப்பு நூலில் பல்வேறு துறை சார்ந்த பிறமொழிச் சொற்கள் மண்டிக்கிடக்கின்றன. இவற்றுள் சிலவற்றைக் குறிப்பதன் வழி நம் பாடநூல்களில் தமிழ் அல்லாத பிறமொழிச்சொற்களின் தாக்கம் எவ்வளவு என்பது புரியும். சிங்காரம், கலா, வசந்தி, கமலா, அர்ச்சனா, பீட்ரூட், பாத்திரம், பேனா, வாரம், பயணம், சன்னல், மாதம், நளினி, மனிதர், பலூன், பசுக்கள், சிங்கம், கோபம், பயம், கேலி, தந்திரம், மாலா, கவிதா, அபாயம், சுத்தம், சேமிப்பு, தினம், கிராமம், ஆத்திரம், பாவம், பென்சில், பாத்திரங்கள், குல்லாய், நட்சத்திரம், யோசித்தன, பாபு, ரஹீம், தாணியம், கதாபாத்திரங்கள் என்று நூற்றுக் கணக்கான அயற்சொற்கள் தமிழ்ப்பாட நூலில் விரவியுள்ளன. இவற்றைக் களைவதும்,  இவற்றிற்குரிய தமிழ்ச் சொற்களை ஈடாகத் தருவதும் தமிழ்க்கல்வி வரலாற்றில் ஆர்வமுடையவர்களின் கடமையாகும்.

 பாட நூல்களில் மட்டுமல்லாமல் வாழ்வின் பல சூழல்களிலும் வேற்றுமொழிச் சொற்கள் பற்றிய விழிப்புடன் பேச்சும், கலந்துரையாடலும் அமையும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சொற்கள் பற்றிய நகைப்புத்தன்மை நீங்கி இது செய்யவேண்டிய தேவை என்ற உணர்வு எழும்.அயற்சொற்களை அறிமுகம் செய்யும் பொழுது தோன்றும் சிக்கல்களும் தீர்வுகளும்அயற்சொற்களை அறிமுகம் செய்யும்பொழுது மொழி காக்கும் முயற்சி என்ற வகையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்கத்தில் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள அயற்சொற்களும் அவற்றிற்குரிய தமிழ்ச் சொற்களும் அறிமுகம் செய்யப்படவேண்டும்.

 நாள்தோறும் காலையில் பள்ளிக்குப் புறப்படுவதற்குமுன் மாணவர்கள் பயன்படுத்தும் சொற்களான பெட்காபி, லைட்போடுதல், பேஸ்ட், பிரஷ், சோப், ஆயில், பவுடர், டாய்லட், வா´ங்பே­ன், ஆட்டோ, டெம்போ, வேன், வாட்டர்பேக், மோட்டார்பைக், ரிக்ஷா, டவுன்பஸ், பஸ்பாஸ், ஷி, செப்பல், கேட், வாக்கிங், பாலிஷ், டிபன்பாக்ஸ், ஹோம்வொர்க், குரூப்சடிஸ், பிரண்ட்ஸ் முதலான ஆங்கிலச் சொற்களை நாள்தோறும் சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்துகிறோம். இவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை மாணவர்களுக்கு உரிய பாடநூல்களில் குறிப்பிடும்பொழுது மாணவர்களை விளையாட்டாகத் தமிழ்ச் சொற்களை அறியவைக்க முடியும்.  இவை யாவும் மாணவர்கள் வீட்டில் இருக்கும்பொழுது பயன்படுத்தும் சொற்கள்.

 அதே மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுது பஸ், டீ பிரேக், லன்ஞ்சு பிரேக், பிரேக்பாஸ்ட், ஸ்போர்ட்ஸ், லெ­ர் டைம், லைபரரி டைம், பஸ்ட்பெல், லாஸ்ட்பெல் முதலான சொற்களைப் பயன்படுத்துவதைப் பாடநூல்களில் அமைத்து இவற்றிற்குரிய தமிழ்ச் சொற்களை அடையாளம் காட்டும்பொழுது அளவிலா மகிழ்வு ஏற்படும். அதுபோல் உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கு அவர்களின் அகவைக்குத் தகுந்த பிறமொழிச் சொற்களை அறிமுகம் செய்யும்பொழுது அகர முதலிகளில் உருவாகியிருக்கும் புதிய கலைச்சொற்கள், பழந்தமிழ்ச்சொற்கள் மீண்டும் தமிழ் உலகம் முழுவதும் பரவும்.பிறமொழிச்சொற்கள் எவை எவை எனக் குறிப்பதில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் அறிஞர்களுக்கு இடையே உண்டு. அனைத்துச் சொற்களையும் தமிழாகக் காட்டும் போக்கும் நல்ல தமிழ்ச் சொற்களைப் பிறமொழிச் சொற்களாகக் காட்டும் போக்கும், தமிழகத்தில் நிலவுகின்றன. இவற்றுள் கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கும் சொற்களை விடுத்து, எளிதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உள்ள பிறமொழிச் சொற்களை எடுத்துக்காட்டி அவற்றிற்குரிய தூய தமிழ்ச்சொற்களை அறிமுகம் செய்வது நல்லது.

 அதுபோல் பிறமொழிச் சொல்லுக்கு ஒருவர் உருவாக்கி இருக்கும் புதிய சொல்லைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பது தேவையில்லை. பொருத்தமானதும் எளிதானதுமான புதிய சொற்கள் அல்லது பழைய சொற்களை மக்களே எது தேவையோ அவற்றை ஏற்றுக்கொள்வர். வழங்குவதற்கு எது அரியதாக உள்ளதோ, அதனை மக்கள் விடுப்பர் (தொடக்க காலங்களில் பை சைக்கிள் என்பதற்குத் துவிசக்கர வண்டி எனப் பெயர் சூட்டியதும் அது ஈருருளி என பெயர்பெற்றதும், அவை இரண்டும் மாறி எளிய மக்கள் வடிவமான மிதிவண்டி எனப் பெயர் பெற்றதும் இங்கு நினைவிற் கொள்ளத் தக்கது). அதுபோல் சிலர் தமிழின் சிறப்புகளை அரணிட்டுக்காக்கும் அரியபணி தமிழ்ச்சொல்லைப் பேசுவது என்று அறியாமல் பகடிபுரிவதற்கும் பல்லிளிப்புச் செய்வதற்கும் மொழிக்காப்புப் பணியைக் கொச்சைப்படுத்தும் போக்கினைக் கைக்கொண்டுள்ளனர்.

"காபி' எனும் இலத்தின் சொல்லைத் தமிழில் வழங்கும்பொழுது "குளம்பி' என வழங்காமல் வேறுபிற சொற்களை உருவாக்குவதாக நினைத்துத் தேவையற்ற கருத்துக்களைக் கூறி நிற்பர். இயன்றவரை பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுதுவதையும் பேசுவதையும் நோக்கமாகக் கொண்டு தமிழ்ப் பாடநூல்கள் உருவாக்குவது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆக்கமாக அமையும்.